Saturday 20 February 2016

ஆதவன் (1942 – 1987) By சாரு நிவேதிதா


ஆதவன் (1942 – 1987)

By சாரு நிவேதிதா

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2016/02/20/ஆதவன்-1942-–-1987/article3287790.ece

First Published : 20 February 2016 02:21 PM IST


17 வயதிலிருந்து 25 வயது வரை எனக்கு ஆதவன் பைத்தியம் பிடித்திருந்தது. ஏனென்றால் அவர் எழுதிய இளைஞன் என்னைப் போலவே இருந்தான். அவருடைய எல்லாக் கதைகளிலும் நாவல்களிலும் வந்த இளைஞன் நான்தான் என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. எழுபதுகள். கணினி, அலைப்பேசி போன்ற நவீன சாதனங்கள் வராத காலம். பெண்கள் அப்போதுதான் லேசாக வெளியிலே வர ஆரம்பித்திருந்தார்கள். ஓர் ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டாலே அதில் ஏதோ ஒரு ‘ரொமான்ஸ்’ இருப்பதாக ஆண்களும் கொஞ்சம் பெண்களும் நம்பியிருந்த காலம். சினிமாவின் நாயகிகள் நாயகர்களை இன்னும் ‘டா’ போட ஆரம்பிக்கவில்லை. கவர்ச்சிக்காக சிஐடி சகுந்தலா போன்ற நடிகைகள் தனியாக இருந்தார்கள். நாயகிகள் மீது அந்தச் ‘சுமை’ இன்னும் விழுந்திருக்கவில்லை. கணினி இல்லாததால் இளைஞர்களுக்கு நடைபாதைக் கடைகளில் கிடைக்கும் பழுப்புக் காகிதங்களில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள்தான் ‘போர்னோ’ இலக்கியம்.





இப்படியான காலகட்டத்தில் larger than life கதாபாத்திரங்களை வெகு அனாயாசமாக உருவாக்கிப் பகடை ஆடிக்கொண்டிருந்தார் ஆதவன். ஆதவனைப் புரிந்து கொள்ள எழுபதுகளின் காலம் எப்படி இருந்தது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளியிலும் கல்லூரியிலும் (கொஞ்ச காலம்) படித்த நான் என்னுடைய 21 வயது வரை என் தாயார், பெரியம்மா, சின்னம்மா, அத்தை, சகோதரிகள், தெருவில் உள்ள அக்காக்கள் ஆகியோரைத் தவிர வேறு எந்தப் பெண்களோடும் ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. இவ்வளவுக்கும் பள்ளியும் கல்லூரியும் ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் முறையில் அமைந்தவை. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும். அப்போதைய பள்ளிக் கல்வியில் பதினோரு ஆண்டுகள் உண்டு. அந்தப் பதினோரு ஆண்டுகளும் என் வகுப்பில் இருந்த பதினைந்து பெண்களிடமும் நானும் சரி, என் வகுப்பில் இருந்த மற்ற பையன்களும் சரி, ஒரு வார்த்தை பேசியதில்லை. அப்படியே மீறிப் பேசினால் அறிவழகன் காஞ்சனா என்ற இரண்டு பெயர்களும் இதயம் – அம்புக்குறி படத்தோடு பள்ளிச் சுவர்களிலும் கழிப்பறைகளிலும் இடம் பெறும். அந்தப் பெண்ணை அத்தோடு பள்ளியிலிருந்து நீக்கி விடுவார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் ‘லார்ஜர் தேன் லைஃப்’ பாத்திரங்களைப் படிக்கும் ஓர் இளைஞனுக்கு எப்படி இருக்கும்? அது என்ன ‘லார்ஜர் தேன் லைஃப்’ பாத்திரங்கள்?

‘ஒரே விதமான ஓசைகளின் மத்தியில், ஒரே விதமான மனிதர்களின் மத்தியில், ஒரே விதமான வேலையைச் செய்துகொண்டு – சே! இதில் பிரமாதமான கெடுபிடியும் அவசரமும் வேறே. ‘மிஸ் நீலா! டெபுடேஷன் ஃபைல் கடைசியாக யார் பெயருக்கு மார்க் செய்யப்பட்டிருக்கிறது?’, மிஸ் நீலா! ஆர்.வி. கோபாலன் டிரான்ஸ்பர் ஆர்டர் டிஸ்பாச்சுக்குப் போய் விட்டதா?’, ‘மிஸ் நீலா! பி.என். (பென்ஷன்) தலைப்பில் புதிய ஃபைல் திறக்க அடுத்த நம்பர் என்ன?’, கேள்விகள், கேள்விகள், கேள்விகள். அவர்கள் தன்னைக் கேட்காதபோது, அவள் தன்னையே கேட்டுக் கொள்வாள் – மிஸ் நீலா! நீ எதற்காக இந்த அறையில், இந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாய்? – மிஸ் நீலா! உனக்கும் இந்த மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம்?’ (’சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்…’)

‘ஒருவிதத்தில் என் எழுத்துக்கள் யாவுமே நுட்பமான, நேர்மையான சம்பாஷணை முயற்சிகளென்றுதான் சொல்லவேண்டும். சாதாரணface to face சம்பாஷணையின் கெடுபிடி, பெளதிக நிர்ப்பந்தங்கள், பரஸ்பர தாட்சண்யங்கள், வேஷங்கள், நமக்கே புரியாத சில குரோத அலைகள் ஆகியவற்றினூடே என் எண்ணங்களைக் கோர்வைப்படுத்த முடியாத ஒரு தாபம்தான் என்னை மீண்டும் மீண்டும் எழுத்துக்கு விரட்டுகிறது. அதாவது, நேரடிச் சந்திப்புகளின்போது என் வார்த்தைகள், அவற்றின் அர்த்தங்களுக்கு அப்பாற்பட்டு, என் பெளதிக ஆகிருதி, முகத்தின் தன்மை ஆகியவைகூட எதிராளியிடம் சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்திய வண்ணமிருக்கின்றன. முதல் பார்வையில் ஒருவரிடம் இனிய சகோதர பாவத்தைக் கிளறுகிற என் மூஞ்சி, இன்னொருவரிடம் முதல் பார்வையில் பகைமை உணர்வுகளையும் வெறுப்பையும் தூண்டுவது ஏன் என்பது என்னை எப்போதும் அலைக்கழிக்கிற ஒரு பிரச்சினை. இந்த 'பரஸ்பர பிம்பங்களின்' tension இலிருந்து விடுபட்டு என்னையும் என்னைச் சுற்றியுள்ள உலகத்தையும் பற்றிய நிதானமான, ஆழமான சம்பாஷணையில் ஈடுபடும் ஒரு சாதனமாகவே எழுத்தை நான் பயன்படுத்துகிறேனென்று நினைக்கிறேன். எந்த சம்பாஷணையையும்போல இந்த சம்பாஷணைக்கும் ஒரு மறுபக்கம் உண்டு. நீங்கள்தான் அந்த மறுபக்கம்; உங்கள் எதிரொலிகளே இச்சம்பாஷணைக்கு முழுமை தரவேண்டும். எத்தனைக்கெத்தனை இந்த எதிரொலிகள் முதிர்ச்சியும் நுட்பமும் மிக்கனவாயிருக்கின்றனவோ, அத்தனைக்கத்தனை நம்மிருவருக்குமே மகிழ்ச்சியும் பயனும் தரக்கூடியதாக இந்த முழுமையின் தேடல் அமையும்.’ (‘காகித மலர்கள்’ நாவலுக்கு தி.க.சி. எழுதிய மதிப்புரைக்கு ஆதவன் எழுதிய பதில். திசைகள் இதழில் வெளிவந்தது.)

மேற்கண்ட இரண்டு பத்திகளிலும் நாம் காண்பது சமூகத்தின் போலித்தனம், எந்திரத்தனம் போன்றவற்றிலிருந்து விலகிய அல்லது விலக விரும்புகின்ற இளைஞர்களின் மனம். இவன்தான் ஆதவனின் இளைஞன். உதாரணமாக, ‘இரவுக்கு முன்பு வருவது மாலை’ என்ற குறுநாவலை எடுத்துக் கொள்வோம். ராஜசேகரன் என்ற இளைஞன் தில்லியில் உள்ள நாற்சந்தி ஒன்றில் சிக்னல் விளக்குகளைப் பார்த்துக்கொண்டு சாலையைக் கடக்காமலே நின்று கொண்டிருக்கிறான். இது மட்டுமே மூன்று பக்கங்கள் போகிறது. திடீரென்று கவனிக்கிறான். அவனைப் போலவே எதிர்த்திசையில் ஒரு பெண், பாதசாரிகள் பாதையில் வாகனங்களுக்கு சிவப்பு விளக்கு விழுந்த பிறகு கூட சாலையைக் கடக்காமல் நின்று கொண்டே இருக்கிறாள். அவனைப் போலவே தனித்தன்மை வாய்ந்த, சமூகத்துடன் ஒத்துப் போகாத, ஒரு பிரகிருதியாக இருப்பாளோ என எண்ணுகிறான்.

சிறிது நேரம் கழித்து அவள் சாலையைக் கடந்து இவனை நோக்கி வருகிறாள். புன்னகைக்கிறாள். அவனிடம் தோற்று விட்டதாக அறிவிக்கிறாள். ஆம். எதிர்ச்சாரியில் நின்று கொண்டு, பரபரப்புடன் இங்குமங்குமாக விரைந்து கொண்டிருக்கும் மனிதர்களை ஒரு கர்வத்துடன், ஒரு கேலியுடன், அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் இவன் மட்டும் நகராமல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறான். அது அவளுடைய தனித்தன்மையை மறுக்கும் ஒரு சவால் போல அவளுக்குத் தோன்றுகிறது. யார் இந்தக் கேரக்டர்? இவன் நகர்ந்த பிறகுதான் நான் நகர வேண்டும். ஆனால் அவள் தீர்மானம் தோற்று விடுகிறது.

‘எனக்கு இன்று அதிர்ஷ்டமான நாள். வார பலனில் போட்டிருந்தது’ என்கிறான் இவன். ‘செலவுள்ள தினமென்றும் போட்டிருக்குமே?’ என்கிறாள் அவள். பந்தயத்தில் வென்றவன் ஆதலால் அவன் அவளுக்குப் பார்ட்டி கொடுக்க வேண்டும்! மெல்லிய தென்றல். லேசான மாலை வெயில். நீண்ட நிழல்கள். தில்லியின் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கிறார்கள். யாருமே இதை ரசிப்பதில்லை என்பதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். வாழ்க்கை எந்திரத்தனமாகி விட்டது. பொருளாதார ரீதியான பயன்பாடு இல்லாமல் யாரும் எதுவும் செய்வதில்லை. அஸ்தமனத்தைப் பார்க்கும் நேரத்தில் ஓவர் டைம் செய்தால் காசு கிடைக்குமே என்பதுதான் சராசரி மனிதனின் எண்ணம். பேசிக்கொண்டே நடக்கிறார்கள். எப்படிப்பட்ட பேச்சு?

