பழியின் தனிமை 1
ஒரு அநீதிக்கு எதிராக நீதி கோருவதற்கும் பழி வாங்குவதற்கும் இடையில் என்ன வித்தியாசம் ?தேவி பாரதியின் ''நிழலின் தனிமை'' படிக்கும்போது தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்த கேள்வி.அதே போல மன்னிப்பதற்கும் தண்டிப்பதற்கும் தேவையான வலு இல்லாத ஆன்மாக்கள் அநீதி என்னும் சுழலில் மாட்டிக் கொள்ளும்போது என்ன ஆவார்கள் ?பழிவாங்குதலை வாழ்க்கை நமக்கு முன்வைக்கும் ஒரு சோதனையாக கணக்காக அல்லது புதிராக வைத்துக் கொள்ளலாமா ?இந்தப் புதிருக்கு இரண்டு வழிகள் உண்டு.நாம் எதன் மூலமாக அதிலிருந்து வெளியேறப் போகிறோம் ?
நிழலின் தனிமை தேவிபாரதியின் முதல் நாவல் .தமிழில் -ஆங்கிலத்தில் ஜே .எம் கூட்சி எழுதிய அவமானம் (Disgrace)நாவலுக்கு இணையான நாவல் என்று சொல்லலாம்.அடி நாதமாக ஓடும் குற்றம் ,மன்னிப்பு ,தண்டனை ,பழிவாங்குதல் போன்ற விசயங்களால் தாச்தொவச்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை நினைவூட்டும் நாவல் கூட.இதன் அடிப்படையான சிக்கல் ஒரு தாச்தவ்ச்கியச் சிக்கலே .ஆ னால் அது நாம் பின்னால் தொகுத்துக் கொள்வது
பழிவாங்குதல் மற்றும் மன்னிப்பு என்பது தேவி பாரதியின் கதைகளின் அவர் அக உலகின் பிரதான சாய்வாக கருத முடியும் குறிப்பாக அவரது புகழ் பெற்ற பலி சிறுகதையையும் நினைத்துக்கொண்டால் என்று எனக்குத் தோன்றுகிறது
நிழலின் தனிமையின் கதை சுருக்கமாக இது (அம்ஷன் குமாரின் விமர்சனத்திலிருந்து எடுத்தாளப் பட்டிருக்கிறது )
சுமார் நாற்பது வயதுள்ள கதை சொல்லி பெயர் சொல்லப்படாத ஊரின் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் எழுத்தராகப் பணியேற்கிறான். முப்பது வருடங்களுக்கு முன் அவனுக்குப் பழக்கமான, அவனது ஞாபகங்களில் வலுவாக இடம் பெற்றுவிட்ட கருணாகரனை அப்பள்ளியில் தற்செயலாக சந்திக்கிறான். ஒரு கந்துவட்டிக்காரனான கருணாகரனின் வன்புணர்ச்சிக்குக் கதைசொல்லியின் தமக்கை சாரதா பலியானவள். சாரதாவும் கதைசொல்லியும் கருணாகரன் தங்கள் வட்டத்தினுள் தட்டுப்பட்டுவிட்டதால் அவனைச் சுலபமாகப் பழி தீர்த்துவிட முடியும் என்று கற்பனை செய்துகொள்கிறார்கள். கருணாகரனால் கதைசொல்லியை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவன் இப்பொழுது அந்த ஊரின் மதிப்புமிக்க மனிதர்களில் ஒருவன். சேவை மனப்பான்மை கொண்டவன். பள்ளிக்கு நிறைய வசதிகளை செய்து கொடுத்திருக்கிறான் கருணாகரன். கதைசொல்லி தனது பழிதீர்க்கும் படலத்தின் முதல் படியாக கருணாகரனின் வீட்டுக்குச் செல்கிறான். கருணாகரனின் மனைவி, மகன், மகள் சுலோ ஆகியோருடன் ஏற்படும் பழக்கம் அவனைத் தடுமாறவைக்கிறது. கருணாகரனின் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்துத் தருபவனாக மாறி அவனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாகிறான். சுலோவின் மீது அவனுக்கு இச்சை ஏற்படுகிறது. அவளும் அவன்மீது மையல் கொள்கிறாள். இதற்கிடையே கருணாகரனுக்கு ஒரு மொட்டைக் கடிதம் எழுதி அனுப்புகிறான். அதை சாரதா மானபங்கத்திற்குள்ளான அதே ஊரில், அதே கட்டடத்தில் இயங்கிவரும் தபாலாபீஸிலுள்ள பெட்டியில் அஞ்சல் செய்கிறான். அந்தக் கடிதத்தை கருணாகரன் பெற்றுக்கொண்டானா, படித்தானா என்பதை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் இருவருக்குமான நெருக்கம் அதிகரிக்கிறது. கதை சொல்லியின் வீட்டிற்கே சுலோ வரத் தொடங்குகிறாள். கருணாகரனும் கதை சொல்லியின் தாயாரின் இறப்பிற்கு வந்து அவனது துக்கத்தில் பங்குபெறுகிறான்.
