நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம்
--- நாகார்ஜுனன் வலைத்தளம்
9.8.09
108: 8 - மௌனி
"என் பெயர் கோடோ."ஸாமுவல் பெக்கெட்டின் நாடகத்தின் பாத்திரங்கள் இருவர் இவர் வருவார் எனக் காத்திருக்கும் பாத்திரத்தின் பெயர்! என்னைக் காணாமலேயே தம் பெயரை அதுவாகச் சொல்லி சிகரெட்டை இவர் அளித்தது என்னைத் திடுக்கிடத்தான் செய்தது. சிகரெட்டுத்தாள்கள் அவர் முன்பு குவிந்திருந்தன. எதிரில் வீதிப்பக்கம் ஆளரவம் இல்லை.
"'என்ன?"
"ஆம். காலை முதல் இங்கே உட்கார்ந்தபடிதான் இருக்கிறேன். அவள் வந்தபோது கூட யோசனைகள்" என சற்றே புன்சிரித்தபடி என்னிடம் கூறினார். சுமி இன்று வந்து சங்கர் வந்தாரா என்று கேட்டபோது தாம் சரிவரப் பதிலளிக்கவில்லை என்றார் கடைக்காரர். எங்கள் இருவரையும் பல காலமாக அந்தப்பகுதி மனிதர்கள் என அறிந்தவர் என்றாலும் ஏதோ யோசனைகள் அவரைத் தடுத்திருக்கலாம். ஒருவேளை எங்கள் இருப்பின் மீதே சந்தேகமும் தோன்றியிருக்கலாம். ஆம், இப்படிச் சந்தேகத்தில் சிக்கியத்தான் அவர் சிரிப்பதை விட்டுவிட்டார் என்பதும் எனக்குத் தெரிந்தது. சமீப காலத்தில் சிகரெட் எடுத்துக்கொடுக்கும்போது இவர் சிரித்ததே இல்லை என்பதும் இன்று மாத்திரம் புன்சிரிக்கிறார் என்பதும் நிஜம்தான். அப்படி அவர் சிரிப்பதும் உணர்ச்சி இழந்த நகை ஒலியாகத்தான் இன்று கேட்டது. இவர் பேசின தொனியும் என்னைப் பாராது வெளியை வெறித்துப் பார்க்கும் பார்வையும் எனக்கு என்னவோ போல் இருந்தன. காலையிலிருந்து உக்கிரமான வெயிலில் பாதி மூடிய கண்களுடனும் வெற்றுவெளிப்பார்வையுடனும் கண்ட தோற்றங்கள் கடைக்காரரைப் பொறுத்தவரை எவ்வெவ்வகை மனக்கிளர்ச்சிக்குக் காரணமாயினவோ என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. அப்போது அங்கு வந்து நின்ற ஒரே ஆளான அந்தப் பரட்டைத்தலைச்சிறுமிக்கு வேண்டிய தேங்காய் எண்ணெய்ப் 'பாக்கெட்டு'களை ஒவ்வொன்றாக நிதானமாக எடுத்து அதே புன்சிரிப்புடன் வழங்கினார் இவர்.
"என்ன செய்கிறீர்கள்?" என்று நான் கேட்டு சிகரெட்டைப் பற்ற வைக்க நெருப்புக்குமிழைத் தேட, அந்த ஜோதி உடனே அகப்படவில்லை எனக்கு. ச்ட்டென எழுந்து, "அதோ, அந்த பஸ்தான்" என்றவர் என்னைத் தூக்கிவாரிப் போடும்படி மேலும் சொன்னார்:
"ஆம். அந்த பஸ்தான். இதுவரை ஆகாசத்தில், பூமியில் இல்லாத பொருளெனக் கண்மூடிக் கைவிரித்துத் தேடத் துழாவுவதைப் பார்த்தீர்களா? ஆடி அசைந்து நிற்கிறது பஸ். ஆட்டம் ஓய்ந்து நிற்கவில்லை..... மெல்லென தன் நிறுத்தத்திலிருந்து வரும் பஸ். காதல் முகர்ந்த மேகங்கள் அவ்வப்போது வர, தாங்காது தளர்ந்து ஆடும் பஸ்...... விரிந்த சாமரம் போன்று இந்த வீதியை, வீதியின் காற்றுமண்டலத்தை அசுத்தப்படுத்துவதா அது? அல்லது அழிந்துபடுவதற்காகத் தன்னையோ தனக்காக இந்த பூமியின் எந்தெந்த மூலையிலிருந்தோ உறிஞ்சி எடுக்கப்படும் பெட்ரோலையோ இழந்து ஏங்கியா நிற்கிறது? எல்லாம் ஏன், எதற்காக?"
