Saturday, 27 February 2016

பறக்கடவுள்- சுகிர்தராணி, மற்றும் கவிதைகள்

PARIAH GOD
-------------
You call
the scorching heat
upon your back,
the pariah sun

That which
escapes with
dry worm infested
grain in its beak,
the pariah crow

That which
snatches everything
from the hand,
wrist and all,
the pariah dog

ploughing the land
and sowing it
with sweat,
is pariah labour

If all are
named so,
that which
delights in
bloody rage,
which Pariah God
is it?
Sukirtha Rani


 
3 hrs ·
பறக்கடவுள்
- சுகிர்தராணி
***************
சொல்லுகிறீர்கள்
முதுகு விரியக் காய்ந்தால்
அதன்பெயர் பறவெயில்
உலரும் புழுத்த தானியத்தை
அலகு கொத்தி விரையும்
அது பறக்காகம்
கையிலிருப்பதை
மணிக்கட்டோடு
பறித்துச் சென்றால்
அது பறநாய்
நிலத்தை உழுது
வியர்வை விதைத்தால்
அது பறப்பாடு
சகலத்திற்கும் இப்படியே
பெயர் என்றால்
இரத்த வெறியில் திளைக்கும்
எது அந்த பறக்கடவுள்.
-இரவு மிருகம் தொகுப்பிலிருந்து..
########################
https://abedheen.wordpress.com/2011/05/11/sukiertharani-poems-mutham/
முத்தங்கள் – கவிதைகள் – சுகிர்தராணி
11/05/2011 இல் 09:55 (சுகிர்தராணி)


முதல் முத்தம்

கனிந்த வேப்பம்பழத்திலிருந்து
வெளியேறும் விதையென
என்னிலிருந்து நீங்குகிறது வெட்கம்
நீயும் அறங்களனைத்தும் அழிய
சாய்ந்த மரத்தின் வேராகி நிற்கிறாய்
உன்மத்தம் வடியுமுன் வேர்கள்
என் நிலம் நோக்கி நகர
ஆழத்தில் புதைந்திருக்கும் நாளங்களில்
ஊமத்தைகள் தளும்புகின்றன
கள்ளியின் முட்கள் உள்ளிறங்கப்
பீறிடும் இரத்தத் துளிகளாய்
என் உடல் முழுவதும்
உருள்கின்றன காமத்தின் முத்துக்கள்
உன் சுடுமூச்சுகளின் நூல்கொண்டு
ஒவ்வொன்றையும் கோக்கிறாய்
தொங்கும் தோட்டமாகி மிதக்கிறேன்
பறவைகளற்ற வானம் பிரகாசமடைய
நாம் கலவிக்கால விகாரமுறுகிறோம்
என் மென்முலைகள் அழுந்த
முதல் முத்தமொன்றைத் தருகிறேன்
எவரும் விழித்திராத கருக்கலில்
சாதியின் கொடூர ஓடையில் மிதக்கின்றன
அரிந்து வீசப்பட்ட நான்கு உதடுகள்.

***

தீண்டப்படாத முத்தம்

எம் வாய்களில் திணிக்கப்பட்ட
மலத்தையெல்லாம் திணித்தவர்கள்மீதே
துப்பத் தெரிந்துகொண்டோம்
எம் வயிறுகளுக்குச்
சாணிப்பால் புகட்டிய கரங்களை
நரம்பறுக்கவும் கற்றுக்கொண்டோம்
மறுக்கப்பட்ட தெருக்களில்கூடச்
செருப்பணிந்து செல்லும்
செருக்கினைப் பெற்றுவிட்டோம்
ஆண்டைகள் முன் அடிபணிந்தே
வளைந்துபோன முதுகெலும்புகளை
நிமிர்த்திப் போடவும் அறிந்துகொண்டோம்
நீரற்ற ஓடைகளில் நிகழும்
கௌரவக் கொலைகளிலிருந்து
உயிர்த்தெழவும் உணர்ந்துகொண்டோம்
கைநாட்டுகளைத் தடமழித்து
ஏடெடுக்கவும் எழுந்துநின்றோம்
ஒடுக்கப்பட்ட தோற்பறையிலிருந்து
விடுதலையின் மாஇசையை
மீட்டெடுக்கவும் பழகிக்கொண்டோம்
என்றாலும்
என் கருத்த உடல்களிலிருந்து
சிந்தப்படுகின்ற இரத்தமெல்லாம்
இத்தேசத்தில் தீப்பற்றி எரிகின்றன
தீண்டப்படாத முத்தங்களாக.

