Tuesday, 27 January 2015

மஞ்சள் இல்லாத நீலம் இல்லை பச்சை இல்லாத சிவப்பும் இல்லை பிரசாந்தி சேகர்

மஞ்சள் இல்லாத நீலம் இல்லை
பச்சை இல்லாத சிவப்பும் இல்லை
http://kalachuvadu.com/issue-181/page121.asp

பிரசாந்தி சேகர்
மிஸ்ட்றல் (Mistral). எத்தனை அழகான ஒரு வார்த்தை. காற்றுக்கு இப்படியும் ஒரு பெயரா? வடக்கில் இருந்து குளிர்ந்து வீசும் காற்றின் பெயர் அது. இப்போ அடிக்கடி அது இங்கு வீசுகிறது. மனதுக்கு இது சுகம். உடலுக்கு இது மருந்து. எனக்கு இது வாழ்வு. வெயிலுடன் விழித்து, வெயிலுடன் சாய்கிறேன். சுற்றிலும் நிமிர்ந்து நிற்கும் சூரியகாந்திப்பூக்களைப் போல. பகல்கள் எல்லாம் பரந்து விரிந்த கோதுமை வயல்களுடன். அறுவடைக்காலம் இது. முத்தி வெடித்த கோதுமைக்கதிர்கள் தங்கமும் மஞ்சளுமாய் மின்னி அசைகின்றன. அந்தச் சரசரப்பே போதும் நான் வாழ. தொலைவில் திண்பச்சை மலைத்தொடர்கள். வானமெங்கும் துண்டு மேகம் அற்று வெண்ணிற உலோகத்திலிருந்து பிரிந்த நீலம். மாலையானால் செம்மஞ்சள் கரைந்து கிடக்க உழுத நிலத்தில் ஊதாவும் தெரியும். விண்மீன்கள் உலவ, இரவும் இருளாது போகும். இந்த இரவுக்குத்தான் எத்தனை வண்ணங்கள்! ஒளியின் தீர்க்கம் இதுவா? வண்ணங்களின் செறிவு இதுவா? கண்கள் திறந்து தவம் செய்யத் தோன்றுதே! சிறகு முளைத்து பறக்கச் சொல்லுதே! இந்த ஒளியை தேடித்தானே இங்கு வந்தேன். இந்த வண்ணங்களைத் தொட்டு நுகர்ந்து வரையத்தானே இந்த நகருக்கு வந்தேன். என் அன்பு தேயோ (Theo), சொல்! நான், இங்கேயே இருந்திடவா? தலையசைத்து ஒரு வரி எழுது!
வணக்கங்களுடன்,
வின்சென்ற் (Vincent)
வின்சென்ற், நீயும் நானும் பேச கடலளவு வார்த்தைகள் உண்டு. நீ அங்கேயே இரு! கோதுமை வயல்களுக்கும், சூரிய காந்திப் பூக்களுக்கும் அருகே அமைந்த உனது மஞ்சள் வீட்டில் (The Yellow House) வரைந்துகொண்டு அங்கேயே இரு! நான் வருகிறேன் உன்னிடம். உன்னுள் கலந்திருக்க அல்ல. வண்ணங்களுக்குள் அடக்கமுடியாத உனது மனதுடன் பேச. அது தீட்டும் அளவில்லா ஓவியங்களைப் பார்க்க. வியக்க. உன் பக்கத்தில் இருக்க. ஒருமுறை உன் விரல்களைத் தொட்டு கண்களில் ஒற்ற, அது போதும். ஆர்ல் (Arles) என்ற அந்த அழகு நகருக்கு, நான் வரவா?
கண்மூடி உன் பெயரை எனக்குள் உச்சரிக்கிறேன். அது வெறும் பெயரல்ல. கோடுகள் தெரிகின்றன. அவை கோடுகள் அல்ல. வளைந்து வளைந்து எழும் அலைகள். வயல் தெரிகின்றது. அது மஞ்சள் அல்ல. நெருப்பாய் எரியும் கதிர்கள். பெரிதாய்ச் சில பூக்கள் தெரிகின்றன. அவை பூக்கள் அல்ல. விதை இழந்த இதழ்கள். வின்சென்ற், இதுதான் நீயா? இதுதான் உன் வாழ்வா? வண்ணம் தொட்ட உன் விரல்களுக்குள் இத்தனை ரணமா? நரம்பிசைக்கருவியை இசைப்பதுபோல, தூரிகை என் விரல்களுக்குள் அசைகின்றது என்றாயே! அது சுகமா? அல்ல வலியா? இனித்து இனித்து, இறுதியில் வாய்கட்டிக் கசக்கிறதே. இதமாய் வருடி, முள்ளெனக் குத்திற்றே. மனம் கனக்கிறது மீண்டும் ஒருமுறை உன் பெயரை உச்சரிக்க. வின்சென்ற் வில்லெம் வன்கொஹ் (Vincent Willem van Gogh). விரிகிறது ஓர் உலகு. நிலம் அற்று, வானமும் அற்று. ஒளியில். அந்த ஒளியில் வரைந்தான் ஒருவன். உயிரின் எழுத்தை. அவன் வன் கொஹ்.
