Saturday 15 August 2015


தஞ்சை ப்ரகாஷ் (1943 – 2000)


By சாரு நிவேதிதா

First Published : 09 August 2015 10:00 AM IST

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/08/09/தஞ்சை-ப்ரகாஷ்-1943-–-2000/article2964127.ece

‘சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அது சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் ஆழ்ந்த ஈடுபாடு. அதற்கு நேரம் காலம் என்று எதுவுமில்லை. கிரிக்கெட் பற்றி இவ்வளவுதான் பேசுவது என்று இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் அவருக்கு மனித நேயம் மிக முக்கியமானதாக இருந்தது. எந்நேரமும் சிரித்த முகமாக, சிநேக பாவம் தளும்பத்தான் தோற்றமளிப்பார். அநேக ஆட்டக்காரர்களின், அவர் விரும்பாத சுபாவங்களை, நடத்தைகளை, ஆட்டங்களைப் பற்றிப் பேசும் போது கூட அவர் கோபப்பட்டதில்லை. நான் அவரை கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக அறிவேன். ஆனால் அவர் (கிரிக்கெட்) ஆடுவார், ஆடிக் கொண்டும் இருந்தார் என்பது அவர் ரிடையர் ஆவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியவந்தது…’

ஏதேனும் பிழையான இடத்துக்கு வந்து விட்டோமோ என்று எண்ணி விடாதீர்கள். சாரு நிவேதிதாவாகிய நான் எழுதும் பழுப்பு நிறப் பக்கங்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மேலே உள்ள பத்தியைப் படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? உங்களுக்கு எப்படியோ, எனக்கு அதைப் படித்த போது நெஞ்செல்லாம் பற்றி எரிந்தது. ஏனென்றால், இலக்கியத்தில் உலக சாதனை செய்திருக்கும் தஞ்சை ப்ரகாஷ் பற்றி வெங்கட் சாமிநாதன் எழுதியிருந்ததைத்தான் மேலே மேற்கோள் காட்டியிருக்கிறேன். சச்சின் என்ற பெயருக்குப் பதிலாக ப்ரகாஷ் என்றும் கிரிக்கெட் என்ற இடத்தில் இலக்கியம் என்றும் போட்டுக் கொள்ளுங்கள். இவ்வளவுக்கும் ப்ரகாஷுடன் முப்பது ஆண்டுகள் நெருங்கிப் பழகியிருப்பதாகச் சொல்கிறார் வெங்கட் சாமிநாதன். அதற்கும் மேல் ‘நாங்கள் ஒருவரில் மற்றவர் ஐக்கியப்படுத்திக் கொண்டவர்கள்’ என்றும் சொல்கிறார் வெ.சா. ப்ரகாஷ் பற்றி வெ.சா. எழுதிய மேற்படி கட்டுரை நவம்பர் 2000-ல் ‘சுந்தர சுகன்’ என்ற இலக்கியச் சிற்றிதழ் வெளியிட்ட ப்ரகாஷ் நினைவு மலரில் வெளிவந்தது. இவ்வாறு குறிப்பிடும் வெங்கட் சாமிநாதனுக்கு ப்ரகாஷ் உயிரோடு இருந்தபோது என்ன செய்தார் தெரியுமா? வெங்கட் சாமிநாதனுக்கு என்றே ஒரு பத்திரிகை நடத்தினார். பெயர் வெ.சா.எ. முழுசாகச் சொன்னால் ‘வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார்.’ பத்திரிகையின் பெயரே ‘வெ.சா.எ.’ தான். அதில் வெ.சா. மட்டுமே எழுதினார். ‘ஒரே ஆளுக்காக ஒரு பத்திரிகையா? என்னய்யா இது கூத்தாயிருக்கு?’ என்று கூச்சலிட்டார்கள்’ என்று வெ.சா.வே குறிப்பிடுகிறார். 25 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த அந்த இதழுக்கு நானும் சந்தாதாரராக இருந்திருக்கிறேன். என்னுடைய புத்தக குடோனில் எங்கோ கிடக்கும் சிறுபத்திரிகைகளில் அதுவும் ஒன்று. ஆக, ப்ரகாஷ் தன் வாழ்நாள் பூராவும் வியந்தோதிய வெங்கட் சாமிநாதனுக்குக் கூட ப்ரகாஷ் இறக்கும் தறுவாயில்தான் அவர் எழுத்தாளர் என்றே தெரிய வருகிறது. ‘அவரும் (ப்ரகாஷ்) எழுதுவார், எழுதிக் கொண்டும் இருக்கிறார் என்பது எனக்கு சமீப சில வருஷங்களாகத்தான் தெரியும்’ என்று 2000-ல் ப்ரகாஷின் நினைவஞ்சலி மலரில் எழுதுகிறார் வெ.சா.





இதோடு போகவில்லை. ப்ரகாஷ் ஒரு எழுத்தாளரே இல்லை; ஆனால் அற்புதமான மனிதர்; தில்லியையே பார்த்து இராதவர், ஆனால் விலாசம் கூட இல்லாமல் என் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்து வந்து விட்டார் என்ற ரீதியில்தான் அந்த அஞ்சலிக் கட்டுரையை எழுதியிருக்கிறார் வெ.சா. என் வாழ்நாளில் ஒரு எழுத்தாளனைப் பற்றி வாசித்த அஞ்சலிக் கட்டுரையில் ‘அவன் எழுத்தாளன் என்றே எனக்குத் தெரியாது; ஆனால் அவன் கோமணம் கட்டிய நாளிலிருந்து எனக்கு டிகிரி தோஸ்த்’ என்று எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரை இது ஒன்றாகத்தான் இருக்கும். ‘ப்ரகாஷ் எழுத முடியாமல் போய் வருடங்கள் பல ஆயின என்பது ஒரு பக்கம்’ என்று 2000-ல் மேற்படி கட்டுரையில் குறிப்பிடுகிறார் வெ.சா. ஆனால் உண்மை என்னவென்றால், தொண்ணூறுகளில்தான் ப்ரகாஷ் அதிகம் எழுதியிருக்கிறார். அவருடைய சிகர சாதனையான கரமுண்டார் வூடு என்ற நாவலும் 1998-ல்தான் வெளிவந்தது. (இங்கே இன்னொரு சோகம் என்னவென்றால், ப்ரகாஷ் ஒவ்வொரு நாவலையும் எழுதி முடித்து விட்டு பத்துப் பதினைந்து பிரசுர நிலையங்களில் கொடுத்து அது மறுக்கப்பட்டுத் திரும்பி வருவதைத் தன் வாழ்நாள் முழுவதும் அனுபவித்திருக்கிறார். கரமுண்டார் வூடு நாவலையும் அவர் 1987-ல் எழுதிவிட்டார். ஆனால் பதினோரு ஆண்டுகள் கழித்து 1998-ல்தான் அது புத்தகமாக வெளிவந்தது. அதிலும் நாகப்பட்டினம் சிவசக்தி நேஷனல் புக் பப்ளிகேஷன் என்ற யாருக்கும் தெரியாத பிரசுர நிலையம் மூலம்.)

வெங்கட் சாமிநாதனை மட்டுமல்லாமல் க.நா.சு.வையும் தன் வாழ்நாள் முழுவதும் கொண்டாடியிருக்கிறார் ப்ரகாஷ். தமிழில் எழுதும் அத்தனை எழுத்தாளர்களின் பெயரையும் பட்டியலிடுவதைத் தன் வழக்காமாகக் கொண்டவர் க.நா.சு. இதனாலேயே அவர் அந்நாளில் ‘பட்டியல் விமரிசகர்’ என்று கேலி செய்யப்பட்டதும் உண்டு. அப்பேர்ப்பட்ட க.நா.சு.வும் கூட அவரது பட்டியலில் ஒருமுறை கூட ப்ரகாஷுக்கு இடம் அளிக்கவில்லை. பொதுவாக தமிழின் சிறந்த நாவல்கள் என்று அவ்வப்போது வெளியிடப்படும் பட்டியல்களிலும் ப்ரகாஷின் நாவல்கள் இடம் பெற்றதில்லை. ஆனால் ப்ரகாஷ் நாவல்களின் நிழலைக் கூடத் தொட முடியாத பல நாவல்கள் அந்தப் பட்டியல்களில் காலம் காலமாக இடம் பெற்று வருகின்றன.

பெயரைக் குறிப்பிடாதது மட்டுமல்லாமல், போர்னோ எழுத்தாளர் என்றே அவரது வாழ்நாள் முழுவதும் அறியப்பட்டிருக்கிறார் ப்ரகாஷ். இத்தகைய சூழலில் 1991-லிருந்து 2000 வரை பத்து ஆண்டுகள் அவருடைய எழுத்து சுந்தர சுகனில் தான் அதிகம் வெளிவந்தது. அது பற்றிக் குறிப்பிடும் போது ப்ரகாஷ், ‘சிறுகதை எழுதுனா செக்ஸுங்கிறான். கட்டுரை எழுதுனா ‘இவ்வளவா? குறைச்சிக் கொடுங்க’ங்கிறான். அவனைத் திட்டாதே, இவனை விமர்சிக்காதேங்கிறான். எனக்குப் போதிய சுதந்திரத்தையும் தாராளமாகப் பக்கங்களையும் கொடுத்தது சுந்தர சுகன் தான்’ என்று சொன்னார்.

சுந்தர சுகன் தஞ்சாவூரிலிருந்து வெளிவரும் சிறுபத்திரிகை. ஜி.எம்.எல். ப்ரகாஷ் என்றும் தஞ்சை ப்ரகாஷ் என்றும் அறியப்பட்ட ப்ரகாஷ் தஞ்சாவூர் மானம்புச் சாவடி, ஆலமரத்துத் தெருவில் வசித்தார். ‘கார்டன் அம்மா’ என்று அழைக்கப்பட்ட ப்ரகாஷின் தாயார்தான் தஞ்சாவூரின் முதல் மகப்பேறு மருத்துவர். நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் தஞ்சாவூர் அமெரிக்கன் ஆஸ்பத்திரியிலும் பணி புரிந்தார் கார்டன் அம்மா. ப்ரகாஷ் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. பெற்றோர் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். தாயார் திருநெல்வேலி சமஸ்தான வைத்தியர் குடும்பம். காருகாட்டு வெள்ளாளர். தந்தை தஞ்சாவூர் கள்ளர் இனம்.

ப்ரகாஷுக்கு 1975-ல் மங்கையர்க்கரசியுடன் திருமணம் நடந்தது. அப்போது ப்ரகாஷின் வயது 33. 10.6.1943-ல் பிறந்து 2000-ல் இறந்த ப்ரகாஷுக்கு அபாரமான நினைவாற்றல் இருந்திருக்கிறது. இரண்டு மூன்று வயதில் நடந்தவைகளைக் கூட பிசகாமல் சொல்லக் கூடியவராக இருந்திருக்கிறார். அது அவரது கரமுண்டார் வூடு நாவலில் நன்றாகவே தெரிகிறது. மிகச் சிறிய வயதில் அவர் பார்த்த, கேட்ட கதைகள் எல்லாம் துல்லியமாக அந்த நாவலில் பதிவாகியிருக்கிறது. சமஸ்கிருதம் உட்பட பல மொழிகளைக் கற்றறிந்தவர். தமிழில் முதுகலைப் படிப்பு. ஆனாலும் சட்டதிட்டங்களுக்கு உட்படாத சுதந்திர மனம் கொண்டவராக இருந்ததால் வேலைக்குச் செல்லவில்லை. ரயில்வே க்ரைம் துறையில் சில காலம் இருந்து விட்டு விலகி விட்டார். ஆரம்பப் பள்ளிப் படிப்பு மன்னார்குடியில். நடுநிலைப் பள்ளிப் படிப்பு மணப்பாறையில். அதையடுத்து ராஜபாளையம் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். பூண்டி புஷ்பம் கல்லூரியில் பி.யூ.சி. சென்னையில் ஆட்டோமொபைல் எஞ்ஜினியரிங் படிக்கும்போது இந்தி எதிர்ப்பில் கலந்து கொண்டதால் கல்லூரி முதல்வர் பெற்றோருக்குத் தந்தி கொடுத்து பையனை அழைத்துச் செல்லும் படிக் கூறி விட்டார். ரயில்வேயிலிருந்து வெளியே வந்ததும் பால் கடை, பேப்பர் ஏஜென்ஸி, வெங்காய மண்டி என்று பல தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார் ப்ரகாஷ். பின்னாளில் ஒரு மெஸ் கூட வைத்ததாகப் படித்திருக்கிறேன். குருபக்தி நிறைந்தவர். கரிச்சான் குஞ்சு இவரது குருநாதர்களில் பிரதானமானவர். ப்ரகாஷ் சம்ஸ்கிருதம் படிக்கும்போது வகுப்பு முடிந்ததும் அவரது ஆசிரியர் ப்ரகாஷ் அமர்ந்திருந்த இடத்தை மட்டும் தண்ணீர் விட்டுக் கழுவுவாராம். அது பற்றித் தன் மனைவி மங்கையர்க்கரசியிடம் மனம் வருந்திக் கூறியிருக்கிறார். ‘ஆசாரமான கிறிஸ்தவ பிராட்டஸ்டண்ட் குடும்பத்துப் பிள்ளை விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லுவதைக் கேட்டு கரிச்சான் குஞ்சு, ‘கோபாலா, கோபாலா, நாங்க விட்டுத் தொலைச்சதை என்ன அழகாச் சொல்றேட’ என்பார் என்று எழுதுகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த நா. விச்வநாதன்.

ப்ரகாஷுக்கு மலையாளம் இலக்கணச் சுத்தமாகத் தெரியும். மேலும் தெலுங்கு, உர்தூ, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் புலமை மிக்கவர். அதி தீவிர புத்திக்கூர்மையும் பிரமிக்கத்தக்க ஞாபகசக்தியும் இருந்ததால் மிகக் குறுகிய காலத்திலேயே அவரால் ஒரு மொழியை இலக்கணச் சுத்தமாகக் கற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. இலக்கியமும் நண்பர்களுமே முக்கியம் என்று கருதியதால் எந்தப் பெரிய வேலையையும் ஒப்புக் கொள்ளாமலேயே வாழ்ந்திருக்கிறார். ஒரு துறவியைப் போல் வீட்டுக்குக் கூட தகவல் அனுப்பாமல் பல மாதங்கள் சுற்றித் திரிந்து விட்டு வீட்டுக்குத் திரும்புவாராம். குடி, சிகரெட், பெண் தொடர்புகள் இல்லாதவர். ஆனால் நாக்கு ருசிக்கு அடிமை. அசைவத்தைப் பற்றிப் பேசும் போது சைவ உணவுப் பழக்கம் உள்ள சுகனிடம், ‘ருசியின் ஒரு பக்கத்தை அறியாமலே போய் விட்டீர்கள்’ என்று சொல்வாராம். ‘ஒவ்வொரு ஊரின் இண்டு இடுக்களிலும் உள்ள நல்ல உணவகங்களைப் பற்றி உமிழ்நீர் ஊற ஊறப் பேசிக் கொண்டிருப்போம்’ என்கிறார் சுகன். சுகனுமே அறுபதைக் கூட எட்டாமல் சமீபத்தில் இறந்து போனார்.

தஞ்சையை ஆண்ட மன்னர்கள் பற்றி மூன்று புத்தகங்கள் எழுதி முற்றுப் பெறுவதற்குள் இறந்து விட்டார் ப்ரகாஷ். 9.1.99 அன்று காரைக்கால் பொது மருத்துவமனையிலிருந்து சி.சு. செல்லப்பா பற்றிய ஒரு கட்டுரையை சுந்தர சுகனுக்கு அனுப்பியிருக்கிறார் ப்ரகாஷ். செல்லப்பா பற்றிய முக்கியமான கட்டுரை அது. இன்னொரு கட்டுரையும் கடிதமும் 15.2.2000 அன்று சுகனுக்குப் போகிறது. இப்படித் தன் ஆயுட்காலம் முழுவதும் எழுதிக் கொண்டே இருந்த ப்ரகாஷின் கல்லறை அவர் வாழ்ந்த தஞ்சாவூர் மிஷன் ஆலமரத்தெருவுக்குப் பக்கத்திலேயே உள்ள கல்லறைத் தோட்டத்தில் இருக்கிறது. அந்தக் கல்லறைத் தோட்டம் பற்றியும் ‘அங்கிள்’ என்ற சிறுகதையில் எழுதியிருக்கிறார். நகுலன், அசோகமித்திரன், கரிச்சான் குஞ்சு, இந்திரா பார்த்தசாரதி, ந. முத்துசாமி, க.நா.சு., தி. ஜானகிராமன் போன்ற ஒருசிலரைத்தான் வீடு தேடிப் போய் சந்தித்திருக்கிறேன். ஆனால் ப்ரகாஷை அப்படிச் சந்தித்துப் பேச எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக தி.நகர் பேருந்து நிலையம் எதிரில் அசோகமித்திரனோடு அவரைப் பார்த்தேன். ‘புரட்சிய்யா… பெரிய புரட்சி எழுத்தாளர்; எழுத்துல அனல் பறக்கும்’ என்று என்னைப் பற்றி அசோகமித்திரன் அவருக்கே உரிய குறும்புடன் ப்ரகாஷிடம் என்னை அறிமுகம் செய்தார். ப்ரகாஷ் என்னைக் கருணையோடு பார்த்தார். ஆஜானுபாகுவான உருவம். கருகருவென்று அடர்த்தியாக இருந்த நீண்ட தாடி மீசை. ஓஷோவுக்குப் பிறகு நான் பார்த்த பேரழகன் ப்ரகாஷ் தான். பிறகு ப்ரகாஷின் எழுத்துக்களைப் படித்து விட்டு அவர் வாழ்ந்த வீட்டையும் மங்கையர்க்கரசி அம்மையையும் பார்த்து விட்டு வரலாம் என்று தஞ்சாவூருக்கே போனேன். ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்தேன். ப்ரகாஷ் வாழ்ந்த வீடு எனக்கு அப்போது ஒரு கோவிலைப் போல் இருந்தது. தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

