Tuesday 17 February 2015

ஊரல் - இந்துமதி சுகுமாரன்

ஊரல் - இந்துமதி சுகுமாரன்

அவள் அவனுக்கு எதிரேதான் நின்றிருந்தாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் இருபதடி தூரம். நடுவே வீதி இருந்தது. வீட்டு வாயிலின் நிலைப்படிக் கட்டையில் சாய்ந்து கொண்டு, உதடு பற்களின் நெளிவாய் அழுந்திய படி, கண்கள் கனவுக்கோலம் கண்டு கொண்டு - அழகாயத்தானிருந்தாள் அந்தப் போஸில். வெறும் பனியனோடு, கைகள் நெஞ்சைக்கட்டி அந்த முண்டாபனியனின் தோள்பட்டை வார்களை இழுத்து விட்டுக்கொண்டு, கண்கள் விரித்து அவளைத் தின்று கொண்டிருந்தான், தூர அவன் வீட்டினுள்ளிருந்து.

இப்படி எவ்வளவு நேரம்தான் நிற்பது? உடலைவில்லாமல், கால் ஆடாமல், கண் மாறாமல்-நித்ய தவமா?

இப்படித்தான் இந்த இருவரும் ஒரு ஆறுமாதமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆடாமல், அசையாமல் ஒரு முன்னேற்றமுமில்லாமல், கேட்டால் தெய்வீகக் காதலாம். அவன் சொல்கிறான். என்ன தெய்வீகக் காதலாம். அவன் சொல்கிறான். என்ன தெய்வமயமோ? பேசாமல், கல்லாய் நிற்பதில் தெய்வதமோ?

அவளை அருகில் மூன்றடி தூரத்துக்கிள் - இரண்டே தரம்தான் பார்த்திருக்கிறான். வீதியில், திருவிழாத்தேர் வரும்போது கூட்டத்தில் இடிபட்டுக்கொண்டு சுவாமியை தரிசனம் செய்த போது ஒரு முறை. பக்கத்தில் இருந்தும் பேசாமலே தங்கள் காதலின் இறைத்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

இந்த ஆறுமாதமும் போய் இன்னொரு ஆறும் போய் ஒரு வருஷமாகியது. ஊரில் இன்னோருதரம் தேர் வந்தது. அப்போதும்கூட நெருக்கத்தில் அருகருகே பார்த்துக்கொண்டார்கள், பேசாமல்.

அவளுடைய பெயர் அவனுக்கு காதல் ஆரம்பித்து ஒண்ணரை வருஷம் கழித்துத்தான் தெரிந்தது.

அது கூட யாரோ உரக்க அவள் வீட்டில் கூப்பிட அவள் திரும்பியதில் கண்டு கொண்டான். பேர் அவனுக்கு இனித்தது சொல்லிச் சொல்லி  பார்த்துக் கொண்டான். எழுதி எழுதி அழித்தான். காதலின் தெய்வீகத்தனம் போகாமல்  என்னென்ன செய்யணுமோ அவ்வளவும் செய்தான்.

இப்படி இருவரும் நின்று தவம் கிடப்பதற்கு நேரம் கூடக் குறித்து வைத்திருந்தனர். சரியான பகல் கிளம்பியதும் உண்டு. பின் களைப்பாறும் சமயம். அந்தி கலையும்போதுதான் ஆட்டம் முடியும். முதலில் வந்ததும் அவள் சிரிப்பாள். அவள் தயங்கிப் பின்னால் வாயை நெளிப்பான். பற்கள் லேசாகத் தெரியும்.

இன்னொரு வருஷம் போனது. தேர்த்திருவிழா எப்போதும்போல் வந்துபோனது. இப்பொழுது கணக்குப்படி சாலு தடவ அவர்கள் பக்கத்தில் பார்த்துக்கொண்டார்கள். கொஞ்ச நாட்கள் கழித்து ஒரு நாள் அவள் அவனைப் பார்த்துக்கொண்டே நின்றாள். அவன் முகம் நெளிந்தது. கவலைகூடத் தெரிந்தது. கண்கள் ‘ஏன்’ என்று தன்னறியாது கேட்டன. அவள் கழுத்தைச் சுற்றிக் கயிறு முடிப்பது போல் காட்டி, வீட்டுக்குள் திருப்பிக் கை காட்டி விட்டு இவனை  நோக்கினாள். இவன்...? பேசாமல் காதலைக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். அவளுக்குக் கோபம் வந்தது. தோள் பட்டையில் முகத்தை வளைத்து இடித்துவிட்டு உள்ளே போய்விட்டாள்.

மூன்று மாதம் கழித்து வளுக்கு யாரோ ஒருவனுடன் கல்யாணம் நடந்தது. ஊர்வலத்துக்குக் காரில் ஏறும்போது அவனப் பார்த்தாள். அவன் வீட்டையும் சேர்த்து தெரு முழுக்கப் பந்தல் போட்டிருந்தார்கள். அவனும் அன்று பனியனுக்கு மேல் நல்ல சட்டை போட்டு ஜோராக இருந்தான். மாப்பிள்ளை மாதிரி. பந்தலுக்குள் நின்று கொண்டு அவள் போகும்  காரை ஒட்டிச்சென்றபடி அவளைப் பார்த்தான். (ஐந்தாவது தடவை) அவள் அவனை அலட்சியமாகப் பார்த்து முடிந்ததும் அவன் தன் வீட்டுக்குள் போய்விட்டான். தாலி கட்டப்படும்போதுகூட அவன் பார்க்கப்போகவில்லை. அவள் அவனை மறந்துவிட்டாள், சந்தடியில்.