அகவாய்மை பண்போவிய பாரம்பரியத்தின் (Post-Impressionism) மாபெரும் கலைஞன் வன் கொஹ். நான் உன்னை வின்சென்ற் என்றே அழைக்கவா? உனது கடிதங்களினதும் ஓவியங்களினதும் கையெழுத்தும் அதுதானே? ஒப்பனையிடப்படாத அழகு, பட்டை
யிடப்படாத செறிவு, கலப்பற்ற வண்ணங்கள், தூய்மையான அகத்தெறிப்பு, இயல்பான ஆத்மஞானம். இதுவெல்லாம் ஒன்று சேர்ந்தால். அது நிஜம். அது தெய்வீகம். அதுதான் வன்கொஹ். அதுதான் அவனது ஓவியங்கள். வலியில் ஊற்றெடுத்து வண்ணமுலாம் இடப்பட்ட மனப்பிடுங்கல்கள் அவை. பிரெஞ்சு ஓவியக்கலைஞர்களும், வன்கொஹ்ஹின் முன்னோடிகளுமான யிமீணீஸீ - Francois Millet மற்றும் Ferdinand Victor Eugene Delacroix தமது படைப்புகளில் வருத்திச் சொன்னதை ஒரு தெறிப்பில் சொல்லியவன் வன் கொஹ்.
மஞ்சளைத் தெளித்தான். நீலம் அங்கு தெரிந்தது.
பச்சையைக் கரைத்தான். சிவப்பு அங்கு கசிந்தது.
மஞ்சள் இல்லாத நீலம் இல்லை. பச்சை இல்லாத சிவப்பும் இல்லை என்று அவன் சொன்னான். முதல்முறை பார்ப்பவருக்கு இவை வெறும் வண்ணங்கள். அதனுள் மூச்சடக்கிப் போனவள் நான். எனக்கு அவை வண்ணங்களுக்கும் அப்பால். இத்தனை காலம் அவன் கடந்து வந்த தூரத்தின் இருள், ஒளி, பனி, வெயில், யாவும் அவை. அதனுள் கரைந்து தீர்ப்பது அத்தனை எளிதல்ல. வின்சென்ற், எனக்குள் எல்லாமாக நீ வியாபித்திருக்கிறாய். நீ நடந்த பாதைகளில் நானும் நடக்கிறேன். உழுதநிலம் என்முன். அள்ளிவீசுகிறேன் ஓராயிரம் விதைகளை. செழிப்பான மண்ணுக்கு இனி அவை சொந்தம். ஒளியும் காற்றும் மழையும் மாறிமாறி உறவுகொள்ளட்டும் உயிர்ப்புள்ள இந்த மண்ணுடன். இனி, முதற்கதிர் அசையும் அந்தப் பொழுதில் நான் அங்கிருப்பேன். உன்னிடம்.
சுண்டெர்ட் (Zundert) தென்ஒல்லாந்துக்கு (Holland) சொந்தமான ஒரு சிறு கிராமம். பெருங்காற்றாடிகள் அங்கு சுழலும். அந்தச் சுழலில் தானியங்கள் நெரிபட்டு அரைபடும். மாவாகும். ஊரெங்கும் எப்போதும் சடசடவென்ற அந்த ஒலி. இங்குதான் 30. 03. 1853இல் ப்ரோட்டஸ்டண்ட் பெற்றோருக்கு முதற் குழந்தை பிறந்து இறந்துபோக, இரண்டாவது மகனாகப் பிறந்தவன் வன் கொஹ். அவனைத் தொடர்ந்து மூன்று தங்கைகளும் இரண்டு தம்பிகளும். அதில் ஒருவன் தேயோ. தம்பி என்ற உறவுக்கும் அப்பால், பிற்காலங்களில் வன் கொஹ்ஹுக்கு மிகநெருங்கிய தோழன் தேயோ. வன் கொஹ்ஹின் சுமார் 900 கடிதங்களில் பெரும்பாலானவை தேயோவுக்கு எழுதியவையே. விளையாட்டுத்தனமற்று விசித்திரமாய் ஆழ்ந்த சிந்தனைகளில் திளைத்தது அவனது குழந்தைப் பருவம். திருச்சபையின் அமைச்சராக அவனது தந்தை இருந்ததன் காரணமாக, ஆன்மீகம் பூசப்பட்ட கலை மற்றும் கருத்து சார்ந்தே அவன் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தான். இயற்கையிலும் அந்தத் தெய்வீகம் படர்ந்திருந்ததுகண்டு அதில் ஒன்றெனக் கலந்தவன் வன் கொஹ். சுவர்களற்ற திறந்தவெளிகளில் கைகளை விரித்துக் காற்றைக் குடிக்க ஓடினான். அதுவே அவனது தாகத்தைத் தீர்த்தது. வெட்டவெளிகளும் விரிந்த வயல்களும் பசும்புல்தரைகளும் தந்த விடுதலை, வகுப்பறைகள் அவனுக்குத் தர மறுத்தன. வெறுமை, வறட்சி, இருள் சூழ்ந்த பொழுதுகளானவை எனது பள்ளிப்பருவம் என்று அவன் குறித்துக்கொண்டான். மொழிகளில் அதீத ஆற்றல் இருந்தும், 16 வயதின் பின் பாடசாலைக்குள் பதியவில்லை அவனது கால்கள். வின்சென்ற், உனது கால்கள் வேறு எங்கோ நடக்க வேண்டியவை. அன்று அது யாருக்கும் தெரியவில்லை. உனக்கும் தெரியாது போயிற்று.
