Thursday, 13 April 2017

தண்டனைகளின் காலம் - டி.தருமராஜ்

http://tdharumaraj.blogspot.in/2017/04/blog-post_13.html?spref=fb

தண்டனைகளின் காலம் (சிறுகதை)

(இந்தச் சிறுகதை 1994ம் வருடம் நிகழ் 27 (ஆகஸ்டு), 28 (டிசம்பர்) இதழ்களில் வெளியானது.  ஏறக்குறைய மறந்தே விட்டேன்.  அதன் பிரதிகள் கூட என்னிடம் இல்லை.  இப்படியொரு கதை எழுதியதை, கோவை ஞானி மாத்திரம் அப்போதைக்கப்போது ஞாபகப்படுத்துவார். இப்பொழுதும் அதன் பழைய பிரதிகளை அவரே தான் நகலெடுத்து அனுப்பினார்.  கோவை ஞானிக்கு நன்றி!) 

தண்டனைகளின் காலம்
டி.தருமராஜ்
1
குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து நான் அப்பொழுது ஆராய்ந்து கொண்டிருந்தேன். டெல்லியில் உள்ள மிகப் பிரபலமான பல்கலைக்கழகமொன்றில் இதைச் செய்வதற்கு என்னை  அனுமதித்திருந்தார்கள். எனக்கு இருபத்தெட்டு இருபத்தொன்பது வயதிருக்கலாம். 
இந்தியாவில் என்றைக்குமே குற்றங்களுக்கும் தண்டனைகளுக்கும் குறைவில்லையென்பதால், நான் சுழன்று சுழன்று எனக்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரிப்பது என்பதே அப்பொழுது முக்கியமாய் இருந்தது. அடிப்படையில் நான் தமிழ்நாட்டின் தென்மூலையிலிருந்து வந்தவன் என்பதால் எனது ஆராய்ச்சிப் பகுதியென நான் தமிழ்நாட்டை மட்டுமே எடுத்துக் கொண்டேன். 
இதனால் சுமார் நான்காண்டு கால வனவாசத்திற்குப் பின் ஓர் அந்நிய மிருகமென நான் தமிழ்நாட்டில் திரிய வேண்டியிருந்தது. சொல்லப்போனால் தமிழகத்தின் புதிய முகமொன்றைக்கூட (என்னைப்  பொருத்த அளவில்) என்னால் பார்க்க முடிந்தது. 
சங்க இலக்கியங்கள் வழக்கம் போல் எல்லா ஆய்வாளர்களுக்கும் உதவுவதைப் போல் எனக்கும் ஏராளமான தண்டனை விவரணைகள் தந்து உதவின. கணைக்கால் இரும்பொறையோ வேறு யாரோ ஒரு மன்னன் (என்னால் இது போன்ற நபர்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்ள முடிவதில்லை. எனது ஆய்வுக் காலத்தில் இதிலெல்லாம் நான் அத்துப்படியாய் இருந்தேன் என்றாலும், பெயர்களை மட்டும் காலம் கவனமாய் முழுங்கிவிடுகிறது.) போரில் தோற்றுப்போனேனேயென மருகி, தனக்குத் தானே தண்டனை வழங்குவதாய் வடக்கிலிருந்து உயிர் விட்டிருந்தான். 
இன்னொரு சங்ககால மன்னன் சிறையில் அடைபட்டு, தாகத்திற்கு மூத்திரம் பெய்து தந்த எதிரிகளை நினைத்து, தற்கொலை செய்திருந்தான். பாண்டியன் நெடுஞ்செழியன் கதை இன்னும் மோசம். முத்தோ மாணிக்கமோ என்ற குழப்பத்தில் இதயம் வெடித்து இறந்திருந்தான். கூடவே அவனது பத்தினியும் ஏதோ கணவனுடன் உலவப் போவது போல் தன் இதயத்தை தானே வெடித்திறந்தாள். இவையெல்லாமே கேவலம், வருத்தம், தன்மானம் போன்றவை தாங்காமல் அவரவர் அவரவர்க்கோ அல்லது அதன் மூலம் பிறர்க்கோ தண்டனை தருவது போல் உயிர் விட்டிருந்த நிகழ்ச்சிகள்.
வரலாறு என எழுதப்பட்டிருக்கும் காலங்களில் இன்னும் அதிகமான, மேலும் கொடூரமான தண்டனைகள் கூட வழங்கப்பட்டுள்ளன. சைவர்கள் ஏதோ திருவிழாக் கொண்டாட்டம் போல் கூட்டம் கூட்டமாய் வைணவர்களை அள்ளி வந்து நீளமான குத்தீட்டிகளில் உட்கார வைத்து கழுவேத்தியிருக்கிறார்கள்.. இன்றைய சைவக் கோவில்களில் கழுவேத்தி முக்கு என்ற பெயரிலேயே சில நாற்சந்திகள் இருக்கின்றன. கழுவேற்றப்பட்டவர்களின் இரத்தமும் கதறலும் சைவக் கோவில்களைச் சுற்றி, சுற்றி அந்தக் காலங்களில் ஓடியிருக்கக்கூடும். 
அக்காலத்தில் தண்டனைகள் குறித்த நூலொன்றும் எழுதப்பட்டிருந்தது. தமிழில் செய்யப்பட்டதில்லை என்றாலும் பிராமணர்கள் வழி தமிழகத்திலும் இது செயல்பட்டு வந்திருக்கின்றது. மனுநீதி என்கிற இந்நூல் தண்ணீர் குடிப்பதிலிருந்து கள்ள உடலுறவு கொள்வது வரையில் இன்னின்ன குற்றங்களுக்கு இன்னின்ன தண்டனைகள் என்கிறது.

2
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு அதாவது 1994-ல் இப்படியான குற்றங்களையும் தண்டனைகளையும் தேடி அலைந்து கொண்டிருக்கையில், நான் நீதியின் பேரில் வெறி கொண்டலைவதாய் நண்பன் ...லா எனக்கு அடிக்கடிச் சொல்வான். ஆனால் உண்மையில் நான் வெறி பிடித்தலைந்தேனோ இல்லையோ, குற்றங்கள், அவற்றிற்கு வழங்கப்படும் தண்டனைகள், அவற்றிற்கான மனோபாவம் என்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. 
சிறு வயதிலிருந்தே, என்னையறியாமலேயே, தண்டனைகளின் ஒழுங்கைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமாயிருந்தேன். சிறு பிள்ளைகளாய் இருக்கையில் தேவாலயத்தில் அமர்ந்திருந்த நரைத்த பாதிரியிடம் பாவசங்கீர்த்தனமென்கிற பெயரில் எங்களின் குற்றங்களைச் சொல்லி தண்டனை பெற்றுக் கொள்வோம். இரண்டு, மூன்று முறைகளில் எனக்கு அதன் ஒழுங்கு அத்துப்படியாகி அதுமுதல் எனக்கு நானே பாவசங்கீர்த்தனம் வழங்கிக் கொண்டேன். 
திருட்டு என்றால் பத்து முறை பரலோக பிதாவை நோக்கி செபம் செய்ய வேண்டும். பொய்யென்றால், அது ஐந்து முறை போதும், கெட்ட நினைவுகள் வந்தது என்றால் பரலோக பிதா மட்டும் போதாது கூடவே அருள் நிறைந்த மரியை ஐந்து முறை செபம் செய்யவேண்டும். 
இதனை யாராலும் கூட மிக எளியதாய் பழகிக் கொள்ளமுடியும். இந்த இரகசியத்தை என் நண்பர்களுக்கெல்லாம் கூட சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர்கள் என்றுமே தங்களுக்குத் தாங்களே இப்படித் தண்டனை தருவதில் நம்பிக்கை வைத்திருக்கவில்லை. 
இயேசுவின் மீது பக்தியான அப்பாவின் தண்டனை முறை வித்தியாசமானது. தன் வாழிடத்தை விட்டு எங்களின் வாழிடத்திற்குள் நுழைந்து விடும் சிறு எலியின் குற்றத்திற்கு அப்பா வழங்கும் தண்டனை, மரணம். வீட்டின் அமைதியை அது கலைப்பதாய் சொல்லி, அப்பா ஏகப்பட்ட அமளி துமளியுடன் எலிக்கு மரணம் வழங்குவார். இதை யெல்லாம் விடவும் தண்டனைகளின் பேரில் நான் வெறி கொண்டதன் காரணம் (வெறி கொண்டேன்’ என்பது உண்மைதான் போலும்!) எனது பதினான்காம் வயதில் நடந்தது.
என்னுடன் பிறந்த நான்கு பேரோடு சேர்த்து, நாங்கள் ஐந்து பேரும் பெரும் துன்பம் தரும் பிள்ளைகளாய் இருந்தோம். ஓயாது சண்டையிடுவதும், பொருட்களை உடைப்பதும் எங்களது அன்றாட வேலைகளாய் இருந்தன. அதிக நேரங்களை வெளியிலேயே என் அப்பா செலவழிப்பதால் எங்களைத் கவனித்துக் கொள்கிற முழுப் பொறுப்பும் எங்கள் அம்மாவின் தலையில் விழுந்திருந்தது. குறிப்பிட்ட தினத்தில் நாங்கள் ஐவரும், அம்மாவுமாய் சேர்ந்து ஒரு பெரிய கனவொன்றைக் கண்டோம், அம்மாவின் கருத்துப்படி இதுவொரு கெட்ட கனவு.
அந்தக் கனவு வழக்கம் போல் எங்கள் ஐவரின் சண்டையில் தொடங்கியது. என்ன காரணத்திற்காகச் சண்டை போட்டோம் என்பது நினைவில்லை. ஆனால் சண்டை ஆக்ரோஷமாய் நடந்து கொண்டிருந்தது. அன்றைய கனவில் நாங்கள் வழக்கத்தை விடவும் ‘அதிகமாகவே’ (அதிகமாகவே என்பது அம்மாவின் முடிவு) போய்விட நாங்கள் அதிர்ச்சியடையும் வகையில் அம்மா ஒரு காரியம் செய்தார்கள். 
கிணற்றிலிருந்து நீரிறைக்கப் பயன்படும் பெரிய வடக்கயிறொன்றை அவிழ்த்து, முதலில் வீட்டு உத்தரத்தில் கட்டினார்கள். பின்பு தொங்கிக் கொண்டிருந்த மறுமுனையை ஒரு சுருக்கு போல் செய்து, தன் தலையை அதில் மாட்டிக்கொண்டு ஏறி நின்று கொண்டிருந்த மரப்பலகையை உதைத்துவிட முயன்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது எங்களின் சண்டை உச்ச நிலையை அடைந்து கொண்டிருந்தது.
அம்மா செய்யும் காரியத்தைப் பார்த்த பின்பு தான், முதன் முறையாய், சாவு எங்களுக்குள் ஒளிந்து கொண்டிருப்பதுபோல் நாங்கள் ஐவரும் ஒன்றாய் உணர்ந்தோம். ஓடிப் போய் அம்மாவின் கால்களைப் பற்றிக் கொண்டு ‘வேண்டாம், வேண்டாம்’ என்று கதறினோம். 
அம்மாவோ பிடிவாதமாய், ‘முடியவே முடியாது, தன்னால் தாங்க முடியவில்லை, தன்னை நிம்மதியாய் சாகவாவது விடுமாறு’ எங்களிடம் அழுதபடியே கூறினார்கள். இனி நாங்கள் இப்படிச் செய்வதில்லை. நல்ல பிள்ளைகளாய் இருப்போமென்று என் அண்ணன் அம்மாவிற்குச் சொன்னான். அம்மாவோ கேட்பதாய் காணோம். காலைப் பிடித்துக் கொண்டிருந்த எங்களையும், நின்று கொண்டிருந்த மரப்பலகையையும் ஒருசேர உதைத்துவிட முயன்று கொண்டிருந்தார்கள். 
உடனே நாங்கள் எல்லோரும் தனித்தனியாய் இனி இது போல் சண்டை இடுவதில்லை என்று விளக்கிக் கூறி அம்மாவை இறங்கி வரும்படி கேட்டுக் கொண்டிருந்தோம். அம்மாவோ அழுத கண்களோடு, எங்களை நம்ப முடியாது என்று கூறி, வெளியிலேயே சுற்றித்திரியும் அப்பாவையும் இடையிடையே குற்றம் சொல்லியபடி, மீண்டும் அதிக பலத்தோடு இறந்து விடுவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். 
அம்மாவின் கால் உதறல்கள் படிப்படியாக உக்கிரமடைந்து வருவதை அந்த நேரத்தில் என்னால் நன்றாகவே உணர முடிந்தது. எங்களின் பிடியிலிருந்து அம்மா அதலபாதாளமொன்றில் விழ இருப்பது போல் நாங்கள் உணர்ந்தோம். எங்களுடைய கதறலும் அம்மாவின் அழுகையுடன் கூடிய உதறலும் கணத்திற்கு கணம் அதிகரித்துக் கொண்டே இருந்தன. எங்களின் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. 
அண்ணன் தான் கடைசியில், எங்களை நம்பும்படிச் செய்ய நாங்கள் என்ன பண்ண வேண்டுமென்று அம்மாவைக் கேட்டான். அம்மா அப்பொழுது தான் இப்படிச் சொன்னார்கள்: 'குழந்தையேசு சொரூபத்தின் மீது எல்லோரும் சத்தியம் செய்யுங்கள். அப்பொழுதுதான் நான் இறங்குவேன்'. 
எங்கள் ஐவருக்கும் இதைக் கேட்டு திகைப்பாக இருந்தாலும், அம்மா எங்களை ஏமாற்றிவிடக் கூடும், நாங்கள் குழந்தையேசு சொரூபம் பக்கம் நகர்ந்ததும் தன் காரியத்தை முடித்துக் கொள்ளக்கூடும் என்று பயந்தோம். எனவே ஒவ்வொருவராகச் சென்று சொரூபத்தின் மீது கை வைத்து சத்தியம் செய்தோம். ஒருவர் சத்தியம் செய்கையில் நால்வரும் அம்மாவின் கால்களைப் பத்திரமாய் பிடித்துக் கொண்டிருந்தோம். எல்லோரும் சத்தியம் செய்ததும் அம்மா கயிற்றை அவிழ்த்து கீழே இறங்கினார்கள். அதன் பின் நாங்கள் கனவிலிருந்து தனித்தனியே விழித்து எழுந்தோம். 
அந்தக் கனவிற்குப் பின் நாங்கள் எல்லோரும் ஒருவித நம்பிக்கையின்மையும், கலக்கமும், வெட்கமும் கொண்டு கொஞ்ச நாட்களுக்கு மெளனமாகவே சுற்றித்திரிந்தோம். நாளடைவில் என் சகோதரர்களும் சகோதரிகளும் ஏன் அம்மாவும் கூட அந்தக் கனவை ஒரு கெட்டகனவென்று சொல்லி மறந்து போனார்கள். 
ஆனால் விட்டின் நடு அறையில் எப்பொழுதும் பிரம்மாண்டமாய் நிற்கும் அந்தச் சொரூபம் என்னைக் காலமெல்லாம் கலக்கத்திலேயே வைத்திருந்தது. நான் அந்தக் கனவை இன்னும் மறக்கவில்லை என்பதைக் கண்டு கொண்ட அம்மா ஒரு நாள் என்னைக் கூட்டி வைத்து, கனவுகளை மறக்கடிக்கும் பச்சிலையொன்றை அரைத்து விழுங்கும்படிச் சொன்னார்கள். வழக்கமாய் சொன்னதைக் கேட்கும் அம்மாவின் பச்சிலைகள் இந்த விஷயத்தில் மட்டும் பலிக்கவேயில்லை. என்னையே காறி உமிழ்ந்து கொள்ளாத குறையாக அந்தக்கனவு எனக்குள் சொல்லப்பட்டிருந்தது. ஆக தண்டனைகள் குறித்து நான் புலம்பிக் கொண்டிருப்பது (இதுவும் எனது நண்பன் .....லா சொல்வது தான்) தற்செயலானது அல்ல என்றே நான் நினைக்கிறேன்.
எனது ஆராய்ச்சிக்கென்று தமிழகத்தில் அலைந்து கொண்டிருந்த பொழுது தான் ...குளம் என முடியும் ஒரு கிராமத்தில் நான் அவனைப் பார்த்தேன். 1994ம் வருடம் என்று ஞாபகம், சித்திரை மாதம் அக்கினி நட்சத்திரம் இன்னமும் ஆரம்பித்திருக்கவிலை. அக்கிராமத்தின் நடுவிலிருந்த ஊர் மந்தையில் தனது தண்டனைக்காக வேண்டி அவன் காத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு மரணம் தண்டனையாக வழங்கப்பட்டிருந்தது. அவன் கதையைத் தான் இங்கு நான் சொல்லப் போகிறேன்.

