Saturday, 13 August 2016

மார்க்ஸ் அறியாத ஒரு உலகம் (ஓரங்க நாடகம்) - பிரேம்

மார்க்ஸ் அறியாத ஒரு உலகம்
(ஓரங்க நாடகம்)
(2016 , ஆகஸ்ட் 6, மார்க்ஸ் தன் அறையில் கணிணி முன் உட்கார்ந்து எழுதுருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஏங்கெல்ஸ் வந்து அறைக் கதவை மெல்லத் தட்டுகிறார்.)
மார்க்ஸ் : வாருங்கள் தோழர், இந்தக் கம்ப்யூட்டர் அடிக்கடி தொல்லை கொடுக்கிறது, இணைப்பும் சரியா இல்லை. எப்படித்தான் “பெட்ரோலியம் தீர்ந்த உலகமும் பிச்சை எடுத்து வாழும் உலக முதலாளிகளும்” என்ற நூலை எழுதி முடிக்கப் போகிறேனோ!
எங்கெல்ஸ்: என்ன பெட்ரோலியம் தீர்ந்த உலகமா, அதனை கையாளத்தான் அணுசக்தியைப் பெருக்கிக் கொண்டிருப்பதாக உலக கூட்டு முதலாளிகள் சொல்கிறார்கள். உலகத் தொழிலாளர்கள் அதனைக் கொண்டாடுகிறார்கள். இந்த சமயத்தில் இப்படி ஒரு நூலை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.
மார்க்ஸ் : “அணுசக்தி பெருகிய உலகமும் அன்றாடம் உணவற்ற மக்களும்” என்ற அடுத்த நூலை நீங்கள் எழுதுங்கள் எங்கெல்ஸ்.
எங்கெல்ஸ்: செர்னோபிலும், ஃபுக்குஷிமாவும் கண்டபின் அணுவுலை என்று எழுதவே பயமாக இருக்கிறது.
மார்க்ஸ் : ரஷ்ய அணுவுலை ஆபத்தற்றது, அமெரிக்க அணுவுலைதான் ஆபத்து நிறைந்தது என்று இந்தியாவின் கம்யூனிஸ்ட்டுகள் சொல்வதாகக் கேள்விப்பட்டேன்.
எங்கெல்ஸ்: செர்னோபில் இப்போது ரஷ்யாவில் இல்லை, சோவியத்தும் இல்லையென்பதால் அப்படிச் சொல்வார்களாக இருக்கும். இந்திய இயக்கவியல் மாறுபட்டதாகத்தான் இருக்கும் போல.
மார்க்ஸ் : மார்க்ஸ் ஏங்கெல்ஸ் என்ற பெயரில் சென்ற 19 ஆம் நூற்றாண்டில் இருவர் இருந்து எழுதியிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்கள் உலகின் அனைத்து வகையான அடக்கு முறைகளுக்கும் எதிராக எழுதியிருக்கிறார்கள், மனித துயரங்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லியிருக்கிறார்கள் என்றும் படித்திருக்கிறோம். இப்பொழுது அவர்களை எப்படி மதிப்பிடுவது கொஞ்சம் உரையாடலாமா?
எங்கெல்ஸ்: கண்டிப்பாக, சமூக வரலாற்றில் ஒரு காலகட்ட அறிவுமுறையின் வழியாக ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டபின் அந்தக் கருவியும் உழைப்பும் இணைந்து அதற்கு முன்பிருந்த அறிவை முன்னில்லாத வகையில், பின்திரும்ப முடியாத வகையில் மாற்றியமைத்துவிடும். அது பிறகொரு கருவியை, இயந்திரத்தைக் உருவாக்கும் போது தனக்கு முன்னிருந்த அறிவியலை மாற்றியமைத்துவிடும்.
மார்க்ஸ் : ஏர் உழும் கலப்பையை உருவாக்கிப் பயன்படுத்த ஒரு சமூகம் கற்ற பின் வேளாண்மை பற்றிய அதன் மொத்த அறிவும் மறுகட்டமைப்புச் செய்யப்பட்டுவிடும்.