இந்தத் தொடரில் எந்த எழுத்தாளரைப் பற்றியும் வாழ்க்கைக் குறிப்புகள் என்று அதிகமாக எழுதியதில்லை என்பதைக் கவனித்திருப்பீர்கள். ஆனாலும் ப்ரகாஷின் வாழ்க்கை பற்றி இவ்வளவு விரிவாக எழுதுவதன் காரணம், மேற்கத்திய நாடுகளில் ஒவ்வொரு எழுத்தாளனைப் பற்றியும் அவனுடைய தொட்டில் பருவத்திலிருந்து சாகும் வரையிலான வாழ்க்கைக் குறிப்புகளை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பாரிஸ் செல்லும் போதெல்லாம் நான் செய்யும் முதல் வேலை பியர் லாஷ்ஷேஸ் கல்லறைக்குப் (Père Lachaise Cemetery) போவதுதான். இந்தக் கல்லறையில் துயில் கொள்ளும் கலைஞர்கள்: ஐரோப்பிய எதார்த்தவாத இலக்கியத்தின் ஆசானான பால்ஸாக்; மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீத மேதை சோப்பின் – பெரும்பாலான இந்திய இசை ரசிகர்களால் மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தில் பரிச்சயம் இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக கர்னாடக இசையின் தீவிர ரசிகர்களில் மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தையும் கேட்கக் கூடியவர்களாக ஒன்றிரண்டு பேரையே சந்தித்திருக்கிறேன். பலரும் அதை ரசிக்க முடியவில்லை என்றே கூறுகின்றனர். அவர்கள் சோப்பினை மட்டும் கேட்டால் போதும். மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்துக்கும் அடிமை ஆகி விடுவார்கள். கானகத்தில் பட்சிகளின் சங்கீதத்தைக் கேட்டிருக்கிறீர்களா? அல்லது, குறைந்த பட்சம் குயில் கூவுவதைக் கேட்டு ரசித்ததுண்டா? அப்படியானால் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் உங்களால் சோப்பினை ரசிக்க முடியும். ஒரே ஒரு நிமிடம் இசைக்கும் அவருடைய ‘வண்ணத்துப் பூச்சி’யைக் கேளுங்கள்.

https://www.youtube.com/watch?v=VRIS5ABtQbM

இன்னும் கொஞ்சம் அதிக நேரம் கிடைத்தால் கேட்க:

https://www.youtube.com/watch?v=UUTPUJ_VE0g

சோப்பின் போலந்துக்காரர் எனினும் வாழ்ந்ததும் இறந்ததும் பாரிஸ் என்பதால் அவரது கல்லறை பாரிஸ் பியர் லாஷ்ஷேஸில் இருக்கிறது. என்றாலும் வாரம் ஒருமுறை பாரிஸில் உள்ள போலந்துத் தூதரகத்தினர் சோப்பினின் கல்லறைக்கு வந்து பூங்கொத்து வைத்து மரியாதை செய்கின்றனர். மோலியேர், ஃபோந்த்தேன், மார்ஸல் ப்ரூஸ்ட், ஆஸ்கார் ஒயில்ட் போன்றவர்களின் கல்லறையும் இங்கேதான் உள்ளது. சார்த்தரின் கல்லறை மொந்த்பர்னாஸ் கல்லறையில் உள்ளது. இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், நம் தமிழ்நாட்டில் ப்ரகாஷின் பெயர் கூடத் தெரியவில்லை. சக எழுத்தாளர்களும் அவரது அன்பைப் பற்றியும் பாசத்தைப் பற்றியும் மட்டுமே வரிந்து வரிந்து எழுதியிருக்கிறார்கள். சுந்தர சுகனின் அஞ்சலிச் சிறப்பிதழின் 90 பக்கங்களிலும் ப்ரகாஷின் எழுத்து பற்றி உயர்வாகவோ விமரிசனம் செய்தோ ஒரு வாக்கியம் இல்லை; ஒரு சொல் இல்லை. மங்கையர்க்கரசியின் கட்டுரையும், ப்ரகாஷ் சி.சு. செல்லப்பா பற்றி எழுதியுள்ள கட்டுரையும் மட்டுமே அதில் வாசிக்கக் கூடியதாக இருந்தது. மற்றதெல்லாம் அந்த எழுத்தாளனுக்கு எந்த மரியாதையும் செய்யக் கூடியதாக இல்லை.

இந்தத் தொடரில் தஞ்சை ப்ரகாஷ் பற்றி ஆரம்பத்திலேயே எழுதுவதாக இருந்தேன். ஆனால் அவருடைய கரமுண்டார் வூடு என்ன தேடியும் கிடைக்கவில்லை. என்னுடைய இணையதளத்தில் அறிவிப்புப் போட்ட பிறகு என் வாசகர் சரவணன் அந்த நாவலைப் புகைப்பட நகல் எடுத்து அனுப்பியிருந்தார். அதுவும் ‘பின்’ சரியாகப் போடாமல் விளிம்பில் எழுத்து தெரியாமல் போனதால் ‘பின்’னை எடுத்து விட்டு ஒவ்வொரு பக்கமாகப் படித்தேன். அதிலும் நாலு பக்கங்கள் ‘மிஸ்ஸிங்’. தமிழ்நாட்டில் எழுத்தாளனின் நிலை இப்படி இருக்கிறது. அதுவும் எப்படிப்பட்ட எழுத்தாளன்?

Erica Jong எழுதிய Fear of Flying, குஸ்தாவ் ஃப்ளெபரின் மதாம் பொவாரி, ஸில்வியா ப்ளாத்தின் The Bell Jar, Kathy Acker-ன் Blood and Guts in High School போன்ற நாவல்கள் உலகின் குறிப்பிடத்தக்க பெண்ணிய நாவல்களாகக் கருதப்படுகின்றன. ஆனால் இந்த நாவல்கள் அனைத்தையும் விட ப்ரகாஷின் கரமுண்டார் வூடு மிகச் சிறந்த பெண்ணிய நாவல் என்று கூறுவேன். ஒரு பெண்ணின் தாபத்தையும், வேட்கையையும், தேகமெங்கும் கொழுந்து விட்டெரியும் காமத்தையும் கரமுண்டார் வூடு அளவுக்கு வேறு எந்த மொழியிலும் வேறு எந்த எழுத்திலும் நான் கண்டதில்லை. அது மட்டுமல்ல; லெஸ்பியன் எழுத்து தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பே பெண்ணின் தன்பால் உறவை மிக விரிவாகப் பேசியிருக்கிறது கரமுண்டார் வூடு. மிக உக்கிரமானதொரு அக்கினித் தீவினுள் நுழைந்து விட்டது போன்ற ஒரு உணர்ச்சியைத் தருகிறது கரமுண்டார் வூடு. இந்த நாவல் பற்றி நாம் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

(தொடரும்)

தஞ்சை ப்ரகாஷ் – பகுதி 2

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/08/16/தஞ்சை-ப்ரகாஷ்-–-பகுதி-2/article2974434.ece
By சாரு நிவேதிதா

First Published : 16 August 2015 10:00 AM IST




தஞ்சாவூர் மாவட்டத்துல அஞ்சினின்னு ஒரு சின்னோண்டு கிராமம். அதோட தலைவரு சந்திரஹாச கரமுண்டார். அவரோட பூர்வீக வூடுதான் கரமுண்டார் வூடு. எட்டுக்கட்டு வூடு. ஊரெ வளச்சுகிட்டு காவிரி ஓடுது. கரமுண்டார் வூடு ஆத்துக்குள்ற பாதி ஊடு நிக்கும். ஆமா, ஆத்துக்குள்ள வூட்டுப் பின்கட்டு முழுசும் நிக்குது. முப்பது நாப்பது வருஷத்துக்கு மிந்தி பெரிய வெள்ளம் காவேரியையே கரைச்சுக்கிட்டு மேடேறி கடலாப் பாஞ்சிது. (முப்பது நாப்பது வருஷத்துக்கு மிந்தின்னா? சுதந்திரத்துக்கு முன்னாடி.) பின்னால தொழுவத்துல நூறு மாடு கட்டிக் கிடந்த இடம். அதுக்கும் பின்னால காவேரி இப்பமும் நுங்கும் நுரையுமா வீட்டெ இன்னும் நனைக்கிது. மோதிப் பாஞ்சு ஓடுது. வெறும் காரைக் கட்டுதான். நூறு வருஷ வூடு. முட்டையும் கடுக்காவும் கருப்பட்டியும் அறைச்சுக் கட்டுன வூடு. வூட்டுக் கொல்லையில நின்னு பாத்தா ஆறுதான் எந்தப் பக்கமும். அது கொல்லை இல்லெ. ஆறு. வூட்டுச் செவுரு எல்லாம் ஆத்துக்குள்ள எப்பமும் முங்கி முங்கிப் பாசி ஏறி கறுப்படிச்சு மறுபடி பாசி ஏறி கரமுண்டார் வூட்டு செவுரு மேல வீசுற தண்ணிச் சத்தம் வூட்டுக்குள்ற சளப்பு சளப்புன்னு கேக்கும். ராத்திரில கூட எப்பமும் தண்ணிச் சத்தம். தவளைக் கூக்குரல்.

சந்திராஸக் கரமுண்டார் ஆறடி ஒசரம். நல்ல தாட்டிகை. மேல சட்டை போட மாட்டாரு. தோள்ள ஒரு துண்டு கிடக்கும் ஆசையா. உடம்பு அப்டியே கருங்காலிக் கட்டையில மழமழன்னு தேச்சு மெருகு போட்ட மாதிரி பளபளன்னு இருக்கும். இப்பக்கூட அறுபத்தஞ்சு வயசுக்கு மேலன்னு யாரும் நம்ப மாட்டாங்க. இன்னும் திருக்காட்டுப்பள்ளிக்கு நடந்தே போயி திலும்பியும் நடந்தே வந்துடுவாரு! தோளும் மாரும் பாறைபாறையா படைபடையா பயமுறுத்தும். அவங்க தாத்தா ரகுனாத கரமுண்டாரு வாகு அது. சந்திராஸக் கரமுண்டாருக்கு நாலு பொஞ்சாதிங்க. திண்ணையிலதான் தாம்பத்தியம். மூத்ததைத் தவிர்த்து மத்த மூணையும் திண்ணையிலயே விடிஞ்ச பொறவும் கூடப் பார்க்கலாம். ஆமா, மூணும் ஒன்னாத்தான். தஞ்சாவூர் மண்ணுல அது சகஜம். வேணும்னா தி. ஜானகிராமன், கு.ப.ரா., எம்.வி.வி., அப்புறம் இப்போ எழுதுறானே இந்த சாரு நிவேதிதா… எல்லாரையும் படிச்சுப் பாருங்க. யாரு தப்பும் இல்ல; அது அந்த மண்ணோட விசேஷம். மண்ணுன்னா? வெறும் மண்ணா? தண்ணி, காத்து, சாப்பாடு எல்லாந்தான். சரி, 65 வயசு சந்திராஸ கரமுண்டார் மன்மத லேகியம்னு ஒன்னு சாப்ட்டார். அது என்னா தெரியுமா?

பிஸ்தா, பாதாம், முந்திரி, சாலமிசிரி, அக்குரோட், க்ரோசானி, வெள்ளரி விதை, பரங்கி வித்து, இன்னும் பிள்ளை பிறக்க என்னென்ன விதைகள் வேண்டுமோ அத்தனை விதைகளையும் கிலோ கணக்கில் முத்தத்தில் கொட்டி ஜமுக்காளத்தில் நாள் முழுதுமாக உலர்ந்தவைகளைப் பிரித்தெடுத்து அவைகளைப் போலவே இன்னும் பல கடைச்சரக்குகளைச் சேர்த்து இடித்து அரைத்து திரித்து வஸ்த்ரகாயம் செய்து தேனில் ஊற வைத்துக் காய்ந்த பழங்களுடன் கலந்து தினமும் இரவிலும் காலையிலும், ஒரு மரத்துக் கள்ளுடனும் ஒரு பசுவின் பாலுடனும் கலந்து அளவுடன் பெரிய கரமுண்டாரை ‘தாக்கத்’ செய்கிற வேலையை பூராவாக மாஞ்சி என்ற பெண் ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.

கட்டிலின் மேல் பரப்பிய கருங்காலிப் பெட்டியைத் திறந்து அதில் பதித்திருந்த பெல்ஜியம் கண்ணாடியை இழுத்து சாய்மானப் படுக்கையில் வைத்து அந்தப் பெட்டியில் இருந்த சிறிய சிறிய டப்பிகளில் இருந்து ஜவ்வாது, அரகஜா, பொன் அம்பர், காக்கைப் பொன், சந்தனத் தூள் போன்ற பல வாசனாதி திரவியங்கள், போதாததற்கு நவீன காலத்து வெளிநாட்டு செண்ட் வகைகள் ஆகியவைகளை அடுக்கடுக்காய் ஒவ்வொன்றாய் எடுத்துத் தனது வெற்றுடம்பில் அங்குமிங்குமாக மிக மிக மெலிதாகப் பூசிக் கொள்வார் சந்திராஸக் கரமுண்டார். ஒவ்வொரு நாளும் இப்படியே மணக்கும் இரவுகளாகத்தான் அவருக்கு விடியும்.

***

ஆண் வாரிசே இல்லாமல் பெண் குழந்தைகளாகவே பிறந்து கொண்டிருந்த கரமுண்டார் வூட்டில் பெரிய கரமுண்டாருக்குப் பிறந்த காத்தாயம்பாள் தான் இந்த நாவலின் பிரதான பாத்திரம். நாவலை விவரிப்பதும் அவள்தான். அதுவும் நேரடியாக அல்ல. நாமேதான் புரிந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட ப்ரகாஷே காத்தாயம்பாளாக மாறித்தான் கதை சொல்கிறார். நான்கில் மூன்று மனைவிகளை மாற்றி மாற்றிப் பெரிய கரமுண்டார் புரட்டி எடுப்பதை காத்தாயம்பாவும் அவ்வப்போது திண்ணையில் பார்க்க நேரிடுகிறது.





மாணிக்கவல்லி சந்திராசக் கரமுண்டாரின் மனைவிகளில் ஒருத்தி. நாப்பது வருஷத்துக்கு மிந்தி கட்டிக் கொண்டாந்து அஞ்சினியில பூட்டினதில இருந்து ஒரு வருஷம்தான் சந்திராச கரமுண்டாரோட திண்ணையில படுத்துக் கிடந்தா! அப்புறம் முக்கி தக்கி மூணு வருஷம், அவ்வளவுதான். இப்பமும் சந்ராச கரமுண்டார் கெஞ்சிக்கிட்டுத்தான் இருக்கிறார். காத்தாயம்பா ஒருநாள் கொல்லையில ரொம்ப நேரம் வெண்டப் பிஞ்சு பறிச்சு கூடையில அள்ளிக்கிட்டு இருந்தாளா பாத்துட்டா! பாவம்! கெனத்தடி இஞ்சின் அறையிலருந்து என்னமோ கெஞ்சுற சத்தம்… குரல் கூட பழக்கம்தான். அப்பாரு!

தொட்டி சொவத்து மேல ஏறி ஜன்னல் வழியா உள்ற பாத்தா… மாணிக்கவல்லியும் சந்ராச கரமுண்டாரும். ‘ஆ!’

‘தூத்தேறி! உங்களுக்கு என்ன கெப்புறு? இஞ்ச வந்து முந்தியெப் புடிச்சு இளுத்து அவுக்குறிங்களே! வயசென்ன ஆச்சு? இன்னும் என்ன கவுச்சி எளவு?!’

‘அடிபோடி, அறுபத்தஞ்சு வயசு ஒரு வயசா? நீ ஆரு? எம் பொண்டாட்டி தானே?’

‘ஆமா, இப்பத்தான் கண்டு பிடிச்சிருக்கிங்களாக்கும் பொண்டாட்டின்னு?’

‘ஏய் எத்தினி வருஷமாச்சு தொட்டேனா?’

‘எனக்கு முடியல்லய்யா, சாமி, உட்ரு! அசிங்கமாயிருக்கு! சாவலாம்ன்னு வருது.’

‘எனக்கு… எனக்கு…’

படீரென்ற சத்தம் கேட்டது. கதவை ரோசத்தோடு அடித்துத் திறந்து வெளியே வந்தார் சந்திராச கரமுண்டார். ஒண்ணுமேயில்லாத மாதிரி பத்தினியும் வெளிய வந்து மாடுகளுக்கு புல்கட்டைப் பிரித்து உதறினாள். காத்தாயம்பாளுக்கு எல்லாம் தெரியும். பசுக்கள் புல்லை முகர்ந்தன.

சின்ன சித்தப்பா கேக்கும். ‘என்ன அண்ணி, அண்ணன் என்ன சொல்றாரு?’

‘போ தம்பி, இதெ வந்து எட்டிப் பாக்கிறியாக்கும்?’

சொல்லப் போனால் அதிகாலை நேரத்திலும் திண்ணையில் நடக்கும் மன்மத நாடகங்களைப் பார்த்து ஊர் சிரிக்காமல் இருப்பதற்காகவே காலை நான்கு மணிக்கு எழுந்து கோலம் போடும் வேலையைத் தவறாமல் செய்து வருகிறாள் காத்தாயம்பா. வயது இருபதுக்கு மேல். பதின்மூன்று வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் முடிந்து விடும் வீடு அது. அந்த வயதிலேயே பெண்கள் திமுதிமுவென்று இருபது வயதைப் போல் மதர்த்து நிற்பார்கள். பெண்களின் உடல்வாகு பற்றியே பலப்பல பக்கங்கள் எழுதித் தள்ளியிருக்கிறார் ப்ரகாஷ். வயது இருபது ஆகியும் காத்தாயம்பாளுக்கு ஏன் கல்யாணம் ஆகவில்லை? ஏனென்றால், காத்தாயம்பா தான் வீட்டின் குலதெய்வம். அவள்தான் வீட்டு நிர்வாகம் அனைத்தும். அவள் இல்லாவிட்டால் வீட்டில் அணுவும் அசையாது.

