Saturday, 6 February 2016

கிருஷ்ணன் நம்பி (1932 – 1976) By சாரு நிவேதிதா



http://www.dinamani.com//junction/pazhuppu-nira-pakkangal/2016/02/07/கிருஷ்ணன்-நம்பி-1932-–-1976/article3262679.ece


கிருஷ்ணன் நம்பி (1932 – 1976)


By சாரு நிவேதிதா

First Published : 07 February 2016 10:00 AM IST


இப்போதுதான் முதல்முறையாக கிருஷ்ணன் நம்பியைப் படிக்கிறேன். குமரி மாவட்டம் என்றாலே எனக்குக் கொஞ்சம் தயக்கம் உண்டு. அந்தத் தயக்குத்துடனேதான் அவரை அணுகினேன். ‘மருமகள் வாக்கு’ என்ற ஒரே கதையில் தெரிந்து விட்டது கிருஷ்ணன் நம்பி உலகின் மகத்தான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர் என்று.





ஒரு ஊரில் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளை. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனார். இருவரும் உயிரைக் கொடுத்து வேலை செய்ய ஊர் இரண்டு பட்டு நிற்கிறது.

அந்த ஊரில் மீனாட்சி அம்மாள் என்று ஒரு பெண்மணி. அவள் கணவன் தாலுகா ஆஃபீஸ் பியூனாக இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டான். இறப்பதற்கு முன் அறுபத்தாறு செண்ட் நஞ்சையை அவள் பெயருக்குக் கிரயம் செய்து வைத்திருக்கிறான். மீனாட்சிக்கு ஒரு மகன். ராமலிங்கம். அவனுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து வைத்தாள் மீனாட்சி. மருமகள் ருக்மிணி மெலிந்து காணப்பட்டாலும் வேலைக்குச் சளைக்காதவள். அதிகாலையில் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து படுக்கப் போகும் முன் மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கி வைப்பது வரை ஓயாமல் இருந்து கொண்டிருக்கும் வேலை. மார்வலியும் இரைப்பும் கொண்டவள். ஆனால் மீனாட்சி அம்மாள் அவளை மருத்துவரிடம் அனுப்பச் சம்மதிக்கவில்லை. வைத்தியர்களுக்குக் காசு ஒன்றே குறி. மீனாட்சி அம்மாளுக்குத் தெரியாதா? எல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகி விடும் என்று சொல்லி விட்டாள். மேலும், டாக்டரிடம் போவதற்கு யாரும் இங்கே சாகக் கிடக்கவில்லையே?

மருமகள் ருக்மிணி அந்த வீட்டில் ஒரு கொத்தடிமை. வெளியில் இருந்து வருபவர்களிடம் வாய் திறந்து ஒரு சொல் போய் விடக் கூடாது என்பது மீனாட்சியின் உத்தரவு. வீட்டில் மீனாட்சி அம்மாள் செய்யும் வேலை, பணப் பட்டுவாடா செய்வது, மற்றும் ஒரு நோட்டுப் புத்தககத்தில் ஸ்ரீராமஜயம் எழுதுவது. சாவதற்குள் பத்து லட்சத்து ஒன்று எழுதி முடித்து விடவேண்டும் என்பது அவள் திட்டம். ஏற்கனவே லட்சத்துச் சொச்சம் எழுதி அந்த அக்ரஹாரத்துப் பெண்களை அசத்தியிருக்கிறாள். மாமியாரும் மருமகளும் சேர்ந்துதான் சாப்பிடுவது. ஆனால் அங்கேயும் சர்வாதிகாரம். உண்டி சுருங்குதல் பெண்டிற்கழகு! அதிகமாகச் சாப்பிட்டால் ஊளைச் சதை போட்டு விடும். ஆனால், இந்த விதி மீனாட்சிக்கு அல்ல. ரொம்பப் பொறுக்க முடியாமல் போய் இரண்டு மூன்று முறை ருக்மிணி மீனாட்சிக்குத் தெரியாமல் அள்ளிப் போட்டுக் கொண்டு தின்றிருக்கிறாள்.

இப்படிப்பட்ட ஒரு நரகத்திலும் ருக்மிணிக்கு ஒரே ஒரு சிறிய சந்தோஷம் உண்டு. மத்தியான உணவுக்குப் பிறகு மீனாட்சி அம்மாள் கொஞ்சம் படுத்துக் கிடப்பாள். அந்த வேளையில் ருக்மிணி தொழுவத்தில் மாட்டுக்குத் தவிடும் தண்ணீரும் காட்ட வேண்டும். அது குடிப்பதையும் கட்டுப்புல் தின்பதையும் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்கு மிகப் பெரிய சந்தோஷம். ‘சவமே, எம்பிட்டுத் தின்னாலும் ஒம் பசி அடங்காது’ என்று பொய்க் கோபத்துடன் அதன் நெற்றியைச் செல்லமாய் வருடுவாள். மாடு என்பது மகாலட்சுமி. அதன் வயிறு வாடக் கூடாது; வாடினால் கறவை வாடி விடும் என்பாள் மாமியார். ‘பசுவே, நீ மட்டும் பெண் இல்லையா? உண்டி சுருக்கற நியாயம் ஒனக்கும் எங்க மாமியாருக்கும் மாத்ரம் கெடையாதா சொல்லு?’ என்று அதன் முதுகில் தட்டுவாள் ருக்மிணி. பசுவின் கழுத்துத் தொங்கு சதையைத் தடவிக் கொடுப்பதில் அவளுக்குத் தனியான ஆனந்தம். அதற்கும் இது பிடிக்கும். முகத்தை இவள் பக்கமாகத் திருப்பி இவள் மேல் ஒட்டிக் கொள்ளப் பார்க்கும்.

