Sunday 5 April 2015

மூட்டைப்பூச்சியும் கடவுளும் - தி.ஜ.ர

தி.ஜ.ர
மூட்டைப்பூச்சியும் கடவுளும்
கதையாசிரியர்: தி.ஜ.ர
http://www.sirukathaigal.com/நகைச்சுவை/மூட்டைப்பூச்சியும்-கடவு/#more-17263

கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: November 11, 2013
பார்வையிட்டோர்: 14,222
Rate this (5 Votes)


எங்கள் வீட்டுப் பையனுக்குத் திடீர் திடீர் என்று பெரிய சந்தேகங்கள் வரும். பாடங்களில் சந்தேகம் கிடையாது. படித்தால்தானே சந்தேகம் வர? ‘படி படி’ என்று பாட்டியும் அம்மாவும் மண்டையை உடைத்துக் கொள்வார்கள். ‘படிக்காவிட்டால் காபி இல்லை; சாப்பாடு இல்லை’ என்பார்கள். காபிக்காகக் கொஞ்சம் சாப்பாட்டுக்காகக் கொஞ்சம் படிப்பான். என்ன படிப்பான்? தமிழுக்குக் கோனார் நோட்ஸ்; இங்கிலீஷ¤க்கு ஏதோ நோட்ஸ்; பாடங்களை மட்டும் படிக்கவே மாட்டான். பரீட்சையில் சுழிதான். ஆனாலும் என்னவோ ‘பாஸ்’ செய்து விடுவான். அது என்ன மாயமோ! ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அது எப்படியோ போகட்டும்.

அவனுடைய சந்தேகங்களை இல்லையா சொல்ல வந்தேன்!



ஒரு நாள் திடுதிப்பென்று அவன் கேட்டான். ‘இந்த மூட்டைப்பூச்சி நம்மை ஏன் கடிக்கிறது, தாத்தா?’

‘பசி தீர்த்துக் கொள்ளக் கடிக்கிறது’ என்றேன் நான்.

‘நம்மைக் கடித்தால் பசி தீருமா?’

‘நம் ரத்தம் அதன் உணவு. நம்மைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சுகிறது. அதன் பசி தீர்கிறது.’

‘நம் ரத்தம் அதற்கு ஏன் உணவாயிருக்கிறது? எறும்பு மாதிரி அரிசி, பருப்பு, சர்க்கரை இப்படி ஏதாவது அது தின்னக்கூடாதோ?’

‘தின்னலாம். ஆனால் எறும்பின் பிறவி அப்படி; மூட்டைப் பூச்சியின் பிறவி இப்படி.’

மேலும் மேலும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டேயிருந்தான் பையன்.

தொண தொணப்புப் பொறுக்காமல் கடவுளைத்தான் நான் சரணடைய வேண்டியதாயிற்று.

‘மனித ரத்தம் உன் உணவு’ என்று மூட்டைப்பூச்சிக்குக் கடவுள் வரங்கொடுத்திருக்கிறாராம் என்பதாகச் சொன்னேன். அதற்கு மேல் தத்துவ சாஸ்திரி மாதிரி கடவுளைப்பற்றிச் சரமாரியாகக் கேள்விகள் கேட்கப் பையன் தொடங்கி விட்டான். கடவுளே இல்லையாமே, கடவுள் என்பதே கட்டுக்கதை என்கிறார்களே, கடவுள் என்பது சுத்த மோசடியாமே, சமயக் கதைகளெல்லாம் ஒரே புளுகு மூட்டையில்லையா, அறிவியலை நம்பினால் கடவுளை நம்ப இடமே இல்லையாமே என்றெல்லாம் பல கேள்விகளைப் போட்டு என்னைத் தொளைத்து விட்டான். நானே இந்த ஐயங்களால் திணறிப் போனேன். கடவுளை யாராவது கண்டதுண்டா? கண்டிருந்தால் அது உரு வெளி மயக்கமாய்த்தான் இருக்கும். அல்லது கடவுளின் இலக்கணப்படி அது கடவுளாயிருக்க முடியாது. கலப்பற்ற நிர்க்குணப்பிரம்மமே கடவுள் என்கிறார்கள், அப்படியென்றால் அந்தக் கடவுளால் நமக்கென்ன பயன்? கடவுள் என்ற பெருங்கடலில் நாமெல்லாம் நீர்க்குமிழிகளா? அல்லது தனித் தனி ஜீவன்களா? எல்லாம் பழைய பெரியவர்கள் செய்த விசாரணைகள்தான். என் புதிய சிந்தனை ஒன்றுமில்லை. ஆனாலும் எண்ண எண்ண மனத்தைக் குழப்புகிறது. பையனின் மூட்டைப் பூச்சிக் கேள்விகள் இப்படித் தத்துவ
விசாரணையில் என்னை இறக்கி விட்டன.

