Friday, April 24, 2015
எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 16- அயன் மக் ஈவன் (Ian McEwan) “Atonement”
யூகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டி ஒருத்தனை சிறைக்கு அனுப்பி அவன் வாழ்க்கையை சீரழித்த பின்பு அவன் மேல் குற்றம் சாட்டியது தவறு, உண்மை வேறு என்று தெரியவந்தால் அதற்கான பிராயசித்தம் என்ன? அதுவும் குற்றம் சாட்டியது ஒரு எழுத்தாளர் என்றால் எழுதி பிராயசித்தம் தேட முடியுமா என்பதை ஆராய்கிறது அயன் மக் ஈவனின் நாவல் “Atonement” (பிராயசித்தம்). 2001 இல் வெளிவந்த இந்த நாவலைப் பற்றி நான் பல முறை உரையாற்றிருக்கிறேன். தாஸ்தவ்ஸ்கியின் குற்ற களம், அயன் மக் ஈவனின் கதை சொல்லலினால் எப்படி மனசாட்சியில் வடிவம் கொள்ளாமல் கற்பனையில் திரள்கிறது என்பதை எனக்கு என் உரைகளில் சொல்லி மாளாது. ஐரோப்பிய நாவலின் களத்தினை குற்றமும் தண்டனையுமிலிருந்து , குற்றமும் கற்பனையும் பிராயசித்தமும் என்ற தளத்திற்கு நகர்த்திய நாவல் “Atonement”. இருபதாம் நூற்றாண்டில் ஆங்கில நாவல் பிரித்தானிய தீவுகளைத் தவிர மற்ற எல்லா தேசங்களிலும் எழுதப்படுகிறது, வில்லியம் கோல்டிங்கிற்குப் பிறகு பெரிதாக நாவலே பிரித்தானிய தீவுகளில் இல்லை என்று தொடர்ந்து பேசப்பட்டபோது இல்லை இங்கிலாந்திலும் ஆங்கில நாவல் உயிர்ப்புடன் இருக்கிறது என்று நிரூபிக்கும் வகையில் எழுதியவர்களில் முக்கியமானவர் அயன் மக் ஈவன். அவர் ஆரம்பத்தில் எழுதிய சிறுகதைகள் தொகுப்பு First Love, Last Rites (1975), In Between Sheets and Other stories (1978), முதலிரண்டு நாவல்கள் The Cement Garden (1979), The Comfort of Strangers (1981) ஆகியன பதின்ம வயதினரின் வன்முறையான பாலியல் உறவுகளை சித்தரித்ததால் மக் ஈவனின் எழுத்து அதிர்ச்சி மதிப்பீடுகள் நிறைந்தது எனற பொதுக் கருத்தினை உருவாக்குவதாக இருந்தது. அடோன்மெண்ட் நாவல் வருவதற்கு முன் மக் ஈவன் தொலைக்காட்டிச் நாடகங்கள் சினிமாவுக்கான திரைக்கதைகள் என பல எழுதினார். எல்லாமே பொதுவாக மக் ஈவனை தீமையின் சித்தரிப்புகளை துல்லியமாக ஆனால் விலகலுடன் எழுதக்கூடியவராக ஆனால் யாதார்த்தவாத எழுத்தாளராகவே உலகுக்கு காட்டின. ஆனால் அடோன்மெண்ட் மக் ஈவனின் கலை வேறுவிதமான பின் நவீனத்துவ கூறுகள் நிரம்பியது என்று காட்டி வாசிப்பு உலகை திகைக்க வைத்தது.
அடோன்மெண்ட் நாவலின் கதை என்ன என்பதைச் சொல்லாமல் மக் ஈவனின் கலையை விளக்க இயலாது. மூன்று பாகங்கள், நான்காவதாக பின்கதை இணைப்பு என பிரிக்கப்பட்டிருக்கும் நாவலின் முதல் பாகமே நாவலில் பாதிக்கு இருக்கிறது. முதல் பாகத்தில் பிரியோனி டால்லிஸ் என்ற 13 வயது பெண் தன்னுடைய பெற்றோருடன் கிராமப்புற வீட்டில் வாழ்ந்து வருகையில் நடைபெறுகிற சம்பவங்களை விவரிக்கிறது. பிரியோனி எழுத்தாளராக வேண்டும் என்ற லட்சியமுடையவள், நிறைய எழுதிப் பழகுகிறாள். பிரியோனியின் சகோதரி சிசிலியாவும் வீட்டில் வேலைசெய்பவர்களின் மகனான ராபியும் கேம்பிரிட்ஜ் பல்கலையில் ஒன்றாகப் படிக்கிறார்கள். அவர்களும் அவர்களுடைய தாய்வழி மாமா பிள்ளைகளும் லோலா ஃபிலிப் ஆகிய நண்பர்களும் கோட விடுமுறைக்கு வீட்டுக்கு வருகிறார்கள். பிரியோனி ராபியும் சிசிலியாவும் உடலுறவு கொள்வதை தற்செயலாக பார்த்துவிடுகிறாள். ராபி ஒரு செக்ஸ் வெறியன் என்ற எண்ணம் பிரியோனிக்கு ஏற்பட்டு விடுகிறது. ஒரு நாள் லோலாவை யாரோ வன்புணர்வு செய்வதை பிரியோனி பார்த்துவிடுகிறாள்; அவ்வாறு வன்புணர்வு செய்தவன் ராபிதான் என்று முடிவுக்கு வரும் அவ்வாறே போலீசுக்கும் சாட்சி சொல்ல ராபி சிறை செல்கிறான். சிசிலியாவும் அவர்களுடைய தாயையும் தவிர யாரும் ராபி குற்றமற்றவன் என்று