அன்றைய தினம் ருக்மிணி ஓட்டுப் போடப் போக வேண்டும். கிளிக்குத்தான் போட வேண்டும் என்பது அவள் விருப்பம். கிளி எவ்வளவு அழகு! அவளுக்குக் கிளியைப் போல் பறக்க வேண்டும் என்று ஆசை.

பசு அழியிலிருந்து ஒரு வாய் வைக்கோலைக் கடித்துக் கொண்டே தண்ணீரையும் உறிஞ்சத் தொடங்க, ‘சவமே, எதுக்கு இப்படிச் சிந்திச் செதறறாய்? தேவாளுக்காச்சா? அசுராளுக்காச்சா? ஒழுங்கா வழியாக் குடியேன்’ என்று அதன் தாடையில் ஒரு தட்டு.

அதற்கடுத்து ருக்மிணி பசுவிடம் தன் வாழ்க்கையைப் பற்றி வெகு சகஜமாகப் பேசுகிறாள். அதுவும் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறது. மேஜிகல் ரியலிசம் அல்ல. இங்கே ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எதார்த்த வாழ்க்கையே அப்படித்தான் இருந்தது. இவள் பேசி முடிக்கவும் பசு பொத் பொத்தென்று சாணி போட்டு ஒரு குடம் மூத்திரத்தையும் பெய்கிறது. உடனே ருக்மிணி அவசரத்துடன் சாணியை இரு கைகளாலும் லாகவமாக அள்ளிக் கொண்டு போய்ச் சாணிக் குண்டில் போடுகிறாள். புல் தரையில் கையைத் துடைத்து விட்டு அங்கிருந்து நகர, பசு அவளை நிமிர்ந்து பார்த்து ‘ம்மா’ என்று கத்திற்று. இதோ ஓட்டுப் போட்டு விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டுப் போகிறாள் ருக்மிணி.

இதுதான் இந்திய வாழ்க்கை. குறைந்த பட்சம் பெண்கள் வரையிலாவது இப்படித்தான் இருந்தது. இன்றைய தினம் பிராமணர்களே மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகளை வைத்திருக்கும் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு என் அன்னையின் மேற்கண்ட வாழ்க்கை ஞாபகம் வருகிறது. ருக்மிணி என்னுடைய அம்மாவும்தான். அந்த வாழ்க்கையை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

ஓட்டுச் சாவடிக்கு வருகிறாள் ருக்மிணி. அது ஒரு பள்ளிக் காம்பவுண்டு. அங்கே ஒரு அளிச மரம். அதைப் பார்த்ததும் அவளுக்குத் தன் சிறு பிராய ஞாபகங்கள் வருகின்றன. இந்த உலகத்திலேயே ஒரே ஒரு அளிச மரம்தான் உண்டு; அதுவும் வேம்பனூர் தேவசகாயம் ஆரம்பப் பாடசாலைக் காம்பவுண்டுக்குள்தான் உண்டு என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு இங்கேயும் ஒரு அளிச மரத்தைப் பார்த்ததும் பரவசம் ஏற்படுகிறது. அளிச மரத்தில் ஏறி பழம் பறித்துத் தின்ற பொழுதுகளையெல்லாம் நினைத்துப் பார்க்கிறாள்.

மாமியார் அவளைப் பூனைக்குப் போடச் சொல்லி அனுப்பியிருந்தாள். ஆனாலும் இன்று முதல்முதலாக ருக்மிணி மாமியாரின் பேச்சைக் கேட்கப் போவதில்லை என்று தீர்மானம் செய்கிறாள். அவள் கிளிக்குப் போட்டாளா, பூனைக்குப் போட்டாளா என்ற இடம் உலக இலக்கியத்தில் ஒரு சிகரம். நீங்களே படித்துப் பாருங்கள். ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ள இந்தக் கதை கணையாழி அக்டோபர் 1974 இதழில் வெளி வந்தது.

நான் தொடர்ந்து பல காலமாகச் சொல்லி வரும் ஒரு விஷயம், ஜனரஞ்சிகைப் பத்திரிகைகளின் மூலம் இலக்கியம் வளராது. மலையாளம், வங்காளம் போன்ற சூழல்கள் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் தமிழில் அது சாத்தியமில்லை. லா.ச.ரா. ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் மட்டுமே எழுதினார். அதை ஒரு அதிசயம் என்று மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பத்திரிகையாளர் சாவி எழுத்தாளர்களை வளர்த்து விடுவதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர். சுஜாதா, ஜெயகாந்தன் ஆகியோர் பிரபலமானதில் சாவிக்குப் பெரும் பங்கு உண்டு. ஆனால் அப்பேர்ப்பட்ட சாவியே மேற்கண்ட கதையைப் பிரசுரிக்க முடியவில்லை என்று கிருஷ்ணன் நம்பிக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறார். பின்வருவது சாவியின் கடிதம்: ‘மருமகள் வாக்கு’ கதை மிகவும் பிரமாதமாக இருக்கிறது. ஆனால், சில காரணங்களினால் என்னால் வெளியிட இயலவில்லை. நீங்கள் விரும்பியபடி, கதையை இத்துடன் திருப்பி அனுப்பியிருக்கிறேன்.’

