Friday, 5 August 2016

ஞானக்கூத்தன் பற்றி பிரமிள் . பதிவு 4 கருக்களம் - பிரமிள்

ஞானக்கூத்தன் பற்றி பிரமிள் . பதிவு 4
கருக்களம் - பிரமிள்

https://www.facebook.com/kaala.subramaniam/posts/1042625129162709-----------------------------
தமிழ் இலக்கிய சரித்திரம் நீதிபோதகர்களால் பெருமளவுக்கு ஆளப் பட்டிருக்கிறது-குறைபாடு என்று இந்த இலக்கியப்புறம்பான நிலை இன்று கணிக்கப்பட கூடிய அளவுக்கு. நீதிபோதனையின் பொது நடைமுறை, மதம்சார்ந்த இலக்கியக்காரர்களிடமே நம்மை இட்டுச் செல்லும். இவர்களுக்கும் முந்திய பூர்வீகமான ஆழ்ந்த ஆளுமைகளோ, தமிழின் பேரிலக்கியச் சொத்துக்களைத் தந்த இலக்கிய மூதாதையரிட மிருந்து மத இலக்கியக் காரர்களை வந்தடைந்த அளவைகளாகும். சமூக சீர்திருத்தங்களையும், சமூக நலனுக்கான கட்டமைப்பு களையும் உருவாக்கிப் பேணவேண்டிய அவசியமே நீதிபோதனையை நியாயப் படுத்துகிற அடிப்படை. இதில் வக்ரமோ விசித்ரமோ கிடையாது. உந்நத மதிப்பீடுகள் இலக்கியமாக போதம் பெறுவதை ‘நீதித்வம்’ என்று புரிந்துகொள்வோமேயானால், பேரிலக்கியங்கள் நீதித்வமானவை என்பதை உணரலாம்.
நீதி போதனைக்கும் நீதித்வத்துக்கும் இடையே ஒருவித்யாசத்தைக் கணிப்பது இவ்விடத்தில் உபயோகமாகும். ‘அது தகாது. இது தகுந்தது’ என்ற வகையில் லகுவானதாக, விஷயத்தை அளவிடுவது நீதி போதனை யின் முடிவுகளைச் சார்ந்தது. இலக்கிய முடிபுகள் அனுபவமாக மாறத் தக்க மோதல்களுக்கு இடம்தராதவை. நீதித்வமோ எதிரிடைநிலை களின் மோதல்களை அவற்றின் கவித்வத்தீர்ப்பு என்ற எல்லைவரை கொண்டு செல்வதினின்றும் விளைவது. இங்கே வெளிப்படையான ஒரு முடிபாக அல்லாமல் ஒரு அனுபவநிலையின் சாட்சியத்திலேயே நீதி நிலை பேறடையும்.
ஞான வாழ்வுக்கு பிரதான்யம் தந்த கவித்வப்பார்வை களும் நீதித்வமும் இணைகிற இயக்கங்கள் தமிழில் அவ்வப்போது அற்புத சிகரங்களைச் சாதித்துள்ளன என்ற விஷயம் இவ்விடத்தில் அழுத்தம் பெறவேண்டும். ஒரு உதாரணம் தரலாம்:
எட்டுத்திசையும் பதினாறுகோணமும் எங்கு மொன்றாய்
முட்டித்ததும்பி முளைத்தெழும் சோதியை மூடரெல்லாம்
கட்டிப்பிடிப்பர் கக்கத்துள் வைப்பர் கருத்தில் வையார்
பட்டப்பகலே இரவென்று கூறிடும் பாதகரே.
பட்டினத்தடிகளின் இந்தப்பாடல் ஞான வாழ்வுக்கும் அதைப்போலி பண்ணுகிற வாழ்வுக்குமிடையே உள்ள ஒரு பிரம்மாண்டமான வித்தியாசத்தை அற்புதமாக உணர்த்துகிறது. கவிதையைச் சாதிக்கும் நோக்கத்துக்கு அப்பாற்பட்ட உணர்வுகளுள் ஞானாகாரத்துக்கு ஒரு திசையில் ஏறி, இவ்விதம் மிக உயரிய கவிதையைப் படைத்த இவரே, போதனையின் திசையில் இறங்கி தரம் குறைந்த படைப்புகளையும் கூட தருவது, இலக்கிய சாதனையை அலட்சியப்படுத்திய ஒரு மனோபாவத்தை அடையாளம் காட்டுவதாகும். சமூகநலனுக்கான போராட்டத்துக்காக எழுதுவதே இலக்கியம் என்ற ஒரு கொள்கையின் பூர்வீக வடிவங்களை இத்தகைய மனோபாவங்களில் நாம் காணலாம்.
மூச்சின் இயக்கம் போன்ற இயல்பான வாழ்க்கை முறையில் ஞான வாழ்வை ஒரு அறவாழ்வு முறையாக நிகழ்த்திய மத இலக்கியவாதி, நீதிபோதனை மட்டுமே செய்யக்கூடிய அளவு தனது உத்தேசத்தைத் திசைமாற்றியிருக்கிறான். மதஇலக்கியவாதியிடமிருந்து பண்டிதர்களின் கைக்குவந்த இலக்கியம்,லௌகீகத்தை மறைக்கிற பகட்டுப்போர்வை யாகவே நீதிபோதனையை உபயோகித்ததுடன், வாழ்வின் உண்மை நிலைகளைத் தரிசிக்கிற இயக்கத்துக்கு முரணானதாகவும் இலக்கிய இயக்கத்தை இனம் காட்ட முயன்றுள்ளது. மேலும் ஞான வாழ்வுக்கு பிரதான்யம் தந்த எழுத்துகளிலிருந்த உயிரோட்டம் பாண்டித்யப் படைப்புகளில் அடியோடு அற்று விட்டது.
தமிழின் நவீன எழுத்தியலாளன், நீதிபோதனைகளின் கோலங்களை ஊடுருவி, நீதித்துவமான பேரிலக்கி யங்களை அளித்த இலக்கிய புருஷார்த் தங்களை உணர்ந்தான். நவீன யதார்த்தங்களுடன் ஏற்பட்ட சந்திப்புகளாக இந்த புருஷார்த்தத்தை மீண்டும் உருப்பெற வைக்க, இந்த நூற்றாண்டில் இவன் நீதிபோதனையை உள்முரணான போலி என்று இனம் கண்டு, இலக்கிய இயக்கத்திலிருந்து புறம் தள்ளினான். இது பரிபூர்ணமாக ஒரு சித்தாந்தத் தெளிவு பெறுமளவுக்கு இலக்கிய சாதனையானது 1948இல் மறைந்த புதுமைப்பித்தனின் கையிலாகும்.
