புத்தகப் பகுதி & இஸ்தான்புல் http://kalachuvadu.com/issue-181/page139.asp | |
முதல் காதல் | |
ஓரான் பாமுக் தமிழில் & ஜி. குப்புசாமி | |
இது ஒரு வாழ்க்கைக் குறிப்பு என்பதால் அவள் பெயரை நான் சொல்லாமல் மறைத்தாக வேண்டும். திவான் கவிஞர்*களின் பாணியில் அவளை சங்கேத மொழியில் அழைத்தேனென்றால், இதற்குப் பின்வரும் இக்கதையைப் போலவே அதுவும் தவறாகப் பொருள் கொள்ளப்படலாம். அவள் பெயருக்கு பாரசீக மொழியில் கருப்பு ரோஜா என்று அர்த்தம். ஆனால் அவள் சந்தோஷமாகக் கடலில் குதித்து நீச்சலாடும் கடற்கரைப் பகுதியை சேர்ந்தவர்களுக்கோ, அவளுடைய பிரெஞ்சு லீஸே பள்ளித் தோழிகளுக்கோ இது தெரியாது என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும். அவளது நீண்ட பளபளப்பான கூந்தல் கருப்பு அல்ல, தவிட்டு நிறம். அவளது பழுப்புநிற விழிகள் சற்றுக் கருமை கலந்தே இருக்கும். எனது அறிவுப்புலமையைக் காட்டிக் கொள்வதைப்போல அவள் பெயரின் பொருளை சொன்னபோது, அவள் திடீரெனத் தீவிரமான முகபாவத்துக்கு மாறும்போது செய்வதைப்போலவே புருவங்களை உயர்த்தி, உதடுகளைப் பிதுக்கினாள். அவள் பெயருக்கான அர்த்தம் அவளுக்குத் தெரியும் என்றாள். அது அவளுடைய அல்பேனியப் பாட்டியின் பெயர் என்றாள். அவளுடைய அம்மாவைப் பற்றி என் அம்மா சொல்லும்போது (என் அம்மா எப்போதுமே ‘அந்தப் பொம்பளை’ என்றுதான் அவரைக் குறிப்பிடுவார்) அவருக்கு மிக இளம் வயதிலேயே திருமணம் ஆகிவிட்டிருக்கவேண்டும் என்பார். என் சகோதரனுக்கு ஐந்து வயதாகவும், எனக்கு மூன்று வயதாகவும் இருந்தபோது குளிர்காலக் காலை நேரங்களில் நிஷாந்தஷியில் மச்கா பூங்காவிற்கு எங்களைக் கூட்டிச் செல்லும்போது அந்தக் குழந்தையைப் பெரிய தள்ளுவண்டி ஒன்றில் தூங்க வைத்துக்கொண்டிருந்த அவளே ‘ரொம்பச் சின்னப் பெண்ணாகத்தான் இருந்தாள்’ என்று சொல்வார். அந்த அல்பேனியப் பாட்டி பாஷா ஒருவரின் அந்தப்புரத்திலிருந்து வந்தவர் என்று ஒருமுறை அம்மா ஜாடைமாடையாகக் குறிப்பிட்டார். போர் நிறுத்த ‘ஆர்மிஸ்டைஸ்’ வருடங்களில் ஏதோ மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாலோ, அல்லது அடாதுர்க்கை எதிர்த்ததாலோ அந்த பாஷா பதவி நீக்கம் செய்யப்பட்டதாகச் சொன்னார். எங்களைச் சுற்றி எரிந்து வீழ்ந்துகொண்டிருந்த ஆட்டமன் மாளிகைகளைப் பற்றியும், அவற்றில் ஒருகாலத்தில் வசித்திருந்த குடும்பங்களைப் பற்றியும் அப்போது எனக்குச் சற்றும் ஆர்வம் இல்லாததால், அவர் சொன்ன விஷயங்களை மறந்துவிட்டேன். இதற்கிடையில் அப்பா ஒருமுறை அந்தக் கருப்பு ரோஜாவின் தந்தையைப் பற்றி என்னிடம் சொன்னார். அரசாங்க வட்டாரத்தில் செல்வாக்கோடு இருந்த ஒரு சிலரின் உதவியோடு அவர் சில அமெரிக்க, டச்சு கம்பெனிகளுக்கு ஏஜென்ட்டாகி, குறுகிய காலத்திலேயே பெரும் செல்வம் சேர்த்துவிட்டதாகச் சொன்னார். ஆனால் இதைச் சொல்லும்போது அப்பாவின் குரலில் எந்தவித வெறுப்புத் தொனியும் தென்படவில்லை. «டை முடிவுக்கு வரும் நேரத்தில் இந்தச் சந்தடி மிக்க இளம்கூட்டம் மெதுவாகக் கலைந்தது. ஒவ்வொரு செப்டம்பரிலும் தவறாமல் வருகிற ‘லோடோஸ்’ புயல் அப்போதும் வந்து ஒன்றிரண்டு துடுப்புப் படகுகளையும் நாவாய்களையும் விசைப்படகுகளையும் உடைத்து நொறுக்கிவிட்டுச் சென்றது. மழை விடாமல் பெய்துகொண்டிருக்க, என் ஓவியத் திறமையை நானே சீரியஸாக எடுத்துக்கொண்டு, வீட்டின் தரைத்தள அறையை எனது ‘ஸ்டூடியோ’ என்று பெயரிட்டுக் கொண்டு ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தேன். அந்த ஓவிய