Saturday, 6 February 2016

அரை மணி நேர அற்புதம் - கால சுப்ரமணியம்


அரை மணி நேர அற்புதம் -  கால சுப்ரமணியம்
--------------------------------------
ஆற்றின் கழிமுகத் தேக்கம் -
வலப்புறக்கரையில்
அடர்ந்து சடையும் மரங்களின் பசுமை
இடப்புறத்தில்
பழங்கால மாளிகையொன்றின் முதிர்ந்த வெண்மை.
விரிந்து பரந்து ‘திரும்பிப் பார்’ என்று அதட்டும் கடல்
இடையில் ஓர் உடைந்த பாலம்
மேற்கே, அஸ்தகிரிக்குள்
ஆழ்ந்து கொண்டிருக்கும் சூரியன்
வானம் முழுக்க முகில் பட்டாளம்.
*
கரையோரமாக வளைந்து குனிந்து
கிளிஞ்சல்கள் பொறுக்கி வந்த இருவர்
பாலத்தருகில் கொட்டிவைக்கப் பட்டிருந்த
கிளிஞ்சல் குவியலின் எதிரே வந்து
திகைத்து நிற்கின்றனர்.
கையிலிருந்ததை எறிந்துவிட்டுச்
சலிப்புடன் ஒருவன் செல்ல
ஆவல் மீதூரக் குவியலைக்
கிளறிப் பார்க்கிறான் மற்றவன்.
இந்த இடத்திலும்
டிரான்ஸ்சிஸ்டர் வைத்துத் திருகிக் கொண்டு
எவ்வகைப்பட்டவர் இவர் என்ற வெளிப்படை துலங்க
தூரத்தில் இன்னும் ஓர் முதியவர்.
கடல் எதிரே அமர்ந்து
கண்ணை மூடித் தியானித்திருக்கும் ஒருவரைத் தாண்டி
ஒண்ட வெட்டிய தலைமுடியுடன்
வெள்ளையரைக்கால் சட்டை அணிந்து
எதையும் நோக்காது
நேராய் நிமிர்ந்து வேகமாய் நடந்து
பயிற்சி செய்கிறார் வேறொருவர்.
*
மரண காலத்தும் தன் தானச் சிறப்பையே
தானமாய் அளித்தானாம் கர்ணன் - சூரியகுமாரன்.
இங்கே, சூரியனிலும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது.
உலகிலேயே அழகான இடங்களில் இதுவுமொன்றென்று
யாரோ ஒரு வெளிநாட்டுக்காரன் எழுதியதன்
நிஜமும் பிறந்தது.
(உலகிலேயே ஓர் அபூர்வமான மனிதர்
நடந்ததும்கூட இங்கேதான் என்றும் ஓர் எண்ணம்
இடையிட்டு மறைந்தது)
அலை மோதிக் கோஷிக்கும் கடலின் அகண்டம்.
கழிமுக (கழிவு) நீரில்
கண்ணைப் பறித்து மனதைத் துடைக்கும்
தகத்தகாய வெளிச்சம்
முகில்களில் ரணகளம்.
மரப் பசுஞ் செறிவு நிழலுருக் கொண்டு
பின்னணி விளிம்பிடப்
பொன்னாய்க் கொதிக்கும் சூரியன் -
கனவையளிக்கும் மாளிகை மங்கல்.
அந்தி மயங்கலில் கழிமுக நீரில் கட்டுமரத்தில்
வலை வீசித் திரியும் கருத்த உருவங்கள்.
அங்காங்கே தெரியும்
மேட்டிலும் - குறைநீர் வெளியிலும் -
இரை தேடித் தேடி
நின்று நகரும் கடற்பறவைகள்.
பறவைகள் இந்த அழகை அறியாது;
அழகில் அவையும் ஒன்றாயிருப்பதால் அவசியமுமில்லை
(அபத்தம் அபத்தம் என்றது மனசு)
காரியமே குறியாய் வலை விரித்து
தேடி நகரும் இந்த உழைப்பாளிகள் -
இயற்கையுடன் இணைந்து இழையும்
அபேத நிலையா?
இயற்கையை உணர வாய்ப்பில்லாமல்
தனிப்பட்டு விட்ட கொடுமையா?....
‘அரேபியாவைச் சித்தரிக்க
ஒரு அயல்நாட்டான் விரும்பினால்
மணல் வெளிப் பாலையை
தூரத்து மேட்டில் அசைந்து நகரும்
ஒட்டக வரிசையை
விவரித்த பின்பே தன்
விஷயத்துக்கு வருவான் -
அராபியனோ
நேரடியாக விஷயத்துக்கே வந்துவிடுவான்.’
மனதில் எழுந்து மறைந்த
கொஞ்ச நேர எண்ணச் சிதறல்.
பின், காட்சி மட்டுமே.
*
அழகும் அமைதியும்
எந்த நேரமும் உடையது இவ்விடம், எனினும்
அரை மணி நேரத்தில்
இவ்வதிசயம் நிகழ்ந்து முடிந்தது.
இன்னும் கொஞ்ச நேரத்தில்
பறவைகள் தங்கள் கூட்டில் அடையும்.
தொழிலை முடித்துக் கொண்டு
அவர்கள் திரும்பி விடுவார்கள்.
*
கடற்கரையில் அவ் அகால வேளையில்
யாருமேயில்லை.
உருண்டு புரளும் கடல் மட்டும்
வழக்கம் போல்
எதையோ சொல்லிச் சலித்துக் கொண்டது.
*
கனவு, 1990.
*
முன்னுரையில் பிரமிள்......
கவிதையில் அடையாளம் காட்டப்படாவிட்டாலும், தியாஸிபிக்கல் ஸொஸைட்டி கடலைச் சந்திக்கும் இடமான அடையாறு முகத்துவாரத்திற்கு (என்னுடன்) கவிஞர் வந்திருந்த ஒரு சந்தர்ப்பம்தான், ‘அரைமணி நேர அற்புதம்’ என்ற கவிதையாக உருவெடுத்து இருக்கிறது. இந்த இடத்தின் கடற்கரையில் ஜே.கிருஷ்ணமூர்த்தி உலவியவர் என்ற தகவல், கவிதையில் எவ்வித ஆடம்பரமும் அற்ற சங்கேத மொழியில் பிறந்து, கவிதை தீற்றுகிற இயற்கையினது பேருருவுடன் இணைகிறது. நாரணோ ஜெயராமனின் வேலி மீறிய கிளை கவிதைத் தொகுப்பில் உள்ள ‘அடையாற்றுப் பறவை’, இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது. சங்கேதமாக ஜே.கிருஷ்ணமூர்த்தியைக் குறிப்பிடுவதாக நாரணோ ஜெயராமன் என்னிடம் கூறியிருந்திராவிட்டால், இந்த ‘அடையாற்றுப் பறவை’ யாரெவர் என்பது எனக்கு (பிறர்க்கு?) தெரிந்திராது. சங்கேதம் என்பது தடயத்தை அளித்தாக வேண்டும். நல்லவேளையாக, ‘அரைமணி நேர அற்புதம்’மில் தோன்றும் கிருஷ்ணமூர்த்தி, கால சுப்ரமணியத்தின் தீர்மானப் பொருளல்லர். இது என்ற சுட்டல் அற்ற பேருருவின் அம்சங்களுள், ‘இடை விட்டு’ மறைபவராகவே கிருஷ்ணமூர்த்தி இக்கவிதையில் வருகிறார். எனவே, இவரைத்தான் கவிதையின் அந்த வரிகள் குறிப்பிடுகின்றன என்று அறியவேண்டிய அவசியத்தில் கவிதை தேங்கவில்லை. தமக்கு முக்கியத்வம் தரக்கூடாது என்று கிருஷ்ணமூர்த்தி மிக அழுத்தமாகக் கூறியிருக்கிறார் என்பதும், அவரது செய்தியின் அத்திவாரமே இதுதான் என்பதும், எவ்வளவுக்கு இந்தக் கவிதையை எழுதிய மனசால் உணரப்பட்டிருக்கின்றன என்று இது காட்டுகிறது (1993)
LikeComment


திரிநிலை
---------------
மேய்ந்து கொண்டிருந்த
எருமையின் மீது
கரிச்சான் அமர்ந்து
தோரணையாகக்
குரல் எழுப்பியது.
வாலால் அடிக்க
எருமை
வாகு பார்க்கவே
பக்கத்து மரத்துக்குப்
பறந்து சென்றது.
எருமை அதையே
ஏறிட்டுப் பார்த்து
மேயாமல் நிற்பதை
மேய்ப்பவன் கண்டு
மனிதத்தைக் களைந்து
மிருகமாகித்
தடியால் அடித்தான்.