இதற்குமுன்பே 1921இல் மறைந்த ஸி.சுப்ரமணிய பாரதி எழுதிய படைப்புகளில், ஞான வாழ்வுக்கு பிரதான்யம் தந்த ஒரு மனோபாவத்தின் நீட்சியுடன் நவீன மதிப்பீடுகள் கலக்கக் காணலாம். பட்டினத்தடி களின் மரபில் வந்த சிதம்பரம் ராமலிங்கம் எனும் வள்ளலாரை, இவரது நவீன பாணிக்கும் ஞானார்த்தம், தெய்வப் பாடல்கள் என்ற கருக்கள ஈடுபாட்டுக்கும் முன்னோடியாகக் காண முடிகிறது. கவிதையின் உருவ ரீதியான சில சோதனை முறைகள் பாரதியிடம் இருந்திருக்கின்றன. ஆனால் நவீனமான இலக்கிய அளவைகள், நீதிபோதனை முதலிய அம்சங் களை இலக்கியத்திலிருந்து பிறிதுபடுத்தும் அளவைகள், புதுமைப்பித்தனிடமே பூரணமாக நிறைவேறுகின்றன என்பதுடன், இந்த அளவைகள் முற்றிலும் மேலைத்தேய இலக்கியத் தேட்டங்களினை உணர்ந்த புதிய பிரக்ஞை ஒன்றன் சுயமொழிப்பிரதேச விகஸிப்புகளாகும். இந்த தீவிர இலக்கிய அளவை, இந்திய பாரம்பரியத்திலிருந்து இவ்வளவு திட்ட வட்டத்துடன் பெறப்பட இயலாத ஒன்று.
புதுமைப்பித்தனிடத்தே இன்றைய தமிழிலக்கியத்தில் முதன்முதலாக ஒரு சிருஷ்டிகரத்தின் எரிமலை, விமர்சனசக்தியாகவும் இயங்கியதைக் காண்கிறோம். பார்ப்பனராகப் பிறந்த பாரதியும், பார்ப்பனரல்லாதவ ராகப் பிறந்த புதுமைப்பித்தனும் கருக்களத்தைப் பொறுத்தவரை, தங்களுடைய சொந்த சமூகப்பிரிவுகளையே வேண்டிய அளவுக்கு விமர்சித்து உள்ளார்கள். தங்களது சமூக வகுப்புகளுக்குப் பிரபாவம் பாராட்டாமல், சமூக இயக்கத்தை அவர்கள் பரிசீலித்தமைதான், அவர்களின் தர்சன சக்தியையும் சிருஷ்டிகர ஊக்கத்தையும் இறுதிவரை உயிரோடு வைத்திருக்கிறது. விசேஷமாக பித்தனது சிறுகதைகளில் இது பன்முகமான கருக்களச் செழிப்பாகவும் இருந்திருக்கிறது.
விழித்தெழுந்த இந்தியாவில், புதிய மதிப்பீடுக்களுக்கான தேடல், இயல்பாக வைதீகத்தினைச் சாடிற்று. தமிழில் இந்தச் சமயத்தில், தேசீய மதிப்புகளையும் பொக்கிஷங்க ளையும் பிரபாவ பாணியில் வழிபடும் மனோபாவம், பாரதிமூலம் வெளியாகியது. வைதீகத்தைச் சாடிய அவரது விழிப்புடன் தமிழை வழிபடும் குணமும் இத்துடன் உயிர்ப்புப் பெற்ற ஒன்றாகும் - இதற்கு மூலகங்கள் ஏற்கெனவே இருந்திருப்பினும். ஆங்கிலக் கல்வி மூலம்தான், இந்திய பாரம்பரியத்தை ஆய்வு செய்து உலகுக்கு அளித்த மேலைத்தேய அறிஞர்களது கண்டுபிடிப்புகளை இந்தியதேசியவாதிகள் அறிந்தன ரெனினும், பொதுவான மத்தியதர மனோபாவம், ஆங்கிலக்கல்விமூலம் சுயதேசியத்தைப் புறக்கணிக்கிற ஒன்றாகவும் உருவெடுத்ததை நினைவில் கொள்ள வேண்டும். இந்த அடிமைத்தனமான மனோபாவமும் இந்திய பாரம்பரியத்தை அறிந்த புரட்சிகர மனோபாவமும் - இரண்டுமே ஆங்கிலக்கல்வியின் விளைவு களாகும். இவற்றுள் இந்திய பாரம்பரியத்தினை புரட்சிக்கார அறிஞர்கள், அடிமை மனோபாவக்காரருக்கு உணர்த்த உருவகித்த பிரதிமைகளில் ஒன்று தமிழ் வழிபாடு மற்றது விதேசி வெறுப்பு. பிந்திய நாட்களில் இது ஆங்கிலம் கற்க இயலாதவர்களது சுயலாப அரசியல் இயக்கமாகவே உருவெடுத்தது என்பதும் கவனிப்புக்கு உரியது.
மதிப்பீட்டினளவில், பரந்துபட்ட ஒரு புதிய மனிதாயமாக வடிவெடுத் திருக்கவேண்டிய தேசீய ஒருமையுணர்வு, அரசியல் பதவி வேட்கை களினால் சிதறடிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலக் கல்வி மூலம் உணரப்பட்ட இந்த மனிதாய மதிப்பீடு, சுயலாப அரசியல் வேட்டைக்காரனுக்கும் அவனது சகோதரனாகிய வைதீகவாதிக்கும் ஒவ்வாத ஒன்று. வகுப்பு வாதங்களை மட்டுமே நம்பி வாழ்கிற வர்கள் இவர்கள். எனவேதான் இவர்கள் உபயோகிக்க வென தேசீயப்புரட்சியாளர்களிடமிருந்து இவர்கள் திருடி வெகுஜனத்தினரைக் கவர உபயோகித்த பிரதிமைகள், நவீன உணர்வும் மதிப்பீட்டு விழிப்புமுள்ளவர்களது தாக்குதலுக்கு இலக்காயிற்று. தமிழின் சம்பந்தமான பல்வேறு பிரதிமைகளையும் சாடிய புதுமைப் பித்தனின் இயக்கத்தின் ஒருபகுதி இத்தகையது.