3
நான் முதன் முதலில் அவனைப் பார்த்த பொழுது அந்த இடத்தில் சாவின் களை ஏற்கனவே நிரம்பியிருப்பது. அவன் கடந்த பத்து நாட்களாய் தனது தண்டனைக்காக அங்கே காத்துக் கொண்டிருப்பதாய் எனக்குச் சொன்னார்கள். 
அவனுடைய உறவினர்கள் என்று சொல்லப்பட்ட சிலர் சற்று எட்டிய தூரத்தில் ஒரு கட்டிடத்தின் சிதிலமடைந்த நிழலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.  நிழல் நகர்வதற்கேற்ப கட்டிடத்தின் அப்புறமும், இப்புறமும் மாறி மாறி அவர்கள் உட்கார வேண்டியதிருக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன். 
அவர்களில் ஒரு சிறு பெண் குழந்தையைத் தவிர மற்ற அனைவரும் பெரியவர்களாய் இருந்தனர். பாதிக்கும் மேல் பெண்கள். அப்பெண் குழந்தை அந்த மனிதனின் ஒரே பெண் என்று எனக்குச் சொன்னார்கள். தனக்கு வழங்கப் போகிற தண்டனையை குழந்தை பார்க்க வேண்டுமென்று அவன் விரும்பியதாலேயே அக்குழந்தையை அங்கே வைத்துக் கொண்டிருப்பதாகவும் மற்றபடி வழக்கமாய் சிறு குழந்தைகள் இதைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் எனக்குச் சொன்னார்கள்.
.......குளம் என்கிற அவ்வூரில் இவர்களின் குடியிருப்பு ஊரின் பிட்டத்தில் இருந்தது. கடந்த பத்து நாட்களாய் அம்மனிதனுக்கும் அவனுடைய உறவினர்களுக்கும் யாராவது உணவு கொண்டு வந்து கொண்டிருந்தனர். எல்லோருக்குமே பொதுவாய், அம்மனிதனுக்கான தண்டனையைச் சீக்கிரம் முடித்துவிட்டால் தேவலை என்பதுபோல் இருந்தது. 
வழக்கமாய் தீர்ப்பாகிய இரண்டு மூன்று தினங்களுக்குள் முடிந்து போகிற இந்நிகழச்சி இந்த முறைதான் இழுபறியாய்க் கிடக்கிறது என்று அபிப்பிராயப்பட்டனர். அம்மனிதனின் மனைவி கூட அக்கூட்டத்தில் இருப்பதாய் எனக்குச் சொன்னார்கள். என்னால் முதல் நாளில் அப்பெண்ணைப் பார்க்க முடியவில்லை. ஆனால் மூன்றாவது தினம் பார்த்தேன். கற்களுக்காய குதறப்பட்ட குன்றைப் போலிருந்தது அப்பெண்ணின் முகம். துயரத்தையோ, துக்கத்தையோ எதையுமே அவள் வெளியிட விரும்பாதது போல் உட்கார்ந்திருந்தாள். அடிக்கடி தன் பெண் குழந்தையை இழுத்து மடியில் இருத்திக் கொண்டதிலிருந்து அவள் கொடும் வேதனையிலிருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது. இவர்களைத் தவிர அக்கிராமத்தின் பிற சனங்களும் அங்கே வருவதும் போவதுமாய் இருந்தனர். அவர்கள் சாதாரணமாய் இருப்பது போல காட்டிக் கொண்டாலும் அவர்களிடம் வேடிக்கைப் பார்க்கும் தன்மையானது மிதமிஞ்சித் தெரிந்தது.
எனக்கு இம்மனிதனைப் பற்றி முதலில் கூறியவர், பக்கத்து நகரத்திலுள்ள நண்பர் ஒருவர். தண்டனைகள் குறித்து ஆராய்ந்து கொண்டிருந்ததால் இயல்பாகவே நான் மனித உரிமைகள் குறித்து மிகுந்த அக்கறையுடன் இருக்கலானேன். மனித உரிமைகள் மீறப்படுவதன் மிக அதீத நிலை மரணம் தண்டனையாக வழங்கப்படுதல். எனவே மரண தண்டனையை அறவே ஒழித்துவிட வேண்டுமென நண்பர்கள் பலர் அந்நாட்களில் அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து வந்தோம். எனக்கு இம்மனிதனைப் பற்றிச் சொல்லியதும் அத்தகைய நண்பர்களில் ஒருவர்தான்.
அம்மனிதன் குறித்த வழக்கு .....வேலி எனும் நகரின் நீதி மன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது இக்குற்றத்திற்கு மரணதண்டனை நிச்சயம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. எனவே எனது நண்பர் வேறு சிலருடன் சேர்ந்து ஒரு பிரபலமான வழக்கறிஞரை அமர்த்தி மரண தண்டனையை எதிர்த்து வாதிடச் செய்தாராம். மிகவும் சிறப்பான காரியம் தான் என்றாலும், இம்மனிதனே கடைசியில்  தனக்கு மரண தண்டனையை வழங்குங்கள் என்றும் அதையும் பொதுயிடத்தில் வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டது வழக்கையே திசை திருப்பிவிட்டது. கடைசியில் எல்லாமே கை நழுவிப் போனது போலாயிற்று. நீங்கள் போய் அவனைச் சந்தியுங்கள் என்று சொல்லி என்னை அக்கிராமத்திற்கு என்னை அனுப்பி வைத்தார்.
நான் அவனிடம் சென்று பேச விரும்பினேன். ஒருவன் தனக்கு மரணத்தை வழங்கும்படி விரும்பிக் கேட்டுக்கொண்டதை விளங்கிக் கொள்ள விரும்பினேன். அதிலும் தன் மரணத்தை தன் சிறு குழந்தை பார்க்க வேண்டுமென்றுசொல்லியிருந்தானென்றால் விஷயம் எவ்வளவு சிக்கலானது என்பதை என்னால் உணர முடிந்தது.
நான் முதலில் அவனிடம் சென்று பேச “உனக்கு வழங்கப்பட்ட சாவு இல்லை நான்”என்றே அறிமுகம் செய்துக் கொண்டேன். 
ஏனெனில் மரணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் அவன், அந்நியனான என்னை வெகு எளிதாய் ‘சாவு’ என தப்பார்த்தம் செய்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்று எனக்குத் தெரிந்திருந்தது. எனவே என்னை நான் இப்படியாக அறிமுகம் செய்வது தான் சரியென்றும் எனக்குப்பட்டது.
அவன் என்னை இப்படி எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் பார்த்தான் என்று தான் நினைக்கிறேன்.  குழப்பத்தில், நான் என்ன சொல்கிறேனென்று விளங்கவில்லை என்று கூறினான். நான் மறுபடியும் ரொம்பவும் தெளிவாய், அவனுக்கான சாவு நானில்லை என்று மறுபடியும் கூறினேன். அவன் சிறிது நேரம் என்னை வெறிக்கப் பார்த்துவிட்டு, “பெறவு யாருக்கான சாவு?” என்றென்னை திருப்பிக் கேட்டான்.
நான் உடனே பொதுவாய், “எல்லாருமே ஒவ்வொருவிதத்தில் யாருடைய சாவின் அடையாளமாகத்தானே இருக்கிறோம்” என்று சொன்னேன். அவனோ, “நீங்கவேணா அப்படியிருக்கலாம். ஆனா நாங்க யாருக்குச் சாவாக இருக்க முடியும்?” என்று மறுபடியும் கேட்டான்.
என்னால் இதை எப்படி இவனுக்கு விளக்கிச் சொல்வதென்று தெரியவில்லை. வெளிப்படையான அடையாளங்கள் இல்லையென்பது உண்மைதான். “ஆனால் எல்லோருமே உணர்கிறோம் தானே?” என்று மட்டும் அவனிடம் சொன்னேன்.
இதைக் கேட்டு அவன் என்னைக் கேலியாய் ஒரு சிரிப்பு சிரித்தான். கொஞ்ச நேரம் தலையைக் குனிந்தபடி தரையையே பார்த்துக் கொண்டிருந்தான். தனக்குள் இன்னமும் சத்தமில்லாமல் அவன் சிரிப்பதாகவே எனக்குப்பட்டது. 
அப்படியே இருந்தவன் திடீரென்று என்னிடம், “நெசம் தான் வாழ்க்கைனு ஒண்ணு இருந்தா, அதுக்கு அர்த்தம்னு ஏதும் இருந்தா, அது புரியும்னும் இருந்தா எல்லாமே நெசம்தான். நீங்க சொல்றாப்ல மத்தவன் சாவுக்கு சாச்சியா இருக்கது கூட புரியும் தான். ஆனா அர்த்தமே இல்லாத்திலிருந்து என்ன மயித்த புரியும்? ...தோ முப்பது வயசாவுது. இத்தன காலமும் புரிஞ்சது எதுக்குமே அர்த்தம் கெடையாதுங்கறது தான்”என்றான்.
எனக்கு அவன் இப்படிப் பேசியது ஆச்சரியமாய் இருந்தது. அர்த்தமில்லாத வாழ்க்கை என்பது உண்டா என்று எனக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. “நிஜமாகவே அர்த்தமில்லை என்று நம்புகிறாயா?” என்று தான் அவனிடம் கேட்டேன்.
“இருந்துச்சு! சொல்லியிருக்காங்க, ஒரு காலத்துல அர்த்தமெல்லாம் இருந்துச்சு! ஆனா அப்போ நாங்க மட்டும் தான் இந்த மண்ண காத்திட்டிருந்தோம். என்னிக்கு அவுகெல்லாம் வந்தாகளோ அன்னிக்கே மண்ணு மட்டும் போவல, இருந்த அர்த்தமும் போயிருச்சு, எல்லாத்தயும் புடுங்கிட்டு பதிலுக்கு கையில் இந்த நாறப்பொழப்ப கொடுத்துட்டாவ'.
இதற்கு சொல்லக்கூடிய பதிலென்று எதையும் நான் வைத்திருக்கவில்லை. எங்கள் சந்திப்பு தவறாகத் தொடங்கி தவறாகவே முடியப் போகிறது என்று எனக்குப் பட்டது. ஆரம்பித்ததே சரியில்லை போல எனக்குப்பட்டது. இருவருமே மெளனமாய் இருந்தோம். நான் அவனிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் கணம் வந்துவிட்டது போல உணர்ந்தேன். அவனும் கூட அந்தக் கணத்தில், நான் இதோ எழுந்து போகப் போகிறேன் என்று நினைத்திருக்கலாம். அப்படியொரு மெளனம் எங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது.
ஆனால் இந்தச் சந்திப்பை இப்படித் தோல்வியில் முடித்து விட நான் விரும்பவில்லை அவனுடன் பேசுவதை நான் விரும்பினேன். அதன் மூலம் அவனைப் பேச வைக்க விரும்பினேன். ஆனால் எல்லாமே பொய் போல் பொலபொலவென்று உதிர்ந்து கொண்டிருந்தது. அவனுடன் மேற்கொண்டு பேசுவதானால், அவன் என்னை நம்ப வேண்டும் என்று எனக்குப்பட்டது. அவன் இதுவரையில் என்னை நம்பவில்லை என்பதையும் நான் அப்பொழுது உணர்ந்தேன். நம்பும்படி நான் பேசியிருக்கவுமில்லை. மிக மோசமாக பேச்சைத் தொடங்கியதற்காய் என்னையே நான் அந்த நேரம் திட்டிக் கொண்டேன். வேறு வழியேயில்லாமல் கடைசியில் அவனிடம் நேரடியாகவே, 'நீ என்னை நம்பவில்லை போல் தெரிகிறது' என்ரு சொல்லியே விட்டேன்.
அவன் அதற்கு லேசாய் சிரித்துக் கொண்டு, “செத்துப்போவறதுக்கா இங்கன ஒக்கார்ந்துருக்கேன். சாகப் போறவனுக்கு யார நம்பி என்னாவப் போவுது?” என்றான்.
“ஆனால், இந்தச் சாவு நீயே வேண்டிக் கொண்டதுதானே. இதைத் தவிர்த்திருக்க முடியுமென்று எனது நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் திறமையான வழக்கறிஞரைக் கூட நியமித்திருந்தார்கள்.”
அவன் இதைக் கேட்டதும், என்னில் ஆர்வம் கொண்டவன் போல் தெரிந்தான். “அவங்கள்லாம் உங்களச் சேர்ந்தவுகளா?” என்றும் என்னிடம் கேட்டான். 
நான் அவனிடம், “ஆமாம் அவர்கள் என் நண்பர்கள் தான்” என்று சொன்னேன். 
அவன் மறுபடியும் மெளனத்தில் ஆழ்ந்தது போல் காணப்பட்டான். எதையோ யோசிக்கிறான் என்று எனக்குப் புரிந்தது. திடீரென்று ஏதோ தோன்றியவன் போல் என்புறம் திரும்பி, “நீங்க என் கதையக் கேக்கமுடியுமா?" என்றான். "அவுங்க என்னிய தேடிட்டு வரலன்னா என் கதைய நான் முழுசா ஒங்களுக்குச் சொல்ல முடியும். ஒங்களுக்கு அவசரமில்லியே?"
எனக்கென்ன அவசரம்? நான் இதைத்தான் விரும்பினேன். அவன் தானாகச் சொல்லவேண்டுமென்று விரும்பினேன். அவன், அவன் பற்றி சொல்லவேண்டு மென்று விரும்பினேன். எனக்கு நேரம் பற்றிக் கவலையில்லையென்றும், அவன் சொல்வதைக் கேட்க விரும்பவே செய்வேனென்றும் நான் அவனிடம் கூறினேன்.
பதிலுக்கு அவன் நன்றியுடன் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, ‘அவுங்க வந்துராம இருக்கட்டும்’ என்று சொல்லி தன் கதையை எனக்குச் சொல்லலானான்.

