Tuesday 3 February 2015

வறட்சி - ராஜ சுந்தரராஜன்

வறட்சி

வானுக்கு இல்லை இரக்கம்.பூமிக்கு
வெயில் என்று வருகிறது நெருப்பு
காற்றுக்கு விடைசொல்லி
துக்கித்து இருக்கிறது வீடு
அடி உறைகளும், கிணற்றுக்குள்
வாய்வறண்டு
சுருண்டுவிட்டன.
தாகித்து அணுகுகிற வாளிக்கு
என்ன சொல்வது பதில்?



கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகிய
பறம்பும் இன்று வெறும்பாறை.

http://ariyavai.blogspot.com/2012/08/blog-post_6588.html


உயிர்மீட்சி

1.சிதிலம்

இரவிலும் புழுக்கம்.
விசிறியின் சிறகுகள் அனல்வாரி இறைக்கக்
கனவிலும் இல்லை உறக்கம்.
எங்கு சென்றது காற்று?
பகலிலோ என்றால்,
இருள் விரட்ட வந்ததாய் இல்லை;
உயிர்விரட்ட வந்ததேபோல்
பரிதியின் உருக்கம்.
மடல் பட்டுப் பனைகள் முண்டமாயின.
மரம் செடி கொடிகளும் தீய்ந்து போயின.
மீன்கள் கருவாடாகிப்
பருந்துகள் புசித்தது பழைய கதை-
நதியின் மடியில் இன்று மணலே மிச்சம்.
என்னவாயிற்று வானின் ஈகை?
பின்னாளில் தன்னைப் பேணுவான் என்று
பாடுபட்டு ஒருவனைப் படிக்கவைத்தாயே,
உனதருமைப் புதல்வன், அவன் உனக்குத்
தம்பிடிக் காசேனும் தருகின்றானா?
தாலாட்டிச் சீராட்டித் தழுவித் தன் பாலூட்டி
ஆளாக்கிவிட்டாளே அன்னை அவள் இன்று
வேலை கிடைக்காத வெறும்பயலே என்றுன்னை
வசைபாடித் தினமும் வதைக்கின்றாளா?
யார் சொல்லிக் கற்றது செய்ந்நன்றி மறத்தல்?
ஆதாயம்தானோ தாய் அன்பிற்கும் அடிக்கல்?

தெருவு கொள்ளாமல் மனித முகங்கள்
எந்த இரு முகங்களுக்கு இடையிலும்
இணக்கம் இல்லை.
நாய்கூட, இன்னொரு நாயைக் கண்டால்,
முறைக்கும் அல்லது வாலாட்டிக் குழையும்.
எதிர் வரும் மனிதனின் முகம் கண்டு
ஒரு முகக்குறி காட்டினால் என்ன?
எல்லார் முகத்திலும் ஏனிந்த இறுக்கம்?
தானே தனக்குள் அடைகாத்து அடைகாத்து
என்னதான் விடியும்?

பிறமுகம் மறுத்துத் தன்வய இருட்டில்
தனிமைப்படுவதேன் மனித முகங்கள்?
யார் அது? ராமனா? எங்கே உன் தாரம்?
சீர்கொண்டு வந்தவள் சீரன்றி
வேறென்ன தேவை என்று
தீ கொண்டு அவளைத் தீர்த்துவிட்டாயா?
இருமைக்குள் போராட்டம் இருக்கும்தான் அதற்காகத்
தனிமைக்குள் தலைகொடுத்துத்
தற்கொலை ஏன்?

கனவுகள் கட்டுச்சோறாய்
ஒரு புனிதப் பயணம் போயிருந்தேன்.
கங்கை நதியிலும் அங்கே
நீரில்லை கண்டேன் நிணம்
வெயில் அபகரித்த வீதிகள்-
ஊரில் எங்குமே ஆள் அரவம் இல்லை.
குட்டிச்சுவர் ஒன்றின்
புன்நிழல் புகலிடமாகப்
படுத்திருந்தது ஒரு மனிதன் என்றோடிப்
புரட்டிப்பார்த்தேன்.
எலிகள் புரண்டெழுந்து பல் நீட்டிச் சீறின.
விழிகள் தோண்டப்பட்டு,
மூக்கிழந்து,
உதடுகள் செவிமடல் உண்ணப்பட்டு,
குடல் கிழித்துக் குதறப்பட்ட
ஒரு மனித மிச்சம்,
உயிரைக் கையில் வாரி
ஓடி அகன்றேன்.