"என்ன சார், பெரிய கவியாகிவிட்டீர்களே.. இன்றைக்கேன் உங்களுக்கு இத்தனை வேகமும் வெறுப்பும்.....!" என்று கூறிவிட்டு, அன்று இவர் பேச்சும் புன்சிரிப்பும் வார்த்தைகளும் எனக்குப் பிடிக்கவில்லை என்பதால் பதிலுக்குக் காத்திராமல் பஸ்ஸிலே ஏறினேன்.பஸ்ஸிலே ஒருத்தி. நீண்ட கழுத்து. முகத்திற்குக் கீழே நீண்டு, செல்வோரைக் கவர்ந்து இழுப்பது போல சங்காய் வளைந்திருக்கும் கழுத்து. வெயிலுக்கெனத் தலையில் ஒரு தொப்பி. அதில் ஒரு பட்டையென அப்போது நாகரீகப்பாங்கில் தோற்றங்கொண்ட அவளை அநேகர் பார்த்திருக்கலாம். ஒருவேளை அவள்தான் சுமியோ...! அவளைப் பற்றிய மற்ற்வர்களுடைய எண்ணங்களை நான் கண்டுகொள்ள முடியவில்லை. பகல் ஒளி பாதிக்குமேல் உட்புகத் தயங்கும் பஸ்ஸிலே மனிதர்கள் ஜீவ களை அற்றுத்தான் நிற்கிறார்கள். யாருக்கும் எட்டும் வெளியெனும் இடமுமின்றி கூட்டமான பேரின்ப உணர்ச்சியை உணரச் சிறப்பித்ததுதானோ இந்த பஸ்? உச்சிவெயிலின் நிழல்களென அதில் நடமாடும் பயணிகளுக்கும் அடுத்தடுத்துப்படரும் அவர்கள் நிழல்களுக்கும் வித்தியாசம் காணக்கூடாத திகைப்பைக் கொடுக்கும். பஸ், நிஜத்தில் எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? பஸ்ஸிலே பயணிக்கும் நாம் யாவரும் மௌனி எழுதுகிற இந்தக்கதையில் வருவோரின் சாயைகள்தாமா...? அல்லது பெக்கெட்டின் கதையில் கோடோவுக்காகக் காத்திருப்பவர்களின் சாயைகள்தாமா...? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்? என்பன போன்ற பிரச்னைகளை என் மனம் எழுப்பியபோது, ஒருதரம் என் தேகம் முழுவதும் மயிர்க்கூச்செறிந்தது. அவள் தேகத்தை யாரோ இடித்துக்கொண்டதும் ஓங்கிக் கூக்குரலிட்டாள். வெகுகாலம் சாம வேத வயலின் ஒலியில் மூழ்கித்திளைத்து உறங்கியவன் திடுக்கிட்டு விழித்ததைப் போல அந்த சுருதி என் காதில் முழங்கியது. தனிமைகொண்ட வேளையில் யார்யாரோ பஸ்ஸிலிருந்து இறங்கிய போதெல்லாம் என்னை இடித்துவிட்டீர்களே என அவள் அரற்றியது போல உணர்ந்தேன். அரற்றியதும் யார், இடிவாங்கியது அவளோ இல்லை நானோ, இடிகொடுத்ததும் அருகிலிருந்த முதியவரோ இல்லை நானோ எனத் தெரியாது வலியில் தடுமாறிய நிலையிலே நிமிர்ந்து மேலே நோக்கினேன். பஸ் ட்ரைவர் அருகில் ஜோதி கொண்டு ஜ்வலிப்பது போன்று நிசப்தத்தில் தனிமையாக ஒரு பெரிய சுடர். திடீரெனச் சிறிது மறைந்து பழையபடியே அமைதியில் தெரிந்தது. அவளோ இன்னொருத்தியோ என எப்போதோ ஏற்றிய அந்தத் தீபத்தின் மறைவும் தோற்றமும் என்னைப் பித்தமாக்கின. சற்றே தூண்டி என்னுள் எரிந்த ஒளி நிமிர்ந்து ஜ்வலிக்கத்தான் இன்று இது நிகழ்ந்ததோ! அப்போது ஓர் இருக்கை வெற்றிடமாகப் பாழ்வெளியில் மிளிர அதில் பயண வேகத்தில் பாய்ந்துசென்று அமர்ந்தாள் சங்குக்கழுத்துக் கொண்ட அந்த யுவதி. வெற்றிடங்களை வெற்றிடங்களாக விட யாருக்கும் மனதில்லையோ என, வெற்றிடமான என் மனத்தை அந்த தீபம் இன்னும் தூண்டும்போதே, நினைத்திருந்தேன்.
