Saturday 27 August 2016

ப. சிங்காரம் (1920 - 1997) By சாரு நிவேதிதா

ப. சிங்காரம் (1920 - 1997)

First Published : 28 August 2016 12:00 AM IST



தமிழில் எதிரெதிர் ரசனைகளைக் கொண்ட பல எழுத்தாளர்களும் ஒருசேர ஒரே குரலில் சொல்லும் ஒரு விஷயம், தமிழின் தலைசிறந்த நாவல் ‘புயலிலே ஒரு தோணி’. அதை எழுதிய ப. சிங்காரம் டஜன் கணக்கில் நாவல் எழுதியவர் அல்ல. அவர் எழுதியது ஒரே நாவல். அதுதான் ‘புயலிலே ஒரு தோணி’. அதற்கு முன்னே அவர் எழுதிய ‘கடலுக்கு அப்பால்’ என்ற குறுநாவல் ‘புயலிலே ஒரு தோணி’க்காக எழுதப்பட்ட ஒரு முன்னுரை; அவ்வளவுதான். சரி, எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் ஒத்த கருத்து இல்லாத எல்லா எழுத்தாளர்களுமே தமிழின் தலைசிறந்த நாவல் என்று கொண்டாடும் ஒரு நாவலை எழுதிய சிங்காரம் அதற்குப் பிறகு ஏன் எதுவுமே எழுதவில்லை?

ப. சிங்காரம் உயிரோடு இருந்த வரை அந்தப் பெயரில் ஓர் எழுத்தாளர் இருக்கிறார் என்றே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சி.சு. செல்லப்பாவின் எழுத்து குழுவினருக்கும், க.நா.சு.வின் இலக்கிய வட்டம் குழுவினருக்கும் கூடத் தெரியவில்லை. அதற்குத் தகுந்தாற்போல் சிங்காரமும் ஒரு தனிமை விரும்பியாக இருந்தார். எந்த எழுத்தாளரோடும் அவர் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. அவருடைய உறவினரோடு கூட அவருக்குத் தொடர்பு இல்லை.

ப. சிங்காரம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி என்ற ஊரில் கு. பழனிவேல் நாடார், உண்ணாமலை அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக 12.8.1920 அன்று பிறந்தார். இவரது பாட்டனார் ப. குமாரசாமி நாடாரும், தந்தை பழனிவேல் நாடாரும் சிங்கம்புணரியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியிலும், பிறகு மதுரை செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்ற ப. சிங்காரம், பதினெட்டு வயதில் (1938) இந்தோனேஷியாவில் உள்ள மெடான் நகருக்குக் கப்பல் ஏறினார். அங்கே செ.கா. சின்னமுத்துப் பிள்ளையின் அடகுக் கடையில் பெட்டியடிப் பையனாக வேலை செய்தார். அங்கே அவர் திருமணம் செய்து கொண்டார். (மனைவி மலாயா தேசத்துப் பெண் என்று கேள்விப்படுகிறேன். உறுதியாகத் தெரியவில்லை.) பிள்ளைப் பேறின் போது மனைவி இறந்து விட்டார். அதற்குப் பிறகு அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே இருந்து விட்டார். ‘1940-ல் இந்தியா திரும்பிய அவர் மீண்டும் இந்தோனேஷியா சென்று அங்கே மராமத்துத் துறையில் பணியாற்றினார். அந்நேரம் தென்கிழக்காசியப் போர் மூண்டது. போர் முடிந்ததும் இந்தோனேஷிய ராணுவ அரசின் அனுமதி பெற்று, தமிழர் சிலருடன் சேர்ந்து பினாங்குக்குக் கப்பலில் சரக்குகளை ஏற்றி வியாபாரம் செய்தார்.’ (‘புயலிலே ஒரு தோணி’ காலச்சுவடு பதிப்பின் ஆசிரியர் குறிப்பில்).





பின்னர் 1946 செப்டம்பரில் இந்தியா திரும்பிய சிங்காரம் மதுரை தினத்தந்தியில் வேலையில் சேர்ந்தார். அப்போதும் அவர் எழுத்தாளர் என்று யாருக்கும் தெரியாது; அவரும் சொல்லிக் கொள்ளவில்லை. அப்போது அவர் வயது 27. அப்போதிருந்து 1987 வரை தினத்தந்தியிலேயே வேலை பார்த்து பின்னர் விருப்ப ஓய்வு பெற்றார். அதாவது, 40 ஆண்டுகள் மதுரை தினத்தந்தியில் வேலை பார்த்தார் சிங்காரம். அத்தனை காலமும் அவர் மதுரை ஒய்.எம்.சி.ஏ. ஹாஸ்டலில் ஓர் அறையிலேயே தனியாக வாழ்ந்தார். ஒருநாள் இரண்டு நாள் அல்ல; 50 ஆண்டுகள் ஒரே ஊரில் ஒரே அறையில் வசித்திருக்கிறார். 1997-ம் ஆண்டு, அவர் 50 ஆண்டுகளாகத் தங்கியிருந்த ஒய்.எம்.சி.ஏ. ஹாஸ்டல் அறையிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். அதற்குப் பிறகு மதுரை விளக்குத் தூண் அருகே உள்ள நாடார் மேன்ஷனில் (மதுரை நாடார் மஹாஜன சங்கம்) ஓர் அறையில் தங்கினார். அங்கே வந்த மூன்று மாதங்களில் இறந்து விட்டார். 1997 டிசம்பர் 30-ம் தேதி அவர் இறக்கும் போதும் அவர் அந்த அறையில்தான் இருந்தார். தனது மொத்த சேமிப்பான ஏழு லட்சத்தையும் நாடார் மஹாஜன சங்கத்துக்கு ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கி விட்டார். தனது இறப்பை யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை என்றும் சொல்லி விட்டார். (புயலிலே ஒரு தோணி, காலச்சுவடு பதிப்பகம்).