4

அவன் பெயர் பரமசிவனாய் இருந்தது. அவனை எல்லோரும் சிவன் என்று கூப்பிட்டார்கள்... குளம் எனும் கிராமத்தில்தான் அவன் பிறந்தது. அவன் எந்த வருடம் பிறந்தான் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், அவன் குடியிருப்பில் பத்து குடிசைகள் ஒரு நாள் இரவில் தீப்பிடித்துக் கொண்டு, நான்கு பேர் பெண்களும் குழந்தைகளுமாய் இறந்து போனவருடத்தில் அவன் பிறந்ததாய் அவனுக்குச் சொல்லப்பட்டிருந்தது. 
அவனுக்கு நான்கு வயதாயிருக்கையில் பெரும் பஞ்சமொன்று வந்தது. தொடர்ந்து மூன்று வருடங்களாக மழையே பெய்திருக்கவில்லை. பிழைப்புக்காக வேண்டி அவனது குடும்பம் அவனது நாலாவது வயதில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தேயிலைக்காடுகளில், தேயிலை பறிக்கும் கூலிகளாக மாறி மலைகளில் குடியேறிற்று. இவையெல்லாமே அவன் வளர்ந்த பின்பு பிறரைக் கேட்டுத் தெரிந்த கொண்டவைகள். அவனுக்கு விபரம் தெரிந்த  ஞாபகம் தேயிலைக் காடுகளில் தான் துவங்குகிறது.
தேயிலைத் தோட்டங்களில் ‘லைன் வீடுகள்’  என்று சொல்லப்பட்ட வீடுகளில் ஒன்று அவர்களுடைய வீடாய் இருந்தது. அவனது அப்பாவும் அம்மாவும் தேயிலைக் கொழுந்து பறிப்பதற்காகச் சென்று விடுகையில் இவன் அவனொத்த சிறுவர்களுடன் காடுகளில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தான். 
தேயிலைக் கூலிகளின் குழந்தைகளுக்கென்று ஒரு சிறு பள்ளிக்கூடம் அங்கே இருந்தது. இருக்கிற அத்தனை குழந்தைகளும் சுமார் நான்கு வயது முதல் பதினைந்து வயது வரையில் ஒரே வகுப்பில் படித்தனர். 
ஒரு குண்டு குண்டான மலையாளப் பெரியம்மா தான் டீச்சர். இவன் அந்தப் பள்ளிக் கூடத்தில் படித்த ஐந்து வருடங்களும் அந்தப் பெரியம்மா எப்படியாவது இவர்களுக்கு ஆனா ஆவன்னா சொல்லித் தந்து விடுவது எனும் சபதம் மேற்கொண்டு செயல்பட்டு வந்தார்கள். 
இடையிடையே எல்லோருமாய் சேர்ந்து கிறிஸ்தவப் பாடல்கள் பாடுவார்கள். மதியம் சோறு போட்டதும் பள்ளிக்கூடம் முடிந்துவிடும். மதிய நேரங்களில் தான் விறகு பொறுக்கச் செல்வது. தனது பத்தாவது வயதில் இவன் ஏலக்காய் தோட்டங்களில் திருடும்படி இவனது நண்பர்கள் பார்த்துக் கொண்டனர். அந்த மலைக் காட்டில் அவன் வாழ்ந்த மீத ஐந்து வருடங்களையும் நல்ல திருடனாகவே கழித்தான். ஒரேயொரு முறை மட்டும் சிறு தவறொன்றினால் எக்குத்தப்பாக தேயிலைத் தோட்டத்து வெள்ளைக் காரத்துரையிடம் மாட்டியிருக்கிறான்.  வெள்ளைக்காரத்துரை இவனைக் கன்னத்தில் ஓங்கியரைந்து இங்கிலீஷில் ஏதோ திட்டிவிட்டு (கெட்ட வார்த்தையாகத்தான் இருக்க வேண்டும்) காறி மூஞ்சில் துப்பினான். பின் என்ன நினைத்தானோ வேகவேகமாகப் போய்விட்டான்.  
இவனுக்கு பதினைந்து வயதிருக்கையில் கிராமத்திலிருந்து இவர்களைப் பார்க்க இவன் மாமா வந்திருந்தார். ஊரில் மழை பெய்கிறதாகவும் விவசாயம் ஆரம்பித்து விட்டதென்றும் இனி தைரியமாய் ஊருக்கு வரலாம் என்று சொன்னதும் இவன் குடும்பம் பழையபடி கிராமத்திற்கு வந்தது. ஊரில் அப்படியொன்றும் சொல்லிக் கொள்கிறார் போல் விவசாயம் நடக்கவில்லை. 
அந்த வருடத்து இறுதியில் அவனது அப்பா நாம் மறுபடியும் தேயிலைக் காடுகளுக்கே போய்விடலாம் என்றார். அவனது அம்மாவோ தன்னால் செத்தாலும் அங்கு வர முடியாதென்றும் அந்தக் குளிரிலும் அட்டைக் கடியிலும் கிடந்து உழல்வதற்கு இங்கேயே சாவேன் என்றாள். இதனால் கிராமத்திலேயே இருப்பது என்பது முடிவாயிற்று. 
ஆனால் உண்மையில் அப்பாவுக்கு தேயிலைத் தோட்டத்தில் ஒரு மலையாளப் பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அதனால் அம்மா வரமாட்டேன் என்றாள் என்றும் இவன் ரொம்ப காலம் சென்று தெரிந்து கொண்டான்.
மறுவருடம் பெய்வதாகச் சொல்லியிருந்த மழையும் பெய்யவில்லை. கிணறுகளில் தண்ணீர் மறுபடியும் கீழிறங்கிவிட்டது. குளங்களில் கரம்பை தோண்டினார்கள். கேரளத்துக்காரன் மேற்குத் தொடர்ச்சி மலையின் தண்ணீரை அவன் பக்கமாய் திருப்பிக் கொண்டதால் தான் குளங்கள் பெருகவில்லையென நகரத்திலிருந்து வந்து போகும் தோழர்கள் சிலர் கூறினர். சிவகாசிக்காரனின் தீப்பெட்டித் தொழிலுக்காக காமராசர் கூட கேரளக்காரன் இப்படிச் செய்ததை சரியென்று ஒப்புக் கொண்டார் என்பதாகவும் சொன்னார்கள். 
அந்த வருட இறுதியில் உள்ளூர் நாயக்கர் ஒருவர் வீட்டில் இருந்து மூட்டை நெல்லும் நாற்பது பவுன் நகையும் கொள்ளை போயிற்று. அதற்காக இவனது குடியிருப்புக்கு வந்த காவலர்கள் சிகப்பு துண்டுபோட்ட சில தோழர்களை கரும்புக் காட்டில் வைத்து இழுத்துப்போனார்கள். அப்படி இழுத்துப் போகப்பட்டவர்களில் இவனது மாமாவும் ஒருவர். 
காவலர்கள் கொண்டு போன தோழர்கள் யாரும் திரும்ப வரவில்லை. காவல் துறையினர் கொன்று விட்டதாய் சிலர் பேசிக்கொண்டனர். காவல்துறையோ அவர்களை எப்பொழுதோ திருப்பி அனுப்பிவிட்டோம் என்றது. அதன்பின் நகரத்துத் தோழர்கள் யாரும் அக்கிராமத்தின் பக்கம் வருவதில்லை.  
இதற்கு மறுவருடம் முதல் சிவகாசி தீப்பெட்டி ஆபிஸிலிருந்து தினசரி நாலு முறை பஸ்ஸொன்று வந்து போகத் துவங்கிற்று. இவனது குடியிருப்பிலிருந்த அத்தனை சிறு குழந்தைகளுக்கும் வேலை தருவதாகச் சொல்லி அவர்களாய் அழைத்துச் சென்றனர். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் கணிசமாக சாப்பாட்டிற்கான பணம் வந்தது. பெரியவர்கள் விவசாயம் செத்துப் போய் கல் குவாரியில் பாறைகளை உடைக்கையில் குழந்தைகள் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து தீப்பெட்டி ஆபிஸிற்கு சென்றனர். 
அந்த வருட மத்தியில் சாணி பொறுக்குவதற்காக போன இவனது தங்கை அழுகையோடு ஓடி வந்தாள். அவள் பூப்படைந்து மிகச்சரியாக ஒரு வருடம் ஆகியிருந்தது, அழுதுகொண்டே ‘சம்சாரி வீட்ல பேண்ட் சட்டை போட்டிருந்தவன்....’என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது. இவன் முதலில் செய்தது வீட்டுக்குள் ஓடிப் போய் தேயிலைக் காடுகளில் விறகு வெட்டும் அரிவாளை எடுத்தது தான். 
அரிவாளுடன் வெளியே ஓடியவனை அம்மா வாசலில் மறித்து நின்று தடுத்தாள். அவன் வெட்டுவதானால் தன்னை முதலில் வெட்டட்டும் என்றாள். “உடன் பொறந்தது தான் காணாமப் போச்சு. வயித்ல வந்ததாது தங்கட்டும்டா. நீ ஒருத்தனாவது உயிரோட இரு. நீயும் காணாமப் போயிராதடா செவனு” என்றழுதாள். 
அப்பா இவனது தங்கையை அழாமல் அடக்கி அடுத்த வருடமே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைத்தார். இவனுக்கானால் ஆத்தாமை தாளாமல் கொஞ்ச நாள் வீட்டிற்கே வராமல் திரிந்தான். சம்சாரி வீட்டு பேண்ட் சட்டை போட்ட பையனை அவனால் ஒரு தரம் பார்க்க முடிந்தது. நகரத்தில் உயர் படிப்பு படிக்கிறதாய் சொன்னார்கள்.
கொஞ்ச நாளில் இவன் குடியிருப்பைச் சேர்ந்த ஒரு பெரியவர் உழவுக்கான கூலி கேட்டு ஊருக்குள் போகையில், ஊரில் இவரைத் திருடனென்று சொல்லி கட்டி வைத்து அடித்தார்கள். இருட்டும் வேளையில் குளக்கரையில் வீசப்பட்ட அப்பெரியவர் யாரும்   பார்க்காமல் இறந்து போனார். 
இது இவர்களை உசுப்பேத்திவிட, இவனும் இன்னும் சிலரும் காவல் நிலையம் சென்று புகார் தந்தனர். மறுபடியும் நகரத்துத் தோழர்களை சந்தித்து இதுகுறித்து பேசினர். முடிவாக அப்பெரியவர் திருடும் எண்ணத்தில் தான் ஊருக்குள் வந்தாரென்பது நிரூபணமாயிற்று. இவன் இந்த விஷயத்தில் தலைகால் புரியாமல் அலைவது குறித்து வருத்தப் பட்ட அவனது அப்பாவும் அம்மாவும் ஒரு நல்ல நாளில், காணாமல் போன மாமனின் மகளை இவனுக்குக் கட்டி வைத்தனர்.
அவன் மாமன் மகளின் பெயர் காளியம்மாளாக இருந்தது. இவனுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு கலக்கம் இருந்ததென்றால் அது காளியம்மாள் தான். காளியம்மாள் தினசரி கூலிக்காய் சென்று வந்து கொண்டிருந்தாள். கடைசி வரையில் அவளாக அவனிடம் எதுவுமே பேசியிருக்கவில்லை. ஒரு இறுகிய மெளனம் போலவே வளைய வந்து கொண்டிருந்தாள். 
தகப்பனை காவல் துறையினர் கரும்புக்காட்டில் வைத்து இழுத்துச் செல்கையில் அவளுக்குப் பத்து வயது. காவலர்கள் கொண்டு சென்ற தகப்பன் மாயமாய் மறைந்து போனான் என்று அறிந்த பொழுது அவளுக்கு அதற்காக என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்திருக்கவில்லை. அடுத்த இரண்டு வருடங்களில் அவளது தாயும் இறந்து போன பொழுதும் கூட தான் யாருமற்ற அனாதையானோம் என்கிற உணர்வின்றி, ஏதோ காலம் காலமாய் இதையெல்லாம் பார்த்துச் சலித்தவள் போல்தான் நின்று கொண்டிருந்தாள். 
சுற்றியிருந்த பெண்களெல்லாம் பிணத்தை நடுவில் போட்டு அழுதபடி, அவளையும் அழுது விடும்படி கேட்டு அவள் தலையில் மடேர், மடேரென்று அடித்த பொழுது கூட அவள் கல் போலத்தான் நின்றாள். சிவனைக் கட்டிக் கொள்கிறாயா என்று அவளிடம் கேட்கப்பட்ட பொழுது, அவளுக்கு தலையாட்டுவதற்கோ மறுப்பதற்கோ எவ்வித காரணமும் இருக்கவில்லை. 
கல்யாணமான கொஞ்ச நாட்களிலேயே இவன் அவளுக்கென்று தனியான ஆசாபாசங்கள் எதுவுமிருக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டான். ஏனிப்படி இவள் இருக்க வேண்டும் என்பது தான் அவனுக்குக் கடைசி வரையில் விளங்கவே இல்லை. ஒரு நாள் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்’ என்று அவளிடமே கேட்டபொழுது தான் அவள் அவனுக்கு இப்படிப் பதில் சொன்னாள்: 
என்னிய மட்டும் ஆளுக்காளு கேக்கீக்ளே, எங்க அப்பா காணாமல் போனதுக்கு அர்த்தம் உண்டுமா? பன்னெண்டு வயசில  யாருமேயில்லாம நின்னேனே அதுக்கு அர்த்தம் உண்டுமா? இல்ல, ஒங்கள எப்படா தீக்கலாம்னு கங்கனம் கட்டிட்டுத் திரியிறாகளே அதுக்குத்தான் அர்த்தம் உண்டுமா? நம்ம பாப்பாவ சம்சாரி வூட்டுப் பையன் தொட்டதுக்கு நீங்க என்ன அர்த்தம் சொல்வீக? ஊர்காட்ல பஞ்சம்னதும் இந்த பள்ளக்குடி மட்டும் தேயிலக் காட்டுக்கு ஓடுச்சே ஏன்? எந்நேரமும் செத்துப் போவாருனு தெரிஞ்சும் ஒமக்கும் வாக்கப்பட்டேனே ஏன்? கல்லுய்யா, கல்லு! வானத்தில இருந்து பொத்துனு விழுந்துட்ட கல்லு. குண்டி தொடைக்கிறவன் குண்டி தொடச்சிக்கலாம். உக்கார நெனைக்கிறவன் உக்காந்துக்கலாம். இப்ப கேளும், கல்லு என்னைக்காச்சும் அழுவுமா இல்ல சிரிக்கத்தான் சிரிக்குமா?
இந்த இடத்தில் சிவன் அவனுடைய கதையைச் சொல்வதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்து கேட்டான்: “இப்ப சொல்லுங்க, ஏதாச்சும் அர்த்தமிருக்க முடியுமா? இது எனக்குக்கூட ஒறைக்கல. அதோ, அந்தச் சுவத்தோரம் உக்காந்துருக்கே அந்தக் காளியம்மா சொல்லுச்சு.” 
நான் வெட்கத்தில் தலை குனிந்து உட்கார்ந்திருந்தேன். என் முகத்தில் காறித் துப்பினாற் போலிருந்தது. நான் அது நாள் வரையில் எதனை அறிவு என்று நினைத்து வழிபட்டுக் கொண்டிருந்தேனோ அதனை இவன் சர்வ சாதாரணமாய் எட்டி உதைத்துக் கொண்டிருந்தான்.
“என் மேல அவுங்க சொன்ன குத்தம் என்ன தெரியுமா? பெரிய, பெரிய நீதிபதியெல்லாம் பேசுறான். படிச்சவன்னு சொல்லிட்டு வந்த அத்தனபேரும் அப்படி நீ செஞ்சியானு கேக்கிறான். பாதிபேர் ‘அவன் அப்படி செஞ்சான், நான் என் கண்ணால பாத்தேங்குறான்’ என் மேல என்ன வழக்கு தெரியுமா? 
அவுக கோவில் இருக்ற பக்கமா நான் சட்டை போட்டுக்கிட்டு நடந்து போனேனாம். அதனால் அந்த கோயிலும், சாமியும், ஏன் சுத்துபட்டே அழுவிப் போச்சாம். அதைத் தட்டிக் கேட்டதுக்கு கொன்னுடுவேன்னு மிரட்டுனனாம். நீதிமன்றத்ல கேக்குறான், 
அவுங்க சார்பா வாதாடுன வக்கீல் கேக்குறான், நீ போனியா, அதனால அந்தயெடம் அழுவிப்போச்சா, இது உண்மைதானா? இதுக்கு சாட்சியா மூணு பேரு. மூணு பேரும் நீதிபதிகிட்ட சொல்றான், நான் அந்த எடத்துக்கு போனதும் பீ நாத்தாம் நாறுச்சாம், எம்மேல பொண வாட வீசுச்சாம். 
மூணாவது ஆளு சொல்றான், ‘அந்த இடமே கன்னங்கரேல்னு இருண்டு போச்சு ஜட்ஜீங்களே!’. 
இதெல்லாம் பத்தாதுனு உள்ளூர் தாசில்தாரு ‘ஆமா சாமி, நானும் போயி எடத்தப் பாத்தேன். இவுக சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான்’ னு நீதிபதி கிட்ட பேப்பர்ல எழுதிக் குடுக்கிறான். கடைசியில நீதிபதியும் என்னைப் பார்த்து என்ன கேட்டான் தெரியுமா? 
‘இப்படியெல்லாம் நடந்ததா? நீ போனது உண்மையா? நெசம்தானா?’ – எனக்கு அந்த நேரம்தான் ‘அடக் கூறுகெட்ட கழுதைகளானு' வெப்ராளாம் தாங்க முடியல. உடனேதான் நீதிபதிகிட்ட “ஐயா, ஜட்ஐய்யா, நான் தொடைச்சி போட்டகல்லு. நீங்களும் வேண்ணா ஒங்க பங்குக்கு குண்டிய தொடச்சிப் போடுங்க. இதுல கல்லுக்கிட்ட போயி, நான் என் குண்டிய தொடைக்கவா வேண்டாமானு கேக்குறீகளேனு சொன்னேன். 
அந்த நீதிபதி வெளிநாடெல்லாம் போயி எக்கச்சக்கமா படிச்சவராம். நான் இப்டி சொன்னதும், ஏதோ குண்டின்னா என்னன்னே தெரியாத மாதிரி திரு திருனு முழிக்கிறாரு. அப்புறம் நடந்தது தான் தெரிஞ்சுறுக்குமே. இப்பவும் நான் ஒங்கள அதே தான் கேக்குறேன். நாங்க யாருக்காச்சும் சாவோட சாட்சியமா இருக்க முடியுமா?
சிவன் இப்படி கேட்பதற்கு பதிலாக என் முகத்தில் காறித் துப்பியிருந்தால் நான் இன்னமும் சமாதானமாய் இருந்திருப்பேன் போல் பட்டது. நிச்சயமாய் நான் தப்பிதமாய் சொல்லிவிட்டதை உணர்ந்தேன். அதை அவனிடமே சொல்லவும் செய்தேன். அவன் அப்படித்தான்  என்பது போல்  தலையை மட்டும் ஆட்டினான். கொஞ்ச நேரம் போல் நாங்கள் மறந்திருந்த சாவின் வாடை மறுபடியும் அங்கே வீசத்துவங்கிற்று.
“எனக்கு இன்னமும் சில விஷயங்கள் புரியவில்லை” என்று நான் அவனிடம் கூறினேன். நிஜமும் அதுதான். அவன் ஏன் தனக்கு மரணதண்டனை வேண்டுமென்றான் என்றும் தன் குழந்தை அதைப் பார்க்க வேண்டும் என விரும்பியதையும் நான் மேலும் விளங்கிக் கொள்ள விரும்பினேன்.
இவன் இப்பொழுது என் மீது சலிப்புற்றவன் போலிருந்தான். “என்ன வேணும் உங்களுக்கு? எதைத் தேடி இப்படி அலையிறீங்க?' என்று என்னைக் கேலியாய்க் கேட்டான்.
நான் அவனுடைய கேலியைக் கொஞ்சமும் மதிக்காமல் “நீ ஏன் என்னைக் கொன்று விடுங்கள் என்று நீதிபதியிடம் கேட்டாய்?” என்றேன். உனக்கு மரணதண்டனை வழங்கப்படுவது என்பது வெகு நிச்சயமாய் இருந்தது. அப்படியிருந்தும், நியே வலியப் போய் என்னை கொன்றுவிடுங்கள் என்று சொன்னது ஏன்?
இதற்கு அவன் கொஞ்சம் கூடத் தயக்கமின்றி 'ஒங்களோட நண்பர்கள் தான்' என்றான். நான் பதறிப்போனேன்.  அவர்கள் அவனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற விரும்பியவர்கள்.  ஆனால், அவர்களைத் தான் அவன் காரணம் என்கிறான்.
அவுக எல்லாருக்கும் என்னத் தப்பிக்க வச்சிரனும்னு ஆசை. மொதல்ல நான் கூட இத பெருசா எடுத்துக்கல. ஆனா ஒரு சமயத்துல எனக்கே பயமாப் போச்சி. எங்கே நீங்க சொல்றதக் கேட்டு நீதிபதி கூட என்னை விட்டுருவானோனு பயந்தேன். ஒங்க ஆட்களுகெல்லாம் நான் மரணத்திலிருந்து தப்பிச்சுட்டா போதும்னு இருக்கு. 
பெரிய வக்கிலு கூட வச்சிருந்தாக அவுரு எனக்கோசரம் நீதிபதிகிட்ட கால்ல விழாத குறையா கெஞ்சுறாரு. அப்பத்தான் எனக்கு ச்சீய்னுபோச்சு. அப்பத்தான் எனக்குப்பட்டுது – ஒங்களுக்கும் எங்களுக்கும் ஒத்துக்காதுனு. நீங்க வேற நாங்க வேறனு. 
இப்பவும் அதையே தான் சொன்னேன். அப்பவும் அதையே தான் சொன்னேன். நான் குத்தம் பண்ணேன்னு சொல்றேல்ல, என்னிய கொன்னுரு, ஆனா ஒண்ணு என்னிய என் சொக்காரு முன்னால கொல்லணும், இன்னியும் நாங்க காணாமப் போய்ட்டே இருக்க முடியாது. கொல்லனுமா கொல்லு! ஆனா அத எங்காளுக முன்னாடி செய்யி, அவ்வளவ் தான்” என்று படபடவென்று பேசினான்.
“ஆனால் அவர்கள் உன் மீது சொல்லும் குற்றம் இப்பொழுது பழைய குற்றமல்ல தெரியுமா? நீ அவர்களின் பெண்களை கேலி செய்ததால் தான் உன்னைக் கொல்லப் போவதாய் சொல்கிறார்கள்'.
இதைக் கேட்டதும் அவன் தன் மேல் துண்டை விலக்கி தன் வயிற்றை எனக்குக் காட்டினான். “கா வயித்து சோத்துக்கு அல்லாடவே எங்களுக்கு நேரமில்ல சாமி. இதுல  ஊர்ப் பொம்பளைகளை எங்க போயி கை நீட்ட. பொட்டப் புள்ளகள பூட்டி பூட்டி வக்கிறவன் தான் பொம்பளக்கி அலைவான். நாங்க எங்க புள்ளகளை பூட்டி வக்கிறதில்ல, பூட்டி வைக்கிறதெல்லாம் அவுக பழக்கம்'.
“எப்படியும் அவுங்க சொல்ற காரணம் தான் எழுத்துல வரும். நீ சொல்றது இல்ல. இன்னிக்கு மட்டுமில்ல இன்னும் வருசங்கள் கழிஞ்சும் எழுனதுதான் உண்மைனு பேசுவாங்க.”
“எதுல எழுதுவாக? பத்திரிகைல எழுதுவாகளா? இல்ல பொத்தகத்ல எழுதுவாகளா? நீங்க எப்படி வாயில சொல்றத நம்புறதில்லியோ அதே மாதிரி நாங்க எழுத்துலவுள்ளத நம்புறதில்ல. எங்களுக்கு சொல்தான் முக்கியம். எழுத்து குப்பை.”
அவனுடைய இந்த பதில் என்னை மறுபடியும் ஆழம் தெரியாத அதல பாதாளத்திற்குள் தள்ளிவிட்டிருந்தது. தொடக்கத்திலிருந்தே அவனுடைய ஒவ்வொரு சொல்லும் என்னை எனக்கே மகாமட்டமாய் காட்டிக் கொண்டிருந்தது என்பதை நான் உணர்ந்திருந்தேன். 
நீதிகளின் பேரில் வெறி கொண்டலைந்து கொண்டிருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாய் எதையோ நெருங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குப் பட்டது. இன்னும் சில சொற்களில் நான் தேடித் கொண்டிருந்த எதையோ அடையப் போகிறேன் என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். 
அவனோ எங்களது சந்திப்பு எப்போதோ முடிந்துவிட்டது போல் அங்கு உட்கார்ந்திருந்தான். என்னால் அவனிடம் மீண்டும் இப்படிக் கேட்பதை தடுக்க முடியாமல், மறுபடியும் அவனிடம் கேட்டேன்: “நீ என்னை மன்னிக்க வேண்டும். உன்னை நான் எரிச்சலூட்டுகிறேன் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் எனக்கு வேறு வழியிருக்கவில்லை. என்னிடம் இன்னுமொரு கேள்வி இருக்கிறது. அதற்கு பதில் தெரிந்துவிட்டால் என் குழப்பம் தெளிந்து விடும் என்று நம்புகிறேன். இந்தக் கேள்வியை வேறு யாரிடமும் கேட்க முடியுமென்று எனக்கு தெரியவில்லை. நீ மட்டுமே பதில் சொல்ல முடியுமென்று நம்புகிறேன். நீ கொல்லப்படுவதை உன் குழந்தை ஏன் பார்க்க வேண்டும்? அச்சிறு குழந்தைக்கு என்ன புரியுமென்று நீ நினைக்கிறாய்?”
இந்தக் கேள்வியில்தான் அவன் முதன் முதலாய் என்னைப் பார்த்து திடுக்குற்றான். அது வரையில் அவன் முகத்தில் என் குறித்து நிரம்பியிருந்த சலிப்பு விலகி, கொடூர வேதனையொன்று மெல்லப் பரவியது. அவன் கைகள் ஒருமுறை நடுங்கியதை நான் கண்டேன். அவன் கண்களில் பளபளவென நீர் வடிந்தது. கொஞ்ச நேரம் போல் தூரத்தில் நின்றிருந்த தன் குழந்தையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். 
பின் என் புறம் திரும்பி கமறலான குரலில் எனக்கு இப்படிச் சொன்னான்: “நான் என் வாழ்க்கையில் செய்யப் போற மொத குத்தம் அது தான்.  எந்தக் தகப்பனாது நான் சாவறதப் பாருனு தன் கொழந்தைக்கு சொல்வானா? அப்படிச் சொல்லத்தான் மனசு வருமா? நான் செய்றேன், செய்யப்போறேன். எம்புள்ள என் கழுத்துல அருவா எறங்குறத பார்க்கப்போவுது. எனக்குத் தெரியும், இது மா பாவம்னு தெரியும். இதுக்கு கொழந்தய கொன்னு போடலாம்னு தெரியும். ஆனா எனக்கு வேற வழி தெரியலயே.... எம்புள்ள காளியம்மயாட்டம் கல்லு போல மாறிறக் கூடாதுய்யா. எம் புள்ள பேசனும். அதோட அப்பன் காணமப் போவல, எல்லாருமா சேர்ந்து கொன்னு போட்டாகனு அதுக்குப் புரியனும். காளியம்ம மட்டும் எங்க மாமன் செத்ததப் பார்த்திருந்தா இப்படி பாறையாட்டம் நிப்பாளா. அய்யய்யோ அய்யானு... கூப்பாடாவது போட்ருப்பா. எம்புள்ள கூப்பாடு போடனும், ஒலகத்துக்கே கேக்குறாப்புல கதறனும். ஆனா இது கொடுமை. பாவம். பெரிய குத்தம். எனக்குத் தெரியுது... எம்புள்ளய கதற வச்சிட்டு நான் போப்போறேன்னு புரியுது... ஆனா எனக்கு வேற வழி தெரியலியே...... பள்ளு பறையால்லா பொறந்து தொலச்சிட்டோம்'.
அவன் அழுதுகொண்டிருந்தான். தலையைக் குனிந்து சத்தமாய் அழுது கொண்டிருந்தான். பெரிய பெரிய கேவல்கள் அவனிடமிருந்து கிளம்பின. நான் இடிந்து போய் உட்கார்ந்திருந்தேன். அவனுடைய வெற்று முதுகில் என் கைகளால் அவனைத் தடவித்தருவது தவிர வேறொன்றும் உபயோகமாய் எனக்கு செய்யத் தெரியவில்லை. விம்மலும் கேவலுமாய் இருந்தவனை சமாதானப்படுத்துவதற்கு சரியான சொற்களை அந்த நேரத்தில் நான் அறிந்திருக்கவில்லை. இப்படியாக பதினோராவது நாளும் கடந்து போயிற்று.
அதற்குப் பின் வந்த நாட்களில் எனக்கு அவனுடன் பேசுவதற்கோ கேட்பதற்கே எதுவுமிருக்கவில்லை. ஆனால் அங்கேயே நானும் மேற்கொண்டு மூன்று நாட்கள் வரை அவனது உறவினர்களுடன் உட்கார்ந்திருந்தேன். 
மூன்று நாட்களும் எதுவுமே நடைபெறவில்லை. அவனுக்கான தண்டனையை வழங்குவதில் ஏனிந்த தாமதமென எங்களில் யாருக்குமே விளங்கவில்லை. அதற்கடுத்த நாட்களில் எனக்கு அங்கு போய் உட்கார்ந்திருப்பதில் பயமும். மனம் மண்டிய கசப்பும் ஏற்பட பக்கத்திலிருந்த நகரத்து அறையில் முடங்கிக் கிடந்தேன்.
அதற்கடுத்த இரண்டாம் நாள், மிகச் சரியாக சித்திரை மாதம் 6ம் நாள் பகல் இரண்டு மணி போல், ஊருக்குள்ளிருந்து வந்த நான்கு பேர் அவனை அரிவாள் கொண்டு சரமாரியாய் வெட்டிக் கொன்றனர்,
5
அதற்கடுத்து எல்லாமே வழக்கம் போல நடைபெற்றன. இவன் வெட்டுண்டதைப் பார்த்த இவன் உறவினர்கள் மேற்கொண்டு அங்கு நிற்க பயந்து ஊரின் எதிர் திசை பார்த்து ஓடி ஒளிந்தனர். இவன் குடியிருப்பிலிருந்த பாதி குடும்பங்கள் உயிருக்குப் பயந்து போனயிடம் தெரியவில்லை. 
பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இவன் கொல்லப்பட்டது இடம் பெற்றது. இரு சமுதாயத்தினருக்கிடையிலான  பகையென்றும், பெண்களை மானபங்கப் படுத்தியதால் விவகாரம் முற்றியதென்றும் விவரிக்கப்பட்டிருந்தது. ஊரில் சிறப்புக் காவல் படையினர் குவிக்கப்பட்டனர். இறந்த சிவனின் மனைவி காளியம்மாளுக்கு முதலமைச்சர் பத்தாயிரம் ரூபாய் வழங்குவார் என்று சொல்லப்பட்டது. தண்டனை வழங்கிய நான்கு பேர் மீதும் கொலைக்குற்றம் சாட்டி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. 
அந்த நான்கு பேரும் பத்து நாட்களுக்குப் பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். உள்ளுர் காவல் நிலைய காவலர்கள் தங்கள் பணியை சரியே செய்யவில்லையென்று சொல்லி தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். 