ஊர்த் திருவிழா ஒன்றுக்குக் கருணாகரனின் குடும்பத்துடன் செல்கிறான் கதைசொல்லி. அங்கு அவனுடன் முயல் வேட்டைக்குச் செல்கிறான். அவனுக்கு ஒரு கத்தி கிடைக்கிறது. கருணாகரனுடன் தனிமையில் இருப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. ஆனாலும் கதைசொல்லியால் அவனைக் கொல்ல முடிவதில்லை. கருணாகரனின் மகன் கொலை செய்துவிட்டுப் போலீஸில் மாட்டிக்கொள்கிறான். கருணாகரனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். சுலோவிற்கு அவளது சாதிக்காரனுடன் திருமணம் நடக்கிறது. சுலோவின் மாமியார் கதைசொல்லியின் பூர்விகத்தை குடைந்து தெரிந்துகொள்கிறாள். அவன் நாசுவன் (நாவிதன்) என்பதும் சிறுவயதில் சினிமா கொட்டகையில் முறுக்கு விற்றுப் பிழைத்தவன் என்பதும் அவளுக்குத் தெரியவருகிறது. தான் சிறுமைப்படுத்தப்படுவதை ஓரளவுக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத கதைசொல்லி அவளையும் அவளது மகனையும் பழிவாங்குகிற மாதிரி தனக்கும் சுலோவிற்குமுள்ள கள்ள உறவினை அம்பலப்படுத்துகிறான்.
சுலோவுடனான உறவு முறிந்த பிறகு தனது பக்கத்து வீட்டுக்காரியான சுகந்தியுடன் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான் . அவருடைய கணவனான பழந்துணி வியாபாரி இதையெல்லாம் தெரிந்தே அனுமதிக்கிறான். அவனுக்குப் பிரதியுபகாரமாக கட்பீஸ் கடை ஒன்றை வைத்துக்கொடுக்கிறான் கதை சொல்லி. ஒருநாள் சுகந்தியின் கணவன் விழிகள் பிதுங்க இருமுவதன் மூலம் தன் இருப்பை அவனுக்கு உணர்த்தவே சுகந்தியை விட்டுவிட்டு ஓடிவிடுகிறான் கதைசொல்லி. சுலோ பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாள் என்பதைக் கேள்விப்பட்டு அவளைத் தேடி அலைகிறான். பின்னர் அவள் ஒரு பேருந்து நிறுத்தத்தில் தன் கைக்குழந்தையுடன் தென்படுகிறாள். கணவனைப் பிரிந்து தன் தாய் தந்தையருடன் வாழ்கிறாள் சுலோ. சுகந்தியுடனான உறவைத் துண்டித்துக்கொண்ட கதை சொல்லி அவளுடன் கருணாகரனின் வீட்டுக்குச் செல்கிறான். முற்றிய நோயாளியாகச் சீழும் ரத்தமும் வடியும் உடலுடன் படுத்த படுக்கையாக கிடக்கிறான் கருணாகரன். முப்பது வருடங்களாக அவனைப் பார்த்திராத சாரதா கருணாகரனின் வீட்டுக்கு வந்து மரணப் படுக்கையில் கிடக்கும் அவனைப் பார்த்துவிட்டுப் போகிறாள். சிறையிலிருக்கும் தன் மகன் பரோலில் வீட்டிற்கு வருவதற்குள் கருணாகரன் இறந்துவிடுகிறான்.
