Friday, 10 March 2017

வை.கோவிந்தன் : மறக்கப்பட்ட ஆளுமை by யூமா வாசுகி



வை.கோவிந்தன் : மறக்கப்பட்ட ஆளுமை



வை.கோவிந்தன்
தஞ்சாவூரில், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனக் கிளை மேலாளர் சரவணனிடம் பேசிக்கொண்டிருந்த போது “சக்தி கோவிந்தனைத் தெரியுமா?” என்றார். “ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னேன். “புதுக்கோட்டை அருகில் உள்ள ராயவரம்தான் அவரது சொந்த ஊர்.   அங்கே நடக்கின்ற ஒரு விழாவிற்காக அவரது மனைவியும் மகனும் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்களாம். சந்திக்கிறீர்களா…”

உச்சி வெயில். எதிர் அனல் காற்று. இரு சக்கரவாகனத்தில் நான் பின்னிருக்கையில் இருந்தேன். பயணம் நெடுந்தூரம். போகிறோம்… போகிறோம், ஊர்வந்த பாடில்லை. தஞ்சாவூருக்கும் புதுக்கோட்டைக்குமிடையில் சுமார் ஒரு மணிநேரப் பயணம் தான் என்றாலும் பஸ்ஸில் சென்றிருந்தால் இந்தளவு அயர்ச்சி தெரிந்திருக்காது. புதுக்கோட்டையிலிருந்து இடையிடையே வழி விசாரித்துக்கொண்டு ராயவரம் எனும் சிற்றூருக்குள் நுழைகையில் மதியம் இரண்டுமணி. அங்கே சக்தி கோவிந்தனின் வீட்டைக் கண்டு பிடிப்பதும் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.  குழம்பிப்போய் விசாரித்த வீட்டின் கதவுகளையே மறுபடியும் தட்டினோம். ராயவரத் தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக வண்டியில் பாய்ந்து “சக்தி கோவிந்தன் – சக்தி கோவிந்தன்” என்று கேட்டு, சரியான பதில் கிடைக்காத நிலையில், சுட்டப்பட்ட வீடுகளும் தவறாக இருக்கையில், எதிரே வந்த ஒருவரிடம் சரவணன் சமயோசிதமாகக் கேட்டார். “கோவிந்தன் செட்டியார் வீடு எதுங்க?” அந்த நபரால் காட்டப்பட்டதுதான் நாங்கள் தேடிக்கொண்டிருந்த வீடு. அந்த வீட்டிலிருந்த பெண்மணி “கோவிந்தன் செட்டியார் வீடு இதுதான் கண்ணுங்களா, ஆச்சியும் (கோவிந்தன் மனைவியும்) அவங்க மகனும் மெட்ராஸ்லேர்ந்து வந்துருக்காங்க. அவங்க கோயில்ல இன்னிக்குப் பூச நடக்குது. அதுக்காகத்தான் வந்துருக்காங்க அங்கே போய்ப் பாருங்க கண்ணுங்களா” என்று வழியும் சொன்னார்.

“எல்லாரும் மறந்துட்டாங்க” தன் தந்தை வை. கோவிந்தன் குறித்து அழகப்பன் சொல்லத் தொடங்கியதன் ஆரம்ப வாசகம் இது. “நிறைய புத்தகம் போட்டாங்க அப்பா.  விக்கல.  யாரும் வாங்கிப் படிக்கல. ரொம்ப நஷ்டமாயிருச்சி…”

கண்களில் ஏற்பட்ட கோளாறைக் குணப்படுத்தச்செய்த அறுவை சிகிச்சையினால் கேட்கும் திறன் பெருமளவு பாதிக்கப்பட்டுவிட்டது அழகப்பனுக்கு. எதிராளி என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள அதிகப் பிரயாசையுடன் முகத்தையே உற்றுநோக்கி இழுத்து இழுத்து நிதானமாகப் பேசினார்.  இந்தக் குறைபாட்டால் அவரால்  வேலை எதுவும் செய்ய இயலாமலாகிவிட்டது.  ஆயினும், பழைய பொருட்களை வாங்கிவிற்கும் வேலையை அவ்வப்போது செய்து வருகிறார்.  மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டிருக்கிற தற்போதைய நிலையில் நண்பர்கள் எவரேனும் அரிதாக உதவுகின்றனர். நாற்பது வயதில்தான் திருமணம் செய்திருக்கிறார்.  அழகப்பனின் மனைவி, கண்ணதாசனின் உறவுக்காரப் பெண், நான்காம் வகுப்புப் படிக்கும் ஒன்பது வயது மகளின் பெயர் அழகம்மை. அம்பத்தூரில்  தன்  மூத்த  சகோதரியின்  (இவர் வை. கோவிந்தனின் முதல் மனைவிக்குப் பிறந்தவர். இரண்டாம் திருமணத்தில் பிறந்தவர் அழகப்பன்) வீட்டருகில் வசித்து வருகிறார்.
அவருடைய  பேச்சு முற்றிலும் வசப்படுத்தியது எங்களை.  தன் தகப்பனாரின் செயல்பாடுகளைப் பற்றி முழு ஈடுபாட்டுடனும் பெரிய மரியாதையுடனும் – அதே சமயம் மிகவும் வேதனையுடனும் நீண்ட நேரம் மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருந்தார். மாபெரும் பதிப்பாளர் ஒருவர் அறிவுத் துறையிலே நிகழ்த்திய சாதனைகள். லௌகிகப் பெரும் சரிவு. இப்போதும் வீரியம் குன்றாதபடி அவரிடம் நிலைத்திருக்கிறது தந்தையின் அகாலமரணம். இந்த இறப்பின் மையத்திலிருந்தே பேச்சு கிளை விரிகிறது.

சோகத்தின் கைப்பும் நிராதரவின் இறுதிக்கட்ட மௌனமுமாக இடையிடையே உறைந்துபோகிறார். எங்கோ பார்த்துத் தலையசைத்து முனகலாக “எல்லாரும் மறந்திட்டாங்க…” என்றவர் சரவணனிடம் திரும்பி “எங்க அப்பா ஒண்ணும் செய்யாம வீட்டில இருந்திருந்தாலே இன்னும் இன்னும் பல தலைமுறைகளுக்கு நாங்க நல்லா இருந்திருப்போம். புத்தகம் போடுறேன் – பத்திரிகை நடத்துறேன் என்று எல்லாவற்றையும் விரயம் செய்துவிட்டார்கள். இப்போது நாங்கள் சாப்பாட்டுக்கே மிகவும் சிரமப்படுறோம்” என்றார். தன் அப்பா செய்த காரியங்களின் முக்கியத்துவம் – பெருமை எல்லாம் தெரிந்தாலும்கூட – வை. கோவிந்தனின் மீதுள்ள பெரும் அபிமானத்தையும் மீறி, வாழ்வின் வலி அவர் இதயத்திலிருந்து வெளியுதிர்த்த வார்த்தைகள் அவை.
ஆக… இறுதியில் இப்படிச் சொல்ல நேர்ந்துவிட்டது.

அப்பா பிறந்தது புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உள்ள ராயவரம். இப்போது புதுக்கோட்டை மாவட்டம். தாத்தா பேரு ராமசாமி செட்டியார். பாட்டி பேரு விசாலாட்சி. அப்பா படித்தது எட்டாவது வரையில்தான். படித்துக் கொண்டிருக்கும்போதே தாத்தா அப்பாவை பர்மாவுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.  அந்தச் சமயத்தில் அப்பாவுக்கு 14 அல்லது 15 வயசுக்குள்ள இருக்கணும்.   பர்மாவில் தாத்தாவுக்கு மரம் அறுக்கும் மில்லும் வட்டிக் கடையும் இருந்தது. அங்கே ரொக்கக் கடையின்னு சொல்வாங்க.   அப்பா அதைப் பார்த்துக்கொள்கிற மாதிரி ஏற்பாடு. விவசாயம் பண்ணுகிறவர்களிடம் பணத்தைக் கொடுத்து வாalakappanங்குறதுதான் முக்கியமான வேலை. வெள்ளாமை நல்லா இல்லாமப்போனா அவங்களால வாங்குன பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாது. அந்த மாதிரி சயமங்கள்லே அவங்களை கசக்கிப் பிழிஞ்சி வாங்குறது அப்பாவுக்கு மனசுக்குப்பிடிக்கல.   அப்ப சுத்தானந்த பாரதியார் – சாமிநாத சர்மா அவர்களெல்லாம் அப்பாவின் வயதுக்காரர்கள். சாமிநாத சர்மா பர்மாவிலே இருந்தார். சுத்தானந்த பாரதி அரவிந்தாஸ்ரமத்திலிருந்து பர்மாவுக்குப் போயிருந்தார்.  அவங்களோடு அப்பா கலந்து பழகினாங்க.  அப்பா வேலை செய்த கடை தாத்தாவினுடையது.  வட்டிக்கடைத் தொழில் அப்பாவுக்கு பிடிக்கல.  சுத்தானந்த பாரதி இங்கே இருக்கும்போதே பர்மாவிலே இருந்த அப்பாவுக்கும் அவருக்கும் இடையில் கடிதப் போக்குவரத்து இருந்தது. அப்பா இங்கே வந்துட்டாங்க. வந்தவுடனே அப்பாவை இன்னொரு வீட்டுக்கு ஸ்வீகாரம் கொடுத்துட்டாங்க. எங்களுடைய பங்காளிங்க மாதிரி உள்ள வீட்டுக்கு.   தத்து எடுத்த தாத்தாவின் பெயர் வைரவன் செட்டியார்.  அந்தம்மா பேரு முத்தையாச்சி. அப்ப ராமசாமி தாத்தாவினுடைய வீடு ராஜா சர்.முத்தையா செட்டியார் வீட்டில் அடமானத்துல இருந்துச்சி. தொழிலுக்காக ராஜா சர்.முத்தையா செட்டியார் கிட்ட வாங்கிய கடன் 30,000 ரூபாயக் கட்ட முடியல. அதனால அப்பாவத் தத்துக் கொடுத்து 30,000 ரூபாய் பணம் வாங்கி அந்த வீட்டைத் திருப்பியிருக்காங்க. அப்பா அடாப்ட் போன இடத்தின் சொந்தத்திலேயே கல்யாணம் பண்ணுனாங்க. கல்யாணம் பண்ணி கொஞ்ச நாள்ல அப்பாவுக்கு, அப்ப பிரிட்டிஷ் கரன்ஸி ஒரு லட்ச ரூபா ஒன் லேக் அந்தக் காலத்துல. அப்ப அப்பாவுக்கு 17, 18 வயசு இருக்கணும். பேங்குல இல்ல, எங்க சொந்தக்காரங்க வீட்டு “சேஃப்”புல இருந்து எடுத்துக் கொடுத்து – வைத்து தொழில் பண்ணிக் கொள் என்றார்கள்.  அந்தப் பணத்தை வைத்து மெட்ராஸ் வந்து சுத்தானந்த பாரதியை வைத்து சக்தி பிரஸ் ஒன்று தொடங்கி சக்தி மேகஸின் ஆரம்பித்தார்கள்.

சுத்தானந்த பாரதியுடன் அரவிந்தாஸ்ரமரத்தில் இருந்ததிலிருந்து தான் அப்பாவுக்கு இலக்கிய ஈடுபாடு. முதல் மனைவி கல்யாணம் செய்த கொஞ்ச நாட்களிலேயே இறந்துட்டாங்க. அவங்களுக்குத்தான் எங்க அக்கா பொறந்தது. அக்கா சின்னக் கொழந்தையா இருக்கையில அப்பா அரவிந்தாஸ்ரமம் போயி இருந்துட்டாங்க.  வரவேயில்லை. இந்த வாழ்க்கை அவங்களுக்குப் புடிக்கல. முதல் மனைவி இறந்ததும், எனக்கு எதுவும் வேண்டாம் என்று அரவிந்தாஸ்ரமத்தில் போய் சேர்ந்து விட்டார்கள். அப்போது சுத்தானந்த பாரதியார் ஆஸ்ரமரத்தில் இருந்தார்கள்.  அப்பா அந்த பீரியட்ல எழுதுன நோட்புக் ஒண்ணு இருக்கு.  அப்பா கைப்பட எழுதிய நோட்புக்.  நீங்க பாத்தீங்கன்னா தெரியும். அதுலேர்ந்து அப்பாவுக்கு இந்த லௌகீக வாழ்க்கை புடிக்கலைன்னு உங்களுக்குத் தெரியும்.
அப்பாவுக்கு ஆங்கில இலக்கியத்திலெல்லாம் நிறைய ஈடுபாடு உண்டு. சாமிநாத சர்மாவுடனெல்லாம் பழகியதால பாரதியார் மேல அளவில்லாத ஆர்வம்.  வெளிநாட்டு நல்ல புத்தகங்களையெல்லாம் தமிழ்ல வெளியிடணும்னு ஆசைப்பட்டாங்க.

ஆசிரமத்திலிருந்து அவங்களை கூட்டிக்கொண்டு வரமுடியல. அப்புறம் சுத்தானந்த பாரதிதான் “குடும்ப வாழ்க்கைக்குப் போ, ரெண்டாவது கல்யாணம் செய்துகொள்” என்று வலியுறுத்தியதன் பேரில் அப்பா ரெண்டாவது கல்யாணம் செய்துகொண்டார்கள். அப்பாவுடைய அண்ணன் மனைவியின் தங்கைதான் அம்மா. அப்பாவின் உடன் பிறந்தவங்க நான்குபேர். பெரியவர் ரங்கநாதன் செட்டியார்.  பர்மாவுல இருந்தவர்.  அவரும் அவரின் மனைவியும் சேர்ந்து அம்மாவை அப்பாவுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். கல்யாணம் நடந்த பிறகும் அவர்களே அப்பாவுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

இப்போது மியூசிக் அகாடெமி இருக்கிற இடம் சக்தி காரியாலயத்தின் சொந்த இடமாக இருந்தது. அப்பா சக்தி பத்திரிகை ஆரம்பித்த காலத்தில் ரஷ்யாவிலிருந்து நிறைய மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் வந்தன.  அப்பாவுக்கு டால்ஸ்டாய் மேல் தீவிர ஈடுபாடு வந்தது. டால்ஸ்டாயின் மீது பைத்தியமாகவே இருந்தாங்க. அப்பாவே நிறைய டால்ஸ்டாய் புத்தகங்களை வெளியிட்டாங்க.  இது அப்பா செய்த முக்கிய காரியங்கள்ல ஒண்ணு.

மொதல்ல தி.ஜ. ரங்கநாதன்தான் அப்பாவிடம் வேலை பார்த்தவர். தி.ஜ.ர-மஞ்சரில இருந்தாருல்ல, அவருதான். பெறகு கு.அழகிரிசாமியும் வந்து அப்பாவோட வேலை பார்த்தாங்க. தொ.மு.சி. ரகுநாதனும் அப்பாவோட இருந்தாங்க. இவங்க சக்தி மேகஸின் பார்த்துக்கிட்டிருந்தாங்க.  பிறகு மங்கைன்னு பெண்களுக்கான பத்திரிகையை அப்பா ஆரம்பிச்சாங்க. அதற்கு ஆசிரியையாக டாக்டர். லட்சுமி நியமிக்கப்பட்டாங்க. சக்தி பத்து வருடங்கள் வந்திருக்கும். வாரம் ஒன்று. ஆரம்பத்தில் டைம் மேகஸின் அளவுக்குப் பெரிதாகச் செய்தார்கள். செலவு அதிகமாகிறது என்று பிறகு சிறிய அளவிற்கு மாற்றினார்கள். தொடர்ச்சியாகப் பத்திரிகை வந்துகொண்டிருந்தது.
1951-52-இல் பிரஸ் விக்கிற நெலமைக்கிப் போயிருச்சி. பத்திரிகை வாங்கிப் படிக்க ஆள் இல்ல. பெருமளவில் விற்பனையாகாமல் தேங்கியது. நிறைய நஷ்டம் வந்தது. புத்தகமென்றால் அதற்கு ஆயுள் அதிகம் என்று புத்தகத் தயாரிப்பில் இறங்கினார்கள் அப்பா. அப்புறம் அணில் என்று குழந்தைகளுக்கான பத்திரிகை ஆரம்பித்தார்கள். குழந்தை எழுத்தாளர் சங்கத்தை தோற்றுவித்தவரும் அதன் முதல் தலைவரும் அப்பாதான். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவுமிருந்தார்கள். குகப்பிரியை எனும் புனை பெயரைக்கொண்ட டாக்டர் லட்சுமி ஆசிரியராக இருந்து நடத்திய மங்கை நான்கு வருடங்கள் வந்திருக்கும். மங்கை மாதம் ஒரு பத்திரிகை. அணில் பத்திரிகையில்தான் தமிழ்வாணன் உதவியாசிரியராக இருந்தார்.  முதன் முதலில் தமிழ்வாணன் சென்னைக்கு வந்து அப்பாவிடம் கேஷியராக வேலைக்குச் சேர்கிறார்கள்.