Goupil & Co இல் தொடர்ந்தது ஓவிய வணிகத்துறை சார்ந்த பயிற்சி. The Hague , London, Paris போன்ற நகரங்களில் அமைந்தது அது. வண்ணங்களும் வரைதலும் நிறைந்த பயிற்சி அல்ல. விற்ற ஓவியங்களின் வறண்ட கணக்குகளை வகுத்தெழுதுவது. இருந்தும் அவனையும் மீறி மெல்ல மெல்ல வில்லியம் டெர்னெரின் (William Turner) செதுக்கோவியங்கள் (Engravings), பிரான்சுவா மில்லேயினதும் (Francois Millet) ஜூல் ப்றேட்டோவினதும் (Jules Breton) நாட்டுப்புறச் சித்திரங்கள் மற்றும் பத்திரிகைகளில் அச்சிடப்பட்ட கருப்புவெள்ளை ஓவியங்களும் அவனது சுவர்களை நிறைக்கத் தொடங்கின. British Museum மற்றும் National Galleryஇல் பொழுதுகள் விறைத்து நின்றன. ஜோன் கீட்ஸ் (John Keats) மற்றும் சார்ல்ஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) இன் எழுத்தின் அழுத்தம் அவனுள் அசைந்த காலமும் இதுவே. அந்த அசைவு வியக்கத்தக்க கருங்கிறுக்கல்களாக 1879 இல் வெளிப்பட்டது. நிலக்கரிச் சுரங்க ஊழியர்களின் ஒளியற்ற வாழ்வு, ஓய்வற்ற உழைப்பு, பலம்மிகுந்த கைகள் யாவும் கருஞ்சுண்ணமிட்ட சித்திரங்களாயின. அவர்களுள் இவனும் ஒருவனாகினான்.
வன் கொஹ் ஒருமுறை சொன்னான், வறுமையான குடிசைகளிலிருந்தும் அழுக்கான இடுக்குகளிலிருந்தும் எழுகின்றன எனது கிறுக்கல்கள். எனது மனதும் அதைநோக்கியே சாய்கின்றது. உழவர்களும், கைத் தொழிலாளர்களும், வருந்தியவர்களும் வீரர்களாயினர் அவனது விரல்களுக்குள். வின்சென்ற், உனது விரல்கள் விரல்கள் அல்ல. அவை அன்பைச் சுமக்கின்றன. அவை அசையும்போது உனது இதயம் அங்கு துடிக்கின்றது. ஒருமுறை அந்த விரல்களை நான் தொட வேண்டும். கண்மூடி ஒவ்வொன்றாய் உணர வேண்டும். நான் வருகிறேன் உன்னிடம்.
விதை விழுந்த என் மண். அதில் பொட்டுப் பொட்டாய் பச்சை முளைகள். பாசிப்பயறுபோல. அது கொள்ளை அழகு. வெகுவிரைவில் மென்பச்சை குருத்தொன்று கிளைவிடும். அது இரண்டாகி மூன்றாகிப் பெருகும். காற்றுவீச மெல்ல அசையும். வின்சென்ற், இனி உனக்கும் எனக்கு மானதூரம் ஒரு சில தூங்கியெழும் பொழுதுகளே.
என் அன்பு தேயோ,
கலை என்பது என்ன? உயிரின் துடிப்பு, உணர்வின் அசைவு. உள்ளுக்குள் அலைவதைக் கண்ணுக்குள் காண்பது. அந்தக் காட்சியில் கருகிப்போவது. 27 ஆண்டுகள் நடந்து விட்டேன். நிலத்தைத் தோண்டும் போது மரவேர்கள் தட்டுப்படுவதுபோல, எனக்குள் ஒன்று வேரூன்றிக் கிளைபரப்பிப் பெரும் விருட்சமாக நிற்கின்றது. மூச்சுவிடும்போது இலைகள் சரசரக்கின்றன. எனது சலனமெல்லாம் இதுதான். இந்த உலகில் பெருங்கடமை ஒன்று எனக்கு உண்டு. அந்த விருட்சத்தை வரைவது. அங்கு அலைவதை வரைவது. வெயிலை, காற்றை, கடலை, மண்ணை, வெளிகளை வரைவது. என்னையே வரைவது. அந்தக் காட்சியில் நன்றி சொல்லி விடைபெறுவது. அன்பைச் சுமந்து அழிந்துபோவது. ஓவியன் என்பவன் யார்? தோற்றுப்போனவன் என்ற பொருளா? அம்மாவிடமும் அப்பாவிடமும் அதுவே மேலோங்கியுள்ளது. துணையிழந்து நின்றவள் கீ வோஸ் (Kee Vos). பெருங்காதல் கொண்டேன். பாவம், அவளுக்கும் என்னைப் புரியாது
போயிற்று. கருஞ்சுண்ணம் பூசிய விரல்களின் கறையை மட்டும் கண்டாள். ‘உன்னால் வரையமுடியாது’ என்றொரு குரல் உனக்குள் ஒலிக்கிறதா? அப்படி ஒலித்தால், வரை! வரை! வரைந்துகொண்டே இரு, அந்தக் குரல் ஓயும்வரை. என் அன்பு தேயோ, எனக்குள் அப்படி ஒரு குரல் ஒலிக்கின்றது. ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. நான் ஒன்றைச் சொல்லவா? கூண்டில் அடைத்த பறவைக்குத் தெரியும். தன்னால் பறக்க முடியும். குஞ்சுகளைப் பொரிக்க முடியும். கூடுகளைக் கட்டமுடியும் என்று. காற்று பலத்து அடித்தாலும், வானமும் மூடிக்கிடந்தாலும் மற்ற பறவைகளைப்போல் என்னையும் பறக்கவிடுங்கள்.