பறவை மரத்தின் மேல்
பார்த்திருந்தது.

(1975) மானுடம், 1980.
வீடு (தொகுப்பு - பால்ராஜ் கென்னடி, அன்னம் வெளியீடு), 1986.
குமுதம், 30.11.1995.
முன்னுரையில் பிரமிள் கணிப்பு,,,,,,
‘திரிநிலை’ கவிதை 1975-ல் எழுதப்பட்டிருக்கிறது; இதே காலகட்டத்தியவை, ‘ஐந்து கவிதைகள்’-இன் முன் நான்கு பத்திகள் மற்றும் ‘சுரணை’. ‘ஐந்து கவிதை’களின் வீர்யம் சற்றே குறைந்ததாக இருந்தாலும், விசேடமானது. இவற்றுள் ‘திரிநிலை’ கவிதையுடனேயே கால சுப்ரமணியத்தின் கவிதைகள் எனக்குப் பரிச்சயமாயின என்று ஞாபகம். (பிரமிளின் ‘நீலம்’ சிறுகதை வெளிவந்த ‘வீடு’ தொகுப்பில் ‘திரிநிலை’யும் இருந்ததால் அப்போது பார்த்திருக்கலாம்-கா.சு.) இக்கவிதையில் பறவை, மிருகம், மனிதன் என்ற மூன்று உயிரம்சங்களின் ஒன்றிணைப்பு, எனிமையான அதேசமயத்தில் ஆழ்ந்து ஓடத்தக்க பொருளம்சத்தை நிர்ணயிக்கிறது. இந்த ஒன்றிணைப்பில், மனிதனின் பங்கு மனிதத் தன்மையைப் பேணுவதினின்றும் பிசகுவதாகக் கவிதை கூறுகிறது. சற்றே சாதுர்யமாகப் பின்பகுதி இருந்திருந்தால், இதுவே அவரது மிகச்சிறந்த கவிதைகளுள் இடம் பிடித்திருக்கும். ‘சுரணை’யில் இந்தச் சாதுர்யம் மட்டும், அதுவும் கவித்வமாக உள்ளோட்டம் பெறாத மேல்தள வெளியீடாக வந்துவிட்டது. ‘ஐந்து கவிதைகள்’, பார்த்தன்-பார்த்தசாரதிப் பிரதிமைகளை, நவீனக்களத்தில் லகுவான பரிஹாஸத்துக்கு உடன்படுத்திப் பேசவைக்கும் கவிதை. பேச்சின் லாவகமும் கவித்துவ வீர்யமும் இணைகின்றன இதில். இந்தக் கவிதைகளிலேயே கால சுப்ரமணியத்தின் சுயமான ஆம்சங்கள் பிறந்துவிட்டன - குறிப்பாகத் ‘திரிநிலை’யில். (1993)

எதிர் முரண்
------------------
இதோ,
நீரிலிருந்து எழுகிறது நெருப்பு!
விரக்திப் பாதாளத்தில்
நம்பிக்கை நூலேணி.
சோம்பலின் உச்சியில்
சுறுசுறுப்பின் மின்னல்.
சலனமற்ற ஓய்வின் நரம்புகளில்
செயல் துடிப்பின் நாதம்.
என் கவிதைகள்கூட
தாங்கமுடியாத
வறட்சியில்தான்
பயிராகின்றன!
எனக்கே சொந்தமான
உணர்வுகளிலிருந்து
ஓர் அந்நியன்
எழுந்து நின்று
சிரிக்கிறான்! (1984) தீட்சண்யம், 1986.
புனர் வடிவங்கள்
-------------------------
1.
எதையோ சொல்ல நினைத்தேன்.
நினைக்கையிலேயே பாதி மறந்தது -
மறந்ததைத் தேடியுழன்று மீதியும் இழந்தேன்.
இரண்டையும் எண்ணித் திகைக்கையில்
புலன்கள் தகர்ந்தன.
தகர்ந்ததன் சாரம் மூளையில் படர
செழித்து முகிழ்ந்தது ஒரு மலர்.
மலர் வெடித்து மகரந்தம் சிந்தியும்
வண்டுகளற்றதால்
தன்மகரந்தச் சேர்க்கையே சாத்தியமாயிற்று.
சேர்க்கையில் கிடைத்த விதை
வேறு நிலமற்று
அதிலேயே விழுந்து முளைத்தது.
வேர் பிரிந்து
பாதம் பற்றி
ஆழம் சென்று நிலைத்தது.
முளைத்த செடி
பின்னும் மரமாயிற்று.
மரக்கிளைகள்
அதன் தோள்களைத் துளைத்துக்
கைகளாய் அலைந்தன.
அவ்வலைதலில் சிக்கிய
இரையிலொன்று நீயானாய்.
உன் ரத்தம் எனக்கு உயிர் கொடுக்கும்.
கொடுத்துமென்ன?
நானோ தாவரம்.
பறவைகளின் சத்தமின்றி
பூக்களின் வாசனையற்று
வித்துமின்றி நிற்கிறேன் நான்.
இரை தேடும் தவிப்பே மிச்சம்.
2.
நான் சொல்ல வந்தது
முன்பே சொல்லிச் சலித்ததே.
இருந்தும் உனக்கு உணர்வூட்டவில்லை -
நெருப்பில் நீறுபூத்திருந்தது.
எப்போதோ வீசிய காற்றில் அது
சுடர்விட்டுப் பற்றியெரிந்தது.
அழுக்குகள்
அதற்கு ஆகாரமாயின.
ஆகாரம் தீர்ந்த பின்னும்
அகோரப் பசி தீராமல்
முதலில் என்னை விழுங்கியது.
இன்னும் பசியடங்காமல்
தன்னையும் விழுங்க,
விழுங்கியதின் கழிவாய்ப்
புனர்ஜன்மம் பெற்றோம்.
மீண்டும் பழசையே சொல்லவருகிறேன்
நீயோ கேட்க மறுக்கிறாய்.
செவிட்டுக் காதில் சொல்வதே
எனக்கு விதித்த சாபம்.
கேட்காமல் போவது
உனக்குக் கிடைத்த சாபம்.
(1982) லயம், 1986.

முன்னுரையில் பிரமிள்,,,,,,,
இயற்கையின் சுயாதீனப் பிரபஞ்சமே, கால சுப்ரமணியத்தின் தனித்துவத்தை நிர்ணயிக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தைப் பேணவும் இதனுடன் இணையவும் மாட்டாத மனிதன், அவரால் ஓர் அந்நியனாக இனம் காட்டப்படுகிறான். கவிஞர், தம்மீதே இந்த நிலையை ஏற்றிக்காட்டுகிற உத்தியின்மூலம் ஒருபுறம், பாசாங்கற்ற உள் உறுதியை அவரது கவிதைகள் பெறுகின்றன. மறுபுறம், வெகுசூசகமாகத் தூரத்து டேஞ்சர் சிக்னல்போல, ஒவ்வொரு மனிதனையும் உணர்வுபூர்வமாகப் பொறுப்பேற்று, மேற்படி பேணல்-இணைதலை அநுசரிக்கும்படி எச்சரிப்பது, உள்ளர்த்தம் பெறுகிறது. இதற்காக, ஆழ்ந்து கனம்கொண்டு ஒலிக்கும் ஆதங்கக் குரலை மீறி, ஆத்திரம் என்கிற rancor நிலைக்குக் கவிதையைக் கொண்டுபோகிற ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது, உறுதியின் - கருத்தியல் கண்காணிப்பின் - விளைவு. இந்த உறுதியும் கண்காணிப்பும் இல்லாதவர்களுக்கு, ஆத்திரம் ஓர் அலிபி. ஆனால், கவித்வத்துக்கு அது டி.பி. இது கட்சிவாதிகளிடம் மட்டுமின்றி, சிலவேளை, அதுவும் இயற்கைக்கு ஏற்படும் கேடு பற்றிப் பேசவரும் சிறந்த ஒரு கவிஞரிடம்கூடச் சமீபத்தில் தலைகாட்டிவிட்டு, நல்லவேளையாக மறைந்துவிட்டது.(1993)

ஆரண்யம்
----------------
சுதந்திரத்துடன் கும்மாளமிட்டுக்
குதித்து வழிந்தது அருவி.
‘நீ பார்த்ததே என் பவித்திரத்துக்குப் பங்கம்’ என்றது.
ஏறும்போது மூச்சிரைக்கவைத்து
இறங்கும்போது வழுக்கிவிட்டுக்
குறும்பு செய்தன பாறைகள்.
கண்காணாமல் இருந்து அதட்டலிட்டன மிருகங்கள்.
கால்பட்டதும் தூளாகித் திடுக்கிடவைத்தன சுள்ளிகள்.
