Wednesday 16 September 2015

க.நா.சு. (1912 – 1988) By சாரு நிவேதிதா

/2015/09/13/க.நா.சு.-1912-–-1988/article3024411.ece
க.நா.சு. (1912 – 1988)

By சாரு நிவேதிதா

First Published : 13 September 2015 10:00 AM IST


முழுப்பெயர் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம். பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம் வலங்கைமான். அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்களைப் போல் அல்லாமல் க.நா.சு. நன்கு பிரபலமானவராகவே இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அனைவருமே அவரை ஒரு விமரிசகராகவும் மொழிபெயர்ப்பாளராகவுமே அறிந்திருந்தனர். ஆனால் க.நா.சு. இந்த இரண்டிலும் ஈடுபடுவதற்கு முன்பே நாவல்களும், சிறுகதைகளும் எழுத ஆரம்பித்து விட்டார். 76 ஆண்டுகள் வாழ்ந்து அதில் 60 ஆண்டுகள் இடைவிடாமல் எழுதிக் கொண்டிருந்த க.நா.சு.வின் அத்தனை எழுத்துக்களையும் தொகுப்பது கூட இப்போது சாத்தியமில்லை என்று தெரிகிறது.

சாகித்ய அகாதமிக்காக தஞ்சை ப்ரகாஷ் க.நா.சு. என்ற நூலை எழுதினார். அதில் க.நா.சு. எழுதிய நூல்களையெல்லாம் தொகுத்தால் மொத்தம் 20,000 பக்கங்கள் வரலாம் என்று எழுதியிருக்கிறார் ப்ரகாஷ். ஆனால் இது குறைவான மதிப்பீடாகவே இருக்கும் என்கிறார் பழ. அதியமான். உண்மைதான். ஏனென்றால், க.நா.சு. தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் எழுதினார். நான் எழுபதுகள், எண்பதுகளில் தில்லியில் இருந்தபோது ஆங்கிலப் பத்திரிகைகளிலும் ஆங்கில தினசரிகளிலும் வாரம் குறைந்த பட்சம் க.நா.சு.வின் இரண்டு கட்டுரைகளையாவது பார்த்து விடுவேன். இவ்வளவுக்கும் அவர் வயது அப்போது எழுபதுக்கு மேல். கண் பார்வையும் கம்மி. அவர் செய்த மொழிபெயர்ப்புகள் மட்டுமே 3000 பக்கங்கள் வரும். அது ஆங்கிலத்திலிருந்து தமிழில். சா. கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களின் எழுத்துக்களை தமிழிலிருந்தும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அநேகமாக இதுவரை தமிழில் எழுதியவர்களிலேயே அதிக அளவு எழுதியவர் க.நா.சு.வாகவே இருக்கும் என்பது என் கணிப்பு. ‘ஏறக்குறைய 107 நூல்கள் அவரது முழுமைபெறாத பட்டியலில் சேர்ந்துள்ளன. ஆறு மாத காலத்தில் கிடைத்த நேரத்தில் தேடியதில் கிடைத்ததன் இருப்புக் கணக்கு இவை’ என்று குறிப்பிடுகிறார் ஆய்வாளர் பழ. அதியமான். மேலும் அவர் கூறுகிறார்: ‘மணிக்கொடி, சூறாவளி, சந்திரோதயம், சரஸ்வதி, தேனி, இலக்கியவட்டம், எழுத்து இறுதியாக முன்றில் போன்ற இதழ்களுடன் தொடர்பு கொண்டும் நடத்தியும் இருந்த க. நா. சுப்ரமண்யத்தின் படைப்புகள் பெரும்பாலும் பத்திரிகைகளில் வெளிவந்த பின்னரே நூல்களாகியுள்ளன. ‘பெரிய மனிதன்’ சுதேசமித்திரனில் வந்தது. ‘படித்திருக்கிறீர்களா’ சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வந்த தொடர். ‘நளினி’ (1959) சந்திரோதயத்தில் தொடர்கதையாக சமூகச் சித்திரம் என்ற தலைப்பில் பிரசுரமானது. முதலில் எழுதிய நாவலான ‘சர்மாவின் உயில்’ சுதேசமித்திரன் (1946) வாரப்பதிப்பில் தொடராக வந்தது. சமூகச் சித்திரம், நல்லவர், ஆட்கொல்லி ஆகியவை வானொலியில் ஒலிபரப்பானவை. ‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்’ இலக்கிய வட்டத்தில் பிரசுரமான கட்டுரைகள்.’

பழ. அதியமான் தனது கட்டுரையில் க.நா.சு. எழுதிய நாவல்களின் எண்ணிக்கை பற்றி இப்படிக் கூறுகிறார்: ‘சமூகச் சித்திரம்’ தொடங்கி ‘தந்தையும் மகளும்’ உள்ளிட்டு 17 நாவல்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ‘போன்ற 20 நாவல்கள்’ என்று க. நா. சு.வின் நாவல்களின் பட்டியலைத் தருகிறார் தஞ்சை ப்ரகாஷ். இவை தவிர அச்சில் வராமல் உள்ள நாவல்கள் என திருவாலங்காடு (4 பாகம், 1000 பக்கத்துக்கு மேல்), மால்தேடி, வக்கீல் ஐயா, ஜாதிமுத்து, சாலிவாஹணன், சாத்தனூர் போன்ற பதினைந்துக்கும் மேற்பட்டவை கையெழுத்துப் பிரதிகளாக உள்ளனவாம். ஆக மொத்தம் 35 நாவல்கள் தேறுகின்றன. இவை நாவல்கள் மட்டும். பிரசுரமானவை, பிரசுரமாகாதவை என்ற வகையில் அடங்கும் இவை மட்டுமல்ல க.நா.சு. எழுதியவை. அழிந்து போனவை - மன்னிக்கவும் - கிழிந்துபோனவை என்ற ஒருவகையையும் இதில் சேர்க்க வேண்டியுள்ளது.





1949-ம் ஆண்டு பேரன்பு என்னும் ஒரு நாடகக் காப்பியத்தைத் திருப்தி தராதபோது க.நா.சு.வே கிழித்து எறிந்திருக்கிறார் என்று ப்ரகாஷ் குறிப்பிடுகிறார் (க.நா.சுப்ரமண்யம், ப. 53).

க.நா.சு. இலக்கியத்தடம் (1991) நூலில் இடம்பெற்றுள்ள ஒரு நேர் காணலில் க.நா.சு. (1984) சொல்வதை இவ்விடத்தில் பார்க்கலாம்:

‘ஏழுபேர் (நாவல்) உங்கள் [வாசகர்] கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லை. புத்தகத்தை அச்சடித்து வீட்டில் வைத்துவிட்டு ஊருக்குப் போயிருந்தேன். வீட்டுக்காரன் வாடகை பாக்கி என்று எல்லாப் புத்தகங்களையும் பழைய புத்தகக் கடையில் விற்றுவிட்டான்.’

க.நா.சு. குறிப்பிடும் ‘ஏழுபேர்’ நாவல் வெளிவந்ததோடு அவரது மூன்று நாவல்கள் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. எது எப்படியோ வீட்டுக்காரனுக்கு வாடகை பாக்கி வைத்து அவஸ்தைப்பட்டிருப்பார் என்பதும் அது புத்தகத்தோடு சம்பந்தப்பட்டது என்பதும் விளங்குகிறது.

க.நா.சுவின் மொத்த நாவல் எண்ணிக்கை 35 தானா என்பது தெரியவில்லை. ‘அவரது [க.நா.சுவின்] நாவல்கள் புத்தகமாக வந்திருப்பவை பன்னிரெண்டு. மூன்று நான்கு நாவல்கள் கைப்பிரதிகளாக இருக்கின்றன என்று நினைக்கிறேன்’ - இது சி. சு. செல்லப்பா (எழுத்து, ஜனவரி 1966) குறிப்பிடுவது.

***

இளம் வயதில் பல எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத ஒரு நல்வாய்ப்பு க.நா.சு.வுக்கு இருந்திருக்கிறது. என்னவெனில், அவரது தகப்பனாரே அவரை எழுதச் சொல்லி ஊக்குவித்திருக்கிறார்.

‘நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே எழுத்தாளனாகி விடுவது என்பது தீர்மானமாகி விட்ட விஷயம். இந்தத் தீர்மானத்தை என்னிடம் வளர்த்து விட்டவர் தகப்பனார்’ என்று ‘சர்மாவின் உயில்’ முன்னுரையில் குறிப்பிடுகிறார் க.நா.சு. இவருடைய தந்தைக்கே தான் ஒரு எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அவரது தகப்பனார் – க.நா.சு.வின் தாத்தா – தன் மகனுக்கு மூன்று தம்பிகளையும் இரண்டு தங்கைகளையும் அவர் பொறுப்பில் விட்டு விட்டு இறந்து போனதால் அவர் மீது விழுந்த அதிகப்படியான குடும்ப பாரத்தின் காரணமாக அவரால் எழுத்தாளனாக முடியாமல் போனது. க.நா.சு.வின் தகப்பனாருக்கு போஸ்ட்மாஸ்டராக மாதம் பத்துப் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் குடும்பத்தை நடத்தியாக வேண்டிய நிலை. அப்படியும் 1903-ம் ஆண்டு அவர் எழுதிய ஒரு ஆங்கிலக் கட்டுரையினால் அவருடைய இரண்டு மூன்று வருடத்திய வருடாந்திர சம்பள உயர்வு கிடைக்காமல் போயிருக்கிறது. (நானும் பத்தாண்டுக் காலம் அஞ்சல் துறையில் இருந்தேன். அப்போது ஒரு தினசரியில் நான் எழுதிய சிறுகதை ஒன்று மோசமாக இருப்பதாகச் சொல்லி என் வருடாந்திர உயர்வை ரத்து செய்தார் அப்போதைய போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்!) இப்படியாகத் தன் வாழ்வில் நிறைவேறாத லட்சியத்தைத் தன் புதல்வன் மூலம் நிறைவேற்றிக் கொண்டார் க.நா.சு.வின் தகப்பனார். ஆனால் அதற்காக அவர் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டிருக்கிறார். க.நா.சு. நாலாவது பாரம் (இப்போதைய ஒன்பதாம் வகுப்பு) படித்துக் கொண்டிருக்கும்போதே ஜாக் லண்டன் எழுதிய ‘மார்ட்டின் ஈடன்’ என்ற நாவலைக் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறார் தகப்பனார். இந்தக் குறிப்பிட்ட நாவலைக் கொடுத்ததற்குக் காரணம், ஒரு ஏழை எழுத்தாளன் முன்னுக்கு வருவதற்காகப் படும் கஷ்டங்களைப் பேசுகிறது இந்நாவல். (கடைசியில் தற்கொலை செய்து கொள்கிறான் அந்த எழுத்தாளன்!) ஒரு எழுத்தாளனின் வாழ்வு பற்றிய தன் கருத்துகள் பலவும் அடிநாளில் படித்த இந்த நாவலால் ஏற்பட்டவைதான் என்கிறார் க.நா.சு.

கல்லூரியில் படிக்கும்போதே ஆங்கிலத்தில் கவிதைகளும் கதைகளும் கட்டுரைகளும் எழுத ஆரம்பித்து விட்டார் க.நா.சு. அன்றாட வாழ்வுக்காக அவர் வேலைக்குப் போக அவசியமில்லாமல் பார்த்துக் கொண்டார் தகப்பனார். பிற்காலத்தில் தகப்பனாருக்கு குடும்ப பாரம் அதிகமில்லை. வருவாயும் தாராளமாக மாதம் இருநூறு முந்நூறு வந்தது. அவர் செலவோ சொல்பம்தான். மாதம் முப்பது நாற்பதுக்கு மேல் ஆகாது. பாக்கியை புதல்வனுக்குத் தந்து விடுவார். அந்தப் பணத்தை புஸ்தகங்கள் வாங்கிப் படிப்பதிலும் தன் லட்சியத்தை வளர்த்துத் திடப்படுத்திக் கொள்வதிலும் செலவிட்டார் க.நா.சு.

கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு ஒரு டைப்ரைட்டருடன் சென்னை வந்து வாங்க முடியாத நூல்களை நூலகம் நூலகமாகத் தேடிப் படித்தார். படிக்கும் இன்பத்துக்காகவே பல மொழிகளையும் கற்றுக் கொண்டார். குறுகிய காலத்திலேயே ஆங்கிலத்திலும் எழுதி வெற்றி கண்டார். முக்கியமாக ஜான் ஹோம்ஸ் நடத்திய யூனிடி என்ற பத்திரிகையில் அவர் கட்டுரைகளும், அப்போது பிரசித்தமாக இருந்த கோல்டன் டிக் என்ற இலக்கிய மாத சஞ்சிகையில் சிறுகதைகளும் வெளிவந்தன. அப்போது அவர் எழுதிய ஆங்கிலச் சிறுகதைகளுக்கு நம்மவரின் பழக்கவழக்கங்களை விளக்கி ஏராளமான குறிப்புகள் எழுத வேண்டியிருந்ததால் தமிழிலேயே எழுதி விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார். எவ்வளவு தவறான முடிவு அது என்று இப்போது தோன்றுகிறது எனக்கு. உதாரணமாக, க.நா.சு. 1963-ம் ஆண்டு இலக்கிய வட்டம் என்ற பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் அதில் அநுபந்தமாகச் சேர்க்க நடுத்தெரு என்ற நாவலை எழுதினார். (ஒவ்வொரு இதழுடன் எட்டு எட்டு பக்கங்களாக சந்தாதாரர்களுக்கு அனுப்பப்பட்ட இலவச இணைப்பு.) பிறகு அதையே இன்னும் விரிவாக ஆங்கிலத்தில் எழுதி ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினார். பரிசு பெறவில்லை எனினும் ஆயிரம் டாலர் அனுப்பி, கதையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர் பதிப்பகத்தார். நாவலில் வரும் பல சம்பவங்கள் பகுத்தறிவுக்கு ஒத்து வரவில்லை; மாற்ற வேண்டும், அல்லது எடுக்க வேண்டும் என்று பதிப்பகத்தார் சொன்னதை ஒத்துக் கொள்ளாமல் அதைப் பிரசுரிக்கவில்லை க.நா.சு. பின்னர் அவர் 1985-ல் சென்னைக்கு வந்து குடியேறிய சமயத்தில் லதா ராமகிருஷ்ணனிடம் கொடுத்து அதைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து பிரசுரிக்கிறார். அதுதான் அவரது ‘அவதூதர்.’





க.நா.சு.வின் நாவல்களில் முதன்மையானதாகக் குறிப்பிடப்படுவது ‘பொய்த் தேவு’ என்றாலும் அதைவிட சிறந்த படைப்பாகக் கருதத் தக்கது அவதூதர். ‘பொய்த் தேவு’ தமிழ் நாவலின் மரபான தன்மைகளைக் கொண்டிருப்பதே அதன் பிரபலத்துக்குக் காரணம் என்று தோன்றுகிறது. சாத்தனூர் என்ற கிராமம், அங்கே வாழ்ந்த விளிம்புநிலை மனிதன் ஒருவனின் சரித்திரம் என்ற மரபான கதைத் தன்மையைக் கொண்டிருக்கிறது ‘பொய்த் தேவு.’ ஆனால் ‘அவதூதர்’ அப்படியல்ல. சாத்தனூர் கிராமத்துக்கு வந்த அவதூதர் என்ற மகாபுருஷன் ஒருவனின் கதையைச் சொல்லும் நிமித்தமாக அது 150 ஆண்டுகளின் சரித்திரத்தையும், ஒரு சமூகம் நிலப்பிரபுத்துவ வாழ்க்கையிலிருந்து நவீன யுகத்துக்கு நகரும் மாற்றத்தையும் மரபை மீறிய முறையில் சொல்லுகிறது. க.நா.சு.வின் எல்லா நாவல்களுமே படு சுவாரசியமாகவும், எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. பொதுவாக தமிழ் இலக்கியத்தில் இது காணக் கிடைக்காத அம்சம். பரவலாக பல லட்சம் பேர் படிக்கக் கூடியதாகவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க.நா.சு.வின் நாவல்கள். அந்த வகையில் க.நா.சு.வை ப்ரஸீலிய எழுத்தாளர் பாவ்லோ கொய்லோவுக்கு நிகராக வைக்கத் தோன்றுகிறது. உலகில் நாவல் வாசிக்கும் வழக்கம் உடைய அத்தனை பேரும் பாவ்லோ கொய்லோவின் ‘ரஸவாதி’ என்ற நாவலைப் படித்திருப்பார்கள். 67 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, ஆறரை கோடி பிரதிகள் விற்ற நாவல் அது. அதை விட செறிவாகவும் சுவாரசியமாகவும் உள்ள நாவல் ‘அவதூதர்.’

‘அவதூதர்’ ஆங்கிலத்திலேயே பிரசுரமாகியிருந்தால் இன்று பல கோடி வாசகர்களால் வாசிக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழில் அது எழுதப்பட்டபோது சில நூறு பேராலும் இப்போது அதை விடக் கம்மியாகவும் வாசிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் குறிப்பிட்டேன், க.நா.சு. தமிழில் எழுதப் போவதாக எடுத்த முடிவு தவறானது என்று. அவர் தந்தையும் அப்படியே கூறியிருக்கிறார். ஆனாலும் அவர் தலைமுறைக் கருத்து அது என்று அதை மறுத்து விட்டுத் தமிழில் எழுதினார் க.நா.சு. ஆனால் பாவ்லோ கொய்லோவை ஆங்கிலத்தில் படித்த தமிழர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். அந்த வகையில் க.நா.சு. ஆங்கிலத்திலேயே தனது சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியிருந்தால் அவரை வாசித்திருக்கக் கூடிய ‘தமிழர்கள்’ இப்போதைய எண்ணிக்கையை விட அதிக அளவில் இருந்திருப்பர்.

***

பொதுவாக தமிழின் சமகால இலக்கியத்தில் இரண்டு ‘பள்ளிகள்’ இருப்பதாகச் சொல்லலாம். ஒன்று, சி.சு.செல்லப்பா பள்ளி, இன்னொன்று, க.நா.சு. பள்ளி. சி.சு. செல்லப்பா பள்ளி சற்றே இறுக்கமானது; பாரம்பரிய மதிப்பீடுகளை வழியொற்றி நடப்பது. லட்சியவாதத்தையும் மரபு சார்ந்த மதிப்பீடுகளையும் போற்றுவது. மாறாக க.நா.சு. பள்ளியோ மேலை இலக்கியச் சார்பு கொண்டது. நகுலன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, தஞ்சை ப்ரகாஷ் போன்றவர்களை இந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என சொல்லலாம். தமிழ் இலக்கியம் சர்வதேச இலக்கியத்துக்கு நிகராக இருக்க வேண்டும் எனக் கருதியது இவர்களின் பொதுத் தன்மை. இந்தப் பள்ளியின் இன்னொரு முக்கியமான அம்சம், இவர்கள் தங்கள் படைப்பில் புனிதங்கள் யாவற்றையும் உடைத்து நொறுக்கினார்கள்.