நம்புவதில்லை. ராபி சிறை சென்றபின் சிசிலியா மீண்டும் பல்கலைக்கு சென்று படிப்பைத் தொடராமல் செவிலியாக பயிற்சி எடுக்க செல்கிறாள். சிசிலியாவும் சிறையிலிருக்கும் ராபியும் காதல் கடிதங்களை பரிமாறிக்கொள்கிறார்கள். இரண்டாம் பாகத்தில் உலகப் போர் வெடிக்கிறது. சிறையிலிருக்கும் ராபி ராணுவத்தில் சேர்ந்து போருக்கு செல்லவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப் படுகிறான். அவன் சிசிலியாவை போருக்குச் செல்லுமுன் அரை மணி நேரம் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவன் அவளை முத்தமிட்டு பிரிந்துபோய் போர்முனையில் அவளையே நினைத்து கற்பனையில் வாழ்கிறான். பிரியோனியும் லண்டனுக்கு சென்று செவிலியாகிறாள். மூன்றாம் பாகத்தில் பிரியோனி தொடர்ந்து எழுதக்கூடியவளாக இருக்கிறாள் ஆனால் அதிகம் எழுத ஆசைப்படுவதில்லை. அவளுக்கு லோலாவை வன்புணர்வு செய்தவன் ராபி அல்ல ஃபிலிப் என்று ஒரு கட்டத்தில் தெரியவருகிறது அந்த உண்மை தெரியவரும்போது லோலாவும் ஃபிலிப்பும் மண்ம செய்துகொண்டு தம்பதிகளாகியிருக்கின்றனர். பிரியோனிக்கு போர் முனையில் செவிலியாக பணிபுரியும்போது சாகக்கிடக்கும் ராணுவ வீரன், லுக் என்பவனோடு மெலிதாக காதல் ஏற்படுகிறது. அவனை மணந்துகொண்டு ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனையில் ஆழ்கிறாள். சிசிலியாவும் ராபியும் அவளை மன்னிக்க மறுத்துவிடுகிறார்கள். பிரியோனி ராபி குற்றமற்றவன் என்று நிறுவுவதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறாள். நாவலின் நான்காவது பகுதியில் இதுவரையிலான மூன்று பாகக் கதையினை எழுதியவள் பிரியோனி என்று தெரியவருகிறது. அவள் தன் நாவலில் காதலர்களான சிசிலியாவையும் ராபியையையும் சேர்த்து வைத்தாலும் நிஜ வாழ்க்கையில் அவர்கள் சேரவில்லை என்று அறிகிறோம். 77 வய்தாகியிருக்கும் பிரியோனி நாவலின் வேறுபட்ட கதைப்போக்கு முடிவுடன் கதையை திரும்ப எழுதி வேறு வகையான பிராயசித்தம் தேடலாமா என்று யோசிப்பதோடு நாவல் முடிகிறது.
கடைசி பாகத்தில்தான் மக் ஈவன் எழுதியிருப்பது யதார்த்தவகை நாவலல்ல இது மெடாஃபிக்ஷ்ன் நாவல் என்று தெரிகிறதா என்றால் அதுதான் இல்லை. ஆரம்பத்திலிருந்தே பல நூறு உட்குறிப்புகள கொடுக்கப்படுகின்றன. ஆனால் நாவலை வரிக்கு வரி உன்னிப்பாக அணுக்கமாக வாசிக்காதவர்கள் மக் ஈவனின் நாவல் ஒரு மெடாஃபிக்ஷன் என்று உணரவே முடியாது. நாவலின் ஆரம்ப இரங்கற்பாவிலேயே இந்த புனைவு எப்படிப்பட்டது அதை எப்படி வாசிக்க வேண்டும் என்ற குறிப்பு இருக்கிறது. ஜேன் ஆஸ்டனின் நாவல் “Northanger Abbey” எடுக்கப்பட்ட மேற்கோள் மற்றவருடைய வாழ்க்கையைப் பற்றிய கற்பனை எப்படி அடுத்தவரை பலிகடா ஆக்கக்கூடியது, என்று சொல்கிறது. ஆனால் மற்ற்வருடைய வாழ்க்கையை பற்றி கற்பனை செய்யாமல் எப்படி நாவல் எழுதுவது? நாவலின் கதை சொல்லி பிரியோனி ங்கள் வீட்டில் நடந்த சம்பவங்களைப் வைத்து எழுதுகின்ற ஒரு நாடகத்தோடு நாவல் ஆரம்பிக்கிறது. ஆனால் அந்த நாடகத்தின் மொழி நவீன இலக்கியமாக ஏர்றுக்கொள்ளத்தக்க மொழியாக இருக்கிறது. இந்த நவீன மொழியின் வழி விளைந்த கற்பனையே பிரியோனியை ராபியை தவறாக குற்றம் சாட்டத் தூண்டுகிறது. நாவலின் கதை சொல்லி வர்ஜினீனியா வுல்ஃபோ என்று சந்தேகிக்கத்தக்க அளவு வர்ஜீனியா வுல்ஃபின் The Waves , Between the Acts, To the lighthouse ஆகிய நாவல்களை நினைவுபடுத்தும் பல பத்திகள். வர்ஜீனியா வுல்ஃபின் பாதிப்பு இந்த நாவலில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மக் ஈவனின் நடைக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் வீட்டோடு