Wednesday, 5 August 2015

-Jalaluddin Rumi- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



மானுட ஜீவியாய் இருத்தலின் இடர்களை
நீ எப்படி அறிந்து கொள்வாய், நீயோ எந்நேரமும்
நீல-நிறைவிற்கு பறந்து விடுகிறாய்?

உனது துயரின் விதைகளை எவ்விடத்தில் விதைப்பாய்?
பணியாளர்களுக்கு மண்ணை அகழவும் கிளரவும்
பூமி தேவை,
குறிப்பீடற்ற வேட்கையின் வானல்ல.


-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






கிழக்கோ அன்றி மேற்கோ என்னையொத்த
நேசர் யாருமிருந்ததில்லை.
எனது வான் நூற்றாண்டுகளாக முழுமையாய்
இழுபட்ட வில்லாய் பின்புறம் வளைகிறது .


நேசரின் தீண்டலுக்காக விழித்தெழும் பாக்கியசாலி நான்
கசந்த மருந்தோடு, நான் இனித்த பழச்சாற்றை ருசிக்கிறேன்.
குணமாதலை சினந்து எதிர்ப்பின், நீ நோய்யுற்றிருப்பாய்.

பயில்வோன் குருவை மெளனத்தில் தலைவணங்குகிறான் ,
ஆணவமுறும் பரிகாச பேச்சில்லை , உரையாடலில்லை.

நீருக்கடியில் மூச்சையடக்குவர் முழுகுவோர்.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






நேற்று புலர்காலையின் எழிலெல்லாம் என் மீதுற்றது,
யாரை நோக்கி என்னுள்ளம் அடையுமென வியந்தேன்,
பின்னர் இன்று காலை மீண்டும், நீ.

நான் யார்? காற்று, நெருப்பு, நீரார்ந்த பூமியே
என்னை வல்லமையுடன் நகர்த்துகிறது ஏனெனில்


அவை நேசத்துடன் சூலுற்றிருக்கிறது, நேசம்
இறையுடன் சூலுற்றிருக்கிறது. இவையே

நான் போற்றும் புலர்காலைத் தலைமுறைகள்.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






மையத்திருக்கும் தெளிந்த செபமணி யாவற்றையும் மாற்றுகிறது. என் நேசித்தல் இப்போது விளிம்புகளற்றிருக்கிறது

ஒரு மனத்திலிருந்து மற்றொன்றில் திறந்திடும்
சாளரம் குறித்து சொல்லப்பட்டிருப்பதை
நீ செவிமடுத்திருப்பாய் ,


ஒருவேளை சுவரில்லாதிருந்தால்
சாளரத்தையும் தாழ்ப்பாளையும் பொருத்த வேண்டியிருக்காது.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)












Let the lover be disgraceful, crazy,
absentminded. Someone sober
will worry about things going badly.

Let the lover be.


-Jalaluddin Rumi-








Kuppuswamy Ganesan shared berlin-artparasites's photo.
23 hrs ·




berlin-artparasites


When I was a kid I was fascinated by space
And I learned that time slows near a black hole
Inside a black hole time stops altogether.
Whether or not this theory will ever be proved,
I’m moved to believe that this would be the perfect place to love someone. ― Shane Koyczan


‪#‎ThingsThatMakeYouGoHmm‬

drawing by Lucy Salgado IllustrationWhen, in the silence of your heart torn apart,


There is finished all the conflict and all fight,
The Seeker of true wisdom can then hear
The music of the spheres,
The sound emanating from the field of strength of the kingdom unchangeable,
The voice that calls the exhausted, magnetic
The strength that gives the real quiet.


