Thursday, 8 September 2016

நாடகத்திலிருந்து வெளியேறு - குட்டி ரேவதி

நவீன கவிதை வரிசை - 25
-------------------------------------------
நாடகத்திலிருந்து வெளியேறு
1. வியர்வை கசியும் உடலுடன்
நடத்துக்கொண்டிருப்பவனின் கதாப்பாத்திரம்
தனது கையில் வைத்திருக்கும் பனைக்கருக்கால்
எனது உடலைக் கிழித்துக்கொண்டேயிருக்கிறது
கால சம்மந்தப்பட்ட்டது எனினும்
மையக்கதாப்பத்திரம் கதையின் விளிம்பத்
தொடும்போது
பார்வையாளர்களின் இரத்தம்
நாடக மேடையில் தேவைப்படுகிறது
கதையில் காயம்பட்ட ஒருவனின்
உடலுக்குத் தானமாகப்
போரின் மடி தேடி வெற்றிக்காக ஓடிவந்தவனின் கதையில்
ஆயுதங்கள் இறக்கிக்கொண்டேயிருக்கின்றன
நாடகத்தின் எல்லாக் கதாப்பாத்திரங்களாகவும்
அரங்கப் பொருட்களாகவும் அவனே இருந்த அக்கதை
பார்வையாளர்களின் உடலைக்
கிழித்துக்கொண்டேயிருக்கிறது.
2. கண்ணாடியில் முகாலங்காரம்
பூசப்பூசக் கண்ணாடிக்குள் எரியும்
காலம் மாறிக்கொண்டிருக்கிறது
எதோ ஒரு காலத்தின் மிருகமாக.
கதையின் இரையை அடித்து
விழுங்கும் மிருகமாக,
பின் நகங்களில் அழுக்கெடுக்கும்
ஓர் ஓய்வாக
அவன் மாறவேண்டுமெனில்
இக்கண்ணாடி போதுமானதன்று.
3. நாடகத்திலிருந்து நீ வெளியேறு
அதன் கண்ணிகளுக்குள் சிக்காமல்
விஷமருந்தும் காட்சியில் உண்மையான நஞ்சும்
கத்தி பாய்ந்து மடியும் காட்சியில்
நிஜமாகக் கொள்ளவும் படலாம்
நீயும் குடிப்பதுபோல் குடிக்காமல்
மடிவது போல் முடியாமல் எழுந்து வா
உனக்குப் பின்னால் உனது நிழல் ஒரு
கதாபாத்திரமாகி மேடையேறும்போதும்
கைதட்டல் தொடரும்
ஒளியின் பூதக்கண்ணாடி அங்கிங்கென விலகி
உன்னை அடையாளம் காட்டக்கூடும்
நாடகத்திலிருந்து வெளியேறு.
_____________
குட்டி ரேவதி