இருக்கும் பெண்கள் அனைவரும் ரமணிச்சந்திரன், லஷ்மி, ஆகியோரின் நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆகிய புனைவுகளுக்குள் சிக்கியிருப்பது போல வர்ஜினீயா வுல்ஃபின் புனைவுகளுக்குள் இங்கிலாந்தின் வாசகர்கள் சிக்கியிருந்தார்களோ? என்ன மாதிரியான மெடாஃபிக்ஷன் நாவல் அடோன்மெண்ட்? தெற்கு இங்கிலாந்தின் இரண்டாம் போர்க்கால வருடங்களில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்வதான தோற்றத்தைக் கொண்டிருக்கும் அடோன்மெண்ட்டின் பிரதியினை அகழ்ந்து அகழ்ந்து நாம் படிக்கும்போது போர் என்பதே யாருடைய கற்பனையில் விளைந்தது? என்ன் மாதிரியான கற்பனை அது? போர்க்காலத்தை என்ன கற்பனைகளைக்கொண்டு மக்கள் திரள் கடந்தது? கற்பனையின் உள்ளீடுதான் என்ன? ஆங்கில அமெரிக்க விமர்சகர்கள் அடோன்மெண்ட் நாவலில் பிற நாவல்களுக்கான ஊடுபாவு குறிப்புகளை ஏராளமாகக் கண்டுபிடித்துச் சொல்லியிருகிறார்கள். அவர்கள் எழுதும் ஒவ்வொரு கட்டுரையை வாசிக்கும்போதும் அடோன்மெண்ட் எவ்வளவு செறிவான பிரதி என்பது அதிசயிக்கத்தக்க அளவில் தெரியவருகிறது. தாஸ்தவ்ஸ்கியை ஐரோப்பிய நாவல் எத்தனையோ தளங்கள் தாண்டி ஓடிவிட்டது. ஆனால் gothic romance நாவல்களைப் படித்து, அதன் கற்பனைக்கும் புனைவுக்கும் பலியாகி உலகை வென்று வர சாஞ்சோ பாஞ்சோவின் துணையுடன் கிளம்பிய டான் கெஹிட்டேயின் நிழல் மக் ஈவனின் அடோண்மெண்ட் வரை நீண்டுகிடக்கிறது. ஃபுயெண்டெஸின் கதைசொல்லிகளைப் போலவே மக் ஈவனின் கதைசொல்லியும் நம்பகத்தகுந்தவளாக இல்லை. லோசாவின் கதாபாத்திரமோ என்று கூட பிரியோனியை நாம் சந்தேகப்படலாம். வித்தியாசங்கள் என்னவென்றால் மக் ஈவனின் கதாபாத்திரங்கள் முற்றிலும் பிரித்தானிய தீவுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நாவலும், அதன் பிரித்தானிய கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உள்ளடங்கிய உணர்ச்சிகளைப் போலவே, தன் மெடாஃபிக்ஷன் தன்மையினை ஒளித்துவைத்திருக்கிறது. நாவலை வாசித்து முடிந்த பின்பும் பிராயசித்தம் என்றால் என்ன என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.
எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 14 & 15 கார்லோஸ் ஃபுயெண்டெஸ் (Carlos Fuentes) “The Death of Artemio Cruz” and “Inez”
கார்லோஸ் ஃபுயெண்டெஸ்ஸுக்கு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு- பல முறை பரிந்துரைக்கப்பட்டபோதிலும்- கிடைக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டு. கொலம்பியாவுக்கு மார்க்வெஸ், பெருவுக்கு லோசா என்றால் மெக்சிகோவுக்கு கார்லோஸ் ஃபுயெண்டெஸ் எனலாம். ஆனால் ஃபுயெண்டெஸ் மெக்சிகோவில் ஒரு வகையான அந்நியராகவும் வெளியுலகில் மெக்சிகராகவும் உணர்ந்தார். ஃபுயெண்டெஸின் குழந்தைப்பருவம் வெவ்வேறு லத்தின் அமெரிக்க நாடுகளிலும் அமெரிக்காவிலும் கழிந்தது. பதினாறு வயதில் மெக்சிகோ திரும்பிய ஃபுயெண்டெஸ் நாட்டின் பெரும்பான்மை இடதுசாரி அரசியலை ஆதரிப்பவராக இருந்தாலும் அவருடைய வாழ்க்கை பெரும் செல்வந்த வாழ்க்கை முறையாக இருந்தபடியால் அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். நிகாரகுவா நாட்டின் சாண்டினிஸ்டா இயக்கத்தை ஆதரித்ததில் ஃபுயெண்டெஸுக்கும் சக மெக்சிகரான ஆக்டேவியா பாஸுக்கும் பெரும் மோதல் வெடித்தது. ஆக்டேவியா பாஸ் ஃபுயெண்டெஸின் மெக்சிக அடையாளத்தை விமர்சனத்துக்குள்ளாக்கினார். ஃபுயெண்டெஸ் தன்னுடைய அடையாளத்தை ஒரு விமர்சனபூர்வமான அந்நியன் என்றே வரையறை செய்துகொண்டார். பிறப்பு, வளர்ப்பு, வர்க்கம் ஆகியவற்றினால் அல்ல, படைப்புகளில் வெளிப்படும் கலைப்பார்வையினால் தான் ஒரு அந்நியன் என்று ஃபுயெண்டெஸ் அறிவித்தார். தன் சமூகத்திலிருந்து