Saturday, 21 November 2015

அமிர்தகலாவின் உரைமொழிப் பதிவு - SHOBASAKTHI ANTONYTHASAN·

அமிர்தகலாவின் உரைமொழிப் பதிவு

SHOBASAKTHI ANTONYTHASAN·SATURDAY, NOVEMBER 21, 2015
https://www.facebook.com/notes/shobasakthi-antonythasan/அமிர்தகலாவின்-உரைமொழிப்-பதிவு/10153557297527911

"நீங்க என்ர பேரைப் போட்டே புத்தகம் எழுதுங்க. எனக்கு ஆருக்கும் பயமில்லை. கதைக்காமல் அமசடக்கா இருந்துதானே இப்ப இந்த கேவலங் கெட்ட சீவியமும் கண்ணீருஞ் சோறும். இயக்கத்தில என்ர பேர் நிறைமொழி..."
நீங்கள் எனது உண்மையான பெயரைக் குறிப்பிட்டு, இது இராசேந்திரம் அமிர்தகலாவின் வாக்குமூலம் எனப் பதிவு செய்யுங்கள். எனக்கு யாரிடமும் அச்சமில்லை. கதைக்க வேண்டிய நேரத்தில் கதைக்காமல் வாய்களை மூடிக்கொண்டிருக்க முடியாது. சொல்லத்தான் வேண்டும்! என்னுடைய இயக்கப் பெயர் நிறைமொழி.
2006-ம் ஆண்டு, வீட்டுக்கு ஒரு பிள்ளை கட்டாயமாகப் போருக்கு வரவேண்டும் என்று புலிகள் இயக்கம் சொன்னபோது இயக்கத்திற்குப் போனவள் நான். தந்தையில்லாத எங்களது குடும்பத்தில் பிள்ளைகள் நான்குபேர்களுமே பெண்களாகயிருந்தோம். எனவே தலைப் பிள்ளையான நான் இயக்கத்திற்குப் போனேன்.
நான் எனது விருப்பமில்லாமல்தான் புலிகளால் கூட்டிச் செல்லப்பட்டேன். எனவே பயிற்சியிலோ வேறு இயக்க நடவடிக்கைகளிலோ நான் பெரிய ஆர்வமெல்லாம் காட்டவில்லை. எப்போது இந்தச் சண்டை முடியும், எப்போது நான் எனது வீட்டிற்குப் போகலாம் என்று நினைத்துக்கொண்டேயிருப்பேன்.
ஆனால் யுத்தம் தீவிரமானபோது, புலிகளின் அணியிலிருந்த நான் திறமையாகவும் கடுமையாகவும் ஓயாமலும் போரிடுவதின் மூலம்தான் எனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் எனத் தெரிந்துகொண்டேன். சண்டையிட விரும்பாத போராளிகளும் இயக்கத்திலிருந்து ஓடிப்போக நினைத்துக்கொண்டிருந்தவர்களுமே சண்டைகளின் போது அதிகளவு இறந்தார்கள் என்பது எனது அனுபவபூர்வமான உண்மை.
நான் வனத்தின் மகள். காட்டு ராணி. சிறுவயதிலிருந்தே உழைத்து உழைத்து களைப்பறியாத உடல் எனதாயிருந்தது. இப்போது சரிவர இயங்காமல் இருக்கும் எனது இரு கால்களும் அப்போது மானைப் போலத் தாவக்கூடியவையாக இருந்தன. இப்போது வழங்காத கைகளிரண்டும் அப்போது காளியாத்தையின் கைகள் போல பத்தாகயிருந்தன. குளமும் ஆறும் நான் தவழ்ந்த தொட்டில்கள். இவற்றிற்கு எல்லாம் மேலாக நான் இறந்துபோகக் கூடாது என்ற வைராக்கியம் என்னில் உறுதியாக இருந்தது. எனவே நான் மிகத் திறமையாகப் போரிடும் சண்டைக்காரியானேன். வெகு விரைவிலேயே இயக்கத்தின் சிறப்புத் தாக்குதல் அணிகளிற்குள் நான் உள்வாங்கப்பட்டேன்.
