Saturday, 24 January 2015

சிகரெட் துண்டுகளும் உள்ளாடைகளும் கதையாசிரியர்: தேவிபாரதி

சிகரெட் துண்டுகளும் உள்ளாடைகளும்




கடும் குளிராயிருந்த டிசம்பர் மாதத்தின் ஒரு சாயங்கால நேரத்தில் அவன் வந்து நின்றான். வெகு தொலைவிலிருந்து தூக்கத்தையும் ஓய்வையும் இழந்து, குறைந்தபட்சம் இரண்டு இரவுகள் தொடர்ந்து பயணம் செய்து வந்திருப்பவனாகத் தோற்றமளித்தான். அவனது அழுக்கேறிய உடைகளிலிருந்தும் களைத்துப்போன உடலிலிருந்தும் மட்கிய வியர்வை நெடி வீசிக்கொண்டிருந்தது. மங்கிக்கொண்டிருந்த சாயங்கால வெளிச்சத்தில், கதவுச் சட்டத்திற்கு வெளியே நீள் சதுரமாகத் தென்பட்ட வெளியில், பிரமை அல்லது கற்பனை எனச் சொல்லும்படியான தெளிவற்ற தோற்றத்தில் அவனது நெடிய உருவம் அசைவற்றதாக நின்றுகொண்டிருந்தது.

நான் அவனிடம் ஏதாவது பேச விரும்பினேன்; அவனது வருகையால் ஏற்பட்ட பதற்றத்தின் விளைவாகக்கூட இருக்கலாம். ஆனால் அவன் என்னை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. கதவைத் திறந்து வரவேற்கும் முறையில் எதையோ முனகிக்கொண்டிருந்த என்னைக் கிட்டத்தட்ட அப்புறப்படுத்தும் முறையில் தன் நீண்ட உறுதியான இடது கரத்தால் விலக்கிவிட்டு, ‘சாரு… சாரு…’ என மிக அந்தரங்கமான தொனியில் அழைத்துக்கொண்டே நேராக உள்ளறையை நோக்கி நடந்தான். தனது வலக்கை விரலிடுக்கில் புகைந்துகொண்டிருந்த, மிகமிக மட்டரகமான புகையிலையினால் தயாரிக்கப்பட்ட சிகரெட் துண்டை, இன்னும் பாதியளவுக்கு மேல் எஞ்சியிருந்த நிலையில், துப்புரவாகப் பெருக்கப்பட்டிருந்த எங்கள் வீட்டின் நடுக்கூடத்தில் சுண்டியெறிந்துவிட்டுப் போனான். அவனுடைய அந்தச் செய்கை மிக மிக மோசமான ஒரு வன்முறையாகவும் எங்கள்மீது அவன் கொண்டிருக்கிற வரம்பற்ற அதிகாரத்தின் குறியீடாகவும் தென்பட்டது. நான் உடனடியாக எனது ஆட்சேபணையை வெளிப்படுத்தவும் எதிர்த்துக் கூச்சலிடவும் அந்தக் கணமே அவனை அங்கிருந்து வெளியேற்றிவிடுவதற்கும்கூட விரும்பினேன். ஆனால் அதன் பின்விளைவுகள் பற்றிய கவன உணர்வுடன் எங்கள் மூவருக்குமிடையே நிலவிவரும் மிகப் புதிரானதும் அசௌகரியமானதுமான உறவும், நாங்கள் ஒவ்வொருவரும் மற்ற இருவருடனும் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்துகொண்டிருக்கிற ஒப்பந்தங்களும் எச்சரிக்கைப் புள்ளிகளாகப் பிரக்ஞையில் தோன்றி என்னைச் செயலற்றவனாக்கியிருந்தன.

எனக்குப் பக்கத்தில் கிடந்த, இணைப்புகள் தேய்ந்துபோன என் மூதாதையர்களுக்குரிய பழைய மர நாற்காலியில் வீசியெறியப்பட்டதுபோல உட்கார்ந்துகொண்டேன். அறையின் விசாலத்துக்குப் பொருத்தமற்ற பலவீனமான மெழுகுச் சுடரின் ஒளி, கூடத்தின் விரிந்த பரப்பெங்கும் நிழல்களை அலையவிட்டுக்கொண்டிருந்தது.

கதவைத் திறந்து மூடியிருந்ததால் உள்ளே நுழைந்திருந்த காற்று, மெழுகுச் சுடரை லேசாக நடுங்கச்செய்து அந்த நிழல்களுக்கு உயிருள்ளவை போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தமையால் என் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. இரண்டு சிறிய அறைகளையும் ஒரு கூடத்தையும் கொண்ட இந்த வீட்டில் எனது எந்தவொரு இயக்கமும் தன்னிச்சையானதாக இருக்க முடியாது எனச் சோர்வுடன் ஒப்புக்கொண்டேன்.

மின்சாரம் எப்பொழுது மீள வரும் என்பதைப் பற்றிய நிச்சயமின்மை எனது சோர்வை மேலும் தீவிரப்படுத்தியது. சோர்விலிருந்து விடுபடுவதற்கான பலவந்தமான முயற்சியாக, ஏற்கனவே பலமுறை முயன்று பிறகு கைவிடப்பட்டுவிட்டவையான எங்களுடைய கடந்தகால வாழ்வையும் அதன் எல்லா நிகழ்வுகளையும், அவை எங்களுடைய வாழ்வில் இதுவரை ஏற்படுத்தியுள்ளவையும் இனி ஏற்படுத்தவுள்ளவையுமான பாதிப்புகளைப் பற்றிய எனது யோசனைகளைத் தொடர முற்பட்டேன். யோசிப்பதற்கான தொடக்கக்஢கட்ட முயற்சியாக வெறுமனே கண்களை மூடிக்கொண்டேன். இமைகளின் இருண்ட உட்சுவர்களில் விழிக்கோளங்களை உரசி உருட்டியபடியே, இந்த மர நாற்காலியில் ஒரு நோயாளியைப் போல மிகவும் அசௌகரியமான நிலையில் சரிந்து உட்கார்ந்திருந்தேன். வறையறுக்க முடியாத குழப்பமான கடந்த காலத்திற்கும் தீர்மானிக்க முடியாத எதிர்காலத்திற்குமிடையே நசுக்கப்பட்டு மூச்சுத் திணறிக் கிடக்கும் எங்களுடைய நிகழ்காலத்தின் இயக்கமற்ற தருணங்களில் இதுவுமொன்று. இயக்கமின்மையின் மூலம் சோர்வா? அச்சமா?

இரண்டும்தான் தாஸ், ஒன்றுக்கு மற்றொன்று மூலம். சோர்வுக்கு அச்சமும், அச்சத்துக்குச் சோர்வும். நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு இரண்டே இரண்டு வழிகள் தாம் உள்ளன. ஒன்று, நெருக்கடிகளின் மூல வேர்களைத் தேடி அவற்றை அழிப்பது, அல்லது அவற்றைப் பற்றிச் சிந்திககாமல் இருப்பது. முதலாவது வழி உனக்குச் சாத்தியமில்லை. தாஸ், நீயும் மூலத்தின் ஒரு பகுதியாயிருக்கிறாய். ஆனால் சிந்திப்பதை நிறுத்துவதற்கு ஓர் அருமையான வழியுண்டு. சிந்தனையின் கண்ணிகளைத் துண்டிக்கும் ஆற்றல் பெற்றது ஆல்கஹால்…! ஆனால் எனக்கென்னவோ குடித்தால்தான் மூளையே வேலை செய்யத் தொடங்குகிறது. தாஸ், மனித மூளை மற்றுமொரு புதிர்…

வேண்டாம். அமைதியின்மையை உருவாக்கும் அமைதியற்றவனின் குரல். அமைதியைப் பதற்றம் என நிறுவும் நுட்பமான மூளையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் விஷப் பரீட்சைகள் இனி வேண்டாம். பதற்றத்தை உள்ளீடாகக் கொண்டதெனினும் சோர்வுற்ற மனம் அமைதியையே விரும்புகிறது. உள்ளீட்டை மறுத்துத் தோற்றத்தின் மேல் நம்பிக்கை வைப்பது மட்டும் கைகூடிவிட்டால்…?

ஆனால் கடவுளே, சாரு எங்கே? ‘சாரு, சாரு’ என அழைத்தபடி அவன் எங்களுடைய படுக்கையறையினுள் நுழைந்திருக்கிறானே! கலைந்த ஆடைகளுடன் அவள் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தால்? அலுவலகத்திலிருந்து திரும்பியவுடன் இப்படித் தூங்குகிற அவளுடைய வழக்கத்தை என்னால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடிந்ததில்லை. அவளுடைய கண்கள் தூக்கத்திலும் எச்சரிக்கையாயிருப்பவை போன்ற பாவனையுடன் பாதி திறந்திருக்கும். அசைவற்று நின்றுகொண்டிருக்கும் அவளுடைய விழிக்கோளங்கள் பிரேதத்தை நினைவூட்டுபவை. பாதி திறந்த அந்தக் கண்களைப் பொருட்படுத்தாவிடில், ஒழுங்கு குலைந்த ஆடைகளினூடாகத் தென்படும் அவளுடைய வெற்றுடல் பாலுறவுக்கான வெளிப்படையான அழைப்பாகத் தோற்றமளிக்கும். ஒரே சமயத்தில் காமத்தையும் அருவருப்பையும் மூளச் செய்யும் அவளுடைய தோற்றத்தை எதிர்கொள்ளத் திராணியற்றவனாக அவ்வறையை விட்டுவெளியேறி, கூடத்தில் கிடக்கும் இப்புராதனமான மர நாற்காலியில் உடகார்ந்துகொண்டு தீராத பதற்றத்துடன் படுக்கையறையினுள்ளிருந்து வரும் அவளுடைய இயக்கங்களின் ஒழுங்கற்ற சப்தங்களைக் கூர்மையாகக் கவனித்துக்கொண்டிருப்பேன். சில தருணங்களில் வசைகளையும் மறுப்பையும் பொருட்படுத்தாமல் அவளைப் புணர்ந்ததற்குக்கூட அவளுடைய ஒழுங்கு குலைந்த அந்தத் தோற்றம்தான் காரணம்.

பிறகு அவள் தனது மரத்துப்போன உடலைச் சுமந்தபடி எழுந்து வந்து, ஒரு வார்த்தையும் பேசாமல் தேநீர் தயாரித்துக் கொடுத்துவிட்டுக் குளியலறைக்குள் நுழைந்துவிடுவாள். அவளிடமிருந்து சாதகமான சமிக்ஞை வரும்வரை நான் எங்களுடைய படுக்கையறையினுள் நுழைய மாட்டேன். இது எங்களுக்கிடையே நிலவிவரும் மிக ரகசியமானதொரு ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தைப் பொருட்படுத்தாமல், அதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அது என்னைக் கட்டுப்படுத்தவும் செய்யாது என்று திட்டவட்டமாக அறிவிப்பது போல, துப்புரவாகப் பெருக்கப்பட்டிருந்த கூடத்தின் மையப் பகுதியில் பாதி கருகிய சிகரெட் துண்டைச் சுண்டியெறிந்துவிட்டு எங்களுடைய படுக்கையறையினுள் நுழைந்திருக்கிறான் அவன். போகும்பொழுது, ‘சாரு, சாரு’ எனக் கூப்பிட்டுக்கொண்டு போனது தனது நாகரிக மேன்மையைப் பறைசாற்றிக்கொள்வதற்கான தம்பட்டம். ஒருவேளை உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து குளியலறைக்குப் போயிருப்பாளோ? தனது வழக்கத்தை அனுசரித்துத் தேநீர் தயாரித்துக் கொடுத்துவிட்டுக்கூடப் போயிருக்கலாம்தான். பதற்றம் காரணமாக நிகழ்வுகளைத் தொடர்ச்சியாகவும் துல்லியமாகவும் பதிவாக்கிக்கொள்வதிலிருந்து பிறழ்ந்துபோயிருக்குமோ எனது மூளை? நாற்காலியிலிருந்து கைக்கெட்டும் தொலைவிலிருந்தது ஒரு தேநீர்க் கோப்பை. சற்று ஆசுவாசம் கொண்டவனாக அதைக் கை நீட்டி எடுத்தேன். கோப்பையின் குளிர்ந்த அடிப்பாகத்தில் சிறிதளவு எஞ்சியிருந்தது தேநீர். சட்டென எனது மூளை நரம்புகளில் பரவியது சுய அருவருப்பின் கொடிய வேதனை.

உனது சந்தேகம் உன்னைக் கொன்றுகொண்டிருக்கிறது தாஸ். அது ஒரு நோய். குணப்படுத்தப்பட முடியாத, இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படாத பெரு வியாதி. அது உன்னை அணுஅணுவாகத் தின்றுகொண்டிருக்கிறது. உனக்காக அனுதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

சாரு இன்னும் குளியலறையினுள்தான் இருக்கிறாளா என்பதை யூகிக்க முடியவில்லை. ஒருவேளை இப்பொழுது அவள் உடை மாற்றிக்கொண்டிருக்கலாம். அவனது தற்போதைய வருகை பற்றிய எதிர்பார்ப்பு என்னைப் போலவே அவளுக்கும்கூட இருந்திருக்க வாய்ப்பில்லையாதலால் திடீரென ஓர் அந்நியன் தனது படுக்கையறைக்குள் பிரவேசிப்பது அவளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். அதிர்ச்சிக்கும் அவன் யாரென அறிந்துகொண்டதற்குப் பின்பு உருவாகும் ஆசுவாசத்திற்கும் இடைப்பட்ட தருணத்தில் தன்னிச்சையானதொரு செயலாகக் கூச்சலிடவும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால் மயானம் போல அமைதியாக இருந்தது படுக்கைறை. அறையின் வாயிலில் தொங்கும் திரைச்சீலை சற்று முன்பு, அவன் நுழைந்த தருணத்தில் உருவான படபடப்பிலிருந்து விடுபட்டு அசைவற்றிருந்தது. ஒருவேளை அவன் இப்பொழுது, இந்தத் தருணத்தில், இங்கு வந்திருக்கவே இல்லையோ? எல்லாம் பதற்றமுற்ற, நோயுற்ற மனதின் கற்பனையோ? முன்னர் எப்போதோ நிகழ்ந்தவைகளின் குழம்பிய நினைவோ? பீதியில் எனக்கு மேனி நடுங்கத் தொடங்கியது; குப்பென வியர்த்தது. ஆனால், அதோ நடுக்கூடத்தில் இப்பொழுதும் புகைந்தபடி உருண்டு கிடக்கிறது பாதி கருகிய நிலையிலான ஒரு சிகரெட் துண்டு. எனது மன ஆரோக்கியத்திற்கான சாட்சியம். ஓசைப்படாமல் எழுந்து சென்று அதை, அதன் நுனியில் கனன்றுகொண்டிருந்த சிறு பொறியைத் தேய்த்து அணைத்து எடுத்துக்கொண்டேன். சாரு அவனது வருகை குறித்துச் சந்தோஷப்படமாட்டாளெனக் கற்பனை செய்துகொள்வதற்கு முயன்றேன். குறிப்பாக எங்கள் இருவருக்குமிடையேயான உறவில் ஓரளவுக்குச் சுமுகத் தன்மை படரத் தொடங்கியிருக்கும் ஒரு தருணத்தில். இந்தச் சுமுகத் தன்மையை அவள் வெறுக்கவில்லை என நம்புவதற்கான தடயங்கள் எங்களுடைய அன்றாட வாழ்வில் கூடிக்கொண்டிருந்தன. தற்போதைய அவனது வருகை இச்சுமுகத் தன்மையைக் குலைத்துவிடக்கூடும். அவனிடம் அதற்கான முனைப்பு இல்லாதபொழுதும்கூட. அவன் எங்கள்மீது கொண்டிருக்கும் அதிகாரத்தைப் பிரயோகிக்கவில்லையென்றாலும் இப்பொழுது நாங்கள் எங்களுடைய கசப்பான இறந்த காலத்தை நோக்கித் திரும்புதல் தவிர்க்க முடியாதது. இறந்த காலத்திற்குரியதென நாங்கள் நம்பிவரும் நெருக்கடிகள் முற்றாக இறந்துவிடவில்லையென்பதும், அவை எங்களுடைய படுக்கைக்குக் கீழே மூர்ச்சையுற்றுக் கிடக்கின்றன என்பதும் எங்களிருவருக்குமே தெளிவாகத் தெரிந்திருக்கிற உண்மை.

