Saturday, 29 August 2015

-Jewel Kilcher - (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்), -Florbela Espanca- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



சூரியன் தாழும் போது , தனது குருதியினால்
ஒரு இரகசிய நாமத்தை ஞாபகத்திற்காக எழுதுகிறது.
ஒளியின் அதீதம்
ஒரு பேரார்வம் மந்தமாக சாந்தமடைகிறது:
வசிப்பிடம் தேட மானுடனுக்கு போதுமான காலமிருக்கிறது.


ஆயினும் நிலா தொடுவானை அடையும் போது,
கணமொன்றைச் சுணங்கச் செய்விக்கிறது,
வெள்ளியின் தடயமின்றிக் கரைந்து அழிகிறது.

அவன் தாரகைகளுடன் மட்டுமே விடப்பட்டுள்ளான்,
மூர்க்க வெறியுற்று நெடிதாய் தொலைவுற,
இருளடைந்த சாலையின் கற்களை
வெளிப்படுத்தாமல் இரகசியம் காக்கிறது

அவ்விதம் அது கடவுளர்களுடனும்
மற்றும் அரைக்-கடவுளர்களுடனும்
மற்றும் நாயகர்களுடனும்.

-Denise Levertov-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






வாரங்களாக நினது யாக்கையின் கவிதை ,
எனது கரங்கள் நினது யாக்கையின் மீதிருந்து
அறைந்தும் , கடுமையடைந்தும், வழிபாட்டின்
சடங்கில் , தனது போக்கில்
கீழறங்கும் வியத்தலில் கழுத்துத் துடிப்பிலிருந்து
மார்பின்- ரோம மட்டத்தில்
வயிற்றிலிருந்து குறிவரை -
வாரங்களாக அந்தக் கவிதை, அந்தப் பிராத்தனை
எழுதப்படாதிருக்க .
எழுதப்படாதக் கவிதை, நெஞ்சில் விடப்பட்ட வினை, அற்றிருக்க. வருடங்கள் ராட்சதக் கற்களின் வனங்களாக; புதைப்படிவ அடிமரங்கள்
பலிபீடத்தைத் தடுத்து நிற்கிறது.


-Denise Levertov-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






ஒருநாள் பெயர்ச்சொற்கள் சாலையில் கூட்டமாய் திரண்டன,
ஒரு உரிச்சொல்
அவளது இருண்மை வனப்பின் வசீகரத்துடன் பக்கவாட்டில் நடையிட்டாள்.
பெயர்ச்சொற்கள் அனைவரும் ஸ்தம்பித்து போயினர்,
நெகிழ்ந்தனர், மாற்றமுற்றனர்.
அடுத்தநாள் ஒரு வினைச்சொல் வாகனத்தில் வந்து
ஒரு வாக்கியத்தைப் படைத்தது.


ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பொருண்மையை நவில்கிறது - உதாரணத்திற்கு ,
அதுவொரு இருளுற்ற மழைநாள், "ஆயினும் உரிச்சொல் நடையிட்டது,
தூய -இனிமை கனிந்த வெளிப்பாட்டை
அவளது முகத்தில் நினைவூட்டிக் கொள்வேன்
பச்சைய- ஆற்றல் செறிந்த பூமியிலிருந்து
நான் மாய்ந்தழியும் நாள்வரை,”

அன்றி “ சாளரத்தைச் சற்றே அடைத்துவிடேன் ஆண்ட்ரு?”
அன்றி “உதாரணத்திற்கு, மிக்க நன்றி,
சாளரச் சட்டகத்தின் மீதிருந்த
பூக்கள் பெருத்த பிங்க் வண்ணப் பூந்தொட்டி
அன்மையில் தன் வண்ணத்தை இளமஞ்சலாக மாற்றியது,
அண்டையிலுள்ள பாய்லர் தொழிற்சாலையின் அனல் வெப்பத்தினால்.”

இந்த இளவேனில் பொழுதுகளில் வாக்கியங்களும் மற்றும்
பெயர்ச்சொற்களும் நாணல்மீது மொழியற்று தன்னைக் கிடத்துகின்றன.
தனிமையடைந்த ஒற்றை இணைவுப்- பதமோ அங்குமிங்குமாக அழைக்கும் ,
மற்றும் ! ஆயினும் “
ஆயினும் உரிச்சொல் ஏனோ வெளிப்பட்டு எழவில்லை.

