Saturday 20 February 2016

ஜட்டி -லார்ன்ஸ் பெர்லிங்ஹெட்டி- (தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)



துணிகள் காயும் கொடியிலுள்ள ஜட்டிதான்
சுதந்திரத்திற்கான மாபெரும் கொடி......................
ஜட்டியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததால்
நேற்றிரவு எனக்கு அவ்வளவாக தூக்கம் பிடிக்கவில்லை
நீ எப்போதாவது ஜட்டியைப் பற்றி அரூபமாக
எண்ணுவதை நிறுத்தியிருக்கிறாயா?
நீ நிஜமாகவே அதனுள்ளே ஆழமாக தோண்டினால்
திடுக்கிடும் சிக்கல்கள் உள்ளிருந்து வெளிக் கிளம்பும்
ஜட்டி என்பது நாமெல்லோருமே
நிறையவே கையாளும் ஒன்று
எல்லோருமே எதோ ஒருவகையான
ஜட்டியை மாட்டிக்கொள்கிறோம்
இந்தியர்கள்கூட
ஜட்டி போட்டுக் கொள்கிறார்கள்
கியுபா நாட்டவரும்
ஜட்டி போட்டுக் கொள்கிறார்கள்
அவ்வளவு ஏன்
போப்பாண்டவரும் கூட ஜட்டி அணிகிறார் என்று நம்புகிறேன்.
லுசியானாவின் கவர்னரும்
ஜட்டி அணிகிறார்
நான் அவரைத் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்தேன்
அவர் இறுக்கமான ஜட்டியை அணிந்திருந்தார்
அதனால்தான் அடிக்கடி நெளிந்தபடியே இருந்தார்
ஜட்டி உங்களை நிஜமாகவே கட்டுக்குள் கொண்டுவரும்
ஆண்-பெண் இருவரின்
ஜட்டி விளம்பரங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்
இரண்டுமே ஓன்றாகத் தோன்றலாம்
உண்மையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன
பெண்களின் ஜட்டி எல்லாவற்றையும் மேல் பக்கமாக
இழுத்துப் பிடித்துக்கொள்ளும்
ஆண்களின் ஜட்டியோ எல்லாவற்றையும் கீழ் பக்கமாக
இழுத்துப் பிடித்துக் கொள்ளும்.
ஜட்டி ஒன்றுதான்
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பொதுவாக
இன்று நம்மிடையே உள்ளது.
கால் பகுதியில் கோடுகளிட்டு
அதிக வலுவூட்டப்பட்ட பகுதியைச்
சுட்டிக்காட்டும் ஜட்டியை பார்த்திருக்கிறாயா,
அது மூன்று வழிகளில் விரியக்கூடியது
உனது செயல்களுக்கெல்லாம் முழு சுதந்திரத்தை
அது உறுதியளித்தபடியே காட்சியளிக்கும்
அதைக் கண்டு தயவுசெய்து ஏமாந்து விடாதே
இவையெல்லாம் இரட்டை காட்சி முறையில் அமைக்கப்பட்டவை
உன் விருப்பத்திற்கேற்ற தேர்வுகளுக்கு சுதந்திரம் கிடையாது
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதால் தான்
அமெரிக்கா
சதா தனது ஜட்டியுடன் போராடுகிறது.
பார்க்கப் போனால்
ஜட்டிதான் எல்லாவற்றையுமே கட்டுப்படுத்துகிறது.
சாதாரண அன்றாடங்களின் (அடிப்படையான)
உடைகளை எடுத்துக் கொண்டால்
அவையெல்லாமே
தலைமறைவான அரசின் பாசிச வடிவங்கள்
மக்களிடம் உண்மையைத் தவிர
மற்றவைகளை நம்பும்படியும்
இதைச் செய்யமுடியுமென்றும்
அதைச் செய்யமுடியாதென்றும் கூறுகிறார்கள்
இந்தக் கேள்விகளுக்கெல்லாமே
அகிம்சையே சரியான பதிலாக இருக்கமுடியும்
காந்தி லங்கோடு அணிதிருந்தாரா?
லேடி மாக்பெத்தும் லங்கோடு அணிந்திருந்தார்
அதனால்தான் அந்த இடத்தையே
அடிக்கடி தடவிக் கொண்டிருந்தார்
’அது’ உண்மையிலேயே அவரின் ஜட்டியுள் இருந்ததா?
நவீன ஆங்கிலோ சாக்ஸன் பெண்களுக்கு
பெருமளவு குற்ற உணர்வு இருந்த்திருக்கக்கூடும்
ஆகையால்தான்
எப்போதுமே அந்த இடத்தை
கழுவி,கழுவி, கழுவிக் கொண்டே இருக்கின்றனர்.
புள்ளிகள் நிறைந்த ஜட்டி சந்தேகத்திற்கு இடமானது
வீக்கங்கள் உள்ள ஜட்டி அதிர்ச்சிகரமானது
துணிகள் காயும் கொடியிலுள்ள ஜட்டிதான்
சுதந்திரத்திற்கான மாபெரும் கொடி
ஆனால்
யாரோ ஒருவன் மட்டும்
தனது ஜட்டியிடமிருந்து தப்பித்துவிட்டான்
அம்மணமாக எங்கோ இருக்கிறான்
அவனுக்கு உதவுங்கள்
ஆனால் கவலைப்படாதீர்கள்.
ஜட்டி
-லார்ன்ஸ் பெர்லிங்ஹெட்டி-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
(இந்த மொழியாக்கம் நஞ்சுண்டனை அசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘பிரதி’ ஏப்ரல் 1993 இதழில் வெளிவந்தது)
* நன்றி Manonmani Pudhuezuthu மீள்பதிவு செய்தமைக்கு.