அறைக்குப் பதினேழு வயதான கருப்பு ரோஜா வரத் தொடங்கினாள். என் நண்பர்கள் எல்லோருமே அங்கு வருவது வழக்கம்தான். அவர்களும் ஓவியச் சாதனங்களை நோண்டுவார்கள், ஓவியத்தாளில் எதையாவது வரைந்து கிறுக்கிப் பார்ப்பார்கள், எனது புத்தக அடுக்கை வழக்கமான சந்தேகத்துடன் நோட்டமிடுவார்கள்; எனவே அவள் எனது அறைக்கு வந்தது ஒன்றும் அசாதாரண விஷயமல்ல. துருக்கியில் வாழும் பணக்காரர்களோ ஏழைகளோ ஆணோ பெண்ணோ எல்லோரையும்போல அவளுக்கும் பொழுதைக் கடத்த பேச்சுத்துணை வேண்டும்தானே. ஆரம்பத்தில் வழக்கமான விடுமுறைக் கால அரட்டைப் பேச்சுதான் எங்களிடையே இருந்தது - யார், யாரை காதலிக்கிறார்கள்; யாருக்கு யார் மீது பொறாமை - ஆனால் அந்தப் பருவத்தில் அத்தகைய பேச்சுகளில் என் கவனம் அதிகமாகத் திரும்பவில்லை. என் கைகளில் பெயின்ட் இருப்பதால் சில நேரங்களில் அவள் தேநீர் தயாரிப்பதில் உதவியிருக்கிறாள், பெயின்ட் ட்யூபைத் திறந்து கொடுத்திருக்கிறாள், அப்புறம் அறை மூலைக்குச் சென்று, காலணிகளை உதறிவிட்டு சோபாவில் கையைத் தலையணையாக மடித்து வைத்துக்கொண்டு ஒருக்களித்து சாய்ந்து கொள்வாள். ஒருநாள் அவளிடம் சொல்லாமலேயே அவளை ஓவியமாக வரைந்தேன். அவளுக்கு அது மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்க, அடுத்தமுறை அவள் வந்தபோதும் வரைந்தேன். ஒருமுறை அவளிடம் வரையப் போவதாகச் சொன்னபோது, காமிரா முன் நின்று அனுபவமில்லாத புதுமுக நடிகையைப் போல “எப்படி உட்கார வேண்டும்?”, “கைகளை எப்படி வைத்துக்கொள்ளட்டும்?” “காலை?” என்றெல்லாம் கேட்டாள். அவளது மெல்லிய, நீண்ட நாசியைச் சரியாக வரைய வேண்டுமென்பதற்காக நீண்டநேரம் உற்றுப் பார்க்கும்போது, அவளது சின்ன இதழ்களில் முறுவலின் சாயல் ஒன்று நெளியும். அவளுக்கு அகன்ற நெற்றி. உயரமான பெண். வெயிலில் பழுப்பேறிய நீண்ட கால்கள். ஆனால் என்னைப் பார்க்க வரும்போது அவள் பாட்டி வாங்கிக் கொடுத்த கணுக்கால் வரை மூடிய, இறுக்கமான நீளப் பாவாடையைத்தான் அணிந்து வருவாள். அவளது சிறிய, நேரான பாதங்கள் மட்டும்தான் வெளியில் தெரியும். வரையும்போது அவளது சிறிய மார்பகங்களின் வடிவ விளிம்பு வரையையும், நீளமான கழுத்தின் அசாதாரணமான வெண்நிறத்தையும் கூர்ந்து அவதானிக்கும்போது, வெட்கப் படலம் ஒன்று அவள் முகத்தில் வெட்டிச்செல்லும். ஆரம்பத்தில் நிறையப் பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் அவள்தான் பேசுவாள். அவள் விழிகளிலும், இதழ்களிலும் கவிந்திருக்கும் இறுக்கத்தைச் சுட்டிக்காட்டி, “ஏன் எப்போதும் சோகமாக இருக்கிறாய்?” என்று ஒருமுறை கேட்டுவிட்டபோது, நான் சற்றும் எதிர்பார்த்திராத வகையில் வெளிப்படையாக அவள் பெற்றோர்களின் சண்டையைப்பற்றி, அவள் தம்பிகள் நான்குபேரும் விடாமல் சண்டை போடுவதைப்பற்றி, அவள் அப்பா வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுக்கும் தண்டனைகளைப் பற்றி - வீட்டுக்காவல், விசைப் படகுச் சவாரிக்குத் தடை, அடி உதைகள் - நெடுநேரம் பேசினாள். அவள் அப்பாவுக்கு இருக்கும் பெண்கள் தொடர்பினால் அம்மா எவ்வளவு சோகமாக இருக்கிறார் என்று சொன்னாள். எங்கள் இருவரின் அம்மாக்களும் கிளப்பில் ஒன்றாக பிரிட்ஜ் விளையாடுபவர்கள் என்பதால் என் அப்பாவைப்பற்றியும் அவளுக்குத் தெரிந்திருந்தது. இவையெல்லாவற்றையும் நேராக என் கண்ணுக்குள் பார்த்தபடி சொல்லிக்கொண்டிருந்தாள். மெதுவாக மௌனத்தில் மூழ்கினோம். அதற்குப் பிறகு வரும்போ தெல்லாம் வழக்கமான இடத்துக்குச் செல்வாள், அல்லது (பொனார் ஓவிய பாதிப்பில்) வரைவதற்கு ‘போஸ்’ கொடுப்பாள்; இல்லாவிட்டால் பக்கத்தில் இருந்த புத்தகம் ஒன்றைப் பிரித்து அந்த சோபாவில் படிப்பதுபோலச் சாய்ந்துகொள்வாள். அதன்பின் அவளை வரைகிறேனோ இல்லையோ, எங்களிடையே ஓர் ஒழுங்கு முறை ஏற்பட்டுவிட்டது: கதவைத் தட்டுவாள், அதிகம் பேசாமல் உள்ளே வருவாள், மூலையில் உள்ள சோபாவில் புத்தகம் படிப்பது போல ‘போஸ்’ கொடுத்தபடி சாய்ந்து கொள்வாள், அவ்வப்போது ஓரக்கண்ணால் நான் வரைவதைப் பார்த்துக்கொள்வாள். ஒவ்வொரு நாளும் காலையில் வரையத் தொடங்கிய சற்று நேரத்திலேயே அவள் எப்போது வருவாள் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவேன். அவள் எப்போதுமே அதிகநேரம் காத்திருக்க வைக்கவில்லையென்பது ஞாபகத்தில் இருக்கிறது. வரும்போது அதே வெட்கப் புன்னகையை இதழ்களில் அணிந்தபடி, தயக்கத்தோடு அதே இடத்திற்கு வந்து, அதேபோல சாய்ந்துகொள்வாள். எங்களிடையே அரிதாக நிகழ்ந்த உரையாடல்கள் எல்லாமே எதிர்காலம் குறித்தனவாகத்தான் இருந்தன. அவள் அபிப்பிராயத்தில் நான் மிகத் திறமை வாய்ந்த, கடுமையாக உழைக்கக்கூடிய ஓவியன். உலகப்புகழ்பெற்ற ஓவியனாக ஒருநாள் ஆகிவிடுவேன் - அவள் சொன்னது புகழ்பெற்ற துருக்கிய ஓவியன் என்றா? - எனது ஓவியக் கண்காட்சி பாரீஸில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அங்கு அவள் வந்து எல்லோரிடமும் அவள் என்னுடைய ‘பால்யகால சிநேகிதி’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வாள். விடுமுறையின் கடைசி சனிக்கிழமை மாலை மீண்டும் ஒன்றாக வெளியில் செல்வதாக முடிவெடுத்தோம். உணவகத்தில் கூட இருந்த முக்கியமில்லாத, எங்களை சுவாரஸ்யமாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்த நண்பர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பினோம். நான் அப்பாவின் காரை எடுத்து வந்திருந்தேன். டென்ஷனாக இருந்தேன். அவள் மேக்-அப் அணிந்து, மிகக்குட்டையான பாவாடையில் வந்தாள். காரிலிருந்து இறங்கிய பின்பும்கூட அவளது இனிய பர்ஃபியூம் மணம் சற்றுநேரத்திற்கு தங்கியிருந்தது. நாங்கள் திட்டமிட்டிருந்த இடத்தை அடைவதற்கு முன்பாகவே, இதற்கு முன் எங்கள் முதல் நடையை தோல்விக்குள்ளாக்கியிருந்த அப் பிசாசு இப்போதும் எங்களிடம் குறுக்கிடப் போகிறதென்ற உள்ளுணர்வு சொன்னது. அந்தப் பாதி நிறைந்த, சந்தடியான டிஸ்கோதேவிற்குள் அடியெடுத்து வைக்கும்போதே அந்தப் பிசாசை உணர்ந்தேன். எனது ஸ்டூடியோவில் எதுவும் பேசாமல் நாங்கள் செலவழித்த மௌனத் தருணங்களை இங்கு மீட்டெடுக்க முடியாதென்பது உடனே தெரிந்துபோயிற்று. இருந்தும், அங்கு ஒலித்த மெதுவான இசைக்கு நடனமாடினோம். மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டபடி அவளைக் கைகளால் வளைத்துக் கொண்டேன். முன்தீர்மானமின்றி, அவளை நெருக்கமாக இழுத்துக் கொண்ட போது அவள் கூந்தலில் வாதுமைப் பருப்பு வாசம் வீசியது. சாப்பிடும்போது அவள் உதடுகளின் சின்னச் சின்ன அசைவுகளை ரசித்தேன். கவலைப்படும்போது அவள் முகம் அணிலைப்போல இருந்தது. கிளம்பும்போது காரில் மௌனத்தை உடைத்தேன். “இப் போது வரைய வேண்டும் போலிருக்கிறது. உனக்கு ‘மூட்’ இருக்கிறதா?” அதிக ஆர்வமின்றி ஒப்புக் கொண்டாள். ஆனால் வீட்டுக்கு வந்து இருவரும் கையோடு கை கோர்த்தபடி ஸ்டூடியோவை நெருங்கும்போது உள்ளே விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து - யாராவது உள்ளே இருக்கிறார்களோ? - மனதை மாற்றிக்கொண்டு வர மறுத்துவிட்டாள். அடுத்த மூன்று நாட்களும் பிற்பகல் நேரங்களில் வந்தாள். எதுவும் பேசாமல் சோபாவில் காலை