***

‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ என்ற தலைப்பில் கிருஷ்ணன் நம்பியின் எழுத்துக்கள் யாவும் காலச்சுவடு பதிப்பகத்தால் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் சுந்தர ராமசாமி தன் நெருங்கிய நண்பரான கிருஷ்ணன் நம்பி பற்றி எழுதிய ஒரு பிரமாதமான கட்டுரை பின்னுரையாக சேர்க்கப்பட்டுள்ளது. நம்பியின் இயற்பெயர் அழகிய நம்பியாக இருந்திருக்கிறது. ஆனால் அக்காலத்தில் எழுத்தாளர்களுக்குத் தங்கள் பெயர் பிடித்திருக்கவில்லை. அந்த வழக்கப்படியே அவரும் தன் பெயரை கிருஷ்ணன் நம்பி என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். கிருஷ்ணன் நம்பியின் மற்றொரு விசேஷமான அம்சம், அவர் குழந்தைகளைப் பற்றி அதிகம் யோசித்திருக்கிறார். குழந்தைகளுக்கான கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆனால் மற்ற குழந்தைக் கவிஞர்களைப் போல் அவர் குழந்தைகளை உய்விப்பதற்கான போதனைகள் சொல்லவில்லை. அவர்களோடு பகிர்ந்து கொள்ளத் தன்னிடம் உள்ள விஷயங்களை எழுதினார். இது நம்பி பற்றி சு.ரா.வின் கருத்து. அது உண்மையும் கூட. மேலும் சு.ரா. சொல்கிறார்:

நம்பியின் குழந்தைக் கவிதைகளையும் அவர் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் அவரை விடவும் பல மடங்கு புகழ் பெற்றிருந்த வேறு பல குழந்தைக் கவிஞர்களுடைய கவிதைகளையும் அன்று படித்துப் பார்த்தபோது தமிழிலேயே சிறப்பான குழந்தைக் கவிதைகள் எழுதியிருப்பவர் நம்பிதான் என்று எனக்குப் பட்டது…

எவ்விதத் தூண்டுதலுமின்றி நம்பியின் கவிதைகளைக் குழந்தைகள் பாடி மகிழ்ந்துள்ளதை நானே நன்கு அறிவேன். என் குழந்தைகள் அவருடைய கவிதைகளை மிகவும் விரும்பிப் பாடியது என் பழைய நினைவின் சந்தோஷமான பகுதியாகும். எவ்வளவோ வருடங்கள் ஓடி மறைந்த பின்பும் பணியும் படிப்பும் என் குழந்தைகளை அன்னியச் சூழலுக்கும் நெடுந்தொலைவுக்கும் இட்டுச் சென்ற பின்பும், ‘நம்பி மாமா’வின் பாடல்களை அவர்கள் இன்றும் நினைவுகூர்ந்து வரிகளை ஒப்பிப்பது அவருடைய திறனுக்குக் காலம் தந்த ஆமோதிப்பு என்றே நம்புகிறேன்.’

காலச்சுவடு தொகுப்பில் கிருஷ்ணன் நம்பி எழுதிய குழந்தைக் கவிதைகள் மொத்தம் 39 இருக்கின்றன. ஆங்கில மோகம் கொண்டு அலையும் தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டிய அற்புதமான பாடல்கள் அவை.

அதில் ஒரு பாடல் இது:

விளக்கின் வேண்டுகோள்

காற்று மாமா, காற்று மாமா கருணை செய்குவீர்!
ஏற்றி வைத்த ஜோதி என்னை ஏன் அணைக்கிறீர்?
சின்னஞ் சிறு குடிசை இதைச் சிறிது நேரம் நான்
பொன்னிறத்துச் சுடரினாலே பொலியச் செய்குவேன்.
ஏழைச் சிறுவன் என்னை நம்பிப் பாடம் படிக்கிறான்;
ஏழும் மூணும் பத்து என்று எழுதிக் கூட்டுறான்.
அன்னை அதோ அடுப்பை மூட்டிக் கஞ்சி காச்சுறாள்;
என்ன ஆச்சு என்று பானைக் குள்ளே பார்க்கிறாள்.
படிக்கும் சிறுவன் வயிற்றுக்குள்ளே பசி துடிக்குது;
அடிக்கொரு தரம் அவனது முகம் அடுப்பைப் பார்க்குது.
காச்சும் கஞ்சி குடிக்க வெளிச்சம் காட்ட வேண்டாமோ?
ஆச்சு, இதோ ஆச்சு என்னை அணைத்து விடாதே!

***

தொகுப்பில் என்னைக் கவர்ந்த மற்றொரு விஷயம், கிருஷ்ணன் நம்பி தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள். முதல் கடிதம் கி. ராஜநாராயணனுக்கு எழுதியது. தேதி 24.5.1961. முகவரி: கோகுலம், கிருஷ்ணன் கோயில், நாகர்கோயில். கி.ரா. தன் குழந்தைக்காக நெல்லையிலிருந்து வாங்கிச் சென்ற பொம்மை அவர் குழந்தைக்குப் பிடித்திருந்ததா என்று கேட்டு எழுதியிருக்கிறார். அதில்தான் என்ன ஒரு நயம்!

தன் மகன் முரளிக்கு வாங்கிக் கொடுத்த ஸெல்லுலாய்டு பொம்மையை (விலை எட்டணாவோ பத்தணாவோ) அடுத்த நிமிஷமே தரையில் தட்டி உடைத்து விட்டானாம். அதில் இருந்த இரும்புக் கம்பியாவது பிழைத்ததே என்று பார்த்தால் அதையும் கிணற்றில் போட்டு விட்டான். நம் குழந்தைகள் தமிழனின் வீரப் பரம்பரையை நினைவூட்டுகிறார்கள். அதோடு, நிலையாமைத் தத்துவத்தையும் நினைவுக்கு வந்து விடுகிறது என்று கேலியும் கிண்டலுமாக எழுதுகிறார் கிருஷ்ணன் நம்பி.