இருட்டின் நாள்பட்ட சிறைவாசத்தில்
சோகைபிடித்து
பழுத்திருந்தது வெளிச்சம்.
என் நிழல் கண்டும் மருளாமல்
வாலசைத்து வெகுளியாய்ப் பார்த்தன
மடுவில் நீந்திய மீன்கள்.
வெகுநாள் ஆசையில் இங்கு வந்தேன் -
அடுத்த காலடியைப் பார்த்து வைக்கும்படி
கூச வைத்தது கானகம்.
‘ஏன் வந்தாய் ஏன் வந்தாய்’ என ஓலமிட்டுக்
குறுக்கே பாய்ந்தன பறவைகள்.
அமைதியின் பயங்கரம்
ஊற்றுக்கண் திறந்து கொப்பளிக்க
சௌந்தர்யத்தின் தெவிட்டலில்
திசை தெரியாமல் திக்குமுக்காடித்
திரும்பினால் போதுமென்று தவித்தேன்.
‘என்ன திருப்திதானே?’ என
வேண்டாத விருந்தாளியை
ஒப்புக்கு நலம் விசாரித்து,
‘எப்போது திரும்பப் போகிறாய்?’ என்று
காத்திருந்தது மௌனமாய்க் கானகம்.
(1979) படிமம், 1981. & கணையாழி, 1982.y · Yesterday at 10:12am
ஒன்றிரண்டாக...
-------------------------
இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்க
இன்றைக்கும் முடியாது போலிருக்கிறது...
*
ஒன்றிரண்டாகத்
தீபத்தின் சுடரை நக்கிக்
கருகும் விட்டில்கள்
மின் விளக்கின் கண்ணாடிச் சூட்டில்
இதமாய் ஒற்றிக் கொண்டன-
பெருத்தும் விட்டன என்று
சம்பந்தமில்லாமல் ஓர் அளவீடு...

பக்கத்தில் பூனை விளையாடுகிறது
பக்கங்கள் புரண்டுகொண்டிருக்கின்றன.
சடசடத்து வந்து வீழ்கிறது ஒரு பூச்சி.
(தயிர் சிலுப்பி என்பார்கள் இங்கே) அதைத்
தாவிப் பிடித்த பூனை
மறைவிடம் பார்த்துச் சென்றது கொறிக்க..
*
மனசுக்குள் துள்ளி விழுந்த இரைகளை
தின்று தீர்க்காமல்
பகுத்தாராய்கிறது மனது.
மனம் எதையோ நினைக்க
நினைவு வேறெதெற்கோ உயிர்கொடுக்கிறது
*
இன்று காலை
முகம் தெரியா ஒருவன்
ரொம்பச் சொந்தமாக முதுகு தொட்டு
ஒரு பெயரையும் சொல்லிக் கூப்பிட்டான்.
திரும்பியதும் முகம் மாற
மன்னிப்புக் கேட்டான்.
என்னில் எது அவனுக்கு
இன்னொருவனை ஞாபகமாக்கியது?
முன்பு அப்பாவும் இப்படித்தான்
எதையோ என்னில் பார்த்திருக்கிறார்.
அம்மாவும் அப்படித்தானென்று நம்ப மனதில்லை
என்றாலும் உண்மை அதுவாகவே இருக்கும்..
தன் மறுசாயலைச் சகோதரன் காண
சகோதரியோ நெட்டுயிர்த்திருப்பாள்.
எனக்கு நானே நானாயில்லாதது போல்
மற்றவர்க்கும் வேறானது எப்படி?...
*
மின்விளக்கினருகில் தொங்க விடப்படுகிறது
எண்ணெயில் தோய்த்த செய்தித்தாள்.
இதனை ஊடுருவிய ஒளி வயோதிகமடைந்து
மூலைச்சுவரில் விழுகிறது.
ஒரு பக்கத்துச் செய்திகள்
அத்துமீறி அடுத்த பக்கத்தில்
தலைகீழாய்த் தெரிகின்றன.
இரண்டு பக்கமுமிருந்து
ஒளியை நோக்கிப் பாய்ந்து
சுடரில் கருகுவதற்கு பதிலாக
செய்தித்தாள் பிசுக்கில் சிக்கி
ஏராளமாய்ச் சாகின்றன பூச்சிகள்.
*
முழுசையும் தின்று தீர்ந்ததா
மீதம் விட்டு வந்ததா என்று தெரியாமல்
திரும்பி வந்த பூனை
அருகில் விளையாடுகிறது..
*
படித்து முடிக்காவிட்டாலும்
இந்தப் புத்தகத்தை நாளை
திரும்பிக் கொடுத்தாக வேண்டும்.
(1990) நவீன கவிதை, 1994.
•••
முன்னுரையில் பிரமிள்,,,,,,,
1975-ல் எழுதப்பட்ட ‘திரிநிலை’ கவிதையில், கரிச்சான் ‘தோரணையாக’ குரலெழுப்புவதாகக் கூறித் தமது பார்வையுடன் நம்மை எளிதாக இணைக்கும் கவிஞர், 1990-ன் ‘ஒன்றிரண்டாக’ என்ற கவிதையில், இதேவகை எளிமை மூலம் மிகவும் ஆழமான விசாரணைத்தளங்களுக்கு நம்மை ஈர்த்துச் செல்கிறார். ‘ஒன்றிரண்டாக’ என்ற கவிதை, புத்தகவாசிப்பில் கவிஞர் ஈடுபட்டிருக்கும் போது அவருக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கிறவற்றைப் பதிவுசெய்கிறது: ஓர் இரையைப் பிடிக்கும் பூனையின் பிரதிமையில், மனசின் இரைபிடிப்புகள் எதிரொலிக்கின்றன. கவிதை முடிவில், புத்தகத்தைப் படித்து முடிக்காவிட்டாலும் நாளைக்குத் திருப்பித்தரவேண்டும் என்ற கூற்று, நம்மை அதிரவைக்குமளவுக்கு, கவிதை நம்மை ஓர் ஆழ்பொருள் நிலையில் இழுத்துச் செல்கிறது. இங்கே, புத்தகம் வாழ்க்கையாகவும் அதைத் திருப்பித்தருதல் மரணமாகவும் பரிபாஷார்த்தம் பெறுகின்றன. ‘புத்தகம் இப்போதே படித்து முடிக்கப்படவேண்டும்’ என்கிற ஒரு தீவிரநிலை, கிருஷ்ணமூர்த்தியின் Urgency of Change, Book of Life என்ற தலைப்புகளைக்கூட எதிரொலிப்பதாகக் கொள்ள இட முண்டு.
1979-ன் ‘ஆரண்யம்’ கவிதையும் 1990-ன் ‘ஒன்றிரண்டாக’ கவிதையும் ஒப்பிடத்தக்கன. ‘ஆரண்யம்’-இல் சந்திக்கப் படுகிற இயற்கையின் அமானுஷ்ய நிலையிலும், ‘ஒன்றிரண்டாக’வில் சந்திக்கப்படுகிற புத்தகவாசிப்பு நிலையிலும், அவதான கதியின் ஒற்றுமையைக் காணலாம். இரண்டுமே, சொல்லப் பட்டதையும் தாண்டிய பொருளம்சங்களை ஜ்வலிப்பவை. இதில், ‘ஒன்றிரண்டாக’ ஓர் அரிய சாதனை. (1993)

தோற்றம்
--------------
வானம் கவிந்து பூமியைக் கவ்வ
பூமியெழுந்து வானில் புதைகிறது.
அலையலையாய்த் தாவும் நதி
தன் ஊற்றை நோக்கிச் சுருள்கிறது.
ஜீரணிக்கும் தன் ஓயாக் கிரியையில்
சுருங்கி விரிகிறது குடல் வலயம்.
யோனியில் ஆழ்ந்து வீர்யம் இழக்க
முயங்கிச் செல்கிறது லிங்கம்.
இருள் திரண்டு ஒளியைத் துடைக்க
ஒளியில் கரைகிறது இருள்.
ஆ! இல்லையில்லை!!
தன்னைத்தான் விழுங்கும் தணியாத தகிப்பில்
கருநெருப்பு வளையமிட்டுச்
சீறிக்கொண்டிருக்கும்
கால சர்ப்பம்!
உருமாறிப் பிறக்கவா அல்லது
உருவிழந்து மறையவா -
இந்தத் தவிப்பு?
ஒன்றிலிருந்து அநேகமாய் விரியவா?
அநேகத்திலிருந்து ஒன்றில் குறுகவா?
தொடர்பராத வட்டமாய்த்
துடித்துப் புரளும் அதன்
செதிள் உடம்பில்
தோன்றி மறையும் சொற்கள் யாவை?