தமிழ்வாணன் எழுத்தாளராக வரவில்லை.  நம்பிக்கையான ஆள் வேண்டும் என்று செட்டியார் கம்யூனிட்டிலேர்ந்து அவரைக் கொண்டு வந்து வைத்தார்கள் அப்பா. அவர் கடைசி வரைக்கும் அப்பாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தார். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவும் 1940-இல் சக்தி அலுவலகத்தில் கேஷியராகப் பணிபுரிந்தார். அந்தப் பீரியட்லதான் ரா.கி. ரங்கராஜன் சக்தியில் வந்து சேர்ந்தார். குமுதம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு ரா.கி.ரவும் தமிழ்வாணனும் சக்தியிலிருந்து பிரிந்து குமுதத்தில் சேர்ந்துவிட்டார்கள்.  கம்யூனிஸ ஈடுபாட்டுடன், கொள்கை தொடர்பான தத்துவப் புத்தகங்கள் எல்லாம் போட்டால் அவற்றை விற்க முடியாமல் போகுமென்று அவங்கெல்லாம் ஒதுக்கிட்டாங்க. பாப்புலராக விற்க முடியாமல் போகுமே என்று பிரிந்து போயிட்டாங்க. அதுதான் நடந்தது. முழுவதும் ரஷ்யா தொடர்பான புத்தகங்கள் போட்டால் நமக்கு நல்ல எதிர்காலம் இல்லைன்னு அவங்க நெனச்சாங்க.

பிற்பாடு அணில் மேகஸின் நடத்திக்கொண்டிருக்கும்போது அப்பாவுக்கு கார் ஆக்ஸிடன்ட் ஆகிவிட்டது. மோரீஸ் மைனர். புதுவண்டி. அப்பாவின் தங்கை கணவர் (அடாப்ட் போன இடத்தில்) வாங்கிக் கொடுத்தது.  அவர் பெயர் வைரம் அருணாச்சலம்.  மிகவும் புகழ் பெற்றவர்.   A.V.M- முக்கெல்லாம் ஒரு தடவை பைனான்ஸ் செய்தவர். அவர்தான்  A.V.M ஸ்டுடியோ ஆரம்பித்துக்கொடுத்தவர். பெரிய வைர வியாபாரி.  அவர் இங்கு வந்து எங்களுடைய மியூசிக் அகாடமி வீட்டில் இருக்கும்போது அவர் வெளியே செல்வதற்கு டாக்ஸி பிடித்துவரச் சொல்லி ஆள் அனுப்பினாங்க அப்பா.  அவர் அப்பாவிடம் “இன்னும் நீ கார் வாங்கிக் கொள்ளவில்லையா?” என்று கேட்டுவிட்டுச் சென்று திரும்பி வரும்போது “மோரீஸ் மைனர்” புது கார் வாங்கி வந்து சாவியை அப்பாவின் மேசைமீது வைத்து எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அவர் மிகப்பெரிய கோடீஸ்வரன். பாம்பேல  அவருக்கு  வைர  வியாபாரம்.   அவரும்  நொடிச்சிப்போயிட்டார் கடைசி காலத்துல.

வண்டி வாங்கிய ஒரு வாரத்துல அவரு ஊருக்குப் போயிட்டாரு. அப்பா பேங்குக்குப் போறதுக்கா – அன்னைக்குத் திங்கட்கிழமை – வண்டியை எடுக்கச் சொன்னங்களாம்.  டிரைவர் “இப்போது மணி எட்டாகிறது.   ராகு காலம் கழித்துப் போகலாம்” என்று சொல்லியிருக்கிறார்.  “எனக்கு இந்த சென்டிமெண்ட் இல்ல, வண்டிய எடு” என்று சொல்லிவிட்டார்கள் அப்பா. வண்டிய எடுத்துக்கிட்டுப் போறபோது ஆழ்வார்பேட்டை கார்னர்ல வண்டி வரும்போது ஆக்ஸிடண்ட்டாயிருச்சி.   பெரிய ஆக்ஸிடண்ட் அது.   டிரைவர் ஸ்பாட்ல செத்துப் போயிட்டாரு.  அப்பா பின் சீட்டில் இருந்ததால உயிர் பிழைச்சிட்டாங்க. ஆனா அப்பாவுக்கு கடைசி வரையிலும் கால் சரியாக ஊன்ற வராமல் போய்விட்டது, அந்த ஆக்ஸிடெண்டிலிருந்து. அந்த ஆக்ஸிடெண்ட்ல அப்பா குற்றுயிரும், குறையுயிருமாக ரோட்ல கெடக்கும்போது, சிவகங்கை ராஜா அந்த வழியா வண்டில வந்தவரு அப்பாவைப் பார்த்து ராயப்பேட்டை ஆசுபத்திரில கொண்டு போயிச் சேத்துட்டாரு.

ராயப்பேட்டை ஆசுபத்திரில சேந்தவுடனே தமிழ்வாணனுக்கு போன் பண்ணியிருக்காங்க. தமிழ்வாணன் வந்து கடைசி வரைக்கும் கூட இருந்து பாத்துக்கிட்டாரு.  அணில் பத்திரிகைக்கு அப்பாதான் எடிட்டராக இருந்து பாத்துக்கிட்டாங்க. அந்தப் பத்திரிகையோட எல்லா விஷயத்தையும் தன்னோட கட்டுப்பாட்டில் வைத்திருந்தாங்க. குழந்தைகள் பத்திரிகை என்பதால் ரொம்ப கவனமாயிருந்தாங்க. அப்பா ஆக்ஸிடெண்டால் பாதிக்கப்பட்டிருந்தபோது ஆசிரியர் பொறுப்பு தமிழ்வாணனிடம் போனது. அப்பா ஆசிரியராக இருந்தபோது அணில் 5,000 காப்பிகள்தான் விற்பனையானது.  அது போதும் என்றிருந்தார்கள் அப்பா. “நீயே அணிலைப் பார்த்துக்கொள்” என்று அப்பா தமிழ்வாணனிடம் சொன்னவுடன் அவர் 25,000 பிரதிகளாக சர்குலேஷனை ஜாஸ்தி பண்ணிட்டார்.   அணிலில் “பயம்மாயிருக்கே” என்று மர்மத் தொடர்கதை ஒன்றை தமிழ்வாணன் எழுதியதுதான் காரணம்.  அதுதான் முதல் கதை தமிழ்வாணனுக்கு. “கதை நல்லாருக்கு.   ஆனால் குழந்தைகளுக்கு இதுபோல எழுதக் கூடாது. துப்பாக்கி சத்தம், ரத்தம் அது இதுன்னு ஒரே வன்முறையா உள்ளது போல எழுதாதீங்க” அப்படீன்னாங்களாம் அப்பா.

தமிழ்வாணனுக்கும் அப்பாவுக்கும் எந்தவொரு மனஸ் தாபமும் எப்போதும், கடைசி வரையிலும் இருந்தது கிடையாது. தமிழ்வாணன் மிக்க அன்புடனும் மரியாதையுடனும் இறுதிவரை பழகிக் கொண் டிருந்தார். ஆனால் அப்போது, இதுபோன்ற கதைகள் எழுதாதீர்கள் என்றார்களாம் அப்பா.   “இல்லை, 5,000 சர்குலேஷனை 25,000 – த்திற்கு உயர்த்தியிருக்கிறேன்.  இன்னும் ஜாஸ்தி இதை கொண்டுட்டு வந்திடலாம்” என்று சொன்னாராம் தமிழ்வாணன்.

அதற்கு அப்பா, “எனக்கு வியாபாரம் பெருசுல்ல, எனக்குன்னு ஒரு மோட்டிவ் இருக்கு. என்னுடைய கொள்கைதான் எனக்கு முக்கியம். குழந்தைகளுக்கு குழந்தைகள் கதை போலத்தான் எழுதவேண்டும்” என்றார்களாம். தமிழ்வாணன் சக்தி காரியாலயத்தில் தனக்கு எழுத்து சதந்திரம் இல்லையென்று எஸ்.ஏ.பியிடம் போயி சேர்ந்துட்டாரு. அவர் தமிழ் வாணனுக்காகவே “கல்கண்டு” பத்திரிகையை ஆரம்பித்துக் கொடுத்தார். தமிழ்வாணனையொட்டி ரா.கி.ரவும் குமுதத்தில் சேர்ந்துட்டாங்க. அவர்கள் இருவரும் வெளியே வேலைக்குச் சேர்ந்தார்கள் என்றாலும் அப்பாவைத் தினமும் வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கேயிருந்தாலும் நீங்கள் நல்லபடியாக இருக்கவேண்டும் என்று அப்பா சொன்னார்கள்.

தமிழ்வாணன் புத்தகக் கடை ஆரம்பித்தபோதுகூட அப்பாவிடம் தான் வந்து அறிவுரைகள் கேட்டுப் போனார். அப்பா செத்தபோதுகூட முதல்ல நின்னு தூக்குன ஆள் தமிழ்வாணன்தான். தமிழ்வாணனும் – நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ண மூர்த்தியும் அப்பாவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களாயிருந்தார்கள். இன்னைக்கி வரையிலும் எனக்கு ராதாகிருஷ்ணமூர்த்தியும் தமிழ்வாணனின் மகன் லேனா தமிழ்வாணனும் உதவுகிறார்கள். என் குழந்தைக்கு பள்ளிக்கூட பீஸ் கட்டுவதற்கும் சாப்பாட்டுக்கும் பணம் அனுப்பிக்கொண்டிருக்கிறார் லேனா. எப்ப எது வேண்டுமென்றாலும் போன் செய்தால் போதும், வந்து செஞ்சி கொடுத்துடுவாரு. உங்களுக்கு எதாவது நல்லபடியாக செய்து தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

அப்பாவுக்கு கடன் ஜாஸ்தியாகிவிட்டது.  தொடர்ந்து அடுத்தடுத்து நஷ்டங்கள். மியூசிக் அகாடெமி வீடு அப்படியே முழுகிப் போய்விட்டது.  அதை விட்டு வந்து மவுண்ட் ரோட்டுல ஆயிரம் விளக்குல – மவுண்ட் ரோட்டுல வச்சாதான் புத்தகக் கடை நல்லாப் போகும்னு – அப்பா கடை ஆரம்பித்தார்கள். அப்போது ஒரே கடை ஹிக்கின் பாதம்ஸ் மட்டும்தான். அங்கே ஆங்கிலப் புத்தகங்கள் மட்டும்தான் விற்பார்கள். தமிழ்ல புத்தகக் கடை வேணும்னுதான் அப்பா ஆரம்பிச்சாங்க. பிறகு அதையும் அப்பாவால நடத்த முடியல. அப்பாவோட தம்பி ஒருத்தரு, அவரு ஒரு மாதிரி டைப்பா போயிட்டாரு. குடி – போதைன்னு T.B பேஷண்டாயிட்டாரு.   அவரக் கவனிக்கிறதுலேயே அப்பாவுக்கு நிறைய இழப்பும் சிரமமும் ஏற்பட்டுருச்சி. அப்பாவுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.   அப்பாவோட தம்பியினாலதான் குடும்பம் நொடிச்சிப் போச்சி.   மவுண்ட் ரோடு கடையையும் மூடுற நெலம வந்தது.

டி.எஸ். சொக்கலிங்கம் காமராஜரும் சிறிய வயதில் ஒன்றாயிருந்தவர்கள். டி.எஸ். சொக்கலிங்கம் காமராஜர் கிட்டே சொல்லி அப்பாவுக்கு காங்கிரஸ் கிரவுண்டுல ஒரு கடை எடுத்துக்கொடுத்தாங்க. அப்பா மேகஸின் ஆரம்பித்த போது 24 மணி நேரமும் அப்பா கூடவே இருந்தவரு சொக்கலிங்கம். சொக்கலிங்கம் அப்போது கல்யாணம் ஆகாதவரு. எந்த நேரமும் ஒன்றாகவே இருப்பார்கள் இருவரும்.  காமராஜர் சொக்கலிங்கத்தைப் பார்க்க அடிக்கடி சக்தி காரியாலயத்திற்கு வருவார்.  அப்பாவுடன் ரொம்ப நேரம் கேலியாக அரட்டையடித்துக்கொண்டிருப்பார். அப்பா கம்யூனிச ஆதரவாளராயிருந்ததனால் “ரெட்… ரெட்” என்று அப்பாவைக் கிண்டல் செய்வார் காமராசர். அப்பாவும் சில சமயங்களில் காமராசரைப் போய் பார்த்துப் பேசிவிட்டு வருவார்கள்.    அப்பாவுக்கு  அவர்தான்  காங்கிரஸ் கிரவுண்டில் இடம் கொடுத்தார். அதையும் நடத்த அப்பாவுக்கு முடியல.
எங்க அக்காவுக்கு கல்யாணம் செய்ய வேண்டியிருந்தது. செட்டியார் ஜாதில பெரிய அளவுக்கு சிறப்பாகச் செய்ய வேண்டிய நிகழ்ச்சி திருமணம். அப்பா ஊருக்குச்சென்று வீட்டிலிருந்ததை எல்லாம் விற்றுக் கல்யாணம் செய்தார்கள். அப்பா ஒரு மாதிரி அக்ரிகல்ச்சர் லைனுக்குப் போய்ட்டாங்க.   இந்தப் புத்தகத்துறை அவங்களுக்குப் புடிக்கல.   எப்போதும் புத்தகங்களுக்கு நடுவுல இருந்ததால – அந்த வாசனையும் தூசியும் ஒத்துக்காம T.B வந்துடுச்சி. இதனால் பெரிய கஷ்டம். அப்பாவுக்கு இந்தத் துறை புடிக்கல. இந்த எழுத்து புடிக்கல.   நல்ல புத்தகம் போட்டால் வாங்க ஆள் இல்ல. லைப்ரரி  ஆர்டரை  நம்பியே  எல்லாரும்  புத்தகம்  போட்டுக்கிட்டிருந்தாங்க. அப்பாவுக்கு லைப்ரரிக்கு புத்தகம் கொடுக்கிறது புடிக்காது. லைப்ரரிக்கு கொடுக்கறதுக்கு யார் யாரையோ கெஞ்சி பணம் கொடுத்து ஆர்டர் வாங்க வேண்டும். பக்கத்துக்கு இவ்ளோன்னு கொடுத்து வாங்கணும். எனக்கு அது தேவையில்லைன்னாங்க அப்பா. வெள்ளைத்தாள் கெடைச்சா கருப்பாக்கி காசாக்கிட்டுப் போறாங்க. அவங்கெல்லாம் மளிகைக் கடை வைக்கலாம்னு அப்பா கோவமாகச் சொல்லுவாங்க.  அப்பா ஒரு புத்தகம்கூட லைப்ரரிக்குக் கொடுக்கல. மியூசிக் அகாடமிலேர்ந்து மவுண்ட்ரோடு கடைக்கு வந்தப்புறம் மலிவுப்பதிப்புன்னு தொடர்ந்து புத்தகம் போட்டாங்க. அப்பதான் பாரதியார் கவிதைகள் முழுத்தொகுப்பாக சக்தி வெளியீடாக வந்தது.
A.V. மெய்யப்பச் செட்டியார் பாரதியார் கவிதைகளின் ரைட்ஸ் பூரா வாங்கியிருந்தாங்க.  அப்புறம் பணம் எதுவும் வாங்காம அரசாங்கத்துக்கிட்டே கொடுத்துட்டாங்க. கவர்ன்மென்ட்லேர்ந்து அந்தப் புத்தகத்த 6 ரூவா விலைக்கிப் பப்ளிஷ் பண்ணினாங்க.  அந்த சமயத்துல அப்பா காமராஜருடன் சண்டை போட்டாங்களாம். “ஒரு ரூபா விலைக்கி நீங்க இந்தப் புத்தகத்த அரசாங்கத்துலேர்ந்து விக்கணும்.6 ரூவா விலை இந்தப் புத்தகத்துக்கு நீங்க வச்சிருக்கீங்க.  இது எல்லா மக்களுக்கும் எப்படிக் கிடைக்கும்” என்றார்களாம். அன்று 6 ரூபாய் பெரிய தொகை. அப்ப காமராஜர் சொன்னாராம் “உன்னால் முடிந்தால் நீ ஒரு ரூபாய்க்கிப் போடு”ன்னு. அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டுதான் பாரதியார் கவிதைகள் தொகுப்பை 1 ரூபாய்க்குப் போட்டார்கள் அப்பா. 500 பக்கங்கள். காமராஜரை தலைமை தாங்க வைத்து, ராஜா சர். முத்தையா செட்டியாரை புத்தகம் வெளியிட வைத்து, ராஜா அண்ணாமலை மன்றத்தில் விழா நடத்தினார்கள்.  பிரிண்ட் செய்த அத்தனை புத்தகங்களுமே அன்னைக்கே ராஜா அண்ணாமலை மன்றத்தில் வித்துருச்சி. ஒரே நாள். ஒரு ரூபாய் விலை வைத்தினாலே அதே மேடையில் அன்றே புத்தகங்கள் விற்றுவிட்டன.  மூன்றாவது நாள் புத்தகம் இல்லையாம். அப்போது காமராஜர் அப்பாவிடம் “இதுபோன்ற ஆட்கள்தான் எங்களுக்குத் தேவை. இதுபோன்ற விஷயங்களை நீங்கதான் செய்யணும்.   எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்க்காமல் செய்யணும்.” என்று பாராட்டினார். அதற்குப் பிறகு திருக்குறள் புத்தகம் போட்டார்கள், பரிமேலழகர் உரையுடன். இதுவும் 500 பக்கங்கள்.  அதே ஒரு ரூபாய் விலைக்கு.  அதற்குப் பிறகு பஞ்ச தந்திரக் கதைகள் போட்டார்கள். பெரிய புத்தகம்.  அதுவும் மலிவுப் பதிப்பு. ஒரு ரூபாய். அது முடிந்தபிறகு கம்பராமாயணம் போட்டார்கள். கம்பராமாயணம் போடும்போதுதான் இரண்டு இரண்டு தொகுதிகளாகப் போட்டார்கள். ரெண்டு ரூபா ரேட்டு வச்சிருந்தாங்க. இது 4 வால்யூம் வந்துச்சி. அதுக்கப்புறம் அப்பாவால பண்ண முடியல.

