Shanmugam Subramaniam liked this.
Ashok-yogan Kannamuthu
2 hrs ·
எவ்வாறு சித்திரவதைக்கு உள்ளானவர்களும்
சித்திரவதையாளர்களும் ஒரே இடத்தில்
சமாதானமாகி வாழமுடியும்?
ஒடுக்குமுறையால் பீதியூட்டப்பட்ட ஒரு நாட்டில்
வெளிப்படையாக பேசுவது பற்றிய பயம் இன்றளவும்
எங்கெங்கும் நிறைந்திருக்கும் ஒருநாட்டில் எவ்வாறு
அந்த நாட்டை வேதனைகளிலிருந்து மீட்க முடியும். ?
பொய்மையே வழமையாகிவிட்ட போது
உண்மையை எப்படித்தான் எட்டுவது?
வரலாற்றின் கைதிகளாக நாம் ஆகாமல் எப்படி
கடந்த காலத்தை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வது?
வருங்காலத்திலும் இவை நேரலாம் என்று கருதாமல்
எவ்வாறு அதை முற்றிலும் மறுத்தல் முடியும் ?
கடந்த காலத்தை நாம் மறுத்துவிடும் போதும்
நிராகரிக்கும்போதும் உண்மை நம்மிடம் வந்து
முணுமுணுக்கும் போதும் கதறும்வேளையிலும்
அதன்விளைவுகள் என்னவாக இருக்கும்.?
ஆரியல் டோப்மேன்.
நாடக ஆசிரியர் /கவிஞர்/ விமர்சகர் /மொழிபெயர்ப்பாளர்.
நன்றி : யமுனா ராஜேந்திரன்
டிபாசாவிற்கு மீள்வருகை
ஆல்பெர் காம்யு- தமிழில் :நம்பி கிருஷ்ணன் | இதழ் 140 | |
மெடியா! நெஞ்சிலே நெருப்புடன் நெடுந்தூரம் சென்றுவிட்டாய்
உன் தந்தையின் இல்லத்திலிருந்து. எத்தனை கடல்களில்
எத்தனை பாறைகளாலான வாசல்களை கடந்திருப்பாய்
இதோ இப்போது இந்த அன்னியக் கரையில் உறங்குவதற்காக.
மெடியா
ஐந்து நாட்களாக அல்ஜியர்சில் மழை ஓயாமல் பெய்து இப்போது கடலையே தொப்பலாக நனைத்துவிட்டது. முடிவில்லாதது போல் தோற்றமளிக்கும் வானத்தின் உயரங்களிலிருந்து பிசுபிசுப்பான அப்படி ஒரு கனமழை வளைகுடாவில் மோதி வீழ்ந்தது. பெரும் நீருறிஞ்சிப்பஞ்சைப் போல மென்மையாகவும் சாம்பல் நிறத்துடனும் வடிவமற்ற அந்த விரிகுடாவில் கடல் பொங்கி அமிழ்ந்தது. ஆனாலும் இடையறாது வீழும் மழையின் கீழ் அதன் நீர்ப்பறப்பு அனேகமாக அசைவின்றி காட்சியளித்தது. பரந்த உணரமுடியாத அசைவின் மூலம் இருளார்ந்த ஆவித்திரளொன்றை நீண்ட இடைவெளிகளுக்கிடையே கடலிலிருந்தள்ளி வட்டவடிவில் துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த முற்றிலும் நனைந்த மரவரிசைகளுக்கு கீழே உருட்டிச் சென்றது. ஈரம் வழிந்தோடும் வெள்ளைச் சுவர்கள் கொண்ட இந்த ஊரே மற்றொரு ஆவித்திறளை எழுப்பியது. அது முதல் ஆவித்திரளை சந்திப்பதற்காக அலைபோல் எழுந்தது. எந்தப்பக்கம் திரும்பினாலும் நீரை மட்டுமே சுவாசிக்க முடிந்தது, காற்றிலிருந்தே நீரைக் குடித்துவிடலாம் போலிருந்தது.
டிசம்பர் மாதம் முழுதும் நான் மூழ்கிக்கொண்டிருக்கும் இந்தக் கடலையும், இன்னமும் எனக்கு கோடைகளின் நகரமாகவே விளங்கும் அல்ஜியர்சையும் பார்த்துக்கொண்டு அலைந்து திரிந்தேன். காத்துக்கொண்டுமிருந்தேன். ஐரோப்பாவின் இரவையும், அதன் குளிர்கால முகங்களையும் துறந்து நான் ஓடிவந்திருந்தேன். ஆனால் இந்த கோடைகளின் ஊர் கூட நீர் வழிந்தோடும் கூனல் முதுகுகளையே எனக்களித்தது. மாலையில் கணகணவென்று விளக்கிடப்பட்ட கஃபேகளில் நான் தஞ்சம் புகுந்தபோது அவர்களின் பெயர்களை அறியாமலே அவர்களின் முகங்களில் என் வயதை அடையாளம் கண்டுகொண்டேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் என்னுடன் ஒரு காலத்தில் இவர்கள் இளமையாக இருந்தார்கள் என்பதும் இப்போது இளமை இவர்களைவிட்டு எங்கோ சென்றுவிட்டது என்பதும்தான்..
