http://kalachuvadu.com/current/issue-200/சூனியத்தில்-வெடித்த-முற்றுப்புள்ளி
சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி
கட்டுரை
பழந்தமிழ்ப் பனுவல்களைப் பதிப்பிப்பதில் சி.வை.தாமோதரம் பிள்ளையும் உ.வே.சாமிநாதய்யரும் எதிர்கொண்ட சிக்கல்களைத் ‘தமிழ் கூறும் நல்லுலகு’ நன்கறியும். 500, 1000, 1500, 2000 ஆண்டுகாலப் பழைமையுள்ளவற்றைப் பதிப்பிக்கும்போது ஏற்படும் ஐயங்களுக்கும் தடுமாற்றங்களுக்கும் விடை கண்டு ‘சிக்கலறுத்துத் தெளிதல்’ எவ்வளவு உழைப்பைக் கோரும் செயல்பாடு என்பதை விளக்கத் தேவையில்லை.
ஆனால் 100, 200 ஆண்டுகாலப் பனுவல்களுக்கும் இதே நிலைமைதான் தமிழில் நிலவுகிறது. ‘கமலாம்பாள் சரித்திரத்’தின் முதல் பதிப்பைச் சென்ற நூறாண்டுகளில் பார்த்தவர் எண்ணிக்கை அதிகமிருக்க வாய்ப்பில்லை. இந்நாவலின் இரண்டாம் பதிப்பைப் பயன்படுத்தித்தான், இன்றைய பதிப்புகள் உருப்பெற்றுள்ளன. சுப்பிரமணிய பாரதியின் எழுத்துகளில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியவை இன்னுமுள்ளன என்பதில் வியப்பில்லை; க.நா. சுப்ரமண்யத்தின் எழுத்துகளுக்கும்கூட அதேகதிதான் என்றறிவதில் வேதனை மிகவில்லையா? புதுமைப்பித்தனுக்கு ஆ.இரா. வேங்கடாசலபதியும் கு.ப. ராஜகோபாலனுக்குப் பெருமாள் முருகனும் நல்லவேளையாக காலத்திலேயே ஆய்வுப்பதிப்புகளை உருவாக்கிவிட்டனர். இல்லாவிட்டால் அவர்களது சில கதைகளையேனும் காலக் கரையானுக்குக் காவு கொடுத்திருப்போம்!
‘கம்பராமாயணம்’ போன்ற பெருங் காப்பியங்களைப் பதிப்பிக்கும்போது, அவற்றின் பல்வேறு பதிப்புகளில் காணப்படும் பாடவேறுபாடுகளுக்குப் பல்வேறு காரணங்களைக் கற்பிக்கலாம். ஏடெழுதுவோரின் கைப்பிழை, பதிப்பிப்போரின் விருப்பு வெறுப்புக்கேற்பப் பிரதியில் சில சொற்களைத் திருத்தியமைத்தல், திட்டமிட்டுச் செய்யும் இடைச்செருகல்கள், தலை நீட்டும் காழ்ப்புணர்வுகளால் பிரதியிலேறும் திரிபுகள் ஆகிய இந்த வழமையான ‘பதிப்பு நுட்பங்களை’ப் புரிந்துகொள்ளலாம். இவற்றுக்கெல்லாம் மேலாகப் போதிய விழிப்பும் பொறுப்பும் இன்மையாலேயே பதிப்பில் பிழைகள் மலிகின்றன என்றும் துணியலாம். ஆனால், இப்பாட வேறுபாடுகளை அல்லது அவற்றால் மலியும் பிழைகளை அப்படியே விட்டுவிடுவதற்கில்லை. தமக்குக் கிடைத்த எழுத்துபிரதி ஒன்றைக்கொண்டு, “சாதிப் பெருமை இல்லை பாப்பா”
என்றுதான் பாரதி எழுதினார் எனப் புதுமைப்பித்தன் வாதிட்டதையும், பிற்காலத்தில் அதைப் பாரதியின் கையெழுத்துப்பிரதியில் தம் கைப்படப் பாரதியே செய்திருந்த திருத்தத்தைக் காட்டிக் க. கைலாசபதி மறுத்துரைத்துச் “சாதிகள் இல்லையடி பாப்பா” என்றே பாரதி எழுதினார் என நிறுவியதையும் இங்குச் சான்று காட்டலாம். நுண்ணறிவுடைய புதுமைப்பித்தன் போன்றோரையே குழப்பிவிடக்கூடியது பாடவேறுபாடு என்பதற்காகத்தான், இவ்வாறு விளக்க நேர்ந்தது.
என்றுதான் பாரதி எழுதினார் எனப் புதுமைப்பித்தன் வாதிட்டதையும், பிற்காலத்தில் அதைப் பாரதியின் கையெழுத்துப்பிரதியில் தம் கைப்படப் பாரதியே செய்திருந்த திருத்தத்தைக் காட்டிக் க. கைலாசபதி மறுத்துரைத்துச் “சாதிகள் இல்லையடி பாப்பா” என்றே பாரதி எழுதினார் என நிறுவியதையும் இங்குச் சான்று காட்டலாம். நுண்ணறிவுடைய புதுமைப்பித்தன் போன்றோரையே குழப்பிவிடக்கூடியது பாடவேறுபாடு என்பதற்காகத்தான், இவ்வாறு விளக்க நேர்ந்தது.
பாரதிக்கு நேர்ந்தது, அவரைவிடவும் ஐந்தேகால் வயது குறைவாக வாழ்ந்து மறைந்த ஆத்மாநாமுக்கும் நேரலாகாது. 18.01.1951இல் பிறந்து 06.07.1984இல், 34வயதுகூட நிறையாமல் இறந்துபோய்விட்ட ஆத்மாநாமின் படைப்புக்காலம் (1972 - 1984) வெறும் பன்னிரண்டு ஆண்டுகள்தாம். இக்குறுகியகாலத்தில், அவர் எழுதிக் கிடைத்துள்ளவை, என் கணக்கில் 156 கவிதைகள். ஆனால், இப்போதுள்ள பிரம்மராஜன் பதிப்பித்த ‘ஆத்மாநாம் படைப்புகள்’ நூலில் 147 கவிதைகளே உள்ளன. 156க்கு மேலும் சில கவிதைகள் இருக்கக்கூடும்; இன்னும் தீவிரமாகத் தேடினால் ஒருவேளை அவையும் கிடைக்கக்கூடும். ஆத்மாநாம் இறந்து வெகுகாலம் ஆகிவிடவில்லை; 32 ஆண்டுகள்தாம் ஆகின்றன. இக்காலகட்டத்திற்குள்ளேயே அவரது கவிதைகள் அனைத்தையும் கண்டுபிடித்துக் காலவரிசைப்படி நம்மால் தொகுக்கமுடியாமல் போய்விட்டால், இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்துவரும் இலக்கிய மாணவனுக்கும் அரியதைத் தேடிப்பிடித்துப் படிக்கும் நுட்பமான வாசகனுக்கும் நாம் துரோகமிழைத்துவிட்டோம் என்றுதான் எதிர்காலம் நம்மைக் குறிவைக்கும். ஆனால், இதைச் செய்து முடிப்பதற்கு, இப்போதே, இன்றைய நம் காலத்திலேயே முடியுமா எனத் தெரியவில்லை. இதுதான் யதார்த்தம்.
மே 1981இல் ழ வெளியீடாக வந்த ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பில் ஆத்மாநாமின் முப்பத்தொன்பது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 22க்குத்தான், இதழ்களில் முதலில் அவை வெளிவந்த விவரங்களைக்கொண்டு, இப்போது காலம் கண்டுபிடிக்க முடிகின்றது. எழுபதுகளில் வெளிவந்த அனைத்துச் சிறுபத்திரிகைகளையும் சேகரித்துவைத்திருக்கும் நவீன இலக்கியங்களுக்கான நூலகம் ஒன்று தமிழகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியொரு நூலகம் இருந்து, அது தனிநபர்களைச் சாராமல், அனைவருக்கும் பயன்படும் பொதுத்தன்மையுடன் இயங்கினால் மட்டுமே, இதுபோன்ற காலவரிசைப் பதிப்புகள் சாத்தியப்பட வியலும். ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பில், எட்டாண்டுகளுக்கும் மேலாக எழுதிக்கொண்டுவரும் ஆத்மாநாமின் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளில் ஒரு பகுதியே சேர்க்கப்பட்டுள்ளதாகவும், முன்பே அச்சேறிய கவிதைகளில் ஒரு பகுதியையும் இன்னும் அச்சேறாத கவிதைகளில் ஒரு பகுதியையும் அத்தொகுப்பு உள்ளடக்கியிருப்பதாகவும் அதன் பதிப்புரையில் கூறப்பட்டுள்ளது (‘மே’ 1981:ப.3). ஆனால், ஆத்மாநாமின் கவிதைகளில் அச்சேறியவை எவ்வளவு, அச்சேறாதவை எவ்வளவு என்ற விவரங்கள் ஏதும் அதில் தரப்பவில்லை. இப்பிரசுர விவரங்களைத் துல்லியமாக இன்று கண்டுபிடிக்க முடியுமா என்றும் தெரியவில்லை.