பாரதியார் கவிதைகள் போடுவதற்கு முன்பு ஹிக்கின்ஸ் பாதம்ஸுக்கு முன்கூட்டியே போய் ஆர்டர் கேட்டாங்க அப்பா. ஏன்னா லைப்ரரி அல்லது ஹிக்கின் பாதம்ஸை டிப்பன்ட் பண்ணித் தான் இருக்கணும். ஹிக்கின் பாதம்ஸுக்கு எல்லா ரெயில்வே ஸ்டேஷன்லேயும் கடையிருக்கும்.  அங்கே கேக்குற போது, அவங்க, பர்சண்டேஜ் ஜாஸ்தி கொடுத்தாத்தான் விப்போம்னாங்க.  அவங்க கேட்டது 40ரூ. அப்பா 15ரூக்கு மேல கொடுக்க மாட்டேன்னுட்டாங்க. ஒரு ரூபா விலை வச்சி நான் 40ரூ உங்களுக்குக் கொடுத்தன்னா எனக்கு கட்டுப்படியாகாதுன்னாங்க.   அதனால ஹிக்கின் பாதம்ஸ் ஆர்டர் கெடைக்கலை. புத்தகம் வெளிவந்து எல்லாம் விற்றுப்போனதும் வாசகர்கள் ஹிக்கின் பாதம்ஸ் கடைகளில் எல்லாம் பாரதியார் கவிதைகள் புத்தகத்தை கேட்டு அலைந்திருக்கிறார்கள். அப்போது ஹிக்கின் பாதம்ஸ்காரர்கள் “எங்களுக்கு கமிஷனே தராவிட்டாலும் பரவாயில்லை. உடனே புத்தகத்தை கொடுங்கள்.  நிறையப்பேர் கேட்கிறார்கள்.   எங்களுக்கு வியாபாரம் தடைபடுகிறது” என்று வேண்டிக் கேட்டுக்கொண்டதும் இரண்டாம் பதிப்பை ஹிக்கின் பாதம்ஸுக்கு கொடுத்தார்கள் அப்பா. முதன் முதலில் பாரதியார் கவிதைகளை முழுமையாக மிக மலிவான விலைக்குக் கொடுத்தது அப்பாதான். அப்பா கொடுத்தது போல இன்றைய வரையிலும் யாரும் பாரதியின் கவிதைகளை முழுமையாக நிறைவாகக் கொடுக்கவில்லை. அதில் பரலி சு. நெல்லையப்பர் முன்னுரை எழுதியிருக்கிறார். பரலி சு. நெல்லையப்பர், பாரதியார் பொண்ணு, ரா. பத்மநாபன் ஆகியோரெல்லாம் பாரதியார் கவிதைகளை வெளியிடுவதற்கு உதவினார்கள். அப்பா சொல்லித்தான் தினமணியிலிருந்து, ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள். தங்கம்மா பாரதி எழுதிய பாரதியார் சரித்திரத்தையும், வ.ரா. எழுதிய பாரதியார் சரித்திரத்தையும் அப்பா போட்டிருக்கிறார்கள்.

அப்பா இறந்த பிறகு பல வருஷங்கள் கழித்து பாரதியார் கவிதைகள் புத்தகத்தை மூர்மாக்கெட்டில் ஒரு கடையில் வைத்திருந்தார்கள். அதை நான் பார்த்தேன்.  அந்தப் புத்தகத்தை வாங்குவதற்கு மிகவும் ஆசைப்பட்டேன்.  விலை கேட்டபோது கடைக்காரன் அதற்கு 100 ரூபாய் விலை சொன்னான்.  புத்தகத்தில் விலை போட்டிருந்த இடம் கட் பண்ணியிருந்தது. அதைப் பத்து அல்லது பதினைந்து ரூபாய்க்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் நான் நீண்ட நேரம் விடாப்பிடியாக பேரம் பேசினேன் அவனிடம். அவன் சொன்னான், “இது சக்தி வெளியீடு. இதைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.  மற்ற பாரதியார் கவிதை புத்தகமாயிருந்தால் நீ கேட்ட விலைக்குத் தந்துவிடுவேன். இதில் 2 ரூபாயென்று (இரண்டாம் பதிப்பு) விலை போட்டிருந்தாலும் 75 ரூபாய்க்குக் குறைத்துத் தரமுடியாது” என்று உறுதியாகச் சொன்னவுடன் நான் 75 ரூபாய் கொடுத்துத்தான் அதை வாங்கிக்கொண்டு வந்தேன். அப்பா ஒவ்வொரு ஊராக அலைந்து திரிந்து தனித்தனியாக வந்த, பாரதி கவிதை உள்ள பேப்பர்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி அவ்ளவும் சேர்ந்து அதில வரணும்னு ரொம்ப சிரமப்பட்டு பண்ண புத்தகம் அது.

சக்தி வெளியீடாக நல்ல டிக்ஷனரி கொண்டுவர வேண்டுமென்று அப்பா விரும்பினார்கள்.  தயார் செய்து தருவதாக ஒத்துக்கொண்டு டிக்ஷனரி வேலையைத் தொடங்கினார் க. நா. சு. பாதி வேலை முடிந்த நிலையில் க.நா.சு.வுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவருக்கு ஏற்பட்ட அவசர பணத்தேவையின் பொருட்டு வேறொரு பதிப்பகம் வெளியிட்ட டிக்ஷனரியிலிருந்து பாதியைக் காப்பி செய்து சேர்த்து, வேலையை முடித்துக் கொடுத்துவிட்டார். அந்தப் பதிப்பகத்தார்கள் கேஸ் போட்டு விட்டார்கள். நஷ்ட ஈடாக அப்பா அந்தப் பதிப்பகத்திற்கு பெரும்பணம் கொடுக்கவேண்டியிருந்தது.

அக்காவுக்குக் கல்யாணம் நடந்த பிறகு அப்பா ராயவரத்தில் கொஞ்ச நாள் இருந்தார்கள். தென் மொழிகள் புத்தக நிறுவனம் என்று ஒரு அமைப்பு இருந்தது. அதிலிருந்து பிரிந்து புத்தக வியாபாரிகள் சங்கம் உருவானது. சவுத் இந்தியா முழுவதிலும் உள்ள புத்தக வியாபாரிகள் சங்கம் அது. அப்போ அதிலே சேர்மன் எலெக்ஷன் நடந்தது. அப்பா தேர்தலில் கலந்துகொண்டவுடன் வேறு யாரும் போட்டியிடாமல் அப்பாவை நேரடியாக சேர்மனாக்கிவிட்டார்கள். அதில் சேர்மனாக அப்பா ரொம்பநாள், சாகிறவரை இருந்தார்.  அதன் மூலமாக வந்த பத்திரிகைதான் கூரியர். அந்த அமைப்பில் இருக்கும்போது கூரியரை தமிழில் கொண்டுவரவேண்டும் என்று – பக்தவச்சலம் பீரியட்ல – ரொம்ப முயற்சி பண்ணுனாங்க அப்பா. புத்தக வியாபாரிகள் சங்கம் அதனுடைய செலவுகளுக்குப் பணம் இல்லாமல் மூழ்குகிற நிலைக்கு வந்தவுடன் தென் மொழிகள் புத்தக நிறுவனத்துடன் சேர்ந்து விட்டது. ஆனால் அப்பா அதில் போய் வேலை பார்க்க இயலவில்லை. தனியாக இருந்து விட்டார்கள்.  அப்பா இறந்த பிறகு தென்மொழிகள் புத்தக நிறுவனம் மணவை முஸ்தபாவை வைத்து கூரியரை நடத்திக்கொண்டு வந்தது.

அப்புறம்   அப்பா   ரொம்ப   கஷ்டப்பட்டுட்டு   ஊருக்குவந்துட்டாங்க. வந்துட்டு, “திரும்ப புத்தக வியாபாரத்தைப் பார்க்கணும் – லைப்ரரி ஆர்டரைத்தான் டிப்பன்ட் பண்ணி இருக்கணும் – எனக்கு வேற தொழில் தெரியல – ரெண்டு மூணு புத்தகம் போட்டு லைப்ரரிக்கு சப்ளை பண்ணலாம்”னு வேற வழியில்லாம வந்தபோதும் அவங்களால அதுபோல செய்ய முடியல. மனசு ஒப்பல அவங்களுக்கு.  ஒடம்பும் ரொம்ப சரியில்லாமப் போச்சி.  கடைசியா ராயப்பேட்டை பக்கம் சத்திய சாய் லாட்ஜ்ன்னு கவுடியாமடத்துக்குப் பக்கத்துல ஒரு லாட்ஜ் இருக்கு; அந்த பில்டிங்குலதான் – யார் உதவியும் இல்லாம ஒரு ரூம் வாடகைக்கு எடுத்துட்டு தங்கியிருந்தாங்க. மியூசிக் அகாடெமி இருக்கிற அதே ரோடுலதான் தங்கியிருந்தாங்க.  ரா.கி.ர கூட இதைப் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். சின்ன ரூம் எடுத்துத் தங்கியிருந்து புத்தக வேலையெல்லாம் பார்த்து ஏதாவது சம்பாதிக்கலாம்னு – அப்பாவே எழுத ஆரம்பிக்கணும்னு விரும்புனாங்க. இனி எழுதிதான் சம்பாதிக்கணுங்கிற நிலைமை வந்தபோது ஆள் உயிரோட இல்லை. எந்தக் கஷ்டமும் அவங்களை பெரிய அளவிலே பாதிச்சது கிடையாது. எப்போதும் படிச்சுக்கிட்டேயிருப்பாங்க.   அவங்க எழுத முயற்சி செய்தபோது அவங்களுக்கு சாப்பாட்டுக்கே ரொம்ப சிரமமாயிருந்தது. அப்போது நாங்கள் எல்லாம் ஊரில் இருந்தோம். குடும்பத்தை சென்னையில் வைக்க முடியவில்லை.   அவங்க தனியாகத்தான் இருந்து மிகவும் துன்பப்பட்டாங்க. செத்தபோதுகூட அவங்க பையில் ஏழு ரூபாயோ எட்டு ரூபாயோ சில்லரைதான் இருந்தது. வேறு எதுவும் இல்லை.  அந்த ரூமுல இருக்கிறபோது ஒடம்புக்கு முடியாம படுத்துட்டாங்க.   கீழ இறங்கிவரும்போது படி வழுக்கிவிட்டு விழுந்துட்டாங்க. அப்புறம், எங்க அக்கா கூடப்போயி இருந்திருக்கு. எனக்கு எழுதியிருந்தாங்க, அடிக்கடி ஒடம்புக்கு முடியலைன்னு. சில சமயம் நல்லா இருக்கேன்னு லெட்டர் வரும். நான் ஊரிலிருந்து இங்கு வந்து அப்பாவைப் பார்ப்பதற்குக்கூட வசதியில்லாமலிருந்தேன். அதனால் ஊரிலேயே இருந்துட்டேன். அப்புறம் ஒரு நாள் பார்த்தால் திடீரென்று டெலிகிராம் வந்தது. அப்பா இறந்துட்டாங்கன்னு.
லாட்ஜில் இருக்கும்போது உடல்நிலை மிகவும் மோசமாகிப் போனதும் பப்ளிஷர் எல்லாருக்கும் போன் பண்ணியிருக்காங்க. எல்லாரும் வந்து ஜி.எச்.க்கு கூட்டிட்டு போயிருக்காங்க.  ராமமூர்த்தி வந்து பார்த்துருக்காரு (நியூரோ ஸ்பெஷலிஸ்ட்). அப்பா ஏற்கெனவே டி.பி. பேஷண்ட்.  காலில் பிரச்சினையிருப்பதால் ராமமூர்த்தி வந்து பார்த்துட்டுத்தான் ஜி.எச்.க்கு கொண்டு போகச்சொல்லியிருக்கார். அதன்படி செஞ்சிருக்காங்க.  அன்னைக்கி ஞாயித்துக்கிழமை.  எந்த டாக்டருமே வரல்ல. கூட வந்தவங்க வெளியில நின்னு பேசிக்கிட்டிருந்திருக்காங்க. அக்கா அப்பா பக்கத்துலயே உட்கார்ந்திருக்கு. கொஞ்சம் நேரம் கழிச்சி அந்த வார்ட் பாய் – பால், பிரட்டெல்லாம் கொண்டு வர்றவன் – படுத்திருந்த அப்பாவுடைய கையைப் பிடிச்சித் தூக்கி தொப்புன்னு கீழே போட்டிருக்கான். டாக்டரும் இல்லை. கூட வந்தவங்களும் வெளியே நின்னு பேசிக்கிட்டிருக்காங்க.  அந்தப் பையன் சொல்கிறான், “என்னம்மா செத்த பொணத்து பக்கத்துல உட்கார்ந்திருக்கே”ன்னு. அதுக்கப்புறம்தான் அக்காவுக்கே தெரியுது அப்பா செத்துப்போயிட்டாங்கன்னு. அந்த நேரத்துல அப்பாவை ஒரு நல்ல மருத்துவமனையில் சேர்த்து ட்ரீட்மெண்ட் கொடுக்கக்கூட ஆளில்லாமல் போய்விட்டது.   அப்பா ஜி.எச்லே ஆதரவில்லாம செத்துட்டாங்க.