(J. Van Rijckenborgh, in ' the great revolution ")

Image: ognian kuzmanov
Automatically Translated · See Original








ஒவ்வொர் கணமும் அந்த வனப்பின் சுவை
நமது வாயிலூறுகிறது, மற்றொன்று சட்டைப் பையில்
ஓளித்து வைக்கப்பட்டிருக்கிறது,

எதுவென முற்றிலுமாய் உரைக்கவியலாது , அத்துனை
வசீகர உருவுள்ள சைபரஸ் மரமேதுமில்லை ,கதிரொளியுமில்லை,


தனிமையடர்ந்த மறைத்தன்மை, ஏணைய களிப்போ
கூட்டத்தைச் சேகரிக்கிறது , பிணக்கை துவக்குகிறது,

அங்கு ஒளியின் அதீதம் . ஆயினும் ஆன்மாவின் எழிலோ
அமைதியில் சமைந்திருக்கிறது: ஷாம்சும் மற்றும்
அவனது வியப்பார்ந்த உறைவிடம்

என நெஞ்சகத்துள் அறியபடாதிருக்கிறது.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






உன் பக்கமாய் யாரோ அசைவாடுகிறார்,
மாஷாஅல்லாஹ், என சொல்லும் இதழ்கள்,

மாஷாஅல்லாஹ், அற்புத விந்தையாக,
அகத்தின் ஈர்ப்பு இறை, யவரும் அறியா இளவேனில்


பள்ளத்தாக்கின் பூமியுள்ளிருந்து கிளர்ந்து ஊற்றெடுக்கிறது.
நேசர்கள் கொட்டகையின் உள்ளிருக்கும் தீபங்களை நோக்கி நகர்கின்றனர்.

டமாஸ்கஸின் மறுதலிப்பு சூரியனில் திருப்பமுறுகிறது.
அதைப்போலவே நீயுமிரு. பெருங்கருணை எனச் சொல்,

உன் ஆன்மாவை ஆற்றுப்படுத்துபவனுக்கே அக்கருணை.
காலம் வழுவாதவன் யார்,
நகர்வாய் , தவறிழைப்பாய் , நிமிர்ந்து பார்,

செயலிழக்கிறது சதுரங்க ஆட்டம் .

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)












Flowers open every night
across the sky as the peace

of keeping a vigil
kindles the emptiness.......


-Jalaluddin Rumi-






உனது நேசத்தை ஞாபகமடையும் தருணம்,
நான் அழுகிறேன்,
உன்னைச் சுட்டி மக்கள் பேசும்போது
என் நெஞ்சகத்தில் ஏதோவொன்று
அவ்விடம் மிகையாய் அப்படியேதும் நிகழவில்லை ,
ஆழ்துயிலில் நகர்ந்து பெயர்வதாயிருக்கிறது.


-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

நமது வாழ்நாளெல்லாம் ஒருவரோடொருவரென


நமது முகங்களையே நோக்கியிருந்தோம் .
இன்றும்கூட அதுவே நிகழ- நேர்ந்தது.

நமது நேச- இரகசியத்தை எவ்வாறு பாதுகாப்பது ?


நாம் புருவத்திலிருந்து புருவத்துக்குமாய் உரையாடினோம்.
நமது விழிகளைக் கொண்டே செவிசாய்த்துக் கொண்டோம்.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



நேற்றிரவு சபையில் உன்னைக் கண்டேன்
என் கரங்களால் உன்னை வெளிப்படையாய் அள்ளிடக் கூடவில்லை,
ஆகையால்;
எனது இதழ்களை உன் கன்னத்தருகே வைத்தேன்,
தனிமையில் பேசுவதாய் பாசாங்கு செய்தேன்.


-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






உனது குரலன்றி எனது செவிகளில்
வேறேதும் கேட்பதில்லை.
உள்ளத்தின் நா-நயத்தையெல்லாம் நெஞ்சம் சூறையாடிப் போனது.

நேசம் தெள்ளிய சித்திரயெழுத்துக்களைத் தீட்டுகிறது,
அவ்வண்ணம் எனது ஆன்மாவின் வெறுமை ஏட்டில்


வாசிக்கவும் மறு- நினைவுறவும் இயலும்.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



I, you, he, she, we,
in the garden of mystic lovers,
these are not true
distinctions.
-Jalaluddin Rumi-

I stand up, and this one of me
turns into a hundred of me.
They say I circle around you,
Nonsense. I circle around me.


