Sunday, January 11, 2015
வெல்லிங்டன்
ஆசிரியர்: சுகுமாரன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ. 275/-
பதின் பருவம் குழப்பங்கள் நிறைந்த பருவம். சிறுவனாய் இருப்பதில் உள்ள சாதகங்களை விட்டு விட விருப்பமில்லா மனதிற்கும், ‘பெரியவனா’வதில் உள்ள கட்டற்ற ஆர்வத்திற்கும் இடையிலான ஊசல் நிறைந்த பருவம். சின்ன வயதில் “கட்டிலுக்கடியில் பேய் ஒளிந்து கொண்டிருக்கிறதோ”, என்று அஞ்சி நடுங்குபவன், அது தேவையற்ற பயம் என்பதை உணரும் தருணத்தில் இழப்பது பயம் நித்தம் தந்த இம்சையை மட்டுமல்ல, ஒவ்வொரு புதிரான இரவையும் எதிர்கொண்டு மீள்வதில் உள்ள சாகசக் களிப்பையும் தான். பெரும்பாலானோருக்கு, ஏதோ ஒன்றை அடையும் வேகத்தில், நாம் எதை இழக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட நேரமில்லாமல் வாழ்க்கை ஓடி விடுகிறது. சுருங்கச் சொன்னால் இந்த நாவலின் கரு – வளர்தலின் வலி.
முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லி விட வேண்டும். இந்த நாவல் இரண்டு வித்தியாசமான பகுதிகளைக் கொண்டது. முதல் 75 பக்கங்களில், வெல்லிங்டன் ஊர் உருவான கதையை அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர் சுகுமாரன். ஒரு நூற்றைம்பது ஆண்டுகளின் வரலாற்றை (1810 – 1950கள் வரை),தரவுகளுடன் நுட்பமாகச் சொல்லியிருக்கிறார். கிழக்கிந்தியக் கம்பெனி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒன்றாக ஆனது, வரி வசூல் முறை, சல்லைவன் என்ற பிரிட்டிஷ் கலெக்டரின் முயற்சியால் நிகழ்ந்த நீலகிரி மலையின் முதல் சர்வே, அந்த மலையில் வாழ்ந்த பூர்வ குடிகளான படகர்களின் வாழ்க்கை,அவர்களது ஐதீகம், வெல்லிங்டன் உருவான வரலாறு என நாவல் இறக்கை கட்டிய குதிரையில் சவாரி செய்வதைப் போல விரைவாகச் செல்கிறது.
ஜான் சல்லிவன் : ஊட்டியை உருவாக்கியவரின் பார்வையில் நாவலின் முதல் பகுதி எழுதப்பட்டுள்ளது.
|
வெள்ளையர்களின் வருகையால் பாதிக்கப்பட்டவர்கள் நீலகிரியின் பூர்வகுடி மக்கள் (படகர்கள்). ஒரு சிலர், “... அது எப்படிச் சரியாகும். அது நேற்று வரை நாம் புழங்கிய பூமி இல்லையா? அதைக் கொத்திப் பண்படுத்தி நாம் தானே பார்த்துக் கொண்டோம்? அந்தக் காடுகளிலெல்லாம் நம் கால்தடங்களின் அடையாளம் இருக்கிறதே? அதையெல்லாம் இல்லையென்று சொல்லி விடுவார்களா?”, என்று புலம்புவதைத் தவிரவேறேந்த எதிர்ப்பையும் வெள்ளையர்களிடம் காட்டுவதில்லை. அவர்கள் இருப்பிடத்திற்கு (ஹட்டிக்கு) தெற்கே பாரக்ஸ் உருவாகிறது. அதைச் சுற்றி உருவாகுவதே வெல்லிங்டன்,நகரம். நாவலின் இந்தப் பகுதி முழுவதும்,கலெக்டர் சல்லைவனின் பார்வையில், தரவுகளுடன் சொல்லப்படுகிறது. பிரிட்டிஷ் ஆவணங்களைக் கொண்டு, வெள்ளையர் ஆட்சிகால இந்தியாவைப் பற்றித் தரவுகள் நிறைந்த அண்மைக்கால படைப்புகளான காவல் கோட்டம், வெள்ளை யானை, போன்ற நாவல்களின் வரிசையில் இந்தப் பகுதியை வைக்கலாம். இது வரவேற்கத்தக்க முயற்சி. முதல் பகுதியில் தற்கால ஊட்டி உருவாக்கப்பட்ட வரலாறு அழகாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாவலைப் படித்தபின்னர், நீங்கள் ஊட்டியை வேறு கண்களினூடாய் பார்ப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஜான் சல்லிவன் கட்டிய கல் பங்களா இன்றும் ஊட்டியில் உள்ளது. (அது அவருக்கு அளித்த சிரமங்களைப் பற்றி நாவலில் படியுங்கள்).