அவள் சொல்கிறாள்: ‘யார் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் நான் கவலைப்படுகிறவள் அல்ல. ஒவ்வொரு கணத்திலும் எனக்கு விருப்பமானதை நான் செய்கிறேன், செய்வேன்.’

‘அப்படித்தான் இருக்கவேண்டும். நானும் அப்படியிருக்க முயற்சி செய்கிறவன்தான். ஆனால் இருக்க முடிகிறதா அப்படி எப்போதும்? எல்லா விஷயங்களிலும்? இந்தக் கணத்தையே எடுத்துக் கொண்டால் கூட, நான் நானாகவும் நீங்கள் நீங்களாகவும் பரிபூர்ணமாக, பின்னப்படாதவர்களாக, ஒருவரையொருவர் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகச் சொல்ல முடியுமா? நான் காண்பதும் கேட்பதும் உங்களையல்ல. நீங்கள் எனக்குக் காட்ட விரும்பும் உங்களின் ஒரு பகுதியை, ஒரு அம்சத்தை, நான் இன்னொரு ஆசாமி என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், நீங்கள் இன்னொரு ரூபத்தில் உங்களைக் காட்டியிருப்பீர்கள் அல்லவா?’

இந்த உரையாடல்தான் ஆதவனின் விசேஷம். இதுதான் ‘லார்ஜர் தேன் லைஃப்’ பாத்திரங்கள்.

பிறகு இருவரும் கோக் அருந்துகிறார்கள். பிறகும் முன்போலவே நடக்கிறார்கள். அப்போது அவன் நினைக்கிறான்.

‘எனக்கு இவளைப் பிடிக்கிறது; இவளுடைய புன்னகை பிடிக்கிறது; இவளுடைய நடை பிடிக்கிறது; இவளுடைய வளைவுகள், அசைவுகள், பாவங்கள், பாவனைகள் – எல்லாமே என்னுள்ளே ஒரு பூரிப்பையும் எழுச்சியையும் ஏற்படுத்துகின்றன. எங்கேயோ, எப்போதோ இவளைப் பார்த்திருப்பது போல, இவளுடன் பழகியிருப்பது போல தோன்றுகிறது. எப்போதோ தொலைந்த பொருளொன்று மீண்டும் கிடைத்தது போல, கலைந்த சுருதி சேர்ந்தது போல, மறந்திருந்த ராகம் நினைவு வந்தது போல, முன்பு சில நாட்கள் குடியிருந்து பிறகு காலி செய்து விட்ட ஒரு வீட்டின் சுற்றுப்புறங்கள், ஓசைகள், மணங்கள் இவற்றால் திடீரெனத் தாக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. விநோதமானதொரு கிளர்ச்சியும் உன்மத்தமும் தவிப்பும் உண்டாகிறது. மகிழ்ச்சியும் வருத்தமும் ஒருங்கே உண்டாகின்றன. இவளைச் சந்தித்ததில் மகிழ்ச்சி; இவ்வளவு தாமதமாக ஏன் சந்தித்தேனென்ற வருத்தம். மனதில் அபூர்வமானதொரு அமைதி, கூடவே ஒரு பயம், ஒரு வெறி, ஒரு தாபம், ஒரு கோபம், ஒரு படபடப்பு. இவளும் இந்தக் கணமும் இந்த உணர்வுகளும் பொய்யாகி விடக் கூடாதென்ற பயம். நழுவிப் போய் விடாமல் இவளை இறுகத் தழுவி அணைத்துக் கொள்ள வேண்டும், இவளுடன் ஒன்றிச் சங்கமித்து என்னுடைய ஒரு பகுதியாகவே இவளை ஆக்கிக் கொண்டு விட வேண்டுமென்ற வெறி. இவ்வளவு வருடங்கள் இவள் என்னைக் காக்க வைத்துவிட்டாள் பார்த்தாயா என்ற தாபம். இவ்வளவு வருடங்கள் பிடித்திருக்கின்றனவே எனக்கு இவளைக் கண்டு பிடிக்க என்று என் மேலேயே கோபம். இத்தனை வருடங்களாகக் காத்திருந்ததுக்கும் தவித்திருந்ததுக்கும் காக்க வைத்ததுக்கும் தவிக்க வைத்ததற்கும் இப்போதே இந்தக் கணமே ஈடு செய்ய வேண்டுமென்ற பரபரப்பு, இவளைத் தண்டித்து நானும் இவளால் தண்டிக்கப்பட வேண்டுமென்ற செல்லமான எண்ணம்.’

‘என்ன யோசிக்கிறீர்கள்?’ என்றாள்.

இதுதான் ஆதவன். இதற்கு மேல் என்ன ஆகிறதென்றால், அவள் ஒரு டான்ஸர். அந்தச் சாலையிலேயே நடனம் ஆடுகிறாள். எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்கள். இவனுக்குக் கோபம் வந்து விடுகிறது. ஒரு டாக்ஸியை வரவழைத்து அவளை அதில் இழுத்துப் போட்டுக்கொண்டு போகிறான். அவளும் அவன் கோபத்தை ரசிக்கிறாள்.

ஏதோ ஹாரி பாட்டர் கதை படிக்கிறாற்போல் இருக்கிறதல்லவா? அதுதான் ஆதவனின் லார்ஜர் தேன் லைஃப் பாத்திரங்கள்.

1978-ம் ஆண்டு, என் 25-வது வயதில் நான் தில்லி சென்றதற்குக் காரணமே ஒருவகையில் ஆதவன்தான். ஆதவன் தவிர கணையாழி ஆசிரியர் குழு மற்றும் க.நா.சு. உட்பட ஒரு எழுத்தாளர் படையே தில்லியில்தான் இருந்தது. ஆனால் ஆண்ட்டி க்ளைமாக்ஸாக நடந்தது என்னவென்றால், தில்லியில் போய் நான் யாரையுமே பார்க்கவில்லை. காரணம், அங்கே இருந்த ஒரு இலக்கிய மந்திரவாதியிடம் மாட்டிக் கொண்டு விட்டேன். அவரிடம் மாட்டினால் அவ்வளவுதான். தி. ஜானகிராமனைத் தவிர மற்ற அத்தனை பேரும் வீண் என்பார். தி.ஜா.வையோ அப்போது எனக்குப் பிடிக்காது. முடிந்தது கதை. யாரையுமே பார்க்கவில்லை. மந்திரவாதியின் மெஸ்மரிஸ வளையத்திலிருந்து வெளியே வந்த போது இ.பா. போலந்து போய் விட்டார். க.நா.சு. தமிழ்நாடு. ஆதவன் பெங்களூருக்கு மாறி விட்டார். மாறின கையோடு சிருங்கேரியில் உள்ள துங்கா நதியின் சுழலில் சிக்கி இறந்து விட்டார். இறந்தபோது அவர் வயது 45. ஜூலை 19-ம் தேதி 1987.

ஒன்றிரண்டு முறை ஆதவனை தில்லி பிரகதி மைதானில் உள்ள காதம்பரி அரங்கில் சந்தித்திருக்கிறேன். ஆண்களில் அப்படி ஒரு அழகும் வசீகரமும் வெகு அபூர்வம். காந்தத்தைப் போல் ஈர்க்கும் கண்கள். ரோஜா நிற உதடுகள். சாமுத்ரிகா லட்சணத்துக்கேற்றவாறு சிருஷ்டிக்கப்பட்ட பெண்களுக்கு உள்ளது போல் வரைந்தது போன்ற நீண்ட புருவம். சுருள் சுருளாக முடி. மீசை இல்லாத முகம். நல்ல உயரம். நான் அண்ணாந்துதான் பேச வேண்டியிருந்தது. எப்போதும் புன்னகை தவழும் முகம். இவருக்குக் கோபமே வந்திராதோ, அதிர்ந்தே பேசத் தெரியாதோ என்பது போன்ற குரல். கூர்ந்து கேட்டால்தான் புரியும் என்பது போன்ற மிக மென்மையான பேச்சு.

அவரே ஒரு கதையில் குறிப்பிடுவது போல, வெட்கத்தில் தாழ்ந்திருக்கும் அவள் பார்வை சற்றே நிமிரும் சமயங்களில் அவளை உவகையிலும் சிலிர்ப்பிலும் ஆழ்த்தும் உயரம்; மீசை தாடி இல்லாமல் மழுமழுவென்று க்ஷவரம் செய்யப்பட்ட சுத்தமான, மாசு மருவற்ற முகம்.

தில்லியில் ஒரு காலகட்டத்தில் ஆசிரியர், மாணவர் என்று மூன்று தலைமுறை எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார் இந்திரா பார்த்தசாரதி. தி. ஜானகிராமனின் மாணவன் இ.பா., இ.பா.வின் மாணவர்கள் ஆதவனும் எஸ். சம்பத்தும். இது குறித்து இ.பா. மேலும் கூறுகிறார்:

அவன் நேஷனல் புக் ட்ரஸ்டில் வேலை பார்த்தபோது அநேகமாக வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை என் வீட்டுக்கு வருவான். என் வீடு அவன் அலுவலகத்தினின்றும் மிகத் தொலைவில் இல்லை. அவன் என் வீட்டில் இரண்டு மணி நேரம் இருந்து ‘பேசிக் கொண்டிருந்தான்’ என்றால், அவன் பேசிய வாக்கியங்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில்தான் இருக்கும். அவன் உரையாடலில், பொருள் பொதிந்த மௌனங்களும் புன்னகையும்தான் அதிகமாக இருக்கும். ஒரு தடவை அவன் என் மனைவியிடம் சொன்னான், ‘டைம் போனதே தெரியலே, மூணு மணி நேரமா பேசிண்டேயிருந்துட்டோம்’ என்று. என் மனைவி சிரித்துக் கொண்டே, ‘ஏன் pluralலெ சொல்றீங்க?’ என்றதும், மறுபடியும் புன்னகைதான் அவன் பதில்.

(தொடரும்)

ஆதவன் – பகுதி 2


By சாரு நிவேதிதா

First Published : 28 February 2016 10:00 AM IST


1972-ல் ‘காகித மலர்கள்’ தீபம் மாத இதழில் வெளிவந்து கொண்டிருந்தபோது அதை விடாமல் படித்த வாசகர்களில் நானும் ஒருவன். அப்போது ஆதவனின் வயது 30. அத்தனை வயதில் எப்படி இவ்வளவு முதிர்ச்சியான நாவலை எழுதினார் என்று இப்போது இரண்டாவது முறையாக ‘காகித மலர்களை’ வாசிக்கும்போது தோன்றுகிறது. மற்றொரு ஆச்சரியம், என்னுடைய 19-வது வயதில் படித்தபோது எத்தகைய உணர்வுகளை அடைந்தேனோ அதே உணர்வுகளைத்தான் இப்போது 44 ஆண்டுகள் கழித்துப் படிக்கும்போதும் அடைகிறேன். அப்போது, இந்த நாவலை நாம் எழுதியிருக்கக் கூடாதா என்று ஏங்கினேன். இப்போது, இதிலிருந்துதானே நாம் கற்றுக் கொண்டோம் என்ற திருப்தியையும் கிளர்ச்சியையும் அடைகிறேன். ஏனென்றால், என் எழுத்தின் மீது அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்திய தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவராகத் தோன்றுகிறார் ஆதவன்.

