Tuesday 2 August 2016

ஞானக்கூத்தன் பற்றி பிரமிள் . பதிவு 2,3



ஞானக்கூத்தன் பற்றி பிரமிள் . பதிவு 2

(முதன்முதலில் ஞானக்கூத்தன் பற்றி பிரமிள் எழுதிய தனிக் கட்டுரை - பதில் கட்டுரை)

கவிப்பொருளும் சப்தவாதமும் - பிரமிள்

------------------------------------------------------------

பிரக்ஞை ஜனவரி 1976, கசடதபற ஜனவரி 1976 ஆகிய இரண்டு இதழ்களிலும் திரு.ஞானக்கூத்தன் எழுதியுள்ளவற்றுள், நான் சம்பந்தப்பட்ட சில விஷயங்கள் தெளிவுபெற இதை எழுதுகிறேன்.

முதலாவதாக, பிரக்ஞையில் உள்ள அவரது கட்டுரையிலே பாதிவழியில், ‘சுந்தர ராமசாமி தருமு சிவராமுக்குக் கடிதம் எழுதினார், ஞானக்கூத்தன் ஒழிக்கப்பட்டால் தான் தங்களுக்கெல்லாம் விமோசனம் என்று. தருமு சிவராமு முத்துசாமியைக் கூப்பிட்டார்,’ என்ற வாக்கியங்களில் ஒரு சித்து முளைத்து நிற்கிறது! நடமாடுகிற மனிதர்களைக் கொண்டு நடந்திராத நிகழ்ச்சிகளை அமைக்கிற அற்புதச் சித்து. திரு. ஞானக்கூத்தன் பயப்படுவதுபோல அவர் உண்மையில் சித்தரேதான்! இனி, தம்முடன் கபட நாடகம் ஆடிக்கொண்டே அவருக்கு எதிராக இதைச் செய்த தாகவும் சொல்கிறார்.

கசடதபறவின் 1972 வருஷ மத்தி இதழ்களுள் ஒன்றில், சி.சு.செல்லப்பாவுக்குப் பதிலாக ‘இலக்கிய விசாரம்’ என்ற தலைப்பில், கசடதபறவைச் சார்ந்த கவிஞர்களை நான் கவிஞர்களாக ஒப்புவதில்லை என்று கூறியுள்ளேன். கசடதபற கவிஞரான திரு. ஞானக்கூத்தனின் கண்முன் வைத்து இது எழுதப்பட்டதாகும். நெருங்கிய நட்புகளில் இத்தகைய கருத்துலக நேர்மையை, திரு.ஞானக்கூத்தன் தமது வாழ்வில் இன்று வரை வேறெங்கும்கண்டிருக்க முடியாது. எனவே ‘கபட நாடகம்’ என்ற அவரது சித்தர் மண்டல சர்டிபிகேட்டுக்கு நான் லாயக்கற்றவன். அடுத்ததாக நான், திரு.ந.முத்துசாமியே நடை யின் ஆசிரியர் என்று ‘புரட்டல்’ செய்ததாகவும், அந்த ‘திருட்டுப் பதக்கத்’துடன் திரு.ந.மு.மினுக்கியதாகவும் அவர் கூறுவது பற்றி:

Thought, Oct.14, 1972 இதழில் மேற்படி கூற்றைத் தவறாக நான் வெளியிட்டபோது, திரு.ந.மு. தவறைத் திருத்தி சி.மணியே உண்மை யான ஆசிரியர் என்று எனக்கு எழுதியதை திரு.ஞா.கூ. அறிந்திரா விட்டாலும், நிச்சயம் கசடதபறவின் Thought கடிதத்துக்கு நான் அளித்த பதிலில், மேற்படி தவறைத் திருத்தி சி.மணி தான் ஆசிரியர் என்றெழுதியதை, அதற்கு அடுத்த தாட் இதழில் திரு.ஞா.கூ. படித்திருப்பா ரென்பதை எளிதில் மறுத்துவிட முடியாது - சித்து விளையாட்டில் மீண்டும் இறங்கினாலன்றி!

எனது கவிதைகளை நான் என்றுமே பாதுகாக்க முனைந்ததில்லை. நுட்ப உலக அநாகரீகங்களுள் ஒன்று, தன்னுடைய படைப்புகளைப் பிறரது விமர்சனங்களி னின்றும் காபந்து பண்ணுதல்.

