http://nesamithran.blogspot.in/2014/08/blog-post.html
இலவமரம், நிறையக் கண்கள்விட்டு முடைந்த மிகப்பெரிய கோழிப்பஞ்சாரம் போல, தன் நிழலைப் பரப்பி இருந்தது. குளிப்பறையின் கோணிப்படல் திறந்து, இயக்கி வெளியேறுவது கேட்டது. அவன் பீடியை நுனிநெரித்துப் பற்றவைத்தான். அக்கணம் அவள், நிலம்மடிந்து அருவியாகும் ஆற்றிலிருந்து துள்ளிச்சாடி நீருள் மறையும் மீனைப் போல் தோன்றுவாள். எண்ணெய்க் காப்பு உதிரத்துவங்கிய கருஞ்சிலை மாதிரியான உடலை, இதுவரை,சூரியன் பார்த்ததில்லை. கடைசி இழுப்பை நெடியேற இழுத்துவிட்டு வீசும்போது, இசக்கி மயிர்க்கோதியைக் கொண்டு சட் சட்டென ஈரக் கூந்தலை அரப்பும் நீரும் தெறிக்க உலர்த்திக்கொண்டு இருந்தாள். இப்படியான இளவெயில் தருணங்களில், அப்போதுதான் குளித்து முடித்த அவளைப் பார்த்துக்கொண்டு இருக்கும் போது, இவ்வளவு சௌந்தர்யமும் மென்மையும் கொண்ட விரல்களால்தான் மயில்களை விஷம்வைத்துக் கொல்லவும் முடிகிறது என்பது நம்பகத்திற்கு நெருக்கமாய் இல்லைதான்.
நிலாப்பொடித்துப் பூசிய காற்றுச்சிற்பம் மாதிரி பொலிவுசுடரும் அழகு. மானுடப் பரிமாணம் எய்தியபோது, இயற்கை ரோமம் மீதம்வைத்த இடங்கள்தாம் எத்தனை நளினமும் யவ்வனமும் மிளிர்பவை! நாபியில், குளித்த கெண்டைக்கால் படிந்த ஈரக் கருங்கோதல்கள், ரோமக் கோடு பிடரியிலிருந்து இறங்கும் குறுமுகில் ஒத்து காற்றலைபவை - தீபத்திரிகள் காம்பாய்த் தோன்றும் - பித்தமேற்றுபவை! நான்காவது சிவபானச் சிமிட்டியில் உச்சிமயிர் இழுத்துச் சுண்டினாலும் தேள் கொடுக்கு தேகம் ஏறாது. பித்தம், “கொத்து! கொத்து!” என நாக்குநீட்டி உள்ளும் புறமும் அலைந்தது. மஞ்சளேறிய கருத்த உடல் விஷம் முறிய கீரிப்பிள்ளை தேடும் பச்சையம் பிலிற்றும் தாவர நிதம்பம். மிகச்சரியாய், ஒரு பாலூட்டும் மீனின் பிரசவக் காட்சியொத்து உப்பில் விழிக்கிறதொரு புதிய உயிர்போல் காமத்தின் உயிர் உந்தம். இசக்கி திரள்பவற்றின் வாசம் உணர்ந்தாள்.