விலகிய பார்வையினை மெக்சிகோவின் வரலாறு குறித்தும் அரசியல் குறித்தும் அவரால் நாவல்களாக முன்வைக்க முடிந்தது. ஃபுயெண்டெஸின் மிக முக்கியமான படைப்பான “Terra Nostra” உலக இலக்கியத்தில் ஒரு பெரும் சாதனை. மெக்சிகோவின் வரலாறு என்றில்லாமல் ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாறுகளையும் அவற்றின் உள் இணைவுகளையும் கவித்துவமாக, ஃபுயெண்டெஸின் விலகலோடு சொன்ன நாவல் Terra Nostra. வாய்மொழிக்கதைகள், புராணங்கள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் கலந்து எழுதப்பட்ட டெர்ரா நோஸ்டிராவை தமிழில் மொழிபெயர்ப்பது கடினம். கூடுதலாக டெர்ரா நோஸ்டிராவின் கதை பதினாறாம் நூற்றாண்டுக்கும் சமகாலத்துக்கும் மாறி மாறி நடப்பதால் அதன் வரலாற்று விபரங்கள் பிற பண்பாடுகளைச் சேர்ந்த்வர்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால் டெர்ரா நோஸ்டிரா ஒரு எழுத்தாளன் தன் தேச வரலாற்றினை தேசப்பற்று கொண்ட அசட்டுத்தனத்தோடு எழுதாமல் எப்படி காத்திரமான விமர்சனத்தோடும் கற்பனையின் விரிவோடும் எழுத வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
டெர்ரா நோஸ்டிரா அளவுக்கு கடினமில்லாத ஆனால் தன் தேச வரலாற்றினை புனைவாக்கத்தின் விலகலோடும் விமர்சனத்தோடும் சொல்கிற ஃபுயெண்டெஸ்ஸின் இன்னொரு நாவல் “The Death of Artemio Cruz”. மார்க்வெஸ் “The General in his labyrinth”, லோசா “The Feast of the Goat” ஆகிய நாவல்களின் தங்கள் நாடுகளின் சர்வாதிகாரிகளைப் பற்றி எழுதியிருந்தாலும் அந்த நாவல்களைவிட சிறப்பானதும் அவற்றிற்கான மூல வடிவத்தை வழங்கியதும் ஃபுயெண்டெஸின் The Death of Artemio Cruz என்று பல இலக்கிய விமர்சகர்கள் கருதுகிறார்கள். நம்மூர் அரசியல்வாதிகளை நினைவுபடுத்தும் ஆர்தேமியோ க்ரூஸ் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல அவன் ஒரு பத்திரிக்கையாளன்,பெரும் வியாபாரி, காதலன்; தன்னுடைய வாழ்க்கையின் அத்தனை அம்சங்களிலும் ஊழல் மலிந்தவன். சாவுப்படுக்கையில் இருக்கும் ஆர்தேமியோ க்ரூஸ் நாவலில் தன் வாழ்க்கையின் சம்பவங்களை நினைவு கூர்கிறான். ஆர்தேமியோ க்ரூஸின் உயிலைக் கைப்பற்றி விட அவனுடைய குடுமப்த்தினர் அவன் சாவுப்படுக்கையைச் சுற்றி சுற்றி வருகின்றனர். ஆர்தேமியோ க்ரூஸ் யேசுவின் பிறப்பு பற்றி கெட்ட பாலியல் சிந்தனைகளை வெளிப்படுத்தியதால் கிறித்தவ திருச்சபைக்கும் அவனுக்கும் ஏற்பட்ட தகறாறினைத் தீர்க்க திருச்சபை முயற்சி செய்கிறது. க்ரூஸின் காரியதரிசி அவனுடைய லஞ்ச ஊழல் பேரங்களின் ஒலிநாடாக்களை வைத்து மிரட்டுகிறாள். இதையெல்லாம் மீறி க்ரூஸ் தன் காதல்களைப் பற்றியும் இதர புலனின்ப வாழ்க்கை சம்பவங்களையும் பற்றி தன் சாவுப்படுக்கையில் யோசித்துக்கொண்டிருக்கிறான். The Death of Artemio Cruz ஐ வாசிப்பவர்களுக்கு நம் நாட்டு அரசியல்வாதிகளைப் பற்றி இப்படி யாரேனும் தீவிர நாவலொன்றை எழுத மாட்டார்களா என்ற ஏக்கம் மேலிடும். ஃபுயெண்டெஸின் இந்த நாவலில் கதைசொல்லும் உத்திகள் அபாரமானவை. ஃபுயெண்டஸ் திரைப்படத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மார்க்வெஸ்ஸோடு இணைந்தும் தனியாகவும் பல திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். திரைப்படத்தின் உத்திகளான க்ளோஸப், ஜம்ப் கட், ஃப்ளாஷ் பேக், போன்றவற்றை ஃபுயுண்டெஸ் இந்த நாவலில் அழகாகப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இதையெல்லாம் விட இந்த அரசியல் நாவலின் முக்கியத்துவம் என்ன்வென்றால் ஃப்யுண்டெஸ் இந்த நாவலில் மெக்சிகோவின் நிலச்சீர்திருத்தம் எப்படி ஊழல்களினால் தோற்றுப்போனது என்று விரிவாக எடுத்துச் சொல்கிறார்.
