Tk Kalapria
2 hrs ·
உமாபதி தமிழின் மிக முக்கியமான ஒரு கவிஞர். தெறிகள் என்ற அற்புதமான சிற்றிதழை நடத்தியவர். அவரது நெடுஞ்சாலை மனிதன் என்ற தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை. நண்பர் தேவதச்சன் இந்த முன்னுரை மிகவும் பேசப்படும் என்று அந்தக் கலத்தில் கூறினார். அப்படியெல்லாம் ஒன்றும் இங்கே நிகழ்ந்து விடாது. ஆனால் எனக்கு மிகவும் மன நிறைவைத் தந்த முன்னுரை . தேடி எடுத்து இங்கே பதிவிடுகிறேன்.
உமாபதி கவிதைகள்
கவிதைக் கணம்:
____________________
கவிதைக் கணம், வெளிப்பாட்டு முயற்சியின் முக்கியமான புள்ளி எனத்தோன்றுகிறது. யாரும் கேள்விகளின்றி எழுத அமர்வதில்லை. கேள்விகள் இறந்த காலத்தின் சாரம். ஒவ்வொரு நொடியையும் பின்தள்ளி, தன்னை இரண்டாக மூன்றாக இன்னும் அதிகமாக, உடைத்து எதிரே அரூபமாய் நிறுத்திக்கொண்டு கேள்வியை, வெளியிலிருப்பவன் அல்லது உள்ளிருந்து வந்தவன் கேட்க அல்லது ”கேட்பதாக" அவனை உருவாக்கிக் கொண்டு (உருவாக்காமல் உருவாக்கிக் தொண்டு என்பதே அதிக சாத்தியமுடையதாகத் தெரிகிறது) பதில் சொல்கிறவிதமாய், பதில் தெரிந்து கொள்ள முயற்சிக்கிற விதமாய் வார்த்தைகள் தாளில் படிகின்றன.
வார்த்தைகள்:
வார்த்தைகளின் மீது நம்பிக்கையும் அவநம்பிக்கையும் பிரிக்க இயலாவண்ணம் வெளிப்படுகின்றன கவிஞனிடமிருந்து.
In the garden,so much is not conveyed
In space
the essence of meaning
is emptiness என்றொரு கவிதை வரி நினைவுக்கு வருகிறது. வார்த்தைகள் விடையளிக்கலாம். மேலும் கேள்விகளை உருவாக்கலாம். பெரும்பாலும் கலைஞனைப் பொறுத்து இரண்டாவதே கவிதைகளில் (எழுத்துக்களில்) நிகழ்கிறது. இதில் கவிஞன் முக்கியமானவன். அவனுக்கு வார்த்தைகளில் பதிலையோ கேள்வியையோ பதிவாக்கினால் போதும். ‘மேலும் மேலும்’ வார்த்தைகள் என்ற பரிமாணக் குறியீடுகள் தேவையில்லை. மற்ற இலக்கியவடிவங்களில் (other literary forms) பரிமாணக் குறியீடுகள் தட்டையாக, முப்பரிமாணச் சித்திரமாக ‘அர்த்த வெளி’யைக் குறுக்குகின்றன. ஆனால் ‘கவிதை வெளி’யில் வெளியெங்கும் நிறைந்திருக்கிறது, தன்னுடைய அளவிட முடியாத content உடன், எண்ணற்ற பரிமாணங்களுடன். (கவிதை பகிர்ந்து கொள்ளப்பட்டு விட்டால் அது தட்டையாகவே இருக்க முடியாது என்பது வேறு விஷயம்)
வெளி :
_______
கேள்விகள் வற்றாத ஒரு பிரம்மாண்டம். இதில் அவரவர்களின் நர்த்தன தளங்களைப் பொறுத்து காலம் தோற்றம் கொள்கிறது. வெளியில் ஒரே ஒரு புள்ளியில் ஒற்றைக் காலூன்றி மட்டும் வாழ்வதும், வசிப்பதும், துய்ப்பதும் நடக்க முடியுமெனில் அங்கே சூர்யோதயங்கள் தேவையில்லை
அங்கே ஒவ்வொரு இரண்டாம் சூர்யோதயமும் அதற்கிடையேயான காலப் பாகுபாடும், அலகுகளின் பயன்பாடும் அர்த்தமற்றுப் போகின்றன. இதைத்தான் உமாபதியின் கவிதை வரிகளான,
கறுப்பின் விளிம்பற்ற வெளியில்
ஒளி தன் சுருதி
மறைத்துக் காத்துக்கிடக்கும் ஏதோ ஒரு கிளர்வுக்காக ,
என்பவை விளக்குகின்றன.