மூர்ச்சையுற்றுக் கிடக்கும் இறந்த காலத்தின் செயலற்ற உடல்களின் மீது நாங்கள் நிர்வாணமாகப் படுத்துக்கொண்டிருக்கிறோம். ஒருவர்மீது மற்றொருவர் தீராத அன்பும் காதலும் நம்பிக்கையும் கொண்டிருப்பதாகக் கிசுகிசுப்பான குரல்களில் ஒருவரிடம் ஒருவர் சொல்லிக் கொள்கிறோம். அவற்றை நிரூபித்துக் காட்டுவதற்கு முற்பட்டவர்களைப் போல ஒருவரையொருவர் தழுவிக் கொள்கிறோம்; முத்தமிடுகிறோம்; புணர்கிறோம். புணர்ச்சிக்கும் புணர்ச்சிக்குப் பிந்தைய உறக்கத்திற்கும் இடைப்பட்ட தருணங்களில், புணர்ச்சியின் பரிசாக எங்களுக்குக் கிடைக்கவிருக்கிற குழந்தையைப் பற்றிய ஆசைகளைப் பகிர்ந்துகொள்கிறோம். உறங்கும்பொழுதோ எங்களுடைய கனவுகளில் இறந்த சிசுக்களைக் காண்கிறோம். பிறகு பீதியுற்றவர்களாய் விழித்துக்கொள்கிறோம். பீதியூட்டும் அந்தக் கனவுகளையும்கூடப் பகிர்ந்துகொள்கிறோம். பிறகு மறுபடியும் நாங்கள் புணரத் தொடங்குகிறோம். தீராத புணர்ச்சியின் விளைவாக எங்களுடைய கர்ப்பம் கரைந்து வழியும் வாசனையை உணர்கிறோம். இது எங்களைக் கலவரப்படுத்துவதற்குப் பதிலாக சந்தோஷத்தையே தருகிறது. இந்தச் சந்தோஷம் குறித்த சுய அருவருப்பிலிருந்தும் குற்ற உணர்விலிருந்தும் எங்களை மீட்டுக்கொள்வதற்காக மீண்டும் கனவு காண்கிறோம்; பீதியடைகிறோம்; புணர்கிறோம். இவற்றைச் சகித்துக்கொள்ள முடியாமல் எங்களுடைய இறந்த காலம் விழித்துக்கொள்கிறது. கூச்சலிடவும் முற்படுகிறது. அது போன்ற தருணங்களில் எங்களுடைய புணர்ச்சி ஓசை மிகுந்ததாக இருக்கும். இறந்த காலத்தின் கூச்சலைக் காட்டிலும் ஓசை மிகுந்ததாக…

படுக்கையறையிலிருந்து ஏதோ சப்தம் வந்தது. மிகமெல்லிய சப்தம்; ஒரு கணம்கூட நீடிக்கவில்லை. இன்னதெனத் துல்லியமாகப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. ஒரு முனகல்; சிசு அல்லது பெண்ணிற்குரியதாக இருக்கலாம். கருப்பையிலிருந்து வெளியே இழுக்கப்படும் தருணத்தில் தொண்டைக் குழியிலிருந்து வெளிப்படும் சிசுவின் முதல் சப்தம். வெளியே இழுத்துப் போடப்பட்ட பிறகு அது உரத்த அழுகையாக வெடிக்கிறது. புணர்ச்சியின் தொடக்கக் கணங்களில் விரகம் தரும் வேதனையில் பெண்களின் தொண்டைக் குழியிலிருந்தும் இதே போன்ற முனகல்கள் பீறிடுகின்றன. குறிப்பாகக் கள்ளத்தனமான புணர்ச்சிகளின்போது. எனக்கேற்பட்டது அதிர்ச்சியா பயமா என்பது விளங்கவில்லை. ஆனால் எனது மூதாதையர்களுக்குரிய மர நாற்காலியிலிருந்து இழுத்து வீசப்பட்டதுபோல அவசரமாக எழுந்தேன். மிகப் பதற்றம் கொண்டவனாக எங்களுடைய படுக்கையறையை நோக்கிச் சில அடிகள் துள்ளிச் சென்றிருந்தேன். ஆனால் கடவுளே, என்ன காரியம் செய்யத் துணிந்திருக்கிறேன். எனது செயல் எவ்வளவு அபத்தமானது, அநாகரீகமானது, குரூரமானது?

நீ ஒரு சந்தேகப் பேர்வழி தாஸ். நீ கொண்டிருப்பது காதல் அல்ல, பொஸஸிவ்னெஸ். நீ எனது சுய அடையாளங்களை மறுக்கிறாய்; எனது ஆளுமையைக் கொச்சையாகப் புரிந்துகொண்டிருக்கிறாய்; என்னை வேவு பார்க்கிறாய். வெட்கமாக இல்லை உனக்கு? என்னுடைய அலுவலகத்திற்கு வெளியே உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் மணிக்கணக்காக உட்கார்ந்துகொண்டிருக்கிறாய். பொய் சொல்லாதே. எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. நான் அலுவலகத்திற்குப் போய்த் திரும்பும் எல்லாப் பாதைகளிலும் என்னைக் கண்காணிப்பதற்காக உன்னுடைய ஒற்றர்கள் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவேளை எனது அலுவலகச் சகாக்கள் சிலரை நீ சிநேகம் பிடித்துக் கொண்டிருக்கக்கூடும். உனக்காக வேவு பார்க்கச் சொல்லி அவர்களைக் கேட்டுக்கொண்டிருப்பாய். பழிவாங்கப்பட்ட, துரோகமிழைக்கப்பட்ட கணவன் என்னும் சித்திரத்தை உருவாக்க முயற்சிக்கிறாய். எனது அலுவலக சகா ஒருவனிடம் கண்ணீர் விட்டு அழுதாயாமே? ஆபாசமாக இருக்கிறது தாஸ். உனது இவ்வகைப்பட்ட மிரட்டலுக்கும் வன்முறைக்கும் நான் பணிவேன் என நினைக்காதே. ஒன்றைத் திட்டவட்டமாகப் புரிந்துகொள். திருமணத்திற்கு வெளியே பாலுறவு கொள்வதற்கு விருப்பம் கொண்டுவிட்ட ஒரு பெண்ணால் எல்லா விதமான கண்காணிப்புகளையும் மீறித் தனது இச்சையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

தாஸ்… தாஸ்… தாஸ்…

உனக்கு அவளைப் புரிந்துகொள்ள முடியாமலிருப்பது பரிதாபம் தாஸ். நீ அவளைக் காதலித்திருக்கிறாய்; அவளைப் புணர்ந்திருக்கிறாய்; அவளோடு ஒரே கூரையின் கீழ் வசித்துக்கொண்டிருக்கிறாய். தாஸ், நம்பிக்கையே மனித வாழ்வின் ஆதாரம். நீ உனது மனைவியை நம்புவதற்குப் பிறருடைய அபிப்ராயங்களைச் சார்ந்திருக்கிறாய். உனக்கு ஒருபோதும் நிம்மதி கிடைக்கப்போவதில்லை. தாஸ், எந்தச் சூழ்நிலையிலும் மனைவியின் மேல் சந்தேகம் கொள்ளாத ஒருவனால் மட்டுமே லட்சியக் கணவனாக விளங்க முடியும். நீ ஒரு ஐடியல் ஹஸ்பெண்ட், இல்லையா தாஸ்?

லட்சியக் கணவன், லட்சியக் கணவன், லட்சியக் கணவன்…

… ஆகவே தாஸ், இப்பொழுது உனக்குக் கேட்டதாகச் சொல்கிறாயே ஒரு சப்தம், முனகல் – அதைப் பொருட்படுத்தாதே. உனது படுக்கையறைக்குள் நானும் உனது மனைவியும் கள்ளப் புணர்ச்சியில் ஈடுபட்டிருப்போமெனவும், திடீரென உள்ளே நுழைந்து கையும் களவுமாகப் பிடித்துவிடலாமெனவும் அபத்தமாகக் கற்பனை செய்து கொள்ளாதே. உனக்குக் கேட்டது முத்தத்தின் சப்தமல்ல, புணர்ச்சியின் சப்தமுமல்ல. சிசுவின் முனகல். ஹ ஹா ஹா… நல்ல கற்பனை. தாஸ், சிசு புணர்ச்சியின்பத்திற்குத் தடை. மலட்டுத்தனத்தைப் பேரதிருஷ்டம் எனக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது உனது காமம். சொல்லப்போனால் உனக்கு எந்தச் சப்தமும் கேட்கவில்லை. உட்புறமாகத் தாளிடப்பட்டிருக்கிறது உனது வீடு. இங்கே உன்னையும் உனது மனைவியையும் தவிர வேறு யாருமில்லை. உனது மனைவி குளித்துக்கொண்டிருக்கிறாள். எல்லாவற்றையும் நம்பு. நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம். டிசம்பர் மாதத்தின் முன்னிரவுக் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாமல் நீ உனது மூதாதையர்களுக்குரிய மர நாற்காலியில் முடங்கிக் கிடக்கிறாய். நீ ஒரு சோம்பேறி. சோம்பேறித்தனம் பெரிய குற்றமல்ல. நீ சோம்பலை விரும்புகிறாய்; ரசிக்கிறாய். விரும்பு. ரசித்தபடியே கண்களை மூடிக்கொண்டு தூங்கு. நீ ஒரு லட்சியக் கணவன். புணர்ச்சியை முடித்துக்கொண்டு வந்து உன்னைத் துயிலெலுப்பிவிடுவாள் உனது இல்லத்தரசி. மறுபடியும் உனக்கு ஒரு கோப்பைத் தேநீர் கிடைக்கலாம். அற்புதமானது இது. ஆனால் ஸாரி, ஸாரி மை டியர் பிரண்ட். குளியலை முடித்துக்கொண்டு வந்து என்பதற்குப் பதிலாகப் புணர்ச்சியை முடித்துக்கொண்டு வந்து எனத் தவறுதலாகச் சொல்லிவிட்டேன். மன்னித்துக்கொள் எனது லட்சியக் கணவனே…!

மனைவியின் லட்சியம், லட்சியக் கணவன்…!

கடவுளே, இங்கே கொடிய துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. கருப்பையின் வாயிலில் பெருகும் நிணத்தின் நெடி. தாஸ் நீ அதை அனுபவித்திருக்கிறாயா? அது உனது நினைவுகளைக் குழப்பிவிட்டுவிடும். பீதியையும் அதீதக் கற்பனையையும் தூண்டிவிடக்கூடியது பிறவியின் நெடி. பிரசவத்தின்போது கணவன் அருகிலிருப்பது ஆரோக்கியமானது எனச் சொல்கிறது நவீன மருத்துவம். தாஸ், அது கொடிய வேதனையாயிருக்கும். அவளது அடிவயிற்றிலிருந்து தன்னிச்சையான கேவல்கள் எழும். அவற்றைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் பொருட்டு அவள் தனது உதடுகளைக் கடித்துக்கொள்வாள். தாங்க முடியாத விரகத்தின் விளைவாக இதேபோல உதடுகளைக் கடித்துக்கொள்ளும் பெண்களைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கக்கூடும் தாஸ். கடிபட்ட உதடுகளிலிருந்து பெருகி வழியும் குருதி. அதைப் பார்த்திருக்கிறாயா நீ? குறைந்த பட்சம் அதை உன்னால் கற்பனையாவது செய்ய முடிந்திருக்கிறதா? முழு உடலும் துடித்துப் புரளும்; கரங்கள் படுக்கையைப் பிறாண்டும். மிக வன்மம் கொண்டவளாகக் கால்களால் காற்றை உதைப்பாள். அந்தத் தருணத்தில் அவளுக்குத் தன்னுடைய கணவனையோ கள்ளக் காதலனையோ தழுவிக்கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமானால்? அது ஒரு வன்மமான புணர்ச்சியை நினைவூட்டக்கூடியது. வெளிப்படும் சப்தங்களில்கூட பெரிய வேறுபாடுகள் இருக்காது. புணர்ச்சிக்கும் ஜனனத்திற்குமிடையே அவ்வளவு பிணைப்பு இருக்கிறது.

புணர்ச்சிக்கும் புகைபிடித்தலுக்கும்கூடப் பிணைப்பு இருக்கிறது தாஸ்…!

ஹி ஈஸ் மை ஐடியல் ஹஸ்பெண்ட்… ஹி ஹி.

கண்களை இறுக மூடிக்கொண்டேன். எவ்வளவோ நாட்களுக்கப்புறம் புகைபிடிக்க வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று எனக்கு. ஆனால் என்னிடம் சிகரெட் இல்லை. எனது உள்ளங்கையிலிருக்கும் ஒரு துண்டு சிகரெட்டைத் தவிர. ஒரு முனை கருகியதும் மறுமுனை எச்சில்படுத்தப்பட்டதுமான அந்தத் துண்டுதான் எனது சந்தேகத்திற்கான ஒரே ஆதாரம்; மன ஆரோக்கியத்திற்கான தடயம். புகைபிடிக்க வேண்டுமென்ற ஒரு தற்காலிக இச்சைக்கு அதைப் பலியிட முடியாது. தவிர சுண்டியெறியப்பட்ட சிகரெட் துண்டுகள் ஆரோக்கியத்திற்கு ஏற்றவையல்ல. தெருப் பொறுக்கிகளே சுண்டியெறியப்பட்ட சிகரெட் துண்டுகளைப் புகைக்கிறார்கள். விளைவோ கேன்சரும் சயரோகமும்.

புகைபிடிப்பதனால் என்ன நன்மை எனக் கேட்டால், புகைபிடிப்பவர்கள் யாருக்கும் பதில் சொல்லத்தெரியாது தாஸ். ஆனால் அழகான பெண்கள் புகைபிடிக்காத ஆண்களின் உதடுகளையே முத்தமிடுவதற்கு விரும்புவார்கள். ஓரங்களில் கருத்த தடயங்களைக் கொண்டுள்ள, நிகோடின் நாற்றம் வீசும் ஆணின் உதடுகளை முத்தமிடுவதற்கு எந்தப் பெண்ணுமே விரும்புவதில்லை. ஆனால் கிட்டத்தட்ட எல்லா ஆண்களுக்குமே முத்தங்கள் கிடைக்கின்றன; பெரும்பாலானவர்கள் புகை பிடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். புகைபிடித்தலுக்கும் புணர்தலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அது ஒரு பயலாஜிக்கல் நீட். நன்மை, தீமை, ஒழுக்கம், ஒழுக்கக்கேடு போன்ற அளவுகோல்களால் அதைத் தவிர்த்துவிட முடியாது. தீமைகள் குறித்த எச்சரிக்கைகள் எத்தனை இருக்கின்றன. அவற்றைப் பொருட்படுத்தியிருக்கிறதா உலகம்? புணர்தலாலும் தீமைகள் உண்டென்கிறது உலகம். புணர்தலை எப்படி விலக்க முடியாதோ அப்படிப் புகைபிடித்தலையும் விலக்க முடியாது. பேரின்பத்திற்குப் பெண், சிற்றின்பத்திற்கு சிகரெட். புகைபிடிக்காதவன் லட்சியக் கணவனென்றால் புணராதவனை என்ன சொல்லி அழைப்பது? லட்சியக் கணவனும் லட்சிய மனைவியும் இணையும்பொழுது லட்சியக் குடும்பம் உருவாகிறதாமே? குடும்பத்தின் லட்சியம் என்னவாம்?

புணர்தலோ? வேசிகளிடத்திலும் கிடைக்குமே புணர்ச்சியின்பம்?

அது பாவம். மகா பாவம். ஒழுக்கக் கேடானது. ஒழுக்கக் கேட்டிலிருந்து பெறப்படும் இன்பம் எதிர் காலத்தின் கொடிய துயரங்களுக்கான விதையாயிருக்கும். பால்வினை நோய்கள், குஷ்டம், இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படாத எய்ட்ஸ். சிகரெட் பிடித்தால் சயரோகம், வேசியைப் புணர்ந்தால் எய்ட்ஸ். சிகரெட் ஸ்மோக்கிங் ஈஸ் இன்ஜுரியஸ் டு ஹெல்த். எய்ட்ஸைத் தடுக்க ஆணுறை, சயரோகத்தைத் தடுக்க சிகரெட்டுக்கு ஃபில்டர். ஹ ஹ ஹா…

இல்லறத்தின் லட்சியம் புணர்தலன்று. குழந்தை பெறுதலே புணர்ச்சியின் நோக்கம். வம்ச விருத்தி, மானுடக் கடமை, பிரம்ம காரியம். ஒரு லட்சியக் காதலன் மனைவியின் மிது காமுற மாட்டான், அது காதலாகும். தாஸ், லவ் ஈஸ் அ டிவைன் ஃபோர்ஸ், லஸ்ட் ஈஸ் அன் ஈவில் ஃபோர்ஸ். தாஸ், உங்களுக்குத் தெரியுமா? கடவுள் காதலைப் படைத்தார், சாத்தான் காமத்தைப் படைத்தான். விலக்கப்பட்ட கனியைப் புசித்ததனால் வந்த வினை. மனித இருதயம் கடவுளின் சுவாசத்தால் நிரம்பியிருக்கிறது. வயிறோ சாத்தானின் விலக்கப்பட்ட கனியினால் நிரம்பியிருக்கிறது. அதனால்தான் நம்மால் கடவுளையும் நிராகரிக்க முடியவில்லை, சாத்தானையும் விலக்க முடியவில்லை. கடவுள் ஆதாமையும் ஏவாளையும் மட்டும்தான் படைத்தார். காயீனும் ஆபெலும் பாவத்தின் சம்பளங்களாக்கும் தாஸ். பாவத்தின் சம்பளம் மரணம். காயீன் ஆபெலைக் கொன்றான், பிறகு தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன காதலும் காமமும், புணர்ச்சியும் ஜனனமும், பாவமும் மரணமும். சந்தேகம்கூடக் கொடிய பாவம்தான் தாஸ். நீங்கள் கடவுளைச் சரணடையுங்கள். உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும். ஆமென்.