என் மனத்தின் வெற்றிடம் மீண்டும் நிறைய அடுத்த இரண்டு மணி நேரம் ஆனது. என்னையே நான் வெறுத்துக்கொள்ளாதபடி, மனக்கிளர்ச்சியோ சஞ்சலமோ நிரம்பாதபடி, நடந்தேன். அந்த ரயில் நிலையத்திலிருந்து செல்லும் வழியில்தான். யாருமற்ற ரயில் நிலையத்தின் நீடித்த மௌனம் என்னைப் பைத்தியமாக்கிவிட்டது. வெறித்து வெறுமனே நிற்கச் செய்தது; ஆம், ஒரு கணிதச்சூத்திரம் தன்னை நிறுவிக்கொள்வதென, உச்சி வெயிலில் கடைக்காரரிடம் வாங்கிய அந்த சிகரெட்டைப் பற்ற வைக்கும் நேரமும் அதுவானது. அப்படிப் பற்ற வைக்கும்போதே மீண்டும் கண்டேன் அவளை. தொப்பியும் பட்டையுமின்றி அவளும் ஒருகணம் நின்று திரும்பி என்னைக் கண்டுகொண்டுவிட்டாள். எதிரில் நின்ற மின்விளக்குத்தூணைச் சிறிது நேரம் ஊன்றிப் பார்த்தாள். என்னை நோக்கி ஆணை இடுபவளாகத் தோன்றினாள். அவள் பார்வை என்னை ஊடுருவித் துளைத்துச் சென்றது. தன் உள்ளூற உறைந்த ரகசியத்தை, ஒரு பைத்தியத்தின் பகற்கனவில் பாதி சொல்லிவிட்டு மறைவது போல, ஒருமுறை மாத்திரமே கண்ட அந்தப்பார்வை என்னை விட்டகன்றது. ஆம், இன்னொருத்தி அவளிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் உணர்ச்சிகள் எண்ணங்களாக மாறுமுன், அந்த இன்னொருத்தி சொன்னது என்ன என்பதை என் மனம் புரிந்துகொள்ளுமாறு கேட்டேன்.
"மேலே துப்பட்டாவை வசீகரமாய்ப் போட்டுக்கொள்ள வேண்டிய விதியின் நிழல் உன்னைத் துரத்துகிறது."அந்த இன்னொருத்தி என்ன சொன்னாள்? அவள் என்ன கேட்டாள்? நான் என்ன செய்ய இருக்கிறது? எல்லாம் ஒரு கனவுதானா? எல்லாம் நழுவுகின்றன. இறுகிய பிடிப்பிலும் துவண்டு புகை போல நழுவுகின்றன. ஆனால் எல்லாம் மாயை என்பதை மட்டும் உணர்த்தாது மேலே அதோ எனக் காட்டி இருண்ட வழியில் அடையும் தடுமாற்றத்தில் அகஸ்மாத்தாகத் தாண்டிக் குதித்தாவது சரியான வழியை அடைய மாட்டோமா என்ற நம்பிக்கைதான் எனக்கும் உங்களுக்கும் எஞ்சுமல்லவா!வீதியின் விளக்குத்தூணின் உயரே உற்று நோக்கினேன். மாலை வானம், இரவில் வர இருக்கும் அழியாச்சுடர்களான எண்ணிலா நகை நட்சத்திரங்களுக்கென, தன்னைச் செக்கர் வண்ண ஆடையாக மாற்றிக்கொண்டிருந்தது. பிரபஞ்சத்தின் அபத்தத்தில் அடுத்து வர இருப்பதை அறிய முடியாத பிரமிப்புடன் பெருமூச்செறிந்து நடந்தேன். எட்டிய நடையின் ஓட்டத்தில் தாண்டி வீடு வந்துசேர்ந்த நான், பிறகு பஸ்ஸில் வீதியில் என எங்கும் அவளைக் காணவில்லை. நிஜத்தில் இங்கே இதற்காகத்தான் அவள் வந்தாளா, வருகிறாளா, எப்போது வருவாளோ என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அது அவளுக்குத் தெரியுமோ என்பதும் எனக்குத் தெரியாது. பெக்கட்டின் நாடகத்தில் வருவதைப்போலன்றி இங்கே கோடோ என்பவர் கடைக்காரர் எனத் தோற்றங்கொண்டு அருகில் வருபவராக இருந்தாலும் அதன் மூலம் அபத்தம் என்பது கூட்டாகக் கூடினாலும் அவள் வருகை பற்றி எனக்குத் தெரியாது. எல்லாம் 'அவளுக்கு'த் தெரியும் என்ற எண்ணம்தான் எனக்கு. அவள் என்பது இருந்தால்.படங்கள் - மௌனியின் ஊரான சிதம்பரம் கோயிலில், மௌனியெனத் தோற்றங்கொள்ளும் ஸாமுவல் பெக்கெட் பாரீஸ் நகர் உணவுவிடுதியில்.