இப்போதெல்லாம் இப்படிப்பட்ட குடும்ப உறவுகள் எழுத்தாளர்களுக்கு இடையே இருக்கிறதா என்று தெரியவில்லை. ஐந்து நிமிடம் முன்னால்தான் என்னை ஒரு போலி எழுத்தாளன் என்று வர்ணித்து எழுதிய ஒரு நிஜ எழுத்தாளரின் கட்டுரையைப் படித்து முடித்தேன். காலம் மாறிக் கொண்டிருக்கிறது.

பொம்மையை உடைத்த கிருஷ்ணன் நம்பியின் புதல்வர் முரளிக்கு இப்போது என் வயது இருக்கலாம். அவரைப் பார்க்க ஆசையாக இருக்கிறது.

(தொடரும்)

கிருஷ்ணன் நம்பி – பகுதி 2


By சாரு நிவேதிதா

First Published : 14 February 2016 10:00 AM IST



எனக்கு ஒரு பேராசை. பழுப்பு நிறப் பக்கங்களில் வரும் ஊர்களையும் இடங்களையும் குறித்து வைத்துக்கொண்டு அங்கெல்லாம் நாம் ஒரு குழுவாகப் பயணம் சென்றால் என்ன? க.நா.சு.வின் சுவாமிமலை, தி.ஜா.வின் தஞ்சாவூர், கும்பகோணம், சார்வாகனின் ஆரணி, அசோகமித்திரனின் செகந்திராபாத் இப்படி… இந்த எண்ணம் எனக்கு கிருஷ்ணன் நம்பியின் ‘கதைக்கு ஒரு கரு’ என்ற கட்டுரையைப் படித்தபோது தோன்றியது. நம்பியின் சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு வடக்கே எட்டாவது மைலில் உள்ள அழகிய பாண்டியபுரம். என்ன ஓர் அழகான பெயர் பாருங்கள்! டவுன் பஸ்ஸில் கண்டக்டரிடம் ‘அழகிய பாண்டியபுரத்துக்கு ஒரு டிக்கட்’ என்று கேட்பதை நினைத்துப் பார்ப்பதே பெரும் இன்பமாக இருக்கிறது. இந்தத் தொடர் முடிந்தவுடன் இப்படி ஒரு பயணம் சென்றால் அதை ஒரு புனித யாத்திரை என்றே சொல்லுவேன்.

கிருஷ்ணன் நம்பி ஒரு மலரைப் போன்ற மென்மை கொண்ட ஆளுமையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. லௌகீக வாழ்வின் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஒருவிதமான எருமைத்தோலும் தடித்தனப் புத்தியும் தேவை. அது இல்லாவிட்டால் தோல்விதான். நம்பியோ ஒரு அநிச்ச மலர். என்ன ஆவார்? தகப்பனாரின் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்லும் தந்திர புத்தி நம்பிக்கு இல்லை. சோர்வடைகிறார். இலக்கியத்தில் தஞ்சமடைகிறார். இலக்கியமோ தன்னிடம் நிழல் தேடி வருபவனின் உயிரைப் பலி கேட்கும் பைசாச விருட்சம். தி.ஜ.ரங்கநாதன், புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன், ஆத்மாநாம், கோபி கிருஷ்ணன், எம்.வி. வெங்கட்ராம், தர்மு சிவராமு போன்ற எண்ணற்ற எழுத்தாளர்கள், அஃ பரந்தாமன் போன்ற பதிப்பாளர்கள்/சிறுபத்திரிகை ஆசிரியர்கள் என்று மட்டும் அல்லாமல் ஊட்டி மணிக்கண்ணன், கும்பகோணம் கனகு போன்ற வாசகர்களையும் பலி வாங்கியிருக்கிறது. அப்படி ஒரு பலி தான் கிருஷ்ணன் நம்பியும் என்று தோன்றுகிறது. (உயிரை பலி கேட்கும் அந்தப் பைசாச விருட்சத்தைத் தனது ‘மாந்த்ரீக’த்தின் மூலம் அடக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டவர்கள் என சுந்தர ராமசாமி போன்றோரைச் சொல்லலாம்.)

அந்தக் காலத்து எழுத்தாளர்களைப் போலவே கிருஷ்ணன் நம்பியும் தனது வாழ்வியல் அனுபவங்களையே படைப்பாக மாற்றியிருக்கிறார். அவர் வார்த்தைகள்: ‘அநேகமாய் என்னையே கதாநாயகனாக்கி, என் சொந்த ஆசைகளை, கனவுகளை, அசட்டுத்தனங்களை, வக்கிரங்களை, தோல்விகளை ஆதாரமாகக் கொண்டுதான் நான் கதைகள் எழுதுகிறேன்… என்னை மையமாக வைத்து எழுதும் கதைகளே எனக்குப் பிடிக்கின்றன. அப்படி எழுதும் கதைகளே வெற்றிகரமாக அமைவதாகவும் எனக்குப் படுகிறது.’ இதற்கு உதாரணமாக ‘எனக்கு ஒரு வேலை வேண்டும்’, ‘ஒரு கனவு’, ‘கணக்கு வாத்தியார்’ போன்ற கதைகளைச் சொல்கிறார்.