அப்பேர்ப்பட்ட காத்தாயம்பாளின் தேகம்? காத்தாயம்பாளுக்கு உமா மஹேஸ்வரியோட ஒடம்பு ஞாபகம் வந்தது. இந்த ஒடம்பு எத்தனை சுகம்ன்னு அவளுக்கு சொல்லிக் கொடுத்ததே உமா மஹேஸ்வரிதானே? உமா மஹேஸ்வரி மொத மொதல்ல காத்தாயம்பாளுக்கு இந்த ஒடம்பச் சொல்லிக் கொடுக்கலன்னா… இந்த ஒடம்பு இப்ப சொன்னத கேட்குமா?

‘என்ன சின்னி, அப்டி பாக்குற? எதுக்கு பாக்குறியாம்?’

‘இல்ல, இப்டி இருக்குதேனுட்டுதான்.’

‘எப்படி இருக்குதேனுட்டுதானாம்?’ன்னு சொல்லிக்கிட்டே காத்தாயம்பாள உமா மஹேஸ்வரி தன்னோட நீளமான சாட்டை மாதிரியான கைகளாலே வாரிக் கட்டி அணைத்துக் கொண்டாள். அப்புறம் அது ஒரு மாயம்… பாம்பு வாயில் இருந்த விஷம் தலைக்கு ஏறினது போல் ஆயிற்று. தலையில் ஏறிய விஷம் பொடிப்பொடியாய் காத்தாயம்பாள் ஒடம்பெல்லாம் நீளமாய்ப் பரவி அவளோட கை விரல் நுனி வரையிலும் பரவி சொட்டு சொட்டாய் மறுபடியும் உமா மஹேஸ்வரியோட உடம்புக்குள் தீயாய் நுழைந்தது. ஆரம்பத்துல இது ரொம்ப ருசியான வெளயாட்டு! அப்புறம் பசியான தேவை. ரெண்டு பெண்கள் ஒண்ண ஒண்ணு சுத்தி இறுகி முறுக்கி ரெண்டு பாம்பாய் ஆணும் பெண்ணுமாய் பாம்பும் பாம்புமாய் அல்லாமல் பாம்பும் சாரையுமாய் மாறிப் போனார்கள். சுப்பாக் கரமுண்டார் வேணாம்ன்னு ஆயிடுச்சி. நிறைய குடிச்சு தள்ளாடிக்கிட்டே வந்து படுக்கையில விழற சுப்பாக் கரமுண்டாருக்கு எப்பவாவது கூட உமா மஹேஸ்வரி வேண்டாம்ன்னு ஆயிடுச்சு. பாவம், ஒண்ணும் சொல்லக் கூடாது… சின்னம்மாவாச்சேன்னு பயந்துகிட்டே மூச்சடக்கிட்டு தண்ணியில குதிச்சா தரையிலேயே கால் பாவ மாட்டேங்குது காத்தாயம்பாளுக்கு. காலால துளாவி துளாவி அடியில போறாப்புல உமா மஹேஸ்வரி சாஞ்சிகிட்டு பூமிக்குள்ள போறது மாதிரி… காத்தாயம்பாளுக்கு ஆரம்பத்துல ஒண்ணும் பேச முடியலேன்னாலும் உமா மஹேஸ்வரியோட கண்ணு கலங்கி முத்து முத்தா தரையில கொட்டும் போது நெஞ்சுக்குள்ள பகீரு பகீருங்குது. ஒடம்ப அவுத்துப் போட்டா அசிங்கம்முன்னுதான் காத்தாயம்பா நெனைச்சிருந்தாள். ஆம்பளைவ உத்து உத்து மாரெப் பாக்குறப்பல்லாம் ச்சீச்சீன்னு தோன்றாப்ல சின்னம்மா, வேண்டாம்… சின்னம்மா… வேண்டாம்… சின்னம்மா வேண்டான்னு கெஞ்சினாலும் தனக்கும் சின்னம்மாவுக்கும் ஒரு வயசு வித்தியாசம்தான்னு ஞாபகம் வர்ரெப்ப ஐயோன்னு ஏங்கும். அவளெ தேடிக்கிட்டு ராத்திரியில உமா மஹேஸ்வரி வரும் போதெல்லாம் திக்குதிக்குன்னு நெஞ்சுக்குள்ற பயமா இருக்கும். அப்றம் உமா மஹேஸ்வரி ஒரு ஆம்பளையப் போல அவ கையெப் புடுச்சு இளுத்து கட்டிக்கும் போது தப்பிச்சு ஓடவே தோணாது. கொஞ்சம் கொஞ்சமா உரமேறிப் போய் மகமாயி தாயே மகமாயி தாயேன்னு உமா மஹேஸ்வரி காத்தாயம்பாள தூக்கி முத்தம் கொஞ்சும் போதெல்லாம் மேலேயிருந்து பத்தாயக்கட்டு ஜன்னல் வழியே ஆயிரம் கோட்டை நெல்லும் அவள் மேலே நூறு நூத்தம்பது வருஷத்து வேதனையெல்லாம் கலந்து ஜோன்னு கொட்ற மாதிரி அப்படியே அவளை ரொப்பிக்கும். சீ என்னாடி இது இந்த அசிங்கம் அப்படீன்னு பளிச்சு பளிச்சுன்னு தாம் மூஞ்சியில தானே அறைஞ்சுக்கும் உமா மஹேஸ்வரி. இப்டி கூட இருப்பாங்களா? இப்டி கூட ஆசை இருக்குமா? நான்தான் பொசக்கெட்ட மூதேவி? உன் துணிய புடிச்சு இளுத்தா நீ ஏண்டி ஒரு ஒலக்கையெ எடுத்து ரெண்டு சாத்து சாத்தாம வுட்டெ தேவிடியாங்கும் உமா மஹேஸ்வரி. காலமெல்லாம் நீதான் இந்த ஆட்டம் ஆடுறியேடி என்று சொல்லிக்கிட்டு எந்திரிச்சு ஒக்காந்தா பத்தாயக்கட்டு மேல் ஜன்னல்ல இருந்து விசிப்பலகையை மிதிச்சா கதவு தெறந்து கிட்டு மேல வானத்துல இருக்குற நட்சத்திரமும் மங்குன நிலா வெளிச்சமும் தெரியிற ராத்திரி வரைக்கும் பத்தாயக்கட்டு வழியே ரெண்டு பொண்ணுவளோட அந்தரங்கம் கிழிபடுற மாதிரி எங்கியோ தூரத்துல இருந்து ஆந்தை ஒன்னோட அலறல் கேட்கும்.

சுமார் 300 பக்க நாவலில் இப்படி காத்தாயம்பாவும் உமா மஹேஸ்வரியும், காத்தாயம்பாவும் செல்லியும் இணைகின்ற - அந்தப் பெண்களின் தேகங்கள் சங்கமித்துப் பிரளயம் புரள்கின்ற பக்கங்கள் ஏராளம், ஏராளம். இந்தப் பூமியில் பிறந்த அத்தனை பெண்ணும் படிக்க வேண்டிய ஒரு நாவல் கரமுண்டார் வூடு. பெண்ணின் தேகமும் அதன் தாபமும் மொழி வழியே இத்தனை உக்கிரமாக வெளிப்படுவதை பெண்களின் எழுத்தில் கூட இதுவரை நான் வாசித்ததில்லை. இங்கே ஒரு முக்கியமான விஷயம். இந்த நாவலை ப்ரகாஷ் என்ற ஒரு ஆண் தான் எழுதியிருந்தாலும் அவனிடம் இதையெல்லாம் சொன்னது மூன்று பெண்கள். பெரிய கரமுண்டாரின் மூன்று மனைவிகள். அவர்கள்தான் ப்ரகாஷின் அப்பாயிகள். ப்ரகாஷே சொல்கிறார்: ‘கரமுண்டார் வூடு நாவலை நான் எழுதியபோது என் அருகே இருந்து ஒவ்வொரு அத்தியாயமாக நான் எழுத எழுத வியப்புடனும், பயத்துடனும் அவைகளையும் என்னையும் படித்துக் கண்ணீர் விட்டுக் கலைத்து என்னுடன் கூடவே எழுத்தில் பங்கு காட்டிய என் தாயார் இன்று இல்லை. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கரமுண்டார் கோட்டை என்ற எனது பூர்வீக கிராமத்தை விட்டு ஓடி வந்த எனது தந்தையாரின் தந்தை பற்றி என் பாட்டியும், பூட்டியும் சொல்லி அழுத ஓலங்கள் இன்றும் எனக்குள் இருந்தாலும் இவைகளுக்கு சாட்சியாய் இருந்து கதை காவியமாய் சொன்ன எனது அப்பாயிகள் சமாதானத்தம்மாள், துரச்சியம்மாள், மங்களத்தம்மாள் ஆகிய கிடைத்தற்கரிய மனுஷிகள் இன்று இல்லை. இவைகளின் கனவுத் தன்மைகளை முறித்து எறியக் கற்றுத் தந்து எனது கனவுகளை நிஜமாக்க இவைகளை மறுக்கவும், துறக்கவும், ஏற்கவும் (!) கற்றுத் தந்த என் தந்தை எட்வர்ட் கார்டன் கரமுண்டார் என்கிற முரட்டுக் கள்ள ஜாதி மனுஷனும் இன்று இல்லை.’ ஆக, இதை எழுதியது ஒரு ஆணாக இருந்தாலும் அந்த ஆணிடம் இந்தக் கதைகளைச் சொன்னது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூன்று கிழவிகள்தான். அதனால்தான் சொல்கிறேன், இதை ஒவ்வொரு பெண்ணும் படித்தே ஆக வேண்டும் என்று.

‘தரை ஜில்லுன்னு ஏறுது. பெரிய பெரிய மாரு ரெண்டும் வாட்டமா தரையில பதிஞ்சு அவ உள்ளுக்குள்ள ரத்தத்தெ குளுர அடிக்கப் பாக்குது. ஆனா தரையிலயிருந்து அவ ஒடம்புக்குள்ற ஜில்லுன்னு தொடை ரெண்டும் பின்னிக்கிட்டு யாரோ அவளெ அழுத்தி உருட்டி சுருட்டிக்கிறது தெரியிது. ஆண்! அவளுக்கு ஜில்லுன்னு புரியிற அவன் தெலகராஜுதான். குப்புறப் படுத்துப் புரண்டு எட்டாங்கட்டுல தலையெத் தூக்கிப் பாக்குறா காத்தாயம்பா. இப்ப அவளுக்குக் கீழ தெலகராஜு குளுகுளுன்னு கெடக்குறது யாருக்குப் புரியப் போவுது. தெலகராஜு ஜில்லுன்னு தரையா செவப்பு சிமிட்டிப் பாலோட கலந்து கெடக்கானே! அடப்பாவிப் பயலே! இப்பக் கூட வந்து இருக்குள்ள கொண்டு போயேண்டா பாவி! இருபது வருஷமா வேற நெனப்பு ஏதுடா? ஏது? காத்தாயம்பா வாண்டாம் உனக்கு? நேர பள்ளக்குட்டிவ கிட்டப் போனியடா பாவி! இவ வாண்டாமா? இவ எதுக்குடா பின்ன? தரைக்குள்ளேயிருந்து சிமிட்டி ஜில்லிப்புல இருந்து இப்ப ஜில்லிப்பு கொறஞ்சு போச்சு! காத்தாயம்பா ஒடம்பு கொதிக்கிது. தரையும் ஜில்லிப்பு உட்டுப் போயி அவ படுத்துக் கெடக்குற எடம் முழுசும் கொதிக்க ஆரம்பிக்கிது. எட்டாங்கட்டுல தொரச்சியப்பாயியும் அவனும் பேசிக்கிட்டு இருக்கிறது மொணமொணன்னு இஞ்ச கேக்குது… இப்ப வந்து என்னெத் தூக்கப்படாதா… காத்தாயம்பா பொலம்புறா… ஒடம்பு முறுக்கிக்கிது… மாரு ரெண்டையும் தரையோட தரையா அழுத்தித் தொடை ரெண்டையும் பூமியில அழுத்து… மாமா… மாமா… என்னெ… என்னெ… வாண்டாமா? அம்பாள் முலை ரெண்டும் பிளந்து தீக்குழம்பு பூமியெங்கும் பரவ குப்புறக் கிடக்கும் அம்பாளை எடுத்து ஓத யாரிங்கே… அம்பாளை எடுத்துப் புரட்ட யாரிங்கே… அம்பாலை எடுத்து முக்கி எடுக்க யாரிங்கே…’

***

உலக இலக்கியத்தில் பெண்ணுடலின் தாபத்தை முதலில் எழுதியவராகக் கருதப்படுபவர் Sappho என்ற கிரேக்கத்து லெஸ்பியன் கவி. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அப்போது தொடங்கி இன்று வரை எழுதப்படும் பெண் எழுத்தின் உச்சங்களில் ஒன்று பியானோ டீச்சர் என்ற நாவல். எழுதியவர் ஆஸ்த்ரியாவைச் சேர்ந்த எல்ஃப்ரீட் ஜெலினெக் (Elfriede Jelinek). சுமார் 35 வயதான எரிகா என்ற பெண் ஆணின் ஸ்பரிசமே படாதவளாக வாழ நேர்வதுதான் கதை. தன் மகளை உலகம் போற்றும் இசைக் கலைஞராக ஆக்க வேண்டும் என்று கனவு காணும் எரிகாவின் தாயார் ஒரு சர்வாதிகாரியாக மாறி அவளைச் சிறுவயதிலிருந்தே ஆண்களின் பார்வை படாமல் வளர்க்கிறாள். எரிகாவின் தகப்பன் ஒரு மனநோய் விடுதியில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறான். இப்படிப்பட்ட ராணுவக் கட்டுப்பாட்டில் கலை வளருமா என்ன? கடைசியில் எரிகாவினால் ஒரு பியானோ டீச்சராக மட்டுமே ஆக முடிகிறது. இதற்கிடையில் அவளுடைய தேகத்தின் கேவல்களை அவளால் எதிர்கொள்ள முடியாமல் போகிறது. நாவல் முழுவதுமே அந்த வேதனைதான் பல்வேறு சம்பவங்களாலும் நினைவுக் குறிப்புகளாலும் சொல்லப்படுகிறது. இறுதியில் தன் கிழட்டுத் தாயையே வன்கலவி செய்யவும் முயற்சிக்கிறாள் எரிகா. உலக இலக்கியத்தில் நான் வாசித்த மிக மூர்க்கமான ஒரு இடம் இது. இந்த நாவல் ஓரளவு தன்னுடைய சொந்த வாழ்க்கை என்றும் சொல்லியிருக்கிறார் எல்ஃப்ரீட் ஜெலினெக். நாவலை PDF-ல் படிப்பதற்கான இணைப்பு:

http://ptchanculto.binhoster.com/books/-Lit-%20Recommended%20Reading/Female%20Writers/Elfriede_Jelinek_The_Piano_Teacher.pdf

பியானோ டீச்சர் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. ஆனால், நாவல் அளவுக்குத் திரைப்படம் செறிவாக இல்லை. எல்ஃப்ரீட் ஜெலினெக்குக்கு 2004-ல் நோபல் பரிசு கிடைத்தது. பியானோ டீச்சரை இங்கே நான் குறிப்பிடுவதற்குக் காரணம், எல்லா வகையிலும் கரமுண்டார் வூடு பியானோ டீச்சரை விட சிறப்பான ஒரு கலைப் படைப்பு என்பதால்தான். மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் நீங்களே இதை முடிவு செய்து கொள்ளலாம். எரிகா தன் தேகத்தின் சீற்றத்தை அடக்க உடம்பு முழுவதும் ஊசிகளைக் குத்திக் கொள்கிறாள். இந்திய சமூகத்தில் அது சாத்தியமில்லை. காத்தாயம்பாளுக்கு சாமி வருகிறது. அப்போது பூசாரி வந்து அவளைப் பிரம்பால் அடிக்கிறான்.

‘தரைக் குளுமை அவளுக்கு வேணும். பத்து வருஷமா இந்தத் தரைக் குளுமைதான் அவளுக்குத் தெலகராஜு. இல்லேன்னா இந்த ஒடம்பு போடுற ஆட்டம் யாருக்கும் தெரியாது. அதையும் மீறி நாலு மாசத்துக்கு ஒரு தடவை அவ மேல மஹமாயி வரும். அவளாவே ஆடி அடங்குவா! அப்பக்கூட மஞ்சத் துணி கட்டி இறுக்கி வேப்பிலையோட ஆட ஆரமிச்சா எல்லாருக்கும் ஒரு ரெண்டு மணி நேரம் கிலியடிக்கும். பூசாரி அரவான் வர்றதுக்கு மிந்தி ஆத்தா கீள எறங்கீடுவா. நெஜமா ஆத்தா அவ மேல வரலேன்னாக் கூட காத்தாயம்பாளுக்கு எப்ப வேண்டுமானாலும் ஆத்தாவெ மேல கொண்டு வந்துக்க முடியும்ன்னு தோணுது! ஆத்தா மேல வந்தா அவ இன்னதுதான் பண்ணிக்குவான்னு யாராலியும் சொல்ல முடியாது. தீக்கவும் முடியாது. மஞ்சத் துணி கட்டியிருக்க ஒடம்பு அக்கினியா மாறிப் போவும். பூசாரி அரவான் சங்கிலியும் பெரம்புமா வருவான். யாரும் பக்கத்துல இருக்க முடியாது. ஹோன்னு சத்தம் போடுவா காத்தாயம்பா! பெரம்பால அடிச்சு அடிச்சு ஒடம்பு செவந்து ரத்தம் கட்டிக்கும். வரிவரியா நெருப்பு வரியும். ஒவ்வொரு தடவையும் ஏகப்பட்ட பூஜை எல்லாம் நடத்துவாங்க. ஏகப்பட்ட வேண்டுதல் ஹோமம் எல்லாம் பண்ணுவாங்க. அடுத்த நாலாவது மாசம் திரும்பியும் மஹமாயி ஆய்டுவா காத்தாயம்பா! டாக்டர் கிட்ட வைத்தியர் கிட்ட ஹக்கீம் சாயபு கிட்ட எல்லாம் கொண்டு போய் காட்டியாச்சு. ம்ஹும்!’