எனினும் தங்கியிருந்தேன், எதற்காக காத்திருக்கிறேன் என்பதைப் பற்றிய தெளிவான எண்ணங்களின்றி, டிபாசாவிற்கு மீண்டும் செல்வதற்கான தருணத்தின் எதிர்பார்ப்பைத் தவிர. இளமையில் புழங்கிய இடங்களுக்கு மீண்டும் செல்வதும், இருபது வயதில் உவகையுடன் அனுபவித்துச் செய்தவற்றை நாற்பதில் மீண்டும் செய்ய விழைவதும் அனேகமாக எப்போதுமே தண்டிக்கப்படக்கூடிய ஒரு மூடத்தனமே. ஆனால் இம்மூடத்தனத்தை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். எனது இளமையின் முடிவை அடையாளப்படுத்தும் அந்த போர் வருடங்களுக்குப் பின், வெகு விரைவிலேயே டிபாசாவிற்குச் சென்றிருந்தேன். என்னால் மறக்கவே முடியாத சுதந்திரத்தை அங்கு மீண்டும் கண்டெடுக்கும் நம்பிக்கையில் தான் அங்கு சென்றேன் என்று நினைக்கிறேன். இதோ இங்கு தான், இருபது ஆண்டுகளுக்கு முன், இடிபாடுளில் அலைந்து திரிந்து, காஞ்சிரையின் வாசத்தை முகர்ந்துகொண்டு, கற்களின் வெப்பத்தில் என்னை வெதுவெதுப்பாக்கிக் கொண்டு, சிறிதுகாலமே வாழ்ந்தாலும் வசந்தகாலம் வரையிலும் உயிரை தக்கவைய்த்துக் கொண்டிருக்கும் ரோஜாக்களைக் கண்டுபிடித்துக் கொண்டும் நான் என் காலைகளைக் கழித்தேன். சில்வண்டுகளைக் கூட மௌனமாக்கிவிடும் வெப்பம் மிகுந்த மதியத்தில் நான் அனைத்தையும் ஆட்கொள்ளும் அந்த ஜ்வாலிக்கும் கிளரொளியைத் தப்பியோடுவேன். சிலசமயம் இரவில் விண்மீன்கள் நிறைந்தொழுகும் வானத்தின் கீழ் திறந்த கண்களுடன் படுத்திருப்பேன். நான் உயிர்த்திருந்த கணங்கள் அவை. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு எனது இடிபாடுகளை மீண்டும் கண்டெடுத்தேன். முதல் அலைகளிலிருந்து சில அடிகளில், மறக்கப்பட்ட நகரத்தின் கசப்பான மரங்கள் நிறைந்திருக்கும் பரப்புகளினூடே அதன் சாலைகளை பின்தொடர்ந்தேன்; விரிகுடாவை மேலிருந்து நோக்கியிருக்கும் மலைகள் வரையிலும் கூட, ரொட்டியின் நிறத்தை ஒத்திருக்கும் அவற்றின் தூண்களை இன்னமும் கூட என்னால் தொடமுடிந்தது. ஆனால் இப்போது அவ்விடிபாடுகள் வரிமுட் கம்பியால் வேலியிடப்பட்டிருந்தன. அதிகாரப்பூர்வமான வாசல்களின் வழியாகத்தான் அவற்றை இப்போது அடைய முடியும். மேலும் அங்கு இருட்டிய பிறகு நடப்பதற்கு ஒழுக்கத்தின் பேரில் இப்போது தடைவிதிக்கப் பட்டிருக்கிறது என்றும் நினைக்கிறேன்; காலையில் சென்றால் அங்கு ஒரு அரசாங்க காவலரைச் சந்திக்கக் கூடும். அன்று காலையில், சந்தேகமில்லாமல் எதேச்சையாகத் தான், இடிபாடுகளின் முழுப்பரப்பு நெடுகிலும் மழை பெய்துகொண்டிருந்தது. தனிமையான மழைதோய்ந்த அந்த நாட்டுபுறத்தில் ஒரு விதமான பிரமிப்புடன் நடக்கையில், என்னை எப்போதுமே கைவிடாத அந்த மனவலிமையை மட்டுமாவது மீடக முயன்றேன். என்னால் மாற்றமுடியாது என்பதை நான் உணர்ந்தபின் நடப்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையளிக்கும் வலிமையது. நிச்சயமாக காலத்தில் பின்சென்று நெடுநாட்களுக்கு முன் ஒரே நாளில் மறைந்த நான் விரும்பிய அந்த முகத்தை உலகில் மீண்டும் மீட்டளிக்க என்னால் முடியாது. செப்டெம்பர் இரண்டு 1939-இல் திட்டமிட்டபடி நான் க்ரீஸிற்குச் செல்லவில்லை. அதற்குப் பதில் போர் எங்களை முதலிலும் பின்னர் க்ரீஸையும் சூழ்ந்துகொண்டது. அன்று கருநீரால் நிரப்பப்பட்ட கல்லறைகளை பார்த்துக்கொண்டிருக்கையிலும் ,மழைத்துளி சொட்டிக்கொண்டிருக்கும் தாமரிஸ்க் மரங்களின் கீழ் நின்றுகொண்டிருக்கையிலும் வெதுவெதுப்பான இந்த இடிபாடுகளையும் முட்கம்பிகளையும் குறுக்கிட்டுப் பிரிக்கும் காலமும் தொலைவும் என்னுள்ளேயும் இருப்பதை நான் உணர்ந்தேன். இன்றும் இந்த கண்கொள்ளா அழகைத் தான் என்னுடைய ஒரே சொத்து என்று கருதுகிறேன். அதில் வளர்க்கப்பட்ட நான் செழிப்பில் தொடங்கியிருப்பதை இப்போது தான் உணர்கிறேன். முட்கம்பியெல்லாம் பிறகு வந்தவை தான் – அடக்குமுறைகள், போர், கண்காணிப்புகள், போராடுவதற்கான நேரம் இவற்றை தான் குறிப்பிடுகிறேன். இரவின் நியதிகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது : காலைநேரத்தின் அழகென்பது ஒரு நினைவு மட்டுமே. சகதிக்கூடமான இந்த டிபாசாவில் அந்த நினைவு கூட மங்கிக் கொண்டிருந்தது. அழகிற்கெல்லாம் இப்போது இடமில்லை, நிறைவிற்கும், இளமைக்கும் கூட! சுவாலைகளின் வெளிச்சத்தில் உலகம் தன் சுருக்கங்களையும் நோய்களையும் (பழையது, புதியது இரண்டையுமே) காட்டி நிற்கினறது. திடீரென்று வயதாகிவிட்டது அதற்கு, நமக்கும் கூட. நான் தேடிவந்த ஆர்வமும் உக்கிரமும் அதை எதிர்பார்க்காத ஒருவரிடத்தில் தான் உயிர்த்தெழும் என்பதை நான் அறிவேன். சிறிது அப்பாவித்தனம் இல்லாமல் காதல் இல்லை. ஆனால் அப்பாவித்தனம் எங்கே? வல்லரசுகள் நொறுங்கித் துகளாகுகின்றன, மனிதர்களும், நாடுகளும் ஒருவர் தொண்டையை மற்றவர் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் : நமது வாய்கள் அசுத்தப்படுத்தப்பட்டு விட்டன. நம்மை அறியாமலே முதலில் அப்பாவிகளாக இருந்தோம், இப்போதோ திட்டமிடாமலே குற்றத்தை சுமந்து நிற்கிறோம்: எவ்வளவிற்கெவ்வளவு தெரிந்து கொண்டோமோ அவ்வளவிற்கவ்வளவு மர்மமும் அதிகரித்திருக்கிறது. இதனால் தான் (ஓ, என்னவொரு கேளிக்கை) நன்னடத்தையில் மும்முரமாக நம்மை ஈடுபடுத்திக் கொண்டோம். நலிவுற்ற ஆன்மாவுடன் நான் நேர்மையைப் பற்றி கனவு கண்டேன்!. களங்கமற்ற நாட்களில் ஒழுக்கம் என்றொன்றிருப்பதையே நான் அறிந்ததில்லை. இப்போது அதைப் பற்றி அறிந்திருந்தாலும் அதன் நியதிகளுக்கு ஏற்ப வாழமுடியவில்லை. ஒரு காலத்தில் நான் பெரிதும் நேசித்த கடல்முகத்தின், பாழடைந்த கோயிலின் முற்றிலும் நனைந்த தூண்களுக்கிடையே யாரோ ஒருவனைப் பின்தொடர்ந்து செல்வது போலிருந்தது. கல்லறைக்கற்கள் மீதும், மொசைக்கின் மீதும் ஒலித்த அவனது காலடிகளை என்னால் கேட்கமுடிந்தாலும் அவனை என்னால் பிடித்துவிட முடியாது என்பதையும் நான் அறிந்திருந்தேன். மீண்டும் பாரிஸுக்குத் திரும்பிச் சென்றேன். சில வருடங்கள் அங்கு இருந்துவிட்டு மீண்டும் வீடு திரும்பினேன்.
ஆனால் அவ்வருடங்களில் ஏதோ ஒரு விவரிக்க இயலாத இழப்பை என்னுள் உணர்ந்தேன். ஒருமுறை தீவிரமாக காதலிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துவிட்டாலே போதும், வாழ்க்கை முழுவதும் அதே ஒளியையும், அதே உக்கிரத்தையும் தேடுவதிலேயே கழிந்துவிடுகிறது. அழகையும், புலனுணர்வால் கிட்டும் மகிழ்ச்சியையும் துறந்து நிர்ப்பாக்கியத்திற்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொள்வதற்கு ஒரு விதமான பெருந்தன்மை தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பெருந்தன்மையை நான் பெற்றிருக்கவில்லை என்பதையும் உணர்கிறேன். ஆனால் அவ்விரு துருவத்தில் ஒன்றை மட்டுமே பிரத்தியேகப்படுத்தும் எதுவுமே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. தனிமைப்படுத்தப்பட்ட அழகு முகச்சுளிப்பினில் சென்று முடியும், ஒற்றைக்கட்டையாய் தனித்திருக்கும் நீதியோ அடக்குமுறையில். ஒன்றைத் துறந்து மற்றொனறிற்கு மட்டுமே சேவை செய்ய விழைபவர் எவருக்குமே சேவை செய்வதில்லை, அவர்களுக்கும் கூட. இறுதியில் அவர்கள் அநீதிக்கு மட்டுமே இருமடங்கு துணைபோகும் பணியாட்களாகிறார்கள். வளைந்துகொடுக்க முடியாததால் நம்மை எதுவுமே எப்போதும் ஆச்சரியப்படுத்த முடியாத நாளொன்றும் வரும்; அனைத்தையுமே அறிந்ததால் எஞ்சியிருக்கும் வாழ்க்கை முழுவதும் மீண்டும் தொடங்குவதிலேயே கழிந்துவிடும். நாடு கடத்தப்பட்ட , வரண்ட, உயிரற்ற ஆன்மாக்களின் காலமாகவே அது இருக்கும். மீண்டும் உயிர்த்து வர நமக்குக் கிருபையும், தாயகமும், நம்மையே மறப்பதற்கான திறனும் தேவைப்படுகிறது. சில காலைகளில், தெருமுனையில் திரும்புகையில் அதியற்புதமான நீர்த்திவலையொன்று நம் நெஞ்சின் மீது விழுந்து மறைகிறது. சில காலத்திற்கேனும் அதன் புதுப்பசுமை நீடிக்கிறது. ஆனால் இது போதும். நம் வரண்ட நெஞ்சத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய. டிபாசாவிற்கு மீண்டும் திரும்பிச் செல்வதற்கான அவா என்னை ஆட்கொண்டது. .