க.நா.சு. இதை எப்படி ஆரம்பித்து வைக்கிறார் என்று பார்ப்போம். ‘அவரவர் பாடு’ என்பது அவர் எழுதிய ஒரு மர்ம நாவல். இதுவே மரபு மீறிய செயல். ஒரு இலக்கியவாதி மர்ம நாவல் எழுதலாமா? அதில் வரும் கதாபாத்திரங்கள் மதுபானம் அருந்துகிறார்கள். ஒருவன் தன் மனைவியை இன்னொருவனிடம் உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கிறான். ‘இரட்டையர் இருவரில் ஒருவருக்குப் பிறந்தவள் கமலம். யாருக்கு என்று அவள் தாயாருக்குக் கூடத் தெரியாது. இரட்டையர் இருவருக்குமே வைப்பாக இருந்தவள் கமலத்தின் தாயார்.’

அசுரகணம் நாவலின் முதல் வாக்கியமே இப்படித்தான் ஆரம்பிக்கிறது: ‘நாதசுர சப்தம் கேட்டால் யாருக்காவது சாவு நினைவுகளாக வருமோ? எனக்கு வருகிறதே! என்ன செய்ய?’

‘பொய்த் தேவு’ நாவலில் வரும் ரங்காச்சாரி கும்பகோணத்தின் பெரிய மனிதர்களில் ஒருவர். 1936-ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட பார் அட்டாச்டு இந்து ஹோட்டல் அந்த ஊர்ப் பெரிய மனிதர்கள் சந்தித்துக் குடித்து சீட்டு விளையாடி பொழுது கழிக்கும் இடம். அதன் முக்கியப் பிரமுகரான ரங்காச்சாரி அதிகம் குடிக்க மாட்டார். ரங்காச்சாரியின் மனைவி கோமளவல்லிக்கு இன்பமே வாழ்வின் லட்சியம். இன்பம் என்றால் சிற்றின்பம். பதிவிரத்யம், கற்பு என்பன எல்லாம் கதைக்கும் காவியத்துக்கும் ஏற்படுத்தப்பட்ட சரக்குகள். ரங்காச்சாரியோ இது போன்ற விஷயங்களில் சற்றுத் தாராள நோக்குடையவர். எதையும் கண்டு கொள்ள மாட்டார். கும்பகோணத்துப் பெரிய மனிதர்களுக்குப் பல்வேறு சமயங்களில் ‘வேண்டியவளாக’ இருந்தாள் கோமளம். இது விஷயமெல்லாம் ரங்காச்சாரிக்கும் தெரியும். தெரிந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு தெரியாதது போல் இருந்து விடுவதுதான் கெட்டிக்காரத்தனம் என்று அவர் உணர்ந்திருந்தார்.

ஒருநாள் இந்தக் கோமளவல்லியோடு சிநேகமாகிறார் நாவலின் நாயகரான சோமு முதலியார். கண்டதும் காதல். ரங்காச்சாரி சென்னைக்குப் போகும்போதெல்லாம் இரவிலும் பகலிலும் சோமுவின் ஆஸ்டின் கார் ரங்காச்சாரியின் வீட்டு வாசலிலேயே நிற்கத் தொடங்குகிறது. ஆனால் ஊராருக்கு ஒரு விஷயம்தான் புரியவே இல்லை. வீட்டிலே வளர்ந்த பிள்ளைக்குட்டிகளை வைத்துக் கொண்டு கோமளவல்லிக்கு இதெல்லாம் எப்படிச் சாத்தியமாக இருந்தது?

சோமு முதலியார் கும்பகோணத்தில் மூணு லட்சம் செலவில் (முப்பதுகளில்) ஒரு பங்களா கட்டுகிறார். கோமள விலாஸ் என்று அதற்குப் பெயரிடுகிறார். கிருஹப் பிரவேசத்துக்குத் தஞ்சாவூர் சகோதரிகள் பாலாம்பாள், கமலாம்பாளின் நாட்டியம். நாட்டியத்துக்கு வந்தவர்களை அதன் பிறகு தஞ்சைக்கே அனுப்பவில்லை முதலியார். கோமள விலாஸத்துக்குப் பக்கத்திலேயே தஞ்சை சகோதரிகளுக்கு ஒரு பங்களா ஏற்பாடு செய்து கொடுத்து விடுகிறார். முதலியாருக்கு நடராஜன் என்று ஒரு மகன். ஒன்றுக்கும் லாயக்கு இல்லாத குடிகாரன். அப்பன் இல்லாத நேரத்தில் தஞ்சை சகோதரிகளின் பங்களாவுக்குப் போய் வருகிறான். அவனுக்கு ஒரு தீராத கவலை. அதை இந்து பாரில் வைத்துத் தன் நண்பர்களிடம் கேட்கிறான். ‘ஏண்டா, இந்தக் கிழம் இன்னும் எவ்வளவு நாளடா இருந்து கொண்டு என்னை வதைக்கும்?’







நன்றி: க.நா.சு.வின் நாவல்களைக் கொடுத்து உதவிய நற்றிணை பதிப்பகம் யுகன் மற்றும் ஆய்வாளர் பழ. அதியமான்.


பழ. அதியமானின் ஆய்வுக் கட்டுரைக்கு: http://www.kalachuvadu.com/issue-144/page57.asp

க.நா.சு. (1912 – 1988) - பகுதி 2


By சாரு நிவேதிதா


First Published : 20 September 2015 10:00 AM IST

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/09/20/க.நா.சு.-1912-–-1988---பகுதி-2/article3036348.ece




பொய்த்தேவு, ஆட்கொல்லி, அவரவர் பாடு, ஒருநாள், பித்தப்பூ, அவதூதர், சர்மாவின் உயில், அசுர கணம், வாழ்ந்தவர் கெட்டால், கோதை சிரித்தாள் ஆகிய பத்து நாவல்கள் மட்டுமே எனக்கு வாசிக்கக் கிடைத்தது. இது எல்லாமே – ‘அவரவர் பாடு’ என்ற மர்ம நாவல் உட்பட – ஒரே நாவலின் பல்வேறு பகுதிகள் என்றே சொல்லத் தோன்றுகிறது. எல்லா நாவல்களிலுமே ஒரே கதாபாத்திரங்கள்தான் வந்து போகிறார்கள். ‘பொய்த்தேவு’ நாவலில் சோமு முதலி நாயகன் என்றால் இன்னொரு நாவலில் அவனுடைய கதை செவிவழிச் செய்தியாக வந்து போகிறது. க.நா.சு.வின் தந்தை பெயர் நாராயணசாமி. போஸ்ட்மாஸ்டராக இருந்தவர். இவர் க.நா.சு.வின் எல்லா நாவல்களிலும் போஸ்ட்மாஸ்டர் நாணா ஐயராக வந்து போகிறார். ‘பித்தப்பூ’வில் நாணா ஐயரின் அறிமுகம் இப்படி:




‘தெருவிலிருந்த இருபது இருபத்தைந்து வீடுகளிலும் அநேகமாக ஒவ்வொரு நாளும் ஏறி இறங்கித் துண்டைப் போட்டு, திண்ணையில் சாய்ந்து கொண்டிருந்து விட்டு வருபவர் அதிகமாக ரிடையர்டு போஸ்ட்மாஸ்டர் நாணா ஐயர்தான். பல தடவைகள் துண்டை எங்கே விட்டோம் என்று தெரியாது – சாயங்காலம் மறுபடி ஒருதரம் வீடு வீடாகப் போய் தேடிக் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு வந்து விடுவார். நாணாவிற்குப் பொடி போடுகிற பழக்கம். யார் கும்பகோணத்திற்குப் போகிறேன் என்று கிளம்பினாலும் ’கால் ரூபாய்க்கு எனக்கு ஒரு மட்டை பட்டணம் பொடி வாங்கிண்டு வந்து தாயேன்’ என்று சொல்லிக் கால் ரூபாயைக் கொடுத்து விடுவார்.’




க.நா.சு. நாவல்கள் அனைத்திலும் சில பொதுத் தன்மைகளைக் காண முடிகிறது. ஒன்று, ‘பித்தப்பூ’ தவிர மற்ற நாவல்கள் அனைத்தும் கும்பகோணத்துக்கு நான்கு மைல் தூரத்தில் உள்ள சாத்தனூர் என்ற கிராமத்தில்தான் நடக்கின்றன. (‘பித்தப்பூ’ தில்லியில்.) இரண்டு, நாவல்கள் எல்லாமே சுயசரிதைத் தன்மை கொண்டவையாக உள்ளன. எல்லா நாவல்களிலுமே க.நா.சு. எழுத்தாளராக வருகிறார். தந்தைக்கு ஒரே பையன். தந்தையே மகனை எழுத்தாளனாக ஆக்குகிறார். ‘பித்தப்பூ’வில் க.நா.சு. எழுத்தாளர் க.நா.சுப்ரமணியமாகவே வருகிறார். மகள் பெயர் பாப்பா. மகளின் கணவர் பெயர் மணி. (க.நா.சு.வின் மருமகனின் பெயர் மணி. பாரதி மணி என்ற பெயரில் எழுதுகிறார்; பிரபலமான நடிகரும் ஆவார்.) ‘பித்தப்பூ’வில் தி. ஜானகிராமனும் வருகிறார்.













எல்லா நாவல்களிலும் நாயகனாக வரும் எழுத்தாளர், சர்க்கரை அதிகம் போட்டு ஸ்ட்ராங்க் காஃபி குடிக்கிறார். (க.நா.சு. ஒரு காஃபி பைத்தியம்.) பணத்துக்குக் கஷ்டப்படுகிறார். வெறும் கஷ்டம் அல்ல. தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க.நா.சு.




‘என் மனைவி ராஜியைக் கொண்டு போய் அவள் பிறந்தகத்தில் விட்டுவிட்டு நான் சென்னையில் ஒரு டைப்ரைட்டருடன் குடியேறினேன். தங்கசாலைத் தெருவில் ஒரு ஹோட்டலில் – அதற்கு ஹிண்டு ஹோட்டல் என்று பெயர் என எண்ணுகிறேன் – குடியேறினேன். ஜர்னலிஸம் பண்ணி பத்திரிகைகளுக்குத் தாராளமாக எழுதி ஏராளமாகச் சம்பாதித்து விடுவதாக நினைப்பு. சம்பாத்தியம் எதுவும் வரவில்லை என்பது மட்டுமல்ல. என் சிறப்பான எழுத்துகளையும் ஒருவரும் போடவில்லை.’




***




‘என் அப்பா, அண்ணா எல்லோரையும் பற்றி எழுதியிருக்கிறீர்களே, உங்கள் மேல் கேஸ் தான் போட வேண்டும்’ என்றான் தியாகு. ‘கேஸ் போடப்பா, அப்படியாவது என் புஸ்தக விற்பனை கூடுகிறதா பார்க்கலாம். கேஸ் கீஸ் என்று ஏதாவது வந்து அமர்க்களப்பட்டு பெயர் அடிபட்டால்தான் என் புஸ்தகம் விற்பனையாகும் போல் இருக்கிறது’ என்றேன் நானும் விளையாட்டாக.




***




‘என்னைப் பைத்தியம் என்று என் மனைவியே சொல்லுகிறாள் சார்!’




‘என்னைக் கூடத்தான் என் மனைவி பைத்தியம் என்று சொல்கிறாள்!’




‘எதற்காக?’




‘நான் மற்றவர்களைப் போல வேலைக்குப் போகவில்லையாம். மாதாமாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு வந்து அவளிடம் தரவில்லையாம்! ஒருத்தரும் படிக்காத எதையோ எழுதிக் கொண்டு எழுத்தாளன், இலக்கியம் என்று அசட்டுத்தனமாக உயிரை விட்டுக் கொண்டிருக்கிறேனாம்.’




‘இதெல்லாம் பைத்தியத்திற்கு அறிகுறியாகி விடுமா?’




‘நீ தான் சொல்லேன் என் மனைவிக்கு.’




***




‘நான் நடத்திக் கொண்டிருந்த சிறுபத்திரிகைக்கு விளம்பரம் தேடிக் கொண்டு கோவை போயிருந்தபோது…’




***




‘நீங்கள் எப்படி ஆயுள் பூராவும் எழுத்தாளராகவே இருந்தீர்கள்? எப்படி அது சாத்தியமாயிற்று?’ என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள். வேலையை விட்டு விட்டு சுதந்தரத்தை நான் காப்பாற்றிக் கொண்டது உண்மைதான். ஆனால் எத்தனை கஷ்டப்பட வேண்டியிருந்தது தெரியுமா? எத்தனை தியாகங்கள்? Even today… போதும் போதாததுமாக வருகிற பணத்தை வைத்துக் கொண்டு எப்படி அடுத்த வாரம் மானேஜ் பண்ணப் போகிறோம், அடுத்த மாதம் எப்படி என்று தெரியாமல் அவஸ்தைப்படுவது ஒருநாளா இரண்டு நாளா…?’




***




‘எழுத்தாளனாக இருப்பதும், சித்திரம் வரைவதும் அவனுக்கெதற்கு? பேசாமல் கை நிறையச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு உத்தியோகத்தைக் காப்பாற்றிக் கொண்டால் போதாதா?’ என்று க.நா.சு.வின் மனைவி அவரிடம் சொல்கிறார். அது பற்றிய வருத்தத்துடன் க.நா.சு. எழுதுவது:




‘ஒரு எழுத்தாளனுடன் சற்றேறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு மேல் காலம் தள்ளிவிட்ட என் மனைவிக்கு எழுத்து, கலை என்று பெரிதாகச் சொல்லப்படுவதன் தரம் நன்றாகவே தெரியும்!’




பாப்பாவுக்கு – அதாவது க.நா.சு.வின் மகளுக்கு டெல்லியில் கல்யாணம் நிச்சயமாகிறது. மகளே பார்த்துக் கொண்ட மாப்பிள்ளை. மகளும் மாப்பிள்ளையுமாக செலவு செய்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள். க.நா.சு.விடம் பணம் இல்லை. ‘உங்கள் அப்பா தந்த பணத்தையெல்லாம் வைத்திருந்தால்…?’ என்று குத்திக் காட்டுகிறார் மனைவி. இனி க.நா.சு.:




‘அதெல்லாம் இப்போ பேசி என்ன லாபம்? யார் யாரையோ கடன் கேட்டேன். அவர்கள் கொடுத்திருந்தால் நான் எப்படித் திருப்பிக் கொடுத்திருக்கப் போகிறேன்? ஒரு குஜராத்தி எழுத்தாளர், ஒரு ஹிந்தி எழுத்தாளர் இருவரும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். ஒரே ஒரு தமிழ் எழுத்தாளர் (தி. ஜானகிராமன்) ஒரு எழுநூற்றியைம்பது ரூபாய் கொடுத்து உதவினார். இதில் ஐநூறு இரண்டொரு மாதத்தில் திருப்பித் தந்து விட்டேன். பாக்கி 250 அவரே ’சிரமப்படாதே, வேண்டாம்’ என்று சொல்லி விட்டார்.’ இந்த மேற்கோள்கள் அனைத்தும் ‘பித்தப்பூ’ நாவலிலிருந்து.




க.நா.சு.வின் ஒவ்வொரு நாவலுமே இவ்வளவு அந்தரங்கமாகத்தான் இருக்கிறது. ‘பித்தப்பூ’வின் முன்னுரையில் எழுதுகிறார்: ‘எல்லாச் சம்பவங்களும் கற்பனை, பாத்திரங்களும் பொய் என்று சொல்வது நாவல் மரபு. மாறாக, இதில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் எனக்குத் தெரிந்த வரையில் முழு உண்மை.’ இது ‘பித்தப்பூ’வுக்கு மட்டும் அல்ல; க.நா.சு.வின் எல்லா நாவல்களுக்கும் பொருந்தும். முக்கியமாக ‘சர்மாவின் உயில்’. இந்த நாவலில் எழுத்தாளன் சிவராமன், இலக்கியம் தெரியாத, இலக்கியத்தை மதியாத அவன் மனைவி ராஜம், நல்ல இலக்கிய ரசனையும் சிவராமனைப் போலவே எழுதக் கூடியவளுமான அவனுடைய அத்தைப் பெண் பவானி மூவருக்குமான உறவுப் போராட்டம் ஒரு முக்கியமான சரடாக ஓடுகிறது. நாவல் முழுவதுமே ராஜமும் அவளது பெற்றோரும் சிவராமனையும் அவன் எழுத்தையும் அவமதித்துக் கொண்டே இருக்கிறார்கள். ‘என்ன எழுத்து வேண்டிக் கிடக்கு எழுத்து! நூறு ரூபாய் சம்பளத்தையும் விட்டுத் தொலைத்து விட்டு வந்து, ராப்பகலாத் தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டு உடம்பு கெட…’ என பிரசங்கம் செய்கிறாள் பவானியின் தாய். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அமைதியாகப் போகும் சிவராமன் ஓரிரு சமயங்களில் ‘நீ ஒரு இலக்கியாசிரியனின் மனைவியாக இருப்பதற்கே லாயக்கற்றவள்’ என்று ராஜத்தைப் பார்த்துக் கத்துகிறான். ‘ஆனாலும் அவர்கள் சொல்வதெல்லாம் ஒருவிதத்தில் நிஜம்தான் என்று அவனே ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. இலக்கியத்துக்காக அவன் எவ்வளவு தியாகங்கள் செய்து விட்டான்! நல்ல உத்தியோகம், பொருள், காலம் எல்லாவற்றையும் இலக்கிய தேவியின் பாத கமலங்களில் சமர்ப்பித்து விட்டு நின்றான். லாபம் என்ன? பைத்தியக்காரன் என்ற பட்டம். அவ்வளவுதான் கண்ட லாபம்!’