எங்களது கடைசிச் சமர் ஆனந்தபுரம் சமர். விடுதலைப் புலிகள் எடுத்த கடைசி எத்தனமது. நான் இருந்த அணி, தளபதி வாகைச்சுடரின் தலைமையில் மார்ச் 31-ம் தேதி இரவு ஆனந்தபுரத்திற்கு வந்தது. கிட்டத்தட்ட நான்கு நான்கரை சதுர கிலோமீற்றர்கள் அளவிருந்த அந்தப் பகுதி, மரங்கள் நெருக்கமாக அடர்ந்திருந்த சமவெளியாகயிருந்தது. அன்று மாலைவரை எங்களது தலைவர் அங்கு தங்கிநின்று தாக்குதல் திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்துக்கொடுத்துவிட்டுச் சென்றதாகப் பெட்டைகள் சொன்னார்கள். பல வாரங்களாகத் தொடர்ச்சியாகப் பின்வாங்கிக்கொண்டிருந்த எங்களின் முழுப் பலத்தையும் சேர்த்துக் குவித்த தாக்குதல் திட்டமது. இயக்கத்தின் முக்கியமான தளபதிகளில் மூன்று, நான்கு பேர்களைத் தவிர மற்றவர்களெல்லோருமே அங்கே கூடியிருந்தார்கள். ஆண்களும் பெண்களுமாகக் கிட்டத்தட்ட ஆயிரத்து அய்நூறுவரையான போராளிகள் அங்கு சண்டைக்குத் தயாராக நின்றோம். நாங்கள் அங்கு கூடித் தயாரானதை இராணுவத்தினரும் அறிவார்கள். அவர்கள் எங்களிற்கு மிக அருகில்தான் இருந்தார்கள். தவிரவும் எங்களது தொலைத் தொடர்பு உரையாடல்கள் முழுவதையும் அவர்கள் ஒட்டுக் கேட்டார்கள். தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய தளபதியின் தொலைத்தொடர்புச் சங்கேத வார்த்தை 'டொங்கோ பப்பா'. டொங்கோ பப்பாவின் ஒவ்வொரு சங்கேதச் சொற்களையும் இராணுவத்தினர் உடைத்து அறிந்தார்கள்.
இராணுவத்தின் அய்ந்து படையணிகள் எங்களிற்கு எதிராகப் போரிட்டுக்கொண்டிருந்தன. நாங்களும் மூர்க்கத்துடன்தான் போரிட்டோம். காயமடைந்த போராளிகள் களப்பு வழியாக வெளியே அனுப்பப்பட்டு அதே வழியாக எங்களிற்கு உதவிகளும் உணவும் வந்துகொண்டிருந்தன. அடுத்து வந்த இரவில் அந்தக் களப்பு வழியை இராணுவத்தினர் அடைத்துவிட்டார்கள். நன்கு திட்டமிட்டு நகர்ந்த இராணுவத்தினர் எங்களை நான்கு புறங்களும் சூழ்ந்து BOX அடித்துவிட்டார்கள். பல அடுக்குகளாக அடிக்கப்பட்ட BOX அது.
அதுதான் இறுதிப் போர் எனப் போரிடும் இரண்டு தரப்புக்குமே விரைவில் தெரியத் தொடங்கியது. முற்றுகையை இறுக்க அவர்களும் முற்றுகையை உடைக்க நாங்களும் உச்சக்கட்டத் திறனுடனும் மூர்க்கத்துடனும் போரிட்டோம். அந்த மூன்று நாட்களிலும் கிட்டத்தட்ட முப்பதாயிரம் எறிகணைகள் எங்கள்மீது வீசப்பட்டன. நான்கு சதுர கிலோ மீற்றருக்குள் முப்பதாயிரம் எறிகணைகள். ஒரு போராளியை நோக்கி இருபது ஷெல்கள்.
காயமடைந்திருந்த தளபதியொருவரின் தலைமையில் பெட்டியின் ஒரு பக்கத்தில் சிறிய பொத்தலைப் போட்டோம். அந்தப் பொத்தலிற்குள்ளால் அய்நூறு போராளிகள் வரையில் வெளியேறியபோது மறுபடிம் இராணுவத்தினரால் அந்தப் பொத்தல் அடைக்கப்பட்டது. இப்போது ஆயிரம் போராளிகள் அந்தப் பெட்டிக்குள். மருந்துகளில்லை, காயப்பட்டவர்களிற்கு வைத்தியமில்லை, உணவில்லை, இறந்தவர்களைப் புதைக்கவில்லை, வேதனையால் அழுபவர்களின் குரலைக் கேட்ட அவகாசமில்லை.