துடித்துப் புரண்டு
அது எழுதிக் காட்டுவது எதனை?
நித்திய இளமையை அளித்துச்
சத்திய ஞானம் புகட்டித்
தீட்சை கொடுக்குமா?
அல்லது புயலுக்குத் தூண்டுமா?
அறிவுக் கனியைத் தின்னத் தந்து
விடுவிக்குமா?
அல்லது ஏமாற்றுமா?
பயத்தில் கட்டுண்டு
வசீகரத்தில் திளைத்து
அருகழைக்கும் ஆற்றலை
எதிர்க்க வலுவின்றி
அப்பால் கடந்தேகும்
வழியேதும் கிடைக்கலாம் என்ற
நப்பாசையும் துளிர்க்க
நெருங்கிச் சென்றால் -
சிறகு பெற்ற பாம்பாகச்
சாடிச் சுழல்கிறது காற்று.
நீலமாய் மலர்ந்து
ஓங்கார நாதமாய் விரிந்து
அதிர்ந்து சூழ்கிறது நச்சுவெளி.
பின்வாங்கவும் நினைக்காமல்
முன்னேறவும் முயலாமல்
இருப்பில் திகைத்து நிற்க -
யாரையும் விழுங்கும் நினைப்பற்று
தன்னையே விழுங்கும் இன்பவேதனையில்
வளையமிடுகிறது ஓரபோரஸ்.
வேதனை உக்கிரத்தில்
கொழுந்து விட்டெழுகிறது நெருப்பு -
தவிப்பின் எல்லையில்
திடீரென்று
சர்ப்பம் மறைந்து
புதிய ஜீவன் ஒன்று பிறக்கிறது.
திகைப்பை இழந்து
வியப்பில் நிறைய
நெருப்பில் நீந்தி விளையாடுகிறது
சாலமாண்டர்!
(1989) கனவு, 1990.

காரணம் வேறு
----------------------
டெமாக்ளிசின் கத்தி முனையாய்த்
தொங்கிப் பயமுறுத்தும் அபாயங்கள் அறியாது
அன்றாடக் கவலையில் உழலும் மனிதரின்
மொத்தப் பிரச்னைக்கும் காரணம் தேடி
தன்னை மறந்து தனித்திருந்த என்னைக்
குறுக்கிட்டது
என் குழந்தையின் குரல்:
‘என்னத்தைப் பார்த்துக்
கொண்டிருக்கிறாய் அப்பா?’
திடுக்கிட்டு
திகைத்து
விழிப்பைப் பெற்றேன்.
நேரம் தவறாமல் வந்து
நோட்டமிடும் பருந்தை
நினைவில் கொண்டோ
அசப்பில் கண்டோ
எச்சரிக்கையொலியை எழுப்பியது கோழி.
கூட்டுக்கு வெளியே தானியங்களைப்
பொறுக்கும் புறாக்கள் படபடத்திருக்க
உள்ளே சிலது குமுங்கிக் கொண்டிருந்தன.
மேய்ச்சலுக்குச் செல்லாத கிழட்டு எருமை
முங்கி முங்கிச் சாவதானமாய்த்
தவிட்டை
நீருடன் உழும்பிச் சவைத்தது.
மேயச் சென்றவை திரும்பும் நேரம்
ஆச்சே என்று தவித்து வழிபார்த்துத்
தாவிக் குதித்தன குட்டியும் கன்றும்.
காற்றில்
லேசாய் அசைந்து முணுமுணுக்கும்
தென்னங்கீற்றுப் பசுமைப் பரப்பில்
மூக்கைத் தீட்டிச் சிலிர்த்தது காகம்.
வெறுமையை
உமிழ்ந்து சலித்தது - அந்தப்
பிரமாண்டமான மரம் நின்ற வெளி.
தொலைவில் எழுந்து கம்பீரம் கொண்டது
நீலமலையின் பின்னணி மயக்கம்.
பருவமேகப் படர்வின் இசைவால்
முன்னதாகவே கவிந்து நின்றது
மாலை மங்கலின் மந்தகாசம்.
குழந்தையைப் பார்த்து
தயங்கி - பின்பு தயக்கம் நீங்கி,
‘இப்போதுதான் பார்க்க
ஆரம்பிக்கிறேன் கண்ணே!’
என்ற என் பதிலின் விசித்திரம் கண்டு
வியந்து கொள்கிறது குழந்தை.
விருட்சம், 1990.
முன்னுரையில் பிரமிள்,,,,,,,
‘காரணம் வேறு’ என்ற கவிதையில் ‘டெமாகளிஸின் கத்திமுனை’ எனக் கவிஞர் குறிப்பிடுவது, கிரேக்க புராண இலக்கியங்களுடன் பழகாதவர்களுக்குப் புரியாது. யமதர்ம ராஜனின் தலைக்கு மேலே, அந்தரத்தில் ஒரு கத்தி நின்று, அவன் நீதி பிசகினால் வீழ்ந்து, அவனைத் துண்டிக்கும் என்ற பிரதிமை நம்மிடமே உண்டு. ஆனால், கால சுப்ரமணியத்தின் பௌராணிகப் பிரதிமைகள், தேசவரம்புகளுக்குக் கட்டுப்படுவதில்லை. கவித்வத்தின் விஷமத்தனம் தேச வரம்புகளை மீறுவதல்லவா? உள்ளூர்ப் பிரதிமைகள்கூட அவரது கவிதைகளில் உலவாம லில்லை. ‘தோற்றம்’ கவிதையில் வரும் ‘ஓரபோரஸ்’, ‘சாலமாண்டர்’ பிரதிமைகள் எகிப்திய-கிரேக்க ரஸவாதப் பிரதிமைகளாகும். சுயவிளக்கமும் குறியீட்டுத்தன்மையும் ஒன்றை ஒன்று உறுதிப்படுத்தும் விதமாக எழுதப்பட்டிராவிட்டாலும், இக்கவிதை ஒரு தைரியமான முயற்சி. (1993)
ஆதியிலே வார்த்தை இருந்தது
----------------------------------------------
எழுதுவதற்கென்று இருக்கையில் அமர்ந்ததும்
பூனைபோல் வந்தென்மேல் நேசத்துடன்
தம்மேனி தேய்கின்றன சொற்கள்.
வாசலுக்கு வெளியே காத்து நின்றவை
உரிமையோடு உள்ளே நுழைந்து
பூனைகளை விரட்டி விட்டு
சுற்றிவந்து முகர்ந்து பார்க்கின்றன.
இவைகளை அதட்டிவிட்டு
வீதியில் தேடிப் போய்
பாவப்பட்ட கழுதையை நெருங்கினால்
எட்டி உதைக்க அது கால் தூக்குகிறது.
வட்டமிடும் பறவை என்மேல்
எச்சமிட்டுப் பறந்து செல்கிறது
காட்சிசாலையின் கூண்டுக்குள் இருந்து
நான் நடுக்கம் கொள்ளக் கர்ஜித்து,
‘காட்டுக்குப் போயேன் அல்லது
என்னை விடுவித்துப் பாரேன்,’
என்கிறது சிங்கம்.
வானும் கடலும் வசப்பட வழியற்று
வீடும் வெளியும் வெறுத்துக்
கானகம் நோக்கிச் சென்றேன்.
தொலைவிலிருந்தே அதட்டிச் சிரித்து
பயங்கொள்ள வைத்தன மிருகங்கள்.
ஒளிந்திருந்து என்னைக் கவனித்து,
‘திரும்பிப் போ,’ என்று
சலித்துக்கொண்டன பறவைகள்.
லயம், 1985.
இன்றைய இரவுகள்
-----------------------------
இருள் தானே வந்து
எதையும் முணுமுணுத்ததில்லை
நான்தான் அதனில்
தூண்டிலிட்டுக் கவனித்திருப்பேன்.
மழை விசும்ப
இடி குமுற
மின்னல்கள் கணப் பிரகாசம் காட்ட
தவளைகள் கொட்டி முழக்க
எண்ணெய் மினுங்கும்
தென்னங்கீற்றிடையே
பிறை விளங்க வந்தன
அச் சௌந்தர்ய இரவுகள்.
எல்லோரும் தூங்கிய பின்
என் உலகம் விழித்தெழுந்தது.
நிலவையும் நட்சத்திரங்களையும் வைத்து
அலங்கரித்துக் கொண்டது.
*
இன்று
யாருமற்ற வீதிகளில்
தன் காலடியைத் தானே கேட்கும் பயங்கரம்.
எதையோ எதிர்பார்த்து
நடுநடுவே திடுக்கிட்டு
விழித்தெழுந்து காத்திருத்தல்...