‘காகித மலர்களி’ன் பிரதான பாத்திரமான செல்லப்பா அச்சு அசலாக என்னைப் போலவே இருந்தான். அதேசமயம், செல்லப்பாவை ஆதவன் தன்னுடைய சாயலைக் கொண்டே உருவாக்கியிருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. நாவலின் முடிவில் ஆதவனே அதை எழுதியும் இருக்கிறார். (எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கும் செல்லப்பா கதைகளும் எழுதுகிறான்.) ஆனால் விஷயம் அது அல்ல; அறுபதுகள், எழுபதுகளின் இளைஞன் ஒவ்வொருவனுமே செல்லப்பாவைப் போல்தான் இருந்தான்.

மனித குல வரலாற்றிலேயே மின்சாரத்தின் கண்டுபிடிப்புக்கு நிகரான மிக முக்கியமான கண்டுபிடிப்பு கணினி. கணினிக்கு முந்தைய, தொலைக்காட்சி, அலைப்பேசி போன்ற சாதனங்கள் வருவதற்கு முந்தைய காலகட்டம் எப்படி இருந்தது என்பது ‘காகித மலர்களி’ன் மையச் சரடுகளில் ஒன்று. அதைக் கலாபூர்வமாகப் பதிவு செய்த ஆதவன் தொலைக்காட்சியும், கணினியும், அலைப்பேசியும் பழக்கத்துக்கு வரும் முன்பே நடுவிலே நின்று போன சங்கீதத்தைப் போல் அகால மரணம் அடைந்து விட்டார். அந்த வகையில் பழமையும் புதுமையும் சந்திக்கும் புள்ளியில் எழுதப்பட்ட நாவல் என்று காகித மலர்களைச் சொல்லலாம். அதாவது, பழைய சகாப்தத்தின் இறுதி நாவல்; புதிய சகாப்தத்தின் முதல் நாவல்.

***

தொலைக்காட்சியும், கணினியும், அலைப்பேசியும் இல்லாத அறுபதுகளின் இளைஞன் எப்படி இருந்தான்? அப்போது பீட்டிள்ஸ் குழுவினரின் பாதிப்பு உலகம் முழுவதும் பரவியிருந்தது. அந்தக் குழுவைச் சேர்ந்த ஜார்ஜ் ஹாரிஸனைக் கேட்பது அப்போதைய இளைஞனின் கலக வெளிப்பாடுகளில் ஒன்றாக இருந்தது. ஏன்? ‘சமூகத்தோடு ஒத்துப் போகாத தனித்தன்மையும், பிடிவாதமும், ஊன்றுகோல்களற்ற குமுறலும் தவிப்பும், கட்டுப்பாடுகளற்ற பரவசமும் ஆவேசமும்’ அவர்களைக் கவர்ந்தன. அறுபதுகளில் இளைஞர்களின் நாயகனாக இருந்த இன்னொருவர், ஹாலிவுட்டின் ஸ்டீவ் மக்வீன். எதிர்க் கலாசார நாயகன். அவனுக்கு யாரும் லட்சியமில்லை. அவனை யாரும் எளிதில் வசப்படுத்தி விட முடியாது. நட்பு, காதல்… எதுவும் அவனுக்குத் தேவையில்லை.

அறுபதுகளில்தான் ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்; அல்லது, புன்னகை செய்யத் தொடங்கினார்கள். அறுபதுகளில்தான் பெண்கள் புகைக்கலாமா என்று யோசிக்கவும், மதுவை ருசி பார்க்கவும் ஆரம்பித்திருந்தார்கள்.

நாவலிலிருந்து சில காட்சிகள்: ஜூக்ஸ் பாக்ஸ் ஓட்டையில் நாலணாவை நுழைத்து விசையையும் அழுத்திவிட்டு வந்து உட்கார்ந்தான். ஜார்ஜ் ஹாரிஸன் பாட்டு தொடங்கியது. பத்ரியும் ரவியும் அந்தப் பெண்கள் பக்கமே பார்த்துக்கொண்டு சொடக்குப் போட்டுக் கொண்டே இருந்தார்கள். அந்தப் பெண்கள் இந்தச் சீண்டலைப் பொருட்படுத்தாதவர்களாக இருக்க முடியாமல், அதே சமயம் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்கிக் கொள்வதிலும் வெற்றியடையாமல், தாங்கள் கவனிக்கப்படுவதை மிக உணர்ந்தவர்களாக, இந்த உணர்வை மறைக்க முயன்றவர்களாக ஒருவரோடொருவர் இயல்பாகப் பேசிக் கொள்வதாக பாவனை செய்துகொண்டு, மௌனம் ஏற்படுத்தக் கூடிய சங்கடத்தைத் தொடர்ந்துகொண்டு அதன் மூலமே அதை ஒரு பாவனையாக உணர்த்திக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

தனிமையில் பெண்களைச் சந்திக்கும்போது பயந்து பயந்து ஓடிக் கொண்டும், நண்பர்களுடன் கூட்டமாக இருக்கும்போது அசட்டுத் தைரியத்துடன் அவர்களைச் சீண்டுவதும் இளைஞர்களின் வழக்கமாக இருந்தது அப்போது.

ரமணியும் செல்லப்பாவும் ஜன்பத்தில் நடக்கத் தொடங்கினார்கள். ‘அதோ நீலச்சட்டை போட்டுண்டு ஒருத்தி வரா பாரு’ என்றான் ரமணி.

‘நல்ல பாடி.’

‘டெஸ்ட் பண்ணிப் பாக்கிரேன்’ என்ற ரமணி எங்கேயோ பார்த்துக் கொண்டு போகிறவன் போல நடந்து சென்று அவள் மேல் மோதினான். ‘ஓ, ஐ ஆம் ஸாரி’ என்றான். அவள் எதுவும் பேசாமல் ஏளனமும் அலட்சியமும் கலந்த ஒரு புன்னகை புரிந்துவிட்டு மேலே நடந்து சென்றாள். ‘ஒருநாள் எவளாவது உன்னைச் செருப்பாலே அடிக்கப் போறா’ என்றான் செல்லப்பா.

‘போடா முட்டாள்! இப்படி இடிச்சால் ஒரு மஜா அவாளுக்கு… உனக்குத் தெரியாது… இடிபடணும்னுதான் கூட்டத்துக்கு நடுவாலே நடந்து போகிறா… பஸ்ஸிலேயே வெறுமனேயாவது போயிட்டு வருவா சிலபேர்… வேண்டியது வீட்டிலே கிடைக்கலேன்னா…’

ரமணி பேசிக் கொண்டிருக்கும்போதே நடுநடுவில் நிறுத்தி எதிரே வருகிற பெண்கள் மேல் உரசியவாறும் மோதியவாறும்தான் இருந்தான். பெண்களுடைய மனோதத்துவத்தைத் தலைகீழ்ப் பாடமாக அறிந்து வைத்திருந்தவன் போல அவன் நடந்து கொண்டான். செல்லப்பாவுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. அதே சமயத்தில் ரமணியின் செய்கை அவனுக்கு ஒரு ரகசியமான மகிழ்ச்சியையும் அளித்தது.

செல்லப்பாவின் தம்பி பத்ரியின் வகுப்புத் தோழனான கணேசன் தில்லியில் உள்ள கீழ்மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவன். அவனுடைய பிரச்னை, புத்தாண்டுக்கு முந்தின இரவில் ‘ஆண்டு முடிவு’ நிகழ்ச்சியை டெலிவிஷனில் பார்க்க வேண்டும். (அப்போது தொலைக்காட்சி என்ற வார்த்தை பயன்பாட்டில் இல்லை.) அவன் வீட்டில் டெலிவிஷன் இல்லை. ரேடியோ இருந்தது. ஆனால் இரண்டு மாதங்களாக வாயடைத்துப் போயிருந்தது. அவன் அப்பா அதை வேண்டுமென்றே ரிப்பேர் செய்யாமல் வைத்திருந்தார். அவன், அவனுடைய தம்பி, தங்கை எப்போதும் பாடத்தைப் படிக்காமல் ரேடியோ கேட்டுக் கொண்டேயிருக்கிறார்களாம். பரீட்சை முடிந்த பிறகுதான் அவர் ரேடியோவை ரிப்பேர் செய்யப் போகிறாராம். கணேசனின் இன்னொரு பிரச்னை, வீட்டுக்குப் போய் சட்டைகளைத் துவைக்க வேண்டும். இரண்டு சட்டைகள்தான் இருந்தன. இருந்த ஒரே ஸ்வெட்டரும் அழுக்காக இருந்தது. ஆனால் குளிர்காலமாதலால் துவைத்தால் காயாது. பனியன்கள் பொத்தல் பொத்தலாகி விட்டன. ஆனால் அது இப்போது அவசரப் பிரச்னை இல்லை. குளிரில் எப்போதும் சட்டை போட்டிருப்பதால் பனியன் கிழிசலை யாரும் கவனிக்கப் போவதில்லை.

கணேசனின் அப்பாவும் பத்ரியின் அப்பாவும் ஒரே சமயத்தில் மினிஸ்ட்ரியில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். பத்ரியின் அப்பா டெபுடி செக்ரடரி. கணேசனின் அப்பா வெறும் செக்‌ஷன் ஆபீசர்தான். அதைப் பற்றியும் யோசிக்கிறான் கணேசன்.

பத்ரி மற்றும் செல்லப்பாவின் மூத்த சகோதரனான விசுவம் ஒரு புத்திஜீவி. லட்சியவாதி. அவனுக்கும் யாரோடும் ஒத்துப் போக முடிவதில்லை. தான் செய்து வந்த, அதிகம் பணம் தரக் கூடிய வேலையை உதறிவிட்டு அமெரிக்காவில் சுற்றுச்சூழலியலில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறான். அவனைப் பொறுத்தவரை மந்தையிலிருந்து வேறுபடுபவர்களுடைய கனவுகள்தான் சமுதாயத்தை மாற்ற முடியும். மேன்மையடையச் செய்ய முடியும். ஜனநாயகம் மந்தைத்தனத்தைத்தான் உருவாக்குகிறது. செல்வாக்குள்ளவர்கள் தம் செல்வாக்கை மென்மேலும் வலுப்படுத்திக் கொள்ள இது உதவுகிறது. ஒரே மாதிரியான கட்டடங்கள், வாழ்க்கை முறை, கல்வித் திட்டம் இவை தனிமனித வேட்கைகளை, கனவுகளை ஒடுக்குகின்றன.

