Sunday, 9 August 2015

சர்மாவின் உயில்- க.நா.சுவின் காணிநிலம்

சர்மாவின் உயில்- க.நா.சுவின் காணிநிலம்




http://www.jeyamohan.in/34971#.Vcdn4XGqqko

FULCRUM: an annual of poetry and aesthetics


"The Sketchers," by John Singer Sargent (American). 1913. Oil on canvas. At the Museum of Fine Arts, Richmond. Only at FULCRUM: an annual of poetry and aesthetics.



பாதிக்கிணறுதாண்டியவன் மிச்சக்கிணறைக் கற்பனையால் தாண்டுவதுதான் இலக்கியம். ஆழத்தில் விழும்போது அது நிகழ்கிறது. பாரதியின் காணிநிலம் வேண்டும் கவிதையை அந்தக் கற்பனைக்கான மிகச்சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். கற்பனாவாத யுகத்தைச்சேர்ந்த எல்லா கவிஞர்களும் அவ்வகையில் தங்கள் ஆசைகளை எழுதியிருக்கிறார்கள். பாரதிக்கு மண்,பெண்,பண் மூன்றுமே தேவைப்படுகிறது.

இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் க.நா.சுவின் ‘சர்மாவின் உயில்’ என்ற நாவலை வாசித்தேன். அன்று நானறியாத சென்ற நூற்றாண்டுப் பிராமண வாழ்க்கையைச் சொல்லும் ஒரு நாவல் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. சமீபத்தில் நற்றிணைப்பதிப்பக வெளியீடாக வந்த அந்நாவலை மீண்டும் வாசித்தபோது ’ஆகா. க.நா.சுவும் காணிநிலத்துக்கு ஆசைப்பட்டிருக்கிறாரே’ என நினைத்துக்கொண்டேன்

1938 ல் சேலத்தில் ஒரு விடுதியில் தங்கி 15 நாளில் முதல்வடிவை எழுதிமுடித்த தன் முதல் நாவல் அது என்கிறார் க.நா.சு, முப்பது வருடம் கழித்து. அப்போது அவருக்கு 26 வயது வயது. நல்ல இளமை. அப்போதுதான் திருமணமாகியிருக்கும். குழந்தை பிறந்திருக்கவில்லை. தனக்கு மிகவும் பிடித்தநாவல் அது என்பது க.நா.சுவின் கருத்து.

கிட்டத்தட்ட சுயசரிதை. சிவராமன் என்ற இலக்கிய ஆசிரியனின் கதை இது. அவன் தந்தை பட்டாபிராமய்யர் சுவாமிமலையில் ஒரு தபால் அதிகாரி. கொஞ்சம் பணமும் வீடும் நிலபுலன்களும் வைத்திருக்கிறார். மகனை பிஏ வரை படிக்கவைத்திருக்கிறார். பையன் இலக்கிய ஆசிரியனாக ஆகவேண்டுமென்ற ஆசை இருந்திருக்கிறது. அவனும் அதேபோல எழுத ஆரம்பித்திருக்கிறான். அவன் அரசாங்கவேலையில் சேர்ந்து மாதம் நூறு ரூபாய் சம்பாதிக்கிறான்.

பி.ஏக்காரன் என்பதனால் சிவராமனுக்கு திருச்சி வக்கீல் ஒருவர் தன் மகள் ராஜத்தைக் கட்டிக்கொடுக்கிறார். ராஜம் வசதியான குடும்பத்தில் செலவுசெய்து வாழ்ந்து பழகியவள். இந்நிலையில் இலக்கிய இலட்சியவாதம் மேலோங்கிய சிவராமன் வேலையை விட்டுவிடுகிறான். மேல்நாட்டு எழுத்தாளர்களைப்போல இலக்கியத்துக்காகவே வாழவேண்டும் என்ற கனவுடன் இருக்கிறான். தந்தை சொல்லை மீறி வேலையை உதறிவிடுகிறான். அவர் ‘நான் இருப்பது வரை என் செலவில் இருப்பாய். பிறகு என்ன செய்வாய்?’ என்று கேட்கிறார். அதனால் ரோஷப்பட்டுக்கொண்டு அப்பாவிடம் பணமே வாங்கக்கூடாது என்று சூளுரைத்து மனைவியுடன் சென்னையில் குடித்தனம் வைக்கிறான்.