பெண்ணின் தேகம் தவிர நூறு ஆண்டுகளுக்கு முன்பு தலித் பெண்கள் எத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள் என்பதையும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்கிறது கரமுண்டார் வூடு. ஒரு சமூகத்தில் பெண்களின் அடக்கப்பட்ட காமத்தின் உக்கிரமான வெளிப்பாடு; இன்னொரு சமூகத்தில் உயர்சாதி ஆண்கள் தங்கள் காமத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக விலங்குகளைப் போல் நடத்தப்படும் பெண்களின் அவலம். இந்த இரண்டையுமே மிக விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார் ப்ரகாஷ்.

கரமுண்டார் வூடு என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, தஞ்சை ப்ரகாஷை ஒரு மாபெரும் இலக்கியக் கர்த்தாவாக நாம் கொண்டாடியிருந்தால் அவருக்கும் நோபல் கிடைத்திருக்கும். ஆனால் நமக்கோ ப்ரகாஷ் ஒரு எழுத்தாளர் என்றே தெரியவில்லை. நல்ல மனிதர், இனிமையாகப் பழகுவார், கோபமே வராது, தாடி நல்லா இருக்கும், மீசை நல்லா இருக்கும் என்றல்லவா இரங்கல் கட்டுரை எழுதுகிறோம்? கரமுண்டார் வூடு என்ற நாவலே வாசிக்கக் கிடைக்காமல் புகைப்பட நகல் எடுத்து ஏதோ 18-ம் நூற்றாண்டு ஆவணத்தைப் போல் ஏடு ஏடாகப் படிக்க வேண்டியிருக்கிறது. வெட்கக்கேடு! இந்த நிலையில் நோபலைப் பற்றி நினைப்பது எப்பேர்ப்பட்ட அபத்தம்! ப்ரகாஷ் மட்டுமல்ல; இந்தத் தொடரில் நாம் பார்த்து வரும் அத்தனை படைப்பாளிகளுமே சர்வதேச இலக்கியப் பரப்பில் முதலிடத்தில் இருக்க வேண்டியவர்கள்.

(தொடரும்)
http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/08/23/தஞ்சை-ப்ரகாஷ்---பகுதி-3/article2987816.ece
தஞ்சை ப்ரகாஷ் - பகுதி 3


By - சாரு நிவேதிதா

First Published : 23 August 2015 10:00 AM IST


பற்றி எரிந்த தென்னை மரம், கயாமத் எனும் இறுதித் தீர்ப்பின் நாள், ஜானுப்பாட்டி அழுது கொண்டிருக்கிறாள், இருட்டின் நிறங்கள், கடைசிக் கட்டி மாம்பழம், எரித்தும் புதைத்தும், கொலைஞன், நாகம், நியூஸன்ஸ், பேய்க் கவிதை, பூகோஸ், பள்ளத்தாக்கு, பொறா ஷோக்கு, புலன் விசாரணை, இராவண சீதை, சோடியம் விளக்குகளின் கீழ், சுயம், வத்ஸலி, உம்பளாயி, வடிகால் வாரியம், ஆலமண்டபம், என்னைச் சந்திக்க வந்த என் கதாபாத்திரம், தஞ்சையின் முதல் சுதந்திரப் போராட்டம், திண்டி, உனக்கும் ஒரு பக்கம், அங்கிள், வைரமாலை, வெட்கங்கெட்டவன், மேபல், அங்குசம், அஞ்சுமாடி – ப்ரகாஷின் இந்தச் சிறுகதைகளைப் படித்து விட்டு ‘இந்தத் தொடருக்காக இதுவரை நான் படித்ததிலேயே இதுதான் உச்சபட்ச எழுத்து’ என்று என் நண்பரிடம் சொன்னபோது ‘ஒவ்வொருவரைப் பற்றியுமே அப்படித்தானே சொல்கிறீர்கள்?’ என்றார். ஒரு மலையேறி கிளிமாஞ்சரோ மலையில் ஏறி முடிக்கும்போது இதுதான் இருப்பதிலேயே உச்சம் என நினைக்கிறான். பிறகு நங்கா பர்வதத்தில் ஏறுகிறான். அது கிளிமாஞ்சரோவை விட உயரம். பிறகு லோட்ஸே, அதன் பிறகு காஞ்சன்சுங்கா, கடைசியில் எவரெஸ்டைத் தொடும் போது உலகின் ஆக உச்சம். தஞ்சை ப்ரகாஷை அப்படித்தான் பார்க்கிறேன். ஆக உச்சம். மகா கலைஞன். இவனை பாரதியோடு ஒப்பிடுவதா? சிறுகதை இலக்கியத்தில் உலக சாதனை செய்துள்ள போர்ஹேஸ், சாதத் ஹாஸன் மாண்ட்டோ, செகாவ், பல்ஸாக், மாப்பஸான், ஆகியோருடன் ஒப்பிடுவதா? இவர்கள் எல்லோரையுமே விஞ்சியவராகத் தெரிகிறார் தஞ்சை ப்ரகாஷ். ஏனென்றால், ப்ரகாஷின் ஒவ்வொரு சிறுகதையுமே ஒரு குறுங்காவியத்தை வாசித்தது போன்ற உணர்வைத் தருகிறது. ஒவ்வொரு கதையுமே நமக்குள் காவியங்களின் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ப்ரகாஷின் பதினெட்டாம் நூற்றாண்டின் கதைகளையெல்லாம் வாசிக்கும் போது இவர் அந்த நூற்றாண்டில் வாழ்ந்தவரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறார். அதனாலேயே இப்படிப்பட்ட ஒருவர் எழுதுவதைத் தவிர வேறு எந்த வேலையையும் செய்திருக்கக் கூடாதே; செல்வச் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர் ஏன் பத்துப் பதினைந்து தொழில்களைச் செய்தும் பல்வேறு பத்திரிகைகளை நடத்தியும் வாழ்நாளை வீணடித்தார் என்ற துக்கம் மேவுகிறது. இவ்வளவு விஸ்தாரமாக, இத்தனை துல்லியமாக, இப்படிப் பரந்து பட்ட அளவில் ஒரு மனிதனால் எழுதக் கூடுமா, மனித எத்தனத்தில் இதெல்லாம் சாத்தியமா என்ற திகைப்பு ஏற்படுகிறது.

தஞ்சாவூர் மண்ணில் பல்வேறுபட்ட கலாசாரங்களின் சங்கமத்தை நாம் காண முடியும். இது எப்படி நிகழ்ந்தது என்று ப்ரகாஷின் ‘பொறா ஷோக்கு’ என்ற கதையில் ஒரு குறிப்பு வருகிறது.

‘ஏராளமான ஜனங்கள் தெக்குச் சீமையிலிருந்தும் வடக்குச் சீமையிலிருந்தும் தஞ்சாவூருக்குப் பஞ்சம் பிழைக்க வந்து கொண்டிருந்த தாது வருஷப் பஞ்சம் அது. இராமநாதபுரம் பக்கம் இருந்து வந்த தேவமார்கள், தேவாங்குச் செட்டிகள், தெலுங்கு பேசும் நாயக்கர்கள், பிராமணத் தெலுங்கு ராவ்கள் ஆந்திரப் பிரதேச வடுக தேசத்திலிருந்து வந்தார்கள். கொடுமையான பஞ்சம். கோயம்புத்தூர் பக்கமிருந்து வந்த கீதாரிகள் என்று தஞ்சாவூர் கிடுகிடுத்தது. எங்கும் தொழில் இல்லை. சோற்றுக்கு விதைக்க நெல்லும் இல்லை. விதை நெல்லை வேக வைத்து சாப்பிட்ட காலம். சிங்கம்புணரி பாலயம்பட்டியிலிருந்து வந்த பஞ்சத்துக்குப் பயந்தோடி வந்த நாடார்கள் தஞ்சாவூர் கோட்டைக்கு வெளியே கூலிக்கு வயலில் புரியாமல் வேலை செய்தார்கள். அரண்மனையில் மராட்டியர்களின் மாற்றம் – தெலுங்கு பேசியவர்கள் மராட்டி பேசினார்கள். பட்டினி வியாதி கொள்ளை நோயால் தப்பித்து வந்தவர்களைக் காவிரி சேர்த்துக் கொண்ட விபரீதம். வடக்கே இருந்து வந்த ராஜு ஜாதியினர் கோட்டைக்குள் புகுந்தனர். மழை பெய்தது. ஆலங்கட்டி மழை! தண்ணீரே இல்லாத பனிப்பாறை மழை! ஜனங்கள் வெளியே வர பயந்து பட்டினியாய் வீட்டுக்குள் காலம் கழித்த நேரம்.’

‘இருநூறு வருடங்களுக்கு முன்பு தஞ்சைக்குள் நுழைந்த மாலிக்காப்பூரின் படை துரத்தித் துரத்தி அடித்துத் தஞ்சாவூர் மக்களின் உடுதுணிகளையும் சேலைகளையும் பிடுங்கி முதுகில் கொறடாவால் ஒவ்வொருவருக்கும் ஒரு முத்திரை போட்டு விட்ட ரத்த அடையாளம்… கொள்ளை அடித்துச் சென்ற கோடிக் கணக்கான கோயில் சொத்துக்கள்… இதே அகழ்நீரில் மிதந்த நூற்றுக் கணக்கான பிராமண உத்தமர்களின் சடலங்கள்… பின்னர் விரட்டி வந்த காலத்தில் மூன்றரை லட்சம் போர் வீரர்களோடு தஞ்சையைச் சூறையாடிய மாதவராவ் சிங்ளே… அவனைத் தொடர்ந்து குலநாசம், ஸ்தலநாசம், பூமிநாசம் செய்த மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆடிய ஆட்டம்…’

‘அடுத்து குறுக்கில் வந்த ஹைதர் அலி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்து திண்டுக்கல் வழியே தஞ்சையைக் கவிழ்க்கப் பாய்ந்து வந்த முஸ்லீம் படைகள்… வெடித்துச் சிதறிய பீரங்கிக் கங்குகள்… தஞ்சை இப்படிப் பலமுறை சுடுகாடாகி, வந்ததையெல்லாம் விற்று, பறித்ததையெல்லாம் தின்று, சாலையோரத்துப் புளியமரத்தில் இருந்த புளியைக் கரைத்துக் குடித்து இந்த அகழ் தண்ணீரில் இறங்கி எத்தனை பெண்கள் மானமிழந்த உடல்கள் எத்தனை நூற்றாண்டுகளாய் மிதக்கின்றன…’

தஞ்சாவூரில் பல்வேறு இனங்கள் சங்கமித்ததன் கதை இதுதான்.

இவற்றில் பிராமணர், கள்ளர், இஸ்லாமியர் என்ற மூன்று கலாசாரப் பிரிவினர் பற்றியும் தனித்தனியாக மிக விஸ்தாரமாக எழுதியிருக்கிறார் ப்ரகாஷ். ஒவ்வொரு பிரிவிலுமே அரை நூற்றாண்டு வாழ்ந்தவரைப் போல் அவர்களின் கலாசார வாழ்வை துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்.

பொறா ஷோக்கு என்று ஒரு கதை. இவ்வளவுக்கும் எழுதி முடிக்கப்படாத கதை. உலகின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாகக் கருதப்படத்தக்கது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், நான் மேலே குறிப்பிட்ட அத்தனை சிறுகதைகளுமே ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன. ஒரு படைப்பாளி தான் எழுதிய அத்தனை சிறுகதைகளிலுமா உச்சம் தொட முடியும்? ப்ரகாஷிடம் சாத்தியமாகி இருக்கிறது.





தஞ்சாவூர் கீழவாசல் காசீம்பாய் ராவுத்தருக்கு வயது 106. தலையைச் சுற்றிலும் லேசான வழுக்கையும் அடர்த்தியான முடியும் யாரும் அறுபத்து ஐந்து வயதுக்கு மேல் சொல்ல முடியாது. வில் போன்ற தேகம். ராவுத்தருக்கு 106 வயதில் 18 வயது மகள். 75 வயதில் 18 வயது ஜைத்தூனை மணந்ததால் உருவான வாரிசு. இதுதான் தஞ்சை மண்ணின் விசேஷம். இதைத்தான் கு.ப.ரா.விலிருந்து கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம் வரை அத்தனை தஞ்சை எழுத்தாளர்களும் எழுதித் தீர்த்தார்கள்.

ஆண், பெண் இருபாலரின் தேக அழகை ப்ரகாஷ் அளவுக்குத் தமிழில் எழுதியது யாராகவும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. தெய்வீக அருள் பெற்ற சிற்பி ஒருவன் உலகின் மகத்தான சிலையை வடிப்பது போல் ஆண் பெண்களின் தேகத்தை வர்ணிக்கிறார் ப்ரகாஷ். பேய்க்கவிதை என்ற சிறுகதையில்:

வெள்ளைத் தோலும் சிவப்பு சருமமும் மஞ்சள் கூடிக் கிடந்த பால் போன்ற நிறமும், உடலின் மேடு பள்ளங்கள் துல்லியமாய்த் தெரியும் பட்டுப் புடவையின் சலசலப்பும் மெல்லிய மிருதுவான மணம் வீசும் பூக்களும், மிதமான சுடர் வீசும் வைர நகைகளும் கடல் போன்ற அவளது விழிகளும் யாரையும் அயர வைப்பது அவளுக்குப் பழக்கமாகி செரித்துப் போன விஷயம்.

கொலைஞன் என்ற கதையில்: ஐநூறு கிலோ இரும்பு தட்டுகளை அடுக்கி இருபுறமுமாக மாட்டி குறுக்குக் கம்பியின் மூலம் பளு தூக்கினான் அவன். எல்லோரும் அவன் உடம்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். கரளை கரளையான சதை சொன்னபடி கேட்டது. பலகை பலகையாக மாரும் முதுகும் சதையாலேயே இரும்புச் சிலை போல் அமைந்திருந்தது.

நாகம் என்ற கதையில்: சாட்டை போன்ற பளபளக்கும் உடல். என்னெல்லாம் அடங்கியிருக்குமோ அப்படி நெஞ்சு நிமிர்ந்து அவள் நடந்து வரும்போது ஆண் களையேறிய அற்புத வளமை.

கைகளா அவைகள்! வைரத் தண்டுகள்!

மல்லிகை மொக்குப் போல மாப்பிசைந்து உருட்டியது போன்ற கரங்கள்.

சுந்தரமூர்த்தியின் உடம்பு பற்றி நாகம் எண்ணுகிறாள்: என்ன உடம்பு அது? சந்தனமா இல்லை செந்தூரமும் சந்தனமும் கலந்து உருட்டிய மேனியா? பனியன் கூட இல்லாத இந்த மேனியில் ஏதாவது ஒரு புள்ளி மாசு இருக்கிறதா… சுருள்சுருளாய் அலைந்த இந்தத் தலைமுடி யாருடையது? என்னுடையது! பாலூற்றியது போல் அகன்று விரிந்த அந்த நெற்றியும் விசிறிக் கிடக்கும் புருவங்களும் கடல்விழிகளும் கபடமில்லாத குணத்தைக் காட்டும் நேரான அந்தச் செதுக்கிய மூக்கும் உதடுகளும் சங்கைக் கடைந்த வளையக் கழுத்தும் யாருடையவை? என்னுடையவை!

பொறா ஷோக்கு கதையில் 75 வயது ராவுத்தருக்கு மனைவியான ஜைத்தூன் இப்படி அறிமுகமாகிறாள்:

என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மலங்க மலங்க விழித்தபடி கைகளைத் தொங்கவிட்டாள் ஜைத்தூன். காதோரம் முடி சுருளைகளாக வியர்வையில் பேரழகு சிந்தின. வெறும் கழுத்தில் இருந்த கறுப்புக் கயிறு மார்பிலிருந்த ஒரு ஒற்றைப் பரு கருப்பில் முட்டியபடி பிரிந்து கொடுத்தது. அந்த 75 வயதுக் கிழவரே இல்லை என்று சொல்லி விடவில்லை. அலுமினியம் மூடியில் ரொட்டியை எடுத்துக் கறியில் தோய்த்து வாயில் திணித்து அவளையே பார்த்தபடி ‘எங்கிட்ட என்ன இருக்குன்னிட்டு இவளக் கட்டறேங்கறே’ என்று கேட்கும் முன் ஜைத்தூனின் உம்மா அவள் கையைப் பிடித்து ‘இந்தாங்க பிடிங்க’ என்று ஒப்படைத்தாள். கறியின் மணமும் சுவையும் ஜைத்துனின் சாகசமும் சாதுர்யமும் ஒரே நேரத்தில் அவரை அமுக்கி அடித்ததை விட ஜைத்தூனின் பேரழகு அவரை மீண்டும் பூமியைப் பார்க்க வைத்தது. பூமி சிவந்தது.

ஆனால் அன்றிரவே ஜைத்தூன் மஸ்தானுடன் ஓடி விடுகிறாள். மஸ்தான் அவளைக் கேரளத்தில் கொண்டு போய் விற்று விடுகிறான். நான்கு ஆண்கள் எமகிங்கரர்கள் போல் அவளைத் தூக்கிச் சுவற்றில் மாட்டுகின்றனர்… அங்கிருந்து தப்பி பத்து நாள் பட்டினியுடன் உடல் முழுவதும் அடியும் உதையும் வாங்கிய கன்றிப் போன புண்களுடன் ராவுத்தரிடமே வந்து சேர்கிறாள் ஜைத்தூன். அதற்குப் பிறகு சுத்தமான ஒரு குழந்தையை ராவுத்தரின் ரத்தத்தில் பெற்றெடுக்கிறாள். அவள்தான் ரம்லத்.