காந்தியைப் போன்றவர்கள் மந்தைக்கு அறிவூட்ட முயலுகிறார்கள். ஹிட்லரைப் போன்றவர்கள் மந்தையின் மனப்போக்கை, முடமான உணர்ச்சித் தாகத்தை, தம்முடைய சொந்த நோக்கங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

***

உலக நாவல் வரிசையில் வைக்கத் தகுந்ததான ‘காகித மலர்கள்’ இன்றைய மதிப்பீடுகளின் போலித்தனத்தை மிக வலுவாகவும் கலாபூர்வமாகவும் சொல்லுகிறது. நாவல் தொடங்குவதற்கு முன்பே மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பிருஹதாரண்ய உபநிஷத்தின் வாசகங்களே நாவலின் செய்தி.





‘யாக்ஞவல்கியரே, மனிதனுக்கு ஒளியைத் தருவது எது?’ என்றான் அரசன்.

‘சூரியன்’ என்கிறார் யாக்ஞவல்கியர்.

‘சூரியன் மறைந்த பின்பு?’

‘சந்திரன்.’

‘சூரியனும் மறைந்து சந்திரனும் மறைந்த பின்பு?’

‘நெருப்பே அவனுக்கு ஒளியாகிறது.’

‘நெருப்பும் அணைந்த பிறகு?’

‘வாக்கே அவனுக்கு ஒளியாகும். அதன் உதவியால் காண்கிறான், உழைக்கிறான், வீடு திரும்புகிறான். அதனால் அரசே, ஒருவன் தன் கைகளைத் தெளிவாகப் பார்க்க முடியாதபோது, ஓசை கேட்கிறது. அதை நோக்கி அவன் செல்கிறான்.’

‘அப்படியானால் யாக்ஞவல்கியரே, சூரியன் மறைந்து, சந்திரன் மறைந்து, நெருப்பு அவிந்து, ஓசையும் அடங்கி விடும்போது மனிதனுக்கு ஒளியாவது எது?”

‘ஆத்மாவே அவனுடைய ஒளியாகும்’ என்றார் யாக்ஞவல்கியர்.

காகித மலர்களின் ஒவ்வொரு பக்கமும் மனிதன் தன் ஆத்மாவை எப்படி எப்படியெல்லாம் கீழ்மையை நோக்கிச் செலுத்துகிறான் என்பதையே சொல்லிக்கொண்டு போகிறது. ஸ்டெனோவாக மினிஸ்ட்ரியின் உள்ளே நுழையும் பசுபதி தன் எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்து டெபுடி செக்ரடரியாக உயர்ந்து விடுகிறார். நாவலின் முடிவுப் பகுதியில் அவருக்கு ஜாயிண்ட் செகரடரி பதவியும் கிடைத்து விடுகிறது. இதற்காகத் தன் மனைவியையே உயர் அதிகாரிகளிடமும் மந்திரிகளிடமும் அனுப்பி வைக்கவும் அவர் தயங்குவதில்லை.

அவர் மனைவி பாக்கியம் ஒரு நாடக நடிகை. வயது ஐம்பதுக்கு மேல் ஆனாலும் முப்பதுக்கு மேல் மதிப்பிட முடியாத தோற்றம். பணம், புகழ், அதிகாரம் ஆகியவற்றுக்காக எப்படியும் வாழலாம் என்ற நோக்கம் உடையவள். கணவனின் அதிகாரி யு.பி. பிராமணராக இருந்தால் வெள்ளிக்கிழமை தோறும் அவர்கள் வீட்டில் நடக்கும் பஜனைகளில் கலந்துகொண்டு தொண்டைக் கட்டுடன், தவிடு போன்ற ஒரு பிரசாதத்தை வாங்கிக்கொண்டு வருவாள். சட்டர்ஜியாக இருந்தால் அவரோடு வங்காளி நாடகங்களுக்குப் போவாள். வாராவாரம் அதிகாரிகள் வைக்கும் மதுபான விருந்துகளையும் தவற விடுவதில்லை. உடம்பு தேவை என்று கேட்கும் அதிகாரிகளுக்கு அதையும் தருவாள்.

பசுபதி-பாக்கியம் தம்பதியின் மூத்த புதல்வன் விசுவத்தின் மனைவி பத்மினி புதிய சகாப்தத்தின் பெண். சுதந்திரம் அடைந்தவள். அவளைப் பற்றிய ஒரு வர்ணனை இது: பம்பாயிலிருந்து டில்லிக்கு ரயிலில் வரும்போது பத்மினி ஜீன்ஸ் அணிந்திருந்தாள். யார் யாருடனோ சிநேகம் பிடித்துக் கொண்டாள். விலாசம் குறித்துக் கொண்டாள். அதில் ஒருவன் மருந்துக் கம்பெனியில் வேலை செய்யும் மணமாகாத இளைஞன். நவநாகரிக மங்கையொருத்தியின் நட்புக்குப் பாத்திரமாக வேண்டுமென்ற ஆசை எல்லோருக்குமே இருக்கிறது – குறிப்பாக, இறுக்கமான மத்தியதரச் சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு, மூட மரபுகளிலும் கட்டுப்பாடுகளிலும் உழன்று சலித்தவர்களுக்கு. ஜீன்ஸ் அணிந்த, தலைமயிரை பாப் செய்து கொண்ட, அகலமான கருப்புக் கண்ணாடியணிந்த, புகை பிடிக்கும், மது அருந்தும், அமெரிக்கக் கொச்சையில் பேசும் பெண் இவர்களுக்கு விடுதலையின் உருவமாகத் தோன்றுகிறாள்.

விசுவமும் பத்மினியும் ஒருநாள் ஒரு மதுபான விருந்துக்குச் செல்கிறார்கள். அங்கேயும் பத்மினி எல்லோருடனும் சிநேகம் பிடித்துக்கொண்டு சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள். அந்தக் கூட்டத்தில் ரயிலில் சந்தித்த மருந்து கம்பெனி ஆடவனும் இருக்கிறான். அந்த இளைஞனோடு ஓரிரு நிமிடங்கள் பேசுவது கூட விசுவத்தின் சுரணையுணர்வைச் சோதிப்பதாக இருக்கிறது. அவ்வளவு மூடனாக இருக்கிறான் அவன். விருந்து நடக்கும் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து செடி கொடிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான் விசுவம். அப்போது திடீரென்று ஒரு ஒளிக்கீற்று அவன் மீது விழுகிறது. மாடி ஜன்னல் திறந்ததனால் வந்த வெளிச்சம். மேலே பார்க்கிறான். ரயிலில் சந்தித்த இளைஞனும் பத்மினியும் ஜன்னல் அருகே வந்து நின்றிருந்தார்கள். ஏதோ பேசிக் கொண்டார்கள், மெல்லிய குரலில்… பத்மினி எதற்கோ உரக்கச் சிரித்தாள். அந்த இளைஞன் அவளை அணைத்துக் கொள்ள முயன்றான். அவள் மெல்லத் தன்னை விடுவித்துக் கொண்டு உள்ளே செல்கிறாள்.

சிறிது நேரம் கழித்து விசுவம் மாடிக்குச் செல்கிறான். ‘எங்கே போய் விட்டீர்கள்?’ என்றாள் பத்மினி, செல்லமாகக் குற்றம் சாட்டும் தொனியில்.

‘தோட்டத்தில் இருந்தேன்.’

‘மை காட்! இங்கு வந்துமா செடி கொடிகளை விட மாட்டீர்கள்?’

அவன் அவள் யாசித்த பிம்பத்தை அணிய முயலவில்லை. (தோள்களைக் குலுக்கியிருக்க வேண்டுமோ? என் சுபாவம் உனக்குத் தெரிந்ததுதானே என்று முட்டாள்தனமாகப் புன்னகை செய்திருக்க வேண்டுமோ?) ‘சுத்தமான காற்றை சுவாசிக்கப் போயிருந்தேன்’ என்று அமைதியான குரலில் கூறியவாறு அவளைப் பார்த்தான். அவள் அவன் விழிகளைச் சந்திக்கவில்லை. ‘கிளம்பலாமா?’ என்றாள்.

விசுவத்தின் தாத்தா சென்ற நூற்றாண்டின் மதிப்பீடுகளைக் கொண்டவர். சம்ஸ்கிருதப் புலவர். சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர். தாத்தா உயிரோடு இருந்த வரையில் எல்லாப் பண்டிகை தினங்களும் தவறாமல் வீட்டில் கொண்டாடப்பட்டு வந்தன- சிவராத்திரியிலிருந்து கிருஷ்ண ஜெயந்தி வரையில், கந்த சஷ்டியிலிருந்து ராமநவமி வரையில். ஆனால் அவர் போன பிறகு வீட்டில் பண்டிகை கொண்டாடுவதில்லை. அப்பாவுக்கு நேரமில்லை. அம்மாவுக்கும் நேரமில்லை. இதிலெல்லாம் அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை.

தாத்தா செல்லப்பாவைத் தவிர அந்த வீட்டில் அதிகம் உறவாடுவது வீட்டுச் சமையல்காரர் ராம்ஸிங்கோடுதான். ஏனென்றால், தாத்தாவைப் போலவே ராம்ஸிங்குக்கும் மலர்களிலும், பறவைகளிலும், பருவ மாற்றங்களிலும் நுட்பமான ஈடுபாடு இருந்தது. இமயமலை கட்வால் பிரதேசத்தைச் சேர்ந்தவன். சமையலறையில் வேலை செய்யும்போது அந்தப் பிரதேசத்தின் நாட்டுப்பாடல் மெட்டுகளை முனகிக் கொண்டிருப்பான். வீட்டில் யாருமில்லாவிட்டால் உரத்த குரலில் பாடவும் செய்வான். அந்தப் பாட்டில் ஒரு விடுதலை ஏக்கம் தொனிப்பது போலிருக்கும். அந்த நகர்ப்புறத்துச் சூழ்நிலை, மனிதர்கள், நாகரிகப் பூச்சுகள் யாவற்றிலிருந்தும் விடுபட்டு மீண்டும் தன்னையும் தன் முன்னோர்களையும் உருவாக்கிய கட்வால் மலைப்பிரதேசத்தை அடைய வேண்டுமென்ற ஆன்மாவின் துடிப்பாக அந்தப் பாட்டு தோன்றும். தாத்தா தில்லியில் இருந்த நாட்களில் எப்போதும் ஏதாவதொரு ராகத்தை முனகிக் கொண்டோ, சில சமயங்களில் உரத்த குரலில் பாடும்போதோ கூட விசுவத்துக்கு இதே உணர்வுதான் ஏற்படும்.