-Jalaluddin Rumi-


பேரானந்தம் புதிய புலங்களை அணுகி நகர்கிறது,
அதன் பாய்தலின் நெகிழ்வு உறைவதேயில்லை.

ஒரு நெடிய பனிக்காலப் புனைகதை முடிவடைகிறது.
இப்போது
ஒவ்வொர் இளவேனிற் நாளோடும்
ஒரு புதிய கதை புனைவுறுகிறது.


-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






நான் மரிக்கும் அந்நாளில், மயானத்திற்கு என்னை
ஏந்திச் செல்லும் தருணத்தில், அழாதே

அவன் போய்விட்டான் அவன் போய்விட்டான் என்று கூறாதே,
போய்த் தொலைவதிற்கும் மரணத்திற்கும் எந்த உறவுமில்லை.


சூரியன் அஸ்தமிக்கிறது நிலா உதித்தெழுகிறது,
ஆனால்
அவை முற்றிலுமாய் மறைந்து போவதில்லை.
மரணம் என்பதொரு ஒன்றிணைவதுதான். கல்லறை

சிறையாய் தோற்றமளிக்கிறது , அதுவோ
சங்கமத்திற்கான விடுவித்தலாகிறது. மானுட விதை

பூமியின் உள்ளுறுகிறது
ஜோசப் வசிக்கும்
ஆழ்கிணற்றுள் செல்லும் வாளியாயிருக்கிறது. அது

வளர்கிறது பின்பு கற்பனக்கப்பாற்பட்ட பேரழகுடன்
நிறைந்து மேலெழுகிறது.
இங்குன் வாய் மூடிக்கொள்கிறது. உடனே

பேருவகையின் உரத்த ஆரவாரத்துடன் அங்கு திறக்கிறது.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)









எழுச்சியுற்று, மையத்தை சுற்றிலும் நகந்திரு
காபாவை வளையவரும் புனிதயாத்திரிகளப்போல்.

அசைவற்றிருத்தலின் மூலமே ஒரு களிமண்கட்டி
துயிலில் மற்றொன்றுடன் ஒட்டிக்கொள்கிறது.


அசைவியக்கம் நம்மை விழிப்படைய செய்கிறது
புதிய அருளாசிகளை அவிழ்க்கிறது.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






ஆன்மா: ஆயிரமாயிரம் மெழுகுவத்திகளுடன்
செவிமடுத்திருக்கும் விரிவான்:

எப்போதெல்லாம் ஏதோவொன்று விற்கப்படுகிறதோ.
காசுடன் ஆன்மாவும் கையளிக்கப்படுகிறது: மக்கள்


ஒரு கதவண்டையில் காத்திருக்கின்றனர், கூரைமீது
சாய்ந்திருக்கும் ஏணியிலிருந்து யவரோ கிழிறங்குகிறார்,

சந்தைச் சதுக்கம் பொருளுணர்ந்து பிரகாசிக்கிறது.
செவிமடுத்தல் அதன் மலைப்புற்ற முகவாயை திறக்கிறது.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



இளங்காலை மென்காற்று
அதன் மாசில் நறுமணத்தை பரவச்செய்கிறது
அதை உள்வாங்க நாம் துயிலெழ வேண்டும்,
அந்தக் காற்று நம்மை உயிர்த்திருக்க அனுமதிக்கிறது,
சுவாசியுங்கள், அது கடந்து போகுமுன்.


-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)









All I know of spirit
is this love.....

-Jalaluddin Rumi-





உனது ஒளியில் நேசித்தல் எவ்வாறென பயின்றேன்,
உனது நிகரற்ற வனப்பில்,
கவிதையாத்தல் எவ்வாறென அறிந்தேன்.

நீயென் நெஞ்சகத்தே நர்த்திக்கிறாய்,
யாராலும் உன்னை காணவியலா அவ்விடத்தே.


ஆயினும் சில தருணங்களில் நான் காண்கிறேன்.
அந்தப் பார்வையே இந்தக் கலையாகிறது.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





பறவையின் பாடல்
எனது தீரா-ஏக்கத்திற்கு தணிவைத் தருவிக்கிறது.

