Wednesday, 10 February 2016

அதிகம் பாவிக்கப்பட்ட பறவை - றியாஸ் குரானா, பிரியாத் துயர்




யமுனை செல்வன்

வாசகனின் குறிப்புகள் :-)

எனக்கு பிடித்த கவிதைகள் 3 – றியாஸ் குரானா
Posted onAUGUST 12, 2016Categoriesகவிதை


றியாஸ் குரானா எழுதிய கவிதை

அதிகம் பாவிக்கப்பட்ட பறவை

இது அதிகம் பாவிக்கப்பட்ட ஒரு பறவை
இன்னும் பழுதடைந்துவிடாமல்
நல்ல நிலையில்தான் உள்ளது
பல வருடங்களாக
திரும்பத் திரும்ப வரையப்பட்டபோதிலும்
ஒரு இறகும் தொலைந்துவிடவில்லை
நாம் இமைக்கும் ஒவ்வொரு முறையும்
வண்ணங்களை மாற்றிக் காண்பிக்கும்
இந்தப் பறவை;
தினமும் அதிகாலையில்
சித்திரத்திலிருந்து வெளியில் சென்றுவிடுகிறது
அந்த நேரத்தில்தான்
சித்திரத்தில் திருத்த வேலைகள் செய்யமுடியும்
இரவில், சித்திரத்திலுள்ள
வர்ணங்களையெல்லாம் தின்றுவிடுகிறது
இப்படித்தான் அன்றொரு நாள்
ஒரு அழகிய பாடலை எழுதிவைத்தேன்
கண்முன்னே சொற்களைக்
கொத்தித் தின்றேவிட்டது
இலக்கியங்களும்
ஓவியங்களும்
மிக அதிகம் பாவித்த இந்தப் பறவை
இன்னும் பழுதடைந்துவிடாமல்
நல்ல நிலையில்தான் உள்ளது
பெரும்பாலும்
அந்தப் பறவை எதுவென்று
இப்போது ஊகித்திருப்பீர்கள்
இல்லையெனில்; இனியும் ஊகிப்பதற்கான
அவகாசம் உங்களுக்கில்லை
வாசிப்பதை நிறுத்திவிட்டு
தயவு செய்து போய்விடுங்கள்
இது, ஓய்வெடுப்பதற்காக அந்தப் பறவை
கவிதைக்குள் வருகின்ற நேரம்

°
தமிழில் அதிகம் பாவிக்கப்படாத கவிஞனாகவே குரானாவை பார்க்கிறேன். இலக்கிய நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் மனதில் விதைப்பது இது தான் ‘குரானாவை வாசியுங்கள்’. எனக்கான கவிஞராக தெரிகிறார். வாய்ப்பு கிடைத்தால் முழுமையாக வாசிக்க வேண்டும்.





Riyas Qurana - றியாஸ் குரானா


22 hrs ·

Non Linear poem

பிரியாத் துயர்

............................

அவரவர் இருக்கையிலமர்ந்து

மூழ்கத் தொடங்குகிறோம்

அது அவளும் நானும்தான்

அந்த ரயில் பெட்டியில்

நிறைந்திருக்கும் இரைச்சலில்

சிக்கி சிதைந்துவிடாமல்,

மூழ்கி கண்டுபிடித்த பேரமைதி

அதற்குள்தான் இருக்கிறது

தற்செயலான பார்வைகள்

வார்த்தைகளை மிக வேகமாக

அழிக்கத்தொடங்கின

உதட்டிலிருந்த சொற்கள்

அழிவதைப் பார்க்கிறேன்

சற்று ஊடுருவி,

மனதிலிருந்த சொற்களையும்

அழித்துவிட்டன

இருவரும் அமைதிக்குள்

நடந்து கொண்டிருக்கிறோம்

ரயில் பெட்டியின் பேரிரைச்சலினுள்

சிறு தீவுபோல

அந்தப் பேரமைதி இருக்கிறது

என்னையே குறிவைத்து

அசையும் காற்று

ரயிலினுள் நுழைகிறது

வழக்கத்திற்கு மாறாக

யாருக்கும் தெரியாமல்

மரக்கிளைகளினுள் நுழைந்தததைப்போல

அவளுடன் விளையாடுகிறது

அங்கிருந்தவர்கள்

காற்றே இல்லை, வியர்க்கிறது

எனப் பேசிக்கொண்டதாக

பயணத்தின் முடிவில் அறிந்தேன்

அந்த ரயில்

ஒரே நேரத்தில்

இரண்டு திசைகளிலும்

பயணித்துக்கொண்டிருந்தது.

நானிறங்கும்போது அவளும்

அவளிறங்கும்போது நானும்

கையசைத்துவிடைபெற

இது உதவியாக இருந்தது.

எதிரெதிர்த் திசையில்

மிகத்தொலைவில்

இரண்டு முடிவுகளைக்கொண்ட

ஒரு பயணத்தை

ஒன்றாகத் தொடர்ந்தோம்

இருக்கையில் மூழ்கிய நாங்கள்

மிதந்து மேலே வருகிறோம்

கரையேறியபின்,

நான் மட்டுமே இங்கிருப்பதைப்போல

அவள் மட்டுமே அங்கிருப்பாள்

எம்மைச் சுற்றி இரைச்சல்.

இறங்க வேண்டிய இடம்

தவறிப்போயிருக்கும்

அங்கும் தவறிப்போயிருக்கலாம்.

ரயிலுக்காக காத்திருக்கிறேன்

காத்திருக்கும் ரயில் வந்தால்

அதில் நான் பயணித்தால்

நடக்க வேண்டியிருப்பவைதான் இது.

இன்னும் அந்த ரயில் வரவில்லை.