Sunday, 20 September 2015

செல்லம்மாள் – பாகம் II ஜனவரி 16, 2008 — Valarmathi

செல்லம்மாள் – பாகம் II


அந்த ஈ மறுபடியும் அந்த உடலின் முகத்தில் வட்டமிட்டு உட்கார்ந்தது. பிரமநாயகம் பிள்ளை அதை உட்கார விடாமல் விரட்டுவதற்கு விசிறியால் மெதுவாக வீசிக்கொண்டே இருந்தார்.
சாவின் சாயலில் அவர் மனம் நிலைகுலையாமல் பக்குவப்பட்டுவிட்டதோ! சகதர்மினியாக இருந்த ஒரு ஜன்மத்துக்குத் துன்பச் சுமை குறைந்துவிட்டது என்பதிலே அவருடைய மனசுக்கு நிம்மதி ஏற்பட்டுவிட்டதா? சகதர்மினி நிம்மதியாகத்தான் கண்மூடினாளா? உடல் தந்த துன்பம் போதும், ஏ! தர்மராஜனே சீக்கிரம் என்னைக் கூட்டிக் கொண்டு போய்விடு என்று விரக்தியில் வேதனையில் உயிரைவிட்டுத் தொலைத்தாளா?
முனிசாமியைத் தந்தி கொடுக்க அனுப்பிவிட்டு வந்து உட்கார்ந்தவர் மனம் வெறுமையில் மிதந்து கொண்டிருந்தது. பொழுது இன்னும் விடிந்தபாடில்லை. எதிலும் மனம் செல்லாமல் எதிரே சற்று முன்வரை செல்லம்மாளாகக் கிடந்த அந்த உடலை உணர்ச்சி எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். சாம்பிராணி தீர்ந்து புகையும் வாசமும் குறைவது போலத் தெரிந்தது. எழுந்து மாடத்தில் வைத்திருந்த பொட்டலத்தைப் பிரித்து இன்னும் கொஞ்சம் கனலில் தூவினார். மடித்து சுவரோரமாக வைத்தார். புகை சற்று அதிகமாகவே எழுந்து பரவியது. கொஞ்சமாகத்தானே தூவினோம்.
மனசின் ஆழத்திலிருந்தல்லவா எழுந்தது அந்த வார்த்தை, “துரோகி! துரோகி! துரோகி! …” எவ்வளவு நிதானமாக இருந்தேன். இயலாமை, குற்றவுணர்ச்சி, குற்றவுணர்ச்சி. ஏன் இப்படி புகை அளவுக்கதிகமாக வருகிறது? என்னைக் கட்டிக்கொண்டு அவள் என்ன சுகத்தைக் கண்டாள். பத்து வருஷங்கள் என்ன சுகத்தைத் தந்தேன். தாம்பத்யம் … சீ! என்ன இது, புகை இப்படி … நிமிர்ந்து பார்த்தவர் …
புகை அமானுஷ்யமாக எழுந்து பரவியிருந்தது. விட்டம் வரை எழுந்திருந்த புகைமண்டலத்தில் ஒரு உருவம் … ஸ்தூலத் தடையால் மறையாமல் பிரும்மாண்டமாக … பூதம்! உடலில் ஒரு நடுக்கம் பரவி ஓடியது. உடன் பரவசம். ஒரு நிம்மதி. இனி வாழ்வதற்கு என்ன இருக்கிறது. துக்கம், மூச்சு முட்ட பரவிக்கிடக்கும் துக்கம். என்ன உலகம் இது?