டொங்கோ பப்பா உதவி கேட்டுக்கொண்டேயிருந்தது. அனுப்பப்பட்ட உதவிகளையெல்லாம் இராணுவத்தினர் வழியிலேயே மடக்கி அழித்தனர். பஸ்களிலும் லொறிகளிலும் எங்களிற்கு உதவ வந்த போராளிகள் அந்த வாகனங்களுடனேயே எரிந்து போனார்கள். கடைசியாக டொங்கோ பப்பா உதவி கேட்டுத் தொடர்பு கொண்டபோது மறுபுறத்திலிருந்து விம்மியழும் சத்தம் கேட்டது. எல்லாம் முடிந்தது.
இனி எங்களிற்கு உதவிகள் கிடைக்கப் போவதுமில்லை, எங்களால் இந்தப் பெட்டியை உடைக்கவும் முடியாது. அப்போது இராணுவத்தினர் ஒலிபெருக்கிகள் மூலம் எங்களைச் சரணடைந்துவிடுமாறு அறிவித்தார்கள். ஒவ்வொரு தென்னைமரத்தின் கீழும் இருவர் மூவராக உட்கார்ந்த போராளிகள் நிதானமாகக் குப்பிகளைக் கடிக்கத் தொடங்கினார்கள்.
பெட்டிக்குள் எஞ்சியிருந்த போராளிகள் அங்காங்கே திடீரென உயிருடன் எரியத் தொடங்கினார்கள். இராணுவம் வெள்ளை பொஸ்பரஸ் எரி குண்டுகளை வீசுகிறது. பொடியன்களும் பொட்டைகளும் கரித்தூளாகக் காற்றில் பறந்துகொண்டிருந்தார்கள்.
இராணுவத்தினர் எங்களைச் சுற்றிவர உருவாக்கிய பெட்டியின் நீளமும் அகலமும் குறைந்துகொண்டேவர அதனது உயரம் மட்டும் வளர்ந்து அந்தப் பெட்டி எங்களை மூடலாயிற்று. பெட்டிக்குள் வெள்ளை பொஸ்பரஸ் எரி குண்டுகளும் கொத்துக் குண்டுகளும் விழுந்து வெடித்துக்கொண்டேருந்தன. நெருப்புச் சதுரம். கந்தக நிலம். உதிர நீர். நச்சுக் காற்று.விழுந்துகொண்டிருந்த ஆகாயம்.
அநதப் பெரிய பெட்டி எழுநூறு சிறிய பெட்டிகளாக உருமாறிற்று. எஞ்சியிருந்த முன்னூறு பேர்களும் நான்குபுறங்களாலும் அலையலையாக வந்த பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினரிடம் எங்களை மறைத்துக்கொள்வற்காக அந்தப் பகுதி முழுவதும் பைத்தியக்கார்களைப் போலச் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தோம்.
அங்கிருந்த இரண்டு சிறிய கட்டங்களிற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகள் ஒருவரையொருவர் கட்டித் தழுவியவாறு நெருக்கியடித்து ஒளிந்துகொண்டனர். அந்த இரு கட்டடங்கள் மீதும் ஒரேநேரத்தில் இரட்டை விமானங்கள் தாக்கின. நூறு போராளிகளும் ஒருவரையொருவர் இறுகத் தழுவியவாறு பொடி இறைச்சித் துண்டங்களாக அந்தப் பெட்டி முழுவதும் சிதறினார்கள். அதைக் கண்டபோதுதான் சின்னப்பொட்டைக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்.