என்ன தத்துவ சிந்தனை செய்தாலென்ன? உருவக் கடவுள் இருக்க முடியாது; அருவக் கடவுளை மனனம் செய்ய முடியவில்லை. ஆகவே வாழ்வுத் தொல்லைகளில் விளைவான மனச் சங்கடங்களிலிருந்து விடுபட உருவக் கடவுள்தான் வேண்டியிருக்கிறது. நம்பாவிட்டாலும் உருவக் கடவுளையே தியானிக்கிறேன். அதுதான் , திருப்தியில்லாவிட்டாலும், ஏதோ ஆறுதல் தருகிறது. அது என்னவானாலும் சரி; கடைசியில், ‘யார் என்ன சொன்னாலும் சரி;
என்ன நினைத்தாலும் சரி; கடவுள் இருக்கத்தான் இருக்கிறார்’ என்று பையனிடம் அடித்துச் சொன்னேன்.

‘அப்படியானால் அவருக்கு அறிவு உண்டா? மனிதனைப் படைத்து, அவனுடைய ரத்தத்தை நீ குடி’ என்று மூட்டைப் பூச்சிக்கு ஏன் வரம் கொடுத்தார்?’

பையன் கேட்டது சரியான கேள்வி. என்னால் ஏற்ற பதில் சொல்ல முடியவில்லை. என்னவோ மழுப்பினேன்.

அடுத்து அவன் சொன்னது என்னைத் திடுக்கிட வைத்தது. ‘நான் கடவுளாயிருந்தால் என்ன செய்திருப்பேன் தெரியுமா?’ என்றான்.

‘என்ன செய்திருப்பாய்?’

‘மனிதனையும் படைத்திருக்க மாட்டேன்; மூட்டைப் பூச்சியையும் படைத்திருக்க மாட்டேன்.’

‘சரி. சரி; மகா புத்திசாலி. பாடத்தைப் படி. இல்லாவிட்டால் உதைப்பேன்’

பையன் ஓய்ந்து விட்டான். ஆனால் படிக்கவில்லை.

‘படிடா’

‘என்ன படிப்பது?’

‘இங்கிலீஷ் படி; தமிழ் படி.’

‘இரண்டு பரீட்சையும் ஆகிவிட்டது’.

‘நாளைக்கு என்ன பரீட்சையோ?’

‘கணக்கு’

‘கணக்குப் புத்தகத்தை வைத்துக்கொண்டு கணக்கைப் போடு.’

கணக்குப் புத்தகத்தை அவன் எடுத்துப் பிரித்தான். ஆனால், கணக்குப் போடுவதாகத் தெரியவில்லை. கன்னத்தில் கை வைத்துக்கொண்டு புத்தக
ஏடுகளைப் புரட்டியபடி ஏதோ ஆழ்ந்த யோசனை செய்யலானான். ‘எக்கேடு கெட்டுப் போகட்டும்’ என்று அதோடு விட்டுவிட்டு என் ஜோலிகளை
கவனிக்கத் தொடங்கினேன்.

அதன்பின் சில நாள் ஆயின. கடவுளையும் மூட்டைப் பூச்சியையும் பையன் மறக்கவேயில்லை. அதே சிந்தனையாயிருந்திருக்கிறான். பரீட்சை எல்லாம் முடிந்து விட்டது.

‘எல்லாப் பரீட்சையும் தீர்ந்தது’ என்று உற்சாகமாய்ச் சொன்னான்.

‘எல்லாம் சுழிதானே?’

‘படிக்குப் பாதி மார்க் வரும்.’

‘பார்க்கலாம். இதுவரையில் வந்ததில்லை.’

‘இந்தத் தடவை வருகிறது பார், என்ன பந்தயம்? வந்தால் பதினைந்து பைசா தருவாயா?’

‘வந்தால் நான் தருகிறேன். வராவிட்டால் நீ தரவேண்டும்.’

‘நான் எங்கேயிருந்து தருவேன். நானா சம்பாதிக்கிறேன்?’