இந்த 'சுருக்கமான' கதை பயணிக்கிற இடங்கள் விரிவானவை.ஆழமானவை.
ஒரு குற்றம் என்றால் உண்மையில் என்ன?எளிமையான விவரணை நாம் இன்னொருவர் வீட்டுக்குள் வெளிக்குள் அவர் அழைக்காமலே போய்விடுகிறோம். என்பதுதானே ?ஆனால் தேவிபாரதியின் கதை அதன் நிழலாக நாம் எவர் மீது அந்த குற்றத்தை நிகழ்த்துகிறோமோ அவரும் நம் வீட்டுக்குள் வந்துவிடுகிறார் என்பதையும் காட்டுகிறது..அவர்-அந்தக் குற்றம் புரியப்பட்ட நபர் - எப்போதும் நம் வீட்டு கூடத்தில் இருக்கிறார்.எல்லோரும் உறங்கியபிறகும் அணைக்க மறந்த விளக்கு போல அவர் மேல் நாம் விடுத்த குற்றம் எரிந்தபடியே இருக்கிறது.அல்லது பூட்ட மறந்த கதவு போல.அந்தக் கதவின் வழியாக 'பழி 'எப்போதும் வரத் தயாராக இருக்கிறது.ஒருவகையில் இரு தரப்பும் ஒரே பிணையில் மாட்டிக் கொண்ட இரு மிருகங்கள் போல ஆகிவிடுகிறது.இங்கே குற்றம் செய்கிறவர் மட்டுமில்லாமல் அவரைப் பழி வாங்க எழுகிற ஆளும் தண்டிக்கப்படுகிறார் 'பழிவாங்கும் உரிமை என்னுடையது 'என்ற விவிலிய வாசகத்தை நினைவூட்டும்படி
தேவிபாரதியின் கதையில் வருகிற இந்த கந்து வட்டிக் காரர்களோடு நான் இரண்டு வருடங்கள் இங்கே குமரியில் திரிந்திருக்கிறேன் .இங்கும் அவர்கள் தொழில் செய்கிறார்கள்.அதே பகுதியிலிருந்து வந்தவர்கள்தான்.ஆனால் இதில் வருவது போல இல்லாமல் வேறு விதமான மனிதர்களாக .வயிறு மட்டுமில்லாமல் நெஞ்சும் ஈரமும் உள்ள மனிதர்களாக ..
அவர்களில் ஒருவரைப் பற்றி முன்பு இங்கு எழுதியது .ஒருவகையில் தேவிபாரதியின் கதையில் வரும் கருணாகரன் வாழ்க்கைக்கும் ஒரு இணைத் தன்மை இருக்கிறது.'இந்தத் தொழில் கர்மத் தொழில் சார்''என்று அவர்களே பேசுவதை கேட்டிருக்கிறேன் .பிறகேன் அவற்றைச் செய்கிறார்கள் என்பது எளிதாக வைக்கக் கூடிய கேள்வி .பதில் சிக்கலானது.அல்லது பதில் இ ல்லை.