டீயிலும் ரொட்டித் துண்டிலும்
சூடான விவாதங்களிலும்
மெதுவாகக் கழிகிறது இரவு...
எதையோ எதிர்பார்த்த
நிம்மதியின்மை.
(1981) பார்வை, 1986.
புகார்
--------
இந்த வெறுமையை என்ன செய்வது
எதை இட்டு இதை நிரப்புவது சார்?
கஞ்சா புகைத்து ஊதிட முடியுமா?
குடியாய்க் குடித்தால் மனம் அழிபடுமா?
செக்ஸுக்குள் குதித்து முக்குளிப்பதா?
மதத்தில் கட்சியில் சேர்ந்துகொண்டு
கொள்கைக்காகப் போராடலாமா?
தத்துவம் பண்ண முடியாவிட்டால்
கலையிலக்கியமாவது படைக்கலாமா?
*
மந்த மனதுகள்
அன்றாட நிகழ்வில் சலிக்கச் சலித்து
உள்ளோ புறமோ ஒரு
கிரியா ஊக்கி வேண்டியுள்ளது.
கானகம் நடுவில்
ஆழ்கடல்
ஆகாயவெளி
பாம்புகள்
மின்சார சாதனம்
இயந்திரங்கள்
எதிரிகள் இடையில்
அல்லது நெருக்கடி நிலைகளில்
சோம்பலை உதறி ஜொலிக்கும் மனது.
ஒவ்வொரு கணத்தையும்
ஒவ்வொரு நிகழ்வையும்
புதிதாய் வாழ்ந்து விழிப்புடன் இருப்பது
நடக்கிற காரியம் இல்லை அல்லவா?
ஏதுமற்ற நிலைக்குச் சில பேர் தவமிருக்கையில்
வெறுமையைத் தொலைப்பது எப்படி என்று
தவிப்பவர் மிகப் பலர்...
ஆச்சரியம் கொள்ள இதில்
என்ன இருக்கு என்கின்றீரா?
அதுவும் சரிதான்...
காலக்ரமம், 1991.
முன்னுரையில் பிரமிள்......
‘ஆதியிலே வார்த்தை இருந்தது’, ‘எதிர்முரண்’, ‘தோற்றம்’, ‘புனர்வடிவங்கள்’, ‘இன்றைய இரவுகள்’, ‘புகார்’, ‘அவநம்பிக்கை’, ‘தொடரும் பாதை’, ‘காதுகளைப் பொத்திக்கொண்டபோது’ - இவையும், மேலே பார்க்கப்பட்ட கவிதைகளைப் போன்று ஆழ்பொருளோட் டம் கொண்ட சாதனைகள்; ஒவ்வொரு விதங்களில் ஒன்றைவிட ஒன்று சிறப்புப்பெறும் கவிதைகள்.
உயிரம்சம், சொல்லாற்றல், படிமச்சிறப்பு என்ற கவித்வ அடிப்படைகளை நிறைவேற்றுவதுடன், விவேகமான அறிவார்த்தக் கட்டுக்கோப்பும் உணர்வு நுட்பமும் கொண்ட பொருளம்சங்களை வெளியிடுகிறவை இக்கவிதைகள். வெறும் வெளியீட்டுப் பண்புகளினால், கவிதையின் கட்டுக்கோப்புச் சிதறிவிடும் வகையாக எழுதுகிற பல புதிய குரல்கள் இன்று ஒலிக்கின்றன. கால சுப்ரமணியம், இவர்களுடையதைப்போலத் தமது படைப்புகள் சிதறிவிடாத வகையில் பேணக்கூடிய விஷயகனம்கொண்ட ஒருவர். (1993)
தொடரும் பாதை
--------------------------
இந்த வழியாகத்தான் நான் தினமும் போகிறேன்
அடிக்கடி வந்து பாரமேற்றிச் செல்லும் லாரிகள்
தினமும் இருமுறை மட்டும் வந்து
புழுதியைக் கிளப்பும் பஸ்கள்
இரண்டாயிரம் வருடமாய் மாற்றமேயின்றி
கடக்கு முடக்கு என்று உருளும் கட்டை வண்டிகள்...
ஜல்லியைப் பெயர்த்துப் பொக்கையைக் காட்டும்
இந்தப் பாதை வழியாகத்தான்
நான் தினமும் செல்கிறேன்.
மழையில் திரண்டு குவிந்த மணல்வெளிகளில்
சிக்கித் திணறிச் சைக்கிள் செல்லும்.
பொக்கிஷக் காப்பாய் இரண்டு புறத்திலும்
வேலிக் கருவைகள் குவிந்து
போவோர் வருவோரைப் பதம் பார்க்கத் துடிக்கும்.
உழைப்பும் கந்தையும் வேர்வையாய் அறைய
வெயிலில் கருத்துக் காலத் தழும்பேறிய
வெறுமை உமிழும் முகங்கள் நின்று
புன்னகை பூத்து குசலம் விசாரித்த பின்பே நகரும்.
சூழலும் வாழ்வும் நரகமாயுள்ள நகர வாழ்வுக்கும்
இவ் இந்திய யதார்த்தக் குறியீட்டுக்கும்
வித்யாசமற்று வரலாறு திகைக்கும்.
இங்கே நடந்து போகும்போதே
எங்கோ நடந்து நடந்து நான் ஏகும் -
என்றும் முடிவற்றுத் தொடரும் பாதை - உணர்வெழ
பழக்கப்பட்ட சாலையே எனினும்
பார்த்து - சில வேளை பதறி - நடக்கிறேன்.
உலகம் முழுதையும் நூல்களில் அடக்கி
பிரபஞ்ச உணர்வை அகத்தில் நிறைத்து
இந்த வழியாகத்தான் நான் தினமும் செல்கிறேன்.
விருட்சம், 1989.
அவநம்பிக்கை
----------------------
எத்தனையோ விதங்களில் மாறியிருந்தாலும்
உள்ளுக்குள் கிராமீயம் ஒளிந்தே திரிந்தது.
ஆயிரமாயிரம் சிதறல்கள் கண்டும்
அடியோட்டமாய்ச் சிறுநம்பிக்கை தெறித்தது.
அப்படித்தான் நானும் எண்ணியிருந்தேன்.
இன்றும்
வழக்கம்போல ஒரு வேலையின் நிமித்தம்
கிராமத்திலிருந்து நகரத்துள் நுழைந்தேன்.
சாவதானத்தை உதறி எறிந்து
அவசரகதியின் போக்கில் இணைந்தேன்.
பஸ்ஸைப் பிடிக்க விரைந்து ஏகும்
அந்த வேளையில் கூட
கண்ணில் திகைந்து அதிர்ந்தது அக்காட்சி.
பூக்களினிடையே தேனை நாடி
அலைந்து திரியும் வண்ணத்துப் பூச்சி
தெருவோரத்துச் சாக்கடை கமழும்
குப்பைக் குவியலை
மொய்த்துக் கொண்டிருந்தது!
விருட்சம், 1989
காதுகளைப் பொத்திக்கொண்டபோது...
-------------------------------------------------------
1.
சப்தம் சாகரம்
நேதி நேதி என்று
சப்தத் திரையொதுக்கும் வேதாந்தி
முடிவில் கண்டது சூன்யம்.
2.
இதற்கென்று சில ருசிகள்
பல மணங்கள்.
கோஷித்துக் குரல் எழும்பும்
குரல் வெடித்துக் கொடியாடும்.
3.
சப்தத்தை மெல்லுகையில்
பற்கள் உடைபட்டன
செவிகள் டமாரித்துக் கிழிபட்டன
நாக்குச் சுட்ட வடுக்கள் பொரிந்தன.
4.
சப்தத்தின் மத்தியில்
பிரக்ஞையற்று வாழும் முயற்சிகள்!
5.
சப்தத்தைத் தின்று
ஜீரணிக்கும் ஜீவி நான்
சப்தப் பல்லக்கைத் தூக்கிச்
சபித்துக்கொண்டு போகும்
போகியும் நானே.
இந்தப் பல்லக்கின் சுமை
தோள் தண்டில் உறுத்துகிறது.
6.
சப்தத்தின் திசையறிந்து அம்பெய்து கொல்லும்
சப்தவேதிப் பயிற்சியுள்ள தசரதனாய்...
சாமேற்று பிரியம் வைத்தவரைப்
பிரிந்து தவித்து மடிந்து போவேன்.
7.
நீதானே அன்று சப்தமிட்டாய்
இது சபதமென்றாய்...!
நானும் சாபமேற்றேன்
மௌனமானேன்.
8.
சப்தத்தைக் கவிதையாக்கினால் மட்டும்
சகிக்க முடியுமா?
மானுடம், 1980.