அல்ஜியர்சில் இரண்டாவது முறையாக, நான் அறுதியானது என்று எண்ணியிருந்த புறப்பாட்டு தினத்திலிருந்து தொடர்ந்து பெய்துகொண்டிருக்கும் அதே மழையில் நடந்து கொண்டு… மழையும் கடலும் கலந்த வாசத்தில் தோய்ந்த அளவற்ற ஒரு விதமான துயரத்தின் மத்தியில், பனிமூடிய வானத்தையும், மழைக்கு பயந்தொடுங்கும் மக்களின் பின்புறங்களையும், அனைவரின் முகத்தையும் சிதைந்தழுகச் செய்யும் கஃபேக்களின் கந்தக வெளிச்சத்தையும் பொருட்படுத்தாது நான் விடாப்பிடியாக என் நம்பிக்கைகளில் நிலைத்திருந்தேன். இரண்டு மணியளவிலேயே பெருக்கெடுத்தோடி பல ஏக்கர் நிலத்தை சின்னாபின்னப்படுத்தி, பின்னர் ஒரே நொடியில் வற்றிவிடும் என் நாட்டின் ஆறுகளைப் போல எப்போதிற்குமே பெய்யப்போவதைப் போல் பாவனை செய்துவிட்டு பின் திடீரென நின்று விடும் இந்த அல்ஜியர்ஸ் மழையைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன ? ஒரு நாள் மாலை, மழை உண்மையாகவே நின்றுவிட்டது. கண்கூசும்படியாக திரவமான ஒரு காலை கடலின் மீது எழுந்தது. வானத்திலிருந்து, ரோஜாவைப் போல் புத்தம் புதிதாக, நீரினால் மீண்டும் மீண்டும் கழுவப்பட்டு, ஒவ்வொரு கழுவலிலும் அதன் மிக நுண்மை நிரம்பிய துல்லியமான இழை நயத்திற்கு செப்பம் செய்யப்பெற்ற ஒரு துடிதுடிக்கும் ஒளி வீழ்ந்தது. ஒவ்வொரு வீட்டிற்கும், மரத்திற்கும் உணரக்கூடிய வடிவத்தையும், வியக்கத்தக்க புதுப்பொலிவையும் அது வழங்கியது. உலகம் பிறந்த தினத்தன்று இப்படிப்பட்ட ஒரு காலையொளியில் தான் இந்த பூமி உயர்த்தெழுந்திருக்க வேண்டும். மீண்டுமொரு முறை திபாசிவிற்கு செல்வதற்காக நான் புறப்பட்டேன்.
