Friday, 6 November 2015



Kaala Subramaniam
October 9 at 9:47am ·



Kutti Revathi இன்று தொகுத்தது ·

பரண் - எஸ்ரா பவுண்ட்
------------------------------------
தமிழில் : பிரமிள்
---------------------------------
வாருங்கள்,
நம்மை விட நன்றாக வாழ்கிறவர்களுக்கு
இரக்கப்படுவோம்.
வாரும் நண்பரே! - நினைவிருக்கட்டும் -
பணக்காரர்களுக்கு வேலையாளுண்டு நண்பர்களில்லை
நமக்கோ நண்பர்களுண்டு வேலையாளில்லை
வாருங்கள்,
கல்யாணமானோர் ஆகாதோர் இருவருக்கும் இரக்கப்படுவோம்
தங்கமூலாம் பூசிய நடனக்காரி போல்
விடிகாலை பிரவேசிக்கிறது
எனது ஆவலின் நிறைவு சமீபிக்கிறது
சேர்ந்து விழிப்படையும்
இந்த வேளையின் குளிர்ச்சிதான்
வாழ்வின் மிகச்சிறந்த பரிசு


அன்றைய துவேஷப் பிரச்சாரங்களுக்கு பதிலாக எழுதிய ஒரு நீண்ட கவிதையின் ஒரு பகுதியாக உள்ள இக் கவிதையின் கோடிட்ட இடங்களில், இன்றைக்கு அதேவகைத் துவேஷங்களை
(அவர்களது பின்னிருந்து ஊக்கும் மறைமுகத் தூண்டுதல்களால் ) இன்றைய மோஸ்தர்களின் போர்வையில் செய்ய நினைக்கும் இன்றைய கருத்தாளிகளின் பெயர்களையும் இடங்களையும் கொண்டு நிரப்பிக்கொள்ளலாம்.

பிரகடனம் - பிரமிள்
------------------------------


III
ஊரை ஏய்க்கும் அரசியல் குடும்பம்
எனதல்ல; கட்சி, மொழி, மதவெறிகள்
என் வாழ்வின் மூலதனமல்ல; அயலான்
உடன் வாழ முடியாத தடையேதும் இல்லா
உயிர் நான்;
இதனை உணர்த்துவதுதான்
எழுத்திலே என் வேலை.
எண்பத்து மூன்றிலன்றி
எழுபதில் லங்கைவிட்டு
இங்கு வந்த எனக்கு
புலம் பெயர்த்த புள்ளி
விவரம் பொருந்தாது.
ஏன் வந்தேன் என்பதற்கு
நியூஸ் உலகத்து நியமங்கள் ஏதுமில்லை.
சுயத்தின் சூனியத்தை நிரப்பும்
ஜாதிச் செருக்கு இல்லாதவன் நான்.
கல்லூரி முத்திரை பதித்த காகிதமே
சமுத்திரம் என்கிற
சான்றிதழ் எதற்குள்ளும்
அடங்காது என் மூளை.
அன்றாட அற்புதத்தை
மனிதார்த்த நுட்பங்கள்
உள்முரண்கள் என்பவற்றை
உன்கட்சி என்கட்சி என்று பிரித்து
கண் கெட்டுப் பார்க்கிற
கருத்தாளி அல்லன் நான்.
ஊன்றிய காலை எடுத்து இன்னொரு
இடத்தில் வைத்தால்
முந்திய இடமும் பிந்திய இடமும்
பூமிதான் எனக்கு.
எனவே எனக்கு
நாடில்லை நாமம்
இதுவென்று ஒன்றில்லை.
வருமானப் புள்ளிகளை
வைத்துத் தொடரும்
சுன்னங்களில் சொத்தில்
என் ஆளுமை இல்லை.
நிலத்தைப் பிடுங்க முயன்றவர் சூழலில்
எலும்பை நாய்க்கு எறிவதுபோல் அதை
எத்தர் விலைக்கு விற்றுவிட்டு
வந்த என் பெயரைப் பிறப்பு விபரத்தை
திருக்கோண மலையின் ரெஜிஸ்ட்ரியில் கூட
எரித்தது ஆங்கே எழுந்த நெருப்பு.
தெரிந்து கொள் நான்
பதிவேடுகளைத் தாண்டிப் பரந்து நிற்பவன்.
தன்மயக் கிணற்றுக்குள் தலைகீழாய்த் தொங்கி
தூர் எடுத்து ஊற்றின்
கண்ணடைப்பை நீக்கி
ஊரருந்தப் புதுநீர் ஊறச் செய்யும்
கவி நான் அடா!
நீரருந்தத் தாகம் வேண்டும்,
அதுகூட இல்லாத கல்மண்டை கருத்தாளிகளுக்கு
கவிதை ஒரு கேடா?
கட்சிக் கருத்துக்குள் கட்டுப்படுமா
காலத்தை மீறிக் கனலும் கவித்துவம்?
தர்க்க சிகரம்..... பீஹெச் டீ நீ.
ஆயினும் கவித்துவ ஆய்வுக்கு வந்தால்
உன் தர்க்கம் காலி! போதாததுக்கு
.................................. வேறு.
வாழ்வதோ சிருஷ்டி நெருப்புக்கு முன்
கல்விமான்கள் குவிந்து குளிர்காயும் ,,,,,,,,,,,
கணிப்பொறி மூளையாய்க் கற்றதை ஒப்பிக்கும்
உனக்கேன் உள்ளுணர்வில் கிளர்ந்து உயிரின்
தகிப்பாய் எரியும் கவிஞரின் வேலை?
சினைமுட்டை நிற்கும் வாசக மூளைக்குள்
கவி விந்து பாய்ந்தால் கருக்கூடும்,
ஒரு புதுப் பிரக்ஞை பிறக்கும்
முதலில் சும்பித்து உடனே துப்பும்
உன் ஆய்வு வாய்க்குள்
கருக்கூடுமா கவிதையின் உயிர்ப்பு?
·
லயம், ஜூலை 1998.