இதேபோல் கொஞ்சநேரம் சம்வாதம்; பிறகு பழைய மூட்டைப் பூச்சியைத் தொடர்ந்தான் பையன்.

‘ஏன் தாத்தா, இந்த மூட்டைப் பூச்சிக்கு எத்தனை கால்?’

‘தெரியாது, நான் எண்ணவில்லை.’

‘மனிதனுக்கு இரண்டு கால், மாட்டுக்கு நாலு கால், ஈக்கு ஆறு கால், சிலந்திக்கு எட்டு கால்..’



‘பூரானுக்கு ஆயிரங்கால். ஆதிசேஷனுக்கு ஆயிரந் தலை; காலே இல்லை.’

‘சரி தாத்தா, மூட்டைப் பூச்சிக்கு இரண்டாயிரம் காலா?’

‘துளியூண்டு மூட்டைப் பூச்சிக்கு எப்படி இரண்டாயிரம் கால் இருக்க முடியும்?’

‘பின்னே எத்தனை கால்தான்? சொல்லேன்.’

‘உன் சின்னம்மாவைக் கேட்டுப் பார். தெரியலாம். அவள்தான் பூதக் கண்ணாடியை வைத்துக்கொண்டு மூட்டைப் பூச்சியின் மேல் பிடித்து அதை ஆராய்கிறாள்.’

‘அவள் கொலைகாரி. சூரிய வெயிலில் பூதக்கண்ணாடிகொண்டு அதைத் துடிதுடிக்கச் செய்து அதைக் கொல்லுவாள். நான் கேட்டால், சொல்ல மாட்டாள். என்னை அடிப்பாள்.’

‘மூட்டைப் பூச்சிக்கு எத்தனை கால் இருந்தால் உனக்கென்ன? உனக்கு இந்தச் சந்தேகம் ஏன் வந்தது?’

‘ராத்திரி தாங்க முடியாமல் கடிக்கிறது. விளக்கைப் போடுவதற்குமுன் அதிவேகமாய் ஓடி மாயமாய் மறைந்துவிடுகிறதே, அது எப்படி?’