1938-ல் க.நா.சு. இப்படி எழுதினார். ஆனால் 1988-ல் அவர் மரணம் அடையும்போது உலகம் அவர் எழுதிய எல்லா நாவல்களையும் சுத்தமாக மறந்து விட்டு வெறுமனே விமரிசகர், மொழிபெயர்ப்பாளர் என்று அழைத்தது. பைத்தியம் என்ற பட்டத்தை விட ஒருவரை இல்லாமலே அடித்து விடுவது அதைவிட மோசம் அல்லவா? க.நா.சு. எழுதி இதுவரை வெளிவராத நாவல்கள் இன்று யாரிடம் உள்ளன? அவற்றை யார் வெளியிடுவார்? சாகித்ய அகாதமிக்காக தஞ்சை ப்ரகாஷ் எழுதிய நூலைக் கூட என்னால் எவ்வளவு தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. எதற்குமே மறுபதிப்பு கிடையாது.




‘ஆறு மாதங்களுக்கு முன், தன் சொந்தக் காசு போட்டு சிவராமன் நாவல் ஒன்று பிரசுரம் செய்தான். ‘அந்த இருநூறு ரூபாய்க்கு எனக்கு ஒரு ஜோடி வைர டோலக் வாங்கியிருக்கலாமே’ என்பது ராஜத்தின் கட்சி. அந்த நாவலைப் பத்திரிகைகளும் சில நண்பர்களும் வானளாவப் புகழ்ந்தும், விற்றது ஏதோ நூறு நூற்றைம்பது பிரதிகள்தாம். எஞ்சிய பிரதிகள் எல்லாம் அவன் வீட்டில் சிதறிக் கிடந்தன.’




‘அவனால் சம்பாதிக்க கையாலாகவில்லை என்பது உண்மைதான். உண்மையைச் சொன்னாளே என்று ராஜத்திடம் கோபித்துக் கொள்வதால் பயன் என்ன? விழுந்து விழுந்து எழுதினாலும் ஒரு மாதத்தில் இரண்டு மூன்று கதைகளே எழுத முடிந்தது. புஸ்தகங்களாக எழுதினால் போடுவதற்கு ஆள் தேடிக் கொண்டு தெருத்தெருவாக அலைய வேண்டும். இந்த நிலைமையில் மாதம் ஐம்பது ரூபாய் சம்பாதிப்பதே சிரமம். இருநூறு முந்நூறு என்று செல்வாகிக் கொண்டிருந்த இடத்தில் இந்த ஐம்பது கடலில் பெருங்காயம் கரைத்த மாதிரிதான்…’




இப்படியாக ‘சர்மாவின் உயில்’ முழுக்கவும் தமிழ்நாட்டில் எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைப் பற்றி ரத்தக் கண்ணீர் வடித்திருக்கிறார் க.நா.சு. சமூகத்தை விடுங்கள்; ஒரு எழுத்தாளனுக்கு குடும்பத்தில் கிடைக்கும் அவமரியாதையைப் பக்கம் பக்கமாக எழுதுகிறார். சங்க காலத்திலிருந்து எழுத்தாளனின் நிலைமை தமிழ்நாட்டில் இதுதான். இன்னொரு உதாரணம்:




‘என்ன, மறுபடியும் கண்ணை மூடிண்டு கதையைப் பற்றி யோசனை பண்ண ஆரம்பிச்சுடேளா? இலையிலே சாதம் போட்டு ஆறிண்டிருக்கு. கதை எழுதிக் கிழிச்சது போறும். வாங்கோ!’ என்று சொல்லிக் கொண்டே ராஜம் வந்தாள்.




‘பசி கூட வந்துடுத்து எனக்கு’ என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே எழுந்தான் சிவராமன்.




‘காலையிலே வேலை வெட்டிப் புரட்டியிருக்கேளே, பசிக்காதா, பாவம். பசிக்கத்தான் பசிக்கும். வாங்கோ!’ என்றாள் ராஜம்.




அதற்கு சிவராமன், ‘அந்த நாளிலே அடிமைகளைக் கூட அவர்களுடைய எசமானர்கள் இந்த மாதிரி விரட்டியிருப்பார்களா என்பது சந்தேகந்தான்’ என்றான்.




ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய குடும்பத்தில் கிடைக்கும் மரியாதையைப் பாருங்கள். எதிர்பாராத தருணத்திலெல்லாம் சடார் சடார் என்று சாட்டையடி. ஒரே காரணம், மற்ற தொழில்களைப் போல் எழுத்துக்குப் பணம் வருவதில்லை. அதனால் வீட்டில் பட்டினி. அதனால் வீட்டில் அவமரியாதை. கடைசியில் சிவராமன் தன் அத்தங்காள் பவானியையும் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான் என்று முடிகிறது சரிமாவின் உயில் நாவல். முடிவில் எத்தனை சதவிகிதம் சுயசரிதை என்று தெரியவில்லை. ‘ஆனால் அப்போது இருதாரத் தடுப்புச் சட்டம் இல்லை’ என்று முன்னுரையில் எழுதுகிறார் க.நா.சு.





















கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தமிழ் வாழ்க்கை எப்படி இருந்தது; அது எத்தகைய சீரழிவைச் சந்தித்தது; அதன் வாழ்வும் தாழ்வும் எப்படி அமைந்தது என்பதுதான் க.நா.சு. நாவல்களின் மையப்புள்ளி. பொய்த் தேவு, அவதூதர் இரண்டையும் அதற்கான மகத்தான இலக்கிய சாட்சிகளாகக் கூறலாம்.




சில உதாரணங்களைப் பார்ப்போம். முதலில் சிறுவர்களின் கல்வி. இரண்டு மூன்று வருஷங்கள் பள்ளிக்கூடத்திலே படிப்பான் பையன். அதற்குள் பெற்றோரும் மற்றோரும் படிப்பால் என்ன பிரயோசனம் என்பார்கள். படிப்பு நின்று விடும். விடாமல் படித்துப் புரட்டியவர்களின் பிற்கால வாழ்க்கையைக் கவனிக்கும்போது அப்படி விட்டது சரியான காரியமே என்றுதான் அவர்களுக்குப் படும். இதற்கு விலக்காக உள்ளவர்கள் சில ஐயர் வீட்டுப் பிள்ளைகள். சாத்தனூர் பள்ளிக்கூடத்தை முடித்து விட்டு, கும்பகோணத்துக்குக் கட்டுச்சாதம் கட்டிக் கொண்டு போய் பெரிய பள்ளியிலே படித்து, பிறகு பட்டணம் (சென்னை), கோயம்புத்தூர் என்று எங்கெங்கோ வேலைக்குப் போய் விடுவார்கள்.




பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கு முதல் நாள் போகும் வைபவம் ஒரு திருமணச் சடங்கைப் போல் நடக்குமாம். அப்படி ஒரு வைபவத்தை வர்ணிக்கிறார் க.நா.சு. ‘அதிகாலையிலிருந்து நண்பகல் வரையில் மேளக்கார ராமசாமி ஊதித் தள்ளி விட்டான். தவுல்காரன் தவுலைக் கையாளும் கோலாலும் மொத்தித் தள்ளி விட்டான். பொரியும் கடலையும் – இது ஒரு பதக்கு, அது ஒரு பதக்கு – கலந்து, போன இடம் தெரியாமல் போய் விட்டன. இருநூறு பேருக்கு மேல் வந்து விருந்து சாப்பிடக் காத்திருந்தார்கள்.




விருந்து முடிந்ததும் மீண்டும் மேளம் கொட்டத் தொடங்கி விட்டது. பையனைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடுவதற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். முதலில் மேளக்காரர்கள் வாசித்துக் கொண்டே தெருவில் வந்து நின்றார்கள். பையனும் வந்து நின்றான். மாங்காய் மாங்காயாகச் சரிகை வேலை செய்த சிவப்புப் பட்டு உடுத்தியிருந்தான். மேலே ஒரு சீட்டித் துணிச் சொக்காய் – அந்தச் சீட்டியிலே பெரிய பெரிய பூக்கள் போட்டிருந்தன. தலையைப் படிய வாரிச் சீவிப் பின்னி விட்டிருந்தார்கள். எலிவால் போன்ற சடையின் நுனியைச் சிவப்புப் பூநூல் அலங்கரித்தது. பையனின் கறுத்த நெற்றியிலே கறுப்புச் சாந்துப் பொட்டு ஒன்று ஒளியிழந்து தெரிந்தது. பெண்களின் கூந்தலிலே வைப்பது போல் ஒரு மல்லிகைச் சரத்தை அவன் தலையிலே வைத்திருந்தார்கள். வால்பெண் ஒன்று – அது அவன் அக்காளாக இருக்கும் – பையன் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்த போது அவனுடைய எலிவால் சடையை வெடுக்கென்று இழுத்து விட்டு ஓடிப் போய் விட்டாள். பையன் மிரள மிரள நாலா பக்கமும் பார்த்துக் கொண்டே நின்றான்.’ (பொய்த் தேவு)




இப்படியே சுமார் 3000 பக்கங்கள் நாவலாக எழுதித் தள்ளியிருக்கும் ஒரு மகத்தான எழுத்தாளனை இங்கே விமரிசகர் என்று பட்டம் கொடுத்து வைத்திருப்பது எப்பேர்ப்பட்ட கொடுமை என்று யோசித்துப் பாருங்கள்.




சாத்தனூரில் இருபதுகளின் (1920) மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது பஞ்சாமியின் ஹோட்டல். அதன் மூலம் சர்வமானிய அக்ரஹாரத்தில் ஒரு வீட்டையும் வாங்கினார். மூத்த மனைவி. அதோடு, ஆண்டுக்கு ஆண்டு மாறும் இளைய மனைவி. சில ஆண்டுகளில் பஞ்சாமி ஊரிலேயே பெரிய பணக்காரராகி விட்டார். எப்படியென்றால், பம்பாயில் சிவப்பு விளக்குப் பகுதிகளுக்குப் பெண் விற்பனை செய்தார் பஞ்சாமி. இளைய மனைவி என்று அவர் அழைத்து வரும் பெண்கள் ஒரே வருடத்தில் காணாமல் போவதற்குக் காரணம் அதுதான் என்பதை ஊர்க்காரர்கள் யூகித்துக் கொண்டார்கள். இது தவிர, பாண்டிச்சேரியிலிருந்து கள்ளக் கடத்தலும் செய்தார். இதையெல்லாம் பொறுத்துக் கொண்ட அக்ரஹாரம், அலமுவின் பேத்தி (அலமு யார் என்று பின்னால் வரும்) கீழ்ச் சாதி இளைஞன் ஒருவனைக் காதலித்தபோது அவனை அடித்துக் கொல்லவும் தயாராகிறது.




ஆட்கொல்லி நாவலில் க.நா.சு. ஒரு மாமா, மாமியைப் பற்றி எழுதுகிறார். மாமாவை இயக்குபவள் மாமி. தாளிப்பதற்குக் கடுகையே எண்ணிப் போடும் ரகம். அப்படி இருந்தால் கூடப் பரவாயில்லை. அடுத்தவன் காசை அடித்துப் பிடுங்கி பணக்காரர்கள் ஆனவர்கள் அவர்கள். லேவாதேவி. ஒரே பத்தியில் அந்த நாவல் முழுவதையும் நாம் புரிந்து கொண்டு விடலாம்.




மேலத்தெரு சதாசிவன் பெண்டாட்டி செத்துக் கிடக்கும்போது காரியம் செய்வதற்கென்று ஒன்றரை வட்டியில் வேங்கடாசலத்திடம் (கதைசொல்லியின் மாமா) ஐநூறு ரூபாய் கடன் வாங்கினான். ஆறு வருஷத்தில் வட்டியோ முதலோ திருப்பித் தரப்படாமல் ஆயிரத்துக்கு இரண்டு வட்டிக்குச் சீட்டு எழுதித் தரப்படவே இன்னொரு நாலு வருஷத்தில் சதாசிவத்தின் நார்த்தங்கால் செக்குமேடு நிலம் பூராவும் மாமாவுடையதாகி விட்டது. சாதாரணமாக மூவாயிரத்துக்குக் குறைவில்லாமல் விலை போகும். மாமா தந்த ஐநூறுக்கு ஈடாகி விட்டது.

க.நா.சு. பகுதி - 3


By சாரு நிவேதிதா


First Published : 27 September 2015 10:00 AM IST







பொதுவாகத் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் மனிதர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் அந்த மனிதர்கள் வசிக்கும் இடத்துக்குக் கொடுக்கப்படுவதில்லை. சினிமாவை வைத்து இதைச் சற்று எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஆயிரக்கணக்கில் எடுக்கப்பட்டாலும் தமிழ் சினிமாவில் இதுவரை சென்னை என்ற நகரமே வந்ததில்லை. ஆரண்ய காண்டம், மெட்ராஸ் என்ற இரண்டு படங்கள் மட்டுமே விதிவிலக்கு. அதிலும் வட சென்னை தான் வந்தது. தில்லி-6 என்ற படத்தில் பழைய தில்லி என்ற நகரமே - ஜிலேபி சாப்பிடும் மனிதர்கள், பழைய தில்லியின் குறுக்குச் சந்துகள் மற்றும் அந்நகரின் கலாச்சாரமே - அதில் ஒரு பாத்திரமாக வரும். இலக்கியத்தில் பெரூவைச் சேர்ந்த மரியோ பர்கஸ் யோசாவின் (Mario Vargas Llosa) நாவல்களில் ஒவ்வொரு கதையும் அது எந்த நிலப்பகுதியில் நடக்கிறதோ அந்த நிலமே ஒரு பாத்திரமாக மாறி விடுவதைப் பார்க்கலாம். அவருடைய முக்கியமான நாவல்கள் Green House, Conversation in the Cathedral, Feast of the Goat. Green House-ல் வருவது பெரூவின் வடமேற்குக் கடற்கரையில் உள்ள ப்யூரா (Piura) என்ற ஊர். 1920-லிருந்து 1960 வரையிலான ப்யூராவை நாம் அந்த நாவலில் காணலாம். கதீட்ரல் நாவலைப் படித்து விட்டால் நீங்கள் பத்து இருபது ஆண்டுகள் பெரூவின் தலைநகர் லீமாவிலேயே வாழ்ந்தது போன்ற அனுபவத்தைப் பெறலாம். Feast of the Goat-ல் கரீபிய நாடான டொமினிகன் ரிபப்ளிக் தான் களம். இந்த நாவலை வாசித்தவர்களுக்கு அதன் தலைநகரான ஸாந்த்தோ தொமிங்கோ (Santo Domingo) சொந்த ஊரைப் போல் மாறி விடும்.




ஒரு ஊர் இலக்கியமாக மாற முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணம், ஓரான் பாமுக்கின் ‘இஸ்தாம்பூல்’ மற்றும் ‘என் பெயர் சிவப்பு’. இஸ்தாம்பூல் என்ற நகரத்தை பாமுக் எந்த அளவுக்கு இலக்கியமாக மாற்றியிருக்கிறார் என்றால் அந்த நூலைப் படித்த அடுத்த கணம் நான் இஸ்தாம்பூல் கிளம்பி விட்டேன். பாமுக்கின் இஸ்தாம்பூலில் பார்த்த தெருக்கள், கடைகள், பாலங்கள், கடல், பூனை, நாய், திருப்பங்கள், சதுக்கங்கள், மசூதிகள் என்று ஒவ்வொன்றாக ஸ்பர்சித்தேன். இப்போது நான் கண்ட இஸ்தாம்பூல் ஒரு ஐநூறு பக்க நூலாக என் நாட்குறிப்புகளில் அடங்கியிருக்கிறது. இதேபோல் ‘என் பெயர் சிவப்பு’ நாவலில் வரும் கார்ஸ் நகரம். குளிர்காலத்தில் பனி பொழியும்போது பார்க்கலாம் என்று என் பயணத்தில் கார்ஸ் நகரைச் சேர்க்கவில்லை. ஆனால் உலகில் வேறு எந்த நாவலிலும் ஒரு ஊரைப் பற்றி இவ்வளவு விரிவாக எழுதப்பட்டதில்லை என்று சொல்லலாம். நாவல் முழுவதும் கார்ஸ் தான். அந்த ஐநூறு பக்க நாவலில் பனி பற்றியே நூறு பக்கங்கள் வரும் என்று நினைக்கிறேன். அந்தக் கொடும்பனியில் கார்ஸ் எப்படி இருக்கும்? ‘என் பெயர் சிவப்பு’ நாவலைப் படித்த பல வாசகர்கள் உலகெங்கிலும் இருந்து கார்ஸ் நகரைக் காண்பதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியாக உலக இலக்கிய வாசகர்களின் புனித நகராக மாறியிருக்கிறது கார்ஸ்.




இதே போன்ற இலக்கியச் சாதனையை செய்திருக்கிறார் க.நா.சு. பக்கம் பக்கமாக, நாவல் நாவலாக சாத்தனூரைப் பற்றி எழுதிக் குவித்திருக்கிறார். சாத்தனூர் நாவல்கள் என்றே அவற்றை அவர் குறிப்பிடுகிறார். மேற்கோள்கள் காட்டினால் இதுவே தனிப் புத்தகமாக நீண்டு விடும் என்பதால் அவருடைய அத்தனை நாவல்களையுமே வாசகர்கள் படித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.*




***




க.நா.சு.வின் நாவல்களை வாசிக்கும்போது கிட்டத்தட்ட ஒரு கால எந்திரத்தில் ஏறி நூறு நூற்றைம்பது ஆண்டுகள் பின்நோக்கிச் செல்வதுபோல் உணர்கிறோம். பித்தப்பூவில் வரும் ‘பத்து’ என்கிற பத்மநாபய்யரின் குடும்பது இது:




‘பத்துவின் முதல் மனைவி மூலமாகப் பிறந்த குழந்தைகள் மூன்றும் பெண்கள். அவற்றில் இரண்டு கல்யாணத்திற்கிருந்தன. மூத்த மகளுக்குக் கல்யாணமாகி ஒரு பெண்ணும் பிள்ளையும் இருந்தன. பத்துவின் இளைய மனைவிக்கு மொத்தம் எட்டு குழந்தைகளும் பையன்கள். முத்தவன் ராஜா தான் மற்ற குழந்தைகளையெல்லாம் தூக்கி வளர்த்துப் பெரியவனாக்கியவன். இளையாளுக்கு வீட்டு வேலைகள் ஏராளம். இரண்டு கட்டு வீடு. வாசலில் ஒரு கிணறு. கொல்லையில் ஒரு கிணறு. தினமும் வீட்டுப் பேர்வழிகள் பத்துப் பன்னிரண்டு பேருடன் சேர்த்து – சாப்பிடுவதற்கு தெருவோடு போகிறவர்கள், தெரிந்தவர்கள், தேடி வந்தவர்கள் என்று யாரையாவது நாலு பேரைக் கூட்டிக் கொண்டு வந்து விடுவார் பத்து. இத்தனை பேருக்கும் சமைக்க வேண்டிய கடமை பத்துவின் மனைவிக்கானது.’