ஆனால் அப்போது தமிழில் இலக்கியமோ வாசிப்போ உருவாகவே இல்லை. எனவே அவனுக்குப் பணமும் வரவில்லை, புகழும் வரவில்லை. அன்றைய வாசகர்கள் தேடும் அக்கப்போர்களையும் சில்லறை எழுத்துக்களையும் எழுதாமல் சிவராமன் தரமான இலக்கியத்தை உருவாக்க விழைகிறான். ஆகவே அவனுடைய எழுத்துக்கள் பெரும்பாலும் திரும்பிவிடுகின்றன. அவ்வப்போது சில பிரசுரமானாலும் மாதம் ஐம்பது ரூபாய்கூட தேறுவது கடினமாக இருக்கிறது. ராஜம் தாராளமாகவே செலவுசெய்கிறாள். பலவருடம் வேலைசெய்து சேர்த்துவைத்த ஆயிரம் ரூபாய் ஆறே மாதத்தில் காலியாகிவிடுகிறது.

ராஜம் அழகி. இலக்கிய வாசனை கிடையாது. எழுதப்படிக்கத்தெரியும் அவ்வளவுதான்.சிவராமன் எழுதுவதை அவள் வாசித்துப்பார்க்கிறாள், ஒன்றும்புரியவில்லை. அவளுக்குப் பிடித்த கதைகளை சிவராமன் சிரித்து நிராகரிக்கிறான். எதற்காக இந்த எழுத்து, வெட்டிவேலை, பேசாமல் ஏதாவது வேலைசெய்து நாலுபேரைப்போல கௌரவமாக வாழலாமே என்பது ராஜத்தின் எண்ணம். அந்த எண்ணம் அவள் அப்பாவாலும் அம்மாவாலும் அவளுக்குள் தொடர்ந்து ஊட்டப்படுகிறது.

ஆகவே சிவராமனுக்கும் ராஜத்துக்கும் தினம் சண்டைதான். அவர்களுக்குக் குழந்தைவேறு இல்லை. எனவே சண்டையின் உக்கிரம் கூடுகிறது. அதேசமயம் சிவராமனுக்கு ராஜம் மீது அபாரமான பிரேமையும் இருக்கிறது. அவளுக்கும் சிவராமன் மீது பிரியம் உண்டு. அவர்களின் சண்டையே ஒரு காதல் லீலைபோலத்தான்.

க.நாசுவின் வாழ்க்கையைத் தெரிந்தவர்கள் இவ்வளவும் அவரது வாழ்க்கையேதான் என்பதை அறியலாம். அவரது மனைவியின் பெயர்கூட ராஜிதான். நாவலிலும் ராஜி என்றே அழைக்கிறார். சுவாமிமலை அக்ரஹாரமும் அதேதான். இந்த யதார்த்தம் மீது ஒரு காணிநிலக்கற்பனையை விரித்திருக்கிறார் க.நா.சு.
சிவராமனின் சித்தப்பா கிருஷ்ணசாமி சர்மா சிறுவயதிலேயே ஊரைவிட்டு ஓடிப்போய்ப் பலவகையான தொழில்கள் செய்து பல ஊர்கள் கண்டு கடைசியில் கல்கத்தாவில் நிலைக்கிறார். நிறையச் சொத்து இருக்கிறது. சோதிடத்தில் ஈடுபாடு ஏற்பட்டு மிக விரிவாக அதில் ஆராய்ச்சி செய்கிறார். தன்னுடைய மரணநேரத்தைக் கணிக்கிறார். தன் குடும்பத்தின் பிரச்சினைகளையும் கணித்து ஒரு நீண்ட உயிலை எழுதுகிறார். உயில் என்பதைவிட அது ஒரு கடிதம். அதை அவர் அவரது அக்காள் மகளான பவானிக்கு அனுப்புகிறார். அவள் ஒருவருடம் கழித்து அதைத் திறந்து வாசிக்கவேண்டும், அதுவரை எவரிடமும் சொல்லக்கூடாது என்று கூடவே அனுப்பிய கடிதத்தில் கட்டளைபோடுகிறார்.

