Wednesday, 9 September 2015



தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர்
ஸ்வீடிஸ் கவிதைகள்
தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் (Tomas Tranströmer : 1931-2015 ) : 2011-இல் நோபல் பரிசுபெறற ஸ்வீடிஸ் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பன்மொழிப் புலமையாளர், உளவிய மருத்துவர், பியானோக் கலைஞர், பூச்சியியலாளர். கவிதைகளை லகுவான மொழியில், அழகியலோடு எடுத்துரைக்கும் ஆற்றல் கைவரப்பெற்றவர்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பிறந்த அவர், 23-வது வயதில் ‘செவன்டீன் போயம்ஸ்’ என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் இலக்கியம், அறிவியல், உளவியல் பாடப்பிரிவுகளில் 1956-ஆம் ஆண்டு பட்டம் பெற்ற அவர், உளவியலாளராகப் பணியாற்றிக் கொண்டே, தனது இலக்கியப் பணியையும் தொடர்ந்தார். 1966-இல் அவர் வெளியிட்ட ‘விண்டோஸ் அண்ட் ஸ்டோன்ஸ்’ என்ற தொகுப்பு மிகவும் புகழ்பெற்றது. செலக்டட் போயம்ஸ் (2000), தி ஹாப் பினிஷ்ட் ஹெவன் (2001) ஆகிய கவிதைத் தொகுப்புகள் தோமஸின் பெயர் சொல்லும் படைப்புகள். தோமஸின் ஸ்வீடன் பதிப்பகமான போனியர்ஸ், 1954 முதல் 2004-ஆம் ஆண்டு வரையிலான அவரது படைப்புகளை அவரது 80-வது பிறந்தநாளை முன்னிட்டு, தி கிரேட் எனிக்மா (2004) என்ற தொகுப்பாக வெளியிட்டது. இவர் எழுதிய, ‘மிஸ்டிக்கல் வெர்சடைல் அண்ட் சேட்’ என்ற கவிதைத் தொகுப்பு, 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1990-ஆம் ஆண்டில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதால், உடலின் இடது பகுதி முற்றிலுமாக செயல் இழந்து பேசமுடியாமலும் போனது. எனினும் தனது இலக்கியப் பணியையும், மன உறுதியையும் அவர் கைவிடவில்லை. அவரின் கவிதைகள் ஆங்கிலம் உள்பட 60 மொழிகளில் புகழ்பெற்ற பிற மொழி கவிஞர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவர் பெல்மேன் பிரைஸ், ஜெர்மனியின் பெட்ரார்க் பிரைஸ், கவிதைக்கான போன்னியர் விருது, இலக்கியத்துக்கான நியூஸ்டாட் அனைத்துலக விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். அரசியல், இனம், பாலினம், மதம், நாடு, மொழி போன்ற காரணங்களுக்காக அன்றி கவிதை அழகியலுக்காகவே நோபல் பரிசுபெற்றவர் இவர் எனலாம்.
அவரது இறப்புக்கு முன்பாக நோபல் பரிசு பெற்ற சமயத்தில் மொழிபெயர்த்த இந்தக் கவிதைகள், அச்சமயம் ‘தீராநதி’யில் ‘திறந்தவெளியில் திரிதல்’ என்ற ஒரு கவிதைமட்டும் பிரசுரமான நிலையில் ‘வனம்’ இதழுக்கு அனுப்பப்பட்டு, தாமதமாக ஆனால் சரியாக அவரது இறப்பின் அஞ்சலியாகப் பிரசுரம் பெற்றதன. சமீபத்தில் இவரது கவிதைகள் சபரிநாதன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு ‘உறைநிலைக்குக் கீழே என்ற நூலாக வந்திருக்கும் செய்தியைப் பார்த்ததும் இந்தக் கவிதைகள் ஞாபகம் வந்தன. எனவே இங்கே அவற்றைப் பதிவிடுகிறேன்.
1. திறந்தவெளியில் திரிதல்
இலையுதிர்காலத்தின் முதிர்ந்த புதிர்ச்சுழல்வழி.
காட்டின் நுழைவாசலில்
வீசியெறிந்த ஒரு பாட்டில் தனித்துக் கிடக்கிறது.
உள்ளே நுழைகிறேன்.
இந்தப் பருவகாலத்தில் யாருமற்ற அறைகளாலான
ஒரு சப்தமற்ற அரண்மனை இந்தக் காடு.
அங்கங்கே சில பவித்திர ஓசைகள் மட்டும் :
சுள்ளிகளை யாரோ கவட்டால் வாரித் தூக்குவதுபோல;
ஒவ்வொரு அடிமரத்திலுள்ளும், மூட்டுவாய் மெதுவாய் கிறீச்சிடுவதுபோல.
அழிந்தவற்றின் தனித்துவ பாதிப்புகள்போல
உறைபனியின் மூச்சுப் படர்ந்து சுருங்கிய காளான்கள்.
அந்தி கவிந்துவருகிறது.
விட்டுப்போயாக வேண்டும் இப்போது நீ
மீண்டும் உன் வாழ்விடத்தைக் கண்டடைய.
பயிர்நிலத்தில் கிடக்கும் துருபிடித்தக் கருவிகளும்
செம்பழுப்பாக, சதுரமாக, பெட்டிபோல
திடமாயுள்ள ஏரிக்கு அப்புறம் இருக்கும் வீடும்.