ஆமென்… ஆமென்…

நீயும் பாவம் செய்தவளாயிருக்கிறய் சாரு. விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசிக்கும்டி தூண்டுகிறாள் லட்சிய மனைவி.


உனக்குத் தாழ்வு மனப்பான்மை தாஸ்.

உனது முத்தங்களுக்காக நான் சிகரெட்டுகளை விலையாகத் தந்திருக்கிறேன். ஆனால் நீ என்னை நம்பவில்லை. நிகோடினின் போதை உனது முத்தங்களின் மயக்கத்திற்கு இணையாகாது என்பதை உனக்குப் புரிந்துகொள்ள முடியவில்லை. உனக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகைபிடித்துவிட்டுச் சூயிங்கம் மென்ற உதடுகளுடன் வீடு திரும்புகிறேனெனச் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறாய். காதலின் அடையாளமான முத்தமும்கூடக் கடவுளின் பரிசுதான் சாரு. அதை நீ கொச்சைப்படுத்தினாய். என்னை வேவு பார்ப்பதற்கு முத்தங்களைப் பயன்படுத்தினாய். புகைபிடித்தல் எனது சுதந்திரம் என என்னைப் பொருட்படுத்தாமலிருக்க உனக்கு ஏன் முடியவில்லை சாரு?

தாஸ், நிகோடினின் துர்நாற்றம் முத்தத்தின் போதைக்குத் தடை. உதடுகளைக் களங்கப்படுத்துகிறது சிகரெட்.

ஆனால் களங்கத்தின் காரணி சிகரெட் மட்டுமில்லை. எச்சில்படுத்தப்பட்ட உதடுகள் தரும் முத்தம் காமத்தைத் தூண்டும், காதலை அல்ல.

இட் ஈஸ் நத்திங் பட் பொஸஸிவ்னெஸ்.

பொஸஸிவ்னெஸாமே பொஸஸிவ்னெஸ். உனது முத்தங்கள் எனக்கு மட்டுமானவையாக இருக்க வேண்டும் சாரு. உனது முத்தங்களும் உனது காதலும் உனது காமமும் உனது முழு ஆகிருதியும். இதை உனக்குப் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால் உனக்குக் காதலின் உக்கிரத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை யென்றுதான் அர்த்தம்.

உனக்கு மனித உறவுகளின் தாத்பரியம் புரியவில்லை தாஸ். ஆண் பெண் உறவை செக்ஸுக்கு அப்பால் உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது உனது மன ஊனத்தின் விளைவு. நோயுற்ற மனதின் திரிதலான வெளிப்பாடு.

நீ அவன்மீது கொண்டிருப்பது காமம் அல்ல, இல்லையா சாரு?

காதலும் காமமும் வெவ்வேறானவை தாஸ்.

நீ அவன்மீது கொண்டிருப்பது காதலா காமமா?

காதலையும் உனக்குப் புரிந்துகொள்ள முடியவில்லை, காமத்தையும் உனக்குப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களைப் புணர்வது வேசைத்தனம். வேசைத்தனம் கொடிய பாவம் சாரு. மிகக்கொடிய பாவம்.

ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைப் புணர்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறார்களே ஆண்கள்? அதை என்ன பெயரிட்டு அழைப்பது தாஸ்? யூ ஆர் அ க்ரூயல் மேல் ஷாவனிஸ்ட்…

பிறகு எனக்குப் பேச ஒன்றுமில்லாமல் போயிற்று. சந்தேகம் உனது பிறவிக்குணம் என எனது கண்களை நேராகப் பார்த்துச் சொல்லிவிட்டுப் படுக்கையறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்திக்கொண்டாள் சாரு. சுழலும் மின்விசிறியிலிருந்து பரவியிருந்த வெப்பக்காற்று எங்களது படுக்கையறைக் கதவின் மீது தொங்கும் திரைச்சீலையை உலுக்கிக் கலவரப்படுத்தியிருந்தது. அறைந்து சாத்தப்பட்ட கதவின் பளபளப்பான வெளிப்பரப்பின் மீது படபடக்கும் திரைச்சீலையின் துல்லியமான சப்தம். உள்ளிருந்து கேட்டது ஒரு உரத்த தேம்பல். பிடுங்கியெடுக்கப்பட்ட சிசுவின் முதல் அழுகை. இப்பொழுது நிகழ்ந்ததுபோலவே அப்பொழுதும் எனது மூதாதையர்களுக்குரிய இந்த மர நாற்காலியில் தூக்கி வீசப்பட்டதுபோல உட்கார்ந்துகொண்டேன். சில கணங்கள் மட்டும் நீடித்துப் பின்பு அடங்கிவிட்டது அவளுடைய தேம்பல். அழுததற்காக வெட்கமடைந்திருப்பாள். அல்லது அந்த அழுகையேகூட ஒரு பழி வாங்கும் நடவடிக்கையாயிருக்கும்.

அது வெப்பம் மிகுந்த ஒரு கோடைக்காலத்தின் பின்னிரவு. நிலவத் தொடங்கியிருந்த குரூரமான அமைதி மயானத்தில் இருப்பதான கற்பனையைத் தோற்றுவித்திருந்தது. பளபளப்பான தரையும் சித்திரச் சட்டங்கள் மாட்டப்பட்ட சுவர்களும் கதவுகளும் கூடத்திலிருந்த மேசையும் தொலைக்காட்சிப் பெட்டியும் அலமாரியும் அந்தக் கற்பனைக்குப் பொருந்திப்போகாததாலோ என்னவோ ஏதோவொரு மருத்துவமனையில் மார்ச் சுவரிக்கு வெளியே எனக்குரிய சவத்தைப் பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருப்பது போன்ற பிரமை தோன்றிற்று. இயற்கை மரணமா, கொலையா, தற்கொலையா என்பதைத் தீர்மானிப்பதற்காகப் போஸ்ட்மார்ட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள். காமமும் காதலும் பொதிந்த உடலின் மீது கத்திகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

கல்யாணத் தேதியிலிருந்து ஏழாண்டுகளுக்குள் நடக்கிற எந்தப் பெண்ணின் மரணமும் சந்தேகத்திற்குரியதாகும் தாஸ். கொலையோ தற்கொலையோ, அதற்குக் கணவனே பொறுப்பாளி. பிறகு கைது நடவடிக்கைகள். போஸ்ட்மார்ட்டம் முடிந்ததும் கைகளைக் கழுவிக்கொண்டுவந்து யூனிபார்மை மாற்றிக்கொண்டுவிடுவார்கள் மருத்துவர்கள். வெள்ளைக் கோட்டுக்குப் பதிலாகக் காக்கிச் சட்டை; ஸ்டெதாஸ்கோப்புக்குப் பதிலாகக் கைவிலங்கு; அனுதாபத்திற்குப் பதிலாக விசாரணை. பிறகு தீர்ப்புகள், தண்டனைகள்… லட்சியக் கணவனாமே லட்சியக் கணவன்… ஹெஹ்ஹே…

இதேபோல் அப்போதும் புகைபிடிக்க வேண்டுமென்ற விருப்பம் தீவிரமாக மூண்டது எனக்கு. புகைபிடிப்பதை அடியோடு விட்டொழித்திருந்ததால் அப்போதும் என்னிடம் சிகரெட் இருந்திக்கவில்லை. இப்பொழுதாவது எனது உள்ளங்கைக்குள் இருக்கிறது பாதி கருகியதொரு சிகரெட் துண்டு. அப்போது, அந்த நள்ளிரவில் இது என் கைகளுக்குக் கிடைத்திருக்குமானால் தடயமென்றோ சாட்சியமென்றோ பார்க்காமல் கொளுத்திக்கொண்டிருந்திருப்பேன். வேகமாகச் சுழன்றுகொண்டிருந்த மின் விசிறியையோ பிரகாசமான குழல் விளக்கையோ அணைக்காமல் நான் வீட்டை விட்டு வெளியில் வந்தேன். அப்பொழுது நேரம் என்னவாக இருந்ததென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்துகொள்ளும் விருப்பமும் எனக்கு இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தன்னிச்சையாக நடந்த எனது கால்கள் தெரு முனையிலிருந்த பூட்டப்பட்டிருந்த பலசரக்குக் கடையின் முன்பாக வந்து நின்றன. சிகரெட் வாங்க வேண்டுமென்பதற்காகவே நான் அங்கு வந்து நின்றிருக்கக்கூடுமென யூகித்தேன். பூட்டப்பட்டிருந்த பலசரக்குக் கடை என்னைப் பதற்றத்திற்குள்ளாக்கியிருந்தது. அந்தத் தருணத்தில்தான் எனக்கு அதற்குமுன் நான் ஒருபோதும் சென்றிராத பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டுமென்ற விருப்பமுண்டாயிற்று. பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் ஒருபோதும் பூட்டப்படுவதில்லை. அங்கே நிச்சயமாக சிகரெட்டுகள் கிடைக்கும். எங்கள் குடியிருப்பிலிருந்து பேருந்து நிலையம் எவ்வளவு தூரத்திலிருக்கிறது என்பது திட்டவட்டமாக எனக்குத் தெரியாது. செல்லும் பாதை பற்றிய விவரங்கள் என்னிடம் அறவே இல்லை. வேகமாக அதே சமயம் திட்டமிடப்படாமல் வளர்ந்துவரும் எங்களுடைய நகரின் பல பாதைகள் மிகவும் குறுகலானவை; நீளம் குறைந்தவை. வெளியேறும் வழியற்ற பல குறுக்குச் சந்துகளையும் சீரமைக்கப்படாத பள்ளங்களையும் கட்டாந்தரைகளையும் கடந்துதான் எங்கள் குடியிருப்பை அடைந்துகொண்டிருந்தோம். பயணங்களுக்குப் பெரும்பாலும் ஆட்டோ ரிக்ஷாக்களையே நம்பியிருக்கிற எனக்கு, அந்த நள்ளிரவு நேரத்தில் சிகரெட் வாங்குவதற்காகப் பேருந்து நிலையத்திற்குப் போவதென்பது ஒரு திட்டவட்டமான சாகசச் செயலாகத் தோன்றியது.

சாகசச் செயலல்ல, பழிவாங்கும் நடவடிக்கை.

பழிக்குக் கருவி சிகரெட்… உனக்கு செக்ஸ் என்றால் எனக்கு சிகரெட். செக்ஸுக்கு இணையாகுமோ சிகரெட்?

எனது பழிக்கு ஒத்துழைப்பதுபோலத் திடீரென இருள் சூழ்ந்தது. பவர் கட்… மின்வாரியத்தின் செயலின்மைக்கு ஒரு மானசீகமான நன்றி. நகரின் கடைக்கோடியில் தன்னந்தனியாய்ப் பதுங்கியிருக்கும் எங்கள் குடியிருப்பும் இரண்டு சிறிய அறைகளையும் அவற்றைவிடச் சற்றே அகன்ற ஒரு கூடத்தையும் கொண்டுள்ள எங்களுடைய வீடும் இன்னேரம் இருளின் பிடிக்குள் வந்திருக்கும். சாரு, உனக்கு இருளில் தனித்திருக்க முடியாது. கூடத்திலுள்ள ஸ்விட்ச் பாக்ஸின் மேலிருக்கிறது ஒரு மெழுகுவர்த்தியும் தீப்பட்டியும். பேட்டரி பழுதுபட்ட எமர்ஜென்சி லாம்ப் இன்னும் சரிசெய்யப்படவில்லை. இருளைத் தடவிக் கூடத்திற்கு வந்து மெழுகுவர்த்தியையும் தீப்பெட்டியையும் எடுப்பதற்கு உன்னால் முடியாது. என் தேவதையே, வெளிச்சம்தான் உனது பலம்; இருள் அல்ல.

அது ஒரு சைக்கலாஜிக்கல் ப்ராப்ளம் தாஸ். இருள் சூழ்ந்த மறு கணத்தில் அந்தக் கற்பனை தோன்றிவிடுகிறது. இருளின் எல்லைகளற்ற வெளி நம்பவே முடியாதபடி அசையத் தொடங்குகிறது. பிறகு இருளின் பேருரு அணுக்களாகப் பிரிந்து, ஒவ்வோர் அணுவும் ஒரு புழுவாகிறது. என் கனவின் வெளியெங்கும் புழுக்கள். பிறகு அவை ஒன்றையொன்று தழுவி ஒளியின் பெருந் தூண்களாக எழும்பி நிற்கின்றன. கண்களைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் மூழ்கத் தொடங்குகிறது எனதுடல். தாஸ், சொன்னால் நம்ப மாட்டாய். தொலைந்துபோன இருள் எனக்குள் தவிப்பை மூளச்செய்கிறது. ஒளியின் ஆழம்காண முடியாத பள்ளத்தாக்குக்குள் இருளைத்தேடத் தொடங்குகிறேன் நான். பிறகு அந்தப் பள்ளத்தாக்கின் ஆழத்திலிருந்து எழுந்து வருவான் இருளின் வடிவம் கொண்ட ஓர் ஆண்மகன். நெடுநெடுவென்று நம்பவே முடியாத ஆகிருதி. அவனது புஜங்களிலும் தோள்களிலும் மார்பிலும் கை, கால்களிலும் கற்றை கற்றையாய் ரோமம். சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது தாஸ், அவன் முழு நிர்வாணமாயிருப்பான். அச்சத்தாலா வெட்கத்தாலா என எனக்குச் சொல்லத் தெரியவில்லை, நான் கண்களை மூடிக்கொள்வேன். ஆனால் மனமல்லவா பார்த்துக்கொண்டிருப்பது? அவனோ இமைக்காத விழிகளால் வெறித்துப் பார்த்தபடி என்னை நோக்கி வருவான். தனது வலிய கரங்களால் என்னைப் புரட்டிப்போடுவான். அவனது தீண்டல் என்னை மூர்ச்சையுறச் செய்வதுபோலிருக்கும் தாஸ். விழிகள் செருகும் எனக்கு. பிறகு அவன் தனது தடித்த உதடுகளால் என்னை முத்தமிடத் தொடங்குவான். முத்தமிட்டவாறே எனது ஆடைகளை ஒவ்வொன்றாகக் களையத் தொடங்குவான். தாஸ், அதிர்ச்சியடையாதே, அவனது செய்கைகளைத் தடுப்பதற்கு ஏதும் செய்யாதவளாயிருப்பேன் எனவும் நினைக்காதே. அவற்றைத் துல்லியமாக விவரிக்க முடியவில்லை, அவ்வளவுதான். எனது முயற்சிகளை அவன் வெகு சுலபமாக முறியடித்து விடுவான். எனது ஆடைகளைக் கிழித்தெறிவான்; நிர்வாணப்படுத்தி ஒரு மிருகம்போல என்னைப் புணரத் தொடங்குவான். எதிர்ப்பைத் தெரிவிக்கவோ போரிடவோ அந்தத் தருணத்தில் எனது உடல் ஒத்துழைக்காது. தாஸ், நான் முற்றாக என்னை இழந்திருப்பேன். தாள முடியாத வேதனை மூளும். எனது குறியிலிருந்து ரத்தமும் நிணமும் பெருகும். கடவுளே, அதை யாராலும் ஒருபோதும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. தாஸ், தயவுசெய்து இரவுகளில் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விடாதே. என்னைப் பழி தீர்த்துக்கொள்வதற்கு ஒருபோதும் இரவு நேரங்களைத் தேர்ந்தெடுக்காதே.

… கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை தாஸ். உங்களுடைய படுக்கையறையில் ஒரு எமர்ஜென்ஸி லாம்ப் வைத்துக்கொள்ளுங்கள். ஸ்விட்ச் பாக்ஸின் மேல் ஒரு தீப்பெட்டியும் மெழுகுவர்த்தியும் எப்பொழுதும் இருக்கட்டும். முடிந்தவரை இரவு நேரங்களில் உங்களுடைய மனைவியைத் தனியே விட்டுவிட்டு எங்கேயும் போய்விடாதிருக்க முயலுங்கள். சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் இந்த காப்சூல்களைத் தலா ஒன்று வீதம் எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள். காலப்போக்கில் சரியாகிவிடும். ஆல் த பெஸ்ட். ஹி… ஹி… ஹி…


தாங்க் யூ, தாங்க் யூ வெரி மச்… ஹி… ஹி…

ஒரு ரகசியமான ஆலோசனை தாஸ். நீங்கள் இதைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. மனநல மருத்துவம் இதைவிட மோசமானவையெனக் கருதத்தக்கப் பல ஆலோசனைகளை அனுமதித்திருக்கிறது. ஒரு முறை, புரிந்துகொள்கிறீர்களல்லவா? ஒரே ஒரு முறை உங்கள் மனைவியை முழு இருளில் தவிக்கவிடுங்கள். அருகில், மிக அருகில் நீங்கள் ஒளிந்துகொள்ள வேண்டும். நீங்கள் ஒளிந்துகொண்டிருப்பது உங்கள் மனைவிக்குத் தெரியவே கூடாது. கவனம். அப்பொழுது அந்தக் கற்பனை தோன்றிய சிறிது நேரத்திற்குள்ளாகவே அச்சத்தால் நடுங்கத் தொடங்கிவிடுவார் உங்கள் மனைவி. அதாவது அவர் நம்மிடம் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்கும்பட்சத்தில். ஹி ஹி… கோபித்துக்கொள்ளாதீர்கள். சில வகையான மன நோய்களின் தாக்குதலுக்குள்ளானவர்கள் இப்படியெல்லாம் கற்பனை செய்துகொள்வது வழக்கம்தான். அப்படியிருக்கும் பட்சத்தில்கூட இந்த வகையான தெரபி அதைக் குணப்படுத்திவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். இருளில் நீங்கள் ஒரு மிருகம்போலப் பதுங்கிப் பதுங்கி அருகில் செல்லுங்கள். அதாவது அவர் தனது கற்பனையில் நிகழ்வதாகச் சொல்கிறாரே, அதேபோல. ஒரு முக்கியமான விஷயம் தாஸ், அந்தத் தருணத்தில் நீங்கள் முழு நிர்வாணமாக இருக்க வேண்டும். ஹி… ஹி… முன்பே சொன்னேனே, இது ஒரு தெரபியென்று. அச்சத்தின் விளைவாக உங்கள் மனைவி கூச்சலிடத் தொடங்குவார். ஒருவேளை அவர் கூச்சலிடலாம். தன்னைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டு உங்களைத் தாக்கவும்கூட முற்படலாம். திடுக்கிடாதீர்கள், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. நீங்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. ஒரு முறைகூட உங்கள் மனைவி அந்த இருள் மனிதனைத் தாக்குவதற்கு முற்பட்டதாகக் கூறவில்லை. பொதுவாக அதற்கு மேல் அவர் எதையும் சொல்வதில்லை. பல முறை வற்புறுத்திக் கேட்டும்கூட மறுத்துவிட்டார். அது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கொடிய வேதனையை அளிக்கும் ஒரு அனுபவமாக, அல்லது வெட்கப்படும்படியான கற்பனையாக இருக்கலாம். ஹி… ஹி… நாங்கள் முன்பே சொன்னதுபோல மனநோயில் பல வகைகள் இருக்கின்றன. நாங்கள் சொல்ல விரும்புவது இதுதான், தயவுசெய்து பின்வாங்கிவிடாதீர்கள். உங்கள் செயலில் ஒரு தீவிரம் இருக்க வேண்டும். வன்முறையின் சாயல் தென்பட வேண்டும். கவனம், நீங்கள் உங்களை எங்களில் ஒருவராகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்பட்டுவிடக் கூடாது. நீங்கள் உங்களுடைய சொந்த மனைவியை பலாத்காரம் செய்கிறீர்கள். வேடிக்கையாக இல்லை? ஹ… ஹ… ஹா. ஆல் த பெஸ்ட்..

சட்டென யார்மீதோ மோதிக்கொண்டேன். எனது மண்டையும் மற்றொரு மண்டையும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. சுதாரித்துக்கொள்ள முடியாமல் அப்படியே சரிந்து நடு ரோட்டில் மண்டியிட்டேன். என் கண்களுக்கெதிரே தென்பட்டது இருளின் வடிவம்கொண்ட ஓர் ஆணின் உருவம். நெடுநெடுவென நம்பவே முடியாத ஆகிருதி. பற்றிய கைகளில் சொரசொரக்கும் அடர்ந்த ரோமம். குப்பென்று உடல் முழுவதும் வியர்த்துவிட்டது எனக்கு.

ஸாரி சார்… வெரி ஸாரி.

மிஸ்டர், இருளிலும் பார்த்து நடக்கத் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் இருளில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மறுபடியும் ஒரு முறை வருத்தம் தெரிவித்துவிட்டுக் கைகளைப் பிடுங்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தான் அவன். பயந்திருப்பான். கோழை. ஆகிருதிக்குச் சம்மந்தமில்லாத கோழைத்தனம். அவனுடைய படுக்கையறையினுள்ளும் இருக்கக்கூடும் ஒரு எமர்ஜென்ஸி லாம்ப். தாஸ், இருளில் நடக்கும்பொழுது யாராவது நம் மீது வந்து மோதுவதைத் தவிர்ப்பதற்கு ஒரு அற்புதமான வழியுண்டாக்கும். அந்தத் தருணங்களில் நம்முடைய உதடுகளுக்கிடையில் சிகரெட் புகைந்துகொண்டிருக்குமானால்? ஹெட் லைட் மாதிரி ஒரு சிவப்பு நிற எச்சரிக்கைப் புள்ளி. ஹ… ஹ… ஹா…

உனது குழம்பிய கனவுகளில் உழலும் பிம்பங்களை என்மீது திணிக்க முயலாதே. ஈருடல், ஓருயிர் என்பன போன்ற ரொமாண்டிசிசங்களுக்கு என் மனதில் துளியும் இடமில்லை தாஸ். நாம் வெவ்வேறானவர்கள். வெவ்வேறு உடல்களையும் வெவ்வேறு மனங்களையும் கொண்டவர்கள். நமது விருப்பங்கள் வெவ்வேறு. கனவுகள் வெவ்வேறு. நமது தேவைகள், வெறுப்புகள், பயங்கள்…

வெவ்வேறு… வெவ்வேறு…

திரும்பும்பொழுது எனது உதடுகளுக்கிடையிலும் ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஒரு எச்சரிக்கைப் புள்ளி. எதிர்த்து வரும் எவரும் என்மீது மோதிக் கீழே தள்ளிவிட முடியாது. அது எனக்கொரு பாதுகாப்புக் கவசம். ஒரு தற்காலிக டேஞ்சர் லைட்… ஆனால் அது உனக்கொரு டேஞ்சராக்கும் சாரு. உன்னை எச்சரிப்பதற்கான சிவப்புப் புள்ளி. லட்சியக் கணவனாமே? ஏமாளித் தனத்தின் மற்றொரு பெயர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்.

முற்றிலும் எதிர்பாராதவிதமாக மழை பிடித்துக்கொண்டது. நாடகத்தில் தனக்குமொரு பங்குண்டு எனச் சொல்கிறது மழை. எனது விரலிடுக்குகளில் சிகரெட் புகைந்துகொண்டிருப்பதான கற்பனையில், மழை அதை அணைத்துவிடக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் விரல்களைக் குவித்து முதுகுக்குப் பின்னால் மறைப்பாகப் பிடித்துக்கொண்டேன். வெறும் தூறல் அல்ல, பெருமழை என்பதற்கான எச்சரிக்கைபோலப் பளீரென மின்னிற்று வானம். கூடவே பெருத்த இடியோசை. நல்லவேளையாக நான் அப்பொழுது நகரின் பிரதான சாலையொன்றில் நடந்துகொண்டிருந்தேன். சற்றுத் தொலைவில் தென்பட்டது தனது தலையில் சிறிய கூரையையும் சிறிதளவு பெட்ரோமாக்ஸ் விளக்கொளியையும் கொண்ட ஒரு பெட்டிக்கடை. அதன் முன்னால் ஆட்கள் குழுமியிருப்பது தெரிந்தது. புகலிடம் தேடுவதற்காகச் சாலையின் இருண்ட பகுதிகளிலிருந்து ஒரு சிலர் அந்தக் கூரையை நோக்கி ஓடி வருவதை நான் பார்த்தேன். நள்ளிரவில் கொட்டும் மழையில் சாலையிருளுக்குள் அலைபவன் நான் மட்டுமல்ல. எனக்கு முன்னால் எண்ணற்றோர் கடந்து போயிருக்கிறார்கள்; பலர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்தத் தனிமை ஒரு கற்பனை. மழை கற்பனைகளை அழிக்கிறது; பின்னிரவு நேரங்களில் தனிமையில் அலைந்து திரியும் மனிதர்களை அடையாளம் காட்டுகிறது. ஆனால் மற்ற பலரைப் போல நான் அரக்கப்பறக்க ஓடவில்லை. இந்த மழையை ரசிக்கிறவனைப் போன்ற பாவனையுடன் மெதுவாக நடந்தேன். ஓடுவது எனது மனதின் பதற்றத்தை அம்பலமாக்கிவிடக்கூடும் என நான் பயந்திருக்கலாம். மழையை எதிர்த்து நடப்பது ஒரு சாகசம் தாஸ். பெரு நெருப்பை ஒத்தது பெருமழை. கடவுளர்கள் உலகை அழிப்பதற்கு மழையையே ஆயுதமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆசிர்வதிக்கப்பட்ட உயிர்களுக்கு மாத்திரமே அடைக் கலம் கிடைக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் இல்லை. எல்லோரும் நோவா அல்ல. நோவாவுக்குப் பிறகு மனிதன் மழையைக் கண்டு அஞ்சத் தொடங்கிவிட்டான். மழை நம்மைப் பதற்றம் கொள்ளச்செய்கிறது, பயமுறுத்துகிறது, புகலிடம் தேடி ஓடச்செய்கிறது.

சுமார் பத்து சதுர அடிக்கும் குறைவான பரப்புக்கொண்ட அந்தச் சிறிய இடத்தில் குறைந்தபட்சம் இரண்டு டஜன் மனிதர்களாவது முண்டிக்கொண்டிருந்திருப்பார்கள். மழைச் சாரல் பாதியளவுக்கு மேல் அவர்களை நனைத்திருந்தது. எல்லோருமே ஓணான்களைப் போலக் கூரையடைப்புக்குக் கீழே கழுத்தை நீட்டி, மழையிலிருந்து தத்தம் சிரசுகளைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதான கற்பனையில் மூழ்கியிருந்தனர் எனத் தோன்றியது. எண்ணற்ற ஆண்களின் அந்தக் கூட்டத்தினிடையே, கிட்டத்தட்ட ஆணைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு பெண்ணும் முண்டிக்கொண்டிருந்தாள். எதனாலோ அவள் எனது கவனத்தை ஈர்ப்பவளாயிருந்தாள். ஒளியும் நிழல்களும் மாறிமாறி அவள் மேல் விழுந்துகொண்டிருந்தன. எனது பார்வையைச் சந்திக்க நேரும் ஒவ்வொரு தருணத்திலும் அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பு என்னை நோக்கியதா அல்லது கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டிருக்கும் வேறு யாரையாவது நோக்கியதா என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. அதை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு அவளைத் தெளிவாகப் பார்க்க முற்பட்டேன். ஆனால் நம்ப முடியாத அளவுக்கு நெரிசல் அதிகமாக இருந்ததாலும், மேலும் அதிகமான நிழல்கள் அவள்மீது கவிந்து, துல்லியமாகப் பார்க்க முடியாதவாறு அவளது உருவத்தைக் குழப்பியிருந்ததாலும் அவளது முகத்தில் தென்பட்டது சிரிப்பா அழுகையா என்கிற சந்தேகமும் தோன்றியது எனக்கு. நிழல்களின் அடர்த்தி கூடக்கூட அதற்கு நேர் விகிதத்தில் சோபையும் அழகும் கூடியதாகத் தோற்றமளிக்கத் தொடங்கியது அவளுடைய முகம்.

அந்தத் தருணத்தில், பைத்தியக்காரனைப் போலத் தென்பட்ட ஒருவன் கூரையடைப்புக்குள்ளிருந்து திடீரென வெளியே வந்து நடனமாடத் தொடங்கினான். எல்லோரது கவனமும் உடனடியாக அவன் மேல் குவிந்தது. ஆனால் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் ஆணைப் போல் தோற்றமளித்த அந்தப் பெண் கூரையடைப்புக்குள்ளிருந்து வெளியில் வந்து தானும் நடனமாடத் தொடங்கினாள். அவளைத் தொடர்ந்து மற்ற மனிதர்கள் எலலோரும் கூரையை விட்டு வெளியில் வந்து மழையில் சொட்டச்சொட்ட நனைந்தபடியும் சேற்றில் விழுந்து புரண்டபடியும் கூத்தாடத் தொடங்கினார்கள். உண்மையில் அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை என்னால் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. புகைபிடிக்க வேண்டுமென்ற விருப்பம் மீண்டும் தீவிரமாக என்னைப் பற்றிக் கொண்டது. மிகச் சிரமப்பட்டு என்னை விடுவித்துக்கொண்டு பெட்டிக் கடைக்காரரிடம் போய் ஒரு பாக்கெட் சிகரெட் வேண்டுமெனச் சொல்லிவிட்டு பர்சை எடுப்பதற்காக எனது சட்டைப் பாக்கெட்டைத் தேட முற்பட்டபொழுதுதான் எனது சட்டை பல துண்டுகளாகக் கிழிக்கப்பட்டிருப்பதை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. பர்ஸைக் காணவில்லை. மழையில் கூத்தாடிக்கொண்டிருக்கும் மனிதர்களில் யாராவது ஒருவன்தான் எனது பர்ஸைத் திருடியிருக்க வேண்டுமெனவும் அவர்களை விசாரிக்கும்படியும் யோசனை சொன்னான் அந்தப் பெட்டிக் கடைக்காரன். அவனது யோசனையை ஏற்றுக்கொண்டுவிட்ட பாவனையுடன் நான் அவர்களது ஆட்டத்தைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன்.

மழையின் தாளகதிக்கேற்றவாறு பிசிறில்லாமல் ஆடிக்கொண்டிருந்தது கூட்டம். ஒவ்வொரு குதிகாலிலும் நம்பவே முடியாத அளவுக்கு வேகமான சுழற்சி. எல்லா உடல்களும் ஒன்றோடொன்று பிரிக்கவியலாதவாறு ஒட்டிக்கொண்டுவிட்டதாகத் தோன்றியது. சீரற்ற, ஏற்றத்தாழ்வான வளர்ச்சியைக் கொண்ட பல கால்களும் உயர்ந்து தணியும் எண்ணற்ற கரங்களும் ஒரே உடலின் பல்வேறு பகுதிகளாகத் தோற்றமளித்தன. பிறகு மிகக் களைத்துப்போனவனைப் போல தென்பட்ட ஒருவன் அவர்களிலிருந்து தனியே பிரிந்துவந்து ஒரு தரம் சுழன்றாடிவிட்டு கழைக்கூத்தாடியைப் போல குட்டிக்கரணம் அடிக்கத் தொடங்கினான். யாரோ பலமாகக் கை தட்டினார்கள். மற்றொருவனோ இடையறாது விசிலடித்தான். குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருந்தவன் உற்சாக மிகுதியால் புதிதாக எதையோ செய்ய முற்பட்டு அப்படியே தலைகுப்புறச் சரிந்துவிட்டான். தொலைவிலெங்கோ நாய்களின் ஊளைச் சப்தம் கேட்டது. தொடர்ந்து சைரன்கள் அலறின. இதைக் கண்டு பீதியுற்றவர்களைப் போலப் பலரும் கூட்டத்திலிருந்து பிய்த்துக்கொண்டு தலை தெறிக்கும் வேகத்தில் ஓடி மறைந்தார்கள்.

கொட்டும் மழை; எதையும் பொருட்படுத்தாது சுழன்றாடிக்கொண்டிருக்கும் அம்மனுஷி. பெட்டிக் கடைக்காரனையும் என்னையும் தவிர அங்கு வேறு யாரும் தென்படவில்லை. நாய்களின் குரைப்புச் சப்தமும் சைரன்களின் ஒலியும் இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தன. முற்றாக நனைந்திருந்தபடியால் கிட்டத்தட்ட நிர்வாணமாகத் தோற்றமளித்தாள் அவள். போதை யூட்டும் கவர்ச்சி. குலுங்கிச் சுழலும் அவளுடைய அவயவங்கள், எனது காமத்தை அதன் உச்ச அளவை நோக்கிச் செலுத்திக்கொண்டிருந்தன. மிக விரைவில் நான் எனது சுய கட்டுப்பாட்டை இழந்துவிடப் போகிறேன் என நினைத்துக்கொண்டேன். நடன பாவனை மாறாமல் தன்னுடன் நடனமாட வருமாறு என்னைப் பார்த்துச் சைகை செய்தாள் அவள். அது புணர்ச்சிக்கானதொரு அழைப்பைப் போலத் தோற்றமளித்ததால் பெட்டிக்காரனின் இருப்பு காரணமாகத் தயங்கி நின்றுகொண்டிருந்தேன் நான். என்னை அவளோடு சேர்ந்து நடனமாடுமாறு பணித்தான் பெட்டிக் கடைக்காரன். ஒரு மிரட்டலின் தொனியைப் பெற்றிருந்த அவனது கட்டளையை ஏற்று நான் அவளுடன் சேர்ந்து நடனமாடுவதற்கான எனது சம்மதத்தைத் தெரிவித்தேன். அதைக் கேட்டு உரக்கச் சிரித்தான் அவன். நான் சிரித்துக்கொண்டே அவளை நோக்கி ஓடினேன்.