இன்னுமொரு இடர்ப்பாடுமுள்ளது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆறு கவிதைகளில், இதழ்களில் முன்பே பிரசுரமான அவற்றின் மூலச் சொற்களில், ழ குழுவினர், நுண்மாற்றங்கள் செய் துள்ளனர். இத்தொகுப்பு வெளிவந்த 1981ஆம் ஆண்டிலும் அதன்பின் ஆத்மாநாம் இறந்த 1984வரையிலும் தம்மைப் பாதித்த மனநோயின் அழுத்தத்திலிருந்து, முற்றுமுழுதாக அவர் விடுபட்டுவிடவில்லை. அவ்வப்போது அவர், மனநோயின் கடுமையான தாக்குதல்களுக்குள்ளாகிக் கொண்டிருந்ததாகத்தான் தெரிகிறது. இத்தகைய துயரமான காலத்தில் ழ குழுவினர் செய்த நுண்மாற்றங்களை ஆத்மாநாம் உள்ளபடியே அறிந்திருந்தாரா, அவற்றை ஏற்றுக்கொண்டாரா, அவை பற்றி விவாதித்தாரா அல்லது மனக்கசப்புடன் அனுமதித்தாரா என்பதையெல்லாம் எவ்வகையிலும் இனி அறிவதற்கில்லை. ஓர் ஆய்வாளனாக, ஆத்மாநாம் உயிரோடு இருந்தபோதே ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பு வெளிவந்து விட்டதாலும், அத்தொகுப்பில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு எழுத்துப்பூர்வமாக அவர் எதிர்ப்பேதும் தெரிவித்திருப்பதாகத் தெரியவராததாலும், ழ குழுவினரின் திருத்தங்களை ஆத்மாநாம் அங்கீகரித்திருந்தார் என்ற ‘சந்தர்ப்பவச’ முடிவிற்குத்தான் வரவேண்டியுள்ளது. ஆனால், இந்த மாற்றங் களின் பொருத்தப்பாடு பற்றிய சில ஐயங்களை முன்வைப்பதற்கு, இச்சந்தர்ப்பவச முடிவு தடையிட முடியாது.
‘பழக்கம்’ என்ற கவிதை, முதலில் ‘கவனம்’ இதழில் (மார்ச்: 1981:ப.11) பிரசுரமானபோது, அதில் இடம் பெற்றிருந்த “நடப்பதில் மகிழ்ச்சி உண்டாயிற்று” என்ற வரி, “நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று” எனக் ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பில்(ப.23) மாறிவிட்டது. “ஒரு சதுரத்தில் நடக்கிறானாம்” என்பது, “ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம்” என்றாகிவிட்டது. “நான் என்ன சொல்ல இருக்கிறது, இது என்ன என” என்பது, “நான் என்ன” என்று இருசொற்களாகச் சுருங்கிவிட்டது. பிற சொற்களை முற்றிலுமாக நீக்கியுள்ளனர். இதைக்கூடக் கவிதையைச் செறிவுபடுத்தச் செய்ததாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், “சாலையிலேயே நடக்கமுடியவில்லை” என்ற வரியை, “ரோட்டிலேயே நடக்க முடியவில்லை” என மாற்றியிருப்பதை எவ்வாறு புரிந்துகொள்வது? சாலையை ரோடு என்று மாற்றுவது, ஓசையைத் தவிர வேறு ‘அர்த்த மாற்றம்’ எதுவும் இல்லாத நிலையில், ஒரு கவிஞனின் மொழிக்கொள்கையைப் பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்திவிடாதா? இந்தப் பாடபேதங்களைப் பிரம்மராஜன் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆத்மாநாமின் வாழ்நாளிலேயே இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதால், இவற்றை அப்படியே பிரம்மராஜனும் ஏற்றுப் பதிப்பித்திருப்பதைக்கூடப் புரிந்துகொள்ளலாம். ஆனால், ‘காகிதத்தில் ஒரு கோடு’ பதிப்பிலிருந்தும் அதற்கும் முற்பட்ட சிற்றிதழ்ப்பிரசுரங்களிலிருந்தும் வேறுபட்டுச் சிலவற்றைப் பிரம்மராஜன் பதிப்பித்திருப்பதை எவ்வாறு எதிர்கொள்வது?
‘இன்னும்’ என்ற கவிதை, முதலில் எம். சுப்பிரமணியன் பதிப்பித்து வெளியிட்ட ‘நாற்றங்கால்’ (மே-1974) தொகுப்பில் வந்தபோதும், பின் சதங்கையில் (செப்டம்பர் - அக்டோபர்: 1974:ப.14) பிரசுரமானபோதும், கணையாழி (மார்ச்: 1977:ப.28) விவாதமொன்றில் இடம்பெற்றபோதும், ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பிலும் (மே 1981:ப.9), ஏன் பிரம்மராஜனின் முதற்பதிப்பிலும்கூட (1989:ப.95), அதன் ஒன்பதாம் வரி, “பாசிக் கரை படர்ந்த” என்றுதான் வெளியாகியிருந்தது. ஆனால், பிரம்மராஜனின் காலச்சுவடு (2002) பதிப்பில், இது “பாசிக் கறை படர்ந்த” என்றாகிவிட்டது! இதை எழுத்துப்பிழை என்பதா அல்லது பொருள் கருதிச் செய்யப்பட்ட மாற்றம் என்பதா? இரண்டாவதெனில், மூலப்பிரதியைப் பல்லாண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு திருத்துவது சரியா? ழவில் (இதழ்12: நவம்பர் 1980:ப.13) வெளிவந்த ‘இயக்க விதி’ என்ற கவிதையில் அதன் முதல் இரு வரிகள், “என் மனம், ஒரு கண்ணாடி” என்றுதான் இடம்பெற்றுள்ளன. ‘காகிதத்தில் ஒரு கோடு’ (மே 1981:ப.36) தொகுப்பிலும் இவ்வரிகள் இதேபோல்தான் உள்ளன. ஆனால், பிரம்மராஜனின் பதிப்புகளில், இதிலுள்ள ‘ஒரு’ என்பது ‘ஓர்’ என்று மாற்றப்பட்டுள்ளது. இதெல்லாம் மிகச்சிறிய எழுத்துப்பிழைகள் எனப் பலர் நினைக்கக்கூடும். பிரம்மராஜனின் பதிப்புகளில் சிறியதும் பெரியதுமாய்ப் பல பிழைகள் மலிந்துள்ளன என்பதற்கு, ஒரு வகைமாதிரியாகத்தான் இப்பிழை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘தோற்றம்’ என்ற கவிதையின் முதல்வரி, ழவில் (இதழ்15: மார்ச்1981, ப.2) அக்கவிதை வெளிவந்தபோது, “தோற்றம் சாதாரண விஷயமல்ல” என்றுதான் இடம்பெற்றிருந்தது. ஆனால் இது, ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பில் (ப.17), “தோற்றம் சாதாரண விஷயமில்லை” எனத் திருத்தமாகப் பதிவுபெற்றுவிட்டது. இந்தச் சரியான திருத்தத்தைப் பிரம்மராஜனும் அப்படியே பின்பற்றியுள்ளார். ‘அல்ல’ என்பது அஃறிணைப் பன்மைக்கு மட்டுமே வரும் சொல்லாகும். ‘இல்லை’ என்பது உயர்திணை, அஃறிணை இரண்டிலும் ஒருமை, பன்மை என்ற இரண்டையும் குறித்துவரலாம். எனவே, இங்கு ‘அல்ல’ என்பது தவறான சொற்பயன்பாடு என்பதை அறியலாம். ‘விஷயமன்று’ என்று வந்தால், அது அஃறிணை ஒருமையை மட்டுமே குறிக்கும் என்பதால், அதைவிடவும் ‘விஷயமில்லை’ என்பதே ஒரு சரியான சொற்பயன்பாடாகும். இக்கவிதையின் மூன்றாம் வரி, “நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல” என்று, ழவில் பிழையாக இடம்பெற்றிருந்தது. “மட்டுமல்ல” என்பதும், “மட்டுமன்று” என்றும் வரலாமாயினும், இருதிணையையும் குறிக்கும் நோக்கில் “மட்டுமில்லை” என்று வருவதுதான், இன்னும்கூடப் பொருந்துவதாகும். ஆனால், ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பிலும் அதை அப்படியே பின்பற்றியுள்ள பிரம்மராஜனின் பதிப்பிலும் ‘மட்டுமல்ல’ என்ற அச்சொல், திருத்தப்படாமல் அப்படியேதான் விடப்பட்டுள்ளது.
இவ்வளவு இறுக்கமாக இலக்கணவிதிகளைப் பார்க்கத் தேவையில்லை. இருப்பினும், கவிதையில் இடம்பெறும் ஒருசொல்லை இலக்கணப்படித் திருத்திவிட்டு, இன்னொரு சொல்லைத் திருத்தாமல் அப்படியே விடுவதுதான் கேள்விக்குரியதாகிறது. ‘வழக்கு வலு உடைத்து’ என்பதை ஏற்று, ஆத்மாநாம் போக்கிலேயே இந்தச் சொற்களைத் திருத்தாமலும் விட்டுவிடலாம். ‘மனத்தில் உறுதி வேண்டும்’ எனப் பாரதி எழுதவில்லை; ‘மனதில் உறுதி வேண்டும்’ என்றுதான் எழுதியுள்ளார். இத்தகைய சிறப்புரிமைகள் (Poetic Licence) கவிஞர்களுக்கு உள்ளன. இதில் தலையிட வேண்டியதில்லை. ஆனால் தலையிட்டுவிட்டால், அதைச் சரியாகவும் திருத்தமாகவும் செய்துமுடிக்க வேண்டுமல்லவா? இது ஒரு சிக்கல் என்றால், இன்னுமொரு சிக்கலுமுள்ளது.