எங்கெல்ஸ்: உணவு முறை தொடங்கி ஒவ்வொரு வாழ்வியல் செயல்பாடும் உருமாறிவிடும். நீராவி இயந்திரங்கள், மின்சாரம், அச்சுப் பொறிகள், காட்சிக் கருவிகள், கணிணி, தொலைத் தொடர்புகள் என எண்ணற்று விரியும் நம் காலத்துக் கருவிகளும் கருத்துலக மாற்றங்களும் இதற்கு நேரடி உதாரணங்கள்.
மார்க்ஸ் : இதனை அதிகம் விவரித்துச் சொல்லத்தேவையில்லை. பழைய மார்க்சிய இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பொருள்வயப் பார்வையிலேயே ஏராளம் விளக்கப்பட்டுள்ளன. முற்கால மார்க்சியத்தின் தொடக்கப் பள்ளி அறிவுடன் இது தொடர்புடையது.
எங்கெல்ஸ்: பொருள் பற்றிய அறிவு கருவிகளை உருவாக்குவதும், கருவிகள் கருத்துகளை மாற்றுவதும் கருவியே கருத்தின் வடிவம் எடுப்பதும், கருத்துருவக் கருவிகள் உருவாவதும், கருவிக்-கருத்துருவங்கள் பெருக்கமடைவதும் என இன்றைக்கான வலைப்பின்னல் உருவாகியுள்ளது.
மார்க்ஸ் : பெட்ரோலியப் பயன்பாடு கண்டறியப்படுவதற்கு முன்னான உலகம்- பின்னான உலகம் இரண்டையும் ஒப்பிட்டு விளக்கினால் தற்கால உலக அரசியலாக விரிவடையும்.
எங்கெல்ஸ்: லூயி அல்துஸர் கருத்துருவக் கருவிகள், கருத்தியல் இயந்திரங்கள், அடக்குமுறை நிறுவனங்கள், எதற்கு வம்பு Ideological State Apparatus- Repressive State Apparatus என்றே வைத்துக்கொள்வோம், அந்த விளக்க முறையில் கருத்து-கருவி இணைப்பை மற்றொரு தளத்திற்கு நகர்த்தினார்.
மார்க்ஸ் : முன்-மார்க்சியம் தனக்கு முன்பிருந்த, தன் காலத்திலிருந்த அனைத்து வகையான அடக்கு முறைகள், ஆதிக்க அமைப்புகள், வர்க்க ஒடுக்குமுறைகள், அரசு சமூக ஆதிக்கங்களை எதிர்ப்பதற்கும் , கலைத்து மாற்றுவதற்குமான முறைகளை தன் காலத்திய அறிவுகள், கருத்தியல்கள் கடந்து சிந்தித்து தொகுத்து தந்திருக்கிறது.
எங்கெல்ஸ்: ஆம், அதன் பொருள் உலக, கருவி-கருத்துலக எல்லை 19-ஆம் நூற்றாண்டு வரைதான். ஆனால் தற்கால உலக-சமூகங்களின் அரசியல் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாற்று வடிவம் பெறத்தொடங்கியது. அனைத்து அடக்குமுறை, அதிகாரம், அரசாதிக்கங்கள் பற்றியும் குறிப்புகள் கொண்ட முன்-மார்க்சியத்தில் மார்க்சிய அமைப்புகள், மார்க்சியத்திற்கு பிறகான அரசுகள், மார்க்சிய கட்டமைப்புகளின் வழி உருவாகும் வன்முறைகள், அதன்வழியான ஆதிக்க-அடக்குமுறைகள் பற்றி, அதிலிருந்து விடுதலை அடைவதற்கான போராட்டங்கள், அதன் வழிமுறைகள் பற்றியெல்லாம் குறிப்புகள் இல்லை.
மார்க்ஸ் : அது இருக்கவும் வாய்ப்பில்லை. வரலாற்றை முன்னறிய அது தேவநற்செய்தியல்ல. முற்கால மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் அறியாத, யூகிக்காத ஒரு உலக அமைப்பு உருவாகி அதன் அடுத்த கட்ட நிலைமாற்றத்தில் சோவியத்-கிழக்கு அய்ரோப்பிய பின்னங்கள் நிகழ்ந்து இன்றுள்ள உலகமயமான முதலாதிக்க கூட்டமைப்புகள் வரை மார்க்சியம்-அதன் எதிர் உலகம் என்ற முரண் வகையில் விரிவடைந்துள்ளது.