வானளாவிய சுவர்கள். ராமர் செங்கற்களால் கட்டப்பட்ட புராதனச் சுவர்கள். கீழே செம்பாராங்கற்கள் மீது எந்தப் பிடிப்பில் அவை நிற்கின்றனவோ? தஞ்சாவூரின் கீழவாசல் கோட்டை முழுக்க பள்ளம் முழுவதும் முஸ்லீம்களால் நிரம்பியிருக்கின்றன. கீழக்கோட்டை வாசலிலிருந்து நீண்ட சரிவான பாதை இருபுறங்களிலும் அகழிநீர் அலையடித்துக் கொண்டிருந்தது. கோட்டை இப்போது கோட்டையல்ல. இன்று கோட்டைச் சுவர் மீது பன்றிகள் மேய்கின்றன. கீழவாசல் மேட்டுச் சுவரின் நீட்சியில் ஒரு சிறிய மேடு. அதுதான் பீரங்கி மேடு. பிரம்மாண்டமான பீரங்கி. நூற்று இருபத்தைந்து அடிகளுக்கும் மேல் நீண்ட பெரிய பீரங்கி மேட்டில் பல மணி நேரம் வெய்யிலில் குளிர் காய்ந்து கொண்டு பீடியை உறிஞ்சி ஊதிக் கொண்டு அதோ காசீம் முகைதீன் ராவுத்தர்.

‘இந்த துனியாவுல அதும் மாதிரி ஆம்பளை சுத்தமான ஆம்பளை கிடையாது. ஜைத்தூன், வயசாச்சேன்னு நெனைக்காதே. சுத்தமான ஆம்பளை. இருபத்தைஞ்சு வருஷமா எனக்குத் தெரியும். ஒன்னையெ கெட்டுனது அல்லாவோட கிருபை. தூங்கிடாதே ஜைத்தூனு. அந்த ஆளெ தூங்க உட்றாதே! வேன்னா தெருவுக்குத்தான் வரணும். கெட்டிப் புடி. உட்றாதே! முட்டியடி. வணங்க மாட்டான். வணங்கு. கொடல் கறியும் வெதர் பொரியலும் பண்ணி ஊட்டி உடு. கஞ்சி கூட செவுரொட்டிக் கஞ்சி வை. மடியில இருந்து ஊட்டு. அப்பா மாதிரி அம்மா மாதிரிதான். கொஞ்சம் கொஞ்சமா எளக்கி மாட்டு. உட்றாதே’ என்று சொல்லி ஜைத்தூனை ராவுத்தரிடம் அனுப்பி வைக்கிறாள் ஜைத்தூனின் உம்மா ஷம்ஷாத்.

ஆனால் ராவுத்தரிடம் அசைவு இல்லை. நிக்கா முடிஞ்சு மூணு மாசம் கழிந்த போதும் ராவுத்தர் மடியில் தூங்கிக் கிடக்கும் ஜைத்தூன் பீவியை இருட்டில் வந்து அடித்து எழுப்பி துணியையும் உருவி திரும்பி ராவுத்தரிடம் விரட்டும் வேலையும் பயன் தரவில்லை. ராவுத்தர் முப்பது வருடத் தனிமையில் இருந்தவர். பெண்ணின் ஸ்பரிசம் மறந்து விட்டது. பிறகு எப்படி அவர் ஜைத்தூனுடன் கலந்தார் என்பதை இந்தக் கட்டுரையில் என்னால் சொல்ல இயலாது. நீங்களே வாசித்துக் கொள்ள வேண்டியதுதான்.

காசீம் ராவுத்தர் ஜைத்தூனை இணந்ததும் பிளந்த முதல் கனவு நிஜமாய் அனல் சுடர்ந்தது. உம்மா சொன்னது நிஜம். நிஜம். முரட்டு ஆம்பிளைதான். அடங்காத ஆம்பளை. ஆச்சரியமான வேகம். சுடரும் ஆம்பளை காசீம். அரற்றலுக்கு ஜைத்தூனின் உம்மா ஷம்ஷாத் இடமே தராமல் கதவுகளை இறுக அடைத்தாள்.

கதையில் ஷம்ஷாதின் கதையும் வருகிறது. ஷம்ஷாத்தை பதினோரு வயதில் அரண்மனையில் கோடாவாயாவாய் இருந்த முரட்டுக் குதிரைக்காரன் ரப்பேலுக்குக் கொடுத்துக் கன்னி கழித்தாள் அவள் உம்மா. அது அந்தக் காலம். அப்போதும் ஏழ்மை தன் கொடுங்கரத்தை விரித்து ஷம்ஷாத்தை உறிஞ்சியது. பசியின் காலம். ஷம்ஷாத்தை பத்து மாத பத்து மாத இடைவெளியில் ஓயாமல் பிரசவிக்க வைத்துப் பிழிந்தெடுத்தான் ரப்பேல். பெரும்பாலும் பட்டினியும் பசியும் புளியங்கொம்பிலிருந்து கொழுந்து பறித்துத் தின்பதும் புளியங்கொட்டையை அறைத்து இடித்துக் கஞ்சி வைப்பதுமான கொடூரமான காலம். ஆனாலும் நினைக்கவே பலம் தந்த உறவு ரப்பேலுடையது. ஊக்கமான ஆள். அவனுக்கு அரண்மனையில் சாப்பாடு கிடைத்து விடும். ஷம்ஷாத்தின் பர்தாவை உருவி எறிந்து விட்டு இரவு முழுவதும் ஹீனமான குரல் அனுங்க அனுங்க ஷம்ஷாத்தை வெறியின் வடிவமாக்கும் ரப்பேலிடம் ஒரே நல்ல குணம் விடாமல் அவளை உயிருடன் வைத்திருந்ததுதான்.

பிறகு ஆப்பக் கடை போடுகிறாள் ஷம்ஷாத். அந்தக் காலத்தில் கீழவாசலில் அவள் ஆப்பம் பிரசித்தம். பெரிய வீட்டு ஹாஜியார் பொண்டாட்டி கூட வாங்கிச் சாப்பிடுகிற அபூர்வமான ஆப்பம். திடீரென்று ரப்பேல் வருவான். ஒரு அடுக்கு வெல்ல ஆப்பத்தை இபிலீஸ் மாதிரி சுருட்டிச் சுருட்டி வாயில் திணித்து கபளீகரம் செய்து அன்றைய வியாபாரத்தை ஸ்தம்பிக்க வைத்து விட்டு அதைக் கேட்டதும் ஷம்ஷாத்தை இழுத்துப் போட்டு அதே இடத்தில் சாத்து சாத்து என்று சாத்தி தெருவையே ஸ்தம்பிக்க வைத்து விட்டு ரௌடிப் பெண்கள் தடுக்க வரும்போது அவர்களையும் இழுத்துப் போட்டு அறைந்து விட்டுப் போவான்.

காசீம் ராவுத்தரின் இளம் பிராயம் எப்படி இருந்தது? ராவுத்தருக்கு ஐந்து பீவிகள். எப்போதாவது அந்த வீட்டு மாடிக்குப் போய் வானத்தில் இருந்து புறாக்களுடன் சமிக்ஞை பழக மேலே போகும் போதுதான் அந்த வீட்டுப் பெண் மக்கள் அவரைக் கண்டதும் பர்தாவை இழுத்து வீட்டுக்குள் ஒதுங்கும் போது தெரியும் முக்கோண முகங்களைக் கொண்டுதான் இவள் இன்னாள் என்று தெரியும். அடேயப்பா எத்தனை பெண்கள் எத்தனை பெருமூச்சுகள். ஒன்றும் முடியாமல் அவரைத் தேடி வரும் பெண்களை எத்தனை முறை ஒதுக்கி புத்தி சொல்லி அனுப்பியிருக்கிறார். அந்த வீட்டில் இருள் இப்போது நிரந்தரம் ஆயிற்று. ஆலங்கட்டி மழையில் அந்த வீட்டுச் சிறுவர்களும் சிறுமிகளும் பனிக்கட்டி பொறுக்கும் வேளைகளிலும் கூட மனைவிகளின் தாபத்தைத் தணிக்க வீடு தங்க மாட்டார் காசீம் முகைத்தீன் ராவுத்தர்.

வீட்டுக்குள் வரும் போதெல்லாம் பீவிகளின் வியர்வை ஊறலில்தான் விழிப்பார் காசீம். ஐந்து பீவிகளும் கிரமமாக அவருக்கு – அவருக்கு மட்டும் - வாரி வாரி வழங்கி கொடுமையான வேகத்துடன் காதலித்தார்கள். தெய்வம் போன்ற பெண்கள் – சமைப்பதும் ஊட்டுவதும் காப்பதும் ஆன அபூர்வமான மூடுபடம் இட்ட பாயும் குதிரைகள் அவர்கள். காசீம் பாயை ஊட்டி ஊட்டி அவரது உயிரை வளர்த்தது ஆச்சரியம். வெளி ஆண்கள் யாரையும் தெரியாது. அந்த வீட்டின் இருண்ட மூலைகளும் அரவை எந்திரமும் உரலும் குந்தாணியும் திருவையும் மட்டும்தான் தெரியும். உள்வீட்டுக்குள் அங்கணத்தில் யாரும் வர முடியாத கோட்டை போன்ற வீடு. வீட்டு ஆண்களுடன் கூட அதிகம் பேச யாரும் இருப்பதில்லை. ஆலங்கட்டி மழை பொழியும்போது மட்டும் எல்லாப் பெண்களும் வேடிக்கை பார்க்க வாசல் குறட்டில் வந்து நிற்கும்போதும் யாரும் அவர்களைப் பார்க்க முடிந்ததில்லை.

‘ஜொஹரா புள்ளையாண்டிருக்கிறா. மூணு மாசம் பாருங்க அத்தா! அவ கூட புள்ளை பெறப் போறா’ என்றாள் ஜன்னத் வெட்கப் புன்னகையுடன், அவர் மார்பில் அவளது கனிகள் கசங்க இறுக அணைத்தபடி. ராவுத்தரின் ஐந்து பீவிகளின் தலைவி ஜன்னத். ‘எனக்குத் தெரியாம எப்படி நடந்தது?’ என்று முட்டி முட்டி அவரைத் திகைக்க அடித்தாள். ஆலங்கட்டி மழையின் இரைச்சலில் ஜன்னத்தின் ஆபாசமான திட்டுதல் அவருக்குப் புரியவில்லை. அவர் மேல் ஏறி இறுக்கியபடி ‘ஜொஹரா கிட்ட எப்ப போனியோ? எப்ப? எப்ப?’ என்று கசக்கி வதக்கினாள்.

காசீம் ராவுத்தர் ஜொஹ்ரா என்ற பெண்ணை நிக்கா செய்த அன்று பார்த்ததுதான். அதற்குப் பிறகு அவர் அவளைப் பார்க்கவில்லை. எப்படிப் பண்ணினீங்க நிக்கா என்று சவுக்கை எடுத்துக் கொண்டு சொடுக்குகிறாள் ஜன்னத். ஜொஹ்ராவைக் கூப்பிட்டு வெள்ளிக் கம்பியால் பழுக்க வைத்து இழுக்கிறாள். எனக்குத் தெரியாம எப்படி அவுசாரி போனே என்று அடித்துத் துவைக்கிறாள். அன்றைய இரவும் ஆலங்கட்டி மழை பெய்தது. இரண்டு அனல் பறக்கும் பிறை முகம் அக்னி உதடுகளுடன் ‘அத்தா என்னெ உட்றாதிய உட்றாதிய’ என்றபடி ராவுத்தரை புனுகு ஜவ்வாது மணத்துடன் காரை வளையல்களும் தங்க வளையல்களும் நெருங்க, இரண்டு கரங்கள் சின்ன அழுகுரல் சிணுங்கலுடன் தழுவிக் கொண்டன. காசீம்பாய் இயங்கினார். ஆவேசம் பயம் மூச்சு முட்டும் ஆசை. ஜொஹ்ராவுக்கு ஆணின் முதல் ஸ்பரிசம் உள்ளிறங்கி கொடி வீசி மின்னலுடன் ஆலங்கட்டி மழை வேறு பனியுடன் கனத்த குளிர் நெருக்கியடிக்க, ஜன்னத் நாரி வர்றதுக்குள்ள வர்றதுக்குள்ள என்று புலம்பிப் புலம்பி நடுங்கியபடி சூழந்து பொங்கிய ஜொஹ்ராவின் வடிவ அழகை மெல்ல மெல்ல பீடிக் கங்கின் வெளிச்சத்தில் பார்த்து அசந்து போனார் காசீம். அல்லா. படச்சவனே. என்ன ஆனந்தம் இது! இது கேவலம், துனியாவுல பெண்ணாசை தப்புன்னு அல்லா சொல்லவே இல்லெ. அப்பா இத்தினி நாளு ஜொஹ்ராவுக்குத் தர வேண்டிய சொகத்தைத் தராதது எத்தனை பெரிய தப்பு! எல்லாருக்கும் எத்தனை பணிஞ்சி மாடு மாதிரி இந்த வீட்டுக்கு எத்தனி வருஷமா உழைக்கிற ஜொஹ்ரா! இந்த நினைப்பு வந்ததும் தாமரை இதழ்களைக் கடித்துச் சுவைத்து மார்புகளில் குடியேறி இரண்டறப் புகுந்தார் காசிம்பாய். ஜொஹ்ரா மந்திரம் பூண்டு தங்க முலாம் பூசிய உடம்பை அவருக்குள் நடுங்கியபடி ஜன்னத்தின் பயத்திலும் அவரை வாரித் தழுவிச் சென்றாள்.

ஆனால் ஜன்னத்தைப் பொறுத்தவரை ஜொஹ்ரா ஒரு அடிமை. வேலைக்கு நிற்கின்ற கூலி. ஜன்னத் போலவே அந்த வீட்டில் ஆண் வாசனைக்குக் காத்திருக்கும் அற்புதமான கற்புக்கரசிகளான பன்னிரண்டு பெண்கள் அந்த வீட்டில் புழுங்கிக் கிடந்தது யாருக்குத் தெரியும். எல்லா ஆம்பிளைகளும் சஃபரு போயிருந்ததால் சாப்பிடாமல் தூங்காமல் ஓதாமல் கன்னி காக்கும் அந்தப் பெண்கள்…

காசீம் ராவுத்தருக்கு இன்னும் ஒரு தடவை ஜொஹ்ராவைப் பார்க்க ஆசைதான். ஆனால் அதற்கு முன்னதாகவே கர்ப்பம் ஆகி விட்டாள். எப்படி என்று தெரியவில்லையாமே. வெள்ளிக் கம்பியைப் பழுக்க வைத்து இழுத்தும் யார் என்று சொல்ல மறுத்தாள் ஜொஹ்ரா. கதறக் கதற அவளை அடித்து நொறுக்கி அள்ளினாள் ஜன்னத். ‘யாருடி பண்ணா? யாரு செஞ்சா? யாரு கிட்ட படுத்தே?’ ஜன்னத் மிருகம் குதறியது. திடீரென்று உள்ளே வந்தார் காசீம். வாழ்க்கையிலேயே முதல் முறையாக ஜன்னத்தைத் தன் நீண்ட கரங்களில் இழுத்துத் தடுத்துப் பிடித்து நாலு பீவிகளும் கதற தூக்கிப் போட்டு மிதித்தபடியே ‘நான் தாண்டி காரணம். நான் தான் செஞ்சேன். ஏம்பொண்டாட்டி தான? ஏம்பீவிதான அவளும்? அவ வயித்துப் புள்ள என்னுது. பேசாதடி. மூச்சு உடாதெ’ என்று அறைந்தார் காசீம்.

பொறா ஷோக்கு என்ற இந்தக் கதையில் வெறும் இருபத்து நான்கே பக்கங்களில் ஒரு பெரும் காவியத்தையே சிருஷ்டித்திருக்கிறார் ப்ரகாஷ். கிரேக்க எழுத்தாளரான Nikoz Kazantzakis-இடம் இயேசு, புத்தன், மார்க்ஸ் ஆகிய மூன்று பேரின் தர்ஸனங்களையும் ஒருங்கே காணலாம். ப்ரகாஷின் கதைகளிலும் அதே தர்ஸனத்தைக் காண முடிகிறது.