எங்களது தாக்குதல் அணியில் இருந்த சின்னப்பொட்டைக்கு பதின்நான்கு வயதுகள்தான் இருக்கும். குள்ளமான தோற்றமும் சிவந்த நிறமும் செம்பட்டையான சுருட்டைத் தலைமுடியும் பூனைக் கண்களும் அவளிற்கு. எப்போதும் வெடித்துச் சிரித்தவாறேயிருப்பாள். சண்டை போடும்போது கூட அவளின் முகத்திலிருந்து சிரிப்பு மாறாது. எங்களது அணியின் மிகப் பெரிய குறும்புக்காரியும் எங்களது செல்லப்பிள்ளையும் அந்தப் பூனைக்கண் சின்னப்பொட்டைதான்.
அந்த நிலம் முழுவதும் காயங்களுடன் விழுந்து கிடந்து துடித்தபடியே சாவுக்காகக் காத்திருந்த போராளிகளைக் கண்டபோது அவளிற்கு நிச்சயம் பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும். அவளது வாயில் எச்சில் கோடாய் வழிந்துகொண்டிருந்தது. அவள் தனது துப்பாக்கியை நீட்டித் தனது கண்களை மூடிக்கொண்டே இறந்துகொண்டிருந்த போராளிகளின் தலையில் சுட்டாள். அந்தப் போராளிகளின் மரண வேதனையை ஒரு துப்பாக்கிக் குண்டில் அவள் முடித்து வைத்தாள். அந்தப் பெட்டி முழுவதும் அவள் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டேயிருந்தாள். அவளது துப்பாக்கி வெடித்துக்கொண்டேயிருந்தது. அவளது துப்பாக்கியின் கடைசிச் சன்னம் அவளைச் சுட்டது. அவள் தனது துப்பாக்கியை நிலத்தில் நிறுத்திக் குனிந்து தனது நெற்றியைத் துப்பாக்கிக் குழலில் சாய்த்துத் தனது கால் பெருவிரலினால் துப்பாக்கியின் விசையை அழுத்தினாள்.
பெட்டியின் நடுவில் ஒரு மதுர மரம் நின்றிருந்தது. அதன் கீழ் நாங்கள் ஒரு சிறிய பதுங்கு குழியை வெட்டி வைத்திருந்தோம். அந்தப் பதுங்கு குழிக்குள் நானும் வித்யாவும் செல்வியும் ஒளிந்துகொண்டு எங்களிற்கு மேலாக இலைதழைகளைப் போட்டுக்கொண்டு மறைந்திருந்தோம். எங்களை இராணுவத்தினர் எப்படியும் பிடித்துவிடுவார்கள் என்பது எங்களிற்குத் தெரிந்தேயிருந்தது. மரணத்தின் கைகளிலிருந்தாலும், மரணம் இரண்டு நொடிகளில் நேரிடும் என்று தெரிந்திருந்திருந்தாலும் முதலாவது நொடியை வாழ்ந்து தீர்க்கவே நான் ஆசைப்பட்டேன்.
எங்களது தலைகளிற்கு மேலிருந்த இலைதழைகள் ஒவ்வொன்றாக மெதுவாக நீங்கப்படுவதை உணர்ந்தவாறே நான் மவுனமாகயிருந்தேன். இராணுவத்தினரின் சிரிப்பொலிகள் கேட்டன. அவர்கள் தங்களது நீட்டிய கைகளை எங்களிற்குக் கொடுத்து எங்களை மேலே தூக்கிவிட்டார்கள்.
அப்போது இராணுவத்தினரின் முகங்களில் கடுகடுப்போ மூர்க்கமோ இருக்கவில்லை. அவர்கள் வெற்றிக் களிப்பின் உச்சத்தில் கொண்டாட்ட மனநிலையில் இருந்தார்கள். உடனடியாகவே நாங்கள் மூவரும் நிர்வாணப்படுத்தப்பட்டோம். உடலில் துண்டுத் துணிகூடக் கிடையாது. அந்த நிர்வாணக் கோலத்திலேயே எங்களிற்கு இராணுவத்தினரால் பிஸ்கட்டுகளும் தண்ணீரும் வழங்கப்பட்டன. உண்மையைச் சொல்வதென்றால் அப்போது எங்களது நிர்வாணம் எங்களை உறுத்தவில்லை. இந்த உலகத்தில் எங்களை உறுத்துவதாக அப்போது வேறெதுவும் கூட இருக்கவில்லை. ஏனோ தெரியாது நான் அப்போது என்னை உண்மையாகவே காளியாத்தையாக, உலகின் மாதாவாகக் கற்பனை செய்துகொண்டேன். அன்னையின் நிர்வாணம். வெட்கம் ஏதுமில்லை. நான் பிஸ்கட்டுகளைத் தின்று தண்ணீரைக் குடித்தேன்.
