“At sixteen, you still think you can escape from your father. You aren't listening to his voice speaking through your mouth, you don't see how your gestures already mirror his; you don't see him in the way you hold your body, in the way you sign your name. You don't hear his whisper in your blood.”
― Salman Rushdie, East, West
An ugliness unfurled in the moonlight and soft shadow and suffused the whole world. If I were an amoeba, he thought, with an infinitesimal body, I could defeat ugliness. A man isn’t tiny or giant enough to defeat anything."
―Yukio Mishima, The Sailor Who Fell from Grace with the Sea
Shanmugam Subramaniam liked this.
Kaala Subramaniam
17 hrs · Edited ·
பிரமிளின் புனைவுலகில் வெளிப்படும் சிரமணப் பார்வை
-----------------------------------------------------------------------------------------
அ. மார்க்ஸ்
-------------------
பிரமிள் சித்திரங்களில் ஒன்று. அடையாறு ஜே,கே. பவுண்டேஷன்
வசந்தவிகார் தோட்டத்தில் அவர் அமர்ந்து பேசும் இடத்தில் உள்ள ஒரு மரம்.
|
சில மாதங்களுக்கு முன்னர் ‘சன்டே எக்ஸ்பிரஸ்’ வார இதழில் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தம் முன்வைத்திருந்த ஒரு சிந்தனை என்னை ஈர்த்தது. இந்தியக் கவி மரபில் இரு பாரம்பரியங்கள் செயல்பட்டு வருவதாக அவர் அடையாளம் கண்டிருந்தார். முதலாவது பிராமண மரபு - வரலாற்றையும் மானுடத் துயர்களையும் இது புனைவுவெளிக்கு அப்பால் நிறுத்திவிடுகிறது. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அரவிந்தர். வரலாற்று நாயகரான அரவிந்தர் வரலாற்றின் மண்படிந்த பாதங்கள் தனது கவி வனத்தின் புனிதத்தைப் பாழ்படுத்தி விடும் என நம்பினார். மற்றது சிரமண மரபு - மானுட வாழ்வின் துன்ப, துயரங்கள் ஏற்படுத்தும் மன உளைச்சல்கள், எதிர்ப்புகள் ஆகியவற்றை நேரடியாகவோ மறைமுகமாகவோ கவிதையின் கருப்பொருளோடு இணைத்துக் கொள்கிற மரபு. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகக் கபீர்தாசையும், துக்காராமையும் சுட்டிக்காட்டுகிறார் சச்சி. படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் இறுதியில் ஒன்றுதான் என்கிற பேருண்மையை நமது உணர்வுப் புலத்திலிருந்து அகற்றும் அன்றாட வாழ்முறையின் மீதான விமர்சனங்களாக இம்மரபு வெளிப்படுகிறது. கிறிஸ்துவின் உணர்வு வேட்கையும், புத்த பகவானின் கருணை வியாபிப்பும் இம்மரபினூடாக அவிழ்வதையும் அவர் குறிப்பிடுகிறார்.