கூண்டை உடைத்து அவனைப் பறக்கச் சொன்னது ஹேக் நகரம் (The Hague). 1880களில் கலையின் உச்சமாகத் திகழ்ந்தது ஹேக். அன்டன் மோவ் (Anton Mauve)வின் தீவிரப் பயிற்சியின் பின் கரியமையில் உருவாகின 12 தொடரோவியங்கள். கறுப்பு, சாம்பல், வெள்ளையில் கரைந்திருந்தன The Hague நகரின் சாலைகள், வீடுகள், பாலங்கள். ஒரு மழைநாளின் சாயலில் தனிமையும் வெறுமையும் நிறைந்து. துயர் படிந்தாற்போல. அத்தனை துல்லியம். அத்தனை உயிர்ப்பு. வின்சென்ற், இது உன்னால் மட்டுமே முடிந்ததொன்று. அன்டன் மோவ் சொன்னதுபோல். உனது வாழ்வில் சூரியன் உதிக்கத் தொடங்கி விட்டான். கதிர்கள்தான் மேகங்களுக்குள் இன்னும் மறைந்தபடி.
எனது நிலத்தில் குருத்துகள் இலைகளாகி அந்த இலைகளுக்கு நடுவே முடிச்சு முடிச்சாகக் காம்புகள் பல பிரிகின்றன. அதில் மெல்லிய மயிர்கள் தெரிகின்றன. இனி, விரைவில்அதில் சின்னச் சின்னதாய் கோதுமை மணிகள் நிறையும். மழை பெய்யும் வெயில்படும் காற்றும் இதமாய் வீசும். அதுபோதும். வின்சென்ற், நான் விரைந்து வருகிறேன் உன்னிடம்.
இனி, நீ வரைவதில்தான் எத்தனை வகை. கரிக்கோல் மெத்தச் சிறந்தது. ஆனால் அழுத்தித் தீட்டும்போது, அதன் குளிர்மையை இழந்துவிடுகின்றது. மென்னுணர்வும் மறைந்து விடுகின்றது. பழுப்பு நிற மையும் அழகுதான். அதனூடே நகரத்தின் வாழ்வை மிளிரவைக்கலாம். மெருகேற்றலாம். உழவரின் நிலம் அப்படியல்ல. ஈரம் கசியும் விளை மண் அது. விதை மரமாகும். மரம் பூ பூக்கும். காய் காய்க்கும். கனியாகும். அது வாழ்வாகும். அந்த வாழ்வு மக்களின் வாழ்வு. அதற்கான வண்ணம் மண்ணின் வண்ணம். தவிட்டு வண்ணம். மழை நிறைந்த பூமிக்கு சாம்பலும் பொருந்தும். ஒளி பட்டுத் தெறிக்கும்போது படிப்படியாய் அந்த வண்ணம் திண்மையாகும். பின் மென்மையாகி மங்கும். சாம்பலில் மஞ்சள் சேரும். பச்சை சேரும், அந்தி சாயும் அந்தப் பொழுதில் சிவப்பும் சேரும். இதுவெல்லாம் நீர் கலந்த வண்ணங்களினால் மட்டுமே சாத்தியமாயிற்று. வின்சென்ற், அப்படிச் சொல்லல் ஆகாது. அந்த வண்ணக்கலவையை நீ உன் நெஞ்சினில் சுமந்தாய். ஈர நெஞ்சம் அது. வண்ணங்களுடன் சட்டெனக் கலந்தது. மெழுகார்ந்த துணி இறுக்கிய நிலைச்சட்டகத்தில் (Canvas) அது தெறித்த அந்தக் கணம். நான் கரைந்தே போனேன். வண்ணங்கள்அல்ல. என் கண்களுக்கு நீதான் அங்கு தெரிந்தாய். அது நீரும் உன் நெஞ்சமும் செய்த மாயம். The Diggers, The Sowers, Farmhouse with Peat-Stacks எல்லாம் நீர் கலந்த வண்ணங்களில் உருவான ஓவியங்கள். வின்சென்ற், உன்னையன்றி வேறு யாராலும் கடலையும் காற்றையும் வயலையும் வானத்தையும் ஒளியையும் இருளையும் வண்ணத்தின் ஆழத்தில் தொட்டு, தோலுரித்து, உராய்ந்து வரைந்திருக்க முடியாது. வேறு சொல் இதற்கு இல்லை.