எங்கோ தூரத்தில் மாரிமேகங்கள் அந்திநேரத்தின் மேய்ச்சல்நிலம் கடந்த ஆநிரைகளாய் மலையிறங்கிக் கொண்டிருந்தன. ஒரு மந்த மாருதத்திற்கு கதவின் கீல் க்றீச்சிட்டு மெதுவாய்ச் சார்த்திக் கொண்டது. மூச்சுத் தொடும் தூரத்தில் நின்றிருந்தான். தீண்டலுக்கு முந்தைய கணம் அப்படித் தவித்திருப்பது, சூறைக் காற்றைச் சூலுறுவது; தார்ச்சாலையில் ஒரு தவறிய லாடத்தைக் கொதிக்கக் கொதிக்கத் தப்பிதமாய் மிதிக்க நேர்வது. தழுவினான். பிடரி மயிரில் மூச்சு ஊர்ந்தது. பனித்துருவத்தின் மீது பெய்யும் மழைக்கு நிலம் தன்னைத் திறந்து கொடுத்தது. சன்னதம் வந்தவர்களின் உடல்போல் முறுக்கேறி அவனை இறுக்கி முத்தினாள். அவன் இதயம் பதற்றத்தில் நடுங்கியதாய் அடித்துக்கொண்டது. உள்ளங்கையில் ஈரம் உணர்ந்தான். கஸ்தூரி மஞ்சள் கணு துளிர்க்கும் பருவத்தை உணர வாய்த்தல் அந்தரங்கமானது. வெளியே, மயில் அகவியது. பிரார்த்தித்தான். கூதிர்காற்று வீசியது. கலாபம் விரித்து ஆடிக்கொண்டிருக்க வேண்டும்.
மலைப்பாம்பு தன் இரையை நெரிப்பது தோற்கும் விதமாய் நரம்புகள் புடைக்க, உடல் திரண்டு, ஹஹ்ஹஹ்ஹஹேய் என்ற பெரும் சப்தமெழ அவனை நெஞ்சில் உதைத்தாள். கட்டிலில் இருந்து தூரப் போய்ச் சுவரில் மோதி விழுந்தான். உணர்வு மிகுந்த கணங்களில், எல்லா எச்சரிக்கை உணர்வுகளும் தூர்ந்துபோய் விடுகின்றன. புடவை தொடைவரை ஏறி விழுந்திருந்தது. இன்றும், எப்போதும்போல், அவ்விதமே நிகழ்ந்தது. அவளை ஏறிட்டுப் பார்த்தான். இசக்கியின் விழிகள், இமைகளில் பாதி ஏறினவாய், எங்கோ வெறித்தபடி இருந்தன. அவனுக்குத் தெரியும், இவள் பிறிதொருத்தி; சற்றுமுன் பார்த்த சௌந்தர்யை அல்ல. ஒரு சொல்லும் பேசாமல் எழுந்து வெளியேறினான். அவள், இன்னும் பெருமூச்செறிந்தபடி, கொக்கிகள் திறந்த ரவிக்கையோடு கிடந்தாள். ஒற்றை மார்பின்மேல் படிந்தும் மற்றொரு புறத்திலிருந்து தளர்ந்து நழுவியும் கிடந்தது அந்தச் சிவப்புநிற மேலாடை.
தீக்குச்சி தீர்ந்துவிட்டதைக் கவனிக்கவில்லை. தலைப்பாகையைக் கட்டியபடி உணவுக் கலத்தைக் கைப்பற்றினான். தொரட்டிக் கம்பை எடுத்துக் கொண்டு, வேலிப் படலைத் திறந்து, ஆடுகளை மேய்ச்சல் காட்டை நோக்கி ஓட்டினான். ஆடுகள் நிலமடைந்ததும் மெல்ல நிலை அடைந்தன. ஆறு சுழித்து நுரையற்று நகர்ந்துகொண்டு இருந்தது. அந்த நிமிஷம், பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சாடிக் குதித்து, எதிர்த்திசையில் வெகுதூரம் நீந்த வேண்டும் போல் தினவாய் இருந்தது. நீளமான எட்டுகளுடன் ஆற்றுப்பக்கம் நடந்தான். இசக்கி இன்னும் சற்று நேரத்தில், எப்படியும், களையெடுக்கப் புன்செய் நிலம் ஏகுவாள். இன்று, மயில்களுக்குச் சோளத்தில் விஷம் கலப்பாள் என்றும் தோன்றிற்று.