அமெரிக்காவிலிருந்து வந்த கடிதம் -
ஜூன் மாத வெண்ணிற இரவில்,
ஆளற்ற புறநகர் தெருக்களில் வரைபடம்போல்,
குளிர்ந்த, நினைவுகள் இன்னும் மண்டாத,
புத்தம்புதுக் கட்டடங்களின் இடையே,
என்னை வெளியேகத் துரத்தியது.
என் பையில் அக்கடிதம்.
என் சமன்குலைந்த சீற்றத்தின் வேக நடை.
ஒருவகைப் பிரார்த்தனை.
நீ இருக்கும் இடத்தில்
உண்மையில் நன்மைக்கும் தீமைக்கும் முகங்கள் உண்டு.
இங்கோ, அது வேர்களுக்கும் எண்களுக்கும்
ஒளிமாற்றங்களுக்கும் இடையிலான போராட்டம்.
சாவுக்குத் தூது அனுப்புபவர்கள்,
பகலைக் கண்டு அஞ்சுவதில்லை. அவர்கள்
கண்ணாடியாலான அலுவலகங்களுள்
இருந்து ஆள்பவர்கள்.
வெயிலில் செழிப்பவர்கள்.
தங்கள் மேசைகளில் சாய்ந்திருந்து
உன்னை ஏறிட்டு பார்ப்பவர்கள்.
அங்கிருந்து தொலைவில்,
ஒரு புதுக் கட்டிடத்தின் வாசலில் இருக்கிறேன்.
பல ஜன்னல்களும் ஒரு ஜன்னலாகி மறைகின்றன.
இரவின் வெளிச்சமும் மரங்களின் அசைவாட்டமும்
இங்கு அகப்பட்டுக்கொண்டன.
கோடை இரவை எதிர்நோக்கும்,
இந்த அசைவற்ற பளிங்கு ஏரியில்
உண்மையற்றதாக அழிகிறது வன்முறை,
கொஞ்சநேரம்.

சூரியன் சுட்டெரிக்கிறது.
கீழிறங்கும் விமானம்,
பிரமாண்ட சிலுவை நிழல் கிடத்தி
நிலத்தின் மேல் விரைகிறது.
ஒருவன் வயலில் எதற்காகவோ குனிகிறான்,
நிழல் அவனை நெருங்குகிறது.
ஒரு கணம் அவன் சிலுவை நடுவிலிருக்கிறான்.
சிலுவையை, பனித்த தேவாலய வாசல்களில் பார்த்திருக்கிறேன்.
சில நேரங்களில், அது மனக்கொந்தளிப்பின்
ஒரு கணநேர படப்பிடிப்பாய்த் தோன்றும்.
2. சூரியன்கள் தகிக்கும் நிலக்காட்சிகள்
வீட்டின் பின் எழுகிறது சூரியன்
வீதியின் நடுவில் நின்று
தனது வெப்பக்காற்றினால்
நம்மீது பெருமூச்சுவிடுகிறது.
உன்னை விட்டுச் செல்லவேண்டும் இன்ஸ்பிரக்,
ஆனால் நாளை நாம்
வேலைசெய்து வாழ்ந்தாகவேண்டிய
சாம்பல் பூத்து, அழிந்துவரும் காட்டிலும்
உதித்தெழுந்து ஒளிரும் ஒரு சூரியன்.
3. பனியிடைக்காலம்
என் உடையிலிருந்து வீசிப்படர்கிறது
ஒரு நீலநிற வெளிச்சம்.
பனியிடைக்காலம்
பனியின் தந்தியில் ரீங்கரிக்கிறது.
கண்ணை மூடினேன்.
மோனமான ஒரு உலகம் இருக்கிறது
எல்லைப்புறங்களில் கடத்தப்படும்
இறந்துபோனோர் பற்றிய
ஒரு விரிசலும் இருக்கிறது.