108: இதுவரை - குறிமுறை, ரெட்டைவாசல், புதுமைப்பித்தன், கனா, மிகை கழித்தல், எழுத்துமாறு, உருவக வழி இனி 108: 9 - தர்க்க அலசல்
காதல் பிசாசின் கண்ணும் நோக்க - ஸில்வியா ப்ளாத்
காணும் எவரையும்
முடமாக்கும்
கருநிலவுக் கண்மணியர்
இருவரும்.
உள்நோக்கி,
தேரையின் உடலாவர்
அழகி இருவரில்
ஆடியாம் இவருள்
உலகும் தான் கவிழும்:
இனிதாய்ப் புகழ்வோரின்
எரியம்பு பலவும்
திரும்பி,
தாம் விட்ட கை தாக்கும்.
தாக்கி
வெளிர்செம்புண் அபாயமதை
வீங்கவும் வைக்க
மாயம்பல கூட்டும்
மாயத்தாள் எந்தன்
முகமழிக்குமோ தீயும்?
பிம்பமதைத் தேடினேன்
வெதுப்பும் ஆடியில்.
அழகுபல கரிக்கும்
உலையவரை
வெறித்தும் யான்காண
தெறித்தும் பட்டாங்கே
வீனஸே ஒளிர..
Sylvia
Plath, On Looking into the Eyes of a Demon Lover, 1955
18 ஏப்ரல் - ஸில்வியா
ப்ளாத்
என் நேற்றைய நாள் யாவின்
குழைசேறும்
என் கபாலக்குழியில் அழுக
கருத்தரிப்போ குடற்சிக்கலோ
சட்டென விளங்கும் யாதோ
என் வயிறும் சுருங்க
நினைக்கிலேன்
உனையல்லால் அதை.
பசும்பாலாடைக்கட்டி நிலவென
எப்போதோ வரும் உறக்கமும்
வயலட் இலை பலதாய்
சத்துள்ள உணவும் -
இவையே காரணம்.
புல்வெளியில்
ஊழென உறுத்துவைக்கும் அடி சிலதில்
வானம் மர உச்சியென இடம் சிலதில்
எளிதில் மீளாமல்
நேற்றுத் தொலைந்ததுமோர் எதிர்காலம்
மருள்மாலையிலோர் டென்னிஸ் பந்தென.
அறிவுப்பெருக்கமும் மையமழிப்பும் - லத்தூரும் ஸெர்ரும்
நவீன யுகத்தில் சமுதாயம் என்ற வரையறை உதித்தது எப்போது, இந்தக்கருத்து
மனிதர்களும் அவர்களுடைய உறவுகளும் மாத்திரம் இடம்பெறுவது எப்போதிருந்து, மனிதமற்றவற்றை (பிற
உயிரினங்களை, பொருட்களை..) அது
விலக்குவது ஏன், இப்படி மனிதமற்றவற்றை
விலக்கி மனிதர்களை மாத்திரம் வைத்துச்செயல்படும் சமூகம் என்றும் சமூகவியல் என்றும்
வருகிற விளக்கத்துக்கு என்ன பொருள் என்ற ஆதாரமான கேள்விகளை எழுப்புகிறார் லத்தூர்.
லத்தூரின் இந்தப்புத்தகம் தற்போது தாக்கியிருப்பது, சமூகவியல்-துறை ஆய்வாளர்களை.