நீட்டி ஒருக்களித்துப் படுத்துக்கொள்வாள்; என் ஓவியங்களை வெறிப்பாள்; புத்தகத்தைப் புரட்டுவாள்; வெளியே தெரியும் கடலில் புரளும் அலைகளில் பார்வையை நிலைத்தபடி அசையாமல் சாய்ந்திருப்பாள். பின் வந்ததைப் போலவே சலனமின்றிக் கிளம்பிச் சென்றுவிடுவாள். விடுமுறை முடிந்து அக்டோபரில் அவளைச் சந்திக்க வேண்டுமென்ற நினைப்பே எனக்கு வரவில்லை. நான் ஆர்வத்தோடு படித்துக்கொண்டிருந்த புத்தகங்களும், வரைந்துகொண்டிருந்த ஓவியங்களும், என் புரட்சிக்கார இடதுசாரி நண்பர்களும், பல்கலைக்கழகத்தின் நடைவழிகளில் ஒருவரையொருவர் கொன்றுகொண்டிருந்த மார்க்ஸிஸ்டுகளும் தேசியவாதிகளும் போலீசாரும் எனது கோடை விடுமுறை அனுபவங்களை நினைத்து (பணக்கார நண்பர்கள், மேட்டுக்குடி உணவகங்கள், அவற்றின் தடை அரணிட்ட வாசல்கள், அவற்றில் நின்றிருக்கும் காவல் காரர்கள்) என்னை அவமானமடையச் செய்து வந்தனர். ஆனால் நவம்பரின் ஒரு மாலைநேரத்தில், அறைக் கணப்பு ஏற்றப்பட்டிருந்தபோது, திடீரென்று ஏற்பட்ட உந்துதலில் அவள் வீட்டுக்கு போன் செய்தேன். அவள் அம்மாதான் எடுத்தார். எதுவும் பேசாமல் வைத்து விட்டேன். அடுத்த நாள் முழுக்க எதற்காக அப்படியொரு முட்டாள்தனமான காரியத்தை செய்தேன் என்று என்னை நானே நொந்து கொண்டிருந்தேன். நான் காதலில் வீழ்ந்திருக்கிறேன் என்பதை உணர்ந்திருக்கவில்லை. ஒவ்வொருமுறை காதலில் விழும்போதும் திரும்பத் திரும்பக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது என்னவென்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. ‘நான் காதல் பிசாசினால் பீடிக்கப்பட்டிருக்கிறேன்’ என்பதுதான் அது. இவ்வாறாக காதல் என்று தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளாமலேயே, பத்தொன்பது வயதான ஓவியன் ஒருவனுக்கும் அவனைவிடச் சற்று இளையவளான ஒரு ‘மாடலுக்கும்’ இடையே உறவு ஒன்று வளரத் தொடங்கி எங்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு வினோதமான சங்கீதத்தின் ஸ்வரத்திற்கு இசைவாக நடனமாட ஆரம்பித்தது. முதலில் இந்த சிஹாங்கிர் ஸ்டூடியோவுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வந்துகொண்டிருந்தாள், பின் வாரத்திற்கு ஒருமுறை வந்தாள். இதே தோரணையில் (சோபாவில் சாய்ந்திருக்கும் இளம் பெண்) வேறு பல ஓவியங்களையும் வரையத் தொடங்கினேன். இப் போதெல்லாம் கோடை விடுமுறையின் கடைசி தினங்களைப் போலல்லாமல் வெகு அரிதாகவே எங்களுக்குள் பேச்சு இருந்தது. என் நிஜ வாழ்க்கை கட்டிடக்கலை படிப் பாலும், புத்தக வாசிப்பாலும், ஓவியனாக விழையும் எனது திட்டங்களாலும் நிறைந்திருந்தது. இந்த இரண்டாம் உலகத்தின் தூய்மைக் குள் குறுக்கிட்டு நாசம் செய்துவிடு வோமென்ற பயத்தில் எனது தினசரிப் பிரச்சனைகளை இந்தச் சோகமான அழகிய ‘மாடலோடு’ பேசாதிருந்தேன். அவளுக்குப் புரியாது என்று நினைத்திருக்கவில்லை- எனது இரண்டு உலகங்களையும் தனித்தனியாக பிரித்து வைத்திருக்க விரும்பியதுதான் காரணம். என்னுடைய கோடைக்கால நண்பர்களும் லீஸே பள்ளித் தோழர்களும் அவர்கள் அப்பாக்களின் தொழிற்சாலைகளைப் பொறுப்பேற்றுக்கொள்வதில் முனைப்பாக இருக்க, அவர்களைச் சந்திப்பதை நிறுத்திவிட்டிருந்தேன். ஆனால் வாரத்திற்கொருமுறை கருப்புரோஜாவை பார்ப்பது எனக்கு அளவற்ற பரவசத்தை அளிக்கிறது என்ற நிதரிசனமான உண்மையை என்னிடமிருந்து ஒளித்துக்கொள்ள முடியவில்லை. “என்னை இப்படிப் பார்ப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.” இந்த