அறுபத்தி ஒன்பது கி.மீ கொண்ட இந்த நெடுஞ்சாலையில் நினைவுகளையும் உணர்ச்சிகளையும் என்னுள் கிளர்த்தெழச் செய்யாத ஒரு அடி கூட இல்லை. வன்முறை நிறைந்த குழந்தைப்பருவம், பஸ் இஞ்சின்களின் ரீங்காரத்துடன் விரியும் பதின்ம பருவத்தின் பகற்கனவுகள், இளம் கன்னிகளின் புதுமை, கடற்கரைகள், எப்போதுமே இறுகிய வாலிபத் தசைகள், பதினாறு வயது நிரம்பிய ஒரு நெஞ்சத்திற்கு மாலை உடனழைத்து வரும் மெல்லிய மனக்கிலேசம், வாழ்வதற்கான் விழைவு, மேன்மை, மற்றும் வற்றாத அதன் திறனும் ஒளியும் காலத்தின் துணையாக விளங்கும் எப்போதுமே மாதக்கணக்காக மாறாதிருக்கும் அதே வானம் – மதியத்தின் இழவு நாழிகையில் கடற்கரையில் சிலுவையில் அறைந்தாற்போல் படுத்துக்கிடக்கும் தனது இரைகளை ஒவ்வொன்றாக அது ஆறாப்பசியுடன் விழுங்கியது. அனேகமாக அதே கடலும் கூட – காலைக்காற்றில் உணர்வதற்கரியாதபடியும், ஆனால் சஹேலையும் அதன் வெண்கல நிறத்து திராட்சைத் தோட்டங்கள் நிறம்பிய மலைகளையும் விட்டு சாலை கடற்கரையை நோக்கி இறங்குகையில் தொடுவானத்தில் தன்னை மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டும்…ஆனால் நான் அதை நின்று ரசிக்கவில்லை. ஒரே துண்டமாக செதுக்கப்பட்டு டிபாசா விரிகுடாவின் மேற்குபுறமாக நீண்டு பின்னே கடலுக்குள் சரிந்துவீழும் அந்த கனத்த திண்ணிய மலையான செனோவாவை மீண்டும் பார்க்க நான் துடித்துக் கொண்டிருந்தேன். அங்கு அடைவதற்கு முன்னதாக, வேகு தூரத்திலிருந்தே கடலுடன் கலந்தபடி நிற்கும் ஒரு மெல்லிய இளநீலப் புகைச்சலாக அதை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் அருகே வர வர அது படிப்படியாகச் செறிவி சூழ்ந்திருக்கும் நீரின் நிறத்தைப் பெற்றுக்கொண்டு அமைதியான் கடலின் மீது மோதிவீழும் கணத்தில் மூர்க்கமாக உறைய வைக்கப்பட்ட ஒரு அசைவற்ற அலைபோல காட்சி தரும். வெகு அண்மையில், கிட்டத்தட்ட டிபாசாவின் வாசல்களுக்கருகே அதன் முகம் சுளிக்கும் திணிவை நீங்கள் காணலாம் : காவியும் பச்சையுமாக, என் போன்ற அதன் புதல்வர்களுக்கு துறைமுகமாகவும் புகலிடமாகவும் விளங்கும் அசைக்கமுடியாத தொன்மைமிக்க பாசிபடர்ந்த தெய்வம். முட்கம்பியை ஒருவழியாக கடந்து இடிபாடுகளை அடைகையில் நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த டிசெம்பர் வெளிச்சத்தில், சகலவிதமான ஆசீர்வாதங்கள் நிரம்பிய வாழ்க்கை என்று பிற்காலத்தில் விவரிக்கப்படக்கூடிய, வாழ்வில் ஒரு முறை அல்லது இரண்டு முறைகள் மட்டுமே நடக்கக்கூடிய சம்பவமொன்று நிகழ்ந்தது. எதைத் தேடி இங்கு வந்தேனோ, காலத்தையும் உலகையும் மீறி அது இந்த புறக்கணிக்கப்பட்ட இயற்கையில் எனக்களிக்கப்பட்டது. ஆலிவ்கள் சிதறிக் கிடக்கும் ஃபோறத்திலிருந்து (forum) கீழே வீற்றிருக்கும் கிராமத்தைக் காண முடிந்தது. அதிலிருந்து ஒரு சிறு சத்தம் கூட எழவில்லை; மெல்லிய புகைக் கற்றைகள் துலக்கமான காற்றுமண்டலத்தில் எழும்பின. இடையறாது வீழும் குளிர்ந்த ஒளி மழையின் கீழ் சுவாசமற்று இருப்பது போல் கடலும் மௌனமாகக் கிடந்தது. செனோவாவிலிருந்து தூரத்துச் சேவலொன்றின் கூவல் மட்டுமே அந்த நாளின் எளிதில் உடையக்கூடிய பெருமைகளைப் பாடியது. இடிபாடுகள் தெடுகிலும், கண்கள் பார்க்கக் கூடிய தூரம் மட்டிலும், குழித்த கற்கள், காஞ்சிரைச் செடிகள், மரங்கள், ஒளி ஊடுருவக்கூடிய படிகவெளியில் நிற்கும் குறைபாடற்ற தூண்கள் இவற்றைத் தவிர வேறெதுவுமே இல்லை. அளப்பதற்கறிய கணம் ஒன்றில் சூரியன் ஸ்தம்பித்து காலை அசைவற்றுக் கிடந்தது போலிருந்தது. இந்த ஒளியிலும் மௌனத்திலும் வருடக்கணக்காக குவிக்கப்பட்டிருக்கும் இருளும் ஆத்திரமும் சிறிதுசிறிதாக உருகி மறைந்தன. நீண்டகாலமாக நின்றுவிட்டிருந்த என் நெஞ்சு இப்பொது மெதுவாக அடிக்கத் தொடங்கியது போல், என்னுள் உறைந்துகிடந்த, கிட்டத்தட்ட நான் மறந்துவிட்ட ஒலியை நான் கேட்கத் தொடங்கினேன். இப்போது விழித்துக்கொண்டதால் மௌனத்தை