அதன் பின்பு நாங்கள் எங்கே அழைத்துச் செல்லப்பட்டோம் என எனக்கு இன்றுவரை தெரியாது. நாங்கள் வெள்ளை நிறத் துணிகளால் போர்த்தப்பட்டுக் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டோம். எங்களது முகங்கள் கறுப்புத் துணிகளால் மூடப்பட்டிருந்தன. அநேகமாக நாங்கள் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் ஏதாவதொரு இரகசிய அறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தோம் என நினைக்கிறேன்.
இடம் தெரியவில்லை. நேரம் தெரியவில்லை. நாட்கள் தெரியவில்லை. அந்த அறைக்குள் ஏழு பெண்கள் முழுநேரமும் நிர்வாணமாக அடைக்கப்பட்டிருந்தோம். எங்களது கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டிருந்தன. இராணுவ அதிகாரிகள் எங்களை வன்புணர்ச்சி செய்தபோது கால்களிலிருந்த விலங்குகள் மட்டுமே விலக்கப்பட்டன. கைகளிலிருந்த விலங்குகள் அப்படியேதானிருந்தன.
ஒவ்வொருமுறை நான் வன்புணரப்பட்டபோதும் ஓர் ஏளனப் பார்வையுடன் நான் அதை எதிர்கொண்டேன். அவர்கள் எனது உடலிற்குள் நுழைந்தபோது எனது ஆன்மா என்னிலிருந்து வெளியேறிப் பரிசுத்தமாகயிருந்தது. ஒவ்வொரு வன்புணர்வு முடிந்ததன் பின்னாகவும் மறுபடியும் ஆன்மா எனக்குள் புகுந்தபோது நான் நிம்மதியடைந்தேன்.
நாங்கள் ஏழுபேருமே இராணுவ அதிகாரிகளிற்குச் சலித்துப்போயிருக்க வேண்டும். எங்களது யோனிகள் பெரும் புண்களும் சீழும் செம்மஞ்சள் நிறக் கொப்புளங்களும் கொண்டு அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கியபோது எங்களை அவர்கள் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பிவைக்க முடிவெடுத்தார்கள். அனுப்புவதற்கு முன்பு, கைகளிலும் கால்களிலும் விலங்கிடக்கப்பட்டிருந்த என்னைக் குப்புறப் படுக்கவைத்து என் தலையிலிருந்து கால்வரை கனமான இருப்புக் கழியை உருட்டி எனது தசையைக் கூழாக்கினார்கள். மானின் காலையொத்த எனது வேகமான கால்களைக் கட்டைகளால் முழுவதுமாக அடித்து நொருக்கி என்னை முடமாக்கிய பிறகே புனர்வாழ்வு முகாமிற்குச் சடமாக அனுப்பிவைத்தார்கள். நான் எனது ஆன்மாவையும் அழைத்துக்கொண்டு புனர்வாழ்வு முகாமிற்குச் சென்றேன். என்னால் எனது ஆன்மாவை நினைத்த நேரத்தில் என்னிலிருந்து வெளியேற்றவும் தேவைப்படும்போது அதைத் திரும்பவும் என்னுள் அழைத்துக் கொள்ளவும் முடியும் அண்ணன். (BOX கதைப் புத்தகத்திலிருந்து ஓர் அத்தியாயம்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





உண்மைகளும் உண்மையென அறியப்படுபவையும்
புத்தகங்கள்
Nov 22, 2015 No Comments 73 views
http://theekkathir.in/2015/11/22/உண்மைகளும்-உண்மையென-அறிய/