மயில்களின் கலாபம் இன்னும் தாழவில்லை. நட்சத்திரங்கள் தெளித்த கடல் சிலிர்த்து அசைவது போல எத்தகைய எழில் பிலிற்றும் காட்சி! முன்னர் தென் தமிழ் நிலப்பரப்பில் நாகர்கள் சர்ப்பங்களை வழிபட்டது போலவே ஜடாப்பு மலைவாசிகளின் ஆதிப்பிரிவான ‘கொண்டு’ இன மக்கள் மயில்களை வணங்கினார்கள். மாட்டிறைச்சியும் கள்ளும் அவர்கள் உணவாய் இருந்தது என்பது கேள்வி ஞானம். வையாவி மயிலின் காலில் நாகம் மிதிபட்டிருக்கும் கடம்பர் சித்திரம் ஒரு குற்றஞாபகம். எப்போதும் மயில் ஒரு தேசத்தின் பெருமிதம். அறிவிக்கப்பட்ட சின்னம். பேராண்மை என்ற சொல்லுக்கு மிகப் பொருத்தமான பேரெழில்.
அந்தப் பின்மதியம் நன்றாய் நினைவிருக்கிறது. பொய்மான்கரட்டில் வைத்துதான் பிரேதத்தைக் கண்டார்கள். நல்ல கரண்டை கரண்டையான உடற்கட்டு. காய்த்துப் போன உள்ளங்கை. வனமெங்கும் நடந்து நடந்து இறுகிப்போன கெண்டைக்கால். இறுதியான வளைந்த விரல் வரிசை. காலவரிசை தப்பிய தழும்புகளோடான நெஞ்சுக்கூடு. ஒரு கண் அருகே ஆழமான கீறல். தலையில் ஒரு பிளவு. மிகச் சிறந்த ஆயுததாரிக்கு உரிய சகல வடுக்களும் தசை முறுக்கும் கொண்ட திரேகம் அது. ஒரு வேட்டைக்கரனைப் போல் வனபரிச்சயம் கொண்ட பாதங்களில் செவ்வரிகள் ஓடி இருந்தன. அது அவர்தான் என்று நம்பவே பலருக்கு மாதக்கணக்காயிற்று. அது எப்போதும் போல் ஒரு வதந்தியாக இருந்துவிடாதா என்று ஏங்கினவர்களில் இவனும் ஒருவன். ஆனால் அது கனவல்ல. எல்லாம் முடிந்த பிறகு குளிப்பாட்டும் போதுதான் அவர்கள் அதைப் பார்த்தார்கள். ஆம், இடதுநெஞ்சில், ‘இசக்கி’ என்று பச்சை குத்தியிருந்தது.
அவரது சரித்திரத்தின் மர்மப் பக்கங்களில் இதுவரை அறியாத காதை அப் பெயர். இசக்கி...
அது அவள்தான் என்று அறிந்த கணம் இவனுக்குத் தாளவே இயலாமற் போனது. அவரா, அதுவும் இவளோடா? ஆனால் அவருக்கு உயிராய் இருந்திருக்கிறாள். இவளின் ஆத்துமாவாய் அவர் இல்லாமற் போயிருந்தால் பச்சை குத்தி வைக்கும் அளவு இருக்குமா? ‘கி’யின் சுழியில் ஒரு சர்ப்பம் படம் விரித்து நெளிந்துகொண்டு இருந்தது. நாகவம்சம், ஆம் அதுதான் பிணைத்திருக்க வேண்டும் இருவரையும். எனில் இவள் நெஞ்சிலும் மீதம் எழுதி இருக்க வேண்டும். இல்லை, பெண்கள் பெரிதும் தோள்பட்டையில் வங்கி சூடும் இடத்திற்குச் சற்று மேல் குத்துகிறவர்கள். இல்லை, மதுரை வீதிகளில் வில்லிப்புத்தூரின் ‘மஞ்சப்பூ’ தெரு இன்னும் சில நாட்டியப் பெண்டிர் நெஞ்சிலும் எழுதுவதாய்க் கேள்வியுற்று இருக்கிறான்.