‘அது 1933-ம் வருஷம். ராஜா கும்பகோணம் காலேஜில் இண்டர்மீடியட் இரண்டாவது ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். கடைசிக் குழந்தைகள் மூன்றையும் கவனித்து, காலையில் தூக்கி வைத்துக் கொண்டிருந்து விட்டு, பரக்கப் பரக்க அரை வயிறு சாப்பிட்டுவிட்டு, ஐந்து மைல்கள் நடப்பதற்கு ஒரு மணி நேரம் என்று வைத்துக்கொண்டு ஒன்பது மணிக்குக் கிளம்பி காலேஜ் போவான். நடைதான். சைக்கிள் இல்லை.’ (பித்தப்பூ)




‘அன்று சாத்தனூரில் காவேரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. சர்வமானிய அக்ரஹாரத்துப் படித்துறையில் அதிகாலையிலிருந்து தருமத்தோணி விடுவார்கள். சாதாரண நாட்களில் தருமத்தோணியில் பகலில் போகிறவர்கள் மிகக் குறைவு. சாயங்காலம் போகிறவர்கள் மாங்குடி கள்ளுக்கடையில் தண்ணி போடப் போகிறவர்கள். சாத்தனூரில் அப்போதெல்லாம் கள்ளுக்கடை கிடையாது.’ (பித்தப்பூ)




***




தஞ்சை ப்ரகாஷ் எழுத்தில் எந்த அளவுக்குப் பிரதானமான இடத்தைப் பெண்கள் பிடித்திருந்தார்களோ அதே அளவுக்குப் பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறார் க.நா.சு. சிலரைப் பற்றிப் பார்ப்போம்:




க.நா.சு.வின் பெண்களில் முக்கியமானவர் ‘அக்கா.’ க.நா.சு.வின் தந்தை நாணா ஐயரின் (‘பித்தப்பூ’வின் ரிடையர்டு போஸ்ட்மாஸ்டர்) அம்மா. அந்தப் பாட்டியை எல்லோரும் அக்கா என்றுதான் அழைப்பது வழக்கம். க.நா.சு.வின் முதல் நாவலான ‘சர்மாவின் உயிலை’ அவர் அந்த ‘அக்கா’வுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார். இந்த நாவலை அவர் 1938-ல் சேலத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி முதல் பாடத்தை 15 நாள்களிலும் பிறகு திருத்திய பாடத்தை 21 நாள்களிலும் எழுதியிருக்கிறார். பின்னர், எஸ். பாஷ்யம் சாண்டில்யனின் சிபாரிசினால் இது சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் தொடராக வந்துள்ளது. 1948-ல் கலைமகள் காரியாலத்தின் மூலம் (அதிபர் ரா. நாராயணஸ்வாமி ஐயர்) வெளியிடப்பட்டது. இதுவும் க.நா.சு.வின் குடும்பக் கதைதான். ஆனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையின் சித்திரம். இது குறித்து க.நா.சு. முன்னுரையில் சொல்கிறார்:




‘நம்மாத்துக் கதையையே எழுத வேண்டுமா?’ என்று சித்தப்பா கேட்டதும், ‘வேறு என்ன எழுத முடியும்?’ என்று அப்பா பதிலளித்ததும் நினைவிருக்கிறது.




எங்கள் குடும்பத்தை இரண்டு தலைமுறைகளுக்கும் அதிகமாக ஒருமையை உணரச் செய்தவள் பாட்டி. தமிழ்ப் புலவர்கள் குலத்தில் உதித்தவள். அவளிடம் கேட்டுக் கேட்டு என் கதை சொல்லும் திறமையை (?) வளர்த்துக் கொண்டேன் நான் என்று சொல்லலாம். ஒன்பது வயதில் சிவகங்கையிலிருந்து சுவாமிமலைக்கு மணப்பெண்ணாக வந்து 88 வயது வரையில் (இடையில் சில காலம் லாகூர், கல்கத்தா, காசி என்பதாக) சுவாமிமலையிலேயே வாழ்ந்தவள்.’




சர்மாவின் உயிலில் சானுப் பாட்டி என்று ஒரு அத்தியாயம் வருகிறது. முப்பது ஆண்டுகளுக்கு மேல் விதவையாகவே வாழும் பெண்மணி சானுப் பாட்டி. (பாட்டியாவதற்கு முன் ஜானகி; இந்த சானுப் பாட்டி தான் க.நா.சு. குறிப்பிடும் ‘அக்கா’.) ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய பிராமணப் பெண்களின் வாழ்க்கையை அந்த அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார் க.நா.சு. அதில் சில பத்திகளை மேற்கோள் காட்டுகிறேன்:




‘அதென்னவோ சானுப் பாட்டியின் பேரன் அகமுடையாள் சுவாமிமலையில் அந்த வீட்டில் அதற்கு முன் தங்கிய போதெல்லாம் ரகளையாகவே போய் விட்டது. அப்படிப் போனதுக்குக் காரணம் தன் பெண் மங்களமும் அங்கிருந்ததுதான் என்று சானுப் பாட்டி எண்ணினாள். மங்களம் ஒரு விதவை; அவளுக்குப் பிள்ளைகள் இல்லை; இரண்டே இரண்டு பெண்கள்தாம். அந்த இரண்டு பெண்களும் – அவர்கள் அதிர்ஷ்டம் – விதவைகள்தாம். மூத்தவள் – அவள் பெயர் சாவித்திரி – கொஞ்ச காலம் தன் கணவனுடன் வாழ்க்கை நடத்தி விட்டு விதவையானவள். இளையவள் - அவள் பெயர் பவானி – வாழ்க்கை இன்பத்தையே அறியாதவள். அவளுடைய பன்னிரண்டாவது வயதில் கல்யாணம் ஆயிற்று. கல்யாணமான ஏழெட்டு மாதங்களுக்கெல்லாம் அவள் கணவன் சென்னையில் ஏதோ ஒரு விபத்தில் அகப்பட்டு மாண்டு விட்டான்.’




‘சானுப் பாட்டி அவளுடைய நீண்ட ஆயுளில் ஒரு நாளாவது தலைவலி என்று கூடப் படுத்துக் கொண்டதில்லை. அப்படிப் படுத்து விட அவளுக்குப் பொழுதே கிடைத்ததில்லை. சதா யாராவது பெண்ணின் பெண்ணோ, பிள்ளையின் பெண்ணோ, மாட்டுப் பெண்ணோ வந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்து நாலைந்து மாசம் வைத்துக் கொண்டிருந்து விட்டு ஊருக்கு அனுப்புவதற்குள் சிசுருக்ஷைக்கு வேறு யாராவது வந்து விடுவார்கள்.’




‘பட்டாபிராமனின் மனைவி விசாலம் தங்கமான பெண். சானுப் பாட்டிக்கு மிகவும் பிடித்திருந்த மாட்டுப் பெண். அவள் ஒரே ஒரு பிள்ளையையும் ஒரு பெண்ணையும் பெற்று வைத்து விட்டு, முப்பது முப்பத்திரண்டு வயசு ஆவதற்கு முன்னரே அகாலத்தில் மரணமடைந்து விட்டாள். அந்தப் பிள்ளைதான் சிவராமன். சானுப் பாட்டிதான் சிவராமனை எடுத்து வளர்த்ததெல்லாம்.’




‘சர்மாவின் உயில்’ சானுப் பாட்டிக்கு நேர் எதிரான பாத்திரம் ‘அவதூதரி’ல் வரும் அலமு. ராமசந்திர ஐயரின் மனைவி. சாமர்த்தியக்காரி. சாத்தனூர் பெரிய மனிதர்களைத் தனக்கு வேண்டப்பட்டவளாக ஆக்கிக் கொண்டவள். அவளை அடையப் பலர் காத்திருந்தார்கள் என்றாலும் அவள் தனக்கும் தன் கணவனுக்கும் யாராலெல்லாம் அனுகூலம் உண்டோ அவர்களுக்கு மட்டுமே கிடைத்தாள். ஆனால் அவளுடைய அத்தனை வருட ‘அந்த மாதிரி’ வாழ்க்கையில் அவள் எந்தத் தீண்டப்படாதவனையும் தன்னிடத்தில் அண்டவிட்டதேயில்லை என்ற வதந்தி ஊரில் பெருமையாகப் பேசப்பட்டது. சாத்தனூருக்கு வந்த புதிதில் வாடகை வீட்டில் குடியிருந்த ஐயர் விரைவில் சொந்த வீடு வாங்கி விட்டார்.















‘அவதூதர்’ கதை நடப்பது 1950களில். அலமு சாத்தனூருக்கு வந்தது 1880-ல். அப்போது அலமுவை அடைய வேண்டி இரண்டு பிராமணர்களுக்குள் போட்டி இருந்ததாகவும், அந்தப் போட்டியைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அலமு அவர்கள் இருவரையும் நடுத்தெருவில் கைகலப்பில் இறங்க வைத்தாள் என்றும், இருவருமே அவளுடைய ‘அன்பைப்’ பெறுவதற்காகப் போட்டி போட்டுக் கொண்டு அவளுக்கு வீடு கட்டுவதில் உதவி செய்ததாகவும், கடைசியில் அவள் அந்த இருவரையுமே விட்டு விட்டு மூன்றாவதாக ஒரு பிராமணனுக்குத் தன்னைத் தந்து விட்டதால் அந்த முன்னிரண்டு பிராமணர்களும் பகை நீங்கி அலமுவுக்கும் அவள் கணவனுக்கும் சூன்யம் வைத்து விட்டதாகவும் ஒரு கதைப் பாடல் உண்டு என்று சொல்கிறார் க.நா.சு.




ஐம்பதுகளின் சாத்தனூர் எப்படி இருந்தது? அங்கிருந்த முகமதிய சமூகம் தலைநிமிர ஆரம்பித்தது. இடைநிலைச் சாதியினர் வசித்த மேட்டுத் தெருவும் வளர்ச்சி காணத் துவங்கியது. ஆனால் பிராமணர்களின் ஸ்திதி படிப்படியாகச் சரிந்தது. அவலம் என்னவென்றால், அந்த சரிவை அவர்கள் உணரக் கூட இல்லை. சாத்தனூர் பிராமணர்களில் சரிபாதி தங்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாதபடி அகதிகள் நிலைக்கு வந்து விட்டனர். இந்த இடத்தில் சங்கிலிப் பாட்டி என்ற பெண்ணின் கதையைக் கூறுகிறார் க.நா.சு. கணவன் இறந்து நாற்பது ஆண்டுகள் ஆகிறது. ஒரு பசுமாடு வளர்த்து அதன் பால், அதிலிருந்து உண்டாகும் தயிர், நெய் முதலியவற்றை விற்று அதன் மூலம் சௌகரியமாக வாழ்ந்து வந்தாள். அவளுடைய ஒரே நோக்கம், தன் பேரன் டபீர் கிட்டு படித்து முன்னேற வேண்டும் என்பதுதான். ஆனால் டபீர் கிட்டுவோ அவள் காசையெல்லாம் சிகரெட், வெற்றிலை, சீட்டாட்டம், பெண்கள் போன்றவற்றில் தொலைத்தான். படிப்பில் நாட்டம் இல்லை. கடைசியில் சங்கிலிப் பாட்டி தன் மாட்டையும் விற்று விடுகிறாள் என்று போகிறது கதை.




க.நா.சு.வின் மேலும் சில பெண்கள்:




‘சாமா சித்தப்பாவுடைய மனைவி, நான் தமிழ் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்த ஆறு மாதத்தில், ஒரு மாதம் இறந்து விட்டாள். சாமா அவசர அவசரமாக இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகள் பிறந்ததும், பெண்டாட்டியுடன் அதே அவசரத்துடன் சண்டை பிடித்துக் கொண்டு பிள்ளையையும் விட்டு விட்டுப் போய் விட்டான்.’ (பித்தப்பூ)




‘ராமுடு வழக்கம்போல் கோயிலுக்குப் போகக் கிளம்பும்போது, ‘பண்ணுகிற கல்மிஷத்தையெல்லாம் பண்ணிக்கொண்டு உனக்கென்னடா கோயில்?’ என்று தடுத்தார் ராமச்சந்திர சாஸ்திரிகள். ‘நீ யாரடா?’ என்று ராமுடு கேட்டதற்கு, கபடமில்லாமல் சிரித்துக் கொண்டு ‘உன் வப்பாட்டியின் புருஷன்!’ என்று உரக்கச் சொல்லிக் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்து விட்டது பைத்தியம். ராமுடு தன் வீட்டிற்குப் போனவர் கையில் ஒரு உருண்டையான பிளக்காத சவுக்குக்கட்டையை எடுத்துக் கொண்டு வந்து சாஸ்திரிகளை அடித்து விட்டார். இரண்டு கைகளையும் தலையில் வைத்து அழுத்திக் கொண்டு, ரத்தம் பீறிட்டடிக்க, தரையில் சாய்ந்து விட்டார் சாஸ்திரிகள். அப்போதுதான் ‘அடப்பாவி, அவரைக் கொன்னுட்டியே’ என்று அலறிக் கொண்டு ஓடி வந்தாள் அவர் மனைவி சீதாலக்ஷ்மியம்மாள்.’ (பித்தப்பூ)




‘என் சித்தி உடுக்கத் துணியில்லாமல், இருக்க ஓர் ஓட்டைக் குச்சு வீடு தவிர வேறு எதுவும் இல்லாமல், பாதி நாள் உண்ணப் போதிய உணவு இல்லாமல், இரண்டு வருஷத்துக்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, நாலு வருஷத்துக்கு ஒன்றைப் பறி கொடுத்துக் கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்.’ (ஆட்கொல்லி)















சர்மாவின் உயில், பொய்த் தேவு, அவதூதர், அசுர கணம் போன்ற உலகத் தரமான நாவல்களின் வரிசையில் வரக் கூடியதே ஒருநாள் என்ற நாவலும். கதை நடப்பது 1946-ல். நாவலை எழுதியதும் அதே ஆண்டுதான். ஆனால் எழுதி முடிக்கவில்லை. பின்னர், நாலைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை யுனிவர்சிடி லைப்ரரியில் உட்கார்ந்து இரு மாலை நேரங்களில் எழுதி முடித்ததாக இதன் முன்னுரையில் எழுதுகிறார் க.நா.சு. மேலும், ‘ஒருநாள் – நான் எழுதிய நாவல்களில் ஒன்பதாவது என்று எண்ணுகிறேன். பிரசுரமாவதில் ஐந்தாவது. சாத்தனூர் நாவல்களில் நான்காவது’ என்று குறிப்பிடுகிறார்.




நாவல் முழுக்கவே ஹிட்லரின் நாஜிப் படையில் போர் புரிந்து விட்டு இந்தியாவுக்குத் திரும்பிய மூர்த்தி தன்னுடைய பூர்வீக ஊரான சாத்தனூர் வந்து தங்கும் ஒருநாளில் நடக்கும் நிகழ்ச்சிகள்தாம். ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் ஒரு நாளில் என்ன நடந்து விடப் போகிறது? அங்கே வசிக்கும் ஒரு சிலரைப் பற்றி மூர்த்தி கேட்டு அறிந்து கொள்கிறான். நாவலின் முதல் அத்தியாயத்தில் பங்கஜம் என்ற பதினெட்டு வயதுப் பெண்ணின் ஒரு காலை நேரம் விவரிக்கப்படுகிறது. எத்தனையோ பெண்ணியவாதிகளின் எத்தனையோ எழுத்துக்கள், நாவல்கள், கவிதைகள் பெண் உடலின் வாதையை, நூற்றாண்டுகளாய் அடக்கப்பட்டதன் அரசியலைப் பேசியுள்ளன. அதையெல்லாம் விட இந்த சாத்தனூர் பங்கஜம் 1946-ம் ஆண்டின் ஒரு அதிகாலை வேளையில் தன் வாழ்வைப் பற்றி எண்ணிப் பார்க்கும் ஒருசில கணப் பொழுதுகள் வீர்யமானவை. இந்த உலகில் பெண்ணாகப் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் வாசித்தே ஆக வேண்டிய ஒரு பகுதி இது. தான் ஒருத்திதான் இந்தத் தெருவிலேயே துயரம் மிகக் கொண்டவளா என எண்ணுகிறாள் பங்கஜம். இல்லை. அவளை விடவும் பெருந்துயர் அடைந்த கல்யாணிப் பாட்டி பக்கத்து வீட்டிலேயே இருக்கிறாள். பெயர் தான் கல்யாணிப் பாட்டி. அவள் காரியங்களெல்லாம் கல்யாணமல்லாதவைதான். கணவன் பார்த்துக் கல்யாணம் செய்து கொண்டது ஏழாவது வயதில். அறுத்துக் குளித்து விட்டு வீட்டுக்கு வந்தது ஒன்பதாவது வயதில். இப்போது அவள் வயது அறுபதுக்கு மேல். ஐம்பது வருஷங்களில் அவள் உள்ளம் மரத்து விட்டதோ? ஐம்பது வருஷங்களில் தன் உள்ளமும் இப்படியேதான் மரத்து விடுமோ?




பின்குறிப்பு: க.நா.சு.வின் பத்து நாவல்கள் நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.




(தொடரும்)




(தொடரும்)







க.நா.சு. பகுதி – 4







By சாரு நிவேதிதா




First Published : 04 October 2015 10:00 AM IST







உ.வே.சா.வுக்குப் பிறகு தமிழர்கள் யாருக்கேனும் தலையாய நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள் என்றால் அது க.நா.சு. என்ற மேதைக்குத்தான். மேதை என்ற வார்த்தைக்கே க.நா.சு. என்று பொருள் கொள்ளலாம் என்ற அளவுக்கு உலக இலக்கியத்தைக் கற்றறிந்திருந்தார் அவர்.




‘அவரவர் பாடு’ என்ற நாவலை க.நா.சு. 1963-ல் எழுதினார். அதன் முன்னுரையில் அவர் குறிப்பிடுகிறார்: ‘எனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பதிலே போல ஈடுபாடு உண்டு. ஓரளவுக்கு மர்ம நாவல்களையும் இலக்கியத் தரமுள்ளதாகச் சமீப காலத்தில் பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் பண்ணுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்மாதிரி சில நாவல்கள் எழுதக்கூடாது என்று தோன்றிற்று. சக்தி விலாசம், ஆயுள் தண்டனை, கந்தர்வ லோகத்தில் கொலை என்று பல தொடர்கதைகளாகப் பல பத்திரிகைகளில் வெளிவந்த பின் சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்குக் கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து ‘அவரவர் பாடு’ என்கிற நாவலை எழுதினேன்.’