கால சுப்ரமணியம் கவிதைகள் (13)
---------------------------------------------
வேங்கடாசல நிலையம்
-----------------------------------
எங்கிருந்தெல்லாமோ வந்து
இங்கே பாய்கிறது
ஜனங்களின் பிரவாகம்.
மனிதருக்காக மலையின் மீது
ஏறி இறங்கி வரும் பேருந்துகள்.
காலாலேயே மலைறேறும் பக்தரின்
கையிலுள்ள பைகளை வந்து
உரிமையுடன் கவர்ந்து செல்கின்றன
பக்தியறியாத நம் மூதாதைக் குரங்ககள்.
பக்திப் பரவசக் குரல்கள் உயர்ந்து
மலைகளில் மோதி எதிரொலிக்கின்றன.
கொடைமடம் அற்ற கடவுள் சந்நிதியில்
‘வேண்டும் வேண்டும்’ என்று அரற்றும்
ஆசைகளின் அபிசேகங்கள்
உண்டியலையும் நிரப்பி வழிகின்றன.
எண்ணையும் பிசுக்கும் மினங்கும் உடம்புடன்
தட்டில் கண் ஏந்திய இடைத்தரகர்கள்
முடிவற்று நீளும் கியூவை
கர்பகிருகம் நோக்கியும்
அதை விட்டுவிலகியும்
‘நகருங்கள்! நகருங்கள்!’ என்று விரட்டுவர்.
பக்தனும் தரகனும் வேர்வையில் புழுங்க
கடவுளும் கருவறையும்
வேர்வையில் நாற
எங்கும் எதிரொலிக்கிறது இக்குரல் :
‘நகர்ந்து செல்லுங்கள்!
நகர்ந்து செல்லுங்கள்!’
பக்தி வியாபாரம்
இங்கே பலமாய் நடக்கிறது.
மனித முன்னேற்றம்
இங்கே வெறும்பேச்சாய்ப் போனது.
இரவுவேளையில்
பஸ்ஸில் திரும்பினால்
கீழே தெரியும் நகரின் விளக்குகள்
திருப்பங்களின்
சக்கரவட்டச் சுழல் கிறக்கத்தில்
நட்சத்திர வானாய்த் தோன்றும் அற்புதம்!
நகரின் பெட்டிக் கடையோரங்களில்
விட்டெறியும் பழத்தொலிகளுக்காய்
காத்து நிற்கும் மாடுகள்.
வீதிகளின் இருட்டோரங்களில் இருந்து
சிறுவர்களைத் தூதுவிட்டு
உடற் பசிக்கு பேரம் பேசும் உருவங்கள்.
எதற்கும் ஒரு விலையுண்டு இங்கே!
விலைமதிப்பற்றவை
மலையின் தன்மையும்
கோட்டை மதில்போல் தோன்றும்
மலைப்பாறை வரிசையும்!
நாலாத்திசைகளிலும் எழுந்து
மனிதர்களை பரிகசித்து
உள்ளத்தை உருக்கித்
திரும்ப வார்த்தெடுக்கிறது
கண்காணாத
கோயில்மணிகளின் நாதம்!
தீட்சண்யம், 1986.

படிப்பு
----------
படிப்பதென்பது சிரமமான காரியம்தான்.
படித்தால் அறிவு வருகிறது
எதையும் யோசிக்க வைக்கிறது.
மற்றவர்களுடன்
எரிச்சலடைய வேண்டியிருக்கிறது
பிழைக்கத்தெரியாதவனாகிறான்
வெளியில் பெருமைப்படுத்தப்பட்டு
உள்ளுக்குள் சிரிக்கப்படுகிறான்.
கண்களில் தீட்சண்யம் மங்கி
கண்ணாடி போடுகிறான்.
வேலைகளைத் தட்டிக் கழித்து
அவசரமாய் மேய்ந்து
தூக்கமில்லாமல் அசைபோடுகிறான்.
மற்றவர்களுக்குப் பிரமிப்பூட்டும்
கனத்த புத்தகங்கள்
மந்திர எழுத்துகள்
இவனுக்குச் சாதாரணமாகின்றன.
முகம் கடுத்து தலை நரைக்கும்
வழுக்கையும் விழும்
நெற்றியில் கோடிழுக்கும்.
போதைவஸ்து வேறு தேவையில்லை
விளக்கு வெளிச்சங்களில் சிறைப்படுகிறான்
மற்றவர்களின் அர்த்தமற்ற வாழ்க்கையை
எண்ணிச் சிரிக்கிறான்.
படித்த விஷயங்களை ஞாபகப்படுத்தப்
படாதபாடு படுவான்
அவர்கள் சொல்வதைத்
தனதாகப் பாவித்துக் கொள்வான்
சுயமிழப்பான்
வெறும் வார்த்தை லட்சியங்களுக்கு
உயிரையும் விடுவான்.
படிப்பதைவிட ஆறறிவுக்கு
வேறு முக்கிய வேலை உள்ளதா என்ன?
கணையாழி, ஜனவரி 1979.
கோடை
-------------
மின் விசிறியோ
கானலின் நீறை வீசிக் கிளறியது.
மொட்டை மாடிகளில் கைவிசிறிகள்
அடிக்கடி எழுந்து எரிச்சலைக் கொட்டின.
குடிசை வாசலில் வீதியோரங்களில்
மனித யந்திரங்கள்
புழுங்கும் பிணங்களாய் உறங்கின.
ஒரு கணம்
உயிர் தொற்றி நின்ற சிசுக்குரல் ஒன்று
அலறி ஆட்சேபித்தது.
பின்
பெற்றோர் அதட்டிலில் திரும்பத் தூங்கியது.
(1983)
தீப்புயல்
-------------
கடல் நடுவே
அனுபவிக்க ஆளற்றுக்
கொட்டிக் கிடக்கிறது இயற்கை.
ஏறெடுத்துப் பாராத உழைப்பை
ஓய்வெடுத்த தினவு
மோதிச் சிதைத்தது.
அறிந்தும் அறியாத
எத்தனையோ சக்திகள்
மூளையில் பாய்ந்து
வன்மம் கிளப்பின.
இனப் புயல் வீசி
உடல் மரங்கள் பேதமற்று
முறிந்து வீழ்ந்தன.
மனிதாபிமானக் கடலின்
கரைமீறி வந்த திமிங்கல வெறிகள்
களியாடித் தீர்ந்தன.
மனது கலங்க
வீறிட்டெழுந்தன குரல்கள்.
பிரளயத் தீயின் முடிவில்
கருகிப் புகைந்தது நம்பிக்கை.
இனி இழப்பதற்கு ஏதுமற்ற
வைராக்கியம் வெடித்துப்
பற்றவைத்தது தீயை.
(1983) ஞானரதம், 1985.
கால சுப்ரமணியம்
--------------------------
ஏமாற்றும் நிழல்கள்
-----------------------------
சுவரில் பறந்த பூச்சியின் நிழலைப்
பிடிக்கப் பார்த்து ஏமாந்த பல்லி
பின் - அசையாமல் கிடந்து
பூச்சி - அருகில் வந்ததும்
சாடி - பற்றிக்கொண்டது.
நானோ - நிஜங்களைத் தேடி
நிழல்களை மறுவிச்
சாதித்துவிட்டதாய்த்
தருக்கித் திரிந்தேன்.
இன்று - நிழல்களின் கருவினுள்
ஏமாற்றச் சிசுக்கள்.
(1984)
யாளி
---------
இன்றென் கனவில்
தன் புராண காலத் தூக்கம் கலைந்து
கொட்டாவி விட்டெழுந்தது ஓர் யாளி.
நீறு பூத்த எரிமலைக் குகையாய்
ஜொலித்த விழிகளில்
ஏளனம் தெரிந்தது.
தந்தங்கள் அசைத்து நடந்து வருகையில்
முதுமையின் தளர்ச்சி பிறந்தது.
‘புசித்துப் பல யுகங்களாச்சு!
நரமாமிச பட்சணி நான், வா!’ என்றது.
பயமற்ற பரவசத்துடன், ‘நீ
பட்சிப்பது எனக்குப் பாக்கியம்,’
என்று நெருங்கினேன்.
‘உன்னைக் கொல்ல வலுவில்லை
என்ற நினைப்பா?’ எனக்
கர்ஜித்த யாளி கடைசியில் இருமி நின்றது.
‘கனவில் வந்த
கற்பனையின் பிரத்தியட்சமே!
உன்னை என்னால் வெல்ல முடியாது
நீயும் என்னைக் கொல்ல இயலாது,’
என்று நான் சிநேகிதம் பாராட்ட,
நின்று யோசித்துப் பின்
அசுவாரஸ்யமாய் ஒரு கொட்டாவி விட்டு
மறைந்து போனது யாளி.