காந்தீயத்தின் காலம், பாரதி, புதுமைப்பித்தன் இலக்கிய கால கட்டங்கள் ஆகிய வேளைகளில் சமூகக் கண்ணோட்ட த்துடன் செய்யப்பட்ட சுயவிமர்சனம், இந்திய உள்ளத்தி ற்கென நிகழ்த்தப்பட்ட தீரமான பரிசீலனையாகும். இதன் விளைவாக, சுதந்திர இந்தியா ஒரு இருமுக ஜன்மம் எடுத்துள்ளது. ஒருபுறம் மனித மதிப்பீடுகள் டாக்டர் அம்பேத்கர் போன்றோரின் போராட்டங்களின் விளைவாக (டாக்டர் அம்பேத்கர் இது விஷயத்தில் மோகன்தாஸ் காந்தியின் பார்வையை நிராகரித்தே தமது போராட்டத்தை நிகழ்த்தியுள்ளார்) தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் பட்டம் பதவி பெறக்கூடிய சந்தர்ப்பங்கள். இன்று மறுஜன்மம் எடுத்தே இந்த சில்லரைப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மறுபுறம் இந்த மனிதாய முகத்துக்கு முரணாக, ஜாதி அடிப்படையில் வோட்டுப்போடும் வசதிகள். பிந்திய அம்சம் முந்திய அம்சத்துக்கு முரணாகி, சமகாலத்தி லேயே இரு அம்சங்களும் நிலவுவதும் கவனத்துக்குரியது. இதில் பிந்திய அம்சம், வைதீகவாதி களுக்கு ஒருபுறம் ஆசுவாசத்தையும் மறுபுறம் பெரும்பான்மையினரான பிறஜாதியினரால் நசுக்கப்படுகிறோம் என்ற பீதியையும் தருகிற விசித்ர நிலைமைகூட இதன் விளைவாகும். இலக்கியக் கேந்திரத்தைப் பொறுத்தவரை இந்த வேளையில் சமூக வகுப்புகளைப் பற்றிய விமர்சனப் பார்வை அரசியல்தனமாகக் கூடும் என்ற காரணத்து க்காகப் போலும், இலக்கியவாதிகளால் அதிகம் அது கருக்களமாக பயன்படுத்தப்பட வில்லை. மதிப்பீட்டு க்கேந்திரத்தின் களத்தில் ஒன்றுபட்ட வேறுவேறு வகுப்பினரின் கூட்டாகவும், ஒருவரது உன்னதங்களை மற்றவர் உணர்ந்த ஞானமாகவும் சித்திபெற்ற மனோபாவங்களே இலக்கிய வாதிகளிடையே நிலவின என்பது இதற்கு ஒரு அறிவார்த்தமான காரணமாகலாம்.
இலக்கியத்தின் அடிப்படைச் சக்திகளுக்கு உதவிய இந்த மனோபாவமும் விழிப்புள்ள திறனும் சேர, அறுபதுக்களில் ஒரு ஆழ்ந்த கவித்வ இயக்கம் பிறந்து எழுபதுக்களிலும் தொடர்ந்துள்ளது.
இதே சமயத்தில் கம்யூனிஸ்டுகள் - இவர்களாலும் ஜாதிப்பிரச்சினை போன்ற சமூக விபரங்கள் தீண்டப்படவில்லை. இவர்கள் தங்கள் கட்சியுடன் கலைஞன் சேர்ந்து ராகம் போடவேண்டும் என்று திரும்பத்திரும்பக் கூறியதுக்கு மீறி, எதுவித சமூக உணர்வையோ மதிப்பீட்டு விழிப்பையோ விமர்சன பூர்வமான கூர்மையையோகூடக் காட்டுவதில்லை. இவர்களது இயக்கத்தில் வசதிகளைப்பெற முன்வந்த அரைவேக்காடுகளின் மூல்யமே, பெருமளவுக்கு இன்றும் கம்யூனிஸ சித்தாந்தம் இங்கே குரல் பெறுகிறது. ஏதும் புதிய பார்வைகள் இவர்கள் மூலம் வெளிப்பட்டால், அது இலக்கிய கேந்திரத்திடமிருந்து இவர்கள் பொறுக்கிக் கொண்ட பார்வையாகவே இருக்கும். புதுக்கவிதை இயக்கத்தை முதலில் பரிகசித்துவிட்டு, அதைப் பின்பு தங்கள் ஏகபோக இயக்கம் என்று பாவனை பண்ணும் இவர்களது பல்டி இதற்கு ஒரு உதாரணம்.
இன்னொன்று கருக்களத்தில் எழுபதுக்களில் புதிதாக எனது எழுத்தி ன்மூலம் பிறந்த ஜாதீய ஆய்வை இப்போது இவர்கள் எதிரொலிப்பது. இந்த ‘புதுமை’களைவிட்டால், நீதி போதனை மட்டுமே இலக்கியம் என்று கூறி, யதார்த்த நிதர்சனங்களினது பின்னல்களைத் ‘தீட்டு’ என்று ஒதுக்கிய, வைதீக + பண்டித மனோபாவங்களே இவர்கள்மூலம் புதுவடிவம் பெற்றுள்ளது. கம்யூனிஸ போதனையும் அதன் சித்தாந்தங்களுக்கு முரணாகாதவையும் மட்டுமே இலக்கியமாக முடியும் என்பதே இந்த கம்யூனிஸ வைதீகங்களின் ஆதாரத்தத்துவம்.
இவர்களுடைய கவிதைக் குவியல்களிலிருந்து தனித்தன்மை வாய்ந்த ஒருவரிகூட நமக்குக் கிட்டுவதில்லை. ஒருவன் எழுத்தாளனாகத் தோல்வியடைந்ததைக் காட்டுவது இந்த முகமின்மை. அன்றைய பண்டித மண்டலங்களில் நாம் சந்தித்த அதே முகமின்மைதான் இது.
இன்னொரு குழு, கசடதபற என்ற சிறு பத்திரிகையாக, இப்போது க்ரியா பிரசுரத்தை நடத்தும் ராமகிருஷ்ணன், கணையாழி ஆசிரியராக இருந்த அசோகமித்திரன், ஐராவதம் என்ற ஆர்.சுவாமிநாதன், மற்றும் ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, ந. முத்துசாமி, வெங்கட்சாமிநாதன், நாரணோ ஜெயராமன் முதலியோரை உள்ளடக்கி உருவாகிற்று. இந்த குழு சில மதிப்பீட்டு அடிப்படைகளில் உள்ளூர முரண்பட்டும் இருந்திருக்கிறது. இதன் விளைவாகவே, கசடதபறவில் எழுந்த ‘திரை களுக்கு அப்பால்’ பிரச்சினையும் பத்திரிகை இயல் சம்பந்தமான அதர்மங்களும், வெ. சாமிநாதனை அன்னியப்படுத்தியதுடன், சிலரை இயக்கத்திலிருந்து உதிர்த்து, ஆழமற்ற மதிப்பீடுகளுக்கு பலியாக்கிற்று. இதில் தீர்க்கப்படாமல் நின்ற பிரச்சினை, எனது கட்டுரைகள் மூலம் 1972-73இல் பரிசீலிக்கப்பட்டது, மீந்திருந்த மேற்படி குழுவினரின் சிதறலையும் நிர்ணயித்துள்ளது. (விபரங்களை வெங்கட்சாமிநாதனின் இலக்கிய ஊழல்களிலும் எனது விமர்சன ஊழல்களிலும் காண்க.)