பல நாவல் வடிவங்களையும் ஃபுயெண்டெஸ் கையாண்டிருக்கிறார். Crystal Frontiers நாவல் கிட்டத்தட்ட கநாசு தமிழில் “மதகுரு” என்ற தலைப்பில் மொழிபெயர்த்த ஸ்வீடிஷ் நாவலாசிரியை ஷெல்மா லாகார்லாஃபின் “கோஸ்டாபெர்லிங்” என்ற நாவலின் வடிவத்தினை ஒத்தது. அதாவது ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையைப் போல இருக்கும் அத்தியாய சிறுகதைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புறுத்தப்பட்டு நாவல் பரிமளிக்கும். ஃபுயெண்டெஸின் Crystal Frontiers மெக்சிகோவிலிருந்து வட அமெரிக்காவில் குடியேறியவர்கள் வாழ்க்கைகளைச் சொல்வது. அந்த நாவலின் அழகு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் முழுமையாக பெயர்வதற்கு சாத்தியமில்லை.
“Inez” தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் அதன் கவித்துவமும் கதையாடல் முறையும் தமிழுக்கு அறிமுகமாகும். இறந்தால் வெனிஸ் நகரத்தில் இறக்கவேண்டும் ஏனென்றால் அங்கேதான் காதலின் மடியில் சாகலாம் என்ற உலகளாவிய ‘முதுமொழி’ உருவாவதற்கு காரணமான தாமஸ் மன்னின் நாவல் “Death in Venice” இன் பாதிப்பில் ஃப்யுண்டெஸ் எழுதிய நாவல் “இனெஸ்”. தூய கன்னி என்ற பொருளுடைய கிரேக்க தேவதையை நினைவுபடுத்தும் ‘இனெஸ்’ என்ற பெயரில் அமைந்த நாவல் வெனிஸில் நடக்கும் காதலையும் துரோகத்தையும் பற்றிய கதை. இரண்டு இசைக்கலைஞர்களுக்கிடையே உள்ள தொழில் போட்டி, காதல் ஆகியவற்றை கருவாகக்கொண்ட “இனெஸ்” லாசராவின் உரைநடைக்கு நிகரான உணர்ச்சியையும் வேகத்தையும் கவித்துவத்தையும் வெளிப்படுத்துவது. தாமஸ் மன்னின் நாவலின் பாதிப்பில் உருவானதே சால்மான் ருஷ்டியின் “Enchantress of Florence”, Kazuo Ishiguro வின் “The Unconsoled” ஆகிய நாவல்களும் ஆனால் ஃபுயெண்டெஸே இந்த காதல் கதையை புதிய உயர்தளத்திற்கு எடுத்துச் செல்கிறார். வழக்கம்போல ஏராளமான நாட்டுப்புற கதைகளையும் புராணங்களையும் கார்லோஸ் ஃபுயெண்டெஸ் நாவலுக்குள் பயன்படுத்துவது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் நாவலின் apocalyptic vision ஒவ்வொரு வாக்கியத்திலும் வெளிப்படுவது.
தமிழில் சமீப காலமாக சிலர், இந்து மதத்தின் பிரளயத்தை நோக்கி பிரபஞ்சம் செல்வதான உலகநோக்கு கிறித்தவத்தின் ஆப்ரஹாமிய மதங்களின் தீர்ப்பு நாள் உலக நோக்கிலிருந்து வேறுபட்டது என்று வாதிட்டு வருகிறார்கள். அவர்கள் “இனெஸ்” நாவலை கண்டிப்பாக படிக்க வேண்டும். அப்படியொன்றும் பிரபஞ்ச முடிவும் மறுபிறப்பும் பற்றிய இந்து உலக நோக்கு இதர மத உலகப்பார்வைகளிலிருந்து வேறுபட்டதல்ல என்பது புலப்படும்.
Wednesday, April 15, 2015
எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 12 - டபுள்யூ.ஜி. செபால்ட் (W.G. Sebald) The Rings of Saturn
எம்.டி.முத்துக்குமாரசாமி
தியானம் போல ஒரு நாவலின் உரை நடை இருக்க முடியுமா? அரிஸ்டாட்டிலிய நாடகக்கதை வடிவம், வணிகநாவல்கள், ஹாலிவுட் சினிமா, அவற்றின் தமிழ்க் கள்ளக்குழந்தைகள் என்று பொதுத்தளத்தை ஆக்கிரமித்திருப்பது நாம் அறிந்ததுதான். அரிஸ்டாட்டிலிய நாடகக்கதை வடிவத்தினை உலக இலக்கியம் பல வகைகளிலும் துறந்து விட்டது. அப்படி அரிஸ்டாட்டிலிய நாடக்கதை வடிவத்தினை முற்றிலும் துறந்த நாவல் The Rings of Saturn. நாவலில் ஆழ்ந்த அமைதியை, நினைவுகளின் பவித்திரத்தை, தொலைந்து போன நினைவுகளை, ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் தீவிர உணர்ச்சிகளை, அபூர்வமான தியான உரைநடையாக்கியிருக்கிறார் செபால்ட். இங்கிலாந்தில் வாழ்ந்த ஜெர்மானியரான செபால்ட் ஜெர்மன் மொழியில் எழுதிய The Rings of Saturn 1999 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது.