கட்டியெழுப்பும் அந்த உணர்வதற்கறிய சத்தங்களைக் ஒன்றன்பின் ஒன்றாக இனம் கண்டுகொண்டேன்: இடையறாது ஒலிக்கும் பறவைகளின் basso continuo, பாறைகளுக்கடியே சுருக்கமாக ஒலிக்கும் கடலின் மென்மையான பெருமூச்சு, மரங்களின் துடிப்பு, காஞ்சிரைச் செடிகளின் முணுமுணுப்பு, கள்ளத்தனமான பல்லிகள்…இவை அணைத்தையும் கேட்கவும் என்னுள்ளெழும் மகிழ்ச்சியலைகளை உணரவும் என்னால் முடிந்தது. என்னுடைய புகலிடத்திற்கு ஒரு வழியாக வந்துசேர்ந்து விட்டேன் போலிருந்தது, ஒரு கணத்துக்கேனும்; மேலும் இப்போது தொடங்கிய அக்கணம் எக்காலத்திற்கும் நீடிக்கும் போலவும் இருந்தது. அதன் பிறகு விரைவிலேயே சூரியன் தெள்ளத் தெளிவாக வானத்தில் ஒரு பாகை உயர்ந்தது. ஒரு கரும்பறவை தன்னுடைய கிறீச்சொலியில் எழுப்பிய ஆலாபனையைத் தொடர்ந்து பல பறவையொலிகள் வலிமையுடனும், கிளர்ச்சியாரவாரத்துடனும், உவகையான முரண்பாட்டுடனும், அளவில்லா மகிழ்ச்சியுடனும் வெடித்தெழும்பின. நாள் கழிந்து சென்றது, என்னை மாலை வரையிலும் சுமந்தபடி…
மதியம், ஒரு பாதி மட்டுமே மணலால் நிரப்பப்பட்டு, கடந்த சில நாட்களின் ஆத்திரமிக்க அலைகள் திரும்பிச் செல்கையில் விட்டுச்சென்ற நுரையைப் போலிருக்கும் கருஞ்சிவப்பு மலர்களைக் கொண்ட செடிவகைகள் சிதறிக்கிடக்கும் சரிவுகளில் நின்றபடி கடலைப் பார்த்திருந்தேன். கடல் எழும்பி பின்னர். சோர்வுற்றது போல் வீழ்ந்தாலும், நமது ஆன்மாக்கள் வரண்டு போகாமலிருக்க வேண்டுமானால் நாம் என்றுமே புற்க்கணிக்க முடியாத: காதலிப்பதற்கான தாகம் ,கண்டு அதிசயிப்பதற்கான தாகம் ஆகிய இரண்டு தாகங்களையும் தணித்தது. ஏனெனில் காதலிக்கப்படாமலிருப்பது வெறும் துரதிருஷ்டம் மட்டுமே, ஆனால் காதலிக்காமலிருப்பதோ ஒரு ஆழ்துயர்நிலை. இன்று நாம் அனைவருமே இவ்வாழ்துயரத்தால் இறந்து கொண்டிருக்கிறோம். குருதியும் வெறுப்பும் நம் இதயங்களையே வெட்டவெளியில் அம்மணப்படுத்துகின்றன; நீதிக்கான் நீண்ட கோரிக்கை அதை உயிர்ப்பித்த அன்பையே களைப்படையச் செய்துவிடுகிறது. நாம் வாழும் இந்த கூச்சலிடும் ஆரவாரத்தில் காதல் அசாத்தியமானதாகவும் நீதி போதுமற்றதாகாவும் ஆகிவிட்டன. இதனால் தான் ஐரோபா பகல்வெளிச்சத்தை வெறுக்கிறது. செய்வதறியாமல் ஒரு அநீதியை மற்றொரு அநீதியைக் கொண்டு எதிர்கொள்கிறது. நீதி சுருங்கி இறுதியில் வரண்ட கசக்கும் பழக்கூழ் கொண்ட ஒரு ஆற்புதமான ஆரஞ்சைப் போல் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவதை தவிர்க்கவேண்டுமாயின் நம்முள் பசுமையையும் மகிழ்ச்சியூற்றொன்றையும் நாம் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் எனபதை நான் கண்டறிந்தேன்; அநீதி என்றுமே தீங்குறுத்த முடியாத இந்த பகல்வெளிச்சத்தை காதலித்து அதை வெற்றிச்சின்னமாக கையிலேந்தி மீண்டும் கோதாவில் இறங்குவதற்கான மனவலுவையும் இவ்வூற்று நமக்களிக்கும். இங்கே, மீண்டுமொரு முறை பழம்பெரும் அழகொன்றை நான் கண்டெடுத்தேன், பித்துபிடித்த நமது மிக மோசமான வருடங்களிலும் இந்த வானத்தின் நினைவு என்னை விட்டுப் பிரியவில்லை என்பதை நான் உணர்ந்த போது என் நல்லாசிகளை எண்ணிக்கொண்டேன். இறுதியில் இது மட்டுமே நம்பிக்கையற்ற மனக்கசப்பிலிருந்து என்னைக் காப்பாற்றியது. நமது நீர் வெளியேற்றப்பட்டச் செயற்கைத் துறைமுகங்கள் அல்லது நம் இடிபொருள் குப்பைக் கூள்ங்களைக் காட்டிலும் டிபாசாவின் இடிபாடுகள் இளமையானவை என்பதை நான் எப்போதுமே அறிந்திருந்தேன். டிபாசாவில் எப்போதுமே புதிதாக இருக்கும் வெளிச்சத்தில் உலகம் ஒவ்வொரு நாளும் பிறக்கிறது. ஓ! ஓளி! செவ்வியல் துயர் நாடகங்களில் தங்கள் விதிகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் பாத்திரங்களின் கூக்குரலது. அவர்களின் இறுதிப் புகலிடம் நம்முடையதும் கூட என்பதை நான் அறிந்திருந்தேன். குளிர்காலத்தின் ஆழங்களில் என்னுள்ளே ஒரு அழிக்கமுடியாத கோடை இருப்பதை நான் இறுதியாகக் கற்றுக் கொண்டேன்.