வாழ்நாள் முழுவதுமே - அதாவது, மதுரை தினத்தந்தியில் பணி புரிந்து கொண்டு, ஒய்.சி.எம்.ஏ.வில் தங்கியிருந்த ஐம்பது ஆண்டுகளில் அவர் தன் உறவினர்களோடு தொடர்பே கொள்ளவில்லை. இப்படியாக உறவு, பந்தம், பாசம் எதுவுமில்லாத துறவியைப் போலவே வாழ்ந்திருக்கிறார் சிங்காரம். ‘கடலுக்கு அப்பால்’ குறுநாவலை அவர் 1950-ல் எழுதினார். ஆனால் அதை எந்தப் பதிப்பகமும் பதிப்பிக்கத் தயாராக இல்லை. ஒன்பது ஆண்டுகள் கழிந்தே 1959-ல் அது வெளிவந்தது. ‘புயலிலே ஒரு தோணி’யை 1962-ல் எழுதி முடித்தார். ஆனால் 1972 வரை அதைப் பதிப்பிக்க யாரும் முன் வரவில்லை. அதிலும் அதைக் கசாப்புக் கடையில் மாமிசம் வெட்டுவதைப் போல் வெட்டிக் குதறித்தான் பிரசுரித்தார்கள்; முழுமையாக அல்ல.

என் இலக்கிய வாழ்வின் தீராத துயரம் என்னவென்றால், ஒரு மகத்தான படைப்பாளி நம்மிடையே வாழ்ந்திருக்கிறார். ஆனால் நாம் அது பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் இருந்திருக்கிறோம். சாமானியர்களைப் பற்றிச் சொல்லவில்லை; எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்கிறேன். அதுவும் ப. சிங்காரம் எந்தக் காலகட்டத்தில் எழுதினார்? தமிழ் நவீன இலக்கியத்தின் பொற்காலத்தில் - அதாவது அறுபது, எழுபதுகளில் - எழுதினார்; அதிலும் தமிழின் சிகர சாதனை என்று சொல்லத்தக்க நாவலை எழுதியிருக்கிறார். அது பற்றி அந்தப் பொற்காலத்தில் வாழ்ந்த ஒரு படைப்பாளி கூட அறிந்திருக்கவில்லை. அவருடைய நாவலைப் பிரசுரம் செய்வதற்குக் கூட ஓர் ஆத்மா இல்லை; நாவல் எழுதப்பட்டு பத்தாண்டுகள் கழித்து வெளியிட்டவரும் நாவலைக் கொத்துப் பரோட்டா செய்து விட்டார். அந்த ஒரே காரணத்தினால்தான் அதற்குப் பிறகு அவர் எழுதவில்லை. இருபது ஆண்டுகள் கழித்து வரப் போகும் இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களால் ‘நவீன தமிழின் சிகர சாதனை’ என்று கொண்டாடப்படப் போகும் நாவலை எழுதியும் அதைப் பிரசுரிக்கக் கூட ஆள் இல்லை என்பதால்தான் அவர் எழுதுவதையே நிறுத்தினார் என்று நினைக்கிறேன்.