இங்கு வந்த புதிதில் பேச்சிலர் வாழ்க்கையில் பழக்கமான பழனி பக்கமிருந்து வந்த நண்பர் ஒருவர்.பக்கத்து முறியில் தங்கி இருந்தவர் .சிறு செலவுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து ஜீவிப்பவர்கள் இங்கு ஒரு கூட்டம் உண்டு.எல்லோருமே ஒட்டன் சத்திரம் திண்டுக்கல் பகுதியைச் சார்ந்தவர்கள் இவர் அவர்களில் ஒருவர் இரண்டு வருடங்கள் நானும் அவரும் அருகருகே தங்கி இருந்தோம் .இரவுணவு காலைச் சாயா பெரும்பாலும்ஒன்றாக.பிறகு எனக்குத் திருமணமாகியது .பாதைகள் பிரிந்துவிட்டன .சில வருடங்கள் பார்க்கவே இல்லை .பின்னர் ஒருநாள் எப்படியோ தேடித் பிடித்து என்னைப் பார்க்க வந்தார் ,கல்யாணப் பத்திரிகையோடு .மலையாளப் பெண்.காதல் .கல்யாணத்துக்குப் போக முடியவில்லை .இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து முன்சிரையில் வைத்துப் பார்த்தேன் .ஆள் பெருத்து இருந்தார்.பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் ஆற்றுப் பக்கம் ஒரு வீடு வாங்கி இருப்பதாகவும் சொன்னார் .என்னை வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்துப் போனார்.நல்ல அழகி அவரது மனைவி.சிறிய சினுங்கும் புஷ்பக் குழந்தை ஓட்டு வீடு ஆனாலும் நல்ல சூழலில் நதி முனகுவது கேட்கும் தூரத்தில் அற்புதமான வீடு,
பைக்கில் வைத்து என்னைக் கொண்டு விடுகையில் ''சந்தோஷமா இருக்கேன் சார்.ஒன்னு சொல்லவா..உங்களை எல்லாம் பார்த்து ஏங்கியிருக்கேன் சார்.நமக்கு இவரைப் போல ஒரு வேலையும் இல்லை.படிப்பும் இல்லை.நாம எப்படி வாழறதுன்னு.கோயிலுக்குப் போய் கரைஞ்சு அழுவேன்..அதுக்கெல்லாம் சேர்த்து இப்போ நல்லாருக்கேன் சார்''என்றார்
சந்தோசமாக இருந்தது
அதன்பிறகு மீண்டும் ஒரு சில வருடங்கள் அவரை ஒரு ஓணம் அன்று படந்தாலுமூடு தியேட்டரின் முன் டீ குடித்துக் கொண்டிருப்பதை பார்த்தேன்.கையசைத்தேன்.அவர் என்னைக் கவனிக்கவில்லை
அதன்பிறகு தீபாவளி அன்று இரவு குழித்துறை லக்ஷ்மி தியேட்டரின் முன்பு முதல் ஷோ முடிந்து வெளியே வந்துகொண்டிருந்தார்
நான் எதோ பொறி தட்டி அவரை நிறுத்தி ''ஹலோ பாஸ் ..தீபாவாளி எல்லாம் கொண்டாடாம இங்கே என்ன பண்றீங்க?"'
அவர் என்னை தூங்கி விழித்தது போல பார்த்து ''சார்''என்றார்.குரல் கம்மியது ''யாருக்கு சார் தீபாவளி ''என்றார்
நான் புரியாமல் ''என்ன?""
''சாருக்குத் தெரியாதா ...பேப்பர்ல கூட வந்துச்சே...''
''என்ன சொல்லுங்க...''
போன ஒணத்துக்கு சில நாட்கள் முன்பு அவரது மனைவியும் குழந்தையும் கோட்டயம் பக்கம் உறவினர் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள் .கேரளத்தில் டெங்கு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த சமயம் போன இரண்டாம் நாளே குழந்தைக்கு டெங்கு வந்திருக்கிறது மறுநாள் மனைவிக்கு .மூன்றாம் நாள் குழந்தை இறக்க அடுத்து இரண்டு நாட்கள் கழித்து மனைவி இறந்திருக்கிறார்
''அவ நல்லா பொழைச்சி வந்தா சார்.குழந்தை இறந்து வந்தது எப்படியோ தெரிஞ்சி போச்சு.தாங்காம செத்துப் போயிட்டா''
நான் ஸ்தம்பித்து நின்றிருக்க ''நான் அப்பவே நினைச்சேன் சார்.எனக்கெல்லாம் இது அதிகம்.தகுதி இல்லை.என்ன சார் ?""