மீண்டுமொரு முறை டிபாசாவை விட்டு ஐரோபாவையும் அதன் போராட்டங்களையும் எதிர்கொள்வதற்காக திரும்பிச் சென்றேன். ஆனால் அந்த நாளின் நினைவு என்னை இன்னமும் பேணித் தாங்குகிறது. இன்பதுன்பம் இரண்டையும் சமநிலையோடு ஏற்பதற்கு எனக்கு உதவுகிறது. நாம் எதிர்கொண்டிருக்கும் கடினமான காலத்தில் ஒன்றையுமே நிராகரிக்காமல், கருப்பு மற்றும் வெள்ளைச் சரடுகளைக் கொண்டு அறுபடும் புள்ளி வரையிலும் இறுக்கப்பட்ட ஒற்றைக் கயிற்றைப் பின்னுவதற்கான சக்தியைத் தவிர நாம் எதை எதிர்பார்க்க முடியும்? இதுவரையில் நான் செய்தது கூறியது எல்லவற்றிலும் என்னால் இந்த இரு விசைகளை , அவை ஒன்றோடொன்று முரண்பட்டிருந்தாலும் கூட, அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். எந்த ஒளியில் நான் பூமியில் தோன்றினேனோ அந்த ஒளியை என்னால் மறுக்க இயலாது. எனினும் நமது காலத்தின் கடமைகளையும் நான் தட்டிக்கழிக்க விரும்பியதில்லை டிபாசாவின் மென்மையான பெயருக்கு எதிராக பிற கம்பீரமான, கொடூரமாகத் தொனிக்கும் பெயர்களை ஒப்பனை செய்வது மிக எளிதான காரியம் தான் : இன்று மனிதனுக்கு உள்நோக்கிய பாதையொன்று இருக்கிறது. அது மனதின் உச்சங்களிலிருந்து குற்றத்தின் தலைநகரத்திற்கு அவனை அழைத்துச் செல்லக்கூடியது. இதை நான் நன்கறிவேன் ஏனெனில் நான் அதில் அவ்விரு வழிகளிலும் பயணித்திருக்கிறேன். மேலும், சந்தேகமில்லாமல் ஒருவர் இளைப்பாறுவதற்காக மலைச்சாரலில் உறங்கலாம் அல்லது குற்றம் செய்வதில் ஆழ்ந்துவிடலாம். ஆனால் இருப்பவற்றில் ஒரு பகுதியை மட்டும் நாம் துறந்தால் நாமே நம் இருப்புகளை துறக்கவேண்டி வரும்; அப்போது நாம் வாழ்வதையே துறந்து காதலை பதிலாள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் கேவலங்களுக்குத் தள்ளப் படுவோம். ஆக, வாழ்க்கை நமக்களிக்கும் எதையுமே நிராகரிக்காமல் வாழ்வதற்கான இச்சையை தக்கவைத்துக் கொள்வது : இவ்வுலகில் இந்த நற்பண்பையே நான் மிகவும் மதிக்கிறேன். எப்போதாவது, சில முறையேனும் அதை நான் கடைபிடித்திருக்கலாம் என்று ஏங்கியதுமுண்டு. கீழ்மையையும் உன்னதத்தையும் சமமாக எதிர்கொள்ளுவதை மற்ற எல்லா காலங்களையும் விட நம்முடையதே அதிகமாகக் கோருவதால் எதையும் தட்டிக்கழிக்காமல் இரட்டை நினைவொன்றை தக்கவைத்துக் கொள்வதையே நான் செய்ய விரும்புகிறேன். ஆமாம், அழகிருக்கிறது ஆனால் இழிவு செய்யப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இச்செயல்திட்டத்தை நிறைவேற்றுகையில் ஏற்படும் எந்த இக்கட்டிற்காகவும் நான் ஒன்றையோ மற்றொன்றையோ, இரண்டையுமே விட்டுக்கொடுக்க மாட்டேன்,
ஆனால் இதெல்லம் ஒழுக்கவியல் போலத் தான் இன்னமும் தொனிக்கிறது. நாம் வாழ்வதோ ஒழுக்கவியலைக் கடந்த ஒன்றிற்காக. அதை நம்மால் சுட்ட முடியுமென்றால் என்னவொரு மௌனம் உண்டாகும் என்பதை யோசித்துப் பாருங்கள். டிபாசாவிற்கு கிழக்கே, புனித சல்ஸாக் குன்று, மாலை உயிர்ப்பிக்கிறது. இன்னமும் வெளிச்சம் தான் ஆனாலும் ஒளியின் ஒரு விதமான கண்ணுக்கு புலப்படாத கம்முதல் அஸ்தமனத்தை அறிவிக்கிறது. இரவைப் போல் மென்மையாக காற்று எழுகிறது. திடிரென கவலைகளற்ற கடல் தனது வழியை தேர்வு செய்து ஒரு மாபெரும் மலட்டு நதியைப் போல் தொடுவானத்தின் குறுக்கே ஓடுகிறது. வானம் கருக்கிறது. அதன் பிறகோ மர்மத்தின் தொடக்கம், இரவை