ஆமாம், உண்மை. பையன் சொல்வது உண்மை. கடவுளைப் போல் மூட்டைப் பூச்சி அந்தர்த்தானம் ஆகி விடுகிறது. ஒன்றோ இரண்டோ மட்டுமே கண்ணில் படும். மற்றவை எல்லாம் போன இடம் தெரியாமல் போய்ப் பதுங்கி விடுகின்றன. கண்ணில் பட்ட ஒன்றிரண்டும் கூடக் கையில் பிடிபடாமல் ஓடித் தப்பி விடுகின்றன. அடுத்து விளக்கை அணைத்தால் போதும். முலு முலு என்று ஒரு பெரிய பட்டாளமே வந்து சுள்சுள் என்று பிடுங்குகின்றன. இந்த மூட்டைப் பூச்சிக்குதான் எவ்வளவு சாமர்த்தியம்! இது பதுங்காத இடமில்லை. மேஜை, நாற்காலி, புத்தகங்கள், சுவர் வளைவுகள், கதவிடுக்கு, சுதிப்பெட்டி, பாய், படுக்கை எங்கும் சர்வ வியாபியாய் ஒளிந்து கொள்கிறது. இதை நினைக்கும்போது ஆயிரம் சந்தேகங்கள் தோன்றின. இதற்கு அறிவு உண்டா? எல்லாம் உள் உணர்வுதானா? வெளிச்சத்தைக் கண்டால் இதற்குக் கண் கூசுமா? கண்தான் உண்டா? இந்திரனைப்போல் உடம்பெல்லாம் கண்ணா? மாட்டு வண்டியைவிடக் குதிரைவண்டி வேகம்; குதிரைவண்டியைவிட ரெயில்வண்டி, மோட்டார்கார் இவை வேகம். ஏரோபிளேன் அதைவிட
வேகம். ஜெட்பிளேன் மேலும் வேகம்; காற்று இன்னும் வேகம்; வாயுவேக மனோவேகம் என்று எல்லாவற்றையும்விடப் பெரும் வேகத்தைச்
சொல்வார்கள். என்னைக்கேட்டால் மூட்டைப் பூச்சியின் வேகத்தைத்தான் இணையற்றதாக்ச் சொல்வேன். இந்தப் பூச்சியைப் பற்றி எந்த உயிரியல்
நிபுணராவது ஆராய்ச்சி செய்திருக்கிறாரா? ஒருநாளில் நூற்றுக்கணக்கான் மூட்டைப்பூச்சிகளைக் கொல்கிறோம்.; மறுநாளூம் அதற்குமேல் பூச்சிகள்
வந்து பிடுங்குகின்றன. யாரோ ஒரு அசுரனின் ரத்தத்தைச் சிந்தினால் அத்தனை சொட்டு ரத்தத்திலிருந்தும் புதிய அசுரர்கள் தோன்றுவார்களாம். இந்த மூட்டைப்பூச்சியும் சாகச்சாக புதிய மூட்டைப்பூச்சிகள் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. இதுவும் அந்த அசுரப் பிறவியா? அவனைப்போல் வரம் வாங்கி வந்ததா? மூட்டைப் பூச்சியில் ஆண், பெண் உண்டா? பிரதம மந்திரி தொடங்கி எல்லாரும் குடும்பக்கட்டுப்பாட்டுப் பிரசாரம் புரிகிறார்கள். மூட்டைப் பூச்சிக்கு இந்தப் பிரசாரம் செய்வோர் யாராவது உண்டா? இதற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாதா? கொசுவைக்கூட உலகெங்கும் ஒழித்துவிடப் போவதாக ஐ.நா. நிபுணர்கள் சொல்கிறார்கள்.; இந்த மூட்டைப் பூச்சியை ஒழிக்கும் முயற்சியில் யாருமே இறங்கவில்லையே, ஏன்? இந்த மூட்டைப்பூச்சியின் விஷயம் அத்தனையும் பெரிய புதிராய்த்தான் இருக்கிறது. கடவுளின் விஷயம் எவ்வளவு பெரிய புதிரோ அவ்வளவு பெரியது இந்தப் புதிரும். கடவுளைப் பற்றி ஆராய்வோரெல்லாம் இனி இந்த மூட்டைப்பூச்சியைப் பற்றியும் ஆராய்ந்தாக வேண்டும். இல்லையேல் எங்கள் வீட்டுப் பையனின் கேள்விகளுக்கு யாருமே பதில் சொல்ல முடியாது. முடியுமென்று யாராவது சொன்னால் முடியாதென்று நான் சவால் விடத் தயார். கடவுள்
உண்டு என்று சொல்வோருக்கு மட்டும் அல்ல; இல்லையென்று சொல்வோருக்கும் கூடத்தான் இந்தச் சவால்.