4. ஏப்ரலும் அமைதியும்
வெறிச்சிட்டுக் கிடக்கிறது வசந்தம்
வெல்வெட்டுக் கருமையில் சாக்கடை என் பக்கலில் ஊர்கிறது
மஞ்சள் மலர்கள் மட்டுமே ஒளிர்ந்து திகழ்கின்றன
கருநிறப்பெட்டியில் பொதியப்பட்ட வயலின் என
நிழலால் பொத்தி நான் எடுத்துச்செல்லப்படுகிறேன்.
நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று,
அடகுக்கடையில் வைக்கப்பட்டுள்ள வெள்ளிச்சாமான் போல
கைக்கெட்டாத நிலையில் ஒளிர்ந்திடவேண்டும் என்பதே.
5. ஏகாந்தம்
செத்தேன் இன்று என்றே நினைத்தேன்.
பிப்ரவரியின் ஓர் இரவில்
தடதடத்தபடி என் கார், பனியில் பக்கவாட்டில் வழுக்கித்
நேரே அடுத்த வளைவில் இறங்கிப் சரிந்தது.
என்மேல் ஒளியை வாரியிறைத்தபடி விரைந்தன
போக்குவரத்து வாகனங்கள்.
என் பெயர், எனக்கான பெண்கள், எனது வேலை எல்லாமே
தூர விலகி விலகி சென்று புள்ளிகளாயின.
நான் எதுவுமற்றவன்:
விளையாட்டு மைதானத்தில்
திடீரென்று சூழ்ந்து தாக்கப்பட்ட பையனைப்போல
நான் பிரமைபிடித்திருந்தேன்.
முட்டையின் வெண்கருவென தெளிந்த, வழுக்கும்
பனியில் சறுக்கிய காரை இழுத்துப்பிடிக்க முனையும் என்மேல்
எதிர்சாரிக் கார்கள் வெளிச்சம் விழுத்தின.
எனது வெளியை அகலித்தபடி
பெரும் மருத்துவமனை போன்று விரிந்து
வளர்ந்துகொண்டே இருந்தன நிமிடங்கள்.
விபத்துக்கு முன் மூச்சுப்பிடித்து
சாவதானிக்கலாம் என நினைத்தேன்
பிடிமானம் கொண்ட மணல்பாங்கோ
அல்லது தக்க சமயத்தில் வீசிய காற்றோ -
அப்போது உதவிக்கு வந்தன.
கார் மீளவும் பாதையை அடைந்தது.
பலத்த சப்தத்துடன் இடித்து முறிந்து
ஒரு வழிகாட்டிக் கம்பம்
இருளில் எங்கோ சிதறி மறைந்தது.
மயான அமைதி. இருக்கையில் அமர்ந்தபடி நான் காண,
சுழன்றடிக்கும் பனிக்காற்றில், என்னில்
ஏதேனும் மிஞ்சியிருக்கிறதா என்று காரைச்
சுற்றிவந்து பார்க்கிறான் ஓர் நாடோடி ஆள்.

தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் ஸ்வீடிஸ் கவிதைகள் (தொடர்ச்சி)
மாபெரும் ரகசியம் : ஹைக்கூ கவிதைகள்
திபெத்திய லாமாக்களின் மடாலயம்
தொங்கும் தோட்டங்களுடன் –
ஒரு போர்க்களச் சித்திரங்கள்.

ஸ்தம்பித்த நிலையில் எண்ணங்கள் –
அரண்மனை முற்றத்தில் பாவிய
மொசைக் கற்கள்.

சூரியனுக்குக் கீழே
குன்றுச்சரிவுகளின் மேலே நெடுகிலும்
கனலில் மேய்கின்றன ஆடுகள்.