எண்ணிக்கையிலடங்கா தலித் விடுதலை இயக்கங்கள் இக்கொலையில் நீதி வழங்கப்பட வேண்டுமென்று கேட்டு அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின. எதிர்கட்சிகள் ஆளுங்கட்சியை பதிவியை விட்டு விலகுமாறு வேண்டின. இந்த அமளிகளெல்லாம் அடங்கி நாடு அமைதி நிலைக்கு திரும்புவதற்கு மூன்று மாதங்களாயின. அதன் பின் எல்லாமே எல்லோருக்கும் மறந்து போயிற்று. ......குளம் சலனமின்றி அமைதியாய் இருப்பதாய் எழுதி வைத்துக் கொண்டார்கள்.                                                            

Wednesday, 29 March 2017

போர்ஹே பற்றிய தகவல்கள் - Kaala Subramaniam, Vasu Devan


Kaala Subramaniam added 4 new photos.
23 March at 23:51 ·



போர்ஹே பற்றிய தகவல்கள்
-------------------------------------------

Vasu Devan
போர்ஹே தன் வாழ்நாளில் 101 சிறுகதைகளை மட்டுமே எழுதினார். ( Jorge Luis Borges- Collected Fictions- Penguin வெளியிட்ட மொத்த தொகுப்பில் 101 சிறுகதைகள் உள்ளது). இதைத்தவிர அவர் கவிதைகள் மற்றும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நாவல் எழுதவில்லை. போர்ஹெ கையாண்ட சொற்சிக்கனம், மொழிவளம், சக பிரதியியல் கூறுகள் (Inter Textuality), சுட்டுப்பொருள் ( Denotative), பண்டைய தொன்ம குறிப்புகள் பற்றிய ஆராய்ச்சிகள் இன்றும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒரு புதிய அர்த்தத்தை வழங்கிய வண்ணம் உள்ளது. அவர் கையாண்ட பதங்கள், வாக்கிய அமைப்பு, கச்சாப்பொருள் அடர்த்தி மிகுந்தவை. அதனால்தான் அவருடைய படைப்புகள். பலமுறை வாசித்தாலும் அவ்வளவு எளிதில் போர்ஹே பிடிபடமாட்டார். எந்த ஒரு கோட்பாடு மற்றும் இலக்கிய வகைமையிலும் அவர் எழுத்தை நிறுத்த முடியாது.,,,,,,,


அவருடைய சிறுகதைக்கான கச்சாப் பொருள் நாம் நினைத்து பார்க்கமுடியாத காலக்கட்டத்தில் அரங்கேறி பல சகப் பிரதியியல் கூறுகளோடு கதையாடலை பிரதியில் அரூபமாக எழுதிச்செல்கிறார். ஏனெனில் தன் வாழ்நாள் முழுவதும் புத்தகங்களோடு வாழ்ந்தவர். வாசிப்பு, வாசிப்பு, வாசிப்பு என்ற செயலை அயராமல் தன் வாழ்நாளில் கடைபிடித்தவர்.…. அவர் கையாண்ட பல பதங்களுக்கு அர்த்தம் கண்டுபிடிக்கவே ஒரு வாசகன் தீவிரமாக உழைக்க வேண்டும். ஒரு நேர்காணலில் “ நீங்கள் என்னவாக நினைக்கூறப்படவேண்டும்?” என்ற கேள்விக்கு, அடக்கமாக போர்ஹே சொன்ன பதில், “ நான் எழுத்தாளன் இல்லை..ஒரு வாசகன்” என்றார்.
-The Theme of the Traitor and the Hero என்ற சிறுகதையில் ’Moab’ என்ற வார்த்தையை கையாண்டிருப்பார். பலருக்கு இதன் பொருள் பிடிபடாது. ஜோர்டானுக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்தை மோசஸ், பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டதை போர்ஹே இந்தக்கதையில் கையாண்டிருப்பார்.
- Funes, His Memory என்ற சிறுகதையில் Quebracho என்ற வார்த்தை, உருகுவேவில் 19ம் நூற்றாண்டில், சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எழுச்சிப்பெற்ற புரட்சிப் படையை குறிக்கிறது.
-The Secret Miracle சிறுகதையில் வரும் Abenesra என்பவர் 11-12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்பானிஷ் கவிஞர்/சிந்தனையாளர்.
போர்ஹே கையாண்ட (இத்தகைய) புதிரான பதங்களுக்கு பிரத்யேகமான அகராதியை தொகுத்துள்ளார்கள். அநேகமாக, உலக இலக்கிய வரலாற்றில் ஒரு எழுத்தாளரின் படைப்புகளுக்கு அகராதி தொகுத்தது போர்ஹேவுக்கு மட்டுமே நடந்துள்ளது. ( பல எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு கையேடுகள் வந்துள்ளது).