கருத்துக்களும் பொது உண்மைகளும் வேறு விஷயங்கள். அஃக்கின் கண்ணாடியுள்ளிருந்து இதழில் ‘தர்சனம்’ என்ற என் கட்டுரையில் உள்ள சில கருத்துக்களை, திரு.ஞானக்கூத்தன் கசடதபறவில் ஆராய்கிறார். இவற்றுள், செய்யுள் யாப்பு என்ற வகை பழைய சாவதான பிரக்ஞையைச் சார்ந்தது என்று நான் கூறியுள்ளேன். இக்கருத்து பலமற்றது. வேண்டிய அளவுக்கு திரு.ஞானக்கூத்தன் இதைப் பிய்த்தெறியலாம். உண்மையில் அவர் கசடதபறவில், இந்த எனது குறைப்பிரசவக் கருத்தின்மீது பாய்ந்து பிடுங்கிக் குதறுவதை வெகு சுவாரஸ்யமாகவே படித்தேன். சிந்தனைத் துறையில் அவரைப் போன்றோர் வேட்டையாடிப் பயில இத்தகைய என்போன்றோரின் பலமற்ற பிரசவங்களை பலியிடுவது எனக்கு இழப்பல்ல. நான் அக்கருத்தின் மூலம் கூற முயன்ற விஷயம், இன்றைய வாசக உள்ளத்தின் பான்மையில் ஒரு மாற்றம் இருக்கிறது என்பதையே. தீவிரமான சிந்தனா சக்தியும் அபரிமிதமான திறனும் துணிகரமான தர்ஸனமும் உள்ள ஒரு சில தலைகளினூடேயே சமகால மனித மனம் தன்னை இனம் காண்கிறது. இத்தகைய உள்ளங்கள் யாப்பின் கெடுபிடியைத் துறந்தன என்றால், ஏன்? இது பன்முகரூபமான ஒரு பதிலையே பெறவேண்டும். இன்றைய பிரக்ஞையின் சாவதானமற்ற கதியே காரணம் என்ற என் பதில் பலமற்றதாயினும், ஒரு பதிலைத் தரும் சிறு முயற்சி. திரு.ஞானக்கூத்தன், இந்தப் பதிலினடியில் உள்ள முற்கூறிய கேள்வியை உணர்ந்திருந்தால், அவருக்கு நிலைமை அவ்வளவு சுளுவாக இராது! ஆனால் மேற்படி தலைகள்தாம் தலையாயன என்று ஒப்புக்கொள்கிற இலக்கிய நேர்மை அவருக்கு இருந்தால்தான், எனது கேள்வியையே அவர் தம்மிடம் கேட்க இயலும். போகட்டும்.

‘நவீன பிரக்ஞை’ என்பதற்கு ஒரு விளக்கமாக, அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆரம்பிப்பது என்பதைப் பின்தள்ளி விடுவோம். அசட்டுத் தனமான சமாதானங்களை ஒத்துக்கொள்ளாத - எளிதில் இத்தகைய சமாளிப்புகள் மீது வெறுப்புக்கொள்கிற - திரும்பத் திரும்பச் செய்யப் படுகிற அசட்டுமுறைகளை மாற்றியமைத்து ஒரு பொதுப்புத்தியை (Common sense) அநுசரிக்க விரும்புகிற - தன்மைகளே, ‘நவீன பிரக்ஞை’யின் முக்கிய சாயல்கள். இதற்கு முரணாக, யாப்பு முறைக்கு அதிக அழுத்தம் தரும்போது, யாப்பு நிர்மாணிக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதை ஒட்டி, பொருளம்சம் வெறும் சமாளிப்பாகி விடுகிறது. கம்பன் போன்ற கவிச்சக்கரவர்த்திகளிடமே இதைக் காணலாம். டி.கே.சிதம்பரநாத முதலியார், கம்பனிடம் மட்டுமின்றி ஔவை போன்ற வேறு கவிகளிடமும் இக்குறைபாட்டினைக் கண்டு குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தைத் தமது அடிப்படைகளுள் ஒன்றாக்கி, இன்னின்ன கவிதைகள் கம்பன் பாடாதவை என்றும் செருகல் என்றும் கூறுமளவுக்குப் போனவர் அவர்.

பாரதியின் ‘ஸ்வயசரிதை’யில் இக்குறை அநந்தம். சொல்லப் போனால், இந்தக் குறைபாட்டில் அகப்படாதவர்களே, யாப்பை அநுசரித்து பெரும் தொகையாகப் பாடியோருள் இல்லை எனலாம். இந்தக் குறைபாட்டை- ஒரு சப்த தாள நச்சரிப்பாக, பேரிகை

ஒன்றன் ஏகதாளமாக, ஏகஜதியாக விழுவது- சகிக்காமல், அத்தகைய சப்தத்தைக் கவிதையில் எழுப்புவதை விட்டுப் பேரிகையிலேயே நேரடியாக எழுப்பலாமே என்று அன்றைக்கே ஒரு ‘பழைய, நவீன பிரக்ஞை’க்காரன் கூறியதுதான், ‘காரிகை கற்றுக் கவிபாடுவதிலும், பேரிகைக் கொட்டிப் பிழைப்பது நன்று’ என்ற வாசகம்!

இதன்படி பார்த்தால், நான் குறிப்பிடும் ‘நவீன பிரக்ஞை’, ‘எத்தனாம் தேதி என்ன மணி மினிட்டுக்கு’ ஆரம்பித்தது என்று, ரொம்ப ‘சமத்தாக’ கேட்கும் திரு.ஞானக்கூத்தனது கேள்வியின் அசட்டு நிலை தெரியவரும். எனினும் அவரது கேள்வியிலிருந்து இத்தகைய விளக்கங்கள் பிறக்க இடம் உண்டாவதை நாம் குறிப் பிடலாம். அதற்கு நன்றி.

உரைநடையே கவிதை என்று நான் வலியுறுத்துவதாக திரு. ஞானக்கூத்தன் கூறி, அந்த வலியுறுத்தலைத் தாக்கிக்கொள்வது அடுத்த சித்து! ‘தர்சனம்’மில் இதற்கு மாறாக, வசனத்தை உடைத்துப் போடுவது கவிதை அல்ல என்று வெகு தீவிரமாக வாதிட்டுள்ளேன்!