***

சாம்பல் பூக்காத முத்தங்கள்

நதிகள் பாய்கின்ற ஈரநிலத்தில்
பரிவாரங்களோடு காத்திருக்கிறாய்
வனாந்தரத்தில் வழிதவறிய பெண்ணை
நீளவாக்கில் உரித்த தோலாலானது
உன் கூடாரம்
தொங்கும் அவள் முலைகள்
சரவிளக்குகளைப் போல
வெளிச்சத்தை வீசுகின்றன
அறுக்கப்பட்ட தொப்புள்கொடியை
மதுவருந்தும் குவளையாக்கி
என்னை வீழ்த்திடத் துடிக்கிறாய்
நிலவு சயனிக்கின்ற சாமத்தில்
கீழேவிழும் நட்சத்திரங்கள்
மீண்டும் வானமேகா என்பதையும்
குளிச்சி பொருந்திய அரும்பினை
அவிழ்த்துவிட்டுச் செல்வது
தென்றலாக இராது என்பதையும்
நீ கண்டடைந்திருக்கலாம்
என் மார்பிலிருந்து பெருகிய
காதல் நீரோட்டங்கள்
உன்னிலிருந்து விலகும் பொழுதில்
வெம்மை படர்ந்த விருட்சத்தின்
உரிகின்ற பட்டையைப் போல்
என் உதட்டிலிருந்து சுழன்றுவிழுகின்றன
சில சாம்பல் பூக்காத முத்தங்கள்.

***

சபிக்கப்பட்ட முத்தம்

தோள்களின் மீது வந்தமரும்
செம்பறவைகளின் இலாவகத்தோடு
உன் கண்களை வாசிக்கிறேன்
மழைப் பொழுதின் சிலிர்ப்புகளும்
வேனிற்காலத்து வியர்வைத் துளிகளும்
பிரித்தறியா நிறத்தொடு
கூடிக்கிடக்கின்றன உன் கண்களுக்குள்
அவற்றில் நுழையும் வழியற்று
நுரை ததும்பும் கடற்கரை மேடுகளில்
விரிக்கப்பட்ட வலையென
உலர்கின்றது நமக்கிடையேயான அன்பு
மணலில் அழுந்திய சங்குகள்
எப்போதும் உன் சுவடுகளை
அடையாளப்படுத்தியபடியே இருக்கின்றன
மடலேறும் சாத்தியமும் முறிவுற்று
சுருண்டு படுத்திருக்கிறேன் உன் தொடுதலுக்காக
முன்பு ஒருமுறை எனக்கு
முத்தமொன்றைத் தருவதாய்ச் சொல்லியது
நனவிலி மனமாக இருக்கலாம்
கரையொதுங்கிய அலையாத்திப் பூவாய்
ஈரத்தால் கிழித்த என் கன்னங்களைக்
கடற்கரை மணலில் பதித்துவைத்திருக்கிறேன்
கண்டறியப்படாத ஒரு பாலைவனத்தில்
உலர்ந்த இரு உதடுகள்
சருகெனப் பறப்பதாய்ப் பேசிக்கொண்டார்கள்.

***

விலக்கப்பட்ட முத்தம்

களிப்பின் சுனை வறண்ட
என் சின்னஞ்சிறு பிராயத்திலிருந்தே
நூலறுந்த பட்டத்தைப் போல
கண்டதையக் கூடாதிருந்தது அது
சபிக்கப்பட்ட தேவதையெனக்
கண்ணீரை மென்று விழுங்கிப்
பள்ளத்தாக்குகளிலும்
விளைவிக்கப்பட்ட வன்நிலங்களிலும்
அதன் நிழலைத் தேடி அலைகின்றேன்
முளைக்காத விதையாய் உருமாறித் திரியுமதன்
நிராகரிப்பின் வலி
என் உடல்முழுவதும் ஒழுகுகின்றது
அதன் உப்புச்சுவைக்காக
வீழ்ந்த பேரரசுகளையும்
புதைந்துபோன காதல்களையும்
உயிர் வழிய வாசிக்கின்றேன்
அதன் பிம்பம் உதிர்ந்த இலையாகித்
துயரின் ஓடையில் மிதக்கின்றது
எனக்கு மட்டுமென்று
அதை நெய்யத் தொடங்குகிறேன்
நஞ்சோடு மெல்ல உருப்பெறுகிறது
படர்காமம் மிகுந்த பொழுதொன்றில்
அதன் மேலோட்டை உடைக்கிறேன்
வெடித்துக் கிளம்பும் அது
விலக்கப்பட்ட முத்தமாயிருந்தது.

