Wednesday, 14 September 2016

Meenakshipuram Deivakumar Muthukumaraswamy liked this.
Ilango Krishnan
16 mins

ஸ்லீவ்லெஸ் டீசர்ட்டும்
ஜீன்ஸும்
ஹைஹீல்ஸும் வாணிஶ்ரீகளுக்கானவை
வாணிஶ்ரீக்கள் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில்
மாநில அளவிலான மதிப்பெண்கள் வாங்கத் துவங்கிவிட்ட பிறகும்
சிவாஜிகணேசன்கள்
வசந்த மாளிகைக்கு இடம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
கோப்பையில் டெக்யூலாவை
நிரப்பி சியர்ஸ் சொல்லும் வாணிஶ்ரீக்கள்
வந்துகொண்டே இருக்கிறார்கள்
இருப்பார்கள்
அதைத் தன் ரத்தம் என நம்பி
பேச்சு வராமல் நெஞ்சைப் பிடித்து இருமும்
சிவாஜி கணேசன்கள்
தங்கள் பாழடைந்த வசந்த மாளிகைகளில்
பேய் போல் பாடிக்கொண்டிருக்கட்டும்
யாருக்காக யாருக்காக என
நீ வரத்தான் வேண்டும் வாணிஶ்ரீ
சிமோன் தி புவாக்களும்
ஜுடித் பட்லர்களும்
வாணிஶ்ரீக்களாகவே தெரியும்
நம் சிவாஜிகணேசன்களின் கண்கள்
ரத்தத்தில் சிவக்க
கடவாய் கசிந்து தரையில் துவள
நீ வரத்தான் வேண்டும் வாணிஶ்ரீ

யாரையும் போய் பார்ப்பதில்லை வாணி ஶ்ரீ - 
Meenakshipuram Deivakumar Muthukumaraswamy
—————————————————
பருத்திப் புடவை மொடமொடக்க
இப்போதெல்லாம்
ஸ்கூட்டியில்
அலுவலகம் செல்கிறாள் வாணி ஶ்ரீ
அவள் செல்லும் வழியில்
பாழ்பட்டு கிடக்கும்
வசந்த மளிகைகளை
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை வாணி ஶ்ரீ
தெரு முனை காஃபீ டேயில்
அவளோடு பானங்கள் அருந்தி
பெருமையடையும் நண்பர்களோடு
கலகலத்து பேசுகிறாள் வாணி ஶ்ரீ
வளர்ந்துவிட்ட அவள் பிள்ளைகளுக்கு
சிமோன் தி பூவா பெயரை
சரியாக உச்சரிக்க
சொல்லித் தருகிறாள் வாணி ஶ்ரீ
அதி முக்கியமாய்
ரத்தம் கக்கி, உதடு பிதுக்கி
பாட்டுப்பாடும் சீ போ சீ கணேசன்களை
எங்கிருந்தாலும்
போய்ப் பார்ப்பதில்லை வாணி ஶ்ரீ
யாரையுமே போய் பார்ப்பதில்லை வாணி ஶ்ரீ
வாணி ஶ்ரீ ஒரு வாணி ஶ்ரீ