''மத்த நாள் கூடப் பரவாயில்லை .பண்டிகை நாட்கள் தான் ரொம்பக் கஷ்டமா இருக்கு .எனக்கு குடிக்கவும் முடியலை .தனியா அந்த வீட்டுல கிடக்க முடியலை .அதான் இப்படி சினிமாவுக்கு கிளம்பி வந்துடுறது.மறக்கத்தான் நினைக்கறது ஆனாலும் முடியலை சிரிப்புப் படம் போலிருக்கு இந்தச் சினிமா.ஒட்டவே முடியலை.சார்.வரட்டா ?அப்படியே ஆனந்த்ல ரெண்டாம் ஆட்டம் பார்த்துட்டு போயிடுவேன்.அது ஏதோ அரசியல் படம்னு சொன்னாங்க''
saturday, February 4, 2012
நிழலின் தனிமை - தேவிபாரதி
http://wordsbeyondborders.blogspot.in/2012/02/blog-post.html?spref=fb
இருபது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் தேவிபாரதி குறைவாகவே எழுதி உள்ளார். ஒரு சிறுகதை/நெடுங்கதை/கவிதை/கட்டு ரை தொகுப்பு மற்றும் ஒரு நாடகம் அவ்வளவே. 'நிழலின் தனிமை' அவருடைய முதலாவது நாவல்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு துயர சம்பவத்தின் நினைவுகளை சிலுவையாக தன்னுள் சுமந்து தெரியும் ஒருவனின் கதை இது. அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு கிளார்க் தன் அக்கா சாரதாவை வன்புணர்ச்சி செய்த கருணாகரன் என்பவனை முப்பது ஆண்டுகள் கழித்து சந்திக்கின்றான். இத்தனை ஆண்டுகளும் அவனை பழிவாங்க வேண்டும் என்ற வன்மத்துடன் கிளார்க் இருந்துள்ளார். கருணாகரனுடன் பழக வாய்ப்பு கிடைக்க, அவன் வீட்டிற்கு அடிக்கடி செல்லும், அவனுடைய கணக்கு வழக்குகளை சரிபார்க்கும் அளவிற்கு உயர்கின்றார். இதனிடையே கருணாகரனை பழிவாங்க எண்ணி அவர் செய்யும் காரியங்கள், அதன் விளைவுகள், அதனால் கிளர்க்கே எப்படி மாறுகின்றார் என்பது தான் நாவல்.
அவருடைய பழிவாங்கும் (அல்லது அப்படி நினைக்கும்) செயல்களில் இருக்கும் அர்த்தமின்மை மற்றும் அபத்தம், வாழ்கையில் நீதி என்பது இல்லை என்று நம்மை நினைக்க தோன்றும். அவருடைய ஒவ்வொரு செயலும், ஒன்று குழந்தைத்தனமாக இருக்கும் (மொட்டை கடுதாசி போடுதல்), அல்லது அவருடைய தயக்கத்தால் பாதியில் விட்டு விடுவதாக முடியும். (கொலை செய்ய கத்தியுடன் சென்று, வாய்ப்பு கிடைத்தும் நிறைவேற்றாமல் இருப்பது). அதே போல் கருணாகரன் மகளுடன் (சுலோ) காதல் கொள்வது, அதன் மூலம் அவனை காயப்படுத்த நினைப்பது. (மூன்றாம் தர சினிமா போல் என்று கிளர்க்கே நினைக்கின்றார்) . கிளார்க் உண்மையில் அவளை காதலித்தாரா அல்லது நடித்தாரா என்று உறுதியாக சொல்லமுடியாது. அவளை கைவிட்டதற்கு அவருடைய இயல்பான, எதிலும் இருக்கும் தயக்கமே ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் இதனால் கருணாகரன் காயப்படவில்லை, அவனுக்கு இது பற்றி தெரியவே தெரியாது. இது ஒரு புறமிருக்க, சுலோ கிளார்க் தன்னை மணம் முடிக்க மாட்டான் என்று தெரிந்ததும் அவனை ஒரு வேலையாள் போலவே நடத்த ஆரம்பிக்கின்றாள், கிளார்க்கும் அதை எதிர்க்கவில்லை. கருணாகரன் குடும்பம் வேறொரு பிரச்சனையில் மாட்டிய போதும், அவர் கூட இருந்து உதவுகின்றார். பழிவாங்க சென்ற இடத்தில், வேலையாளாக மாறி அவர்களின் நன்மைக்கு உழைப்பவனாக மாறிப்போனது ஒரு அபத்தம் தானே.