அதன் பிறகு 1984-ல் அவர் வாழ்வில் ஒரு சிறிய சலனம் நிகழ்ந்தது. ந. முருகேச பாண்டியன் சிங்காரத்தை மதுரையில் சந்தித்தார். சிங்காரம் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு சிங்காரம் பற்றித் தமிழில் கிடைத்த ஒரே கட்டுரை அதுவாகத்தான் இருந்தது. சிங்காரத்தின் வார்த்தைகள் இவை: ‘சொல்லுங்கள், புயலிலே ஒரு தோணியை இப்போது யார் பதிப்பிப்பார்கள்? யார் படிப்பார்கள்? சீரியஸான இலக்கிய நூல்களைப் படிக்க இங்கே யாருக்கும் ஆர்வம் இல்லை. எழுதுவதற்கு என்னிடம் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உலகில் தமிழன் இல்லாத ஓர் இடம் இருக்கிறதா? ஆனால் அங்கெல்லாம் போகின்ற நம் மக்கள் அந்த ஊரையோ அந்த மக்களையோ பார்ப்பதில்லை. அப்படிச் செய்திருந்தால் தமிழ் இலக்கியம் எங்கேயோ போயிருக்குமே? என் நாவலில் ஒரு கப்பலில் செல்வது பற்றி எழுதியிருக்கிறேன். அது போர்க்காலத்தில் இந்தோனேஷியாவிலிருந்து மலேஷியாவுக்கு சென்ற சரக்குக் கப்பல். அப்போது நாங்கள் ஒரு புயலிலே மாட்டிக் கொண்டோம். கப்பலில் இருந்த சரக்குகளையெல்லாம் கடலில் விட்டெறிந்தோம். அந்தச் சம்பவத்தைப் பற்றி நாவலில் எழுதிக் கொண்டிருந்த போது எனக்குப் பல சந்தேகங்கள் ஏற்பட்டன. அதனால், அந்த சரக்குக் கப்பலில் என்னோடு பயணம் செய்த நண்பர்களிடம் கேட்டேன். ஆனால் அவர்கள், ‘ஆமாம், ஞாபகம் இருக்கிறது. சரக்குக் கப்பலில் போனோம். புயல் கூட வந்தது. ஆனால் நம்மோடு யார் இருந்தது என்று ஞாபகம் இல்லையே?’ என்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் நம் நாட்டில் முன்னூறு ஆண்டுகள்தான் இருந்தார்கள். ஆனால் அவர்கள் பார்த்த நம்மைப் பற்றி எத்தனையெத்தனை புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார்கள்? மதுரை டவுன் ஹால் ரோட்டில் ஒரு மாலை நேரத்தில் நடந்திருக்கிறீர்களா? மூணு சீட்டு ஆடுபவர்கள், வம்பு பேசுபவர்கள், தரகர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், விபச்சாரிகள், மாமாக்கள்... உங்கள் கண்ணெதிரில் எத்தனையெத்தனை கதைகள் இருக்கின்றன... அதேபோல் கீழ மாசி வீதியில் உள்ள ஹோல்சேல் மண்டிகள், கடைகள்... அதெல்லாம் ஒரு தனி உலகம். தங்களிடம் கொள்ளை கொள்ளையாய் கதைகளை வைத்துக் கொண்டு நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. மற்ற இடங்களுக்குப் போவானேன்? எழுதுவதற்கு எத்தனையோ இருக்கின்றன. ஆனால் அவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து அதை நாவலாக மாற்றும் திறன் நம்மிடம் இல்லை.

என்னுடைய ‘கடலுக்கு அப்பால்’ பற்றிப் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் ‘புயலிலே ஒரு தோணி’ ஒரு நல்ல நாவல். ஆனால் அதற்கு எந்த எதிர்வினையும் வரவில்லை.’

எழுதிப் பத்தாண்டுகளுக்குப் பதிப்பாளரே கிடைக்காமல் இருந்த ‘புயலிலே ஒரு தோணி’ 1972-ல் சிதைக்கப்பட்டு வெளிவந்தது என்று குறிப்பிட்டேன். பதிப்பாளர் அதன் நுணுக்கங்களையெல்லாம் எடுத்துத் தூக்கியெறிந்து விட்டார். இன்னும் சரியாகச் சொன்னால், ப. சிங்காரம் உயிரோடு இருந்தவரை அவருடைய ‘புயலிலே ஒரு தோணி’ புத்தகமாக வெளிவரவில்லை. அவர் உயிரோடு இருந்தவரை அவர் எழுதிய ஒரே ஒரு நாவலை அவரால் பார்க்கமுடியவில்லை.

சிங்காரத்தை அப்போதைய இலக்கியச் சூழல் கூட அடையாளம் கண்டு கொள்ளாததற்குக் காரணம், ஒருவேளை அவர் அந்தச் சூழலோடு தன்னை இணைத்துக் கொள்ளவில்லை என்பதாகவும் இருக்கலாம். சிங்காரம் சொல்கிறார்: ‘இதுவரை நான் ஒரு நல்ல தமிழ் நாவலைப் படித்ததில்லை. நான் படித்ததெல்லாம் ஆங்கில நாவல்கள்தாம். இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்தவுடனேயே இந்தியாவுடனான கடல் போக்குவரத்து நின்று போனது. தமிழ்நாட்டிலிருந்து ஒரு பத்திரிகை கூட அங்கே வரவில்லை. நான் படித்தது பூராவும் பினாங் பொது நூலகத்தில்தான். ஹெமிங்வே, டால்ஸ்டாய், ஃபாக்னர், செக்காவ், தாஸ்தாவெஸ்கி, மற்றும் ஏகப்பட்ட பேர்.’

ஆக, சிங்காரத்துக்கு உலக மொழிகளில் உள்ள நவீன இலக்கியப் பரிச்சயம் கிடைத்து விட்டது. ஆனால் மொழி? நவீனத் தமிழ் இலக்கியமே தெரியாமல் நவீனமான தமிழ் மொழியை எப்படி எழுதுவது? அதற்கு அவருக்கு உதவியது பழந்தமிழ் இலக்கியம். ஆம், பாரதி எப்படி பழந்தமிழ் இலக்கியத்திலிருந்து நவீன தமிழுக்கு வந்தாரோ அதே போல் நவீன தமிழ் இலக்கியப் பொற்காலத்தின் விளைபொருட்கள் குறித்த அறிமுகம் இல்லாமலேயே தமிழின் மிகச் சிறந்த நாவலை எழுதினார் சிங்காரம். அந்த வகையில் சிங்காரத்துக்கு முன்னோடியே இல்லை எனலாம்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். Testimony Literature என்று சொல்லப்படும் எழுத்து வகை தமிழில் ஓரளவுக்கு எழுதப்பட்டு வருகின்றன. முதன்முதலில் இது ஆஸ்கார் லூயிஸின் La Vida (வாழ்க்கை) என்ற நூலின் மூலம் உலக இலக்கியத்துக்கு அறிமுகம் ஆனது. தமிழில் இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. மலையாளத்தில் திருடன் மணியன் பிள்ளை நூலைச் சொல்லலாம். திருடனாக வாழ்ந்த மணியன் பிள்ளையின் கதையை அவரிடமே கேட்டு எழுதியிருக்கிறார் இந்து கோபன். பாலியல் தொழிலாளியாக வாழ்ந்த நளினி ஜமீலாவின் கதையும் இதே வகைதான். போர் அனுபவங்களை எழுதுபவர்களையும் இதே வகையில் சேர்க்கலாம். இவர்களின் கதைகளைக் கேட்டால் நம் இதயம் அதிரும். ஆனாலும் இவர்கள் எழுத்தாளர்கள் அல்ல; இவர்களிடம் இருப்பது ஒரே கதைதான். துரதிருஷ்டவசமாக, சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியையும் தமிழ் புத்திஜீவிகள் ஓர் ‘அனுபவ’ நாவலாகக் கருதி விட்டனர். அந்த மாபெரும் பிழையைச் சரி செய்த பெருமை ந. முருகேச பாண்டியன், கோணங்கி, சி. மோகன், சாரு நிவேதிதா போன்ற இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களையே சாரும்.