ஆத்மாநாமின் மரணத்திற்குப் பிறகுதான், அவரது பல கவிதைகள் நிறைய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவ்வாறு பிரசுரம் மறுபிரசுரமாகும்போது, அவற்றின் கையெழுத்துப்பிரதி மற்றும் முந்திய பிரசுர விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தால், காலவரிசைத்தொகுப்புக்கு அவை எவ்வளவோ உதவியிருக்கக்கூடும். ஆனால் அக்கவிதைகள், எவ்விதக் குறிப்புமின்றியே பிரசுரிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எழுபதுகளின் தீவிரச் சிற்றிதழ்களாக விளங்கிய அஃக், கொல்லிப்பாவை, ஞானரதம், நீலக்குயில், தெறிகள் போன்றவற்றில் ஆத்மாநாமின் கவிதைகளைக் காணமுடியவில்லை. இது குறித்துத் திட்டவட்டமாக ஏதும் கூறுவதற்குமுன், மேலதிக விவரங்களைத் தேடவேண்டும் என நினைக்கிறேன். இதை இங்கு எழுதுவதற்குக்கூடத் தகவலறிந்தோர் விவரம் தெரிவிக்கக்கூடும் என்ற நம்பிக்கைதான் காரணமாகிறது.
நாளை நமதே, நான், உன் நினைவுகள், குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம், செய் அல்லது செத்து மடி, ஏதாவது செய், சாதனை, காலம் கடந்த... எனப் பல புகழ்பெற்ற ஆத்மாநாமின் கவிதைகளுக்கு அவரது மரணத்திற்குப் பிறகான பிரசுர விவரங்கள்தாம் கிடைக்கின்றன. சாலை, மழை, காளை நான், அமைதி, அமைதி-1, செடியுடன் ஒரு உரையாடல், பேச்சு, அந்தப் புளியமரத்தை, கேட்கப்படுவதும் கேட்கப்படாததும், நன்றி நவிலல், உலக மகா யுத்தம், தரிசனம், வெளியேற்றம் எனப் பல முக்கியமான கவிதைகள் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரம் பெறாதவை என்பதை நம்பமுடியவில்லை. இவற்றுள் இறுதி நான்கு கவிதைகளாவது, ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பிற கவிதைகளுக்குப் பிரசுர வடிவம் தந்தது பிரம்மராஜன்தான் என்பதை அறியும்போது, ஆத்மாநாமின் முக்கியமான கவிதைகள் வாசகர்களுக்குக் கிடைப்பதற்குக் காரண மான பிரம்மராஜனைப் பாராட் டாமல் இருக்கமுடியாது. ஆனால், 1972 முதல் 1984 வரை, பல்வேறு சிற்றிதழ்களில் பிரசுரமான ஆத்மாநாமின் மூலப்பிரதிகளைப் பிரம்மராஜனின் பதிப்போடு ஒப்பிடும்போது பேரதிர்ச்சிகளையும் பெருங்குழப்பங்களையுமே நாம் அடையவேண்டியிருக்கும்.
எழுபதுகளின் சிற்றிதழ்களில் பிரசுரமான மூலவடிவங்களைப் பிரம்மராஜனின் பதிப்பில் காண்பதற்கில்லை என்பது மட்டுமன்று; ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பிலிருந்தும் சில இடங்களில் வேறுபட்டுப் பிரம்மராஜன் கவிதைகளைப் பதிப்பித்துள்ளார். எழுத்துப்பிழை, எழுத்து மாற்றம், சொல் மாற்றம், சொல் விடுபடல், பொருள் மாற்றம், வரி மாற்றம், முழுவரியையும் கவனக்குறைவாக விட்டுவிடுதல், முந்தைய வரிகளைப் பிந்திய வரிகளுடன் சேர்த்துக் குழப்பி மீண்டும் இடம்பெறச் செய்தல், சில வரிகளைத் தவறுதலாக விட்டுவிடுதல், சிலவற்றை முழுதாக நீக்கிவிடுதல், தலைப்புத் திருத்தம், தலைப்பு மாற்றம், புதுத் தலைப்பிடல், ஒரு சொல்லின் மூலவடிவத்தைத் திருத்தி அதன் மாற்றுவடிவத்தைப் பயன்படுத்துதல் (சாலை - ரோடு; வெற்றுடம்புடன் - நிர்வாணமாய்; அச்சம் - பயம்) எனப் பிழைகள் மலிந்ததாகப் பிரம்மராஜனின் பதிப்பு உள்ளது. மூலப்பிரதியிலிருந்து வேறுபட்டுப் பதிப்பிக்கும்போதுகூடச் சிலவேளைகளில் கவனக்குறைவால் நேர்ந்துவிடும் பிழைகளைச் சகித்துக்கொள்ளலாம்; தம் 1989ஆம் ஆண்டுப் பதிப்பிலிருந்து (தன்யா & பிரம்மா வெளியீடு) தாமே வேறுபட்டுப் பிரம்மராஜன் பதிப்பிப்பதை எவ்வாறு புரிந்துகொள்வது?
பிரம்மராஜனின் முன்பதிப்பில் (1989), “கூர்மையான பக்கங்களைக்கொண்ட, புற்கள் தாறுமாறாய்ச், சிதறிக் காத்தன, ஏரியை” (ப.15) என்றிருந்தது. பின்பதிப்பில் (காலச்சுவடு, 2002), இதிலுள்ள “புற்கள்” என்பதற்குப் பதிலாகப் “பற்கள்” (ப.34) எனப் பிழையாகப் பதிவாகிவிட்டது. 1989ஆம் வருடப் பதிப்பைப் பார்த்திராத இன்றைய வாசகர்கள், ஏதோ அரக்கனின் கோரப்பற்களால் ஏரி காக்கப்படுவதாக, ஒரு மாய யதார்த்தவாத வாசிப்பைச் செய்துகொண்டிருக்கின்றனர். “இழுப் பறைகள் கொண்ட மேஜை” கவிதையில் இடம்பெறும் ஒருவரி, முன்பதிப்பில், “அடுத்து தான் விழவேண்டும்” (ப.23) என்றுள்ளது. ஆனால், இதிலுள்ள “தான்” என்பது, “நான்” எனப் பின் பதிப்பில் மாறி, “அடுத்து நான் விழ வேண்டும்” (ப.43) என்று பதிவாகி யுள்ளதைக் காண்கிறோம். இது முதலில் ழவில்(இதழ்20:பிப்ரவரி 1982:ப.13) வெளிவந்தபோது, “அடுத்து நான் தான் வீழ வேண்டும்” என இடம் பெற்றிருந்தது! மேலும், இக்கவிதையின் ஏழாம்வரியாக ழவில் இடம்பெற்றிருந்த “அவசரமாய் மேஜை அறையுள் ஒரு சிறு துணி கிடைக்கிறது” என்பதும், பிரம்மராஜனின் பதிப்பில் முற்றிலுமாகக் காணாமல் போய் விட்டது.
‘ஒரு கவிதை எனும் ஒரு கவிதை’யின் ஐந்தாம்வரி, 1989ஆம் ஆண்டுப் பதிப்பில், “ஒருவரும் அனுதாபத்துடன் நுணுகவில்லை”(ப.41) என்றுள்ளது. இது 2013ஆம் ஆண்டுப் பதிப்பில், “ஒருவரும் அனுதாபத்துடன் அணுகவில்லை”(ப.70) என ஓரெழுத்து மட்டும் மாறியுள்ளது. முதலில் இது, ழவில் (இதழ் 19: அக்டோபர் 1981, ப.2) வெளிவந்தபோதும், “ஒருவரும் அனுதாபத்துடன் நுணுகவில்லை” என்றுதான் இடம் பெற்றிருந்தது. இதுதரும் பொருள் மாறுபாடு பற்றி வாசகர்களே சிந்தித்துக்கொள்ளலாம். ‘மூன்று கவிதைகள்’ என்பதில் இடம்பெறும் இரண்டாம் கவிதையில், “இப்பரந்த உலகின் தூசி முனையில்” (ப.52) என்று முன்பதிப்பில்(1989) இடம்பெறும் வரியிலுள்ள “தூசி முனையில்” என்பது, 2002ஆம் ஆண்டுப் பதிப்பில், “ஊசி முனையில்” (ப.90) எனப் பதிவாகியுள்ளது. இதன் மூலபாடத்தைக் காண்பதற்கு, இதன் முதல் பிரசுர விவரத்தை அல்லது இதன் கையெழுத்துப்பிரதியைக் கண்டுபிடித்தாக வேண்டும். இதேபோல், இன்னும் சில உள்ளன. விரிவஞ்சி அவற்றை விடுகிறேன். ஆனால், முக்கியமான சிலவற்றைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.