பிரபஞ்ச நிகழ்வுகள்:
______________________
பிரபஞ்ச நிகழ்வுகள் பிரமிப்பைத் தோற்றுவித்து மெளனத்துக்குள் ஆழ்த்துகின்றன கவிஞனை. கவிஞன் தன் எழுது கருவியுடன் இறந்த காலத்தை மனதுள் தேக்கிக் கொண்டு தாள்களுடன், ’இருத்தல் உலக’த்திற்குள் ஒரு சாவகாசம் ஏற்படுத்திக் கொண்டு, உட்கார்கிறான். சலிப்பு வருகிறது. எந்தப் பதிவும் தோன்றாமல் இடையீடு செய்யும் "பொழுது" (Time) வெற்றாய் நகர்கிறது அவனது கோலத்தில். இதையே உமாபதியின் கவிதை உணர்த்துகிறது,
’காகிதம் இழந்த கவிதை மட்டும் எஞ்சி நிற்க,’ என்று.
கோள்கள்:
___________
கோள்களில் வாழவே நாம் விதிக்கப்பட்டு இருக்கிறோம். இங்கே கால இடையீடு மரணம் உயிர்ப்பு என்ற இரண்டு extremeகளுக்கிடையே மிகவும் அலைக்கழிக்கிறது.
அலைக்கழிகிறவனே கலைஞன் என்பதால் இந்த இரண்டு எதிரெதிர் காரியங்களும் கவிஞனை நெருக்கவும் நெருக்கடி தரவும் முனைகிறது. நாகம் போல சாட்டையிடும் இரட்டை நாக்கு கேட்கிறது,
"எப்படி இது சாத்தியம் உன்
உயிர் திரும்பிய விதம் என்ன?”
காலம் எங்கோ தன் முழு ஆளுமையுடன் உறுமுகிறது சரி சரி என்பது போல். மிக அழகான கவிதை.
உமாபதியின் கவிதா உலகம்:
கேள்விகள் நிறைந்து பிரமிப்பைத் தொடர்ந்து வழங்குகிற பிரபஞ்ச வெளியும், (மனித செளகர்யத்திற்காக அவனது கோளில் உண்டான) கால அலகுகளும் முரண்பட்டும் ஒன்று பட்டும் பல சிக்கலான சிந்தனைகளை எழுப்பிக் கொள்கிற மன வெளியுமாய் இருக்கிறது. அவருக்கு ஆன்மீகத்தில் பெரிய நம்பிக்கை இருக்கிற மாதிரி தெரியவில்லை. ஆன்மீக விடைகள். தர்க்கங்களை அவர் கவிதைகள் எளிதாக உடைத்துவிடுகின்றன. சிதைந்துவிட்ட தர்க்கங்கள் கேள்விகளை எழுப்புகின்றன. அல்லது அவரது வெளியிலிருந்து வந்தவன்கேட்கிறான். பதிலின்றி நிசப்தம் முடிச்சிட்டுக் கொள்கிறது.
”நிசப்த முடிச்சு அவிழும்போது
மேலும் மெளனம் காக்கும்
சிதைவுகள்" என்பதிலிருந்து இது புரிகிறது.