கொட்டும் மழை. நனைந்த ஆடைகளுடன் நடனமாடிக்கொண்டிருப்பவளான அவளும் கிழிந்த ஆடைகளுடன் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருக்கும் நானும். பெருகும் மழை வெள்ளத்தினுள் சுழலும் பாதங்களின் லயம் குன்றாத தாளம். எனது முழு உடலும் அதன் அணு ஒவ்வொன்றும் கொந்தளித்துக்கொண்டிருந்தது. இருள் முற்றாகக் கவிந்திருந்தபோதிலும் குறி தப்பாமல் பாய்ந்து ஒரு மிருகம்போல அவளை எனது கைப்பிடிக்குள் கொண்டுவந்திருந்தேன். வெற்று முனகலொன்று அவளிடமிருந்து வெளிப்பட்டது. பெண் அல்லது சிசு. புணர்ச்சியின் அடையாளம் அல்லது பிறவியின் தடயம்.

தாங்க முடியாத அதிர்ச்சிக்குள்ளானேன் நான்.

யாருடைய கட்டளைக்கோ கீழ்ப்படிந்ததைப் போல திடீரெனச் சுத்தமாக நின்றுவிட்டது மழை. செயலற்று நின்றேன் நான். எனது செயலின்மையைச் சாதகமாக்கிக்கொண்டு எனது பிடியிலிருந்து தப்பிப்போயிருந்தாள் அவள். இருளின் எல்லைகளற்ற வெளி. எல்லாச் சப்தங்களையும் விழுங்கிவிட்டு இருளுக்குள் பதுங்கியிருந்தது நிசப்தம். கைக்கெட்டும் தூரத்திற்குள்ளேயே அவள் பதுங்கியிருப்பாளென யூகித்தேன். ஆனால் அவளது பதுங்கலுக்கான காரணத்தை என்னால் யூகிக்க முடியவில்லை. விளையாட்டு அல்லது தந்திரம். தாக்குதலுக்கான அல்லது தப்பித்தலுக்கான தருணத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கக்கூடும். சுவாசமோ அசைவோ அற்றவளாக அந்தத் தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பாள் போலிருக்கிறது. ஆனால் தேங்கியிருக்கும் மழை வெள்ளம் அவளது எந்தவொரு சிறு அசைவையும் சப்தமெழுப்பிக் காட்டிக்கொடுத்துவிடுமென்பது நிச்சயம். சவாலான தருணம் அது. எனது செவிகளும் கண்களும் கூர்ந்தன. இருளின் அடர்ந்த பரப்பை வெறித்துக்கொண்டு வெகுநேரம்வரை அசைவற்றவனாய்க் கிடந்தேன். வெகுநேரத்திற்குப் பின்பு அசையத் தொடங்கியது இருள். மறுகணம் நிகழத் தொடங்கியது இருளின் பெருவெடிப்பு. என்னைச் சுற்றிலும் இருளுக்குரிய கருமை நிறத்தில் நெளிந்துகொண்டிருந்தன புழுக்கள். புழுக்களா அல்லது பெருவெள்ளமா? பெருவெள்ளம் எழுப்பும் பேரோசையே அது. எனது செவிப்பறைகள் அதிர்ந்தன. கேட்கும் திறனிழந்து செவிடனானேன் நான். செவிடன், அந்தகன். கைக்கெட்டும் தொலைவில் விரகத்தின் தணியாத விம்மல்களுடன் காத்திருக்கிறது அவ்வேதனையைத் தீர்க்கும் பெண்ணுடல்.

பெருவெள்ளத்துக்குள்ளிருந்து துள்ளியெழுந்து, இருளின் வடிவெடுத்து வந்து நின்றாள் அவள். தன் நனைந்த ஆடைகளைக் கழற்றியெறிந்தாள். என்னை நோக்கிக் குரூரமாய்ப் புன்னகைத்தபடி கனவில் வருவது போல நகர்ந்து வந்துகொண்டிருந்தாள். அச்சத்தாலோ வெட்கத்தாலோ கண்களை மூடிக்கொள்ள முயன்றேன். அவளோ இமைக்காத விழிகளுடன் என்னை நோக்கி வந்தாள். சேற்றுக்குள் உருண்டு கிடந்த என் தேகத்தைப் புரட்டினாள். நிக்கோடினின் கருத்த தடயங்களையுடைய எனது தடித்த உதடுகளை ஒரு இரையாகப் பற்றியிழுத்துக் கவ்வினாள். சாரு, நான் அவளைத் தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யாதவனாயிருந்திருப்பேன் என்று நினைத்துக்கொள்ளாதே. அவளிடமிருந்து என்னைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக அவளை இறுகத் தழுவி மூச்சுத் திணறச்செய்ய முற்பட்டிருந்தேன். ஆனால் தழுவிய கணத்தில் பெருகிற்று அவளது ஆகிருதி. தன் வலிய கரங்களால் அவளும் என்னைத் தழுவினாள். கடவுளே, மூச்சுத் திணறிற்றெனக்கு. தழுவியவளின் மேனியில் ரோமத்தின் அடர்த்தி; முத்தமிட்ட உதடுகளில் நிகோடினின் துர்நாற்றம். எனது மறுப்பு போராட்டமாயிற்று. நான் தப்ப முற்பட்டேன்; உதறி விடுவித்துக்கொள்ள முயன்றேன். அபயம் கோரிக் கூச்சலிடவும் விரும்பினேன்.

சாரு, நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்க விரும்பினேன். சேறு படிந்த உடலுடனும் கிழிந்த உடைகளுடனும் தளர்ந்த குறியுடனும் வீடு திரும்பியிருந்த நான் உனக்கு முன்னால் ஒரு குற்றவாளியாக நிற்பதற்கு விரும்பியிருந்தேன். என் உள்ளத்தில் உன்மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் நான் செலுத்தியிருந்த வன்முறைகளையும் உனக்கும் எனக்கும் இடையேயான உறவின் சிதைவுக்குக் காரணமான எனது மனதின் கோணல்களையும் ஒப்புக் கொண்டுவிட வேண்டுமென்ற வேட்கை நிரம்பியிருந்தது. இன்னமும் திறந்து கிடந்த கதவுக்குள் பதற்றம் நிரம்பியவனாய் உள்ளே நுழைந்திருந்த அந்தக் கணத்தில் கனவு அல்லது பிரமை எனத் தோன்றும்படியாக நமது படுக்கையறையினுள்ளிருந்து ஓடி வந்துகொண்டிருந்த அவனது ரோமம் மிகுந்த உடலை நான் பார்க்க நேராமலிருந்தால்? என்னைக் கண்டு அப்படி இகழ்ச்சியாகச் சிரிப்பதை மட்டுமாவது அவனால் கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்திருந்தால்?

எதிர்பார்ப்புகளும் நடப்புகளும் வெவ்வேறானவைகளாக்கும், தாஸ். இரண்டும் இரண்டு வெவ்வேறு விதிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

பிரமை அல்லது கனவு…

சாரு, என்னிடம் அப்போது ஒரு தடயமும் இல்லை. இப்போது கிடைத்திருக்கிறதே பாதி கருகியதொரு சிகரெட் துண்டு, அதுவோ அதையொத்த வேறு தடயங்களோ அப்போது எனக்குக் கிடைத்திருக்கவில்லை. நடைமுறை விதிகளை அனுசரித்து அப்போது அவனைத் தடுத்து நிறுத்தியிருப்பதற்கோ, அவன்மீது வன்முறையைப் பிரயோகித்து அவனிடம் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டிருப்பதற்கோ எனக்கு போதிய வலிமை இருந்திருக்கவில்லை. எனது இருப்பைச் சற்றும் பொருட்படுத்தாமல் இகழ்ந்து சிரித்துவிட்டு வெளியேறிப் போய்க்கொண்டிருந்த அவனது ரோமம் மண்டிய உடலைச் செயலற்றவனாக நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

கனவு அல்லது பிரமை… கற்பனை அல்லது பொய். இவ்வகைப்பட்டவையாக்கும் தாஸ், உனது குற்றச்சாட்டுகள். நீ பேச வேண்டியது ஒரு மனநோய் மருத்துவரிடமேயல்லாது மனைவியிடமல்ல. பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவற்றை ஒப்புக்கொள்ளுமாறு மன்றாடுகிறாய். நான் அவற்றைப் பொருட்படுத்தாத போதிலும், மன்னித்துவிட்டதாகப் பிதற்றுகிறாய். கோபமல்ல, உன் மேல் இரக்கமே ஏற்படுகிறது எனக்கு. ஏதாவதொரு சர்ச்சுக்குப் போ. அல்லது ஒரு மட்டரகமான மதுவிடுதிக்கு. முற்றிய மனநோயாளிகளுக்கான புகலிடங்கள் அவைகள்தாம்.

தேவாலயம் அல்லது மதுவிடுதி; பாதிரி அல்லது குடிகாரன்.

தாஸ், தேவைகளே நடைமுறைகளைத் தீர்மானிக்கின்றன. நடைமுறைவாதிகள் ஒருபோதும் கனவுகளையும் லட்சியங்களையும் பொருட்படுத்துவதில்லை. நடை முறைவாதிகளின் வெற்றிக்குப் பின்னாலுள்ள ரகசியம் இதுதான். தாஸ் இதுவரை எந்த லட்சியவாதி வெற்றி பெற்றிருக்கிறான் சொல்? அல்லது எந்த லட்சியம் வெற்றி பெற்றிருக்கிறது? வெற்றி பெற்றிருப்பதான மயக்கங்களே தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நமக்குக் கனவுகளும் லட்சியங்களும் தேவைப்படுகின்றன. இல்லாவிட்டால் குற்ற உணர்வுகளிலிருந்தும் தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் நம்மால் விடுபடவே முடியாமல் போயிருந்திருக்கும் தாஸ். அதனால்தான் நாம் லட்சியவாதிகளையும் கவிஞர்களையும் ஆன்மீகவாதிகளையும் கொண்டாடுகிறோம். அவர்கள் நம்மீது தம்முடைய கனவுகளைத் திணிக்கிறார்கள். அவர்களது மொழி நமக்கு போதை. ஆனால் தாஸ், நாம் சூட்டும் புகழ் மாலைகள் அவர்களுக்கு போதை. போதைக் கெதிராக போதை. கனவுக்கெதிராகக் கனவு. இது ஒரு வகையான தந்திரம், ஏமாற்று. இதைப் புரிந்து கொள்ளும்போது அவர்கள் இவ்வுலகைத் துறக்கிறார்கள். மற்றொரு லட்சியவாதி உருவாகிறான். அவர்கள் தங்கள் மூதாதையர்களை நிராகரிக்கிறார்கள். தங்களது புதிய கனவுகளையும் லட்சியங்களையும் நம்மீது திணிக்கிறார்கள். நமக்கும் கிடைக்கிறது தடையற்ற போதை. அதிலிருந்து நம்மால் ஒருபோதும் விடுபடமுடிவதில்லை.

தாஸ், நாம் பதற்றமடைகிறோம். உள்ளீடற்ற கோபங்களுக்கு இரையாகிளீ காரணமற்ற வன்முறைகளில் ஈடுபடுகிறோம். அடிப்படைகளற்ற வெற்றிகளும் நம்ப முடியாத தோல்விகளும் நமக்களிக்கப்பட்ட வாழ்வின் வெற்றுத்தாள்களை நிரப்புகின்றன. எந்தக் கவிஞனும் லட்சியவாதியும் இந்த வெற்றுத்தாள்களைப் பொருட்படுத்துவதில்லை. அவன் இவற்றை இகழ்ந்து சிரிக்கிறான், கிழித்தெறிகிறான். கிழித்தெறிந்தவற்றைப் பொறுக்கியெடுத்து புதிதாக ஒன்றைச் சமைக்கிறான் மற்றொருவன். நான்லீனியர் கொலாஜ், சர்ரியலிசம், எக்ஸிஸ்டென் ஷியலிசம்… கலைக்கெதிராகக் கலை, தத்துவத்திற்கெதிராகத் தத்துவம் தாஸ். இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. ஒருவரையொருவர் பழிவாங்கிக்கொள்கிறோம். நம்மைக் கவிஞர்களும் கவிஞர்களை நாமும்; சாத்தியமற்ற கனவுகளுக்கும் தவிர்க்கமுடியாத நடைமுறைகளுக்குமிடையே சிக்கி வதைபட்டுக்கொண்டிருக்கிறோம். புகை பிடிக்கிறோம், குடிக்கிறோம், முறை தவறிய கள்ளப் புணர்ச்சிகளில் ஈடுபடுகிறோம், பிறகு பிரார்த்தனை செய்கிறோம், கவிதைகளைப் படிக்கிறோம், தத்துவங்களை மேற்கோள் காட்டுகிறோம். முரண்பாடுகளைக் கற்பனையாகச் சமன்செய்யும் முயற்சிகளே இவை. ஒன்று, கவிஞர்களையும் லட்சியவாதிகளையும் முற்றாக இவ்வுலகிலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும். அல்லது இவ்வுலகை அவர்களுடையதாக்கிவிட வேண்டும். ஆனால் கனவு தாஸ், வெறும் கனவு. வழக்கத்தைவிட அதிகமாகக் குடித்துவிட்டேனென்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் சோடா ஊற்று, இட் ஈஸ் த ஹாட்டஸ்ட் பிராண்ட் ஆப் த விஸ்கிஸ்.

அப்படியானால் வாழ்க்கைக்கெதிராக, வாழ்க்கையோ?

தாஸ், நடைமுறைவாதி எப்போதும் விழித்திருக்க வேண்டியவன். விழித்திருப்பவன் கனவு காண முற்படுவது ஆபத்தானது. வெற்றிகரமான நடைமுறையாளனுக்கும் லட்சியக் கணவனுக்குமிடையே நீ போராடிக் கொண்டிருக்கிறாய். நீ உனது மனைவியைச் சந்தேகப்படுகிறாய்; கண்காணிக்கிறாய். இவையெல்லாம் கணவனாயிருக்கிற ஒவ்வொருவருக்கும் சமூகம் வழங்கியுள்ள உரிமை. யாரும் இதற்காக வெட்கப்படுவதுமில்லை. ஆனால் நீயோ குற்ற உணர்வுக்குள்ளாகி வதைபட்டுக்கொண்டிருக்கிறாய். தாஸ், ஒன்று, உனக்கு அவனது நாசியைப் பெயர்க்க முடிந்திருக்க வேண்டும். அல்லது அவனோடு கைகுலுக்கிக்கொள்ள முடிந்திருக்க வேண்டும். ஆனால் நீ வெறுமனே கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாய்; ஒப்புதல் வாக்குமூலங்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறாய்; நள்ளிரவு நேரங்களில் பூட்டிய அறைக்குள் உனது மனைவியின் முன்னால் வெறும் உள்ளாடைகளுடன் உட்கார்ந்து மன்னிப்புக் கோரி முழந்தாளிட்டுக்கொண்டிருக்கிறாயாமே? உனது தேவையென்ன தாஸ்? காதல்? காமம்? கனவை ஒரு தோளிலும் நடைமுறையை ஒரு தோளிலும் சுமந்து கொண்டிருக்கிறாய் நண்பா. ஒரு தோளில் கடவுளை, மற்றொரு தோளில் சாத்தானை. ஒன்றின் எடையை மற்றொன்று மிஞ்சிவிடாதபடி பார்த்துக்கொள்ளும் சமார்த்தியமும் உனக்கில்லை. பாலன்ஸை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள் உனது கடவுளும் சாத்தானும். நீயோ தனிமைப்பட்டுப் போயிருக்கிறாய்.

தனிமைப்படுத்தப்படுதல் ஒரு குரூரமான தண்டனை.

உன்னைப் பீடித்திருப்பது எய்ட்ஸ் தாஸ். இதற்கு மருந்தே இல்லை. வருங்கால மருத்துவ உலகம் எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிடலாம், ஆனால் சந்தேகத்திற்கு மருந்தே இல்லை. அது ஆட்கொல்லி நோய். ஆட்கொல்லி நோயாளிகளை யாரும் தீண்டுவதில்லை. அவர்களுக்குத் தனி அறை, தனிச் சாப்பாடு, தண்ணீர் செம்பும் படுக்கையும் அவர்களுக்குத் தனித் தனியானவை.

