இரவுக்கும் பகலுக்குமான நூலிழை வெளியில் இருளின் மேகங்கள் போல கறுத்துக்கொண்டிருந்தது சஞ்சலமுற்ற இதயம்
குறுக்கிட்ட உன் நினைவு கொடும் நெருப்பில் தங்கம்போல உருகிக்கொண்டிருந்தது
கூச்சலிடும் நகரம் குழம்பிய ஓசைகளில் அந்திக்குள் வீழ்ந்துகொண்டிருந்தது
யாரும் அருகற்ற கணங்களில் யோசித்து யோசித்து மடியும் ஞாபகங்களில் நீயுமிருந்தாய்
ஒரு சொல்லிலிருந்து சொல்சொல்லாய் நகரும் கவிதையில் மரத்தை உலுக்கினால் விழும் நாவற்பழங்களைப் போன்று உதிரத் தொடங்கியிருந்தது இருட்டு
எங்கெங்கோ ஏதோதோ நடந்துகொண்டிருக்க சப்தமற்ற சிறு சதுர அறையில் உன் சிந்தனை தூண்டப்பட்ட இரவு விளக்குபோல இருந்தது
கூடடையும் பறவைகள் இரவுக்கஞ்சி தத்தமது கூடுகளை நோக்கி போய்க்கொண்டிருந்தனநடுங்கும் குரல்களுடன்
எதுவும் செய்வதறியாத இந்த நாளை வழமைபோல பூமியின் சுழற்சியுடனே சுழல்வதறியாமல் வந்துவிட்ட இரவுக்குள் அது தரும் மாயைக்குள் காணாமல் போய்க்கொண்டிருந்தேன்
நீயும் என்னுள் பனிக்கால நதிபோல உறைந்து குளிர்வூட்டிய வண்ணமிருந்தாய்.