‘நான்’ என்பதில், அசட்டுச் சிறுவனாக கூடு கட்டிய மார்புடன் தெருவோடு நடந்து திரிந்த நானும், காமப்பித்துத் தலைக்கேறி அலைந்த நானும், லட்சிய வெறி கொண்டு ஒன்றுக்கொன்று முரண்படப் பிதற்றிக் கொட்டிய நானும், கோபித்து எரிச்சலுற்று உடம்பைச் சூடேற்றிக் கண்ணைச் சிவக்க வைத்துக் கொண்ட நானும் – இப்படி எத்தனையோ ‘நான்’கள் அடங்கி விடுகின்றன.’ அந்தக் கட்டுரையில் 1958-ல் எழுதப்பட்ட ‘எனக்கு ஒரு வேலை வேண்டும்’ என்ற கதையின் கரு எப்படித் தனக்கு உருவாயிற்று என்று விவரிக்கிறார் நம்பி.

எழுதி எழுதிக் குவித்து பெரும் பணம் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறார் நம்பி. ஆனால் எதார்த்த வாழ்வில் அவர் ஒரு மகா சோம்பேறி. வருஷத்தில் முழுசாக ஐந்தாறு கதைகள் எழுதினாலே பெரிய சாதனை. இந்த லட்சணத்தில் எங்கே எழுதுவது, எங்கே குவிப்பது? அப்படியே ஐம்பது அறுபது கதை எழுதினாலும் அதைப் பிரசுரிக்க எந்தப் பத்திரிகை தயாராக இருக்கிறது? ஆனால் கதை எழுதிச் சம்பாதிக்கும் அவரது இந்த ஆசை ‘இறைவனின் காலடியில் மலர்களாக சமர்பிக்கத்தக்க’ அளவுக்கு மதிப்புக்குரியது என்றும் எழுதுகிறார் நம்பி.





‘வளர்த்துவானேன் – என் முதல் அடிப்படை – எழுதிக் குவித்துப் பணம் பார்க்கும் என் முதல் அடிப்படை – கழுதைக் காலில் உதையுண்ட கோழி முட்டை போல் ஆரம்பத்திலேயே நொறுங்கிச் சிதறியது… இந்தப் பிரபஞ்சமே கவிதை, சிறுகதை, நாவல்களால் ஆனது என்று தீர்மானம் செய்திருந்த என் மனசை வியாபாரத்தில் ஒட்ட வைக்க முடியவில்லை.’

இதற்குப் பிறகுதான் சொந்த ஊருக்கு – அழகிய பாண்டியபுரம் - மூட்டை கட்டுகிறார் நம்பி. ‘வேலை தேடுவதற்கான முயற்சிகளை நைந்த உள்ளத்துடனும், அவநம்பிக்கையுடனும் மேற்கொள்ளலானேன். ஒன்றுமே பிரயோசனப்படவில்லை. சர்க்கார் வேலைக்கு மனுப் போடும் வயசும் எப்போதோ தாண்டிவிட்டிருந்தது. தகப்பனார் வாய்க்கு வாய் என்னை இடித்துக் கொண்டே இருந்தார். எவ்வகையிலாவது ஒரு வேலையைப் பெற்று எங்காவது ஊரை விட்டே போய் விடவேண்டும் என்று வேதனையுடன் எண்ணி எண்ணிப் பொருமினேன்… என் தந்தையின் சுடுசொற்களோ நாளுக்கு நாள் புதிய கடுமைகளுடன் என்னைத் தாக்கின.’

‘எனக்கு ஒரு வேலை வேண்டும்’ என்ற சிறுகதை இப்படித் தொடங்குகிறது. ‘வீட்டிலே உட்கார வெச்சு எத்தனை நாளைக்கு உனக்கு தண்டச் சோறு போடறது. இனிமே உன் பாட்டை நீ பார்த்துக்க வேண்டியதுதான். நீ என்ன பச்சைக் குழந்தையா? முருங்கத்தடிக்கு ஆகிற மாதிரி முப்பது வயது ஆகிறதேடா… ஒரு நிமிஷம் கூட நீ இங்கே இருக்கப்படாது. என் கண்முன்னாலே நிக்காம எங்கேயாவது தொலஞ்சு போயிடு, ஆமாம்.’ இது தகப்பனார்.

‘ஏன் இப்பிடி ஒங்கப்பன் கிட்டே ஏச்சையும் பேச்சையும் வாங்கிக் கட்டிண்டு சொரணை, மானம் இல்லாம இங்க ஒக்காந்திண்டிருக்கே? எங்கேயாவது தொலையப்படாதா? ஒரு காப்பி கிளப்பிலே மேச தொடச்சாக்கூட சோறும் போட்டு, மாசம் அஞ்சு பத்து கொடுப்பானேடா. ஏன் இப்படி மானங்கெட்ட வயிறு வளர்க்கிறே? காலத்த நேரத்த எங்கேயாவது தொலைஞ்சு போயேன். எனக்குன்னு இப்பிடிக் கிறுக்குப் பிள்ளையா வந்து பொறந்துட்டயே… கர்மம்!’ இது தாய்.

‘அன்று மாலை, எங்கள் ஊர்ப் பெரிய குளத்தின் கீழ்க்கரையில், ஒரு அழகிய குன்றின் அடிவாரத்தில், ஒரு சிவன் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு காசி அரளிச் செடியின் அருகில் அமர்ந்து, மாலை வெயிலொளியின் கூட்டுறவில் பொன் தகடாய் விரிந்து மினுக்கிய குளப்பரப்பில் மனசை ஓட விட்டு சோகத்தில் ஆழ்ந்து போயிருந்தேன்.’