காசீம் ராவுத்தரின் வாழ்க்கை இரவு பகலாக புறாக்களுடனேயே கழிந்தது. சோறு வேண்டாம் தூக்கம் வேண்டாம் மனைவி வேண்டாம் குடும்பம் வேண்டாம். புறாக்கள் போதும் அவருக்கு. அது என்னவோ அவரைக் கண்டதும் புறாக்கள் கும்மளி இட்டுக் கொண்டு அவரைச் சுற்றிச் சுற்றி பறப்பதும் அவரது தோள், தலை, உடல் முழுவதும் உட்காருவதும் ஆச்சரியமான காட்சி எங்கும் கிடைக்காது. வாயில் புகையும் பீடியுடன் ஒவ்வொரு புறாவாகப் பிடித்து தட்டிக் கொடுத்து வாய் நிறைய தானியத்தைத் தன் எச்சிலோடு சேர்த்து ஊட்டும் அவரது வாயும் புறாவின் அலகும் ஒன்றாகி விடும். நீளமாக ஊதி விடும் அந்த உணவு சில நேரம் அவருக்கும் உணவாகி விடும். சுவைத்து சுவைத்து தான் உண்டதை கக்கிக் கக்கி புறாக்களுக்கு ஊதி விட்டுத் தரும் ஊட்டு முறை அந்தப் புறாக்களுக்கு இனிக்கும் போல. ஒரே நேரத்தில் பறந்து பறந்து அவர் வாயிலிருந்து மென்று நைவான தானிய உணவை அவருக்கு வலிக்காமல் அள்ளி உண்ணுகிற காட்சி பெரிய வீட்டுப் பெண்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் யாருக்கும் சலிக்காது. தேவலோகத்தில் இருந்து வந்த காப்ரியல் மலக்கு மாதிரி அவர் அந்தப் புறாக்களின் நாயகனாக அவற்றுடன் உறவாடி அவருக்கு வேறு நினைவே அற்றுப் போனது. யாருடனும் பேசவே மாட்டார். இரவு பகல் என்று தஞ்சாவூர் தெருக்களில் அலைவது எல்லாம் புறாக்களுக்காகத்தான். அரண்மனைக்குள் நாயக்க மன்னர்கள் அவருக்குத் தனி உரிமை கொடுத்திருந்தனர். திருவையாற்றின் கரையில் ஆற்றாங்கரையிலும் என்றைக்கும் விளங்கும் புறா வீடு உண்டு. குலமங்கலம் போகும் ஆற்றோரப் பாதையில் புறாக்கள் வந்தடையும் தனிக்கூண்டுகளை அரசர்கள் கட்டித் தந்தார்கள். பல தேசங்களில் இருந்து குறிப்பாக பாரசீகத்திலிருந்தும் அரேபியாவிலிருந்தும் தருவிக்கப்பட்டன. வந்ததும் அவற்றுடன் பேசிப் பழக்கி அவைகளின் பாஷையையும் தனதாக்கிக் கொள்ளும் ஆச்சரியமான அல்லாவின் மனிதன் காசீம். அந்தப் புறாக்களும் அவரை மீறி எதுவும் செய்ய முடியாத அன்பில் பிணையுண்டு நின்றன.

காசீம் பாய் ஒரு ஹராமி என்று முஸ்லீம்கள் சொன்னார்கள். காஷ்மீர் என்று மௌல்வி சொன்னார். ஆனால் புறாக்கள் அவருக்குக் கற்றுத் தந்தன. ஐம்பது ஆண்டுகளாக மனிதர்களுடன் பழகுவதை விட புறாக்களைப் புரிந்து கொள்வதில் நேரம் செலுத்திப் பழகி வந்த தெய்வீக மனிதரின் குரல். கனவு போன்ற அவரது கண்களும் சிவந்த உதடுகளும் இளமை மாறாத ஆண்மைப் புன்னகையும் நெடிய ஆறடி உயரமும் அனல் போன்று சூடு பிடிக்கும் அவரது ரத்தமும் எல்லாமே புறாக்களால் போஷிக்கப்பட்டவை. அவரது குரல் கேட்டு வானத்தில் பறக்கும் புறாக்கள் விர்ரென்று திரும்பி அவரை நோக்கிப் பாய்ந்து வரும் வித்தையும் அவரது ரகசியமும் அந்தப் புறாக்களுக்கு மட்டுமே தெரியும். அவரது ஆணை எதையும் உடனடியாக நிறைவேற்றி விட்டுத்தான் அவை அடங்கும். நினைத்தால் அவரது எதிரியின் கண்களை நிமிடத்தில் குருடாக்கும். அந்த பாஷை அத்தனை வலுவானது. ஆணை அத்தனை அன்பு வடிவானது. மனிதன் மீறி விடுவான். அவரது குரலுக்கு உயிர் கொடுக்கும் துணிவும் தியாகமும் வீரமும் அந்த ஈரறிவு உயிருக்கு இருந்தது வியப்பல்ல.

கதையின் இறுதியில் மதக் கலவரம் ஏற்படுகிறது. ‘ஊரு ரெண்டு பட்டுக் கெடக்கே பாபா. இஞ்ச பொறா புடிக்க ஏன் வந்திய? துனியா ரொம்ப கெட்டுப் போச்சி. ஜாக்ரதையா போங்க. ஆத்தங்கரையெல்லாம் பொம்பளை கொமர்களோட பொணம் கெடக்கு. யார் என்ன ஏதுன்னு யாரும் கேக்க முடியலை. நாயக்கர் காலமில்ல இது. முஸ்லீம்களுக்குக் காலமில்ல தாதா. உங்களுக்கு இன்னும் பொறா ஷோக்கு உட மாட்டேங்குது. கவனமா போங்க’ என்றார் ஆலம் பக்கீர்.

‘ஆலம் சாஹிப். படச்சவன் இருக்கும்போது என்ன பயம்? அவன் எங்கும் இருக்கான் பாய். அவனை மீறி எதுவும் இல்ல. யாரை நம்பி நம்ம அப்பன் பாட்டன்மார் இஞ்ச வந்தாங்க. அல்லா அவுகளை தஞ்சாவூர்ல பாலைவனத்துல இருந்து எந்த தைரியத்துல கொண்டாந்து சேர்த்தாராம். தஞ்சாவூருக்கு வர முந்தி என் பாட்டன் பூட்டான்மார் அரேபியாவில் இருந்து மேனாவிலேயும் பல்லக்குலேயும் வந்தாக. பாலைவனத்துல இருந்து ஆப்கானிஸ்தான் பலூஜிஸ்தான் ராஜஸ்தான் எல்லாம் நடந்து நடந்து, நடக்கும்போதே பலுகிப் பெருகி, நடக்கும்போது படிச்சி, நடக்கும் போதே வேட்டையாடி சாப்பிட்டு, நடக்கும் போதே தனியா என்னென்னமோ படிச்சிக்கிட்டு, நடக்கும்போதே மருந்து செடியெல்லாம் பறிச்சி வைத்தியம் யுனானி எல்லாம் செஞ்சுகிட்டு நடந்து கிட்டே சண்டை போட்டு சேந்தவங்களையெல்லாம் முஸ்லீம் ஆக்கிக்கிட்டு யாருகிட்டயும் வேத்து வாசனை நேராம கூட்டம் கூட்டமா புள்ளை குமர்களைப் பெத்தெடுத்து திடீர்னு இஞ்ச பாளையம் எறங்கினாங்களே, ஆரெக் கேட்டு? ஆரு சொன்னா? முன்னூறு வருஷமா இஞ்ச தொழுகையும் ஸவ்வாத்தும் து ஆவும் செய்யலியா? பொழுது விடியலியா? சாஹிபு. பைத்தியம் மாதிரி பயப்படாதிக. எந்தக் காலமும் நிலையானது இல்ல சாஹிப். எவனும் நிக்கிறதில்லெ. ரத்தம் தெளிவா இருக்கிற வரைக்குதான் எல்லாம். ரத்தம் கலங்கினால் கலந்து கொட்ட வேண்டியதுதான். துனியாவுல இதெல்லாம் பாத்து பயப்பட என்ன இருக்கு. ஆலம் சாஹிப் ஒங்க பத்து கொமருகளையும் காவு கொடுக்கலியா? படச்ச அல்லா இருக்கான். என்னைக்கும் இதெல்லாம் இப்படியேதான் இருக்கும். கொஞ்ச நாள் ஆட்டம்! அப்றம் மர்கயா! நீங்க பாக்காததா?’ என்றார் ராவுத்தர்.

ப்ரகாஷ்… நீ இருந்த திசை நோக்கித் தொழுகின்றேன்…

(தொடரும்)

தஞ்சை ப்ரகாஷ் – பகுதி 4


By - சாரு நிவேதிதா
www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/08/30/தஞ்சை-ப்ரகாஷ்-–-பகுதி-4/article2999865.ece
First Published : 30 August 2015 10:00 AM IST


அவன் ஒரு அடியாள். பிச்சுவா, கோடரி, வீச்சருவாள், கொன்னருவாள், உளி போன்ற ஆயுதங்களோடும் ரத்த வாடையோடும் வாழ்பவன். எதிரிகள் துரத்தி வரும்போது ஒளிந்து கொள்ளும் இடம் இஸ்லாமியர் வாழும் தைக்கால் மேடு. அங்கே நூரி என்ற பெண். அவள் அடிக்கடி அந்த மனிதனைப் பார்க்கிறாள். எப்படி? அந்தக் கூடத்திலிருந்த 13 ஜன்னல்களை ஒவ்வொன்றாகத் திறந்து கொண்டே வந்து வீட்டுக்குள்ளேயே நடந்து கூடம், ஹஜான், உக்கிரானம், ஹாடிகானா பக்கம், தோட்டம் என்று நீண்டு போகும் அந்தத் தெருவின் பெரியதான அந்த வீடு ஒரு ஏக்கர் பரப்பில் அடுத்த தெருவை பின்புறமாகத் தாண்டி வீட்டுச் சுவர் நீண்டபோது, அதே சுவரில் இருந்த பல ஜன்னல்களை நூரி பதுங்கிப் பதுங்கித் தாண்டி முன் கட்டுக்கு வந்ததும், அதிலிருந்த பதினெட்டாவது ஜன்னலை மெல்லத் திறந்ததும் அவளுக்கு வியர்வையில் பயமும், பயத்தில் திடுக்கமும், திடுக்கத்தில் ஆச்சரியமுமாய் பயம்!

ஆளுகளை அவன் பந்து பந்தா சுருட்டி அடிக்கறதப் பாத்தா பயமா இருந்தது. அது என்ன கையா? இரும்பா? எல்லோருடைய குடல்களையும் மாலையாகக் கழுத்தில் மாட்டிக் கொண்டாற்போல் யாரோ ஒரு ஜின் நிற்கிற மாதிரி இருந்தது. யார் இவன்? என்ன சண்டை? என்ன ஜாதி? என்ன மதம்? வாப்பா பார்த்தால் கொன்னே போட்டு விடுவார். எல்லோரும் தூங்குகிறார்கள். இவளுக்குத் தூக்கம் வராமல் போய் நாலைந்து வருசங்கள் ஆகிறது. நிக்கா வருது வருதுன்னாங்க. ஆனா கொமராவே வெச்சிருக்காங்க. வாப்பாவுக்குப் போன மாசம் கூட ஒரு நிக்கா நடந்தது. எட்டாவது நிக்கா. சிவப்பா தமிழ் தெரியாத பதினெட்டு வயது பொண்ணான பல்கீஸ் ஜன்னத் என்கிற அந்த அரபிப் பெண்ணை உம்மா என்று அழைக்கச் சொல்லி உம்மா, நடு உம்மா எல்லாம் அவளைத் திட்டினார்கள். ஜன்னத்தை விட நூரி ஐந்து வயது மூத்தவள்.

ஏகப்பட்ட சுர்மாவை எழுதி மைலாஞ்சி பூசி அரபி ஒடம்பெத் தமிழ் ஒடம்பா மாத்தி எழுதி சித்திரமா வளத்திருந்த மைமூனா பீவிய வாப்பா அரபி மண்ல நிக்கா பண்ணிக்கிட்டு இந்தியா வந்து பத்து பசங்களப் பெத்து அப்புறமா கடைக்குட்டியா நூரியெப் பெத்தெடுத்துப் போட்டப்போ தஞ்சாவூரே முக்குல வெரல போட்டுது. அப்போ மைமூனா பீவிக்கே அறுவது வயசுன்னா வாப்பாக்கு என்ன வயது?

ஒரு கட்டத்தில் வீட்டையும் சமூகத்தையும் எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி ரவுடி ரெங்கராஜனை மணந்து கொள்கிறாள் நூரி. ரெங்கராஜனின் பெயர் முத்தலீஃபாக ஆகி விடுகிறது. ரெங்கராஜனை மடியில் போட்டுக் கொண்டு அவன் முஸ்லீமாக ஆக வேண்டிய அவசியத்தைச் சொல்கிறாள் நூரி. நபிகள் குரைஷிக் கூட்டத்திடம் பட்ட அவதிகளைக் கதைகதையாக சொல்கிறாள். இஸ்லாம் என்றால் அமைதி என்றும் சமாதானம் என்றும் கற்பிக்கிறாள். ஆனால் அவனுக்கு ரத்தம்தான் பிடித்திருந்தது. ரத்தம் தண்ணீர் மாதிரி ருசித்தது அவனுக்கு. வீட்டை விட்டு ஓடியாந்தது இதுக்குத்தானா அல்லாஹூ ரப்பே!

ராத்திரி அகால வேளையில் அக்பர் லாலா சந்து கல்லுக் கம்பத்தின் அருகில் இருட்டுக்குள் எப்போது வருவான் என்று காத்துக் காத்து பல வேளைகள். விடிந்தும் அவள் நிற்பதை தெருப் பெண்கள் கலக்கத்தோடு பார்ப்பார்கள். முத்தலீஃபு நிறையத்தான் சம்பாதித்தான். திடீரென்று பதினைந்து நாள் காணாமலே போய் விடுவான். அப்போதெல்லாம் நூரி ஒற்றை விளக்கேற்றி குர் ஆன் ஓதிக் கொண்டேயிருப்பாள். நூரிக்குக் கனவுகள் ஏதும் கிடையாது. ரெங்கராஜன் தான் கனவு!

யாரையாவது யாருக்காவது வெட்டித் தள்ளி விட்டு வந்திருப்பான். முத்தலீஃபின் உலகம் அவளுக்கு நன்றாகவே தெரியும். அங்கே எந்த தர்மத்துக்கும் ஒரே பதில். அடிக்கு அடி. கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல். உயிருக்கு உயிர். குலை நடுக்கமும் பயமும் இல்லாத நாளே கிடையாது. ஆனால் முத்தலீஃப் இரவுகளில் அரசன். ராணியிடம் வந்து விட்டால் அவன் பூந்தி நெய் லட்டுதான். அத்தனை இனிப்பு, மயக்கம், புதையல்.

இடைச்செருகலாக ஒரு விஷயம். தஞ்சாவூர் மாவட்டத்து இஸ்லாமிய வாழ்க்கை தமிழ் இலக்கியத்தில் அவ்வளவாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. உணவையும் தேகத்தையும் இசையையும் அந்த அளவுக்குக் கொண்டாடும் ஒரு இனம் இந்தியாவில் வேறேதும் இருக்க முடியும் என்று சொல்ல முடியவில்லை. பஞ்சாப், குஜராத் இரண்டையும் கூட அதற்கு அடுத்தாற்போல் தான் வைக்க முடியும். (ஆம், குஜராத்தியர்களைப் பற்றி இந்தியர்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் படிமம் தவறானது. கொண்டாட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் குஜராத்திகள்.) தஞ்சை மண்ணில் இஸ்லாமியர் மட்டுமல்லாமல் மற்ற சமூகத்திலும் 75 வயது ஆள் 16 வயது பெண்ணை மணப்பதும், 60 வயதுக்கு மேற்பட்ட பெண் கர்ப்பமடைவதும் குழந்தை பெற்றுக் கொள்வதும் அந்தக் காலத்தில் சர்வசாதாரணமாகக் காணக் கூடியதாக இருந்தது.



தஞ்சை ப்ரகாஷ் தஞ்சாவூர் மாவட்டத்தின் இஸ்லாமிய வாழ்க்கையை அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கிறார்.

மீண்டும் நாம் கதைக்குள் செல்வோம்.

ஒருநாள் இரவு மூன்று மணி. தெருச் சந்தில் முத்தலீஃபுக்காகக் காத்துக் கொண்டு நிற்கிறாள் நூரி. பத்து நாளாக ஆள் அரவமே இல்லை. வீடு பூராவும் தூசி மண்டிக் கிடக்கிறது. பெருக்கவில்லை. சமைக்கவில்லை. வாசல் தெளிக்கவில்லை. எவ எவ தாலியறுத்து எவ எவ பொழப்புல மண்ணள்ளிப் போட்டு… அல்லாஹூ! என்னா பொறவி இது!

கடைசியில் வந்து சேர்கிறான் முத்தலீஃப். வழக்கம் போல் தன் உடம்பால் அவளை வசப்படுத்துகிறான். அதில்தான் நாசமே. வந்ததும் வீழ்த்தி விடும் வசம். இன்னும் அவளை ஆழத்தில் புதைக்கும் சதி. இவனை மீற இவள் – இவளையே மீறியாக வேண்டும். பசிக்கப் பரிதவிக்க அடித்து – சாகவிருக்கும் கணத்திலேயே அமிர்தவர்ஷத்தால் மூழ்கடித்து மூச்சு விடக் கூட நேரம் தராதவன்!

அந்தத் தருணத்தில் அவளுக்குத் தோன்றுகிறது தன்னில் கரு உருவாகி விட்டதென்று. பெண்களால் அந்த சூக்ஷ்ம உணர்வைப் புரிந்து கொள்ள முடியும். ஆ, இன்னொரு ரெங்கராஜனா? சின்ன முத்தலீஃபா? யா அல்லா…! அப்பனைப் போல் தெருவில் அலையும் அடியாளாக – அதற்கும் திமிரும் ஆண்மையும் அழுத்தும் பாரமும் இனிக்கும் உடம்பும் இருக்குமா? வேண்டாம் மாமூ! நெருப்பாய் எரியிது, போதும்!

என்னடீ போதும், வா சைத்தான்…

மூச்சைப் பிடித்துக் கொண்டு உயிர்நிலையில் உதைக்கிறாள் நூரி. மீண்டும் எழுந்து அவளிடம் வரப் போகிறான் முத்தலீஃப். எழுந்திரு உம்மா எழுந்திரு… வயிற்றிலிருந்த குழந்தையின் குரல் அவளுக்குக் கேட்கிறது. எழுந்து மின்னல் போல் இருட்டில் பாய்ந்த அவள் நூரியா? அல்ல. விலங்கில் பூட்டப்பட்ட அடியுண்ட மிருகம்!