பின்னர் கிளார்க் அவர்கள் வீட்டிலிருந்து விலகி ஒரு நிலையற்ற வாழ்கை மேற்கொள்கின்றார். இதில் கிளார்க்கே ஒரு வகையில் கருணாகரன் போல் நடந்து கொள்வது ஒரு முரண் நகை. சுலோவிடம், அவருடைய நடத்தையை இப்படி பார்க்கலாம். கிளார்க் அவரை வேண்டுமென்றே ஏமாற்றினாலும், அல்லது பயத்தால் விலகிப்போனாலும் ஆண்கள் பெண்கள் மீது செய்யும் வன்முறையின் இன்னொரு வகை தானே அது. (கண்ணாடியில் கருணாகரனின் முகத்தை பார்க்கும் இடம், அதற்கு முன்பான இடங்களில் கதை யதார்த்தவாதத்தில் ஒரு சில பக்கங்கள் சர்ரியலிச பாணியில் செல்கின்றது, அது ஒன்றும் துருத்தலாக இல்லை, அவருடைய அப்போதைய மனநிலைக்கு, தோதாகவே உள்ளது. அவரின் ஆழமான உணர்வுகளின் கனவென்று தான் கொள்ளவேண்டும்). நாவலின் முடிவை இரண்டு விதமாக கருத வாய்ப்புண்டு, ஒன்று வலிந்து திணிக்கப்பட்டதாக கருதலாம் அல்லது தர்க்கரீதியானதாக. என்னால் இதை, திடீர் திருப்பமாக பார்க்க முடியவில்லை நாவலின் அடிநாதமாக வரும் அபத்தத்தின், அர்த்தமின்மையின் உச்சமாகவே பார்கின்றேன்.
'படைப்பு மொழியை கண்டறிவதின் சவாலை' பற்றி தேவிபாரதி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். அது உண்மை தான், அவருடைய பலி தொகுதி மற்றும் சமீபத்திய நெடுங்கதைகளை பார்க்கும் போது இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை,மாற்றத்தை நாம் உணர முடியும். இந்த நாவலும் சமீபத்திய நெடுங்ககதைகளின் மொழியின் நீட்சியாக உள்ளது. சற்றே மெருகேறி உள்ளது என்றும் கூறலாம். எளிமையான அதேநேரம் கட்டுக்கோப்பான, அடர்த்தியான மொழி. பத்திரங்களின் பதற்றத்தையும், சோகத்தையும், மன இறுக்கத்தையும், சிடுக்குகளையும் வாசகனுக்கு கடத்தும் மொழி. கிளார்க்கின் மொட்டை கடிதம் எழுதி அதை தபால் ஆபீசில் போட செல்லும் இடம் ஒரு உதாரணம். அவருக்கு மனதில் ஏற்படும் பதற்றங்கள் நம்மையும் தொற்றிக்கொள்ளும். மிக நுணுக்கமான, சிடுக்குகள் நிறைந்த மன உணர்வுகளை மொழி மூலம் வெளிக்கொணரும் முயற்சி நாவல் முழுக்க விரவிக்கிடக்கின்றது. இந்த நாவல் முழுவதும் ஒரு மிக மெல்லிய அங்கதம் இருந்ததாக தோன்றியது எனக்கு. அது மிக இயல்பாக, சற்றே கண்ணையர்ந்தால் கவனிக்க படாமல் சென்று விடக்கூடியதாக இருக்கின்றது.