எந்தப் புத்தகத்தையும் படித்து முடித்து வெளியேறிட முடியும் என நம்புகிறவன் நான். கதைகளாயினும், கட்டுரைகளாயினும் அவை முன்வைக்கும் கருத்துக்களை ஏற்றோ, மறுத்தோ நம்முடைய கை அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டிடும். நம் கண்முன்னே வார்த்தைகள் நகர்ந்து கொண்டேயிருக்கும். இப்படியான வாசக முறையை ஏற்பவரில்லை ஷோபா சக்தி. அப்படியெல்லாம் நீங்களோ, நானோ சட்டச்சடசடவென புரட்டிட அவருடைய படைப்பிற்குள் உறைந்திருக்கும் எளிய சொற்கள் நம்மை அனுமதிப்பதில்லை. வாழ்வின் துயரங்களைச் சேர்த்து கட்டியிருக்கும் கதைப் பிரதிகள் வாசகனை நிம்மதியிழக்கச் செய்பவை. அவருடைய “கொரில்லா”, “தேசத்துரோகி”,”வேலைக்காரியின் புத்தகங்கள்” ஆகியவற்றை வாசித்திருப்பவர்கள் இத்தகைய மனநிலையை அடைந்திருப்பார்கள். இலங்கை போருக்குப் பிறகான தமிழ்நிலத்தின் கதையையும், நிகழும் அரசியல் போக்கின் துயரைத் தாங்கிட முடியாது தடுமாறிடும் ஜனத்திரளின் மனநிலையையும் எழுதிட எழுத்தாளன் தேர்வு செய்கிற நிலம் வன்னி நிலம். நாவல் நிகழும் காலம் வரலாற்றின் பக்கங்களில் துரோகத்தின் அடையாளமாகவும், இன அழித்தொழிப்பின் குரூரமாகவும் பதிந்துள்ள முள்ளிவாய்க்கால் பெருந்துயருக்குப் பிறகான நாட்கள் தான். box நாவல் நாலா திசைகளிலும் காலத்தின் பெரும் பாதைக்குள் உருண்டு புரள்கிறது. வன்னிப் பெருநிலம் எனும் நிலப்பகுதி உருவாகி நிலைத்த தன்மையையும் கூட சொல்ல முடிகிறது எழுத்தாளனால். பண்டார வன்னியனை அந்நிய ஆதிக்க அரசுகளின் ஆயுதங்கள் தின்று தீர்த்தன. இறந்தே போனான் அவன் என வெள்ளைக்காரன் மட்டுமல்ல, தமிழ் இளைஞர்களும் எளிய மக்களும் கூட நம்பத் துவங்கினார்கள். ஆனாலும் பண்டார வன்னியன் பிழைத்திருக்கவே செய்கிறான். ரகசியமாக வன்னிக் காடுகளுக்குள் பதுங்கியிருந்து இனத்தின் விடுதலைக்காக இயங்குகிறான் என்பதையே நாவல் எடுத்துரைக்கிறது. எழுதப்பட்ட நாவலின் பகுதி நமக்கு எழுதப்படாத பகுதிகளையும் கூட வாசக மனதிற்குள் விரிக்கிறது. இது தான் எழுத்தின் பலம். முள்ளிவாய்க்கால் பெருந்துயரக் கொடூரங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் எனும் பெயரில் இலங்கைக்கு வருகிற ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளின் காட்சிப் பொருளாகி விட்டதே. களப்பலி நிகழ்ந்த நிலம் எனும் வாதையையும் கூட நாவல் வாசிப்பின் ஊடாக புரிந்துணர முடிகிறது. நாவலோ, சிறுகதையோ அல்லது புனைவோ கட்டுரைகளோ எவையாயினும் அதன் கட்டமைப்பை முடிவு செய்வது கருத்தியல் சார்ந்த அவதானிப்புகளே. க்ஷடீஓ கதைப் புத்தகத்தின் கட்டமைப்பும், வடிவ நேர்த்தியும் தனித்துப் பேசிட வேண்டியவை. மையக்கதையிலிருந்து நாற்பது கதைகள் சரம்சரமாக விரிந்து செல்கின்றன. அவையாவும் பெரிய பள்ளன் குள்ளம் எனும் வனம் சூழ்ந்திருக்கும் ஊரின் கதைகளாகவே காட்சிப்படுகின்றன. பெரிய பள்ளன்குளம் என்றறியப்படுகிற அந்த ஊரின் ஆழமும், அகலமுமான பெரும்குளம், மனித