இவ்வகைபிரித்தல் இறுக்கமான ஒன்றல்ல என்று குறிப்பிடுவதோடு நிறுத்திக்கொள்கிறார் சச்சிதானந்தன். இந்தியச் சிந்தனை மரபை உணர்ந்தவர்களுக்குக் கடந்த 2500 ஆண்டுகால வரலாற்றில் இவ்விரு எதிர் மரபுகள் இங்கே செயல்பட்டு வருவதை விளக்கிச் சொல்லவேண்டியதில்லை. வேதங்கøயும் உபநிடதங்களையும் பிரமாணமாக ஏற்றுக் கொள்வது பிராமண மரபு. வேதங்களின் பிரமாணத் தன்மையை மறுப்பது சிரமணம். பிரம்மம், கர்மம், மறுபிறவி ஆகியவற்றை இரு மரபுகளும் ஏற்றுக்கொண்ட போதிலும் வருணாசிரமத்தை முன்னது ஏற்கும், பின்னது மறுக்கும். பிறவி அடிப்படையில் வருணங்களையும், சுயதருமத்தையும் சிரமண மரபு இம்மியும் ஏற்பதில்லை. பிராமண மரபு முன்வைத்த ‘ஆத்மன்’ என்கிற கருத்தாக்கத்திற்கு எதிராகப் புத்தர் அனாத்மன் என்கிற சாராம்ச மறுப்புச் சிந்தனையை முன்வைத்தார். பிராமணம் கீழ் வருணத்தாருக்குப் பல வாழ்வுடமைகளை மறுத்தது. சிரமணம் அனைவருக்குமான வாழ்வுடமைகளையும், சமத்துவத்தையும் வலியுறுத்தியது. உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தியது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்தச் சிரமண மரபு என்பது தத்துவத்திலிருந்து புனைவாகத் தளமாற்றம் பெறும்போது அது வரலாறு சார்ந்ததாக, மண் சார்ந்ததாக, மக்களின் துயர் மற்றும் எதிர்ப்புகள் சார்ந்ததாக, இந்தத் துயருக்கு எதிரான கருணை வியாபிப்பாக வெளிப்படுகின்றன எனக் கவிஞர் குறிப்பிடுவதை நாம் முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்ளவேண்டியதாகிறது. சச்சி கவிதைக்கு மட்டும் சொல்வதை நாம் புனைவுகள் அனைத்திற்கும் நீட்டிக் கொள்ளலாம்.
தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான பிரமின் இங்குள்ள இலக்கிய மைய நீரோட்டத்தால் முழுமையாக வரவேற்கப்பட்டவர் அல்ல. அவர் வாழும் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தமிழ்ச் சிறுகதைத் தொகுப்புகளில் அவரது கதைகள் தவிர்க்கப்பட்டன. பரிசுகள், நிறுவனங்கள் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்படாத ஒரு விளிம்புநிலை எழுத்தாளராக வாழ்ந்து மடிந்தவர் அவர், நமது நவீனப் பேரெழுத்தாளர் பலரால் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் பிரமின் கடவுள் மறுப்பாளராகவோ, கம்யூனிஸ்டாகவோ, பின் நவீனவாதியாகவோ அடையாளம் காணப்பட்டவரல்ல, முழுமையான ஆன்மீகவாதி. அவரது முக்கிய படைப்புகள் அனைத்தும் ஆன்மீகச் சரடை மைய இழையாகக் கொண்டு பின்னப்பட்டவை. இறையை மட்டுமின்றி இறையடியார்களையும் விசுவாசிப்பவை. எல்லாம் இருந்தும் அவர் மற்ற பேரெழுத்தாளர்களிடமிருந்து தனித்து நிற்பதேன்? கடுமையாக விமர்சிக்கப்பட்டதேன்?
பிரமிளிடம் வெளிப்படும் பிராமண எதிர்ப்பும் சிரணம மரபுமே இதற்குக் காரணம். ‘அடையாளம்’ பதிப்பகத்தின் தரமான வெளியீடாக வந்துள்ள கால சுப்பிரமணியம் தொகுத்துள்ள ‘பிரமிள் படைப்புகள்’ நூலை வாசிப்பவர்கள் இதை எளிதில் உணரக்கூடும்.
பிரமிளின் புனைவு எழுத்துக்களில் பெரும்பான்மை யதார்த்தச் சட்டகத்திற்குள் அகப்படாதவை. பல்வகைப்பட்ட சோதனை முயற்சிகளாகப் பல சிறுகதைகளை அவர் வடித்துள்ளார்.