-Kenneth Koch-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







பெருநகர் மீது நான் பறப்பதாய் கனவுறுகிறேன்,
புறத்தே தூரமாய் விரித்த கரங்களின் வலிமையுடன்
விழியைக் கீழ் சாய்த்து சாலைகளை நோக்குகிறேன்
அங்கு மக்கள்
துண்டு கண்ணாடியின் மேனியில் சறுக்கி நெளியும்
எண்ணிலடங்காத பாக்டீரியாக்களாக தெரிகின்றனர்.
இங்கு நான் தனியனாயிருக்கிறேன்,
என்னுடன் முரண்படவும் யாருமற்றிருக்கிறேன்,
சப்தங்களற்ற சுதந்திரத்தில்,
வாழ்வின் வன்முறையும் கொந்தளிப்பும் அற்ற
இவ்விடமே எனது நிஜ-வசிப்பிடம்.
மக்களை நான் பாக்டீரியா என விளித்தால்
யாரதை மறுக்க இயலும்?
எனது வாழ்வின் சந்தர்ப்பங்களிலிருந்து
நான் அறிவிக்கிறேன்
மக்கள் என்னவாக இருகிறார்கள் என்றேனோ
அதுவாகவே உள்ளனர்.
நிகழ் கணத்தின் - ஐயம் ஒன்றே;
பறத்தலில் நான் நிலைத்திருக்க வாய்க்குமா.


-David Ignatov-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)














இளவேனில் அணுகி நிகழ்ந்துவிட்டது , ஆனால் தூய்மையோ உடனிகழவில்லை;
மூலைகளில் சேகரமான புழுதியை மனம் துடைத்தெறிகிறது,
நுண்ணிய கறுத்த விதைப் பைகள்
சிலந்தி வலைத் திரையால் போர்த்தப்படிருக்கிறது,
இலையிழைக் கொடிகள், மற்றும் காய்ந்தவைகள்,
தழைக்கும் யாவுமே ஒரினமாய் கூடி நகர்பவைகள் ,
பிரவேசிக்க தகுந்த தருணம், போத்திசெலியின் நங்கையே,
உனது தோளில் ஏந்திய ஒளியுடன்
திடமான காலினை முன்னோக்கிச் செலுத்தி
இப்புனித இடத்தை காத்தருள்கிறாய்.


-Vincent Buckley-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

நான் ஞாபகமடைகிறேன்
ஞாபகம் அடைய அபரிமிதமாய் எவ்வளவு உள்ளன,
எனது நீல கையுறையின் மீது
படர்ந்திருந்த வகைமைக் கோலங்கள்
நாம் பனி-யுவதியை நிர்மானித்த தருணம் .
பனியைப் புசித்ததை நான் ஞாபகமடைகிறேன்.
கறுப்பு வரிகளை அணிந்திருந்த நரி
பாதையின் குறிப்பிட்ட புள்ளியில் கடந்தது .
ஆந்தை
யுவதியின் -வடிவில் செதுக்கப்பட்டுள்ள
வழுவழுத்த கல்மீது சரிந்திறங்கியது.
அந்த முடிவில்லா வரிசையுற்ற -வான் -பருவங்களில்
ஞாபகமடைய வேறு ஏதேனும் உள்ளதா,
நிலங்களைப் பின்னிழுத்துச் செல்லும் இரயில் வண்டியாக?
பிரிந்து போதலையும் மற்றும் வந்தடைதலையும்
நான் ஞாபகமடைகிறேன்:
தகர பெட்டியாக கார் கட்டப்பட்டுள்ளது,
யாவுமே கனிவாக அலறித் தீர்க்கின்றன,
வீடு வந்தடைவதே இல்லை
ஏனெனில்
நாம் ஏறத்தாழ எப்போதும் ஏறத்தாழ அங்கிருந்தோம்.
-Vincent Buckley-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Is it undead people, or undead memories?
For Aren't memories the true ghosts of our lives?
Do they not drive all of us to words and acts
we regret from time to time?
-Stephen King -
Love !
You only existed in my inflamed brain,
Enough !
Stop this foolish comedy
and take notice:
I'm ripping off
my toy armour,
I,
the greatest of all Don Quixotes.


-Vladimir Mayakovsky-







விட்டிற்பூச்சிகள்
ஏதோவொரு மதியத்தின் திரைக்கதவில்
அவைகளாகவே மோதிக் கொள்கின்றன.

ஒரு செந்நிற ஆடை
எனது மனதில் தழலாய் எரிகிறது.