வாசகம் அவள் எதற்காப் புன்னகைத்தாள் என்பதை மட்டும் சொல்லவில்லை, இந்தப் புழுதி மண்டிய சிஹாங்கிர் வீட்டுக்கு வாரத்திற்கொருமுறை ஏன் வந்துகொண்டிருக்கிறாள் என்பதையும் உணர்த்துவதாக இருந்தது. சிலவாரங்கள் கழித்து அவள் இதழ்களில் அதே புன்னகை உருவாவதைக் கண்டபோது, தூரிகையை கீழே வைத்துவிட்டு அவளிடம் சென்றேன். பக்கத்தில் அமர்ந்து, நான் பல வாரங்களாகக் கனவு கண்டு கொண்டிருந்ததை நிறைவேற்றிக் கொள்வதற்காக, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த அழகிய முகத்தருகே குனிந்து முத்தமிட்டேன். வானம் கருத்திருந்ததால் இருண்டிருந்த அந்த அறை எங்கள் சாகசங்களுக்கு இசைவுடன் அனுமதிக்க, தாமதமாக உருப்பெற்றிருந்த இந்தப் புயல் எங்களைப் புரட்டியெடுத்து, எந்தத் தடையுமில்லாமல் உயரே தூக்கிச் சென்றது. நாங்கள் படுத்திருந்த சோபாவிலிருந்து பாஸ்ஃபரஸ்ஸின் கரிய நீர்ப்பரப்பில் கள்ளத்தனமாக அலைந்து கொண்டிருக்கும் படகுகளின் பாவொளிக்கற்றை களையும், அடுக்ககங்களின் சுவர் விளிம்புகளையும் பார்க்கமுடிந்தது. அதன்பிறகு தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருந்தோம். மிக சந்தோஷமான உறவு எங்களிடையே உருவாகியிருந்தது. பிற்காலத்தில் இதைப்போன்ற சந்தர்ப்பங்களில் என்னிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்த அர்த்த மற்ற அச்சுப்பிச்சு உளறல்கள், பொறாமையின் தாக்குதல்கள், பதற்றங்கள், குளறுபடிகள், அதீத உணர்ச்சிப்பிரவாகங்கள் போன்ற உந்துதல்களை இவளிடம் மட்டும் ஏன் வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டிருந்தேன்? ஏனென்றால் அவற்றை நான் உணரவில்லை. ஒருவேளை ஒருவரையொருவர் கண்ணோடு கண் பார்த்தபடி மௌனத்தில் பிணைந்திருக்க வேண்டிய எங்களின் ஓவியன் - மாடல் உறவு முறையினால் கூட இருக்கலாம். அல்லது இன்னொரு காரணம்கூட இருக்கலாம் - மனதின் ஒதுக்குப்புறமான ஒருசின்ன மூலையில் குழந்தைத்தனமான அவமானத்தோடு இப்படி ஒரு எண்ணத் தைப் பொதித்து வைத்திருந்தேன் - அவளை நான் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால், நான் ஒரு தொழிற்சாலையின் உரிமையாளராக வேண்டும், ஓவியனாக அல்ல. இந்தத் துயரம் என்மீது பெரும் பாரமாக அமர்ந்திருக்கும் போது எனக்கு உடனே சிஹாங்கிருக்கு ஓடிச்சென்று, இந்த இஸ்தான் புல் காட்சிகளுக்கு இணை யாக ஏதோவோர் ஓவியத்தை வரைய வேண்டும் போலிருக்கும். அத்தகைய தோர் ஓவியம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றி ஒன்றும் எனக்குத் தெரிந்திருக்காது. ஆனால் என் அழகான மாடல், அவளது துயரத்திற்கு வேறொரு மாறுபட்ட தீர்வை வைத்திருக்கிறாள் என்பதை அறிந்தபோது அது எனது முதல் ஏமாற்றமாக இருந்தது. ஒருநாள் டாக்ஸிம்மில் சந்தித்த போது, “இன்று எனக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது. ஹில்டன் ஹோட்டலுக்குப் போய் தேநீர் அருந்தலாமா? இந்த ஏழ்மைப் பகுதிகளுக்கு இன்றும் சென்றால் எனக்கு மேலும் மோசமாகிவிடும். மேலும் அதிகம் நேரமும் இல்லை.” நான் அப்போது இடதுசாரி மாணவர்கள் அணிந்திருப்பதைப்போல ஒரு ராணுவக்கோட்டை அணிந்திருந்தேன். சவரம் செய்திருக்கவில்லை. என்னை ஹில்டன் ஹோட்டலுக்குள் அனுமதித்தால்கூட, இருவரும் தேநீர் அருந்துமளவுக்கு என்னிடம் பணம் இருக்குமா? ஹோட்டலுக்குச் செல்லாமல் சற்று நேரம் இழுத்தடித்தேன். பின், சென்றோம். முகப்புக்கூடத்தில் என் அப்பாவின் பால்யகால நண்பர் அடையாளம் கண்டுகொண்டு அருகில் வந்தார். ஒவ்வொரு நாளும் பிற்பகல் நேரத்தில் ஹில்டனுக்கு