http://malaigal.com/?p=3676
கௌதம சித்தார்த்தன் என்கிற மற்றவனின் கதை
Dec. 17 2013, இதழ் 40, இலக்கியம், கட்டுரை, டிசம்பர், முதன்மை 3, முதன்மை 5 no comments
[ A+ ] /[ A- ]
கண்ணாடியுள்ளிருந்த தன்னைக்கண்டு கொண்ட பிரமிள், கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம் என்றான். போர்ஹே மற்றொரு போர்ஹேயைச் சந்தித்த அந்தக் காலாதீத்தின் மொக்கவிழ்வு, இருவரும் இருவேறுவிதமான காலவெளிகளிலும் நிலவெளிகளிலும் இருக்கும்போது அக்கணமாக அவிழ்ந்தது.
பாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் சார்லஸ் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1969 ல் ஒருவனும், ஜெனீவாவில் உள்ள ரோனே நகரத்தின் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1964 ல் இன்னொருவனுமாக காலமும் வெளியும் விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளியின் சாத்தியங்களுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். லேபிரிந்த் என்னும் புதிர்வெளிச்சுழலின் மாய விளையாட்டு அது.
நிச்சலனமாய் தங்களுக்கு முன்னால் இருந்த நீர்ப்படுகையில் ஒரு போர்ஹே நாணயத்தை வீசியெறிந்தபோது அது H2O வில் பட்டு எம்பி எம்பி காலப்படுகையில் சலனங்களை ஏற்படுத்திய கணங்கள்தான், நான் கௌதம சித்தார்த்தனைச் சந்தித்தது.
அந்த நாணயம் அவன் அம்மாவிடம் போய்ச் சேர்ந்தது.
அவன் அரசுப்பள்ளியில் ஐந்தாம்வகுப்பு படிக்கும்போது, மதிய உணவுக்காக அவனது அம்மா கொடுத்தனுப்பிய முப்பது காசுகளாக மாறியது. அந்தக்காசில் இருபது காசுகளில் இரண்டு இட்லிகளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள பத்து காசில் இரண்டு காமிக்ஸ் புத்தகங்களை வாடகைக்கு எடுத்துப் படித்துக் கொண்டிருந்த கணத்தில்தான் முதலில் அவனைச் சந்தித்தாக நினைவு.
இரும்புக்கை மாயாவியின் மாயஉலகத்தில் சுற்றிக் கொண்டிருந்தான். சி.ஐ.டி.லாரன்ஸ் – டேவிட்டோடு சேர்ந்து அ.கொ.தீ.கழகத்தை அழித்தொழித்தான். பத்திரிகைகளில் வந்த படங்களை கத்திரித்து ஒட்டி, சுயமாக ‘படக்கதை’ ஒன்றை உருவாக்கி தனது சகாக்களிடையே சுற்றுக்கு விட்டபோது, இட்லி ஒன்றாகவும், காமிக்ஸ்கள் நான்காகவும் மாறிப் போயின.
அந்த காமிக்ஸில்தான் தீ வைத்தான் அவனது அண்ணன். ஆனால் அவனோ, மூலையில் கூட்டித் தள்ளியிருந்த அந்தச் சாம்பலைத் தண்ணீரில் கரைத்துக் குடித்தான். காக்கை கவிழ்த்த கமண்டலமாக அவனுக்குள் இறங்கிய அந்த நீர்ப்படுகையினுள்தான் போர்ஹேவின் நாணயம் சுழித்தோடியது. கல்வி தடைபட்டு எருமைமாடுகளை மேய்ச்சல் நிலத்துக்குப் பத்திக்கொண்டு நடக்க, அவனுக்குப் பின்னால் நீண்டு கிடந்த நிழலை வெட்டிவெட்டி வீசினான் அண்ணன்.
இடைநுழைந்த தமிழாசிரியர் கிருஷ்ணசாமி, அவனை அழைத்துச் சென்று கவுந்தப்பாடி நூலகத்தில் உறுப்பினராகச் சேர்த்து விட, கட்டணத்தொகை மூன்று ரூபாயாக மாறியது அந்நாணயம். “பள்ளியில் படித்துத்தான் பெரியாளாக வேண்டும் என்பதில்லை, இங்கே உள்ள புத்தகங்களைப்படி.. நீபெரிய ஆளாக வருவாய்..”