‘ப்ரஸன்னம்’ குறுநாவல் முழுக்க முழுக்க ஃபைல் குறிப்புகள், கடிதங்கள் ஆகியவற்றால் ஆனது. ஒரே நிகழ்வு குறித்து இரு வேறுவிதமான வாசிப்புகளை உள்ளடக்கியது. ‘அசரீரி’ கதை ‘சயன்ஸ்ஃபிக் ஷன்’ வகை சார்ந்தது. அதி நவீனமான ஒரு கணினி, ஒரு பாத்திரமாக மனித வாழ்வில் குறுக்கீடு செய்கிறது. இக்கதைகளில் அவர் எடுத்துக் கொண்ட கதைப்பொருளில் வாசக உணர்வையும் கவனத்தையும் குவிக்கும் யதார்த்தவாத உத்திகள் பலவற்றையும் வேண்டுமென்றே தகர்க்கிறார். அவர் எடுத்துக் கொள்ளும் ஆன்மீக - சமூக விசாரங்களுக்குப் பின்னணியாகத் தேர்வு செய்யும் பின்புலங்கள் அலாதியானவை. ‘லங்காபுரிராஜா’ குறுநாவலில் கம்பீரமான யானை ஒன்றால் காக்கப்படுகிற ஒரு கிராமப் பின்புலத்தில் புனைவு அவிழ்கிறது. ‘அங்குலிமாலா’ கதையின் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளான பின்னணியில் கதை நிகழ்கிறது. ஆனால் அது விமான விபத்து பற்றின கதை அல்ல. விமான விபத்தில் நமது கவனம் குவியும் போது கதை வேறொரு நிகழ்வை நோக்கி நகர்கிறது. ‘அசரீரி’ கதையிலும் அப்படித்தான். இது காதல்ஜோடி என்பது பரிச்சய நீக்க (defamiliarising) உத்தியாக இக்கதைகளில் செயல்படுகின்றது. பாத்திர உருவாக்கங்களுக்கு இப்புனைவுகளில் முக்கியத்துவமில்லை. பாத்திரப் பெயர் தேர்வுகளில் கூட வித்தியாசமாக விளங்குகிறார் பிரமிள். வழக்கமற்ற பெயர்கள் சூட்டப்படுவதைக் காணலாம். ஒரு கதையில் மருத்துவப் படிப்பு படிக்கும் முக்கிய பாத்திரத்தின் பெயர் சிங்க லட்சுமி, சுருக்கமாகச் சிங்கி. பொய் சொல்லா மெய்யன், திமிலோகம் முதலியன வேறு சில பெயர்கள்.
புனைவு களுக்காக அவர் தேர்வு செய்யும் நடை கவித்துவம் மிக்கது. குறிப்பாகப் ‘ப்ரஸன்னம்’, ‘லங்காபுரி ராஜா’ முதலிய குறுநாவல்களின் மொழி தமிழின் ஆகச் சிறந்த உரைநடைச் சிதறல்களில் ஒன்றாக அமைகின்றது. எனினும் திடீரென ‘ங்கோத்தா டேய் லவ்டேக்கா பால்’, ‘போடி பு..’, ‘அய்யப்பா என் கோவணம் புதுசுப்பா’ என்ற பிரயோகங்கள் நம்மை அதிர வைக்கும். கதைப் பொருளில் உணர்ச்சிக் குவிப்பு தடுக்கப்படும். மாய யதார்த்தம் என்று சொல்லத்தக்க நிகழ்வுகள், காட்சிகள் பிரமிள் கதை முழுக்க விரவிக் கிடப்பதைக் காணமுடியும். ‘அங்குலிமாலா’ கதையில் தற்செயலாக விமானப் பயணத்தில் அருகருகே அமர நேர்ந்த இருவரின் பெயர் சீலன், சீலி. இருவருக்கும் வலதுபுறம் காதின் கீழே கழுத்தில் ஒரு தழும்பு. இவை எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த தர்க்கபூர்வமான விளக்கம் கதையில் இல்லை. உரைநடை யில் தர்க்க வன்முறையிலிருந்து புனைவை விடுவிப்பதற்குப் பயன்படும் மாய எதார்த்தத்தில் (Magical Realism) ஆசிரியரின் குறுக்கீடும் தர்க்க விளக்கமும் தேவையில்லை. எனினும் ‘ப்ரஸன்னம்’ முதலிய படைப்புகளில் கதை சொல்லி குறுக்கிட்டு கதையில் வெளிப்படும் மாய நிகழ்வுகளுக்குத் தர்க்கபூர்வமான விளக்கத்தை அளிப்பதையும் காணமுடிகிறது. எனவே அது மாய யதார்த்தவாத உத்தியாகப் பரிமாணம் பெறாமல் ஆன்மீக அனுபவம் ஒன்றை மையமாகக் கொண்ட கற்பனார்த்த (spiritual romanticism) புனைவாக நின்றுவிடுகிறது.