பசுமரச் சோலையில் செறிநிழல் தேர்ந்து
அயர்ந்திருந்தார்க்குப்
பாறையின் அடிநிழல் ஒரு நிழலாகுமா?
விளையாட்டு அரங்கின் திரளோடிருந்து
ஆர்ப்பரித்தார்க்குச்
சுடுகாட்டுப் பிணம் ஒரு துணையாகுமா?
எங்கும் பொட்டல்காடு,
எங்கும் தனிமையில் அவலம்.
என்ன செய்வது இனி?

2.புலப்பாடு

வெறி, நரம்புகளில் ஏறி,
உயிர் தின்கிறபோது
தியானத்தை நாடலாம்தான்
வெறுமை, இன்மையை நோக்கி,
விரிகின்றபோது
சமைந்து கல்லாவது சாத்தியமில்லை.


3.கிளர்ச்சி

மயான அமைதியின் கருவறையில்
ஒரு புயல் உருவானது.
வானமுட்ட மண்ணை வாரியிறைத்து
வெறிகொண்டு அலைந்தது.
பிணந்தின்று நின்ற சுடுகாட்டு நெருப்பின்
பிழம்புகள் அவிந்தன.
பேய் நடுநடுங்க வேகாத பிணங்கள்
பாதியில் எழுந்தன.
காற்றில்லை என்றவன் யார் என்று பிளிறிச்
சீறிச் சினந்தது காற்று.
கதவுகளோ தடதடவென்றடித்து
அலறின அது கேட்டு.
முறிந்தன கிளைகள்.
மூழ்கின எல்லாம் புழுதிப் புயலில்.
விண்ணெட்டுத் திக்கும் மேகமூட்டம்
மின்னல் இடியென ஒரே கொண்டாட்டம்.
நிலம் குளிர்ந்தது.
காற்று மண்டலம் நீராய்ப் பொழிந்தது.
மண்ணில் எங்கும் மழைநீர் வெள்ளம்.
வானுக்கும் மண்ணுக்கும் நீரே தோரணம்.
ஊற்றுக் கண்டன சுனைகள். உருண்டு புரண்டு
தலைகுப்புற விழுந்தன அருவிகள்.
கரைகடந்து இயன்றது நதியின் நடை.
திரை உயர்ந்து கடல் ஓவென்று கத்திப்
பாறையின் நெஞ்சில்
ஓங்கி ஓங்கி அறைந்தது.

நாளக் கால்களில் வெதுவெதுப்பேற
உயிர்க் கரு உசும்பி விளித்தது.
விழிகளில் சிவப்பேறிப் படர்ந்தது.
இதழ்கள் அமுதுண்டு அமுதுண்டு வெளுத்தன.
நாசித் துளைகள்
வெப்பக் காற்றை
வெளிவிட்டு வெளிவிட்டு விரிந்தன.
ஆடையைத் துறந்த மேனியில்
உணர்ச்சிகள்
கோடானுகோடி நாட்டியம்.
குருதி கொதிப்பேறிச் சுழல
விம்மி நிமிர்ந்தன மேனியில் உறுப்புகள்.
மென்மை இறுகித் திண்ணென்று திரண்டு
போர்கொளத் துடித்தது.
வெண்ணெய்ப் பிடிப்பில் வழுக்கி வழுக்கி
வெறிகொண்டு நடந்தது தாக்குதல்.
பின்னிப் பிணைந்த ஐக்கியப் பரப்பில்
உந்தி உள்வாங்கியொரு நடுக்கம்.
உச்சப் புள்ளியில் ஊற்றுக்கண் திறந்து
எரிமலைக் குழம்பின் இறக்கம்.
மேனிப் பரப்பில் வேர்வைப் புனலொடு
மென்மை மீண்டபோது
எங்கும் அமைதி. மவுனம். மவுனம்.


4.நம்பிக்கை

இருட்டு எல்லையற்று இருந்தால் என்ன?
உன் மனம் எனக்கும்
என் மனம் உனக்கும்
விளங்கினால் எல்லாம் மீளும்.
நம் இருவரின் பிணைப்பில்,
மறுபடியும்,
பேரண்டமே பிறக்கும்.


5.விடுதலை

அலை மேல் அலை அடுத்தடுத்து வந்து
கரைதொட்டு ஆடும் களிநடனம்
கடல்வெண்காக்கைகள் திரை தோய்ந்தாடிக்
குரலெடுத்துக் கூவும் உல்லாசம்.
வலைகொள்ளாமல் விழுந்த மீன் வாரிக்
கொண்டோடி வருகிற வல்லக் கூட்டம்.
வணிக மாந்தர்தம் ஏலக் குரலையும்
விழுங்கி மேலெழுகிற மகிழ்ச்சி யாரவாரம்.