நன்றி : தாஜ்
தி.ஜ.ர. By சாரு நிவேதிதா First Published : 05 April 2015 10:00 AM IST ஒரு கர்ம யோகி தன்னை எப்போதும் முன்னிறுத்திக் கொள்வதில்லை. அதனாலேயே ஒரு சமூகம் அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்றால் அந்தச் சமூகம் பற்றி என்ன சொல்வது? இங்கே நாம் பார்க்கப்போகும் அத்தகைய ஒரு கர்ம யோகி, தி.ஜ.ர. (திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன்). 1901-ல், திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூரில் பிறப்பு. பள்ளிப் படிப்பு நான்காம் வகுப்பு வரைதான். ஆனாலும், தன் சுய முயற்சியினால் உலக சரித்திரம், விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார். ஒரு சமயம், ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் தலையங்கம்கூட எழுதினார். 1974-ல், காலமாகும் வரை சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம் என்று பல்வேறு துறைகளில் சுமார் 50 புத்தகங்கள் எழுதினார். 1938-ல் சந்தனக் காவடி என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. 1947-க்குள் நான்கு பதிப்புகள் வெளிவந்தது அத்தொகுப்பு. பிறகு விசை வாத்து, மஞ்சள் துணி, காளி தரிசனம், நொண்டிக் கிளி என்று பல சிறுகதைத் தொகுப்புகள் வந்தன. சுமார் நூறு சிறுகதைகள் எழுதியிருப்பார். மொழிபெயர்ப்பில் முக்கியமானவை - லூயி பிஷர் எழுதிய மகாத்மா காந்தி (600 பக்கங்களுக்கு மேற்பட்டது), ஆலிஸின் அற்புத உலகம், Wendell Willkie எழுதிய புகழ் பெற்ற பயண நூலான One World (இதை ஒரே உலகம் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்), ராஜாஜி சிறையில் இருக்கும்போது எழுதிய அபேதவாதம் என்ற ஆங்கில நூல், ஜிம் கார்பெட் எழுதிய குமாயுன் புலிகள். தமிழில் கட்டுரை என்ற வடிவத்தின் பிதாமகர்களாக இருந்தவர்கள், இரட்டையர் என்று அழைக்கப்பட்ட வ.ரா.வும் தி.ஜ.ர.வும்தான். அந்த இருவரிலும் தி.ஜ.ர.வின் பங்களிப்பு அதிகம் என்றே சொல்லலாம். காரணம், கண்ணதாசன் தன்னுடைய உரைநடைக்கு முன்னோடி என்று வனவாசத்தில் தி.ஜ.ர.வின் ஆஹா, ஊஹூ என்ற கட்டுரைத் தொகுப்பைக் குறிப்பிடுகிறார். ஜெயகாந்தன் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு வாங்கிய முன்னுரை தி.ஜ.ர.விடம் இருந்துதான். இவை தவிர, தமிழ்ப் பத்திரிகைத் துறையின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கத்தின் ஊழியனில் வ.ரா.வுடன் பணியாற்றினார். Time பத்திரிகையை மாதிரியாகக் கொண்டு, 1939-ல் வைகோ என்று அப்போது அழைக்கப்பட்ட வை.கோவிந்தன் துவக்கிய ‘சக்தி’ இதழின் ஆசிரியராக இருந்தார். திரு.வி.க.வின் நவசக்தி, ஜயபாரதி, சுதந்திரச் சங்கு, ஹனுமான், தமிழ்நாடு, சமரச போதினி, பாப்பா போன்ற பல இதழ்களில் பணியாற்றினார். அவர் ஆசிரியராக இருந்தபோது எழுதிய தலையங்கங்கள், புத்தகமாகத் தொகுக்கப்பட வேண்டிய அளவுக்கு முக்கியமானவை. பின்னர் கடைசியாக, தமிழின் ரீடர்ஸ் டைஜெஸ்ட் என்று கருதப்பட்ட மஞ்சரி பத்திரிகையில், 22 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். அந்த 22 ஆண்டுகளிலும், மஞ்சரியின் ஒவ்வொரு இதழிலும் முக்கியமான புத்தகங்களின் சுருக்கத்தை “புத்தகச் சுருக்கம்” என்ற பகுதியாகக் கொண்டு வந்தார். (அதில் ஒன்று, நீட்ஷேவின் Thus Spake Zarathustra!). இது தவிர, பாப்பாவுக்கு காந்தி, பாப்பாவுக்கு பாரதி என்று பல நூல்களை எழுதி, குழந்தை இலக்கியத்தின் முன்னோடியாகவும் விளங்கினார். இதற்கிடையில், மகாத்மாவின் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்கும் சென்று வந்தார். இப்படி 74 ஆண்டுகள் தன் வாழ்வை தமிழுக்காக அர்ப்பணித்துக்கொண்ட கர்மயோகியான தி.