உமாபதியின் இந்தத் தொகுப்பு மிக முக்கியமானது. வெளி,
காலம், இருத்தல்: பிரபஞ்ச, சமூக, அக நிகழ்வுகள் தொடர்ந்து ஏற்படுத்தும் சிதைவுகள் என அவரது மனோ உலகில் பெரிதும் வியாபித்து அருகோடிக்கிடக்கிறது. வேறு எதையும் விதைக்க முடியாதபடி, உழுவதற்கு வழியற்ற அருகோடிய மனப்பரப்பில் காட்டுச் செடியாய் இறுக்கமான படிமங்கள், அந்தச் செடியின் பூக்கள் போல, முட்கள் போல, அவருக்கேயான பிரத்யேக மொழியில் தொகுப்பெங்கும் கவிதைகள். அவை நவீன கவிதையில் அவருடைய இடத்தை மறுபடி நிறுவுகிறது.
கவிதை:
கவிதை பற்றி அவருக்கு உயர்வான அபிப்ராயமும் அதற்கெதிராக அது ஒன்றே சிறந்த வடிவம் அல்ல என்ற அபிப்ராயமும் சமப்பட்டு நிற்பது போலத் தோன்றுகிறது. ”வலை" கவிதையில் இதை நன்கு அறிய முடிகிறது. சிலந்தி வலையின் திட்டமிட்ட கணிதக் கூறுகள் மர்ம முடிச்சு என்கிற தேவையின்பாற்பட்ட யதார்த்தம், இவை கணிதமல்ல, கவிதை என்று கூறுகிறது. ஆனால் இரை செத்தே ஆகவேண்டிய குரூர வேடிக்கை காட்டும் இயற்கை இயல், இதை கவிதையில்லை என்று மறுக்கிறது அதுவும் மெளனமாய்.
நிசப்தம்:
நிசப்தம் சழக்குரைக்கு மாற்றாக உணரப்படும் கட்டுப்படுத்தப்பட்ட மெளனமா? அல்லது ’வெளி’ ஆக்கிக் கொண்ட கவிமனத்தில் தொடர்பற்ற தொடர்புகளால் நிகழும் ஏகப்பட்ட காட்சிகளால் ஏற்படும் எதிர் மறையான மௌனமா.?
ஜே.கே சொல்வது போல gossip and worry are the outcome of restless mind என்ற ரீதியில் அரட்டையை முற்றாக மறுப்பதே நல்ல கவிதை என்று தோன்றுகிறது. அந்த வழியில் சற்றும் அரட்டைக்கு வழிவகுக்காத கவிதைகளை உமாபதி எழுதிவருவது மகிழ்ச்சியாயிருக்கிறது. தூசியை அவர் வெவ்வேறு விதமாகப் பார்க்கும் நீண்ட கவிதை இதற்குச் சரியான சான்று. அதிலும் வரைபடத்தில் பரவும் தூசி தேசத்தின் அட்சரேகைகளை மாற்றலாம், ஆனால் உதறியெழும் வரைபடம் தன் அலகுகளை அதனுயிர்களின் யதார்த்தத்திற்கேற்ப (?) மாற்றி எழுதும் என்கிற வரிகள் கூர்மையானவை. அதே கவிதையில் (வெளிச்சம் பழகிய) கண்களை மூடிக்கொண்டால் இமைகளுக்குள் பறக்கும் தூசியை, ஒளிப்புள்ளிகளை அவருக்கே வாய்த்த மொழியில் எழுதியுள்ளது குறிப்பிடத் தக்கது.
அந்தக் கவிதைகள்
1.
தூசியின் நடனமும் ஒரு பார்வையாளனும்
கண்களின் இருட்டில் மினுங்கும்
வெளியின் திகள் துணிந்து
வர்ணச் செதிலாய்ப் படரும்
இமைக்குள் பரவும் ஒளிப்பந்து
நர்த்தனதின் பாதங்களை துகிலுரிக்க
செத்து வீழும் உடல் இழந்து
2.