1940, 50களில் ஃப்ரெஞ்சில் பிரபலமாக இருந்த ஒரு துப்பறியும் நாவலாசிரியர் Georges Simenon (1903-1989). இவரது நாவல்கள்தான் ஒரு மர்ம நாவல் எழுதத் தூண்டுதலாக இருந்தது என்று குறிப்பிடுகிறார் க.நா.சு. அந்த ஆண்டு 1963! அவரது வாசிப்பு எந்த அளவுக்குப் பரந்து பட்டு இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணம். அதே சமயத்தில் அவர் காலத்தில் மர்ம நாவல் எழுதிக் கொண்டிருந்தவர்கள் எத்தனை போலியாக இருந்தார்கள் என்பதையும் ‘அவரவர் பாடு’ முன்னுரையில் பகடி செய்கிறார்.




க.நா.சு. அளவுக்கு உலக இலக்கியம் பயின்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவருடைய உலக இலக்கிய மதிப்புரைகளையும், அறிமுகங்களையும், அதையும் தாண்டி அவர் செய்த மொழிபெயர்ப்புகளையும் பார்த்தால் நமக்குப் புரியும். இதையெல்லாம் க.நா.சு. ஏன் செய்தார்? ஏன் அவர் தன் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருந்தார்?




சுந்தர ராமசாமி, தான் நெருங்கிப் பழகிய ஆளுமைகளைப் பற்றி அரவிந்தனிடம் உரையாடியிருக்கிறார். அந்த உரையாடல்கள் ‘நினைவோடை’ என்ற தலைப்பில் தனித்தனி நூல்களாக வந்துள்ளன. அதில் சி.சு. செல்லப்பா, க.நா.சு. இருவர் பற்றியுமான நூல்கள் க.நா.சு. பற்றி அறிந்து கொள்ள நமக்கு மிகவும் உதவிகரமாக உள்ளன. செல்லப்பா பற்றிய நூலாக இருந்தாலும் அந்த நூல் முழுக்கவும் சு.ரா. செல்லப்பாவை க.நா.சு.வோடு ஒப்பிட்டுக் கொண்டே பேசிச் செல்கிறார். இந்த நூலின் மூலம் க.நா.சு.வின் வாழ்க்கைச் சித்திரம் மிகக் கச்சிதமாக நம்முன் கவிகிறது. அதில் க.நா.சு.வின் வாசிப்பு பற்றி சு.ரா. கூறுகிறார்:




‘க.நா.சு. நாற்காலியை விட்டு எழுந்திருக்கவே மாட்டார். உட்கார்ந்து உட்கார்ந்து படித்து வந்ததால் அவரது முதுகு வளைந்து விட்டிருந்தது. தலையை நிமிர்த்தவே மாட்டார். ரோட்டில் நடக்கும்போது கூட அப்படித்தான் நடப்பார். உத்தமமான ஆண்கள் பெண்களின் பாதங்களை மட்டும்தான் பார்ப்பார்கள் என்று சொல்லுவார்களே, அது போல் இவரும் பெண்களின் பாதங்களையும் ஆண்களின் பாதங்களையும் மட்டுமே பார்த்தது போல்தான் இருப்பார். நாற்காலியில் உட்கார்ந்து குனிந்தபடியே படித்ததால் அப்படி ஆகியிருக்கிறது என்றால் நீங்களே யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். அவருக்கு வசதியாகச் சாய்ந்து கொண்டு படிப்பதற்கு ஏற்ற நாற்காலி இருக்கவில்லை.’




இந்த அளவுக்கு ஏன் ஒருவர் படிக்கவேண்டும் என்றால், க.நா.சு. என்ற ஒரே ஒரு மனிதர்தான் ஒட்டு மொத்தத் தமிழ் இலக்கியச் சூழலையும் மேற்கத்திய இலக்கியச் சூழலுக்கு இணையானதாக மாற்ற வேண்டியிருந்தது. ஏதோ ஒருவரைப் பிடித்து விட்டது என்பதற்காக உயர்த்தி வைத்துச் சொல்வதற்காக இப்படி நான் எழுதவில்லை. எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியச் சூழலில் க.நா.சு. பல எதிரிகளை ஒற்றை ஆளாகச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஒன்று, பண்டிதர்கள். இவர்களுக்கு மரபு இலக்கியம் மட்டுமே போதும். இவர்கள் பார்வையில் கழுதையும் குதிரையும் ஒன்றுதான்; பாகுபாடே இல்லை. எதைப் பற்றியுமே விமரிசன நோக்கு கிடையாது. இரண்டு, சி.சு. செல்லப்பா மற்றும் அவரது குழுவினரின் சநாதனப் பார்வை. செல்லப்பாவுக்கும் க.நா.சு.வுக்குமான முரண் வெறும் விமரிசனத்தோடு நின்று விடவில்லை. தனிப்பட்ட முறையில் க.நா.சு.வை ஓரங்கட்டுவதற்கு முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் செல்லப்பா. உதாரணமாக, 1959-ல் நடந்த எழுத்தாளர் சங்கத் தேர்தலில் க.நா.சு. போட்டியிட்டார். அப்போது அவர் அகில இந்திய அளவில் எல்லா எழுத்தாளர்களின் மரியாதைக்குரியவராகவும் இருந்தார். பிரான்சு சென்று ஜான் பால் சார்த்தர், ஆல்பெர் கம்யு போன்றவர்களோடும் பழகியிருந்திருக்கிறார். சார்த்தரை விட கம்யுவிடம் அவருக்குச் சற்று அதிக நெருக்கம் இருந்தது. இவ்வளவு செல்வாக்காக இருந்தும் சி.சு. செல்லப்பா செய்த உள்அரசியலால் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் எழுத்தாளர் சங்கத் தேர்தலில் க.நா.சு. தோற்றார். வென்றவர் பன்மொழிப் புலவர் அப்பாத்துரை!




(க.நா.சு.வின் மேல் அவர் காலத்திய எழுத்தாளர்கள் எவ்வளவு புகைச்சலில் இருந்தார்கள் என்பதற்கு நான் தில்லியில் இருந்த போது க.நா.சு.வின் ‘நண்பரான’ எழுத்தாளர் ஒருவர் என்னிடம் சொன்ன விஷயம் ஒன்று ஞாபகம் வருகிறது. அவர் என்னிடம் ‘க.நா.சு. பாரீஸுக்கே போனதில்லை; சும்மா காமுவைத் தெரியும்; கோமுவைத் தெரியும் என்று புருடா விட்டுக் கொண்டிருக்கிறார்’ என்றார். அப்புறம்தான் எனக்குத் தெரிந்தது இதெல்லாம் உள்காய்ச்சல் என்று. இதற்குக் காரணம், க.நா.சு. அவர் காலத்திய எழுத்தாளர்களெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத உயரத்தில் இருந்தார். ஆல்பெர் கம்யு மட்டும் அல்ல; உலகில் அவர் காலத்தில் இருந்த பல பிரபலமான எழுத்தாளர்களோடும் அவருக்குத் தொடர்பும் நட்பும் இருந்தது. சுந்தர ராமசாமி சொல்கிறார்: ‘கம்யுவுக்கும் க.நா.சு.வுக்கும் ஒருவருக்கொருவர் பிடித்துப் போயிருக்கிறது. ஆனால் அது பற்றி க.நா.சு. எதுவுமே எழுதினதில்லை. மஞ்சரியில் ‘பாரீஸுக்குப் போனேன்’ என்ற தலைப்பில் இரண்டு பக்கக் கட்டுரை வெளிவந்திருந்தது. அவ்வளவுதான். மணியனோ வேறு யாரோ இப்படிப் போய் விட்டு வந்தால் ஆனந்த விகடனில் ஐம்பது வாரத்துக்குப் பயணக் கட்டுரைத் தொடர் வந்திருக்கும். க.நா.சு.வுக்கு அந்த எண்ணமே கிடையாது. அவர் போவதும் தெரியாது; வருவதும் தெரியாது.’ (நினைவோடை) என்ன காரணம் என்றால், தஞ்சாவூர்க்காரர்களின் பொதுவான குணம் இது. தங்களைப் பற்றி அதிகமாக சொல்லிக் கொள்ள மாட்டார்கள். தஞ்சை ப்ரகாஷ் விஷயத்திலும் அதை வாசகர்கள் கவனித்திருக்கலாம். (அடியேன் விதிவிலக்கு.) இது தவிர, க.நா.சு.வுக்கு அடிப்படையிலேயே ஒரு துறவு மனம் இருந்தது. இது பற்றியும் சு.ரா. சொல்கிறார்: ‘நாம் இறந்து போவதோடு நாம் எழுதியவை எல்லாமே அழிந்து விடும் என்றாலும் க.நா.சு.வுக்குப் பெரிய வருத்தம் கிடையாது. அப்படியான ஒரு மனோபாவம் அவருடையது. எல்லாமே போய் விடலாம். ஏனென்றால், புதிய காற்று, புதிய மழை பெய்யும். வெய்யில் அடிக்கும். அதில் ஜனங்கள் போய்க் கொண்டிருப்பார்கள். நான் ஏதோ பைத்தியம் பிடித்ததினால் இதை எழுதியிருக்கிறேன். மற்றவர்களுக்கு அதில் ஈடுபாடு இருப்பதால் அதைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். புதுசு புதுசாக விஷயங்கள் வர வேண்டும். வரத்தான் செய்யும். ஒரு குறுகிய காலம்தான் எதுவுமே வாழ முடியும். வாழணும். ஒரு ஆமைக்கு இருக்கிற ஆயுட்காலம் வரைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய புத்தகம் இதுவரை எழுதப்பட்டதே கிடையாது.’ இது ந. பிச்சமூர்த்தி கூறியதாக இருந்தாலும் க.நா.சு.வுக்கும் இது பொருந்தும் என்கிறார் சு.ரா.




க.நா.சு. எதிர்கொள்ள வேண்டியிருந்த மூன்றாவது எதிரி, முற்போக்கு எழுத்தாளர்கள். ‘கம்யூனிஸ்டுகள் சொல்வதில் நியாயம் இருக்கலாம்; ஆனால் அவர்கள் எழுதுவது இலக்கியமே அல்ல’ என்று வாதிட்டார் க.நா.சு. இதனால் க.நா.சு.வுக்கு அமெரிக்காவிலிருந்து பணம் வருகிறது என்று சொன்னார்கள் கம்யூனிஸ்டுகள். அவரோ அன்றாடங்காய்ச்சியாக அலைந்து கொண்டிருந்தார். இது பற்றியும் சு.ரா. குறிப்பிடுவது மனதைத் தொடுகிறது. சி.சு. செல்லப்பா தன் வீட்டுக்கு எல்லா எழுத்தாளர்களையும் அழைத்து விருந்து அளிப்பது வழக்கம். தர்மு சிவராமு செல்லப்பா வீட்டிலேயே பல மாதங்கள் தங்கியிருக்கிறார். ஏ.கே. ராமானுஜம் போன்றவர்கள் எல்லாம் செல்லப்பா வீட்டில் உணவருந்தியிருக்கிறார்கள். ஆனால் க.நா.சு.வோ காபி குடிப்பதற்குக் கூட யாரையும் வீட்டுக்கு அழைக்க மாட்டார். ‘ஏனென்றால் யாராவது வந்தால் காப்பி போட்டுக் கொடுக்க முடியும் என்பதற்கான உத்தரவாதம் அவருக்கு இல்லை.’ இது சுந்தர ராமசாமியின் வார்த்தை.




இதெல்லாம் போக, இன்னொரு பெரிய எதிரியையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது க.நா.சு.வுக்கு. அதுதான் தமிழ்ச் சமூகத்தில் இருந்த ஃபிலிஸ்டைன் மனோபாவம். ‘இலக்கிய சுரணையுணர்வு இல்லாத சமூகம்’ என்ற பொருளில் ஃபிலிஸ்டைன் என்ற சொல்லைத் தமிழில் முதலில் உபயோகித்தது நான்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை. ஐம்பதுகளிலேயே இதே வார்த்தையால் தமிழ்ச் சமூகத்தை வர்ணித்திருக்கிறார் க.நா.சு. அரசியல், ஆன்மிகம், விஞ்ஞானம், சமூகவியல், பொருளாதாரம் என்று மற்ற துறைகளில் சிகர சாதனைகள் செய்தவர்களாக இருப்பார்கள். ஆனால் இலக்கியம் என்று வந்து விட்டால் பாமரத்தனமாக உளறுவார்கள். அதுதான் ஃபிலிஸ்டைன் மனோபாவம். அந்த மனிதர்களின் தகுதியையும் சமூக அந்தஸ்தையும் நினைத்து நம்மால் வாயே திறக்க முடியாது. க.நா.சு. அப்படி இல்லை. ஒற்றை ஆளாக நின்று கொண்டு பெரும் பத்திரிகைகளிலிருந்து மிகப் பெரிய ஆளுமைகள் வரை எதிர்த்துப் போராடியிருக்கிறார். நமக்கெல்லாம் தெரிந்த ஒரு சம்பவம், சென்னையில் பாரதி மகாத்மா காந்தியை அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று சந்தித்தது. அன்றைய தினம் திருவல்லிக்கேணியில் பாரதி நடத்த இருந்த கூட்டத்துக்கு மகாத்மாவை அழைக்கிறார். மகாத்மாவுக்கோ அன்று மாலை வேறொரு வேலை இருந்தது. நாளை வருகிறேனே என்று மகாத்மா சொல்ல, ‘உங்கள் துரதிர்ஷ்டம் மிஸ்டர் காந்தி, நான் வருகிறேன்’ என்று சொல்லி விட்டுப் போய் விட்டார் பாரதி. அப்போது பக்கத்திலிருந்த ராஜாஜியிடம் பாரதி பற்றி காந்தி விசாரிக்கிறார். ராஜாஜி ஏதோ பதில் சொல்ல, அதற்கு காந்தி, ‘இவர் மிகவும் போஷிக்கப்பட வேண்டிய ஆத்மா’ என்று கூறியிருக்கிறார். அப்படியானால் ராஜாஜி காந்தியிடம் பாரதி பற்றி என்ன சொல்லியிருக்கக் கூடும்? நிச்சயம் உயர்வான அபிப்பிராயமாக இருக்க முடியாது அல்லவா? ஆனால் அப்படியே வங்காளத்தை நினைத்துப் பாருங்கள். அந்த மொழியின் கவிஞனை அவர்கள் குருதேவ் என்று அழைத்தார்கள். அதனால்தான் மகாத்மாவும் அவரை குருதேவ் என்றே அழைத்தார்.




இன்னொரு உதாரணம் தரலாம். புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ என்ற சிறுகதை தமிழின் ஆகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. (முப்பது ஆண்டுகளாக புதுமைப்பித்தன் பற்றி நான் கொண்டிருந்த கருத்தை இந்தக் கதையைப் படித்ததன் மூலம் மாற்றிக் கொண்டேன். அவர் பற்றிப் பிறகு இந்தத் தொடரில் பார்ப்போம்.) கலைமகளில் மே 1943-ல் ‘சாப விமோசனம்’ வெளிவந்தது. ராமனுக்கு அகலிகையைக் குறித்து ஒரு நோக்கும், தன் மனைவி சீதையைக் குறித்து ஒரு நோக்கும் இருந்ததால் வெகுண்ட அகலிகை மீண்டும் கல்லாக மாறினாள் என்பது கதை.




இந்தக் கதை பற்றி அடுத்த மாதமே ராஜாஜி ஒரு கடிதம் எழுதி புதுமைப்பித்தனைக் கண்டித்தார். வால்மீகி போன்ற ஒரு மகரிஷியின் கதையில் கை வைக்க புதுமைப்பித்தன் போன்ற நபர்களுக்கெல்லாம் இடம் கிடையாது என்பது கடிதத்தின் சாரம். இது பற்றி க.நா.சு., ‘எத்தனையோ கெட்டிக்காரரும் அறிவுபூர்வமான சிந்தனைகளைத் தொடக்கூடிய சக்தி வாய்ந்தவருமான ராஜாஜியின் அசட்டுத்தனமான கருத்து இது’ என்று சொன்னார். அதுவும் எந்த இடத்தில்? நட்வர்சிங் தொகுத்த இந்தியச் சிறுகதைகள் என்ற ஆங்கிலத் தொகுப்பில் தமிழ் சார்பாக ராஜாஜியின் சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன. அது பற்றி பிற மொழி எழுத்தாளர்கள் க.நா.சு.வை ஆட்சேபத்துடன் கேள்விகள் கேட்டபோது, ராஜாஜியின் இலக்கிய உணர்வு பற்றிக் கேலி செய்து மேற்கண்ட புதுமைப்பித்தன் – ராஜாஜி சம்பவத்தைக் குறிப்பிட்டார்.




ஒருமுறை ஒரு இலக்கியக் கூட்டத்துக்கு ராஜாஜியை அழைக்கச் செல்கிறார் க.நா.சு. அது பற்றி அவர்: ‘என்னைப் பார்த்ததும் அதட்டலாக ‘யார் அது? ஐ அம் வெரி பிசி’ என்று சொன்னார். நான் முதலில் என்னை அறிமுகம் செய்து கொள்வதற்காக ‘ஐ அம் கே.என். சுப்ரமணியம்’ என்றேன். உடனே ராஜாஜி அவருக்கே உரிய எகத்தாளமான கிண்டல் தொனிக்கும் குரலில் ‘தி ஃபேமஸ் ரைட்டர்’ என்றார். நானும் சற்றும் விட்டுக் கொடுக்காமல் ‘நாட் ஸோ ஃபேமஸ் அஸ் ஸம் பீப்பிள் அன்ஜஸ்ட்லி ஆர்!’ என்று பதில் சொன்னேன். என் பதிலைக் கேட்டு கே. ஸ்ரீனிவாஸன் (ஹிண்டு ஆசிரியர்) சிரித்து விட்டார். ‘என்ன வேணும்?’ என்று கடுமையைக் குரலில் வரவழைத்துக் கொண்டு கேட்டார் ராஜாஜி.




இதுதான் தமிழ்ச் சமூகம் கடந்த இருநூறு ஆண்டுகளாக எழுத்தாளனுக்குக் கொடுக்கும் மரியாதை. இதுதான் வங்காளத்துக்கும் தமிழ்நாட்டுக்கும், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மற்ற மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள வித்தியாசம்.