ஜ.ர. என்ற பெயர்கூட இன்று நம்மில் பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. தி.ஜ.ர. என்றால் தி.ஜானகிராமனா என்று கேட்கிறார்கள் பலர். இதுபற்றி மிக வருந்தி எழுதியிருக்கிறார், தி.ஜ.ர.வின் நீண்ட நாள் நண்பரான மலர் மன்னன். சுதந்தரப் போராட்ட தியாகிகளுக்குக் கொடுத்த நிலத்தையும் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்ட தி.ஜ.ர.வின் கடைசிக் காலம், மிகவும் வறுமையில் கழிந்தது. நம்முடைய வரலாற்று உணர்வுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால், தனது 74 வயது வரை இந்த தேசத்துக்காகவும் மொழிக்காகவும் உழைத்த அந்தச் சாதனையாளரின் புகைப்படம் நம்மிடம் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. இன்னொரு புகைப்படம் 1973-ல் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது. ஃப்ரான்ஸில் ஒவ்வொரு வீதியிலும் ‘எழுத்தாளர்களை வணங்குகிறோம்’ என்ற வாக்கியத்தை எழுதி வைத்திருப்பார்கள். அதுபோல், தி.ஜ.ர.வின் இலக்கிய சாதனையைக் கருதி அரசு எடுத்த புகைப்படமா அது? அல்ல. ஹிட்லரின் வதைமுகாம்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையோ அல்லது கைகளில் கைதி எண்ணை தெரிவிக்கும் சிலேட்டை பிடித்தபடி நிற்கும் கைதிகளின் புகைப்படங்களையோ பார்த்திருப்பீர்கள். அதே போன்றதொரு புகைப்படம் அது. வறுமையின் கோரம் தாங்கிய 73 வயது முதியவர் ஒருவர். அவரைச் சுற்றி அதே கோலத்துடன் அவரது உறவினர்கள். முதியவர் ஒரு சிலேட்டை இரண்டு கைகளாலும் உயர்த்திப் பிடித்திருக்கிறார். அதில் ஆண்டிமான்ய தோட்டம் 98 என்றும், அடுத்த வரியில் 156698 என்றும் சாக்பீஸால் எழுதியிருக்கிறது. அரசின் அலுவலகக் கோப்புக்காக எடுத்த படம். அந்தப் புகைப்படத்தில் உள்ள முதியவர்தான் தி.ஜ.ர. அந்தப் புகைப்படம் பற்றி தி.ஜ.ர.வின் பேத்தி கூறுகிறார் – ‘அவரோட கடைசிக் காலத்துல மந்தவெளி குடிசை மாற்று வாரியத்துல அவருக்கு வீடு ஒதுக்கினாங்க. அங்க நாங்க போறப்ப, எங்க எல்லாரையும் நிக்கவெச்சி படம் எடுத்தாங்க. தாத்தா கைல ஒரு சிலேட்டை கொடுத்து, அதைத் தூக்கிப் பிடிக்கச் சொன்னாங்க. அதுல, அவருக்குன்னு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டோட விலாசம் சாக்பீஸ்ல எழுதியிருந்தது. எப்ப அந்த ஃபோட்டோவை பார்த்தாலும் கண்ணுலேருந்து ரத்தமா வரும். எப்பேர்ப்பட்ட மனுஷன்... கைல சிலேட்டை தூக்கிப் பிடிச்சுகிட்டு...’ பல்வேறு துறைகளில் சுமார் 60 ஆண்டுகள் எழுதிய (தி.ஜ.ர.வின் முதல் படைப்பு, அவரது 15-வது வயதிலேயே வந்துவிட்டது) ஒரு ஆளுமை பற்றி ஒரு சிறிய அறிமுகக் கட்டுரையில் எவ்வளவு எழுதிவிட முடியும் என்பதால், தி.ஜ.ர.வின் சிறுகதைகளில் மட்டும் ஒன்றிரண்டைப் பார்ப்போம். தமிழ்ச் சிறுகதை என்றால் அதன் பட்டியல் மௌனி, புதுமைப்பித்தன், கு.ப.ரா. என்றுதான் போகுமே தவிர, ஒருபோதும் அதில் நான் தி.ஜ.ர.