(1984) ஞானரதம், 1985.
ஜாலம்
-----------
பெயர் தெரியாத ஒரு மரம்
மனிதக் கரங்களால் விரிந்த கிளைகள்
பசுமை கொழிக்கும் இலைகள்.
பூக்களற்று கனிகளுமற்று
வனர்ப்புத் திமிறும் இனம் விதவைக் கோலம்.
அப்போதுதான் பறந்து வந்து
கிளையில் அமர்ந்தது ஒரு பறவை
பருவம் துடைத்து
காட்சி மறைத்து
சிலிர்க்க எழுந்தது கானம்.
பூக்கள் மலர்ந்து
கனிகள் குலுங்க
திகைத்து நின்றது மனசு.
கணையாழி, 1984.
அருவிக்கரை ரகசியம்
---------------------------------
அந்தக் கானகத்து அருவியில்
குளித்தது ஒருமுறைதான் -
ஆனால் அதன்
ஓங்கார நாதம் காதில் வழிய
தெறிக்கும் நீர்த் துமிகளில் உடல் நனைய
என்றென்றும்
அந்த அருவிக் கரையில்
நின்றிருப்பதாகவே உணர்கிறேன்.
மன அருவியில் குளித்தவருக்குத்தான்
இதன் பரமரகசியம் புரியும்.
(1988)
கால சுப்ரமணியம் கவிதைகள் (14)
---------------------------------------------------
பிழை திருத்தம்
-----------------------
வீசி எறிந்த கல்
குறியிடம் பாய்ந்தது.
இன்னும் கொஞ்ச தூரமே இருக்க
விசையற்று வீழ்ந்தது.
நல்ல வேளை-
இலக்கை அடைந்திருந்தாலும்
தள்ளியே பட்டிருக்கும்-
என்றாலும்
இப்போது வீம்பு பேசலாம்.
விட்ட முதல் கணமே
போதா விசையும்
பிழைத்த குறியும்
கையும் கண்ணும் உணர்ந்தன.
மீண்டும் முயற்சிக்கப்படும் என
உணராத குறியோ
திமிராய் நின்றது.
(1983) லயம், 1985.
மனப்பாலை
------------------
வெகு நாட்களுக்குப் பின்
பெய்தது மழை.
உனக்குள் ஏற்பட்ட
ஊற்றின் சிலிர்ப்பு
எனக்கும் அனுபவமாகிறது.
அவனோ
மழையின் சகதிப் பிசுபிசுப்பில்
மனம் சுளித்து
எப்போது வானம்
வெளிவாங்கும் என்று
ஏங்கிக் தவித்து
வெயிலின் உஷ்ணம்
தாக்கும் வேளைக்குத்
தவமிருக்கிறான்.
அவன் தொழிலுக்குத் தேவை
கானலின் வறட்சி.
பசுமையின் இடையே இருக்கும் சிறுபாலை
அழகளிக்கும்
பாலையில் எங்கோ தெரியும் பசுஞ்சோலை
உயிர் கொடுக்கும்.
அவன் கண்களில்
அழகாய் விரிகிறது
சோலையற்றுப்
பேய்த்தேரோடும் மணற்பாலை.
(1983) லயம், 1985.
ஒரு புயலுக்கு முன்
------------------------------
கேட்பதற்களவாகத் தொடர்ந்து
குமுறும் இடியோசை.
பார்ப்பதற்கேற்ப மெல்லப்
பளிச்சிடும் மின் வீச்சு.
நனைவதற்கியலாமல் நிலத்தில்
நொறுங்கிட விழும் தூறல்.
மணம் பெறுவதற்கியல்பாக
இடையினக் காற்றின் கிசுகிசுப்பு.
மேகம் புணர்ந்து
மூச்சு விட மறந்து மலையில்
ஒன்றிய வெகு நீலம்.
நிறபேதத் துணை கடந்து
விளங்கும் வெளிவானம்.
கடல்மலை வாயில் கதவோரம்
மறையும் கதிர்ச் சுருக்கம்.
ஒற்றைத் தனிக்காகம் தவித்து
ஒதுங்கப் பறக்கும் சிறகோசை.
மனமே பூர்த்தி செய்ய
இடைவெளி விட்ட வானவில்.
எதிர்வரும் அழிவின் அலைவுக்காய்
அசையா வரம் பெறும் மரங்கள்...
எந்தக் கணம் வெடிக்கும்
என்று தெரியாமல்.
(1976) அன்னம்விடு தூது, 1985.
மூன்றாவது உலகம்
-----------------------------
1. பயம்
-----------
காண்பதோ கனவு
பின் பயமெதற்கு?
தூங்கும் சிங்கத்தை
தூண்டி விடு...
துரத்தி வந்தால்
நனவில் விழித்துக் கொண்டு
தப்பித்தால் போச்சு. (1984)
லயம், 1986.
2. இழப்பு
-------------
தினம் ஒரு புதுமையை அரங்கேற்றும் மனது
இன்றும் ஒரு காட்சியை நடத்தலாயிற்று...
‘அவள்’ நடித்த நாடகமாகையால்
தியேட்டர் மூளையில்
கும்பல் உணர்வுகள் நிரம்பி வழிந்தன.
நடித்த அவளை நனவுக்குக் கடத்திவர
ராவணனாய்க் கைப்பிடித்திழுத்தேன்.
கைதட்டலும் விசிலும் பறந்தன
‘ஏய்’ என்ற கூச்சல் பலத்தது.
அவசரமாக அவளை தூக்கி
அந்தரத்தில் எழுப்பினேன்.
நனவின் முனையில் கை பிடித்துத் தாவி
மேலே எம்புகையில்
அவளைச் சில கைகள்
கீழிழுத்துக் கொண்டன.
யூரிடிஸை இழந்த ஆர்பியஸாய்
நின்று திரும்பிக்
கீழே துழாவ
இருள்தான் சிக்கியது
அவளைக் காணோம்.
கணையாழி, 1984.
நீயல்ல
-----------
இந்த இலைகள் எல்லாம்
எப்போது உதிருமென்று காத்திருந்தேன்...
கரும் பச்சை பழுப்பாகி
உயிர்ச் சத்தெல்லாம் நீங்கி
காம்பையும் விடுவித்து
மெல்ல நிலம் நோக்கிக் கீழ் விழுந்து
வடக்கிருந்து காற்றடிக்கத் தெற்கோடி
கிழக்கிருந்து காற்றடிக்க மேற்கோடி
சருகாகி
மண்ணுடன் மக்கி
அடியுரமாய் ஆகும்போது
புதுத்தளிருக்கு அது சாரமாய் மாறும்.
இன்னும் அப்படித்தான்
கனவுகளும் கண்டிருப்பேன்
எல்லோரும் சிரித்தார்கள்...
பச்சையமும் போயிற்று
ஒளிச்சேர்க்கை நின்றது
இரவில் கரியமில வாயு
வெளியாவதும் இன்றில்லை...
காலங்காலமாய்
இவையெல்லாம் நடந்திருந்தும்
இன்று நினைத்துப் பார்ப்போர் யார் என்று
ஒவ்வொரு முகமாய்த் தேடி
நீயல்லவென்றடுத்த முகம் பார்த்தோடி
நீயல்லவென்று ஒதுக்கி மற்ற முகம் தேடி...
நீயல்லவானால் வேறு யார்....
எனக்கொன்றும் புரியவில்லை
போகட்டும்
இந்தக் கிளைகளெல்லாம் மீண்டும்
எப்போது துளிர்க்கும் என்று
இப்போது காத்திருப்பேன்.
(1976) கணையாழி, 1982.
ரசிப்பு
---------
1.
முடியில் பிறந்தவை மலர்கள்
பாதத்தில் கிளைத்தவை வேர்கள்.
வனப்பில் கர்வம் கொண்டு
சூரியனைச் சொந்தம் கொண்டாடின பூக்கள்.
நிலத்தின் சாரத்தை உறிஞ்சி
மலர்வித்ததுக்கு நியாயம் கேட்டு
ஆதிப்பிறப்பை நிலை நாட்டின வேர்கள்.
முன்பே களைந்திருந்தால், வேர்களுக்குச்
சொந்தம் பாராட்ட ஏதும் மிஞ்சியிராது
ஆனால் பூவும் வேரும் அற்று நிற்கும்
வாழ்வோ ரசிக்காது.
(1984) ஞானரதம், 1885.
2.
சாவதானமாய்க் காற்று வீசும்
மேகங்கள் ஜாலங்கள் செய்யும்
மேற்கில் சூரியன் பொன்முகம் காட்டும்
காக்கை குருவி கூட்டில் சிணுங்கும்
சந்திரன் கிழக்கு வானில் துளிர்க்கும்...
