Monday, 9 February 2015

எழுத்துக் கலை பற்றி - பிரேமிள்



எழுத்துக் கலை பற்றி

______________________


கால சுப்ரமணியன்: உங்களுடைய படைப்பு மனோநிலை பற்றிக் கூற முடியுமா?


பிரேமிள்: படைக்கும் போது ஒரு ஒழுங்கமைப்பை நிறைவேற்றும் நோக்கம்தான் என்னால் உணரக்கூடிய என் மனோநிலை. கூடவே, சிருஷ்டிகரமான ஆழ்ந்த கருத்துகள் தோன்றும் நிலை. இதுதான் படைப்பியக்கத்தின் முக்கியமான களம். ஆனால் இப்படி கருத்துகள் பளீர் பளீரெனப் பிறக்கும் போது என் மனோநிலை என் அவதானத்துக்கு உட்படுவதில்லை. மீண்டும், இவ்விதம் தோன்றுகிற கருத்துகளை ஒரு ஒருமைப்பாட்டுக்குள் ஒழுங்கமைக்கும் இயக்கமாக மனம் செயல்படும். இதெல்லாம் திருப்திகரமாக நிறைவேறிவிட்டால், முடிவாக, ஒருவிதமான சுதந்திர உணர்வு பிறக்கிறது.


கா.சு.: எழுத்து மூலம் உண்மையை அடைதல் பற்றி உங்கள் பார்வை என்ன?


உண்மையை அடைவதற்கு ஒரே வழி மௌனம்தான். எல்லா மார்க்கங்களும் அகந்தையின் பரிபூர்ணமான அடக்கத்தை - ஒடுக்கத்தைத்தான் இந்த மௌனத்துக்கு முக்கியமான ஆதாரமாக்குகின்றன. சரி, எழுதுவது இந்த அகந்தையின் ஒடுக்கத்தைச் சாதித்துவிடுமா? ஒண்ணரைக் கவிதையை எழுதி அதை அச்சில் வரப் பார்த்துவிட்ட கவிஞர்களுக்கு அகந்தை எகிறிக் குதிப்பதுதான் தெரிகிறது. பெரிய கவிஞர்களையோ எழுத்தாளர்களையோ எடுத்துக்கொண்டால் அவர்களிடமும் பலரிடத்தில் அகந்தை நாசூக்காகக் கொலு வீற்றிருக்கக் காணலாம். எனவே, கவிதை மூலம், எழுத்து மூலம் உண்மையை அடைதல் என்பது எனக்கு அபத்தமான கூற்றாகவே தோன்றுகிறது. ஆனால் எழுதும் போது நேர்மையும் மனஒருமையும் உள்ள ஒருவன் தனது எழுத்தின் மூலம் வெளிப்படுகிறவற்றை - அதாவது தன்னை - அவதானிக்க ஒரு சாத்தியம் உண்டு. மனதின் களேபரமான ஓட்டத்தைச் சீராக்கும் வேலைக்குக் கூட எழுதுதல் ஒரு சாதனமாகும். (ஒவ்வொருவரும் காலையில் சில பக்கங்கள் எதையாவது எழுதி வருவது அன்றாட மனோவாழ்வைத் தெளிவுபடுத்த உதவும்.) இருந்தும் உண்மைத் தேட்டத்தைப் பொறுத்தவரை இது எல்லாம் வெறும் அ, ஆ தான். மிக மேலோட்டமான பயிற்சிதான்.


(இன்று, 6 ஜனவரி, கவிஞர் பிரமிள் நினைவு தினம்.)