வின் பெயரைக் கண்டதில்லை. ஒரு சாதனையாளர், தன்னடக்கத்தின் காரணமாகத் தன்னை ஒரு சாதாரணன் என்று சொல்லிக்கொண்டால், நாமும் அவரை அப்படியே கருதி அவர் பெயரை அழித்துவிடல் தகுமா? அவர் கதைகளைப் படித்தபோது, அவை நம் சிறுகதைச் சிற்பிகளின் கதைகளுக்குக் கிஞ்சித்தும் குறைவானதாக இல்லை என்பதோடு, மரத்தடிக் கடவுள், பெட்டி வண்டி, பொம்மை யானை போன்ற கதைகள், உலகின் மிகச் சிறந்த கதைகளுக்கு நிகரானவையாகத் தெரிந்தன. மரத்தடிக் கடவுளின் கதாநாயகன் கடவுள். கடவுள், வழிப்போக்கன் ஒருவனிடம் ஒரு உதவி கேட்கிறார். ‘’வா மகனே, இப்படி வா! அடடா! இந்த மழையிலே இப்படித் தவிக்கிறாயே! பாவம்! ஆமாம், இதுதான் என்ன உக்கிரமான மழை! நகரத்தை நரகமாக்கும் மழை அல்லவா இது? மதுவுண்டு வெறிகொண்டு அடியற்று விழப்போகும் வீரர்கள், ரணகளத்திலே ஆடுவதுபோல ஆடுகின்றன இந்த மரங்களெல்லாம். வானும் மண்ணும் பொரும் போரோ இது? அல்லது பிரளயம்தானா? – இப்படியெல்லாம் நீ அஞ்சுகிறாய் அல்லவா? அல்ல மகனே, அல்ல; இதுதான் தேவர்கள் உலா வரும் நேரம்; விளையாடும் நேரம்; பேசும் நேரம். அதனால்தான், நான் உன்னோடு பேசுகிறேன். ஆம், நான் ஒரு தெய்வம்தான். தெய்வம்தான் உன்னோடு பேசுகிறேன். ஆனால் உலா வந்த தெய்வம் அல்ல; சிறைப்பட்ட தெய்வம்”. இப்படியாகத் தன் கதையைச் சொல்லத் துவங்குகிறது தெய்வம். இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த வேளையில், பக்கத்தில் கிடந்த ஒரு செங்கல்லை எடுத்து அதற்கு வண்ணம் பூசி கடவுளாக்கிவிடுகின்றன. விளையாடி முடித்ததும், அந்தக் ‘கடவுளைத்’ தங்களோடு எடுத்துச் செல்ல பெற்றோர் அனுமதிக்கவில்லை. சாலையோரத்தில் கிடந்த ‘செங்கல் கடவுளை’ நட்டுவைத்து உண்டியல் குலுக்குகிறான் பூசாரி. நல்ல கூட்டம். திருப்தியான வசூல். அப்போது கதையில் ஒரு திருப்பம். தடிகளுடன் சில போலீஸ் ஜவான்கள் வருகிறார்கள். ரஸ்தாவில் போக்குவரத்துக்குக் கேடாக இருப்பதாகச் சொல்லி, கூட்டம் கலைய வேண்டும் என்று கட்டளை போடுகிறார்கள். அந்தக் காலம் கொஞ்சம் பரபரப்பான காலம். அரசியல் பரபரப்பு. போலீஸ்காரர்கள் என்ன செய்தாலும் கேட்பாரில்லை. அவர்கள் அப்போது சர்வாதிகாரிகள். ஜனங்கள் ஓட்டம் எடுத்தார்கள். ஜவான்கள் என்னைத் தூக்கி எறிந்தார்கள். அடப்பாவிகளா! அவர்களுக்குத்தான் என்ன துணிச்சல்! ஆனால், அவர்களை நான் என்ன செய்ய முடியும்? ஜில்லா கலெக்டர் துரை கண்ணைத் திறந்து பார்த்து, அவர்களைத் தண்டிக்கமாட்டாரா என்று பிரார்த்தித்துக்கொண்டே ஆகாயத்தில் பறந்தேன். என் சொந்த பலத்தால் பறக்கவில்லை. ஜவான்களின் புஜபலம் எனக்குள் பொழிந்த சக்தியாலே பறந்தேன். மரத்தடியிலே ஒரு குப்பை முட்டு இருந்தது. கணக்காய் அதைக் குறி பார்த்து வந்து விழுந்தேன். இல்லாவிட்டால், உடைந்து சுக்குநூறாய்ப் போயிருப்பேன். அப்படித்தான் தொலைந்தேனா! பின்னால் இப்படி என் நிம்மதி குலையாமல் தப்பியிருப்பேனே!” “நான் பிறந்து ஐந்தாறு மாதகாலம் ஆகிவிட்டது. நான் எப்படிப் பிறந்தேன்? குழந்தைகளின் நிஷ்களங்கத்திலே பிறந்தேன். படைப்பின் ரகசியமே இதுதான். அறிவாராய்ச்சியிலே படைப்பு எதுவும் நிகழ்வதில்லை. அணுவைப் பிளக்கும் ஆயுதம், விஞ்ஞானியின் கற்பனையிலே பிறக்கிறது. கவிஞனின் கனவிலே பிறக்கிறது கவிதை. பிரம்மத்தின் மாயையிலே பிறக்கிறது பிரபஞ்சம். பக்தன் குழந்தையாகும்போது பிறக்கிறது தெய்வம். குழந்தையின் விளையாட்டே உன்னதமான பக்தி”. மரத்தடிக் கடவுளுக்குப் பூஜை நடக்கிறது. பூசாரியின் உண்டியலும் நிறைகிறது. சில மாதங்கள் கழித்து