அப்படியானால் ஆதவன் முந்தின தலைமுறையின் மதிப்பீடுகளைத் திரும்பவும் மறு உருவாக்கம் செய்கிறாரா என்றால் அதுவும் இல்லை. தாத்தாவையே அதற்கும் உதாரணமாகச் சொல்லலாம். இயற்கையோடு இயைந்த செறிவான வாழ்க்கையை வாழ்ந்த தாத்தா மோசமான ஆணாதிக்கவாதியாக இருந்திருக்கிறார். பாக்கியம் தன் மருமகள் பத்மினியிடம் சொல்வதாக வருகிறது அந்தப் பகுதி. ஒருநாள் பாக்கியத்திடம் அவளுடைய மாமியார் தான் பட்ட துன்பங்களைச் சொல்லி அழுதாள். அவள் காலட்தில் பெண்கள் அதையெல்லாம் யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியாது. லஜ்ஜை. கட்டுப்பாடுகள், ஆசாரங்கள் அதிகம்.

அவருக்குத் (பாக்கியத்தின் மாமனார்) தினவு பொறுக்க முடியாமல் போகும்போது அவளுக்கு ‘அது’ கிடைக்கும். ஆனால் அவள் வேண்டும்போது அல்ல. அவள் விரும்புகிற அளவும் அல்ல. ‘அவர்’ பசி தீர வேண்டும். அவ்வளவுதான். மறுபடி அவளுடைய நினைவு, அவளுடைய தேவை ஏற்படுகிற வரை அவள் தவித்துத் தவித்து, ஆசைகள் பலமுறை தோன்றித் தோன்றி, ஒடுங்கி ஒடுங்கி… இல்லை, ஒடுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு… இன்னொரு பக்கம், அவர் அவளை நெருங்கித் தன் பசியைத் தீர்த்துக்கொண்டு, ஆனால், அவள் பசியைத் தீர்க்காமலேயே விலகிவிடும்போது, எழுச்சியுற்ற வேட்கையை, அதைத் தணித்துக் கொள்ளச் சாதனம் அருகிலிருந்தும் இல்லாதவளாக அவள் தவித்த தவிப்பு. அவர் அவளை நெருங்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றச் செய்யும் தவிப்பு.

இயல்பான ஒரு பசியை இயல்பானதாக ஒப்புக் கொள்ளாமல் ஒரு பலவீனமாக எண்ணி அதைப் பற்றிக் குற்ற உணர்வுகளால் பீடிக்கப்பட்ட விசுவத்தின் தாத்தாவைப் போன்றவர்கள், உடலுறவை ஏதோ சில சமயங்களில் இழைக்கப்படும் பாபமாகக் கருதி, அதைப் பற்றிப் பேச விரும்பாமல், நினைவுபடுத்தப்பட விரும்பாமல், அதே சமயத்தில் அதிலிருந்து விடுபடவும் விரும்பாமல்… ஓ! பெரும் ஞானஸ்தர்களாக, தசை ஆசைகளுக்கு மேற்பட்டவர்களாக அவர்கள் அணிந்த வேஷம் எத்தனை முட்டாள்தனமானது! எத்தனை பரிதாபகரமானது! அந்த வேஷம் காரணமாகப் பொங்கியெழும் ஆசைகளை அடக்கி அடக்கி அநேக இரவுகளில் நரக வேதனையை அனுபவித்த அன்றையப் பெண்கள்…

(தொடரும்)


ஆதவன் – பகுதி 3


By சாரு நிவேதிதா

First Published : 06 March 2016 01:00 AM IST


‘பிம்பங்களைச் சுமந்து கொண்டு வாழ்கிறோம்; நிஜமான மனிதனை எங்குமே காண முடியவில்லை’ என்ற பிரதான motif தவிர ஆதவன் கதைகளில் காணப்படும் மற்றொரு வலுவான motif வயது முதிர்ந்த பெண்களின்பால் ஏற்படும் பாலியல் உந்துதல் அல்லது கவர்ச்சி. சில இடங்களில் அது ‘இன்செஸ்ட்’ என்ற அளவுக்கும் போகிறது.

செல்லப்பா மூக்கைச் சிந்துவதைக் கேட்டுக்கொண்டே அம்மா வந்து விட்டாள். ‘என்னடா, நல்ல ஜலதோஷம் பிடிச்சிருக்கு போலிருக்கே!’ என்றாள். அவள் இப்போது கொண்டையை அவிழ்த்து விட்டிருந்தாள். தலைமயிர் அலை அலையாகத் தொங்கியது. இன்னமும் அவளுக்கு ஒரு நரைமயிர் கூடக் கிடையாது. அவனருகே கட்டிலிலே வந்து உட்கார்ந்தாள். இரவு நேரத்தில் அணியும் ரவிக்கையொன்றை அவள் அணிந்திருந்தாள். சில இடங்களில் பொத்தல்கள்; சில பித்தான்கள் வேறு இல்லை. செல்லப்பா அவள் பக்கம் பார்க்காமலிருக்க முயன்றான்.

விக்ஸ் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து கட்டிலில் உட்கார்ந்தாள். ‘நான் வேணுமானால் தடவட்டுமா!’ அவனருகில் வந்து நின்றுகொண்டு அவனுடைய மார்பிலும் முதுகிலும் அந்தக் களிம்பை அழுத்தித் தேய்க்கத் தொடங்கினாள். அவளுடைய சேலைத் தலைப்பு கீழே நழுவியது. செல்லப்பாவுக்கு தீப்பற்றிக் கொண்டது போல உடலெங்கும் ஓர் ஆவேசம் ஏற்பட்டது. விக்கி விக்கி அழ வேண்டும் போலிருந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

***

செல்லப்பாவின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய் விடுகிறது. கொஞ்ச நாள் படுக்கையில் கிடந்த பிறகு ஒருநாள் திடீரென்று உடல்நிலை சீராகி விடுகிறது. ஆனால் அப்படிச் சரியானதால் செல்லப்பா மிகுந்த ஏமாற்றம் அடைகிறான். ஏன்? அவனுடைய உணர்வுகளை, தூய தருணங்களை அவன் இழந்து விட்டான். அம்மாவுக்கு உடம்பு சரியாகி விட்டது. மறுபடி அவன் மனதில் கிலேசங்களும், சுத்தக் குறைவான எண்ணங்களும், ஆசைகளும் தோன்றத் தொடங்கி விட்டன.

***

செல்லப்பாவின் நண்பன் கணேசன் கீழ்மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவன். அவன் வாழ்க்கையிலும் இன்செஸ்ட் குறுக்கிடுகிறது. செல்லப்பா தன் அம்மாவைப் பார்த்து கிளர்ச்சி அடைந்து அதனால் அழுகிறான் என்றால் கணேசனுக்கு அது அம்மாவிடமிருந்து வருகிறது. ‘கணேசன் பாண்ட்டைக் கழற்றத் தொடங்கினான். அதே சமயம் மூக்கில் வியர்த்தது போல அவனுடைய அம்மா அறை வாசலில் வந்து நின்றாள். அவன் உடைகளைக் கழற்றும் போதெல்லாம் அவளுக்கு எப்படியாவது, எங்கிருந்தாவது வந்து நின்று விட வேண்டும். கண்கொட்டாமல் அவனைப் பார்த்துப் பெருமூச்சு விட வேண்டும். ‘உடம்பையே பார்த்துக்கறதில்லை, உடம்பு மோசமாயிட்டேயிருக்கு. சொன்னா கேக்கறானா’ என்று முணுமுணுத்து அவன் எரிச்சலைக் கிளப்பவேண்டும். தம்பி பிறந்து பத்து வருடங்களுக்கு மேலாகின்றன. ஒருவேளை, கணேசனுடைய இளம் ஆண் உடம்பு – அவளுடைய வார்ப்படத்தில் ஆனது - அவளிடம் பழைய நினைவுகளை, தாபத்தை, எழுப்புகிறதோ? அவனைப் பலஹீனனாக வர்ணனை செய்வதன் மூலம் தன் மடியில் இன்னமும் கிடப்பவனாக, அவள் அணைப்புக்குத் தவிப்பவனாக, அவனை உருவகப்படுத்திக் கொண்டு ஒரு வக்கிரமான இன்பம் அடைகிறாளோ?

- Mother, you make me feel lousy.

***

ஆதவனின் மற்றொரு நாவலான என் பெயர் ராமசேஷனில் ராமசேஷன் தன் நண்பன் ராவ் வீட்டுக்குப் போகும்போது ராவின் அம்மா அவனைப் பாலியல்ரீதியாகச் சீண்டுகிறாள். தன் அந்தரங்க அறையில் உடைகளை சரிசெய்து கொண்டிருக்கும் வேளைகளில் ராமசேஷனை அங்கே அழைத்து வைத்துப் பேசுவாள். ராமசேஷனுக்கு அவள் கழுத்தை நெறிக்க வேண்டும் போல் தோன்றும். அப்போது இப்படி நினைத்துப் பார்க்கிறான்:





அம்மா இதே போலத்தான் வெளியே கிளம்பும் தருணங்களில், தான் பாதி டிரஸ் செய்து கொள்ளும்போது என்னை (வேண்டுமென்றே?) கூப்பிட்டனுப்பி என்னிடம் ஏதாவது பேசத் தொடங்குவாள். கொக்கியை மாட்டியவாறு (அல்லது அவிழ்த்தவாறு), பட்டன்களைப் போட்டவாறு, கொசுவத்தைத் திரட்டிச் செருகியவாறு பேசுவாள்.

எனக்கு எரிச்சலாக இருக்கும். அதே சமயத்தில் அந்தக் கணத்தின் திருட்டுச் சுகத்தில் மனம் திளைக்கும், பார்வை அலையும், கால்கள் நகர மறுக்கும்.

இரண்டு மூன்று வருடங்கள் முன்பு வரை ‘ஷேம்’ என்று நான் நம்பியவற்றை இப்போது அப்படி நம்ப முடியவில்லை.

There’s no shame.

There’s no sin.

There’s no nothing.

‘என் பெயர் ராமசேஷன்’ வித்தாலி ஃபூர்ணிகா (Vitali Fournika) என்பவரால் ருஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. இந்த நாவலுக்கு ஒரு விசேஷ தகுதி இருக்கிறது. என்னவென்றால், இதைப் போன்ற ஒரு நாவல் தமிழிலோ மற்ற உலக இலக்கியத்திலோ இல்லை. நான் படித்த வரையில், இந்த வகையில், இந்த genre-ல் ‘என் பெயர் ராமசேஷன்’ ஒன்று மட்டும்தான் கிடைக்கிறது.

ராமசேஷன் என்ற இளைஞனின் கல்லூரி வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. சம்பவங்களும் பெரிதாக ஒன்றுமில்லை. நாவலில் இரண்டு சரடுகள்: ஒன்று- அவன், அவனுடைய அப்பா, அம்மா, தங்கை, அத்தை ஆகியோரைக் கொண்ட நடுத்தர பிராமணக் குடும்பம் எத்தகைய வன்முறையை உள்ளீடாகக் கொண்டிருக்கிறது என்பது; இரண்டு: மாலா, பிரேமா மற்றும் அவன் வயதை விடவும் மூத்த மகனைக் கொண்ட ஒரு மாமி ஆகிய மூவர் மீது அவன் கொள்ளும் பாலியல் உறவு.