சாகறதுக்கு நாலைந்து நாட்கள் முன்னாடி ராதா கிருஷ்ணமூர்த்திக்குப் போன் பண்ணியிருந்தாங்களாம்.   மருந்தெல்லாம் வாங்கணும் பணம் இல்லேனிட்டு.   அவர் முன்னூறோ நானூறோ அன்னைக்கே கொண்டு வந்து கொடுத்துட்டு “நீ வைத்தியம் பாத்துக்க வை.கோ. உனக்கு சௌகரியமாகிவிடும். நீ இந்த மாதிரி ரூமில் எல்லாம் இருந்து பிரயோஜனம் இல்லை.  நீ ஊருக்குப் போய் அங்கேயே இரு. நான் உனக்கு வேன் அனுப்புகிறேன்.  உன் பொருட்களை்யெல்லாம் வேனில் ஏற்றிவிட்டு உன்னை ரயிலேற்றிவிடுகிறேன்.   நீ ஊருக்குப் போயிரு.  அங்கேயிருந்து எங்களுடைய நியூ செஞ்சுரி வேலைகளை தமிழ்ல நீ கொஞ்சம் பாத்துக்கொடு. ஏன்னா எங்களுக்கு ரஷ்யன் புத்தகங்கள் வரவர ஸ்டாப்பாயிட்டிருக்கு.   ரஷ்யாவையே நம்பியிருக்காமல் நாங்க தமிழ்ல புத்தகம் போடணும்னு இருக்கோம். அதுக்கு நீ ஹெல்ப் பண்ணு.  கம்பெனியிலேர்ந்து உனக்கு எல்லாம் பண்ணித் தர்றோம்” என்றிருக்கிறார். அப்பா இறந்துட்டாங்க.

சடலத்தை லாட்ஜில் வைத்து எடுக்கமுடியாது. செட்டியார்ஸுக்கெல்லாம் திருவெற்றியூர்ல – ஒரு மடம் மாதிரியிருக்கும். இறுதிச் சடங்குகளெல்லாம் செய்வதற்கு அங்கே கொண்டு போகணும். அங்கே கொண்டு போகும்போது பப்ளிஷர்ஸ் எல்லாம் கார்ல போயிட்டாங்க. எல்லாரும் வசதியாக உள்ளவங்க. அப்பாகூட மார்ச்சு வரி வேன்ல வரதுக்கு யாரும் இல்ல.  யாரும் கூட இல்லையேன்னு அக்கா போயிருக்கு. பொம்பளைங்க வரக்கூடாதுன்னுட்டாங்க. அப்ப ராதாகிருஷ்ணமூர்த்தி “நான் இருக்கேன், வை.கோ. கூட வர்றேன்” என்று அப்பாவின் உடலுடன் வந்தார். அவரும் தமிழ் வாணனும்தான் இறக்கி எல்லாம் செய்தார்கள். மறுபடியும் ஏத்திக்கிட்டு மயானத்துக்குப் போறதுக்காக ஃபுனரல் வேன் வந்தது. அப்போது தமிழ்வாணன் சொன்னாராம் “வை.கோ.விடம் இருந்தவர்கள் இவ்வளவு பேர் இருக்கிறோம். இன்னொரு வேன்ல தனியா ஏத்தியனுப்புறது சரியில்ல. நாமதான் தோள் கொடுத்து தூக்கிக்கிட்டு போகணும்”னு.  ராதாகிருஷ்ணமூர்த்தியும், தமிழ்வாணனும்தான் தூக்க ஆயத்தமானது. பிறகு எல்லாரும் வந்து தூக்குனாங்க. எல்லாரும் வந்திருந்தாங்க. தினமணி கோயங்கா உட்பட.  A.V.மெய்யப்பச் செட்டியார், கண்ணதாசன் எல்லாரும் வந்திருந்தாங்க. யார் வந்தா யார் வரலேங்கறதே தெரியல.

அப்பா யாரிடமும் உதவி கேட்டுப் போனதில்லை. புத்தகத் துறையில் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஜாஸ்தி. எல்லாம் அப்பாவ வச்சி இந்தப் பீல்டுக்கு வந்தவுங்கதான். நல்ல புத்தகம் போடணும்னு அப்பா ரொம்ப ஆசைப்பட்டாங்க.  “ரோடு நல்லாயிருந்தா ரொம்ப தூரம் சீக்கிரமா போகலாம். மேடு பள்ளமாயிருந்தா கொஞ்சத்திலேயே களைப்பா இருக்கும்”னு அப்பா சொல்வாங்க. பேப்பர் நல்ல தரமாக இருக்கணும். பிரிண்டிங் அந்த மாதிரி இருக்கணும். பிரிண்டிங் சரியில்லைன்னா பத்து பக்கம் படிக்கறதுக்குள்ள கண்ணு டயர்டாயிடும். நாம நடக்குறது போலத்தான் கண்ணு.

தமிழ்ல முதன் முதல்ல தரமான பதிப்புகளில் புத்தகங்களை வெளியிட்டது சக்தி காரியாலயம்தான்.  அன்றைக்கு அச்சு வசதிகள் அவ்வளவு முன்னேற்றமில்லாத காலத்திலேயே, அப்பா தன்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணி அச்சமைப்பில் புதுமையும் நேர்த்தியும் செய்தார்கள். ஒன்றுமே இல்லாமல் அன்றைக்கு அந்த பழைய மெஷினை வைத்துக்கொண்டு சிறந்த முறையில் வேலை செய்தார்கள். அப்பா சுய அனுபவத்திலேயே எல்லாம் கற்றுக் கொண்டார்கள். மொத்தம் சுமாராக 120 அல்லது 130 புத்தகங்கள் இருக்கும் அப்பா போட்டது. எல்லாமே பெரிய ஆதர்கள் எழுதினதுதான். பாரதியார் பொண்ணு எழுதியது, தொ.மு.சி ரகுநாதன் எழுதியது, கு. அழகிரிசாமி எழுதியது எல்லாம் போட்டிருக்கிறார்கள். சத்தியமூர்த்தி பொண்ணு லட்சுமி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புத்தகமும்…

T.S.சொக்கலிங்கம் போரும் வாழ்வும் மொழிபெயர்த்துக் கொடுத்தார். சாமிநாத சர்மா புத்தகம் அப்பா போட்டுருக்காங்க. அவருடையது 4, 5 இருக்கும். 90 சதவீதம் மொழிபெயர்ப்புகளைத்தான் விரும்பி அப்பா புத்தகமாக்குனாங்க.  அப்பா எப்போதும் படிச்சிக்கிட்டிருப்பாங்க.  படிக்கும்போது எது நல்லாயிருப்பதாக அவங்களுக்குத் தோன்றுதோ அதை யாரிடமாவது கொடுத்து மொழி பெயர்க்கச் சொல்லுவார்கள்.  அவற்றை மொழிபெயர்த்த டிரான்ஸ்லேட்டர்கள்தான் ரகுநாதன், விஜயபாஸ்கரன், ரா.கி. ரங்கராஜன் எல்லாம்.