எனினும் பிரமிளின் கதைகள் வெறுமனே ஆன்மீகக் கதைகளாக நின்றுவிடாமல் அதனினும் உயரிய பரிமாணம் பெறுவதன் காரணம், அவை வரலாற்றில், மண்ணில், சமூகத்தில் கால் பதித்திருப்பதுதான். வரலாறு மனித சமூகத்தில் நிகழ்த்தும் பாரதூரமான தாக்கங்களைக் கதைப் பொருளாகக் கொள்ளாத எழுத்துக்கள் என அவரில் எதையும் கட்ட இயலாமல் உள்ளன. பிரமிள் ஒரு இலங்கைத் தமிழர். தமிழர் என்கிற வகையில் வருணாசிரமமும் இலங்கையர் என்கிற வகையில் இன ஆதிக்கமும் நமது வரலாறு; சம காலத்திய வரலாறும் கூட. இந்த வரலாற்று அம்சங்கள் அவரது புனைவுகளில் அடிநாதமாக இழையோடுவதன் மூலமாகத்தான் அவரது எழுத்துக்கள் சிரமண மரபில் இடம் பிடிக்கின்றன.
இந்தத் தொகுப்பில் குறைந்த பட்சம் இரு இடங்களில் மனுவைப் பெயர் சொல்லித் திட்டுகிறார். ‘மனுசனுக்கு உதவாத மனுதர்மம்’ குறித்துச் சாடுகிறார். ‘சாதிமத சேதி சரித்திரத்தில் பேதி’ என்கிறார். இனவாதத்தை, குழு மனப்பான்மையைச் சாடுகிறார். ‘பீ டூட்டி’ பார்க்கிற ஒரு கழிவு நீக்கும் தொழிலாளி, காடன் என்னும் நாடோடி, தீண்டத்தகாத பலர் என அவரது புனைவு வெளி முழுவதும் தலித்து கள், விளிம்பு நிலையினர், நாடோடிகள். மொத்தத்தில் அவரது புனைவு எழுத்துக்கள் அனைத்தையும் நாடோடி இலக்கியம் என்கிற வகைப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடிய நியாயங்கள் உள்ளன.
நமது சமூகத்தில் பிராமண மனம் எப்படி அமையும் என்பதற்கு ‘அசாரீரி’ கதையில் வரும் முக்கியப் பெண் பாத்திரத்தின் தந்தை ஒரு எடுத்துக்காட்டு என்றால் ‘சாமுண்டி’ கதையில் வரும் முக்கிய பாத்திரம் தலித்த மனநிலையின் ஆகச்சிறந்த வெளிப்பாடாக அமைகிறது.
இக்கதைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே மிக விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை. வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். ‘டூட்டி’ முடிந்து நேரடியாக திருமணத்திற்கு வந்து விடுகிறேன் எனச் சொல்லிவிட்டுப் போகும் மாப்பிள்ளை சாமுண்டி, திருமணத்தலத்தில் திடீரென பாதாள சாக்கடையைத் திறந்து கொண்டு உடலெங்கும் மலம் வழிய நிற்கிறான். அவனது இயக்க ரகசியங்களை ஒற்றறிய வரும் உயர்சாதி மணப்பெண் உட்படப் பெண் வீட்டார் அந்தக் காட்சியைக் கண்டு தலைதெறிக்க ஓடுகின்றனர். இக்கதையில் வருகிற வி.பி.எஸ். மெய்யன் என்கிற தமிழாசிரியர் ஓர் அற்புதமான அரசியல் சித்திரிப்பு. தமிழாசிரியர் கள், தமிழ்ப் பற்றாளர்கள், தனித்தமிழ் ஆர்வலர்கள் ஆகியோரைக் கொச்சைப்படுத்திக் கேவலமாகச் சித்திரிப்பது பிராமண மரபு எனில் அதற்கு ஒரு எதிர்வாதத்தை பிரமிள், நாஞ்சில்நாடன் (பார்க்க - ‘மிதவை’) முதலியவர்களிடம் காண முடியும். கதைக்குள் ஒரு காட்சி. “அகர முதல எழுத் தெல்லாம்..” என்ற முதல் வரியைச் சொல்லி அடுத்த வரியைக் கூறுமாறு தலித் மாணவன் சாமுண்டியைத் தூண்டுகிறார் ஆசிரியர். “பகாசுர முதலை எல்லாம் சாதி பகவான் சார்” என்கிறான் சாமுண்டி. ஆசிரியர் சிரிக்கிறார். “யாப்பிலக்கணம் தெரியாத மண்டு, ‘சார்’ என்பதை நீக்கி ‘முதற்றே உலகு’ எனச் சேர்” என்கிறார். முன் வரிசையில் அமர்ந்துள்ள உயர்சாதி மாணவன் சரியான குறளை ஒப்புவிக்கிறான்.