வழக்கம் போல் எல்லாம்
சலிக்க வைக்கும்...
சலிக்காத நீயோ
இல்லாமல் போனாய்...
சலிக்கக் கூடாததில்
சலிப்பை வைத்து
சலிக்கச் சலிக்க வாழ்கின்றேனோ?
(1982)


கால சுப்ரமணியம் கவிதைகள் (15)
---------------------------------------------------
ஒத்திகையற்ற நாடகம்
-----------------------------------
தன் ஒற்றைக் கால் சிலம்பைப்
போட்டுடைத்தாள் கண்ணகி.
சிதறிய பரல்கனை
முதுகு வலிக்கக்
குனிந்து பொறுக்கி
எண்ணிக் கணக்கிட்டு
ஏட்டில் பதிந்து நிமிர்ந்த
இளங்கோ திகைத்தான்...
சாகாமல் பாண்டியன்
சிரித்துக் கொண்டுள்ளான்
உணர்வற்றுக் கீழே
கிடக்கிறாள் கண்ணகி.
வைத்தியனை அழைப்பதா?
கையிலிருப்பவை
மாணிக்கப் பரல்களா?
முத்துக்கள் தாமா?
என்று பார்ப்பதா?
அவசரமாகத் திரைகளை இழுத்து
நாடகத்தை முடிக்கிறான் இளங்கோ.
இல்லையென்றால்
இவள் ஒற்றை முலைத் திருகல் சூட்டில்
பற்ற வேண்டிய தீக்கெங்கு போக?
(1981) கணையாழி, 1982.
------------------------
இரணிய காலம்
-------------------------
இருக்குமிடம் காட்டமறுத்த
பிரகலாதனை ஒதுக்கி
எங்கிருக்குமென்று உத்தேசம் கொண்டு
எட்டி உதைத்ததும்
கழன்று விழுந்த அட்டைத் தூணுள்
திருதிருத்து விழிந்தது செங்கட் சீயம்
தப்பியோடப் பார்த்தது.
இதுவும்
இரவுமற்ற பகலுமற்ற உழைப்பின் காலம்
வீடுமற்ற வெளியுமற்ற இருப்பின் நிலை.
பிடறியைப் பிடித்துத்
தொடையில் அமுக்கி
வயிற்றைக் கிழிக்கையில்
உதிரப் போலியாய்ச் சிவப்பு மை...
பிளாஸ்டிக் குடல்கள்...
(1981) கணையாழி, 1982.
------------------------
காலக்ஷேத்ரம்
-------------------------
இந்த மூன்று காலனுக்கு
நூற்றெட்டுக் கரங்கள்.
ஒவ்வொன்றிலும்
ஓர் அஸ்திரம் இருக்கும்.
தேவை ஏற்பட்டால்
அவை பிரயோகிக்கப்பட்டு
ஆயிரமாய்க் கிளைத்து
எதிரியைத் தாக்கும்.
எதிர்ப் பிரயோகத்தில்
பலனிருக்காது.
ஆனால்
எல்லோரும் தான்
எதிர்த்துப் பார்க்கிறார்கள்.
எதிர்த்து ஆழிவதே
மனித வாழ்க்கை
அர்ஜுனா...
(1981) ஞானரதம், 1985.
-----------------
நிகும்பலை
------------------
ராமனின் வெற்றிக்கு
நிகும்பலை தேவையில்லை
ராவணத் தற்காப்பே
அதை நாடிச் செல்லும்.
காலம் கடந்து விட்டால்
வெற்றியும் கட்சி மாறியிருக்கும்
ஆனால் எல்லாமே
காலத்தில் நடந்து விடுகின்றன.
இந்திரஜித்துக்கள் இனியும்
நிரும்பலையைத் தொடர முடியாது -
அதோ!
வாசலில்
அனுமனின் தோள் மீது
லட்சமணன் ஏறி வரும்
ஆரவாரத்தைக் கேள்!
(1984) ஞானரதம், 1985.
--------------------------------------
இடிக்கு முந்திய மின்னல்
---------------------------------------
நிலை நின்ற பாதத்தின்
மணலடியை அரித்தெடுத்து
தடுமாற்றி உள் அமிழ்த்தும்
கரையலையாய் வந்தாய்.
உப்புணர்வில் கரிப்பெடுக்க
கமறி அதை உமிழ்ந்தாலும்
ஓங்கரிக்கும் நினைவானாய்.
உன் விழி மின்னலின்
இடியோசை
காலம் கடந்து நினைவுணரும்.
சமயங்களில்
மனக்கருவி ‘கிளிக்’கிட்ட
அந்நிமிஷம் உயிர் பெற்று
உடல் தகர்ந்து வெளியேறும்
வான் தகர்ந்து
வெளியாகும்.
(1981) கணையாழி, 1982.
-------------
புஷ்பகம்
--------------
எதிரில் ஒரு நீண்டபள்ளம்
வழிமறித்துப் பிளந்தது.
பிலத்தின் அடிதெரியா இருளுள் எங்கோ
முனகல் எழுந்து நெருட
சருக்கிய கால்களை ஊன்றி நிதானித்து
எட்டிப் பார்க்க நினைக்கையில்
உனக்கேன் வம்பு என்றது மனக்குறளி.
பின் இதைத் தாண்டுவது எப்படி
என நினைத்து முடிக்குமுன்
எட்டித் தாண்டின கால்கள்.
உடனே பூமி அதிர்ந்து
சரிவில் நான் உருள
பள்ளம் புடைத்து மலையாய் எழுந்தது.
முடிதெரியாத உயர் சிகரத்தின்
மேலோ எங்கோ
நகை மின்னல் பளிச்சிட்டு
இடித்தோய்ந்தது.
என்னை விட்டு
விண் நோக்கி எழுந்தது ஒரு விண்கலம் -
அயோத்தியை...
இலங்கையை...
விட்டு
நீங்கும் விமானம்.
(1984) ஞானரதம், 1985.
-------------------------------------------------
சிவனுக்கு இனி வேலையில்லை
--------------------------------------------------
‘புத்தாண்டு வாழ்த்துக்கள்’
காலண்டர், டைரி சகிதமாக
நாரதர் வாழ்த்துக் கூறி
வந்து நுழைந்தார்.
கலியுகம் பிறந்து
5092-ஆம் ஆண்டு!
57 வயதான பிரம்மா
சிருஷ்டித் தொழிலில்
கருத்தாயிருந்தார்:
நிலவுலகில் மட்டும்
ஒரு நாளைக்கு 21600 பிறப்புகள்
இதில் 7200 மனித ஜந்துக்கள்
நிரயன நிலையில் அயனாம்சத்தோடு கூடிய
ஒரு லக்னத்துக்கு 600 மனிதர்கள்.
க்ஷீர சாகர அனந்த சயனத்தில்
அரைக்கண் திறந்து பார்த்தார் விஷ்ணு.
நாரதரோடு வந்த ஒரு நிழல்
பாற்கடலில் திருட்டுத்தனமாய்
ஆசை பற்றி நக்க முனைந்தது -
ஆயிரம் நாவில் ஒரு நாவு ‘உஸ்’ஸிட
தாவிக் குதித்து மறைந்து போனது.
திருமால் திடுக்கிட்டு எழுந்து கொள்ள
சுவேதவராக கல்பத்துக்குரிய
வைவாஸ்வத மனு முன்னால் வந்து,
‘Felidae குடும்பத்தைச் சேர்ந்த
வளர்ப்புப் பிராணி பூனையே அது.
எகிப்திலிருந்து தென் அய்ரோப்பா புகுந்து
அங்கே இருந்த காட்டுப் பூனையுட் கலந்து
மேற்கிலும் கிழக்கிலும் பெருகியதிவ்வினம்.
இந்தப் பூனை,
சயாம் வகை சார்ந்தது’ என்றார்.
‘பூனை நக்கிப் பாற்கடல்
தீர்ந்தா போகும்?
விரட்டியது அநியாயம்!’ என்றார் நாரதர்.
‘மதிப்பீடுகளைக் கடந்தது
பாற்கடல்
என்றுதான் நினைத்தேன்
ஆனால் இப்போது இதைச்
சொல்லாமல் முடியாது.
பாற்கடலிலும்
பொல்யூஷன் பிரச்னை...
பூனைக்கு ஏதாவது தீங்கு நேரலாம்
என்றே விரட்டினேன்,’
என்றான் சேடன்
பிரம்ம சிருஷ்டியில்
அணுக்கதிர் வீச்சில்
குறைபட்ட உயிர்களைக்
கணக்கிடா நின்றார் கலக நாரதர்.
(1993)