சக்தி மேகஸினில் 4 பேர் எடிட்டராக இருந்திருக்கிறார்கள். தி.ஜ.ர., அழகிரிசாமி, ரகுநாதன், விஜயபாஸ்கரன். அப்பா மார்க் பண்ணிக் கொடுத்ததையெல்லாம் இவர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்தார்கள். சக்தியைப் போல் தமிழ் நேசன் என்று ஒரு பத்திரிகை மலேஷியாவில் ஆரம்பித்தார்கள். அப்போது அழகிரிசாமி அங்கே மாறிப்போனார். டால்ஸ்டாயை மொழிபெயர்த்து 6,7 புத்தகங்கள் அப்பா போட்டுருக்காங்க.  டால்ஸ்டாய் எழுதிய ‘இனி நாம் செய்யவேண்டியது யாது?’ என்ற புத்தகம்தான் அப்பா பதிப்பித்த முதல் புத்தகம். சு. ராமநாதன், சு.ழ. நாதன்னு ரெண்டு பேர் இருந்தாங்க. அண்ணன் தம்பி. சுதந்திரத்துக்கு முன்னால ஆர். ராமநாதன் எழுதி ‘லெனின் பிறந்தார்’ன்னு அப்பா புத்தகம் போட்டாங்க.  லெனின் மீது மிகவும் ஈடுபாடு உண்டு. லெனின்னு சொல்றப்போ வேற விஷயம் ஞாபகத்துக்கு வருது. வருஷா வருஷம் தீபாவளியின்போது நெருக்கமான நண்பர்களை வீட்டில் அழைத்து வைத்து பேசிக் கொண்டிருப்பார்கள் அப்பா. அன்றைக்கு அப்பாவின் கால்களில் மகன்கள் விழுந்து ஆசி வாங்கி புதுத்துணி வாங்கிக்கிறது வழக்கம். ஒரு தீபாவளியின் போது நான் அப்பா கால்ல விழுந்து வணங்கறதுக்கு மறுத்துட்டேன்.   அப்ப பக்கத்துலயிருந்த விஜயபாஸ்கரன் சொல்றாரு, “வை.கோ.வும் பண்டிகையின் போது அவங்க அப்பா கால்ல விழுந்துதானே புதுத்துணி வாங்கிருப்பாங்க… இது நல்ல மரபுதானே. உனக்கு ஏன் பிடிக்கலை”ன்னு. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரில.   “என்னோட அப்பா கம்யூனிஸ்ட் கிடையாது. அதனால அவர் கால்ல நான் விழவேண்டியிருந்தது. அப்ப பார்மாலிட்டீஸுக்கு முக்கியமான இடம் இருந்தது. இவனோட அப்பா ஒரு கம்யூனிஸ்ட் – இந்த பழக்கம் எல்லாம் தேவையில்லை”ன்னு அப்பா சொன்னாங்க…
ஆயிரம் புத்தகங்களுக்கு நல்ல வாசகர்கள் 100 பேர் இருந்தாக் கூடப் போதும். மீதம் 900 புத்தகங்கள் விரயமாகப் போனாலும் பரவாயில்லை… என்பார்கள். அப்பா போட்ட ரஷ்ய மொழிபெயர்ப்புகள் விற்கவில்லை. கம்யூனிஸக் கொள்கைப் புத்தகங்கள் போட்டதாலதான் அப்பாவால முன்னுக்கு வரமுடியாமல் போனது… போரும் வாழ்வும்… பெரிய வேலை. நான்கு பாகங்கள். மொத்தம் கிட்டத்தட்ட 2,500 பக்கங்களுக்கு மேல் வரும். ஸ்பெஷலாக ஆர்டர் கொடுத்து திக்கான சிவப்புக் கதர் துணி செய்து வாங்கி அதற்கு ரேப்பர் போட்டிருந்தார்கள். நல்ல அச்சு.
T.S. சொக்கலிங்கத்திற்கு மொழிபெயர்ப்புக்காக மட்டும் கொடுத்த பணம் ரஷ்யன் கவர்ன்மெண்ட் கொடுத்த பணத்தைவிட அதிகம். பேப்பர் வாங்குவதற்கே அப்பா மிகவும் சிரமப்பட்டார்கள். எப்படியோ 3 வால்யூம் முடிந்தது. ஆனால் வாங்க ஆளில்லை. 4 வது வால்யூம் முடிக்கலை. முடிக்கலைன்னா புத்தகம் பிரிண்ட் ஆகி வந்து விட்டது.  பைண்டிங் ஆகவில்லை. ரஷ்யாவிலேர்ந்து என்னாச்சினு கேக்குறபோது “நான் புத்தகம் போட்டுட்டேன். செலவு மிக அதிகமாக ஆகிவிட்டது.  போட்ட வால்யூம்களும் விக்கல.  என்னிடம் இதற்குமேல் செலவு செய்ய பணம் இல்லை”யென்று அப்படியே எல்லா புத்தகங்களையும் சூஊக்ஷழல் ஒப்படைத்துவிட்டார்கள். இங்கே தமிழில் பல பதிப்பாளர்களுக்கு அந்தக் காலத்தில் ரஷ்யா பணம் கொடுத்தது புத்தகங்கள் போடுவதற்காக. சிலர் போடவில்லை, சிலர் அரைகுறையாகப் போட்டார்கள், சிலர் வேறு வகையில் அதை செலவு செய்தார்கள்.  பிறகு புத்தகங்கள் ரஷ்யாவிலிருந்தே பப்ளிஷ் ஆகி வர ஆரம்பித்துவிட்டது.  அந்த விஷயத்தை அவர்களே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
விஜய பாஸ்கரனும் அவர் நண்பர்களும் பாலிசி புக்ஸ் போடுவதற்கு அப்பாவை சார்ந்து இருக்காமல் தனியாகவே போடுவதற்காக – மியூசிக் அகாடெமி வீட்டில்தான் – அப்பாவுடன் கலந்து ஆலோசித்தார்கள். அதற்கெனத் திட்டமிட்டு ஆரம்பித்ததுதான் NCBH நிறுவனம். ஆரம்பத்தில் இது இந்தப் பெயரில் இல்லை. பின்னாட்களில்தான் NCBH என்று ஆகியது. B.E.பாலகிருஷ்ணன் சமீபத்தில் இறந்துவிட்டார். இவர் NCBH-ன் ஆரம்பக்கட்ட தூண்களில் ஒருவர்.   அப்பாவுடன் மிகவும் நெருக்கமாயிருந்தார்.  அவர் அப்பாகூடவே வந்து இருந்து அப்பாகிட்டே ஐடியா கேட்டு NCBH பப்ளிஷிங் வேலையெல்லாம் பாத்துக்கிட்டிருந்தாரு. ராதா கிருஷ்ணமூர்த்தி அப்போது அப்பாவுக்கு நல்ல நண்பராக இருந்தார். அவர் தமிழ் நன்றாகப் பேசுவார். ஆனால் தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது.
sakti 01அப்பாவின் பால்ய வயதில் எங்க ராயவரம் வீட்டில் வந்து தங்கியிருந்தார்.  உ.வே. சாமிநாதையர்.  அப்பாவோட அப்பாவுக்கும் உ.வே.சா அவர்களுக்கும் பழக்கம். தாத்தா தமிழ்மேல் ஆர்வமுடையவர். வீட்டில் பெரிய நூல் நிலையம் வைத்திருந்தார். (அப்பாவின் சொந்த அப்பா) உ.வே.சா அவர்கள் வீட்டில் வைத்து உபசரித்து ஒவ்வொரு இடங்களுக்கும் அழைத்துச் சென்று ஓலைச் சுவடிகளைத் தேடிக் கொடுத்திருக்கிறார்.  அந்தச் சமயத்துல அப்பாவும் உ.வே.சா. கூட சேர்ந்து அலைந்திருக்காங்க.  அதனாலதான் ஆரம்பத்துலயே அவங்களுக்கு புத்தகங்களின் மேல ஒரு பிடிப்பு ஏற்பட்டுடுச்சி.   எங்கள் ஊர்களில் பழைய காலத்தில் பெரிய பெரிய வீடுகளைக் கட்டியிருப்பார்கள். லெட்ரின் பாத்ரூம் இருக்காது. எங்கள் வீட்டில் தங்கியிருந்த உ.வே.சா. ரோட்டில் இறங்கி ஒரு ஓரத்தில் யூரின் பாஸ் பண்ணியிருக்காரு. அப்ப அந்த வழியா வந்த பொம்பளைக்கி இவர யாருன்னு தெரியாது. இவரும் அந்தப் பொம்பளைய கவனிக்கல. அந்தப் பொம்பள ஒரு கல் எடுத்து உ.வே.சா.மேல அடிச்சிருச்சாம். தலையிலேர்ந்து ரத்தம் கொட்டுதாம்.  என்ன ஏதுன்னு எல்லாரும் பதறிப்போயிருக்காங்க.
அந்தப் பொம்பளய தேடியிருக்காங்க.  காணோம்.  அப்ப உ.வே.சா. சொல்லியிருக்கார், இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி வச்சிருக்கிறீங்க ஒதுங்குறதுக்கு ஒரு இடமில்லையேன்று. அப்பாதான் உ.வே. சாவத் தாங்கிப் பிடித்து உள்ளே கொண்டு வந்து ரத்தத்தைத் துடைத்து சுத்தம் செய்து ஆசுவாசப்படுத்தியிருக்காங்க. அந்தக் காலத்திலேர்ந்து அப்பாவுக்கு புத்தகங்கள்ல ஆர்வம்.   பர்மாவுக்குப் போனவுடன் இங்கிலீஷில் படிக்க ஆரம்பிச்சிருக்காங்க.இந்தச் சமயத்தில்தான் இலக்கியத்தில் அதிகமாய் கவனம் செலுத்தியது. முக்கியமாக அப்பாவுக்கு டால்ஸ்டாயினுடைய ஒர்க்ஸ் எல்லாம் மிகவும் பிடித்து விட்டது.
இங்கிலீஷில் ஒரு நல்ல புத்தகம் வந்திருந்தால் அது பற்றிய விவரம் அப்பாவுக்குத் தெரிந்திருக்கும். எந்த ஆதரைப் பற்றியும் அப்பா அபிப்பிராயங்கள் சொல்லுவார்கள். எந்த நல்ல புத்தகத்தின் பெயரைச் சொன்னாலும் அதை எழுதியவரையும் அவர் எழுதிய வேறு புத்தகங் களையும் அப்பா சரியாகச் சொல்லுவார்கள். பெரும்பாலும் ஹிக்கின் பாதம்ஸில் நிறைய புத்தகங்கள் வாங்கி வைத்திருந்தார்கள் அப்பா. ஏதோ ஒரு புத்தகம் 400 செட்டுதான் வெளிவந்ததாம்.  பிரிட்டனில் பிரிண்ட் ஆனது. 400ல் இந்தியாவுக்கு வந்தது ரெண்டே செட்தான். ஒரு செட் அப்பாகிட்டே இருந்தது. இன்னொன்று நார்த் இந்தியாவில் யாரோ மார்வாடிகிட்ட இருந்தது.   இது போல ரொம்ப நல்ல கலெக்ஷன் இருந்தது அப்பாகிட்ட.
பிறகு அப்பாவுக்கு பணக் கஷ்டம்.   உறவினருக்குக் கொடுக்க வேண்டியது. 27,000 ரூபாய் கடன் இருந்தது. அந்தப் பணத்தை அப்பாவினால் அடைக்க முடியலை. பணம் கொடுத்தவரின் பையனுக்கு புத்தக டேஸ்ட் ஜாஸ்தி. ராய சொக்கலிங்கம்னு ஒருத்தர் இருந்தாரு. அவரு அந்தப் பையனை நன்றாகப் படிக்க வைத்து அந்தப் பையனுக்கு குரு மாதிரியிருந்தாரு. அவர் அப்பாவின் புத்தகங்களையெல்லாம் – அந்தப் பையனுக்குத் தேவைப்படுமென்று – அவனை விட்டே அப்பாவிடம் கேட்கச் சொன்னார். அப்பா “எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றார். அந்தப் பையன் “இதற்கு எவ்வளவு தர வேண்டும்” என்று கேட்ட போது “உங்கள் அப்பாவுக்குத் தரவேண்டிய பாக்கிக்கு ஒழுங்கு பண்ணிக்கச் சொல்.   இந்தப் புத்தகங்களையெல்லாம் மிகப் பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக வைத்துக்கொள். ஒரே ஒரு நிபந்தனைதான், எனக்குத் தோன்றும்போது உன் வீட்டில் வந்து தேவையான புத்தகத்தைப் படிப்பதற்கு எனக்கு இடம் கொடு. படித்துவிட்டு அங்கேயே வைத்துவிட்டு வருவேன்” என்று கேட்டுக் கொண்டார்கள். தேவையானபோது அப்பா அங்கே சென்று படிப்பதற்குக் கடைசி வரையிலும் அவர்கள் அனுமதித்தார்கள்.   இன்றுவரையிலும் அவர்கள் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
பிற்பாடு அந்தப் புத்தகங்கள் எல்லாம் M.S.குகனின் (A.V.M) பெண் வசம் போய்விட்டது. M.S.குகனைச் சந்திக்கும்போது தன் பெண்ணிடம் என்னைக் காட்டிச் சொன்னார்.” அந்தப் புத்தகங்களில் எல்லாம் வை.கோவிந்தன் என்று போட்டிருக்கிறதே அது யார் என்று கேட்டுக் கொண்டிருந்தாயே, அவர் இந்தப் பையனோட அப்பாதான்.”
அப்பாகிட்ட மிகச் சிறந்த கலெக்ஷன் இருந்தது. விஜயபாஸ்கரன் கூட எழுதியிருக்காரு. அப்பாவே லெட்சக் கணக்குல வெல குடுத்து வாங்கி சேர்த்து வச்சது. இடைவிடாமல் புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் அவருக்குப் பிடித்தமானவற்றை குறித்துக் கொடுத்து நண்பர்களை மொழிபெயர்ப்பில் ஈடுபடுத்தினார்கள். அன்றைக்கு நல்ல புத்தகங்களைப் படிப்பதற்கு ஆட்கள் இல்லை. நாம் அதைத் தொழிலாகச் செய்வது நன்றாயிருக்காது.   நீ இந்தத் தொழிலுக்கு வரவேண்டாம் என்றார்கள் என்னிடம். சாகிற வரையில் இரவு ஒரு மணி இரண்டு மணி வரையில் ஏதாவது படித்துக் கொண்டேயிருப்பார்கள். எதற்காகப் படிக்கிறீர்கள் என்றால் “எனக்கு இது பொழுதுபோக்கு” என்று சொல்வார்கள்.
அப்பா என்னை இலக்கியத்தில் ஈடுபடுத்தவில்லை.  இது உனக்கு வேண்டாம் என்றார்கள். ஒரு கட்டத்தில் படிப்பதை நிறுத்தி விட்டார்கள். புத்தகம், வாசிப்பு இவற்றின் மீதெல்லாம் வெறுப்பாகி விட்டது.  விவசாயத்தின் மீது நாட்டம் திரும்பியது. “செடி எப்படி முளைக்கிறது – எப்படி வளர்கிறது. அது எப்படிக் காய்க்கிறது என்பதையெல்லாம் பார்த்து ஆராய்ந்துகொள்” என்றார்கள் என்னிடம். இதைப்போல் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
அப்பா மிக உயர்ந்த தரமுடைய பேனாக்களை உபயோகப்படுத்தினார்கள். அந்தக் காலத்திலேயே மிகவும் விலையுயர்ந்த ‘மான்பிளாங்க்’ ‘வாட்டர் மென்’ பேனாக்களை பயன்படுத்தினார்கள். அப்பா இறந்த பிறகு எனக்கு சாப்பாட்டுக்குக் கஷ்டமாக இருந்த நேரத்தில் அப்பாவுடைய பேனாவொன்றை 2,000 ரூபாய்க்கு விற்றேன். அம்மா ஆச்சரியப்பட்டார்கள். அது பத்து இருபதுக்குத்தான் போகுமென்று நினைத்திருந்தார்கள். ஆனால் அந்த பழைய பேனாவுக்கு ஜாஸ்தியான ஆண்டிக் வேல்யூ இருந்திருக்கு. 2000 ரூபாய்க்கு மார்வாடி எடுத்துக்கிட்டான். எவ்வளவுன்னான். நான் ஒரு 200, 300 போவும்னு மூணு விரலைக் காட்டினேன்.  அவன் “அவ்வளவா…” என்று மறுத்தபிறகு நான் “பார்த்து போட்டுக்கொடு – ரெண்டரையாவது கொடு”ன்னேன். அவன் நான்கு 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தான். “இதுபோதும் வைத்துக்கொள். அடுத்த தடவை பார்க்கலாம்” என்றான். நானும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். பிறகுதான் சொன்னார்கள் அது ஆண்டிக் வேல்யூ உள்ளது; இன்னும் அதிக விலைக்குப் போகக்கூடியது; இது தெரியாமல் விற்றுவிட்டாய் என்றார்கள்.   இப்போது மான் பிளாங்க் பேனாவெல்லாம் 15,000 த்திற்கும் மேல் விற்கிறது. அது பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத்தான் தெரியும்.
எங்க ஜாதிக்காரர்களெல்லாம் சீட்டு விளையாடுவாங்க. அதை பிரெஸ்டீஜாக நினைத்து கிளப்புகளில் போய் விளையாடுவார்கள். அப்பாவுக்கு அது பிடிக்காது. அவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. செஸ்தான்.
கம்யூனிஸ்ட் பார்ட்டியில் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் தேடப்படும்போது தலைமறைவாக இருந்தது மியூசிக் அகாடெமி வீட்டில்தான்.   விஜய பாஸ்கரனே ஒரு தடவை தலைமறைவாக இருந்தார் நம்ம வீட்ல. விஜயபாஸ்கரன் நான் குழந்தையா இருக்கும்போது என்னைத் தூக்கி வளர்த்துருக்காரு. இப்ப கூட சொல்வாரு அந்தப் பையன் நான் தூக்கி வளர்ந்தவன்னு. பாலதண்டாயுதம் தலைமறைவு வாழ்க்கையில் அப்பா கூடத்தான் வந்து தங்கியிருந்தாங்க.
பள்ளி – கல்லூரி பாடப் புத்தகங்கள் பாடத்திட்டங்கள் அவங்களுக்குப் பிடிக்கலை. வேண்டாம், இதெல்லாம் வேஸ்ட், நீ படிக்காதே என்று சொல்லி நான் படிக்கிறதைக் கெடுத்துட்டாங்க அப்பா.   டால்ஸ்டாய் புத்தகம்போல உள்ள லிட்டரேச்சர் புத்தகமெல்லாம் படிக்கவேண்டும் என்று எங்களுக்குச் சொல்வார்கள். “இந்த எஜுகேஷன் சிஸ்டம் வாழ்க்கைக்கு ஒத்துவராது; உனக்கு தொழில் என்று தேவைப்பட்டால் விவசாயம் செய். பதிப்புத் தொழில் புனிதமானது. அதை வெறும் வியாபாரமாக்க வேண்டாம்” என்றார்கள். அப்பா சொன்னதில் தவறில்லை. “நல்ல பணம் சம்பாதிச்சி இதுல வந்து செலவு பண்ணணும். புத்தகம் போட்டு சம்பாதிக்கணும்னு நோக்கம் இருக்கறவங்க இந்த தொழிலுக்கு வரவேண்டாம். அவர்கள் மளிகைக் கடை வைத்துப் பிழைக்கலாம்” என்பதுதான் அவர்களுடைய கருத்து. “எதிலும் சம்பாதிக்கலாம், ஆனால் புத்தகத் தொழிலில் சம்பாதிக்கலாம் என்று நினைக்காதே” என்று அறிவுறுத்தினார்கள்.
வெளிநாட்டுப் புத்தகங்கள் போல அமைப்பிலும் தரத்திலும் தமிழில் நல்ல புத்தகங்கள் கொண்டுவர வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அப்பா போட்ட புத்தகமெல்லாம் புளு – ஒயிட் -இப்படித் தான் இருக்கும். பெங்குயின் புக்ஸ்போல. ஒருசமயம் பெங்குயின் புக் எந்தப் புத்தகமாயிருந்தாலும் அட்டைப்படம் வராது. ஊதாவும் வெள்ளையும் சேர்ந்து ஒரு நிரந்தர டிஸைனில் வரும். அதே டைப்ல அப்பா நிறையப் புத்தகம் போட்டாங்க. அட்டைப்படமே இருக்காது. மேல ஒரு ஹெட்டிங் இருக்கும். உள்ளே என்ன மேட்டர் இருக்குன்னு நாலுவரி இருக்கும். ஆதர் பேர் இருக்கும்.  அவ்வளவுதான்.  “அந்தப் புத்தகங்களை தூரத்திலிருந்து பார்த்தாலே சக்தி புத்தகம் என்று தெரியவேண்டும். அந்த கலரைப் பார்த்துத்தான் கையில் எடுப்பார்கள்.” என்பார்கள். அப்பாவுக்கு சில நல்ல கஸ்டமர்ஸ் இருந்தார்கள்.
நான் பத்தாவது படிச்சிக்கிட்டிருக்கும்போது அப்பா எங்களை விட்டுட்டுப் போயிட்டாங்க. அந்த நேரம் அப்பாவுக்கே மிகவும் நெருக்கடி. அவங்க இறப்பதற்கு மூன்று வருடம் முன்னால மிதமிஞ்சிய துன்பம். முன்பு அப்பா எனக்கு ஸ்கூலுக்குப் போறதுக்காக சின்ன சைக்கிள் ஒண்ணு வாங்கிக்கொடுத்திருந்தாங்க. 150 ரூபாய்க்கு சென்னையில வாங்கி ஊருக்கு கொண்டு வந்திருந்தாங்க. கஷ்ட காலத்துல அப்பா டெய்லி செப்டோமைஸின் ஊசி போட வேண்டியிருந்தது.   ஒரு தடவை, ரெண்டு மூணு நாளா அப்பா ஊசி போட்டுக்கலை. இருமல் ஜாஸ்தியாயிருச்சி.  ராத்திரி பூரா இருமிக்கிட்டிருந்தாங்க.  “ஏம்ப்பா டாக்டர்கிட்ட போயி ஊசி போட்டுக்கிட்டு வரலையா” என்று கேட்டேன். “காசு இல்லைடா. பணம் வரும்னு பாக்குறேன். ரெண்டு மூணு பேருக்கு எழுதியிருக்கேன், யாரும் அனுப்பலை” அப்படீன்னாங்க.
அப்பாவுக்குத் தெரியாம அந்த சின்ன சைக்கிள – அப்ப அந்த சின்ன சைக்கிள் பழக்கத்தில் இல்லாத நேரம்.  சைக்கிள் என்றாலே பெரிய விஷயம்தான்.  அப்ப ஒரு வாடகை சைக்கிள் கடைக்காரன் வேடிக்கையா அடிக்கடி கேட்டுக்கிட்டிருப்பான்.   சைக்கிளைக் கொடுத்துடு நூறு ரூபாய். தர்றேன்னான். திடீரென்று அவனிடம் போய் சைக்கிளை எடுத்துக்கிறியான்னு கேட்டேன்.  அவன் சொன்னான், “நான் எடுத்துக்கறேன். இந்த ஊர் சின்ன ஊர். நான் சின்னப் பையனிடம் ஏமாற்றி வாங்கிட்டேன்னு பேசுவார்கள்” என்று. “வா. வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் அப்படீன்னேன்.”  வீட்டில போயி “சைக்கிள கேக்குறாங்க அப்பா.  நான் 100 ரூபாய் கேட்டேன்.  அவன் 95 ரூபாய் கையில் தர்றேன்னு சொல்லுறான். அவனுக்கு 5 ரூபாய் வேணுமாம்”னு சொன்னேன்.   “எதுக்குடா விக்குற…   இப்பத்தானே வாங்கினே” அப்படீன்னாங்க அப்பா. “நீ நல்லாருந்தா மறுபடியும் வாங்கித் தருவ. உனக்குத்தான் இப்ப வைத்தியம் பாக்குறதுக்கு காசு இல்லையே, காசை வாங்கிக்க.  போயி மருந்து வாங்கிட்டு வருவோம்”னு சொன்னேன். பணத்த வாங்குனதும் கண்ணு கலங்கிப் போச்சி அப்பாவுக்கு. அப்புறம் போய் மருந்து வாங்கிக்கிட்டு – ஊசி போட்டுக்கிட்டாங்க. “நான் நல்லா வந்துட்டன்னா உனக்கு வேற சைக்கிள் வாங்கித் தர்றே”ன்னாங்க. அதுக்கப்புறம் அப்பா இல்ல. போயிட்டாங்க. “இவன் என்னை மாதிரியே இருக்கான். ஆசையா இருந்ததுன்னு சின்ன சைக்கிள் கேட்டு வாங்கினான். எனக்கு ஒடம்புக்கு முடியலைன்னதும் இவனுக்கு மனசு தாங்கல. பாதி விலைக்கு வித்துட்டான்”னு கடைசி வரையிலயும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க.
அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஏதாவது, தாங்கமுடியாத பெரிய பிரச்சினைன்னா பூஜையறையில போயி உட்கார்ந்துடுவாங்க. யாருடைய பேச்சையோ கேட்டு அவர்களுக்குத் தெரியாத தொழில்ல இன்வெஸ்ட் பண்ணிட்டாங்க பாம்பேல. எலெக்ட்டிரிக் சாமான்கள் விக்கிற கடை, பங்குதாரரோட கூட்டுச் சேர்ந்து ஆரம்பிச்சாங்க. அந்த தொழில்ல எந்த அனுபவமும் கிடையாது.   அப்பா சென்னையில இருக்கவும் பார்ட்னர் பல வகையில ஏமாத்தியிருக்காரு. ஒரு தடவை யார்கிட்டயோ கடைபெயரில் 27,000 ரூபாய் வாங்கிட்டு தலைமறைவாயிட்டார். பாதிக்கப்பட்டவங்க கொடுத்த புகாரின் அடிப்படையில் கடையோட இன்னொரு பார்ட்னரான அப்பா பேர்ல அரஸ்ட் வாரண்ட் பிறப்பிச்சிட்டாங்க.   தகவல் தெரிந்ததும் அப்பாவால உடனடியா எதுவும் செய்ய முடியல. அது நொடித்துப் போன காலம். மனசு ரொம்ப சஞ்சலப்பட்டு பூஜையறையில் உட்கார்ந்திருக்கும் போது அப்பாவத் தேடிக்கிட்டு அங்கே வர்றார் “ஜான்” அப்படீன்னு ஒரு நண்பர். ஜான் அப்பாவுக்கு ரொம்ப நெருக்கமான நண்பர். மிகவும் கஷ்ட நிலையில் ஒரு சாதாரண கேமராவுடன் சென்னைக்கு வந்தவர். அப்பாவோட தொடர்பு ஏற்பட்ட பின்னாடி அவரோட நிலம அடியோட மாறிப்போச்சி. அப்பா ஜானை இயன்ற வகையில் எல்லாம் வெளியிட்ட புத்தகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டு அவரோட பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுனாங்க. அப்பாவின் பரவலான செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு பிளாக்மேக்கிங் தொழில் ஆரம்பித்து நல்ல நிலைக்கு உயர்ந்தார் அவர்.
ஜான் பூஜையறைக்குள் ஷுவுடன் வந்தது அப்பாவுக்குப் பிடிக்கல. “ஷுவைக் கழட்டிட்டு உள்ளே வா ஜான்”ன்னு சொன்னாங்க அப்பா.
“உன்னை வெளியே போலீஸ் தேடுது.   நீ இங்க சாமி கும்பிட்டுக்கிட்டிருக்கியா”ன்னு வருத்தத்தோட ஜான் சொல்லவும் “என்ன செய்யிறது. பெயர் கெட்டுப் போகும். கெட்டுப்போனால் போகட்டும். நான் தப்பு செய்யல. எது வந்தாலும் வரட்டும் பாத்துக்கலாம்”ன்னு அப்பா சொன்னாங்க. ஜான் அப்போதே அப்பாவை பேங்குக்கு அழைச்சிட்டுப்போய் தன் கணக்கிலிருந்த பணத்திலேர்ந்து 27,000 ரூபாயை அப்பா கணக்குக்கு மாத்திக் கொடுத்து வர இருந்த ஆபத்திலேர்ந்து காப்பாத்திட்டாரு.  அப்புறம் ரெண்டுபேரும் ஒரு நான்வெஜ் ஹோட்டலுக்குப் போயிருக்காங்க. அப்பா நான்வெஜ் சாப்பிடறதில்ல. அதனால அவங்களுக்கு டீயும் பன்னும் வாங்கிக்கொடுத்து பேசிக்கிட்டிருந்திருக்காரு ஜான். அப்ப, “உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.   இவ்ளோ பெரிய தொகையை எப்படி என்கிட்டேயிருந்து திரும்ப வாங்குவே”ன்னாங்களாம் அப்பா.  “உன்னால தரமுடியலைன்னாலும் ஒண்ணும் பிரச்சினையில்லை. இது உன்னால சம்பாதிச்ச காசு.   உனக்காக செலவு பண்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்”னு ஜான் சொல்லியிருக்காரு.  ஜான் கேக்குறார், “சாமி சாமின்னு கும்பிட்டுக்கிட்டிருந்தியே – இந்த சிக்கலில் சாமி வந்து உனக்கு என்ன செய்தது?”ன்னு. “சாமி எதுவும் செய்யத்தேவையில்லை. அதுதான் உன்னைய அனுப்பியிருக்கிறதே”ன்னு அப்பா சொன்னாங்களாம். “நான் வாங்குன இந்தப் பணத்துக்கு பத்திரமோ – அல்லது அதுபோல ஏதாவது அத்தாட்சியோ தருகிறேன் என்றதற்கு ஜான் அதை மறுத்து “அதை வைத்துக்கொண்டு பின்னாளில் உன் பிள்ளைகளும் என் பிள்ளைகளும் சண்டை போடுவதற்கா?”ன்னு கேட்டாராம்.
அப்பா இறந்த பிறகு ஜான் வர்றதுக்காக நான்கு மணிநேரம் காத்திருந்தாங்க.  எங்கெங்கெயோ ஜானைத் தேடுனாங்க. கடைசீல, போன்ல “நான் வை.கோ.வுடன்தான் பழகினேன், வை.கோ.வோட உடம்போட இல்ல. என்னால அந்த உடம்பப் பாக்க முடியாது எடுத்துடுங்க”ன்னு சொன்னார் ஜான்.
பிறகு பல வருஷங்கள் கழிச்சி நான் ஜானைப் பார்க்கப் போனேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியல. “நீ யாருன்”னு கேட்டாரு. “என் பெயர் அழகப்பன். வை.கோவிந்தனின் பையன்” அப்படீன்னேன். “என்ன விஷயம்”னு கேட்டதுக்கு “அம்மாவும் நானும் ரொம்ப கஷ்டப்படுறோம். எனக்கு ஏதும் வேலை கிடைக்கிறதுக்கு உதவி செஞ்சீங்கன்னா நல்லாயிருப்போம்”னு சொன்னேன். “நீ யாரு”ன்னு கேட்டாரு. “என் பெயர் அழகப்பன். எனக்கு ஒரு வேலை வாங்கித் தருவீங்களா… ரொம்பக் கஷ்டப்படுறோம்”னேன்.  ஜான் கொஞ்ச நேரம் பேசாம இருந்தார்.
அப்புறம் மறுபடியும் “நீ யாரு தம்பீ”ன்னு கேட்டாரு.   “நான் தான் சொன்னேனே, திரும்பத்திரும்ப கேக்குறீங்களே… நான் வை.கோவிந்தனோட மகன்”ன்னு பதில் சொன்னேன். “அதுதான் எனக்கு சந்தேகமா இருக்கு. வை. கோவிந்தனோட மகன் உதவி கேட்டு யாரையும் போய் பார்க்கக்கூடாதே”ன்னு சொன்னாரு. “பிறகு நான் என்னதான் செய்யணும்கிறீங்க”ன்னு கேட்டேன்.
“உதவி கேட்டு யார்கிட்டேயும் போய் நிக்காதே.  கோவிந்தன் பையன் அப்படி நிக்கக்கூடாது.  கோவிந்தன் பல பேர் வாழ்க்கைக்கு உதவி செஞ்சிருக்காரு.  அவர் மகன் இப்படி கேட்கக்கூடாது.  அது வை.கோ.வின் கௌரவத்திற்கு இழுக்கு”ன்னு சொன்னாரு ஜான். “நான் என்ன செய்யிறது.   சரியான படிப்பில்ல. வறுமையை சமாளிக்க முடியல”ன்னு சொன்னேன்.  “ஏதாவது செய்… இதோ இந்த ரோட்டு ஓரத்திலேயே பழைய பேப்பர் கடை போட்டாலும் நல்லதுதான். நீயாக ஏதாவது செய். அப்ப நான் உனக்கு உதவி செய்யறேன்”னாரு. அப்ப அவரு சொன்னபடி செஞ்சிருந்தாலும் இப்ப நல்லாயிருந்திருப்பேனோ என்னவோ தெரீல.