கல்யாணமாகி அவள் எங்கேயோ போய்விட்டாள். இப்போது மத்தியானமெல்லாம் பொழுது போவது மிகக் கடினமாக இருந்தது, அவனுக்கு, பனியனின் தோள்பட்டை ‘வாரை’ இழுத்து இழுத்து விட்டுக் கொண்டபடி சுகமாக நின்றுகொண்டு பார்த்த காலமெல்லாம் போச்சு, வருத்தமாக இருந்தது. முன்பைவிட இப்பொழுது அவள் பற்றி நிறையக் கனவு கண்டான். எப்பொழுதும் அவள் தனக்குள்ளேயே இருக்கிறார்போல் நினைவு.

எட்டு மாதம் கழித்து வயிறு தள்ளிக்கொண்டு அவள் வந்து சேர்ந்தாள். மாப்பிள்ளை தூரதேசமாகையால் இத்தனை நாள் அனுப்ப சௌகரியப்படவில்லை. அவன் ஆசையாய்ப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள், ஆச்சரியத்துடன். ‘இன்னுமா இவன் பனியன் வாரை இழுத்து இழுத்துவிட்டுக்கொண்டு நிற்கிறான்?’ அப்புறம் அவளுக்கு அவனைப்பார்க்க சௌகரியப்படவில்லை. இவனுக்கு மத்தியான நேரங்களில் பொழுது போகவில்லை. அவள் அந்த வீட்டுக்குள் தான் இருக்கிறாள் என்ற நினைவே போதாதா, அவனுக்கு, நின்று தவம் கிடக்க!

மூன்று மாதம் கழித்து அவளுக்குக் குழந்தை பிறந்தது. அவள் வீட்டுக்குள் யார், யாரோ போனார்கள். வந்தார்கள். அவன் நிற்பதை விடவில்லை.

ஒரு மாதம் கழித்து அவள் முன்போல் நடமாட ஆரம்பித்தாள். தோளில் குழந்தை இருந்தது. ஒரு நாள் காலையில் அவள் வெளியே நிற்கும் போது இவன் வேகமாக வந்து நின்றான். அவன் வீட்டு நிலைப்படியில்.. அவளைப்பார்த்து சிரித்தான். அவள் கொஞ்சம் மலைத்தபடி சிரித்தாள். திடீரென்று அவள் என்ன நினைத்தாளோ, விடுவிடென தன் வீட்டைவிட்டுக் கீழே இறங்கி வீதியைக்கடந்து அவன் வீட்டுப்படி ஏறி உள்ளே வந்தாள். அவன் நடுங்கிப்போனான். வியர்வைக்குளம், முகம், நெஞ்செல்லாம். வாய் கோணியபடி கண்கள் ஸ்தம்பிப்பு.

அவள் அப்படிப் புயலாய் வந்ததும், தாங்காமல், வீட்டுக்குள்ளே போகப்போனான். அவள் ‘ஏய்’ என்று கத்தினாள். அவன் அசந்து போய்த் திரும்பி அவளைப்பார்த்தான். அவள் பார்வையின் கூர்மை தாங்காமல் குனிந்தான். கண்கள் தரையிலேயே பதிந்து கிடந்தன.

‘இங்கே பார்’ என்றாள்.

அவளைப் பார்த்தான். பார்க்க முடியவில்லை. பார்வையை பழையபடி கீழே போட்டான்.

‘ம், இங்கே பார்’ . குரலில் ஆகரோஷம்.

இப்போது வேறு வழியில்லை. அவளது ரவிக்கையின் மேற்புஉறம் கழுத்துக்கு கீழின் சதை வெண்மையைப் பார்த்தபடி நின்றான். தோளின் மேல் சாத்தியிருந்த குழந்தையின் பிஞ்சுக்கைகள் தெரிந்தன. குழந்தையின் மேல் துணி போட்டிருந்தது.

‘ம். நான் கேட்கிறதுக்குப் பதில் சொல்லு. ஏன் என்னைப் பார்க்கிறே’

‘ம். ம்.’ அவன் சப்தம் உள்ளே போனது.

‘நீ அழகாயிருக்கே பார்க்க ஆசை....’

‘பின்னே ஏன் என்கிட்டே பேசப் பயப்படறே’

‘அம்மா திட்டுவா’

‘பார்க்க ஆசையாயிருக்கல்லே?’

‘ம்.’ கண்கள் விரிந்தன.

‘என்னைக் கல்யாணம் பண்ணியிருக்கலாமில்லையா!’

‘ம்’ கண்கள் சிரித்தன, தோளில் கிடந்த குழந்தையைப் பார்த்து.

‘பின்னே ஏன்...?’

‘அப்பா திட்டுவார்’

அவனை ஏற இறங்கப்பார்த்தாள். ஆற்றாமையுடன் அவள் கண்களில் தோன்றிய உணர்ச்சி வீறலில் அவன் புழுவாய் மாறினான். அவனைப் பார்ப்பதே எரிந்தது.

‘ஹூம்’என்று ஆங்காரப் பெருமூச்சு விட்டபடி கீழே இறங்கினாள். வீதியில் இறங்கியதும், அவனை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு தொண்டையை விகாரமாய்ச் செருமிக்கொண்டு ‘தூ’ வென்று காறித்துப்பினாள்.

நேர தன் வீட்டுக்குள் போய்விட்டாள்.

அவள் தன் வீட்டுக்குள் போய் மறைந்ததும், அவள் துப்பி விட்ட எச்சில் மடங்கி உருண்டு கட்டியாய் போனதைப் பார்த்தான்.

பனியனின் தோள் பட்டை ‘வாரி’லிருந்து கைகளை எடுத்தான்.

-நன்றி : நடை  (1968 -1970)

நடை  இதழ்த் தொகுப்பு : சந்தியாப் பதிப்பகம்