Kaala Subramaniam
Adolfo Bioy Casares உடன் சேர்ந்து இரு நாவல்களை போர்ஹே எழுதியுள்ளார். அதில் 1942ல் எழுதி 1981ல் ஆங்கிலத்தில் வெளியான Six Problems for Don Isidro Parodi என்ற துப்பறியும் நாவல் படிக்கக் கிடைப்பது. நிற்க. ஜேஆர்ஆர் டோல்கின்-க்கும் சிறந்த அகராதி உள்ளது.

Vasu Devan
1942ம் வருடம் ஸ்பானிஷ் மொழியில் Bustos Domecq என்பவர் எழுதியது என 160 பக்கங்களில் நீங்கள் குறிப்பிட்ட நூல் வெளிவந்தது. Bustos Domecq என்பவர் இரு எழுத்தாளர்களின் புனைப்பெயர். அதாவது போர்ஹே மற்றும் பாய் கசரேஸ் எழுதியது இந்நூல். இருவரும் திட்டமிட்டபடி ஒரு புதிய புனைவு எழுத்தாளரை உருவாக்கியதை பல ஆய்வாளர்கள் Biorges என்ற பெயரிலும் அழைத்தனர். இது ஆறு அத்தியாயங்களில் சிறுகதை வடிவத்தில் எழுதப்பட்ட துப்பறியும் கதை. பரிட்சார்த்த முறையில் எழுதப்பட்ட இந்நூல், அவ்வளவாக கவனம் பெறவில்லை. மேலும் போர்ஹே, சிறுகதைக்களூக்கான அவரின் பங்களிப்புக்கே உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். மற்றபடி, தனிப்பட்ட முறையில் டோல்க்கினையும், போர்ஹேவையும் ஒப்பிடுவது சரிபடவில்லை. டோல்க்கின் படைப்புகளுக்கு அகராதி வெளிவந்திருக்கலாம். ஆனால் டோல்க்கின் ஒரு Fantasay Writer. இம்மாதிரி எந்த கண்ணீயிலும் சீரியஸ் எழுத்தாளரான போர்ஹேவை அடைக்க முடியாது என்பது என் கருத்து.

Kaala Subramaniam
1, Jorge Luis Borges &Adolfo Bioy Casares. Chronicles of Bustos Domecq (1982)
2, Jorge Luis Borge. Evaristo Carriego (A Book About Old-time Buenos Aires) (1984)
3, Jorge Luis Borges, ADOLFO BIOY-CASARES. Six Problems for Don Isidro Parodi (1981)
வாசகர்களுக்குத் தகவலுக்காக.

Vasu Devan
மிக்க நன்றி. பிரமிளை தவிர, போர்ஹேவையும் பற்றியும் நீங்கள் வாசகர்களுக்கு தெரியப்படுத்தியது ஆச்சரியமாகவும், மகிழ்சியாகவும் உள்ளது...

Kaala Subramaniam
சிறுகதைகளாக ஒரு நாவல் எழுதப்படலாம். அப்டைக்கின் பெக் எ புக் ஒரு உதாரணம். Evaristo Carriego வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளையும் இலக்கிய விமர்சனங்களையும் கொண்ட நாவல் எனவும் சொல்ல வாய்ப்புள்ளது. ஏனெனில் இலக்கிய விமர்சனங்களையே சிறுகதை உத்தியாகப் பயன்படுத்தியவர் தானே போர்ஹே. நாவல் எழுதமுடியாத சோம்பேறித்தனம் உள்ளவன் தான் என்று அவர் சொல்லியுள்ளார், நாவலையும் சிறுகதையாகத்தான் எழுதுவேன் என்கிறார். ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் (பிறர் சிக்கல்கள் தீர்க்கப்படுதல்) தனித்தனியானவை. Don Isidro Parodi கதைகள் (தன் சிக்கல்கள்?) இணைந்தவை எனவும் சொல்லக்கூடும். ஃபெண்டாஸ்டிக் ரியலிசம் என்ற இலக்கியப் போக்கை உருவாக்கியவராக போர்ஹே (தனது முன்னோடிகளை அவர் வழிமொழிந்தாலும்) மேஜிக்கல் ரியலிசம், காமிக்கல் ரியலிசம் இத்யாதியெல்லாம் பெயர்பெறாததற்கு முன்பே போற்றப்பட்டவர். சீரியஸ் இலக்கிய உலகின் ஒரு சிகரம். டோல்கின் ரியலிஸ்ட்டிக் ஃபேண்டஸியை உருவாக்கியவர். மிடில் எர்த் என்ற உலகை நிஜமாக உருவாக்கியவர். அதற்காக மொழியை, தொன்மங்களை, வரலாறுகளை, நாட்டார் வழக்காற்றியலை (துல்லியமாக கச்சிதமாக உண்மையிலேயே) உருவாகியவர். ஓராயிரம் பக்கங்கள் கொண்ட நாவலுக்கு பல ஆயிரம் பக்கங்களில் இவற்றை அவர் செய்தார். அவரது இலக்கிய வகையில் அவர்தான் தனிப்பெரும் சிகரம். சயன்ஸ் ஃபிக்சன், ஃபேண்டஸி இலக்கியம் என்பன ஜனரஞ்சக வகையாக, எஸ்கேபிஸ்ட் இலக்கியமாக கருதப் பட்டது போய் அவற்றிலும் கிளாஸிக்கலான, நியூவேவ், சைபர்பங், போஸ்ட் மார்டன் வகை எழுத்துக்கள் வந்துள்ளன. வெல்ஸ், பிரையன் அல்டிஸ், வில்லியம் கிப்ஸன் என்று. ஏன் சீரியஸ் இலக்கியத்தின் கர்ட் வானெகட் ஜுனியர், வில்லியம் பர்ரோஸ் என்று. தப்பித்தல் இலக்கியம் பற்றி தான் தொகுத்த அருமையான ‘காலக்டிக் எம்பயர்’ முதல் தொகுப்பின் முன்னுரையில் டோல்கினின் ஒரு கூற்றை ஆல்டிஸ் எடுத்துக்காட்டியது நினைவுக்கு வருகிறது. “ஜெயிலில் இருந்து தப்பித்தோடலை ஜெயிலர்தான் குற்றமாகப் பார்ப்பான். தப்பித்தவனுக்கோ அதுதான் விடுதலை.

Six Problems for Don Isidro Parodi என்ற நூல் உண்மையில் comic detective fiction என்றுதான் சொல்லப்படுகிறது. சிறுகதைகள் என சொல்லாமல் புனைகதை என்று - நாவலுக்கும் சிறுகதைக்கும் உள்ள பொதுவான வார்த்தையில் - அழைக்கப்படுகிறது. Collected Fictions என்ற மொத்தத் தொகுப்பிலும் அவ்வாறே காணலாம்.

• Un modelo para la muerte, 1946, detective fiction, written with Adolfo Bioy Casares,
• Dos fantasías memorables, 1946, two fantasy stories, written with Adolfo Bioy Casares.

பின்னூட்டங்கள்
--------------------------

Thuraiyur Saravanan
நீங்கள் போர்ஹே பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதியவை உன்னதத்தில் மொழிபெயர்த்தவை மற்றும் உங்களின் பல்துறைசார்ந்த பங்களிப்புகளை இன்றைய வாசகர்கள் எந்தளவு தேடிப் படித்திருப்பார்கள் எனத் தெரியவில்லை. இன்றைய நிலையில் இணையத்தில் வாசிப்பவர்களுக்கும் பதிவர்களுக்கும் உங்கள் பதிவுகளும் பின்னூட்டங்களும் மேலு‌ம் ஆழமாக வாசிக்கவும் சிந்திக்கவும் உந்துதல் தரும்.

Muthu Kumar
டினொடேஷன் என்றால் சுட்டுப்பொருள், இண்டர்டெக்ஸ்சுவாலிட்டி சகபிரதியியல் கூறுகள் என்றெல்லாம் தப்பும் தவறுமாக புரிந்து கொண்டு வெறும் தகவல் குப்பைகளை மட்டும் கொட்டுவது என்று எந்த பீறாய்ந்தயாரும் செய்யக்கூடியதை வைத்து போர்ஹேயை புரிந்து கொள்ள முயற்சிப்பது அபத்தமாகும். அதாவது டினொடேஷன் என்றால் வார்த்தையின் தன்மைநவிற்சிப் பொருள், வெளிப்படைப் பொருள் அதாவது வார்த்தை ஏற்படுத்தும் அகவியல் சலனங்கள், அறிவார்த்தக் கருத்துக்கள், உட்பொருள் ஆகியவற்றுக்கு மாறானதே டினொடேஷன். மாறாக கனடேஷன் இருப்பதாகக் கூற வேண்டும், டினொடேஷன் இருக்கிறது என்றால் வெளிப்படையான பொருள், எல்லோருக்கும் தெரிந்த பொருள் என்பதையே குறிக்கும் அகராதியே போடப்படும் ஒரு எழுத்தாளருக்கு டினொடேஷன் (அதுவும் சுட்டுப்பொருளாம்) இருக்கிறது என்றால் அன்பரின் ’தேர்ந்த புலமை’ யை யாதென அழைப்பது? ரெஃபரன்ஷியல் மீனிங் என்பதைத்தான் சுட்டுப்பொருள் என்போம் அல்லது இண்டெக்ஸ் என்பதை சுட்டுப்பொருள் என்போம். அன்னாரின் வெற்றுச் சலசலப்புகள் ஓய்வது எப்போது?

அது என்ன பண்டைய தொன்மக் குறிப்புகள்? அப்படியென்றால் நவீனத் தொன்ம குறிப்புகள் என்று ஏதாவது உண்டா? அல்லது தற்கால தொன்மக்குறிப்புகள் என்று ஏதாவது உள்ளதா? \\எந்த ஒரு கோட்பாட்டு, இலக்கிய வகைமையிலும் அவர் எழுத்தை நிறுத்த முடியாது\\ தனது புரியாமையையும், இருண்மைகளையும் குருட்டுத் தனங்களையும் இப்படி ஒருவர் சொல்லிக் கொள்ளலாம்.

\\அவருடைய சிறுகதைக்கான கச்சாப் பொருள் நாம் நினைத்து பார்க்கமுடியாத காலக்கட்டத்தில் அரங்கேறி பல சகப் பிரதியியல் கூறுகளோடு கதையாடலை பிரதியில் அரூபமாக எழுதிச்செல்கிறார்\\

இதில் ஏதோ மொழிபெயர்ப்புக் கோளாறு உள்ளது, ஏனெனில் கச்சாப்பொருள் எப்படி காலக்கட்டத்தில் அரங்கேறும்? மேலும் சகப் பிரதியியல் என்பது பல சகப்பிரதியியல் ஆனது எப்படி? முதலில் இயல் என்று கூறலாமா? இயல் என்றால் உண்மையான அர்த்தம் தெரியுமா? இப்படி எந்த வார்த்தைக்கும் ஒரு அர்த்தமும் விளங்காதவரெல்லாம் போர்ஹேயையும் ஜாய்சையும் எழுதுவது காலக்கொடுமை என்று கூறாமல் ’யாதென அழைப்பாய்?’இண்டெர்டெக்ஸ்சுவாலிட்டி என்பது ஊடுபிரதி, அல்லது இடைவெட்டுப் பிரதி, இது மூலப்பிரதியின் தனித்துவத்தையும், ஏகபோக உரிமையும், ஆசிரிய அகங்காரத்தையும் கேள்விக்குட்படுத்தும் ஒரு கோட்பாடு, இது ஒரே பிரதிக்குள் பலபிரதிகள் ஊடாடும் ஒன்றுக்கொன்று மோதும், இணையும், லீலாவிநோதமான ஒரு மொழியியல் செயல்பாடு, இதில் agonistics என்ற முரண்கள், முட்டி மோதல்கள் இருக்குமே தவிர சில அரிய வேளைகளில்தான் ‘சக’ கைகூடும். அதனை சகபிரதியியல், அதுவும் கூறுகள் என்றெல்லாம் கூறுகெட்ட விதத்தில் எழுதுவது அக்கோட்பாடுகளின் வீரியமழிப்புச் செயல் இல்லாமல் வேறு என்னவாம்? Moab பற்றி விக்கிப்பீடினால் தகவல் கிடைக்கிறது, பலருக்கும் பிடிபடாத இந்தப் பொருள் இவருக்குப் பிடிபட்டு விட்டதாம். என்ன போலித்தனம்.

Quebracho என்பது அர்ஜெண்டினா புரட்சி இயக்கம் என்றே கேள்விப்பட்டிருக்கிறேன், அன்னார் உருகுவே என்கிறார்!! எவன் பார்க்கப்போகிறான் வெரிஃபை செய்யப்போகிறான்? Abenesra என்ற பெயரும் கூகிள் செய்தால் தகவல் கொட்டுகிறது. இதெல்லாம் விஷயமேயல்ல, இவற்றையெல்லாம் கொண்டு போர்ஹே என்ன செய்கிறார் என்பதே விஷயம். அன்பர் போர்ஹேயின் ஷேக்ஸ்பியர்’ஸ் மெமரி என்ற கதையைப் படித்து (அன்பருக்குப் பிடிக்காத வார்த்தை, ஏனெனில் பார்ப்பது பதிப்பது அவ்வளவுதானே நடவடிக்கை) என்ன புரிந்து கொண்டார் என்று மற்ற அன்பர்களுக்கு விளக்கினால் நல்லது. முதலில் அன்பர் தமிழை சொற்பிழை எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்வோம். இப்படியே அன்பரும் எத்தனை நாள் ‘எழுதிச் செல்கிறார்’ என்று பார்ப்போம். காலசுப்பிரமணியம் இதனைப் பொருட்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.

முதலில் டினொடேடிவ் பிறகு அரூபமாக எழுதுகிறார் என்று அன்பர் கூறுகிறார்.... இந்த அபத்தத்தை யாதென அழைப்பாய்?