Tuesday, 28 February 2017

புதுமைப்பித்தனின் துரோகம் - ஆதவன்



புதுமைப்பித்தனின் துரோகம் - ஆதவன்


http://azhiyasudargal.blogspot.in/2011/02/blog-post_13.html
வலையேற்றியது: RAMPRASATH HARIHARAN | நேரம்: 9:22 AM | வகை: ஆதவன், கதைகள்


விமலாதித்த மாமல்லன்
4 hrs ·



புதுமைப்பித்தனின் துரோகம் - ஆதவன் http://azhiyasudargal.blogspot.in/2011/02/blog-post_13.html


‘ஜூஸ்?’ என்றான் ராம், மெனுகார்டிலிருந்து தலையைத் தூக்கியவாறு.

’வேண்டாம்’ என்றான் வேணு

‘என்னப்பா. எல்லாத்துக்கும் வேண்டாம், வேண்டாம்கிறே!’ என்று ராம் செல்லமாகக் கடிந்து கொண்டான். ‘இரண்டு கிரேப் ஜூஸ்’ என்று வேணுவின் சம்மதத்துக்குக் காத்திராமல் அவனாகவே ஆர்டர் செய்தான்.

‘இரண்டு பிளேட் இட்டிலி, ஒரு ஊத்தப்பம், ஒரு பூரி, இரண்டு கிரேப் ஜூஸ்’ என்று வெயிட்டர் அதுவரை சொல்லப்பட்டவற்றையெல்லாம் ஒரு முறை திருப்பிச் சொன்னான்.

‘கரெக்ட். ஜூஸ் முதலில்.’

’பிற்பாடு’ என்றான் வேணு.

ராம் தான் மட்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். தீர்க்கமாக இரண்டு இழுப்பு இழுத்துப் புகையை ஊதினான். ‘யார் வேண்டுமானாலும் ஸ்மோக் பண்ணலாம். ஆனால் எல்லோரும் கதையெழுத முடியாது; இல்லை?’ என்றான்.

வேணு; வெறுமனே புன்னகை.

‘இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?’

’ஒரு குறு நாவல்’

‘அபௌட் வாட்?’

‘ஒரு எழுத்தாளனுக்கும் அவனுடைய மச்சினிக்குமிடையே இருக்கிற அஃபேர் பத்தி...’

‘ஹோப் இட் இஸ் நாட் ஆட்டோபயாகிராஃபிகல்.’

‘எனக்கு மச்சினியே கிடையாது.’

‘ஓ! a wish fulfilment story, then.'

’தேவலையே! நீயும் இலக்கிய பரிபாஷையெல்லாம் நிறைய பிக் அப் பண்ணிண்டு வரயே!’

ராம் கடகடவென்று சிரித்தான். ‘யா, யு நோ... தில்லியிலே நான் மூவ் பண்ற சர்க்கிள் அப்படி; லிட்டரேச்சர்லே இண்டரஸ்ட் உள்ளவங்க - அதுவும் மாடர்ன் டமில் ரைட்டிங்க்ஸை குளோஸா ஃபாலோ பண்ற கேரக்டர்ஸ் - அங்கே நிறைய இருக்காங்க... ஒவ்வொருத்தவனும் கதைகளையும் ஆத்தர்ஸையும் எப்படிப் புட்டுப் புட்டு வைக்கிறான்கறே! Those guys are fantastic, I tell you! உன் பெயரைக் கூட அவர்கள் மென்ஷன் பண்ணிக் கேட்கிறேன் அடிக்கடி.’

‘அப்படியா?’

‘ஆமாங்கிறேன். நான் உன் கிளாஸ்மேட், குளோஸ் ஃபிரண்ட்னு சொன்னேனோ இல்லையா, என் மதிப்பு அப்படியே உசந்து போச்சு. ஐ பிகேம் எ கிரேட் ஹீரோ. உன் அப்பியரன்ஸ் பத்தி,ம் ஃபேமிலி பத்தி, வொர்க்கிங் ஹாபிட்ஸ் பத்தியெல்லாம் தூண்டித் துருவி என்னென்னெல்லாம் கேள்விகள்! அதுவும்... (கண் சிமிட்டல்) லேடீசுக்கு உன் கதைகள் ரொம்பப் பிடிச்சிருக்கப்பா. மிஸ் ஷோபான்னு ஜே. என். யு.விலே அமெரிக்கன் ஹிஸ்டரி படிக்கிற பெண் ஒருத்தி... அவ அப்படியே உன் கதைகளிலிருந்து வரிக்கு வரி கோட் பண்ணினா, ஏன் அவர் இப்பல்லாம் நிறைய எழுதறதில்லே? அவரை நிறைய எழுதச் சொல்லுங்க சார், அப்படின்னா. உன் எழுத்துன்னா அவளுக்குப் பைத்தியமாம்.’

வேணு சிரித்தான்.

‘என்னடா, பிளஃப் அடிக்கிறேன்னு நினைக்கிறியா?’

‘சேச்சே! சந்தோஷத்தினாலே சிரிச்சேன்.’

’நிஜமாகவே நீ சந்தோஷமாக இருக்கலாம். நிறையப் பேர் ஆங்காங்கே உன் கதைகளை ஃபாலோ பண்ணிக் கொண்டுதானிருக்கிறார்கள். ரசித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். சற்று முந்தி உன் ஆபிசிலிருந்து நாம் கிளம்புகிற சமயத்தில் நீ அதைரியப்பட்டியே, எழுதி என்ன பயன், எதற்காக எழுதிண்டே போகணும், என்றெல்லாம் அலுத்துண்டியே, அதெல்லாம் அவாவசியம் வேணு! உனக்கு தெரியலை.. வீணே மனசைத் தளரவிடாதே!’

வேணு உலர்ந்த புன்னகை செய்தான். ‘நீ அந்த ஜே.என்.யு. கேர்ளுடைய போட்டோவையாவது கொண்டு வந்திருக்கக் கூடாதா... அதைப் பார்த்து எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் வந்திருக்கும்..’

ராம் சிரித்தான். ‘ஐ நோ... நான் சொல்வதை நீ நம்பவில்லை, அல்லவா! அந்தப் பெண் என் கற்பனை என்று நினைக்கிறாய்’ சிகரெட்டை ஆஷ் டிரேயில் நசுக்கி அணைத்து, மடக்மடக்கென்று தண்ணீர் டம்ளரைக் காலி செய்தான்.

வெயிட்டர் ஜூஸ் தம்ளர்களுடன் வந்தான். அவன் தம்ளர்களை வைத்துவிட்டுச் செல்லும் வரை ராம் பேசாமலிருந்தான். பிறகு சொன்னான்: ‘புதுமைப்பித்தன் எழுதிய கடிதம் என்ற சிறுகதையைப் படித்திருக்கிறாயா?’

வேணுவின் முகத்தில் ஆச்சரியம். (இவன் புதுமைப்பித்தன் வேறு படிக்கத் தொடங்கிவிட்டானா?) ‘ஞாபகமில்லை’ என்றான். “என்ன கதை, சொல்லு? சொன்னால் நினைவு வந்துடும்.... படித்து நாளாச்சே! அந்தக் காலத்திலே ஒரு வரி விடாமல் படிச்சிருக்கேன்...”