தனக்கு முந்திய எழுத்து மூலம் நடந்த புதுக்கவிதை இயக்கத்தைச் சற்றே மலினப்படுத்திய நடை பத்திரிகையைத் தொடர்ந்து கசடதபற மேலும் அந்த இயக்கத்தை மலினமாக்கிற்று எனலாம். எழுத்துவில் பிறந்த புதுக் கவிதையின் சித்தாந்த பூர்வமான மதிப்பீட்டுத் தெளிவும் சிருஷ்டிபூர்வமான உக்ரமும் நடை, கசடதபற ஆகியவற்றில் தொடர வில்லை. ஆனால் இது அங்கங்கே புதியவர்கள் பிறந்தார்கள் என்பதை மறுப்பதாகாது. எழுத்துவில் எழுதியவர்களாக, ந.பிச்சமூர்த்தி, மயன் (க.நா.சுப்ரமண்யம்), பசுவய்யா (சுந்தர ராமசாமி), பிரமிள் (தர்முசிவராமு), நகுலன் (டி.கே.துரைஸ்வாமி), தி.சோ. வேணுகோபாலன் ஆகியோர் விசேஷமாக குறிப்பிடத்தக்கவர்கள். பிற்சேர்க்கையாக எஸ்.வைதீஸ்வரனையும் சி.மணியையும் எழுத்து பிரசுரத்தின் மூலம் தெரியவந்த பசப்பல் தொகுப்பின் கே.ராஜகோபால், மற்றும் சி.சு. செல்லப்பா ஆகியோரையும் குறிப்பிடலாம். இவர்களுள் கவித்வப் பண்பற்றவற்றை மட்டுமே சி.சு.செ. எழுதினாரெனினும் அவர் செய்துள்ள சில மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் கவனத்துக்கு உரியவை.
நடை பத்திரிகையில் நிகழ்ந்த கவித்துவ மலினத்துக்கு சி.மணி எழுதிய ‘மாலி’ கவிதைகளைப் பெருமளவுக்கு உதாரணம் காட்டலாம். இந்த ‘மாலி’ கவிதைகளையே, நடையில் ஆரம்பித்து கசடதபறவில் தொடர்ந்த ஞானக்கூத்தன் இமிட்டேட் பண்ணினார். முக்கியமாக, ‘என்ன செய்வதிந்தக் கையை?’ என்று துவங்கும் சி.மணியின் ‘பெரியசாமி தீர்க்கிறான்’ கவிதை, ‘கையைக்காலாக்கென்றான்’ என முடிவுறுகிறது. இது வேலையற்ற வேளையில் மனிதனை மிருகமாகும்படி கூறுவதில் பெறும் விடம்பனமே கவிதையின் சிறப்பம்சம் - இந்த கவிதையின் மொத்தவடிவு உயிரற்றதெனினும்.
இதை மாடலாக்கிய ஞானக்கூத்தன், ‘திண்ணை இருட்டில் எவனோ கேட்டான், தலையை எங்கே வைப்பதாம்’ என்று ஆரம்பித்துக் ‘களவு போகாது கையருகே வை’ என முடிக்கும் கவிதையை எழுதியுள்ளார். கசடதபறவின் குழுவில் ஆரம்பத்தில் இருந்த வெ.சாமிநாதன், நடை நிர் 6இன் மதிப்புரைப் பகுதியில் ஞானரதம் இதழ் ஒன்றுக்கு எழுதிய மதிப்புரையில், மாலி என்ற மணியையும் ஞானக்கூத்தனையும் ஒப்பிட்டு மிக உயர்த்திப் பிடித்திருந்தமையும், பின்பு எனது அபிப்ராயங்களின் பாதிப்புகளை, கசடதபற வினரால் பாதிக்கப்பட்ட பின்பு, தம்மைப் பாதித்த ஞானக்கூத்தனுக்கு எதிராக வெ.சா. உபயோகித்துத் தமது மதிப்புரை யுடன் முரண் கொண்டதையும், விமர்சன ஊழல்களில் காண்க.
ஞானக்கூத்தனின் ஆழமின்மைக்கே, ‘திண்ணை இருட்டு’ கவிதை உதாரணமாகும். தலையணை இல்லாவிட்டால், கையை மடித்து அதன் மேலேதான் தலையை வைப்ப துண்டு என்ற சாமான்ய ஞானத்தைக் கூட, தமது ‘விகட’த்துக்காக இழக்க விட்டு, தலையைக் கையருகே மட்டுமே வைத்துக்கொள்கிறார் கவிஞர்.
கவிதையின் உயிரம்சத்துடன் நுட்பமான கருப்பொருள்க ளைக் கொண்டு எழுதிய எழுபதுக்கள் கால ஜனனங்கள், மேலே வெ.சா. வினால் ஒரு தடவை ஊதப்பட்டவர்க ளினின்றும் பிறிதானவர்கள்தாம். இவர்களுள் தேவதேவன் என்ற பிச்சுமணி கைவல்யம், நாரணோ ஜெயராமன், ஷண்முக சுப்பையா, கலாப்ரியா ஆகியோர் முக்கியமானவர்கள் - இவர்களிடையே படைப்பின் தொகை, தரம் முதலியவற்றில் வேறுபாடுகள் இருப்பினும்கூட! மேலும் மிகச் சில கவிதைகளை ஆனால் தரத்துடன் எழுதிய உமாபதியும் (மஹாகண) பதியும் குறிப்பிடப்படலாம். வேறுபெயர்களும் உள்ளன, பெயர் குறிப்பிடப்படவென.
இவர்களுள் தேவதச்சன், ஆனந்த் இருவரும் குழு மனப்பான்மைகளால் பெரிதுபடுத்தப்படுபவர்கள். கே.வி.ராமசாமி அதிகம் கவனிக்கப்படாதவர். அபியின் கவிதைகள் கற்பனாதீதத்தின் முரட்டுக் குழப்பத்துக்கு ஆளாகிச் சிதறலடைகின்றனவெனினும் அவருடைய கவிதைகளையும் பொருட்படுத்திப் பார்ப்பது சமகால இலக்கிய நோக்குகளை அறிய உதவும். அறுபதுகளில் எழுதி, எழுபது களில் எழுத்து பிரசுரம் மூலம் பசப்பல் தொகுப்பாக வெளிவந்த கவிதைகளை எழுதிய கே.ராஜகோபாலுடன், கற்பனாதீதத் தெளி வின்மைக்காக அபியை ஒப்பிடலாம். இருவருடைய கவிதைகளின் தொனிகள் வேறுவேறானவையெனினும், இருவரிடத்திலும் உள்ள செழிப்பான படிமங்களிடையே உள்ள தர்க்கத் தொடர்பின்மை யினால் ஒற்றுமைப் பெறுகின்றன. கே.ராஜகோபலிடம் ஒரு வெளிப் படைப் பொருள் தெளிவு இருப்பினும், அபியிடம் பொருளை மழுங்க அடிக்கும் தெளிவின்மைதான் நிறைவேறுகிறது. கே.ராஜகோபாலிடம் விசேஷமாக ஒரு கவித்வ வீர்யம் வெளிப்படுவதைக் குறிப்பிட வேண்டும்.