இந்த இடத்தில்தான் மேலே ஆரம்பத்தில் குறிப்பிட்ட புனிதப் பயணத்துக்கான யோசனை எனக்கு வந்தது. அந்தக் குளக்கரைக்குச் சென்று அதே மாலை நேரத்தில் கிருஷ்ணன் நம்பியின் கதை கட்டுரைகளை வாய் விட்டுப் படிக்க வேண்டும். உங்களில் எத்தனை பேர் இதற்குத் தயாராக இருக்கிறீர்கள்? இந்தப் பத்தியில் ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றி எழுதி முடித்ததும் அவர் விவரித்திருக்கும் நிலவியல் வரைபடம் ஒன்றைப் போடுங்கள். நம் பயணத்துக்கு அது எளிதாக இருக்கும்.

கிருஷ்ணன் நம்பியின் எழுத்தை வாசிக்கும்போது தமிழ்ச் சூழல் படைப்பிலக்கியத்துக்கு எந்த அளவுக்கு விரோதமாக இருந்து வருகிறது என்பதையும், அதனால் படைப்பாளி அடையும் துயரத்தின் கண்ணீர்த் தடங்களாகவே அவரது எழுத்து அமைந்திருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இலக்கியவாதி என்று மட்டும் இல்லாமல் சமூகத்தின் மந்தைத்தனத்துக்கு மாறாக எவர் இருந்தாலும் அவரை சமூகம் ஓட ஓட விரட்டுகிறது. இதுதான் கிருஷ்ணன் நம்பியின் படைப்புகளின் அடிச்சரடாக இருக்கிறது.

‘எனக்கு ஒரு வேலை வேண்டும்’ என்ற கதை அதன் தலைப்பு சுட்டுவது போல் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய கதை இல்லை. தமிழின் தலைசிறந்த சிறுகதைகள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் அசோகமித்திரனின் ‘புலிக் கலைஞன்’, கு. அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’, ஆ. மாதவனின் ‘எட்டாவது நாள்’, லா.ச.ரா.வின் ‘ஜனனி’ சார்வாகனின் ‘முடிவற்ற பாதை’ போன்ற கதைகள் இருக்கும் அல்லவா? அதே போன்றதொரு கதைதான் ‘எனக்கு ஒரு வேலை வேண்டும்’. 25 வயதான பையன். ஆனால் மனநிலையோ பத்து வயதுப் பையனுக்குடையது. படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறான். தந்தை ஒரு சிறிய கோவிலில் அர்ச்சகர். வீட்டில் கொடுமையான வறுமை. கதையிலிருந்து ஒரு காட்சி:

‘அப்பா சாதம் எடுத்து ஒரு தாமரை இலையில் போட்டுக்கொண்டு ‘தண்ணி’ மோர் எடுத்து விட்டுப் பிசைந்து கொண்டார். அம்மா மிளகாய் போட்டாள். அப்பா சாப்பிட்டபடி சொன்னார். ‘இந்தச் சோறு எனக்கே பத்தாது. இதை மூணு பேர் முழுங்க வேண்டியிருக்கு. இதில் இந்தக் கிறுக்கனை வெச்சு எத்தனை நாளைக்கு மாரடிக்கிறது? ஒரு வேளைக்கு நாலு பேர் சாப்பிடற சோறுன்னா திங்கிறான். வெட்டிச் சோறு. எங்கேயாவது தொலைஞ்சு போகச் சொல்லேண்டி இந்த எழவை.’ அம்மா அழுதாள். அவள் கண்ணிலிருந்து மோர் மிளகாய்க் கரண்டியில் ஜலம் விழுந்து ‘சுர்ர்’ என்றது. ‘கிறுக்கனா இருந்துட்டுப் போறான். ஒங்க சோத்தை நீங்களே தின்னுங்கோ. என் பிள்ளையை நான் காப்பாத்திக்கிறேன். எதுக்கு அவனைக் கரிச்சிக் கொட்டறேள்? எல்லாரையும் போல இருந்தா அவனும் படிச்சு, பாஸ் பண்ணி ஒரு வேலைக்குப் போயிருக்க மாட்டானா?’

பிராமண சமுதாயத்தில் இப்படிக் குறை வளர்ச்சி உள்ள பல பிள்ளைகளை நான் தஞ்சாவூரிலும் ஸ்ரீரங்கத்திலும் பார்த்திருக்கிறேன். தெருவுக்கு ஒரு பையன் இருப்பான். ஆனால் அதெல்லாம் நல்ல வளமான குடும்பங்கள் என்பதால் இது போன்ற பிள்ளைகளை அவர்கள் எந்தக் காலத்திலும் வீட்டை விட்டுத் துரத்தியதில்லை. குடும்பத்தில் அவனும் ஒருவனாகவே இருந்து வருவான். ஆனால் நம்பியின் கதை அர்ச்சகர் வீட்டுக் கதை. பரம ஏழைக் குடும்பம்.

ஒருநாள் பையனை பெரிய பண்ணையார் வீட்டில் ஊருணியிலிருந்து ஜலம் கொண்டு விடும் வேலையில் சேர்த்து விடுகிறார்கள். மாதம் ஐந்து ரூபாய் சம்பளம். மாட்டேன் போ என்கிறான் பையன். அதுவரை அடித்திராத அம்மா ஒரே ஒரு அடி போடுகிறாள். முதுகு சிவந்து விடுகிறது. அம்மாவுக்கு பலம் அதிகம். இவ்வளவு பெரிய பிள்ளையை அடித்து விட்டதற்காக அழுகிறாள்.

பண்ணையார் வீட்டுக்குப் போகிறான் பையன். ‘சுப்பையா மாமா என்னை நிமிர்ந்து பார்த்தார். மூக்குக் கண்ணாடி மூக்கு நுனியில் ஒட்டிக் கொண்டு விழுவது போல் விழாமலிருந்தது. ‘எங்கடா வந்தே?’ என்று கேட்டார். அவருக்கு ரொம்ப ப்ரௌடு. பெரிய பணக்காரர் இல்லையா?’