வரைபடத்தில் பரவும் தூசி
தேசத்தின் அட்சரேகையை மாற்றியதாக
சரித்திரம் பேசும் . உள்வாங்கிய
மூச்சில் தீக்கனன்று சாம்பலாகும்
உதறியெழுந்த வரைபடம் தன்
அலகுகளை மாற்றி எழுதும்
பயணம் (Travel ) :
மீண்டும் கவிதை எழுதுகிற கனம் பற்றிய யோசனைக்கு வர நேர்கிறது. அந்தக் கணத்தில் ஒவ்வொரு படிமமும் வார்த்தைக் கூட்டமும் இறந்த காலத்திலிருந்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இதை நிகழ்காலமாக்கும் முயற்சி நவீன கவிதையை இன்னும் மேலெடுத்துச் செல்லும். இந்தக் கவிதைக் கணத்தில் மனம் மேற்கொள்ளும் பயணம் பெரும்பாலும் இறந்த காலத்திலும், மீதிப் பகுதி எதிர்காலத்திலுமே இருப்பதாகத் தோன்றுகிறது. நிகழ்காலத்தை அப்படியே பதிவு செய்தால் கூட பிரதி அதை இறந்த காலமாக்கிவிட முடியும்.
"வரிகளுக்கிடையே
நர்த்தனமிடும் கால்கள் யாருடையது"
என்று கேள்வி எழும்பும்.
உமாபதியின் வெளியிலிருந்து வந்தவன்-3 கவிதை இந்தக் கருத்தாக்கத்தை உள்வாங்கி கச்சிதமாக வெளிவந்திருக்கிறது. மிக அழகான கவிதை அது.
வெளியிலிருந்து வந்தவன்-3
அவன்
உன் கவிதைகளில் நீ எங்கிருக்கிறாய்
வரிகளுக்கிடையே நர்த்தனமிடும் கால்கள்
யாருடையது அல்லது யாருக்கான நர்த்தனம்
காகிதத்தலிருந்து புறப்படும் ஓவியத் தீற்றல்கள்
எந்த மையினால் எழுதப்பட்டவை
கசியும் கருணை கருணையின்மை இவற்றை
காகிதம் உள் வாங்கிக் கொள்கிறதா மேலும்
எல்லாம் காற்று வெளியிடைக் கரையும் போது
கவிதைகள் யாருக்குள்
அவனில்லாதவன்
வெளியில் இருக்கும் நான் எதையும்
காகிதத்தில் கொள்வதில்லை
வார்த் தைகளுக்கிடையே நிலவும்
வெற்றிடம் ஸ்தாபிக்கிறது கவிதையை
உமாபதி கவிதை பற்றி எழுத வாய்ப்புக் கிடைத்ததற்கு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவரது கவிதைகள் சுயம்பானவை. அது யாராலும் பாதிக்கப்படவில்லை என்பதே பெரிய ஆசுவாசம். அவர் மொழியில் அவருக்கிருக்கும் நம்பிக்கை, ego கொஞ்சமும் இல்லாதது. அவருக்கு ego இல்லையென்பதை அவருக்குள்ளிருக்கும்,
அவனில்லாதவன்:
"வெளியிலிருக்கும் நான் எதையும்
காகிதத்தில் கொள்வதில்லை வார்த்தைகளுக்கிடையே நிலவும்
வெற்றிடம் ஸ்தாபிக்கிறது கவிதையை'
என்னும் வரிகள் சாட்சியம் சொல்கின்றன.
கலாப்ரியா 16.4.2OO2
Surya Vn
3 hrs ·
பிரம்மராஜன் கவிதைகள்
-------------------------------------------------
1)பிரம்மராஜன் கவிதைகள் இசை,ஓவியம்,வாசிப்பு ஆகியவை தனிமனிதனில் அல்லது இயற்கையின் மீது பொருத்திப் பார்ப்பதால் உருவாகும் ஒன்றாக இருக்கிறது.