ஆக,
இதுவரை
லத்தூர் கேட்பவை மிகமிக அடிப்படையான கேள்விகள் என்று புரிந்துகொள்ளலாம். அதாவது, விஞ்ஞானம், இயற்கை, சமூகம், சட்டம் என நாம்
நம்பிக்கொண்டிருப்பவை பற்றி மிக அடிப்படையான கேள்விகளை, படிப்படியான தம்முடைய
ஆய்வுகளின் பின்புலத்தில் தொடுத்திருக்கிறார்.
1. முதலில் விஞ்ஞானம்
என்பது, உண்மை குறித்த
கோட்பாட்டில் தங்கிநிற்பது மாத்திரமன்றி உண்மை-உருவாக்கத்துடன் நிகழ்வதல்லவா என்று
கேட்கிறார். இதை வாசித்த விஞ்ஞானிகளும் விஞ்ஞானத்தைக் கோட்பாட்டுத்தளத்தில் அணுகிய
வரலாற்று-ஆசிரியர்கள் பலரும் சர்ச்சிக்க வந்தார்கள்.
2. பிறகு இயற்கை என்பதை
சூழலியல், விஞ்ஞானம், அரசியல் போன்றவை
எவ்வாறு வரையறை செய்திருக்கின்றன என்பதை அலசுகிறார். சுற்றுச்சூழல்-நெருக்கடிகள்
மிகுந்துவரும் நிலையில் இந்த வரையறைக்குள் இயங்குவது இனியும் சாத்தியமா என்று
கேட்கிறார். இதை வாசித்த சூழலியல்வாதிகள்,
ஆர்வலர்கள்
அதிர்ச்சியடைந்தார்கள். இன்னும் இதுபற்றிய சர்ச்சை முழுமையாக நடந்தேறவில்லை.
3. இப்போது சமூகம் என்ற
வரையறை எங்கே தோன்றியது,
சமூகவியலின்
விளக்கங்கள் எப்படி பொருட்கள் மற்றும் மனிதமற்றவற்றின் உலகை விலக்கிவைத்து
உருவாகின்றன எனக் கேட்கிறார். இது சமூகவியல்-அறிஞர்களைத் தாக்கியி்ருக்கிறது.
இதுகுறித்த சர்ச்சைகள் இப்போது நடக்கின்றன. அத்துடன் சட்டத்தின் உருவாக்கம் பற்றிய
ஆய்வையும் செய்து முடித்திருக்கிறார். ஃப்ரான்ஸின் சட்டப்புலத்தை வலைப்பின்னலாக
வைத்து லத்தூர் செய்த இந்த ஆய்வுப்புத்தகம்,
வரும்
ஆண்டு ஆங்கிலத்தில் வர இருக்கிறது.
லத்தூரும் சரி,
மிஷெல்
ஸெர்ரும் சரி, அறிவுத்துறைகளையோ
அரசியலையோ வெறுப்பவர்களோ,
நிராகரிப்பவர்களோ
அல்லர். மாறாக, அறிவுத்துறைகளும்
அதிகாரமும் அறமும் எங்கே சந்தித்துக்கொள்கின்றன என்பதை ஆராயும் நோக்குள்ளவர்கள்
எனலாம். அதாவது இந்தச்சந்திப்பு நடக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம், நமதான் பார்வைகளுக்கு
ஆதாரமாக ஏற்கனவே இருக்கும் சட்டகங்கள் நம்மீது எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன
என்பதைப் புரிந்துகொள்ள இவர்களுடைய ஆய்வுகள் உதவும்.
சொல்லப்போனால்,
நவீன
யுகத்தில் அறிவுத்துறைகளின் பெருக்கம்,
அதிகாரம், அறம் தொடர்பாக, கடந்த ஒரு
நூற்றாண்டுக்கும் மேலாகப் இந்த அடிப்படைக்கேள்விகள் எழுப்பிவந்திருப்பவர்களின்
வரிசையில் வருவோர்தாம் லத்தூரும் ஸெர்ரும். விஞ்ஞானம், இயற்கை, சமூகம், சட்டம் பற்றிய
நம்முடைய கேள்விகளும் தேடலும் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் லத்தூர், மிஷெல் ஸெர்
போன்றவர்களின் புத்தகங்கள் நமக்கு உதவும்.