சப்த ரூபத்தை, என் போன்றோர் தீண்டவே இயலாத ‘சிவதனுசு’ என்று சொல்லும் திரு.ஞானக்கூத்தனின் கூற்றே, சிவதனுசு என்ற பிரயோகத்தின் அர்த்தத்தை மலினப்படுத்தி விடுகிறது. ஸ்தூலமான, பூத உலக சம்பந்தமான விஷயம் சப்தம். ஆனால் அர்த்தமோ சூக்ஷ்ம மானது, மனோரூபமானது. எனவே, சூக்ஷ்ம நிலைசார்ந்த சிவனின் தனுசு கவிதையின் அர்த்தத்துக்கு உவமையாகி, அந்த சிவதனுசைச் சப்தவாதியான ஞானக்கூத்தன் தீண்டவே முடிந்ததில்லை எனக் கூறுவதுதான் சிவதனுசின் மரியாதையைக் காப்பாற்றும்.

தம்மால் சாதிக்க முடிந்தது சப்தத்தைத்தான். ஆகவே அதுதான் முடிவான சாதனை என்ற பிடிவாதத்தைத் தவிர, அவரது வாதங்கள் வேறெதையும் சாதிப்பதாகத் தெரியவில்லை. எப்போது அவர் அர்த்தத்தைத் தீண்டினாலும் அதை அவரது கரம் மாசுபடுத்தவே செய்கிறது. மேலுள்ள ‘சிவதனுசு’ ஓர் உதாரணம். பிற இடங்களில் திரு. வெங்கட் சாமிநாதனும் நானும் பிற பல உதாரணங்களைக் காட்டி உள்ளோம்.(அஃக், சதங்கை, கோகயம்.)

‘சவுக்கந் தோப்பினூடே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஓயுமொலி அளவுக்கு’ கவிதையில் சப்த நயத்தை நாம் இலகுவாக்கியமை பற்றி, ந. பிச்சமூர்த்தி கூறியதை ‘தரிசனம்’மில் எடுத்தாண்டுள்ளேன். அறிவுலக அதிர்ச்சிகளை வாசக உள்ளம், அவ்வதிர்ச்சிகளின் தீவிரம் குன்றாமல் உணர வழிவிட்டு வளைந்து கொடுப்பதே இந்த இலகுவான சப்த ரூபம். இத்தகைய தீவிர அர்த்தங்கள், இறுக்கம், பன்முகப் பொருள் ஆகியன திரு. ஞானக்கூத்தனின் சப்த சாந்நித்யம் பெற்ற எந்தக் கவிதையிலும் கிடையாது. இந்த விஷயத்தில் திரு. க.நா. சுப்ரமணியம் ஏமாந்திருக்கிறார். ஆனால் திரு. சி.சு.செல்லப்பா ஏமாறவில்லை. ஏமாந்தவருக்கு பஜனை. ஏமாறாதவருக்கு வசவு. இதுவே இலக்கிய சேவை.

திரு. க.நா.சு., திரு. சி.சு.செ. இருவரையும் ஒப்பிடுவதின் காரணம், திரு. க.நா.சுப்ரமணியமும் திரு. சி.சு.செல்லப்பாவும் வாசகர்களாக ஒப்பிடப்படும்போது பெறும் தகுதியைச் சுட்டுவதற்கு என்றல்ல - இருவரது இலக்கிய சமூக நடத்தைகளின் வித்தியாசத்தைக் காட்டவே.

தமிழ் இலக்கிய உலகின் பாலையில் தோன்றுகிற எல்லாக் கானல் தோற்றங்களிடமும் ஓடிப்போய் மணலை நீரென அள்ளிக்கொள்கிற திரு. க.நா.சு., உண்மையில் லேசிலே கானல் வசப்படாத திரு. சி.சு.செ. யைவிட அதிகப் பாலைவனப் பசுந்தரைகளைக் கண்டவர். இது, அவர் கண்ட கானல்கள் யாவற்றையும் பசுந்தரைகளாக்கி விட்டதாகாது. இத்தகைய இரு முதியவர்களது அசமந்தமான கூற்றுக்கள், தற்காலிகமான பரிவுகள், கோபங்கள் எவையுமே முடிவானவையல்ல. இவர்களது இத்தகைய அம்சங்களிலேயே தமது இலக்கிய ஸ்தானத்தை காண நினைப்பது, இலக்கிய ஸ்தானத்தை எப்படியேனும் பெற அவாவுவ தாகும். இன்று விமர்சன பூர்வமாகத் தமது நிலை ஆராயப்படும் ஒரு சூழலை வரவேற்பதே உண்மையான தகுதியின் அறிகுறி. திரு. ஞா.கூ.வும் அவரது சகபாடிகளும் இந்தச் சூழலை நாசமாக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

சப்தத்தைக் கவிதையிலிருந்து பிடுங்கி விடுவதல்ல புதுக்கவிதை இயக்கம். அர்த்தத்தின் இறுக்கத்திற்குச் சப்தத்தை அடிபணிய வைத்தமை யும், சப்தம் கவித்துவ உள்ளத்தை உபயோகிக்காமல் கவித்துவ உள்ளம் சப்தத்தை உபயோகிக்கும் நிலையும் தான் புதுக்கவிதையின் போக்கு. தமிழிலும் மேற்கிலும், இந்நிலை ஒரு பரவலான ஏற்பாகிய போது, அர்த்தச் செழுமையற்ற பல படைப்புகள் எழுதப்பட்டுப் புதுக்கவிதை யென ஆயின. இந்நிலையிலேயே, அர்த்தத்தின் மூச்சோடு சப்த நய இறுக்கத்தையும் கவிஞர்கள் மேற்கொண்டு, இந்த உதிரிக் கும்பலிலிருந்து விலகலாம். விஷயம் என்னவென்றால், இந்த உதிரிக் கும்பலிலிருந்து சப்தவாதத்தைத் தவிர வேறேதுமற்றவர்களால் விலக இயலாது. சப்தவாதத்தைத் தவிர திரு. ஞானக்கூத்தன் வேறெதையும் அறியார். எனவேதான் வெறும் வசனங்களைக் கவிதை எனத்தரும் குறை பிரசவக்காரர்களையும் அவர் கும்பல் பலத்துக்காகச் சேர்த்துக் கொள்வது. ஆனால் அர்த்தச் செழுமையை வலியுறுத்தியமைதான் புதுக்கவிதை இயக்கத்தின் முக்கிய சாதனை. இதை திரு. ஞா.கூ. மிகவும் சிரமப்பட்டு மழுப்ப முயற்சிக்கிறார்.