‘உன்னை மாதிரிதான் அதிலே ஓர் எழுத்தாளன். என் கதைகளை யார் புரிந்து கொள்கிறார்கள். எழுதி என்னதான் பயன், என்றெல்லாம் தன் நண்பனிடம் அலுத்துக் கொள்கிறான். சில நாள் கழித்து ஏதோ முன்பின் தெரியாத ஒருவன் மன மகிழ்ந்து எழுதிய ஒரு பாராட்டுக் கடிதம் எழுத்தாளனுக்கு வருகிறது... எழுத்தாளனுக்கு ஒரே பூரிப்பாகவும் நிறைவாகவும் இருக்கிறது... ஆனால் கையெழுத்தைக் கூர்ந்து பார்த்தால் தெரிந்த கையெழுத்தாக இருக்கிறது. சே! தன் சோர்வை அகற்ற நண்பன்தான் இப்படி வேறு பெயரில் எழுதியிருக்கிறான் என்று தெரிந்து கோபமும் மறுபடி ஆயாசமும் ஏற்படுகிறது.’

‘தெரியும், தெரியும், ஞாபகம் வந்து விட்டது... கடைசியில் எழுத்தாளன், இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தன் கதைகளைப் புரிந்துகொள்கிற ஒருத்தன் வருவான்; அப்போது தானில்லாவிட்டாலென்ன, தன் கதைகளிருந்தால் போதும், என்று தன்னைத் தேற்றிக் கொள்கிறான்... இல்லையா?’

‘ஆமாம்’

‘சுவையான சிச்சுவேஷன்....’ என்று வேணு அக்கதையை நினைவு கூறுவது போலச் சிறிது நேரம் பேசாமலிருந்தான். ‘புதுமைப்பித்தன் பெரிய ஆள்...’ என்றான்.

‘ஹீ இஸ் எ ஜீனியஸ்.’

இட்டிலி வந்துவிட்டது. வேணுவின் பசிக்கு வேண்டியிருந்தது இட்டிலிதான். புதுமைப்பித்தன் அல்ல. ஆனால் வெறுமனே பரக்கப் பரக்க இட்டிலியைத் தின்ன முற்படுவது தன்னை ஒரு பிச்சைக்காரனாகக் காட்டும், என வேணு நினைத்தான். ராம் தன்னிடம் எதிர்பார்ப்பது இலக்கியக் கருத்துகள் அல்லது குறைந்த பட்சம் இலக்கிய வம்பு, நான் ஆர்ட்டிஸ்ட், அவன் ஸ்பான்சர், impresario, என் ஏஜெண்ட், என் புகழின் ரட்சகன், என் விசிறிகளின் பக்தியைக் குடம் குடமாக, குடலை குடலையாக, என் காலடியில் சமர்பிக்கும் பூசாரி; இந்த இட்டிலி, ஊத்தப்பம், ஜூஸ் எல்லாம் அவன் அடிக்கும் உடுக்கு. டகடும், டகடும், டகடும்! நான் இப்போது ஆடவேண்டும். அவனுக்குப் பிரத்தியட்சம் ஆக வேண்டும்.

அல்லது இது ஒரு சவாலாகவும் இருக்கலாம். எனக்கு மட்டுமே சொந்தமென்று நான் நினைப்பதாக அவன் நினைக்கிற இலக்கிய உலகம் தனக்கும்தான் சொந்தமென்று முழங்கி என் பிரத்தியேகத் தன்மையைச் சீண்டுதல், என் காலை வாருதல், என் அகந்தையை ஆழம் பார்த்தல்...

வேணு இட்டிலித் துண்டைச் சட்டினியுடன் சேர்த்துத் தின்றான். பேஷ்! பிரமாதமாயிருந்தது. இன்னொரு துண்டைச் சாம்பாருடன் சேர்த்து. அதுவும் ஃபஸ்ட் கிளாஸ். திருநெல்வேலி, தென்காசி முதலிய பிரதேசங்களிலெல்லாம் இட்டிலி இன்னமும் கூட நன்றாயிருக்கும். புதுமைப்பித்தன் ஏன் இதைப்பற்றி எந்தக் கதையிலும் எழுதவில்லை? ஆசாமிக்கு ஸ்வீட்தான் பிடிக்கும் போலிருக்கிறது. ‘அல்வா எனச் சொல்லி அங்கோடி விட்டாலும்....’

’வெறும் சூத்திரங்களை வைத்துக்கொண்டு வாழ்க்கையை வென்று விட முடியாது... ஓர் எழுத்தாளனாலும் கூட’ என்றான் வேணு.

‘புரியவில்லை’

‘நீ அந்தக் கதையைக் குறிப்பிட்டாயே, அதற்காகச் சொன்னேன். ‘எதிர்காலத்தில் வரப்போகும் ரசிகன்’ என்ற நம்பிக்கை மட்டுமே ஓர் எழுத்தாளனுக்கு போஷாக்குத் தரமுடியுமா? இஸ் இட் பிராக்டிகல்? புதுமைப்பித்தன் தேவையேற்பட்டபோது சினிமாவுக்காக எழுதித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி வந்தது, என்பதுதானே உண்மை? எழுத்தாளன் என்பது ஓர் உருவகம் மாத்திரம் அல்ல, வயிறும் வாயும் உள்ள ஒரு பிண்டமும் கூட. இந்தப் பிண்டம் ரசிகனுக்கு எதற்காக, அவனுக்குக் கதைதானே வேண்டும், என்கிற நயமான விரக்தியே அக்கதையில் வெளிப்படுகிறது. ‘சிற்பியின் நரகம்’ பிரச்னையின் ஒரு பக்கம் என்றால் இங்கே பார்ப்பது பிரசினையின் மறுபக்கத்தை. பாராட்டு கிடைத்தாலும் மனம் மகிழ்வதில்லை. அந்தப் பாராட்டின் பரிசுத்தத்தைப் பரிசீலிக்க முயல்கிறது. தோழமையைத் தேடுகிறது, அதே சமயத்தில் தோழமையைக் கண்டு மருளவும் செய்கிறது.’

‘ஃபன்டாஸ்டிக்!’ என்றான் ராம் - அவன் முகம் ஆர்வத்தில் ஜொலித்தது. என் ‘ஆட்டம்’ இவனுக்குப் போதையேற்றத் தொடங்கி விட்டது என்று வேணு நினைத்தான். தொடர்ந்து பேசினான். ‘புகழும் பணமும் இருந்தும் ஹெமிங்வே தற்கொலை செய்து கொண்டானே! அதைப் பற்றியும் நினைத்துப் பார். அவனுகென்ன, ரசிகர்களுக்குப் பஞ்சமா!’

‘அதைப் பற்றி நான் யோசித்ததுண்டு’ என்று ராம் மறுபடி வேணுவை ஆச்சரியப்படுத்தினான். ஹெமிங்வே ஓர் அமெரிக்கர், here, how என்ற சித்தாந்தத்தை தொழுதவர். தன் ‘நம்பர் ஒன் எழுத்தாளர்’ என்ற பிம்பத்தைத் தொழுதவர். தன் நம்பர் ஒன் ஸ்தானம் சாஸ்வதமல்ல, யாரும் எக்கணமும் அதைப் பறித்து விடக்கூடும், என்ற இன்செக்யூரிட்டியை அவரால் தாள முடியவில்லை. அதுவே அவரைத் தற்கொலைக்கு விரட்டியது. புதுமைப்பித்தன் விஷயம் வேறே. அவர் ஒரு துறவி, அதாவது தோல்வி சார்ந்த துறவு அல்ல, ஞானத்துறவு. He was a mystic.'

'ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’, ‘கிலிமஞ்சாரோ பனிச்சிகரங்கள்’ ஆகிய படைப்புகளில் mystic சாயைகள் இல்லையா, என்ன?’

‘தனிமை பற்றிய ஒரு தவிப்பு, ஒரு மருட்சி... ஆனால் ‘தான்’ சரணாகதியடைவதில்லையே! Surrender of the ego... you know what I mean?'

’புதுமைப்பித்தன் mystic தான். அதைப் பற்றிச் சந்தேகமில்லை’ வேணு இப்போது தானும் புதுமைப்பித்தனைப் படித்திருப்பதாகச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கும் நிர்ப்பந்தத்தில் சிக்கிக்கொண்டான். -

‘அப்பா! சாமியாராகப் போற கேரக்டர்ஸுக்குப் பஞ்சமேயில்லை... அன்று இரவு, உபதேசம், அவதாரம், சித்தி, .... கந்தசாமிப் பிள்லை என்னடான்னா, கடவுளை பிராட்வே பக்கத்தில் சந்திக்கிறாராம், காஷுவலா அவரைக் காப்பி ஹோட்டலுக்குக் கூட்டிப் போறாராம். தன் பத்திரிக்கைக்குச் சந்தா கேட்கிறாராம்... என்ன நையாண்டி, என்ன அனாயாசமான தத்துவவீச்சு! எமகாதகப் பேர்வழியப்பா, அந்த மனுஷன்...’

‘கயிற்றரவு...’

‘கிளாசிக்!’

‘அப்புறம் அமானுஷியக் கதைகள்... காஞ்சனை மாதிரி... புராண நிகழ்ச்சிகள்... சாப விமோசனம் மாதிரி...’

‘தனித்தனிக் கட்டுரைதான் எழுதணும்’ என்று வேணு இட்லியை முடித்துத் தண்ணீர் குடித்தான். ‘ரியலிசம் அல்ல, ஃபேன்டஸியும் மிதாலஜியும்தான் புஷ்டியான இலக்கிய ஊற்றுகள்னு ஜான் பார்த் ஒரு இண்டர்வியூவிலே சொல்லி இருக்கிறான், படித்தேன். புதுமைப்பித்தன் அன்றைக்கே இதை ஆன்டிசிபேட் பண்ணிட்டானே! அதை நினைச்சால் ஆச்சரியமாயிருக்கு.’

ஊத்தப்பமும் பூரியும் வந்துவிட்டன. ராமுவுக்குப் பூரி, வேணுவுக்கு ஊத்தப்பம். ஊத்தப்பமும் மிக ருசியாயிருந்தது. ராமின் தயவில் இன்று இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டிபன். ஒரு நாள் மனைவியை கூட்டிக் கொண்டு இங்கே வரவேண்டும். முடியுமோ என்னவோ? கணவனும் மனைவியும் பீச்சுகுப் போய் உட்கார்ந்திருப்பது பற்றிய ஒரு புதுமைப்பித்தன் கதை.... என்ன தலைப்பு அது, ஞாபகமில்லை... கணவன் வறட்டு அறிவுஜீவி, மனைவியுடன் எதையும் பகிர்ந்துகொள்ளாமல் ஒரு தனி உலகத்தில் வாழ்கிறவன்... நானும் அந்தக் கணவனைப் போலத்தான் ஆகிக்கொண்டு வருகிறேனோ?

ராம் ஒரு வேளை அந்தக் கதையைப் படிக்காமலிருக்கலாம். அவ்வளவு பிரபலமான கதை இல்லை. எப்படியோ மனத்தில் தங்கிவிட்டிருக்கிறது... வேணு ராமிடம் அக் கதையைப் பற்றி பிரஸ்தாபித்தான்.

‘தெரியும். படிச்சிருக்கேன்’ என்றான் ராம். வேணுவுக்கு ஏமாற்றமாக இருந்தது. கோபமாகக்கூட இருந்தது. இவனையெல்லாம் யார் புதுமைப்பித்தனைப் படிக்கச் சொல்கிறார்கள்? பிசினஸ்மேனாக லட்சணமாக ஸ்பேர்டைமில் விஸ்கியடித்துக் கொண்டு, பார்ட்டிகளுக்கும் டின்னர்களுக்கும் போய்க் கொண்டு இருக்க வேண்டியது தானே!

’ ‘இரண்டு உலகங்கள்’ என்பது தலைப்பு நீ சொல்ற கதைக்கு...’ என்றாம் ராம். ‘இதே தீமை, ‘நினைவுப் பாதை’ என்கிற கதையிலே இன்னமும் பவர்ஃபுல்லா டீல் பண்ணியிருக்கார்... மனைவியுடைய பாடை கிளம்பிண்டிருக்கு... கணவனுக்கு அதைப் பார்த்து மணப்பெண்ணாக அவள் நின்ற கோலம் நினைவுக்கு வர... தான் அவளை அறிந்து கொள்ளவேயில்லை என்று அப்பத்தான் உறைக்கிறது... அப்பா! மனத்தை உலுக்கும் ஒரு சிச்சுவேஷன்!’

இப்போது, இதைக் கேட்டதும் வேணுவுக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும் நீங்கிவிட்டது. ஆமாம் இவன் ஷோ ஆஃப்தான் செய்கிறான். இலக்கியமும் இலக்கிய ரசனையும் உனக்கு மட்டும் சொந்தமல்ல, என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். என்னுடைய ஒரே உடுப்பான இலக்கிய உடுப்பையும் தான் பறித்துக்கொண்டு என்னை அம்மணமாக்க முயலும் குரூர விளையாட்டு.

‘ஆமா, உன்னைப் போன்றவர்களுக்கு அது உலுக்கும் சிச்சுவேஷன்தான்’ என்றான் வேணு. இப்போது அவனுக்கும் ராமைப் பதிலுக்குக் காயப்படுத்த வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது. ‘அதாவது உன் மென்மையும், பெண்ணென்ற கவிதையைப் புரிந்து கொண்டுள்ள சூட்சுமமும் உலுக்கப்பட்டதாக நீ சொல்ல வருகிறாய்... இது உன் வர்க்கத்தைத்தான் காட்டுகிறது. மென்மை, ரசனை, இதெல்லாம் கூட ஒரு மட்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் லக்ஸூரி, அப்பா! கணவன் வீட்டுக்கு வெளியிலும், மனைவி வீட்டுக்குள்ளேயும் ஒரே நுகத்தடியில் கட்டப்பட்ட இரு மாடுகளாக உழை உழையென்று உழைத்துக் கொண்டு, ஒருவர் முகத்தை இன்னொருவர் சரியாகப் பார்க்கக்கூட முடியாமல் போகிற மிடில் கிளாஸ் அவலத்தையே அக்கதை சித்தரிக்கிறது. கம்பேடிபிலிடி, அறிந்து கொள்ளுதல், இதெல்லாம் பணக்காரர்களுக்குத்தான்.’

ராமின் முகம் சிவந்தது. கோபமல்ல, வியப்புத்தான் அதில் அதிகம் தெரிந்தது. ‘இருக்கலாம்...’ என்றான். ‘நீ சொல்வது போல இருக்கலாம்... நீ ஏன் இப்படிப் பதற்றப்படுகிறாய்?’

‘பதற்றமில்லை ஓர் உண்மையைச் சொன்னேன்.’

ராம் பூரியை முடித்தான். வேணு ஊத்தப்பத்தை முடித்தான்.

‘காப்பி?’ என்றான் வெயிட்டர்.

ராம் வேணுவைப் பார்த்தான். வேணு தலையசைத்து ஆமோதித்தான். உடனே இரண்டு கப்கள் காப்பி என்று சொல்லிவிட்டு ராம் கண் சிமிட்டினான். ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ என்று சிரித்தான்.

வேணுவும் வேறு வழியின்றிச் சிரித்து வைத்தான்.

‘புதுமைப்பித்தனுடைய கதைகளையெல்லாம் நானும் என் வைஃபுமாக ஒரு மாசமாகப் படித்துக் கொண்டு வருகிறோம்.... அதனாலே மனசிலே புதுமைப்பித்தனே ஓடிண்டிருக்கார்... தப்பா நினைச்சுக்காதே.’

‘படி, படி, நிறையப் படி.’

‘நான் இன்னொன்று சொல்கிறேன் - தயவு செய்து, இதுவும் என் கிளாஸ் மென்டாலிட்டியைக் காட்டுவதாக நினைக்காதே. வெறுமனே ஒரு எண்ணம்...’

‘சொல்லு’

‘புதுமைப்பித்தனுடைய தத்துவ விசாரத்தின் ஊற்று, ஒருவேளை நிறைவற்ற திருமண உறவாக இருக்குமோ, என்று தோன்றியது...’

’அப்ஸர்ட்’

’அவருடைய தம்பதியரைப் பற்றின கதைகள் எதிலேயும் மனைவி ஃபிகருக்கு முக்கியத்துவமே தரப்படுவதில்லை, கவனிச்சியோ?’

“ஸோ?’