“பானைத்தலை சாய்த்து(ப்)
புல்பிதுங்கும் கைகளோடு
சட்டைப்பொத்தான் வெடிக்க(த்)
தொப்பையிலும் புல் தெரிய(த்)
தனியாய்
யாருன்னைத் தூக்கில்போட்டார்
சணற்கயிற்றால் கட்டிப்போட்டு
உன் காற்சட்டை மட்டும் கொடு
என் உயிரும் தருவேன்
புல்பிதுங்கும் கைகளோடு
சட்டைப்பொத்தான் வெடிக்க(த்)
தொப்பையிலும் புல் தெரிய(த்)
தனியாய்
யாருன்னைத் தூக்கில்போட்டார்
சணற்கயிற்றால் கட்டிப்போட்டு
உன் காற்சட்டை மட்டும் கொடு
என் உயிரும் தருவேன்
சென்றுன் எதிரியைத் தேடு” (கணையாழி: ஜூன் 1973, ப.35)
மிக எளிதாகப் பெரும்பாலான மனிதர்கள் கண்டு விட்டுக் கடந்துபோய்விடும் ‘திருஷ்டி பொம்மை’யைப் பார்த்துக் கவிதைசொல்லி பேசுகிறான். ஏதோ ஓர் உயிரே தூக்கில் தொங்குவதுபோல் மனம் பதறிப் படபடத்துச் ‘சென்றுன் எதிரியைத் தேடு’ எனச் சினந்து கூக்குரலிட்டுத் தூண்டுகிறான். பானைத்தலை, சட்டைப்பொத்தான், வெடிக்கும் தொப்பை எனப் பருமனைக் கேலி செய்கிறான். கட்டிப்போட்டிருப்பது வெறும் சணல்கயிற்றால்தான் என்பதைச் சூசகப்படுத்துகிறான். ‘உன் காற்சட்டை மட்டும் கொடு’ எனக் கெஞ்சுகிறான். கேட்பவனுக்குக் காற்சட்டைகூட இல்லை, அவ்வளவு அமுக்கப்பட்டவன் அவன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவன் வேண்டுகோள் ஏற்கப்பட்டுக் காற்சட்டை மட்டும் கொடுக்கப்பட்டால், அதற்குப் பதிலாக, ‘என் உயிரும் தருவேன்’ என்கிறான்.
‘சென்று உன் எதிரியைத் தேடு’ என்னும்போது, பாதகம் செய்பவரை வேரறுக்கும் உந்துதலைத் தட்டியெழுப்புகிறான். உடைகொடுத்தோர், இங்கு உயர்வு கொடுத்தோர் ஆகிறார். உயிரற்ற ஒரு பொம்மைக்குக் காற்சட்டைக்கு மாற்றாக உயிரைத் தருவேன் என்பதில், ‘தன் நிலை’ தாழும் இழுக்கைத் தடுப்போருக்குத் தன்னுயிரைத் தந்துதவும் தன்மான உணர்வும் புலப்படுகின்றது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் மறுமுனை ஆத்மாநாம்; பயிரை வாட்டியவனை விட்டுவிடலாகாது என்பதற்கும்கூட உயிர்ப்பரிவு தான் காரணம். இக்கவிதையைப் பிரம்மராஜன் பதிப்பித் திருக்கும் முறை, கடும்விமர்சனத்துக்கு உரியதாகும்.
‘தொப்பையிலும் புல் தெரிய’ என்ற நான்காம் வரியைத் ‘தொப்பையில் புல் தெரிய’ எனப் பதிப்பித்துள்ளார். ‘புல்பிதுங்கும் கைகளோடு’என்று இரண்டாம் வரியுள்ளபோது, ‘தொப்பையில்’ என்று வரமுடியாது; ‘தொப்பையிலும்’ என்று வருவதுதான் பொருத்தமாகும். ‘தனியாய்’ என்ற ஐந்தாம் வரியைப் பிரம்மராஜன் நான்காம் வரியோடு ஒட்டுப்போட்டுப் பதிப்பித்துள்ளார். ‘தனியாய்’ என்ற அச்சொல் மட்டும் ஐந்தாம்வரியாய் அமைவதிலுள்ள ஒரு தொனிக்கூர்மையை, இந்த ஒட்டுவேலை நிச்சயமாக மட்டுப்படுத்தி விடுகிறது. இதை விடவும் முக்கியமான பிழை, இதன் எட்டாம்வரியில் (பிரம்மராஜனின் பதிப்பில், இது ஏழாவதுவரி!) காணப்படுகிறது.
‘உன் காற்சட்டை மட்டும் கொடு’ எனக் கணையாழியில் பிரசுரமாகியுள்ளதற்குப் பதிலாக, ‘உன் காற்சட்டை தருவேன்’எனப் பிழையாகப் பிரம்மராஜன் பதிப்பித்துள்ளார். இது கவிதையின் மையப் பொருளையே மாற்றிவிடக்கூடிய பிழையாகும். ‘உன் காற்சட்டை தருவேன்’என்ற கூற்றைப் பண்பாடு காப்போரைக் குத்தும் கேலியாக வாசிக்கலாம்; ‘உன் காற்சட்டை மட்டும் கொடு’ என்ற யாசிப்பைக் கேட்பவனின் வறுமையோடு தொடர்புபடுத்தி வாசிக்கலாம். இந்தக் கவிதையின் ஒன்பதாம்வரியான ‘என் உயிரும் தருவேன்’ என்பதைப் பிரம்மராஜன் முழுவதுமாகவே விட்டுவிட்டார்.
இங்குத் திருஷ்டிப்பொம்மை யார்? தூக்கில் போட்ட சணல்கயிறு எது? காற்சட்டை ஏன் வேண்டும்? எதிரி யார்? எதிரியை ஏன் தேட வேண்டும்? தேடிக் கண்டால் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வாசகர்கள்தாம் விடைகளைத் தேடிக்கொள்ள வேண்டும். திருஷ்டிப்பொம்மையிடம் நியாயம் இருக்கிறது என்பதும், தூக்கில் போட்ட எதிரியிடம் கருணை இல்லை என்பதும் தான், கவிஞரின் அதிகாரம் வழங்கும் தீர்ப்புகள். காதுள்ளவன் கேட்டுக் கண்ணுள்ளவன் பார்த்துக் காட்சியைச் சொற்களுக்கு அப்பாலும் விரிக்க முடிந்தால், ஒருவேளை இஸ்ரேல், காஷ்மீர், ஈழம், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அரபுநாடுகள் என்று அகில உலகமே கூடக் கவிதைக்குள் வந்துவிடக்கூடும்!
ஜூன் 1973இல் கணையாழியில் வெளிவந்த இக்கவிதை, மே 1981இல் ழ வெளியீடாக வந்த ‘காகிதத்தில் ஒரு கோடு’தொகுப்பில் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதைக் கேட்காமலிருக்க முடியாது. இப்பிரச்சனை ஒருபுறம் இருந்தாலும், கணையாழியில் வெளிவந்த மூலபாடத்தைப் புறக்கணித்துப் பிரம்மராஜன் புதுப்பாடம் கற்பிப்பது எவ்வகையில் நியாயமானது? எனினும், இது ஆத்மாநாமின் ஆகச்சிறந்த கவிதைகளுள் ஒன்று என்னும்போது, இது ஏன் விடப்பட்டது என்ற வினா எழுவதும் இயல்புதான். இதற்கு, தொகுப்பு ஆத்மாநாமின் இசைவுடன்தான் வெளிவந்தது என்பது மட்டும் பதிலாகிவிட முடியாது. ழ குழுவினரின் கவிதைத்தேர்வு பற்றியதுமாகும்
இக்கேள்வி.
இக்கேள்வி.
‘அவசரம்’ என்ற தலைப்பில், நெருக்கடிநிலையை எதிர்த்து ஆத்மாநாம் எழுதிய புகழ்பெற்ற கவிதை, பிரக்ஞையில் (செப்டம்பர் 1975: இதழ் 12:ப.2) வெளிவந்துள்ளது. ஆனால், இதுபற்றி, “ஆத்மாநாமின் இக்கவிதை (அவசரம்), எந்த இதழிலும் வெளியாகவில்லை. ஞானக்கூத்தன், இதைக் கையெழுத்துப்பிரதியாகவே படித்ததாக நினைவுகூர்கிறார்” (உயிர்மை: மார்ச் 2016, ப.64) என்கிறார் நஞ்சுண்டன். இத்தகவல் முற்றிலும் தவறு என்பதைக் கண்டோம். ஆனால், நெருக்கடிநிலையை எதிர்த்து ஆத்மாநாம் எழுதிய இக்கவிதை மட்டுமன்று, இது தொடர்பான அவரது பிற கவிதைகளும், ழ வெளியீடாக வந்த ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பில் ஏனோ சேர்க்கப்படவில்லை. இந்தப் ‘பதிப்பரசியல்’ குறித்தும் விவாதிக்கவேண்டிய தேவை இன்றுள்ளது.
ஸ்வரத்தில் (இதழ்:12: ஜனவரி 1983: ப.12), முதலில் ‘சுதந்திரம்’ கவிதை வெளிவந்தபோது, இதன் மூன்றாம் வரி ‘பறிக்கப்படுமெனின்’ என்றுதான் பிரசுரமாகியிருந்தது. இதனைப் பிரம்மராஜன், ‘பறிக்கப்படுமெனில்’ எனப் பதிப்பித்துள்ளார். மேலும், இக்கவிதையின் பதினோராம் வரியில், ‘மற்றவரை’ என்றிருந்ததைப் பிரம்மராஜன் ‘மாற்றானை’ எனப் பிழையாகப் பதிப்பித்துள்ளார். ‘மற்றவர் (Other)’ என்பதற்கும், ‘மாற்றான் (Opponent)’ என்பதற்குமான வேறுபாடு மிகச்சிறியதன்று. ‘மற்றவரைத் தூண்டும் உன்னெழுத்து’ என்பது, கவிஞனின் ஆற்றலுக்குச் சான்றாகும். ‘மாற்றானைத் தூண்டும் உன்னெழுத்து’ என்பது, கவிஞனின் சார்பினைக் கேள்விக்குட்படுத்துவதாகும். இவ்வரிகளில், சொல்லுக்கும் செயலுக்குமான போராட்டத்தின் பல்வேறு சலனங்களையும் முரண்பட்ட பலவகைக் கருத்துநிலைகளின் ஊடாட்டத்தையும் வெளிப்படையாகக் காணலாம்.