என்ன வகையான தியானத்தை வடிவமைக்கிறது செபால்டின் உரைநடை? The Rings of Saturn நாவலில் பெயரில்லாத பயணி ஒருவர் இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலேயே கடற்கரை ஓரமாக நடந்து செல்கிறார். அந்தப் பயணியின் தன்னிலைக் கதையாடலாக சொல்லப்படுகின்ற நாவல் அவர் சந்திக்கின்ற மனிதர்கள், பார்க்கின்ற கட்டிடங்கள், அவருக்கு அனுபவமாகின்ற நிலப்பகுதிகள் ஆகினவற்றை அவை கிளர்த்துகின்ற நினைவுகளோடு, சிந்தனைகளோடு இணைக்கிறது. பயண நூலா, நினைவுக்குறிப்புகளா, அனுபவப்பதிவுகளா என்று தனித்து சொல்லவியலாத வகையில் பிரக்ஞையின் தூண்டுதலகள் செபால்டின் உரைநடையில் இணைக்கப்படுகின்றன. இது சுதந்திர இணைவுகளில் ஓடும், மொழியின் ஒலி வழுக்கல்களால் தொடரும் நனவோடை உத்தி அல்ல. நுண்ணுணர்வுகள் உயிர்பெற சிந்தனையின் இழைகள் நனவிலிக்குள் நீர் போல கசிந்து ஊடுறுவும் உரைநடை, கதை சொல்லல். கதாபத்திரங்கள் அவர்களின் வீர தீரச் செயல்கள் இவை நிரம்பியவே கதைசொல்லல் என்று நம்புபவர்களுக்கு செபால்டின் நாவல் மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கும். கதைசொல்லல்கள் பல தரப்பட்டவை அவற்றின் அழகுகள் வித்தியாசமானவை, விதிகளுக்குள் அடங்காதவை, தொடர்ந்த உரையாடல் தருகின்ற அழகிய அனுபவத்தை அளிப்பவை என்று கதைசொல்லலின் எல்லைகளை விஸ்தரித்து புரிந்துகொள்ளும் வாச்கர்களுக்கு செபால்டின் நாவல் அளிக்கின்ற ‘வாசிப்பின்பம்’ எல்லையற்றது. ஆம், அந்த தனித்துவ வாசக அனுபவத்தை ‘வாசிப்பின்பம்’ என்றுதான் சொல்ல வேண்டும். வேறெப்படி சொல்வதாம்?
ஆனால் செபால்டின் கதைசொல்லலிலும் உரைநடையிலும் ஆழமான துக்கம் அடியோட்டமாக இருக்கிறது. The Rings of Saturnஇன் கதை சொல்லி மூன்று விதமான அழிவுகளைப் பற்றி தியானிக்கிறான்; இயற்கை உண்டாக்குகிற அழிவுகள், அழிந்துபோன நகரங்கள், அழிந்து காணாமல் போன வாழ்க்கை முறைகள். அழிவுகளைப் பற்றி தியானிக்கின்ற கதைசொல்லிக்கு இரண்டாம் உலகப்போரில் நடந்த யூத இன அழிப்பும் நினைவுகளூடே மேலெழுந்து வருகின்றன.
The Rings of Saturn இன் கதைசொல்லியின் நிலையற்ற பிரக்ஞை அவன் பயணம் செய்கின்ற இடங்களின் காட்சிப்புலத்தினால் தூண்டப்படுகிறது. நாவலில் செபால்ட் பல தேவாலயங்கள், மரங்கள், பாலங்கள் ஆகியவற்றின் புகைப்படங்களையும் தன் கதைசொல்லலின் பகுதிகளாக இணைக்கிறார். பயணம் என்பது எப்போதுமே ஓரிடத்திற்கு திரும்பச் செல்லும்போதுதான் உண்மையிலேயே அனுபவமாகிறதோ என்று நாம் வியக்கிறோம் வேறெந்த எழுத்தாளரிடம் செபால்டின் கதைசொல்லி போன்ற பயணியை நாம் எதிர்கொண்டிருக்கிறோம் என்று நான் நினைத்துப்பார்த்தேன். டி.ஹெச்.லாரண்சிடம் நாம் காணக்கூடும். வி.எஸ்.நய்ப்பாலில் The Enigma of Arrivalஇல் நாம் செபால்டின் பயணிக்கு நிகரான தியானத்தையுடையவரை நாம் அடையாளம் காணக்கூடும். ஏன் வர்ஜினியா வுல்ஃபின் The Waves நாவல் கூட நினைவுக்கு வரக்கூடும். ஆனால் செபால்டின் அபூர்வம் அவர் ஜெர்மனியைப்பற்றி ஜெர்மனிக்கு வெளியே இங்கிலாந்தில் வாழ்ந்து எழுதுவதால் செழுமை பெற்றது. செபால்ட் ஜெர்மனியை விட்டு வெளியே வாழ்ந்ததாலே அவரின் பவித்திர நினைவலைகளில் ஜெர்மனியின் போருக்குப் பிந்தைய இலக்கியத்தின் ரொமாண்டிசச கறை படிவதில்லை. பழம்பெருமைக்கான ஏக்கமாகவும் கொச்சையாவதில்லை.
செபால்டின் கதைசொல்லலின் வசீகரம் அது காருண்யத்தின் கொடைகளால் நிரம்பியிருப்பதுதான் என்று நான் மெதுவாகவே கண்டுபிடித்தேன். அது ஈடு இணையற்ற வசீகரமும் கூட.
தியானத்தின் நோக்கம் மௌனம் என்று யாரேனும் சொல்வதைக் கேட்கும்போதோ, எழுதியதைப் படிக்கும் போதோ எனக்கு செபால்டின் The Rings of Saturn நாவலில் வரும் இயற்கையைப் பற்றிய அவதானிப்புகளை, குறிப்பாக பெரிய வெடிப்புகளில் சூரிய மண்டலம் தோன்றி அதில் சனி கிரகத்தைச் சுற்றி சுழலும் வளையங்களுக்கு என்ன பொருள் என்று கேட்கத் தோன்றும். அதாவது பொருளாலான பிரபஞ்சமே அது அழிவிலிருந்து உயிர்த்ததை சனியின் வளையங்களின் ஒளிர்வுகள் என நினைவு வைத்திருக்கும்போது, மனிதப் பிரக்ஞை அழிவின் நினைவு ஒளிர்வுகளை இழந்து எப்படி மௌனம் கொள்ளும்?