2)பிரம்மராஜன் கவிதைகளில் கவிதை உணர்ச்சியை தான் ஏற்படுத்த வேண்டும் என்ற மரபு தவிர்க்கப்படுகிறது. இங்கு அறிவானது உணர்வாகிறது .மேலும் உணர்ச்சிகளின் Juxtaposition அவரது கவிதைகளில் மிகுந்து காணப்படுகிறது. அதன்காரணமாக ஒன்று இன்னொன்றை அடைந்து அது பலகுரல் தன்மை கொண்டதாகிறது.பிரம்மராஜன் கவிதைகள் ஒரு வாசிப்பில் தீர்ந்துபோவதில்லை. ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு மையம் கிடைக்கிறது
3)நற்றிணை, கிழக்கு ஐரோப்பிய கவிதைகள் ஆகியவற்றுடன் தான் பிரம்மராஜன் கவிதைகளை ஒப்பிட முடியும். நற்றிணையின் பலதளத் தன்மை, இரண்டு குறிப்புகளை சொல்லி மூன்றாவதை உணர்த்ததுதல் ஆகிய உத்திகள் பிரம்மராஜன் கவிதைகளில் சரளமாக தென்படுகிறது. மேலும் கிழக்கு ஐரோப்பிய கவிதைகளின் இறுக்கமான கட்டமைப்பை இவருடைய கவிதைகளிலும் காணலாம்.கவிதையில் இருந்து ஒரு சொல்லை நீக்கினாலும் கவிதையே சீரழிந்து விடும் அளவுக்கான இறுக்கம் பிரம்மராஜன் கவிதைகளின் தனிச்சிறப்பு. இதே தன்மையை கைலாஷ் சிவனின் சூன்யபிளவு என்ற முழுக்க முழுக்க படிமங்களால் ஆன கவிதை தொகுப்பில் காணலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
4)மற்றொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில் பிரம்மராஜன் கவிதைகளில் இணைப்புசரடுகள் பெரும்பாலும் இல்லை. அதன் காரணமாக வாக்கியத்தின் இறுதி அடுத்த வாக்கியத்தின் முதல் வார்த்தையுடன் இணைந்து மற்றொரு பிரதி உருவாகிறது.
5)பிரம்மராஜனின் கவிதைகளை டாடாயிச தொடர்ச்சி என சொல்லலாம். ஏனெனில் அவருடைய கவிதைகள் Tristan Tzaraவின் How to make Dadist poem என்ற கவிதை உருவாக்கம் பற்றிய கவிதையின் படி செய்தோம் எனில் ஏகப்பட்ட பிரதிகளை தருவிக்கலாம் . மேலும் அவருடைய பெரும்பான்மை பாடுபொருள் கோபம், எதிர்வினை என்பது குறிப்பிடத்தக்கது. இதை மஹாவாக்கியம் , புராதன இதயம் ஆகியவற்றில் காணலாம்.
6)1)படிமக்கவிதை -அறிந்த நிரந்தரம்
2)மிகக்குறைவான அலங்கார தன்மைகளை உடைய கவிதைகள் -வலி உணரும் மனிதர்கள்
3)மொழிரீதியான கவிதைகள் -ஞாபகசிற்பம்
4)Extreme Plain Poetry- புராதன இதயம்
5)மேற்குறிப்பிட்ட மூன்று போக்குகளும் கலந்த தளர்வான நடை கவிதைகள் -மஹாவாக்கியம்
என்று அவருடைய கவிதைகள் பரிணாம வளர்ச்சியடைந்து வந்துள்ளது.ஒவ்வொரு தொகுப்பும் முந்தைய தொகுப்பின் தேக்க நிலையை உடைத்துக் கொண்டு வந்துள்ளது.