இக்கவிதையின் கடைசிவரிக்கு முன்வரியை, “உன்மீது ஆசை இருந்தால்” (ப.51) எனத் தவறாகப் பிரம்மராஜன் பதிப்பித்துள்ளார். “உனதுயிர்மீது ஆசை இருந்தால்” என்றுதான் இவ்வரி, ஸ்வரம் இதழில் பிரசுரமாகியிருந்தது. ‘உனது உயிர்மீது ஆசை’ என்பதை ‘உன்மீது ஆசை’ என்பதாகச் செறிவுபடுத்திவிட்டார் பிரம்மராஜன். எதிலும் குறுக்கிடாமல் இருக்கும் இவ்வளவு குறுகிய ஒரு செயல்பாடா மானுட வாழ்க்கை? ஆம்! எமர்ஜென்சி அப்படித்தான் மக்களைக் குறுக்கி வரையறுத்தது. வேலை என்று ஒன்று இருப்பதும், அதனால் உணவுக்கு உத்தரவாதமிருப்பதும், வேலைக்குப் போய்வரும் ‘சுதந்திரம்’ அளிக்கப்பட்டிருப்பதும் மட்டும் அடிமைக்குப் போதும். மனிதனுக்கும் அவை போதுமா? போதும் என்பதுதான் அதிகாரவாதிகளின் பதில். போதாது எனக் கூறிப் போர்க்கொடி பிடிப்போரின் உயிர்வாழ்வுக்கு உத்தரவாதமில்லை என்பதுதான், நெருக்கடி நிலைக்கால யதார்த்தம்.
இதைக் கடுமையாக ஆத்மாநாம் எதிர்த்தார். சுதந்திரமாய் இருப்பது தானே, மனிதன் உயிரோடு இருப்ப தற்குப் பொருளாக முடியும் என்ற புரிதல் அவரிடம் இருந்தது. “சாப்பிடு தூங்கு மலங்கழி, வேலைக்குப் போ, உனதுயிர் மீது ஆசை இருந்தால் குறுக்கிடாதே” என எதிர்மறையாகக் கேலி செய்வதற்குச் ‘சூழலை எதிர்த்துப் போராடு’ என்ற உள்மனத்தூண்டலைப் பொதுவாசகரிடம் கவிதைவழிக் கிளற அவர் யத்தனித்ததே காரணமாகலாம். நவீனகாலச் சமூகத்தின் கேவலத்தைச் சிறிதும் சுதந்திரமற்ற சாக்கடைத்தனத்தைத் தண்டுவடத்தில் வெட்டித் தலைகீழ்ப் பிணமாக்கிக் களிக்கும் சர்வாதிகாரத்தின் நச்சுவேரைப் பிடித்தாட்டும் கேலிச்சித்திரம் இது.
பிரம்மராஜன் 2002ஆம் ஆண்டுப் பதிப்பில், ‘வாழ்க்கைக் கிணற்றில், இவள், நாளை நமக்கும், கட்டை’ ஆகிய நான்கு கவிதைகளை, இதுவரையில் ‘வெளிவராத கவிதைகள்’ (பக்.189-192) எனத் தலைப்பிட்டுப் பிரம்மராஜன் பதிப்பித்துள்ளார். ஆனால், இந்நான்கு கவிதைகளும், ‘எஸ்.கே. ஆத்மாநாம்’ என்ற பெயரில், கசடதபறவில் (இதழ் 24: செப்டம்பர் 1972:பக்.4,9) வெளிவந்துள்ளன. வெளிவராத கவிதைகளெனத் தலைப்பிட்டுத் துணிச்சலாக இவற்றை வெளியிடுவதற்குமுன், பழைய சிற்றிதழ்களில் இவை வெளிவந்துள்ளனவா எனத் தேடிப்பார்க்கும் பதிப்பார்வத்தைப் பிரம்மராஜன் பொருட்படுத்தாதது வியப்பளிக்கிறது. இவற்றுள் ‘கட்டை’ என்ற தலைப்பில், பிரம்மராஜன் வெளியிட்டுள்ள நான்காம் கவிதை, கசடதபறவில் முதலில் வெளிவந்தபோது, ‘கேள்வி’ என்ற தலைப்புடன்தான் இருந்தது என்பதையும் கருதவேண்டும். இவ்வாறு நான்கைந்து கவிதைகளுக்குப் பிரம்மராஜன் தலைப்பை மாற்றியிருப்பதாகத் தெரிகிறது.
‘முடிவில்’ என்ற தலைப்பில், இப்போதைய பிரம்ம ராஜனின் பதிப்பில் காணப்படும் கவிதை, முதலில் கணையாழியில் வெளிவந்தபோது (ஆகஸ்ட்:1981:ப.11), அதற்கும் ‘கேள்வி’ என்றுதான் தலைப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு ஒரே தலைப்பில் கவிதைகளை அமைக்கும்போது, ‘கேள்வி-1’, ‘கேள்வி-2’ எனக் காலவரிசையில் அவற்றைத் தலைப்பிடும் முறையையே ஆத்மாநாம் பின்பற்றியிருந்ததை, அமைதி அமைதி -1, அமைதி அமைதி-2 என்றெல்லாம் அவர் தலைப்பிட்டுள்ளதன்வழி அறியலாம். இம்முறையைப் பிரம்ம ராஜன் மாற்றினாரா அல்லது கையெழுத்துப்பிரதியிலேயே இது இவ்வாறு திருத்தப்பட்டிருந்ததா, இத்திருத்தத்தைத் தம் கைப்பட ஆத்மாநாமே செய்துள்ளாரா - இல்லை, இது பிற நபர்களின் திருவிளையாடலா? இந்த வினாக்களுக்கெல்லாம் அவ்வளவு எளிதாக விடைகள் கிடைத்துவிடும் எனத் தோன்றவில்லை. ஆத்மாநாமின் வாழ்நாளில் கணையாழியில் வெளி வந்தபோது இருந்ததுபோலவே, இதற்குத் தலைப்பிடுவதுதான், ‘பதிப்பு நியாயமாய்’ இருக்கவியலும்.
‘புறநகர்’ எனப் பிரம்மராஜன் இப்போது மாற்றித் தலைப்பிட்டிருக்கும் கவிதை, கால் (1/4) இதழில் (ஏப்ரல் - ஜூன்1982,ப.50) வெளிவந்தபோது, அதற்கு ‘நகர்ப்புறம்’ என்பதுதான் தலைப்பாய் இருந்தது. “இந்த நகரத்தை எரிப்பது” (2002: ப.112) எனப் பிரம்மராஜனால் தலைப்பிடப்பட்டுள்ள கவிதை, முதலில் படிகளில் (இதழ் 12: 1982: ப.13) வெளிவந்தபோது, அக்கவிதைக்குத் தலைப்பேதும் தரப்படவில்லை. மேலும், பிரம்மராஜனின் முன் பதிப்பிலும் (1989:ப.69), அதற்குத் தலைப்பில்லை. பின்பதிப்பில்தான் (2002), அக்கவிதையின் முதல்வரியைப் பிரம்மராஜன் தலைப்பாக்கியுள்ளார். ‘இதோ ஒரு கவிதை’ எனப் பிரம்மராஜனால் தலைப்பிடப்பட்டுள்ள கவிதையும் முதலில் பிரக்ஞையில் (இதழ்13:அக்டோபர்1975:ப.29) வெளிவந்தபோது, அதற்கும் தலைப்பில்லை. இக்கவிதையின் முதல்வரியைத்தான் பிரம்மராஜன் தலைப்பாக்கியுள்ளார். தலைப்பிடப்படாத கவிதைகளுக்குத் தலைப்புகள் வேண்டும் என்பதற்காகப் பதிப்பாசிரியர் இவ்வாறு இவற்றுக்குத் தலைப்பிட்டிருக்கலாம். ஆனால், முதல்வரியைத் தலைப்பிடும் பொதுநியதியைப் பிரம்மராஜன் பின்பற்றியிருப்பதாகக் கூற முடியவில்லை.
தலைப்பு: ‘வசதிக்காய்த் தெருவிளக்குகள்’ (2002:ப.74) எனப் புதுமையாக அவர் தலைப்பிடும்போது, இது ஆத்மாநாமுக்கு உடன்பாடான தலைப்பா, இவ்வாறு தலைப்பிடுவதை அவர் விரும்பியிருப்பாரா, ஏற்றுக் கொண்டிருப்பாரா என்ற கேள்விகள் பிறப்பதைத் தவிர்ப்பதற்கில்லை. முதலில் ழவில் (இதழ்2: ஜூன் 1978:ப.5) இக்கவிதை வெளிவந்தபோது, இதற்குத் தலைப் பில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளும்போது, தம் வழக்கப்படி முதல்வரியான ‘தூரத் தெருவிளக்குகள்’ என்பதைத் தலைப்பாகச் சூட்டாமல், மேலே காட்டிய வித்தியாசமான தலைப்பைக் கவிதைக்குச் சூட்டும்போது, அது ஆத்மாநாமின் கவித்தொனிக்கு வேறுபட்டுள்ளது என்ற
விமர்சனத்தைக் கையெழுத்துப்பிரதியின் ஆதர வின்றிப் பதிப்பாசிரியர் புறந்தள்ளிவிட முடியுமா? இதே போல், ‘தலைப்புகள் தானே வரும்’ (2002:ப.38) என்ற தலைப்பில் காணப்படும் கவிதைக்கு, அத்தலைப்பைப் பிரம்மராஜன் சூட்டினாரா அல்லது அது ஆத்மாநாம் சூட்டியதுதானா என்ற ஐயமும் தோன்றத்தானே செய்கிறது?