ஆனால் தாஸ், தனிமையை விரும்பாதவனை, அதை ஏற்றுக்கொள்ள மறுப்பவனை, ஒருபோதும் இந்த உலகம் தனிமைப்படுத்துவதில்லை. நீ புகைபிடிக்கிறாயா? மது அருந்துகிறாயா? வீடு திரும்பும்போது துர்நாற்றத்தை மறைக்க மறக்காமல் சூயிங்கம் போட்டுக்கொள்ள வேண்டும். முறையற்ற கள்ளப் புணர்ச்சிகளில் ஈடுபடுகிறாயா? ஆணுறை போட்டுக்கொள்ள மறந்துவிடாதே. சட்டபூர்வமான எச்சரிக்கைகள் இவை. சட்டப்படி நடப்பவனுக்குத் தனிமையின் குரூரமான தண்டனைகளில்லை. உனது மனைவியின் படுக்கையறைக்குள்ளும் கிடக்கலாம், உனக்கு சம்பந்தமில்லாத பிராண்டுகளின் கருகிய சிகரெட் துண்டுகளும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளும். அவற்றைப் பொருட்படுத்தாதே. கோபத்தைத் தாளிடப்பட்ட அறைக்குள்ளும் அன்பைப் பொது இடங்களிலும் வெளிப்படுத்தத் தெரிந்துகொள். உனது தோல்விகளையும் ஏமாற்றங்களையும் ரகசியமாகப் பராமரிக்கக் கற்றுக்கொள். இவைகளும் சட்டப்பூர்வமானவைகள்தாம் தாஸ். எல்லோராலும் உருவாக்கப்பட்டு ஒவ்வொருவராலும் பின்பற்றப்பட்டு வருகிற சட்டங்கள். இவற்றை நிராகரிக்கும்போதும் நீ தனிமைப்படுத்தப்படுகிறாய். ஆட்கொல்லி நோயாளிகளோடு சேர்க்கப்பட்டுத் தீண்டப்படாதவனாகிறாய். பிறகு உனக்காக ஒதுக்கப்படும் தனி அறைக்குள் புகுந்து காற்றுப் புக முடியாதவாறு கதவைத் தாளிட்டுக் கொண்டுவிட வேண்டியதுதான்.

மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே கதவைப் போல முக்கியமானது வேறொன்று இருக்க முடியாது தாஸ். பொறியியலாளர்களே அவற்றின் பிரும்மாக்கள் தாஸ். திட்டவட்டமான பயன்பாட்டு நோக்கங்களுக்காகவே அவர்கள் கதவுகளை உருவாக்கினார்கள். புறவுலகின் அபாயங்களிலிருந்து தற்காத்துக்கொள்வது முக்கிய நோக்கம். திருடர்களாலும் மிருகங்களாலும் கள்ளப் புணர்ச்சி செய்பவர்களாலும் நமது உடைமைகள் சேதப்படுத்தப்படலாம். அதனால்தான் ஒவ்வொரு கதவும் பூட்டப்படுகிறது. பூட்டப்பட்ட ஒவ்வொரு கதவின் முன்பாகவும் தொங்குகிறது ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்னும் எச்சரிக்கைப் பலகை. கதவுகளைப் பூட்டுவதற்கும் திறப்பதற்கும்கூடப் பல ஆலோசனைகள் உண்டு தாஸ். பூட்டிய பிறகு பூட்டை இழுத்துப் பார்த்துக்கொள்ளத் தவறக் கூடாது. பூட்டுக்களிலும் உண்டு போலிகள். தட்டுவது யார் என்பதைப் பற்றிய நிச்சயமில்லாமல் கதவைத் திறப்பது ஆபத்தானது தாஸ். அறிமுகமானவர்களானாலும் வரையறைகள் உண்டு; யார் யாரை எந்தெந்த நேரத்தில் எவ்வளவு தூரம்வரை உள்ளே வர அனுமதிக்கலாம் என்பவைகூட முன்பே திட்டமிடப்பட்டிருப்பவை தாஸ். பொறியியலாளர்களின் அபாரமான மூளைக்கு நமது வீடுகளே சான்றுகள். வரவேற்பறைகள், கூடங்கள், சமையலறைகள், புழக்கடைகள் மற்றும் படுக்கையறைகள். ஒவ்வொன்றின் வாயிலிலும் கதவுகள். கதவுக்குள் கதவுகள். கதவுகளில்லாமல் குடும்பங்களில்லை. படுக்கையறைகளை வடிவமைக்க வெறும் பொறியியல் அறிவு மட்டும் போதாது தாஸ், தேர்ந்த கலாஞானம் அவசியம். காமத்தைத் தூண்டும் கலை நுட்பத்தை அறிந்தவனே படுக்கையறைகளை வடிவமைக்கிறான். புணர்தலின் நுட்பங்களை அறிந்த நம் சிற்பிகள் காமத்தைக் கற்களில் செதுக்கினார்கள்; தச்சர்கள் கட்டில்களில் செதுக்கினார்கள்; கவிகளோ காற்றில் மகரந்தத் துகள்களைப் மிதக்கவிட்டார்கள். ஆனாலும் தாஸ், பூட்டிய அறைகளே புணர்தலுக் கேற்றவை. கதவைத் தட்டுபவர்களுக்கும்கூட. காலம் பற்றிய விழிப்பு அவசியம். தட்டும் நேரம் புணர்தலின் காலமாகவும் இருக்கலாம். அப்பொழுது ஓசைப்படுத்தாமல் வெளியேறிச் சென்றுவிட வேண்டும். புணர்பவர் கள்ளக் காதலர் என்றால் கதவைத் தள்ளிக்கொண்டு முன்னறிவிப்பின்றிப் பிரவேசிக்கும் உரிமை யாருக்கும் உண்டு தாஸ்.

தாஸ், நீயோ கதவுகளைப் பூட்டிக்கொள்ள மறந்துவிடுகிறாய். அல்லது திறந்துவைத்துவிட்டு உள்ளே பிரவேசிப்பவர்களைப் பற்றிய பிரக்ஞையற்றவனாயிருக்கிறாய். பூட்டிய அறைகள் பற்றிய எச்சரிக்கையுணர்வோ உனக்கு முற்றாக இல்லை. செயலில் இறங்கத் தெரியாமல் வெறுமனே பிதற்றிக்கொண்டிருக்கிறாய். தாஸ், கதவை விரியத் திறந்துகொண்டு உள்ளே போ, உனக்குக் கிடைக்கும் நிர்வாணத்தின் ஒரு தரிசனம்.

வெறும் ஒற்றை முனகலல்ல; சற்றே உரத்த தொனிகொண்ட சப்தம். விரகத்தின் கரை மீறிய வேதனையின் விளிம்பில் வெடித்துச் சிதறும் விம்மல்கள். உச்சத்தை எட்டியதன் அடையாளம். இல்லாவிட்டால் யோனியின் குறுகலான சுவர்களுக்கிடையே நசுங்கும் சிசுவின் முதல் சப்தங்கள்… வேண்டாம், ஆபத்தோடு விளையாடும் இந்த அபத்தம். பூட்டிய அறைக்குள்ளிருந்தல்ல, என்னிடமிருந்தே வருகின்றன இந்தச் சப்தங்கள். வெறும் விக்கல்கள்? உடலின் தாகத்தை உணர்த்தும் ஒரு சமிக்ஞை? இல்லை, மரணத்தின் முன்னறிவிப்பே இச்சப்தங்கள். புணர்ச்சியின் தடயமோ பிறப்பின் அடையாளமோ அல்ல. தனது மூதாதையர்களுக்குரிய இணைப்புகள் தேய்ந்துபோன மர நாற்காலியில், சுவாசத்தின் அறுந்த இழைகளோடு போராடிக்கொண்டிருக்கும் ஒரு உயிர் மரணத்திற்கெதிராக எழுப்பும் கண்டனமாகவும் இந்தச் சப்தங்களை எடுத்துக்கொள்ளலாம்.

வாழ்க்கைக்கெதிராக வாழ்க்கையென்றால் மரணத்துக்கெதிராக மரணம்தான், தாஸ்.

தற்கொலைகள் கடவுளின் சித்தத்திற்குட்பட்டவையல்ல. மரணத்தைக் கடவுளின் கைகளில் ஒப்படைக்க விரும்பாத சுயமரியாதையுடைய மனிதனின் தேர்வு. தற்கொலைகள் கடவுளின் இருத்தலுக்கெதிரான சவால். கடவுளைக் கொலை செய்ய மனிதன் மேற்கொண்டுவரும் இடையறாத முயற்சி. இதுவரையிலுமான எல்லா மரணங்களுமே தற்கொலைகள்தான் தாஸ், தெரியுமா உனக்கு?

ஹெஹெஹே…

கவிஞர்கள் தத்துவவாதிகளாகும்பொழுது உண்மை பேசத் தொடங்கிவிடுகிறார்கள். உண்மையை ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் பாதி உண்மை. முழுமையான உண்மை மிகக் குரூரமானதாக்கும் தாஸ். கவிதை அவர்களது ஆன்மாவில் பாய்ச்சிய அன்பின் விந்துத்துளிகள் செய்த கைங்கரியம். அல்லா விட்டால் தத்துவ தரிசனம் ஈவிரக்கமற்றதாயிருந்திருக்கும்; இதுவரையிலுமான எல்லா மரணங்களுமே தற் கொலைகள் என்பதற்குப் பதில் கொலைகள் என நிறுவுவதற்குத் தமது வாழ்நாட்களைச் செலவிட்டுக் கொண்டிருந்திருப்பார்கள் நம் கவிஞர்கள். மேற்குலகின் எண்ணற்ற தத்துவவாதிகளின் வரிசையில் நமது கவிஞர்களுக்கும் ஓரிடம் அளிக்கப்பட்டிருந்திருக்கும். அன்பு உண்மையை நிராகரிக்கிறது தாஸ். கடவுளை உன்னதத்தின் ஒரு வடிவமாகப் பார்க்கும் பேதமைகூட அன்பின் விளைவுதான். ஒரு கற்பிதத்துக்குக் கடவுளைப் பணியச் செய்து தனக்குப் பாதுகாப்புத் தேடிக்கொள்ள விழையும் வீண் முயற்சி. கடவுள் மனிதன் மேல் கொண்டிருப்பது அன்பல்ல, பழி; ஆதிப் பகைமையின் தீராத விளைவு. படைப்புச் செயலைத் தன்னிடமிருந்து பறித்துக்கொண்டுவிட்ட மனிதனை அன்பின் வடிவமான நமது கடவுளர்களால் ஒருபோதும் மன்னிக்க முடிந்ததில்லை. அதனால்தான் படைப்புச் செயலுக்கு ஆதாரமான புணர்ச்சியைப் பாவ காரியமாகச் சித்தரிக்கின்றன கடவுளர் தத்துவங்கள். பாவத்தின் சம்பளம் மரணம்; படைப்புச் செயலைத் தன் பொறுப்பில் வைத்துக்கொள்ள மனிதன் தரும் விலை. மனிதனால் படைப்புச் செயலை, அதற்கு ஆதாரமான புணர்ச்சியை ஒருபோதும் கைவிட முடிந்ததில்லை. ஆனால் கடவுளின் பழிக்குப் புணர்ச்சி ஒரு கருவி. புணர்ச்சியை முன்வைத்து நாம் ஒருவரையொருவர் சந்தேகிக்கிறோம்; ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொள்கிறோம்; ஒருவருக்கொருவர் போட்டியாளர்களாகிறோம்; மற்ற மனிதன் நரகமாகிறான்; ஒருவரை மற்றொருவர் அழிக்க முயல்கிறோம்.

படைப்புச் செயலை மட்டுமல்ல கடவுளின் காரியமான அழிவையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டான் மனிதன். விளைவோ பேரழிவு. கொலைபுரிதல் மனிதனுக்கு ஆறாவது அறிவாயிற்று தாஸ். நமது கடவுளர்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். அந்தச் சிரிப்புச் சப்தம் நமக்குக் கேட்பதில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் அன்பு மற்றுமொரு ஆயுதமாகிறது. நாம் நிராகரிக்கப் படுகிறறோம்; அவமானப்படுத்தப்படுகிறோம்; வலி தாளாமல் தற்கொலையை நாடுகிறோம். கொலையும் தற்கொலையும் மரணத்தின் இரு பக்கங்கங்கள் தாஸ்.

ஹெஹ்ஹே…

உட்புறமாகத் தாளிடப்பட்ட அறைக்குள் நிர்வாணமாக உறங்கிக்கொண்டிருக்கிறது எனது நரகம். எனது கடவுளோ கைகொட்டிச் சிரித்துக்கொண்டிருக்கிறான். என் முன்பாக வைக்கப்பட்டிருக்கின்றன மரணத்தின் இரு வழிகள். கொலை அல்லது தற்கொலை. நாணயத்தின் இருவேறு பக்கங்கள். முழுமை பெறாத தத்துவ தரிசனம் முன்வைக்கும் அரைகுறை உண்மை, அல்லது நடைமுறை சார்ந்த ஒரு தீர்க்கமான முடிவு. தனது மூதாதையர்களுக்குரிய மர நாற்காலியில் சுவாசத்தின் கடைசித் துளிகளை மிதக்க விட்டுவிட்டுப் பாதி திறந்த விழிகளுடன் பிரேதமாய் உறைந்து கிடக்கும் ஒரு இரங்கத்தக்க மனிதன் அல்லது தனது படுக்கையறையினுள் மனைவியையும் அவளது கள்ளக் காதலனையும் கொலை செய்துவிட்டு ரத்தம் தோய்ந்த கரங்களை உயர்த்திச் சரணடையக் காத்திருக்கிற ஒரு சுயமரியாதையுள்ள கணவன். சந்தேகப் பேர்வழி, குரூரமான மன நோயாளி.

எனது மர நாற்காலியின் தேய்ந்துபோன இணைப்புகளிலிருந்து சப்தமெதுவும் எழுந்துவிடாதபடி மிகக் கவனமாக எழுந்து நின்றேன். திடீரென ஓங்கியெழுந்து பின்பு தணிந்தது மெழுகுச் சுடர். தனது பதுங்கு குழியிலிருந்து வெளிப்பட்டு முழுக் கூடத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டது இருள். கணத்துக்கும் குறைவான நேரம் எனது விழித்திரையில் நீடித்திருந்த வெளிச்சத்தின் கடைசிக் கீற்று பிறகு ஒரு கரப்பானைப் போலத் தப்பியோடித் தானும் இருளுக்குள் பதுங்கிக்கொண்டது. இருளின் பெருவெளிக்குள் அந்தகனைப் போல மெழுகுவர்த்தி இருந்த இடம் நோக்கி நகர்ந்தேன். எனது கைப்பிடிக்குள்ளிருந்து தன்னிச்சையாக நழுவி இருளுக்குள் சிதறியது பாதி கருகிய சிகரெட் துண்டு, எனது சந்தேகத்திற்கான ஒற்றை ஆதாரம்; மன ஆரோக்கியத்தின் தடயம். பதற்றம் கொண்டு கைகளை வீசினேன். இன்னதென யூகிக்கவியலாத ஒரு கனமான பொருளின் மீது மோதிற்று என் மண்டை. உலோகம் அல்லது கண்ணாடியாலான ஒரு பொருள் பேரோசையுடன் கீழே விழுந்து நொறுங்கியது. சரிந்து பிரார்த்தனை செய்பவனைப் போலத் தரையில் மண்டியிட்டேன். எனது பிரக்ஞையின் இணைப்புக் கண்ணிகள் தளரத் தொடங்கின. கண்கள் செருகத் தொடங்கின. செயலின்மையின் மீள முடியாத சதுப்புக் குழிக்குள் மூழ்கத் தொடங்கியது எனது மூளை.

தூங்குவதற்கு முயல்கிறேனா என்ன?

சாரு, உறங்குவதுபோலப் பாசாங்கு செய்துகொண்டிருக்கிறாய் நீ. உனது நாசித் துவாரங்களிலிருந்து பெருகும் சப்தங்கள் பொய்யானவை. பாதி திறந்த உனது விழிகள் நமது படுக்கையறைக் கதவின் பளபளப்பான உட்பரப்பை எச்சரிக்கையுடன் கவனித்துக்கொண்டிருக்கின்றன. எனது மூதாதையர்களுடைய இம்மரநாற்காலியிலிருந்து எழும் சப்தங்களைத் துல்லியமாகக் கண்காணித்துக்கொண்டிருக்கிறது உனது மூளை. இங்கே கூடத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக யூகித்திருப்பாய். தாக்குதலுக்கானவையும் தற்காத்துக் கொள்வதற்கானவையுமான ஆயுதங்களை எப்போதும் பராமரித்துவருபவள் நீ. உறக்கமல்ல, பதுங்கல் உன்னுடையது. தாக்குதலுக்கும் தப்பியோடுவதற்குமான பதுங்கல். தப்பியோடுவதற்கும் பாய்ச்சலின் நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும் சாரு.