***

உறையிலிடாத முத்தம்

எனது அறையில்
குவிந்திருக்கும்
ஓராயிரம் முத்தங்களில்
வெடித்திருக்கும்
உன் உதடுகளிலிருந்து பெற்ற
போர்க்கள முத்தத்தைத்
தேடிக் கண்டடையும் வேளை
அது
தடயமற்றுக் கரைந்திருக்கிறது
உறையிலிடாத உப்பாய்.

***

கடைசி முத்தம்

அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட தோட்டம்
ஏதேனின் சாயலாய் இருந்தது
கூடியபின் தளரும் உடலைப் போல
அவ்விடத்தின் நறுமணம்
மென்மையுற்றிருக்க
விலக்கப்பட்ட கனியைப் புசித்த பிறகும்
நிர்வாணிகளாகவே திரிகின்றனர்
அவர்களிடமிருந்து வழிந்த காதல்
நதியென ஓடிக்கொண்டிருந்தது
அதன் ஆழத்தில் நீந்தியபொழுது
காமம் துண்டங்களாகி மிதந்தன
துண்டங்களைக் குவித்து
அவள் அடைகாக்க
அவன் முத்தங்களைப்
பொரிக்கத் தொடங்கினான்
இருவரின் மூச்சுகளும்
உடைந்துகொண்டிருந்தன
முத்தத்தின் எண்ணிக்கை கூடக்கூட
அவளுடலின் இடம் தீர ஆரம்பித்தது
இறுதி முத்தத்திற்கு
அவன் இடம்தேடி அலைந்தபோது
அவள் மெல்லப் புன்னகைத்தாள்
கடைசியில் முத்தமிட்டு முடிந்தபோது
பூமி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது.

***



’பெண் வாசனை வீசும் பூமியிலிருந்து எழுந்துள்ளன இந்தக் கவிதைகள். காதல், காமம், வெஞ்சினம் மூன்றும் அந்நிலத்தின் பருவங்கள். இவற்றை அனுபவிக்கும் மானிட உயிர் ஒன்று பெண் அல்லது ஒடுக்கப்பட்ட ஆண். சமயங்களின் ஈழத்தின் தோற்கடிக்கப்பட்ட இனமாகவும் இருக்கிறது. ஒடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுகிர்தராணியின் இதுவரையான கவிதைத் தொகுப்புகளிலிருந்து முன்னோக்கிச் சென்றிருக்கும் கவிதைகளைக் கொண்டது இந்த நான்காவது தொகுப்பு’ – காலச்சுவடு பதிப்பகம்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

http://www.kalachuvadu.com/issue-134/page45.asp

கட்டுரை
தீண்டப்படாத முத்தம் 
உடலைக் கடந்த இயக்கம்
சுகுமாரன்
சுகிர்தராணியின் கவிதைகள் பற்றி அவ்வப்போது எழுதியிருக்கிறேன். அவருடைய கவிதைகள் பற்றி இரண்டாம் முறையாக பொது மேடை ஒன்றில் பேச நிற்கிறேன். இது ஒரே சமயம் மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகிறது. கவிதை பற்றிப் பேசக் கிடைக்கும் எந்த வாய்ப்பும் மகிழ்ச்சியளிப்பது. அந்த வகையில் இதுவும் மகிழ்ச்சிகரமானது. ஆனால் கவிதை வாசிப்பவர்களைவிடக் கவிதை எழுதுபவர்கள் அதிகமாக இருக்கும் சூழலில் சக கவிஞர் ஒருவரின் கவிதைகள் பற்றிப் பேச புதிதாக ஒருவர் முன் வராதது பற்றிய ஏமாற்றம். ஒரு கவிதை ஆர்வலனாகவே இந்த ஏமாற்றத்தை முன்வைக்கிறேன்.