(தொடரும்)

ப. சிங்காரம் - பகுதி 2


By சாரு நிவேதிதா


First Published : 04 September 2016 12:00 AM IST







‘புயலிலே ஒரு தோணி’ கதை, இரண்டாவது உலகப் போர்க் காலத்தையொட்டி மலேயா - இந்தோனேசியா பிரதேசத்தில் நிகழ்வதாக உள்ள படைப்பு. யுத்த காலத்தை அந்தப் பிரதேசத்தில் கழித்த சிங்காரம் அதைத் தன்னுடைய நாவலுக்குக் களனாக அமைத்துக் கொண்டார். ‘புயலிலே ஒரு தோணி’யை நவீனத்துவத்துக்கும் பின்நவீனத்துவத்துக்கும் இடையில் ஊடாடும் ஒரு நாவலாகக் கொள்ளலாம். நவீனத்துவ நாவல் ஒரு மையப் புள்ளியைச் சுற்றி இயங்குகிறது. பின்நவீனத்துவ எழுத்து அந்த மையத்தை நிராகரிக்கிறது; கலைத்துப் போடுகிறது. பல்வேறு திசைகளிலிருந்தும் பல்வேறு குரல்கள் கிளம்பிப் பெருகி ஒருவித ‘கலகச்’ (anarchic) சூழலை உருவாக்குவதே பின்நவீனத்துவ எழுத்து. ‘புயலிலே ஒரு தோணி’யின் பிரதான பாத்திரமான பாண்டியனையும், அவனது எக்ஸிஸ்டென்ஷியல் தருணங்களையுமே இந்த நாவலின் மையமாகப் பார்த்து அதை ஒரு நவீனத்துவப் படைப்பாகக் கருதி விட்டது தமிழ் இலக்கிய உலகம். நவீனத்துவத்துக்கும் பின்நவீனத்துவத்துக்குமான ஒரு முக்கியமான வித்தியாசம், நவீனத்துவம் வாழ்வின் அவலங்களைக் கோபத்தோடும் துயரத்தோடும் நையாண்டி செய்கிறது என்றால் பின்நவீனத்துவம் அந்த அவலங்களைப் பகடி செய்கிறது. ஆங்கிலத்தில் முன்னதை satire என்றும், பின்னதை burlesque என்றும் சொல்லலாம். சார்லி சாப்ளினின் ‘க்ரேட் டிக்டேட்டர்’ படத்தை நையாண்டிக்கு உதாரணமாகச் சொல்லலாம். நையாண்டியின் நோக்கம், ஒரு விஷயத்தைக் கேலி செய்வதல்ல; விமரிசனம் செய்வது. ஆனால் burlesque, விமரிசனம் செய்வதில்லை; மாறாக, ஒரு மகத்தான படைப்பை எடுத்துக்கொண்டு கிண்டல் செய்கிறது. மகத்தானதென்றும் புனிதமானதென்றும் அது எதையும் விட்டு வைப்பதில்லை. Burlesque என்பதன் அர்த்தங்களில் ஒன்று, ஸ்ட்ரிப் டீஸ் நடனம். அதையும் இங்கே மனதில் கொள்ள வேண்டும். கிராமங்களில் ஒருத்தனை மற்றொருத்தன் கிண்டல் செய்து விட்டால் ‘டவுசரை அவுத்துட்டான்’ என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். அதுதான் burlesque. சிங்காரம் ஏன் இதைச் செய்கிறார்? தனக்கு முன்னே தென்படும் எந்த ஒரு விஷயத்தையும் புனிதப்படுத்தி அதை வழிபடுவதுதான் பன்னெடுங் காலமாக தமிழ் மரபாக இருந்து வருகிறது. அதனால்தான் அந்தப் புனிதங்கள் அனைத்தின் ‘டவுசரையும்’ அவிழ்க்கிறார் சிங்காரம். நாவல் முழுவதுமே அதற்கு உதாரணம் என்றாலும், ஒரு கட்டத்தில் பாண்டியன் கடுமையான போதையில் இளங்கோ அடிகளை வம்புக்கு இழுக்கும் பகுதியிலிருந்து ஒன்றிரண்டு பத்திகளைத் தருகிறேன்:





‘ஆ, அதோ!... அடிகாள்! பூம்புகார்த் துறவிகாள்! உங்களைத்தான், உங்களையேதான் அழைக்கிறேன். இப்பொழுதுதான் தங்களை நினைத்தேன். தாங்களோ சட்டியும் கையுமாய்ச் சாலையோரம் நிற்கிறீர்கள். சட்டியில் ஒன்றையும் காணோமே, ஏன்?ஹெஹ் ஹெஹ் ‘இருக்குமிடந்தேடி’ வந்து ‘உருக்கமுடன்’ அன்னமிடுவார் யாரும் சிக்கவில்லையாக்கும்? ஏஞ்சாமி-சாமி, சின்னப்பயல் சொல்கிறானே என்று கோபித்துக் கொள்ளக் கூடாது - கலி காலத்தில் இந்த விரதமெல்லாம் கடைத்தேறுமா? தெருக்காட்டுக்குள் போய் ஆடிப் பாடி இரந்தால்தான் சோற்றைப் பார்க்கலாம். சோறு வேண்டுமாயின் தயவுசெய்து நான் சொல்கிறபடி செய்யுங்கள். முதலில் கெசாவனுக்குப் போய்ப் பூப்போட்ட சட்டை ஒன்று வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும். தாடி இருந்து விட்டுப் போகிறது. லேசாய் வெட்டி விட்டால் போதும். அரிதாரம் இல்லையோ? வேண்டாம். விபூதியை முகத்தில் அப்பிக் கோவணத்தால் தேய்த்து விடுங்கள். பவ்டர் பூசியது போலவே இருக்கும். சரி, என்னென்ன சினிமாப் பாட்டு தெரியும் உங்களுக்கு? என்ன, ‘பெண்ணே வா வா வா! இன்பம் தா தா தா!’ கூடத் தெரியாதா...? கதை-வசனம் பேசத் தெரியுமா? தெரியாது. பேடிக் கூத்து ஆடத் தெரியுமா? அதுதான் சாமி, குண்டியை ஆட்டிக் குதிப்பது... அதுவும் தெரியாது!... நிற்க. தங்களிடம் ஒரு சேதி கேட்க வேண்டுமென்று நினைத்தேன். அதாவது, பூம்புகாரில் மாவன்னாக் கோவன்னா மார்க்கா கோவலன் செட்டியார் பற்றித் தங்களுக்குத் தெரிந்திருக்குமே! அவர் வீட்டு வகையில் யாரேனும் இப்போது அங்கே தொழில் நடத்துகிறார்களா? இல்லையா? ஆ, எப்பேர்ப்பட்ட மார்க்கா! இருந்த இடம் தெரியாமலா போய் விட்டது! கோவன்னா அவர்கள், பெண்டாட்டி தாலியை விற்க மதுரைத் தெற்காவணி மூலவீதிக்குப் போயிருந்த இடத்தில் - இல்லையில்லை, தாலியில்லை, தண்டை, அதுதான் சிலம்பு, நகை வியாபாரிகளின் சூழ்ச்சியால் அநியாயமாய்க் கொலையுண்டாராமே, பிள்ளை வைக்கக் கூட கொள்ளி இல்லாமல் - மன்னிக்கவும், நாக்குழறுகிறது. பிள்... ம்ம்... கொள்ளி வைக்கக் கூடப் பிள்ளை இல்லாமல் கண்ணகியாத்தாளும் மலைக்காட்டில் போய் மாண்டு போனார்களாக்கும். ஐயோ, பாவம்! கணவனிடம் தண்டையைக் கழற்றிக் கொடுப்பானேன், விடாப்பிடியாய் அவனைப் பின்பற்றிப் போய் அறியாத் தேயத்தில் அநாதையாய்ச் சாவானேன்? ம்ஹ்ங்... கோவன்னா அவர்கள் எடுத்து வைத்திருந்த திருக்கடையூர் தாசி மாதவிக்கு ஒரு மகள் பிறந்திருந்ததாகவும் - அந்தத் தங்கச்சி பெயர் மணிமேகலை என்றார்கள் - அதுவும் பருவ வயதில் துறவறம் பூண்டு சாக்கிய மடத்தில் போய் ஒடுங்கி விட்டதாகவும் சொல்கிறார்களே, உண்மைதானா? ம்ஹ்ங்... கோவன்னா அவர்களின் மாமனார் எட்டி மாநாய்க்கன் வீடும் கொடியற்றுப் போனதாக்கும்... ஏஞ்சாமி, இதெல்லாம் ஏனிப்படி...? ஆ! அப்படியா? அது சரி, இன்னொரு சங்கதி. வீடு கசந்த பின் தாங்களும் திருக்கடையூருக்குத்தான் போனீர்களோ... என்ன பெயர்? திருவுடைநாயகி! நல்ல பெயர், மணியான பெயர்... ம்ம்? மூன்று மாதத்தில் புளித்து விட்டதாக்கும். பிறகு மாமல்லை, நாகை, கொற்கை... தொழிலைக் கவனிக்க நேரமில்லை. மேலாளும் அடுத்தாட்களும் சேர்ந்து பட்டை நாமம் போட்டார்கள். கடை நொடித்து விட்டது. உடுத்திய வேட்டியோடு, ‘ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல’ என்று பரதேசம் கிளம்பி விட்டீர்கள். இவ்வளவுக்கு ஆகியும் கூடப் பெண்ணாசை அடியோடு ஒழியவில்லையே. ஆமாம், சமயங்களில் நினைவு வரத்தான் செய்யும். அதற்குத்தான் ஒரு இக்கு வைத்துப் பாடியிருக்கிறீர்களே,