நான் உன்னிடம் எதுவும் கேட்கப்போவதில்லை. என்னை ஏமாற்றிவிட்டுத் தப்பியோடுவது சுலபமானது. ஒற்றை ஆதாரமாய் என்னிடம் எஞ்சியிருந்த பாதி கருகிய சிகரெட் துண்டு, இப்போது இருளின் மூடிய உள்ளங்கைகளுக்குள். போகும்போது அதைத் தனது கைப்பிடிக்குள் கொண்டுபோய்விடுவான் இருளின் வடிவம் கொண்டவன். நீ எனது கேள்விகளைப் பொருட்படுத்தப்போவதில்லை. சாரு, கனவை ஒரு தோளிலும் நடைமுறையை ஒரு தோளிலும் சுமந்துகொண்டிருப்பவள் நீ. ஒரு தோளில் கடவுளை, மற்றொரு தோளில் சாத்தானை. ஒன்றின் எடையை மற்றொன்று மிஞ்சிவிட முடியாதபடி பார்த்துக்கொள்ளும் சாமர்த்தியம் உனக்கிருக்கிறது. நீ ஒரு போதும் பாலன்ஸை இழப்பதில்லை. உனது கடவுளுக்கும் சாத்தானுக்கும் தடுமாற்றத்தின் துன்பங்களில்லை. ஒருவரின் இருப்பை மற்றவர் அறிந்துகொள்வதற்கான விருப்பம்கூட இல்லாமல் அவரவருக்கும் உரிய இடத்தை அவரவரும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கிடையேயான உரையாடல்கள் இனி ஒருபோதும் தொடர முடியாது சாரு. எனக்கும் பிடிபடும் வாழ்வின் சூட்சுமம். கடவுளையும் சாத்தானையும் சமரசப்படுத்தும் வித்தை எனக்கும் கைகூடிவிட்டால், அவரவருக்குமுரிய இடங்களை அவரவருக்கும் பகிர்ந் தளித்துவிட முடியுமானால்?

துரோகத்திற்கெதிராகத் துரோகமாக்கும்? முத்தமிட மறுக்கும் உதடுகளைப் பழிவாங்க நிகோடினின் துர்நாற்றம், இல்லையா… தாஸ்? ஹ… ஹ… ஹாணண. உனக்குப் புகை பிடிக்காமலும் இருக்க முடியாது, சந்தேகப்படாமலும் இருக்க முடியாது. ஆனால் இரண்டையும் விட்டொழித்துவிடுவதாகச் சத்தியம் செய்து தந்திருக்கிறாய். லட்சியக் கணவன் என்ற பெருமையைச் சுமக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறாய்.

தாஸ் சார், கங்கிராஸ்ட்ஸ். புகைபிடிப்பதை விட்டுவிட்டீர்களாமே? இல்லத்தரசியின் நிபந்தனையா? இல்லை, சுய முடிவா? முத்தங்களுக்காக ஆண்கள் எவ்வளவு சத்தியமும் செய்வார்கள். ஹ… ஹ… ஹாணண. எனது கணவரும்கூட இப்படித்தான் சத்தியம் செய்து கொடுத்தார். எனக்குச் சந்தேகம்தான். தொடர்ந்த கண்காணிப்பில் ஒரு நாள் கையும் களவுமாகப் பிடித்துவிட்டேன். பாத்ரூமில் பாதி கருகியதொரு சிகரெட் துண்டு. அவரது திருட்டுத்தனத்திற்கான ஆதாரம். சார், நீங்கள் சாருவை ஏமாற்றாமலிருந்தால் சரிதான். நிஜமானதொரு ஐடியல் ஹஸ்பெண்ட் இல்லையா…? ஆல் த பெஸ்ட்…

ஹிஹிஹி.

சந்தேகத்திற்கெதிராகச் சந்தேகமோ?

சந்தேகமே அறிதலின் ஆரம்பம். புலனாய்வாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் அதுவே பற்றுக்கோடு. தீராத சந்தேகங்களே மகத்தான கண்டுபிடிப்புகளுக்குப் பாதையமைக்கின்றன. சந்தேகத்தை அடிப்படையாகக்கொண்ட இடையறாத கண்காணிப்புகளின் மூலமாகவே லட்சியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இல்லாவிட்டால் லட்சியவாதிகள், கொண்ட லட்சியங்களிலிருந்து பிறழ்ந்து போய்விடுவார்கள். சிதைந்த நுரையீரல்களும் நிகோடினின் துர்நாற்றம் படிந்த உதடுகளும் லட்சியக் கணவர்களுக்குரிய அடையாளங்களில்லை என்பதை லட்சியக் கணவர்கள் ஒருபோதும் உணர்ந்துகொள்வதில்லை. இனி ஒருபோதும் புகைபிடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துகொடுப்பார்கள். ஆனால் ரகசியமாகப் புகைபிடித்துவிட்டு, சூயிங்கம் மென்ற வாயுடன் வீடு திரும்புவார்கள். அவர்களால் முத்தங்களையும் இழக்க முடியாது, சிகரெட்டுகளையும் இழக்க முடியாது.

ஆனால் முத்தங்களுக்காகப் பொய் சொல்லும் இயல்புடையவர்களாக்கும் லட்சியக் கணவர்கள். அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்களது நுரையீரல்களையும் உதடுகளையும் பாதுகாப்பது லட்சிய மனைவிகளுக்குரிய கடமை. புகைபிடிக்கும் லட்சியக் கணவர்களைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்கு முத்தங்களே பொறி. இதற்கு மிகுந்த சாமர்த்தியமும் நடிப்புத் திறனும் வேண்டும். வீடு திரும்பியதும், குளியலறைக்குப் போய் முகம் கைகால்கள் கழுவுகிற சாக்கில் தனது உதடுகளில் படிந்திருக்கும் நிகோடினின் துர்நாற்றத்தை அகற்றிவிட்டு வருவதற்கான சிறு வாய்ப்பையும் லட்சியக் கணவர்களுக்கு அளித்துவிடக் கூடாது. வீட்டுக்குள் நுழையும்போதே லட்சிய மனைவி தனது உதடுகளில் புன்னகையும் விழிகளில் காதலும் பெருகி வழியுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சந்தேகத்திற்கு இடமளிக்காமல் நெருங்கி சட்டைப் பித்தான்களைக் கழற்றவும் காதல் ரசம் சொட்டச் சொட்டப் பேசவும் மிக லாவகமாகத் தனது அணைப்பிற்குள் கொண்டுவரவும் சுவாசத்தை நுகரவும் தெரிந்திருக்க வேண்டும். நுகர்வின் மூலம் வித்தியாசமான வாடை எதையும் உணர முடியாத பட்சத்தில் அதீதமான காதலுணர்வுக்கு இரையாவதுபோலவும் உணர்ச்சிகள் குமிழியிடுவது போன்ற பாவனையிலும் முற்றிலும் கட்டுப்பாடற்ற விதத்தில் அன்பைப் பறிமாறிக்கொள்ள முனையும் தோற்றத்திலும் நிகோடினின் நாற்றம் படிந்த உதடுகளை அழுத்தமாக முத்தமிடுவதற்கு ஒரு லட்சிய மனைவிக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

ஹெஹ்ஹே…

அதிக அன்பு வேசிகளுக்குரியது தாஸ். அதிக அன்பும் அதிகக் கோபமும் உணர்வுகளின் அதீதமான வெளிப்பாடுகளும் வேசிகளுக்குரியவை. வேசிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்குமிடையேயான உறவும் கணவனுக்கும் மனைவிக்குமிடையேயான உறவும் வெவ் வேறானவையல்ல தாஸ். குடும்ப அமைப்பும் விபச்சார விடுதிகளும்கூட வெவ்வேறானவையல்ல. இரண்டுமே செக்ஸுவல் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளச் சமூகம் அனுமதித்திருக்கிற ஏற்பாடுகள். வெளிப்படையாகத் தெரியவந்திருக்கிற சில வேறுபாடுகள், அந்தந்த அமைப்புகளின் நிர்வாகம் சார்ந்தவையே அல்லாமல் சாராம்சம் சார்ந்தவைகளல்ல.

ரணப்படுத்தப்பட்டதொரு மனதில் கூக்குரல். ஆரோக்கியமானவையென்ற மயக்கத்திலிருக்கும் மூடிய மனங்களுக்கு எரிச்சல். எரிச்சலல்ல, வலி; தாங்க முடியாத வேதனை. ரணப்படுத்தப்பட்ட மனம் எல்லா மனங்களையும் ரணப்படுத்தித் தனது ரணத்தின் இருப்புக்கு அர்த்தம் தேடிக்கொள்கிறது.

எதிர்ப்பின் சிறு பொறியொன்று எனக்குள் எழுந்து சாம்பலாய் உதிர்ந்தது; கிறீச்சிட்டு நின்றது நானும் நண்பனும் பயணம் செய்துகொண்டிருந்த ஆட்டோ . வன்மம் கொண்டவனாக எங்களை நோக்கித் திரும்பியிருந்தான் நடுத்தர வயதைக் கடந்தவனான டிரைவர். அவனது பருத்த தேகத்தையும் துருத்திய பல்வரிசையையும் முகத்துக்கு வெளியே நீண்ட தாடைகளையும் ரோமங்களற்ற முன் கையையும் கொண்டு, அவன் தனது மனைவியின் அதீதமான காமத்துக்கு ஈடுகொடுக்க முடியாதவன், அது சம்பந்தமான தாழ்வு மனப்பான்மைக்கும் குற்ற உணர்வுக்கும் உள்ளாகி வதைப்பட்டுக்கொண்டிருப்பவன் என யூகிப்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன என்று அவன் போன பிறகு சொன்னான் எனது நண்பன். அவன் இதைச் சொல்லி முடித்ததும் தாங்க முடியாத சுய அருவருப்புக்காளானேன் நான். அவனை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு ஓடிவிட வேண்டுமென்ற எண்ணமும் தோன்றிற்று.

ஆனால் நண்பன் உரத்த தொனியில் சிரித்துக்கொண்டிருந்தான். எங்களை இறங்கிக்கொள்ளுமாறு மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொண்டிருந்தான் ஆட்டோ டிரைவர். ஒரு நேரடியான வன்முறைக்கான தயார்நிலையாகவும் அவனது பணிவு எங்களுக்குத் தென்பட்டது. நாங்கள் இறங்க வேண்டிய இடம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட முயன்றபோது அது தனக்குத் தெரியுமென்றான். தொடர்ந்து ஒரே ஆட்டோ வில் பயணம் செய்வது இரு தரப்பினருக்குமே ஆரோக்கியமானதாக இருக்காது எனத் தான் கருதுவதாகவும் சொன்னான். வெகு சிரமப்பட்டுத் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது. அதுவரையிலுமான பயணத்திற்கு நாங்கள் கணக்கிட்டுக்கொடுத்த சொற்பத் தொகையை வேண்டாவெறுப்பாக வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு தலைதெறிக்கும் வேகத்தில் தனது வாகனத்தைச் செலுத்தி மறைந்தான்.

வேறொரு ஆட்டோ வை அமர்த்திக்கொள்ளும் எனது யோசனையைப் புறக்கணித்துவிட்டு நடக்கத் தொடங்கினான் நண்பன். மனிதாபிமானமற்றவன், குறைந்தபட்ச நாகரிகத்தையும்கூடப் பின்பற்றத் தெரியாதவன் என அந்த ஆட்டோ டிரைவரின் மீது வசைமாறிப் பொழிந்தபடி நானும் அவனுடன் நடக்கத் தொடங்கினேன். எனது வசைச் சொற்களில் எதிர்மறையாகப் பயன்படுத்தப்பட்ட அந்த இரண்டு வார்த்தைகளையும் தான் வெறுப்பதாகவும் இனி ஒருபோதும் அவற்றைத் தன் முன்னால் உச்சரிக்கத் துணிய வேண்டாமெனவும் மிகக் கடுமையான குரலில் எச்சரித்துவிட்டு நடையின் வேகத்தைத் துரிதப்படுத்தினான் நண்பன். நான் அந்த இடத்திலேயே அசைவற்று நின்று சில வினாடிகள்வரை அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவனது கால்கள் பின்னின, ஆனால் நடையின் வேகம் தணியவில்லை. ஒருவித எச்சரிக்கையுணர்வுடன் நடையின் வேகத்தைக் கூட்டியவன் பிறகு ஓடத் தொடங்கினான். தனித்து விடப்பட்டதனால் உருவான அச்சத்தின் விளைவாகவோ என்னவோ, நானும் அவனைப் பின்பற்றி ஓடத் தொடங்கினேன். பிடித்துவிடுவேன் என நம்பிய தருணத்தில் அவன் நின்றுவிட்டான். மூச்சிரைக்கத் துரத்திக்கொண்டு வரும் என்னைத் திரும்பிப் பார்த்து உரக்கச் சிரித்தான். இருமவும் செய்தான். தொடர்ந்து சில கணங்கள் இருமித் தீர்த்து, களைப்புற்றவனைப் போல நடு ரோட்டில் கால்களை நீட்டி மல்லார்ந்து படுத்துக்கொண்டான். நானும் அவனருகே சென்று உட்கார்ந்துகொண்டேன்.

சட்டையைக் கழற்றி வீசிவிட்டு விரலிடுக்கில் புகைந்துகொண்டிருந்த சிகரெட்டை நுனிவரை உறிஞ்சிவிட்டு எஞ்சியிருந்த அடிநுனியைக் காற்றில் செங்குத்தாகச் சுண்டிவிட்டான். சில அடிகள் மேல் நோக்கிப் பாய்ந்த சிகரெட் துண்டு அதே செங்குத்துக் கோணத்தில் அவனது மார்பைக் குறிவைத்து இறங்கியது. அதன் நுனியில் கனன்ற நெருப்பைக் கண்டு பதறி அவனை அப்புறப்படுத்த முனைவதற்குள் மிக லாவகமாகப் புரண்டு அதிலிருந்து தப்பித்துக்கொண்டான். விழுந்து நொறுங்கிய சிகரெட் துண்டிலிருந்து சிதறிய நெருப்புத் துணுக்குகள் தார்ச் சாலையின் மேலாகச் சிறிது தூரம்வரை பறந்து சென்று மறைந்துபோயின. மீண்டும் சிரிப்புப் பீறிட்டது அவனுக்கு. ஆனால் ஓயாமல் பெருகிய இருமல் அவனது சிரிப்பைத் தடை செய்தது.

அவனுடனான உறவு குறித்து முதல் முறையாக எனக்கு அச்சம் மூண்டது. வெகுநேரம்வரை எதுவும் பேசாமல் உட்கார்ந்துகொண்டிருந்தேன். தனது வலது கைச் சுட்டுவிரலை உயர்த்தி நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான் அவன்.

தாஸ், ஏதாவதொரு ஆட்டோ வைப் பிடித்துப் பேசாமல் வீடுபோய்ச் சேர். சுய பாதுகாப்புக்கு ஆபத்து நேரும்பொழுது வார்த்தைகளின் தளுக்கு விளையாட்டை யாராலும் ரசித்துக்கொண்டிருக்க முடியாது. எல்லா விளையாட்டுகளுமே ஏதாவதொரு தருணத்தில் ஆபத்தானவையாகிவிடுகின்றன.

உரக்கச் சிரித்து எழுந்து கைகளை உதறிக்கொண்டு ஓட்டமெடுத்தான். சில அடிகளைக் கடந்தபின் சரிந்து தலைகுப்புற விழுந்தான்.

எனது உடல் முழுவதிலுமிருந்து துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. அவனுடைய இரு கடைவாய்களிலிருந்தும் வழிந்திருந்த இறந்த செல்களையுடைய குருதியும் நொதித்துப்போன ஆல்கஹாலும் புளித்த உமிழ்நீரும் எனது மார்புப் பள்ளத்தினூடாகக் கீழிறங்கி வயிற்றில் தேங்கியது. சாலையை ஒட்டியிருந்த குண்டும் குழியுமான பிளாட்பாரத்தில் அவனைக் கிடத்திவிட்டு ஏதாவதொரு ஆட்டோ அல்லது காரைப் பிடிக்கும் எண்ணத்துடன் சாலையின் இரு முனைகளையும் கவனித்துக்கொண்டிருந்தேன். போக்குவரத்து நெரிசலற்ற நெடுஞ்சாலையில் கண்மூடித்தனமான வேகத்தில் எதிரெதிராக விரைந்துகொண்டிருந்த வாகனங்களில் எதுவும் என்னைப் பொருட்படுத்தவில்லை.

ஆனால் இதை நீ மனிதாபிமானம் எனச் சொல்லிக்கொள்ள விரும்புகிறாயாக்கும்?