Valar Mathi
கனோடேஷனுக்கும் டினோடேஷனுக்கும் வித்தியாசம் தெரியாதவர், இன்டர் டெக்ஷுவாலிடியை சகபிரதியியல் என்பவரெல்லாம் போர்ஹேவைப் புரிந்து கொண்டார் என்றால் அதுதான் நம் ஊர் டெடொனேஷன். கொடுமை! கொடுமை! கட் & பேஸ்ட் ஆசாமி!

Saturday, 25 March 2017

எண்கள் – அசோகமித்ரன்

எண்கள் – அசோகமித்ரன்


இந்த ஆள் எப்போ முடிப்பார்னு தெரியலை. தினம் இந்த மாதிரிதான் ஆயிடறது. ஒவ்வொருநாளும் கொஞ்சம் முன்னாலே வந்து பேப்பரை முழுக்கப் பாத்துட்டுப் போகலாம்னா நாம வரத்துக்குள்ளே நாலு பேராவது ஏற்கனவே வந்துடறாங்க. இவங்க வீடெல்லாம் பக்கத்திலேயே இருக்கோ என்னவோ. இந்த ஆள் வீடு ரொம்பப் பக்கத்திலே இருக்கணும். ரொம்ப ரொம்பப் பக்கத்திலே இருக்கணும். இந்தச் சாலையிலே இரண்டு சாரிலேயும் ஒரே பாங்குகளும் கடைகளுந்தான் இருக்கு
asokamithran
. இந்தப் பாங்குகளையும் கடைகளையும் எட்டு மணிக்குத்தான் திறக்கிறான். இந்த ஒரு இடந்தான் ஏழு மணிக்கே திறக்கிறான். ஏழு மணிக்கே வந்தா இங்கே வர இரண்டு மூணு பேப்பரையும் அஞ்சு நிமிஷத்துலே பாத்துட்டுப் போயிடலாம். நாளைக்காவது ஏழுமணிக்கு வந்துடணும். ஏழு மணிக்கு வந்தா வீட்டிலே தண்ணி பிடிச்சு வைக்க முடியாது. எட்டு குடும்பம் நடுவிலே ஒண்டுக் குடித்தனம் வாழற அழகிலே ஒழுங்காக் கொல்லைப்புறம் போயிட்டு வரமுடியாது. ஏழு மணிக்குள்ளே பழைய சோத்தைக் கொட்டிண்டு கிளம்ப முடியாது. பேப்பரைப் படிச்சுட்டு மறுபடியும் வீட்டுக்குப் போய் குளிச்சிட்டுச் சாப்பிட்டுட்டு கிளம்பறதுக்கு நேரம் இருக்காது. வெறும் வயத்தோட ஒன்பதே முக்கால் மணி வரை எப்படி இருக்கிறது ? ஒன்பதே முக்காலுக்குத்தான் காண்டானுக்குள்ளேயே நுழையலாம். இந்தப் பேப்பரையே படிக்காம போயிடலாம். பேப்பரைப் படிக்காம போற நாளிலேதான் சர்க்கரைகார்டு பத்தி ஏதாவது புதிதாச் சொல்லறான். நாலு நாளைக்கு பால் கார்டு தர மாட்டேன்னு சொல்லறான். இது தெரியாம அரைநாள் லீவு போட்டுட்டுப் பால் ஆபீஸஉக்குப்போனா, ‘போங்க திங்கக்கிழமை வாங்க, படிச்சவங்களெல்லாம் இப்படி வந்துடறீங்களே ? பேப்பர்லதான் போட்டாங்களே ? ‘ அப்படான்னு பால் ஆபீஸ் பியூன் கேக்கறான். பேப்பரை வீட்டிலேயே வாங்கித் தொலைக்கலாம். முழுக்க அஞ்சு நிமிஷங்கூடப் படிக்கிறதுக்கு விஷயம் இல்லாத பேப்பரை

