http://vallinam.com.my/version2/?p=2324
லீனா மணிமேகலை கவிதைகள்
by லீனா மணிமேகலை • September 1, 2015 • 0 Comments
உலர்ந்தவை, உலராதவை 4d063938-b84e-4dc4-a7c1-55b81c947ff2
1.
எனக்குப் பிறகு
உன்னைக் காதலிக்கப் போகிறவளைக் குறித்து
எண்ணிப் பார்க்கிறேன்
பாவமாய் இருக்கிறது
நான் நொறுக்கிப்போட்டிருக்கும் உன்னை
எதைக்கொண்டு அள்ளி முடிவாள்
நீ மறக்க முடியாமல் அவ்வப்போது
உச்சரிக்கப் போகும் என் பெயர்
இரும்புத்துகள்காய் அவள் கண்களை அரிக்கும்
உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
கழுத்தை, தோள்களை, உதடுகளை, காதுகளை, தேமல்களை, மச்சங்களை
உன் உடலின் ஒவ்வொரு செண்டிமீட்டரையும் நான் எப்படி தொட்டிருப்பேன்
என கலங்கித் தவிப்பாள்
நம்மைக் குறித்த கதைகளை மறக்க
அசுர வாக்குறுதிகளை அவள் தரவேண்டியிருக்கும்
என்னைப் போன்ற ஒரு போக்கிரியை
உன்னைப் போன்ற நல்ல ஆண்மகன்
எப்படி காதலித்திருக்க முடியும் என்ற கேள்வி
அவளை உறங்கவிடாது
அடைத்து வைத்திருக்கும் கதவுகளை மீண்டும் மீண்டும்
நீ ஏன் சரிபார்த்து சாத்துகிறாய்
படுக்கையறையின் சுவர்களை
நீ ஏன் தட்டிப்பார்த்துக்கொள்கிறாய்
என அவளுக்கு இறுதிவரை புலப்படாது
உன் தோலின் மடக்குகளில் தங்கியிருக்கும்
என் பூதங்களை வென்று தான்
ஒரு சிறு முத்தத்தையேனும் உனக்குத் தர முடியும்
2.
உனக்கு கவிதை வரவில்லையென்றால்
பிங்க் வோட்கா போத்தலை திறந்து ஒரே மடக்கில் குடி
உனக்கு கவிதை வரவில்லையென்றால்
இன்று சந்தித்தவனின் தொலைபேசி எண்களை மனனம் செய்
உனக்கு கவிதை வரவில்லையென்றால்
பகைவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து மன்னிப்பு கொடு
உனக்கு கவிதை வரவில்லையென்றால்
சன்னல் திரைச்சீலைகளை நான்காவது முறையாக தூசி தட்டி வை
உனக்கு கவிதை வரவில்லையென்றால்
முருங்கை மரத்தில் தொங்கும் காய்களை எண்ணிப்பார்
உனக்கு கவிதை வரவில்லையென்றால்
கட்டிலுக்கு கீழே பதுங்கி தூங்கி விடு
3.
என் பெயர் உனக்கு சவாலாக இருக்கிறது
உன்னை உண்மை சொல்ல வைக்கிறது
உன் உதடுகளை , நாக்கை, பற்களை,
அதிலிருக்கும் துளைகளை, அன்னங்களை, இடையிலிருக்கும் வெளிகளை நரம்புகளை
முழுமையாக அசைக்க வைக்கிறது
என் பெயரை சரியாக உச்சரிக்கும் வரை
உன்னை முழுமையாக நம்ப விடாமல் தடுக்கிறது
4.
நாம் இனி நண்பர்களாக இருப்போம்
இந்த வரியை நீங்கள் யாராவது
கண்ணீரில்லாமல் கடந்திருக்கிறீர்களா?
இல்லையென்றால் சொல்லியனுப்புங்கள்
உங்களை கட்டியணைக்க வேண்டியிருக்கிறது
முகம்பார்க்கும் கண்ணாடியைப்
பார்த்துவிடும் போதெல்லாம்
ஏதோ பெருந்தவறிழைத்தவள் போல
மறுகும் உடலுக்கு கதகதப்பு தேவையாய் இருக்கிறது
5.
கருணையாய் இருங்கள்
உங்கள் இதயம் குறுங்கத்தியாக மாறும்வரை
இன்னும்
அக்கத்தியை பயன்படுத்தும் நேரம் வாய்க்காதவரை
கருணையாய் இருங்கள்