வெளிப்புறம்
மழையில் விடுபட்ட விளக்குக் கூண்டை
ஒரு வேட்டைநாய் கவிழ்க்கிறது.

நான் வெதுவெதுப்பான நாளுக்காக ஏங்குகிறேன்
ஓதமுற்ற உள்ளங்கை
எனது கதகதப்பை அடைய எத்தனிக்கும் போது
ஏதோவொரு ஈரப்பதம் ; என்னை
அஜாக்கிரதையான ஆழத்திற்கு இழுக்கிறது.

இரவு தன் வெல்வெட்டின் மென் - கரையை
என்மீது சிந்துகிறது.

-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







எனது வயிற்றில் ஒரு தங்கமீன் உள்ளது.
அதை அங்கிருக்கும்படி விழுங்கி வைத்தேன்.
அதனிடம் பாடுகிறேன் ,
அது நிலையின்றி சுழல்வதை உணர்கிறேன்
பிரத்யேகமாக அது ;
எனது இசையை உவக்கும் தருணம்-
ஆனந்தக் களிப்பில் பின்பக்கமாக குட்டிக்கரணம்
அடிக்கச் செய்கிறார் பிராம்ஸ்...


-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



நான் இவ்விடத்தவள் அல்ல
காற்றின் வாசனையாய்
எனது கேசம் மணக்கிறது
அதில் நட்சத்திர கூட்டங்கள் நிறைந்துள்ளன
இந்த பூமியெங்கும்
ஆரோக்கியமான அவநம்பிக்கையுடன் நகர்கிறேன்,
எனது நாட்களையும் வினைகளையும்
தூலமற்ற எதிர்-விளைவுடன் அணுகுகிறேன்
ஆனால்
ஒளிகசிந்து மின்னும் ஒரு தீண்டல்
கல்லை மீற இயலும் .


-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





நேற்றிரவு தாரகைகளின் கீழ்
நாம் காதல் செய்தோம்.
நிலாவின் ஒற்றைவிழிப் பார்வை இமையாது
கீழ்நோக்கி நம்மை உற்றுப் பார்க்கிறது.
நமது உடல்களை இருளடர்விலிருந்து திறக்கிறது
ஆடையற்ற வேர்களாய்
நாம் பிணைந்து கூடினோம் .
தொடைகளும் மற்றும் முழங்கைகளும்
கணத்த கனிகளாக
பனிக்கால செஸ்ட்நட்டாய் தகதக்கிறது.
நான் நேசிப்போனது உடல் -
கடியுண்ட வாய் ,
டாங்கரின் அதரங்கள்,
உனது பொன்னிற பள்ளத்தாக்குகளின்
வெளியில் சுதந்திரமாய் அலைவுறக் கூடும்
ஒவ்வொரு நாளும் ஸ்தம்பிக்காமல்
உவந்து மேலெழும் புதிய புலர்வை
உனது புதிர்மை இருத்தலின்
ஆழங்களிலிருந்து கண்டுணர்கிறேன்.


-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



ஆதாமின் சதையற்ற விலாவிலிருந்து
எனது சுய வேட்கையின் நிமித்தம்
கனி வேண்டி விடைபெற்றேன்.

அதன் மணம்- இன்னும்
என் தசைமீது கணத்துக் கமழ்கிறது
எனது இன்மை
அவனது பக்கம் முள்ளாய் உறுத்துகிறது.


ஆனால் இப்போது எனது வயிறு
புனிதமுற்று வலியுணர்கிறது
ஏங்கும் விதைகள்
ஏங்கும் முத்தங்கள்
ஆனால் புறமிருக்கும் சாலையோ சீறுகிறது.

நான் எனது சிறு -பெண்மையினை
ஒரு பழைய தோல் பையில் கட்டி
அடைக்கிறேன்

நேசம் கதவிலிருந்து
சற்றே விலகி அடிபெயர்கிறது

-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






ஒரு குழவியாய் சப்தமிடும் விரல்களுடன்
நான் நடையிட்டேன்,
எண்ணிறந்த பசும்புல்வெளிகளது
ஆடையின் கீழ்- விளிம்பின் நெடுகிலுமாய்
வீடுற்றேன்.


பச்சையத் துணியோ
விரித்து வீசப்பட்டிருக்கிறது
நாணும் பூமி
வானின் திடுக்கிடல்.

குருவிகளின் சடங்குகளைச் செவியுறும்
சமயப் பீடமாய்
மரப்பாளங்களின் மீது அமர்ந்திருக்கிறேன்,
அங்குள்ள டான்டேலியன் பூச்செடி மற்றும் முட்களின் மத்தியிலும்,
சூழும் எளிமையினூடேயும் இறையைக் கண்டறிகிறேன்.