வீட்டுக்குள்ளே போய் காமு மாமியைப் பார்க்கிறான். காமு மாமியும் கொஞ்சம் ப்ரௌடுதான் என்று அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால் அழகி. கடலைமா இருக்கே, அந்த நிறம். சுப்பையா மாமா அவளுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாதவர். பையனை அந்த வீட்டு வேலைக்காரி, கிறுக்கு என்று கிண்டல் செய்யும்போது காமு மாமி அவனுக்கு ஆதரவாகப் பேசுகிறாள். அவனைப் பார்த்தா கிறுக்காட்டமா இருக்கான்? ராஜா மாதிரி இருக்கானே?

காலையும் மாலையும் ஊருணியிலிருந்து ஒரு மைல் தூரத்திலிருக்கும் மாமா வீட்டுக்கு ஜலம் சுமக்க வேண்டும். காலையில் நாலு குடம், மாலையில் நாலு குடம். ஒருநாள் காமு மாமி அவனை நெருங்கி அவனைக் கிள்ளி, கன்னத்தை நிமிண்டி என்னென்னவோ செய்கிறாள். இவன் பயந்து போய் வீட்டுக்கு ஓடி வந்து அம்மாவிடம் சொல்லி விடுகிறான். (பையனுக்கு 25 வயது.) ‘அட மானங்கெட்ட தேவடியா’ என்று ஆரம்பித்து காமு மாமியை அம்மா திட்டுகிறாள். பிறகு பையன் ஒரு சிறிய கோவிலுக்கு அர்ச்சகர் வேலைக்கு அனுப்பப்படுகிறான். பிரகாரத்தில் அரளிப்பூ பூத்திருக்கும். இரட்டை அரளி சிவப்பாக மணக்கும். காசி அரளி மஞ்சளாகப் பூத்துக் கிடக்கும். அந்தக் கோவில் பக்கத்தில் மகராஜன் என்ற மாடு மேய்ப்பவன் பையனுக்கு சிநேகமாகிறான். கதை முழுவதையும் பையன்தான் நமக்குச் சொல்கிறான் என்பது முக்கியம். மகராஜன் பீடி குடிப்பான். எனக்கு பீடி குடிக்கத் தெரியாது. புகையை இழுத்து மூக்கு வழியாக விடுவான். இப்படி தினமும் பீடி குடித்தால் கடைசியில் இருமல் வந்து அவன் செத்துப் போய் விடுவான்.

இந்த இடம்தான் நம்மையும் இந்தக் கதையில் வரும் இளைஞனையும் வேறுபடுத்திக் காண்பிக்கும் பகுதி. எப்பேர்ப்பட்ட கலை ஆளுமை இருந்தால் இதை எழுத முடியும் என்று வியக்க வைக்கும் இடம் இது. பீடி குடித்தால் செத்து விடுவார்கள் என்பது அவனுக்கு அவன் அம்மா சொன்னதாக இருக்கலாம். ஆனால் நாம் அதை நம்ப மாட்டோம். நம்முடைய தர்க்கம் அதற்கு இடம் கொடுக்காது. அந்தப் பிள்ளை அதை நம்புகிறான். அப்படி நம்புவதால் அவனை நாம் கிறுக்கு என்கிறோம்.

ஒருநாள் மகராஜன் பையனிடம் தீப்பெட்டி கேட்கிறான். உடனே பையன் பீடியை வாங்கிக் கொண்டு போய் கோவிலுக்குள் இருக்கும் விளக்கில் பற்ற வைத்துக் கொண்டு போய் கொடுக்கிறான். பின்னால் வந்த அப்பா அதைப் பார்த்துவிட்டு, ‘ஸ்வாமி விளக்கிலயாடா பீடி கொளுத்தினே? ஓங்கண் அவிஞ்சு போகத்தானே?’ என்று கத்துகிறார். முதுகிலும் இரண்டு அறை வைத்தார். வலிக்கவில்லை. அம்மா அடித்தால்தான் வலிக்கும்; அம்மாவுக்கு ரொம்ப பலம்.

அர்ச்சகருக்கு மடப்பள்ளியில் சாதம் வடிக்கும் வேலையும் உண்டு. அந்த வேலையை பையனுக்காக மகராஜன் செய்து கொடுக்கிறான். ஒருநாள் மகராஜன் வரவில்லை. பையனே வடிக்க முயன்று கொதி கஞ்சி அவன் கை, கால், நெஞ்சிலெல்லாம் கொட்டி விடுகிறது.

ஒருநாள் கோவிலுக்குப் பின்னே உள்ள குளத்தில் ஜானகி குளித்துக் கொண்டிருந்தாள். சீனு மாமாவின் பெண். பையனிடம் ஒரு நெல்லிக்காயைக் கொடுத்து அவளுடைய (வெண்ணிறக்) கழுத்தில் அடி என்கிறான் மகராஜன். பையனுக்கு ஒரே பயம். மகராஜன் வற்புறுத்துகிறான். நெல்லிக்காய் கணக்காக அவள் முதுகில் படுகிறது. மகராஜன் ஓடி விடுகிறான்.

வீட்டுக்குப் போய் பையன் ‘அம்மா, சாதம் போடுடி, பசிக்கிறது’ என்கிறான்.