இருகரை மருங்கிலும் சோலைகள் இயற்றியும்
ஏரி குளங்களை நிரப்பியும்
அமுதசுரபியாய் நிறைத்து நின்றொழுகும்
தெளிந்த தீம்புனல் ஆறு
வயல்வெளி யெங்கும்
மீனெற்றிக் களிக்கிற
கொக்குகள் கூழைக்கடாக்கள்
தாய்முலைப் பாலை வாய்வாங்கி உமிழ்கிற
கொழுகொழு பச்சிளம் குழந்தைகள்
எருமைகள் பசுக்கள் மடிவீங்கி வருந்த
காளைகள் குடிக்கவைத்த கஞ்சியைக் கவிழ்த்துத்
துள்ளிக் குதிக்கிற கன்றுக்குட்டிகள்
களத்து மேட்டில் சதாகாலமும்
நெல், பயறு, தேங்காய்ப் பருப்பு என
உணந்து கொண்டேயிருக்க
ஆடு கோழிகள் அடைக்க இடமில்லை
வீடு வெளியெல்லாம் பூமியின் விளைச்சல்
அஞ்சல்காரன் வந்திருந்தானே
என்ன சேதி சொன்னான்?
நல்ல சேதிதான் என் பிள்ளை அனுப்பிய
பணம் கொண்டுவந்து தந்தான்.

திறந்து கொண்டன தொழிற்சாலைக் கதவுகள்
புகைபோக்கிகளுக்கு உயிர்மீண்டு வந்தது
எந்திர இரைச்சல் செவிகளில் இனித்தது
எல்லார் வீட்டிலும் விருந்தினர் வருகை
எந்த நேரமும் புகைகிற அடுப்பு
வேலை கிடைத்துப்
பட்டணம் போகிறான் பையன்
வழியனுப்ப வந்து,
விழிகளில்
நீர் ததும்ப நிற்கிறாள் அன்னை
கிளிகளே! பைங்கிளிகளே! போகிறதெங்கே?
கங்கைக்கரை வயற் கதிர்கள் கொள்ள
அனில்களே! வரிப்புற அணில்களே! போகிறதெங்கே?
கங்கைக்கரை வனக் கனிகள் கொறிக்க
கங்கைநதி மிகப் புனிதமானது
கணக்கற்ற வயிறுகளுக்கு அமுது படைக்கிறது

யார் அது? ராமனா? எங்கே உன் தாரம்?
என்ன இது? ஏய், என்ன விசேஷம்?
ஒண்ணுக்கு ரெண்டாய் இனிப்புகள் எதுக்கு?
தெருவு கொள்ளாமல் மனித முகங்கள்
முகத்துக்கு முகம் புன்னகைப் பூக்கள்.
வீட்டுக்கு வெளியே தலை காட்டினால் போதும்
வந்து குவிகிற வாழ்த்துக்கள்.
குட்மார்னிங் ஃப்ரெண்ட்,
ஹேவ் எ நைஸ் டே,
தேங்க் யூ,
குட்மார்னிங் ஸார்,
இட்ஸ் ஆல் பிகாஸ் ஆஃப் யூ
ஐ ஹேவ் பாஸ்ட் மை எக்ஸாம்.
தேங்க் யூ, கங்க்ராஜிலேஷன்ஸ்.
தெரியாத முகம் ஒன்றும் தெருவில் இல்லை.
கைகள் கைகளைப் பற்றிப் பிடித்துக்
கனிவுடன் நடத்தும் நலவிசாரணைகள்;
ராமா, பெற்றுக் கிடக்கிற உன் மனைவியும்
பிள்ளைகளும்- ரெட்டைக் குழந்தையாமே
சௌக்கியம்தானே?
பரிபூரண சௌக்கியம்.
பாருக்கு இடம் கொடாப் பாறை, பசுமர
வேருக்கு நெகிழ்கிற வேடிக்கை
என் மனம் உனக்கும்
உன் மனம் எனக்கும்
புரிந்ததால் வந்த்து புதுவாழ்க்கை.



துண்டிப்பு

மழெ இல்லெ தண்ணி இல்லெ.

ஒரு திக்குல இருந்துங்
கடதாசி வரத்து இல்லெ.

அடைக்கலாங் குருவிக்குக்
கூடு கட்ட
என் வீடு சரிப்படலெ.

நான் ஒண்டியாத்தான் இருக்கேன்
இன்னும்.