இது சுகிர்தராணியின் நான்காம் தொகுப்பு. எட்டு ஆண்டுகளுக்குள் நான்கு தொகுப்பு என்பது அவருடைய இயக்கத்தைக் காட்டுகிறது. தொடர்ச்சியாகவும் அதிக எண்ணிக்கையிலும் எழுதுபவராக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இந்தத் தொகுதியில் ஐம்பது கவிதைகள் இருக்கின்றன. எல்லாமும் முந்தைய தொகுப்பான ‘அவளை மொழி பெயர்த்த’லுக்குப் பின்னர் எழுதப்பட்டவை. கடந்த நான்கு ஆண்டுகளில் எழுதப்பட்டவை. இந்த நான்கு தொகுப்புகளையும் ஒருசேர வைத்துப் பார்க்கும்போது தன்னுடைய கவிதைக்கான தரத்தை சுகிர்தராணி அடைந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது. அதற்குப் பொருந்தும் உதாரணமாக இருப்பது இந்தத் தொகுப்பு. தொடர்ச்சியையும் தரத்தையும் எட்டியிருக்கும் ஒரு கவிஞரை சலுகைகள் எதுவுமின்றி நவீனக் கவிதையின் பொதுப் போக்கின் பிரதிநிதியாகக் கருதுவது தான் சரி என்று எண்ணுகிறேன். அந்த வகையில் சுகிர்தராணியின் கவிதைகளை எங்கே வைப்பது என்று பார்க்க விரும்புகிறேன்.

தமிழில் பெண்கள் எழுதும் கவிதைகள் பற்றி இரு வகையான கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று - பெண்கள் எழுதுவதெல்லாம் சாரமில்லாதவை. இலக்கியப் பெறுமானம் கற்பிக்கத் தகுதியானவையல்ல. இது பெண் எழுத்தின் மீது தீண்டாமை கற்பிக்கும் சிலரின் வாதம். இதில் முக்கியமான கவிஞர்களும் இடம்பெறுகிறார்கள். சமீபத்தில் ஓர் இலக்கிய இதழில் பிரபல எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்தார். அழகான பெண்கள் அழகைப் பற்றியும் அழகில்லாத பெண்கள் யோனியைப் பற்றியும் கவிதைகள் எழுதும் மரபு கடைபிடிக்கப்படுகிறது என்று இலக்கியக் கோட்பாடுகளைப் பகடிசெய்து எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இரண்டாம் கருத்து - பெருந்தன்மையாளர்களுடையது. யாரெல்லாமோ கவிதைகள் எழுதுகிறார்கள். பெண்களும் எழுதிவிட்டுப் போகட்டுமே. இது மேம் போக்கானது. இவ்விரு கருத்துகளும் இலக்கியத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது. புதிய போக்கை ஏற்றுக்கொள்ள முடியாத மனப்பாங்கு இலக்கியத்தை அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கிச் செலுத்த இயலாது என்ற விதியை ஒப்புக்கொண்டால் இந்தக் கருத்துகளின் வெறுமையை நாம் உணர முடியும். இந்த விதியைச் சார்ந்தே இலக்கியம் புதிய களங்களைக் கண்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் சுகிர்தராணியின் கவிதைகள் பொருத்தப்பாட்டைக் காண்கின்றன.

பெண் கவிதைகள் உடலைச் சார்ந்த ஆரவாரமாக எழுதப்படுபவை என்ற பொதுக்கருத்தும் புழக்கத்தில் இருக்கிறது. பெண்ணின் அங்கங்களைப் பற்றிய குறிப்புகள் அப்பட்டமாகக் கவிதைகளில் இடம் பெறுவது பலரையும் மிரட்சி அடையச் செய்துமிருக்கிறது. சுகிர்தராணியின் இந்தத் தொகுப்பு அவர்களை இன்னும் மிரட்சியடையச் செய்யலாம். உடல் தொடர்பான வலிகளை, வாதைகளை, ஆனந்தத்தை வேறு எந்தச் சொற்களால் குறிப்பிட முடியும்? பெண் கவிதைமொழியே உடலும் உடலின் உபாதைகளும் வேட்கைகளும் சார்ந்தது என்று ஜூலியா கிறிஸ்தவா குறிப்பிடுகிறார். இது ஒரே சமயத்தில் மறுப்பும் படைப்புமாகிறது. இதுவரை தன் உடல்மேல் பதிந்திருக்கும் ஆண்மையச் சித்தரிப்பை உதறும் மறுப்பு. தன் உடல் தன்னுடைய உரிமைப் பொருள் என்று உணரும் சுதந்திரம். இந்த நோக்கில் வெறும் வஸ்துவாக சுட்டிய சொற்கள் பெண்ணால் உச்சரிக்கப்படும்போது உடலைக் கடந்த இயக்கமாகின்றன.