இவைகூடப் பரவாயில்லை. ‘என்ற கேள்வி’ (1989: ப.22, 2002: ப.42) எனத் தலைப்பிட்டுப் பிரம்மராஜன் பதிப்பித்துள்ள ஒரு கவிதையை, அவரே முன்பு மீட்சியில் (இதழ்28: ஜனவரி - மார்ச் 1988: ப.47), ஆத்மாநாமின் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது என்ற விளக்கத்துடன் பிரசுரித்தபோது, ‘எனினும் என்ற பிரச்னை’ என்றுதான் அதற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது? இங்கு தலைப்பை இவ்வாறு மாற்றுவதற்குப் பதிப்பாசிரியர் பக்கமுள்ள நியாயம்தான் யாது? ஆத்மாநாமைப் பிரம்மராஜன் விரும்பும்வகையில் மட்டுமே வாசகர்கள் வாசிக்க வேண்டும் என்ற அத்துமீறல், இதன்மூலம் நிகழ்ந்துவிடவில்லையா?
இவைகூடப் பரவாயில்லை. ‘என்ற கேள்வி’ (1989: ப.22, 2002: ப.42) எனத் தலைப்பிட்டுப் பிரம்மராஜன் பதிப்பித்துள்ள ஒரு கவிதையை, அவரே முன்பு மீட்சியில் (இதழ்28: ஜனவரி - மார்ச் 1988: ப.47), ஆத்மாநாமின் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது என்ற விளக்கத்துடன் பிரசுரித்தபோது, ‘எனினும் என்ற பிரச்னை’ என்றுதான் அதற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது? இங்கு தலைப்பை இவ்வாறு மாற்றுவதற்குப் பதிப்பாசிரியர் பக்கமுள்ள நியாயம்தான் யாது? ஆத்மாநாமைப் பிரம்மராஜன் விரும்பும்வகையில் மட்டுமே வாசகர்கள் வாசிக்க வேண்டும் என்ற அத்துமீறல், இதன்மூலம் நிகழ்ந்துவிடவில்லையா?
தம் பதிப்பிற்குப் பயன்படுத்திய மூலச்சுவடிகளைப் பிறர் பார்வையிட அனுமதிக்கவில்லை என்றும், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் மூலச்சுவடிகளைப் பொதுவெளியில் யாரும் பயன்கொள்ளும்வகையில் முன்வைக்கவில்லை என்றும், இந்தப் பதிப்பிற்கு இந்தச் சுவடிதான் ஆதாரம் எனப் பகிரங்கப்படுத்தாதவர் என்றும், அடிமை இந்தியாவில் வாழ்ந்த - சென்ற நூற்றாண்டின் மகத்தான பதிப்பாசிரியரான உ.வே.சா. மீதே ‘மிகை ஏசல்கள்’ உண்டு. இன்றையச் சுதந்திர இந்தியாவில் - சனநாயக உரிமைகள் மேலும் வலுப்பட்டுள்ள சமகாலத்தில்- ஒரு படைப்பாளியின் ஆக்கங்களைப் பதிப்பிக்கும்போது பின்பற்றவேண்டிய நெறிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டுப் படைப்புரிமை பற்றிய கவனமின்றிச் சித்தம்போக்காய்ப் பதிப்பிப்பதை ஏற்றுக் கொள்ளவியலுமா? ஆத்மாநாமின் ஆக்கங்களைப் பதிப்பிக்கும்போது, பின்வரும் மூலத்தரவுகளைக் கூர்ந்தாராயாமல் செய்யப்படும் முயற்சிகளால் பலனிராது.
1. பழைய சிற்றிதழ்களில் வெளிவந்த கவிதைகளின் முதல் பிரசுர வடிவங்களைப் பார்க்க வேண்டும்.
2. ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள 39 கவிதைகளின் மூலவடிவங்களையும், பிரம்மராஜனின் பதிப்புகளில் இவை எவ்வாறு பதிவாகியுள்ளன என்பதையும் ஒப்பிட்டுக் காண வேண்டும்.
3. ஆத்மாநாமின் ஆயுட்காலத்தில் இதழ்களில் பிரசுரமானவற்றையும் இதழ்களில் பிரசுரமாகாதவற்றையும் தனித்தனியாகப் பிரித்துப் பிரம்மராஜனின் பதிப்புகளோடு ஒப்பிடவேண்டும்.
4. 1989இல் பிரம்மராஜன் பதிப்பித்த ஆத்மாநாம் கவிதைகளுக்கும், பின் காலச்சுவடு வாயிலாகப் பிரம்மராஜன் பதிப்பித்த ஆத்மாநாம் படைப்புகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கருத வேண்டும்.
5. ஆத்மாநாமின் கையெழுத்துப் பிரதிகளைத் தேடியெடுத்துப் பதிப்பிக்கமுடியுமா என்ற திசையிலும் முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு கவிதைக்கு அதன் முதல்வரியைத் தலைப்பிடுவது, இன்னொரு கவிதைக்குத் தனக்குப் பிடித்த வேறொரு வரியைத் தலைப்பிடுவது, பிறிதொன்றிற்குக் கவிதையில் இல்லாத சொற்களைக் கொண்டு புதிதாய்த் தலைப்பிடுவது, இதழில் வெளிவந்தபோது அல்லது கையெழுத்துப் பிரதியாய் இருந்தபோது வைக்கப்பட்டிருந்த தலைப்பை மாற்றித் தலைப்பிடுவது, படைப்பாளர் இறந்தபிறகு அவர் தலைப்பிடாத கவிதைக்குத் தலைப்பிடுவது எனப் பொதுத்தன்மை எதற்கும் உட்படாமல், சுதந்திரமான பதிப்பாசிரியராகப் பிரம்மராஜன் தலைப்பிட்டுள்ளார். இவ்வாறு தலைப்பிடுவது மட்டுமன்றி, கவிதைக்கொரு வரி வீதம் ஏழு கவிதைகளில் இருந்து ஆத்மாநாமின் ஏழு வரிகளை முழுவதுமாக நீக்கியுள்ளார். (திருஷ்டி, இழுப்பறைகள் கொண்ட மேஜை, உறைந்துபோன நேரம், பிச்சை, அவள், இவர்களை எல்லாம் எனக்குத் தெரியும், முடிவில் (கேள்வி).
இதுபோல் ஒற்றைவரியை நீக்குவதுடன் பிரம்மராஜன் நிற்கவில்லை. ‘காலம் கடந்த’ கவிதையின் கடைசி எட்டுவரிகளைப் ‘பதிப்பாசிரியர் சுதந்திரத்தின்’ அடிப்படையில் முற்றிலுமாக அவர் வெட்டிவிட்டார். பிரம்மராஜனின் பதிப்பில், ‘காலம் கடந்த’ என்ற அக்கவிதை, “என் காலடியில், கொஞ்சும் நாய்க்குட்டிக்காக, இன்னும் எனது நம்பிக்கை, நசித்துப்போகவில்லை, இன்னமும் கொஞ்சம், அன்பு மீதமிருக்கிறது” என்று முடிகிறது. ஆனால், உண்மையில் அக்கவிதையின் முடிவு என்னவாக இருந்தது?
“இது ஏசுவோ புத்தரோ
ஆதி சங்கரரோ
‘மகாத்மா’ காந்தியோ
பிரச்சாரம் செய்த
அன்பு அல்ல
நானே
ஆகிய
அன்பு” (மீட்சி 11: ஜூலை 1984: ப.7)
இது ஏதோ ஒரு சிற்றிதழில் வெளிவந்திருந்து, அதைப் பிரம்மராஜன் பாராததால் ஏற்பட்ட நீக்கமன்று. ஆத்மாநாம் நினைவுச் சிறப்பிதழாகப் பிரம்மராஜன் வெளியிட்டுள்ள மீட்சி 11ஆம் இதழில் காணப்படுவதுதான். இந்நீக்கத்தைப் பிரம்மராஜன் நன்கறிந்தேதான் செய்துள்ளார். ஆத்மாநாமின் கவிதையை, அவரது இறப்பிற்குப் பின் தணிக்கை செய்து வெளியிடுவதன்வழி, அதன் கவிதைத்தன்மை மேலும் செழுமையடையும் எனப் பிரம்மராஜன் நினைத்திருக்கலாம். “இது ஏசுவோ புத்தரோ, ஆதி சங்கரரோ, ‘மகாத்மா’ காந்தியோ, பிரச்சாரம் செய்த, அன்பு அல்ல, நானே, ஆகிய, அன்பு” என ஆத்மாநாம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும்கூடக் கடைசி எட்டுவரிகளைத் தணிக்கை செய்ததன்வழி, ஆத்மாநாம் விரும்பியதற்கு மாறாகத் தேய்ந்தறுந்துபோன ‘உலகப் பொதுவான formula அன்பாக’ இக்கவிதையின் பேசுபொருளைக் குறுக்கிவிடும் பதிப்பாசிரியத் தலையீட்டைச் சுதந்திரமாகப் பிரம்ம ராஜன் செய்துள்ளார். பண்டைய இலக்கியங்களின் பதிப்பாசிரியர்கள் கூடத் தணிக்கையை இவ்வளவு சுதந்திரமாகச் செய்யத் துணிந்ததில்லை! இதுமட்டுமா?