பால்கனியில்
சூரியக் கதிர்களின் கூண்டில் நிற்றல் –
ஒரு வானவில்லைப் போல்.

பனிமூட்டத்தில் பாட்டின் முனகல் –
அங்கே வெளியில் ஒரு மீன்பிடி படகு,
நீரின் மேல் வெற்றிப்பதாகை.

நம்பிக்கையின்மையால் ஆன ஒரு சுவர் –
வரும் போகும்
அறிமுகமற்ற புறாக்கள்.

ஒரு கலைமான் பரிதி வெயிலில் திளைக்கிறது –
புலம்பெயர்ந்த ஈக்கள்
நிலத்தின் மீது நிழலைத் தைக்கின்றன.

நவம்பர் சூரியன்
எனது பூதாகார நிழல் வழிந்து
கலங்கித் தெரிகிறது.

மரணம் என்மீது கவிகிறது –
நான் செஸ் ஆட்டத்தின் ஒரு புதிர்
அதனிடம் இதன் தீர்வு உள்ளது.

தலைவிரிகோலத்தில் பனித்த ஃபைன் மரங்கள் -
இந்த சகதிநீர் மட்டுமான சதுப்பு நிலத்தில்
என்றென்றைக்குமாக.

இருட்டால் இழுத்துச்செல்லப்படல்.
அளப்பறியமுடியாத ஒரு நிழல்சாயையை
ஏதோ இரு விழிகளினுள் கண்டேன்.

இந்த மைல்கற்கள்
ஒரு பயணத்தில் இடையில் –
கேள், காட்டுப்புறாக்களின் குமுக்கம்.

முட்டாள்களின் நுலகத்தில்
ஒரு புத்தக அடுக்கில் ஓய்ந்திருக்கிறது
தொடப்படாமல் ஒரு வேதப் புத்தகம்.

என் ஆனந்தம் பூரித்துப்பெருக்கிறது
பொமரேனியாவின் சதுப்புநிலங்களில்
தவளைகள் உச்சாடனம் ஓதுகின்றன.

அவன் எழுதி எழுதிச் செல்கிறான்
கால்வாய்கள் வச்சிரப்பசை நிறைந்து வழிகிறது
பாதாளத்து ஸ்டைக் நதியில் படகு கடக்கிறது.

மழையைப்போல் ஓய்ந்திரு
கிசுகிசுக்கும் இலைகளைக் காண்
கிரெம்ளினின் மணியோசையைக் கேள்.

அந்தி மயங்கும் வேளை –
என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன
புல்டாக் முக முகப்புகளுடன் நீராவி இழுவைப் படகுகள்.

வலிய, மெலிய காற்று
கடல்புற நூலகத்திலிருந்து –
நான் இங்கே இளைப்பாறுவேன்.

சாம்பல் அமைதி
நீலப் பூதாகாரம் நீந்திப் போகிறது
கடலிலிருந்து குளிர்ந்து வீசும் காற்று.

திவ்யமாய் தொடர்ந்து வீசும் காற்று
சப்தம் வராமல் ஒன்று வெடிக்கிறது -
நீண்ட நெடிய கனவு.
கடல் ஒரு சுவராய் எழுகிறது –
நீள்சிறகுக் கடல் பறவைகள் கத்துவதைக் கேட்கிறேன்
நம்மைப் பார்த்து அவை கையசைக்கின்றன.

நடைபாதையில் ஒரு காட்சி –
அப்படியொரு விநோத அமைதி
அகத்தின் ஒரு குரல்.

மழை பெருமூச்செறிவதைக் கேள்
நான் ஒரு ரகசியத்தை
முணு முணுக்கிறேன்
அதன் உள் நுழைந்து எல்லாம் பார்க்க.

பிளந்து திறக்கிறது கூரை
செத்துப்போன மனிதர் என்னைப் பார்க்கிறார் -
இந்த முகத்தை.

ஏதோ ஒரு அற்புதம் நிகழ்ந்தது
அறையை நிறைத்தது நிலவொளி
இதைப் பற்றி கடவுளுக்கும் தெரியும்.

நான் அங்கிருக்கிறேன் -
வெள்ளையடித்த ஒரு சுவரில்
ஈக்கள் குழுமுகின்றன.

பறவைமனிதர்கள்.
ஆப்பிள் மரங்கள் பூத்துப் பொலிகின்றன
ஒரு மாபெரும் புதிர்.