லத்தூரின் சமூகவியல் பற்றிய கேள்விகளை எதிர்கொள்ளும்
முன்பாக, லத்தூர் மற்றும்
மிஷெல் ஸெர்ரின் பொதுவான ஆய்வுகளும் கருதுகோள்களும் இணைகிற, மற்றும் விலகுகிற
புள்ளிகள் சிலதை இந்த மாதம் காணலாம்:
இருவரும் அறிவுப்பெருக்கத்தையும் அத்துடன் இணையாக
நிகழ்வனவற்றையும் புரிந்துகொள்ள மையமழிப்பு (de-centering) என்ற அணுகுமுறையைக் கையாள்கிறார்கள்.
லத்தூரைப் பொறுத்தவரை, மேற்குலகின் நவீன
யுகம் (நவீனத்துவம் அல்ல,
நவீன
யுகம்) என்பது பதினேழாம் நூற்றாண்டு தொடங்கி ஓர் எழுதாத அரசியல்-சட்டம் போல, ஒரு சட்டகமாகச்
செயல்படும் ஒன்று. இந்தச்சட்டகமானது இயற்கை,
சமுதாயம்
என்ற எல்லைகளை உருவாக்கிய ஒன்று. இதையடுத்து,
இவற்றில்
இயற்கை என்பதை ஆராய்வது விஞ்ஞானமாகவும் சமுதாயம் என்பதை ஒழுங்குசெய்வது
அரசியல்-பொருளாதாரமாகவும் ஆயின. இதன்மூலம் மனிதம்-மனிதமற்றவை என்பவை
ஒழுங்குசெய்யப்பட்டன... ஆனால் இந்த எல்லைகளைத் தாண்டிநிற்பன hybrids என்பதை, சென்ற இதழ்களில்
பார்த்தோம். இந்த hybrids
என்பனவற்றை
எதிர்கொள்வதை விலக்கியே இந்தச் சட்டகம் செயல்பட்டது, இன்னும் செயல்படுகிறது.
நம் காலத்திய hybrids
என்பனவற்றை
- எடுத்துக்காட்டாக ஓஸோன் ஓட்டை,
செய்மதி, அணுக்கழிவுகள், மரபணுத்தொழில்நுட்பம்
ஆகியவற்றை - எதிர்கொள்வதற்கென மனிதம்-மனிதமற்றவை என்ற எல்லையைக் கடக்க
வேண்டியிருக்கிறது. கடக்கும்போது (மனித அல்லது மனிதமற்ற) செயலி (actor) மற்றும் இந்தச்செயலி
திரட்டுகிற, இந்தச்செயலியைத்
திரட்டுகிற வலைப்பின்னல் (network)
ஆகியவற்றைப்
பொருத்தி, இவற்றின் இயக்கம்
எப்படி நடக்கிறது என்பதை வரைய வேண்டிவருகிறது. இந்த வரைவைத்தான் இன்று லத்தூர்
மற்றும் அவருடைய சக-ஆய்வாளர்கள் கொணர்ந்த actor-network-theory
அதாவது
ANT என்கிறோம்.
ANT அதாவது செயலி மற்றும்
வலைப்பின்னல் குறித்த ஆய்வை எப்படி நிகழ்த்துவது என்ற விவாதங்கள்
ஓய்ந்தபாடில்லை... ஓயும் எனத்தோன்றவுமில்லை... அதேவேளை இப்படி வரையும்
முயற்சியின்வழியாக ஒன்றைக் கூறலாம்: நம்முடைய நவீன் உலகம் என்பது, இந்த hybrids-ஐ அடிப்படையாகக்
கொண்டு, அவற்றில்
தங்கி-நின்று இயங்குவது என்பதை ஏற்கும் அதே நேரம், இந்த hybrids
என்பனவற்றைக்
கண்டுபிடிப்புக்களாகவோ பொருட்களாகவோ மாத்திரம் நினைக்கப் பழகியிருக்கிறோம் எனலாம்; நமக்காகப்
பணியாற்றும் இவற்றை விலக்கிவிட நாம் பழகியிருக்கிறோம்; அதன்மூலம் இவற்றால்
வரும் நிலைமைகளை எதிர்கொள்ளாமல் இவற்றின் தாக்கத்துக்கென நிறையப் பலிகொடுக்கிறோம்.