எழுபதுக்களில் எழுதியவர்களுள் முக்கியமானவர் தேவதேவன் (பிச்சுமணி கைவல்யம்). இவரது குளித்துக்கரையேறாத கோபியர்கள் என்ற தொகுப்புப்பற்றியும் மின்னற்பொழுதே தூரம் தொகுப்புப்பற்றியும் நான் பிந்திய தொகுப்பின் முன்னுரையாக எனது பார்வைகளை வெளியிட் டுள்ளேன். கவிதையின் மிகவும் சிக்கலான தன்மைகளைத் தேவதேவனது படைப்புகள் எழுப்பிப் பெருமளவுக்கு வெற்றிகரமாக இரண்டாவது தொகுப்பில் தீர்க்கின்றன. மிகவும் சாமான்யமான விபரங்கள் எதிரிடைப் பிரதிமைகள் மூலம் பின்னலிடும் படிமங் களாகிய விசேஷ கவித்வ சக்தியை இவரிடம் காணலாம்.
இத்தகைய நுட்பங்களின் மூலமன்றி சுலபமாகப் பிராபல்யம் பெறுவதற்காகச் சில அதிர்ச்சித் தன்மைகளை மட்டும் உபயோகித்தவர் ஞானக்கூத்தன். கலாப்ரியா விடம் அதிர்ச்சித் தந்திரங்களோடு கவித்வ மான வீர்யம் இழையோடுவதுபோல, ஞானக்கூத்தனிடம் எதுவித கவித்வ இழையையும் காணமுடிவதில்லை; வரண்ட எழுத்தே இலக்கியம் என்ற பிரமையினால் ஊக்கம்பெற்ற மனோபாவம் இவருடையது. சுலபமான பிரசித்திக்காக, கருப்பொருளின் அளவில்தான் ஏதும் செய்ய வசதி இருக்கு மாகையால், இவரது எழுத்து பொடிவைத்துப்பேசுகிற சம்பாஷணைத் தன்மையை உபயோகித்து அதன்மூலம் விஷரூபமான கருக்களத்தை மனிதாயத்துக்கு முரணாகவும் வகுப்பு வாதத்துக்கு மறைமுக ஆதரவு தருவதாகவும் வெளியிடலாயிற்று. மதிப்பீட்டுக் கேந்திரங்களின் ஒன்றிணைப்பினால் ஜாதியம் போன்ற பிரிவினை களைத் தூண்டி இயங்கிய இலக்கியாசிரியர்க ளினுள் விஷமாக நுழைந்த பிரிவினைக்கரு இது; மேற்கொண்டு வேறொரு வடிவில் இதுவே சுந்தர ராமசாமியிடமும் இருந்து வெளிப்பட்டுள்ளது. நான் விமர்சன ஊழல் களில் ஆய்வு செய்து காட்டியுள்ள இதன் ஒருசில அம்சங்களினுள் ந.முத்துசாமி, வெ.சா. ஆகியோரது இதே வகை இயக்கம் அடங்கும்.
மதிப்பீட்டுக்கேந்திரங்களின் அறிவார்த்த ஒன்றிணைப்பை உணர்ந்த வர்களால் நிராகரிக்கப்பட்ட ஜாதீய இனப்பார்வை இது. இதனை மனிதார்த் தத்துக்கு முரண்படாத செய்தி வடிவிலோ, தனது வகுப்பைச் சுயவிமர்சனா பூர்வமாக அணுகுவதாகவோ கையாள்வதுதான் கலாபூர்வமான தாயும் ஆரோக்கியமாயும் இருக்கும். கலாச்சார உணர்வு சார்ந்த மதிப்பீட்டுக் கேந்திரத்துக்குரிய விழிப்பின்மை தான், அறிந்தோ அறியா மலோ பிரிவினையை உத்தே சித்த பார்வைகளாக வெளிவந்துள்ளது. இது கலாச்சார நோக்கமோ விழிப்போ அற்ற குழுக்களின் அரசியல் நோக்கங்களை மட்டுமே திருப்திப்படுத்த இயலும்.
‘காலம் கடந்துண்ணும் எதிர்மனைப்பார்ப்பான்’ என்று ஆரம்பிக்கிற அன்று வேறு கிழமை (ஞானக்கூத்தன்) தொகுப்பின் முதல் கவிதையை ஆய்வுக்கு எடுப்போம். இந்தக்கவிதையில், மேற்படி ‘பார்ப்பான்’ தின்றுவிட்டு எறிந்த எச்சல் இலைக்காக நாய்கள் குரைத்து, அந்தக் குரைப்பு பரவுகிறது. பிராமணர்கள் அனுபவித்து வீசி எறிந்த பதவி களுக்காக பிராமணர் அல்லாதார் குரைக்கும் பொருள் இங்கே பொடி வைக்கப்பட்டுள்ளமை விளக்கப்படவேண்டியதில்லை. சரித்திரத்தையே உணர்ந்திராத ஒரு அறிவீனத்திலிருந்து பிறந்து அதே அறிவீனத்தினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் அரிப்புகளைத்தான் இந்தப் ‘பொடி’க் கவிதை திருப்திபடுத்துகிறது.