பவானி ஓர் இளம் விதவை. கிருஷ்ணசாமி சர்மா அவளை சென்னைக்கு அனுப்பி பி.ஏ படிக்கவைக்கிறார். பவானி அழகி. அத்துடன் தீவிரமான இலக்கியவாசகி. கதைகளும் எழுத ஆரம்பிக்கிறாள். அவள்தான் சென்னையில் சிவராமனுக்கு இலக்கியத்துணைவி. அவள் ராஜம் மீது மிகுந்த அன்புடன் இருக்கிறாள். ராஜத்துக்கும் சிவராமனுக்குமான சண்டைகளில் சமரசம் செய்கிறாள். ராஜத்துக்கும் பவானியை மிகவும் பிடிக்கிறது. அதேசமயம் பவானிமீது தன் கணவனுக்கு இருக்கும் மதிப்பைக் கண்டு பொறாமையும் இருக்கிறது.

கிருஷ்ணசாமி சர்மா உயிர்துறக்கிறார். அவர் ஓர் உயில் எழுதியது எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. சிவராமனின் மாமனார் உயிலுக்காக ஆலாய்ப்பறக்கிறார். அது கிடைக்காததனால் சொத்துப் பிரிவினை நிகழாமல் போகிறது. இதன்நடுவே சிவராமனின் அப்பாவின் அம்மா சானுப்பாட்டி என்கிற ஜானகி மரணப்படுக்கையில் கிடக்கிறாள். மகன் இறந்த விஷயம் அவளுக்குத்தெரியாமலேயே நினைவிழந்து கிடக்கிறாள். அவளைப்பார்க்க சென்னையில் இருந்து வருகிறான் சிவராமன். சானுப்பாட்டி இறக்கிறாள்.
சானுப்பாட்டி பழங்காலத்தின் மிகச்சிறந்த ஒரு அம்சத்தின் பிரதிநிதி என்பது சிவராமனுக்குத் தெரிகிறது. குடும்பம் என்ற அமைப்பையே வாழ்க்கையின் இலட்சியமாகக்கொண்டு வாழ்ந்தவள் அவள்.ஒரு பேரன்னை. அவளைச்சூழ்ந்து அந்தக்குடும்பம் மட்டுமல்ல அந்த கிராமமே ஒரு பெரும் குடும்பமாக வாழ்வதை சிவராமன் உணர்கிறான். சுவாமிமலையிலேயே தங்கி இலக்கியப்பணி ஆற்ற முடிவெடுக்கிறான். தன்னுடைய தரிசனத்தை ஒரேகுடும்பம் என்ற நாவலாக எழுதுகிறான்.

இந்நிலையில் சர்மாவின் உயில் திறக்கப்படுகிறது. அதில் கிருஷ்ணசாமி சர்மா சோதிடத்தில் தனக்கு ஆர்வம் வந்ததைப்பற்றிச் சொல்கிறார். பணம் என்பது முக்கியமே அல்ல என்பதை ஏராளமாக பணம்சேர்த்துக் கற்றுக்கொண்டதைப்பற்றிச் சொல்கிறார். சிவராமன் இலக்கிய ஆசிரியனாகப் புகழ்பெறுவான் என்கிறார். கடைசியாக ராஜத்துக்குப் பதினாறுவருடம் கழித்தே குழந்தை பிறக்கும் என்றும் சிவராமன் பவானியை இரண்டாம்தாரமாகத் திருமணம்செய்துகொள்ளவேண்டும் என்றும் சொல்கிறார்.

அனைவரும் ஏற்றுக்கொள்ள சிவராமனுக்கு சித்தப்பாவின் சொத்தும் இலக்கிய ஆர்வம் கொண்ட அழகிய மனைவியும் கிடைக்கிறார்கள். அவனுடைய நாவல் ஒரேகுடும்பம் பெரிய வெற்றி அடைந்து புகழ் தேடிவருகிறது. அவன் சுவாமிமலை அக்ரஹாரத்திலேயே தங்கி விடுகிறான்
என்ன ஒரு பகற்கனவு! நாவலை வாசித்து முடிக்கையில் ஒரு புன்னகைதான் வந்தது. பாவம் க.நா.சு. இந்த போகட்டும், கடைசிவரை பையில் கைச்செலவுக்குக்கூடக் காசு தங்கவில்லை அவருக்கு. ஒரே ஊரில் நிம்மதியாகத் தங்குவதுகூடக் கைகூடவில்லை. வாழ்நாள் முழுக்க தட்டச்சுப்பொறியுடன் ஊரூராக அலைந்து திரிந்து எங்கோ டெல்லியில் காலமானார்.