இன்னுமொரு படி நான் உருகினேன். ஆளிவிதையில் கசிந்த எண்ணெய் துளிகளை வண்ணங்களுக்குள் கலந்ததும், அவை நுண்ணிழைவான சாயப்பொருட்களுடன் இணைந்து கொண்டன. ஊற ஊற அந்த வண்ணம் தங்கம்போல் தகதகத்தது. வைரம்போல் ஜொலித்தது. இருளிலும் மினுமினுத்தது. வின்சென்ற், இது இரசாயனம் அல்ல. உடலின் வேதியியலும் அல்ல. கலை. கலையின் அதி உச்சம். மகத்துவம். இருளில் கதை ஒன்றை வரைந்தாய். ‘The Potato Eaters’ என்ற ஓவியம் அது. பொழுது சாயும் வேளையில் லாம்பின் சூடான வெளிச்சத்தில் புகைபிடித்தபடி ஒரு கோப்பை உருளைக்கிழங்கை சுற்றி அமர்ந்திருப்பர் உழவர் ஐவர். இருண்ட வண்ணங்களில் ஒருநூறு சாயல்கள். அதனுள் வறுமை பூசிக்கிடந்தது. எலும்புகள் புடைத்த விரல்களில் பசி தெரிந்தது. நிலத்தை நோக்கிய கண்களில் பாரம் கனத்தது. லாம்பின் ஒளி செய்த மாயம் அது. வின்சென்ற், அந்த ஒளி ஒளியல்ல. அது நெருப்பு. உனக்குள் எரியும் நெருப்பு. அதில் பொய் இல்லை; திருகல் இல்லை. நான் காய்ந்தே போனேன். இன்னுமொன்றும் என் கண்களுக்குள் தெரிகின்றது. ‘Flying Fox’ என்ற ஓவியம். இருளில் நரி ஒன்று பறந்தது. நரி பறக்குமா? இறக்கைகள் கொண்டு அது பறந்தது. நரியின் முகம் கொண்ட ஒரு வௌவால்போல. கறுப்பும் காவியும் நிறைந்த அந்த நரி இறக்கைகளை விரித்தபோது தீப்பொறிகள் பறந்தன. அச்சத்தின் உச்சம் உணர்ந்தேன். அதுவும் ஒளி செய்த மாயம். இல்லை நடுக்கம். வின் சென்ற், எல்லாமே ஒளி நிறைந்த இருளின் கதைகள்தான். இருந்தும், இந்த இரண்டு ஓவியங்களும் போதும் உனது கால்கள் கலையின் தலைநகரில் பதிய.
என் அன்பு தேயோ,
சனி இரவு ஒரு கனவு. அது ஒரு காட்சி. சதுப்பு நிலத்தில் பச்சை வயல். அங்கும் இங்கும் உருட்டி வைக்கப்பட்ட வைக்கோல். அருகில் கரித்தூள் நிரவிய பாதையில் ஓடுகிறது சிறு கால்வாய் ஒன்று. அடிவானத்தில் சூரியன் தீயாய்க் கரைந்துகொண்டு இருக்கிறான். வானமெங்கும் ஊதா மங்கிக்கிடக்கிறது. தங்கம் பூசிய ஓரத்துடன் கருஞ்சிவப்பு மேகம் ஒன்று கரையும் சூரியனில் ஏறி அதனைக் கூறுபோடுகிறது. இன்னும் இன்னும் ஒளியில்லாத இருளில்லாத இந்தப் பொழுதில் மஞ்சள் பச்சையாய் மாறி, பின் நீலமாகி, நீலம் அது ஊதாவில் கரைந்து. எத்தனை வண்ணங்கள்! நிலம்கூட பச்சை, சாம்பல், கருத்த ஆரஞ்சுத் திரையாகி பொடிப்பொடியான தவிட்டுடன் மடிந்து கிடக்கின்றது. இதுவெல்லாம் பள்ளத்தில் ஓடும் சிறு கால்வாயில் நுரையுடன் பட்டுத் தெறிக்கிறது. என் அன்பு தேயோ, என்றும் இல்லாத வண்ணம், எனக்குள் இத்தனை வண்ணங்கள் நிறைந்திருக்க நான் கனாக்கண்டேன்.
வின்சென்ற், உனது கனவை என் கண்முன் காண்கிறேன். எனது நிலம் பச்சை வயலாகி சுருண்ட இலைகள் விரிந்து, காம்புகள் பலம்கொண்டு பெருத்து நிற்கின்றன. அதனுள் இளம்பச்சைக் கோதுமை மணிகள் நிறைந்து அசைகின்றன. வாழ்வின் ஆதாரம் அது. அதில் ஒன்றை உருவியெடுத்து அதன் இளம்பாலை மென்று சுவைத்தேன். உருசித்தது. பச்சைக் குழந்தையின் மணம்போல. பாறையின் இடுக்கில் கொடிவிட்ட இலையின் குளிர்ச்சிபோல. இறுதியில் தேன்பட்டதுபோல. இதுபோதும். இனி எனக்கும் உனக்குமான தூரம் தூரமேயல்ல.