சிந்து நாகரீகம், மகதம், கிரேக்க ஆதிக்க ஊடுருவல், பௌத்தம் சார்ந்த மௌரிய சாம்ராஜ்யம் என்ற பல்வேறு இந்திய சரித்திர காலங்களில் பார்ப்பனீயத்துக்குப் புறம்பான சக்திகளைக் காட்ட முடிந்தால், ‘தி கிரேட்’ என்று சரித்திர தர்சிகளால் கணிக்கப்படும் மகா அசோகன் (Asoka the Great), மகா அக்பர் (Akbur the Great) என்ற இரண்டு இந்திய சக்ரவர்த்திகளும் ஹிந்துக்கள் கூட அல்லர், முதலாமவர் பௌத்தர், பிந்தியவர் முகலாய முஸ்லீம். மேலும் முகலாய இந்தியாவில் பெரும்பாலான சிறு பதவிகளில் பார்ப்பனர் மட்டுமல்ல மற்றைய ஜாதியினர் கூட இடம் பெற்றனர் என்பதுடன் அரசு நடவடிக்கைகள் அதன் முக்கிய கேந்திரங்களில் பாரசீக மொழியிலேயே இருந்திருக்கி ன்றன. பார்ப்பனர்களோ, வேதங்களையும் உபநிஷத்துக்க ளையும் சமஸ்கிருதத்தில் செய்யப்ப ட்டிருந்த அறிவியல் நூல்களையும் புறக்கணித்துவிட்டு, தாந்ரீக உபாஸனை களையும் கோவில் வியாபாரங்க ளையும்தான் நடத்திக் கொண்டிருந்தனர். இதன் பின்பு ஆங்கிலேயரின் ஆட்சி காலத்திலேதான் – இங்கே ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி – வேத உபநிஷத்களே, ஆய்வில் ஈடுபட்ட மேலை நாட்டு அறிஞர்கள் மூலம் வெளிப்பட்டன. ஆங்கில ஆட்சியில் இந்தியர்கள் ஆங்கிலம் கற்கும்படி செய்யப்பட்ட ஏற்பாட்டை முஸ்லீம் மதபீடத்தின் உத்தரவுப்படி முஸ்லீம்கள் நிராகரித்தமையும், ஹிந்துக்கள், பிராமணர் அப்பிராமணர் யாவரும் ஆங்கிலத்தை கற்க முன் வந்தனர் என்பதும் ஒருவித சரித்திர விபத்துத்தான். அன்று முஸ்லீம்கள் அந்தத் தவறைச் செய்யாதிருந்தால், ஏற்கெனவே அரசியல் துறை அனுபவமும் மரபும் பெற்றிருந்த அவர்களே ஆதிக்க வலிமை மிகுந்தவர்களாக தொடர்ந்திருக்க முடியும்.
எனவே இதில் எவராவது ‘தின்ற இலை’ இருந்தால் அவர்கள் முஸ்லீம்கள்தான் என்றும் மத ரீதியான காரணத்துக்காக அவர்கள் புறக்கணித்ததே அந்த எச்சல் இலை என்றும் அதற்காக பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் யாவரும் குரைத் தனர், குரைத்துக் கடிப்படுகின்றனர் என்றும் கூறுவது பெருமளவுக்கு சரித்திரத்துடன் பொருந்தும். இந்த விபரங்களை உணராத ஒரு தஞ்சாவூர்த் திண்ணை ராஜ்யத்தின் குரலான ஞானக்கூத்தனின் கவிதை, சரித்திரத்துடன் பொருந்தாத ஒன்று.
‘எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் அதைப் பிறர் மேல் விட மாட்டேன்’ என ஆக்ஸிஜன் தமிழை இழுத்து அதைத் தமது கார்பன் டை ஆக்ஸைட் கவிதையாக வெளி விடுகிறார் ஞானக்கூத்தன். இலக்கியக் கோணத்தில் நின்று பார்த்தால் இந்தச் சிறுக் கவிதையில் இவர் கூறுவது அபத்தமானது. ஏனெனில் தமிழ்தான் அவருக்கும் மூச்செனில் அது வெளிப்படும்போது பிறர்மேல் விடத்தக்க தாக ஆவதும் ஆகாததும், அவரது மொழிப்பாங்கான சுவாச இயக்கத்தைத் தான் பொறுத்தது. அது ஆரோக்கிய மாக இருந்தால் – அவரும் கவிஞராக இருந்தால் – அவர்மூலம் மொழி தன் மூலரூபத்தை விட உயிர்ப்பு அதிகரித்து, பிறர்மேல் விடப்படவேண்டிய ஊட்டமாகும். இத்தகைய நுட்பங்களையன்றி அரசியல்தனமான ‘பொடி’யையே அவர் தமது மேற்படி ‘கவிதை’யில் உத்தேசித்து மொழியை அரசியலுக்காக உபயோகிப்ப வர்கள் பற்றி அபிப்ராயம்பண்ண முயற்சிக்கிறார்.
இவ்வளவு நுட்பமாக இதை நான் விமர்சிப்பதன் காரணம், சுயமான விமர்சன நோக்கமற்று, இங்கே உள்ள இலக்கியத்துறையின் அரசியல் களையும் உணராமல், கமில் ஸ்வலபில் என்ற மேலைத்தேயத் தமிழறிஞர், மேற்படி கவிதையின் ஆதரவிலேயே ஞானக்கூத்தனை, ‘பெரிய கவி’ என்று Tamil Literature (London) என்ற தம்மு டைய நூலில் கூறியமையாகும். இந்த அபத்த நிலைக்கு ஞா.கூ.வை ஆரம்பத்தில் நடை-6 மதிப்புரையில் ஊதிக்காட்டிய வெ. சா. முதன்மையான பொறுப்பாளி யாவார். இதை விமர்சன ஊழல்களில் விரிவாக சர்ச்சித்துள்ளேன்.
‘பிரட்’ துண்டில் பூசப்பட்ட வெண்ணையை வழித்து எடுத்துவிட முடியாததுபோல், வெ.சா. போன்றோரின் மதிப்பிட்டுத்தரமற்ற வெண்ணெய் விமர்சனங்களின் விளைவாக வாசகர்களின் மேல் பூசப் பட்ட பெயர்களை யும் வழித்து விடுவது சிரமம்தான். திருச்சியிலிருந்து 1980-ல் வெளிவந்த மானுடம் பத்திரிகையில் எஸ்.ஆல்பர்ட் என்பவர் இந்த வெண்ணையை உறிஞ்சிய நிலையிலேயே ஞானக்கூத்தனது தகுதியின்மை நிரூபிக்கப்பட்ட பின்பும் நிற்கிறார். ‘அன்று வேறு கிழமை’ கவிதையின் உயிரின்மையுடன் பொருள் குழுப்பத்தையும் காட்டி, ‘தர்சனம்’, ‘வேலிமீறிய கிளை: முன்னுரை’ ஆகிய கட்டுரை களில் நான் எழுதிய பின்பும், என் பார்வைகளைச் சர்ச்சிக்காமல் ஆல்பர்ட், இக்கவிதையை மானுடத்தில் சிறப்பித்துள்ளார். இது மட்டுமல்ல, மானுடத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி நான் அதற்கு அனுப்பிய கட்டுரையில், அந்தப் பத்திரிகையினது போஷகரான இந்த ஆல்பர்ட்டின் இந்தக்கருத்தை நான் இங்கே பின்வரும் பகுதியில் உள்ளபடி விமர்சித்திருந்தேன் என்பதும், இந்த என் கட்டுரையை மானுடம் பிரசுரிக்க விரும்பவில்லை என்பதும் உள் விபரங்கள்.