-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




இரவு வீழ்கிறது
இடைவிடாது வீழ்ந்தபடியே தொடர்கிறது
இளவேனில் இலைகள்
வானை சிராய்ப்புறக் காயப்படுத்துகிறது
ஒரு மஞ்சள் நடுக்கம்
படபடத்த முதுகெலும்புடன்
இழையும் பொழுதை நேர்த்தியுறச் செய்விக்கிறது
திறந்த நெஞ்சுடைய நேசத்தவர்கள்
புலர்தல் சம்பவிக்காது தடுத்திட போராடுகின்றனர்
இனித்திருக்கும் கனிகளான
கடைசி நிமிட-முத்தங்களில் இயைந்து லயிக்கின்றனர்
தேனில் தங்களையே தொலைப்பதற்காய் ஆர்வப்படுகின்றனர் -
நேசத்தின் அடர்ந்த ஈர்ப்பில் மிகப்புதிதாய்
கதவுகளின் அப்பாலுற்றிருக்கும் தருணம்
தான் நன்கறிந்த ஒற்றை-அங்கத்திலிருந்து
இலைகள் தம்மையே கிழித்துக் கொள்கிறது
திண்ணமற்ற காற்றின் ஏக-சுதந்திரத்தை உய்த்துணர.


-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





உனது தீண்டலற்றிருக்கிறேன்
மொழியின்மையில்
மெல்ல இடம்பெயரும் பறவைகளைப் போல்
கணப்பொழுதே எனது மார்பின்மீது அகமுறும்
பின்னர் பறந்தெழும்
வெள்ளியாய் மற்றும் துரிதமாய் -
தன் இன்மையுடன்
நிலப்பரப்பை வஞ்சிக்கும்


அதன் பாடலின்றி
அமைதியுறும் எனது சருமம்;
தாகமுற்ற குளமாக பொறுத்திருக்கும் தசை.


-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



Garp drank the beer
and wondered
if everything was an anticlimax..

-John Irving-
(The World According to Garp)





எனது தசை
உனது நாவினில் உருகுகிறது.

எனது மார்பு
உனது மாளா வேட்கையின் கீழ் கரைகிறது.


எனது செவி காற்றாகிறது.

வேர்கள் எனது நாளங்களை மீள் -கோருகிறது.

எனது வயிறு அதன்
சந்திர -இரட்டையில் மறைகிறது


நான் ஒரு மங்கிய ஒளிர்வாய் சுருங்கும்வரை
நீர் எனது விருப்பை எடுத்துக் கொள்கிறது
சிறிதாய் மின்னும் பொறியாகக் குறுக்கப்படுகிறேன்
ஒரு சிறு-கல்லாகச் சலிக்கப்படுகிறேன்.
உனது உள்ளங்கையில் அகமுற்ற
அதற்கோ எண்ணிறந்த சிறகுகள் உள்ளன.

-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





ஆர்ப்பரிக்கும் உயர் ஆழி, ,வென்றெழும் அலைகள்.
குசுகுசுத்த ஏக்கப் பெருமூச்சு உடைகிறது.
தூய்மையின் பூரணமாய் கடல் பறவைகளின் பாரமற்ற பறத்தல்
மலைமுடியில் தோற்றம் காட்டும் பனி.


சூரியன்! வீழும் ஒரு பறவை,
சுவாசிக்க திணறும் கணத்திலும் அதன்
காயமுற்ற சிறகுகள் இன்னும் படபடக்கிறது.
இனிதே வதைக்கப்படட அஸ்தமனம் -
உள்ளுற்ற பிராத்தனையில் உனக்கெனவே
நான் எனது கரங்களை அழுதபடியே உயர்த்துகிறேன்.

ஓ எனது வசிகர நற்கவிதையே,
இன்னும் புலரொளி படரவில்லை,
ஏற்கனவே நீயோ நிலவொளியாய் சுடர்கிறாய்
மலர்கள் உதிர நிற்கும்
நீயொரு வெண் லில்லாக் செடி.

நேசமே! உனது இதயத்தை
எனது மார்பினில் சுமந்திருக்கிறேன், -அது
இந்த ஆழியென என்னுள் கணத்து மோதுகிறது
இடைவிடாது நீளும் ,
என்றென்றைக்குமான உதிரா முத்தமாய்.

-Florbela Espanca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)