இன்று வாசிக்கையில் சர்மாவின் உயில் பல காரணங்களுக்காக முக்கியமான படைப்பு என்ற எண்ணம் வருகிறது. ஒன்று, அக்காலத்தில் புனைகதை என்றாலே சுவாரசியமான பீலா என்ற எண்ணம் இருந்தது. கதைகள் எல்லாமே கதைவிடுதல்தான். பாரதியின் கதைகளைப்பார்த்தாலே தெரியும், அவற்றில் யதார்த்தம் மிகமிகக்குறைவுதான். ஆனால் க.நா.சுவின் இந்நாவலில் நிகழ்ச்சிகளில் எந்த மிகையும் இல்லை. பரபரப்போ விசித்திரமோகூட இல்லை. அன்றாடநிகழ்வுகளுக்கு இலக்கியத்தில் உள்ள முக்கியத்துவத்தைத் தமிழில் அழுத்தமாக நிறுவிய நாவல்களில் ஒன்றாக இது இருந்திருக்கலாம்
இரண்டாவதாக , இந்நாவலில் உள்ள, சாதாரணமாகவும் அதே சமயம் நுட்பமாகவும் காட்டப்படும், பெண்கதாபாத்திரங்கள். சானுப்பாட்டி, மங்களம், ராஜி, மதுரம் என எல்லாக் கதாபாத்திரங்களும் அதிகமான விவரிப்புகள் இல்லாமல் துல்லியமான குணசித்திரங்களுடன் அமைந்துள்ளனர். பெருந்தன்மையும் புத்திசாலித்தனமும் கொண்ட மதுரம். இளவயதில் விதவை ஆகி ஆற்றாமையையே இயல்பான மனநிலையாகக் கொண்ட மங்களம். பணத்தின் நிமிர்வுள்ள மாமியார் ராதை. எல்லாப் பெண்களின் முகங்களும் துல்லியமாகத்தெரிகின்றன. அவர்களின் பொறாமைகளின், பிரியங்களின், கண்ணீரின் ,கசப்பின் ஏக்கங்களின் உலகம் அழகாக உருவாகி வந்திருக்கிறது

உச்சக் கதாபாத்திரம் சானுப்பாட்டிதான். பாட்டியின் வாழ்க்கையை சர்வ சகஜமாக சொல்லிச்செல்கிறார் சிவராமன் . மரணங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அன்றைய யதார்த்தம்போலும் அது. மரணத்தைவெல்ல பிறப்பு நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. சானுப்பாட்டி மரணத்தையும் பிறப்பையும் தன் ஓயாத கடும் உழைப்பால் சமன்செய்தபடியே இருக்கிறாள் என தோன்றியது. சானுப்பாட்டியின் பாலியத்தோழியான அம்மணிப்பாட்டி இன்னும் நுணுக்கமான கதாபாத்திரம்

மூன்றாவதாக, குடும்பம் என்ற அமைப்பைப்பற்றிய ஒரு அழகிய சித்திரத்தை இந்நாவல் அளிப்பதைச் சொல்லவேண்டும். ஒருவகையில் லா.ச.ராமாமிருதத்தின் பாற்கடல் சிறுகதைக்கு இந்நாவல்தான் முன்னோடி. குடும்பங்கள் இந்தியப்பண்பாட்டின் அடித்தளக்கற்கள் என நினைக்கும் க.நா.சு. இந்தியகள் கிராமஙகள், குலங்கள் என்னும் மாபெரும் குடும்பத்தின் உறுப்பினர்களாக வாழ்கிறார்கள் என்று நினைக்கிறார். சானுப்பாட்டியின் மரணத்தை முன்னிட்டு அந்த மாபெரும் குடும்பம் இயல்பாக ஒன்றுதிரண்டுகொண்டே இருக்கும் சித்திரத்தை அழகாகக் காட்டியிருக்கிறார்
குடும்பத்தின் நல்லதுகெட்டதுகள் பற்றி சானுப்பாட்டிக்கு இருக்கும் அபாரமான நுண்ணுணர்வு அவள் அக்குடும்பத்தின் ஒர் உயிருள்ள உறுப்பு என்பதனால்தான். அந்தப் பரஸ்பர நுண்ணுணர்வுத்தொடர்பு அத்தனைபேருக்கும் இருக்கிறது. எங்கோ நிகழும் குடும்ப உறுப்பினரின் மரணத்தை உறவினர்கள் தங்கள் ஆழ்மனதில் உணர்கிறார்கள். வெளியே அவர்கள் போட்டியும் கோபதாபங்களும் கொண்டவர்கள் ஆனாலும் உள்ளூர ஒரே ஆழ்மனம் கொண்டவர்கள் என்று காட்டுகிறது நாவல்