மேற்படி கவிதைக்கு மேற்படி ஆல்பர்ட் ஒரு மனிதாபி மானப் பொருளை சுமடேற்றியுள்ளார். கவிதையில், ஒரு பாடையின் கீழ் தெருநாய் ஒன்று வெய்யிலுக்காகப் பதுங்கிப் போவதும், பாடை தூக்கிகள் நாயை உதைத்து விரட்டுவதும், பிணம் விழுவதும், பாடை தூக்கிகள் மீண்டும் பிணத்தைத் தூக்க, மீண்டும் நாய் பாடையின் கீழ் பதுங்கிப் போவதும்தான் விபரங்கள். இதற்குப்பொருள் கூற வந்த ஆல்பர்ட், மனிதப்பிணம் சாவின் குறியீடு என்றும் தெரு நாய் வாழ்வின் குறியீடு என்றும் பிணந்தூக்கிகள் சடங்கைக் கைக்கொள்பவர்கள் என்றும் செத்துப்போனதுக்கு இவர்கள் முக்கியம் தந்து வாழ்வை விரட்டு கிறார்கள் என்றும் கூறுகிறார். சாவு மனிதப் பிணமானால், வாழ்வு உயிருள்ள மனித ஜீவனாகத்தான் எதிரிடை பெற முடியுமேயன்றி நாயாக இடமில்லை. புதுமைப்பித்தனின் ‘மகாமசானம்’ சிறுகதையில், சாவு சாகிற பிச்சைக்காரனிலும், வாழ்வு குழந்தையிலும் உருவகம் பெறுவதை இதற்கு உதாரணம் காட்ட முடியும். மேலும் ஆல்பர்ட்டின் விளக்கத்தில், ‘அன்று வேறு கிழமை’ என்ற தலைப்பு, பொருள் பெறவு மில்லை என்பதுடன், அதிலுள்ள நாய் வாழ்வின் குறியீடானால், ஏற்கெனவே இங்கு நாம் சர்ச்சித்த ‘எதிர்மனைப்பார்ப்பான்’ எதன் குறியீடு? அவனுடைய இலை, மற்றும் அக்கவிதை யிலுள்ள ஏராள மான நாய்கள் எல்லாம் எதனைக் குறிக்கின்றன என்றும் ஆல்பர்ட் விளக்கியாக வேண்டிய நிலை அவருக்கு உள்ளது. ஆனால், ‘பொடி’ டெக்னிக் பிரகாரம் பார்ப்போமானால், ‘அன்று வேறு கிழமை’ என்ற தலைப்பு, ‘இது கலிகாலம்’ என்ற திண்ணையுலகத்துப் பிரயோகத்தின் பிரதி எனக்காணலாம். ‘இந்தக் கலிகாலத்திலே, சீர்திருத்தம் பண்ற தெருநாய்ப்பசங்க சடங்கு பண்றவாளிலேயே மட்டமான பிணந் தூக்கிகள் உதைச்சு வெரட்னாலும் கடேசீலே பாப்பானோட சவ நிழல்லே தான் வந்து ஒண்டறான்’ என்பதே உணரவேண்டியவா உணரும்படி வைக்கப்பட்ட ‘பொடி’. இதிலும் உண்மையான சமூக நிலையன்றி, சீர்திருத்த இயக்கத்தின் மீது ஒரு வெறுப்புத்தான் அரிப்பு அபிப்ராயமாக வெளிப்படுகிறது.
1982 வாக்கில் வெளிவந்த அவரவர் கைமணல் என்ற தொகுப்பு பற்றியும் சில வார்த்தைகள் அவசியம். தேவதச்சன் ஒரு பகுதியிலும், ஆனந்த் இன்னொரு பகுதியிலும் எழுதியுள்ளனர். இத்தொகுப்பு, விமர்சனக் கருவிகளையோ, பகிரங்க வெளியீட்டு சாதனங்களையோ உபயோகிக்காத நேர்ப்பேச்சு ‘ஓஹோஹோ’ சிலாகிப்பைச் சில புள்ளிகளிடமிருந்து பெற்றமைதான் எனது இந்தக் குறிப்புக்குக் காரணம். ‘அவரவர் கைமணல்’ தலைப்புக்க விதையில் கடற்கரையிலே இருந்து அவரவர் கை மணலைத் துளாவிக் கொண்டிருந்தவர்கள் அது ‘எவரெவருடையவோ கைமணல்’ என உணர்ந்து ‘எங்கோ’ போகிறார்கள். இந்தத் ‘துளாவுதல்’ எதற்காக என்பது நேரிடை யாகவோ குறியீட்டின் வழியிலோ உணர்த்தப்பட வில்லை. ஆனால் துளாவப்பட்டது வேறு ‘எவரெவரு டையவோ கைமணல்’ என்ற காரணத்துக்காகத் துளாவுதல் கைவிடப்பட்டுள்ளது. எனவே இங்கே நாம் ஆழ்ந்த வகையான ‘தேடல்’ எதையும் இந்தத் துளாவுதலில் காண முடியாது. பிறருடைய ஒன்று வேண்டாம் என்பது செக்ஸ் சம்பந்தமான உரிமை முதலியவற்றுக்கே போக முடியும். கண்டுபிடிப்புகளை நாடும் தேடல்களுக்கு அல்ல. கண்டுபிடிப்புகள் சம்பந்தப்பட்ட விதமான குறிப்பு எதுவும் கவிதையில் இல்லை. அது சம்பந்தப்பட்ட தேடல்
என்ற காரியத்துக்கும் உரிமைகளுக்கும் சம்பந்தமில்லாத துடன், ஒரு துகள் மணலிலேயே புதிது புதிதாக ஒவ்வொரு வரும் தானே தேடி உணரப்படவென பிரம்மாண்ட ரகஸ்ய ங்கள் பொதிந்துள்ளன. தேடலில் ஈடுபடுபவன் எங்கே போனாலும் சந்திக்கப்போவது அதே மர்மத்தை த்தான். இவ்வளவு தூரம் மேற்படி கவிதை தொங்கித் தென்படும் போது, நேர்முகச் செல்வாக்குகளின் காரணத்தை முன்னிட்டு விமர்சனப் புறம்பாக, ‘ஓஹோஹோ’ பெற்றிருக்கிறார் கவிஞர் என்பது அம்பலமாகிறது. இந்த ‘ஓஹோஹோ’க்களை எழுப்புவோர் அச்சு வடிவுகளுக்குத் துணிந்துவராமை கவனிக்கப்பட வேண்டும்.
