ஷோபனா
எனது மனதுக்குப் பிடித்த ஷோபனாவின் புகைப்படங்களில் ஒன்று இது.ஷோபனாவும் மனதுக்கு இசைவானவர் எப்போதுமே !
இது யார் எடுத்த புகைப்படம் என்று தெரியவில்லை.எனது சேகரிப்பில் இருந்தது.
ஷோபனாவுக்காக "பசி"என்ற இந்த கவிதையும் சமர்ப்பணம்.அவரின் அழகிற்கும் மேதமைக்கும் இந்த தமிழ் கவியின் வாழ்த்துக்கள்.
- லட்சுமி மணிவண்ணன்
பசி
அலுவலகப் புணர்ச்சி முடிந்து
வரிக்குதிரையின் கோடுகள்
மிருக வாசனையுடன்
உடலில் மேலெழும்பிய நள்ளிரவில்
காத்திருக்கத் தொடங்கினான் நடுவயதுக்காதலன்.
பணிவிடைகள் ஏற்ற குலசாமிகள் காவல்.
அவர்கள் நள்ளிரவில்தான் குளித்துப்
புத்தொளிர்கிறார்கள்.
குலசாமிகள் கூடக் கொணர்ந்த
களப சந்தன வாசனைகளையும்
இரவில் மனம் தெளிய முடியாத வண்ணங்களையும்
கன்னி யுவதியின் கனவுக்குள் நிகழ்த்த இயலாத துயரம்
பாரமாய் அழுத்த
மணித்துளிகள் சொட்டுச்சொட்டாய்
சுண்ணாம்பு மணத்துடன்
மழைத்துதிர்ந்தன .
மனைவி உறங்கும் அறையிலிருந்து வரும்
மின்விசிறி ஓசை
அபசகுனங்களை விரட்டித் தோற்றது.
கரப்பான்களின் கீச்சிசையோடு
வரிக் குதிரையின் பச்சை இறைச்சியை
நள்ளிரவில்
பசியோடு தின்னத் தொடங்கியவன்
சாத்தான்.
[ அப்பாவைப் புனிதப்படுத்துதல் கவிதை தொகுப்பிலிருந்து - 2009 ]