சரித்திரத்தின் நுண்ணரசியல் பக்கங்களை ஜனநாதக்கச்சிராயனும், வந்தியத்தேவனும், இளைய பல்லவனும் திறந்து காட்டினர். புரவிகளின் குளம்பொலிகள் தேய்ந்தபோது, வாராவாரம் குமுதத்தில் பறந்த ஹென்றி ஷாரியாரின் பட்டாம்பூச்சி ஒரே தாவாகத்தாவி சுஜாதாவிடம் கொண்டுவந்து சேர்த்தது.
சுஜாதாவும் அவனும் வெகுநாட்கள் கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். வசந்தின் பேச்சினூடே உதிர்த்த விஷயங்கள் போதையுடன் ஈர்த்ததில் புரிபடாதவைகளை நோக்கி நகரத்துவங்கினான்
நாகரிகத்தின் எவ்வித நிழல்களும் கவிழ்ந்திராத ஆலத்தூர் என்னும் அவனது கிராமத்தை விட்டு நகரத்துக்கு இழுத்தது ஈரோடு நடராஜா தியேட்டரின் ஆங்கிலப்படங்கள். (ஆபாசப் படங்கள் அல்ல; அதுவரை கேள்விப்பட்டிராத பின்புலமும் கதையம்சமும் கொண்ட புதிய உலகத்தைத் திறந்து காட்டிய ஹாலிவுட்படங்கள்)
இனம்புரியாத உத்வேகத்துடன் ஓடிக்களித்த கால்கள் ஒரு முக்கியமான மைல்கல்லை வந்தடைந்தன. அது தவமணி. அவனது ஆரம்பகால இலக்கிய வாழ்வின் முக்கியமான பாத்திரம். அவர் அவனுக்கு நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார்.
‘விடியல்’ என்றை பெயரில் கையெழுத்துப் பத்திரிகையைத் துவங்கினான். புரட்சி, சோஷலிஸ யதார்த்தவாதம், இலக்கியக்கூட்டங்கள், திரைப்படச்சங்கங்கள், சிறுபத்திரிகைகள்… என்றெல்லாம் சுழன்று கொண்டிருந்தான். வேட்டை நாயின் நாக்குத் தொங்கலோடு ஓயாது தேடி அலைந்து திரிந்ததில் அகப்பட்டதென்ன?
அந்தச் சுழற்சியைப் பிளந்து கொண்டு வந்தவர்தான் தேவிபாரதி. அவனது வாழ்வின் பெரும்பகுதியை அபகரித்துக் கொண்ட அவரோடு கினுகோனார் சந்தில் நின்றுகொண்டு, ஆல்பர்ட் காம்யூவோடும், தாஸ்தாவ்ஸ்கியோடும், ரஷ்ய இலக்கியகர்த்தாக்களோடும், கரிசல் காட்டுக்காரர்களோடும் பேசித்திரிந்தான். பேச்சு, விவாதம், எழுத்து என்று காலங்களற்று அவருடன் கிடந்தான்.
அப்படியும் நடக்குமா என்ன?
அவனைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்ட அந்நிகழ்வு கால.சுப்ரமணியம் என்னும் மகத்தான ஆளுமையால் நடந்தேறியது. அதுவரையிலான நவீனத் தமிழ் இலக்கியத்தை குறுக்குவெட்டாய்த் தாண்டிய வீச்சில் படைப்புக்கும் சிந்தனைக்குமான பரிமாணங்கள் வெட்டி வெட்டிப் பிரிகின்றன. முழுக்க முழுக்க உலகப்படைப்புகளை அவர் அறிமுகப்படுத்தியபோது அதுவரையிலான அவனது பிரபஞ்சம் நிலைகுலைந்து போனது. தாமஸ்மன் தலைகளை மாற்றிவைத்தான். ஷெகர்ஜாத் மரணத்தைத் தள்ளிப்போட்டாள். காஃப்கா கரப்பான் பூச்சியாக உருமாற்றினான். அலென்போவின் பூனையுடனும் போர்ஹேவின் புலியுடனும் பாழ்நிலத்தில் திரிந்தவனை பித்தனும் மௌனியும் பிரமிளும் மேல்நோக்கிய பயணத்தில் கை தூக்கினார்கள். சர்ரியலிஸமும், சிம்பலிஸமும், போஸ்ட்மாடர்னிஸமும், திராவிடியமும், திணைக்கோட்பாடுகளும், விளிம்புநிலையியமும் என்று தமிழும் சர்வதேசமும் பிணைந்து புதுவகையிலான பார்வைகளை அவனுக்குள் உருவேற்றின. காலாவும் அவனும் சர்வதேசப்படைப்புகளின் நுட்பங்களைப் பேசிப்பேசி மாய்ந்தார்கள்.