உழைப்பினால் வெட்டி வடிவமைக்கப்பட்ட குளமல்ல; இயற்கை அதன் சீரான மாற்றங்களினால் மனிதர்களுக்காக மட்டுமின்றி விலங்குகளுக்கும், தாவரங்களுக்குமாக இருந்தது. அந்தக் கரையில் விரிந்து படர்ந்திருக்கும் மதுரமரமும், ஆதாம்சாமி வீடும் வெறும் சடப்பொருட்கள் அல்ல. மாறாக அந்த ஊரின் பலநூறு வருட ஞாபகங்களைத் தேக்கி வைத்திருக்கும் குறிப்பேடுகள். நாற்பது கதைகளுக்கும் ஊடாகப் பிரதிகளும் சேர்த்து எழுதப்பட்டிருக்கின்றன. உபபிரதிகளுக்குள் ஷோபா சக்தி எழுதிச் செல்வது வன்னியின் வரலாற்றைத் தான். 1980களின் வரலாற்று, அரசியல் நிகழ்வுகளை நாவலுக்கு ஊடாக நகர்த்திட “உபபிரதி” எனும் சொல்முறை ஷோபாசக்திக்கு உதவுகிறது. நாவலுக்குள் வருகிற மற்றொரு முக்கியமான பகுதி உரைமொழிப் பதிவாகும். ஊரின் ஞாபகங்களை படைப்பாளியிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறவர்கள் யாவற்றையும் உரைமொழிப் பதிவாக்கித் தருகிறார்கள். அதை அப்படி, அப்படியே ஷோபா படைப்பின் இடைவெளிகளில் பயன்படுத்திக் கொள்கிறார். எல்லாவற்றையும் பற்றறுத்து துறவு நிலையை எட்டுகிற பௌத்த நெறியின் உச்சமான நிர்வாணம் குறித்த நுட்பமான வியாக்கியானங்கள் நாவலெங்கும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. மனித நிர்வாணத்தைக் காடு மறைக்கக் கூடும் என நிலவு நம்பியிருக்கிறது. அமையாள் கிழவியின் பிணம் பெரும்பள்ளன் குளத்திற்குள் மீனாக நீந்திக் கொண்டிருக்கிறது நிர்வாணமாக. மீள்குடியேற்றம் நிகழ்கிறது என அரசதிகாரம் படோபடமாக அறிவித்திருக்கிறது. ஆனாலும் எதுவும் மாறிடவில்லை. தமிழர் குடியிருப்புகளில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு ஏதிலிகளாக விரட்டப்படுவதும், மீள் குடியமர்வு எனும் பெயரில் ராணுவக் குடியிருப்பாக அவை உருமாறுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. கதைகளுக்குள் காட்சிப்படுகிற மதுரமரக் கரைவீடு “டைடஸ் லெமுவேஸ் வீடு” என்கிற வரலாற்றுப் பதிவும், அதன் உண்மைத் தன்மைக்குச் சான்றாக வைக்கப்படுகிற புகைப்படங்களும் கூட வரலாற்றையும், புனைவையும் பிரித்தறிவதற்கான சூட்சுமத்தைக் கற்றுத் தருகின்றன. தேசாந்திரியாக அலைந்து திரிந்து, தர்க்கம் செய்து லெமுவேஸ் வந்திறங்கிய வன்னி நிலம் தான் பெரிய பள்ளன் குளம் கிராமம். ஒடுக்கப்பட்டுக் கிடந்த பள்ளர் இன மக்களுக்கு கல்வியும், மருத்துவமும் தந்து சமூகப்படி நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கும். மக்களோடு விவாதித்து அதே நிலத்தில் ஆதாம்சாமி ஆகிவிட்ட ஒரு விதத்தில் அவர்களுடைய பூர்வீக சாமியான அண்ணன்மார் சாமிகளைப் போலாகி விடுகிறார். நாம் அறிந்திருக்கும் வரலாற்று விவரங்கள் தான் இவை யாவும். வெள்ளை நிறத்தோலோடு ஆசிய நிலத்தில் மதப் பிரசங்கம் செய்ய