அவைகளை போலவே நானும் மெய்பரவசத்தில் திளைத்திருக்கிறேன்,
ஆயினும் சொல்வதற்கு ஏதுமின்றி!


தயவுறும் பிரபஞ்ச ஆன்மா,
இனமறியா பாடலையோ அன்றி ஏதோவொன்றையோ
என்னூடாக பழகிக் கொள்கிறது..

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




முதல் காதல் கதையை நான் செவிகொண்ட போது ,
உன்னை எதிர்நோக்கத் துவங்கிவிட்டேன்,
அது எத்துனை குருடானது என உணராமலே.

காதலர்கள் முடிவாக அறியா இடமொன்றில் சந்திப்பதில்லை,
காலமெல்லாம் அவர்கள் ஒருவருள் ஒருவராயிருந்திருக்கின்றனர்.


-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






நான் உன்னுடனிருக்கும் பொழுதில்,
இரவெல்லாம் நாம் துயிலாதிருக்கிறோம் .
நீ இங்கில்லாத பொழுதில்,
என்னால் துளியேனும் துயிலுற இயலவில்லை.


இறைவனை புகழ்ந்திடு இவ்விரு துயிலின்மைக்கும் !
இரண்டிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்திற்கும்.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





நாணத்துடன் தோய்ந்த செந்நிறம்
அந்தச் செந்நிறம்,
அனைத்து ரோஜா தோட்டங்களின் செந்நிறங்களானது.


செந்நிறத் தொலைதூரம்,
கொதிக்கும் நீர் வீற்றிருக்கும் அடுப்பின் செந்நிறம்,
மலையின் செந்நிறம் இக்கணம்
குருதிச் செந்நிறமாய் மாறுகிறது.


மலைகள் இரகசியமாக தன்னுள் கெம்புக் கற்களை அகப்படுதியிருக்கிறது,
உன்னையே மிகையாய் நேசிக்கவா,
அன்றி நயந்த உன தன்னடக்கத்தையா?


-Jalaluddin Rumi-

(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




யாரிலிருந்தும் என்னால் பிரிவுறக் கூடும்
என்னுள் ஆழ்ந்த இருத்தல் நீங்கலாக.

பரிசுகளை யவரேனும் அளிக்கலாம்
களவாடி செல்லும் யாரேனும் ஒருவனைத் தருவாய்.


-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



Your heart and my heart
are very,very
old friends.........

-Hafiz-



இப்புதிய நேசத்துள் , மடிந்துவிடு.
உனக்கான பாதை மற்றொரு புறமாய் துவங்குகிறது.
வானாய் உருக்கொள்,
சிறைச் சுவரை வெட்டித் தகர்த்து
தப்பித்துவிடு.
வர்ணத்துள்ளிருந்து சட்டென ஜனித்த யாரோ ஒருவனாய்
வெளியேறு.
இக்கணமே அதைச் செய்,
அடர்த்தியான மேகங்களால் நீ போர்த்தப்பட்டிருக்கிறாய்,
பக்கவாட்டில் நழுவிடு. மாய்ந்து
மோனத்திரு . மோனமே நீ மாய்ந்ததற்கான
நிச்சயக் குறிப்பீடு.
உனது பழைய ஜீவிதமோ மெளனத்திலிருந்து
விலகிய மூர்க்க ஓட்டமாயிருந்தது.


பேசா முழுநிலவு இக்கணம் வெளிப்படுகிறது .

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




தென்படும் மெய்மை அளிப்பதை நீங்கள் வேண்டினால்,
நீங்கள் ஒரு பணியாள்.

புலனாகா உலகை நீங்கள் வேண்டினால்,
உங்களது மெய்மையில் இருத்தலுறாமலே இருக்கிறீர்கள்.