இப்போதுள்ள பிரம்மராஜனின் பதிப்பில், ‘அன்பு’ என்ற கவிதையின் கடைசிவரிகள், “மனிதன், நிர்வாண மாய்த் திரிகிறான், நகரமெங்கும், அன்பைத் தேடி, பயத்துடன்” (ப.133) எனக் காணப்படுகின்றன. இது படிகளில் (இதழ்:20: 1984:ப.3) வெளிவந்த போதும், ‘மீட்சி புக்ஸ்’ வாயிலாகச் சிறுவெளியீடாகக் கொண்டுவரப்பட்ட ‘கவிதை பற்றி - ஆத்மாநாம்’ என்ற நூலில் (முதற்பதிப்பு: செப்டம்பர் 1984: ப.20) இடம்பெற்றபோதும், “நிர்வாணமாய்” என்பது ‘வெற்றுடம்புடன்’ என்றும், “பயத்துடன்” என்பது ‘அச்சத்துடன்’ என்றும்தான் இருந்தன. மேலும், இக்கவிதையில் இடம்பெறும் ‘சிகிச்சை’ என்ற சொல்லையும் ‘சிகித்ஸை’ என்றே பிரம்மராஜன் திருத்திப் பதிப்பித்துள்ளார். ஆத்மாநாமின் கையெழுத்துப்பிரதியில் இவை எவ்வாறு இருந்தன என்பதைக் கொண்டுதான், இச்சிக்கலுக்குத் தீர்வுகாண முடியும். ஆனால் ஒருவரே (பிரம்மராஜனே), ஒருசொல்லின் இருவடிவங்களையும் முரணை உணராது அடுத்தடுத்துப் பதிப்பிக்கும் அருங்கலைக்கும் பிரம்மராஜனே முன்மாதிரியாகியுள்ளார்.
ஆத்மாநாமின் ‘டெலெக்ஸ்’ என்ற கவிதை, முதலில் நிஜங்களில் (ஏப்ரல்1982:ப.15) வெளிவந்தது. பிறகு படிகளில் (இதழ்15: 1983: ப.7) மறுபிரசுரமானது. படிகளில், இக்கவிதையின் தலைப்பு, ‘டெலக்ஸ்’ எனத் திரிந்துவிட்டது. நிஜங்கள், படிகள் ஆகிய இரண்டு இதழ்களிலுமே, இக்கவிதையின் மூன்றாம்வரி, “1,74,843 தலைகள் வீழ்ந்துள்ளன” என்றுதான் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையைத் தம் பதிப்பில் பிரம்மராஜன், “1,75,843 தலைகள் வீழ்ந்துள்ளன” என்று, ஆயிரம்தலைகளைக் கூட்டிப் பதிப்பித்துவிட்டார். கணக்கைச் சரிபார்க்க ஆத்மாநாம் இல்லாவிட்டாலும், அவரது வாசகர்கள் உள்ளார்களே என்பதைப் பற்றிப் பிரம்மராஜன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ‘ஸ்னே(நே)கம்’ என்ற கவிதை, முதலில் படிகளில் (இதழ்20:1984:ப.3) வெளியிடப்பட்டபோது, அக்கவிதை 32வரிகள் கொண்டதாகத்தான் இருந்தது. ஆனால், பிரம்மராஜன் பதிப்பில், அது 38வரி கொண்டதாகிவிட்டது. நடந்த தவறு என்ன தெரியுமா? இக்கவிதையின் 21முதல் 26வரையிலான 6வரிகளைப் பிரம்மராஜன் தவறுதலாகக் குழப்பி வெளியிட்டுவிட்டார்.
“எனினும், எந்தத் தரையோடு பறக்கும், வண்ணாத்திப் பூச்சியின் திசையும், அதற்கு மட்டும் தெரிந்திருக்கிறது” என்பவைதாம், உண்மையில் அக் கவிதையிலுள்ள வரிகள். இவற்றை யும் வெளியிட்டு, இவற்றுக்கு முன்பாக வேறு சிலவரிகளையும் சேர்த்துக் குழப்பிப் பிரம்மராஜன் பதிப்பித் திருக்கிறார். இந்தத் தவறுக்குப் பெரிதாகக் காரணம் ஒன்றுமில்லை. இக்கவிதையின் 17முதல் 20வரையிலான வரிகளைப் பின்வரிகளோடு
(21-24) சேர்த்துப் பிரம்மராஜன் குழப்பிக்கொண்டதே காரணமாகும். “எந்தக் குறிப்பிட்ட திசையையும், பின்பற்றாது, வண்ணாத்திப் பூச்சிகள், வாழ்க்கையை நடத்துகின்றன” (17-20) என்ற முன்வரிகளை, “எனினும், எந்தத் தரையோடு பறக்கும், வண்ணாத்திப் பூச்சியின் திசையும், அதற்கு மட்டும் தெரிந்திருக்கிறது” (21-24) என்ற பின்வரிகளோடு சேர்த்துக் குழப்பிக் கொண்டதன் பலனாகக் கீழ்வரும் பொருளற்ற வரிகளைப் பிரம்மராஜன் பதிப்பித்துவிட்டார். “எனினும், எந்தத் தரையோடு பறக்கும், வண்ணாத்திப் பூச்சியின் திசையும், பின்பற்றாது, வண்ணாத்திப் பூச்சிகள், வாழ்க்கையை நடத்துகின்றன” என்ற மிகைவரிகளைக் கவிதைக்குள் அறியாது இடைச்செருகிவிட்டார்.
(21-24) சேர்த்துப் பிரம்மராஜன் குழப்பிக்கொண்டதே காரணமாகும். “எந்தக் குறிப்பிட்ட திசையையும், பின்பற்றாது, வண்ணாத்திப் பூச்சிகள், வாழ்க்கையை நடத்துகின்றன” (17-20) என்ற முன்வரிகளை, “எனினும், எந்தத் தரையோடு பறக்கும், வண்ணாத்திப் பூச்சியின் திசையும், அதற்கு மட்டும் தெரிந்திருக்கிறது” (21-24) என்ற பின்வரிகளோடு சேர்த்துக் குழப்பிக் கொண்டதன் பலனாகக் கீழ்வரும் பொருளற்ற வரிகளைப் பிரம்மராஜன் பதிப்பித்துவிட்டார். “எனினும், எந்தத் தரையோடு பறக்கும், வண்ணாத்திப் பூச்சியின் திசையும், பின்பற்றாது, வண்ணாத்திப் பூச்சிகள், வாழ்க்கையை நடத்துகின்றன” என்ற மிகைவரிகளைக் கவிதைக்குள் அறியாது இடைச்செருகிவிட்டார்.
1989இல் செய்த இத்தவற்றை 2013இல் வந்த காலச்சுவடு பதிப்பு வரையிலும் அவர் கண்டுகொள்ளாததும் திருத்தமுனையாததும்கூட வியப்பில்லை. ஆனால், இவ்வரிகளை நம்பி, இக்கவிதையில் இவ்வரிகள், ‘இரட்டிப்பு அழுத்தத்துடன்’ ஆத்மாநாமால் வலியுறுத்தப்பட்டுள்ளதாகப் ‘பொன்னேபோல் மூத்தோர் மொழியைப் போற்றி’ப் புரிந்துகொண்டு விவாதிக்கும் என் போன்றோரின் அதிகப் பிரசங்கித்தனத்தை என்னவென்று கூற?
கணையாழியில் (தீபாவளி மலர்: நவம்பர் 1982) வெளிவந்த பாப்லோ நெரூடாவின் ‘கிழக்கில் மதம்’ கவிதையின் மொழிபெயர்ப்பும், ரோஸ்விக் டெட்யூஸின் ‘என் கவிதை’ (டிசம்பர் 1982: ப.32) மொழிபெயர்ப்பும், அட்ரியன் மிஷெலின் ‘இரவு வரிகள் அமைதியான வயற்புற வீட்டில்’ (செப்டம்பர் 1983: ப.48) என்ற கவிதையின் மொழிபெயர்ப்பும் பிரம்மராஜனின் பதிப்பில் ஏனோ சேர்க்கப்படவில்லை. ‘ஆத்மாநாம் படைப்புகள்’ எனத் தலைப்பிட்டும், ஆத்மாநாமின் ‘மொழிபெயர்ப்புக் கவிதைகள்’ (பக்.195-211) எனத் தனியாய்ப் பிரித்தும் பிரம்மராஜன் வெளியிட்டுள்ள ஒரு பதிப்பில், இம்மூன்று முக்கியமான மொழிபெயர்ப்புக் கவிதைகளும் விடுபட்டுள்ளதைத் தற்செயலாகக் கருதுவதற்கில்லை.