வந்திட்டவர்கள் அனைவரும் நிலத்தின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றோடு ஊடாடி இங்கேயே சமாதியாகி விட்டனர். இதற்குள் இயங்கும் மனிதநேய மனநிலைகளைப் பலரும் இங்கே விவாதித்திருக்கவே செய்திருக்கிறார்கள். க்ஷடீஓ வடிவில் எதிரிகள் எனக் கட்டமைக்கப்பட்டவர்களை சுற்றி வளைத்து தாக்குகிற போர் முறையையே நாவலின் தலைச் சொல்லாக வடித்திருக்கிறார் எழுத்தாளர். நாற்புறமும் சுத்தி வளைக்கப்பட்டு குழந்தைகளும், பெண்களும் பலியிடப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். குழந்தைகள் எல்லாம் முடிந்த பிறகும் கூட தாங்கள் கண்ணுற்ற காட்சிகளை ஒரு போதும் மறப்பதேயில்லை. ஒருவிதத்தில் அது அவர்களுடைய ஆழ்மனதின் பதிவாகவே உறைந்து விடுகிறது. அதனால் தான் அவர்களின் விளையாட்டுக்களாக அவை யாவும் புது வடிவம் பெறுகின்றன. ஓடிப்பிடி விளையாட்டு, அம்மா, அப்பா விளையாட்டு, பூப்பறிக்க வருகிறோம் எனும் மரபான விளையாட்டுகளின் இடத்தில் இப்போதெல்லாம் பதிலீடு செய்யப்படுவதாக ஷோபா சக்தி காட்சிப்படுத்தும் விளையாட்டுக்கள் நிஜத்தில் விளையாட்டா அல்லது களத்தின் போர்க் காட்சிகளா என நாவலை வாசிக்கிற நாம் தடுமாறிப் போகிறோம். பிள்ளைகள் புலிகளாகவும், ராணுவ வீரனாகவும் ஒருமாறி நிகழ்த்துகிற போர்க்களக் காட்சிகளை வாசித்திட முடியாது தடுமாறுகிறோம். இந்தக் குழந்தை விளையாட்டில் கலந்திருக்கும் சிறுவன் தொலைதூரத்திலிருந்து பெரிய பள்ளன் குளம் கிராமத்திற்கு வந்து சேர்ந்தவன். எல்லாம் முடிந்த பிறகும் கூட இன்னும் காழ்ப்பின் எச்சமும், கோபமும் படிந்திருப்பதாகவே சிங்கள அரசு எந்திரம் நீடித்திருக்கிறது என்பதையே நாவலின் கடைசிக்கதைகள் முன் வைக்கின்றன. சாதித் துவேஷத்திலிருந்து ஊரின் அடையாளத்தை துடைத்திட எண்ணிய இளைஞர்கள் பெரிய பள்ளன் குளம் கிராமத்தின் பெயரை கார்த்திகைக் குளம் என மாற்றிட முயற்சிக்கிறார்கள். ஆனாலும் நடப்பது வேறாகிறது. அருகாமை வெள்ளாங்குளத்துக்காரர்களின் முஸ்தீபும் அரசதிகாரத்தின் இயல்பான இனவெறியும் பெரிய பள்ளன் குளம் கிராமத்து மக்களை ஊரை விட்டே அப்புறப்படுத்துகிறது. எல்லோரும் வெளியேறிய பிறகும் எஞ்சியிருப்பது வாசகன் யோசித்தேயிராத காட்சிகளால் கதையை நகர்த்துகிற சாதுர்யமான எழுத்து ஷோபாசக்தியினுடையது. நிஜத்தில் ஊமைச் சிறுவனாக கிராமத்திற்குள் நுழைந்தவன் இளம் புத்த துறவி. அவன் நிலையிலிருந்து ராணுவத்தினரோடு விவாதிக்கிறான். ஊரில் இருக்கும் எவருக்கும் முழு உடல் இல்லை. அங்க`ஹீனர்களின் நிலமாக்கி விட்டீர்கள் போரின் பெயரால் என போரின் வன்மத்தைக் கட்டுடைக்கிறான் சிறுவன். வரலாறு ஒரு முழுவட்டம் தான் போல் தெரிகிறது. அசோகனுக்கு நிகழ்த்திய போதனையைப் போல போதனை தான் இருந்தது என்ன செய்ய, அரசதிகாரம் இளகாத இரும்பாயிருந்திடும் போது.