Salvador de Madariaga (1886-1976) என்பவர் ஒரு பிரபலமான ஸ்பானிஷ் அறிஞர்; வரலாற்றாசிரியர். க.நா.சு.வின் நண்பர். (கம்யு என் நண்பர் என்று க.நா.சு. சொல்வது புருடா என்று சொன்ன எழுத்தாளரை நினைவு கூர்கிறேன்.) மதாரியகாவும் க.நா.சு.வும் 1956 வாக்கில் ராஜாஜியைச் சந்திக்கச் செல்கிறார்கள். முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு. இரண்டரை மணி நேரம் சுவாரசியமான பேச்சு. முடிவில் மதாரியகா தான் எழுதிய ‘The Blowing Up of the Parthenon’ என்ற நூலை சுப்ரமணியம் மூலம் தங்களுக்குக் கொடுத்தனுப்புகிறேன்; நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள் என்கிறார். உடனே ராஜாஜி க.நா.சு.விடம் தமிழில், ‘தராவிட்டாலும் பாதகம் இல்லை; இப்போதெல்லாம் படிக்க நேரம் கிடைப்பதில்லை’ என்று சொல்கிறார். உடனே க.நா.சு., ‘புத்தகங்கள் எழுதியிருக்கும் நீங்கள் இப்படிச் சொல்லக் கூடாது’ என்று ராஜாஜியை நேரடியாக அப்போதே கண்டிக்க ராஜாஜியின் நண்பர்கள் க.நா.சு.வின் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜாஜி அவர்களைக் கையமர்த்தி விட்டு க.நா.சு.விடம், ‘நான் சொன்னது தப்புதான் சுப்ரமணியம். கொண்டு வந்து கொடு; படிக்கப் பார்க்கிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும்’ என்கிறார்.




இதெல்லாம், ஒரு சமூகமே எப்படி இலக்கியச் சுரணை உணர்வு இல்லாமல் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டும் சில உதாரணங்களே ஆகும். க.நா.சு.வின் இலக்கிய அக்கறையும், விமரிசனமும் எந்த அளவுக்குக் கறாராக இருந்தன என்பதற்கு ராஜாஜி பற்றிய அவரது கருத்தே சான்று. ‘என் சிறுகதைச் சாதனையாளர்களின் பட்டியலில் ராஜாஜிக்கு இடம் கிடையாது. எனக்குத் தெரிந்த அளவில் பாரதம், ராமாயணம், உபநிஷத் என்று பல புராதன நூல்களை காலத்துக்கு ஏற்றபடி திறம்படச் சொல்லியிருக்கிறார், அவை பல்லாயிரம் பிரதிகள் விற்றிருக்கின்றன என்பதற்கு மேல் அவரைப் பற்றி எனக்கு ஒன்றும் அபிப்பிராயம் கிடையாது.’




***




க.நா.சு.வின் நாவல்களையும், சிறுகதைகளையும், விமரிசனக் கட்டுரைகளில் மிகச் சிலவற்றையும், கிடைத்த மொழிபெயர்ப்புகளையும் வாசித்துவிட்டு க.நா.சு. நடத்திய பத்திரிகைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் என எண்ணி முதலில் அவருடைய ‘இலக்கிய வட்ட’த்தைத் தேடினேன். அந்தப் பத்திரிகையில் வெளிவந்தவற்றில் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து வெளியிட்டிருக்கிறது சந்தியா பதிப்பகம். அந்த அரும்பணியைச் செய்திருப்பவர் தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.அ. சச்சிதானந்தன். ஆனால் அந்த நூல் எனக்கு எந்த இடத்திலும் கிடைக்கவில்லை. கன்னிமாராவின் நூற்பட்டியலில் இருந்தது. ஆனால் அலமாரியில் இல்லை. பல்வேறு இடங்களில் தேடிய பின்னர் ‘விருட்சம்’ அழகிய சிங்கர் தான் சந்தியா பதிப்பக உரிமையாளர் நடராஜனிடம் இருந்த சொந்தப் பிரதியை வாங்கிப் புகைப்பட நகல் எடுத்துக் கொடுத்தார். அதில் கி.அ. சச்சிதானந்தன் எழுதியுள்ள முன்னுரையிலிருந்து நாம் சில அரிய தகவல்களைத் தொகுத்துக் கொள்ளலாம். க.நா.சு. நடத்திய, ‘க்ரௌன்’ அளவில் 64 பக்கங்கள் கொண்ட ‘சூறாவளி’ பத்திரிகையின் முதல் இதழ் ஏப்ரல் 23, 1939 அன்றும், இருபதாவது இதழ் அக்டோபர் 15, 1939 அன்றும் வெளியானது. ‘சூறாவளி’ ஞாயிறு தோறும் வெளிவந்த வாரப் பத்திரிகை என்பது இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று. ‘சூறாவளி’யின் துணையாசிரியர் கி.ரா. (நம்முடைய கி. ராஜநாராயணன் அல்ல; முப்பதுகள், நாற்பதுகளின் கி.ரா. வேறு.) இலக்கியம் மட்டும் அல்லாமல் இந்தியா மற்றும் உலக அரசியல், சங்கீதம், சினிமா போன்ற விஷயங்களும் இதில் அலசப்பட்டுள்ளது. மயன், ராஜா, நசிகேதன், தேவசன்மன், சுயம் போன்ற பதினைந்து புனைப்பெயர்களில் க.நா.சு.வும், மற்றும் ச.து.சு. யோகியார், சி.சு.செல்லப்பா, கே. பரமசிவம், பி.எஸ். ராமையா, கி.ரா., கு.ப.ரா., சாலிவாஹனன், இலங்கையர்கோன், அ.கி. ஜெயராமன் போன்றவர்களும் ‘சூறாவளி’யில் எழுதியிருக்கின்றனர்.















‘சூறாவளி’க்குப் பிறகு க.நா.சு. நடத்திய பத்திரிகை ‘சந்திரோதயம்’. முதல் இதழ் வெளியான ஆண்டு 1945. மாதமிருமுறை இதழ். ‘க்ரௌன்’ அளவில் 64 பக்கங்கள். தமிழ்நாடு, இந்தியா மற்றும் அயல்நாட்டு அரசியல், சங்கீதம் சினிமா பற்றிய கட்டுரைகளோடு இயக்குநர் கே. சுப்ரமணியத்தின் மகளான லலிதா கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள சமையல் பற்றிய கட்டுரைத் தொடர் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. இவை தவிர, புதுமைப்பித்தன், சி.சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், பி.எஸ். ராமையா, ந. சிதம்பர சுப்ரமணியம் போன்றவர்களும் எழுதியிருக்கின்றனர்.




தன் வாழ்நாள் முழுவதும் முதுகே வளைந்து விடும் அளவுக்கு க.நா.சு. ஏன் படித்தார் என்பதற்கு ‘சந்திரோதயம்’ பொங்கல் இதழில் (1946) பதில் கிடைக்கிறது: ‘உலகத்து இலக்கியங்களிலே மகோன்னதமான சிகரங்கள் பல இருக்கின்றன… தமிழ் மரபு தெரிய வேண்டும் என்றும் அதில்லாவிட்டால் தமிழிலே இலக்கியமே சாத்தியமில்லை என்றும் கூறுகிறவர்களுக்குப் பதில் கூறுவது போல உலக இலக்கிய மரபுகள் தெரிய வேண்டும்; அது தெரியாமல் இலக்கிய சிருஷ்டி செய்ய முற்படுவது வீண் வியர்த்தம்.’




‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’ பத்திரிகைகளுக்குப் பிறகு க.நா.சு. நடத்திய பத்திரிகை ‘இலக்கிய வட்டம்.’ முதல் இதழ் நவம்பர் 22, 1963-ம் ஆண்டு வெளிவந்தது.




*







நினைவோடை: க.நா.சு. பற்றி சுந்தர ராமசாமி




http://azhiyasudargal.blogspot.in/2012/03/blog-post_8372.html




புதுமைப் பித்தனின் ‘சாப விமோசனம்’:




http://azhiyasudargal.blogspot.in/2010/01/blog-post_08.html













க.நா.சு. பற்றிய தகவல்களுக்குப் பலருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். முக்கியமாக அழகியசிங்கர், அரவிந்தன், சந்தியா பதிப்பகம் நடராஜன், சி.சு. செல்லப்பா பற்றிய சுந்தர ராமசாமியின் ‘நினைவோடை’ நூலை புகைப்பட நகல் எடுத்து அனுப்பிய செல்வேந்திரன், எல்லாவற்றுக்கும் மேலாக இலக்கிய வட்டம் இதழைத் தொகுத்த கி.அ. சச்சிதானந்தன்.

க.நா.சு. பகுதி - 5


By சாரு நிவேதிதா

First Published : 11 October 2015 10:00 AM IST


க.நா.சு. பற்றிய தஞ்சை ப்ரகாஷ் எழுதிய நூல் இன்னமும் என் கைக்குக் கிடைக்கவில்லை. ஆனால் எம். கோபாலகிருஷ்ணன் க.நா.சு. பற்றி எழுதியுள்ள கட்டுரையில் ப்ரகாஷின் நூலிலிருந்து ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார்:

க.நா.சு குறித்த legendary கதைகள் நிறைய புழக்கத்தில் உண்டு. ‘க.நா.சு வாழ்நாளில் தீர்மானித்துக் கொண்ட ஒரு முக்கியமான சட்டம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 பக்கங்களையாவது தமிழில் சுயமாக எழுதுவது. 15 பக்கங்களேனும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பது. 10 பக்கங்களேனும் குறைந்தது ஆங்கிலத்திலேயே புதியதாகப் படைப்பது.’ இதை 70 வயதுக்குப் பிறகும்கூட அவர் விடாது பின்பற்றினார் என்றே அவருடன் பழகிய பல எழுத்தாள நண்பர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோல ருசியான உணவுப் பதார்த்தங்களை அதற்கென்ற விசேஷமான கடைகளுக்கு தேடிச் சென்று சாப்பிடுவார் என்றும் பல கதைகள் உண்டு. தனது 70 வயதிலும் கூட சென்னை பத்திரிகை அலுவலகங்களுக்கு எழுதிய கைப்பிரதிகளோடு அவர் நடந்து சென்றிருக்கிறார். சென்னையில் அவர் கால்படாத நூலகங்களே கிடையாது என்று சொல்ல வேண்டும். தஞ்சை ப்ரகாஷ் தரும் க.நா.சுவின் சித்திரம் சுவாரஸ்யமானது. ‘சரியாக வாராத முள்ளம்பன்றித் தலைமுடி. அறிவின் விசாலத்தை எடுத்துக்காட்டும் மேடுபள்ளங்களற்ற விரிந்த நெற்றி. படித்துப் படித்து கண்ணாடி மாற்றி மாற்றி பார்வை கூர்மை மங்கிப்போய் சுழிக் கண்ணாடி அணிந்து அணிந்து வரிவரியாகக் காணப்படும் கண்கள். சரியாக வேட்டி கட்டத் தெரியாது. எங்காவது சென்னைத் தெருக்களில். ஏதாவது ஒரு பதிப்பகத்தை நோக்கி நடந்தே அயராத கால்கள். வேர்த்துக் காதோரம் வழியும் வேர்வையுடன் கற்பனை ரதத்தில் நடந்துகொண்டேயிருக்கும். உச்சிவேளையில் எங்காவது ஒரு மரநிழலில் மௌண்ட் ரோட்டில் ஏதாவது ஒரு வேப்ப மர நிழலில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலும் நடக்கும் க.நா.சு.’

பின்வருவது அசோகமித்திரன் க.நா.சு. பற்றி எழுதியது:

‘நான் அவரை 1966 முதற்கொண்டு அறிவேன். சென்னையிலும், டில்லியிலும் அவருடைய வீட்டுக்குப் பலமுறை போனதில் பல விஷயங்கள் கேட்காமலே தெரிந்தன. ஒன்று, தினமும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அவர் பத்து பக்கமாவது எழுதுவது. இரண்டாவது, அவருடைய பல ஆங்கிலக் கட்டுரைகளை சன்மானமே சாத்தியமில்லாத பத்திரிகைகளுக்கு எழுதியது. மூன்றாவது, அவருடைய பல படைப்புகள் திரும்பி வந்திருப்பது. நான்காவது, அவருடைய கையெழுத்துப் பிரதிகள் ஏராளமானவை தொகுக்கப்பட்டிருக்கின்றன. பல பகுதிகள் கொண்ட அவருடைய சுயசரிதைக் கையெழுத்துப் பிரதியை இலக்கியப் பத்திரிகை என்று அறியப்பட்டதொன்று தொலைத்துவிட்டதாகக் கூறியது. ஒரு சொல் வருத்தம் தெரிவிக்கவில்லை. அது போனது போனதுதான்.’

முந்தைய அத்தியாயங்களில் க.நா.சு. தன் புனைகதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் பாவ்லோ கொய்லோ அளவுக்கு உலகமெங்கும் பிரபலமாகியிருப்பார் என்று எழுதியிருந்தேன். அதற்கு நிரூபணமாக அசோகமித்திரனின் கட்டுரை:

‘ஆங்கில மொழியில் க.நா.சுப்பிரமணியம் ஏராளமான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அநேகருடைய படைப்புகளை அவர் (தமிழிலிருந்து) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர் அமெரிக்கப் பதிப்பகம் ராண்டம் ஹவுஸ் நடத்திய ஒரு போட்டிக்காக ‘அவதூதர்’ நாவலை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருக்கிறார். அவருடைய நாவல் பரிசு பெறவில்லை. ஆனால் சில மாற்றங்கள் செய்தால் பிரசுரம் செய்யச் சம்மதம் என்று ராண்டம் ஹவுஸ் கடிதம் எழுதியிருந்தது. (அதை நான் பார்த்தேன்). க.நா.சு முடியாது என்று எழுதியிருக்கிறார்.’

க.நா.சு. பற்றிய இன்னொரு முக்கியமான நூல் ‘எழுதிக்கொண்டே இருந்த க.நா.சுப்பிரமணியம்’. எழுதியவர் கி.அ.சச்சிதானந்தம் – வானதி பதிப்பகம். இந்த நூலும் இப்போது கிடைக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. இந்த நூலின் பின்னிணைப்பில் க.நா.சு. எழுதிய ‘என்னைப் பாதித்த புத்தகங்கள்’ என்ற கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. அதில் அவர் குறிப்பிடும் எழுத்தாளர்கள் மற்றும் புத்தகங்கள்: நீட்ஷே, வால்ட் விட்மன், Jack London-இன் Martin Eden, James Joyce-ன் Dubliners, Ezra Pound-ன் விமரிசனங்கள், Fraud-ன் Psycho Analysis, Kipling-ன் Kim, Thomas Mann, Romain Rolland, Antole Francis, Selma Lagerlof, Vemer Von Heivenstan, Knut Hamsun, Franz Kafka, William Saroyan, Maxim Gorky, Dostoevsky, Lady Murasaki, கவிகளில் தாந்தே மற்றும் ஆங்கிலக் கவிகள், Paul Valery, Rainer Maria Rilke, Garcia Lorca. நாடகாசிரியர்களில் Benevente, Ibsen, Luigi Pirandello. இவர்களையெல்லாம் க.நா.சு. தன் கல்லூரிக் காலத்திலும் கல்லூரியை முடித்த உடனேயும் படித்து முடித்தார்.

க.நா.சு. உலக இலக்கியங்களை ஏராளமாக மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பின் தேர்வில் ஒரு முக்கியமான விஷயம் அடங்கியிருந்தது. உலக மொழிகளில் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் அவர் அமெரிக்கா, இங்கிலாந்து என்ற நாடுகளில் அப்போது பிரபலமாக இருந்தவர்களை மொழிபெயர்க்கவில்லை. கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஸ்காண்டிநேவிய நாடுகளிலிருந்துதான் அதிகம் மொழிபெயர்த்தார். அவர் மொழிபெயர்த்தவர்களில் சிலர்:





Grazia Deledda (1926-ல் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய நாவலாசிரியை), Selma Lagerlof (1909-ல் நோபல் பரிசு பெற்ற ஸ்வீடிஷ் எழுத்தாளர்), Pär Lagerkvist (1951-ல் நோபல் - ஸ்வீடிஷ் எழுத்தாளர்), Katherine Anne Porter : புலிட்ஸர் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர், ஜார்ஜ் ஆர்வெலின் இரண்டு நாவல்கள் (1984, விலங்குப் பண்ணை), Roger Martin du Gard (1937-ல் நோபல் பரிசு - ஃப்ரெஞ்ச் நாவலாசிரியர், André Gide (1947-ல் நோபல் பரிசு - ஃப்ரெஞ்ச் நாவலாசிரியர்), Knut Hamsun (1920-ல் நோபல் பரிசு – நார்வே). க.நா.சு. மொழிபெயர்த்தவர்களின் பட்டியல் மிகவும் பெரியது. காவ்யா பதிப்பகம் வெளியிட்ட 1000 பக்கங்கள் கொண்ட க.நா.சு.வின் மொழிபெயர்ப்பு நூலின் முதல் தொகுதியைப் படித்தபோது அவரது மொத்த மொழிபெயர்ப்புகள் குறைந்த பட்சம் 15000 பக்கங்கள் இருக்கும் என்று தோன்றியது. இது தவிர அவரது ‘இலக்கிய வட்டம்’ பத்திரிகையில் சுமார் 60 சர்வதேச எழுத்தாளர்களைக் குறித்து அறிமுகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

க.நா.சு.வின் மொழிபெயர்ப்பு பற்றி ஜி. குப்புசாமி இவ்வாறு கூறுகிறார்:

‘க.நா.சு. மொழிபெயர்த்த பேர்லாகர் க்விஸ்ட்டின் ‘பாரபாஸ்’, ‘அன்பு வழி’ மற்றும் ஸெல்மா லாகர்லெவ்வின் ‘மதகுரு’ போன்ற நாவல்கள் தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் பெரும் ஆதர்சமாக இருந்திருக்கின்றன. வண்ணநிலவன் தனது முதல் நாவலான ‘கடல்புரத்தில்’ முன்னுரையில் ‘அன்பு வழி’யைப் போன்றதொரு நாவலைத் தன் வாழ்நாளில் எழுதிவிட முடிந்தால் . . . என்று ஏங்குகிறார். ‘மதகுரு’ நாவலை கிருஷ்ணன் நம்பி பாராயணமே செய்துவந்ததாக சுந்தரராமசாமி கூறுகிறார். நட் ஹாம்சனின் ‘நிலவளம்’ தனது பள்ளிப் பிராயத்திலேயே எத்தகைய ஆக்கிரமிப்பை ஏற்படுத்தி உலக இலக்கியத்தின்பால் தன் கவனத்தைத் திருப்பியது என்று எஸ். ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். ரோமன் ரோலந்தின் ‘ஜீன் கிருஸ்தஃபர்’, மார்டின் து கார்டின் ‘தபால்காரன்’, வில்லியம் ஸரோயனின் ‘மனுஷ்ய நாடகம்’, அண்டோனியோ பாகஸாரோவின் ‘கடல் முத்து’ போன்ற இலக்கியத்தின் புதிய சிகரங்களைத் தொட்ட கலைப் படைப்புகளைத் தமிழ் வாசகருக்கு க.நா.சு. அறிமுகம் செய்து ஒரு மொழிபெயர்ப்பு மரபையே தமிழில் உண்டாக்கினார்.’