நினைவெழுந்தால் வீதிக்குள் நல்ல

விலை மாதருண்டிந்த மேதினியில்

என்று. அடிகாள், என்ன முன்யோசனை, என்ன நுட்ப புத்தி! ஏஞ்சாமி, விலைமாதர்தான் தங்களுக்குப் பிடிக்குமாக்கும்... கொல்லைப்புற மாங்கனிகளில் விருப்பம் இல்லையோ?’

இப்படியே நாவல் முழுவதும் கடவுள், மதம், தர்மம், மொழி, நிலம், தாய்மை, சாதி, கலாச்சாரம், மரபு, பண்பாடு, தேசம் என்று எல்லாவற்றையும் பகடி செய்கிறார். அவருடைய பகடியிலிருந்து எதுவுமே தப்பவில்லை. ஒருவேளை இது கூட தமிழ் இலக்கிய முன்னோடிகள் சிங்காரம் பற்றிப் பேசாததற்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. சிங்காரத்தை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துவது என்னவென்றால், அவர் எழுத்து வெறும் பகடி மட்டும் அல்ல; Raymond Federmen-ன் மொழியில் சொல்வதானால், gimmicks, playfulness, narcissism, self-indulgence போன்றவற்றோடு கலந்த self-reflexiveness-ஐத்தான் ‘புயலிலே ஒரு தோணி’யில் நாம் காண்கிறோம். அல்லது, ஜான் பொத்ரியாரின் (Jean Baudrillard) வார்த்தையில், 'simulacrum'. Simulacrum மற்றும் Self-reflexiveness பற்றி ஏற்கனவே இந்தத் தொடரில் நாம் பார்த்திருக்கிறோம். இந்த நாவலில் நமக்குக் கிடைக்கும் உப பிரதிகள் (sub-texts) யாவும் கடுமையான கிண்டலையும் பகடியையும் தன்னுள் கொண்டிருக்கின்றன. மேலே உள்ள இளங்கோவடிகள் பகுதியே அதற்கு உதாரணம். ‘புயலிலே ஒரு தோணி’யில் எடுத்தாளப்பட்டிருக்கும் பழந்தமிழ் இலக்கியப் பிரதிகள் பற்றி ஒரு பெரும் ஆய்வே செய்யலாம். ரேமண்ட் ஃபெடர்மன் அதை 'pla(y)giarism' என்கிறார். பழந்தமிழ்ப் பிரதிகளிலிருந்து உருவி எடுத்து அவற்றோடு விளையாடுதல். இந்த அளவுக்குப் பழந்தமிழ் இலக்கியப் பிரதிகளோடு விளையாடும் வேறொரு தமிழ் நாவலை நான் படித்ததில்லை. தமிழர்கள் பெருமை கொண்டாடும் பண்பாட்டு/கலாச்சார விழுமியங்களோடு நாவலின் நாயகன் பாண்டியன் புகுந்து விளையாடியிருக்கிறான். உண்மையில் இரண்டாம் உலக யுத்தத்தில் சிக்கிக் கொண்ட பாண்டியனின் அவல அனுபவங்களை வைத்து வாசகர்களைக் கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் நாவல் எழுதப்பட்ட காலத்திலேயே பலராலும் சிலாகிக்கப்பட்டிருக்கும். ஆனால் சிங்காரம் அந்தப் பக்கமே போகவில்லை.

***

கதை நடக்கும் மெடான் நகரம் பற்றி சிங்காரம் சொல்கிறார்: ‘முன்னர் ‘டச்சு கிழக்கிந்தியத் தீவுகள்’ என்று அறியப்பட்ட இந்தோனேசியா பல தீவுகள், இனங்கள், மொழிகளைக் கொண்ட நாடு. அதன் ஓர் அங்கமான சுமத்ரா தீவு இலங்கையைபோல் ஏழு மடங்கு பெரியது. சுமத்ராவின் வட கிழக்குக் கரையையொட்டி மைடான் என்ற மெடான் நகரும், அதன் அருகே பிலவான் துறைமுகமும் இருக்கின்றன. அந்தப் பகுதியில் பேசப்படும் பாஷை மலாய். டச்சு ஆட்சியின் போது புழங்கிய நாணயம் கில்டர். அதன் அப்போதைய மதிப்பு ஏறத்தாழ ரூ.1.50. கில்டரைத் தமிழர்கள் ரூபாய் என்றும், இந்தோனேசியர் ருப்பியா என்றும் கூறுவர்.’