Abdul Hameed Sheik Mohamed
22 hrs
வாணி ஸ்ரீ நீ வர வேண்டாம்
…….
வாணிஸ்ரீ
நீ இப்படி ஒரு நாள்
வந்து நிற்பாய் என 
நான் எதிர்பார்க்கவே இல்லை
ஒரு போன் பண்ணியிருந்தால்
நான் கொஞ்சம் ஆயத்தமாக
இருந்திருப்பேனே
நீ உன் குருதி நிரம்பிய கோப்பையை
மறுபடி கொடுக்க வந்தாயா
நான் குடிப்பதை எப்போதோ
நிறுத்திவிட்டேன்
மருத்துவர் அறிவுரைப்படி
மாலையில் யோகா செய்கிறேன்
பிறகு மற்றவர்களோடு சேர்ந்து
ஏழு மணியிலிருந்து சீரியல் பார்கிறேன்
பித்தனாக உன்னையே நினைத்து
இந்தத் தெருக்களில் நான்
இன்னும் அலைவேன் என்பதுதான்
உன் விருப்பம் இல்லையா
தொந்தி வந்துவிட்டது
காலையில் தவறாமல் வாக்கிங் போகிறேன்
பிறகு வீட்டிற்கு வந்து
வென்னீரில் குளிக்கிறேன்
வாணி ஸ்ரீ
நீ எப்படியும் வந்துவிடுவாய் என
காத்திருக்க அவகாசமில்லாமல்
என் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள்.
இதோ அடுத்த தெருவில்தான் இருக்கிறது
நான் வாடகைக்கு இருக்கும்
வசந்த மாளிகை
அழைத்துப்போய்
யாரோ ஒருத்தியாய்
உன்னை அறிமுகம் செய்ய
எனக்கு எப்படி மனம் வரும் ?
உன்னோடு
ஒரு காஃபி ஷாப்பில்
ஒரு நல்ல தேநீர் அருந்தவேண்டும்
என்பதுதான் எனது விருப்பமும்
இந்த ஊரில் நிறையப்பேருக்கு
என் முகம் தெரியும்
யாரோ ஒருத்தியுடன்
நான் தேனீர் அருந்துவதை
அவர்கள் கவனிப்பதில்
எனக்கு சில சங்கடங்கள் இருக்கின்றன.
வாணிஸ்ரீ
அன்று நான் உன்னைப் பார்த்து
அந்தக் கேள்வியைக்
கேட்டிருக்கக் கூடாதுதான்
எப்படி நீ மனம் உடைந்து அழுதாய்
பிறகு வாழ்க்கை நம்மை
அவரவரவர் வழியில்
வழிநெடுக சவுக்கால் அடித்தபோது
நாம் ஒரு சொட்டுக் கண்ணீரில்லாமல்தானே
நின்றுகொண்டிருந்தோம்
வாணி ஸ்ரீ
உனக்குப்பிறகு
உண்மையிலேயே
உன்னைவிட அற்புதமான பெண்களை
சந்தித்தேன்
நீ எனக்குக் கொடுத்த
அன்பின் நெருக்கடிகள் எதுவுமில்லாமலேயே
அவர்கள் என்னை அன்பு செலுத்தினார்கள்
ஆனாலும்
வாணி ஸ்ரீயை
என்னால் மறக்க முடியவில்லை
என்று பொய் சொல்லியே
அவர்கள் பொறாமையைத் தூண்டினேன்
வாணி ஸ்ரீ
வாணி ஸ்ரீயாய் வாழ்வதிலோ
சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசனாய் வாழ்வதிலோ
ஒரு பொறுப்பற்ற தனம் இருக்கிறது
என்பது உண்மைதானே வாணி ஸ்ரீ?
மேலும்
வாணிஸ்ரீக்காக
சிவாஜி கணேசன் காத்திருப்பதாகவோ
இறந்துவிடுவதாகவோ
கதை முடியும்வரைதான்
இந்த உலகில் நியதிகள்
காவியத்தன்மை கொண்டதாக இருக்கும்
நீ இப்படி திடுதிப்பெனெ
பஸ்ஸைப் பிடித்து வந்து இறங்கினால்
எனக்கு அலுவலகத்தில்
பெர்மிஷன் போடுவது
மிகவும் கஷ்டம் வாணி ஸ்ரீ
உனக்கு இந்த ஊரில்
வேறு உறவினர்களோ
நண்பர்களோ இருக்கிறார்கள்தானே
வாணி ஸ்ரீ?
நீ மாறவே இல்லை
என்றுதான் உன்னிடம் சொல்ல விரும்புகிறேன்
சந்திப்போம்
போய் வா
13.9.2016
இரவு 7.55
%%%%%%%%%%%%

இசை எழுதிய வாணி ஸ்ரீ கவிதை

வருக என் வாணிஸ்ரீ

……………….
நீ எங்கு தான் இருக்கிறாய் வாணிஸ்ரீ?
உன் தூக்கிக்கட்டிய கொண்டையை நான் காணவேண்டாமா ?
இந்த மழைக்காலத்தில்
எல்லா பேருந்து நிறுத்தத்திலும் ஆள் நிறுத்தியிருக்கிறேன்.
சன்னலோரம் அமர்ந்து
நீர்த்துளிகளைப் பிடித்து விளையாடியவாறு
நீ வந்துவிடுவாயென..
எல்லோரும் திரும்பி வந்து உதட்டைப் பிதுக்குகிறார்கள்.
குருட்டுப்பிச்சைக்காரனுக்கு
சாலையைக் கடக்க உதவிக்கொண்டிருந்தாள் ஒருத்தி..
நான் ஓடிப்போய்
நீ வாணிஸ்ரீ தானே என்று கேட்டேன்.
அவளும் உதட்டைப் பிதுக்கி விட்டுப் போகிறாள்.
நீ வந்து அழகானதொரு கிண்ணத்தில்
செக்கச்சிவந்த உன்உதிரம் நிரப்பித் தரவில்லையென்று தானே
இப்படி கள் மேல் காதல் கொண்டு திரிகிறேன்.
எங்கு தான் இருக்கிறாய் வாணிஸ்ரீ?
வந்துகொண்டிருக்கிறாயா
அல்லது
இல்லவே இல்லையா ?
*****