7)பிரம்மராஜனின் அசாத்யமான கவிதைகள் எனில் புராதன இதயம் தொகுப்பில் இருக்கும் புராதன இதயம், நெய்தல் தேசம், வெற்று நானும் வெற்று நீயும் ஆகும். ஏனெனில் படிமங்களை பயன்படுத்தாமல் மொழியும் தளர்வடையாமல் நீள் கவிதை பல்குரல் தன்மையுடன் பல தளங்களுடன் என்பது கவிதையை பொருத்தவரையில் அசாத்யமான முயற்சி. இது அந்த மூன்று கவிதைகளில் வெற்றிகரமாக செய்துகாட்டப்பட்டுள்ளது .
8)அறிந்த நிரந்தரம், எதிர்கொள்ளல் ,உலோக தாலாட்டு, புராதன இதயம், நெய்தல் தேசம், வெறும் நானும் வெறும் நீயும் , புதிய கில்லட்டீன் ,கடல் பற்றிய கவிதைகள்(17), சித்ரூபினி கவிதைகள்(5),பிரயாணத்திலிருந்து ஒரு கடிதம் ,எதிர்கவிதையாளருடன் ஒரு பேட்டி ,நிலவின் இதயத்தாளம் ,கையிலாயத்திற்கடியில் பத்து தலைகள்,அதற்கு பிறகும், யுக அந்தரத்தில் ஒரு ஹரன்,தெரிதல் புரிதல்,மொழி மீறிய காதல்(கள்) , மிருகத்துடன் ஒரு புதிய மனிதன் சில குறிப்புகள் , முதல் மற்றும் இறுதி வரிகள் ஆகியவை சிறந்த கவிதைகள் என சொல்லலாம்.
9)பிரம்மராஜன் கவிதைகளில் குறைபாடு என்னவெனில் , கவிதைகளில் பெரும் பின்புலம் கட்டமைக்கப்பட்டு கடைசியில் ஒரு பகுதி மட்டும் எஞ்ச மற்றவற்றை நீக்கிவிடுதல் அல்லது அர்த்தம் கலைத்தல் போக்கு. இதனால் கவிஞன் வரிகளை வீணாக்குகிறான் . இந்த பிரச்சினை புராதன இதயம் தொகுப்பில் மிகுந்து காணப்படுகிறது. இந்த அர்த்தம் கலைத்தல் என்பதை உத்தி என்று சொன்னாலும் அதை கவிதையின் பிரச்சினை என்றே கருதுகிறேன். மேலும் அவருடைய கவிதைகளில் உணர்ச்சி-அறிவு சமநிலை தவறி போகிறது என்று நாம் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும் .கவிதையின் அறிவுத்தன்மைக்கு அவர் சகாயம் தான் செய்கிறார். ஆனால் அது மிகுந்து விட்டதோ என்று தோன்றுகிறது.
10)பிரம்மராஜன் கவிதைகள் இந்த உணர்வு-அறிவு சமநிலையோடு, அர்த்தம் கலைத்து வரிகளை வீணாக்கும் போக்கு இல்லாமல் வெளிவரும் எனில் அது மேலும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
மற்றபடி புரியவில்லை என நாகரிகமாக சொல்லி தன் மீதுள்ள தவறை ஆசிரியன் மீது சுமத்துவது என்பது ஆபத்தான போக்கு. வாசகனை தயார் செய்யும் பிரதிகள் இருக்கத்தான் செய்கிறது. எப்படி உலிசஸ் நாவலோ அது போலத்தான் பிரம்மராஜன் கவிதைகளும். இதுவே கணக்கு புரியவில்லை எனில் ஆசிரியரிடம் கேட்டு தெளிந்து கொள்கிறோமோ அது போலத்தான் கவிதையும். கவிதை புரியவில்லை என்பது முழுக்க முழுக்க வாசகனின் பிரச்சினை. அவன் தான் முழு முயற்சி எடுக்க வேண்டும் .
மேலும் கவிதை என்பது உணர்ச்சிகளை மட்டும் வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு என்பது பிரம்மராஜன் கவிதைகள் உணர்த்துவது.
(ஜென்மயில் தொகுப்பை தவிர்த்து இது எழுதப்பட்டிருக்கிறது.)
LikeShow More ReactionsCommentShare