பூதம் அதிரவைக்கும் சிரிப்பு, அட்டகாசம் எதுவும் செய்யவில்லை. சாதுபோல. பிரமநாயகம் பிள்ளையை உற்றுப் பார்த்தது. உதட்டோரம் ஒரு மெல்லிய சிரிப்பு. குனிந்து அவர் முகத்துக்கெதிராக தன் முகத்தைக் கொண்டு வந்தது. அவருக்கு மட்டுமே கேட்கும் படியாக, ஆழ்ந்த தொனியில்,
“என்ன பிள்ளைவாள், பயப்படாதீர்கள். உம்மை விழுங்க வரவில்லை. ஒரு சாபம், எதோ என்னாலானது, கொடுக்க வந்திருக்கிறேன். இந்தா பிடியும்! இப்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்வை, இந்த க்ஷ்ணம் வரைக்கும் வாழ்ந்த வாழ்வை, நீர் இன்னுமொருமுறை, இல்லை, கணக்கில்லாமல் மீண்டும் மீண்டும் வாழக்கடவீராக! அவசரப்படாதீரும். முடிவில்லாமல் திரும்பத் திரும்ப வாழப்போகும் அந்த வாழ்வுகளில் ஒரு துளிகூட புதிதாக எதுவும் இருக்காது; நீர் அனுபவித்த ஒவ்வொரு துன்பமும், ஒவ்வொரு மகிழ்ச்சியான கணமும், உம் மனதில் நிழலாடிய ஒவ்வொரு நினைப்பும், நீர் விட்ட ஒவ்வொரு பெருமூச்சும், நீர் செய்த அற்பத்தனமான சின்னச்சின்ன காரியங்கள் ஒவ்வொன்றும், பெரிய காரியங்கள் எதுவும் செய்திருந்தீர்களென்றால் அவையும், இதோ இங்கு மொய்த்துக் கொண்டிருக்கும் இந்த ஈயும், இந்த நிலவும், இங்கே இந்த மரங்களும் செடிகளும் கொடிகளும், இந்தச் சாம்பிராணிப்புகையும், இந்தக் க்ஷ்ணமும், நானும் எல்லாம் கொஞ்சம்கூட மாற்றம் இல்லாமல் அதே வரிசைக்கிரமத்தில் மீண்டும் மீண்டும் அப்படியே திரும்பத் திரும்ப உமக்கு நேரும். இருத்தலின் ஆதியந்தமில்லாத காலச்சக்கரத்தின் முள் ஒரே புள்ளியில் மீண்டும் மீண்டும் நின்று திரும்பச் சுழலும். அற்பப் பதர் நீரும் அந்தச் சுழலில் சிக்கிச் சுழன்று கொண்டிருப்பீர்!”
அதிர்ந்து போனவர் சுவரோடு சரிந்து அப்படியே உட்கார்ந்துவிட்டார். “ஐயோ!” என்றொரு மெல்லிய முனகல். சுய இரக்கமும் கோபமும் கொப்பளிக்க ஏறிட்டுப் பார்த்து, “நான் என்ன பாவம் செய்தேன். ஏன் இப்படியொரு சாபம்? இதைவிட நீ என்னை விழுங்கியிருக்கலாமே! ஏன்! ஏன்! ” ஆவேசம் தொனித்த அளவுக்கு சத்திருக்கவில்லை குரலில். கெஞ்சி இறைஞ்சுவது போல இருந்தது.
“என்னைக் கேட்டால்? என்னைப் படைத்தவன் இப்படிப் பேசவைக்கிறான். நான் என்ன செய்ய!” நிதானமாகச் சொன்னது பூதம்.
“நான் யாரிடம் போய்க் கேட்பது”, இறைஞ்சும் தொனி இறங்கி ஆவேசம் கூடியிருந்தது.
ஒரு சொடுக்கு போட்டது பூதம். ஒருக்களித்துப் படுத்த நிலையில் ஒரு மனிதர், ஒரு க்ஷ்ணத்தில் அங்கே இருந்தார். திடுக்கிட்டு எழுந்து சுற்றுமுற்றும் மிரட்சியோடு பார்த்தவர், “என்ன இது, நான் எங்கே இருக்கிறேன்? நீர் யார்? இது என்ன … ?” பூதத்தைப் பார்த்தவர் அப்படியே வாயடைத்துப் போனார்.
“இவர்தான் உன்னைப் படைத்தவர். ஸ்ரீலஸ்ரீ. விருத்தாசலம் பிள்ளை. என்ன பித்தரே, சுகமா. நீங்கள் பிறப்பித்து விட்டதுகளுள் ஒன்று உங்களிடம் ஏதோ கேட்க வேண்டுமாம். என்னவென்று கேளுங்கள்”. கோணல் சிரிப்பு கொஞ்சமும் மாறாமல் சொன்னது பூதம்.