மாசம் எட்டு ஒம்பது ரூபா கொடுத்து அழ வேண்டியிருக்கு. ஒம்பது ரூபாயிலே எவ்வளவோ காரியம் நடக்கும். ஆனா இந்த நாள்லே ஒம்பது ரூபாலே என்ன காரியம் நடக்கிறது ? ஒழுங்கா இரண்டு படி அரிசி வாங்கிண்டு வர முடியலை. இரண்டுபடி அரிசி இரண்டு நாள்லே தீந்துபோயிடறது. நாள் கணக்கிலே கிரஸினாயிலே கிடைக்காம போய் அன்னிக்கு வாசல்லே வந்த வண்டிக்காரன் கிட்டே இருந்த காசெல்லாம் கொடுத்து மூணு பாட்டில் எண்ணை வாங்கித்து. அளவெல்லாம் மோசம். சொன்னா அதுவும் இல்லைன்னு அடிச்சுடறான். அன்னிக்கு அந்த அஞ்சு ரூபா நோட்டை வாங்கிக்க மாட்டேன்னு அழ அழ வைச்சான். போஸ்டாபீஸ்லே கொடுத்த நோட்டு. போஸ்டாபீஸ். அவனும் சில்லறை இல்லைன்னு நாயா அங்கேயும் இங்கேயும் ஓட வைச்சு அப்புறம் கொடுத்த நோட்டு. கையை விட்டா அப்படியே பறந்து போயிடும். அது காசுன்னு இல்லைன்னா அந்தக் குப்பையை எவனும் கோலெட்டுக்கூடத் தொடமாட்டான். ஆனா இப்பத் தெருவிலே இருக்கிற காகிதக் குப்பையைச் சின்னத் துண்டு விடாம தூக்கிண்டு போறாங்க. இந்தக் காகிதம் பொறுக்கிறவங்க கண்ணே ஏதோ மாதிரி மாறிடறது. அவனுக்கு உலகத்திலே வேறே எந்தச் சிந்தனையும் கிடையாது. அவன் தோளிலே இருக்கிற சல்லடையா இருக்கிற சாக்கு, அப்புறம் குப்பை. தெருவிலே போறவங்க, வரவங்க, வண்டி, சைகிள், மாடு, வீடு எதுவும் அவன் கண்ணிலே படறதும் கிடையாது. படவும் முடியாது. கண்ணிலே படறது இல்லேன்னு சொல்ல முடியாது. அப்படி இல்லேன்னா தினம் ரோடிலே கார் ஏறிச் சாகறவங்க எல்லாரும் இந்தக் குப்பை பொறுக்கிறவங்களாத்தான் இருக்கணும். ஒரு வேளை அப்படித்தானோ என்னவோ. குப்பை பொறுக்கிறவங்க இவ்வளவு பேர் செத்தும் இன்னும் குப்பை பொறுக்கிறவங்க இவ்வளவு பேர் இருக்காங்கன்னா இந்த ஊர்லே குப்பை பொறுக்கிற வேலைதான் எவனுக்கும் உடனே கிடைக்கக்கூடியதுன்னு குழந்தைகூடத் தெரிஞ்சுகும். எவ்வளவு நல்லகாலம் இந்தக்குப்பை பொறுக்கறவங்க அத்தனைபேரும் திருடப்போகாம, கொள்ளையடிக்க போகாம இருக்கிறது ‘ நாளெல்லாம் குப்பை பொறுக்கினா அதிலே எவ்வளவு கிடைக்கும் ? ஒரு ரூபாய்–இரண்டு ? இரண்டு ரூபாலே ஒத்தன் என்ன பண்ண முடியும் இந்தக் காலத்திலே ? அது சரி, அவனே இரண்டு ரூபாய்க்கு வாங்கித் தின்னுட்டான்னா அவன் குழந்தை குட்டிங்க ? அவனுக்கு மட்டும் குழந்தை குட்டி கிடையாதா ? வீடு வாசல் துணி இல்லாம இருக்கலாம், குழந்தை குட்டி இருக்காது ? அந்தக் குழந்தைக் குட்டிகளும் இவன் மாதிரித்தான் குப்பை பொறுக்க போயிடுமோ ? குப்பைன்னா என்ன குப்பை ? தெருவிலே கிடக்கிற பாதிக்குப்பை குழந்தைப்பீயை வழிச்சுப் போட்ட குப்பைத்தானே ? அந்தப்பீயைத்தான் அந்தக் குழந்தைகளும் தோள்மேல் சுமந்துண்டு போகும் ? பீயைச் சுமக்கிறதுக்கா இங்கே குழந்தை குட்டிங்க பொறக்கிறாங்க ? பீ. பீ. பீ. எல்லாம் ஒரே பீ, இந்த ஆளு விடாம ஒரு வரி விடாம படிக்கிற இந்தக் காகிதம் கூட நாளைக்குப் பீயோட தெருவிலே கிடக்கும். அதை ஒத்தன் பீன்னுகூடப் பாக்காம சாக்கிலே எடுத்துப் போட்டுண்டு இன்னும் பீக் காகிதத்தைப் பொறுக்கப் போயிண்டே இருப்பான்…….
அந்தக் கிழவர் படித்துக்கொண்டிருந்த தாளை அவனும் ஒரு முனையில் தூக்கிப் பிடித்தான்.
இந்தப் பக்கத்தை இந்த ஆளு அஞ்சு நிமிஷமாப் படிச்சுண்டிருக்கார். படிச்சுண்டிருக்கார் என்ன வேண்டியிருக்கு ‘ கான். குனிஞ்ச தலைநிமிராமப் படிச்சுண்டிருக்கான். இந்த ரீடிங் ரூமிலே வேறே பேப்பரும் கிடையாது. இது தர்மத்துக்கு நடத்தற ரீடிங் ரூம். அவன்தான் எவ்வளவு பேப்பர் வாங்கி போடுவான் ? பிராஞ்சு லைப்ரரியை எட்டரை மணிக்குத்தான் திறக்கிறான். இந்த கால்காசு வேலைகூட இல்லேன்னா அங்கே போய்ப் படிக்கலாம். அதுவே வேலை இல்லாதவர்களுக்குத்தான் நடத்தறானோ என்னவோ. இது எட்டரை மணிவரை ரீடிங் ரூம். அப்புறம் கிண்டர் கார்டன் ஸ்கூல். சுவரிலே ஒரு ஆணி விடாம படம். இல்லாதபோனா போதனைகள். அன்பே சிவம். உழைப்பே தெய்வம். சுத்தம் சோறு போடும். உண்மையே பேசு. சத்தம் போடாதே. சத்தம் போடாமதான் இந்தக்கதிக்கு வந்தாச்சு. இந்த ஆளு சத்தம் போடாமதான் படிச்சுண்டு இருக்கான். படிச்சுண்டே இருக்கான். நானும் காத்திண்டே இருக்கேன். இவன் படிக்கிற பக்கத்திலே பாதிலே ஒரு பாங்க் பாலன்ஸ் ஷீட். ஒரு எண்கூட எட்டு இலக்கத்துக்குக் குறைஞ்சு கிடையாது. எட்டு, ஒன்பது, பத்து, பதினொண்ணு கூட இருக்காப்போல இருக்கு. பதினொரு இலக்கத்து எண்ணை ரூபாயாக் கற்பனை பண்ணிக்கூடப் பாக்க முடியலை. இதுவே பட்ஜெட் தாளாக்கூட இருக்கலாம். அப்பவும் பத்து, பதிணொண்ணு, பன்னெண்டுன்னு பெரிய பெரிய எண்கள். அவன் பத்து இலக்கத்துலே போட்டாலும் ஒண்ணுதான். இருபது இலக்கத்துலே போட்டாலும் ஒண்ணுதான். இவ்வளவு ரூபாயைப்பத்தி நிஜமாத் தெரிஞ்சவங்க நிச்சயம் இருப்பாங்க. அவங்க எப்படி இருப்பாங்க ? என் மாதிரி இருக்கமாட்டாங்க. இந்த ஆள் மாதிரி கூட இருக்கமாட்டாங்க. இலவசப்பேப்பர் பறக்கப் பறக்கப் படிச்சுட்டுப் போறவங்களுக்கு மூணு இலக்க எண் தெரிஞ்சாலே பெரிய விஷயம். அது பிச்சைக் காசு பிச்சைக்காரங்களுக்குப் பிச்சைக்காசு பத்தித்தான் தெரியும். லட்சம் கோடியெல்லாம் பள்ளிக்கூடத்திலே பரீட்சை பாஸ் பண்ணற அளவுக்குத் தெரிஞ்சாப் போதும். அவ்வளவுதான் தெரியும் வேறே. இந்த ஆளு எவ்வளவு பரீட்சை பாஸ் பண்ணியிருப்பான் ? அதிகமா இருக்காது. இவன் ஷவரம் பண்ணி அஞ்சாறு நாளாகியிருக்கும். மூஞ்சி தலையிலே இருக்கிற மயிர்லே கருப்பு மயிரை எண்ணி எடுக்கலாம். ஒண்ணு, இரண்டு, மூணு, நாலு…. சீ, மயிரை எண்ணறதுக்கா இங்கே வந்து உக்காரணும் ? ஆனா என்னதான் பண்ணறது ? பேப்பர்லே இருக்கிற மூணுதாளும் மூணு ஆளுங்க கிட்டே சிக்கியிருக்கு. அந்த இரண்டையும் நான் பார்க்கக்கூட வேண்டியதில்லை. எனக்கு ஸ்போர்ட்ஸ்உம் வேண்டியதில்லை, சினிமாவும் வேண்டியதில்லை, பால கிருஷ்ண சாஸ்திரியின் காலஷேபச் சுருக்கமும் வேண்டியதில்லை. இந்த ஆளு பக்கத்தைப் புரட்டினாலும் தேவலை. பாங்க் பாலன்ஸ் ஷீட்டை ஒரு வரி, ஒரு எண் விடாம படிக்கிறான். இவனே பாங்க்லே இருக்கானோ ? இந்த நாள்லே பாங்க்கிலே வேலை பாக்கிறவங்க பளபளன்னுதானே இருக்கிறாங்க ? நிஜமா அவங்ககிட்டே போய் என் அஞ்சு ரூபா, பத்து ரூபாயை சேவிங்க்ஸ் கணக்கிலே போடுன்னு சொல்லறதுக்கே வெக்கமாயிருக்கு அந்தக் கணக்கிலேந்து நான் பத்து ரூபா வாங்கப் போனப்போ அரைமணி காஷ் கெளண்டர்லே காத்திருக்க வேண்டியிருந்தது. ஏன்னா பக்கத்திலே ஜெனரேட்டர் வைச்சு வெளிச்சம் போடற புடவைக் கடைக்காரன் கத்தை கத்தையா நோட்டைக் கொண்டுவந்து பாங்க்கிலே போட்டிருக்கான். அதை அரை மணியா அந்த பளபளா பாங்க் ஆளு எண்ணிண்டிருந்தான். தினம் ஒரு லட்சம் கொண்டு வந்து கட்டறானாம் அந்தக் கடைக்காரன். அந்த பாங்கிலே என் அஞ்சு பத்து ரூபா என்ன மாத்திரம் ? வெக்கம், அவமானம். அந்த அவமானத்துக்கு இந்த ரீடிங் ரூம் அவமானம் பெரிசில்லை. ஆனா இந்த ஆள்தான் பாங்க் பாலன்ஸ் ஷீட்டை விடாம படிச்சிண்டே இருக்கான். இவனுக்கு இந்த எண்ணெல்லாம் அர்த்தம் ஆகணும். சீக்கிரம் படிச்சுத் தொலைச்சாத் தேவலை. இங்கேந்து ஏழு அம்பதுக்குக் கிளம்பினாக்கூட எட்டு பதிமூணுக்கு டைம் கீப்பர் கேட் கிட்டே போயிடலாம். இந்தச் சனியன் பேப்பர் படிக்காமயே போயிருக்கலாம். போயிருந்தா அப்பவே போயிருக்கணும். இவ்வளவு நேரம் இவன் பக்கத்திலேயே இந்தத் தாளைப் பிடிச்சுண்டு உக்காந்துண்டு சுவரிலே இருக்கிற வாக்கியங்களை எல்லாம் படிச்சிருக்க வேண்டாம். இந்த மகா மகா வாக்கியங்களைக் குழந்தைகளே படிச்சுண்டு இருக்கட்டும். குழந்தைகளால்தான் இதைப் படிச்சுட்டு வயறெறியாம இருக்கமுடியும். தர்மம் பண்ணறவங்க இந்தப் போதனைகள் பண்ணாம இருந்தாத் தேவலை. ஆனா ஒத்தன் தர்மம் பண்ணறதே அவன் போதனை பண்ணறதுக்கு ஒரு வாய்ப்புன்னுதானே.
இப்போது அவன் அந்தக் கிழவர் படித்துக் கொண்டிருந்த தாளைச் சிறிது உறுதியாகவே பிடித்தான்.
இது விடாது போலேயிருக்கு. பாலன்ஸ் ஷீட்டுக்கு மேலே இருக்கறதைத்தான் எத்தனை தடவை படிக்கறது ? நாலு டெண்டர் நோட்டாஸ். இரண்டு சங்கீத சபா விளம்பரம். நடுவிலே கால் பத்தி செய்தி. என்ன செய்தி ? ‘சோவியத் ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்யும் என்று நேடோ கருதவில்லை. ‘ பக்கத்திலேயே ‘எம். ஐ. ஆர். வி. எஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்த ரஷ்யா தயார். ‘ இந்த எம். ஐ. ஆர். வி. எஸ்.னா என்ன ? அதெல்லாம் தெரிஞ்சுக்கறதுக்கு நேரம் எங்கே இருக்கு ? இந்த ஆளுக்கு தெரிஞ்சிருக்கலாம். நான் இங்கே வர நாளெல்லாம் இவனும் வரான். நான் வராத நாளெல்லாம் கூட வருவான். வந்து இப்படி ஒரு எழுத்து விடாம. படிச்சுத் தீர்ப்பான். இதெல்லாம் படிக்கறது இவன் தலையெழுத்து. இவன் தலையிலே இருக்கிற மயிரெல்லாம் நரைச்ச மயிர். இவன் காதிலேயும் மயிர் நிறைய முளைச்சிருக்கு. அந்த மயிர் கறுப்பாயிருக்கு. இவன் புருவ மயிர் எப்படி இருக்கும் ? இவன் கண்ணையே பாக்க முடியலையே ? அப்படித் தலையைக் குனிஞ்சிண்டு படிக்கறான். கன்னம் ஒட்டித்தான் கிடக்கு. நேத்திக்குச் சோறு சாப்பிட்டானோ என்னவோ ? எவ்வளவோ நாள் சாப்பிடாமக் கிடந்தாத்தான் இப்படி ஒட்டிப் போக முடியும். இல்லை, பெரிய சீக்காளியா இருக்கணும். இல்லை இரண்டுமா இருக்கணும். இவனுக்கு என்ன சீக்கு இருக்கும் ? பொண் சீக்கு இருக்கறதுக்கு நியாயமில்லை. பித்தம், காசம், ஹெர்னியா, டயாபிடாஸ், ரத்தக் கொதிப்பு, மயக்கம். நேத்திராத்திரி அது ஏதோ ஜாஸ்தியாப்போய் சாப்பிடாம படுத்திருப்பான். வெறும் வயத்திலே படுத்துண்டதனாலே தூக்கம் கண்டிருக்காது விடிஞ்சதும் விடியாததுமா இங்கே வந்துடறான். நான் மட்டும் என்ன பண்ணறேன் ? அவனும் என்னைப் பத்தி அப்படித்தான் நினைச்சிண்டிருக்கணும் இந்த மாதிரி இந்த ஊர்லே இருக்கிற ஆயிரம் ரீடிங் ரூமிலேயும் ஆயிரக்கணக்கான பேர் இப்படித்தான் ஆயிரக்கணக்கானப் பேரைப் பத்தி நினைச்சிண்டிருப்பாங்க. மத்தவங்களைப் பத்தியும் நினைக்க முடியுமா இந்தக் காலத்திலே ? எனக்குத் தோணலை. ஒரு ஆளைப் பத்தி நினைக்கிறதுக்கு கூட மனசிலே ஒரு அமைதி இருக்கணும். ஒரு உற்சாகம் இருக்கணும். இங்கே எவன் மூஞ்சியைப் பாத்தா உற்சாகமா இருக்கிற மாதிரி இருக்கு ? எல்லார் மூஞ்சியிலேயும் சோர்வு, ஏக்கம், நாள் முழுக்க முழுக்க ஏதேதோ காரணங்களுக்காக மனம் நொந்து போய், அந்தத் தனித்தனி காரணங்களெல்லாம் ராத்திரி தூக்கம் என்கிற ரசாயனத்திலே அப்படியே பாகாப் போய், மூஞ்சியிலேயும் முதுகிலேயும் இறுகிப் போய்க் கிடக்கு. ஒத்தன் மூஞ்சி தெளிவாயில்லே. ஒத்தன் முதுகு நேராயில்லை. இவுங்க எல்லாம் விவரம் தெரிஞ்சவங்க. இந்த மண்லே விவரம் தெரிஞ்சவங்க எவனும் கூனிக் குறுகாம இருக்க முடியலை. ஏதோ தடால் புடால்னு கார்லே ஸ்கூட்டர்லே போறவங்களைப் பாத்தாக் கூட இந்தக் கூனிக் குறுகல் தெரியறது. இவ்வளவு பெரிய பாலன்ஸ் ஷீட்டைப் பக்கத்திலே பாதி அடைச்சுக்கிற மாதிரி அச்சிட்டுக் காண்பிச்சாக்கூட இந்தக் கூனிக் குறுகல் தெரியறது. இது நோய் நொடினாலே இருக்கணும், இல்லே, அயோக்யத்தனத்தாலே இருக்கணும். இந்த மண்ணிலே இன்னிக்கு இருக்கிறவங்க எல்லாம் ஒண்ணு நோயாளிங்க, இல்லேன்னா அயோக்யங்க. இந்தப் பாரத புண்ய பூமி—- அதோ அந்த ஆணியிலே பாரத புண்ய பூமி பத்தி பெரிய பாட்டு அட்டையிலே குழந்தைகளுக்காக தொங்கறது —- பாரத புண்ய பூமி. பாரதியார் பாடிட்டுப் போயிட்டார். டி. கே. பட்டம்மாள் ரிகார்டு போட்டா. இப்போ குழந்தைகள் பாடறது. பாடறதுன்னுதான் நினைக்கிறேன். இந்த ரூம்லேயே இன்னும் அரை மணி கழிச்சுக் குழந்தைகள் பாடும். பாரத புண்ய பூமி. இந்த ரீடிங் ரூம் பாரத புண்ய பூமிதான். வெளியிலே போல உள்ளேயும் பெருக்காத குப்பை நிறையக் குவிஞ்சு கிடக்கு. இங்கே குழந்தைகளும் ஒண்ணு இரண்டு சொல்லும். கிழவங்களும் பத்து இலக்க எண், பன்னெண்டு இலக்க எண் படிப்பாங்க. சுவர்லே நிறைய போதனைகள். இந்தக் கிழவன்கிட்டே இந்தத் தாளுக்காகக் காத்திருக்கிறதுக்குச் சுவரிலே போய் முட்டிக்கலாம். சுவர்லே முட்டிண்டா உடனே சுவர் எல்லாம் பாட ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடும். என்ன பாட்டு ? பாரத புண்ய பூமி. சீ ‘ இவ்வளவு கசப்பா எனக்குள்ளே அடைஞ்சு கிடக்கு ? பாவம், பாரதம் என்ன பண்ணும், பூமி என்ன பண்ணும் ? ஆனா ஏன் இவ்வளவு கசப்பு ? எனக்கு மட்டுந்தானா கசப்பு ? லட்சக்கணக்கான பேர், கோடிக் கணக்கான பேர் கிட்டே இந்தக் கசப்பு இல்லை ? இப்ப எப்படி லட்சம், கோடி யெல்லாம் அர்த்தம் ஆறது ? அவுங்க மனுஷங்கன்ற காரணத்தினாலா ? மனுஷங்களை வெறும் எண் மாதிரி ஒதுக்கிவிட முடியுமா ? அதனாலேதான் இந்த ஆள் இப்படிக் கால் மணியா இந்த ஒரே தாளை, அதுவும் இந்த பாங்க் பாலன்ஸ் ஷீட் இருக்கிற தாளைப் படிச்சிண்டு இருக்கிறப்போ விடுடா அதைன்னு சொல்லிப் பிடுங்க முடியாம இருக்கா ? இவன் சட்டையைத் தோச்சு வாரக் கணக்கிலே ஆயிருக்கணும். காலர் கிட்டே அழுக்கு அப்படியே வண்டி மசையாப் பதிஞ்சு போயிடுத்து. இவனுக்கு குடும்பம் பெண்சாதி யாரும் கிடையாதோ ? இவனே இந்தச் சட்டையைத் தோய்க்கிறதுன்னா மணிக் கணக்கிலே தோய்க்கணும். அப்ப கூடப் பெரிசா இந்தக் கழுத்து மசைமாறிடப் போறதில்லை. எங்கெங்கேயோ விழுந்திருக்கிற மூக்குப்பொடிச் சளிக் கறை போயிடப்போறதில்லை. இவன் ஒழுங்காச் சவரம் பண்ணிண்டா இவன் முகம் அழகாகக் கூட இருக்கலாம். ஒரு காலத்திலே ரொம்ப அழகாக இருந்திருக்க வேண்டிய முகந்தான். இவனுக்கு விவரம் தெரிஞ்சு முப்பது வருஷம், நாப்பது வருஷம் வாழ்ந்து இடிபாடுகள் பட்டு, யார் யாரையோ கெஞ்சு, எது எதுக்காகவோ கதறி, அழுது, பொருமி, ஆத்திரத்தை யடக்கி, இழிவுபட்டு, நோய்வாய்ப்பட்டு, உதவி இல்லாம, ஒத்தாசை இல்லாம, பராமரிப்பு இல்லாம, சரியாச் சாப்பாடு இல்லாம, நாளை பத்தி ஒரு நிச்சயமில்லாம, நிச்சயமில்லாததுனாலே பயம் கொண்டு, பீதி கொண்டு, வெறுப்பு கொண்டு, கசப்பு கொண்டு, கண்ணைத் திறந்து வெளியிலே பாத்தா பட்டினியும் வேதனையும் குரூரமும் நிர்தாட்சண்யமும் அவலமும் அயோக்யத்தனமும் பீக் காகிதத்தைக் குழந்தைகள் பொறுக்கிக் கால் வயிறு ரொப்பிக் கொள்ள வேண்டிய அநியாயமும் காணச் சகிக்காம, இவனாலே ஒண்ணும் பண்ணமுடியாம, சாகறதுக்கும் தைரியமில்லாம, சாராயம் குடிச்சும் நினைவு தவறிக் கிடக்கக் காசில்லாம, இங்கே வந்து, இந்த ரீடிங்ரூமிலே வந்து எவனோ கொட்டிச் சேர்த்துக் கொம்மாளம் அடிக்கிற பணத்தைக் கணக்கு பாத்து, இவன் கற்பனையும் பண்ணிப்பாக்க முடியாத எண்களைக் கண் வழியா மூளையிலே போதையேத்திண்டு மயங்கிக் கிடக்கான். இந்தப் போதை கூட இவனுக்குக் கிடைக்க வழியில்லைன்னா இவன் என்னாவான் ? இவன் போதையிலே மயங்கிக் கிடக்கட்டும். தாராளமாகக் கிடக்கட்டும். தாராளமாகக் கிடக்கட்டும். இந்தப் போதை ஒண்ணுதான் இவனுக்கும் இவன் மாதிரி இருக்கிற கோடிக்கணக்கானவங்களுக்கும் இன்னிக்குக் கிடைக்கக் கூடியது. நான் கூட இந்தப் போதைக்குத் தான் இங்கே வருகிறேனோ ?
மணி ஏழு ஐம்பைத்தைந்து ஆனதில் அவன் தாங்க முடியாத அவசரத்தில் அவன் பக்கத்தில் உட்கார்ந்து குனிந்தபடி படித்துக் கொண்டிருந்த கிழவர் கையிலிருந்து அந்தத் தாளைச் சிறிது உறுதியாகப் பிடித்து உருவினான். முந்தின இரவு உண்ணாமல் படுத்திருக்கக் கூடியவர், அல்லது அப்படிப் பல நாள் உண்ணாமல் இருந்திருக்கக் கூடியவர், பலநாள் சவரம் செய்யாத முகமுடையவர், அழுக்கு மசையாகப் பதிந்து போய்விடும் அழுக்குச் சட்டை உடுக்க வேண்டியவர், பித்தம் காசம்–டயாபிடாஸ்-ரத்தக்கொதிப்பு அவதிக்குள்ளாகியிருக்கக் கூடியவர், தன்னுடைய நீண்ட வாழ்வின் சோகத் துயர இழிவுகளை மறக்கப் பிரமாண்டமான எண்களைப் படித்துப் போதையேற்றிக் கொள்ளவேண்டியவர் சிறிது நேரம் முன்பாகவோ அல்லது வெகு நேரமாகவோ தூங்கிக் கொண்டிருக்க வேண்டும். அந்தத் தாள் அவன் கையுடன் வந்து விட்டது.