அர்த்தம் முக்கியத்துவமடையும் பட்சத்தில், யாப்பின் சப்த இறுக்கம் மீண்டும் உந்நத மனோபாவங்களை வெளியிட எழுவதில் ஆட்சேபணை கிடையாது. ஆனால் புதுக்கவிதை சப்தத்தைத் துறந்து இயங்கிய

போது பரிசோதனையாளர்களின் கைகளில் சப்தநயம் அங்கதமாகவே ஒலித்தமை சரித்திரமாகும். டி.எஸ்.எலியட்டை சப்தவாதியாக்க முயற்சிக்கும் ஞானக்கூத்தன், ஆதாரமாக எலியட்டிடமிருந்து உந்நதக் கவித்துவமாகவும் சப்தமயமாகவும் உள்ள ஓர் உதாரணத்தையேனும் முன்வைக்கவில்லை. நானோ என் கூற்றுக்கு ஆதாரமாக எலியட்டின் Old Possum's Book of Practical Cats என்ற ஒரு முழுக் கவிதைத் தொகுப்பையே அவர்முன் வைக்கிறேன். அவ்வளவும் நகைச்சுவை யுணர்விற்கு விருந்தாவதோடு, அந்தக் கோணத்திலிருந்து கவித்துவமும் எதிரொலிகளும் பெறுகிற சப்தவயமான படைப்புகள். ஆனால் தமிழைப் போலன்றி மேற்கில் ராபர்ட் பிராஸ்ட் போன்றாரின் கையில் மரபுமுறை இடையறாது தொடர்ந்தது வேறு விஷயம். அது அவர்களது இலக்கிய உலகின் பன்முகத்துவமாகும்.

‘A poem may tend to realize itself first as a rhythm’ என்ற எலியட்டின் கூற்றுக்கு திரு. ஞா.கூ. கருதும் பொருள், எலியட்டின் மனசில் முதலில் உருவாவது ‘டக்குப் புக்கு-டக்குப் புக் டக்கு டக்கு -டக்குப் புக்’ என்ற சப்தம் என்றே தெரிகிறது. ஆனால் Michelangelo என்ற பெயரும்

‘Women come and go’ என்ற தொடரும் போல, சில தொடர்கள் சேர்ந்து தோன்றலாம் என்பதே ஏற்றுக் கொள்ளத்தக்கது. இது முதல்கண

நிலை. இதைத் தொடர்ந்து, எலியட்டின் சமூக விமரிசன சக்தியின் தீட்சண்யமும் திறனும் மின்வீச்சில் ‘In the room women come and go/talking of Michelangelo' என்ற சிருஷ்டிகரமான பொருளை வருவிப்பதை, உண்மையான கவித்துவம் உள்ள எவரும் தம்மில் அறிந்திருக்க இயலும். இத்தகைய ஒரு பார்வையை அன்றி, தம் போன்ற இழிவான சப்தவாதி தான் எலியட் என்ற முடிபையே திரு. ஞா.கூ. வரவழைக்கிறார். இது சித்து வரிசையில் சேர வேண்டியது.

மேற்படி எலியட்டின் படைப்புக் கணம் நிறைவேற்றுவது எதை? அர்த்தத்தையல்லவா? மிக முக்கியமான விஷயம், எது நிறைவேறுகிறது என்பதே.

‘ஓயுமொலி அளவுக்கு’ தமிழில் சப்த நயம் குறைக்கப்பட்டதற்கும் எலியட், பவுண்டு ஆகியோரின் இயக்கத்திற்கும் ஒற்றுமை உண்டு. அவர்களது இயக்க வரலாறுகள் இதைக் கூறுகின்றன - அவர்கள்

மரபான Metrical verse என்பதைத் துறந்து, Musical phras என்பதை மேற்கொண்டனர். இதன் முக்கிய நோக்கம், பொருள் வாயிலாகக் கவிதைக்குப் புத்துயிரூட்டுவதே. ஒருவர் எழுதிய கவிதையை நாலைந்து பேராகப் படித்து அதில் உள்ள அர்த்த ரூபத்தில் அநாவசியங்களைக் களைந்து, கவிதையையே திருப்பி எழுதுமளவுக்கு அவர்கள் தங்களைத் தாங்களே தீவிர நிலைமைகளில் ஆழ்த்தி இருக்கிறார்கள். இத்தகைய செயல்முறையை இந்த குழுவுக்குத் தூரத்து நண்பரான ராபர்ட் பிராஸ்டும், எலியட், பவுண்டு ஆகியோரை மதிக்காத விளடீமர் நபக்கவ் என்ற மேதையும் கிண்டலாகவே பார்த்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது. இவர்களில் குழுவினர், விரோதிகள் யாருமே கவிதையில் சப்தத்தை அநுசரிக்கக் கச்சை கட்டியவர்களல்லர்!