ஒருநாள், அந்தக் குழந்தைகள் தன் தகப்பனாரோடு அங்கே வரும்போது குழந்தை என் கல்லு, என் சாமி என்று ஓடி வருகிறது. ‘‘பூசாரி முரட்டுத்தனமாகக் குழந்தையைத் தள்ளிவிட்டான். குழந்தை மூர்ச்சித்துவிட்டாள். அந்த அதிர்ச்சியை அவளால் தாங்க முடியவில்லை. அன்றொரு நாள் எனக்கு உயிர் கொடுத்து என்னை விளையாடிக் கொஞ்சிய என் தாய் அவள். அவளுக்கு இப்போது காலை மாலை இருவேளையும் உடுக்கடித்துத் ‘துண்ணூறு’ போட ஆரம்பித்துவிட்டான் பூசாரி. அவனிடமிருந்து குழந்தையைக் காப்பாற்ற ஒரே ஒரு வழிதான் உண்டு. பூசாரியை நான் ஒன்றும் செய்ய முடியாது. என் அருளையே விலைக்கு விற்கும் தரகனை நான் என்ன செய்ய முடியும்? நீ எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும். உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. இப்படியே என்னைப் பெயர்த்தெடு. நேரே கிழக்கே போ. அதோ பார், அங்கே ஆரவாரமாக ஆர்ப்பரித்துப் பொங்கியெழுந்து அலைவீசிக் கொண்டிருக்கிறதே ஆழங்காணாத கருங்கடல். அதன் நடுவே என்னை வீசியெறிந்து விடு. இதுதான் மகனே, நான் உன்னைக் கேட்கும் வரம்”. அடுத்து, பெட்டி வண்டி என்ற சிறுகதை. இதை முப்பதுகளில் எழுதியிருக்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை. தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கிராமம். ஒரு மிராசுதார். படித்தவர். வேதாந்தி. அவருக்கு ரத்தினம் என்று ஒரு நண்பன். வாலிபன். டில்பஹார் தைலம் பூசி வருவான். முடி அதிகம் இல்லாவிட்டாலும், தளுக்காக முடிந்து கொண்டை ஊசி செருகிக்கொள்வான். சில சமயம், பெண்களைப்போல் செருகு கொண்டையும் போட்டுக்கொள்வான். மயிர் பறக்காது. ஆனாலும் அதைப் படியவைக்கும் ‘கமான் வளைவுச் சீப்பு’ அவன் தலையிலே எப்போதும் அலங்காரப் பொருளாய் அமர்ந்திருக்கும். ஒருநாள், தான் செய்த புதிய பெட்டி வண்டியில் தன் மனைவியோடு ஒரு கல்யாணத்துக்குச் செல்கிறார் மிராசுதார். அவருக்கு ஒரே ஒரு குழந்தைதான். ஒரு குழந்தை என்றால் அந்தக் காலத்தில் மலடி என்றே சொல்வார்கள். மிராசுதாரின் மனைவி அழகி. பெண்களைப் பெட்டி வண்டியில் அனுப்பிவிட்டு தான் மட்டும் பின்னால் ஒரு வண்டியில் செல்கிறார் மிராசுதார். பெட்டி வண்டியை ஓட்டுவது ரத்தினம். திடீரென்று அவன் மீது ஒரு பெண்ணின் புஜம் இடிக்கிறது. வண்டி ஓட்டத்தில் தொடர்ந்து இடிக்கிறது. அடுத்து, தி.ஜ.ர. எழுதியதைப்போல் உலக இலக்கியத்திலேயே யாரும் எழுதியதில்லை என்று எனக்குத் தோன்றியது. நான்கே வார்த்தைகள். “கல்யாணச் சந்தடியிலே அது நடந்துவிட்டது”. கதையில் அடுத்து வருவது, கிரேக்கத் துன்பியல் நாடகங்களிலே நடப்பது. படித்துப் பாருங்கள். இப்பேர்ப்பட்ட எழுத்தை படைத்தவரின் பெயர்கூடத் தெரியாமல் இருப்பது நியாயமா? இதை வாசிக்கும் அன்பர்கள், தி.ஜ.ர.வின் நூல்களை வாங்கிப் படியுங்கள்; அன்பளிப்பாகக் கொடுங்கள்; கதை தவிர, நம் அறிவை வளர்த்துக்கொள்ளவும் எத்தனையோ எழுதியிருக்கிறார். குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுங்கள். முக்கியமாக பதிப்பாளர்கள், தி.ஜ.ர.வின் அத்தனை எழுத்தையும் ஒன்று திரட்டிப் பிரசுரியுங்கள். நம் சமூகம் மேன்மையுறும்! தி.ஜ.ர.வின் புகைப்படம் பற்றிய கட்டுரை http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/04/05/தி.ஜ.ர./article2738358.ece</a> http://www.kalachuvadu.com/issue-88/katturai01.asp