‘தன் அசுத்தத்தை அகற்ற இன்னொருவன் என்கிற சமூகக் கட்டுமான’த்தை உக்கிரமாகச் சாடும் ப்ரமிள், ‘ஆர்யபட்டா’ சாதனைகளெல்லாம் கிடக்கட்டும், முதலில் மலத்தை அகற்ற சமூகக் கோபத்தை நவீன தமிழ் எழுத்துக்கள் (தலித் எழுத்துகள் தவிர) எதிலும் நாம் இதுவரை தரிசித்ததுண்டா?
‘அசரீரி’ கதையில் ஒரு பார்ப்பனப் பெண் ஒரு தலித் இளைஞனைக் காதலிக்கிறார். பார்ப்பனத் தந்தை அதற்கு எதிர்ப்பு. “அவன் ஒரு நல்ல டாக்டர், சிறந்த சர்ஜன், ‘பெர்ஃபார்மன்ஸ்’ பத்தாதா?” என்கிறாள் மகள். “பெர்ஃபார்மன்ஸ்’ முக்கியமல்ல, ‘’Birth தான் (பிறப்பு) முக்கியம்” என்று சொல்லும் தந்தை, “நேக்கு இதெல்லாம் புதுசில்லே, ‘ட்ரடீஷன்’ இல்லாம ‘பெர்பார்மன்ஸ்’ மட்டும் வச்சுண்டு என்ன பண்ணுவே?” என்று கோபப்படுகிறார். ‘சர்ஜரி’யில் அவன் டாப் என்றால் அதற்குக் காரணம் “அப்பன் பன்னியை அறுத்த ‘ட்ரடீஷன்’ என்று சொல்லவும் அவர் தயங்கவில்லை.
கதை இதே திசையில் செல்லவில்லை, வேறொரு தளத்திற்கு ‘எஸ்கேப்’ ஆகிறது. அதி நவீனமான கணினி ஒன்றின் மூலம் திருமணத் தகவல் ஆலோசனை மையம் ஒன்று செயல்படுகிறது. வந்திருந்த விண்ணப்பங்களின் தகவல்கள் கணினியில் பதிவு செய்யப்படுகிறது. “அய்யர், கவரநாயுடு, சைவ வேளாளர், செளராஷ் டிரா..” என வரிசையான சாதி விவரங்களை ஓரிடத்தில் பொறுக்க இயலாத கணினி கோபமாய், “கோத்தா டேய், லவ்டேகா பால்” என்கிறது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அதே கணினி தலித்திற்குப் பெண் கொடுக்க மறுக்கும் பார்ப்பனத் தந்தையின் மூளையில் ஒரு சைகிக் சர்ஜரி செய்கிறது. பிரமிள் எழுதுகிறார்,“சுவர்கள் சுருங்கி, அருவருப்பான காலகாலங்களின் சீழ் திரளை கட்டி நாறிக்கொண் டிருந்தது வேணுகோபாலின் ஹ்ருதயக் குகை, ‘சீ’ என்றபடி அதன் புலத்தை விட்டுப் பின்வாங்கி வெளியேறு வதற்காகத் தலை நிமிர முயன்றர். “நான் பிராமணன், இது என் ஹ்ருதயமல்ல, இது நரகம்.”