1880களின் நடுப்பகுதி அது. கலை உலகின் நிலநடுக்க மையம். பாரிஸ் (Paris) நகரம். மொன்மாத்ர (Montmartre) மாவட்டம். இலக்கம் 54, றுலேப்பிக் (Rue Lepic) இல் மூன்றாவது மாடியில் ஒரு சிறு வாடகை வீடு. அவனதும் தேயோவினதும் வாழ்நிலமானது. வசந்தம் வந்தது. மாயம் நிகழ்ந்தது. அப்படித்தான் சொல்ல வேண்டும். இத்தனை காலம் நெஞ்சினில் சுமந்து கனவில் கண்டது விரல்நுனியில் வந்து ஒட்டிற்று. இருள்படாத, துளிகூடச் சாம்பல் கலக்காத அப்படியே அதன் வேரிலிருந்து பிடுங்கிய வண்ணங்கள். வண்ணங்கள் அவனது மந்திரமாகின. மருந்தாகின. 40 தன்னோவியங்கள் (Self Portraits) பிறந்தன. எண்களுக்குள் சிக்க முடியாத வண்ணங்களில் அவன் தெரிந்தான். ஒவ்வொன்றிலும் புதிதாய்ப் புதிதாய்ப் பிறந்தான் வன் கொஹ். வெண்ணிற உலோகத்தி லிருந்து பிரிந்தது ஒருவண்ணம், அது நீலம் (Cobalt Blue), தம்பளப்பூச்சியில் இருந்து கசிந்தது ஒரு வண்ணம், அது கருஞ்சிவப்பு (சிணீக்ஷீனீவீஸீமீ ஸிமீபீ), மரகதக்கல்லுக்குள் உறைந்தது ஒரு வண்ணம், அது பச்சை (Emerald Green), ஈயக்குருமிகையுள் உறங்கிக் கிடந்தது ஒரு வண்ணம், அது திண்மஞ்சள் (Chrome Yellow). இவையாவும் கோடுகளாயின. கோடுகள் வரிகளாயின. வரிகள் வளைந்து அலையாகின. அலைகள் துளித்துளியாகி வந்து தெறித்தன. வின்சென்ற், இதுவெறும் தெறிப்பல்ல. சமுத்திரம். மூச்சுத்திணறி நனைய முடியாது நான் நின்றேன். நீ நனைந்தாய். ஆழ மூழ்கினாய். மீண்டும் எழுந்தாய். கரையுடன் சேர்ந்தாய். மிகச்சாதாரணமாய். மனிதனால் இயலாது இது. மானுடம் எட்ட முடியாத மகத்துவம் இது. நீ அதனைத் தொட்டு உனதாக்கினாய். வெகுநேரம் அடக்க முயன்றேன். நான் தோற்று விழுந்தேன். கரைபுரண்டது கண்ணீர். கேள்விகள் என்னைத் தின்னத் தொடங்கின. இத்தனை ஆழத்தை யாரும் அன்று கண்டுகொள்ளவில்லையா? நியூஆர்ட் (New Art), அவோங்கார்ட் (Avant Garde) என்று மாற்றங்களுக்காக போரிட்ட கலைஞர்கள் எப்படி அவனைக் கடந்து சென்றனர்? கடக்க முடியாத ஆளுமை அல்லவா அவன்! அணைக்க முடியாத நெருப்பல்லவா அவன்! Toulouse Lautrec, Emile Bernard, George Seurat உங்களுடன் அவன் பெயரையும் சேர்க்க மறுத்ததேன்? வின்சென்ற், நீ எங்கிருக்கிறாய்? நான் இப்பவே உன்னைப் பார்த்தாக வேண்டும்.
என்அன்பு தேயோ,
வாழ்வு மிகச் சிறியது. இனியும் உனக்குச் சுமையாக இருக்க மனம் இசையவில்லை. கலைஞர்கள் என்று கோஷமிடும் இந்த மனிதர்கள் எனக்கு வேண்டாம். முழங்கையால் இடித்தபடி முன்னோக்கிச் செல்லும் இந்த நகரின் அரசியல் பூசிய கலையும் எனக்கு வேண்டாம். எனக்கு உண்மை வேண்டும். வெளிகள் வேண்டும். வெயில் வேண்டும். நான் போகிறேன். தெற்கு நோக்கி. ஆர்ல் (Arles) என்ற அழகு நகருக்கு. முள்ளெனக் குத்தும் குளிர் அங்கு இல்லை. மண்ணோடு ஒட்டிய மனிதர் அங்கு உண்டு. வயலோடு ஒட்டிய வாழ்வு அங்கு உண்டு. நான் போகிறேன்.
ஆர்ல் நகரில் ரோன் நதி கிளைகள் விரித்து ஓடுகிறது. இங்கு வெயில் நிறையவே உண்டு. மழையும் அப்படித்தான். மழைபெய்யும் அந்தப் பொழுதுகள் ஊர் முழுதும் இசையாய் ஒலிக்கும். செங்கல் ஓடுகளின் மேல் கனத்தமழை மீட்டும் இசை அது. வயல் நிறையக் கதிர்கள், எண்ணெய் தரும் ஒலிவ் மரங்கள், எலுமிச்சைச் செடிகள், அத்திப்பழங்கள், சூரியகாந்திப் பூக்கள், மலை உச்சியைத்தொட்டு வரும் தெளிந்த காற்று. இந்தச் செழிப்பையெல்லாம் தனக்குள் சுமந்திருந்தது Place Lamartineஇல் அமைந்த அந்த மஞ்சள் வீடு. நீ வாழ்ந்த அந்த வீடு. கதிர்கள் அசையும்பொழுதில் நான் அங்கிருப்பேன் என்றேனே. நான் வந்துவிட்டேன்.