இன்றைய மெடான் பற்றி இந்த நாவலுக்கு முன்னுரை எழுதியுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரான சுனில் அம்ரித் இப்படிக் குறிப்பிடுகிறார்: ‘இன்றைய மெடானில் ஒரு சிறு தமிழ்க் குடியிருப்பு எஞ்சியுள்ளது. ‘கம்பொங் மெட்ராஸ்’ (சென்னை கிராமம்) என்று அதற்குப் பெயர். அதன் நடுவில் ஒரு மாரியம்மன் கோவில். 1881-ல் செட்டியார்கள் கட்டியது. இன்று சில தெருக்களை மட்டுமே கொண்ட பகுதி அது. சிங்காரம் நடமாடிய பகுதி இன்று குறுகி விட்டது. பல பதிற்றாண்டுகளுக்குப் பிறகு அவர் நினைவு கூர்ந்தது போல் சுதந்திர இந்தோனேசியா அரசாங்கம் தெருப் பெயர்கள் பலவற்றை மாற்றி விட்டது. இன்று அங்கு செல்லும் ஒரு பயணி பாண்டியன் கண்ட உலகத்தின் சில காட்சித் தெறிப்புகளையேனும் காணலாம்.’

‘புயலிலே ஒரு தோணி’ கதை நடந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்காரம் வாழ்ந்த பகுதிகளுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து ஒரு பயணம் மேற்கொண்டேன். பயணத்தின் நோக்கங்களில் ஒன்று, சிங்காரம் பயன்படுத்தியிருக்கும் நூற்றுக்கணக்கான மலாய் வார்த்தைகளுக்குப் பொருள் காண வேண்டும் என்பது. நான் படித்த அப்போதைய பிரதியில் அந்த வார்த்தைகளுக்கு அடிக்குறிப்புகள் இல்லை. அந்த வார்த்தைகளெல்லாம் வேசிகள், செக்ஸ் தரகர்கள் போன்றவர்கள் பேசும் கொச்சை மொழி என்று தெரிந்த பிறகு ஒரு தரகரை அணுகினேன். அவர் என்னை மிக வயதான ஒரு பாலியல் தொழிலாளியிடம் அழைத்துச் சென்றார். அவர் அந்த வார்த்தைகளெல்லாம் ஆணும் பெண்ணும் கூடும் போது மட்டுமே பேசிக் கொள்பவை என்றும், அதெல்லாம் இப்போது வழக்கொழிந்து விட்டன என்றும் சொன்னார்.

சிங்காரத்தின் எழுத்துக்கும், விளிம்பு நிலை மாந்தர் பற்றி எழுதிய மற்ற எழுத்தாளர்களுக்கும் (உதாரணமாக ஜி. நாகராஜன்) உள்ள மற்றொரு வித்தியாசம், சிங்காரத்திடம் கண்ணீர் இல்லை. கடவுளை நோக்கிய பிரார்த்தனை இல்லை. ஏனென்றால், சிங்காரத்தின் உலகில் கடவுளுக்கு இடமேயில்லை.

(தொடரும்)





ப. சிங்காரம் – பகுதி 4

By சாரு நிவேதிதா | Last Updated on : 17th September 2016 03:40 PM | அ+அ அ- |




Barroco என்ற போர்த்துக்கீசிய வார்த்தையிலிருந்து பிறந்தது baroque. ‘அலங்காரமான’ என்பது இதன் பொருள். ஆரம்பத்தில் இது ஆபரண உலகில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு பின்பு பதினாறாம் நூற்றாண்டுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டடக் கலையிலும் புகுந்தது. அதன் பிறகு இசை, ஓவியம் போன்ற துறைகளிலும் பரோக் என்ற வார்த்தை புழங்கலாயிற்று. ஸ்பெய்னில் உள்ள ஸந்த்தியாகோ தெ கம்ப்போஸ்தலா கதீட்ரல் ‘பரோக்’ பாணி கட்டடக் கலைக்கு ஓர் உதாரணம். (படம் கீழே). இலக்கியத்திலும் ‘பரோக்’ பாணி உண்டு என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்பு கூப எழுத்தாளர் அலெஹோ கார்ப்பெந்த்தியரின் (Alejo Carpentier) நாவல்களைப் படித்தபோது உணர்ந்தேன். ‘புயலிலே ஒரு தோணி’யை சந்தேகமில்லாமல் ஒரு ‘பரோக்’ பாணி நாவல் என்று சொல்லலாம். ஒருவகையில் சிங்காரம் கார்ப்பெந்த்தியரையும் விஞ்சி விட்டார்; எப்படியென்றால்,



‘புயலிலே ஒரு தோணி’யில் ‘பரோக்’ பாணியோடு கூட பின்நவீனத்துவப் பகடியும் சேர்ந்து கொண்டு விட்டது.

நாவலில் நாவன்னா என்று ஒரு கதாபாத்திரம். அவர் பாவன்னாவிடம் (பாண்டியன்) போதையில் இப்படிச் சொல்கிறார்:

‘பாவன்னா! வண்டி பிடிஸ்ஸி ஏதி விட்ருங்க...கொலும்பு ஸ்திராட்டுக்கு. பிரகு கடைஹி போரேன்... பாவன்னா! பாவன்னா! கொலும்பு பொயிருகிகலா? கொலும்பு கொலும்பு கொலும்பு. நல்ல ஊரு கொலும்பு. நல்ல ஊரு கொலும்பு. ம்க்ம் ம்க்ம் க்ர்ர்.” காறித் துப்பிக் காலால் தேய்த்தார்; சில விநாடிகள் தேய்த்துக் கொண்டே இருந்தார். ‘ம்க்ம் ம்க்ம்... பாவன்ன்னா! இங்க பாருங்க பாவன்னா! பாவன்னா! உங்களுக்கு பிராமலக் கல்யானிய த்ரியுமால்யா. கல்யானி கல்யானி உடலு என்னா உடலு வுடலு வுடலு வில் போல வலையும். வில், வயில், ஹிஹி. உங்கலுக்கு வில் கையில் வஸ்ஸி அம்பு போடுறவில் கல்யானிஹி நான்னா உயிரு. கலுஃத்தை சேர்த்துக் கட்டிகிருவா. ம்க்ம் ம்க்ம்... வெஃத்தில எஸ்ஸி இறங்குறது அவ தொண்டையில சிவஃப்பா ரஃத்தமாட்டமா தெரியும்... ம்க்ம் ம்க்ம் ம்க்ம் கர்க்ர்ர்...’