இரு விருப்புமே மூடத்தனமானதுதான்,
ஆயினும்;
நீங்கள் மறதியடைந்ததற்காக மன்னிக்கப்படுவீர்கள்
நீங்கள் அதில் நிஜமாகவே வேண்டுவது ,

நேசத்தின் குழம்பிய உவகையை.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



நண்பரே, நமது நெருக்கம் இவ்வாறிருக்கிறது:
உனது பாதங்களை எங்கு பதித்தாலும்,
உனக்கு கீழமைந்த திடத்தினில் என்னை உணர்ந்திடு.

இந்த நேசத்தில் எவ்வாறு இது நேரிடுகிறது , ,
உன்னையன்றி,
நானுன் உலகை மட்டுமே காண்பது?


-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






நள்ளிரவு, ஆயினும் உனது நெற்றி
புலர்தலுடன் கூடி ஜொலிக்கிறது. என்னை

நெருங்கி வரும்போது நீ நடமிடுகிறாய் மற்றும்
சுருள் சுருளாக இருளை அற்றிடச் செய்கிறாய்.
பொறாமை இறுதியுற்று அழியட்டும் .


-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



குறைப் பித்தமாய் ருசிக்கிறது..................

உனது விழிகள்,
அவை நிஜமாகவே பார்வை கொள்ளும்போது
ஒரு ரோஜா அல்லது அனிமோன் மலர்,
சுழன்று உருளும் பிரபஞ்சத்தை
கண்ணீரின் வெள்ளத்திலாழ்த்துகிறது.


ஆயிரம் வருடங்களாக ஜாடியில்
காதிருத்தலில் தங்கிய வைன்
ஒரு-வயது நேசத்தைக் காட்டிலும்
குறைப் பித்தமாய் ருசிக்கிறது.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





Dance , when you're broken open.
Dance, if you've torn the bandage off.
Dance in the middle of the fighting.
Dance, in your blood.
Dance, when you're perfectly free.


-Jalaluddin Rumi-

நேற்றிரவு நம்மிருவரின் ஊடே யவையெல்லாமோ
பாய்ந்தோடின,
அவைகளை இப்போது கூறவும் எழுதவும் இயலாது.

நான் நிறைவேற்றத்தில் ஏந்தப்பட்டிருக்கும் பொழுதில் .
சாலை நெடுகிலுமாய்
எனது சவச்சால்வையின் மடிப்புகள் காற்றில் திறக்கின்றன.


யாரொருவராகிலும் இதை வாசித்தறிய கூடுமா,
உருமாறும் மொட்டின் பூவிதழ் -பக்கங்களைப் போல் ,

நேற்றிரவு நம்மிருவரின் ஊடே பாய்ந்தோடியவை- யவை.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





ஒரு பாதரசத் துளியாய் அதிர்ந்திரு........................

ஒன்றிணைந்து இருங்கள் நண்பர்களே
சிதறிக் கலைந்து துயிலாதீர்கள்.


நமது நட்பு விழித்திருத்தலில்
ஆக்கமடைந்திருக்கிறது.

நீர்ச்சக்கரம் நீரை ஏற்கிறது
சுழன்று முற்றிலுமாய் தன்னை ஈந்து அழுகிறது.

அவ்வண்ணமாகவே அது பூந்தோட்டத்தில் தங்கியிருக்கிறது,
அப்படியாய்
மற்றொரு வளைவடிவம்
தனக்குத் தேவையென எண்ணுவதை எதிர்நோக்கி.
உலர்ந்த ஆற்றுப்படுகையினூடே உருள்கிறது.

இங்கேயே சமைந்திரு, ஒவ்வொர் கணத்திலும்
ஒரு பாதரசத் துளியாய் அதிர்ந்திரு.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







நானதைத் திறந்து நேசத்தால் நிரப்புகிறேன்
எது நேசமில்லையோ அது ஆவியாய் மறைகிறது.