ஆக, நாம் வாழவேண்டி
வீழ்பவை பல - உயிரினங்கள்,
கைப்பொருட்கள்
(artefacts) என நிறைய. மாறாக
இவற்றைத் தன்னிலைகளாக ஏற்கும் நிலை வரவேண்டும்! மனிதமற்ற hybrid-களுக்கு உள்ளுமை
உண்டு என்பதை நாம் ஏற்கவேண்டும். இதுதான் லத்தூரின் வாதம். அதாவது, இவற்றை உயிரினங்கள், கண்டுபிடிப்புக்கள், பொருட்கள் என்று
மாத்திரம் வைக்கும்போது நவீன யுகத்தின் சட்டகத்துள் வீழ்கிறோம், மாறாக இவற்றின்
உள்ளுமையை ஏற்கும் நிலையில்,
இவற்றைத்
தன்னிலைகளாக அங்கீகரிக்கும் நிலையில்,
இவற்றுக்கான
உரிமையைப் பேசுகிற புதிய சட்டகத்துக்குப் போக முடியும் என்பது லத்தூரின் வாதம்.
ஆக,
"இயற்கை"
என்பதான "புற–உலகும்"
மனிதர்களின் "அரசியல்-சமுதாய உலகும்" ஒரே வலைப்பின்னலில் இயங்குபவை
என்று லத்தூர் கூறுகிறார். மிஷெல் ஸெர்ரின் ஆய்வுகள் சற்றே வித்தியாசமானவை. இந்த
வரையறைகள் பிறந்தது, இவற்றுக்கிடையே
ஏற்பட்ட நீண்ட மோதலின் பிறகே என்கிறார் மிஷெல் ஸெர். அதாவது இவற்றின் மோதலும் சரி, இணைவும் சரி, மனிதகுலத்தின்
தொடக்கத்திலிருந்தே நடப்பவை என்பது ஸெர்ரின் துணிபு. ஆக, மனித குலத்தைத்
தாண்டி இயங்கிய, சீற்றமும் கொடூரமும்
கொண்டதான இயற்கை என்பதுடன் மோதியும் இணைந்தும் பெற்ற கொடையாக வாழ்வைக் கருத
வேண்டும். இதைத்தான் உலகெங்கும் இயங்கும் ஞான-அறிவு மரபுகள், கலை-இலக்கியங்கள்
கற்றுத்தருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ஸெர். ஆக, இந்த மோதல் என்பதும்
இயற்கை-சமுதாயம் என்று பிரித்து வரையறை செய்வதும் நவீன யுகத்துடன் தொடங்குவன அல்ல, முன்பும் இருந்தனதாம்
என்கிறார் ஸெர். ஆனால், மேற்குலகில் நவீன
யுகம் தொடங்கியபோது இயற்கை-நிலைக்கு எதிராக "சமுதாயம்" என்பது புதிதாகக்
கட்டப்பெற்றது உண்மையே என்கிறார் ஸெர். அப்போது "இயற்கை" என்பதை
வெல்லும் நிலையில், அதைக் கைப்பற்றும்
நிலையில் அனைவரையும் ஒருங்கிணைத்து,
அந்த
ஒருங்கிணைவைத்தான் சமுதாயம் என வரையறை செய்தார்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
இப்படித்தான் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், அறிவொளிக்காலத்தில்
ஃப்ரெஞ்சு அறிஞர் ழான்-ழாக் ரூஸ்ஸோ எழுதிய சமுதாய-ஒப்பந்தமும் அதையொட்டிய மனித
உரிமைகளும் பெரும்எழுச்சி பெற்றன. இந்த எழுச்சியிலிருந்து இயற்கை
விலக்கப்பட்டிருக்கிறது. இயற்கையை வென்று,
அதைக்
கைப்பற்றுவதே இந்த சமுதாய-ஒப்பந்தத்தின் அடிநாதம்... இது பரவி, இப்போது நவீன
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின்வழி உலகுதழுவியதாக ஓங்கியிருக்கிறது. ஆக
இந்தப்போக்கில் ஆட்பட்டு,
நம்மில
பலர் புற-இயற்கை-உலகு என்றால் என்ன என்றே தெரியாதவர்களாக, நகர வாழ்க்கையில்
ஆழ்ந்திருப்பவர்கள் என்கிறார் ஸெர்.
