Tuesday, 17 February 2015

கவிஞர் நரன்.

https://www.facebook.com/riyas.qurana/posts/1049265995103486
18-02-15 7.23 am
கவிஞர் நரன்.
தமிழின் விரிந்த பரப்பிற்குள் இன்றைய முக்கிய கவிஞர்கள் 10 பேரை தெரிவு செய்யும்படி என்னிடம் சொன்னால், அதில் ஒருவராக நிச்சயம்
கவிஞர் நரன் இருப்பார்.இப்படிச் சொல்லும்போது பலர் முகம் சுழிப்பதை நான் கற்பனை செய்கிறேன். நரன் வழக்கமான நவீன கவிதையை பின்தொடர்பவரல்ல. அவரின் சில கவிதைகளை நீங்கள் வாசிக்கலாம்.
கானகம்
.................
புத்தகத்தின்
73ஆம் பக்கம்
கிழிக்கப்பட்டிருக்கிறது
அதில்தான்
தம் கரும்புரவியை
மேய்ந்து வரும்படிக்கு
அவிழ்த்துவிட்டிருந்தான் வீரன்
கிழிந்த பக்கத்தைத் தேடி அலைகிறான்
வாசகன்
குதிரையும் வீரனும் ஒருவரையொருவர்
தேடி அலைகின்றனர்
கிழிந்து விழுந்த கானகத்தில்.
0-0
முழுவதும்
வரைந்து முடிக்கப்பட்ட ஓவியத்திலிருந்து
பறவைகள் பறந்துவிடுமென எண்ணி
அதன்
சிறகுகளை மட்டும்
வரையாமல் விட்டு வைக்கிறாய்.
பின்னொருநாள்
வெறிச்சோடிக்கிடக்கிறது
பறவைகளற்ற ஆகாயம்
காணாமல் போய்விட்டது
உன் தூரிகை.
நிலைக்கண்ணாடி
...................................
எதிர்வீட்டில் நிலைக்கதவின் நேர் எதிர்புறம்
மாட்டிவைத்திருக்கும்
மிகப்பெரிய நிலைக்கண்ணாடியில்
தினமும் கதவைத் திறந்துகொண்டு
கண்ணாடிக்குள் சென்று மறைந்துவிடுகின்றனர்
யாரேனும் அழைப்புமணியை அழுத்தும்போது
கண்ணாடியைத் திறந்துகொண்டு
பார்க்கிறார்கள்
பின் மீண்டும் கண்ணாடிக்குள் சென்று
மறைந்துவிடுகிறார்க்ள்
ஒரு நாள் அவ்வீட்டைக் காலிசெய்து
சாமான்களையெல்லாம் எடுத்துப்போனார்கள்
வாகனமொன்றில் ஏற்றி.
மிகப் பெரிய அந்நிலைக்கண்ணாடியைப் பிடித்தபடி
அமர்ந்திருந்தான் வேலையாள்.
மெல்ல நகரும் வாகனத்தில் கண்ணாடிக்குள் சென்று
மறைந்துகொண்டிருந்தன
அவ்வீதியிலுள்ள வீடுகள் எல்லாம்
தார்ச்சாலைகள் வெண்நிறக்கோடுகள்
..................................................................
வனங்களின் நடுவே
போடப்பட்ட தார்ச்சாலைகள்
அவற்றின் நடுவே
வலப்புறத்தையும்
இடப்புறத்தையும்
பிரித்துச் செல்லும்
வெண்நிறக் கோடுகள்
எப்போதும் அவற்றின் மேலேறி நடந்து செல்கின்றன
சில வரிக்குதிரைகள்
வரிக்குதிரைகளின் மேலேறிச் செல்கின்றன சில
தார்ச்சாலைகள் சில வெண்நிறக் கோடுகள்