ஆண்மையக் கருத்தாக்கங்கள் ஆயத்தம் செய்துவைத்திருக்கும் பெண் என்ற படிமத்தைப் பெண்களே எழுதும் மொழி நிராகரிக்கிறது. சாதி, இன, பால் வேற்றுமைகள் கொண்ட கலாச்சாரம் முன்வைக்கும் நிபந்தனைகளையும் சலுகைகளையும் மறுக்கிறது. ஒரு சமயம் இது மொழியின் சிக்கல். அதேசமயம் இது கலாச்சாரத்தின் சிக்கலும்கூட. இவற்றை எதிர்கொள்ள உருவாக்கப்படும் சுதந்திரம் கவிதையின் சுதந்திரமும் கலாச்சாரத்தின் சுதந்திரமும் ஆகிறது. விரிவான தளத்தில் யோசித்தால் இந்தச் சுதந்திரம் பெண்ணைப் பெண்ணுக்குள்ளேயே சிறைப்பட அனுமதிக்காது என்று கருதலாம். மேற்சொன்ன இயக்கத்தையும் சுதந்திரத்தையும் வெளிப்படுத்தும் கவிதைகள் சுகிர்தராணியுடையவை என்பதற்கு இந்தத் தொகுப்பு சாட்சியம்.

மையப்பொருளைச் சார்ந்து சுகிர்தராணியின் கவிதைகளை மூன்றாகப் பகுக்கலாம். ஒன்று: இந்தக் கவிதைகள் எல்லாவற்றிலும் ஒலிப்பவை ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள். அவை சாதி சார்ந்த ஒடுக்குமுறையாகவோ இனம் சார்ந்த ஒடுக்குமுறையாகவோ பாலினம் சார்ந்த ஒடுக்குமுறையாகவோ இருக்கின்றன. அவை குமுறல், சீற்றம், பழிவாங்கும் ஆவேசம், தமது வரலாற்றின் வெற்றிகள் பற்றிய கர்வம் ஆகிய எல்லாமும் வெளிப்படும் குரல்கள் அவை.

இரண்டாவது: பெண்ணின் காமமும் காதலும் சித்தரிக்கப்படும் கவிதைகள். சுகிர்தராணியின் கவிதைகளைப் பொருத்தவரை காமமும் காதலும் ஒன்றுதான். அதன் ஆதாரம் உடலின் சமிக்ஞைகள்தாம். காமமோ காதலோ மனம் சார்ந்தது என்ற ரொமாண்டிக்கான கருத்தை இந்தக் கவிதைகள் உதாசீனப்படுத்துகின்றன; புறக்கணிக்கின்றன. ஒரு கவிதையின் மையப்பாத்திரம் தன்னைக் ‘காமத்தின் புராதனக் கோவில்’ என்றே சொல்லுகிறது. சுகிர்தராணியின் இரண்டாம் தொகுப்பான ‘இரவு மிருக’த்தில் ஒரு கவிதை இருக்கிறது. ‘உலகத்து மொழிகளின்/ அத்தனை அகராதிகளிலும்/ தேடித் தேடி/ கடைசியில் தெரிந்துகொண்டேன்/உன் பெயரில் காதலுக்கு/ நிகரான இன்னொரு சொல்லை.’ இந்த மென்மையான கற்பனைகளைப் புதிய தொகுப்பில் காண்பது அரிது. மூன்றாவது கூறு: இந்தக் கவிதைகளில் இடம்பெறும் இயற்கை. சமீப காலத்தில் அதிக அளவுக்கு மனித வயப்படுத்தப்பட்ட இயற்கை அல்லது இயற்கையை ஒட்டிச் சித்தரிக்கப்பட்ட மானுடக் கூறுகள்கொண்ட கவிதைகள் இவை என்று சொல்லலாம். மனித சரீரம் இயற்கையின் பகுதியாகவோ இயற்கையின் அம்சங்கள் மனித உடலின் விரிவாகவோ சித்தரிக்கப்படுகின்றன. ‘முதல் கூடலுக்கு முன் நிகழ்ந்தவை’ (பக் 39) என்ற கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த மூன்று பகுப்பையும் ஒன்றிணைப்பது கவிதையாக்கத்தில் சுகிர்தராணி பின்பற்றும் அரசியல். ஒரு அர்த்தத்தில் இது ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல். இன்னொரு அர்த்தத்தில் பெண்நிலை அரசியல். ஒடுக்கப்பட்ட ஆணும் பாலின வேற்றுமையால் கீழானவளாகச் சித்தரிக்கப்படும் பெண்ணும் ஒரே தளத்தில் இருப்பவர்கள். அவர்கள் ஒரே துயரத்தை ஒரே கோபத்தை ஒரே விதியைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அண்மைக் காலத்தின் மாபெரும் மானுட அவலங்களான கயர்லாஞ்சியிலும் முள்ளிவாய்க்காலிலும் கொல்லப்பட்டவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பு அந்தச் சம்பவங்கள் பற்றியும் பல கவிதைகளில் பேசுகிறது.

