Saturday, 6 August 2016

இருபத்தியெட்டு இலைகள் - லீனா மணிமேகலை


Shanmugam Subramaniam liked this post from July.
இருபத்தியெட்டு இலைகள்
*************************************
லீனா மணிமேகலை
****************************

உன் சொல்லால் கிழிந்த என் இலை ஒன்று
உன் தீண்டலால் தழைத்த என் இலைகள் இரண்டு
உன் பார்வையால் பழுத்த என் இலைகள் மூன்று
உன் தழுவலால் துளிர்த்த என் இலைகள் நான்கு
உன் குரலால் விரிந்த என் இலைகள் ஐந்து
உன் பொய்யால் இறந்த என் இலைகள் ஆறு
உன் கருணையால் பனித்த என் இலைகள் ஏழு
உன் புன்னகையால் ஒளிர்ந்த என் இலைகள் எட்டு
உன் கனவால் பறந்த என் இலைகள் ஒன்பது
உன் புணர்வால் கனத்த என் இலைகள் பத்து
உன் வாக்குறுதியால் மணந்த என் இலைகள் பதினொன்று
உன் சினத்தால் சுருண்ட என் இலைகள் பனிரெண்டு
உன் நிழலால் உறங்கிய என் இலைகள் பதின்மூன்று
உன் துரோகத்தால் உலர்ந்த என் இலைகள் பதினான்கு
உன் கொஞ்சலால் படர்ந்த என் இலைகள் பதினைந்து
உன் எழுத்தால் இணைந்த என் இலைகள் பதினாறு
உன் சுவாசத்தால் சிலிர்த்த என் இலைகள் பதினேழு
உன் மோகத்தால் மலர்ந்த என் இலைகள் பதினெட்டு
உன் புறக்கணிப்பால் வெளிறிய என் இலைகள் பத்தொன்பது
உன் மழையால் கிளர்ந்த என் இலைகள் இருபது
உன் பாடலால் பெயர் பெற்ற என் இலைகள் இருபத்தியொன்று
உன் காதலால் கிளர்ந்த என் இலைகள் இருபத்திரண்டு
உன் வாசத்தால் விழித்த என் இலைகள் இருபத்திமூன்று
உன் அழைப்பால் பெருகிய என் இலைகள் இருபத்திநான்கு
உன் தவறால் பருவம் திரிந்த என் இலைகள் இருபத்தியைந்து
உன் மன்னிப்பால் களைத்த என் இலைகள் இருபத்தியாறு
உன் முத்தத்தால் வியர்த்த என் இலைகள் இருபத்தியேழு
உன் பிரிவால் எண்ணிக்கை தப்பிய என் இலைகள் இருபத்தியெட்டு
மச்சான், நான் கணக்கு வாய்ப்பாடு படித்தது இப்படித்தான்!
-’சிச்சிலி’ கவிதைத் தொகுப்பிலிருந்து