கயாமத் எனும் இறுதித் தீர்ப்பு நாள் என்ற சிறுகதையைப் படித்து முடித்தபோது நூரி முத்தலீஃபை ஏன் கொலை செய்தாள் என்பதற்கான காரணத்தை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. கர்ப்பம் கலைந்து விடும் என்பதனால் செய்தாளோ என சம்சயம். நல்ல இலக்கியப் பரிச்சயமுள்ள என் தோழி வெரோனிகாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். ‘நூரிக்கு முத்தலீஃப் மேல் அதீதமாக இருப்பது பாலியல் ரீதியான பிணைப்பு மட்டுமே. திருமணத்துக்குப் பிறகாவது அவனை நல்ல மனிதனாக மாற்ற நினைக்கிறாள். ஆனால் அவனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இப்போது கருத்தரித்த பிறகு இன்னொரு ரெங்கராஜனா என திகைக்கிறாள். தன் கணவனையாவது ரௌடியாக ஒரு பெண் ஏற்றுக் கொள்ளுவாளே தவிர தன் மகனை அப்படி ஏற்றுக் கொள்ள எந்தப் பெண்ணுக்கும் மனம் வராது. மேலும் நூரி ரெங்கராஜனின் அடிமையாகவே ஆகி விட்டாள். இப்போது அவனை அழிக்காவிட்டால் தன் மகனும் இன்னொரு ரெங்கராஜனாகத்தான் வருவான் என்று அவளுக்கு அந்தத் தருணத்தில் தெரிந்து போகிறது. ‘தன் உணர்வுகளை அடக்க முடியாமல் ஒருவனிடம் திரும்பத் திரும்ப அடிமையாகவே ஆகிறோமே; அந்தக் குறிப்பிட்ட ஒரு தருணத்தை உன்னால் அவனில்லாமல் தாண்ட முடியவில்லையா?’ என்பது ஒரு பெண்ணுக்குப் பெரும் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்தக் கூடிய விஷயம். அதனால்தான் நூரி ரெங்கராஜனை உயிர்நிலையில் தாக்கிக் கொல்லுகிறாள்’ என்றார் வெரோனிகா.

***

தஞ்சை ப்ரகாஷின் கதைகளில் பிரதானமாகக் காண்பது பெண்கள், பெண்களின் வாழ்க்கை, பெண்கள் மீதான அடக்குமுறை மற்றும் பெண்களின் அடக்கப்பட்ட காமம். காமம் கொண்டாடிய பொறா ஷோக்கு, கயாமத் போன்ற கதைகளுக்கு நேர் எதிராக ஒரு கதை ஜானுப் பாட்டி அழுது கொண்டிருக்கிறாள். காமம் அடக்கப்பட்ட பிராமணப் பெண்கள். அந்த வீட்டில் இரண்டு பெண்கள். ஒருத்தி சீதா. அவள் இப்படி அறிமுகமாகிறாள்: கண்ணாடியில் சீதா தன்னைப் பார்த்துக் கிளுகிளுத்தாள். சிவப்பு முகத்தில் அந்த சிவப்புச் சாந்து ரத்தம் துளிர்த்து விட்டது போல் அடர்ந்தது. குளித்ததால் நனைந்த ஈரம் பூரணமாகத் துடைக்காததாலேயே அந்தக் கண்ணாடியில் அவளைப் பூரணமாக்கித்தான் இருந்தது. காதுகள் பளபளத்தன. காதோரம் சுருள்கள் நனைவில் ஈரம் பூத்து சுருண்டு அடங்கியிருந்தன. கழுத்தும் ஈரத்தில் மினுங்கியது. குவடுகளில், புஜத்தின் சரிவில், நடுமுதுகுப் பாம்பு மடிப்பில் ஈரம். கண் இமைகளில் புருவங்களில் நெற்றி வளைவில்… குளித்த அவசரமா? அப்படியே பிழிந்த பாவாடையும் துண்டும் திண்ணையில் கட்டியிருந்த கொடியில் ரஸமாகக் காற்று ஊடே இழைந்து ஜன்னலருகில் கண்ணாடியில் குலவிக் கொண்டிருந்த சீதாவைப் புல்லரிக்க வைத்தது. கைகளைப் பார்த்துக் கொண்டாள். சிலிர்த்து விட்டதால் முன்மயிர் நிரம்பிய அந்தக் கைகள் முழுதும் ஒவ்வொரு மயிர்க்காலும் சிலிர்த்து எழுந்திருந்தது. கையும் காலும்! உடல் முழுதும்! என்ன கை! என்ன கால்! என்ன புஜம்! என்ன உடம்பு!

இன்னொருத்தி கண் பார்வை மங்கிய, எண்பது வயது ஜானுப் பாட்டி. பாட்டிக்கும் பேத்திக்கும் இடையே நடக்கும் மௌன யுத்தம்தான் கதை. எதைப் பற்றியது யுத்தம்? சீதாவின் உடம்பு. அதன் மீதான ஜானுப் பாட்டியின் கண்காணிப்பு. அதையும் தாண்டிய சீதாவின் தந்திரம். ‘ஸ்வாமிக்கு வெளக்கப் போட்டியோ?’ ‘ஆச்சுன்னேனே?’ ‘என்னது, வாசல் கேட்டேன்னா ஆரோ தெறக்றாப்ல இருக்கே?’ ‘யாருமில்ல பாட்டி. காத்து. அவ்வளவுதான்.’

கிணற்றோரம் நின்ற வாழைப் பட்டையில் உட்கார்ந்திருக்கும் வலியனைப் பாட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். தென்னை காற்றில் சிலுசிலுத்துச் சிரித்தது. கோவில் பிரகாரத்தைப் பார்த்தபடியே அசையாது உட்கார்ந்திருந்தாள் பாட்டி. இந்த ஆடி கடந்தால் பாட்டிக்கு எண்பது வயது. காலையில் ஜபம். நீராகாரம். மழைக் காலமானாலும் தலையைச் சிரைப்பதோ பட்டினி கிடப்பதோ அவலைப் போட்டுக் கொண்டு வேளையை ஓட்டுவதோ ஈரத்தோடே ஸ்தோத்திரத்தைச் சொல்லிக் கொண்டு செடிகளுடன் முனகுவதோ தண்ணீர் விடுவதோ எதுவுமே சிக்கலாகாது ஜானுப் பாட்டிக்கு. பிரகாரத்தில் யாரோ நடப்பது போல் தோன்றுகிறது. கண்ணைக் கசக்கியபடியே பார்க்கிறாள். பால் குடித்துக் கொண்டிருக்கும்போது தலைதூக்கிப் பார்க்கும் பூனை போல் வினோத சப்தம். கண்ணாடிப் பாத்திரம் சுவரில் உரசுவது போல வேறு ஒரு சப்த அனுபவம். என்ன இது? அமைதி. இருள். சுவர்க்கோழிகளின் இசை. பாட்டி மெதுவாக பிரகாரத்தில் நுழைந்து அகல் இருக்கும் மாடத்தில் எச்சரிக்கையோடு கை நீட்டுகிறாள். விளக்கு எரிகிறதா? வெப்பம் இல்லையே? பாட்டி அகலில் கை வைக்கிறாள். அகல் ஜில்லென்று இருக்கிறது. எப்படி இருக்கிறது? ஜில்லென்று… பாட்டி மூச்சு விடுவதை நிறுத்தி நின்று பார்க்கிறாள். மூச்சுக்கள் மோதும் ஓசை. கண்தான் குருடு. காதுமா குருடு?

இப்போது மீண்டும் வாசல் கேட்டு நாதாங்கி தைரியமாகவே ஓசையிடுகிறது. ராஜாராமன். ‘வாடா ராஜாராமா! கொஞ்ச நாழிக்கி மிந்தி இப்படித்தான் லொட்ன்னு நாதாங்கி சத்தம் கேட்டுது. நீ தானோன்னு நெனச்சிண்டேன்.’ ‘நான் இப்போதானே வர்றேன்.’ கூடத்தில் பட்டுப் பாவாடையின் சரசரப்பு கேட்கிறது. ‘ஏண்டாப்பா, ஊர்லேர்ந்து ஒம் பொண்டாட்டி இன்னம் வரல்லியே, லட்டர் கிட்டர் எழுதிப் போடப்படாதோ?’ பிறகு நேரடியாகவே தாக்குகிறாள் பாட்டி. ‘என் அவிஞ்ச கண்ணுல மண்ணெத் தூவிட்டு அவளெ இழுத்துண்டு அங்கே போயிட்டே… குட்டி கொஞ்சம் நிகுநிகுன்னு வளர ஆரமிச்சா போதும்டா ஒங்களுக்கு அன்னிலேர்ந்து… அயோக்கிய ராஸ்கல்… பதினாறு வயசாகல்லே… லோகந் தெரிஞ்சுடுத்து… தரிப்பாளோ? இனிமே இங்க வந்தே ஒம் பொண்டாட்டி கிட்ட நேராப் போய்டும் விஷயம், ஆமா?’ ராஜாராமன் அரண்டு போய் ஓடி விடுகிறான்.

பிறகு சீதாவை அழைத்து ‘கோவுல்ல மறந்துட்டு வெளக்கேத்தாமலே வந்துட்டே… இப்போவானும் எண்ணெய எடுத்துண்டு போயி குளுர எண்ணெ விட்டு திரியப் போட்டு நன்னா ஏத்தி வெச்சுப்ட்டு சாமி நல்ல புத்தியெக் குடூன்னு நன்னா வேண்டிண்டு வாடீ!’ என்கிறாள் பாட்டி.

விளக்கு ஏற்றி விட்டு வந்ததும் பாட்டி அமைதியாக சீதாவின் தலையைக் கோதுகிறாள். இருவருமாக திண்ணையில் வந்து உட்கார்ந்த பின் நீண்ட மௌனம். ஜானுப்பாட்டி அவளை அருகே இழுத்துப் போட்டுக் கொண்டாள். பாட்டியின் மடியில் தலை வைத்தபடி கிடந்தாள் சீதா. பாட்டியின் கை அவள் தலையைக் கோதியபடியே இருந்தது.

இருட்டு. சீதாவின் கழுத்தில் ஏதோ சொட்டுச் சொட்டாக சொட்டுவது போல ஒரு பிரமை. விரல்களால் தொட்டுப் பார்க்கிறாள் சீதா பயத்தோடு. ஆமாம் – ஜானுப்பாட்டி அழுது கொண்டிருக்கிறாள்.

எப்பேர்ப்பட்ட கதை! ஜானுப்பாட்டியின் கண்ணீர் பெண்களின் எத்தனை யுகயுகாந்திரமான தாபத்தையும் ஏக்கத்தையும் வேதனையையும் தனிமையையும் சொல்லுகிறது!

(தொடரும்)

தஞ்சை ப்ரகாஷ் - பகுதி 5

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/09/06/தஞ்சை-ப்ரகாஷ்---பகுதி-5/article3010509.ece




By சாரு நிவேதிதா

First Published : 06 September 2015 10:00 AM IST




இதே ஜானுப் பாட்டியின் கண்ணீரை எதிரொலிக்கும் இன்னொரு உக்கிரமான கதை ‘பற்றி எரிந்த தென்னை மரம்.’ இந்தக் கதையிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டுமெனில் மொத்த கதையையே தட்டச்சு செய்ய வேண்டும். ஆகாது. நீங்களே படித்துப் பாருங்கள். இருந்தாலும் சுருக்கமாக. லோச்சனா ஒரு மகாராணியைப் போல் வாழ்ந்தவள். அவளைப் பார்த்து பெண்கள் பெருமூச்சு விட்டார்கள். அவளுக்கே புரியாது, ஏன் இப்படி எல்லோரும் தன் காலில் விழுந்து விழாத குறையாக வணங்குகிறார்கள் என்று. வெள்ளைத் தோலும் சிவப்பு சருமமும் மஞ்சள் கூடிக் கிடந்த பால் போன்ற நிறமும், உடலின் மேடு பள்ளங்கள் துல்லியமாய்த் தெரியும் பட்டுப் புடவையின் சலசலப்பும் மெல்லிய மிருதுவான மணம் வீசும் பூக்களும், மிதமான சுடர் வீசும் வைர நகைகளும், கடல் போன்ற அவளது விழிகளும் யாரையும் அசர அடித்து விடும்.

இப்பேர்ப்பட்ட பேரழகிக்குக் குழந்தை பிறந்ததும் குஷ்டம் வந்து விடுகிறது. வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். அவளோ தன் சொந்த கிராமமான அஞ்சினிக்குப் போய் தானே தன் கையாலேயே ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு வாழ்கிறாள். மீண்டும் கூறுகிறேன். பெண்கள் அத்தனை பேரும் படிக்க வேண்டிய பிரதிகளை உருவாக்கியிருக்கிறார் ப்ரகாஷ். அவருடைய அத்தனை கதைகளும் பெண்களைப் பற்றித்தான் பேசுகின்றன. அதுவும் வெளியிலிருந்து, ஒரு ஆணின் பார்வையிலிருந்து அல்ல; ஒவ்வொரு கதையின் உள்ளேயிருந்து கேட்பதெல்லாம் பெண்ணின் குரல்கள்தாம்.

‘பால் முத்தி மாரெல்லாம் கனத்து பாலையெல்லாம் கொல்லைப் புறத்து மாட்டுக் கொட்டகையில் இடிந்த சுவர் செங்கல்லில் மாரைப் பிழிந்து விடும்போதும், மல்லிகைப் பூவை வாங்கி வைத்துக் கட்டி பாலை முறித்தபோதும் அவளுக்கு உயிரே போயிற்று.’

‘தன்னந்தனியே வினோதமான உருவத்துடன் அந்தக் கிராமத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் சுற்றிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு யாரும் வேண்டாம். அவள் ஒரு தாய் இல்லை. யாருக்கும் அவள் தமக்கை இல்லை. தங்கை இல்லை. மனைவி இல்லை. அவள் வெறும் மனுஷி. ஐந்தாறு வருடங்களாக அந்த மண்ணில் உழலும் மனிதர்களோடு அவளும் ஒருத்தி. அவளே கல் அறுத்து பெரிய பெரிய செங்கற்களாய்ச் சுட்டு அவளே வினோதமாய் கட்டிய அந்த வினோதமான வீடும் லோச்சனாவைப் போலவே…’

‘வானம் இருண்டு வந்தது. மலைமலையாக மேகங்கள் அடர்ந்து வந்தன. அவள் ராகவனிடம் போவது அவளுக்கு மறந்து வந்தது. அவன் வரும் போதெல்லாம் தொட மாட்டானா என்று மனம் தவிக்கும். எப்போதாவது ஒருமுறையாவது அவள் கைகளைப் பிடித்து வைத்து லோச்சனத்தின் சின்ன ஆனால் தடித்த உதடுகளைக் கவ்வ மாட்டானா என்று இருக்கும். ராணியா வாய் திறந்து கொடு என்று கேட்பாள்? ஆனால் ராகவன் நிச்சலனமாக கருணை வடிவாய் அவளைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான்.’

மிகவும் சர்ரியலிஸ்டிக்கான, அமானுஷ்யமான உணர்வுகளைத் தரக் கூடிய கதை ‘பற்றி எரிந்த தென்னை மரம்.’ இந்தக் கதையைப் போலவே ஒரு பெண்ணின் அடக்கப்பட்ட காம உணர்வுகளைச் சொல்லும் இன்னொரு கதை கடைசிக் கட்டி மாம்பழம். மன்னார்குடியில் மதுரம்பாள் வடிவேலு தம்பதிக்கு பத்து பெண் குழந்தைகள், ஒரு ஆண். வடிவேலு பட்டாளத்தான். பட்டாளத்திலேயே இறந்து விடுகிறான். பிரேதம் கூடக் கிடைக்கவில்லை. அந்த வீட்டுக்கு அழையா விருந்தாளியாக வரும் கலியராஜன் அந்தப் பதினோரு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கி வேலைக்கும் அனுப்பி வைக்கிறான். இருபது ஆண்டுகள். ஊரில் அந்தக் குடும்பத்தைப் பற்றி என்னென்னவோ பேசுகிறார்கள். மதுரம்பாளுக்கும் அவன் அங்கே வருவது பிடிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு அவனை விட்டால் வேறு நாதியும் இல்லை.

மதுரத்துக்கும் அவனுக்கும் 20 வயது வித்தியாசம். இருந்தாலும் ஒரு ஆணை இன்னும் திரும்பிப் பார்க்க அவளுக்கு இருந்த திமிரைப் பற்றி அவளே வருத்தப்பட்டு, எட்டு நாள் விரதம் இருந்து தண்ணீரோடு அம்பாளுக்கு வேண்டுதல் செய்து விரதத்தை முடித்திருக்கிறாள். இதற்கிடையில் மதுரத்தின் பத்து பெண்களுக்குமே கலியனைக் கட்டிக் கொள்ள விருப்பம்தான். ஆனால் அவனோ அவர்களோடு எவ்வளவுதான் பாசமாகப் பழகினாலும் திருமணம் என்ற பேச்செடுத்தால் ஒதுங்கிப் போய் விடுகிறான். அந்த இருபது ஆண்டுகளில் அவனோ மதுரமோ ஒரு வார்த்தை பேசிக் கொண்டது இல்லை. அவன் முன்னே அவள் அடுக்களைக்குள் ஒதுங்கி விடுவாள். அவளுடைய உலகமே அடுக்களைதான் என்று ஆகிப் போனது. அவளுக்கு எப்போதாவது உடம்புக்கு வந்தால் கூட ஏனென்று கேட்க மாட்டான் கலியன். அவன் வர வேண்டும் என்று அவள் நினைக்காவிட்டாலும் நெஞ்சு வலி ஏறிக் கொண்டே போகும். அவனோ எட்டிக் கூட பார்க்க மாட்டான். மதுராம்பாளுக்கு அவமானமும், கஷ்டமும், வேதனையும், வெட்கமும் நெஞ்சில் அறையும்.

பேய்த்தனமான ஆசையும், மிருகத்தனமான நேர்மையும், எந்திரம் போன்ற உழைப்பும், பத்துப் பெண்களின் தாய்மையும் ஒன்றாகச் சேர்ந்து நெஞ்சம் பாறையாய்க் கட்டிக் கொள்ளும். அன்னம் தண்ணி ஆகாரம் ஏதுமில்லாமல் கட்டிய சேலையுடன் அவள் ஏன் இருட்டில் கிடக்கிறாள் என்று பொண்டுவள் யாருக்கும் தெரியாது.