‘ஆனால், குழந்தை பாத்திரமாக வருகிற கதைகளிலெல்லாம் ஒரு பெண்குழந்தை - புதுமைப்பித்தனுக்கும் பெண்தானே! - தவிர்க்க முடியாமல் இடம் பெறுகிறது. கதையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. ‘சிற்றன்னை’, ‘மகாமசானம்’, ‘ஒரு நாள் கழிந்தது’, ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’, ‘சாமியாரும் குழந்தையும் சீடையும்’... எனவே குழந்தை அவருடைய சப்கான்ஷியஸ்ஸை ஆக்கிரமித்துக் கொண்ட அளவு, மனைவி ஆக்கிரமித்துக் கொள்ளவில்லை என்றுதானே ஆகிறது.’

‘இதெல்லாம் ஸ்டுப்பிட் அனாலிசிஸ். ஒரு முடிவை மனத்தில் இருத்திக்கொண்டு, பிறகு அதற்கான சாட்சியங்களை நிறுவும் காரியம்...’

காப்பி வந்துவிட்டது.

‘இருக்கலாம்’ என்றான் ராம். ‘அதுதான் சொன்னேனே... ஐ ஆம் ஜஸ்ட் ஸ்பெகுலேடிங்.’

காப்பியில் சீனியைக் கலக்கும்போது சட்டென்று வேணுவுக்கு இரண்டு கதைகள்... மிகவும் பிரபலமான கதைகள்... நினைவுக்கு வந்தன. ‘வாட் அபௌட் காஞ்சனை?’ என்றான். ‘வாட் அபௌட் செல்லம்மாள்?’ - இக்கதைகளில் மனைவி ஃபிகர் நன்றாக அமைந்திருக்கிறதே!’

‘அக்ரீட். ஆனால் இக்கதைகளில் என்ன நடக்கிறது, அதை யோசித்துப் பார், காஞ்சனையில் பிசாசு மனைவியின் கழுத்தை நெரித்துக் கொல்லப் பார்க்கிறது.. செல்லம்மாளிலோ, மனைவி ஒரு சீக்காளியாக்கப்பட்டு, சாகடிக்கப்படுகிறாள்....’

‘ஸோ?’

‘மனைவியைக் கொல்ல வேண்டும் என்ற எழுத்தாளனின் சப்கான்ஷியஸ் வேட்கையைத்தானே இது புலப்படுத்துகிறது?’

'How far fetched! உனக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்கிறது.’

‘இருக்கலாம்’ என்று ராம் காப்பியை ஒரு வாய் உறிஞ்சினான். ‘ஆனால் கே. என். எஸ். அவருக்குமா பைத்தியம்?’

‘கே. என் . எஸ். ஸா!’ வேணு மலைத்துத்தான் போனான். ‘கே.என்.எஸ்ஸைப் பார்த்தியா?’

’எப்பவாவது மாசத்திலே ஒரு நாள், இரண்டு நாள் போவேன் அவர் வீட்டுப்பக்கம்’ என்றான் ராம் அலட்சியமாக. ‘பக்கத்திலேதானே! நான் இருப்பது டிஃபன்ஸ் காலனி, அவர் சவுத் எக்ஸ்டென்ஷன்.’

கே. என். எஸ்! வேண்வுக்குப் பேச்சே எழவில்லை. போன மாதம் கூடச் சென்னைக்கு வந்து இரண்டு வாரங்கள் தங்கியிருந்தார். வேணுவுக்கு அவரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ஆனால் கூடவே ஒரு கூச்சம், தன்னம்பிக்கையின்மை. அவருடைய இலக்கிய ஹோதா தன்னை அரவணைக்குமா, புறக்கணிக்குமா என்று புரியாமல், போகாமலே இருந்து விட்டான். ராம் அதிர்ஷ்டசாலி, அவன் எழுத்தாளன் இல்லை.

‘அவர் புதுமைப்பித்தனுடன் குளோஸா மூவ் பண்ணினவர் ஆச்சே! அவர் என்ன சொன்னார் தெரியுமா? There may be something in what you say, அப்படின்னார்.’ ராமின் முகத்தில் என்ன ஒரு கொக்கரிப்பு, வெற்றிப் பெருமிதம்!

வேணு இப்போது உண்மையிலேயே அம்மணமாகிப் போனான். ‘படவா!’ என்று பல்லைக் கடித்துக் கொண்டான். காஞ்சனையில் வருகின்ற மோகினிப் பிசாசு இப்போது சட்டென்று இங்கே தோன்றி ராமின் கழுத்தை நெறித்துக் கொன்றால் எவ்வளவு நன்றாயிருக்கும்! அல்லது, ’செவ்வாய் தோஷ’த்தில் வருகிற ரத்தக் காட்டேரி...

மனத்தில் ஒரு பிளாக் அவுட். ரெஸ்டாரென்டிலிருந்து வெளியில் வரும்போதும் டாக்ஸியில் செல்லும் போதும் ராம் பேசிக் கொண்டு வந்த எதுவும் மனதில் பதியவில்லை. ஒரே சுயவெறுப்பு, சுய அனுதாபம் - சே! நான் ஒரு முட்டாள். நானும் இவனைப் போல பிசினஸ்மேனாகப் போயிருக்க வேண்டும். பணம்தான் முக்கியம். அது இருந்தால் பிற ஹோதாக்களும் படங்களும் தானாக ஏற்பட்டு விடும். இலக்கிய ரசிகன், எழுத்தாளன்...

ஆமாம், ராம் இனி கதைகளெழுதவும் கூடும். என் சாம்ராஜ்ஜியமென்று, அவனைப் போன்ற ஒட்டகங்கள் நுழைய முடியாத ‘ஊசித் துவாரமென்று’, நான் இருமாந்திருந்த இடத்தினுள்ளும் அவன் நுழைந்துவிடப் போகிறான். எனக்கென்று இனி எந்தக் கிரீடமும் மிச்சமில்லை.

வேணு வீட்டருகே மெயின் ரோடில் அவனை இறக்கிவிட்டு வைஃபை மிக விசாரித்ததாகச் சொல்லச் சொல்லிவிட்டு, ‘பை’ சொல்லிவிட்டு, ராம் சென்றான். வேணு அந்த இருளடர்ந்த திருவல்லிக்கேணிச் சந்தினுள் மாடுகளின் மீது தடுக்கி விழாமல் ஜாக்கிரதையாக நடந்து சென்று, தன் இரண்டு ரூம் அரண்மனைக்குள் நுழைந்தான். பிற்பகலில் பார்த்த ராமின் விசாலமான ஹோட்டல் அறை நினைவு வந்தது. எரிச்சலாக இருந்தது. அந்த அறையிலுள்ள அழகிய மஞ்சத்தில் படுத்தபடி, ராம் புதுமைப்பித்தனைப் படிப்பான். அவனுடைய வீட்டிலும் அத்தகைய படுக்கை இருக்கும். அவன், அவன் மனைவி, இருவருமே படுத்துக்கொண்டு புதுமைப்பித்தனைப் படிப்பார்கள்.

‘காப்பி வேணுமா?’ என்ற மனைவியின் விசாரணை எரிச்சலை அதிகமாக்கியது. ‘ப்ச்’ என்று சூள் கொட்டினான். அதற்கு என்ன அர்த்தமென்று புரியாமல் அவள் நின்று கொண்டே இருந்தாள். அவன் பேண்ட்டை அவிழ்த்துவிட்டு வேட்டியைத் தேடினான்... பட்டென்று மனத்தில் குமைந்து கொண்டிருந்த எரிச்சலெல்லாம் குப்பென்று வெடித்தது: ‘என் வேட்டியை எங்கே கொண்டு வச்சே?’

அவள் அமைதியாக அவன் அதுவரை தேடிக்கொண்டிருந்த இடத்திலிருந்தே வேட்டியை எடுத்துக் கொடுத்தாள். ‘காப்பி கலக்கட்டுமா?’ என்று மறுபடி விசாரித்தாள்.

‘வேண்டாம், வேண்டாம், வேண்டாம்!’ என்று அவன் மறுபடி வெடித்தான். இந்த இரண்டாவது வெடிப்புடன் கோபம் சட்டென்று வடிந்து போயிற்று. தன் மேலேயே வெட்கம் ஏற்பட்டது. தான் ஒரு டிபிகல் மிடில் கிளாஸ் கணவனாக நடந்து கொள்வதாகப்பட்டது. தன் மன உளைச்சல்கள், ஏமாற்றங்களுக்குப் பரிகாரமாக மனைவியை அடித்து நொறுக்கும் கணவனின் பிம்பம்...

குழாயடியில் கால் அலம்புகையில் சட்டென்று புதுமைப்பித்தனின் இன்னொரு சிறுகதை நினைவு வந்தது... ஆபீஸில் எளிய குமாஸ்தாவாகவும் வீட்டில் சர்வாதிகாரியாகவுமிருக்கிற கணவனைப் பற்றிய கதை.... ‘மண்ணாங்கட்டி’ என்று அவன் முணுமுணுத்துக் கொண்டான். பெரிதாக மிடில் கிளாஸ் ஹஸ்பண்டை வைத்து என்ன சடையர் வேண்டிக் கிடக்கிறது? ராம் போன்றவர்களின் மனோரஞ்சகத்துக்காக, தன் வர்க்கத்தினரைக் கோமாளிகளாக்குதல்... துரோகி! உனக்கு வேண்டியதுதான். சொஃபிஸ்டிகேடட் வாசகரின் அங்கீகாரத்தை வேண்டித்தானே இப்படியெல்லாம் எழுதினாய்? நன்றாக இப்போது இவர்களிடம் மாட்டிக்கொண்டு திண்டாடு, இவர்களுடைய வாயில் புரண்டு எச்சில் படு! உன் செக்ஸ் லைஃபைக் கூட இவர்கள் விட்டு வைக்கப்போவதில்லை.

வேணு மனத்தில் இப்போது ஒரு சாந்தம். அதைப் பகிர்ந்து கொள்ள அவன் மனைவியைத் தேடிச் சென்றான்.

****

Thursday, 16 February 2017

எனக்கு உன்னிடம் சொல்ல இருப்பது {மலையாள பெண் கவிஞர் ரோஸ்மெரியின் கவிதை)

எனக்கு உன்னிடம் சொல்ல இருப்பது {மலையாள பெண் கவிஞர் ரோஸ்மெரியின் கவிதை)
நன்றி - இளங்கோ.
நீ
எனது நேசத்தைக் குறித்து பயப்பட வேண்டாம்
அது உன்னிடமிருந்து
எதையும் எதிர்பார்ப்பதில்லை.
நீ எனது நட்பை சந்தேகப்பட வேண்டாம்
அது உன்னை
சொந்தமாக்கிக்கொள்ள விரும்புவதில்லை.
ஒருசமயம்
ஓர் இருண்ட இரவில்
என்னுள்ளே ஏராளமான தேவதைகள் புகுந்து
அன்பைக் கொட்டினார்கள்.
நான் உறங்கும்போது
நிகழ்ந்தது இந்த சினேகதானம்.
விழித்தபோது
இதயத்தின் கரைமீறிப்பொங்கும்
நேசப்பெருவெள்ளம்.
துக்கப்படுபவர்களும்
தனிமையானவர்களும் வந்து
தட்டிப்பறித்தனர் அதை.
எனினும்
மிஞ்சிய நேசத்தைக்
கோப்பைகளில் ஊற்றிவைத்தேன்.
விரிந்த ஆகாயத்தின் கீழாக
பொட்டல் மைதானங்களினூடே
யாருமற்ற பாதையோரங்கள் வழியே
நான் அலைந்துகொண்டிருந்தேன்.
கையில் ததும்பிவழியும் பானக்குவளை.
உனக்கு
எனது நேசத்தைப்பற்றி
குற்றவுணர்வு வேண்டாம்.
இன்னொருவருடையதைத் திரும்பி வாங்கி
உனக்குக் கொடுக்கவில்லை.
வீணாகிப் போகும் நேசத்தை பற்றியும்
ததும்பி வழியும் பானக்குவளை பற்றியும்
உன்னிடம் நான் சொன்னதில்லையா?
உன்னிடம் சில விஷயங்களைத்
தெளிவுபடுத்த வேண்டும் நான்
என்றாவது நீ
என்னை நெருங்கி வருவதானால்
ஓர் அரசன்
தாசியை பார்க்கவரும் உணர்வு வேண்டாம்
எனக்கு உன்னிடமிருந்து
பரிசிலாக... பூமியோ
கைச்சாத்துப்பெற்ற சிற்றரசுகளோ தேவையில்லை
பக்தனுக்கு தரிசனமருளும்
கடவுளின் உணர்வும் வேண்டாம்.
எனக்கு உன்னிடம் கேட்டுவாங்க
வரங்கள் எதுவுமில்லை.
உனது ஒளியால் நிரப்பிக்கொள்ள
இதயவறுமையும் எனக்கில்லை.
ஒரு சக்கரவர்த்தி
இன்னொரு சக்கரவர்த்தியைச் சந்திப்பது போல
ஒரு நண்பன்
மற்றொரு நண்பனைச் சந்திப்பது போல
சம உணர்வுடன் வா.
ஒரு புல்லாங்குழல்
ராகத்தைத் தேடுவது போலவோ
ஒரு கேள்வி
பதிலைத் தேடுவது போலவோ
இயல்பாக இருக்கட்டும் அது.
- ரோஸ்மேரி (மலையாளம்)

Monday, 13 February 2017

13-quotes-about-love-that-only-haruki-murakami-couldve-written

Few writers capture the complexity of life and love as well as Haruki Murakami. Through his stories he shows us characters who desperately want love, characters who never think about love, characters who love someone who will never love them back, characters who don't know how to love, and characters who are loved but feel nothing about it.
Regardless of where you fall on Valentine's Day, or whether you relate specifically to any of Murakami's characters, his quotes on love are worth thinking about. Below are 13 of his finest quotes, of which at least one will cause you to pause for a moment.

1“If you can love someone with your whole heart, even one person, then there’s salvation in life. Even if you can’t get together with that person.”

SOURCE: GIPHY
– Haruki Murakami, 1Q84

2“Two people can sleep in the same bed and still be alone when they close their eyes."

3“Most everything you think you know about me is nothing more than memories.”

– Haruki Murakami, A Wild Sheep Chase

4“You can hide memories, but you can’t erase the history that produced them.”

SOURCE: GIPHY

5“Spend your money on the things money can buy. Spend your time on the things money can’t buy.”

– Haruki Murakami, The Wind-Up Bird Chronicle

6“One heart is not connected to another through harmony alone. They are, instead, linked deeply through their wounds. Pain linked to pain, fragility to fragility. There is no silence without a cry of grief, no forgiveness without bloodshed, no acceptance without a passage through acute loss. That is what lies at the root of true harmony.”

7“Sometimes I get real lonely sleeping with you.”

SOURCE: GIPHY
– Haruki Murakami, A Wild Sheep Chase

8. “Sometimes I feel like a caretaker of a museum — a huge, empty museum where no one ever comes, and I’m watching over it for no one but myself.”

- Haruki Murakami, Pinball, 1973

9. “What happens when people open their hearts?” “They get better.”

– Haruki Murakami, Norwegian Wood

10. “But even so, every now and then I would feel a violent stab of loneliness. The very water I drink, the very air I breathe, would feel like long, sharp needles. The pages of a book in my hands would take on the threatening metallic gleam of razor blades. I could hear the roots of loneliness creeping through me when the world was hushed at four o’clock in the morning.”

SOURCE: GIPHY
– Haruki Murakami, The Wind-Up Bird Chronicle

11“Every one of us is losing something precious to us. Lost opportunities, lost possibilities, feelings we can never get back again. That’s part of what it means to be alive.”

– Haruki Murakami, Kafka on the Shore

12“Is it possible, in the final analysis, for one human being to achieve perfect understanding of another? We can invest enormous time and energy in serious efforts to know another person, but in the end, how close can we come to that person’s essence? We convince ourselves that we know the other person well, but do we really know anything important about anyone?”

– Haruki Murakami, The Wind-Up Bird Chronicle

13“If you remember me, then I don’t care if everyone else forgets.”

SOURCE: GIPHY
– Haruki Murakami, Kafka on the Shore