|
நாவலின் இரண்டாவது பகுதி, வெல்லிங்டன் மக்களின் வாழ்க்கையை ஒரு சிறுவனின் (பாபு) பார்வையில் விரித்துச் சொல்கிறது. ஏகாம்பரப் பிள்ளைத் தெரு தான் பாபுவின் உலகம். அந்தத் தெருவில் ஒரு கோடியில் இருக்கும் சரஸ்வதி டீச்சர் முதல், இன்னொரு கோடியில் இருக்கும் அவில்தார் வீட்டின் பின்னால் இருக்கும் சக்கு வரை அனைவருக்கும் செல்லப்பிள்ளை பாபு. ஒரு சிறுவனின் உலகத்தை அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார், சுகுமாரன். பாபு பட்டத்துக்கு மாஞ்சா தடவுவது, சூட்சம் வைப்பது, பெட் கட்டி பம்பரத்தை கொந்துவது (கொந்துவதற்கு உதவ ரகசியமாய் சாமியிடம் வேண்டிக் கொள்வது), சிகரெட் பெட்டி அட்டையோடு விளையாடுவது, நண்பர்களுடன் சண்டை போடுவது, என ஒரு சிறுவனின் வாழ்க்கையை நம்பகத் தன்மையோடு நம் கண் முன் நிறுத்துகிறார். நீங்கள் அறுபதுகளில் பிறந்து, எழுபதுகளில் வளர்ந்தவராக இருந்தால், இந்தக் கதையின் மூலம் நீங்கள் மீண்டுமொருமுறை உங்கள் சிறு வயது வாழ்க்கையை பாபுவின் மூலம் வாழலாம் – என்பதில் சந்தேகமில்லை. சிறுவர்களின் வாழ்க்கை என்றதும் ஆர். கே. நாராயணின் மால்குடி வாழ்க்கையைப் போன்ற சிக்கலற்ற (அல்லது எளிய சிக்கல்கள் கொண்ட) நடுத்தர மக்களின் வாழ்க்கை என்று நினைத்து விடாதீர்கள். பாபுவைச் சுற்றியிருக்கும் உலகம் நிறைய சிக்கல்கள் நிறைந்த உலகம்.
நாவலாசிரியர் சுகுமாரன்
|
வெல்லிங்டன், மிலிட்டரிக் கார்ர்களுக்காக உருவாக்கப்பட்ட ஊர். பூர்வ குடிப் படகர்களும், எஸ்டேட்டில் வேலை செய்யும் மலையாளிகளும், கர்னாடகத்தின் கௌடர்களும், முசுலீம்களும், வட நாட்டில் இருந்து வந்த ராணுவ ஜவான்களும் சேர்ந்து வசிக்கும் ஊர். பாபுவை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு சிக்கலான கதை இருக்கிறது. பாபுவின் அத்தை அம்மு, மாமா கண்ணன்,அம்மாயி தேவகி, தேவகியின் கணவன் நம்பியார், அம்மாயியின் உறவு ஜானு,பாபுவின் டீச்சர் சரஸ்வதி, சித்தா, பாபுவின் பக்கத்து வீட்டுப் பெண் விமலா,சக்கு, என அனைவரின் உறவிலும் ஒரு சிடுக்கு இருக்கிறது. பாபு, இந்த சிடுக்குகளை வளர வளர புரிந்து கொள்வதன் மூலம், கதை விரிகிறது. வளர்ந்தவர்களின் கதையை, ஒரு சிறுவனின் பார்வையில் சொல்லும் போது நேரக்கூடிய நெருடலில்லாமல், சொல்லும் ரசவாதத்தை இந்த நாவலில் நிகழ்த்தியிருக்கிறார் சுகுமாரன். கதையில், மலையாளமும், படகர்களின் பாஷையும், தெலுங்கும், தமிழும், ஆங்கிலமும், ஹிந்தியும் வலிந்து வராமல்,இயல்பாகப் பேசப்படுவது, வெல்லிங்டனின் பிரத்யேக குணத்தை நம் கண் முன் நிறுத்துகிறது.