அம்மா

வெளிப்பட்டு வீறிச் செல்கிற நீராவி
ஒரு விசையாக மாறி
எந்திரங்களை உருட்டும்.
கொதிகலன் நாள்ப்பட நாள்ப்பட இற்றுப்போகும்.

வளர்ச்சிப் பாதையின் ஒரு கட்டத்தில்,
செடிகளுக்கு,
விதையிலைகள் வேண்டாதவையாகிவிடும்.

குஞ்சுகள்
கோழியாகும்.
சேவல்கள் கூட வரும்.
அடைகாத்த சிறகுகளில் இறகுகள் உதிர்ந்து விழும்.

காற்றோடுபோய்
அங்கங்கே வேரூன்றி விடுவன
வித்துகள்.

சாவிலும் கூடத்
தாயோடு வருவன
அடிவயிற்றுத் தழும்புகள்.



எல்லை

அலை வறண்டது கடல்.
ஒளி வறண்டது வான்.
உயிர் வறண்டது காற்று.

நிலமெங்கும் சருகுகள்.
நெய்தவனே பிணமாகித் தொங்கக்
கிழிந்துபட்டது சிலந்திக்கூடு.

தெரிகிறது சாவின் பாசறை.
திரும்பாது இனி என் படை.



ஆரோகணம்

சுவர் தன் ஒருபகுதியைக்
கதவு என நெகிழ்க்கிறது

சுதை கறுத்த கோபுரம்
விடிவெயில் மொண்டு குளிக்கிறது

வெளி-
வெளியெங்கும் செறிகிறது ஒலி.

விசும்புக்கு நிமிர்கிறது
ஒரு விமானத்தின் கதி.



தகுதி

ஒரு பறவையிட்ட
எச்சத்தின்
நிழலில்
அயர்கிறோம் நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கிறபடியால்.



சிலுவை

ஒடுங்கிவிட்டது ஊர்.

விளக்குகள் தலைகவிழ்ந்து நிற்கிற
தெருப்பாலையில்,
தனிமையில் மெனக்கெடும் மனித ஓர் உரு
அலைகிறேன்.

தாலிபட்டறியாத கழுத்தில் இவளைக்
கைம்மை கவிந்த முகம் வரித்துக் காணவா
விலகி மீண்டது என் பாதை?

அரையிருள் அந்தி அந்நாள்
இவள் அவன் மிதிவண்டிச் சுமைதூக்கி தொட்டு
இணங்கி அவனோடு குணுங்கியதாகக்
கண்கள் எனது கண்டதென்ன மாயை!

கெக்கலிக்கிறது ஆந்தைப் பெருங்குரல்.

நான் பற்றிக் கொணர்ந்த கை இந்நேரம்
மார்போடு மகவு அணைத்து
உறங்கிக்கொண்டிருக்கும்.

லாமா சபத்கானி? லாமா சபத்கானி?
இவள் விழிக்குரல் ஓல உருக்கம்
என் உளச்செவி சிலம்பச் சிலம்ப

அலைகிறேன்.



காயம்

பூத்தபோது அடடா
அழகு என்றேன்.
காய்த்தபோது
காலில் குத்தியது நெருஞ்சி.

மேகங்கள் பொங்கி வெளுத்தது.
காற்றும் திசைமாறி மேல்கீழாய்ப் பாய்கிறது.
என்ன தந்தாய் நீ எனக்கு,
சில நரைமுடிகளைத் தவிர?

நம் அம்மணம்:
திரை என்று கொண்ட
ஆற்றோட நாணல்ப் புதர்;
நீ அள்ளிப் பருகிய வாய்க்கால்-
இருக்கிறதா இன்னும்
உன் நினைவுகளில் ஈரம்?

நான் போகிறேன்.
வானம் கருக்கொண்டு மீண்டும் மழை வரலாம்
பூமி பூச்சூடி மேலும் பொலிவுறலாம்
மறப்பதற்கில்லை
நெருஞ்சிப் பரப்பின் மஞ்சள் வசீகரம்



வறட்சி

வானுக்கு இல்லை இரக்கம்.பூமிக்கு
வெயில் என்று வருகிறது நெருப்பு
காற்றுக்கு விடைசொல்லி
துக்கித்து இருக்கிறது வீடு
அடி உறைகளும், கிணற்றுக்குள்
வாய்வறண்டு
சுருண்டுவிட்டன.
தாகித்து அணுகுகிற வாளிக்கு
என்ன சொல்வது பதில்?

கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகிய
பறம்பும் இன்று வெறும்பாறை.