எத்தனை பேய்களைப் பார்த்தவர். காலனையும் காஞ்சனையையும் வேதாளத்தையும் உலவவிட்டு விளையாடியவர். நிலைமையைப் புரிந்து கொள்வது அவருக்கு சிரமமா என்ன. சுதாரித்துக் கொண்டு லேசாகச் செருமி உட்கார்ந்தபடியே, “எங்கே என் வெற்றிலைச் செல்லம்” என்று பக்கவாட்டில் துழாவினார்.
“அடடா … அதை மறந்துவிட்டேனே! அதில்லாமல் உமக்கு எதுவுமே ஓடாதே. சரி பரவாயில்லை. இந்தாரும்”. இன்னொரு சொடுக்கு. செல்லப்பெட்டி அவர் முன் காற்றில் மிதந்தது. யோசனையோடு அதைப் பிடித்து, திறந்து வெற்றிலைச் செல்லத்தை தடவ ஆரம்பித்தார். கடைசியில் நமக்கு இப்படியொரு நிலைமை வந்துவிட்டதே! சரி. என்னதான் ஆகிறது பார்ப்போம். பிரமநாயகம் பிள்ளை பக்கம் திரும்பி, “என்னப்பா, உனக்கு என்ன, சொல்லு”, என்றார் சாவதானமாக.
அவரது தொனி, செல்லத்தை அவர் தடவிய நிதானம் … பிள்ளையின் முகம் சிவந்தது. “அடப்பாவி, என்னை ஏன் இப்படி எழுதினாய். துயரம் … துயரம் … துயரம் … என்று என் தலையில் எழுதினாய். பத்து வருஷங்கள். இதோ சவமாகக் கிடக்கிறாளே, இவளுக்கும் எனக்கும் அப்படியென்னதான் உறவு. ஒரு இரவுகூடவா நாங்கள் …” நா தழுதழுத்தது. “எங்கள் வாழ்வில் இன்பம் என்று எதுவுமே இல்லையா? இப்போது பார். இந்தப் பூதம் – இந்தப்படியாக – சபித்திருக்கிறது எவ்வளவு கொடூரம். நீயே சொல். என் நிலையில் உன்னை வைத்துச் சொல்”.
தர்மங்கடம். ஆனால் நான் தான் கதையை முடித்துவிட்டேனே. இந்தப் பூதம் எங்கிருந்து கதைக்குள் வந்தது. செல்லத்தை மடித்து வாய்க்குள் திணித்துக் கொண்டே, “என்ன பூதனாரே, இது என்ன இப்படியொரு வியவகாரத்தில் என்னை மாட்டி விட்டீர்,” நாக்கில் சுரீரென்றது. சுண்ணாம்பு சற்று அதிகம் போல. இந்த மனக்கிலேசத்தில் கவனம் தப்பிவிட்டது.
“பித்தனாரே!” அந்த முகத்தில், அந்தச் சிரிப்பில் எந்த மாற்றமும் இல்லை. “நான் என்ன செய்யட்டும். என்னைப் படைத்தவன் இப்படிச் செய்ய வைத்துவிட்டான். உமது சிருஷ்டி உம்முன் நிற்கிறது. நீரே பேசும். இதில் நான் என்ன?” என்றது.
லேசுப்பட்டதாக இருக்காது போலிருக்கிறதே. விடக்கூடாது.
“அது சரி. நல்ல வேடிக்கைதான். என் கதைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம். என் கதைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிறாயே. சரியான அபேதவாதியாக இருப்பாய் போலிருக்கிறதே.” இப்படிப் பிடித்தால்தான் சரிப்பட்டுவரும். இடத்தைக் காலி பண்ணும். ஜெயக்கொடி தன் பக்கம் என்று நம்பிக்கையோடு நிமிர்ந்து பார்த்தார்.