இவ்வளவு மொழிபெயர்ப்பையும் க.நா.சு. ஏன் செய்தார் என்றால் தமிழில் சர்வதேசத் தரம் வாய்ந்த இலக்கியம் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான். அதே சமயம் வாசகர் இல்லாவிட்டால் எழுத்து எப்படி உருவாகும்? எனவே வாசிப்பு என்பதும் ஒரு கலை என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு கட்டுரைகளின் வாயிலாக அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். இலக்கியத்தை சிருஷ்டிப்பதில் எத்தனை சிரமம் இருக்கிறதோ அவ்வளவு இல்லாவிட்டாலும் அதில் ஒரு கால்வாசியாவது சிரமம் எடுத்துத்தான் படிக்க வேண்டும். உலகத்தின் சிறந்த இலக்கியத்தைத் தேடித் தேடிப் படிப்பதன் மூலம் இலக்கியத்தை வாசிக்கும் பயிற்சி ஏற்பட்டு விடும் என்றார் க.நா.சு.

தரமான இலக்கியமும் தரமான வாசிப்பும் எப்படி சாத்தியம்? முதலில் வணிகரீதியான, லகுவான எழுத்துக்கும் இலக்கியத்துக்குமான வேறுபாடு தெரிய வேண்டும். லகுவான எழுத்து இலக்கியத்தை விட அதிகமாகத்தான் எங்கும் விலை போகும். தவறு அதில் இல்லை. தவறெல்லாம் வணிக எழுத்துதான் இலக்கியம், விலை போவதுதான் நல்ல எழுத்து, தொடர்கதைகள்தான் நாவல்கள் என்று எண்ணிக் கொள்வதில்தான் இருக்கிறது. இப்படி எண்ணிக் கொள்வதற்கு – வியாபாரிகள் உணவில் கலப்படம் செய்து பணம் சம்பாதிப்பது போல சம்பாதிப்பதற்கு மட்டுமென்று தோன்றி பின்னர் சமய சந்தர்ப்பத்தால் எழுத்துத் துறையில் நிலைத்து விட்டு, இலக்கியத்துக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் பெரும் பத்திரிகைகள்தான் காரணம் என்கிறார் க.நா.சு. (‘இலக்கிய வட்டம்’ தலையங்கம் 5.6.1964)

‘ஷேக்ஸ்பியரை நினைத்துப் பார்க்கிறேன். வாசகர்களில் எந்த வகுப்பினருக்காக அவர் எழுதினார்? வாசகர்கள் அவரைத் தேடிச் சென்றார்களா அல்லது அவர் வாசகர்களைத் தேடிச் சென்றாரா? இந்தக் காலத்து எழுத்தாளர்கள் வாசகர் – ஆசிரியர் உறவைத் தலைகீழாக மாற்றி விட்டார்கள். இலக்கியாசிரியன் தன்னில் உள்ளதற்கேற்ப எழுதுகிறான். வாசகன் பொறுமையுடன் தனக்குப் பிடித்தமான, உகந்த ஆசிரியனைத் தேடிப் படிக்கிறான். இதுதான் நியாயமான முறை. அதை விட்டு ஒரு வாசகக் கும்பலை நாடி எழுதுவது அவ்வளவாக இலக்கியத்துக்கு ஏற்காத விஷயம்.’ (‘இலக்கிய வட்டம்’ தலையங்கம் 12.2.1965)

சமகாலத் தமிழ் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? இதற்கு க.நா.சு. பதில் சொல்கிறார்:

‘தமிழில் எழுதப் படுவதெல்லாம் உலக இலக்கியம் என்று சொல்லக் கூடிய ஒன்றின் வாரிசாகவே இருக்க வேண்டும். உலகில் எந்த மூலையில் ஒரு சிருஷ்டி தோன்றியிருந்தாலும் அதன் வாரிசாகவே, அதை அறிந்த பிரக்ஞையுடனேயே, அதற்கு மேலே செல்வதாகவே தமிழில் எழுதப்படுவதும் அமைய வேண்டும். அதேபோலத் தமிழில் எழுதப்படுவதில் சிறந்தது உலகுக்குக் கிடைக்க வேண்டும். அதற்கு வழிவகைகள் செய்யக் கூடியவர்கள் இலக்கியாசிரியர்களே ஆவார்கள். பேராசிரியர்களாலும் பெரும் பத்திரிகைக்காரர்களாலும் செய்ய முடியாத காரியம் இது.’ (‘இலக்கிய வட்டம்’ தலையங்கம் 6.11.1964)

எவ்வளவு முயன்றும் க.நா.சு. பற்றி தஞ்சை ப்ரகாஷ் எழுதிய முக்கியமான நூல் கிடைக்காததால் க.நா.சு.வின் வாழ்க்கைக் குறிப்புகளாக எழுதப்பட்டவற்றைத் தேடிய போது அவர் ‘குங்குமம்’ வார இதழில் எழுதிய இலக்கியச் சாதனையாளர்கள் என்ற நூல் கிடைத்தது. அதில் அவர் தான் சந்தித்த ஆளுமைகள் பற்றி எழுதியிருக்கிறார். ராஜாஜி பற்றி அவர் எழுதியவற்றை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அந்தத் தொகுப்பில் அவர் ஃப்ரான்ஸில் 11 மாதங்கள் தங்கியிருந்தது பற்றி ஒரு சின்னஞ்சிறிய கட்டுரை எழுதியிருக்கிறார். அதுவும் அவர் தங்கியிருந்தது எங்கே தெரியுமா? ஆல்பெர் கம்யூவின் இல்லத்தில். அந்தக் கட்டுரையைப் படித்தபோது நாம் எப்பேர்ப்பட்ட ஒரு மேதையின் அருமை தெரியாமல் இருந்திருக்கிறோம் என்று தோன்றியது. அந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறேன். வங்காளிகள் தாகூரை குருதேவ் என்கிறார்கள். பாரதிக்குப் பிறகான நம்முடைய குருதேவர் க.நா.சு. என்பதை நாம் புரிந்து கொள்ளும் போது தமிழ் இன்னும் சிறக்கும். பாரதியோடு க.நா.சு.வை ஒப்பிடுவது பற்றி சிலர் ஆச்சரியம் அடையக் கூடும். க.நா.சு. பாரதி அளவுக்கு தமிழ் மொழியை நவீனப்படுத்தியவர் அல்ல. மொழியில் பரிசோதனை முயற்சிகள் அவருக்கு ஆகாது. ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய நனவோடை உத்தியைப் (stream of consciousness) பற்றி எழுதும்போதே ‘அதெல்லாம் எனக்கு ஒத்து வராது’ என்று எழுதுகிறார் க.நா.சு. ஆனால் அவரிடம் இரண்டு நூற்றாண்டுகளின் கதை இருந்தது. மற்றும், உலக இலக்கியத்தையே தன் கை விரல்களில் வைத்திருந்தார். மற்றபடி மொழியின் நவீனத்துவ முயற்சிகளில் அவர் இறங்கியதில்லை. ஆனாலும் க.நா.சு. ஏன் பாரதி அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறார் என்றால் அவர் ஒருவர்தான் மேற்குலகுக்கும் தமிழுக்கும் பாலமாக இருந்தார். அதற்காகவே வாழ்நாள் முழுவதும் படிப்பு, பயணம், மொழிபெயர்ப்பு என்று இருந்தார்.





அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்களும்தான் மேற்கின் இலக்கியத்தைப் படித்தார்கள். கு.ப.ரா. அந்த நாளிலேயே - அதாவது 1920களிலேயே - கும்பகோணத்தில் ஷேக்ஸ்பியர் க்ளப் வைத்திருந்தார். புதுமைப்பித்தனின் கொண்டாடப்பட்ட சிறுகதையான ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ T. F. Powys என்ற பிரிட்டிஷ் எழுத்தாளரின் Mr. Weston's Good Wine என்ற நாவலின் அப்பட்டமான தழுவல். எதற்குச் சொல்கிறேன் என்றால் மேற்கத்திய இலக்கியம் இங்கே பரவலாக வாசிக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான். ஆனாலும் க.நா.சு.வின் மேற்கத்திய இலக்கிய வாசிப்பு மற்ற எழுத்தாளர்களிடமிருந்து வித்தியாசப்பட்டது. எப்படி?

இங்கே ஒரு விஷயத்தை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். கு.ப.ரா. பிறந்த ஆண்டு 1902; புதுமைப்பித்தன் 1906; க.நா.சு. 1912. ஔவையார் என்றாலே நமக்கு ஒரு கிழவியின் உருவம் ஞாபகம் வருவது போல க.நா.சு. என்றாலே நமக்கு ஒரு தாத்தாவின் உருவம்தான் ஞாபகம் வருகிறது. காரணம், அவரது நீண்ட ஆயுள் மட்டும் அல்ல; சிலரது உருவத் தோற்றமே அப்படித்தான். ஆனால் சிலருக்கு எத்தனை வயது ஆனாலும் கிழத் தோற்றம் வராது. தஞ்சை ப்ரகாஷ் இறக்கும்போது அவர் வயது 57. ஆனால் பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றத்தில் 30 வயது இளைஞனைப் போல் இருப்பார். கோபி கிருஷ்ணனும் சாகும் வரை இளைஞனைப் போலவே இருந்தார். சுந்தர ராமசாமியையும், அசோகமித்திரனையும் நீங்கள் தாத்தா என்றே நினைத்துப் பார்க்க இயலாது. சுஜாதா மற்றொரு ஆச்சரியம். 72 வயதிலும் இளைஞனைப் போல் இருந்தவர். இப்படி சிலருக்குத்தான் அமையும். க.நா.சு.வின் தோற்றம் இதற்கு எதிரானது. 50 வயதிலேயே முதியவர் தோற்றம் வந்து விட்டது. ஆனால் கு.ப.ரா.வும் புதுமைப்பித்தனும் ஏதோ சொல்லி வைத்ததுபோல் 42 வயதில் இறந்து போனார்கள். அவர்கள் இருவரும் க.நா.சு.வை விட மூத்தவர்கள். அதிலும் க.நா.சு. புதுமைப்பித்தனை கிட்டத்தட்ட தனது குருவாகவே ஏற்றிருக்கிறார்.

‘சில்பியின் நரகம் என்கிற அவர் (புதுமைப்பித்தன்) கதை மணிக்கொடியில் வெளிவந்த சில மாதங்களில் நான் அவருக்கு அறிமுகமானேன். ஒரு பத்து வருஷங்கள் அவருடைய அமைதி தராத நட்பு எனக்குக் கிடைத்தது. தமிழில் எழுத ஆரம்பித்திருந்த நான் தொடர்ந்து எழுதுவது என்கிற விஷயம் அவர் பாதிப்பினால்தான் ஏற்பட்டது என்று சொல்ல வேண்டும்… என் முதல் கதைத் தொகுப்பான ‘அழகி’ வெளிவந்ததும் ‘குருவினிடமிருந்து சிஷ்யனுக்கா, சிஷ்யனிடமிருந்து குருவுக்கா?’ என்று கேட்டுக் கையெழுத்திட்டு அவரிடம் ஒரு பிரதியைக் கொடுத்தேன். அந்தப் பக்கத்தைக் கிழித்தெறிந்து விட்டு புத்தகத்தை வைத்துக் கொண்டார்.

‘சூறாவளி’ என்று என் முதல் பத்திரிகைக்குப் பெயர் வைத்தது அவர்தான். மணிக்கொடி நின்று போன பிறகு அவருக்கு எழுத ஒரு பத்திரிகை வேண்டும் என்கிற காரணத்துக்காகவே பத்திரிகை உலகுக்குப் புதியவனான நான் ஆரம்பித்த பத்திரிகை அது. தினமணியில் முழுநேர எழுத்தாளராக அவர் 35, 40 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். ‘சூறாவளி’யில் வாராவாரம் எழுத அவருக்கு நான் மாதத்துக்கு 50 ரூபாய் தந்தேன். ஆனால், ஆறே மாதங்கள்தான் தர முடிந்தது.’

இதற்குப் பிறகு வருவதுதான் முக்கியமான விஷயம். ‘தஞ்சாவூரில் நான் அய்யன் குளத்துக்கு எதிர் வீட்டில் மேலவீதியில் குடியிருந்த போது, திருநெல்வேலி போத்திக் கடை அல்வா என்று சொல்லி அரை வீசை அல்வா வாங்கி வந்திருந்தார். நான் அவருக்கு அம்பி அய்யர் கடை அல்வா வாங்கித் தந்தேன். பருப்பும் சோறும்தான் தனக்கு அவசியம் என்று உரிமையுடன் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். புதுமைப்பித்தன் மிகச் சுத்த சைவம். ஓர் இரவு அகாலத்தில் வேறு ஒரு ஹோட்டலும் திறந்தில்லாததால் நண்பர் ஸ்ரீநிவாஸ ராகவனும், அவரும், நானும் ஒரு ஓர் அசைவ ஹோட்டலுக்குள் போனோம். சொ.வி. எதுவும் சாப்பிடவில்லை. என்னையும் சாப்பிடவிடவில்லை. ஸ்ரீனிவாஸராகவன் மட்டும் ஏதோ சாப்பிட்டார் என்று நினைவு.’

இந்த இடத்தில் க.நா.சு.வின் சர்வதேசியத்தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். அவர் அசைவ உணவு விடுதிக்குப் போனாலும் சைவம்தான் உண்பார். ஆனால் அந்த இடம் அவருக்குப் பிரச்சினையாக இருக்காது. அதனால்தான் அவரால் ஃப்ரான்ஸில் 11 மாதங்கள் தங்கியிருக்க முடிந்திருக்கிறது. க.நா.சு.வுக்கு மதுவிலோ புகை பிடிப்பதிலோ நாட்டம் இல்லை. ஆனால் அதைச் செய்வதில் அவருக்கு எந்த மன உளைச்சலும் இல்லை. ஏனென்றால், சுந்தர ராமசாமி சொல்வது போல் அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்களெல்லாம் ஆச்சார சீலர்களாக இருந்தபோது க.நா.சு.விடம் மட்டும் பழமையின் களிம்பே ஒட்டவில்லை. ஆச்சாரம் மட்டும் அல்ல; ஒட்டு மொத்தமான வாழ்வியல் நோக்கிலேயே க.நா.சு. சர்வதேசத் தன்மை கொண்டவராக இருந்தார்.

க.நா.சு. பகுதி - 6


By சாரு நிவேதிதா

First Published : 18 October 2015 10:00 AM IST


சு.ரா.வின் வார்த்தைகள் இவை: ‘செல்லப்பாவின் எழுத்தின் மேல் ஒருவிதக் கவர்ச்சி இல்லாமல் இருந்தது போலவே அவரது பேச்சிலும் எனக்குக் கவர்ச்சி இல்லாமல் இருந்தது. காரணம், அவர் பேசும்போது ஒரு ஆசிரியரின் தொனி அதில் அதிகமாக இருக்கும்… இந்த தொனி க.நா.சு.விடம் துளிகூடக் கிடையாது. எவ்வளவோ மணி நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். ஒரு சமயத்தில் கூட க.நா.சு. இது மாதிரியான தொனியில் பேசினதே கிடையாது.’

‘சி.சு. செல்லப்பா, பி.எஸ். ராமையா, சிதம்பர சுப்பிரமணியன், ந. பிச்சமூர்த்தி எல்லோரும் இந்தியக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் க.நா.சு. மட்டும்தான் மேற்கத்திய மனோபாவம் கொண்டவர் என்றும் அவரைப் பின் தொடர்ந்து வேறு பலரும் அப்படியாகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் எண்ணினார் செல்லப்பா.’

ஒரு சமயம் க.நா.சு. ஐரோப்பா போய் வந்ததாலோ என்னவோ பைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘இப்படி வேஷ்டியோடு பைப் பிடித்தால் என்னவோ போல் இருக்கிறது சார்’ என்று சு.ரா. க.நா.சு.வைக் கிண்டல் செய்திருக்கிறார். அதற்கும் க.நா.சு. ‘நானும் முயற்சி பண்ணிப் பார்க்கிறேன். புகை உள்ளேயே போக மாட்டேன் என்கிறதே?’ என்று சொல்கிறார். இதன் பொருள் பைப் பிடித்தால் மேற்கத்திய ஆள் என்று அல்ல; ஆச்சார அனுஷ்டானம் அவரிடம் துளியும் இருந்ததில்லை என்பதுதான்; தனக்கு அந்நியமான விஷயங்கள் குறித்து அவர் அசூயை கொண்டிருக்கவில்லை. சகஜமாக எடுத்துக் கொள்ளும் ஜனநாயகத்தன்மை அவரிடம் இருந்தது என்பதுதான்.

அதே சமயம் அவர் இந்தியப் பாரம்பரியத்தை மொத்தமாக நிராகரிக்கவும் இல்லை. சனாதனத்தை வெறுத்தாரே ஒழிய இந்தியப் பாரம்பரியத்தை ஏற்றார். உலகப் புகழ் பெற்ற இந்தியவியல் அறிஞரான ஆனந்த குமாரஸ்வாமி பற்றி ‘இலக்கிய வட்ட’த்தில் அவர் எழுதிய, பிரசுரம் செய்த விரிவான கட்டுரைகளில் இந்தியப் பாரம்பரியம் குறித்த க.நா.சு.வின் ஈடுபாடு நமக்கு விளங்குகிறது. இப்படி இந்தியப் பாரம்பரியத்தையும் மேற்கத்திய கலாச்சார விழுமியங்களையும் ஒன்றாக இணைத்த வகையில்தான் க.நா.சு.வை பாரதியோடு ஒப்பிடுகிறேன். இப்போது க.நா.சு. பாரிஸில் சந்தித்த இலக்கிய ஆளுமைகள் கட்டுரைக்கு வருவோம்.