கிளார்க்கிற்கு நாவல் முழுதும் பெயர் இல்லாமல் இருப்பது மிக பொருத்தம். அவர் எல்லார் வாழ்விலும் பங்கு பெற்றாலும் ஒரு வகையில் அநாமதேயமாகவே, எங்கும் நிலைகொள்ளாமல் உள்ளார். கருணா கரன் குடும்பத்துடன் பழகுவது, சட்டென்று விலகுவது, சுகந்தியுடன் ஒரு தற்காலிக உறவு இப்படி எப்போதும் ஒரு அலைச்சல் அவர் வாழ்கை முழுவதும். கிளார்க் சிறுவனாக இருக்கும் பொது கருணாகரனை வெட்ட சென்று அதில் தோல்வி தான் அடைகின்றார். கிளார்க் வளர்ந்து விட்டாலும், அவர் மனதில் அந்த சிறுவன் அப்படியே தான் உள்ளான் என்று கிளார்க்கின் செயல்கள் மூலமும் அவை வியர்த்தனமாவதின் மூலமும் தோன்றுகின்றது. இப்படி எண்ண வாசகனுக்கு சங்கடமாகதான் உள்ளது, ஆனால் வாழ்கை எப்போதும் நமக்கு தேவையான ஒரு நிறைவு (closure) அளிப்பதில்லையே.
நாவல் முழுவதும் கிளார்க்கின் பார்வையில் உள்ளதால் மற்ற பாத்திரங்கள், அவர்களின் உணர்வுகள் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை. நாவலின் ஆரம்பத்தில், சாரதா, கருணாகரன் இருவரும் நாவலில் முக்கிய பங்குவகிப்பார்கள் என்று நாம் நினைப்போம், ஆனால் சாரதா வெகு அரிதாகவே வருகின்றார், கருணாகரன் உணர்வுகள் குறித்தும் அதிகம் இல்லை. இதை நெகடிவாக கொள்ள வேண்டாம், இவர்கள் மூவருக்கும் இடையில் இருக்கும் ரூபிக் கூப் போன்ற உறவின் ஒரு பக்கம் தான் இந்த நாவல். இதை இன்னும் நான் நீடிக்க முடியும். சாரதாவின் பார்வையில் இருந்து இதை இன்னொரு நாவலாக எழுதக்கூடும். அந்த துயர சம்பவத்தை எப்படி எதிர்கொண்டார், எப்படி தன் வாழ்கையை மீட்டு ,குடும்பம், குழந்தை என்று ஒரு நடைமுறை வாழ்கைக்கு திரும்பினார் போன்ற கேள்விகள் நமக்கு அதில் விடை கிடைக்கலாம். அவர் கருணாகரனை, மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை என்று அவர் வரும் சில இடங்களிலேயே தெரிகின்றது, அதன் மூலம் அவர் இன்னும் சுமந்து கொண்டிருக்கும் வலியின் ஆழத்தையும். அவர் நாவலில் இறுதியில் கூறியது உண்மை தானா என்றும் நமக்கு அந்த நாவலில் தெரியக்கூடும்.
அதே போல் கருணாகரன் நமக்கு பல வியாபாரங்கள் செய்யும், அரசியலில் சற்றே செல்வாக்கான மனிதர் என்ற அளவில் வழக்கமான, சாதாரணமான ஆசாமியாக தோன்றுகிறார். சாரதாவிடம் அவருடைய நடத்தை பற்றி நமக்கு தெரியவில்லை என்றால் அவரை பற்றி நமக்கு வேற பிம்பமே ஏற்படும். எந்த ஒரு மனிதருக்கும் பல பக்கங்கள் இருப்பது போல நாம் பார்ப்பது அவருடைய ஒரு பக்கம் தான்.
இதை நல்ல/மோசமான நாவல்,பிடிக்கும், பிடிக்கவில்லை, என்று ஒற்றை வரியில் சொல்லமுடியாது. மனதின் அலைச்சலை கூறும், படிப்பவரையும் அலைகழிக்கும் இந்த நாவல் படித்தவுடன் இன்னொரு வாசிப்பை கோரும். பத்திரங்களின் மனவியல் குறித்து சிந்திக்க தூண்டும், கூடவே நாம் செய்யும் பல செயல்களின் முடிவில் உள்ள அர்த்தமின்மையையும். இந்த நாவல் கிடைத்தால் கண்டிப்பாக படித்து விடுங்கள்.
வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்