Monday, 13 March 2017

மிஸ்டர் கோடு கோடு கோடு- தி. ஜானகிராமன்

>மிஸ்டர் கோடு கோடு கோடு- தி. ஜானகிராமன்

>
(ஒரு இசைக்கலைஞர் சொன்ன கதை)
‘நீர் எழுத்தாளர். கதை கிதை எல்லாம் எழுதுகிறீர். எனக்குப் பாடத்தான் தெரியும். எழுதத் தெரியாது. அதனால் நான் சொன்னதை அப்படியே நீர் எழுதும். நீர் தான் கண்டதையும் கேட்டதையும் எழுதுகிறவர் ஆச்சே.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் இசைக் கல்லூரியில் பயின்று பட்டம் வாங்கினேன். நானும் என்னுடைய சகபாடிகளான இன்னும் பத்தொன்பது பேரும் சேர்ந்து பட்டத் தாளைப் t_janakiraman_2பெற்றுக் கொண்டோம். அதற்காக வழக்கம் போல ஒரு பட்டமளிப்பு விழா நடத்தினார்கள். நாங்கள் இருபது பேரும் மகா பாக்கியசாலிகள், ஏனென்றால் பட்டத்தாள்களை தன் கையாலேயே நேரிடையாக வழங்கினவர் இந்தியாவின் தலையாய அரசியல் பொருளதார –வியாபார–இலக்கிய–தொழில் பேரறிஞர். ஆவர் கையால் பட்டத்தாளைப் பெறக் கொடுத்து வைக்க வேண்டுமே ‘ அவர் என் பட்டத்தாளை என் கையில் கொடுத்து, என் கையைக் குலுக்கி, கும்பிடவும் கும்பிட்டு ஒரு புன்னகையும் புரிந்தார். எத்தனை பெரிய வாய்ப்பு ‘ இந்த விழாவுக்காகவே பிரத்யேகமாக 1500 மைல் ஏரப்ளேனில் பிரயாணம் செய்து வருகை தந்திருந்தார் அவர்- இந்த விழாவுக்காக–பிரத்யேகமாக –எங்களுக்குப் பட்டத்தாள்களை நேராக, தம் கையால் கொடுக்கவே நாங்கள் எவ்வளவு இறும்பூது எய்திருப்போம் என்பதை நீரே, கற்பனை செய்து கொள்வீர். நீர்தான் எழுத்தாளர் ஆச்சே ‘
எங்களை அவ்வளவு இறும்பூது கொள்ளச் செய்த பெரும்தகை யார் என்றா கேட்கிறீம் ? ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது. பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது. ஊரைப் பேரைச் சொன்னாலும் ஜாதிப் பேரைச் சொல்லக் கூடாது. அதனால் அவரை மிஸ்டர் கோடு கோடு கோடு என்று அழைக்கிறேன். மிஸ்டர்…..
திரு கோடு கோடு கோடு என்று திரு போட்டால் அவர் தமிழர் என்று நீர் கண்டு பிடித்து வம்பு பண்ணுவீர். அதனால்தான் அவரை மிஸ்டர் கோடு கோடு கோடு என்று அழைக்கிறேன். மேலும் இப்போதெல்லாம் சென்னையில் நாயுடு ரோடை, –ரோட் அதாவது கோடுரோடு என்றும் முதலியார் ரோடை – ரோட் அல்லது கோடு ரோடு என்றும், கிருஷ்ணமாச்சாரிரோடை கிருஷ்ணமா தார்பூசு ரோடு என்றும், வெங்கட அய்யர் ரோடை வெங்கட தார்பூசு ரோடு என்றும், சின்னசாமி கவுண்டர் ரோடை சின்னசாமி தார்பூசு ரோடு என்றும் மாற்றியுள்ளதை நீர் அறிந்திருப்பீம். எனவே ராஜத்துரோகமான காரியத்தைச் செய்யக்கூடாது என்றே எங்களுக்குப் பட்டமளித்த பெருந்தகை மிஸ்டர் கோடு கோடுகோடு என்று அழைக்கிறேன். முதல்கோடு ஊர் பெயர். இரண்டாவது கோடு இயற்பெயர். மூன்றாம் கோடு சாதிப் பெயர்.
பட்டத்தாள்களை அளிப்பதற்கு முன்னால் அவர் இந்தியாவின் தொன்மையான இசைக்கலை பற்றியும், மிக மிதத் தொன்மையான தமிழிசை பற்றியும் ஒரு மணி நேரம் உரையாற்றினார். சிலப்பதிகாரம் என்ன, சர்மவேதம் என்ன, திருக்குறள் என்ன, பரதமுனி என்ன, கூத்த நூல் என்ன — இவைகளிருந்தெல்லாம் மேற்கோள்கள் காட்டி பாரத நாட்டு இசையின் பெருமையையும், முக்கியமாக தமிழகத்து இசையின் பெருமையையும் எடுத்து விளக்கியபோது, ஆகா ஆகா என்று சிலிர்த்துப் போனேன். அதே சமயம் நான் ரொம்ப சின்னவனாகியும் விட்டேன். எங்கள் வாத்தியார்களும் சின்னவர்களாகி விட்டார்கள். இசையை கரைத்துக் குடித்திருக்கிறார் இந்தப் பெரியவர். அஞ்சு வருஷம் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த வாத்தியார்கள் இதில் ஆயிரத்தில் ஒன்றைக் கூடச் சொல்லவில்லையே, ஏமாத்தி விட்டான்களே என்று வருந்தினேன். எங்களுக்கு சங்கீதம் கற்பிக்கிறேன் பேர்வழி என்று மடாத்தப்பளை மாதிரி கத்தியே அஞ்சு வருஷம் கத்திக் கத்திப் பொழுதை போக்கி விட்டான்களே, இந்தப் பெரியவர் ஒரு மணி நேரம் சொன்னதில் பத்தாயிரத்தில் ஒன்றுகூடச் சொல்லவில்லையே என்று மனம் கசிந்தேன். பட்டமளிப்பு முடிந்ததும். என்னைப் பாடச் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு உள்ளூர பயம். முன் வரிசையில் திரு கோடு கோடு கோடு உட்கார்ந்திருக்கிறார். இசைக்கடல். பார்த்தால் ஒன்றும் தெரியாத மாதிரி உட்கார்ந்திருக்கிறார். இசை அறிவோ ஆழங்காணாத அறிவு. கஜமுகனே கணநாயகனே என்று பிரணவ சொரூபியான பிள்ளையார் மீதே பாரத்தைப் போட்டுப் பாடத் தொடங்கினேன். திரு கோடு கோடு கோட்டைக் கூடிய வரை பார்க்காமலே பாடிக்கொண்டிருந்தேன். நடு நடுவே அவரைப் பார்க்காமலும் இருக்க முடியவில்லை. அவர் அசையாமல் முகத்தில் எந்தக் குறியும் இல்லாமல் என்னையே பார்ப்பது தெரிந்தது. சில சமயம் பக்கத்தில் உள்ளவர்களைப் பார்ப்பார். யாராவது பலே என்று பாராட்டினால் அவரைத் திரும்பி பார்ப்பார். இன்னும் யாராவது ஆகா என்றால் அவரைத் திரும்பிப் பார்ப்பார். பிறகு என்னைப் பார்ப்பார். சாதாரண அல்பசந்தோஷி இல்லை என்று தீர்மானித்துக் கொண்டு நன்றாக உழைத்துப் பாடினேன். விரலால் தாளம் போடுவதைக் கூட அவர் யார் கண்ணிலும் படாதது போலவும் என் கண்ணில் கூட படாதது போலவும் பாடுவார். ஒன்றரை மணி நேரம் கழுவில் ஏற்றிவைத்தாற் போலிருந்தது. எப்படியோ தைரியமாகப் பாடி முடித்தேன்.
இசை அரங்கு முடிந்ததும் பிரின்சிபால் வந்தார். ‘நல்லாத்தேறிட்டே போ ‘ என்று வாழ்த்தினார். திரு கோடு கோடு கோட்டின் முன்னாலேயே மற்றவர்களும். ‘பிரமாதம் ‘ என்றும், ‘ரொம்ப சுத்தம், ரொம்ப சுத்தம் ‘ என்றும், ‘ரொம்ப பெரிசா வரப் போற ‘ என்றும் வாழ்த்தினார்கள். மிஸ்டர் கோடு கோடு கோடு தன் கையை நீட்டி என் கையைக் குலுக்கினார். ‘ரொம்ப மகிழ்ச்சி. ரொம்ப ரொம்ப நல்லா பாடிட்டாங்க ‘ என்றார். அப்பாடா ‘ உயிர் வந்தது. நிஜமாகவே பிழைத்தேன். ஒரு சிங்கத்தின் வாயிலிருந்து புறப்பட்டுவிட்டேன். என்னைக் காப்பாற்றிய கணநாயகனுக்கு முன்னால் மனதுக்குள்ளேயே எண்சாண்கிடையாக விழுந்து விழுந்து கும்பிட்டேன். பத்திரிக்கைகளில் இசையரங்குகளைப் பற்றி விமர்சனம் எழுதிப் பணம் சம்பாதிக்கும் கால் வேக்காடு அரை வேக்காடுகள் பற்றி எல்லாம் எனக்குத் தெரியும். அவங்களெல்லாம் முக்காலே மூணு முக்கால் வீசம் மூங்காட்டுத் தம்பட்டம் என்றும் புலித்தோல் போர்த்தின புனுகு பூனை என்றும் எனககுத் தெரியும். நான் பயப்படுகிறதெல்லாம் இதையெல்லாம் கண்டுக்காமல் மந்திரி, தலைவர் மானேஜிங் டைரக்டர் என்றெல்லாம் பெரிய பெரிய பதவிகளில் இருந்து கொண்டு இரண்டாம் பேர் அறியாமல் சங்கீதத்தைக் கரைத்துக் குடிக்கும் மிஸ்டர் கோடு கோடு கோடு போன்றவர்களிடம் தான். நிஜமான சங்கீதம் அவர்களுக்குத் தான் தெரியும். அவங்களுக்கு இசை தொழில் இல்லையே. யாருக்கு பயப்பட வேண்டும் அவர்கள் ? அதனால் தான் மிஸ்டர் கோடு கோடு கோட்டின் வாயிலிருந்து ‘ரொம்ப நல்லா பாடிட்டாங்க ‘ என்று வந்ததும் எனக்கு உயிரும் தைரியமும் வந்தது. ‘வாங்கடா இப்ப அரை வேக்காடு விமர்சனங்களா ‘ ‘ என்று துடை தட்ட வேண்டும் போல் கை கூட புருபுருத்தது.
அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லாது போய்விட்டது. மறுநாள் காலை என்னை பிரின்சிபால் கூப்பிட்டார். ‘மிஸ்டர் கோடு கோடு கோடு அவருடைய ஊரில் ஒரு பெரிய பள்ளிக்கூடம் நடத்துகிறார். அதில் இசையை ஒரு பாடமாக நுழைக்கப் போகிறார். உன்னைத் தான் அந்தப் பிரிவுக்கு முக்கிய ஆசிரியராகக் கூப்பிடுகிறார். ரொம்ப அதிர்ஷ்டம். இத்தனை சம்பளம் எடுத்த எடுப்பில் யாரும் குடுக்க மாட்டாங்க ‘ என்று சம்பளத் தொகையைச் சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டுவிட்டேன். ட்யூஷனே வைத்துக் கொள்ளவேண்டாம். கலியாணம். கோயில் திருவிழா என்றெல்லாம் நாடறிந்த வித்வான்களைத் தான் பாடக் கூப்பிடுகிறார்கள் என்னைப் போன்ற புதுசுகளுக்கு ஒரு தட்டில் குண்டஞ்சி ஐந்து முழம் அங்க வஸ்திரமும் வண்டி சார்ஜஉம் தான் கொடுப்பார்கள். ரேடியோக்காரன் வருஷத்துக்கு ரண்டுசான்ஸ் கொடுத்தால் பிரளயம். அதுக்கே ஆடிசனுக்கு வா. மனுப் போடு. பணம் கட்டு என்று எழுதுவான். கிடைச்சால் தான் போச்சு. எனவே மிஸ்டர் கோடு கோடு கோட்டின் பள்ளிக் கூடத்திலேயே இசைப் பேராசிரியராக வேலை ஒப்புக் கொண்டேன்.
நாலு மாசம் ஆயிற்று. ஏதோ தகராறில் பதவியை ராஜினாமா செய்து விட்டு மிஸ்டர் கோடு கோடு கோடு ஊரோடு வந்து தம்முடைய தொழிற்சாலைகளையும் வியாபாரங்களையுமே கவனிக்கத் தொடங்கினார். வெளி நாடுகளுக்குப் பெரிய பதவியில் அனுப்புகிறது என்றதையெல்லாம் மறுத்து தம் தொழிற் சாலைகளையும் கல்விச்சாலைகளையும் கவனிக்கத் தொடங்கினார்.
எங்கள் கல்லூரித் தலைவர் மிஸ்டர் சுப்ரமண்ய கோடு (ஜாதி பெயரைச் சொல்லாததற்கு மன்னிக்க வேணும்) என்னிடம் அடிக்கடி, ‘பெரியவர் உங்களைப் பார்க்கணுமாம். அடிக்கடி சொல்லுகிறார் ‘ என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்குப் பயமாகத்தானிருந்தது. எதற்காக என்னைப் பார்க்க வேணுமாம் ?
அப்படி ஒரு கட்டம் இரண்டு தடவை வந்தது. பயம். நல்ல வேளையாக, குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாள் என் தகப்பனார் காலமானார். பிழைத்தேன். இரண்டாவது தடவை மிஸ்டர் கோடு கோடு கோடே ஒரு அவசர மீட்டிங் என்று சந்திப்பைக் கான்சல் செய்தார். மூன்றாம் தடவை தப்பித்துக் கொள்ள முடியவில்லை. என் உறவினர் யாரும் பரலோகம் போகவில்லை. மிஸ்டர் கோடு கோடு கோட்டிற்கும் அவசர் மீட்டிங்கும் இல்லை. அன்று ஞாயிற்றுக் கிழமை. ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என்று மாட்டிக்கொள்ளலாம். அவருடைய இரண்டு தொழிற்சாலைகளில் லாக்-அவுட்.
எதற்காக கூப்பிடுகிறார் ? ஏதாவது 17 அட்சரம், 19 அட்சரம், 37 அட்சரம் என்று தெரியாத தாளத்தில் பல்லவி பாடச் சொல்லப் போகிறாரா ? இல்லை. வடமொழி தெலுங்கு கீர்த்தனத்திற்குப் பொருள் கேட்கப் போகிறாரா ? கணநாயகன் இப்போதும் காப்பாற்றுவான் என்று மீண்டும் அவர் மீது பாரத்தைப் போட்டு நடந்தேன்.
மிஸ்டர் கோடு கோடு கோட்டின் வீடு பெரிய அரண்மனைமாதிரி. வாசலில் இரண்டு கூர்க்கா ரயில்வே லெவல் கிராஸிங் பாய்ண்ட்ஸ் மேனின் கூண்டு போன்ற ஒரு கூண்டில் ஒரு காவலாளி காக்கி உடுப்பில் டெலிபோனுடன் உட்கார்ந்திருப்பார். அவர் ஃபோன் பண்ணி, அனுமதி பெற்று என்னை உள்ளே அனுமதித்தார்.
மிஸ்டர் கோடு கோடு கோடு தன்னறையில் வேட்டி சட்டை அணிந்து தனியாக உட்கார்ந்திருந்தார். போனவுடனே பிஸ்கட், மைசூர்பாகு, இட்டலி, சாம்பார் வடை, சுத்த நெய் எல்லாம் வந்தன. அவரும் என்னுடனே சாப்பிட்டார்.
‘வேலை கடுமை. அதனாலே உங்களைச் சந்திக்க முடியவில்லை ‘ என்று மன்னிப்புக் கேட்பதுபோல் கேட்டுக் கொண்டார்.
‘எனக்குத் தெரியாதா ? இப்படி உங்களோடு உட்கார்ந்து பேச முடியுமா ‘ உங்களுக்கு எத்தனை ஜோலி ‘ ‘
அறையில் வேறு யாருமில்லை.
‘ஒன்றுமில்லை உங்களைக் கூப்பிட்டது ஒரு சின்ன விஷயத்திற்குதான். நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் ‘
‘பேஷா ‘
‘ரொம்ப நாளாக கத்துக்கணும்னு ஆசை, வேலை பளுக்கள், வெளிநாட்டுக்குப் போறது இந்த மில்லுங்களை கவனிக்கிறது….. ‘
‘எனக்குத் தெரியாதா ? நீங்க சொல்லணுமா ? என்னமோ சொல்லிக் கொடுக்கணும்னு சொன்னீங்களே, எதுவானாலும், எனக்குத் தெரிஞ்சவரையில் நான் சொல்லத் தயார். எதிலெ சொல்லணும். எனக்கு இந்த சங்கீதம் ஒன்று தானே தெரியும் ‘ ‘
‘அதுலெதான். சங்கீதத்துலெதான். ‘
‘என்ன சொல்லணும் ? நான் என்ன சொல்லணும் ‘ நீங்களே சமுத்ரமாச்சே, ‘
‘சமுத்ரம்தான் சமுத்திரத்திலே கப்பலோட்டலாம். மீன் பிடிக்கலாம். இன்னும் எவ்வளவோ செய்யலாம். ஆனால் ஒரு அவுன்ஸ் கூட குடிக்க முடியாதே. ‘
‘எனக்குப் புரியிலியே நீங்க சொல்றது. ‘
‘ஒண்ணுமில்லெ. நீங்க இதைச் சொல்லிக் கொடுத்தாப் போதும். ‘
‘எதை ? ‘
‘இப்ப உங்க மாதிரி ஒரு பெரிய வித்வான் பாடுகிறார். கேட்கறவங்க பல பேர் ‘ஆகா ஆகாங்கறாங்க. பலேபலேங்கறாங்க. நல்லதுடாப்பா நல்லதுடாப்பாங்கறாங்க அப்படியே கண்ணை மூடிக்கிறாங்க. இதெல்லாம் எப்படி செய்யறாங்க ? இதெல்லாம் எப்ப எப்ப செய்யணும் ? எப்ப கண்ணை மூடிக்கிறது ? எப்ப ஆகான்னு சொல்லணும் ? சும்மாகேட்டுக் கிட்டே இருக்கறாங்க. திடார்னு ஆகாங்கறாங்க. ஐயோன்னு கசியறாங்க. நம்ப மானேஜரு கேக்கறதைச் சில கச்சேரிங்கள்ள பார்த்திருக்கேன். திடார்னு ஆகாங்கறார். ஒரே ஒரு சமயம் கண்ணைத் துடைச்சுக்கிறார். இதெல்லாம் எப்படி ? எப்ப செய்யறது ? எதுக்காக இப்படி செய்யத் தோணுகிறது. இது தெரிஞ்சாப் போதும். இதுக்குத்தான் உங்களைக் கூப்பிட்டனுப்பிச்சேன். ‘
இதுதான் நடந்தது. நான் இப்போது ஒரு நிஜசிங்கத்தின் வாயிலேயே நுழைந்து விட்டதாகத் தோன்றிற்று.
மிஸ்டர் கோடு கோடு கோடு இப்போது இல்லை. சிலவருடங்கள் முன்பு காலமாகிவிட்டார். அந்த சந்திப்பை நினைத்தால் இப்போது என் உடல் நடுங்குகிறது. ஏனாம், நீர் எழுத்தாளராச்சே சொல்லும்.