எதிரிகள் அவரைக் கொடூரமாய் வதைத்துக் கொன்றிருக்க வேண்டும். அவரது கூட்டாளிகளுக்கும் அதுவே நேர்ந்திருக்க வேண்டும். இல்லை, இறந்த உடல்களிடையே இன்னுமோர் உடலாய்த்தான் அவரைக் கண்டதாய்ச் சொன்னார்கள். சாட்சி சொல்ல கருணை மிகுந்த நீதிமான் ஒருவனும் அவர்களுள் இருந்தான். அவர் அறிந்தே இம் முடிவை எய்தினாற்போல் இருந்தது.
இயக்கி இதை எதிர்பார்க்கவே இல்லை. எதிரிகளின் எக்காளம் திசைகிழித்து கடம்பவனத்தில் இருந்து பட்டினம் பட்டினமாய்ப் பரவியது. அவர் நிலம் சிதைந்தது. நதிகள் கரித்தன. நம்பிக்கைகள் தேசம் கடந்தன. இத்தனைக்கும் இடையே, இயக்கியைத் தேடி அலைந்ததொரு குழாம். பஃறுளியாற்றின் மதுரவாசம் வீசும் கூந்தலுடைய அவளைக் கண்டவர் விண்டிலர். அவள் இவரது பிள்ளையைச் சுமந்திருக்கக் கூடும் என்ற ஐயம் அவர்கள் உடலெங்கும் பசலையெனப் படர்ந்து கரித்தது.
இயக்கி வன்னிமரத் தோப்பு வெளியில் அந்நாட்களில் மறைந்து திரிந்ததாகச் சொன்னார்கள். இவன் அவள் குறித்த சேதிக்கு எதையும் தரச் சித்தமாய் இருந்தான். அவள் மேல் பித்தேறித் திரிந்தவர்களில் இவனும் ஒருவன். அவள் இவனைப் பால்யத்தில் இருந்து பற்றியவளாய் இருந்தாள். இவனுக்கு இருந்தது வெறும் உணர்வெழுச்சி என்று இவனே நம்பிய காலம் ஒன்று இருந்தது. பின்னர் கால்சதம் பிறைகளுக்கு அப்பால் சண்முகநதிக் கரையில் அவளைப்போல் யாரோ இருந்ததாக வணிகர்கள் சொன்னபோது ஊர் அவளைப் பைத்தியமாக்கி இருந்தது. இவன் பயணமானான். ஒரு கேரள வைத்தியனின் காட்டுக் குடிசையில் அவளைப் பார்த்தபோது, முற்றும் உருக்குலைந்து போயிருந்தாள். அவளுக்கு மனித அடையாளம் தெரிய ஆறு மாதம் ஆனது. அவள் கூந்தல் வளரத்துவங்கி இருந்தது. நகரமும் இயல்புக்குத் திரும்பத் துவங்கி இருந்தது. ஆம், அவள் தேகம் பிறைந்த நாளில் அந் நகரும் கொஞ்சம் கரிந்தது.
நினைவு கலைக்கும் சப்தம் தலைக்குமேல் கேட்டதும் நதியின் மேல்தளம் அடைந்தான். நீருள் இருந்து தலை உயர்த்தியபோது வெளியே மழை தூறுவதை உணர்ந்தான். கரையோரம் இரண்டு ஆமைக் குஞ்சுகள் பாறையிடுக்குள் புகுந்தன.
இயக்கி ஒவ்வொருமுறை கலவியில் ஈடுபடும் போதும் உடல் முறுக்குவதும், சன்னதம் வந்தாற்போல் முருகு எய்துவதும், சர்ப்பம்போல் தேகம் நெளிவதும், உடல் வெப்பம் அடைந்ததும் அவளுக்கு உடல் எரிந்த அத் துர்நினைவு அவளைப் பேயாய் அழுத்துவதும் நினைக்கவே அச்சமூட்டின. அவளுக்குத் தன் உடல் ஓர் அந்நிய நிலம் என்று தோன்றத் துவங்கிச் சில நாட்கள் ஆகின்றன.
