Lakshmi Manivannan liked this.
சூழ்ந்துள்ள காலம் அசையாத ஒரு பிரமை
சிறைக்கைதியின் இறுகிய கைகளும்
கனத்த மகமும் அதற்கும் உண்டு
வெயில் ஒரு மெல்லிய காற்றைப்போல வீசுகிறது
அது தன் பெரிய இறக்கைகளுடன்
கட்டிடத்தின் மீது வந்தமர்கிறது
புறாக்களும் சிட்டுக்குருவிகளும் காகங்களும்
சோம்பல் முறிக்கிறது
நிழல் தேடிக் காலத்தின் எச்சங்களை
உண்கின்றன
இரவெல்லாம் பெய்த மழையில்
அக்கட்டிடத்தின் அறைகளில் தனியே வசிக்கும் பெண்
தனிமையின் கழுத்துக்கு
ஓர் அழகான பாடலைப் பரிசளித்திருக்கக் கூடும்
அவளது கண்ணீர் சாம்பலாகிக்
காற்றின் இறகுகளில் படர்ந்திருக்கிறது
விரல் மோதிரங்கள்
தேங்கிய மழைநீரில் வீழ்ந்து பளபளக்கின்றன
அவளது உடலின் ரோமங்கள்
எரியத் தொடங்கின
தனிமைதான்
அவளை ஒரு கோப்பைச் சாம்பலாக்கியது.
_____________
குட்டி ரேவதி