இப்படிப் போகிறது கதை, ஸயன்ஸ்ஃபிக்ஷன், மாஜிக்கல்ரியலிஸ உத்திகளையெல்லாம் பயன்படுத்தி எழுதி வருகிற நமது நவீன எழுத்தாளர்கள் யாருக்கேனும் இப்படி வரலாற்றுச் சுவடு பதிந்து எழுதும் எண்ணம் தோன்றியதா? வரலாறு சுமத்திய மனிதத் துயரங்களை இவர்களின் கண்களில் ஏன் விழவில்லை? வரலாற்றிலிருந்து விலகி நிற்பதன் மூலம் இவர்கள் யாருக்குச் சேவை செய்கின்றனர்?
அங்குலி மாலன் கதை பவுத்த மரபில் முக்கியமானது. புத்த பகவன் தனது சங்கத்திலும் தன் மனத்திலும் சண்டாளர்கள், தீண்டத் தகாதவர்கள், விபச்சாரிகள் ஆகியோருக்கு மட்டுமின்றி அங்குலி மாலன் என்கிற வழிப்பறிக் கொள்ளையனுக்கும் இடம் தருகிறார். வழிப்பறி செய்வதோடு இல்லாமல், வழிப்பறி கொடுத்தவர்களின் சுண்டு விரல்களையும் நறுக்கி மாலையாய்க் கோர்த்து அணிந்து கொள்பவன் இந்தச் ‘சுண்டு விரல் மாலையன்’. துரத்திச் செல்லுதல், வழிப்பறி செய்தல், சுண்டு விரலைப் பறித்தல் முதலியவற்றிற்கு ஆன்மீகக் குறியிட்டு விளக்கமளிக்கும் பிரமிள், அவன் இவ்வாறு ஆனதற்குக் காரணம் இளம் வயதில் பிராமண சாதியால் கல்வியை இழந்ததுதான் என்று கதையில் ஒரு திருகலைப் பதிவதன் மூலம் தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறார். பிறவியில் தலித் களாகிய பழைய அங்குலிமாலனும் பிரமிளின் படைப்பாகிய கதை நாயகன் அங்குலிமாலனும் மட்டுமே ஆத்மார்த்திகளாக முடியும்; பார்ப்பனர் வருண நியாயம் மட்டுமே பேச முடியும்; சைகிக் சர்ஜரி மூலம் பார்ப்பனரின் மூளையிலும் இருதயத்திலும் திரண்டு கிடக்கும் இரண்டாயிரமாண்டு கால சீழ்த் திரளைகளை வெட்டி நீக்குவதன் மூலமே அவர்களை மனிதர்களாக்க முடியும் என்பதுதான் பிரமிள் இந்தக் கதை மூலம் சொல்லவருவது.
காந்தியடிகளின் ஆலயப் பிரவேச வரலாற்று நிகழ்வைப் பின்னணியாகக் கொண்டு தலித் புரட்சியை சமூகத் தளத்திலும் ஆன்மீகத் தளத்திலும் தீவிரமாக விசாரிக்கும் ‘ப்ரஸன்னம்’ கதை விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்று. சுருக்கம் கருதி இங்கே நான் அதைச் செய்யவில்லை. தீண்டாமைக்கு எதிராக வலுவாகக் கதை யாடும் பிரமிள், தீண்டத்தகாதவர்களே ஆத்மார்த்திகளாக முடியும் என்று ஒரு தளத்தில் சொல்கிறார். இன்னொரு தளத்தில் அரசியல் சார்ந்து இயக்க கதியில் செயல்படுகிறபோதே அவர்கள் தம் நிலை குறித்த பிரக்ஞையுற முடியும் எனச் சுட்டிக் காட்டுகிறார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை என்கிற வரலாற்றுப் பின்னணியைச் சார்ந்து எழுதப்பட்ட கதைகளில் முக்கியமானவை (ஆலா, லங்கா புரி ராஜா, கோடரி முதலியன). சிங்கள இனவெறியை எதிர்த்துத் தமிழர்கள் நிற்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தை யும், அதே சமயத்தில் இறுக்கமான அடையாளங்க ளுடன் இன விடுதலை என்கிற பெருங்கதை யாடலை முன்வைத்து ‘குழு மனிதவாதி களாக’ அவர்கள் மாறும்போது மாற்று இனத்தாருக்கு மட்டுமின்றிச் சொந்த இனத்திற்கெதிரான வன்முறையாளர்களாகவும் அடாவடிக் காரர்களாகவுமே மாறிப் போகிற நிலையையும் புனைவு நியாயங் கள் சிதறாமல் செதுக்கித் தருகிறார். “தத்துவம் ஒவ்வொன்றும் கோடரிதான்” என்பது அவர் கூற்று, புத்தபகவான் சொன்னதுபோல, (இப்படிப் பெருங்கதையாடலாய் இறுகும்) ஒவ்வொரு வழிகாட்டு நெறிமுறையும் மற்றவர்களைக் கொலைசெய்யவே பயன்படும்.