இன்னொரு இடம்.

‘பெண் மயிலே! முடியாது, முடியாது. நான் தாலி கட்டும் வகையைச் சேர்ந்தவனல்லன். விலங்கு போட்ட தொழுவ வாழ்க்கை எனக்கு ஒத்து வராது. கண்மணியே கேள்: தாயின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய காலத்தில் வேசையரின் மார்பில் மிதந்தேன். மனையாளின் அரவணைப்பில் அடங்க வேண்டிய வயதில் மனையறத்தை வெறுத்து மனம் குழம்பித் திரிகின்றேன். பொன்னே மணியே புனைபூங்கோதாய்! என் இல்லத்தரசியாயிருக்க நீ உடன்படுவது என் பாக்கியமே. ஆனால் நானோ இல்லறத்தை வெறுக்கும் இளைஞன். முடியாததால் வெறுப்பவனின் வெறுப்பை விட, முடிந்திருந்தும் வெறுப்பவனின் வெறுப்பு மிகமிகக் கொடிதன்றோ! காரளகப் பெண்மணியே! நான் மந்தையிலிருந்து விலகிப் பிரிந்த ஓடுகாலி. பிரிந்ததால் மந்தையின் வெறுப்புக்கும், பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி இந்தப் பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி, ஒட்டிப் பற்ற ஈரப்பசை காணாமல் தன்னந்தனியனாய் அலைந்து திரிகிறேன்; அலைந்தலைந்தே திரிவேன்; அலைந்தலைந்து திரிந்தே அழிவேன். கன்னற்சுவை மொழி மின்னிடையாய்! உன் திரண்டுருண்ட மார்பிலே என்னைச் சயனித்து, உன் சேலொத்த விழியிலே என்னைக் கண்ணுற்று, உன் பாலொத்த மொழியிலே என்னைச் செவியுற்று, உன்னை அறிவதால் என்னை மறுக்கிறேன். ஆகவே, உன் உடலணைப்பில் இருக்குங்காறும் சங்க நிதி பதும நிதி இரண்டும் வேண்டேன்! கங்கை வார்சடை கரந்தான் அருளும் வேண்டேன்! எனினும், பெண் மயிலே, நான் தன்னந்தனியன். என் காதலீ! மார்பிற் படுத்து மயலூட்டி மகிழ்வித்து மறப்பூட்டும் நாயகீ! அன்னையற்ற எனக்குத் தாயாகி மடியிற் கிடத்தித் தாலாட்டவல்லையோ? தமக்கையறியா என்னை இடுப்பில் வைத்துக் கிள்ளி அழுகூட்டிப் பின் முத்தாடி ஆற்ற ஒவ்வாயோ? தங்கையற்ற என்னைத் தொடர்ந்தோடிப் பற்றிச் சிணுங்கி நச்சரியாயோ...’

நாயகீ, காதலீ என்ற வார்த்தைகளில் உள்ள நெடிலை கவனியுங்கள். தமிழ் உரைநடையின் உச்சங்களில் ஒன்றான மேற்கண்ட பத்தியை ப. சிங்காரம் எந்த மனநிலையில், எந்த இடத்தில் வைத்து எழுதினார் என்று யோசித்துப் பார்க்கிறேன். ஒருவிதப் பரவச உணர்வில், உன்மத்த நிலையில்தான் இதை எழுதியிருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழ்தான் என்று இல்லை. இந்தப் பத்திக்கு முந்தின பத்தியில் பாண்டியனை மணந்து கொள்ள விரும்பும் பெண் அவனை ‘சாயா பூஞா சிந்தா! சாயா பூஞா ராஜா!’ என்று கொஞ்சுகிறாள். இந்த வார்த்தைகளின் அர்த்தத்தைத் தேடித்தான் மலேஷியாவின் பல இடங்களில் அலைந்தேன் என்று முன்பு ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டேன்.

சிங்காரத்திடம் நான் வியந்த மற்றொரு விஷயம், துல்லியம். மொழியில் இவ்வளவு துல்லியத்தை நம்முடைய சமகால எழுத்தாளர் யாரிடத்திலும் காண முடியவில்லை. உதாரணமாக, ஒரு ஆளின் பெயர் சு. இன்னொருவரின் பெயர் ந. இதில் முதலாமவரிடமிருந்து இரண்டாமவருக்கு நிறைய ஆலோசனைகள் கிடைத்திருந்தன. இதை, பிழையே இல்லாமல் துல்லியமாக எப்படி எழுதுவது என்று ஒரு பரீட்சை செய்தால் இன்றைய எழுத்தாளர்கள் அத்தனை பேரும் தோற்று விடுவார்கள் என்று நினைக்கிறேன்.