நான்காவதாக, சில அபூர்வக் கணங்களை க.நா.சு தன் எளிய நேரடி மொழிநடையாலேயே சிறப்பாக வரைந்துவிட்டிருக்கிறார். நாவலின் ஆரம்பத்தில் சிவராமன் புஷ்ப பல்லக்கு பார்க்கச்சென்று கேட்கும் நாதஸ்வர இசையும் அதன் மெல்லிய மீட்டல் இரவெல்லாம் நீள்வதும் ஓர் உதாரணம். கிருஷ்ணசாமி சர்மா தன் கடைசி இரவை நிலவொளியில் தன்னந்தனியாகச் செலவிடுவதை சொல்லியிருக்கும் விதம் இன்னொரு உதாரணம். ஓர் எளிய குடும்பநாவல் என்ற இடத்தைவிட்டு அடுத்த தளம் நோக்கி நாவலைக் கொண்டுசெல்பவை இந்த நான்கு அம்சங்களும்தான்.
இந்நாவலைக்கொண்டு க.நாசுவை ஒரு கோணத்தில் இன்றைய வாசகன் வகுத்துக்கொள்ள முடியும். 1938 என்பது இந்தியாவில் காந்திய அலை உச்சத்தில் இருந்த காலகட்டம். தேசவிடுதலைக்கான போர் தீவிரமடைந்திருந்தது. சமூகசீர்திருத்த இயக்கங்கள் எங்கும் கிளைவிரித்துப்பரவிக்கொண்டிருந்தன. புதுமைக்கான நாட்டம் இளைஞர்களிடம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. இக்காலகட்டத்தைச்சேர்ந்த பிற எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நவீன உலகுக்கான ஏக்கத்தையும் பழைய உலகுக்கான கண்டனத்தையும் வெளிப்படுத்தின. ஒர் எல்லை புதுமைப்பித்தன் மறு எல்லை கல்கி

ஆனால் க.நா.சு இந்த அலையால் பாதிக்கப்படவே இல்லை. இந்நாவலில்கூட சிவராமன் அரசியலையோ சமூக இயக்கங்களையோ கவனித்ததாகவே தெரியவில்லை. அவனுடைய தாகம் இலக்கியமாக மட்டுமே இருக்கிறது. அவன் இறந்தகாலத்தில் இருந்து வரும் ஒரு சரடில் தன் இலட்சிய உலகைக் கண்டுகொள்கிறான். நவீனச் சென்னையை விட அவனுக்குப் பழைமை நீங்காத சுவாமிமலைதான் பிடித்திருக்கிறது. சுவாமிமலையின் நிசப்தம், மாறாததன்மை ஆகியவை மீது அவன் பெரும் ஈடுபாடு கொள்கிறான்.
க.நா.சு அவரது பிற நாவல்களிலும் இந்த விஷயங்களை எழுதியிருக்கிறார். நெருக்கமாக உறவுகளுடன் இணைந்து வாழும் அக்ரஹார வாழ்க்கைதான் உன்னதமானது என அவர் நினைத்திருந்தார். ஆனால் அவர் உண்மையிலேயே அப்படி நினைத்தாரா என்று தெரியவில்லை. அவர் அப்படி ஒரு அக்ரஹாரத்தைக் கற்பனைசெய்துகொண்டார். அப்படி ஒரு இடம் மண்ணில் இருக்கமுடியாதென அறிந்திருந்தார். ஆகவே அங்கே செல்ல முயலவே இல்லை. நகரங்கள் தோறும், நவீன சிந்தனைகள் தோறும் அலைந்து திரிந்தார். அந்தவாழ்க்கையை சகித்துக்கொள்ள, அது அளித்த அலைக்கழிப்புகளைத் தாண்டிச்செல்ல தன்னுள் அந்த கற்பனை அக்ரகாரத்தைப் பேணிக்கொண்டார். அது அவர் தேடிய காணிநிலம்.

க.நா.சுவுக்கும் பாரதிக்கும் அந்தக் காணிநிலம் அவர்கள் வாழ்ந்த பெரும்பாலையைக் கடந்துசெல்கையில் கையிலிருந்த குளிர்நீர்.
[சர்மாவின் உயில், க.நா.சு நூற்றாண்டு சிறப்பு வெளியீடு, நற்றிணைப்பதிப்பகம், சென்னை. விலை ரூ 150 ]