Tuesday 18 August 2015

-Federico Garcia Lorca- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



ஆயினும் நானுன்னை அவதியுற்றேன்..................

எனது நெஞ்சின் நேசத்தவளே , மாய்தலில் நெடிதுயிர்த்து,
எழுதப்பட்ட உனது வார்த்தைக்காக
நான் வீணில் காத்திருக்கிறேன்
மற்றும் யோசிக்கிறேன், உதிர்ந்துவீழும் மலருடனிருக்க,
ஒருவேளை நான் நானற்று வாழநேரிடில் ,
உன்னை இழப்பதற்கே விழைவேன்.


காற்று நிலைபேறுடையது; சடமான கல்
நிழலை அறிவதுமில்லை அன்றி தவிர்ப்பதுமில்லை.
அகத்திருக்கும் நெஞ்சிற்கு
நிலவிலிருந்து பொழியும் உறை-தேனின் தேவையிருந்ததில்லை.

ஆயினும் நானுன்னை அவதியுற்றேன், எனது நாளங்களை கிழித்தெறிந்தேன்,
புலியும் மற்றும் புறாவும் உனது இடையினில்,
கவ்வுதலில் ஒன்றுக்கு-ஒன்று போரிட,
மற்றும் லில்லி மலர்கள்.

நிரப்பு, அதன்பின், வார்த்தைகளுடனான எனது பித்தம்
அல்லது
எனது ஆன்மாவின் சாந்த இரவுடன் வாழ்ந்துவிடுகிறேன்
இருளின் கருமையில் என்றென்றைக்குமாய்.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-







பச்சையமான காலையில்
நானொரு நெஞ்சமாயிருக்க விழைகிறேன்.
ஒரு நெஞ்சம்

நன்கு கனிந்த மாலையில்
நானொரு நைட்டிங்ககேலாக இருக்க விழைகிறேன்.
ஒரு நைட்டிங்கேல்,


(ஆன்மா,
ஆரஞ்சின் அதிவண்ணமாய் மாறியது.
ஆன்மா,
நேசத்தின் வண்ணத்தை மாற்றியது)

கூரிய ஒளிவண்ணம் உயிர்த்த காலையில்
நான் நானாகவே இருத்தலுற விழைகிறேன்.
ஒரு நெஞ்சம்.

மாலையின் அந்திமத்தில்
நான் எனதேயான குரலாயிருக்க விழைகிறேன்.
ஒரு நைட்டிங்கேல்.

ஆன்மா,
ஆரஞ்சின் அதிவண்ணமாய் மாறியது
ஆன்மா,
நேசத்தின் வண்ணத்தை மாற்றியது.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-

நீரின் மேலுற்ற
ஒற்றைமைய தொடரலை போன்றது
உனது வார்த்தைகள்
எனது நெஞ்சில்.


காற்றோடு மோதும்
பறவையைப் போன்றது
உனது முத்தம்
எனது அதரத்தில்.

திறந்திருக்கும் நீருற்று
இரவை நோக்கி எதிர்வுறுகிறது,
எனது கருத்த விழிகள்
உனது சருமத்தில்.

உனது
ஒற்றைமைய தொடர்வட்டங்களில் நான் சிக்குண்டேன்.
சனிகிரகம் போல்
எனது கனவுகளில் எழும்
வளையங்களை வலிந்து சுற்றி வருகிறேன்,
நான் முற்றிலுமாக மூழ்கவில்லை ,
நான் உதித்தெழவும் இல்லை.

என் நேசத்தவளே!

ஆனால்; எனது யாக்கையோ
தாவரங்கள் அடர்ந்திருக்கும்
சேறுற்ற கிளையோட்டத்தில் மிதந்திருக்க,
உனது முத்தங்கள்.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-









நான் ஏன் உன்னை ஞாபகம் கொள்கிறேன்
ஒரு மார்ச் மாத மழைநாள்,
கன்னிமாடத்திலிருந்து வெளியே வருகிறாய்?