வரலாற்று யதார்த்தங்களை நுணுக்கமாகப் பார்க்கிறார் பிரமிள். தீண்டாமை, தீண்டாமைக்குள் மறைந்துள்ள உட்சாதி வேறுபாடுகள், தலித்துகளுக்கிடையிலான உட்சாதி வேறுபாடுகளைப் பயன் படுத்திக் கொள்ளும் ஆதிக்க சாதி மனோபாவம் எதுவும் பிரமிளின் கூரிய எழுத்திற்குத் தப்பவில்லை. ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பிரமிளின் கதைகள் பலவற்றிலும் வெளிநாட்டவர்கள் வரலாற்று நியாயத்தைப் பேசுகிற பாத்திரங்களாக நிற்கின்றனர். ‘நீலகண்ட பிரேமி’ போன்ற வெளிநாட்டவர்கள் ஆத்மார்த்திகளாகவே சித்தரிக்கப்படுகின்றனர். இந்து அல்லாதோரை அந்நியராகப் பார்த்து ஒதுங்கும் இந்துத்துவ மனநிலை சில முக்கிய தமிழ் எழுத்தாளர் களைப் போல பிரமிளிடம் காணக் கிடைப்பதில்லை.
பிரமிளின் எழுத்துக்களில் இப்படியெல்லாம் நாம் மனம் வீழ்வதென்பது சமூகப் பிரச்சினைகளுக்கோ, வரலாற்றுச் சிக்கல்களுக்கோ பிரதிகளின் தீர்வுகள் கிடைக்கின்றன என நம்புவதால் அல்ல. ஒரு இலக்கியப் பிரதி அரசியல் பிரச்சினை களுக்குத் தீர்வு சொல்லிவிடும் என நம்ப வேண்டியதில்லை. அரசியல் பிரச்சினைகளை அரசியற் களத்தில்தான் தீர்க்க முடியும். தவிரவும் இலக்கியப் பிரதிகளின் நோக்கமோ, வேலையோ தீர்வு சொல்வதுமல்ல, பிரச்சினைப்படுத்துவதே.
பிரமிளின் எண் சோதிடம், ஆன்மீகக் கிறுக்குத்தனம் முதலியன பிரசித்தமானவை. அரவிந்தர் பாண்டிச்சேரியில் உட்கார்ந்து கொண்டு பார்த்த தீர்க்கப் பார்வையின் விளைவாகத்தான் ஜெர்மனி யில் ஹிட்லர் வீழந்தான் என்று சொல்லக்கூடியவர் பிரமிள். தனது அடிப்பொடிகள்தான் உலகத்திலேயே சிறந்த எழுத்தாளர்கள் என்று பட்டியலிடும் தன்மையும் அவரிடமுண்டு. ஆனால் இத்தகைய கிறுக்குத் தனங்களெல்லாம் இல்லாத தெளிவானவர்கள் இதைவிட ஆபத்தானவர்கள் என்கிற புரிதலும் பிரமளின் இந்தக் கிறுக்குத் தனங்களை ரசிக்கிற பக்குவமும் நமக்குண்டு.