வந்து, ஐரோப்பாவில் இருப்பதைப்போல பாவித்துக்கொண்டே தேநீர் அருந்திவிட்டுச் செல்வது அவர் வழக்கம். போலிப்பகட்டோடு என் சோகமான காதலியின் கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு, என் காதருகே வந்து என் இளம் சிநேகிதி மிக அழகாக இருப்பதாகக் கிசுகிசுத்தார். நாங்கள் இருவருமே வேறு சிந்தனையில் மூழ்கியிருந்ததால் அவரைப் பொருட்படுத்தவில்லை. “என் அப்பா, என்னைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு சுவிட்ஸர்லாந்துக்கு அனுப்பப்போகிறாராம்,” என் அன்புக் காதலியின் மாபெரும் விழிகளில் கண்ணீர் சேகரமாகி, ஒரு முத்து அவள் கையிலிருந்த கோப்பையில் உதிர்ந்தது. “ஏன்?” அவர்களுக்கு நம்மைப்பற்றித் தெரிந்துவிட்டது என்றாள். நம்மை என்று அவர்கள் யாரைச் சொல்கிறார்கள் என்று நான் கேட்டேனா? எனக்கு முன்பு அவள் காதலித்த பையன்கள் அவளுடைய அப்பாவிடம் இவ்வளவு கோபத்தையும் பொறாமையும் உண்டாக்கியிருந்தார்களா? எதற்காக நான் மட்டும் அவ்வளவு முக்கியமாகிவிட்டேன்? இந்தக் கேள்விகளை நான் கேட்டேனா என்று நினைவில் இல்லை. அச்சமும் சுயநலமும் என் இதயத்தை மழுங்கடித்திருந்தன. எனக்கு என்னைப் பாதுகாத்துக் கொள்வதில்தான் அதிகக் கவலை இருந்தது. அவளை இழந்து விடுவோமோவென்று பயந்தேன் - ஒரு மகத்தான வேதனை என்னை ஆட்கொள்ளக் காத்திருப்பதின் அறிகுறிகளை அப்போது நான் உணர்ந் திருக்கவில்லை - எனக்கு அவள் சிஹாங்கிருக்கு வந்து சோபாவில் படுத்துக்கொண்டு எனக்கு ‘போஸ்’ தருவதற்கும், உறவுகொள்வதற்கும் வர மறுத்துக்கொண்டிருப்பதுதான் அப்போது பெரிய ஆத்திரமாக இருந்தது ஞாபகமிருக்கிறது. அது ஹலில் பாஷாவின் ‘ஒருக்களித்திருக்கும் பெண்’ ஓவியம். ஹில்டன் ஹோட்டல் லாபி சந்திப்புக்குப் பின் இருவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு ஒன்றாகச் சென்றதுதான் ஆரம்பம். அப்போது வேறு எதனையும் பார்க்காமல் நேராக இந்த ஓவியத்திடம்தான் கூட்டிச்சென்றேன். இந்த ஓவியத்தில் இருந்த பெண்ணைப் பார்த்தபோது வியப்பும் அதிர்ச்சியும் ஒருசேரத் தாக்கியது நினைவில் இருக்கிறது. அவள் செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு அந்த நீலநிற சோபாவில், இடதுகையைத் தலையணையாக வைத்தபடி ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு ஓவியனை (அவள் கணவனை?) சோகமாக வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள், என் ஓவிய மாடலைப் போலவே. இந்த வினோதமான ஒற்றுமை மட்டும் இவ்வோவியத்திற்கு என்னை இழுத்து வந்ததென்று சொல்ல மாட்டேன். ஓவியக்கூடத்தின் பக்கவாட்டுத் தாழ்வாரத்தில் மாட்டப்பட்டிருந்த அவள் நாங்கள் முத்தமிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறாள். காவலாளியின் காலடியோசை அந்த மரப்பலகைத் தரையில் முனகிக்கொண்டே நெருங்கி வருவதைக் கேட்டதும் உடனே சுதாரித்துக்கொண்டு, அந்த ஓவியப் பெண்ணைப்பற்றி தீவிரமாக அலசத் தொடங்கிவிடுவோம். அந்த ஓவியத்தின் எல்லா நுட்ப விவரங்களும் அதனால் அத்துப்படியாகியிருந்தன. அவற்றோடு Encyclopedia வில் ஹலில் பாஷாவைப் பற்றி நாங்கள் படித்திருந்ததையும் சேர்த்துக் கொண்டு எங்கள் அறிவார்ந்த அலசலை அந்தக் காவலாளிக்குக் கேட்கும்படி நடத்துவோம். “பொழுது சாய்ந்ததும் இந்தப் பெண்ணின் பாதம் குளிரில் விறைத்துவிட்டிருக்கும்,” என்றேன். “ஒரு கெட்ட செய்தி சொல்ல வேண்டும்,” என்றாள் என் காதலி. ஒவ்வொருமுறை இந்த ஓவியத்தின் முன்னால் நிற்கும்போதும் அவள் அந்த ஹலில் பாஷாவின் மாடலைப்போலவே