“பிள்ளைவாளுக்குப் பதி சொல்லுங்கள். அவர் கேட்பதிலும் நியாயம் இருக்கிறதில்லையா. பாவம் மனுஷன். ஒரேயடியாக நீர் அவர் தலையில் இவ்வளவு சுமத்தியிருக்கக்கூடாது. நீர் எழுதிய கதைகள், அதில் பிறப்பித்துவிட்டவைகள் எல்லாவற்றின் மீதும் ஏன் இப்படி சோகத்தைப் பிழிந்து தள்ளியிருக்கிறீர். வாழ்க்கையில் நீர் இன்பத்தை அனுபவித்ததேயில்லையா? உமது மனசாட்சியைத் தொட்டுச் சொல்லும். எனக்குத் தெரியும். அப்படியிருக்க முடியாது. ஆனால், கதை எழுதும்போது மட்டும் ஏன் அப்படி ஒரு சோகம். பாற்கடலைக் கடைந்து நீர் எடுத்தது ஆலகாலவிஷம் மட்டும்தானா? உமது தொண்டைக்குள் அதுமட்டும் சிக்கிக் கொண்டுவிட்டதா என்ன? இருக்கும். அதுதான் பித்தன் என்று சூட்டிக்கொண்டீரோ!”
பித்தன் தொண்டையை வருடிப் பார்த்துக் கொண்டார். சே! என்ன இது … லேசாக செருமுவது போல பாவனை செய்து, “என்ன அப்படிச் சொல்லிவிட்டாய். எத்தனை பேரை என் கதைகளில் கூரிய விமர்சனக் கணைகளால், கேலியால் கிழித்திருக்கிறேன். அந்தப் பரமசிவனையும் தர்மராஜனையுமே ஒரு கை பார்த்திருக்கிறேனே.” அவர் சொன்னதில் அவருக்கே நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை.
“அந்தச் சிரிப்பெல்லாம் வேதாந்தச் சிரிப்பு ஐயா. எல்லாம் துன்ப மயம், இதில் அழுதென்ன ஆகப்போகிறது என்ற வேதாந்தம். கோபித்துக் கொள்ளாதீரும். ஒரு பேச்சுக்குத்தான் கேட்கிறேன். உமது வாழ்வில் நீர் இன்பத்தைச் சுவைத்ததே இல்லையா. உமது பத்தினியாளோடு நீர் இன்புற்றிருக்கவில்லையா. குழந்தைகளின் மழலையை ரசித்ததில்லையா. தூக்கிக் கொஞ்சி விளையாடியதில்லையா. சந்தோஷங்கள் அனுபவித்த அந்த க்ஷ்ணத்தோடு மறந்துவிடும். துக்கங்கள் மட்டும் தேங்கித் தேங்கி வழிந்து ஓடும். ஏன் சந்தோஷ க்ஷ்ணங்களை சேர்த்தால் என்ன? வாழ்தலே அற்புதம். அதியானந்தம் என்று கொண்டாடினால் என்ன?” ஒரு குட்டிப் பிரசங்கமே நடத்தி விட்டது பூதம்.
லேசான ஒரு நடுக்கம். ஒரு முட்டாள் பூதத்திடம் – பூதங்களுக்கு ஏது புத்தி _ தர்க்கித்து மாட்டிக்கொள்வதா. அதுவும் என் சிருஷ்டி பிரமநாயகம் பிள்ளையின் முன்னால். பேச்சை மாற்றுவது உசிதம். “அட பரவாயில்லையே.” பிரமநாயகத்தை பார்த்துவிட்டு, “என் கதைகளையெல்லாம் படித்திருக்கிறாய் போலிருக்கிறதே. எங்கே, என் எதிர்காலம் எப்படி? சொல் பார்ப்போம்.”