ஸார்த்ர் காம்யூ மால்ரோ என்பது கட்டுரையின் தலைப்பு. கட்டுரையில் யாருடைய பெயரும் ஆங்கிலத்தில் தரப்படவில்லை. கட்டுரையின் முதல் வரி இப்படித் துவங்குகிறது. ‘உனக்கு ஜான் பால் ஸார்த்ரைப் பார்க்க வேண்டுமா?’ என்று கேட்டார் டரினா ஸிலோனே.





மொத்த கட்டுரையிலும் ஸிலோனே பற்றி வேறு எந்தக் குறிப்பும் இல்லை. இப்போது உள்ள கணினி வசதியின் காரணமாக யார் என்று தேடிக் கண்டு பிடித்தேன். Ignazio Silone (1900 – 1978) இத்தாலியின் புகழ் பெற்ற எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். மந்திரியாகவும் இருந்தவர். அவருடைய மனைவி தான் டரினா ஸிலோனே (Darina Silone). அவர்தான் க.நா.சு.விடம் அப்படிக் கேட்டவர். ஆண்டு 1956. எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்ற தத்துவம் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. ‘இந்தியாவில் கூட, ஸார்த்ர் பற்றி வெகுவாக எதுவும் அறியாதவர்கள் கூட எக்ஸிஸ்டென்ஷியலிஸம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்’ என்கிறார் க.நா.சு. ஆனாலும் தனக்கு எத்தனை புத்தகங்களைப் படித்தும் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் சொல்கிறார். ஆனால் அடுத்தடுத்த பத்திகளில் அவருக்கு அது பற்றி தெளிவான பார்வை இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ‘தத்துவதரிசியாக ஸார்த்ர் ஒன்றும் சொந்தமான தத்துவங்களைக் கண்டு சொல்லி விடவில்லை என்றும் சொல்கிறார்கள். ஒரு நூறு ஆண்டுகளாகவே வளர்ந்து வந்திருக்கிற தத்துவம்தான் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்றும், ஸார்த்ர் தந்த உருவத்தில் அதில் புதுமை என்று சொல்ல ஒன்றும் இல்லை என்றும் சொன்னவர்கள் உண்டு. ஹெடேக்கர், யாஸ்பர்ஸ் முதலிய பலரும் உழைத்து உருவாக்கிய சித்தாந்தம் எக்ஸிஸ்டென்ஷியலிஸம். ஒரு காலகட்டத்தில் அந்த சித்தாந்தம் ஸார்த்ருக்கு முக்கியத்துவம் ஏற்படக் காரணமாக இருந்தது என்றும் சொன்னார்கள். ஸார்த்ருக்கு ஃப்ரெஞ்ச் இலக்கியத்திலே அவ்வளவாகச் சிறப்பான ஸ்தானம் கிடையாது – ஃப்ரெஞ்ச் இலக்கிய ரசிகர்களைக் கவரக் கூடிய நடை அழகு அவரிடம் இல்லை என்றும் விமர்சகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.’

க.நா.சு. சொல்லும் இந்த விஷயங்களை 20 ஆண்டுகள் ராப்பகலாக அமர்ந்து ஃப்ரெஞ்ச் தத்துவத்தையும் இலக்கியத்தையும் தலையணை சைஸ் புத்தகங்கள் ஏராளமானவற்றின் மூலமாகக் கற்றுத் கொண்ட பிறகே தெரிந்து கொண்டேன். ஆனால் க.நா.சு.வோ போகிற போக்கில் ‘சொன்னார்கள்’ என்று சொல்லிவிட்டுப் போய்க் கொண்டே இருக்கிறார். அவருடைய அறிவின் ஆழம் பிரமிப்பூட்டுகிறது.

மேலும் க.நா.சு., ஹிந்து சிந்தனைகளில் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்கிற தத்துவம் பல காலமாகவே இருந்து வந்திருப்பதாகவும், குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் கீதையை உபதேசித்தது ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் சந்தர்ப்பத்தைத் தவிர்க்கத்தான் என்றும், அந்த அளவில் பகவத் கீதை ஸார்த்ருக்கு முந்திய எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் நூல் என்றும் சொல்கிறார். இது முழுக்கவும் உண்மை. இரண்டாம் உலகப் போர் தனிமனித அளவிலும் சமூகத்திலும் ஏற்படுத்திய அறம் சார்ந்த நெருக்கடிகளிலிருந்தே இருத்தியலியல்வாதம் பிறந்தது என்பதை ஐரோப்பிய தத்துவம் பயின்றவர்கள் அறிவார்கள். அதே போன்றதொரு பிரச்சினையைத்தான் அர்ஜுனனும் எதிர்கொண்டான். அப்போதுதான் கீதை பிறக்கிறது. ஷேக்ஸ்பியரில் வரும் To be or Not to be என்ற இடம் இருத்திலியல்வாதம் சொல்லும் ‘நெருக்கடி’. அதேபோல் கீர்க்கேகார்ட் அதை Either/Or என்று சொல்லுவார். அதையேதான் கிருஷ்ணனும் கேட்கிறான். போரிடவா? வேண்டாமா? இதே தருணங்களை நாம் ராமனிடமும், சித்தார்த்தனிடமும், நசிகேதனிடமும் காணலாம். இன்னும் விவரித்தால் இதுவே ஒரு தனிப் புத்தகமாகப் போகும். ஆர்வம் உள்ளவர்கள் இந்தத் திசையில் ஆய்வு செய்யலாம். நாம் க.நா.சு.விடம் திரும்புவோம்.

‘பகலில் இரண்டு மணி அளவில் ஒரு குறிப்பிட்ட கஃபேவில் வந்து ஸார்த்ர் உட்காருவார். எதிரில் ஒரு பானத்துடன் இரவு இரண்டு மூன்று வரை கூட அங்கேயே தான் இருப்பார். யார் வேண்டுமானாலும் போய்ப் பேசலாம். பார்க்கலாம். அவருக்காகவே அந்த ஹோட்டலில் கூட்டம் சேரும்’ என்கிறார் டரினா ஸிலோனே. மேலும் இத்தாலியர்கள் ஸார்த்ரை விட ஆல்பர்த்தோ மொராவியாவையே பெரிய எக்ஸிஸ்டென்ஷியலிஸ்டாகக் கருதுகிறார்கள் என்றும் க.நா.சு.வுக்குப் பார்க்க விருப்பமா என்றும் கேட்கிறார். ஆனால் மொராவியாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் மொழிபெயர்க்கத் தனக்கு விருப்பமில்லை என்றும் டரினா சொல்லி விட்டதால் ஏதோ தூரத்திலிருந்தே கோவிலில் இருக்கும் சாமியை தரிசனம் செய்வது போல் செய்து விட்டுத் திரும்பி விட்டதாக எழுதுகிறார் க.நா.சு.

பிறகு ஒரு நண்பர் மூலமாக ஆல்பெர் கம்யூவைச் சந்திக்கிறார் க.நா.சு. அப்போது பாரிஸில் தங்குவதற்கு அறை வாடகை அதிகமாக இருக்கிறது என்று கம்யூவிடம் சொல்கிறார். உடனே தன்னுடைய வீட்டில் ஒரு அறையைக் கொடுத்து எத்தனை காலம் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்கிறார் கம்யூ. அந்த வீட்டில்தான் க.நா.சு. 11 மாதங்கள் தங்கியிருந்தார். கம்யூவுக்கு ஆங்கிலம் பேச வராது. க.நா.சு.வுக்கு ஃப்ரெஞ்ச் வராது. மொழிபெயர்ப்பாளர் மூலம்தான் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அந்தப் பதினோரு மாதத்திலும் கம்யூவின் வீட்டில் ஒரு அறையில் தங்கியிருந்தும் க.நா.சு. கம்யூவை ஏழெட்டு தடவைகள்தான் சந்திக்க முடிந்திருக்கிறது. அந்தச் சந்திப்புகள் பற்றி க.நா.சு. சொல்கிறார்: ‘இந்திய சமுதாய, தத்துவ, வாழ்க்கை விஷயங்கள் பற்றி ஒரு தாகத்துடன் விஷயங்களைக் கேட்டறிந்து கொள்ள அவர் முயன்றார். முக்கியமாக முஸ்லிம்களின் நிலைமை பற்றி நாலைந்து தடவைகள் திருப்பித் திருப்பிக் கேட்டார். எனக்கு ஓரளவுக்கு மேல் இது பற்றி விஷயம் தெரியாது என்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘அங்கே எது நடந்தாலும் மனிதனைப் பாதிக்கிறது இல்லையா? பாதிக்கப்படாமல் எப்படி இருக்க முடியும் மனிதனால்?’ என்று ஒரு ஆச்சரியத்துடன் கேட்டார். பற்றில்லாமல் இருப்பதை ஒரு தத்துவமாக ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்வதை சித்தாந்தரீதியில் கண்டிக்கிற மாதிரி பேசினார். பெரிய அந்தஸ்துள்ள இலக்கியாசிரியர் என்றாலும் எளிமையானவர்; யார் வந்து கூப்பிட்டாலும், பேச வந்தாலும், கையையும் காலையும் ஆட்டிக் கொண்டு வெகுநேரம் பேசிக் கொண்டிருப்பார்.’

க.நா.சு.வின் பதினோரு மாத பாரிஸ் அனுபவங்களை அவரிடமிருந்து நாம் ஆயிரம் பக்கங்களில் வாங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், மேலே அவர் எழுதியுள்ள ஒரே ஒரு பத்தியில் உள்ள விஷயங்கள் நூறு பக்கங்களுக்கான செய்திகளைக் கொண்டிருக்கிறது. அந்த நூறு பக்கங்களையும் ஒருசில பத்திகளில் சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். ஆல்பெர் கம்யூவை க.நா.சு. சந்தித்தது 1956-ல். கம்யு நோபல் பரிசு பெற்றது 1957-ல். எனவே கம்யு நோபல் பரிசு பெறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே க.நா.சு.வின் மிக விரிவான உலக இலக்கிய வாசிப்பின் உள்ளே வந்து விட்டார் கம்யு. அதனால்தான் கம்யூவை நேரில் சந்திக்கிறார் க.நா.சு. மேலும், க.நா.சு. குறிப்பிடும் கம்யூவின் ஓரிரு கேள்விகளில் கம்யூவின் வாழ்க்கைச் சரித்திரமே அடங்கியிருக்கிறது. ஏன் அவர் முஸ்லிம்களைப் பற்றி அத்தனை ஆர்வமாகக் கேட்டார்? ஏன் க.நா.சு.வுக்கு இந்திய முஸ்லிம்களைப் பற்றி எதுவுமே தெரியவில்லை? இந்தக் கேள்விகளுக்கான பதிலும் ஒரு புத்தகம் அளவு நீளும்.

பியே-ந்வா (Pied-noir) என்று ஒரு ஃப்ரெஞ்ச் வார்த்தை இருக்கிறது. இதன் நேரடி அர்த்தம் கறுப்புக் கால். ஆனால் உண்மையான பொருள், அல்ஜீரியா, மொராக்கோ போன்ற வட ஆஃப்ரிக்க ஃப்ரெஞ்ச் காலனி நாடுகளில் பிறந்து வளர்ந்த ஃப்ரெஞ்சுக்காரர்களைக் குறிக்கும் சொல் பியே-ந்வா. ஆல்பெர் கம்யு ஒரு பியே-ந்வா. அல்ஜீரியாவில் ஒரு ஏழ்மையான, எழுதப் படிக்கத் தெரியாத, காது கேளாத வேலைக்காரிக்குப் பிறந்தவர் கம்யு. கம்யூவின் தந்தை முதலாம் உலகப் போரில் காயமடைந்து இறந்து போனார். அப்போது கம்யூவின் வயது ஒன்று. ஒரு பியே-ந்வாவின் நிலையே இப்படியென்றால் அல்ஜீரிய முஸ்லிம்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும்?

கம்யூவின் புனைகதைகளை விட அவர் அல்ஜீரியா பற்றி எழுதிய கட்டுரைகள் எனக்குப் பிடித்தமானவை. 1939-லிருந்து 1956 வரை அவர் அல்ஜீரியா பற்றி ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கும் அல்ஜீரியர்களுக்குமாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஃப்ரெஞ்சில் 1958-ல் வெளிவந்திருந்தது. ஆனால் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 50 ஆண்டுகளுக்கும் மேல் வெளிவராமல் இருந்தது. என்றாலும், அவர் அந்த அல்ஜீரியக் கட்டுரைகளில் முன்வைத்திருந்த கருத்துக்கள் (முக்கியமாக பயங்கரவாதம் மற்றும் வன்முறை குறித்த அவரது பார்வை) பல புத்திஜீவிகளால் உலக அளவில் விவாதிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் அத்தொகுப்பு (Algerian Chronicles) 2013-ல்தான் வெளிவந்தது. அதில் அவர் கபீலியா பற்றி எழுதிய பதிவுகள் அதிமுக்கியமானவை. கபீலியா பற்றி எனது ‘கலகம், காதல், இசை’ என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். கபீலியாவில் தான் இன்று உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கும் ரய் என்ற இசை தோன்றியது. ஏ.ஆர். ரஹ்மானின் இந்தி இசையில் ரய்யின் பாதிப்பு அதிகம். ரய் இசையில் இந்தியாவில் பிரபலமானவர் கலீத் (பாடல்: தீதீ). அல்ஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள மலைகள் சூழ்ந்த பிரதேசம் கபீலியா. இங்கே வசிக்கும் மக்கள் பெர்பெர் (Berber) இனத்தைச் சேர்ந்தவர்கள். 1939-ல் கம்யு கபீலியா சென்றது பற்றி அல்ஜீரியக் கட்டுரைகளில் எழுதுகிறார்: ‘எட்டு பேர் உள்ள குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு 120 கிலோ கோதுமை தேவை. ஆனால் அவர்களுக்கு 10 கிலோ கோதுமைதான் கிடைக்கிறது. அப்படியானால் இந்த கபீலிய மக்களின் வறுமை பற்றிக் கற்பனை செய்து பாருங்கள்.’

க.நா.சு.விடம் கம்யூ கேட்ட கேள்விக்கு இவ்வளவு பின்னணி இருக்கிறது.

1956-ல் சார்த்ரையும் கம்யூவையும் சந்திப்பதற்கு முன்னாலேயே 1951-ல் ஒரு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டுக்காக இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டவராக பாரிஸ் சென்றிருக்கிறார் க.நா.சு. அப்போது அவர் சந்தித்தது ஆந்த்ரே மால்ரோ (André Malraux). க.நா.சு. சொல்கிறார்: ‘ஆந்த்ரே மால்ரோ எங்கள் மாநாட்டில் பேசுகிறபோது ஒரு பிரதம மந்திரிக்கு நடக்கும் செக்யூரிட்டி செக் நடந்தது. நாலு மெய்க்காவலர்கள் கையில் ரிவால்வாருடன் நாலு பக்கமும் பார்த்துக் கொண்டு, அவர் பேசும் போது காவல் காத்து நின்றனர். குளிர்காற்று வீசிய அந்த மாலையில் கதவுகளைச் சாத்தியிருந்த கூடத்தில் பேசும்போது பேச்சு வேகத்தில் அவருக்கு வியர்த்து விறுவிறுத்துப் போய் விட்டது. அவரே தற்காப்புக்காகக் கையில் ரிவால்வார் இல்லாமல் வெளியே கிளம்ப மாட்டார் என்று சொன்னார்கள்.’

‘மால்ரோ சென்னைக்கு ராஜாராவுடன் வந்து மதுரை போகும் போது தாம்பரத்தில் என் வீட்டுக்கு வந்திருக்கிறார். பின்னர் அவர் ஃப்ரெஞ்ச் கலாச்சார மந்திரியாக டெல்லி வந்தபோது அவரைச் சந்திக்க வேண்டி ஒரு கடிதம் எழுதினேன். கடிதம் அவர் பாரிஸ் திரும்பிய பிறகுதான் கிடைத்ததாம். சர்க்கார் இலாக்காக்கள் சேவை செய்யும் தன்மையைக் குறிப்பிட்டு எனக்கு ஒரு கடிதம் எழுதினார்.’

க.நா.சு. பற்றி எழுதி முடிக்கும் இந்த வேளையில் ஒரு வருத்தம் உண்டாகிறது. ஆல்பெர் கம்யு அல்ஜீரியாவில் சிறுவனாக இருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட நமக்குக் கிடைக்கிறது. ஆனால் க.நா.சு.வின் ஒரு ஆண்டு ஃப்ரான்ஸ் அனுபவங்கள், கம்யூவோடு தங்கியிருந்தது பற்றியெல்லாம் ரெண்டு பக்கத்துக்கு ஒரு கட்டுரையோடு சரி. ஒரு புகைப்படம் கூட இல்லை.

கீழே உள்ளது கம்யூ அல்ஜீரியாவில் சிறுவனாக இருந்த போது எடுத்தது. கீழ்வரிசையில் கறுப்புச் சட்டையில் அமர்ந்து இருப்பது கம்யு.





க.நா.சு.விடம் கற்றுக் கொள்ள நமக்கு ஏராளமாக இருக்கிறது. எனவே நாம் இப்போது அவசரமாகச் செய்ய வேண்டிய பணி அவர் எழுதியுள்ளவற்றில் இதுவரை பிரசுரமானது, பிரசுரமாகாதது எல்லாவற்றையும் உடனடியாகத் தொகுத்துப் பிரசுரம் செய்வதுதான். இல்லையேல் ஒரு மகத்தான பொக்கிஷத்தை இழந்து விடுவோம்.

‘இலக்கிய வட்டம்’ தொகுப்புக்கு கி.அ. சச்சிதானந்தன் எழுதிய முன்னுரை: http://solvanam.com/?p=21683 

கனவும் காரியங்களும்: எம். கோபாலகிருஷ்ணன் http://solvanam.com/?p=21551&

அசோகமித்திரனின் கட்டுரை: http://solvanam.com/?p=8758&

க.நா.சு.வின் மொழிபெயர்ப்புகள் குறித்த ஆழமான ஆய்வையும் விமரிசனங்களையும் கொண்ட ஜி. குப்புசாமியின் கட்டுரை:
http://www.kalachuvadu.com/issue-153/page54.asp
க.நா.சு. எழுதிய புத்தகங்களின் முழுமையில்லாத பட்டியல்:
http://kesavamanitp.blogspot.in/2013/02/blog-post_5259.h