Wednesday, April 15, 2015
எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 13- கோ யுன் (Ko Un) Little Pilgrim
"Avatamsaka Gandavyuha Teaching 1" by Asia Society created the file. Artwork created by an anonymous ancient source. - http://asiasocietymuseum.org/region_object.asp?RegionID=1&CountryID=2&ChapterID=10&ObjectID=558. Licensed under Public Domain via Wikimedia Commons - http://commons.wikimedia.org/wiki/File:Avatamsaka_Gandavyuha_Teaching_1.jpeg#/media/File:Avatamsaka_Gandavyuha_Teaching_1.jpeg
"Cover of Ko Un's Little Pilgrim" by Source (WP:NFCC#4). Licensed under Fair use via Wikipedia - http://en.wikipedia.org/wiki/File:Cover_of_Ko_Un%27s_Little_Pilgrim.jpg#/media/File:Cover_of_Ko_Un%27s_Little_Pilgrim.jpg
கோ யுன் கொரிய நாட்டின் முது பெரும் கவி. 1933 ஆம் ஆண்டு கோ யுன் பிறந்தபோது கொரியா ஜப்பானிய காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. கொரிய மொழியில் பேசுவது எழுதுவது படிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. போதுமான ஊட்டச்சத்து இன்றி வளர்ந்த கோ யுன், போதுமான உடல் வலுவைப் பெறவில்லை ஆதலால் அவரை ராணுவத்தில் சேர்க்கவில்லை. ஆனாலும் ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் தொடர்ந்து நடந்த போர்களைப் பார்க்கும் கொடுமையிலிருந்து அவர் தப்பிக்கவில்லை. 1952 ஆம் ஆண்டு கோ யுன் ஜென் புத்த மடாலாயத்தில் சேர்ந்து புத்த பிக்குவானார். பத்தாண்டு கால புத்த மடாலய வாழ்க்கைக்குப் பின், கோ யுன் மடாலயம் சுய நலங்களை வளர்ப்பதாகக்கூறி அதிலிருந்து வெளியேறினார். இருமுறை தற்கொலைக்கு முயன்று தோற்றுப்போன கோ யுன் 1970 களில் கொரிய ஜனநாயக விடுதலை இயக்கத்தில் பங்கேற்றதால் சிறையிலடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார். சிறை வாழ்க்கையின்போது தான் வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொரு நபரையும் பற்றி ஒரு கவிதை எழுதுவது என்று ஆரம்பித்து சிறைலிருந்து வெளிவந்தும் பல ஆண்டுகள் தொடர்ந்து எழுதினார். Ten Thousand Lives என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கவிதைத் தொகுதி உண்மையில் பத்தாயிரம் நபர்களைப் பற்றியது.
போரின் கொடுமைகளை நேரில் பார்த்திருந்தாலும், கொடுமையான வன் கொடுமைகளுக்கு ஆளானவராக இருந்தாலும், பௌத்த மடலாயங்களின் மேல் நம்பிக்கை இழந்தவராக மாறினாலும் கோ யுன் பௌத்தத்தில் நம்பிக்கை இழக்கவில்லை அது தருகின்ற வாழ்க்கையை அறுதி செய்யும் ஒளியினையும் இழக்கவில்லை. அவருடைய கவிதைகளில் எதிர்மறையின் கீற்றினை கிஞ்சித்தும் காண இயலவில்லை. ‘பத்தாயிரம் வாழ்க்கைகள்’ கொரிய வாழ்க்கையின், சரித்திரத்தின், இணையற்ற ஆவணமாகவும், கொரிய நாட்டின் போராட்டங்களில் இருந்து முகிழ்த்த கவித்துவ உச்சமாகவும் கருதப்படுகிறது. ஆலென் கின்ஸ்பெர்க், கோ யுன் பௌத்த மத விற்பன்னர், மகா கவி, அரசியல் விடுதலைக்கான போராளி, இயற்கையின் சரித்திரத்தை எழுதிய ஆசான் என்று குறிப்பிட்டார். கோ யுன் தன் அரை நூற்றாண்டுக்கும் மேலான இயக்கத்தில் ஏராளமாக படைத்திருக்கிறார். அவருடைய படைப்புலகத்தின் சிறு பகுதியே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கோ யுன் கொரிய கிராமம் ஒன்றில் தன் மனைவியுடன் தற்போது வாழ்ந்து வருகிறார். இரு முறை அவர் பெயர் இலக்கியத்திற்கான நோபெல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
நான் கோ யுன்னின் நாவல் Little Pilgrim ஐ கொரியாவில் பயணம் செய்யும்போது வாசித்தேன். நான் எழுதிக்கொண்டிருக்கும் ‘அழாதே மச்சக்கன்னி’ நாவல் கொரியாவில் நிகழ்வதால் கொரிய மொழிப் படங்கள், சுற்றுலாத் தலங்கள், கலைப் பொருட்கள் ஆகியவற்றை படிப்பதோடு கொரிய கவிதைகளையும் நாவல்களையும் படிப்பதை வழக்கமாக்கிக்கொண்டேன். ‘லிட்டில் பில்கிரிம்’ கொரிய மக்களின் ஆன்மீக மையத்தினை அடையாளம் காண எனக்கு உதவியது.
