Thursday, 22 January 2015

அவன் அவள் - விக்ரமாதித்யன் நம்பி

அவன் அவள் - விக்ரமாதித்யன் நம்பி


எவ்வளவு சொல்லியும் நம்புவதாக இல்லை அவள். 
எந்தவிதத்திலும் சமாதானம் செய்துவிடமுடியாது என்கிற மாதிரி 
பிடிவாதமாக இருந்தாள். 
இப்படி வைராக்யமாக இருக்கிறவளோடு எப்படி வாழமுடியும். 
அன்பான வார்த்தைகளைக் கூட ஆணின் பசப்புமொழிகள் என்பது
போலப் புறக்கணிக்கப் பழகிவிட்டிருந்தாள். 
தொட்டுப் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்து வந்தாள். 
பார்வையை எதிர்கொள்வதை விட்டுவிட்டிருந்தாள். 
இவ்வளவு இறுக்கம் ஒரு பெண்ணுக்கு ஆகாது. 
கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்திருந்த அவநம்பிக்கை 
நாள்பட நாள்படத் திரண்டிருந்த கசப்பு 
சன்னம் சன்னமாகக் குவிந்துபோன வெறுப்பு 
எல்லாம் ஆகக்கூடிப் பாறையாக நின்றன. 
அவள் இக்கதிக்கு ஆனதில் தான்தான் முழுமுதல் காரணகர்த்தா என்ற உறுத்தல் வேறு மனசைக் குடைந்து கொண்டிருந்தது. 
நிவர்த்திக்க வகையறியாது சிந்தை குழம்பியிருந்தான். 
நியாயம் அவள் பக்கம்தான் என்று ஆதியிலிருந்தே உணர்ந்திருந்தான். 
அவள் மனசில் இத்தனை துக்கம் கொண்டிருப்பது தப்பில்லைதான் 
தன்னிடம் அவள் மிகுந்த வன்மத்தோடு இருப்பதில் தவறில்லை 
என்றாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 
பகையாளி போலவேதான் அவள் நடந்துகொண்டாள். 
வெகு கடுமையாக விரோதம் பாராட்டினாள். 
இது இப்படி ஆகியிருக்கக் கூடாது. 
இந்த மாதிரி துரதிர்ஷ்டம் நேரக்கூடாது ஒரு ஆணுக்கு. 
அவள் இப்படிப்பட்ட பெண்ணே இல்லை. 
ஆசையும் பாசமும் கொண்டவள். 
குழந்தைதான். 
கவலை தெரியாத அந்த பச்சைப்பிள்ளை மனசைக் காலம் அழித்துவிட்டதா. 
காற்றுப்போல சுதந்திரமான அவள் குதூகலத்தைக் கொன்றது விதிதான். 
பெண்ணுக்கு மட்டுமேயான அவள் கனவுகள் கருகிப் போயிருக்க வேண்டாம். 
நாளும் அவள் குற்றப்பத்திரிகை வாசிக்கையில் பேதலித்துப் போகிறான் அவன். 
அவளுடைய தொடர்ந்த புகார்களைக் கேட்டுக்கேட்டு கலவரமடைகிறான். 
அவனைச் சுட்டெரிக்கிறது அவள் கோபம். 
அவள் பழிவாங்கிக் கொண்டிருக்கிறாளா. 
உண்மையிலேயே அவன் களைத்துப் போய்விட்டான். 
இந்த யுத்தத்தை நீடிக்கவிடுவது முட்டாள்தனமானது. 
ஆனால் அவள் எதையும் கேட்க சித்தமாயில்லை. 
என்னை விட்டுவிடு என்கிறாள். 
வேண்டாம் இந்த உறவு என்றே சொல்கிறாள். 
நிம்மதியாக இருக்கவிடு போதும் என்று கணக்குத் தீர்க்கிறாள். 
அப்படி என்ன கொடுமை இழைத்துவிட்டோம். 
பெண்தெய்வங்களே பெண்தெய்வங்களே 
பிழை பொறாத பெண்தெய்வங்களே

- விக்ரமாதித்யன் நம்பி