எனக்குத் தெரிந்துகொண்டிருந்தாள். “என் அம்மா ஒரு கல்யாணத் தரகரை கூட்டி வந்துவிட்டார். அந்தப் பெண்மணியை நான் பார்த்துப் பேசவேண்டுமாம்.” “ஓ?” “அபத்தமாக இருக்கிறது. அந்தப் பெண்மணி ஒரு ஆளைச் சொல்கிறாள். அவன் யாரோ ஒரு பணக்காரப் பையனாம், அமெரிக்காவில் படித்திருக்கிறானாம்.” ஒரு கேலியான தொனியில் அவனது பணக்காரக் குடும்பப் பெயரைச் சொன்னாள் “உன் அப்பா அவர்களைவிடப் பத்துமடங்கு பணக்காரர் ஆயிற்றே.” “உனக்குப் புரியவில்லையா? உன்னிடமிருந்து என்னைப் பிரிக்க வேண்டுமென்பதற்காக இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள்.” “அப்படியானால் நீ அந்த கல்யாணத் தரகுப் பெண்ணோடு கலந்தாலோசிக்கப் போகிறாய்?” “அது முக்கியமில்லை. வீட்டில் பிரச்சனை கிளம்புவதை நான் விரும்பவில்லை.” “நாம் சிஹாங்கிருக்குப் போவோம். உன்னை வைத்து இன்னொரு ஓவியம் வரையப்போகிறேன். இன்னொரு ‘ஒருக்களித்திருக்கும் பெண்’ ஓவியம். உன்னை முத்தமிட்டு, முத்தமிட்டு, முத்தமிட வேண்டும்.” என் காதலிக்கு நான் மோகவலையில் சிக்கித் தவிப்பது மெதுவாகப் புரிந்திருந்தது. பயப்படத் தொடங்கியிருந்தாள். பேச்சை மாற்றும்விதமாக எங்கள் இருவரையும் அரித்துக்கொண்டிருந்த சிக்கலைப்பற்றிப் பேச ஆரம்பித்தாள்: “நீ ஓவியனாக விரும்புகிறாய் என்பதால்தான் என் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை,” என்றாள். “ஓவியனாக இருந்தால் ஏழையாகத்தான் இருப்பாய், குடிகாரனாகிவிடுவாய். நான் உன்னுடைய நிர்வாண மாடலாகத்தான் இருக்கவேண்டிவரும் என்று பயப்படுகிறார்.” பிப்ரவரியின் ஆரம்பத்தில், பள்ளி விடுமுறை தொடங்குவதற்கு முன் நிகழ்ந்த எங்கள் கடைசி சந்திப்பில், மனதின் இறுக்கத்தை தளர்த்திக்கொள்ளவும், எதிர்நோக்கியிருக்கும் அபாயங்களை சற்று மறந்திருக்கவும் என்னுடைய ராபர்ட் அகாதெமி நண்பர்களைச் சென்று பார்ப்பது என்றும், அப்படியே எங்களுக்கு அந்த அபார்ட்மென்ட்டை பயன்படுத்திக் கொள்ள தந்ததற்காக என் நண்பனுக்கு நன்றி சொல்வது என்றும் கிளம்பிச் சென்றோம். வேறு சில வகுப்புத் தோழர்களும் அங்கு இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் அப்போதுதான் என் காதலியை முதன்முதலாகப் பார்க்கிறார்கள். எல்லோரும் என் உடம்பில் அங்கங்கே ரகசியமாகக் குத்தி நிமிண்டிக் கொண்டிருந்தார்கள். என்னுடைய வெவ்வேறு நட்பு வட்டங்களை இதுவரை ஒன்று கலந்துவிடாமல் இருந்தது எவ்வளவு நல்லதாய் போயிற்று என அப்போது புரிந்தது. என் கருப்பு ரோஜாவும் என் கல்லூரி நண்பர்களும் சந்திக்க நேர்ந்த முதல் கணத்திலிருந்தே அனைத்தும் தப்பாக நடக்கத்தொடங்கின. அவளோடு நட்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் என்னை மெலிதாகக் கிண்டல் செய்து பேசியபோது அவள் அதை ரசிக்கவில்லை. பிறகு நாகரிகம் நிமித்தமாக அவர்களுடைய நகைச்சுவைகளில் ஒப்புக்கு கலந்துகொண்டபோது சூழல் அபத்தமாக மாறியது. அவர்கள் அவளுடைய அம்மா, அப்பா, அவர்கள் என்ன செய்கிறார்கள், எங்கே இருக்கிறார்கள், அவர்களுக்கு சொந்தமாக என்னென்னவெல்லாம் இருக்கிறது என்றெல்லாம் துருவித் துருவிக் கேட்டபோது பேச்சை அவள் பாதியிலேயே வெட்டிவிட்டு வெறுப்போடு தலையைத் திருப்பி அந்த பெபெக் உணவகத்திலிருந்து பாஸ்ஃபரஸ்ஸை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். கால்பந்தாட்டம், சில நுகர்சாதனங்கள் பற்றிப் பேச்சு வந்தபோது சில வார்த்தைகள் கலந்துகொண்டாள். அந்த சந்திப்பில் அவள் சற்றேனும் மலர்ந்து காணப்பட்டது அங்கிருந்து