ஆளும் தெய்வங்கள் மற்றும் இனபத்திற்கும் அப்பாலிருக்கும் ஏதோவொன்று. ஆனால் இதை எப்படி விவரிப்பது? இங்கிருந்து நான் எடுத்துச் செல்லும் சிறு நாணயத்தின் தெளிவான பக்கத்தில் இந்நாள் முழுதும் நான் கற்றுக்கொண்டதை நினைவுபடுத்தும் ஒரு அழகான பெண்ணின் முகம். ஆனால் வீடு திரும்புகையில் விரலால் உரசிப்பார்க்கும் அதன் மற்றொரு பக்கமோ அரிக்கப்பட்டிருக்கிறது. எனக்குள்ளிருந்து என் அறியாமையையும், என் மகிழ்வையும் தினம்தோரும் எனக்கே கற்றுத்தரும் அந்த மர்மமான மற்றொரு குரல் கூறுவதைத் தவிர வேறெதை இந்த உதடுகளற்ற வாய் கூறப்போகிறது :
நான் தேடிக்கொண்டிருக்கும் ரகசியம் ஆலிவ் மரங்களாலான ஒரு பள்ளத்தாக்கில் புதைந்திருக்கிறது, திராட்சைக் கொடியின் வாசத்தை நினைவுபடுத்தும் ஒரு பழங்காலத்து வீட்டைச் சுற்றிலுமிருக்கும் புல் மற்றும் குளிர்ந்த ஊதாச் செடிகளுக்கடியே அது கிடக்கிறது. இருபது வருடங்களுக்கு மேலாக ,ஆடுமேய்க்கும் ஊமைகளிடம் கேள்வி கேட்டுக்கொண்டும் வெறுமையாகக் கிடக்கும் இடிபாடுகளின் கதவுகளைத் தட்டிக்கொண்டும் இந்தப் பள்ளத்தாக்கிலும் இதைப் போன்ற மற்ற பள்ளத்தாக்குகளிலும் அலைந்து திரிந்திருக்கிறேன். சில சமயங்களில், நுண்மையான ஒளிமழையொன்றின் கீழ், தெளிவான வானத்தில் முதல் நட்சத்திரம் பிரகாசிக்கையில், எனக்குத் தெரியும் எனறு நினைத்துக் கொள்வேன். எனக்கு தெரிந்திருந்தது தான் உண்மையும் கூட. ஓருகால் இன்னமும் கூட எனக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் இனி இந்த ரகசியத்தைப் பற்றி எவருக்குமே அக்கறையில்லை. சந்தேகமில்லாமல் எனக்கே கூட அந்த ஆசையில்லை, என் மக்களிடமிருந்து என்னால் என்னை துண்டித்துக் கொள்ள முடியாததால். நான் என் குடும்பத்துடன் வாழ்கிறேன். அவர்கள் கறக்ளைக் கொண்டும் மூடுபனியைக் கொண்டும் கட்டப்பட்ட செல்வம் செழிக்கும் கோரமான நகரங்களை ஆண்டுகொண்டிருப்பது போல் பாவனை செய்து கொண்டிருக்கிறார்கள். பகலிலும் இரவிலும் அது தன் குரலை உயர்த்துகையில் அனைத்துமே அதற்கு வளைந்து கொடுக்கிறது. ஆனால் அதுவோ எதற்குமே தலை வணங்குவதில்லை: அனைத்து ரகசியங்களுக்கும் அது செவிடாக இருக்கிறது. அதன் வலிமையே என்னைத் தாங்கிப்பிடிக்கிறது என்றாலும் என்னை அது சலிப்பூட்டுகிறது. அதன் கூக்குரல்கள் என்னை சோர்வடையச் செய்கின்றன. ஆனால் அதன் மகிழ்ச்சியின்மை என்னுடையதும் கூட, எங்களிருவருக்குள் ஓரே ரத்தம் தான் ஓடுகிறது. நானும் ஒரு நோயாளி தானே. கற்களின் மத்தியில் கூக்குரலிடும் இரைச்சல் மிக்க உடந்தை தானே? ஆகவே மறக்க முயற்சிக்கிறேன் இரும்பும் தீயும் நிரம்பிய நமது நகரங்களினூடே நான் நடந்து செல்கிறேன், இரவை தோக்கி தைரியத்துடன் முறுவலிக்கிறேன், சூறாவளிகளை வரவேற்கிறேன், நம்பிக்கைக்குரியவனாகவே இருப்பேன். உண்மையில், நான் மறந்துவிட்டேன்: இனி செவிடனாகவும் செயல்திறன் மிக்கவனாகவும் இருப்பேன். ஆனால் ஒருகால்,ஏதோ ஒரு நாள், அறியாமையினாலும், சோர்வாலும் நாம் இறக்கத் தயாராக நிற்கும் போது, நமது கிறீச்சிடும் கல்லறைகளைத் துறந்து அந்தப் பள்ளத்தாக்கிற்கு சென்று மீண்டும் படுத்துக் கொள்வேன். அங்கே, மாற்றமில்லா அதன் ஒளியில் இறுதி முறையாக நான் ஏற்கனவே அறிந்திருந்ததை மீண்டும் ஒரு முறை கற்றுக் கொள்வேன்.
மூலம்: 1952 Albert Camus
- See more at: http://solvanam.com/?p=42777#sthash.gdfacYPG.dpuf