‘லிட்டில் பில்கிரிமின்’ கதை இந்தியாவில் கௌதம புத்தரின் காலத்தில் நிகழ்கிறது. கௌதம புத்தர் நாவலில் எந்த இடத்திலும் கதாபாத்திரமாக நேரடியாக வருவதில்லை. நாவல் கொரிய மகாயான பௌத்தத்தின் அடிப்படை நூலான அவதாம்சக சூத்திரத்தை அடியொற்றி எழுதப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து கொரியாவுக்கு மொழிபெயர்ப்பில் சென்ற அவதாம்சக சூத்திரம் கொரிய மொழியில் Daebanggwang Bulhwaeom Gyeong or Hwaeom Gyeong என்று அழைக்கப்படுகிறது. அவதாம்சக சூத்திரம் கௌதம புத்தரின் இறப்புக்கு ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டது. ஆறாம் நூற்றாண்டு உஜ்ஜயினியைச் சேர்ந்த புத்த துறவியான பராமார்த்தர் அவதாம்சக சூத்திரம் ‘போதிசத்துவ பீடிகை’ என்ற பெயரிலும் வழங்கப்பட்டதாகச் சொல்கிறார். அவதாம்சக சூத்திரம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுள்ளது. பார்க்க: The Flower Ornament Scripture : A Translation of the Avatamsaka Sūtra (1993) by Thomas Cleary, ISBN 0-87773-940-4 இந்தியாவிலிருந்து கொரியாவுக்கு அவதாம்சக சூத்திரம் சீன மொழிபெயர்ப்புகளின் வழி சென்றடைந்துள்ளது.
உபநிடதங்களில் வரும் நசிகேதன் பிராஜபதியுடன் உரையாடி ஞானம் பெறுவது போல லிட்டில் பில்கிரிமில் வரும் சுதானன் பல ஆண் பெண் துறவிகளையும், மிருகங்களையும், பறவைகளையும், தாவரங்களையும் சந்தித்து ஞானம் பெறுகிறான். கோ யுன் அவதாமசக சூத்திரத்தின் பத்து படி பாதையை அப்படியே நாவலின் உள்க்கட்டமைப்பாக வைத்திருக்கிறார். மொத்தம் 53 உரையாடல்கள். தெரியாத அதிசயத்தை தெரிந்த வடிவத்தை வைத்து விளக்கும் தவறினை செய்யும் மேற்கத்திய விமர்சகர்கள் லிட்டில் பில்கிரிம் நாவலை தாந்தேயின் டிவைன் காமெடியோடு ஒப்பிடத்தலைப்படுகிறார்கள். ஆனால் ‘லிட்டில் பில்கிரிம்’ மேற்கத்திய மரபின் அர்த்தத்தில் வடிவமுடைய காப்பியநாவல் அல்ல; இந்திய தத்துவங்களின் கதைகூறலுக்கு அணுக்கமான கதை சொல்லலைக் கொண்ட
‘லிட்டில் பில்கிரிம்’ சுதானனுக்கு வயது ஏறுவதே இல்லை நாவலில் காலம் கழிந்தாலும் அவன் சிறுவனாகவே இருக்கிறான். போரில் நாவலின் ஆசிரியர் கோ யுன்னைப் போலவே குடும்பத்தை இழந்த அனாதை சுதானனின் சந்திப்புகள் பத்துபடிப் பாதை வழியே மெதுவாக பூரணவிழிப்பினை நோக்கி நகர்வதாகத் தோன்றினாலும் அவனுக்கு அதி விழிப்பு சடாரென்றே நிகழ்கிறது; சுதானன் அவனைப் போலவே போரில் குடும்பத்தை இழந்த இன்னொரு சிறுவனை சந்திக்கும்போது சாவினைக் கடந்த சுழற்சி உறுதிப்படுகிறது.
கோ யுன் ‘லிட்டில் பில்கிரிம்’ நாவலை இருபத்தி இரண்டு வருடங்களில் எழுதி முடித்தார். நாவலின் முதல் பகுதி கவித்துவமாகவும், நடுப்பகுதி சமூக பிரச்சினைகள் நிரம்பியதாகவும் மூன்றாம் இறுதிப்பகுதி தத்துவார்த்தமாகவும் இருக்கிறது. எனக்குப் பிடித்த பகுதிகள் நாவலின் ஆரம்ப பகுதிகளே.
லிட்டில் பில்கிரிம் இவ்வாறாக ஆரம்பிக்கிறது:
“The river was beginning to loom into view beyond a cluster of hybiscus trees hanging as if in a drunken stupor. It flowed quickly in the early morning light the sound of its rippling subdued . For little Sudhana, that glimpse of the the river constituted the first awareness of the world as he regained consciousness.
“He’s alive!” Manjushri rejoiced. The oldman rescued the child evening before, as the boy floated close to the riverbank. All night long, the aged Manjushri had kept watch beside him on the sandy shore of the vast triangular reach where the Son River united with a small tributary before flowing down to join the Gaṅgā.
They were in the northern regions of what is now called India. All the nation’s frontier’s and fortresses were in a state of unprecedented alert. King Virudhaka had determined to wipe the entire Shakya clan of Kapilavastu from the face of the Earth. …….”
“லிட்டில் பில்கிரிம்” தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் அது சிறுவர்களுக்கான மிகச் சிறந்த நாவலாகவும் இருக்கும்.