இயக்கி அவருக்குப் பிறகான பெயர்வின் பின்னர், தன்னோடு வாழத் துவங்கின நாளில் இருந்தே, அந்த தாமரை இலைத் தன்மை உணர வாய்த்த ஒன்றுதான். ஒரு புலம்பெயர்ந்த தேசத்தின் மொழியை உணர்வது ஒரு உடல் வாசனைக்குப் பழகுவது. அம் மண்ணுக்கு இரைப்பை பழகுவதும் கருப்பை பழகுவதும் பெரிதல்ல, மனதின் வேரோ திரும்பவியலாத கண்டத்தில் அல்லவோ கண்ணறியாமல் இழையாடும்? சாலமன் மீன்களின் மரணம் இயற்கையின் மாபெரும் சடங்கு.
ஒவ்வொரு ஆண்மயில் சாகும்போதும் ஓர் இறகை நினைவாய் எடுத்துவைப்பாள். சேமித்தவற்றை ஒரு பெரிய சாமரம் போல் 7 வரிசைகள் அடுக்கி விசிறிக் கோர்த்துக்கொண்டு வருகிறாள். அவ் வரிசையை முழுமை செய்ய 96 இறகுகள் வேண்டும்போல் இருந்தது. ஈற்றற்ற பாகத்தைப் பௌர்ணமி இரவுகளில், கலவி தோற்ற இரவுகளில் விசிறியபடி கிடப்பதைப் பார்த்திருக்கிறான். குழல் உலர்த்துகையில் ஒருபுறம் அவள் தோற்றம் தன்னுடலில் மங்கை கொண்ட தெய்வத்தைப் போல் தோன்றியதுண்டு. இவள் உடலில் ‘அவர்’ தன் மரணத்திற்குப் பிறகு தன்னைப் பிணைத்துக்கொண்ட பாவனை கலந்திருந்தது.
இயக்கி சுள்ளி பொறுக்க, பலா அரிந்து வரவென சதா வனம் அலைபவள். பவளப் பரல்கள் ஊர்வது போல் மரவட்டைகள் தம் ஆயிரம் செம்புள்ளிக் கால்களால் நடைபயிலும், பாசித் தாடி முளைத்த, வனத்தின் நாபிக்கொடி வாசத்தில் வளர்ந்தவள். அரவம் கேட்டதும் கிளைதோறும் மந்திகள் தாவுவதும், உச்சிக்கொம்பில் அமர்ந்து மழைச்சொல்லிப் பறவைகள் கடத்துவதுமான சமிக்ஞைக் குறிப்புகள் இவளை வரவேற்கும். ஒரு புயல்நாளில் பெருங்காற்றில் காட்டின் ஆனந்தத் தாண்டவம் கண்டு நாடி ஒடுங்கி, கிழமரத்தின் பொக்கைவாய்ப் பொந்தில் ஒதுங்கிய நாளில், ஒரு மான் பிரசவிப்பதைப் பார்த்தாள். அந்தத் தாய்மானின் கண்கள்... வெகுநாட்களாய் அவளைக் குழையவைத்த அதன் பார்வை... தானே பிரசவித்த உணர்வோடு சில நாட்களுக்குத் திரிந்தாள். காட்டின் ஓடையில் குளிப்பதும் நீரருந்தும் பிராணிகளை வேடிக்கை பார்ப்பதுமாய்த் தன்னைக் கரைத்துக்கொள்வது அவள் இயல்பாய் இருந்தது.
அருவிகள் பாறையறுத்துப் பாயும் பள்ளத்தாக்குகள் நோக்கி அவள் கூவும் பெயர் வனம் அதிர எதிரொலிக்கும். இலையுதிர் காலத்தின் சருகுகள் நெரியும் சப்தத்தில் நடனமிடுவது போலவே, அவள் விதைகளை மடியில் கட்டித் திரியும் காலமும் உண்டு. அக் காலங்களில் அவள், பிரார்த்தனை போல் சில பாடல்களைப் பாடித் திரிந்தாள். இறந்த பிராணிகளின் போல் பிரித்து உலர்த்தினாள். மொத்த பிரபஞ்சத்துக்குமான உயிர்ப்பிசுக்காய் அவள் கானகத்தைக் கொண்டாடினாள். முதிர்ந்த மிருகங்களுக்கு, ஓடை வற்றிய நாட்களில், பாறைகள் விலக்கிப் பாதைகள் செய்தாள். எலும்புகளில் நாட்களை எண்ணிக் குறியிட்டாள். உதிர்ந்த சிறகுகள் சேகரித்துப் பரண்களில் பரப்பினாள்.