அப்பா ஒரு சம்பிரதாயப் பிச்சு. கோழை. எனவே அப்பாவை எல்லோரும் பந்தாடினார்கள். பாட்டி இருந்தவரை இந்தப் பந்தாட்டம் மிக உக்கிரமானதாக இருந்தது. குழப்பமாக இருந்தது. முக்கோண ஆட்டம். பாட்டியும் அத்தையும் ஒரு பக்கம். அப்பா ஒரு பக்கம். அம்மா ஒரு பக்கம். பாட்டியின் அஸ்திரம் கடவுள். கடவுளுடைய பிரதிநிதியாகத் தன்னைக் காண்பித்துக்கொண்டு அவளை எதிர்த்துப் பேசினால் நரகத்துக்குப் போவோமோ என்று பயப்படும் ஒரு சூழ்நிலையை உருவாக்கி விட்டு ஒரு ‘டெமிகாட்’-ஆகத் திகழ்ந்தாள் பாட்டி. வாழ்க்கையின் எந்த அம்சமும் அவளுடைய ஆளுகைக்குத் தப்பவில்லை. சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது. ‘விரலை ஆட்டாதேடா கடன்காரா… அடுத்த ஜென்மத்திலே …யாகப் பிறப்பாய்’ என்று ஏதாவது சொல்லுவாள்.

பாட்டியின் மரணத்துக்குப் பிறகு ரஷ்யாவில் ஸ்டாலினுக்குப் பிறகு ஏற்பட்ட பவர் ஸ்ட்ரகிளைப் போல் அம்மாவுக்கும் அத்தைக்கும் அதிகாரப் போட்டி ஏற்படுகிறது. அம்மாவே வெல்கிறாள். கடைசியில் அம்மா கையே ஓங்கியது. என்ன இருந்தாலும் அம்மா செய்த ஒரு காரியத்தை அத்தையால் செய்ய முடியவில்லை. ஆனால் அத்தையும் தன்னால் முடிந்தவரை எல்லோரையும் வதைக்கிறாள். தன் வாழ்க்கை எத்தனை சுகமற்ற வறண்ட பாலையாகிப் போனதை அடிக்கடி கூறி அப்படிப்பட்ட அவளை மனம் நோகச் செய்பவர்கள் ஈவிரக்கமற்ற கொடிய விலங்குகளைப் போல உணரச் செய்வாள்.

ஆதவனின் இரண்டு நாவல்களுமே மானுட உறவில் அன்பு என்பது அறவே இல்லாமல் போய் அதிகாரமும் வெளிவேஷமும் வன்முறையுமே ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை மிக விரிவாகவும் வலுவாகவும் முன்வைக்கின்றன. காகித மலர்களில் ஓர் இடம்: செல்லப்பாவின் தாத்தாவுக்கு தில்லியில் டெபுடி செக்ரடரியாக இருக்கும் தன் மகனின் பெரிய பங்களாவில் பிரியமாகவும் அவருடைய விருப்பங்களுக்கு ஏதுவாகவும் சஹ்ருதயராகவும் உள்ள ஒரே ஒருவர் அந்த வீட்டின் சமையல்காரர் ராம்ஸிங். மற்றபடி அவருடைய மகன் பசுபதி, பாக்கியம், விசுவம், செல்லப்பா, பத்ரி ஆகிய ஐந்து பேரோடும் அவருக்குப் பகிர்ந்து கொள்ள எதுவுமே இருப்பதில்லை. ஆனால் ராம்ஸிங்கோடு ராமாயணம் தவிர இயற்கையோடு இயைந்த வாழ்முறையைப் பகிர்ந்து கொண்டவர் அவர். பண்டிகைகளின்போது அவர் பூஜை செய்யும்போது அவன் மட்டும்தான் கையைக் கட்டிக்கொண்டு ஓரமாக உட்காருவான். கடைசியில் கற்பூரம் காட்டும்போது பயபக்தியோடு ஒற்றிக் கொள்வான், மலர்களை எடுத்து சுவாமி மேல் போடுவான். மலர்களிலும், பறவைகளிலும், பருவ மாற்றங்களிலும் தாத்தாவைப் போலவே ராம்ஸிங்குக்கும் நுட்பமான ஈடுபாடு இருந்தது.

இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அந்த வீட்டில் அவன் சமையல் செய்து வருகிறான். ஆனால் தாத்தாவின் சிரார்த்த தினத்தன்று - என்றைக்கு அவன் விசேஷமாக சமையல் செய்ய விரும்புவானோ அன்றைக்கு – அந்த உரிமை அவனுக்கு மறுக்கப்பட்டது. அவன்தான் அன்றைய சிரார்த்தத்துக்குக் கறிகாய் வாங்கி வந்திருக்கவேண்டும். சமைத்திருக்கவேண்டும். அதுவே தாத்தாவின் ஆத்மாவுக்குச் சாந்தியை அளித்திருக்கும். ஆனால் வெவ்வேறு வீடுகளில் சமையல் செய்து பிழைக்கும் ஒரு பிராமண சமையல்காரர் அந்த சிரார்த்த தினத்தன்று அவர்கள் வீட்டில் சமைப்பதும், மக்களின் மூட நம்பிக்கையையும் உணர்ச்சிவசப்பட்ட குலப்பெருமையையும் சார்ந்து பிழைக்கும் வைதிக பிராமணர்கள் சில மந்திரங்களையும் சடங்குகளையும் ஒப்பேற்றிவிட்டு, அந்த சமையலைச் சாப்பிட்டு விட்டுச் செல்வதும் – அதுவா தாத்தாவுக்குத் திருப்தியளிக்கப் போகிறது? அவரைக் கடைத்தேற்றப் போகிறது?

ஆத்மாவினால் வழிபட வேண்டியவரை, பின்பற்றப்பட வேண்டியவரை வெறும் சடங்குகளினால் தொழுவது அவரை அவமதிப்பதாகும். ஆதவனின் இரண்டு நாவல்களின் அடிச்சரடு இதுதான்.

குடும்ப வன்முறையைக் கட்டுடைப்பதில் காகித மலர்களை விட என் பெயர் ராமசேஷன் கூடுதல் கவனம் செலுத்துகிறது. கல்லூரி விடுதியில் ஹாஸ்டலில் தங்கி விட்டு முதல்முறையாக விடுமுறையில் வீட்டுக்கு வருகிறான் ராமசேஷன். உடம்பு கருத்துப் போய் இளைத்துப் போய்… என்னடா இது… என்று பிடித்துக் கொள்கிறாள் அம்மா. நீண்ட நேரப் புலம்பலால் எரிச்சலடையும் ராமசேஷன் கத்துகிறான். அவன் கூச்சலிடும்போது அப்பாவும் அங்கேதான் இருக்கிறார். எதுவுமே நடக்காதது போல் பூணூலால் முதுகைச் சொறிந்து கொண்டு எதிரே இருந்த காலண்டரை உற்றுப் பார்க்கத் தொடங்குகிறார். உடனே, ‘ எப்படிச் சத்தம் போடறான் பார்த்தேளா? காலேஜுக்குப் போகிறானோல்லியா… என்னையும் உங்களையும் மாதிரியா…?’ என்று சுருதியை மாற்றிக்கொண்டு அம்மா தன் கோட்டைக்குள் (சமையல் – கம் – பூஜையறை) நுழைந்தாள். அதாவது, இண்டலெக்சுவல் ரீதியாக, அப்பாவும் அவளும் ஒன்றாம்! அப்பாவுக்கு இதைவிட வேறென்ன அவமானம் வேண்டும்? காலேஜுக்குப் போயிராதவரை இவ்வாறு நுட்பமாக அவமதித்ததன் மூலம் எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியை அளிப்பதிலும் அவள் வெற்றியடைந்து விட்டாள். ஒரு பாவமுமறியாத அப்பா எங்கள் போரில் காயமடைய நேர்ந்ததே என்ற குற்ற உணர்ச்சி. அம்மாவின் வஞ்சகமும் விஷமும் இந்த ஓரிரு மாதங்களில், இலேசான ஞாபகமாகத் தேய்ந்து போயிருந்தன. இப்போது அந்த ஞாபகமெல்லாம் குப்பென்று மீண்டும் முளைத்து என்னைத் தாக்கின.’

அம்மா பற்றிய வர்ணனை இது:

அம்மா ஒருநாள் தீவிர பக்தையாக இருப்பாள். வேதாந்தியாக இருப்பாள். ஒருநாள் இகலோகவாதியாக, லௌகீகப் பித்தாக இருப்பாள். ஒருநாள் உலகத்துகே தலைவி போல அகங்காரியாக இருப்பாள். ஒருநாள் புழுப் போல உணருவாள். (‘ இந்த உலகத்திலே நாயாகவேனும் பிறக்கலாமே தவிர, பொம்மனாட்டியாகப் பொறக்கக் கூடாது.’) ஒருநாள் இண்டலெக்சுவலாக இருப்பாள். ஒருநாள் அ-இண்டலெக்சுவலாக இருப்பாள். எல்லாம் முந்தின தினம் அவள் சந்தித்த நபரைப் பொறுத்தது. முந்தின தினம் அவள் ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீசரின் ‘ராங்கி பிடித்த’ (அவளுக்குப் புலப்பட்டது போல) போஸ்ட்கிராஜுவேட் மனைவியைச் சந்தித்திருந்தால், அதற்கடுத்த நாள் அவள் ஒரு அ-இண்டலெக்சுவலாக, பால்காரி, வேலைக்காரியாக, படிப்பினால் களங்கப்படாத தூய பிறவியாக விளங்குவாள். முந்தின தினம் தன்னை விட நகைகளும் புடவைகளும் அதிகமுள்ளவளும், அவற்றைப் பற்றிப் பீற்றிக் கொண்டிருப்பவளுமான ஒரு மாமியைச் சந்தித்திருந்தால், அடுத்த நாள் அவள் இண்டலெக்சுவலாக மாறி நகை, புடவை என்ற மாயைகளில் உழலும் கிணற்றுத்தவளைகளை விளாசுவாள்.

இந்த நாவலில் ராமசேஷனின் அப்பா பேசுவது கொஞ்சம். ஆனால் மறக்க முடியாத பாத்திரம் அவர். மனைவி, தமக்கை ஆகியோரின் குடும்ப வன்முறைக்கு ஆளான அவர் கடைசியில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிப் போய் விடுகிறார். அவருடைய வேலைக்கான இறுதித் தொகையை அரசு அலுவலகத்திலிருந்து வாங்குவதற்காக ராமசேஷன் நாயாய் அலைவதாக நாவல் முடிகிறது.