20 ஆண்டுகளில் ஆறு பெரிய பெண்களுக்கும் தன் முயற்சியிலேயே திருமணம் செய்து வைத்து விடுகிறான் கலியராஜன். ஆனால் இவ்வளவு காலமும் அவன் மணம் முடித்துக் கொள்ளவில்லை. எல்லாம் முடிந்து ஒருநாள் மது அருந்தி விட்டு மதுரத்திடம் வந்து ஆவேசமாகத் தன் துயரத்தைக் கொட்டுகிறான். ‘ஏய்… யாருகிட்டடீ கதெ வுடுறே? ஒரு வருஷமா ரெண்டு வருஷமா? இருவது வருஷ்ம்டீ இருவது வருஷம்… ஒரு நாளு நான் பாக்க நல்ல துணி கட்டியிருப்பியா? நாயே, ஒரு நாளு ஏம் மொகத்தெ நிமுந்து பாத்துருப்பியா? நான் இருந்தா முத்தத்துக்கே வர்றதில்லெ. அடேயப்பா, நளாயினி, சாவித்திரி கறுப்பு. நெஞ்சுல ஆசெயெ வச்சுக்கிட்டுத் தானடீ வூட்டுக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டிருந்தே? ராஸ்கோல்! ராஸ்கோல்! ஏய்… இனிமே நடிச்சே இதே எடத்துல கொன்னுபுடுவேன். உண்மையைச் சொல்லுடீ… என்னெ நீ மனசுக்குள்ள வச்சே ஏமாத்தலே? வேஷம் போடலே? என்னெ நினைக்கவே இல்லையா? நெஜமா சொல்லு?’

கொலைஞன் என்று ஒரு கதை. விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எத்தனையோ பேர் எழுதுகிறார்கள். ஆனால் தஞ்சை ப்ரகாஷின் அருகில் கூட அவர்களால் வர முடியாது என்று தோன்றுகிறது. பீடிக் கம்பெனியில் வேலை செய்வதாகச் சொல்லி சகுந்தலாவைத் திருமணம் செய்து கொள்கிறான் ரெங்கராஜன். அவள் பார்த்த பல சினிமாக்களில் வரும் கதாநாயகர்களை எல்லாம் பிசைந்து உருட்டியது போல் உடம்பும் அரும்பு மீசையும் கருகருவென்ற சுருண்ட முடியும் உயர்ந்த தோள்களுமாய் மயக்குகின்ற உடல்வாகு கொண்டவன். ஆனால் கல்யாணம் ஆகி வந்த ஒரு வருடத்தில் பத்து வீடு மாறி விட்டான். ஒரு வீட்டில் இரண்டு வாரம் கூடத் தங்குவதில்லை. என்ன வேலை செய்கிறாய் என்றால் சரியாக பதில் இல்லை. ‘பயமா இருக்குங்க.’ ‘என்னடி பயம்? ராத்திரி நெரங்கழிச்சி வாரேன். குடிக்கிறேன். வேற ஏதாவது கெட்டப் பழக்கம் இருக்கா?’

எனக்குப் பணம் வேண்டாம் என்கிறாள் சகுந்தலா. அவன் என்ன செய்கிறான். தெரியாது. எப்போதாவது வருகிறான். வந்தவுடனே விருந்து சினிமா நாடகம். ராத்திரி பகலாக அவள் மடியில் வாசம். மற்றபடி அவனைப் பற்றி எதுவுமே தெரியாது. ஒருநாள் அவன் சட்டையைக் கழற்றிப் போட்டபோது அதில் ரத்தக் கறை. எனக்கு நீங்கள் வேண்டும் என்கிறாள் அவள். ‘நான் தான் இருக்கேனே?’ ‘எங்க இருக்கீங்க? எனக்குத் தெரியலீங்க. நீங்க யாரு? எனக்குப் புரியலீங்க’ என்கிறாள்.

அவளுக்குப் பதினாலு வயசு இருக்கும்போது ஊரில் ஒரு டெண்ட் கொட்டகை போட்டு சர்க்கஸ் வந்தது. அதில் ஒருவன் ஐநூறு கிலோ இரும்புத் தட்டுகளை அடுக்கி இருபுறமுமாக மாட்டி குறுக்குக் கம்பியின் மூலம் பளு தூக்கினான். எல்லோரும் அவன் உடம்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். கரளை கரளையான சதை சொன்னபடி கேட்டது. பலகை பலகையாக மாரும், முதுகும் சதையாலேயே இரும்புச் சிலை போல் அமைந்திருந்தது. அந்த சர்க்கஸ்காரனைப் போல் இருந்தான் ரெங்கராஜன். அவன் சாப்பாடு என்ன தெரியுமா? எட்டு பத்து கோழி, இருபது முப்பது முட்டை, ஒரு படி பருத்திப் பால். ஆனால் அவளுக்குத் தெரிந்தது அவனுடைய உடம்பு மட்டும்தான். ரெங்கராஜன் என்றால் அந்த உடம்பு மட்டும்தானா?

இருவரும் ஒரு புதிய வீட்டுக்குப் போகிறார்கள். அன்றைய தினம் அவள் அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் விடப் போவதில்லை என்கிறாள். சொல்கிறான். அவன் ஒரு அரசியல் ரௌடி. போலீஸில் பதினேழு கொலை கேஸில் அவன் பெயர் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு பெண்ணைப் பார்க்கப் போகிறான். அவள் ஓடிப் போய் கிணற்றில் குதித்து விட்டாள். அவனா கொலை செய்கிறான்? அவனைக் கொலை செய்ய வைக்கிறார்கள். அவன் ஒரு பிணம். மரணத்தைச் சுமந்து கொண்டே நடமாடுபவன். இதெல்லாம் தப்பு என்று தெரிவதற்குள்ளேயே கொலை செய்ய ஆரம்பித்து விட்டவன். முதல் கொலை செய்தபோது அவன் வயது எட்டு. செத்தது ஒரு போலீஸ்காரன். தப்பு என்று ஒப்புக்கொண்டு நடுங்கினால் அவனால் கொலை செய்ய முடியாது. அவனைக் கொலை செய்தால்தான் அவனுக்கு இந்த ரத்த வாழ்விலிருந்து விடுதலை!

கேட்டு விட்டு சகுந்தலா அழுதாள். விடாமல் அழுது கொண்டேயிருந்தாள். அவளுக்கு அவன் ஆறுதல் சொல்ல முடியாது. தஞ்சாவூர் வரதராஜ பெருமாள் கோவில் பட்டர் ஒருவரின் பிராமண சந்தானமாக அவன் பிறந்ததை அவளுக்குச் சொல்ல முடியாது. ரெண்டு பெண்டாட்டிக்காரனான பட்டருக்கு மூன்றாவது பெண்டாட்டியாக முத்தோஜியப்பா சந்தில் குடியிருந்த மராட்டிய டான்ஸ்காரி ராணுபாய் வீட்டுக்கு ஏன் போகிறார் என்று தெரியாமல் அப்பாவின் கையை ஆத்திரத்தில் கடித்து விட்ட காரணத்துக்காக கோவில் மடப்பள்ளியில் காய்ந்து கொண்டிருந்த வடைச்சட்டி எண்ணெயில் அவன் கைகளைப் பிடித்து முக்கி விட்ட தகப்பனார் ரங்காச்சாரியின் கொலை பற்றி அவளிடம் சொல்ல முடியாது. கொட்டு கொட்டென்று கொட்டிய மழையில் அம்மா சாகக் கிடந்தபோது ரெண்டாவது பெண்டாட்டியும், மூணாவது பெண்டாட்டியும் வீட்டில் இருந்த வெண்கலப் பானையிலிருந்து பலகை வரை சட்டிப் பானை வரை மழையில் நனைந்து கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு வீட்டில் உள்ள குழந்தைகள் அலற அவரவர் கைக்குக் கிடைத்ததையெல்லாம் எடுத்துக் கொண்டு போனபோது அம்மா வாயைப் பிளந்து கொண்டு பரலோகம் போயிருந்தாள் என்பதை எல்லோருமாகச் சேர்ந்து அவனைக் கொன்ற கொலையாக சகுந்தலாவிடம் கூறிப் புரிய வைக்க முடியுமா?

ஒருநாள் பட்டினி இருநாள் பட்டினி என்றால் எல்லோருக்கும் விளங்கும். தஞ்சாவூரில் மழைக்காலம் என்றால் அந்தக் காலத்தில் இருபத்தியெட்டு நாட்கள் தொடர்ந்து அடைமழை பொழியும். ஊர் முழுவதும் வெள்ளக்காடாகும். வீட்டில் ஒரு மணி அரிசி இருக்காது. தொடர்ந்து பெய்த மழையில் ஈரம் பூத்த தரையில் வெறும் உயிரோடு குழந்தைகளை வைத்துக்கொண்டு அந்த ஐயங்கார் பெண்மணி – அதுதான் அவன் தாயார் லோகாம்பாள் – கொல்லையில் இருந்து மூங்கில் குருத்து ஒன்றை அறுத்து வேக வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுத்து தானும் தின்று வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். அம்மா கூப்பிட்டும் அவன் மூங்கில் குருத்து சாப்பிடப் போகவில்லை. சாப்பிட்டால் பசி தீயாய் வயிற்றுக்குள் கொடியோடி படரும் நெருப்பில் பொசுங்க வேண்டும். அதை விடப் பட்டினி கிடக்கலாம்.

வீடு முழுவதும் ஒழுகுகிறது. எங்கு பார்த்தாலும் ஜலம். பசி வேகம் காதைத் துளைக்கிறது. பசி வயிற்றில் எரிப்பதைத்தான் சகுந்தலா கேள்விப்பட்டிருப்பாள். பசி காதைக் குடைவது, பசி நெஞ்சில் அதிர்வது, கடைசியாக உயிரைக் குடிப்பது எதையும் சகுந்தலா கேட்டுக் கூட தெரிந்திருக்க மாட்டாள். இருபத்தி எட்டாவது நாள். மழை நிற்கவில்லை. தொண்ணூறு வயது தாத்தா திண்ணையில் மல்லாந்து விட்டார். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் குழந்தைகள் கைகால்களை அசைக்க முடியாமல் செத்துக் கிடந்தனர். அப்போதும் தரை எல்லாம் மழை ஓடிக் கிடந்தது. அம்மா லோகாம்பாள் முற்றத்தில் மழையில் விறைத்துக் கிடந்தாள். உயிர் இரவே கூட்டை விட்டுக் கடந்திருந்தது. முதலில் பசி. பின்னர் வயிற்றில் தீ. அதன் பின் காடு எரிவது போல் உடம்பின் ஒன்பது வாசல்களிலும் தீச்சரங்கள் பறக்கும். உடல் வியர்வையில் குளிக்கும். பின்னர் பசித்தீ அடங்கி விடும். காதுகள் இரையும். விம்மென்று ஓங்கார ஓலம் கேட்கும். நெஞ்சுத் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஓசைக்குள் அடங்கும்போது உடம்பின் சத்து முழுவதும் வெளியேறும். உடம்பு உயிரைப் பிரிய முடியாமல் வெட்டி வாங்கும். கொட்டும் மழையில் இந்தப் பட்டினி விடாயை அந்தக் குடும்பம் முழுவதும் இரவு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து பஞ்ச பூதங்களில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்ததை தானும் செத்துக் கொண்டே அனுபவித்த கோரத்தை எப்படி யாரிடம் சொல்ல முடியும். விளங்க வைக்க முடியும். யாரும் ஒத்துக் கொள்ள வேண்டாம். சட்டம் சொல்கிறது. கொல்லாதே. சட்டம் சொல்கிறது. திருடாதே. ஆனால் அவன் வீட்டில் நடந்த கொலைகளை சட்டம் ஏற்றுக் கொள்ளாது. வீடு முழுவதும் எட்டு ஒன்பது பிணங்கள் நாறிக் கொண்டிருக்க அங்கிருந்து ஏனென்று தெரியாமல் படி இறங்கி மழையில் கொலையிலிருந்து தப்பி ஓடினான் ரெங்கராஜன். இதெல்லாம் சகுந்தலாவுக்குப் புரியுமா?





கில்லர் ரெங்கராஜன் ஒரு மந்திரியின் அடியாள். மந்திரி ஒரு பதினாறு வயதுப் பெண்ணைக் காதலித்தார். அவள் கர்ப்பமானதும் விட்டு விட்டார். ஆனால் உயிரோடு விட்டால் அவள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை எதிர்க்கட்சிக் கொடியுடன் பிறந்து விட்டால் என்ன செய்வது என்று அவருக்குப் பயம். ஒருநாள் விடியற்காலை நான்கு மணிக்கு ஒரு நட்சத்திர ஓட்டலின் பின்சந்து சாக்கடையில் முராடிக் ஆசிட் எனும் கொடூரமான திராவக மணம் எழும்பியபோது குடித்துக் கொண்டிருந்த சாயாவை வைத்துவிட்டு ஓடிப் போய் பார்த்தபோது அந்தப் பதினாறு வயது உடல் அந்த அடர் ஹைட்ரோக்ளோரிக் அமிலத்தில் சதை சதையாகக் கரைந்து எலும்புகள் உருகி நீராகி சதையும் நிணமும் கொழுப்பும் அமிலத்தில் உள் ஆழ்ந்து போய் அவளது நீண்ட வார் கூந்தல் கூட இனம் காண முடியாமல் அமிலத்தால் தீயுண்டு அவள் வயிற்று சிசுவும் கரைந்து உருத் தெரியாமல் சாக்கடையின் பாசி பிடித்த சுவர்களும் பொசுங்கிப் புகைய ஆவி குமிழியிட்டு ஓடிய பயங்கரம் கில்லர் ரெங்கராஜனைத் திகில் கொள்ள வைத்தது.

இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களே வாசித்துப் பாருங்கள். உலகின் மிகச் சிறந்த சிறுகதைகளை இப்படி அனாயாசமாக எழுதித் தள்ளியிருக்கிறார் தஞ்சை ப்ரகாஷ்.

ப்ரகாஷ் பற்றி எழுதி மாளாது போல் தோன்றுகிறது. அவருடைய பேய்க் கவிதை என்ற சிறுகதை புண்டரீகன், பெருந்திரு என்ற சகோதர சகோதரிக்கு இடையேயான பாலியல் உறவை ஒரு தொன்மக் கதையைப் போல் சொல்லும் ட்ரான்ஸ்கிரெஸிவ் சிறுகதை. அதேபோல் மேபல். 25 பக்கங்களில் எழுதப்பட்ட ஒரு காவியம். ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவைச் சொல்கிறது. திரும்பவும் சமூக ஒழுங்கை மீறும் கதை. பேய்க் கவிதை போல் வெளிப்படையாக அல்லாமல் மிகவும் சூட்சுமமாக, கானல் நீர்த் தோற்றமாக அந்த உறவு எழுதப்பட்டிருக்கிறது.

பொதுவாக தமிழில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை எழுதும் படைப்பாளிகளிடம் ப்ரகாஷின் எழுத்தில் இருக்கும் தீவிரமும் வெறியும் உன்மத்தமும் இருப்பதில்லை. இதைத்தான் ரொலான் பார்த் (Roland Barthes) வாசிப்பு இன்பம் (Pleasure of the Text) என்று சொல்கிறார். ப்ரகாஷின் சிறுகதைகளைப் படிக்கும்போது எனக்கு அந்தோனின் ஆர்த்தோவின் (Antonin Artaud) Theatre of Cruelty என்ற கருத்தாக்கம் ஞாபகத்தில் வந்தது. ப்ரகாஷின் சிறுகதைகளோடு நாம் ஸோஃபாக்ளிஸ், யூரிப்பிடஸ் போன்ற கிரேக்க நாடகாசிரியர்களையும், கார்ஸியா லோர்க்காவின் The House of Barnarda Alba, ஜான் ஜெனேவின் Deathwatch, Maids ஆகிய நாடகங்களையும் இணைத்துப் படிக்கலாம். அத்தகைய வாசிப்பு எப்பேர்ப்பட்ட ஒரு மேதை நம்மோடு வாழ்ந்து நம் மொழியோடு உறவாடியிருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள உதவும். ப்ரகாஷின் புனைவுலகில் பயணிக்கும்போது நான் அடைந்த பெரிய ஆச்சரியம் என்னவென்றால், ஒரு பேட்ஸ்மன் எப்படி மட்டையைப் பிடிக்கும் போதெல்லாம் இரட்டைச் சதம் அடிக்க முடியும் என்பது போன்றதே. ப்ரகாஷ் தான் எழுதிய எல்லாக் கதைகளிலும் இரட்டைச் சதம் அடித்திருக்கிறார். ஒரு படைப்பாளி தன்னுடைய அத்தனை கதைகளையும் சிருஷ்டிகரத்தின் உச்சபட்சமாகப் படைக்க முடியும் என்பது மிக அபூர்வமாக நேரும் அதிசயம். ப்ரகாஷ் அப்படிப்பட்டதோர் அதிசயம்.

கட்டுரை மிகவும் நீண்டு போய் விட்டதால் ப்ரகாஷின் மீனின் சிறகுகள், கள்ளம் ஆகிய நாவல்கள் பற்றி எழுதவில்லை. இப்போது நாம் செய்ய வேண்டிய அவசரமான பணி என்னவென்றால், ப்ரகாஷின் நூல்களைத் தொகுத்து செம்பதிப்பாக வெளியிடுவதுதான். அதோடு அவரை வாசித்து விவாதிக்கவும் வேண்டும்.

நன்றி: ப்ரகாஷின் நூல்களைக் கொடுத்து உதவிய நண்பர்கள் டாக்டர் ஸ்ரீராம், கவிஞர் ஆரா, செல்வகுமார், கீரனூர் ஜாகிர்ராஜா. கயாமத் கதை பற்றி விளக்கம் அளித்த வெரோனிகா.