எங்கெல்ஸ்: அணுஆயுதங்கள் உள்ள, இரண்டு உலகப் போர்களைச் சந்தித்த, காலனியத்தால் சிதைவுண்டு தமக்குள் போரிட்டு மடியும் மக்களைக் கொண்ட 21 ஆம் நூற்றாண்டு உலகில் நிச்சயமாக நாம் அனைத்தையும் மாற்றியே எழுதியாக வேண்டும்.
மார்க்ஸ் : எதிலிருந்து தொடங்கலாம் ?
எங்கெல்ஸ்: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இருந்துதான்.
(பழைய பதிப்பு அறிக்கையை புரட்டிப்பார்க்கிறார்,பெருமூச்சு விட்டபடி அதனை மூடிவைக்கிறார்)
மார்க்ஸ் : பழங்கால வரலாறு பற்றி ஓரளவு தெளிவாகச் சொல்லும் இந்த நூல் எதிர்காலம் பற்றி, அடுத்து நடப்பது பற்றிய கற்பனைகளையே நிரப்பி வைத்துள்ளதே!
எங்கெல்ஸ்: துயரமும் அடக்கும்முறையும் கொண்ட சமூகத்தில் கனவுகள் கற்பனைகள் தேவைதானே! கற்பனாவாதமும், பழங்கால வரலாறும் மோதும் போது நிகழ்காலத்திற்கான உந்துதல் கிடைக்கிறதில்லையா?
மார்க்ஸ் : பிராய்டியத் தாக்கமா, பரவாயில்லை, ஆனால் அது நம்முடைய பெயரைக் கொண்ட இருவர் 1847-8 காலப்பகுதியில் எழுதியது. அப்போது இயந்திரத் துப்பாக்கிகளும், அணுஆயுதங்களும் இல்லை.
எங்கெல்ஸ்: குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்கூட அப்போது கிடையாது, செர்னோபில் பேரழிவும் நடக்க வில்லை, அத்துடன் ஹிட்லர், ஸ்டாலின் என்ற தேசியத் தலைவர்களும் அப்போது இல்லை. அதெல்லாம் தெரியாத அவர்கள் அந்தக் காலத்திற்கு தக்க எழுதியிருக்கிறார்கள்.
மார்க்ஸ்: உலகை மாற்றுவது பற்றி பேசுகிற ஒரு நூல் உலகம் கண்டபடி மாறிவிட்ட பின்னும் மாறாமல் இருப்பதா? நாம் புதிதாக மாற்றி எழுத வேண்டும்.
எங்கெல்ஸ்: அது முடியாது, மார்க்சிஸ்டுகள் உங்களை சும்மாவிட மாட்டார்கள். மார்க்சியம் ஒன்றே மாறாதது என்று நம்புகிறவர்கள் அவர்கள்.
மார்க்ஸ் : அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை, நான் மார்க்சிஸ்ட் இல்லை, கட்சியிலும் இல்லை.
எங்கெல்ஸ்: உங்கள் பிடிவாதம்...சரி இழப்பதற்கு எதுவுமற்றவர் நீங்கள் யாருக்காக பயப்பட வேண்டும், நடக்கட்டும். நான் அதனை முகநூலில் முன்னறிவிப்பு செய்கிறேன்.
மார்க்ஸ் முகநூலா? நூலே படிக்காதவர்களுடைய உலகத்திற்குள் நூல் பற்றிய அறிவிப்பா.
எங்கெல்ஸ்: அப்படிச் சொல்லாதீர்கள் படிக்கவில்லையென்றாலும் எழுதுகிறவர்கள் நிறைந்த உலகம் அது, எதற்கும் ஒரு தகவலைப் பதிந்துவிடுகிறேன்.
மார்க்ஸ் : நீங்கள் மட்டும் என்ன பிடிவாதத்தில் குறைந்தவரா? நடத்துங்கள், ஆனால் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை பார்த்திருக்கிறாயா நீ“ என்று பதிவுகள் வந்தால் என்னிடம் வந்து புலம்பக்கூடாது. வசைகள் வந்தால் உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். ஆமாம்,
எனக்குத் தொடக்க வரிகள் தோன்றிவிட்டன.
“ஒரு பூதம் உலகக் கம்யூனிஸ்டுகளைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது, அதுதான் கம்யூனிசம் என்னும் பூதம்.”
(முற்று பெறாத கையெழுத்துப் பிரதி)