பொதுவாக சுகிர்தராணியின் கவிதைகளில் விவிலியக் குறிப்புகள் அங்கங்கே காணப்படும். இந்தத் தொகுப்பில் அவற்றின் செல்வாக்கு அதிகம். கூடுதலாக புத்தனைப் பற்றிய சிந்தனைகள் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. அதற்கான காரணம் வெளிப்படையானது. ‘காட்டு வேர்’ என்ற கவிதையை இங்கே சொல்லலாம் (பக். 38).

இந்தத் தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கும்போது தென்பட்ட சில விஷயங்கள் சுவாரசியமானவை. தொகுப்பில் ஐம்பது கவிதைகள் இருக்கின்றன. அவற்றில் தலைப்புக் கவிதை உட்பட ஏழு கவிதைகள் முத்தம் பற்றியவை. தீண்டப்படாத முத்தம். முதல் முத்தம், கடைசி முத்தம், சபிக்கப்பட்ட முத்தம், விலக்கப்பட்ட முத்தம், சாம்பல் பூக்காத முத்தங்கள், உறையிடாத முத்தம் என்று போகிறது இந்தப் பட்டியல். இவை தவிர 14 கவிதைகளுக்குள் முத்தம் இடம்பெறுவதையும் குறிப்பிட வேண்டும். இதில் எந்த முத்தமும் மகிழ்ச்சியின் அடையாளமல்ல; வலியைச் சொல்பவை. தனி ஆள் என்ற வகையிலும் சமூகம் என்ற வகையிலும். தலைப்புக் கவிதையான ‘தீண்டப்படாத முத்தத்தை’ உதாரணமாகச் சொல்லலாம் (பக் - 27). அது பரவசத்தை அல்ல; ஓர் இனத்தின் வஞ்சினத்தைச் சொல்கிறது. உடல் ஓர் ஆயுதமாக மாறும் அரசியலைப் பேசுகின்றன, சுகிர்தராணியின் கவிதைகள். அவருடைய கவிதையின் இடம் இது என்று தோன்றுகிறது. மிக அதிகமான விமர்சனங்களை வரவழைக்கும் இடம்.

(காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பாக ஜனவரி இரண்டாம் தேதி தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

தப்பர்த்தம் கொள்ளாதே புணர்ச்சிக்கு அழைக்கிறேனென்று
http://mahendhiran.blogspot.in/