Musical phrase என்பது ‘டக்குப் புக்கு’ அல்ல. வசனத்தின் சிக்கலான நீண்ட ஓட்டமில்லாமல், ஒவ்வொரு வரியும் முடிந்த அளவுக்குத் தனித்தனி phrase ஆக, ஒரு mixed metre அநுசரித்தலே இது. Waste land முதல் இரு வரிகள் ambic penta metre என்ற மிகமிகச் சம்பிரதாயமான வகையாக அமைந்திருப்பினும், இருபத்தைந்தாவது வரியி னுள்ளேயே எலியட் பல்வேறு metrical அமைப்புகளை உபயோகித்து விடுகிறார்.

இந்தச் சுதந்திரம்தான் புதுக்கவிதையின் ஸ்தூலக் கட்டுக் கோப்பு. இது பிரான்ஸில் verse libre (free verse - சுயேச்சா கவிதை) என்ற பெயரில் வழங்கிய உருவின் கலாச்சார எதிரொலி. சப்தத்தைத் தவிர வேறெதையும் சாதிக்க இயலாதவர்களுக்கு, எலியட்டின் இந்த செயல்முறை அநுசரணையாகாது.(Mixed metres கொண்ட free verse வேறு, metre என்பதே இல்லாத blank verse வேறு. பின்னதையே வசன கவிதை எனலாம்.)

ஒரு தகவல். எலியட்டின் புத்தகங்களைத் தலையணை யாக உபயோகிக்கும் திரு. ஞா.கூ., இரண்டு தப்படி நடந்து திருவல்லிக் கேணி பெரிய தெருவில் உள்ள ஸ்டார் பிரசுரத்திற்குப் போய், புதுமைப்பித்தன் கவிதைகள் என்ற நூலைப்புரட்டிப் பார்த்திருந்தாரானால் ஒரு முக்கிய தவறு நேர்ந்திராது.

பண் என்பார் பாட்டென்பார்

கண்ணைச் செருக்கிக் கவி என்பார் - அண்ணாந்து

கொட்டாவி விட்டதெல்லாம் கூறு தமிழ்ப் பாட்டாச்சே

முட்டாளே இன்னமுமா பாட்டு.

என்று பித்தன் திரு.ஞா.கூ.வைப் பார்த்துச் சொல்லவில்லை. சாட்சாத் முருகனையே கூப்பிட்டு, தமக்கு எழுத வராத கவிதையை அவனிடம் கேட்கிறபோது, பித்தனை நோக்கி முருகன் கூறியதாகவே அது அமைந்துள்ளது. ‘முட்டாள்’ என்று இகழப்படுவது பித்தனாரே! சித்தரே!

இலக்கியாபிமானிகளுக்கு இந்த அளவு விரிவான தகவல் தேவை யில்லை என்று கருதி, ‘தர்சனம்’மில் இதை நான் குறிப்பிடாதது, இப்போது புதுமைப்பித்தனுக்கு சிறுமைக்கோபக்காரர் என்ற சித்தர் மண்டல சர்டிபிகேட்டைத் தந்துள்ளது. நிற்க. திரு ஞானக்கூத்தனின் கட்டுரைகள், தம்மைப் பிரசுரிக்காத திரு. செல்லப்பாவை அவர் தாக்குவதற்குக் கையாளும் முறைகள் என்பவற்றைப் பார்த்தால், இப்போதுதான் உண்மையான இலக்கியாபிமானமே எனக்குப் புரிகிறது. சமீபத்தில் பிரக்ஞைக்கு ஒரு சிறுகதை தந்திருந்தேன்; பிரசுரிக்காமல் திருப்பித் தந்துவிட்டார்கள். எனவே என் சிறுகதையை ஒப்புக்கொள் கிறவர்தான் ‘சிறுகதை’ என்ற சொல்லையே கண்டுபிடித்தவர் என்று அவருக்கு இடையறாத ஜால்ராப் போட்டபடி, எனக்கேற்றவர்களோடு சேர்ந்து ‘ஙஞணநமன’ என்றொரு பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டியது; அதில் பிரக்ஞை ஆசிரியரை ‘யரலவழள’ என்ற ஒரு கட்டுரையில் தாக்க வேண்டியது. இதன் பெயரே இலக்கியாபிமானம்!

மறுக்கப்படுதல் என்ற ஸ்திதியை ஒரு முக்கிய அநுபவமாக ஏற்கவோ, Sportsmanship உடன் அதைத் தாங்கிக் கொள்ளவோ இயலாதவர்கள்,

மிக மிக நுண்மையான ஆபத்துக்கள் மலிந்த கருத்துத் துறையினுள் எச்சரிக்கையற்றுப் பாய்ந்து விடுகிறார்களே!

பிரக்ஞை, பிப்-மார்ச் 1976.





ஞானக்கூத்தன் பற்றி பிரமிள் . பதிவு 3

பட்டுக்குஞ்சல சுயமரியாதை - பிரமிள்
--------------------------------------------------------
இலக்கியாபிமானிகள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, அல்லது கடிதத்தொடர்பு கொள்ளும்போது, அவர்க ளிடையே அபிப்ராயங் களின் பரிவர்த்தனை நேராமல் இருந்தால்தான் கவலைப்பட வேண்டும். ஞானக்கூத்த னாரோ தமது கவிதைகள் பற்றி யாரோ யாருக்கோ எழுதியதாக, குற்றப்பத்திரிகை அல்லவா படிக்கிறார்?