சிறுவெண் பனிப் பறவையென
உன்னை விளிக்கின்றனர். ஒரு பள்ளிச்சிறுவன்
ஒருமுறை தன்னிடமுள்ள ரோஜாவை தந்தான்.


பின்னர்
உன்னிலிருந்து ஒரு இறகு உதிர்ந்தது
அதைக் கொண்டே
நானிந்த கவிதைகளைச் செய்கிறேன்.
எத்துனை சிறிய பொருள்
நீயோ அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை!

Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-









இளைஞனே
நீ நதிக்குள் வீழ்ந்துவிடுவாய்!

நதியின் ஆழத்தின் கீழ் ஒரு ரோஜா
உள்ளுற்ற இன்னொரு நதியுடனிருக்கிறது.


அங்கிருக்கும் பறவையை பார்! சற்றே
அந்த மஞ்சள் பறவையை பார்!

எனது விழிகள் நீரினுள்
நழுவி விழுந்துவிட்டது.

நல் இறையே
அவனோ சறுக்கிவீழும் இளைஞன்!

......நானாகவே உவந்து ரோஜாவிற்குள் இருக்கிறேன்.

அவன் நீருக்குள் மங்கி மறையும் கணத்தில்,
நான் புரிந்துகொண்டேன்.
ஆயினும் நானதை விளக்கமாட்டேன்.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்






துயின்றிரு.
அலைவுறும் விழிகளைக் கண்டு அஞ்சாதே.

துயின்றிரு.


பட்டாம்பூச்சி,
வார்த்தை,
கள்ள ஒளி,
சாவித்துவாரத்தின் ஊடே,
உன்னை காயப்படுத்தாது.

துயின்றிரு.

எனது நெஞ்சம் உள்ளதைப் போன்றே,
நீயும் இருக்கிறாய்,
எனது ஆடியே ,
பூந்தோட்டம்,
அங்குதான் எனது நேசத்தவள் காத்திருக்கிறாள்.

இலகுவாய் துயின்றிரு,
ஆனால்
எப்போது கடைசி முத்தம்
எனது அதரத்தில் மடிகிறதோ
அப்போது துயிலெழுவாய்.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-



என்னையே நான் நின்விழிகளில் கண்டேன்
நினது ஆன்மாவை பற்றி யோசித்துக் கொண்டே.

ஓ அலரியின் வெண்மையே.


என்னையே நான் நின்விழிகளில் கண்டேன்
நினது வாயைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே.

ஓ அலரியின் வெண்மையே.

என்னையே நான் நின் விழிகளில் கண்டேன்
ஆனால் நீ மாய்ந்திருப்பதையும் கண்டேன்.

ஓ அலரியின் வெண்மையே.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






ஒரு லில்லி மலர் உனது கரங்களிருக்கிறது
நான் உன்னிலிருந்து பிரிகிறேன்,
ஓ என் இரவின் காதலணங்கே !
எனது ஒற்றைத் தாரகையின் சிறுசாளரமே
நான் உன்னை கண்டுணர்வேன்.


கருத்த பட்டாம்பூச்சிகளை
பழக்குபவரே!
நான் என் பாதையில் தொடர்கிறேன்
ஒராயிரம் ஆண்டுகள் தொலைந்த பின்னர்
நீயென்னைக் காண்பாய் ,
ஓ என் இரவின் காதலணங்கே !

நீல நடைபாதையினூடே,
கருத்த தாரகைகளை
பழக்குபவரே
நான் எனக்கான பாதையை அமைப்பேன்.
இப்பிரபஞ்சம்
என் நெஞ்சினுள் கச்சிதமாய் பொருந்தும்வரை.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)









How sweet the silent backwards tracings!
The wanderings as in dreams – the meditation of old times
Resumed –their loves,joys,persons,voyages.

-Walt Whitman-





Not for a moment,
beautiful aged Walt Whitman,
have I failed
to see your beard full of butterflies.


-Federico Garcia Lorca-


பொன்னிற இளநங்கை
நீரில் குளித்தாள்
நீர் பொன்னாக மாறியது.

