Tuesday 8 September 2015

வெல்ஷ் கவிஞரான Dannie Abse எழுதிய ஜன்னல் கண்ணாடியில் வழியும் எழுத்துக்கள் என்ற கவிதை



எழுத்து எல்லோருக்கும் புரிகிற மாதிரி எளிமையாக இருக்க வேண்டும் என்ற சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் எளிமை என்பது என்ன என்பதை வாசகபரப்பு உணர்ந்து வேண்டும்.
புகழ்பெற்ற Faber & Faber நூல் வெளியீட்டு நிறுவனம், பல்வேறு இலக்கியப் பத்திரிகைகளிலும் கவிதைத் தொகுப்புகளிலும் வெளிவந்த கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்து The Forward Book of Poetry என்கிற பெயரில் ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறது. தேர்வுக்குழுவில் புகழ்பெற்ற கவிஞர்களும் இலக்கிய விமர்சகர்களும் பங்கு பெறுவர். அந்த வரிசையில் 1995 ல் வெளிவந்த ஒரு தொகுப்பை Cressida Connolly என்ற சமகாலக் கவிஞர் தொகுத்திருக்கிறார். ஆப்பிரிக்க, கனடிய, கரீபிய, இந்திய, ஐரிஷ், வெல்ஷ் போன்ற பலநாடுகளைச் சேர்ந்த கவிஞர்களால் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட கவிதைகளாக இவையிருந்தாலும் அந்தந்த மண்ணுக்கேயுரித்தான பண்பாட்டு, இனமரபுகளையும், வாழ்வியல் சூழல்களையும் நவீன பார்வையுடன் சொல்லியிருக்கிறார்கள்.
கொனோலி தனது முன்னுரையில், "கலையின் அனைத்து வடிவங்களுமே ரசவாதங்கள்தாம். எல்லாவற்றிலும் கவிதையே ஜாலத்தன்மை கொண்டது. மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுச் சலித்துக்கிடக்கும் நமது மொழிச் சொல்லாடலை மீண்டும் தங்கமாக மாற்றவல்லது கவிதை..." என்று எழுதுகிறார்.
இந்தத் தொகுப்பிலிருந்து சிலகவிதைகளை உன்னதம் இதழில் வெளியிட்டேன். அதில் முக்கியமானது, வெல்ஷ் கவிஞரான Dannie Abse எழுதிய ஜன்னல் கண்ணாடியில் வழியும் எழுத்துக்கள் என்ற கவிதை. மருத்துவக்கல்வி பயின்று சிறப்பு நெஞ்சகப் பிரிவில் நிபுணரான இவர், தன்னை, முதன்மையாக நான் கவிஞன் என்றே முன்வைக்கிறார்.
1
எளிய விஷயம் எதையேனும் எழுத நான் விரும்புகிறேன்
எளிமையான எதையேனும் - சில பெயரடைகளையும்
அனுமதிக்கப்படாத பல பொருட்சொற்களையும் தவிர்த்துவிட்டு
பழைய பாணியில் உள்ள எதையேனும்:
காலம் பற்றிய கதையை அல்லது
இன்னும் துணிச்சலோடு காதலைப் பற்றிய கதையை
எல்லோரும் புரிந்து கொள்ளும்படியான
எளிய விஷயம் எதையேனும் எழுத நான் விரும்புகிறேன்
சுத்தமான தண்ணீர்போல எளிமையான எதையேனும்
ஆனால் சுத்தமான தண்ணீர்
என்பது H2o
மேலும் அது சிக்கலானது
நீராவியைப் போல, பனிக்கட்டியைப் போல, மேகங்களைப் போல
2
கண்ணாடியின் மீது என்விரல்
கீச்சொலி எழுப்புகிறது
ஜோன் என எழுதுகிறேன்
டேனீ என எழுதுகிறேன்
கற்பனை செய்து பாருங்களேன்
மீண்டும் நானொரு காதல் வயப்பட்ட இளமையில்
பல பொருட் சொற்களின்றி
எதையேனும் சொல்ல விரும்புகிறேன்
கற்பனை செய்து பாருங்கள்
ஓய்வூதியம் பெரும் வயோதிகத்தில் நான்
காதலையும் காலத்தையும் பற்றி
ஏதேனும் சொல்ல விரும்புகிறேன்
நீரைப்போல் எளிய காதலைப்பற்றி.
ஆனால்
நீர் சிக்கலானது
அது H2o , அது பனிக்கட்டி, அது நீராவி, அது மேகம்
என்று நீண்ட காலத்துக்கு முன்பே நமக்குத் தெரியும்
ஜன்னலில் எழுதப்பட்ட நம்பெயர்கள்
மங்கலாக ஆகத் தொடங்கிவிட்டன
அவை மறைய மறைய
மெதுவாக மெதுவாக அழுகின்றன
(மொழியாக்கம்: எஸ் பாலச்சந்திரன்)
எனவே, நாம் எண்ணியிருந்த எளிமை என்பது எளிமையல்ல. யதார்த்தமான தளத்தில் தண்ணீர் என்கிற உருவகம் எளிமையானது. நவீன தளத்தில் அது சிக்கலானதாக மாறும் படிமமாகிறது. அதை இன்னும் கொஞ்சம் அதிகப்படியாக நகர்த்தும்போது நீரின் குளுமை காதலாக மாறுகிறது. காலமாக மாறுகிறது. ஆக எளிமையான புரிதல் என்னும் தன்மை, ஒரு கலைவடிவத்தில் சிக்கலான புதிர்த்தன்மையாகிறது. அதுதான் வாசகனின் மன உணர்வுகளைப் புத்துணர்ச்சியூட்டும் வாசக சுவாரஸ்யம் மற்றும் வாழ்வியலை எளிமையாக எதிர்கொள்ளும் படைப்பூக்கம். ஆக, எளிமை என்பது எளிமையல்ல. சிக்கல் என்பது சிக்கல் அல்ல...