அவர் சொல்வது உண்மையென்றால்கூட, ஞானக்கூத்தன் போன்றவர்களின் இமேஜ் ஓர் அருவருக்கத்தக்க போலி என்று தங்களுக்குள் இலக்கியாபிமானிகள் கருத்துப் பரிமாறிக்கொள்ளாமல், ‘ஜாம்பஜாரில் இப்போது கருவாடு கிலோ எப்படி?’ என்ற விசாணையிலா ஈடுபட வேண்டும்?
இலக்கியக் கருத்துலகத்துறையில் ‘சதி’யா? ஒரு கவிக்கு எதிராகச் சதிசெய்ய முடியுமா? பெடரிக்கோ கார்ஸியா லோர்க்கா என்ற ஸ்பானிஷ் கவி, பாஸிஸ சக்திகளால் கொலைசெய்யப்பட்டதைக்கூட, அவனது கவிதைக்கு எதிரான சதி என்று எவரும் கூறவில்லை. ஒரு கவி பற்றிய அபிப்ராயங்களும் விமர்சனங்களும் எப்படிச் சதியாகும்? என்ன பேத்தல்! எப்பேர்ப்பட்ட உளறல்! இத்தகைய உளறலைப் பொருட் படுத்துகிற ஒரு சூழல் எவ்வளவு அவலமானது! அருவருக்கத்தக்கது!

இடைவிடாமல், மாதாமாதம் குறிப்பிடப்பட்டதன் மூலம் மட்டுமே உயிர்வாழ்ந்துகொண்டிருந்த ஞானக்கூத்தனுக்கு, தொடர்ச்சியாகக் கிடைத்த பாதகமான விமர்சனங்கள், அவர் உயிர்வாழக் கிடைத்த அதே திட்டத்துக்கு நேரெதிர் சக்தி வாய்ந்த நிழலாகத் தோன்றியுள்ளது. எனவே, இந்தத் தொடர்ந்த பாதகமான விமர்சனங்களும், தொடர்ந்து ‘குறிப்பிடப்படுவது’ போன்றே திட்டமிடப்பட்டு நடப்பதாக பிரமை கொண்டுள்ளார் ஞா.கூ. தொடர்ந்து இடைவிடாமல் இவர், விமர்சன ஆதாரமற்று, ‘பெரிய கவி, பெரிய கவி, பெரிய்ய கவி!’ என்று ஊதப் பட்டதுதான் திட்டமிடப்பட்டதாக தோன்றுகிறது. இதைச் சிதறடிக்க, தொடர்ந்து விமர்சனங்களை எழுதாமல், கோவணாண்டிகளாகிக் காசி யாத்திரை கிளம்பியிருக்க வேண்டியதுதான் இலக்கியாபிமானிகளின் கடனா?

எழுத்துவுக்கு இவர் கொடுத்த கவிதைகளை, அதன் ஆசிரியர் சி.சு.செல்லப்பா ‘கிழித்தார்’ என்று ஒரு புதிய குற்றச்சாட்டு! ஏதோ ஞானக்கூத்தனின் எதிர்காலப் ‘பயங்கர’ இமேஜை எதிர்பார்த்து, ‘விடப்படாது!’ என அவரது கவிதைகள் மீது, அன்றே செல்லப்பா பாய்ந்து பிய்த்துக் கடித்துக் குதறிக் கிழித்தாரா? இல்லை, நெடுங்காலம் வைத்திருந்துவிட்டு (நிராகரிக்கப்பட்ட என் கவிதைகளை நேரில் நான் கேட்டுவாங்கி இருக்கிறேன்), ஞானக்கூத்தன் அக்கறை காட்டாததால், ஏற்கெனவே சேர்ந்திருந்தவற்றோடு சேர்த்து அழித்தாரா? அதுதான் செல்லப்பாவுக்கு இலக்கியம் என்றாலே என்னவென்று தெரியாதே! அவரிடம் தமது சகாப்தக் கவிதைகளை ஞானக்கூத்தனார் அவ்வளவு அலட்சியமாக விட்டுவைத்திருக்கலாமா?

உயர்ந்த படைப்புக்கு அதன் ஸ்தூலவடிவம் மட்டுமல்ல, மனோ வடிவமும் உண்டு. அழிக்கப்பட்டதன் மூலமோ நிராகரிப்பின் மூலமோ இந்த மனோவடிவம் சிதையாது. ஒரு பூரணத்துவத்தை நாடி, இது மீண்டும் கிளர்ச்சிபெற இடமுண்டு. திரும்ப அது நிலைத்தாக வேண்டும் என்ற உந்துதல் இருந்தால், நிச்சயம் அது புனர்ஜன்மம் பெற முடியும். நிராகரிக்கப்பட்ட எத்தனையோ கவிதைகளை நான் அழித்திருக்கிறேன். இருந்தும், ‘சிதைவு’, ‘ராமன் இழந்த சூர்ப்பனகை’ போன்று இன்னும் சில கவிதைகளில் அவற்றின் அந்தரங்க வடிவமும், ஒரு கவிதையின் ஆரம்ப வரியிலிருந்து ‘உ=Mஇ2 என்ற கவிதையாக ஒருபடிமத்தின் புது ஜனிப்பும் நிகழ்ந்துள்ளன. இது பற்றிய விபரங்கள், சிருஷ்டியின் மறைமுக நிகழ்ச்சிகளைச் சார்ந்தவை. தாம் ஒரு சித்தரோ என்றுகூட நினைத்துக்கொள்ளும் ஞானக்கூத்தனாரோ, மறுக்கப்பட்டு இழப்படைந்த கவிதைகளுக்காகப் பிலாக்கணம் அல்லவா வைக்கிறார்!