இந்த நாவலின் மிக முக்கியமான motif பதின்பருவ இளைஞனின் பாலியல் வேட்கை. ராமசேஷனின் நண்பன் ராவின் தங்கை மாலாவுக்கும் (மாலா பள்ளி மாணவி) ராமசேஷனுக்குமான முதல் சந்திப்பு இப்படித் தொடங்குகிறது:

‘ஐ ஆம் மாலா, ஹிஸ் ஸிஸ்டர்’ என்று என்னெதிரேயிருந்த சோபாவில் உட்கார்ந்தாள் அவள்.

நான் மிகச் சிரமப்பட்டு அவளுடைய முகத்துக்குக் கீழே பார்வையை இறக்காமலிருக்க முயன்று, தோல்வியுற்று, பார்வையால் கீழே மினி டைவ் அடித்தவாறு இருந்தேன்.

அவளுடைய மார்பகங்கள் மாக்ஸியில் ஏற்படுத்தியிருந்த மேடு… oops!

அதுவரை கதைகளில் ‘என்னவோ செய்தது, என்னவோ செய்தது’ என்று அர்த்தம் தெரியாமலேயே – இளமையின் அறியாமையில் – படித்திருந்த எனக்கு, அப்போதுதான் திடீரென்று அந்தப் பதச் சேர்க்கையின் அர்த்தம் புரிந்தது.

எனக்கு என்னவோ என்னவோ என்னவோ செய்தது.

பிறகு அவள் வீட்டுக்கு அடிக்கடி செல்கிறான் ராமசேஷன். அப்படி ஒரு சந்திப்பின் போது…

அவள் சிரித்தாள். அவளுள் பொங்கி வழிந்த இளமையின், திமிரின், நுணுக்கமான விஷமத்தனங்களின் நுரையாக அந்தச் சிரிப்பு தோன்றியது. நுரையை ஒதுக்கித் தள்ளி விட்டு ருசி பார்க்கத் தொடங்குவதெப்படி என்று என் அடிமனம் திட்டமிடத் தொடங்கியது…

இப்படி முடியும் முதல் அத்தியாயத்திலிருந்து அடுத்த அத்தியாயம் இவ்வாறாகத் துவங்குகிறது.

இப்போது நீங்கள் அநேகமாக எதிர்பார்க்கிறீர்கள், எனக்கும் மாலாவுக்குமிடையே பரிச்சயம் படிப்படியாக வளர்ந்துகொண்டே போயிற்றென்று.

இல்லை.

பிறகு?

ஆதவன் – பகுதி 4
By சாரு நிவேதிதா
First Published : 13 March 2016 10:00 AM IST
வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க ராமசேஷனுக்கும் மாலாவுக்கும் பரிச்சயம் ஏற்படவில்லை. மாறாக, மாலாவின் அம்மாவுக்கும் ராமசேஷனுக்கும் பரிச்சயம் ஏற்படுகிறது. மாலாவின் அம்மா ராமசேஷனிடம் பல சேட்டைகள் செய்து கவர்ந்து இழுத்து, அவன் அவளை அணைக்க முயலும் போது ‘சே, இத்தனை அயோக்கியனா நீ, இனிமேல் இந்த வீட்டுப் பக்கம் வராதே’ என்று சொல்லித் துரத்தி அடித்து விடுகிறாள். அப்போது அவள் அடிக்கும் லெக்சர் காவிய ரசம் ததும்பக் கூடியது.

அதில் ஒரு பகுதி: ‘இதோ பார், எனக்கு உன்னைப் பற்றி நன்றாகத் தெரியும். உன் மனதில் ஓடுவது ஒவ்வொன்றும் அணுஅணுவாகத் தெரியும். கீழ் மத்தியதர வகுப்புக்கே உரிய வஞ்சிக்கப்பட்டு விட்ட களை உன் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறது. அந்த இல்லாமைக்கெல்லாம் அவசர அவசரமாக ஈடு செய்யும் பரபரப்பும் பெரிய மனிதனாகும் ஆசையும் எழுதி ஒட்டியிருக்கிறது. இந்த posh பங்களாவும் high living-ம் உன் கற்பனைகளைத் தட்டியெழுப்புகிறது. இதெல்லாம் பெர்மிஸிவ்நெஸ்ஸின் குறியீடாக வேட்கை நிரம்பிய உன் மனதுக்குத் தோன்றுகிறது. நாமும் அதில் கொஞ்சம் புரண்டு விட்டுப் போகலாம் என்று நினைக்கிறாய். வீட்டுக்குப் போய் சந்தியாவந்தனம் பண்ணிவிட்டால் எல்லாம் சரியாகப் போய் விடுகிறது. நோ ப்ராப்ளம். உன் வீட்டின் புனிதத்தன்மை ‘இண்டாக்ட்’ஆக இருக்கும். நீ ஏழை. அறியாமையாலும் தேவையாலும் பிழை செய்கிறவன். அனுதாபத்துக்குரியவன். நாங்கள் பணக்காரர்கள். கெட்டதிலேயே ஊறிக் கிடப்பவர்கள். நாமிருவருமாகச் சேர்ந்து தப்பு செய்தால் உனக்கும் சரி, எனக்கும் சரி, எந்த நஷ்டமுமில்லை, இல்லையா? பையா, நான் ஒரு பத்தினியல்ல என்றே வைத்துக் கொள்வோம். என் கணவனல்லாத ஆண்களுடனும் குலாபுவளென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் உன்னுடன் – போயும் போயும் உன்னுடன் – எதற்காக நான் அதைச் செய்ய வேண்டும்?’

இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் ராமசேஷன் மாலாவின் வீட்டுக்குப் போகிறான். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மாலாதான் அவனை வரவழைக்கிறாள். அந்த வீட்டிலேயே இருவரும் உடலைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மாலா பள்ளி மாணவி என்பதை மறந்து விடக் கூடாது. உறவுக்குத் தேவையான ஆணுறையை வாங்க ராமசேஷன் கூச்சப்படும் போது அம்மாவின் ‘விக்’கை அணிந்து கொண்டு போய் மாலாவே அதை வாங்கி வருகிறாள். கணினியும் இணையமும் வராத காலம் என்பதை நினைவில் கொள்க. கடைசியில் மாலா அவளுடைய அம்மாவைப் போலவே ராமசேஷனை உதாசீனப்படுத்துகிறாள். அவனுடைய வர்க்கப் பின்னணியே அதற்குக் காரணமாக இருக்கும் போது அவன் அவளை விட்டு விலகுகிறான்.

பிறகு அவனுக்கு பிரேமா என்ற அழகில்லாத, ஒரு புத்திஜீவிப் பெண்ணுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. சில காலம் இருவரும் உடலைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமானாலும் அவன் அவள்பால் ஈர்க்கப்படுவதில்லை. அவளுடைய இண்டலெக்சுவல் பாசாங்குகளைப் பார்த்து எரிச்சலடைந்து அவளிடமிருந்தும் விலகுகிறான்.



கடைசியில் அவனுக்குத் தன்னை விட வயதில் மூத்த ஒரு மாமியின் மீதுதான் காதலும் கவர்ச்சியும் ஏற்படுகிறது. அவளுக்கு ராமசேஷனை விட வயதான ஒரு மகன் இருக்கிறான். கணவனால் புறக்கணிக்கப்பட்ட அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களிக்கிறான். ஆனால் அவன் தந்தை சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிய பிறகு அவன் தோளில் விழுந்த குடும்பப் பொறுப்புகளால் மாமியிடம் போய் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறான். இறுதியில் ஒரு திரையரங்கில் தன் தங்கை யாரோ ஒருவனுடன் சேர்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அவன் அவள் தோள் மீது வேறு அட்டகாசமாகக் கை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். ராமசேஷனுக்கு இருவர் கழுத்தையும் நெரிக்க வேண்டும் போல் இருக்கிறது. பஸ்ஸில் வீட்டுக்குச் செல்லும் வழியெல்லாம், தங்கை வீட்டுக்கு வந்தவுடன் அவளை எப்படியெல்லாம் சண்டை பிடிக்க வேண்டும், அவளுக்கு என்னவெல்லாம் புத்தி சொல்ல வேண்டும் என்று யோசித்தவாறே வருகிறான். ஏனென்றால்,

‘அந்தத் தடியன்களை எனக்குத் தெரியும். இவன்களுடைய கீழான எண்ணங்களும், வழிமுறைகளும் தெரியும்.

ஆனால் என் தங்கையிடம் நீங்கள் வாலாட்ட முயல வேண்டியதில்லை.

பல்லை உடைத்துக் கையில் கொடுப்பேன், ஜாக்கிரதை.

-இப்படி முடிகிறது ’என் பெயர் ராமசேஷன்’ நாவல்.

***

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் இருக்கிறேன். மூன்று மலையாள இலக்கிய வார இதழ்களில் என்னுடைய தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன. கலாகௌமுதியில் ’ராஸ லீலா’ நாவல்; மாத்யமம் இதழில் ’தப்புத் தாளங்கள்’ என்ற தலைப்பில் உலக சினிமா, அரபி இலக்கியம், மாத்ரு பூமி என்ற இதழில் ‘கலகம், காதல், இசை’ என்ற தொடர். மூன்றையும் வாராவாரம் அனுப்ப வேண்டும். மொழிபெயர்ப்பாளர் அவற்றை மொழிபெயர்த்து அந்தந்த இதழ்களுக்கு அனுப்பி விடுவார். என் கைக்கொண்டு எழுத முடியாத நிலையில் டிக்டேட் செய்தேன். ‘சரியாக அனுப்ப வேண்டும் என்று மொழிபெயர்ப்பாளரிடம் சொல்லுங்கள்; பத்திரிகைகளுக்கு மாறி மாறிப் போய் விடப் போகிறது’ என்றேன் நண்பரிடம். நண்பர் சொன்னார், மாறினாலும் பாதகமில்லை, நீங்கள் எழுதுவது எதுவாக இருந்தாலும் அதெல்லாம் ஒன்றே போல் தான் இருக்கிறது.

என்னிடம் ஆதவனின் பாதிப்பு அதிகம் இருப்பதாக நான் உணர்வதற்குக் காரணங்களில் இதுவும் ஒன்று. ஆதவன் ஏகப்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அதெல்லாம் அவருடைய நாவல்களின் சில அத்தியாயங்கள் போலவேதான் இருக்கின்றன. அசோகமித்திரன், தி.ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களின் மகத்தான சிறுகதைகளைப் போல் ஆதவனின் சிறுகதைகள் இல்லை; ஆனால் அந்தச் சிறுகதைகள் எல்லாமே ஆதவனின் வாழ்க்கை, ஆதவனின் நாவலிலிருந்து விடுபட்ட அத்தியாயங்கள்.