பிரமிளின் ஆன்மீகப் பார்வை, குரு பக்தி முதலியன சில வரலாற்றுப் பிழைகளுக்கு இட்டுச் செல்வதை இப்பிரதியிலும் காணமுடியும். ‘அசரீரி’யில் வரும் அதி நவீன கணினிக்குப் பாபர் மசூதிப் பிரச்சினை குறித்தும் தெரிந்திருக்கிறது. “ஃபைஸாபாத்தின் ராம ஜன்ம பூமி பிரச்சினை தெரியும். ஹிந்து தீவிரவாத அரசியல், முஸ்லீம்களிடையே ஒரு தீவிரவாத எதிர்ப்பை ஏற்படுத்திய விஷயம் அது” என இரண்டையும் ஒரே தட்டில் வைக்கும் பிரமிள், ஹிந்து தீவிரவாத அரசியலைப் பற்றி எழுதும்போது, “மசூதியின் அமைப்பினுள் ராமர் கோயில் அடக்கமாக அமைந்து ஹிந்துக்கள் அங்கே வழிபாடு நடத்தி வரும் ஒரு அபூர்வ மரபை உறுதிப்படுத்திய சிந்தனைகளை, இன்டலக்சுவல்களின் சதி என்றார்கள் விசேஷமாக ஹிந்து வெறியர்கள்” என்கிறார்.
இந்தத் தகவல் வரலாற்றுக்கு முரணானது. காலங்காலமாக முஸ்லிம்கள் வழிபட்டு வந்த தலமொன்றிற்குள்ளேயும் 1949ல் வன்முறையாக ராமர் சிலையை வைத்தவர்கள் இந்துத்துவ வாதிகள். அந்த வன்முறையை அபூர்வ மரபு என நாம் ஏற்க இயலாது. அதே போலக் கரசேவையை வருணிக்கும்போது “கார்ஸேவாவுக்கு வந்திருந்த தொண்டர்கள், அவர்களுக்கு எதிராக அதிரடி நடத்தத் தயாராய் இருந்த முஸ்லிம் ஆயுதவாதிகள்” என்று அடுக்குகிறார் பிரமிள். இந்தக் கதை பாபர் மசூதி இடிக்கப் படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாகவே எழுதப்பட்டபோதிலும் முஸ்லிம் ஆயுதவாதிகளைப் பற்றிய குறிப்பு இந்த இடத்திற்குப் பொருத்தமற்றதும் தேவையற்றதுமாகவுமே உள்ளது. சில மாதங்களுக்குப் பின் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் போதும் அதுபோல நிகழ்ச்சியில்லை. ஹிந்து - முஸ்லீம் தீவிரவாதிகள் இருவரும் சேர்ந்து “ஓம் ஸ்ரீராம் ஜெயராம் பாப்ரி ராம்” என முழக்கமிட்டதாக (அதி நவீன கணினியின் வேலை) முடிக்கிறார் பிரமிள். பாப்ரிக்குள் ராமரைக் கொண்டுவந்து வைத்துப் பின் பாப்ரியை ராமுக்குள் முடக்கும் வேலையாகவே இது முடிகிறது.
எனினும் கூட மசூதி இடிப்பு யாத்திரைகள் மும்முரமாக நடைபெற் றுக் கொண்டிருந்த பின்னணியில் இங்குள்ள சில பேரெழுத்தாளர் கள் மசூதியை இடித்தால் என்ன என்கிற கருத்துக்கு ஆதரவாக எழு திக் கொண்டிருந்த சூழலில் மசூதி இடிப்பைக் கண்டித்தும் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வற்புறுத்தியும் பிரமிள் எழுதியது குறிப்பிடத் தக்கது.
வரலாற்றில் கால் பதித்து, மானுடத் துயர்களை, இழிவுகளை, எதிர்ப்புகளை, பெருமூச்சுகளை இலக்கியமாக்கியவர் பிரமிள். அவரது ஆன்மீகம், குருபக்தி, மாய யதார்த்த உத்திகள் அனைத்தும் இந்த நோக்கத்திற்கே பயன்பட்டன என்பதால் அவரைச் சிரமண மரபில் வைத்துப் பார்க்க வேண்டியதின் நியாயம் வலுப்படுகிறது. நமது எழுத்தாளர்களில் யாரையெல்லாம் பிராமண மரபில் வைத்துப் பார்க்க இயலும் என்பதை உங்களின் ஊகத்திற்கு விட்டுவிடுகிறேன்.
(சில ஆண்டுகளுக்குமுன் எழுதி இதழில் வெளிவந்தது)