பறவைகளின் அழைப்புக்கும் அபயக் குரலுக்கும் சுதிபேதம் அறிவாள். பின்னிரவில் ஒருநாளும் திசைதொலைந்ததில்லை. சர்ப்பங்களைக் காதலித்தாள். எறும்புத் தின்னிகளின் பாதைகள், யானைகளின் மரணம், நோயுற்ற விலங்குகள் உண்ணும் மூலிகைகள்: காடு தன் நாளங்களைத் திறந்து காட்டியது. குழல் காற்றலைய அவள், ஏதேனும் ஒரு கூட்டின் கீழமர்ந்து, தாய்ப்பறவை வரும் வரை குஞ்சுகளுக்காய்ப் பாடிக்கொண்டு இருப்பதை வனம் பேணுபவர்கள் அடிக்கடி கேட்டு அச்சத்துடன் கடந்ததுண்டு. அவள் கூதிர்காலத்தில் அவ் வனத்தின் பிறிதொரு செட்டையாகவும், தானியங்களின் தமக்கையாக, அக் கானகத்தின் உயிர்ப்புள்ள பச்சையத்தின் வாசனையாகத் திரிந்தாள். மேலும் அவள், சுழற்சி நிற்காத மாதவிடாய் நாட்களில், இடையளவு நீரில் நின்றபடி நீர் நிறம் மாறுவதைப் பார்த்தபடி இருப்பாள். அவளே நதியாக அவளே வனமாக மாறும் தருணங்கள் அற்புதமும் ரகசியமும் ஆனவை.
அந்தி கவியத் துவங்கிவிட்டதை உணர்ந்து ஆடுகளை எண்ணத் துவங்கினான். எண்ணி முடிந்ததும், ‘சாவா மூவாப் பேராடுகள்’ என்ற வரி தற்செயலாய் உதட்டில் அமர்ந்தது. தொரட்டி வைத்து ஆடுகளை அணைத்துச் சேர்த்து, வீடு நோக்கி முடுக்கினான். தன் பாட்டன் பள்ளிப்படைக்கு 96 சாவா மூவாப் பேராடுகள் நிவந்தம் அளித்த சோழனின் கல்லேட்டு வரிகள்தாம் ஒவ்வொரு முறையும் இவனுக்கு, பால் கோர்த்த முலைக்காம்புகளின் நிறத்தில் மையம் கொண்ட மயிற்பீலிகளைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும். பாட்டன்தான் ஒருமுறை கோவிலில் வைத்துக் கல்வெட்டுக் கதை சொன்னார். வீட்டுக்கான பாதை சமீபித்திருந்தது. இன்னொரு பீடியைப் பற்றவைத்தான். என்றைக்கும் இல்லாமல் வீடு வெளிச்சம் கூடுதலாய் இருப்பது போல் தூரத்திலிருந்து பார்க்கையில் தோன்றிற்று. இலவமரத்தில் அடையும் பறவைகளின் சப்தம் மெலிதாய்க் கேட்டது. ‘தன்னிச்சையாய் அந்த 96 சாவா மூவாப் பேராடுகள் எந்த வனத்தில் திரிந்துகொண்டு இருக்கும்?’ என்ற அபத்தமான கேள்வி மின்ன அக்கணத்திலேயே உறைந்தது.
(கல்குதிரை முதுவேனிற்கால இதழில் ( பக்கம் : 180-182 ) வெளிவந்துள்ளது )