வின்சென்ற், நான் உன்னைப் பார்க்கிறேன். கண்கள் உன்னில் கோலமிடுகின்றன. இதுதான் நீயா? செழிப்பான மண்ணின் வண்ணம்போல. மஞ்சளும் சிவப்பும் கலந்த முடி. பின்னோக்கி வாரப்பட்டு. சதை வற்றி, கன்ன எலும்புகள் புடைத்த முகம், சற்றுக் கூர்மையான மூக்கு. உதடுகளை மறைக்கும் மீசை. அடர்ந்த தாடி. விசித்திரமாய் ஏதும் இல்லை நான் விறைத்துப்போக. இருந்தும் நான் மிகுந்த சலனமுற்றேன். தெற்கின் சூரியனை உன் கண்களுக்குள் காணவந்தேன். கொட்டும் மழையில் நான் நனைய வந்தேன். ஆனால் உனது பார்வையில் மழை இல்லை. வெயில் இல்லை. இருள் இல்லை. ஒளி இல்லை. வாழ்வைப் பலமுறை குடித்த ஒரு வெறுமை. கசப்பு. வறட்சி உன் கண்களுக்குள். நான் வார்த்தையற்றுத் தொலைகிறேன். வின்சென்ற், நீ சிரிக்கவே மாட்டாயா? தசைகள் இளக, விழிகள் விரிய சிரிக்கும் அந்தச் சிரிப்பு எங்கு போனது? எப்போது அதனைத் தொலைத்தாய்? இது என்ன! உனது விரல்கள் எனது விரல்களுக்குள். இதயத்தை கைகளுக்குள் உணர்கிறேன். அது எனதா உனதா தெரியவில்லை. உடலெல்லாம் நடுக்கம் கொண்டது. இனி நான் பேசப்போவதில்லை. இடையில் தானும் ஏதும் சொல்வதற்கில்லை. நீயே பேசு. நிமிர்ந்து உன்னைப் பார்க்கின்றேன். வின்சென்ற், என்னோடு பேசு.
வடக்கில் இருந்ததைவிட நான் இங்கு பலமடங்கு மகிழ்வாகவும் பலமாகவும் நலமாகவும் இருக்கிறேன். ஒளியையும் வண்ணங்களையும் அதில் நிறைவையும் தேடிவந்தேன் இந்த நகருக்கு. தேடத் தேவை இல்லை. திரும்பும் இடமெங்கும் வண்ணங்கள். வண்ணங்களுக்குள் திக்கித் திணறினேன். உச்சிவெயிலில் கோதுமை வயல்களுக்கு நடுவே நின்று அந்தத் தங்கத்தை வரைந்தேன். அந்திசாயும் வரை. பகல்களுக்கு இல்லாத ஒளியும் வண்ணமும் ஆர்ல் இன் இரவுகளுக்கு உண்டு. அதனையும் வரைந்தேன். கருநீலவானில் வெள்ளைப் பொட்டுகளை இடுவது, விண்மீன்கள் நிறைந்த இரவாகி விடாது. உற்றுப்பார், இந்த விண்மீன்களுக்குள் ஊதாப் பூக்களின் மினுமினுப்பு உள்ளது. சிலவற்றில் எலுமிச்சையின் மஞ்சள். இன்னும் சிலதில் இளஞ்சிவப்பு அல்லது பச்சை நீலம். பார்த்துக்கொண்டே இரு. அது உன்னைக் கனியவைக்கும். உனக்குள் ஆழமாய் வேர் ஊன்றும். அழகின் உச்சத்தில் இயற்கை தழைக்கும் அந்தக் கணம் அப்பட்டமான தெளிவு என்னுள். அந்தத் தெளிவில் நான் இல்லை. நானே இல்லை. கனவுபோன்ற ஒருநிலையில் வரைகின்றேன். அந்தக் கனவு எனது ஓவியமாகி. எனது ஓவியம் மீண்டும் கனவாகி. இதுவெல்லாம், ஆர்ல் என்ற இந்த அழகுநகரில் மட்டுமே நிகழும் ஒன்று. இப்போ 35 வயதில் நான். 25 இல் நான் ஏன் இங்கு வரவில்லை என மனம் கிடந்து தவிக்கின்றது. மனது தவிப்பது வயதினால் மட்டுமல்ல. தனிமை. தனிமையில் நான் தோற்றுவிடுவேன். ஒருவார்த்தை பேசாத நாட்கள் எத்தனை கடந்தேன்! தாசிவீட்டிலும் தபாற்கந்தோரிலும் தனிமை எப்படித் தொலையும்? உறவுபோலப் பகிரும்போதுதான் கலை வாழும். அந்தக் கலைஞனும் வாழ்வான். என் அன்பையும் அழைப்பையும் ஏற்று, ஓர் இலையுதிர் கால நடுநிசியில் இந்த மஞ்சள் வீட்டில் கால்பதித்தவன் போல் கோகென் (Paul Gauguin).
கோகென் மிகப் பெரியவன். சூரியனைப்போல. கடலைப்போல. ஓயாது அவனது ஒளி. அடங்காது அவனது அசைவு. குறியீடுகள் நிறைந்தது அவனது ஓவியம். அதனூடே வாழ்தலைச் சொல்பவன் கோகென். பாரிஸ் நகரத்துக் கலைஞர்களிடமிருந்து அசாதாரணமாய் வேறுபடுபவன். என்னைப்போல் அவனும் ஒரு துறவி. அவன் என்னுடன் சேர்ந்தால், எனது கனவு பலிக்கும். தெற்கில் அமைந்த இந்த மஞ்சள் வீடு கலைஞர்களுக்கான ஒரு புனிதத்தலமாக மாறும். அவனது வருகைக்காக நான் வரைந்தது எத்தனை! சூரியகாந்திப் பூக்கள் கொண்ட ஓவியங்கள் இரண்டு. மஞ்சள் சுவரின் முன் ஒன்று. நீலசுவரின்முன் இன்னொன்று. ‘மஞ்சள் படுக்கை அறை’ என்ற ஓவியமும் அதில் உண்டு. மஞ்சள் நாற்காலி மற்றும் கட்டிலுடன், பச்சை ஜன்னல்களுக்குள் நிறைந்த
மஞ்சள் ஒளியுடனும் நீலச்சுவருடனும் அமைந்த ஓவியம் அது. இன்னும் இன்னும் பல. எல்லாம் அந்த மஞ்சளில். மஞ்சள் இல்லாத ஆர்ல் இல்லை. மஞ்சள் இல்லாத நானும் இல்லை. மஞ்சள், அது எல்லாமாக எனக்குள் கலந்திருந்தது, தொடத்தொடத் தீராது
போயிற்று. ஓர் ஊற்றுபோல. கோகென் - இன் வருகை அத்தனை மகிழ்வையும் அதிர்வையும் அள்ளித்தந்தது. வண்ணவண்ணமாய்க் காற்றில் அசையும் சவர்க்காரக் குமிழ்களைக் கண்டு குதூகலிக்கும் குழந்தைபோலானேன். அது திடமாய் வானத்தைத் தொடும் என்றும் நம்பினேன். இத்தனை விரைவாய் அது உடைந்தது. ஒன்றுமே இல்லாது வெடித்தது.
