Thursday 24 March 2016

மெகெல்லனின் இதயம் (1519) பாப்லோ நெருடா தமிழாக்கம் ஸி.ஏ. கார்த்திகேயா

________________

padippakam
மெகெல்லனின் இதயம் (1519)
பாப்லோ நெருடா

தமிழாக்கம் பிரமிள், ஸி.ஏ. கார்த்திகேயா

|கடல் வழியாக முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த ஐரோப்பியன் மெகெல்லன்; 1519-ல் தென்னமெரிக்காவின் தென் முனையில் உள்ள ஜலசந்தி (நீரிணை)யினுடே பயணிக் கிறான். அது இன்று மெகெல்லன் ஜலசந்தி என்று அழைக் கப்படுகிறது. -மொ. பெ.)

நான் எங்கிருந்து வருகிறேன்?
எந்த டெவில் இடத்திலிருந்து?
இப்படிக் கேள்விகளைச் சிலவேளை நான்
என்னிடமே கேட்டுக் கொள்கிறேன்.
இது என்ன கிழமை?
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எனக்குக் குறட்டை வருகிறது.
பாதிக் கனவில் ஒரு மரம், ஒர் இரவு
ஒரு கண் இமைபோல் எழும் ஒர் அலை
அலையிலிருந்து பிறக்கும் ஒரு நாளின் விடிவு.
புலி முகமாய்ச் சீறும் ஒரு மின்னல் பிழம்பு.

ஓரிரவு, தொலை தூரத்துப் பகல்
என்னிடம் வந்து வினாவிற்று:
கேட்கிறதா உனக்கு மெல்லென்ற நீரின் ஒசை,
(ஆர்ஜன்டைனாவின்) பெடகோனியப் பிராந்தியத்தின் மீது
அந்ந நீர் மோதும் மெல்லோசை?
ஆம் ஐயா, என்றேன்,
கவனித்துக் கொண்டு தானிருக்கிறேன்.
பகல் கூறிற்று :
ஒரு காட்டு ஆடு
இப்பிராந்தியத்தில் ஒரு கல்லில் உறைந்த வர்ணத்தை நக்குகிறது.
 அது கத்துவதை நீ கேட்கவில்லையா?
அதை அறிய உன்னால் முடியவில்லையா?
அந்த மழைக் காற்றின் நீலமயமான  கைகளில்
கைப்பிடியில்லாத நிலவுக்கிண்ணம்
கால் நடைக்கூட்டம் ஓன்று
நகர்வதை நீ பார்க்கவில்லையா?
காற்றின் துவேஷமிக்க விரல்
தனது வெற்று வளையத்தால்
அலையும் வாழ்வையும் தொடுகிறது.

நான் போகுமிடமெங்கும்
தொடர்ந்து வந்தது அந்த நீண்ட இரவு.
மூச்சுத் திணற வைக்கும்படி
கவிழ்ந்து சொரியும் அமிலம் அது.
களைப்புற்ற என் வாழ்வு முழுவதையும் ஒப்பித்து அழுதது
என் கதவின் முன் ஒரு பனித்துளி.
தொள தொளப்பான தனது
உடையைக் காண்பித்தது அது.
வால் நட்சத்திரம் ஒன்று என்னைத் தேடிக் கேவியது.
திடீர் காற்றை எவரும் கவனிக்கவில்லை, - -
அதன் விரிவை, ஊளையை.
அதை நான் அணுகிக் கூறினேன் :
போவோம் நாம்-
நான் தென் திசையைத் தீண்டியவன்.
மணலினுள்ளே பாய்ந்து காய்ந்த கறுப்பான செடியின்
வேரையும் பாறையையும்
பார்வைக்குக் கொண்டு வருவதற்காக
அந்தத் தீவு,
நீரினாலும் வானத்தினாலும் துண்டாடப்பட்டது.
பசித்த ஆறு, சாம்பலின் இதயம்,
சோகமான கடலின் வழி, தனித்த பாம்பு சீறிடும் இடம்,
மரணக் காயம் பட்ட குள்ளநரி - -
தனது குரூரமான புதையலை மறைக்கக் குழிபறிக்கும் இடம்...

புயலையும் திடீரென உடைபட்ட
அதன் குரலையும் நான் சந்தித்தவன்.
ஒரு பழைய புத்தகத்திலிருந்து எழுந்த அதன் குரல்,
நூறு உதடுகள் கொண்ட வாய் மூலம்
ஏதோ ஒன்றை எனக்குச் சொல்கிறது.
தினமும் காற்றினால் விரைவாக
விழுங்கப் படுகிற ஏதோ ஒன்றை.

கப்பலுக்கு என்னவாயிற்று என்று
கடல் நீருக்கு ஞாபகமிருக்கிறது.
கடலோடிகளின் மண்டையோடுகளை ஆதரிக்கிறது.
கடினமான அந்நிய பூமி.
வேட்டைக்கு ஒலிக்கும் எக்காளாமாய்
அந்த பூமி தெற்கின் பீதியை எதிரொலிக்கிறது.
மனிதக் கண்களினதும் காளைக் கண்களினதும்
பள்ளங்களை அது பகலுக்குக் கடனளிக்கிறது.
அவற்றின் வளையம்.
சமாதானப் படுத்த முடியாத
அவற்றின் விழிப்பு நிலையில் எழும் ஒலி...
பழைய வானம் கப்பலை எதிர்ப்பார்த்திருக்கிறது.
தப்பித்தவர்கள் ஒருவருமில்லை.
சிதைந்த கப்பல்
கடலோடிகளின் சாம்பலுடன் வாழ்கிறது.
தங்க-தொழுவமான தோல் வீடுகள்...
கோதுமையோடு கொள்ளை நோய்.
நீண்ட பயணங்களின் பனிக்குளிர்ப் பிழம்பு.
(சுருக்கமான தமிழக்கம்)


(கடல் வழியாக முதல் முதலில் உலகைச் சுற்றி  வந்த ஐே - மெகெல்லன்) 1519-ல் தென்னமெரிக்காவின் தென் முனையில் உள்ள ஜலசந்தி (நீரிணை) யினூடே பயணிக்கிறான். அது இன்று மெகெல்லன்  ஜலசந்தி என்று அழைக்கப்படுகிறது)

 PABLO NERUDA (1904-73), “THE MAGELLAN HEART(1579) இணைமொழிபெயர்ப்பாளர்.சி.ஏ.கார்த்திகேயன்
.......