“மரந்துளிர்ந்த சாலையோரம்
கைப்பற்றி என் கனவுகேள்.
மனமொடிந்த பொழுதெல்லாம்
திகட்டும் வரை
உன் தோள்கொடு.
விளக்கணைந்த பின்னிரவில்
இமைமீறும் என் கண்ணீரை
சுட்டுவிரலால் துடைத்துவிடு.
மறுதலித்த வாழ்க்கைக்கு
என் பிரதியென
உன்முகம் காட்டு.
இத்தனைக்கும் சம்மதமெனில்
தயவுசெய்து
தப்பர்த்தம் கொள்ளாதே
புணர்ச்சிக்கு
அழைக்கிறேனென்று’’
“வீட்டினில்
வலுவிழந்த கெடுபிடிகள்.
வெளிச்செல்கையில்
பார்வைகள் துரத்தாத நிம்மதி.
சலனத்தைத் தூண்டாத
அந்த மூன்று நாட்கள்.
விளம்பரம்
உள்ளாடைகளின்
அவசியம் புரியாத
அவயவங்கள்.
செளகரியம்தான்
நரையோடியும்
பூப்படையாமல் இருப்பது’’
“இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
வேடிக்கைப் பார்ப்பதாய்
பாவனை செய்யும் நீ
என்னிடம்
எதை எதிர்பார்க்கிறாய்
காதலையா?’’

உயிர்வாதைக்குப் பிறகு,
“இரத்தச் சகதியில்
மீண்டழுத குழந்தையின்
துணிவிலக்கி
பெண்ணென முகம் சுழிப்பவனே
அன்று
என்மீது பரவியபோது
மனம் களித்தவன் நீதானே?’’
-சுகிர்தராணி
சுகிர்தராணி கவிதைகள்
ஓவியங்கள்: ரோஹிணி மணி


கவிதைப் பனிக்குடம்
பின்பனிக் காலத்துக் குளிர் இரவு
நிறம் உலராத பிரம்பு மேசையில்
படபடக்கிறது ஒரு வெள்ளைத் தாள்
காற்றின் கள்ளம்பட்டு
உரசிக்கொள்ளும் மூங்கில்களென
நானும் கவிதையும் தனித்திருக்கிறோம்
என்னுள்ளிருந்து அது பிறப்பதைத்
தன் குவளைக் கண்களால் காண
கலவிக் கால விலங்கினைப் போல்
என்னைத் துரத்திக்கொண்டிருக்கிறது
ஒரு பிரசவத்தை நிகழ்த்திக்கொள்ளும்
பரவசம் என்னுள் வேர்பிடிக்கிறது
இயல்பு கூடியவளாக நிற்கையில்
வெடித்த பருத்தியின் விதையென
நினைவு தப்புகிறது
உன் மகன் சான்றோன் என
உரைத்தபடி யாரோ ஓடுகிறார்கள்
தலைவியை வரைவு கடாய
வலிய மலைநாடனிடம் கெஞ்சுகிறேன்
பாடுபொருள் ஆகின்றன
என் தேமல்சூழ் அல்குலும் மாமையும்
முச்சந்தியில் வீசப்படும் சவுக்கடிகள்
முதுகை ஓவியக் களமாக்குகின்றன
ஆணொருவன் வன்புணர்வு செய்கையில்
உடைகிறது என் பனிக்குடம்
கண் விழித்துப் பார்க்கிறேன்
கவிதைக்குள்ளிருந்து கழிவுகளோடு
வெளிப்படுகிறது என் தலை.
இரவுக்குறி
சரிந்த மலையின் அடிவாரத்தில்
நிலவு உறங்கி இருந்தது
கழுத்து நீண்ட பெண்மயில் ஒன்று
கற்களையும் முட்டைகளென
அடைகாக்கும் பாறையைக்
கடந்து போகிறேன்
இருளின் வெளிச்சத்தில் புலப்படும்
கருத்த பாதையில்
வண்டுகள் மொய்த்துக் கிடக்கின்றன
தொடரும் நீர்த்த நிழலைப் போல
நரந்தம் பூவின் வாசனை
பயணிக்கிறது என்னோடு
கணுநீண்ட மூங்கில்களுக்கிடையே
வளைந்து செல்லும் வாடைக்காற்றாய்
எந்நெஞ்சம் நெகிழ்ந்து ஓட
மெய்யுறு புணர்ச்சியில் நீண்டு
களித்துக் கிடந்த காலம்
முன்னே நகர்கிறது
பிரப்பங்கொடி சுற்றிய கால்களை
விடுவித்துக்கொண்டு
காவல் சூழும் அவ்வீட்டை அடைகிறேன்
மேன்மாடத்தில் விளக்கெரிய
பூப்பந்தைச் சாளரத்தில் வீசுகிறேன்
எந்தன் இரவுக்குறி உணர்ந்து
எட்டிப் பார்க்கிறான் அவன்.