கோகென், நீ வந்தாய், வரைந்தாய். நானும் வரைந்தேன். வெறிகொண்டு. 300 ஓவியங்கள். வெளிகளில் அமர்ந்து அந்தப் பொழுதை வரைந்தேன் நான். நீயோ, அந்தக் காட்சியை நினைவில் பதித்து நான்கு சுவருக்குள் வரைந்தாய். அந்த வரைதலை எனக்குள் திணிக்க முயன்றாய். உனது சுயத்தை எனது ஓவியத்தில் காண விளைந்தாய். உனது கருத்தை எனதாக்க முயன்றாய். என்அன்பு கோகென், உனது இதயம் எப்படி எனது இதயம்போல் துடிக்கும்? உனது கண்கள் எப்படி எனது கண்களாகும்? உனது விரல்கள் எப்படி எனது விரல்கள்போல் அசையும்? உனது வண்ணம் எப்படி எனது வண்ணமாகும்? உனது துடிப்பு வேறு, எனது துடிப்பு வேறு. உனது பார்வை வேறு, எனது பார்வை வேறு. உன் வண்ணம் வேறு. என் வண்ணம் வேறு. நீ வேறு. நான் வேறு. அந்த மஞ்சள், அது எனக்கேயானது. அந்தச் சூரியகாந்திப் பூக்கள், அவை எனக்குரியவை. என்றும் உனதாகாது. அதனை நீ ஏன் ஏற்க மறுத்தாய்?
என் அன்பு கோகென், நான் என்றோ உடைந்துபோனவன். இரு துருவ நோயால் நித்தம் வதைபடுபவன். வாதைகள் நிறைந்தது எனது வாழ்வு. அந்த வலி நீ அறிவாய். நான் ஒன்று கேட்டாகவேணும். இத்தனை ஓவியங்கள் வரைந்தேன். ஒன்றுகூட எவரினதும் கண்களிலும் படவில்லையா? ஒன்றைக்கூட விற்கமுடியாது நான் தவித்தேனே. அந்தத் தவிப்பும் உனக்குப் புரியும். எனது ஓவியங்களினூடே மனங்களைத் தொடவிரும்பினேன். ஒருமுறையாகினும், ஏதேனும் ஒருமனதில் சிறகு விரித்து சிறிதாய்ப் பறக்க விரும்பினேன். மீண்டும் மீண்டும் எனது சிறகு உடைக்கப்பட்டுக் கூண்டுக்குள் வீழ்ந்தேன். இதுவெல்லாம் புரிந்தும், அறச்சீற்றம் கொண்டு நீ வெடித்துச் சிதறினாய். சிறு கைகளால் மறைக்க முடியாத சூரியனாய் உன்னைப் பார்த்தேன். நெருங்கி வந்தேன். உன்னுடன் சேர்ந்து ஒளியைப் பரப்ப. உனது கரங்களை விரித்துக் கட்டி அணைப்பாய் என வந்தேன். சுட்டுக் கருக்கினாய். பொசுங்கிப் போனேன் நான். அன்று நத்தாரின் முதல் நாள், ஆர்ல் மஞ்சளை இழந்து இருண்ட அந்தப் பொழுதில், நீ என்னை விட்டுப் போனாய். என்றைக்குமாக. என் கனவெல்லாம் கனவாகிப்போனது. பித்தேறிக் கிடந்தேன்.
என் அன்பு தேயோ,
எனது ஓவியங்களை உன்னிடம் விட்டுச் செல்கின்றேன். அம்மாவும் அப்பாவும் கீ வோஸ்ஸும் நினைத்தது சரிதான். நான் தோற்றுப்போனேன். மிகுந்த மகிழ்வுடன் நான் போகிறேன். துரோகங்கள் நிறைந்த போரில் வீழ்வது வீரம் அல்லவா?
வயலில் முத்தி வெடித்தன கோதுமைக் கதிர்கள். அறுவடை நாள் இது. மழையும் வெயிலும் காற்றும் வளர்த்த பயிர் இது. ஒரு நொடி. அரிவாள் கொண்டு ஒரு வெட்டு. ஒரு சூடு. மஞ்சள் வயல் சிவந்து போனது. கரைந்த சூரியனால் அல்ல. தெறித்த இரத்தத்தினால். மிஸ்ட்ரல், அது வீசிக்கொண்டே இருந்தது. தன்னைத்தானே நெஞ்சினில் சுட்ட உடலின் மீது.