டி.ஈ.லாரன்ஸ் (‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’) எழுதிய ஸெவன் பில்லர்ஸ் ஆஃப் விஸ்டம் என்ற சரித்திர நூலின் ஒரே கைப்பிரதியை, ஆசிரியர் ரயில் பிரயாணத்தில் தொலைத்துவிட்டு, மீண்டும் ஞாபகத் திலிருந்து எழுதி இருக்கிறார். நம் நாட்டு ‘சகாப்தக்கவி’யிடம், அதுவும் ஒரு ‘சித்த’ரிடம், இந்த ஒரு சில்லறைத்திறமை கூடவா இல்லை? வெறும் பிலாக்கணம்தானா?

நடந்தது என்ன?... ஒரு படைப்பாளியின் விஷேச லட்சணங்கள் எதுவுமற்ற, ஏன் ஓர் இலக்கிய வாசகருக்கு உரிய லட்சணங்கள்கூட அற்ற ஒரு செய்யுள்வாதியை, சரியாகவே அன்று அளவிட்ட சி.சு.செல்லப்பா, அவரது கவிதைகளை பிரசுரிக்கவில்லை; பிரசுர மோகம் தவிர வேறு எந்த உந்துதலையும் உணராத செய்யுள்வாதியும், தமது விஷயங்களைத் திரும்பப் பெறுமளவு அக்கறை காட்டவில்லை. நடையில் பிரசுர சாந்நித்தியமும் அதன் மூலம் நவீன இலக்கிய உலகினுள் பிரவேசமும் பெற்ற இவர், பிறகு கசடதபறவின் மூலம் ‘இமேஜ்’ பண்ணிக் கொள்கிறார். இலக்கியத்துக்குப் புறம்பான தனிப் பட்ட உறவுமுறைகளின் யுக்திகள் யாவும் இதற்குப் பயன்படுத்தப் பட்டன.
***
நமது செய்யுள்வாதி எழுதிய ‘கீழ்வெண்மணி’ கவிதை பற்றி, நான் (‘கோணல்கள்’ - அஃக் கட்டுரை) எழுதி யிருப்பதற்கு அவரது ஆட்சேபணை, அந்தக் கொடுமை நடந்தபோது நான் இந்தக் தேசத்தி லேயே இல்லை என்பதுதான். இங்கே இருந்தபடி வியத்நாமையும் சிலியையும் பற்றிக் கவிதை எழுதுகிற இன்றைய அவரது சகோதரக் கவிகளுக்கு அருமையான சூடு!

மேலும், ஞானக்கூத்தனாருக்கு மிகவும் நெருங்கிய விமர்சகர்கள், இது விஷயமாகக் ‘கீழ்வெண்மணி’க் கொடுமையை நடத்திய குண்டர்கள்தான்! அவர்கள் ஸ்தலத்திலேயே இருந்தவர்களாயிற்றே! - எத்தகைய அபத்தமான எல்லைகளுக்கு ஞானக்கூத்தனைப் போன்ற குருட்டாம்போக்கு எழுத்தாளர்களின் கருத்துக்கள் இட்டுச்செல்கின்றன பாருங்கள்!

இதற்குமேல், நான் கீழ்வெண்மணி பற்றிய போஸ்டர்க ளைப் பார்க்கவில்லை என்றும் தொனிக்கிறாரோ? 1970-71 வரை சில போஸ்டர்களும் பல சுவரெழுத்து வாசகங்களும் தேங்கியிருந்தன என்பது மட்டுமல்ல, ஞானக்கூத்தனுக்கு நேரிலேயே நான் அவற்றுள் சிலவற்றைக் காட்டி, அவரது ‘கீழ்வெண்மணி’ யைவிடச் சிறப்பாக அவை அமைந்தி ருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

அவற்றில், கவிதைக்கு அவசியமான உயிர் இருந்திருக்கிறது. இதை அவர் அன்று என்னிடம் ஒப்புக்கொண்டு இருந்திருக்கிறார். இதற்கு என்னிடம் சாட்சியம் இல்லை என்பதற்காக, இதை நான் சொல்லத் தயங்கவேண்டியதில்லை. எனது உண்மைத்தன்மையின் அளவுகோலாக, ஞானக்கூத்தன் என்ற பிரகிருதி செயல்பட முடியாது; அத்தகைய ஒருநிலை அபத்தமானது.
பொதுவாகவே அவரது கவிதைகளில் உயிரில்லை என்பதை, அவர் நான் சொல்லக்கேட்டு ஒப்புக்கொண்டிருந்தவர்தாம். என்னுடன் அவர் ஒப்புக்கொள்ளவேண்டிய அவசியம் என்ன என்று வாசகர் வியக்கலாம். இந்த ஒப்புக்கொள்ளல், நானும் அவரும் ஒரே அறைவாசிகளாகத் தனித்திருக்கையில் மட்டும் நிகழ்கிற, அன்றைய (1972) அன்றாட நிகழ்ச்சி. எவ்வளவு நெருங்கியவரெனினும், எனது பார்வையை அகாரணமாக மாற்றிப்பேசாத எனது சுபாவமும், பிறருடன் ஒப்புக் கொள்வதன் மூலம் பிறரை வசியம்கொள்ள முயற்சிக்கும் அவரது சுபாவமும் சந்தித்ததின் விளைவே அவரது உடன்பாடுகள். இதனால், என் பார்வைகளை அவர் உணர்ந்து உடன்பட்டார் என்று சொல்வதற்கில்லை.