அப்பொழுது பற்றிக் கொண்டது பெருந்தீ. தமிழ் இலக்கியத்தை உலகத்தரத்துக்கு உயர்த்தவேண்டும் என்ற பெருநெருப்பு அவனுக்குள் மூண்டெழுந்தது. 1988 ல் ‘மூன்றாவது சிருஷ்டி’ யை வெளியிட்டபோது குற்றாலம் கவிதைப்பட்டறையில் சூறைக்காற்று சுழன்றடித்தது.
அதே சுழற்சியில் ‘உன்னதம்’ பத்திரிகை ஆரம்பித்து ‘புதுவகை எழுத்து’ என்கிற புதிய கோட்பாட்டை உருவாக்கியபோது விமர்சன, சிந்தனையாள, கோட்பாட்டு, துறை போகிய… திலகங்கள் அவனைக் கடித்துக்குதற ஆரம்பித்தார்கள். ரத்தம் சிந்தச்சிந்த சர்வதேச எழுத்துக்களையும் நுட்பங்களையும் தமிழுக்கு மாற்றிக்கொண்டேயிருந்தான்.
அப்பா, நாணயத்தைக் கொடுத்து மகாபாரதம் படிக்கச்சொன்னபோது, எழுந்தன பல்வேறு கேள்விகள். அவைகளுக்கு இன்னும் விடை சொல்லவில்லை கிருஷ்ண துவைபாயணன்.
இன்னும் என்னென்னவோ சொல்லலாம்;
முக்கியமாக, அவனது வாழ்வில் பாத்திரம் வகித்த இந்த மூன்று நபர்களைத் தவிறவும் இன்னொரு மிக மிக முக்கியமான பாத்திரம் இருக்கிறது. அவர்தான் அவனுக்குள் இருந்த தூய கலை மற்றும் படைப்பு மனோபாவத்தை முழுக்க முழுக்க அரசியலை நோக்கி மடைமாற்றி விட்டவர்; ‘உங்களுடைய கலை இலக்கியப் பார்வை இதுவரையிலான காலவெளியில் புத்தம் புதியது. ஆனால், அந்தப்பார்வையை அரசியலோடு இணைத்தால்தான் அது பூரணமடையும்’ – மைத்ரேயி.
இவ்வாறாக போர்ஹேவின் நாணயம் அவனுக்குள் லேபிரிந்தாய் சுழன்று கொண்டேயிருந்தது.
அந்த நாணயத்தை எடுத்து பின்னோக்கி வீசியெறிந்தேன். அது எல்லையற்ற பெருவெளியில் பட்டு எம்பி எம்பி எங்கோ போய் விழுந்தது. அது அவனது கைக்குப் போய்ச் சேர்ந்ததா? அல்லது போர்ஹேவின் கைக்கே போய்ச் சேர்ந்ததா? அல்லது இரட்டை (Doppelgänger) என்னும் உருவகத்தைக் கலையாக மாற்றிய தாஸ்தாவ்ஸ்கியிடமா? இரண்டாயிரமாண்டு தமிழ்மரபில் காலூன்றி ஆவேசமாய் எழுந்து நிற்கும் அடுத்த தலைமுறைப் படைப்பாளியிடமா?
எனில், முடிவற்ற காலவெளியில் போய்க்கொண்டேயிருக்கும் அஸ்வத்தாமாவின் அம்பு தானா அது?
நகைக்கிறது காலம்; உதிர்கின்றன அதன் செதில்கள்.
இந்தப் பக்கங்களை எழுதியவன் நானா அல்லது கௌதம சித்தார்த்தனா என்று தெரியவில்லை; ஜுலியோ கொர்த்தஸாரின் நாயகன் ஆக்ஸலோடில் என்னும் மீனாக மாறி ஆக்வேரியத்திற்குள் போனதும் ஆக்ஸலோடில் நாயகனாக மாறி வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் நான் அறிவேன். அப்படி ஏதாவது கூட நிகழ்ந்திருக்கலாம். அதனால்,
அவனது பெயரிலேயே கையெழுத்திடுகிறேன்.
ஆனால் வேறு ஒரு நிலப்பகுதியிலிருந்தும், வேறு ஒரு காலச்சுழியிலிருந்தும்…
கௌதமசித்தார்த்தன்
சென்னை
(25 வருடங்களுக்குப்பின் இரண்டாவது பதிப்பாக வெளிவரும் கௌதம சித்தார்த்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பான “மூன்றாவது சிருஷ்டி” நூலுக்காக எழுதப்பட்ட முன்னுரை.
எதிர் வெளியீடாக வரும் இந்நூல் புத்தகக்கண்காட்சியில் வெளியாக இருக்கிறது)