இந்த நாவலில் உள்ள உறவுகளில், பாபுவுக்கும் கண்ணனுக்குமிடையேயான உறவும், பாபுவுக்கும் சித்தாவுக்குமிடையேயான உறவும், பாபுவுக்கும் கௌரிக்குமிடையே உள்ள உறவும் மனதில் நிற்பவை. தான் பெற்ற குழந்தையாக இல்லாவிட்டாலும் நல்ல தகப்பனாக நடந்து கொள்ளும் கண்ணனின் இயல்பை, பிரதியன்பை எதிர்பாராதிருப்பதை, தள்ளி நின்று அன்பு செலுத்தும் இயல்பை, ஒரு சில வரிகளிலேயே கதையின் ஓட்டத்திலேயே சொல்லி விடுகிறார். பாபுவுக்கும் சித்தாவுக்கும் இடையே உள்ள உறவை நாவலில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
பாபுவுக்கும், கௌரிக்குமிடையேயான உறவு பிரத்யேகமானது. அதைப் பற்றி ஓரிரு வரிகளாவது சொல்ல வேண்டும். நாவலின் ஆரம்பத்தில், “முரளிச் சேட்டன் எழுதுனா ஜி எல்லாம் நேரா இருக்கும். நீ எளுதுனாத்தான் அதெல்லாம் அழகா வளஞ்சிருக்கும். எங்களுக்கு அதெல்லாம் தெரியும்”, எனப் பாபு கௌரியிடம் ஆற்றாமையுடன் சொல்வதிலிருந்து, எனக்கு ஏன் வாட்சை வலது கையில் கட்டினே என்று கேட்கும் பாபுவிடம், “தெரிஞ்சுதாண்டா கட்டினேன். யாராவது ஏன் ரைட் ஹேண்டில கட்டீருக்கேன்னு கேட்டா என்னெ நெனச்சுக்குவேல்ல, அதுக்காகத் தான்”, என்று நாவலின் கடைசியில் கௌரி பாபுவிடம் சொல்வது வரை, அவர்களுக்கிடையேயான அன்பை மயிலிறகுத் தூரிகையில், வானவில்லின் வர்ணத்தைத் தொட்டெடுத்து, மென்பட்டில் வரையும் ஓவியனின் நளினத்தோடு, கவனமாக படைத்துள்ளார் சுகுமாரன்.
இந்த நாவல் முதல் வாசிப்பில், பல சிறு கதைகளின் தொகுப்பு போலப் பட்டது. இரண்டாம் முறை ஊன்றிப் படித்த போது தான், எவ்வளவு கவனமாக, நாவலின் ஒவ்வொரு சரடையும், சிடுக்கையும் கையாண்டிருக்கிறார் எனப் புலப்பட்டது. (எனக்குப் புலப்படாத ஒன்று, கண்ணன் ஏன் தன் குடும்பத்தை விட்டு வந்தார் என்பது ). நாவலின் முதல் பகுதியில் சல்லைவனின் பார்வையில் சொல்லப்பட்ட வெல்லிங்டனின் உருவாக்கமும், நாவலின் இரண்டாம் பகுதியில் பாபுவை மையமாகக் கொண்ட வெல்லிங்டன் மக்களின் வாழ்வும், முற்றிலும் வேறுபட்ட தளங்கள். இது முதலில் கொஞ்சம் திகைப்பாக இருந்தாலும், ஒரு வாசகனாக எளிதில் கடக்கக்கூடிய இடைவெளி தான்.
சுகுமாரனின் எழுத்து ஆர்ப்பாட்டமில்லாத ஆழமான எழுத்து. சின்னச் சின்னத் தகவல்கள் மூலம், நாவலின் (மிகச் சின்ன) பாத்திரங்களுக்குக் கூட வலு சேர்க்கிறார். “யோவ், பிழைப்புக்கு வந்தவனிடம் பிடுங்கித் தின்னால் நமக்குத் தானய்யா பேதி போகும்”, என்று சொல்லும் இன்ஸ்பெக்டரையும், ராமு தாத்தா செத்தவுடன் ஊளையிடும் ஜவான் நாயையும், கூட மையப் பாத்திரங்கலுக்குரித்தான கவனத்தோடு சித்தரித்திருக்கிறார். ஒவ்வொரு பாத்திரமும் அந்த காலகட்டத்தின் தன்மையை/மாற்றத்தை இயல்பாக சுட்டிக் காட்டுபவையாக அமைவது சிறப்பு. நாவலை ஊன்றிப் படிப்பவர்களுக்கு ஒரு நல்ல விருந்து நிச்சயம்.
நாவலைப் படித்து முடித்தவுடன் மனம் கனத்தது. எதையோ இழந்து விட்டோம் என்று தெரிந்தாலும், எதை இழந்தோம், என்ற கேள்விக்கு விடை சொல்லத் தெரியாமலேயே பலருக்கு வாழ்க்கை முடிவடைந்து விடுகிறது. பதின்பருவ வாசலில் நிற்கும் பாபுவுக்குத் தான் எதை இழந்து விட்டோம் என்று நன்றாகவே தெரிகிறது – நண்பர்கள் ராஜூவையும், நஜீரையும், ராதாவையும், மம்மதுவையும்,சரஸ்வதி டீச்சரையும், விமலாக்காவையும், தேவகி அம்மாயியையும்,வசந்தாவையும், பம்பரக் காலத்தையும், பட்டக் காலத்தையும், மாரியம்மன் கோயில் முத்துப் பல்லக்கையும், சகாயமாதா தேரையும், ஹெத்தயம்மாவின் பண்டிகையையும். “இதையெல்லாம் இழந்து எதை அடையப் போகிறேன்”, என்று தெரியாமல் திகைத்து நிற்கும் பாபுவைப் பார்த்து நம்மால் ஒரு புன்னகை புரிய முடிகிறது.
நன்றி ; வாசகர் அனுபவம் Tamil Book reivews http://baski-reviews.blogspot.in/2015/01/blog-post.html
http://vaalnilam.blogspot.in/2015/02/blog-post.html