‘நான் பர்ஸ் திருடிய நாள்’ என்று ஒரு சிறுகதை. கதை இப்படித் தொடங்குகிறது. எனக்கு அது கல்லூரியின் கடைசி வருடம். அல்லது கடைசிக்கு முந்தின வருடமாகவும் இருக்கலாம்; அது முக்கியமில்லை.

கல்லூரியில் அந்த தினத்தை, வேறு தினங்களைப் போல, நான் காபி ஹவுஸில் தொடங்கினேன். நான் ஜீனியஸாக இருக்க வேண்டுமென்ற சந்தேகம் எனக்கு ஏற்படத் தொடங்கியிருந்த காலம் அது. ஜீனியஸ்கள் வகுப்புகளுக்குச் செல்வது அனாவசியம். லெக்சர்களைக் கேட்பது அனாவசியம். ஜீனியஸ்கள் சிகரெட் குடித்தவாறு, காப்பி அருந்தியவாறு, காபி ஹவுஸில் இதர ஜீனியஸ்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தலைமயிர் கலைந்திருக்கும். முகத்தில் ஓர் அசாதாரண பாவமும் கையில் விஷய கனம் மிக்க ஒரு புத்தகமும் இருக்கும். இந்தப் புத்தகத்தை அவர்கள் படித்தாக வேண்டுமென்பதில்லை. உண்மையில் சிகரெட்டும் புத்தகமும் எங்களுள் குமுறிக் கொண்டிருந்த எதிர்ப்பின் வெளிப்பாடுகள்; எவ்வளவுக்கெவ்வளவு காரமான சிகரெட்டோ, அனாசாரமான புத்தகமோ, அவ்வளவுக்கவ்வளவு இமேஜுக்கு நல்லது. அப்போதெல்லாம் பனாமா மூணு காசு, சார்மினார் இரண்டு காசு, இரண்டுமே எங்களிடையே பாப்புலராக இருந்தன. புத்தகங்களைப் பொறுத்தவரையில் Francois Mauriac, Andre Gide, James Joyce, William Faulker போன்றோரின் புத்தகங்களை நான் சுமந்து அலைந்து கொண்டிருந்தது நினைவு வருகிறது. விஞ்ஞானப் பிரிவு மாணவனாக இருந்த போதிலும், ரூதர்ஃபோர்டும் லேவோஷியரும் அல்ல, ஜாய்ஸும் ஹெமிங்வேயும்தான் என் ஹீரோக்களாகத் திகழ்ந்தனர். ஃப்ரான்ஸ்வா மரியாக் அந்தப் பிராயத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஓர் எழுத்தாளர். மிகத் தற்செயலாகத்தான் அவருடன் அறிமுகம் ஏற்பட்டது. The Stuff of Youth என்ற அவருடைய நாவலை ஷெல்ஃபில் பார்த்தேன். கையில், பிறர் பார்வையில் சுமந்து செல்வதற்கேற்ற கவர்ச்சிகரமான தலைப்பாக என்னைப் பற்றிய அழகியதொரு பிம்பத்தினுள் பொருந்துவதாக அது தோன்றியது. எடுத்து வந்தேன். பிறகு அதிர்ஷ்டவசமாக அதைப் படிக்கவும் செய்தேன். எனக்கு நியாயம் செய்து கொள்ளும் முறையில், வேரு சில மாணவர்களைப் போல அன்றி, சுமந்து சென்ற பல புத்தகங்களைப் பல தடவைகளில் நான் நிஜமாகவே படித்தேனென்று சொல்ல வேண்டும்.

இலக்கியத்தைப் போலவே அந்த இளைஞனைக் கவர்ந்த இன்னொரு விஷயம், பெண்கள். அந்தக் காலத்து (அறுபதுகளின் முற்பகுதி) இளைஞர்களைப் போலவே அவன் தன் இருபது வயதில் எந்தப் பெண்ணுடனும் சில நிமிடங்கள் கூடப் பேசியிருக்கவில்லை, நடந்திருக்கவில்லை, காபி ஹவுஸுக்கு அழைத்துப் போய்க் காப்பி வாங்கிக் கொடுத்திருக்கவில்லை. இப்படிச் செய்ய முடிந்த மாணவர்களை ஏக்கத்துடனும் பொறாமையுடனும் பார்க்கிறான். அவனுடைய சொற்களில்:

பெண்களுக்கு இணக்கமான பிரியத்துக்குரிய கோமாளி அல்லது முரட்டு முட்டாள் வேஷத்தை – அவர்கள் pet செய்யக் கூடிய வேஷத்தை – எனக்கு அணியத் தெரியவில்லை. நான் இலக்கியக் கதாநாயகர்களுடன், மேல்நாட்டு சினிமாக் கதாநாயகர்களுடன், என்னை உக்கிரமாக identify செய்து கொண்டு என் முகத்துக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லாத ஓர் ஈகோவை வளர்த்துக் கொண்டிருந்தேன்….

இவ்விதமாக நான் ஒரு கனவுலகில் வாழ்ந்தேன். மேனாட்டு இலக்கியங்கள், திரைப்படங்களைச் சார்ந்து உருவான கனவுகள். என்னைச் சூழ்ந்திருந்த நிஜ உலகுக்கும் அதனுடன் நான் கொள்ள வேண்டியிருந்த பல மட்டத்து உறவுகளுக்கும் நான் எவ்வித முக்கியத்துவமும் அளிக்கவில்லை. இந்த உலகை நேருக்கு நேர் சந்திக்க முயலவில்லை. மாறாக இந்த உலகில் தோல்வி அடையும் போதெல்லாம் மேலும் மேலும் கனவுலகினுள் பதுங்கிக் கொண்டேன்.

யுனிவர்சிடிக்கு வந்ததும் எங்களில் பெரும்பாலோர் செய்கிற முதல் வேலை காபி ஹவுஸ் வாசலில் உள்ள பீடாக் கடையில் சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக் கொள்வது. சிகரெட்டை உறிஞ்சி உறிஞ்சிப் புகையை ஊதி ஊதி… அப்பா! ஒரு புதிய ஜன்மம் எடுத்தது போலிருக்கும். எங்கள் மூதாதையருடன் தொடர்பு அறுந்து, ஊறுகாய், அப்பளம் பிம்பம் கரைந்து, நாங்கள் நவீன யுகத்துப் பிரஜைகளாவோம்…

இந்த இளைஞனின் நண்பர்கள் ஸூத், சர்மா. சராசரிப் பையன்கள். இந்தப் படிப்பாளியின் சேர்க்கை அவர்களுக்கு ஒரு இண்டலெக்சுவல் பரிமாணத்தை அளிக்கிறது. இவனுக்கும் அவர்களுடைய சேர்க்கை ஒரு முரட்டு இளைஞன் என்ற பிம்பத்தை அளிக்கிறது.

‘அந்த பிம்பத்தின் போதை கசப்பான உண்மைகளிலிருந்து – என் மென்மை, என் கையாலாகாத்தனம் – என்னைக் காப்பாற்றியது. அவர்களுடன் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொண்டு, பெண்களைப் பற்றிக் கொச்சையாகப் பேசிக் கொண்டு, சிகரெட் பிடித்துக் கொண்டு, உரக்கச் சிரித்துக் கொண்டு இருக்கிற வரையில் ஒரு பண்பட்ட மனிதனின் பொறுப்புகளிலிருந்து நான் விடுபட்டவனானேன். என் அன்புக்குரியவளுக்கு இவ்வாறு என்னை அருகதையற்றவனாகச் செய்து கொண்ட கணத்திலேயே ஒருவிதத்தில் நான் அவளுக்கு மிகவும் ப்ரியமுள்ளவனாக, அனுதாபக்கரம் நீட்டி அணைத்துக்கொள்ளப்பட வேண்டிய, காப்பாற்றப்பட வேண்டிய, poor creature ஆகவும் ஆனேன். கிறுக்கு மேதை. Artist in gutter.

இந்தக் கிறுக்கு மேதை யுனிவர்சிடியில் ஒருநாள் கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்த போது இவனுடைய சராசரி நண்பர்களோடு சேர்ந்து கொண்டு ஒரு பெண்ணின் பர்ஸைத் திருடுகிறான். ஏன்?

நாங்கள் பெண்களுக்கும் சுவருக்குமிடையில், பக்கவாட்டில் நின்று கொண்டு அந்தப் பெண்களைச் சிறிது நேரம், கிரிக்கெட் ஆட்டத்தைச் சிறிது நேரம் என்று மாறிமாறிப் பார்த்துக் கொண்டு நின்றோம். அந்தப் பெண்களின் கவனத்தை முழுமையாகத் தன்பால் ஈர்த்திருந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது எங்களுக்குப் பொறாமையாக இருந்தது. அந்தப் பெண்கள் மீதோ எரிச்சலாக இருந்தது. அவர்கள் ஒரு தடவையாவது எங்கள் திசையில் பார்வையைச் செலுத்தினால்தானே!



இந்தப் பெண்களைத் தண்டிக்க வேண்டும். கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு நாங்களும் எந்த விதத்திலும் குறைந்தவர்களல்லர் என்பதை அவர்கள் உணரச் செய்ய வேண்டும்…

திருடிய பர்ஸில் வெறும் நாலே அணாதான் இருந்தது. மற்ற ஐடி கார்டு, லைப்ரரி கார்டு போன்றவற்றை மறுநாள் யுனிவர்ஸிடி ஆபீஸில் கொடுத்து விடுகிறார்கள். அதன் பிறகு அவன் எந்தப் பெண்ணின் பர்ஸையும் திருடவில்லை.

***

தமிழர்களுக்கு மறதி அதிகம். ஜூலியஸ் சீஸர் எப்படி இருந்தார் என்று கிரேக்கர்கள் சிலை செய்து வைத்திருக்கிறார்கள். சாக்ரடீஸின் உருவம் நமக்குத் தெரிகிறது. ஆனால் எழுபதுகளின் ஆதவனின் பெயர் தமிழனுக்குத் தெரியவில்லை. தமிழனை விடுங்கள்; தமிழ் இலக்கிய வாசகனுக்குக் கூடத் தெரியவில்லை.

ஆதவனே தன் எழுத்து பற்றிச் சொல்வது போல், நம்முடைய தனிப்பட்ட, சமூக வாழ்வின் போலித்தனத்திலிருந்து நம்மை விடுவிக்க வைப்பவை. அவருடைய வார்த்தைகளில்:

காலமும் அதனுடன் இணைந்த வாழ்வியக்கமும் உங்களை வேகமாக முன்னால் இழுத்துச் சென்றவாறிருக்க, நான் ஒருவன் இங்கே சொற்களைக் கொண்டு கூடாரங்கள் அமைத்து ‘சற்றே அமருங்களேன்’ என்கிறேன்.

ஆமாம். கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும் வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவேதான் இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போடலாம். வாழ்வின் சந்தோஷங்களையும் சோர்வுகளையும் சேர்த்து அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்.”

</div>