“உமக்கென்ன, பிரகாசம்தான். வாழையடி வாழையாக உமக்கு வாசகர்கள் தோன்றுவார்கள். தலைமீது தூக்கி வைத்து உம்மைக் கொண்டாடுவார்கள். துயரம்! வாழ்வே பெருந்துயரம் என்று பதறுவதற்குத்தான் சீக்காளிகள் ஏராளமாக இருக்கிறார்களே. இனம் இனத்தோடு சேரும் என்பது உலக நியதி.” ஒரு க்ஷ்ணம் அவரை உற்றுப் பார்த்துவிட்டு, “உமது கதைகளைவிட உமது மேதைமையைப் போற்றுவார்கள்.”
“என்னைச் சட்டம் போட்டுச் சுவரில் மாட்டிப் பூப்போடுவதுதான் பெரிய ஆபத்து என்று எழுதிவைத்துவிட்டேனே.” க்ஷீணமாக வந்து விழுந்தன வார்த்தைகள். அந்தச் சாபம் என் மீது விழுந்திருந்தால் … மீண்டும் பிறக்க நேர்ந்தால் … ஆனால் அப்போதும் … தலை கவிழ்ந்தது, யோசனையில்.
பிரமநாயகத்தின் பார்வை தன்மீது நிலைகுத்தியிருப்பது உறுத்தியது.
உதட்டோரச் சிரிப்பு கொஞ்சமும் மாறாமல் இரக்கமற்ற அந்தப் பூதம் சாம்பிராணிப் புகையோடு கரைந்து கொண்டிருந்தது.
பின் குறிப்பு: 

புதுமைப் பித்தனை பீடமாக்கும் முயற்சிகள் பற்றி tamil.com – ற்கு கட்டுரை எழுத முடிவெடுத்தபோது புனைவு x விமர்சனம் என்ற முரணை மீறும் ஒரு வடிவத்தில் எழுதித்தரவேண்டும் என்ற யோசனையே முதலில் எழுந்தது. அந்த முயற்சியின் விளைவாகவே இங்கு இந்தச் ‘சிறுகதை’. நிறப்பிரிகை சார்ந்தவர்களின் விமர்சனங்கள் ‘அரசியல்’ விமர்சனங்கள் என்று சொல்லப்பட்டுவரும் சூழலில் ஒரு மாறுதலுக்காக இந்த ‘இலக்கிய’ விமர்சனம் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

புதுமைப் பித்தனை பீடமாக்க முயற்சிப்பவர்கள் அவரை (தங்களுடைய) ஒரு குறிப்பிட்ட நோக்கில் வார்த்தெடுத்து முன்வைக்கிறார்கள். மதச் சொல்லாடல்கள் அனைத்தும் வாழ்க்கையை ஒரு ‘துன்பச் சாகரமாகவும்’ அதிலிருந்து தப்பித்து ஓடுவதைப் பற்றியுமே பேசுபவை. புதுமைப் பித்தனின் கதைகளில் வாழ்வு குறித்த இந்தப் பார்வையே ஒரு அடிச்சரடாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது என் அவதானிப்பு. அவரைப் பீடமாக்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்களிடத்திலும் இதே பார்வைதான் இருக்கிறது.

இத்தகைய கலைஞர்களை நீட்ஷே sick artists என்பான். “வாழ்வே ஒரு அழகியல் நிகழ்வு” என்று முன்மொழிந்தவன் அவன். வாழ்வை ஒரு பெரும் பேறாக, அதன் கொடூரங்கள், சிக்கல்கள், அத்தனையையும் ஏற்றுக் கொண்டு (சகித்துக் கொண்டல்ல) களிவெறியோடு, ஒரு eternal childishness – ற்குள் போக அழைப்பு விடுக்கிறான். அதற்கு அவன் வைக்கும் ultimate test இச்’சிறுகதை’யில் பூதம் கேட்கும் கேள்வி.

மற்றபடி, இது என் முழுமையான விமர்சனமும் அல்ல; இறுதியானதும் அல்ல. சந்தர்ப்பம் வாய்க்கும்போது மீண்டும் பேசுவோம் – விரிவாக.
குறிப்பு:
முதலில் tamil.com – லும் பின்னர் சுகனும் ஷோபா சக்தியும் தொகுத்த “சனதருமபோதினி” யிலும் (2001) பிரசுரமானது.