நூற்களில் கற்றவையெல்லாம் அலமாரிகளில் இடப்பட்டு தங்கியிருக்கின்றன. கவிதை,


அன்பிற்கினிய வார்த்தைகள் மற்றும் பாடலின் படிமங்கள்,
என்மீது மலை- நீராய் வீழ்கின்றன.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





இளவேனிற் பருவத்தில் பழத்தோட்டத்திற்கு வருக,
அங்கு ஓளியும், வைனும் மற்றும் காதலர்களெல்லாம்
மாதுளை பூக்களில் உள்ளனர்.

நீ வரவில்லையெனில், இவையாவும் ஒரு பொருட்டல்ல.
ஒருவேளை நீ வருகையுற்றாலும் ,
இவையாவும் ஒரு பொருட்டல்ல.


-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


God only knows , I don't,
what keeps me laughing.

The stem of a flower
moves when the air moves.


-Jalaluddin Rumi-




நீ ஏதாயிருக்கிறாய் என இயம்பிவிட்டாய் ,
நான் ஏதாயிருக்கிறேனோ அதுவே நான்.
உனது வினைகள் எனது சிரத்தில் ,
எனது சிரம் இங்கென் கரங்களில்,
ஏதோவொன்று அதனுள்ளே வட்டமுறுகிறது,
எது அத்துனை கச்சிதமாய் வட்டமுறுகிறதோ
அதற்கொரு பெயர் என்னிடமில்லை.


-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





வ்வேளையில் கண் துஞ்சாதே ,
வளைவுற்றுத் திரும்பும் இரவு
இவ்வட்டத்தினூடே சுழலட்டும்.

உனது புருவங்கள், நிலா ,
தீபத்துடன் அமர்ந்திருக்கும் நாம்.


இந்த தீபங்களுடன் விழித்திரு,
கண் துஞ்சாதே.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


அங்கிங்கின்றி எங்கிலுமாய் வசந்தம்,
ஆனால்
நம்முள்ளே மற்றொரு ஒருமை.

ஒவ்வொரு விழியின் பின்னே
தழலொளி மிளிரும் நீர்.


ஒவ்வொரு வனக் கிளையும்
மென்காற்றில் வித்தியாசமாய் அசைந்தாடுகின்றன,
சாய்ந்தாடும் வேளையில் அவை
வேரின் ஆழ்மையில் இணைவடைகிறது.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


இந்த சாலைக்கு
உனது இனிய நறுமணத்துடன் மட்டுமே வருவாய்.

மேலங்கியை அணிந்து
இந்த நதியுள் இறங்கி நடவாதே.


பாதைகள் இங்கிருந்து அங்குமாய் நீட்சியுற்றுச் செல்கின்றன.
ஆனால்,
திசையற்ற எங்கிருந்தோ இங்கு வந்தடையாதே !

நிர்வானமாய் உயிருற்றிருக்க இதுவே பெருவேளை.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


சில முத்தங்களை
நாம் வாழ்நாளெல்லாம் உடனிருக்க விரும்புவோம் ,
உடலின் மீதுறும் ஆன்மாவின் தீண்டல் ,
ஆழிநீர் முத்துச்சிப்பியை
அதன் ஓட்டை உடைக்க யாசிக்கிறது.


லில்லி மலர் ,
எத்துனை பேருணர்ச்சியுடன்
ஒரு களிமிகு அன்பரை தேவையுறுகிறது.

இரவில், நான் எனது சாளரங்களங்களைத் திறந்து
நிலவை வரும்படியழைத்து,
அதன் முகத்தை என்னுடையதின் மீது பதித்து
என்னுள் சுவாசிக்கக் கேட்கிறேன்.

மொழியின் சாளரத்தை இறுகச் சாத்திவிட்டு
நேசத்தின் சாளரத்தை திற.

நிலா கதவை உபயோகிப்பதில்லை, சாளரம் ஒன்றைமட்டுமே.

-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


பறவையின் கீதம் , வீசுதென்றல் ,
நீரின் முகம்.

ஒவ்வொர் மலரும், சுகந்தத்தை உள்ளூர ஞாபகமடைகிறது:
என்னால் மெய்பட உணரமுடிகிறது
நீ அன்மைப்பட்டுவிட்டாய்.


-Jalaluddin Rumi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)