போஸ்டர் கவிதை என்று ஏதும் இருக்கக்கூடாது என்று நான் தொனிப்பதாகவும் ஞா.கூ. எழுதி இருக்கிறார்....! 1972-இல் ஞானக் கூத்தனின் எட்டு கசடதபற கவிதைகளை, தாமரையில் ம.நா.ராமசாமி கம்யூனிஸக் கோணத்தில் நின்று தாக்கிய கதை அவருக்கு மறந்து விட்டது. (அதெல்லாம் பழைய சங்கதி! இன்றைய சங்கதிகள் வேறே!) அதற்குப் பதிலாக, ஞானக்கூத்தனின் சீடரான மஹாகணபதி (விசித்திரம் என்னவென்றால், சீடர் பதியின் கவிதைகளில் உள்ள கவித்துவம் குருநாதரிடம் இல்லாததுதான்!), தாமரை சார்ந்த கவிஞர்களைப் ‘போஸ்டர் கவிஞர்கள்’ என்று தாக்கியிருந்தார் என்பதையும், பாவம் மறந்துவிட்டார்.

எனது அஃக் கவிதைத் தொகுதியின் ‘தர்சனம்’ முன்னுரை யில், ‘கலை கலைக்காகவேகாரர்கள் மற்றவர்களை நோக்கிப் போஸ்டர் கவிஞர்கள் என்பர்,’ என்ற வகையாக இதையே மேற்கோள்காட்டி இருக்கிறேன். போஸ்டர் கவிதை வேண்டாம் என்ற தொனியில் ஞானக்கூத்த னாரின் குழுவே அல்லவா அன்று பேசி இருக்கிறது! ஆனால், ஞா.கூ. எழுதியதைவிடப் போஸ்டர்கள் உயர்ந்தவை என்று நான் சொன்னால் அர்த்தம், போஸ்டர் கவிதை கவிதையாகாது என்பதாகி விடுகிறது. நிச்சயமாக ஞானக்கூத்தன் மீண்டும் ஸ்கூலுக்குப் போய்த் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதெல்லாம் இருக்க, ‘கீழ்வெண்மணி‘ கவிதையில் மட்டுமா அவரது பெருமை தங்கியிருக்கிறது? பிராமணன் தின்றெறிந்த எச்சில் இலை(?)க்கு நாய்கள்(?) சண்டை யிடுவதாக அன்னார் எழுதிய கவிதையை, ஏன் அவரும் பிறரும் சௌகரியமாக மறந்து விடுகிறார்கள்!

தமக்கே பட்டுக்குஞ்சல மரியாதை செய்துகொண்டுள்ள அலாதி யான செய்கையின் உச்சகட்டமாக, கவிதை என எந்த சமாசாரத்தை அவர் மொத்தத்தில் ஒப்புக்கொண்டி ருக்கிறார் என்பதில் பார்க்கலாம். ‘கவிப் பொருளும் சப்தவாதமும்’ என்ற என் கட்டுரையில், கவிதையின் பொருளம்சத்தையும் உயிர்த்தன்மையையும்விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஞானக்கூத்தன் கருதும் சப்தவாதத்தை, ‘டக்குப் புக்கு’ என்று குறிப்பிட்டிருந்தேன். இதற்கு அவரது பதில், பிரச்னைக் கட்டுரை உலகின் அற்புதங்களுள் ஒன்று. என்னை மறுப்பதாகவோ நையாண்டி செய்வதாகவோ எண்ணியபடி, அவரை நான் செய்த நையாண்டியைத் தமக்கே செய்துகொண்டுவிட்டார்!

அதாவது, என் ‘விடிவு’ கவிதையில் கவித்துவத்துக்கு உரிய பொருளாழத்தையும் உயிரோட்டத்தையும் விட்டுவிட்டு, தமது ‘டக்குப்புக்கு’வையே அதில் கண்டு ரசித்திருக் கிறார். அதுவும், ‘கவிதை ஒரு ‘டக்குப்புக்கு’ சமாசாரமாகவும் இருக்கலாம்’ என்ற தமது அருள் வாசகத்துக்கு உதாரணமாக! கேஸ் பைசல்! எந்தக் கவிதையை இவரிடம் சமர்ப்பித்தாலும், அதைக் குலுங்கிப் பார்ப்பார்; ‘டக்குப் புக்கு’ என்ற சப்தம் கிளம்பினால், ‘சரியா வந்துடுத்து!’ அப்படித்தானே சித்தரே? (11 மே 1978)

(ஞானக்கூத்தனின் ‘பட்டுக்குஞ்சல மரியாதை’ (1/78 இதழ்) கட்டுரைக் கான நீண்ட பதில் கட்டுரையின் ஒரு பகுதி இது. 3/78 இதழில் வெளிவந்திருக்க வேண்டிய இக்கட்டுரைப் பகுதி, தாமதப்பட்டு, இந்த இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது - ஆசிரியர் : கொல்லிப்பாவை.)

கொல்லிப்பாவை-6, 1978.