கிளம்பி பாஸ்ஃபரஸ்ஸின் குறுகலான பகுதியான ‘ஆஷியன்’ அருகே வந்தபோது எதிர்க்கரையில் மற்றொரு மரக்கட்டடம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்தபோதுதான். அது கந்தில்லியிலிருந்த மிக அழகான பாஸ்ஃபரஸ் யாலிகளில் ஒன்று. நாங்கள் இருந்த இடத்திலிருந்து கொஞ்ச தூரத்திலேயே இருந்தது. காரிலிருந்து இறங்கி னோம். பழமையான அந்த அற்புத மர மாளிகை கொழுந்துவிட்டெரிவதை என் நண்பர்கள் மிகச் சந்தோஷமாக ரசிததுக்கொண்டிருப்பதைக் கண்டு சகிக்க முடியாமல் என் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு என்னோடு ஒட்டிக்கொண்டாள். ஆட்டமன் சாம்ராஜ் ஜியத்தின் கடைசியாக எஞ்சியிருக்கும் மாளிகைகளில் ஒன்று எரிவதை கிட்டத்திலிருந்து பார்க்க வேண்டுமென்று அவர்களிடம் சொல்லிவிட்டு, அந்த கார்களையும் கூட்டத்தையும் விட்டு விலகி, ரூமெலிஹிஸாரியின் மறுமுனை வரை நடந்து வந்துவிட்டோம். லீஸே பள்ளியில் படிக்கும் காலத்தில் வகுப்பை வெட்டிவிட்டு படகில் மறுகரைக்குச் சென்று அங்கிருக்கும் தெருக்களில் அலைந்துகொண்டிருந்த கதையை அவளிடம் சொன்னேன். நாங்கள் நின்றிருந்த இடத்தின் எதிரே சிறிய கல்லறை ஒன்று இருந்தது. அந்த நடுங்கவைக்கும் குளிர் இரவின் இருட்டில் பாஸ்ஃபரஸ்ஸின் மிக வலுவான நீரோட்டங்களின் அதிர்வு எங்கள் எலும்புகளைக் குலுக்க, என் காதலி கிசுகிசுப்பான குரலில், “ஐ லவ் யூ வெரிமச்,” என்றாள். அவளுக்காக நான் எதையும் செய்வேன் என்றேன். என் பலம் அனைத்தையும் கொண்டு அவளை இறுக்கி அணைத்துக்கொண்டேன். முத்தமிட்டுக்கொண்டோம். கண்களைத் திறக்கும போதெல்லாம், மறுகரை நெருப்பின் ஆரஞ்சுத் தழல் அவள் மென்மையான கன்னங்களில் பரவியிருந்தது. திரும்பும்போது காரின் பின்னிருக்கையில் எதுவும் பேசாமல், கைகளை இறுக்கமாக பிணைத்துக் கொண்டிருந்தோம். அவள் வீட்டுக்கு எதிரில் நின்றதும் ஒரு குழந்தையைப்போலத் துள்ளிக்கொண்டு கதவை நோக்கி ஓடினாள். அவளைக் கடைசியாகப் பார்த்தது அப்போதுதான். அடுத்தமுறை சந்திக்க வரவில்லை. மூன்று வாரங்கள் கழித்து, பள்ளி விடுமுறை முடிந்ததும், பள்ளி விடும் நேரத்தில் Dame de Sion வாசலுக்கு எதிரே தூரத்தில் நின்றுகொண்டு வெளியே வரும் பெண்களில் என் கருப்பு ரோஜாவைத் தேடிக்கொண்டிருந்தேன். பத்து நாட்கள் கழித்து என் நம்பிக்கை தகர்ந்தது. இருந்தாலும் ஒவ்வொரு நாளும் பிற்பகலில் என் கால்கள் அந்த லீஸே பள்ளியின் வாசலுக்கு என்னைக் கொண்டு சேர்த்துக்கொண்டிருந்தன. மாணவிகள் அனைவரும் வெளியே வந்து வாசல் வெறுமையாகும் வரை நின்றிருப்பேன். ஒருநாள் அவளுக்கு மிகப் பிரியமான, மூத்த சகோதரன் அந்தக் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு என்னிடம் வந்து அவனுடைய தங்கை ஸ்விட்சர்லாந்திலிருந்து அவளது பிரியங்களை என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு கடித உறையைக் கொடுத்தான். ஒரு சிற்றுண்டியகத்தில் அமர்ந்து அக்கடிதத்தை உடைத்து, ஒரு சிகரெட்டை புகைத்தபடியே படித்தேன். புதிய பள்ளிக்கூடம அவளுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், என்னையும் இஸ்தான்புல்லையும் அவளால் மறக்க முடியவில்லையென்றும் எழுதியிருந்தாள். அவளுக்கு நீளமாக ஒன்பது கடிதங்கள் எழுதினேன். அவற்றில் ஏழு கடிதங்களை உறையிலிட்டு, ஐந்தை மட்டும் தபாலில் சேர்த்தேன். பதில் வரவேயில்லை.
* திவான் கவிஞர்கள் - அரசவைக் கவிஞர்கள்.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் ‘இஸ்தான்புல்’ நூலிலிருந்து ஒரு பகுதி.
| |