பசும்பாசியும் மற்றும் நிழலில் தோய்ந்த
கிளையும் அவளை வியப்புறச் செய்தது,
அவ்வெண் நங்கைக்கென
நைட்டிங்கேல் பறவை இசைத்தது.


தெளிந்த இரவு வந்தடைந்தது
மங்கலாகவும் கேடுற்ற வெள்ளியுடன்,
மலைகள் ஆடையற்றிருக்கிறது
நீளும் பள்ளத்தாக்கின் கீழ்.

நீர்வழியும் இளநங்கை
நீரில் வெண்மையுற்றிருந்தாள்
நீரோ , ஒரு ஒளிப்பிரவாகம்.

புலர்வு மாசற்று
நூறு பசுக்களின் முகங்களோடு வந்தது
உறைந்த மலர்மாலைகளுடன் ,
விறைப்புற்று மூடப்பட்டிருக்கிறது.

விழிநீர் உகுக்கும் இளநங்கை
தீப்பிழம்பில் குளித்தபடியிருந்தாள்,
பொசுங்கிய சிறகுகளுடன்
நைட்டிங்கேல் பறவை கதறியழுதது.

பொன்னிற இளநங்கை
வெண் ஹெரானாயிருக்க
நீர் அவளை பொன்னாக்கியது.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


எனது தங்க மோதிரம்
ஆடியில்
தொலைந்து போனது,
(நான் சொல்வதின் பொருள் :
என்னிடம் அது எபோதுமே இருந்ததேயில்லை)


நம்மிடம் இல்லாத பொருட்கள்
ஆடியில் தொலைவது வழமைதான்.

எனது மோதிரத்தின் தங்கம்,
சூரியனின் அல்லது டெய்ஸி மலர்களது தங்கமா?

எத்தகையப் பெண்
இதை எனக்களித்தாள்?
என் ஆடியிடம் வினவுங்கள்.

இல்லை...அதுவொரு........ பொருட்டல்ல......
ஆடியேதும் என் வசமில்லை.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்

I want to be a poet,
from head to toe,
living and dying by poetry.

-Federico Garcia Lorca-


காலம்
இரவின் வண்ணங்களில் உறைந்துள்ளது,
நிசப்த இரவு.
அளப்பெரிய நிலாக்களின் மீதுள்ளது ,
நித்தியம்
சரியாகப் பன்னிரெண்டில் அமைவுறுகிறது.
என்றென்றைக்குமாய் காலம்
அதன் ஸ்தூபியில் துயிலப் போயுள்ளது.


அனைத்து கடிகாரங்களும் நம்மை ஏமாற்றுகின்றன,
முடிவாக காலத்திற்கும் கூட
தொடுவானங்கள் உள்ளன.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


மழலைகள் தொலைதூரப் புள்ளியைக்
கூர்ந்து நோக்குகின்றனர்.

ஓளிதீபங்ள் அணைக்கப்பட்டுள்ளன
விழியொளி இழந்த சில நங்கைகள்
நிலவையும் மற்றும் காற்றினூடே மிதந்தெழும்
அழுகையின் சுழல்வட்டங்களை வினவுகின்றனர்.


மலைகளெல்லாம் தொலைதூரப் புள்ளியைக்
கூர்ந்து நோக்குகின்றன.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


நீ ரோஜா வண்ணமாய் இருந்தாய் ,
எலும்பிச்சையாக மாறினாய்.

எனது கரங்களில்
நீயென்ன வண்ணத் திட்டத்தைக் கண்டாய்
உன்னையது அச்சுறுத்துவதாகத் தோன்றுகிறது?


நான் விரும்பிய ஆப்பிள்கள் பச்சை வண்ணத்தவை,
ரோஜாவண்ண ஆப்பிள்களல்ல.....

எலும்பிச்சை ...

பிற்பகல்; நாரையொன்று துயிலில் மூழ்கியுள்ளது,
தனது மற்றொரு பாதத்தைக் கீழே ஊன்றியுள்ளது.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)