இது ஒரு வகையான ஒப்பந்தம் தாஸ், சுய பாதுகாப்பை முன்னிட்டு ஒருவர் மற்றவரோடு செய்துகொள்ளும் ஒப்பந்தம். இப்பொழுது நீ எனக்குச் செய்துகொண்டிருப்பவைகளை நாளையேகூட நான் உனக்குத் திருப்பிச் செய்ய நேரலாம். ஏதாவது காரணத்தைச் சொல்லி நான் மறுக்க நேர்ந்தால் மனிதாபிமானமற்றவனென்றோ நன்றி கெட்டவனென்றோ உனது மொழிக் கிடங்கின் தரத்திற்கேற்றவாறு எதையாவது சொல்லி என்னைக் குற்றம்சாட்டுவாய். என்னை நிரூபித்துக்கொள்ளும் பொருட்டு நானும்கூட உனக்கு உதவும் ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். பரஸ்பர நலன்களைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டே நாம் இதைப்போன்ற வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்துகொண்டிருக்கிறோம். சுயநலத்துடன் தொடர்புபடுத்தாமல் மனிதாபிமானத்தை, சுயபாதுகாப்புடன் தொடர்புபடுத்தாமல் நாகரீகத்தை நம்மால் விளக்கிவிட முடியும் என உன்னால் நம்ப முடிகிறதா? தாஸ், சுயநலமும் சுயபாதுகாப்பும் இயற்கையான உயிரியல் செயல்பாடுகள். மிருகங்களுக்கும்கூட இதே உணர்வுகள் உண்டு. மனிதனே மேம்பட்ட மிருகம்தான், இல்லையா தாஸ்? வேறுபாடுகளைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் மனிதன் உணர்வு பூர்வமானவன் எனச் சொல்லலாம். உணர்வுபூர்வமானவன், தந்திரமானவன், பிறப்பும் இறப்பும் மனிதனுக்கும் மிருகத்துக்கும் பொது. பிறப்பும் இறப்பும் புணர்ச்சியும். ஆனால் மிருகங்கள் வம்ச விருத்தியை முன்னிட்டே புணர்கின்றன. புணர்ச்சிக்காகவே புணர்ச்சி என்பது மனிதனுக்கு மட்டும்தான் தாஸ். மிருகங்கள் குடிப்பதில்லை, புகைபிடிப்பதில்லை, நிகோடினின் துர்நாற்றத்தை மறைக்க சூயிங்கம் மென்ற வாயுடன் எந்த மிருகமும் தனது வீட்டுக்குத் திரும்புவதில்லை. திருட்டுத்தனத்தைக் கண்டுபிடிக்கத் தனது இணையை முத்தமிட வேண்டிய நிர்பந்தம் எந்த மிருகத்திற்கும் இல்லை தாஸ்.

நீ என்னை மிருகம் எனக் குற்றம்சாட்டினாய். மிருகம், காமுகன், மன நோயாளி…

ஏற்கனவே நான் உனது அணைப்புக்குள் வந்திருந்தேன். சாரு, உனது விழிகளில் காதலும் காமமும் பெருகி வழியுமாறு பார்த்துக்கொள்வதில் வெற்றிபெற்றிருந்தாய். எனது சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாகக் கழற்றிக்கொண்டே காதல் ரசம் சொட்டச்சொட்டப் பேசிக் கொண்டிருந்தாய். எனது சுவாசத்திலிருந்தும் உதடுகளிலிருந்தும் நிகோடினின் துர்நாற்றத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாமல் போனபோது மிக லாகவமாக உன்னை விடுவித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினாய். உனது கருவிழிகளுக்குள் ஏமாற்றத்தின் கொடிய மிருகங்கள் நடமாடுவதை நான் கவனித்தேன். வசீகரமான உனது முகப் பரப்பெங்கும் வன்மத்தின் மிக ரகசியமான துடிப்புகள். ஆனால் ஒரு கணம் ஏமாந்துவிட்டாய். அதீதமான காமத்துக்கும் குமிழியிடும் உணர்ச்சிகளுக்கும் இரையாகிக்கொண்டிருக்கிறேனென்று நினைத்தாய். லாவகமாக என்னிடமிருந்து விடுவித்துக்கொள்ளும் உனது முயற்சியைத் தொடர்ந்தாய். செல்லமாக முனகுவது போன்ற பாவனையில் எனது செவிகளில் எதையோ கிசுகிசுக்கவும்கூடச் செய்தாய் இல்லையா சாரு? ஆனால் உனது உதடுகளைக் கவ்விக்கொண்ட அந்தக் கணத்திலேயே உனக்கு எனது வன்மம் புரிந்துபோயிருக்க வேண்டும். நீ பதற்றமடையத் தொடங்கினாய். பதற்றத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் விடுவித்துக்கொள்ளும் உனது முயற்சியைத் தீவிரப்படுத்தினாய். ஆனால் எனது பிடி இறுகியிருந்தது. உனது முயற்சியில் உன்னால் கொஞ்சம் கூட வெற்றிபெற முடியவில்லை.

நான் சிரிக்கத் தொடங்கியதும் உனக்கு எல்லாம் தெளிவாக விளங்கிவிட்டது சாரு. கை கால்களை உதறத் தொடங்கினாய். நான் உனது உள்ளாடைகளைக் கிழித்தெறிய முற்பட்டதும் நீ என்னை உனது கூரிய நகங்களால் பிறாண்டினாய். எனது தோள்பட்டையைக் கடித்துக் காயப்படுத்தவும் உனக்கு முடிந்திருந்தது. பதிலுக்கு நானும் உனது உதடுகளைக் கடித்தேன். அதீதக் காமம் கொண்டவனைப் போல எனது நகங்களால் உனது மென்மையான மார்பகங்களைப் பற்றிப் பிசைந்தேன், கடித்தேன், அவற்றின் காம்புகளிலிருந்து குருதி கசியத் தொடங்கியிருந்தது. வலி தாளாமல் நீ கூச்சலிடத் தொடங்கினாய், கதறினாய், என்மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக விம்மல்களூடே எச்சரித்தாய். பிறகும் வெகுநேரம்வரை உன்னால் உடைகளைத் திரும்ப அணிந்துகொள்ள முடியவில்லை. இதே மர நாற்காலியில், வெறும் உள்ளாடைகளுடன் உட்கார்ந்தபடி நான் நிதானமாகப் புகைபிடித்துக்கொண்டிருந்தேன். சாரு, எனது நுரையீரல்களிலிருந்து வெளிவந்த நிகோடினின் துர்நாற்றம் மிகுந்த சிகரெட் புகை உன்னை முற்றுகையிட்டு விளையாடிக்கொண்டிருந்ததை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

பின்னர் ஒப்புதல் வாக்குமூலங்களும் மன்னிப்புக் கோரல்களும்.

சாரு அந்தத் தருணத்தில் நாமிருவரும் அதீதமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாகவும் முற்றிலும் சுய கட்டுப்பாடற்ற முறையில் நடந்துகொண்டுவிட்டதாகவும் நமக்கு நாமே பரஸ்பரம் சமாதானம் சொல்லிக்கொண்டோ ம். அப்படியொரு பொய்யான சமாதானம் நமக்கிடையே ஏற்படாதிருந்திருந்தால், அந்த நிகழ்வை ஈவிரக்கமற்ற முறையில் நமக்குப் பரிசீலிக்கச் சாத்தியப்பட்டிருந்தால்?

ஒரு சைக்காலஜிஸ்ட்டால்கூட உன்னை மன்னிக்க முடியாமல் போய்விடலாம் தாஸ். குணப்படுத்தலுக்கு அப்பாற்பட்ட மன நோயாளி என்று வெகு சுலபமாக முடிவுசெய்துவிடுவான். உனது கூக்குரல்களைக் காதில் போட்டுக்கொள்ளாமல் பூட்டிய வீட்டுக்குள் உன்னை அடைத்துப் போடுமாறு யோசனை சொல்லிவிடுவான். சைன்டிஸ்ட்டுகளுக்கும் டாக்டர்களுக்கும் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை ஒப்புக்கொள்ள முடியாது தாஸ்.

ஆனால் கவிஞர்களுக்கு?

கவிஞர்களை உலகம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கவிஞர்களையும் மன நோயாளிகளையும் வெவ்வேறானவர்களாகக் கருதுவதுமில்லை. மன நோயாளிகளைப் போலவே கவிஞர்களும் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறவர்கள்தான் தாஸ்.

காதல் எப்பொழுது முடிவடைகிறதோ அப்பொழுது வெறுப்பு மூளத் தொடங்குகிறது.

காதல் நாணயத்தின் மற்றொரு பக்கமே வெறுப்பு.

காதலின் துன்பத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல் என்பத்து மூன்று வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, ரயில்வே ஸ்டேஷனின் குளிர் மிருந்த ஓய்வறையில் மரணத்தைத் தழுவிய உலகின் மகத்தான மனிதனின் ஒப்புதல் வாக்குமூலங்களாக்கும் இவை. வலிப்பு நோயாளியான மற்றொரு மகத்தான மனிதனோ காதலை யுத்தத்துக்கு ஒப்பிட்டான். யுத்தம் தாஸ். இதில் சமரசங்களக்குத் துளியும் இடமில்லை. தீர்மானகரமான வெற்றி அல்லது நிச்சயமான தோல்வி, இரண்டில் ஒன்றை எட்டும்வரை அதன் தீவிரம் குறையப் போவதில்லை.

ஹ… ஹ… ஹாணண…

தீர்மானிக்கும் தருணம் இது. வெற்றி அல்லது தோல்வி இரண்டில் ஒன்றை நிச்சயித்தாக வேண்டும். இந்தத் தருணத்தை நான் ஒருபோதும் கோட்டைவிடப் போவதில்லை சாரு. இரண்டிலொன்று, எங்களிருவரில் யாராவது ஒருவன், தீர்மானிக்கும் வாய்ப்பு எனது கைகளுக்கு வந்திருக்கிறது. ஊசலாட்டங்களுக்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. மூடிய கதவை உதைத்துத் திறந்து உங்களிருவருக்கும் உங்களது சொந்த உடல்களின் நிர்வாணத்தைக் காட்டப்போகிறேன். என்ன வேண்டுமானாலும் நடந்துகொள்ளட்டும். கொலை அல்லது தற்கொலை, எந்தக் கவிஞனும் தத்துவவாதியும் என்னை இதிலிருந்து பின்வாங்கச் செய்ய முடியாது. எனது கவிஞனும் தத்துவவாதியும் மிதமிஞ்சிய ஆல்கஹாலுக்கு இரையாகிவிட்டார்கள். அவர்களது மூளையின் செல்களும் இரைப்பையும் குடல்களும் கெட்டுப்போய்விட்டன. அனாதைப் பிணமாய் கார்ப்பரேஷன்காரர்கள் அவனைக் கொண்டுபோய் கடலில் வீசிவிட்டு வந்துவிட்டார்கள். ஆல்கஹாலின் அரிப்புக்குள்ளான அவனது உள்ளுறுப்புகள் இப்போது கண்ணாடிக் குடுவைகளில் பாதுகாக்கப்படுகின்றன. மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஒரு ஸ்டடி மெட்டீரியலாகும் கவிஞனின் உடல். ஆல்கஹாலின் தீமையை உணர்த்த செல்லரித்த பகுதிகளை நுண்ணோக்கி மூலம் போட்டோ எடுத்துத் தெரு முனைகளில் மாட்டி வைப்பார்கள். ஆல்கஹாலின் தீமையையும் கவிதையின் தீமையையும்.

தாஸ், நண்பர் என்று சொல்கிறீர்கள். ஆனால் அவரது உடலைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். இதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. தவிர இது ஒரு சட்டப் பிரச்சினை. எங்களது மருத்துவமனையில் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்வதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. நாங்கள் அரசாங்கத்தின் உதவியை நாட வேண்டியிருக்கும். இந்தப் படிவங்களில் நீங்கள் சில கையெழுத்துக்களைப் போட வேண்டியிருக்கும். இதில் தயங்குவதற்கு ஒன்றுமில்லை, சில சடங்குகளை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது, அவ்வளவுதான். ஆனால் நல்ல வேளையாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உங்களுக்கு எதிராக எதுவுமில்லை. அந்த நடுநிசியில் நீங்கள் அவரது உடலுடன் வந்து நின்றபோது உங்களைப் பார்க்க எப்படியிருந்தது தெரியுமா? நிச்சயமாக அது ஒரு கொலையாகவே இருக்க வேண்டுமென்று நினைத்தோம். உங்களது நண்பர் தனது குடல் பாகங்களை அவ்வளவு மோசமாக அழுகிப்போவதற்கு அனுமதிக்காமலிருந்தால்? மித மிஞ்சிய போதையில் அவரது மூளையின் ரத்தக் குழாய்களில் வெடிப்பு ஏற்படாமலிருந்திருந்தால்?

அனுதாபத்துக்குப் பதிலாக விசாரணை, ஸ்டெதாஸ் கோப்புக்குப் பதிலாகக் கைவிலங்கு. எனி ஹவ் யூ ஆர் சேவ்டு… தப்பினீர்கள் தாஸ். ஆல் த பெஸ்ட்.

மூடிய கதவுகளுக்குள் பின்னிக் கிடக்கும் இரு நிர்வாண உடல்கள் பற்றிய கற்பனை தரும் குரூரமான சந்தோஷத்தில் கண்களை மூடிக்கொண்டிருந்தேன் நான். ஸ்விட்ச் பாக்ஸுக்கு மேலே இருக்கின்றன தீப்பெட்டியும் மெழுகுவர்த்தியும்; படுக்கையறைக்குள்ளிருக்கிறது எமர்ஜென்ஸி லாம்ப். இருளில் தட்டுத்தடுமாறி எழுந்து எனது தலைக்கு நேர்மேலாக இருந்த ஸ்விட்ச் பாக்ஸிலிருந்த மெழுகுவர்த்தியை எடுத்துக் கொளுத்திக் கையில் பிடித்துக்கொண்டேன். சற்று நேரத்திற்கு முன்னால் கீழே விழுந்து நொறுங்கியிருந்தது கண்ணாடிக் குடுவை. உடைந்த கண்ணாடிச் சில்லுகள் ஒரு அரண் போலக் கூடம் முழுக்க இறைந்து கிடந்தன. அவற்றைப் பொருட்படுத்தாமல் தாண்டிக்கொண்டு நடக்க முற்பட்டபோது எனது உள்ளங்காலைக் குத்திக் கிழித்தது கூர்மையான கண்ணாடித் துண்டொன்று. எனது தொண்டைக் குழியிலிருந்து தன்னிச்சையாகப் பீறிட்டெழுந்தது ஒரு உரத்த சப்தம்.

பெண் அல்லது சிசு; வேதனை அல்லது விரகம்; புணர்ச்சியின் அடையாளம் அல்லது பிறவியின் தடயம். அபத்தமான இந்த விளையாட்டுக்களை இத்தோடு நிறுத்திக்கொள்ளலாமே, தருக்கங்களின் கோரைப் பற்களுக்கிடையே சிக்கிக்கொள்ள வேண்டாம். நடைமுறையின் கைப்பிடியிலிருக்கும் ஊன்றுகோலின் ஒரு நுனி போதும் எனக்கு. உடைந்த கண்ணாடிச் சில்லுகளின் கூரிய சிதறல்களுக்கிடையே எரியும் மெழுகுவர்த்தியுடன் நின்றுகொண்டு, மூளையில் செல்லரித்த பாகங்களிலிருந்து வழியும் உபயோகமற்ற எண்ணங்களை முற்றாகத் துடைத் தெறிந்துவிட்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கதவைத் தள்ளித் திறந்தால்?

தாஸ், கதவைத் திற, உனக்குத் தென்படும் நிர்வாணம்.

சட்டென்று எனது கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்து அணைந்தது மெழுகுவர்த்தி. அதே கணத்தில் பளீரெனப் பற்றிக்கொண்டது குழல் விளக்கின் பிரகாசம். குதிகாலின் வலியைப் பொருட்படுத்தாமல் ஒரே வீச்சில் பாய்ந்து கதவைத் தள்ளினேன்.

கடவுளே…

கட்டிலின் மீது ஆழந்த உறக்கத்தில் கிடந்தது. ஒரு பச்சிளம் குழந்தை, பிறந்து சில கணங்களே ஆன சிசு. அதன் மேனியிலிருந்து வீசிக்கொண்டிருந்த உதிரத்தின் வாடை அந்த அறை முழுக்கப் பரவிக்கிடந்தது. இன்னும் அறுத்து வீசப்பட்டிருக்காத தொப்புள்கொடி துவண்ட ஆண் குறியைப்போல அதன் வயிற்றின்மேல் கிடந்தது. மிருதுவான சருமத்தில் அங்கங்கே விரல்கள் பதிந்ததன் கன்றிய அடையாளங்கள். ஜனனத்திற்கு உதவிய மருத்துவரின் விரல் அடையாளங்களாயிருக்கலாம். எங்கே சாரு?

கட்டிலுக்குக் கீழே சில உள்ளாடைகளும் கருகிய சிகரெட் துண்டுகளும் இறைந்து கிடந்தன.

நன்றி – காலச்சுவடு