‘ஆத்மாநாம் நினைவுக்குறிப்பை’க் கணையாழியில் (செப்டம்பர் 1984:பக்.15-16) பிரம்மராஜன் எழுதியுள்ளார். இக்குறிப்பில் அவர், ரோஸ்விக்ஸின் ‘My Poetry’ஐ ஆத்மாநாம் மொழிபெயர்த்துக் கணையாழியில் வெளியிட்டது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஆத்மாநாம் மொழிபெயர்த்த அட்ரியன் மிஷெலின் கவிதை, ஆத்மாநாமின் இறப்பிற்குப் பத்துமாதங்களுக்குமுன் கணையாழியில்(செப்டம்பர்1983) வந்துள்ளது. ‘மீட்சி புக்ஸ்’ வாயிலாக வந்த ‘கவிதை பற்றி - ஆத்மாநாம்’ நூலில் (முதற்பதிப்பு: செப்டம்பர் 1984: ப.4), பாப்லோ நெரூடாவின் கவிதையை ஆத்மாநாம் மொழிபெயர்த்துள்ள தகவலையும் பிரம்மராஜன் பதிவுசெய்துள்ளார். எனவே, இம்மூன்று மொழிபெயர்ப்புகளையும் பற்றிப் பிரம்மராஜன் அறிந்திருக்கவில்லை எனச் சமாதானம் கூறுவதற்கில்லை. இவற்றைத் தம் பதிப்பில் விட்டுவிட்டமைக்குப் பிரம்மராஜனிடம் நியாயமான காரணங்கள் இருக்கக்கூடும். அவற்றை இனியாவது அவர் வெளிப்படுத்த வேண்டும்.
மேலும், படிகளில் (இதழ்18: 1983: பக்.5-7) பிரசுரமான ஸோ அங்லெஸியின் (Zoe Anglasey) ‘களதமாலாவில் காணாமற்போன ‘நீனா’விற்கு’ மற்றும் ‘இடத்தின் முக்கியத்துவம்’ என்ற இரண்டு மொழிபெயர்ப்புகளும், இதே இதழில் வெளியான “ஈழத் தமிழ்க் கவிதைகள்” பற்றிய ஆத்மாநாமின் மதிப்புரையும், ‘ஆத்மாநாமின் அரசியல் கருத்தை வெளிப்படுத்தும் மொழிபெயர்ப்பு’ எனத் தலைப்பிடப்பட்டுப் படிகளில் (1985: பக்.8-12) வெளியிடப்பட்ட புரட்சிகர பாதிரி ‘கேமிலோ டாரஸ் ரெஸ்ட்ரபோ’வின் கட்டுரையின் மொழிபெயர்ப்பும், மீட்சியில் வெளிவந்த ‘ஜ்யார்ஜ் ப்ராக்’ பற்றி ‘லாரா வின்கோ மாஸினி’ எழுதிய அறிமுகக்குறிப்பின் (இதழ்28: ஜனவரி - மார்ச் 1988: பக்.45-46) மொழிபெயர்ப்பும்கூடப் பிரம்மராஜனின் பதிப்பில் இல்லை. இவையெல்லாம் இனிமேல்தான் வெளியிடப்பட வேண்டும்.
ழவில் (இதழ்14: பிப்ரவரி 1981:ப.10) வெளிவந்தபோது, ‘அழைப்பு’ கவிதையின் மூன்றாம் மற்றும் நான்காம் வரிகள், ‘நான் என்னோடு, உணவருந்தும்பொழுது’ என்றுதான் இருந்தன. ஆனால், ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பில் (ப.22), இவ்வரிகள், “நான் என்னோடு, உணவருந்திக்கொண்டு” எனத் திருத்தப்பட்டுவிட்டன. இதைப் பின்பற்றிப் பிரம்மராஜனின் பதிப்பிலும் இவை, ‘நான் என்னோடு, உணவருந்திக்கொண்டு’ (1989:ப.105, 2002:ப.162) எனக் ‘கொண்டு’ என்பதைச் சேர்த்துக்கொண்டுவிட்டன. இதேபோல், “மறுபக்கம்” என்ற கவிதை, முதலில் எம். சுப்பிரமணியன் வெளியிட்ட ‘நாற்றங்கால்’ (மே-1974) தொகுப்பில் இடம்பெற்றபோது, அதன் இரண்டாம்வரி “சுவற்றில் பல்லி” என்றுதான் இருந்தது. ஆனால் இது, ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பில் (ப.27) வந்தபோது, ‘இலக்கண சுத்தத்துடன்’ ‘சுவரில்’ எனத் திருத்தம் பெற்றுவிட்டது. இதைப் பின்பற்றிச் ‘சுவரில்’ என்றே பிரம்மராஜனும் பதிப்பித்துவிட்டார்.
இது சரியானதுதான். ஆனால், நாற்றங்காலிலும், பின் ழவில் (இதழ்10: செப்டம்பர் 1980:ப.11) ஞானக்கூத்தன் எழுதிய கவிதை பற்றிய ஒரு கட்டுரையிலும், “அருகில் கேட்கும், குழாயின் ஒழுகல்” என்றே இடம்பெற்றிருந்த வரிகள், எவ்வாறோ ழ வெளியீடான ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பில் “இருளில் கேட்கும், குழாயின் ஒழுகல்” எனப் பதிவாகிவிட்டது. இப்பதிவையே பிரம்மராஜனும் பின்பற்றிவிட்டதாகத் தெரிகிறது. “தொலைவில் கேட்கும், குழந்தையின் அழுகை” என்று முன்வரிகள் உள்ளபோது, பின்வரியில் ‘அருகில்’ என்ற சொல் இடம்பெறுவதுதானே இயல்பானது? இதன் ‘மூல பாடம்’ குறித்தும் ஆராய்ந்தறிய வேண்டும்.
இதுகாறும் இக்கட்டுரையில், பிரம்மராஜனின் பதிப்பிலுள்ள பிழைகளும் விடுபடல்களும் நீக்கங்களும் தணிக்கைகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இன்னும் சிலவும் உள்ளன. கட்டுரையின் அளவு கருதி, அவற்றை இங்குச் சுட்டவில்லை. இக்கட்டுரைக்கு ஒரே ஒரு நோக்கம்தான் உண்டு. ஆத்மா நாமின் கவிதைப் பதிப்பை முழுமைப்படுத்துவது ஒன்றே என் நோக்கம்.
பதிப்புகளைத் தனிநபர்ச் செயல்பாடுகளாகப் பார்க்கக் கூடாது; கூட்டுழைப்பையும் கூட்டுப்பொறுப்பையும் கோரும் வினைப்பாடது. ஆத்மாநாமின் வெளிவராத கவிதைகளில் இன்னும் சிலவற்றையேனும் கண்டுபிடிக்க முடியும் என்றும், அவரது பிற எழுத்துகளையும் எப்பாடுபட்டேனும் தேடிப் பிடித்துப் பதிப்பிக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். இதற்குத் தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தீவிரமாக இயங்கிய, ஆத்மாநாமை நன்கறிந்த நண்பர்கள் பலரின் உதவியும் வேண்டும். ஊர்க்கூடி இழுப்பதால் தேர் மட்டுமன்று, பதிப்புகளும் முழுமையை நோக்கி நகரக்கூடும் என்பதுதான் உண்மை.
ஆத்மாநாம் இறந்தபோது, நிகழ் இதழில் வெளிவந்த அஞ்சலிக்குறிப்பின் பின்வரும் இறுதிவரிகளைச் சுட்டிக்காட்டிக் காலவரிசைப்பதிப்பொன்றின் ‘அவசர அவசியத்தை’ வலியுறுத்த விரும்புகிறேன்.
“இனி நமக்கொரு ஆத்மாநாம் கிடைக்க மாட்டார். நாம் என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்? இவன் எழுதிய எல்லாப் படைப்புகளையும் தொகுத்து இவன் சாதனையை நிலைப்படுத்தலாம். எதிர்காலம் கண்டுசொல்லும் இவனுக்குள் ஒரு திருமூலர், ஒரு பாரதி இருந்ததைப் புதுமைப்பித்தன்கள் போய்ச்சேரும் இடம் தேடி மறைந்துவிட்டான் இந்தப் பித்தனும்” (நிகழ்:
இதழ் 6: ஜூலை1984).
இதழ் 6: ஜூலை1984).
இந்த அஞ்சலிக்குறிப்பு எழுதப்பட்டு, இப்போது 32ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்னும் ஆத்மாநாம் எழுதிய படைப்புகள் அனைத்தும் தொகுக்கப் பட்டுவிடவில்லை; ஆகவே ஆத்மாநாமின் கவிதைச் சாதனையும்கூட இன்னும் நிலைப்படுத்தப்படவில்லை. ஆத்மாநாம் எழுதிய ‘உறைந்து போன நேரம்’ கவிதையின் கடைசி இரண்டுசொற்களைச் “சூனியத்தில், முற்றுப்புள்ளி” (2002:பக்.49-50) எனப் பிரம்மராஜன் பதிப்பித்துள்ளார். ஆனால், உண்மையில் இந்தச் சொற்கள், ‘சூனியத்தில் வெடித்த, முற்றுப்புள்ளி’ என்றுதான், ஆத்மாநாமின் குறிப்பேட்டின் அடிப்படையில், மீட்சியில் (இதழ்28: ஜனவரி - மார்ச்1988: பக்.50-51) வெளிவந்தபோது இடம்பெற்றிருந்தன. சூனியத்தில் முற்றுப்புள்ளியாகி முடிந்துபோய் விடுபவரல்லர் ஆத்மாநாம்; சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளியாய்ப் பெருவெடிப்பின் சாட்சியாய்த் தற்கொலையிலிருந்து தம் எழுத்துகள்வழி, “என்னை அழித்தாலும், என்னை அழிக்க இயலாது” (2013:ப.27) என்று உயிர்த்தெழும் ‘பழைமையினால் சாகாத’ பெருங்கலைஞர் அவர்.