நம்மைத்தாண்டி இயங்கும் உலகை நாம் தங்கி-நில்லாததாக எண்ணிக்
கழித்துக்கட்டிய நமக்கு,
முன்பு
நாம் இப்படித் தங்கி-நின்றதின் எல்லைகளை விவரிக்கும் ஞான-மரபுகளின் அவசியமும்
இல்லாது போகிறது! அதற்குப் பதிலாக,
அறிவு
என்பதை, புற-உலகை வென்று
கைப்பற்றும் விஞ்ஞானமாக மாத்திரமே எண்ணும் நிலைக்கு ஆளாகிவிட்டிருக்கிறோம். ஆனால், இந்தப் புற-உலகு என்ற
வரையறைக்கு சமுதாய-ஒப்பந்தத்தில் இடமில்லாமல் போகும்நிலை வந்திருக்கிறது. அதாவது, இந்தச்
சமுதாய-ஒப்பந்தத்தின் விரிவாக்கத்தின் போக்கில் இந்தப் புவிப்பரப்பையே
அழித்தொழிக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறோம். இந்த நிலையில் நாம்
விட்டுவைத்திருப்பதே இயற்கை என்பதாகியிருக்கிறது! இயற்கைமீது நாம் பெற்ற வெற்றி
ஒருவாறாக நம்முடைய எல்லைகளை,
இயற்கையில்
நாம் தங்கி-நிற்கிறோம் என்பதை,
தெளிவாக்கியிருக்கிறது.
இந்த நிலையிலாவது இயற்கையைத் தன்னிலையாக அங்கீகரிக்க வேண்டும், அது நம்முடன் இணைந்தும்
எதிர்த்தும் செயல்பட வல்லது எனபதை அங்கீகரிக்கும் ஓர் புதிய இயற்கை-ஒப்பந்தம்
வேண்டும் என்கிறார் ஸெர்.
சொல்லப்போனால்,
இயற்கையை
வெல்கிற வல்லமையையே வென்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது மனிதஇனம். இயற்கையை
வென்று, கைப்பற்றி, அதற்கு ஏதும் அளிக்க
முடியாமல் இருப்போரை அடுத்துண்ணிகள் (parasites)
என்றுதான்
அழைக்க வேண்டும் என்கிறார் ஸெர். இந்த அடுத்துண்ணி-நிலையைக் கடக்க வேண்டி, இயற்கை-சமுதாயம் என்ற
பிளவைக் கடக்கிற புதிய இயற்கை-ஒப்பந்தம் வேண்டும் என்கிறார் ஸெர்.
ஆக,
லத்தூர்-ஸெர்
இடையில் ஒரு முக்கிய வித்தியாசம் - லத்தூரைப் பொறுத்தவரை, வலைப்பின்னல்களில்
மனிதர்களும் மனிதமற்றவையும் தன்னிலைகளாக இயங்குவதை வரைந்துகாட்டுவது
முக்கியமாகிறது. இதன்மூலம் இயற்கை-சமுதாயம் என்ற பிளவைச் சிந்தனையிலும் செயலிலும்
கடக்க முடியுமா என்பது அவருடைய கேள்வி. ஸெர்ருக்கோ இயற்கை என்பது தன்னளவில் அலறிக்கொண்டிருக்கும்
ஒன்று, இன்று உயிரின் அதாவது
வாழ்வின்-சாவின் வேதனையாக இதை உணரலாம். இதன் ஒழுங்கு என்பது தன்னளவில் உருவாவது.
மனித வரையறைகளுக்கு அப்பாற்பட்டது. இதில் தங்கி-நிற்பதிலிருந்து விடுபடும்
முயற்சியின் விளைவாக, அது நம்மீது
தங்கி-நிற்கும் நிலையை இன்று வந்தடைந்திருக்கிறோம் என்கிறார் ஸெர்.
ப்ரூனோ லத்தூரும் மிஷெல் ஸெர்ரும் நடத்திய ஐந்து முக்கிய
விவாதங்கள் Conversations
on Science, Culture and Time என்ற புத்தகமாக வெளிவந்து, பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில்
இருவரின் எழுத்துக்களையும் வைத்து தீவிர விவாதங்கள் நடந்திருக்கின்றன, எவ்விதத்
துறைச்சட்டகங்களையும் தாண்டி இந்த விவாதங்கள் இன்னும் நீள்கின்றன...
இந்த இருவரையும் சந்தித்துப்பேசும் வாய்ப்பும் என்னைப்போன்ற
ஒருவனுக்குக் கிடைத்திருக்கின்றது. அப்படியும் இவர்களின் ஆய்வுகள், விவாதங்கள் பற்றித்
தமிழில் கொண்டுவர முடியவில்லை என்றால் அந்தத்தவறு என்னுடையதுதான்!