‘மண்ணை வாரித் தின்னேண்டா! என் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கிறதுக்கேன்னு வந்து பொறந்துட்டியே… ஏண்டா அந்தப் பொண் மேலே நெல்லிக்காயை விட்டெறிஞ்சே? அவ அம்மா இங்கே வந்து பேசின பேச்சுக்கு நாக்கைப் பிடுங்கிக்கலாம் போலிருக்கேடா எனக்கு… போன ஜென்மத்திலே என்ன பாவத்தைப் பண்ணினேனோ? எனக்குன்னு மணியா வந்து பொறந்தயே… எதுக்குடா இளிக்கிறே? நாறப் பொணமே… இனிமே இப்பிடி எல்லாம் செய்வியா? செய்வியாடா நீ…’

அடுப்பு ஊதும் ஓமக்குழலால் அவன் முதுகில் அடிக்கிறாள் அம்மா. ராத்திரி அப்பாவும் அடித்தார். அப்பாவுக்கு பலமே இல்லை. அம்மாவுக்குத்தான் ரொம்ப ரொம்ப பலம்.

இப்படிக் கைவிடப்பட்ட பையன்களைத்தான் யாருமற்ற அனாதைகளாக, பைத்தியங்களாக சாலைகளில் பார்க்கிறோம்.

இப்படியாக 24 கதைகள் எழுதியிருக்கிறார் கிருஷ்ணன் நம்பி. ஒரு கதை கிடைக்காததால் அது தொகுப்பில் இல்லை.

***





கிருஷ்ணன் நம்பி அவர் நண்பர்களான கி. ராஜநாராயணனுக்கும், சுந்தர ராமசாமிக்கும், மௌனிக்கும் எழுதியுள்ள கடிதங்கள் பொக்கிஷம் என்று சொல்லத்தக்கவை. இன்றைய காலகட்டத்தில் இப்படியெல்லாம் எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் எழுதிக் கொள்வார்கள் என்பதற்கான எந்த ருசுவும் இப்போது இல்லை. பிரியமும் அன்பும் இலக்கியத்தின் மீதான தீராக் காதலும் மிகுந்த கடிதங்கள் அவை. அந்தக் கடிதங்களுக்கு எப்படியெல்லாம் பதில் வந்திருக்கும் என்று யோசிப்பது சுவாரசியமாக இருந்தது.

***

காலச்சுவடு வெளியீடான ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ என்ற தொகுப்பின் இறுதியில் சுந்தர ராமசாமி எழுதியிருக்கும் ஒரு கட்டுரை தமிழ் தெரிந்த அத்தனை பேரும் படிக்க வேண்டிய ஒன்று. எழுத்தாளர்களாக விரும்பிய கிருஷ்ணன் நம்பி, சுந்தர ராமசாமி என்ற இரண்டு இளைஞர்கள் எப்படியெல்லாம் இந்த சமூகத்தை எதிர்கொண்டார்கள் என்பதை சு.ரா. அற்புதமாக எழுதியிருக்கிறார். ‘கலை இலக்கியத் துறையையோ அல்லது வருமானத்திற்கு உத்தரவாதமில்லாத வேறு துறையையோ தங்கள் ரசனை காரணமாகத் தேர்வு செய்ய நேர்ந்து விடும் இளம் வயதினருக்கு இந்திய வாழ்க்கையும் அதிலும் கூடுதலாக நம் தமிழ் வாழ்க்கையும் அளித்து வரும் சோதனைகள் மிகக் கடுமையானவை. எங்கள் இலக்கிய ஈடுபாடுகள் காரணமாக எனக்கும் நம்பிக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளும் அவற்றால் விளைந்த சங்கடங்களும் மிகுந்த ஒற்றுமை கொண்டவை. இதனால் எங்கள் பிணைப்பு மேலும் நெருங்கிற்று. கல்வியைத் தொடர்வதில் வெறுப்பு; லௌகீகத் திறன்களை வளர்த்துக் கொள்வதில் உதாசீனம்; எதிர்காலம் பற்றிய கவலைகள்; இலக்கியம் தவிர பற்றுக்கோடு ஏதுமில்லை என்ற கற்பனை; பச்சாதாபம்; தாழ்வு மனப்பான்மை போன்ற பலவும் எங்களிடம் பொதுவாக இருந்தன. இவை தவிர மொழிக்குள் கொண்டு வரச் சங்கடமான மனச்சிக்கல்கள் எவ்வளவோ. இவற்றால் ஏற்பட்ட நிலைகுலைவுகளை அந்த வயதில் விவேகத்துடன் மதிப்பிடவும் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இந்தப் பின்னணியில் எங்கள் இலக்கிய நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் குடும்பம், சுற்றம், சமூகம் ஆகிய தளங்களிலிருந்து தொடுக்கப்படும் தாக்குதல்களிலிருந்து நிமிரவும் மரணத்திற்கு இட்டுச் செல்லும் மனச்சோர்விலிருந்து மீண்டு வாழ்வுக்குள் ஊன்றவும் எங்கள் உறவு உதவிற்று.’

இதன்பிறகு அந்தக் கட்டுரையில் இளம் எழுத்தாளர்களுக்கு எதிராகக் குடும்பவும் சமூகமும் தொடுக்கும் கடுமையான எதிர்ப்பு பற்றி விரிவாகப் பேசுகிறார் சு.ரா. எதிர்ப்பு அல்ல, போர் என்ற வார்த்தையைப் பிரயோகிக்கிறார் அவர். தமிழ்ச் சமூகத்தைப் போல் எழுத்தாளனை முழுமையாகப் புறக்கணிக்கும் ஒரு சமூகம் தான் அறிந்த வரையில் வேறு எங்குமே இல்லை என்கிறார் சுந்தர ராமசாமி. இந்தப் பின்னணியில்தான் கிருஷ்ணன் நம்பியின் கதைகள் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.