சட்டமிட்ட ஜன்னலுக்கு வெளியிலே ‘சற்றைக்கு முன்’ பறந்த பறவை எங்கே என்று கேட்டுவிட்டு, பதிலையும் சப்ளை செய்கிறார் ஆனந்த் – அதே தொகுப்பில். இது எனது கவிதை இயக்கத்தைவிட ‘ஒஸ்தி’யாக எதையோ சாதித்து விட்டதாக வேறு எக்ஸ்ட்ரா நியூஸ்கள். இங்கே, ‘சற்றைக்கு முன்’ என்ற கடந்துபோன வேளை பற்றியே இந்தக் கவிதை பேசுவதும் இது நிகழ்கணத்தைப் பாடிய எனது இயக்கத்துடன் சம்பந்தமே அற்றது என்பதும் நமைச்சல் அபிப்ராய மண்டலவாசிகளுக்கு புலனாகவில்லை. கடந்த காலத்தை (‘சற்றைக்கு முன்’) நிகழ்காலமாக (‘பறந்து கொண்டிருக்கிறது’) கண்டு பேதலிக்கும் வைதீக அடிப்படையைத்தான் ஆனந்தின் இந்தக் கவிதை எதிரொலிக்கிறது எனலாம். கவிதையின் தரம் இதனால் குறைவானது என்று கூறுவதற் கில்லை. இலக்கணவிதியை வைத்து செய்யப்பட்ட ஒரு சிறு கவித்வ ஜாலம் இதில் இருக்கிறது என்பதைக் கண்டால், அந்த சிறு சாதனைக் காக உடனே என் இயக்கத்துடன் ஒப்பீடு! இது என்னை ஒரு பெரிய ஸ்டான்டர்டு என்று இவர்கள் உள்ளூர ஒப்புக்கொள்வதைத்தான் அம்பலப்படுத்துகிறது. மற்றபடி கவிதையின் பொருளம்சத்தை எடுத்தால், அதில் வைதீகக் குணம் தென்படாமல் உள்ள நிகழ்காலம் பற்றிய பொருளம்சத்தை, வெறும் உயிரற்ற வசன அடுக்குகளாக அவர் எழுதி யுள்ள ‘நாளை’ என்ற எதிர்காலத்தை மறுப்பதற்காக. ஏனெனில், நேற்று அல்லது கடந்தது, அல்லது இந்தியாவின் உண்மையான சாபக்கேடான வைதீகம், ‘நான் முதல் அம்பு’ கவிதையிலும், தொகுப்பில் இடம் பெறாத ஒரு ‘ழ’ கவிதையில் – நிலத்தைக் கவிஞர் தோண்டத் தோண்ட கீழே அவரது சிலையை அவரது தகப்பனாரும் மேலும் மூதாதையரும் செதுக்குவது என்ற பொருள் கொண்ட கவிதையிலும் – வெளிப்படை யாகக் காணலாம். இப்போது சிறுமையுணர்வுப் ஃபாஷனுடன் பிறரை நச்சரிக்க இந்த வைதீக முளையடிப்பை ஆனந்த் உபயோகிக்கவில்லை என்பதுதான் இதில் அவரது தனித்தன்மை.
கருப்பொருளளவிலோ பார்வையின் ஆழ விஸ்தார த்திலோ அவரது நிலைமை எனது இயக்கத் தினின்றும் வெகு கீழேதான் இருக்கிறது. மேற்படி உதாரணங்களில் இருந்தும் தேவதச்சனைவிடச் சிறந்த ஒரு சில சிறு கவிதைகள் ஆனந்திடம் தேறுகின்றன. இதே வேகத்தில் இங்கே பிரம்ம ராஜன்(அ.ராஜாராம்) எழுதி வெளியிட்ட ‘அறிந்த நிரந்தர’த்தில் உள்ளவையும் தேவதச்சன் – ஆனந்த் வரிசையில் வருகிற ஒரு குழப்பமான கவித்வ பூர்ணமற்ற வெளியீடாகும்.
கவித்வமான உள்ப்பொருளுக்கும் தகவலை அறியாமை யினாலோ, வேண்டுமென்றோ மறைப்பதினால் விளையும் தெளிவின்மைக்கு மிடையே வித்யாசம் காண இயலாத ஒரு பரம்பரையினால்தான் மேற்படி ரகங்கள் ரஸிக்கப்படுகின்றன.
இந்தியப் பாரம்பரியத்தில், வைதீகத்தைக் காலம் காலமாக எதிர்த்து வந்தவர்களின் மனிதாய மதிப்பீடுகளும் மேனாட்டு ஜனநாயக மதிப்பீடுகளும் இணைந்து, கடுமை யான இலக்கிய மதிப்பீடுகளினூடே ஒரு அளவையை ஏற்படுத்திய நிலைமையில், ஜாதீயப் பார்வைக்கு வெளிப்படையான வெளியீடு கிடைக்க இடமில்லை. இதனால் நேர்முக உறவுகளின் மூலம் இலக்கிய அபிப்ராயங்களை ஒரு புறம் உருவாக்கவும், இலக்கியப் பண்புகளுக்குப் புறம்பான ‘பொடி’களை வைத்து உணர வேண்டியவர்கள் மட்டுமே அந்தப் ‘பொடி’யை உணரவும், விழிப்பற்ற மற்றைய முண்டங்கள் அதை அதி நவீன
யுக்தி என்று ஏமாறவும் காரியங்கள் செய்யப்படுகின்றன. இத்தகைய ‘பொடி’ எதுவும் இலக்கியமாகிய சரித்திரமே எங்கும் கிடையாது. யூத விரோதியான எஸ்ரா பவுண்டு யூதர்களை இழிவுபடுத்தித் தமது பிரமாண்டமான Pisan Cantosல் ஓரிரு வரிகளை எழுதியதற்காக அவரது அத்யந்த ரஸிகர்களும் ஆதரவாளர்களுமே வெட்கித் தலை குனிந்தார்கள் என்ற சரித்திரம்தான் உண்டு.இந்திய ஜாதீய வாதத்தின் நமைச்சல்களிலிருந்து வெளிவரும் கருக்களின் ஊற்று எது? The Fascist Tradition என்ற தமது நூலில் John Weiss கூறுவதின் சாரம் இதற்கு ஒரு பதிலாகக் கூடும்:
‘சமதர்ம சித்தாந்தங்கள், சுதந்திரார்த்தமான கொள்கைகள், நகரியல் வாழ்க்கை வளர்ச்சிகள், நவீன தொழில் முறை கள் ஆகியவற்றின் மூலம் அழிக்கப்படுகிற தங்களது வாழ்க்கை முறைகளையும் சலுகைகளையும் வர்க்க மதிப்புகளையும் காப்பாற்றுவதற்கு, பழமை வாதத்துள் மூழ்கி இருப்பவர்கள் எடுக்கும் அதி தீவிர முயற்சியின் பெயரே பாஸிஸம்!!’
இந்த முயற்சியின் இலக்கியத்துறை சார்ந்த இயக்க த்தையே நான் இங்கும் பிற இடங்களிலும்கணித்துள்ளேன். இதை ‘இலக்கியம்’ என்று பொது மனிதன் மீது சுமடேற்றும் முயற்சியே, விமர்சன விழிப்பற்ற ஒரு காலங்காலமான குருட்டுத்தனத்தைத் தங்களுடைய காலங்காலமான சுரண்டலுக்குப் பாதுகாப்பாக்கும் அரண்தான். (24 ஜுலை 1982)
கொல்லிப்பாவை, மே 1983